search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருகம்புல்"

    • முப்பெரும் தேவியரின் அம்சமான அக்குழந்தைக்கு “சந்தோஷி” என்று பெயரிட்டனர்.
    • சந்தோஷி என்றால் எப்போதும் ஆனந்தத்தைத் தருபவள் என்பது பொருள்.

    கயிலாயத்தில் ஒருநாள் நாரதர் தன் இரண்டு மகன்களை விநாயகரிடம் அழைத்து வந்து

    "இவர்கள் இருவரும் விரதம் அனுஷ்டிக்க ஆசைப்படுகிறார்கள்.

    நீங்கள் தான் இவர்களுக்கு விரதம் அனுஷ்டிப்பதற்காக காப்புக் கட்டுதல் செய்து வைக்க வேண்டும்" என்று கூறினார்.

    அதற்கு விநாயகர் "நானும், நீயும் எப்படி காப்பு கட்டி விட முடியும்? ஒரு சகோதரி தான் கட்டிவிட வேண்டும்" என்று கூறினார்.

    அதைக் கேட்ட நாரதர் "நீங்கள் தான் சகோதரியை அவதாரம் செய்வித்தல் வேண்டும்" என்று வற்புறுத்திக் கூறினார்.

    அந்த வற்புறுத்தலின் காரணமாக விநாயகப் பெருமான் சித்தி, புத்தியைத் துணைகொண்டு ஒரு சகோதரியைத் தோற்றுவித்தார்.

    துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமான அக்குழந்தைக்கு "சந்தோஷி" என்று பெயரிட்டனர்.

    சந்தோஷி என்றால் எப்போதும் ஆனந்தத்தைத் தருபவள் என்பது பொருள்.

    மேலும் பெண் என்பதால் பெயரின் கடைசியில் மாதா என்று சேர்த்து "சந்ஷோமாதா" என அனைவராலும் போற்றப்பட்டார்.

    • தீபாராதனை செய்யும் போது விநாயகர் சிவலிங்கம் போன்றும் காட்சி தருவதாகச் சொல்கிறார்கள்.
    • இத்தலத்தில் விழுது விடாத ஆலமரம் ஒன்று இருப்பது அதிசயமாகும்.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகில் தீவனூர் என்ற கிராமம் உள்ளது.

    இங்குள்ள பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் அர்ச்சகர் தீபாராதனை செய்யும் போது விநாயகர் சிவலிங்கம் போன்றும் காட்சி தருவதாகச் சொல்கிறார்கள்.

    பக்தர் ஒருவர் ஒரு காலத்தில் மாடுகள் மீது மிளகு மூட்டைகளை வைத்தபடி உளுந்தூர்பேட்டை சந்தைக்கு போகும் போது, இங்கு தங்கி சமையல் செய்து உணவு சாப்பிட்டார்.

    கோயில் பூசாரி, விநாயகர் படையலுக்காக கொஞ்சம் மிளகு தரக் கேட்டார்.

    இவை மிளகல்ல உளுந்து என்றார். சந்தைக்குப் போன அவர் மூட்டையைப் பிரித்த போது உளுந்தாக மாறி இருக்க இங்கு வந்து பிள்ளையாரிடம் மன்னிப்பு கேட்டார்.

    அன்று முதல் பொய்யாமொழி விநாயகர் ஆனார்.

    இத்தலத்தில் விழுது விடாத ஆலமரம் ஒன்று இருப்பது அதிசயமாகும்.

    சுயம்பு மூர்த்தியான இவரை தரிசிக்க, நினைத்தது நடக்கும் என்பது அங்குள்ள பக்தர்களின் கருத்து.

    • ஓம் என்ற பிரணவத்தில் இருந்து வேதங்கள் தோன்றின.
    • அவரே ப்ரணவத்தின் (ஓங்காரத்தின்) வரிவடிவம் ஆவார்.

