என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஸ்வநாதன் ஆனந்த்"

    • ரேபிட் பிரிவில் இரு ஆட்டங்களும் டிராவில் முடிந்ததால் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது.
    • அர்ஜூன் எரிகைசி 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் விசுவநாதன் ஆனந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    ஜெருசலேம்:

    ஜெருசலேம் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி இஸ்ரேலில் நடந்தது.

    இதன் இறுதிபோட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜூன் எரிகைசி, 5 முறை உலக சாம்பியனான 55 வயது விசுவநாதன் ஆனந்தை (இந்தியா) எதிர்கொண்டார். இதில் ரேபிட் பிரிவில் இரு ஆட்டங்களும் டிராவில் முடிந்ததால் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது.

    மிக துரிதமாக காய் நகர்த்தக்கூடிய 'பிளிட்ஸ்' முறையில் நடந்த முதல் ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய அர்ஜூன் எரிகைசி 45-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 2-வது ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜூன் எரிகைசி 36-வது நகர்த்தலில் டிரா செய்தார். இதனால் 22 வயதான அர்ஜூன் எரிகைசி 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் விசுவநாதன் ஆனந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கிய அர்ஜூன் எரிகைசிக்கு ரூ.49 லட்சமும், 2-வது இடம் பெற்ற ஆனந்துக்கு ரூ.31 லட்சமும் பரிசாக கிடைத்தது.

    • ஒரு பயனர், ‘என் நண்பன் எப்போதும் என் ராணியை எடுத்து செல்கிறான்’ என்ன செய்வது? என்று கேட்டிருந்தார்.
    • ஆனந்த் வேடிக்கையாக செஸ் விளையாட்டிலா? அல்லது வாழ்க்கையிலா? என கேட்டு பதில் அளித்தார்.

    செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்துக்கு சமூக வலைதளமான டுவிட்டரில் கணக்கு இருந்தாலும் அவர் அதிக பதிவுகளை பதிவிடுவது இல்லை. இந்நிலையில் அவர் #AskVishy என்ற ஹேஷ்டேக்குடன் பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அமர்வை தொடங்கி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் செஸ்போர்டுக்கு முன்னால் இருப்பது போன்று ஒரு படத்தையும் பதிவிட்டுள்ளார். பின்னர் பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க தொடங்கினார். அப்போது ஒரு பயனர், 'என் நண்பன் எப்போதும் என் ராணியை எடுத்து செல்கிறான்' என்ன செய்வது? என்று கேட்டிருந்தார். அதற்கு ஆனந்த் வேடிக்கையாக செஸ் விளையாட்டிலா? அல்லது வாழ்க்கையிலா? என கேட்டு பதில் அளித்தார். இதேபோல ஆனந்திடம், உங்களுக்கு பிடித்த பாடல் எது? என பயனர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு அவர் 'ரூக் ரூக் ரூக் ஹரே பாபா ரூக்' என பதில் அளித்திருந்தார். இதே போல பல்வேறு பயனர்களுக்கும் அவர் பதிலளித்து பயனர்களை குஷிபடுத்தினார்.

    • கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 100 இடங்களுக்குள் வந்த அவர் 15 மாதங்களிலேயே 10 இடங்களுக்குள் நுழைந்து அசத்தியுள்ளார்.
    • செஸ் வீரர் குகேஷ்க்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    சென்னை:

    இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக தமிழகத்தை சேர்ந்த குகேஷ் சாதனை படைத்துள்ளார்.

    சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் (லைவ் ரேட்டிங்) 17 வயதான குகேஷ், 2755.9 புள்ளிகள் பெற்று 9-வது இடத்துக்கு முன்னேறினார். இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 2754.0 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளார். விஸ்வநாதன் ஆனந்தை முந்தியதன் மூலம் குகேஷ் இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் ஆனார்.

    செஸ் உலக கோப்பை (2023) தொடர் அஜர்பை ஜான் நாட்டின் பாகுவில் நடந்து வருகிறது. இதில் 2-வது சுற்றுக்கு முன்னேறிய குகேஷ், தன்னை எதிர்த்து விளையாடிய மிஸ்ட்ராடின் இஸ்கண்ட்ரோவை தோற்கடித்து பிறகு உலக தரவரிசை பட்டியலில் 9-வது இடத்துக்கு முன்னேறினார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 100 இடங்களுக்குள் வந்த அவர் 15 மாதங்களிலேயே 10 இடங்களுக்குள் நுழைந்து அசத்தியுள்ளார்.

    5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரான விஸ்வநாதன் ஆனந்த் 1986-ம் ஆண்டுக்கு பிறகு 37 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர்-ஒன் வீரராக இருந்து வருகிறார். வருகிற செப்டம்பர் 1-ந்தேதி அடுத்த தரவரிசை பட்டியல் வெளியிடும் வரை குகேஷ், ஆனந்தை விட தொடர்ந்து ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்ததால் 1986-க்கு பிறகு ஆனந்தை முந்திய முதல் இந்தியர் என்ற பெருமையை குகேஷ் பெறுவார்.

