என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்பை சரி செய்து குழந்தைப்பேறு பெறும் வழிமுறைகள்
    X

    நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்பை சரி செய்து குழந்தைப்பேறு பெறும் வழிமுறைகள்

    • பெண்கள் குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும்போது சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட எல்லா உறுப்புகளின் செயல்பாடுகளும் பரிசோதிக்கப்படும்.
    • பல நேரங்களில் சினைப்பையில் உள்ள முட்டைகளின் இருப்பே குறைந்துவிடும்.

    பெண்கள் சமீப காலமாக சிஸ்டமிக் லூபஸ் எரித்தமட்டோசஸ் மற்றும் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் ஆகிய நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். இவை 15 வயது முதல் 40 வயது வரையிலான பெண்களை அதிகம் பாதிக்கிறது. இந்த 2 வகை பாதிப்புகளிலும் ஒரு பொதுவான விஷயம் என்னவென்றால், இவை இரண்டுமே நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் மாறுபாட்டால் ஏற்படுகிறது. இதனால் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

    லூபஸ் பாதிக்கப்பட்ட பெண்கள் திருமணம் செய்யலாம், குழந்தைப்பேறு பெறலாம்:

    லூபஸ் பாதிப்பு கொண்ட பெண்களுக்கு கருத்தரிப்பதிலும், கர்ப்ப காலத்திலும் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனது 30 வருட அனுபவத்தில் இந்த லூபஸ் பாதிப்புடன் நிறைய பெண்கள் குழந்தையின்மை சிகிச்சை மூலம் கருத்தரிப்பதற்கு வருவதை பார்த்திருக்கிறேன். இது மிகவும் சவால் நிறைந்த குழந்தையின்மை பிரச்சனை ஆகும். ஏனென்றால் இவர்களுக்கு நிறைய பாதிப்பு காரணிகள் இருக்கிறது.

    அவர்களுக்கு சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்படலாம், இருதயம் பழுதாகலாம், நுரையீரல் பழுதாகலாம். இதுபோன்ற பல சிக்கல்கள் அந்த பெண்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துடன் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையும் பாதிப்படைந்து பல பிரச்சனைகள் உருவாகும்.

    லூபஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுமா என்று என்னிடம் பலரும் கேட்பதுண்டு. லூபஸ் நோயால் பாதிக்கப்பட்ட 25 வயது பெண் என்னிடம் வந்து கேட்டார். டாக்டர், 'நான் திருமணம் செய்து கொள்ளலாமா? குழந்தைப்பேறு பெற முடியுமா?' என்று கேட்டார். கண்டிப்பாக திருமணம் செய்யலாம், குழந்தைப்பேறு பெறலாம்.

    இந்த பாதிப்பு கொண்ட பெண்களுக்கு 2 காலகட்டங்கள் இருக்கிறது. அதாவது ஒன்று நோய் தீவிரம் அடையும் காலகட்டம். மற்றொன்று நோய் குணமடையும் காலகட்டம் ஆகும். இதில் நோய் தீவிரம் அடையும் (எக்சாசர்பேசன்) காலகட்டத்தில் பெண்கள் கருத்தரிக்க கூடாது. அவர்களுக்கு அந்த நோயின் தாக்கம் நன்றாக குறைவாகும் (ரெமிசன்) காலகட்டத்தில் அவர்கள் கருத்தரிக்கலாம்.

    இந்த காலகட்டத்தை நிர்ணயிப்பதற்கு சில வரையறைகள் இருக்கிறது. இந்த பெண்கள் குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும்போது சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட எல்லா உறுப்புகளின் செயல்பாடுகளும் பரிசோதிக்கப்படும். அதில் ஆன்டிபாடி உற்பத்தி மிகவும் அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் அவர்கள் கருத்தரிப்பதை தவிர்க்க வேண்டும்.

    சினைப்பையில் முட்டைகள் குறையும் அபாயம்:

    இவை தவிர பெண்கள் இந்த நோய் தாக்கத்துக்காக பல மாத்திரைகளை எடுத்து இருப்பார்கள். இதில் குறிப்பாக செல்களில் அழற்சியை குறைப்பதற்கு கொடுக்கின்ற மருந்துகள் எல்லாம் புற்றுநோய்க்கு கொடுப்பது போன்றது ஆகும். இவை செல்களில் உள்ள அழற்சியை குறைப்பது போல, கர்ப்ப காலத்தில் கொடுத்தால் கரு வளர்ச்சியையும் பாதிக்கும்.