    ஓம் என்ற பிரணவத்தில் இருந்து வேதங்கள் தோன்றின.

    அப்பிரணவமே எல்லாத் தேவதைகளுக்கும் பிறப்பிடம்.

    உலகத்தின் தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் பிரணவ மந்திரமே காரணமாகும்.

    பிரணவ சொரூபமாகத் திகழ்பவர் விநாயகர்.

    விநாயகரின் பெருமை எழுத்துக்கும் சொல்லுக்கும் அடங்காதது.

    நினைத்ததை எல்லாம் தரவல்லது.

    ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் அமாவாசை கழித்து நான்காம் நாள் அன்று வரும் சதுர்த்தியை

    விநாயகர் சதுர்த்தி என்று நாம் கொண்டாடி வருகிறோம்.

    விநாயகர் எப்போதும் ஆதிமூலப் பொருள் ஆவார்.

    அவரே ப்ரணவத்தின் (ஓங்காரத்தின்) வரிவடிவம் ஆவார்.

    சிவபெருமானிடத்தில் இருந்து முதன் முதலாகத் (ஆதி மூலமாக) தோன்றிய ஒலியே ஓங்காரமாகும்.

    ஆகையால் யாவரும் அவரை வழிபாடு செய்து இடர் களைந்து இன்புற்று வாழ்கின்றனர்.

    சிவபெருமானை வழிபடுவோரின் துன்பம் களையவே விநாயகரை சிவன் தோற்றுவித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

    • இவனை பிரம்மாவாலும் தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை.
    • கோபத்தில் அவனை விநாயகர் அப்படியே விழுங்கி விட்டார்.

    அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான்.

    தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றித் தகித்து விடுவான்.

    இவனை பிரம்மாவாலும் தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை.

    அவர்கள் சிவ பார்வதியை சந்தித்து முறையிட்டனர்.

    சிவனும் விநாயகரை அழைத்து அந்த அரக்கனை அழித்து வரும்படி கட்டளையிட்டார்.

    விநாயகரும் பூத கணங்களுடன் போருக்கு சென்றார்.

    அங்கு சென்றதும் அனலாசுரன் பூதகணங்களை எரித்துச் சாம்பலாக்கினான்.

    விநாயகர் அனலாசுரனுடன் மோதினார்.

    ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை.

    கோபத்தில் அவனை விநாயகர் அப்படியே விழுங்கி விட்டார்.

    வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடைய செய்தான்.

    விநாயகருக்கு அந்த வெப்பத்தைச் தாங்க முடியவில்லை.

    அவருக்கு குடம் குடமாக கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை.

    இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார்.

    அவரது எரிச்சல் அடங்கியது. அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான்.

    அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர் கட்டளையிட்டார்.

    இப்படித்தான் விநாயகருக்கு அருகம்புல் சாற்றும் பழக்கம் ஏற்பட்டது.

    • ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் விநாயகரை தடுத்து நிறுத்தினான்.
    • விநாயகர் தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்ததன் மூலம் தகர்த்தார்.

    மகோற்கடர் என்ற முனிவராக அவதாரம் செய்த விநாயகர் காசிப முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார்.

    ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் விநாயகரை தடுத்து நிறுத்தினான்.

    உடனே விநாயகர் யாகத்திற்காக கொண்டு சென்ற தேங்காய்களை எடுத்து வீசி அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார்.

    எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கமுண்டு.

    விநாயகர் தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்ததன் மூலம் தகர்த்தார்.

    அதன் மூலம் விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது.

    இதன் மூலம்தான் சிதறுகாய் உடைக்கும் வழக்கம் உருவானது.

    • குரு உபதேசம் பெற்று படித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
    • வாழ்வில் பொருள் சேர்க்கை பெரியோர் நட்பு செல்வ நிலை உயர்வு கிட்டுவது உறுதி.

    ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம் க்லௌம் கம் ஐம் கர ஈல ஹ்ரீம்

    தத்ஸ விதுர்வரேண்யம் கணபதயே க்லீம் ஹஸ கஹல ஹ்ரீம்

    பர்கோ தேவஸ்ய தீமஹி வரவரத ஸெள: ஸகல ஹ்ரீம்தியோயோக:

    ப்ரசோதயாத் ஸர்வ ஜனம்மே வசமாயை ஸ்வாஹா.

    விருப்பங்களை நிறைவேற்றும் வேத நாயகனே

    திருப்பங்கள் தந்து காக்கும் தேவ குமாரனே

    சக்தியின் ஒளிந்திருக்கும் மந்திரக் கூற்றனே

    பக்தியோடு தொழுதோம் பலன் பலகோடி ஈவாயே!

    வாஞ்ச கல்ப கணபதி தியானம் மூலமந்திரத்தை சிரமப்பட்டு மனதில் ஏற்றிக் கொண்டு முறைப்படி

    ஜபித்து வந்தால் உங்கள் வாழ்வில் பொருள் சேர்க்கை பெரியோர் நட்பு செல்வ நிலை உயர்வு கிட்டுவது உறுதி.

    குரு உபதேசம் பெற்று படித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    • இந்த ஜபம் செய்வதற்கு உகந்த நாள் புரட்டாசி மற்றும் ஐப்பசி
    • மூன்று முறை படித்து வந்தால் லட்சுமியின் அருளும் கிடைக்கும்.

    இதன் விசேஷ பலன் கூறும் விதிமுறையது.

    தினம் ஒரு முறை ஜபித்தால் தெள்ளிய அறிவும் மூன்று முறை படித்து வந்தால் லட்சுமியின் அருளும், ஐந்து முறை படித்து வந்தால் சகல போக பாக்யங்களும் அடைய முடியும்.

    இந்த ஜபம் செய்வதற்கு உகந்த நாள் புரட்டாசி மற்றும் ஐப்பசி மாத சுக்ல பட்ச (வளர்பிறை) மகாநவமி மற்றும் மாத வளர்பிறை சதூர்த்தி.

    தியான சுலோகம்

    த்வாப்யாம் விப்ராஜமானம் த்ரிதகலச

    மகா ஸ்ருங்க லாப்யாம்

    புஜாப்யாம் பீஜாபூராதி பிப்ரத தசபுஜ

    மருணம் நாகபூஜம் த்ரிநேத்ரம்

    ஸந்த்யா ஸிந்தூர வர்ணம் ஸ்தனபரநிமிதம்

    துந்தலம் சந்த்ரசூடம்

    கண்டாதூர்த்வம் கரீந்த்ரம் யுவதிமயம்தோ

    தௌமி வித்யா கணேசம்.

    • வாஞ்சா என்பதற்கு மன விருப்பங்கள் என்றும் பரிவு, பாசம் என்றும் பொருள் உண்டு.
    • மனவிருப்பங்களை நிறைவேற்றும் இவரது உருவமும் சற்று வித்தியாசமான ஒன்று.

    விநாயக பூஜா விதிகளில் நாம் காணுகின்ற அடிப்படை பூஜை முறைகள் எல்லாம்

    காலத்திற்கேற்ப பலன் கிடைப்பதாக பக்தர்கள் சொல்வதால் சிறு தெருக்களில் கூட விநாயகர் சன்னதிகள் சிறிது சிறிதாக உருவாகி உள்ளன.

    அவற்றுள் வாஞ்சா கல்பகணபதி என்பவர் வேதம், ஆகம பூஜா விதிகள் பயின்றவர்களுக்கு மட்டுமே முன்பெல்லாம் தெரிந்த ஒன்றாக இருந்தது.

    ஆனால் இக்காலத்தில் வாஞ்சா கல்பகணபதி வழிபாடு பலருக்கும் தெரிந்த ஒன்றாக மாறியுள்ளது.