    இந்த நிலையில் செஸ் வீரர் குகேஷ்க்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    செஸ் உலகத் தரவரிசைப் பட்டியலின் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ள கிராண்ட்மாஸ்டர் குகேஷ்க்கு பாராட்டுகள்.

    உங்களது உறுதியும் திறனும் செஸ் ஆட்டத்தின் மிக உயர்ந்த படிநிலைக்கு உங்களை உயர்த்தி, உலக அளவில் அதிகப் புள்ளிகளைப் பெற்றிருக்கும் இந்திய வீரராக உங்களை நிலைநிறுத்தி உள்ளன.

    உங்களது சாதனை உலகெங்குமுள்ள இளந்திறமையாளர்களுக்கு ஊக்கமாகவும் நமது தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 ஆம் தேதி உலக செஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.
    • தமிழ்நாட்டின் செஸ் விளையாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவர் விஸ்வநாதன் ஆனந்த்

    இன்று [ஜூலை 20] உலக செஸ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1924 ஆம் ஆண்டு பாரிஸில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) நிறுவப்பட்ட தேதியைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 ஆம் தேதி உலக செஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.

    இந்த தருணத்தில் இந்தியாவில் அதிக அளவில் கிராண்ட் மாஸ்டர்களைக் கொண்ட, உலக செஸ் போட்டிகளில் பெரிதளவில் பங்குபெறும் வீரர்களை உருவாக்கும் மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்பது நினைவுகூரத்தக்கது. தமிழக கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி, குகேஷ் மற்றும் பல தமிழக வீரர்களின் சாதனைகள் இந்தியாவிற்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வருகின்றன.

    இந்தியாவில் இவர்கள் போன்ற பல சாதனையாளர்களை உருவாக்குவதிலும், தமிழ்நாட்டின் செஸ் விளையாட்டின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிப்பவர் ஐந்து முறை செஸ் உலக சாம்பியனும், மற்றும் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (FIDE) துணைத் தலைவருமான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்.

    உலக செஸ் தினத்தைக் கொண்டாடும் வகையில் நடந்த மாநில அளவிலான செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு விஸ்வநாதன் ஆனந்த் தனது சொந்த முயற்சியில் செஸ் போர்டுகளை ஆட்டோகிராஃபுடன், அன்பளிப்பாக வழங்கினார்.

     

    அதனுடன் செஸ் விளையாட்டில் தனது அனுபவம் குறித்த கடிதம் ஒன்றையும் அவர் மாணவர்களுக்கு வழங்கினார். அந்த கடிதத்தில் செஸ் விளையாட்டால் ஒருவரின் திறமைகள் எவ்வாறெல்லாம் வளர்கிறது என்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தியுள்ளார்,

    விஸ்வநாதன் ஆனந்தின் அயராத உழைப்பும், இது போன்ற பல ஈடுபாடுகளும் மாணவர்களுக்கு செஸ் மீதான ஈடுபாட்டை அதிகரிக்கும். இதன் மூலம் நம் மண்ணில் இன்னும் பல கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகுவார்கள் என்பது நிச்சயம். 

    • வங்கிக்கணக்கு விவரங்களை கூறுங்கள் என மிரட்டும் தொனியில் பேசி உள்ளார்.
    • மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    சென்னை:

    சர்வதேச செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின் மாமனார் ஆனந்த் 81 வயதான இவர் கோட்டூர்புரம் வெள்ளையன் தெருவில் வசித்து வருகிறார். இவரது செல்போனில் கடந்த 18-ந் தேதி வாட்ஸ் அப் அழைப்பு வந்து உள்ளது.

    அதில் பேசிய நபர் தன்னை கர்நாடக மாநில போலீஸ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசி உள்ளார். அப்போது அவர் உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி கர்நாடகாவில் வாடகை கார் எடுக்கப்பட்டு உள்ளது. அந்த கார் பெரிய அளவில் விபத்தில் சிக்கி உள்ளது. பலர் ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உங்க வங்கிக்கணக்கு விவரங்களை கூறுங்கள் என மிரட்டும் தொனியில் பேசி உள்ளார்.

    இருப்பினும் உஷாரான ஆனந்தின் மாமனார் போலியான நபர் யாரோ நம்மிடம் பேசுகிறார் என்பதை உணர்ந்து இணைப்பை துண்டித்து உள்ளார். இதனால் அவரது வங்கிக் கணக்கில் இருந்த பணம் தப்பியது.

