search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தைப்பேறு"

    • முதல் குழந்தையாக பிறக்கும் அந்த பாம்பிற்கு மரணம் என்பதே கிடையாது.
    • நாகராஜருக்கு பூஜை செய்யும் உரிமை வலிய அம்மாவிற்கு மட்டும் உண்டு.

    குழந்தைப்பேறு வேண்டுபவர்களின் மனக்குறையைப் போக்கிக் குழந்தைப்பேறு அளிக்கும் நாகராஜர் கோயில், கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், ஹரிப்பாடு அருகில் மன்னார்சாலை என்ற அமைந்திருக்கிறது.

    தல வரலாறு

    மன்னார்சாலையில் வசித்து வந்த அந்தணர் குடும்பத்துப பெண்ணிற்கு திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாமல் இருந்தது. இதனால் கவலையடைந்த அந்த பெண் பரசுராமரை வேண்டி தனக்கு குழந்தைவரம் அளிக்குமாறு வேண்டினாள். மகாவிஷ்ணுவின் தோற்றமாக கருதப்படும் பரசுராமர் அந்த பெண்ணிடம், "பெண்ணே, சிவபெருமான் கழுத்தில் ஆபரணமாக அணிந்திருக்கும் பாம்புகளின் தலைவரான வாசுகியை வணங்கி வந்தால் உனக்கு குழந்தைப்பேறு கிடைக்கும்" என்று அருளினார்.

    அந்த பெண்ணும் பரசுராமர் சொன்னபடி பாம்புகளின் தலைவரான வாசுகியை வணங்கி தனக்கு குழந்தைப்பேறு அளிக்கும்படி வேண்டி வந்தார். அவரின் தொடர் வேண்டுதலின் பலனாக வாசுகி அவர் முன்பு தோன்றி, "பெண்ணே, உன் தொடர் வேண்டுதலால் மகிழ்ந்தேன். உனக்கு முதல் குழந்தையாக ஐந்து தலைகள் கொண்ட நாகப்பாம்பு ஒன்று பிறக்கும்.

    அதன் பிறகு, இரண்டாவதாக ஆண் குழந்தை ஒன்றும் பிறக்கும். முதல் குழந்தையாக பிறக்கும் அந்த பாம்பிற்கு மரணம் என்பதே கிடையாது. இந்த உலகம் இருக்கும்வரை அந்த பாம்பும் உயிருடன் இருந்து உன்னையும், உன் மரபு வழியினரையும் பாதுகாக்கும்" என்று அருளினார்.

    வாசுகி அருளியபடி அந்த பெண்ணிற்கு முதலில் ஐந்து தலைகள் கொண்ட நாகப்பாம்பும், அதன் பிறகு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. அந்த பெண் இரு குழந்தைகளையும் ஒன்று போல் கவனித்து வளர்த்து வந்தார். இரு குழந்தைகளும் பெரியவர்களாகினர். அந்த பெண் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். தன்னுடைய விருப்பத்தை முதலாவது மகனான நாகராஜனிடம் கூறினார்.

    அதைகேட்ட நாகராஜன், "தனக்கு இந்த மனித வாழ்க்கையில் ஈடுபாடில்லை, எனவே இந்த வாழ்க்கையில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன். தங்கள் விருப்பப்படி தம்பிக்கு திருமணம் செய்து வைத்துவிடுங்கள். நான் இங்கிருந்து வெளியேறுகிறேன்" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

    "மகனே, நீ என்னைவிட்டு தனியாக எங்கும் செல்ல வேண்டாம். நான் இருக்கும் வரை என் கண் முன்பாகவே இருக்க வேண்டும். நீ இந்த வீட்டின் நிலவறையில் இருந்து கொள். நான் அவ்வப்போது வந்து உன்னை பார்த்துக் கொள்கிறேன்" என்று வேண்டிக் கொண்டாள் தாய்.

    நாகராஜன் தாயிடம், "அம்மா, நான் தங்கள் விருப்பப்படி இந்த வீட்டின் நிலவறையில் போய் இருந்து கொள்கிறேன். நான் இந்த குடும்பத்தினரையும், அவர்களை தொடர்ந்து வரும் மரபு வழியினரையும் இந்த உலகம் இருக்கும் வரை காப்பாற்றுவேன். தாங்கள் விரும்பும் நேரத்தில் நிலவறைக்கு வந்து என்னை பார்த்துக் கொள்ளுங்கள்" என்றார்.

    நாகராஜன் தன் தம்பியிடம், "தம்பி, நான் நிலவறைக்கு சென்ற பின்பு, அதற்கு அருகில் ஒரு கோயில் அமைத்து, கோயிலின் உள்ளே எனது உருவச்சிலை ஒன்றை அமைத்து, எல்லோரும் என்னை வணங்கி வாருங்கள். என்னை வணங்கும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டியதை வழங்குவேன்" என்று சொல்லி வழிபாட்டு முறைகளையும் சொன்னார்.

    அதன் பிறகு அவர் நிலவறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டார். நாகராஜனின் தம்பி நிலவறையின் அருகில் கோவில் அமைத்து, அதில் நாகராஜர் சிலையினையும் நிறுவினார். அன்றில் இருந்து இன்று வரை நாகராஜர் வழிபாடும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோயிலுக்கு அருகில் உள்ள நிலவறையில் நாகராஜர் இருந்து அருள்வதாக பக்தர்களிடம் நம்புகிறார்கள்.