    வாஞ்சா என்பதற்கு மன விருப்பங்கள் என்றும் பரிவு, பாசம் என்றும் பொருள் உண்டு.

    கல்ப என்பதற்கு நாம் வணங்கினால் நாம் வாழ்கின்ற காலம் முழுவதும் நம்மைக் காக்கின்ற என்றும் பொருள்.

    மனவிருப்பங்களை நிறைவேற்றும் இவரது உருவமும் சற்று வித்தியாசமான ஒன்று.

    பன்னிரு கைகளில் முறையே தாமரை, பாசம், நீலோத்பலம், நெல், தந்தம், சங்கிலி, அபயம், மாதுளை, தண்டம், கரும்பு, சூலம், சக்கரம்,

    ஆகியவற்றுடன் தங்க ஆபரணங்கள் அணிந்து கொண்டு பெண் உருவைக் காட்டியவராய் ஜடாமகுடம் தரித்தவராய்க் காட்சி தருகிறார்.

    முதல்முதலாக இந்த சக்திவாய்ந்த மூலமந்திரம் திபெத்திய மொழியில் வெளியிடப்பட்டு வந்தது.

    நம் நாட்டில் குமார சம்ஹதை ப்ரோயக பாரிஜாதம் ஆகிய கிரந்தங்களில் விளக்கங்களோடு உள்ளது.

    இம்மந்திரத்தில் நலம் கொடுக்கும் ஐந்து மூர்த்தங்களின் மூலம் சேர்ந்திருக்கிறது.

    மகாகணபதி, மகா திரிபுரசுந்தரி, ஸ்ரீவித்யாகணபதி, அமிர்த ருத்ரேரஸ்வரர்சம்வாதாக்னி ஆகியோருடையதும் இவர்களின் வேத மந்திர பீஜங்களோடு கணபதி மூலம் பஞ்சதசாட்சரி மூலம் காயத்ரி மந்திரங்கள் உபதேவதை மந்திரங்களோடும் உள்ளது.

    இவற்றை குரு உபதேசம் பெற்றுக் கொண்டபின் செய்வதால் உச்சரித்த சில தினங்களுக்குள் பலன் கொடுக்கும் என்பது வேத வித்வான்களின் கருத்து.

    மூல மந்திர ஜபம் 4 பகுதிகளாக (பர்யாயங்களாக ) பிரிக்கப்பட்டிருக்கும், அதை கவனமாக மனவிருப்பங்களுக்கு ஏற்ப படிக்க வேண்டும்.

    • கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்தில் தோன்றுவார்.
    • துவாபர பாகத்தில் கஜனைராக மூஞ்சுறு வாகனத்தில் தோன்றுவார்.

    ஸ்வஸ்திகம் என்பது இந்த உலகத்தின் நான்கு திசைகளிலும் இறைவன் அருளாட்சி செய்வதைக் குறிக்கிறது.

    பரந்த இந்தப் பிரபஞ்சத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தலையும், நான்கு வேதங்களின் கோட்பாடுகள்படி

    நாம் வாழ்ந்தால் இறைவனது திருவடி நிழல்பட்டு நமது வாழ்க்கைச் சக்கரம் நன்கு சுழலும் என்பதை குறிப்பிடுகிறது.

    அதில் உள்ள ஒவ்வொரு வளைவும் கூறும் தத்துவம் உயர்வானது.

    ஆன்மாவானது நானம் யோகம், சரியை, கிரியைகளைத் தாண்டி பகவானிடம் நெருங்க வேண்டுமானால்

    பஞ்ச பூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றைக் கொண்ட இந்த உலக தர்மங்களை

    கடைபிடித்து வாழவேண்டும் என்று விநாயகர் ஸ்வஸ்திகத்தை கையில் வைத்துக் கொண்டு உணர்த்துகிறார்.