    இதனால் அந்த பெண்களுக்கு கர்ப்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். அவர்களுக்கு குறைபாடு உள்ள குழந்தை உருவாகலாம். இது கருவின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிப்பதால் குறையுள்ள குழந்தை பிறக்கலாம். அதனால்தான் இந்த காலகட்டத்தில் சீரிய மருத்துவம் என்பது இவர்களுக்கு தேவையான ஒன்றாகும்.

    இந்த பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், கர்ப்பம் தரிப்பதற்கு தேவையான சினைப்பையின் முட்டைகளையும் குறைக்கும். சில நேரங்களில் சினைப்பைக்கு போகின்ற ரத்த குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டால், அதில் உள்ள திசுக்கள் குறைவாகி, சினைப்பையில் உள்ள முட்டைகளும் குறைவாகும். பல நேரங்களில் சினைப்பையில் உள்ள முட்டைகளின் இருப்பே குறைந்துவிடும். அதனால் அவர்களுக்கு கருத்தரிப்பதில் பிரச்சனைகள் ஏற்படலாம்.

    இதற்கு எடுத்துக் கொள்கின்ற மாத்திரைகள், மருந்துகள் எல்லாமே பைபுரோசிசை உருவாக்கும். ஏனென்றால் செல்களில் அழற்சி இருக்கும்போது அதே கட்டுப்படுத்துவதற்கு கொடுக்கின்ற மருந்து, மாத்திரைகள் எல்லாமே அந்த செல்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் மூலம் திசுக்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டு கருத்தரிப்பதிலும் பிரச்சனைகள் உருவாகலாம். இந்த மாதிரியான பெண்களுக்கு கருசிதைவு ஏற்படுவது மிகவும் அதிகம். அவர்களுக்கு திரும்பத் திரும்ப கருச்சிதைவு ஏற்படும். 2 மாதம், 3 மாதம், 4 மாதங்களில் கருச்சிதைவு ஏற்படும். பல நேரங்களில் 8 மாதங்களில் ரத்த அழுத்தம் அதிகமாகி, கர்ப்பத்திலும் ரத்த அழுத்தம் அதிகரித்து கருவில் இருக்கும் குழந்தை இறப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

    பிரசவ நேரத்தில் குழந்தையின் ரத்த ஓட்டம் நின்று போகும், தாய்க்கு ரத்த அழுத்தம் அதிகமாகி வலிப்பு ஏற்படலாம், தண்ணீர் சத்து குறையலாம், குழந்தைக்கு துடிப்பு நின்று போகலாம், எடை குறைவான குழந்தை பிறக்கலாம். இந்த மாதிரியான எல்லா சிக்கல்களும் இந்த பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. அதனால் தான் லூபஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தரிப்பதற்கு குறிப்பிட்ட காலகட்டம் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே தான் இந்த நோயின் தாக்கம் குறையும் காலகட்டத்தில் அவர்கள் கருத்தரிக்க முயல வேண்டும்.

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    லூபஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை:

    குறிப்பிட்ட காலகட்டத்தில் நோய் குணமடைந்த நிலையில், நோய் பாதிப்பு இல்லாவிட்டாலும் கூட, இவர்களுக்கு ஏற்கனவே இருந்த பாதிப்புகளினால் ரத்த அழுத்தம் அதிகமாகலாம், குறை பிரசவம் ஏற்படலாம், கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம் அதிகமாகலாம். பல நேரங்களில் மூளைக்கு செல்கின்ற ரத்த குழாய்கள் பழுதாகி வலிப்பு ஏற்படலாம். கை, கால்கள் விழுந்து போகலாம். சில நேரங்களில் கோமா நிலைக்கு கூட செல்லலாம். அவர்களுக்கு நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. சில நேரங்களில் சிறுநீரகம் பழுதாகி, சிறுநீரக பாதிப்புகளும் ஏற்படலாம். எனவே கண்டிப்பாக கர்ப்பகாலம் என்பது அவர்களுக்கு ஒரு சவால் நிறைந்த விஷயம். அந்த பாதிப்பு அவர்களுக்கு எப்போது குறைவாக இருக்கிறதோ, அப்போது கருத்தரிப்ப தற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    இவர்களுக்கு முக்கியமான சிகிச்சை முறைகளில் எச்.சி.கியூ. (ஹைட்ராக்சி குளோ ரோகுயின்) மருந்து கொடுக்கிறோம். அதை கொடுக்கும்போது, லூபஸ் பாதிப்பால் ஏற்பட்ட அழற்சியை குறைத்து கருவளர்ச்சிக்கு உதவி செய்கிறது. தாயின் உடல் நிலையையும் பாதுகாக்கிறது. அந்த வகையில் தற்காலத்தில் ஸ்டீராய்டு, ஆஸ்பிரின் உள்ளிட்ட மருந்துகள் கர்ப்ப காலத்தில் குழந்தையின் பாதுகாப்புக்கு தேவையானது. கருத்தரிப்பதில் 2 அல்லது 3 முறை தோல்வி அடைந்தால், முதலில் முக்கியமாக லூபஸ் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இந்த லூபஸ் இருக்கிறவர்களுக்கு கர்ப்ப காலத்தில் மட்டும் லூபஸ் வரலாம். அதனால் கருச்சிதைவு, குறை பிரசவம் ஆகியவை ஏற்படலாம். இந்த பெண்களுக்கு லூபஸ் பாதிப்பு இருந்தால் கர்ப்பகாலத்தில் சிறப்பு கவனம் மற்றும் கண்காணிப்பு தேவை.

