search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காற்றழுத்த தாழ்வு"

    • திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது

    திருநெல்வேலி:

    தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்.

    நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மிச்சாங் புயலால் சென்னை நகரில் கடும் பாதிப்பு ஏற்பட்டதை கருத்தில் கொண்டு, திருநெல்வேலி ஆட்சி நிர்வாகம் விரைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புயல் சின்னம் வடமேற்கு திசையில் நகா்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
    • தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21-ந்தேதி தொடங்கியது. தொடா்ந்து காற்று சுழற்சி மற்றும் மேலடுக்கு சுழற்சிகளால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    தற்போதும் குமரிக் கடல் பகுதியில் காற்று சுழற்சியும், அரபிக்கடல் பகுதியில் சோமாலியா அருகே புயல் சின்னமும், குஜராத்தில் நிலபரப்பில் காற்று சுழற்சியும் நிலவுகிறது.

    இதனால் நிலநடுக்கோட்டு பகுதியில் இருந்தும், வங்கக் கடலில் இருந்தும் மழையைத் தரும் காற்று தமிழகத்தின் ஊடாகச் செல்வதால் வட தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை ஆங்காங்கே பலத்த மழை கொட்டியது. அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 100 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 30-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 5 நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கணித்துக் கூறியபடி, தெற்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் திங்கள்கிழமை புயல் சின்னம் உருவாகியுள்ளது. தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இருக்கும் இந்தப் புயல் சின்னம் நாளை (புதன் கிழமை) மேலும் வலுவடையும்.

    அதன் பிறகு அந்த புயல் சின்னம் வடமேற்கு திசையில் நகா்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

    இது அடுத்த 2 நாள்களில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்தப் புயலுக்கு மியான்மா் நாடு பரிந்துரை செய்த 'மிச்சாங்' என்ற பெயா் சூட்டப்படும். இந்தப் புயல் தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு வருமா? அல்லது ஆந்திரம், வங்கதேசம் நோக்கி நகருமா? என்பது இன்னும் இரண்டு நாட்களில் துல்லியமாகத் தெரியவரும்.

    இன்று (செவ்வாய்க் கிழமை) தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது.

    நாளை (புதன்கிழமை) தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, ஆழ்கடலில் உள்ள மீனவா்கள் இன்றுக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். மேலும், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புயல் சின்னம் தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரனிடம் இன்று கேட்டபோது, அவர் கூறிய தாவது:-

    திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை பொறுத்தவரையில் அது வருகிற 2-ந்தேதி புயலாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் வலுப்பெற்ற பின்னர் அது புயலாக மாறுவது எப்போது? என்பதில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் தற்போதைய சூழலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நவம்பர் 29- ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    • பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதனை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகின்றது.

    கடலூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில்தெற்கு அந்தமான், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை (27 ந்தேதி) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 29- ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, வேப்பூர், காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, லால்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, திட்டக்குடி, விருத்தாச்சலம், நெய்வேலி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையானது நேற்று இரவு இடி மின்னலுடன் பெய்த வந்த நிலையில் கனமழையாக மாறியது. இதனை தொடர்ந்து விடிய விடிய மழை தொடர்ந்து வந்த நிலையில் சேத்தியாத்தோப்பு பகுதியில் 17 சென்டி மீட்டர், லால்பேட்டை பகுதியில் 11 சென்டி மீட்டர், கொத்தவாச்சாரி 10.9 சென்டிமீட்டர், ஸ்ரீமுஷ்ணத்தில் 10.7 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வந்துள்ளதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதோடு குடியிருப்பு பகுதிகளிலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்பட்டு வருகின்றது. மேலும் சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மிக கனமழை பெய்த காரணத்தினால் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதனை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகின்றது. இந்த மழை தொடரும் என்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருப்பதோடு தண்ணீர் சூழ்ந்தால் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளன. கடலூர் மாவட்டத்தில் மில்லி மீட்டர் அளவில் மழை அளவு பின்வருமாறு- 

    சேத்தியாதோப்பு - 168.4,லால்பேட்டை - 110.0,கொத்தவாச்சேரி - 109.0, ஸ்ரீமுஷ்ணம், - 107.1,புவனகிரி - 88.0, காட்டுமன்னார்கோவில் - 87.0, வேப்பூர் - 85.0,கலெக்டர் அலுவலகம் - 77.4, பரங்கிப்பேட்டை - 76.8, பெல்லாந்துறை - 74.5,கடலூர் - 69.5, குறிஞ்சிப்பாடி - 66.0,கீழ்செருவாய் - 64.0, சிதம்பரம் - 63.1,வடக்குத்து - 63.0, அண்ணாமலைநகர் - 58.0,தொழுதூர் - 58.0, லக்கூர் - 52.3, விருத்தா சலம் - 50.2,குப்பநத்தம் - 46.4, காட்டுமயிலூர் - 45.0,எஸ்.ஆர்.சி.குடிதாங்கி - 40.0, மீ-மாத்தூர் - 38.0, வானமாதேவி - 30.6, பண்ருட்டி - 16.௦  மாவட்டத்தில் மொத்தம் 1,743.30 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

    • தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
    • காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற்ற பின்னரே அது எந்த திசையை நோக்கி நகரும் என்பது தெரிய வரும்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வரும் நிலையில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து கொண்டே இருக்கிறது. சென்னையிலும் கடந்த சில நாட்களாகவே இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் அந்த மான் அருகே நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது வருகிற 29-ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை முதல் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 29-ந் தேதி அன்று தாழ்வு மண்டலமாக மாறுவதால அன்று தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்திடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    நாளை உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, அது தாழ்வு மண்டலமாக மாறிய பிறகே தெரியவரும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற்ற பின்னரே அது எந்த திசையை நோக்கி நகரும் என்பது தெரிய வரும். தமிழக பகுதியை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நகர்ந்தால் மட்டுமே தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வருகிற 27-ந்தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது வலுப்பெற்று புயலாக மாறலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
    • தாசில்தார்கள், மீன்வளத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    அந்தமான் மற்றும் அதை சுற்றியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 27-ந்தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது வலுப்பெற்று புயலாக மாறலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட கடலோர மீனவர் கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள புயல், சுனாமி, நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர் பாதுகாப்பு எச்சரிக்கை ஒலிபெருக்கி அனைத்தும் தயாராக பயன்படுத்தும் நிலையில் இயங்கி வருகிறதா என ஆய்வு செய்ய கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

    இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள மீனவர் கிராமங்களில் வைக்கப்பட்டிருந்த 60-க்கும் மேற்பட்ட புயல் எச்சரிக்கை பிரகடன ஒலிப்பான் கருவிகள் பயன்பாட்டில் தயாராக இருக்கிறதா? அதில் தொழில்நுட்ப கோளாறு ஏதேனும் உள்ளதா என அந்தந்த பகுதி தாசில்தார்கள், மீன்வளத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    • காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்.
    • கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலியில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    சென்னை:

    தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (14-ந்தேதி) உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    நாளை (14-ந்தேதி) மற்றும் 15-ந்தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்.

    ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை மிதமான மழை பெய்யக் கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 32 செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசாகவும் இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலியில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாகவோ, தீவிர புயலாகவோ மாறுவதற்கு வாய்ப்பு இல்லை.
    • குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தரைப் பகுதிக்கு செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது.

    சென்னை:

    வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களையொட்டி வங்க கடல் பகுதியில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காாரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    அதே நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாகவோ, தீவிர புயலாகவோ மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2 மாநிலங்களிலும் நல்ல மழையை கொடுக்க வாய்ப்புள்ளது என்பதால் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடல் பகுதியில் இருந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தரைப் பகுதிக்கு செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால் தமிழகத்துக்கு எந்த வகையிலும் மழை பெய்வதற்கான வாய்பபு இல்லை என்றே வானிலை மையம் சார்பில் கணிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இடி-மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், இதனால் வெப்பம் குறைந்து காணப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

    ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தென் தெற்கு வங்கக் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், ஏர்வாடி, தொண்டி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பலத்த சூறைகாற்று வீசி வருகிறது.
    • ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

    ராமேசுவரம்:

    இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

    காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலோர மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக நேற்று முதல் சாரல் மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதையொட்டி பாம்பன் துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், ஏர்வாடி, தொண்டி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பலத்த சூறைகாற்று வீசி வருகிறது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

    இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்றதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று கடல் காற்று அதிகமாக வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகு, நாட்டு படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.

    அதன்படி இன்று கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை.

    கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதையொட்டி ராமேசுவரம், பாம்பன், ஏர்வாடி, தொண்டி, மண்டபம் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு கடலோர பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூ ரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நாட்டுப்படகு மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    திடீர் தடையால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடித் தொழிலை சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இன்று காலையும் ராமேசுவரம், ராமநாதபுரம் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசியது. பாம்பனில் கடற்கரையில் உள்ள குடிசை வீடுகளில் கடல் தண்ணீர் புகுந்தது.

    சூறாவளி காற்று காரணமாக தனுஷ்கோடியில் வழக்க த்தை விட அதிகமாக கடல் கொந்தளிப்புடன் இருந்தது. அங்கு சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×