    மேலும் திருவிளையாடற் புராணத்தில் நமது சைவப் பெரியார்கள் நமது ஆணவமாகிய யானையை வெல்ல,

    விநாயகர் என்ற யானை முகனை எப்படி வணங்குவது என்று கூறி உள்ளனர்.

    உள்ளமெனும் கூடத்தில் ஊக்கமெனும்

    தறிநிறுவி உறுதியாகத்

    தள்ளரிய என்பென்னும் தொடர்பூட்டி

    இடர்படுத்தித் தறுகண் பாசக்

    கள்ளவினை பசுபோதக் கவனமிடக்

    களித்துண்டு கருணை என்னும்

    வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை

    நினைந்து வருவிணைகள் தீர்ப்போம்.

    யுகங்களில் தோன்றும் கணபதிகள்

    கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்தில் தோன்றுவார்.

    த்ரேதா யுகத்தில் மயூரேஸ்வராக மயில் வாகனத்தில் தோன்றுவார்.

    துவாபர பாகத்தில் கஜனைராக மூஞ்சுறு வாகனத்தில் தோன்றுவார்.

    கலியுகத்தில் பிள்ளையாராக எலி வாகனத்தில் தோன்றுவார்.

    • விநாயகரின் உள்ளங்கவர் மூலிகை அறுகம்புல் ஆகும்.
    • இந்த வெப்பத்தால் விநாயகர் வயிற்றில் சூடு அதிகமாகி விட்டது.

    அருகம்புல்லும் விநாயகரும்!

    விநாயகரின் உள்ளங்கவர் மூலிகை அறுகம்புல் ஆகும்.

    நோய் தீர்க்கும் மூலிகைகளின் முன்னோடியாக விளங்குவது அறுகம்புல் திகழ்கிறது.

    மன ஒருமைக்கும், மகிழ்ச்சிக்கும் உடலைப் பேணவும் நடமாடும் தெய்வமாகத் திகழ்வது தெய்வீக மூலிகைகளேயாகும்.

    அவ்வகையில் அறுகம்புல் மகிமை மிக உன்னதமானது.

    விநாயகருக்கு உண்டான அதீதப் பசிநோய்க்கும் அறுகம்புல்லே உணவாக தரப்பட்டு நிவர்த்திக்கப்பட்டதாக விநாயகப் புராணம் கூறுகிறது.

    விநாயகப் பெருமான் ஒரு தடவை தேவர்களை காக்கும் பொருட்டு கொடியவனாகிய அனலாசுரனை விழுங்கி விட்டார்.

    இதன் காரணமாக அனலாசுரனின் கடும் வெப்பம் விநாயகரை தாக்கியது.

    இந்த வெப்பத்தால் விநாயகர் வயிற்றில் சூடு அதிகமாகி விட்டது.

    அதனால் தேவர்கள் அனைவர் வயிற்றிலும் கடும் கொதிப்பு உண்டானது.

    அனலைத் தணிக்க தேவர்கள் என்னவெல்லாமோ செய்து பார்த்தனர்.

    ஆனால் என்ன செய்தும் பலனில்லை.

    அப்போது அங்கு வந்த முனிவர்கள் ஒவ்வொருவரும் 21 அருகம்புற்களை விநாயகருக்கு சாத்தினர்.

    உடனடியாக விநாயகரின் திருமேனி குளிர்ந்து விட்டது.

    அனைவரின் வயிற்றிலும் கொதிப்பு நீங்கி குளிர்ச்சி ஏற்பட்டது.

    அன்று முதல் விநாயகரை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபடும் பழக்கம் ஏற்பட்டது.

    சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருப்பவர்கள் விநாயகருக்கு நறுமண திரவியங்களால் அபிஷேகித்து அருகம்புல்லால் அர்ச்சனை செய்வது நல்லது.

    ஆரோக்கியம் பெற, உடல் கொதிப்பு தணிய நாமும் அருகம்புல் ஜூஸ் பருகலாம்.