    அவர்களுக்கு பலவிதமான மருந்துகள் கொடுக்க வேண்டி இருக்கும். அவை அனைத்துமே கருவின் வளர்ச்சிக்கும் தாயின் பாதுகாப்புக்கும் முக்கியமான தேவை. இவை தவிர இதற்கு வாத நோய் மருத்துவ நிபுணரும் சிகிச்சை அளிக்க வேண்டும். ஏனென்றால் தாய்க்கு பாதிப்பு வரக்கூடாது. அதேபோல் சிறுநீரகவியல் நிபுணர், நரம்பியல் நிபுணர், தோல் நிபுணர் ஆகிய அனைவருமே சிகிச்சை கொடுக்க வேண்டும். அப்போது தான் இந்த பெண்ணுக்கு தன்னுடைய நிலையும் பாதிக்காமல், குழந்தையின் வளர்ச்சியையும் பாதுகாக்க முடியும்.

    அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் கண்காணிக்க வேண்டும்:

    என்னுடைய அனுபவத்தில் லூபஸ் பாதித்தவர்கள் சுமார் 45 பெண்களை பார்த்து இருக்கிறேன். இதில் ரொம்ப சவாலே 2 முறை மற்றும் 3 முறை கருச்சிதைவு, 6 மாதத்தில் குழந்தை இறப்பு, வலிப்பு, உடனடியாக ரத்த அழுத்தம் அதிகரிப்பு, சிறுநீரகம் பழுது போன்ற பாதிப்புகளுடன் வந்தவர்கள் நிறைய பேர். இதனை முறையாக சரி செய்து, பின்னர் கருவுற்ற பிறகு கர்ப்ப காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

    இவர்களுக்கு சிறப்பான கண்காணிப்புடன் சிகிச்சை கொடுத்தால் கண்டிப்பாக குழந்தைப்பேறு பெற்று ஆரோக்கியமாக வாழ முடியும். ஏனென்றால் இவர்கள் எல்லோருக்குமே ஒரு பயம் இருக்கும், திடீரென்று பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தாக முடியுமா என்பதுதான் அந்த பயம். இதனால் கண்டிப்பாக அவர்களுக்கு சிறப்பு கவனிப்பு தேவை. ஏனென்றால் இந்த பெண்களுக்கு அந்த மாதிரி பாதிப்புகள் வரலாம். எனவே முறையாக தேர்ச்சி பெற்ற, இதில் அனுபவம் வாய்ந்த மருத்துவர் தான் அவர்களின் கர்ப்பத்தை கண்காணிக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு தேவையான மருந்துகள் எல்லாமே சீராக கொடுக்க வேண்டும். தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்பு வராமல் பார்க்க வேண்டும். அது சவால் நிறைந்தது தான். ஆனால் முறையாக செய்தோம் என்றால் இந்த பாதிப்பை சரி செய்து, அந்த பெண்ணை குழந்தைப்பேறு பெற வைக்க முடியும்.

    பல நேரங்களில் கர்ப்பகாலம் என்பது அவர்களுக்கு லூபஸ் பாதிப்பில் குணமடையும் நிலையை கொடுக்கும். குழந்தை பெற்றவுடன் அவர்கள் இதில் இருந்து முழுமையாக குணம் அடைவதற்கான வாய்ப்புகள் கூட அதிகம். கண்டிப்பாக லூபஸ் பாதிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சைகளை முறையாக எடுத்துக் கொள்ளுங்கள். இயற்கையாகவே கருத்தரித்தால் கூட உங்களது கர்ப்பகால சிகிச்சை மற்றும் பிரசவத்தை ஒரு தேர்ச்சி பெற்ற மருத்துவரின் கண்காணிப்பில் பார்த்துக் கொள்ளுங்கள். இதில் முக்கியமான ஒன்று, கர்ப்ப கால சிகிச்சையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதன் மூலம் குழந்தை பாக்கியம் பெற முடியும்.

    Next Story
    ×