    நாகராஜர் இருப்பதாகக் கருதப்படும் நிலவறைக்கு செல்லவும், நாகராஜருக்கு பூஜை செய்யும் உரிமையும் அந்த குடும்பத்தின் மூத்த பெண்மணியாக கருதப்படும் "வலிய அம்மா" என்பவருக்கு மட்டுமே இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை, சிவராத்திரிக்கு அடுத்த நாள், "வலிய அம்மா" நிலவறைக்கு சென்று நாகராஜனை வழிபடுவதாக சொல்கின்றனர்.

    பக்தர்களின் வழிபாடு, சிறப்பு வேண்டுதல்கள் மற்றும் கோயில் நிர்வாகத்திற்கான மேற்பார்வை போன்றவைகளையும் இவரே கவனித்துக்கொள்கிறார். இக்கோயிலில் நாகராஜனுக்கு அடுத்து முக்கியத்துவம் உடையவராக "வலிய அம்மா" இருக்கிறார். "வலிய அம்மா" வின் மரணத்திற்கு பிறகு, அந்தக் குடும்பத்தின் மூத்த பெண்மணியாக இருப்பவர் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.

    அந்த பெண் திருமண வாழ்க்கையில் இருந்தால், அவர் தனது குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகி, "வலிய அம்மா" வாக பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது.

    உறுளி கவிழ்த்தல்

    குழந்தைப்பேறு இல்லாதவர்கள் உறுளி என்கிற நல்ல கனமுள்ள வட்ட வடிவிலான வெண்கலப் பாத்திரத்தினை இக்கோயிலின் பூஜைப்பணிகளை செய்யும் "வலிய அம்மா"விடம் கொடுத்து வேண்டிக் கொடுக்கின்றனர். வலிய அம்மா அந்த உறுளிப் பாத்திரத்தை பூஜை செய்து அதற்காக ஒதுக்கப்பட்ட அறையில் கவிழ்த்து வைத்து விடுகிறார்.

    அந்த தம்பதியினர் தங்களுக்கு குழந்தை பிறந்த பின்பு, தங்கள் குழந்தையுடன் கோயிலுக்கு வந்து வலிய அம்மாவை பார்த்து, வெள்ளியில் செய்யப்பட்ட ஒரு பாம்பு உருவத்தினைக் கொடுக்கின்றனர். வலிய அம்மா அந்த வெள்ளிப் பாம்பு உருவத்திற்கு பூஜை செய்து, தம்பதியர் முன்பு கொடுத்து கவிழ்த்து வைத்திருந்த உறுளி பாத்திரத்தை நிமிர்த்தி வைத்து வேண்டுதலை நிறைவு செய்து தம்பதியர்களுடன், குழந்தையையும் ஆசிர்வதித்து அனுப்புகிறார்.

    ஆயில்யம் நாள் வழிபாடுகள்

    நாகராஜா கோயில்கள் அனைத்திலும் புரட்டாசி மாதத்தில் வரும் ஆயில்யம் நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடுகள் செய்து கொண்டாடப்படுவது வழக்கம். மன்னார்சாலை நாகராஜா கோயிலிலும் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஆயில்யம் நட்சத்திர நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது.

    இந்த வழிபாட்டில் திருவிதாங்கூர் மன்னர் கலந்து கொண்டு நாகராஜரை வழிபடுவதும் வழக்கமாக இருந்தது. ஒரு முறை மன்னர் இந்த வழிபாட்டில் கலந்து கொள்ள முடியாமல் போனது. எனவே, அவர் அடுத்து வந்த ஐப்பசி மாதத்தில் வரும் ஆயில்ய நட்சத்திர நாளில் இக்கோயிலுக்கு வருகை தந்து, புரட்டாசி மாத ஆயில்ய நாள் சிறப்பு கொண்டாட்டங்களை போன்றே சிறப்பு வழிபாடுகளை செய்து வழிபட்டார். அதற்கான செலவு அனைத்தையும் தானே ஏற்றுக் கொண்டார், இனி ஆண்டுதோறும் இரு ஆயில்ய நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தும்படி வேண்டிக் கொண்டார்.

    இதைத் தொடர்ந்து, இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி, ஐப்பசி என இரண்டு மாதங்களில் வரும் ஆயில்யம் நட்சத்திர நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்து கொண்டாடப்படுகிறது.

    சிறப்புகள்

    இந்தியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற பல்வேறு நாடுகளில் நாக வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட கோயில்களில் மன்னார்சாலை நாகராஜா கோவில்தான் மிகப்பெரிய கோயிலாக இருக்கிறது.

    கோயில் வளாகத்தில் முப்பது ஆயிரத்துக்கும் அதிகமான நாகதேவதைகளின் சிலைகள் இருக்கின்றன. இக்கோயிலில் குழந்தைப்பேறு வேண்டி செய்யப்படும் உறுளி வேண்டுதல் எண்ணிக்கை ஆண்டுக்கு ஐந்தாயிரத்துக்கும் அதிகமானதாக இருக்கிறது.

    அமைவிடம்

    கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கும் ஹரிப்பாடு எனும் ஊரில் இருந்து வடகிழக்கில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் மன்னார்சாலை எனுமிடத்தில் கோயில் அமைந்திருக்கிறது.

    ×