    • அருகம்புல்லும், தாமரையும்மணக்குள விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது.
    • ஆறு இடங்களில் எழுச்சிபெறும் குண்டலினி யோகத்தின் மூலக்கடவுள் விநாயகர்.

    மணக்குள விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது அருகம்புல்லும், தாமரை மலருமாகும். இவற்றை விற்பனை செய்ய கோவில் முன்பு பல கடைகள் உள்ளன. மணக்குள விநாயகருக்கு மிகவும் பிடித்த அருகம்புல் பற்றி ஒரு கதை உள்ளது.

    இந்திரன் முதலான தேவர்களை அப்படியே விழுங்கி விட வந்தான் எமனின் மகனான அனலாசுரன் என்ற அரக்கன்.

    தேவர்கள் பயந்து அலறியபடி ஸ்ரீவிநாயகப் பெருமானிடம் ஓடி வந்து முறையிட்டார்கள்.

    விநாயகர் அனலாசுரனுடன் போரிட்டு கடைசியில் அவனை அப்படியே எடுத்து விழுங்கி விட்டார். அதனால் ஜோதியே வடிவான அவருடய திருமேனி பெரும் வெப்பத்தால் தகித்தது.

    ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கு எழுந்த அந்த உஷ்ணத்தை போக்க சந்திரன் தம் ஒளிக்கதிர்களால் குளிர்ச்சியை ஏற்படுத்தினார்.

    சித்தியும், புத்தியும் தம் குளிர் மேனியால் ஒத்தடம் கொடுத்தார்கள். திருமால் தாமரை மலர்களால் அர்ச்சித்தார்.

    வருணன் மழை பொழிந்து விநாயகரை நன்னீரால் அபிஷேகம் செய்தான். இவ்வாறாக பலரும் பலவிதமாக பணிவிடைகள் செய்தனர். ஆனாலும் விநாயகர் உடலில் ஏற்பட்ட வெப்பம் அகலவில்லை.

    கடைசியாக மகிரிஷிகளும் முனிவர்களும் வந்து கூடி அருகம்புல்லை கட்டு கட்டாக படல் படலாக அமைத்து விநாயகர் மேல் சாற்றினார்கள். அருகு ஊறிய மூலிகை நீரை அவர் மேல் ஊற்றி நீராட்டினார்கள்.

    பின்பு இரண்டிரண்டு அருகாக எடுத்து விநாயகரை நாமாவளி கூறி அர்ச்சித்தார்கள். அதனால் அவருக்கு அனலாசுரனை விழுங்கிய வெப்பம் தணிந்தது. அன்று முதல் அருகம்புல் விநாயகருக்கு பிரியமானது. அவர் அணியும் மலர்களில் முதலிடமும் பெற்றது.

    பல பிறவிகளை கடந்த ஆத்மாக்கள் மழைவழியே வந்து அருகம்புல்லின் நுனியில் துளிநீரில் பொருந்தி, பசுவயிற்றுக்குள் சென்று, பின் எருவாகி, உரமாகி பயிர்பச்சைகளுக்குள் சென்று உணவாகி, மனிதர்கள் உண்ணும் உணவில் சென்று, ஆண்களின் உயிர்நிலையில் சென்றமர்ந்து உயிரணுவாகி, பின்பு பெண் கர்ப்பத்திற்குள் சென்று பிள்ளையாகி மனிதப்பிறவி பெறுகின்றது. இதற்கு அருகம்புல் காரணமாக இருப்பதால் அது விநாயகருக்கு அணிவிக்கப்படுகிறது.

    குண்டலின் யோகத்தில் அருகு

    ஓரிடத்தில் முளைத்து கொடிபோல் நீண்டு, ஆறு இடங்களில் கிளைத்து வேரூன்றி வாழும் தன்மையுள்ளது `அருகு' இந்த தன்மையால்தான் அது `அருகு' என்றே அழைக்கப்பட்டது.

    அதுபோல் மூலவாயுவானது மூலாதாரத்தில் இருந்து எழுந்து, ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என ஆறு இடங்களில் படிப்படியாக பிரவேசித்து இறுதியாக சஹஸ்ராம் என்ற இடத்தில் சென்று முழு நிலையை அடைகின்றது. இதுவே குண்டலினி சக்தி.

    ஆறு இடங்களில் எழுச்சிபெறும் குண்டலினி யோகத்தின் மூலக்கடவுள் விநாயகர் என்பதால், ஆறு இடங்களில் களைத்து எழும் அருகு அவருக்கு அணிவிக்கப்படுகிறது.

    விநாயகரை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபட்டால் அவர் யோக நிலையில் நம்மை முன்னேறச் செய்வார் என்பது யோக நூல்களின் கருத்து. எனவே மணக்குள விநாயகரை தரிசிக்க செல்லும்போது மறக்காமல் அருகம்புல் வாங்கிச் செல்லுங்கள்.

    கஜபூஜை

    மணக்குள விநாயகர் கோவிலில் கோவில் யானை ஒன்று உள்ளது. அதன் பெயர் லட்சுமி. இந்த யானையை வைத்து பக்தர்கள் அடிக்கடி கஜபூஜை நடத்துக்கிறார்கள். கஜபூஜை செய்வதால் விருப்பங்கள் நிறைவேறும் என்பது ஐதீகமாகும்.

    இந்த யானை மற்ற கோவில் யானைகள் போல் மக்களுடன் மிகவும் அன்புடன் பழகி வருகிறது. லட்சுமி யானை புதுவை மக்களால் பெரிதும் பேரன்புடன் கண்டு செல்லக்கூடிய ஒரு நிலை இன்று உள்ளது. மணக்குள விநாயகர் கோவில் நுழைவாயலில் முன் லட்சுமி நின்று கொண்டு வரும் பக்தர்களை வரவேற்பதை நாம் இன்றும் காண முடியும். பல குழந்தைகள் லட்சுமியை காண்பதற்காக இங்கு வருகின்றனர்.

    • கந்தனின் பாதம் கனவிலும் காக்கும் என்பது சிவன்மலை முருகப்பெருமானின் அருள்வாக்கு.
    • 7 கிலோ அரிசி, 5 லிட்டர் நல்லெண்ணெய் வைத்து பூஜை செய்யப்பட்டது.

    காங்கயம் :

    கொங்கு மண்டலத்தில் புகழ்மிக்க கோவில்கள் ஏராளமாக உள்ளன. அதில் சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு தனிச்சிறப்பு உண்டு. கந்தனின் பாதம் கனவிலும் காக்கும் என்பது சிவன்மலை முருகப்பெருமானின் அருள்வாக்கு.

    இந்த கோவிலில்தான் ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. முருகப்பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி, ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்பட வேண்டிய பொருளை கூறி வருவதும், அதன்படி அந்த பெட்டியில் அப்பொருளை வைத்து பூஜை செய்யப்படுவதும் இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும். கனவில் முருகப்பெருமானின் உத்தரவு கிடைக்கப்பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறுவார். கோவில் நிர்வாகிகள் சாமியிடம் பூ போட்டு கேட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். அதன்படி திண்டுக்கல் ரெயில் நிலைய பகுதியை சேர்ந்த முருக பக்தரான கற்பகம் (வயது 56) என்ற பெண் பக்தரின் கனவில் உத்தரவான நந்தியாவட்டம் பூ, அருகம்புல், துளசி ஆகியவை நேற்று முதல் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த 13-ந் தேதி முதல் 7 கிலோ அரிசி, 5 லிட்டர் நல்லெண்ணெய் வைத்து பூஜை செய்யப்பட்டது. தற்போது ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும் நந்தியாவட்டம் பூ, அருகம்புல், துளசி போன்றவை என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போக போக தெரியும் என பக்தர்கள் கூறினர்.

    ×