    இதுபற்றி சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மும்பை உள்ளிட்ட வெளிமாநில போலீசார் பேசுவது போல மிரட்டி செஸ் சாம்பியன் ஆனந்தின் மாமனாரை மர்மநபர் டிஜிட்டல் முறையில் கைது செய்ய திட்டமிட்டு பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    • இளம் வயதில் உலக செஸ் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார்.
    • குகேஷ்க்கு 2024 ஆம் ஆண்டுக்கான கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

    சென்னையை சேர்ந்த டி.குகேஷ் சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இதன்மூலம் இளம் வயதில் உலக செஸ் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார்.

    இதனையடுத்து குகேஷ்க்கு 2024 ஆம் ஆண்டுக்கான கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், செஸ் ஜாம்பவான்களான விஸ்வநாதன் ஆனந்த், குகேஷ், பிரக்ஞானந்தா விதித் குஜராத்தி மற்றும் சாகர் ஆகியோர் இணைந்து ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோர் ஜாலியாக அந்த வீடியோவில் நடனமாடுகின்றனர்.

    கடைசியாக ஆனந்த், 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்தான் கார்ல்சனை வீழ்த்தி இருந்தார்.
    ஓஸ்லோ:

    செஸ் உலகில் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் விஸ்வநாதன் ஆனந்த். இவர் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர். இவர் கடைசியாக தன்னுடைய உலக சாம்பியன் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சனிடம் இழந்தார். அதன்பின்னர் கார்ல்சன் தொடர்ந்து உலக சாம்பியனாக இருந்து வருகிறார். 

    இந்நிலையில் நார்வேயில் தற்போது நடைபெற்றும் பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 52 வயது விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்றுள்ளார். இவர் இந்த தொடரின் 7-வது சுற்றில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸனை எதிர்கொண்டார். போட்டியின் 43வது நகர்வின் போது கார்ல்சன் விஸ்வநாதன் ஆனந்திடம் வீழ்ந்தார்.

    இதையடுத்து கார்ல்சனை வீழ்த்திய ஆனந்த், நார்வே செஸ் பிளிட்ஸ் போட்டித் தொடரில் 4-வது இடம் பிடித்தார். 

    இந்தத் தோல்வியினால் கார்ல்சன் 2-வது இடத்துக்குச் சென்றார். 5-வது சுற்றில் அனிஷ் கிரியிடமும், 9-வது சுற்றில் பிரான்ஸின் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவிடமும் தோல்வியடைந்ததால், ஆனந்த் 5 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார். 

    அமெரிக்க கிராண்ட்மாஸ்டரான வெஸ்லி சோ, 6.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். நெதர்லாந்து கிராண்ட்மாஸ்டர் அனிஷ் கிரி மூன்றாவது இடத்தை பிடித்தார்.

    5 ஆண்டுகளுக்கு பிறகு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை விஸ்வநாதன் ஆனந்த் வீழ்த்தியுள்ளார். கடைசியாக ஆனந்த், 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்தான் கார்ல்சனை வீழ்த்தி இருந்தார்.
    3வது வெற்றியை பதிவு செய்த ஆனந்த், புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
    நார்வே:

    நார்வேயில் நடைபெற்று வரும் பிலிட்ஸ் சென்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்றுள்ளார். 

    இத்தொடரில் 10 வீரர்கள் மோதும் கிளாசிக்கல் சுற்றில் விளையாடி வரும் விஸ்வநாதன் ஆனந்த், முதல் இரண்டு சுற்றுக்களில் பிரான்ஸ் வீரர் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவ் மற்றும் வெசெலின் டோபலோவ் (பல்கேரியா) ஆகியோரை தோற்கடித்தார். இந்நிலையில்   இன்று நடைபெற்ற கிளாசிக்கல் பிரிவில் மூன்றாவது சுற்றில் சீனாவின் வாங் ஹாவை ஆனந்த் வீழ்த்தினார்.

    இதன்மூலம் 3வது வெற்றியை பதிவு செய்த ஆனந்த், புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
    • செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவமணியுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்தார்.
    • செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை மிகவும் சிறப்பாக நடத்திய முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் விஸ்வநாதன் ஆனந்த்.

    சென்னை:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி கடந்த 10-நாட்களுக்கு மேல் நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் தொடரின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது.

    செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ளனர்.

    நிறைவு விழாவில் இந்தியாவின் இதயத் துடிப்பு (ஹார்ட் பீட்ஸ் ஆஃப் இந்தியா) என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் டிரம்ஸ் சிவமணி, வீணை ராஜேஷ் வைத்யா, நவீன்குமார், கீ போர்டு ஸ்டீபன் தேவசிஆகியோர் சேர்ந்து ஒரே மேடையில் அசத்தினர். டிரம்ஸ் வாசித்தபடியே மேடையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இருந்த இருக்கை அருகே சென்றார். அப்போது முதல்வர் ஸ்டாலின் எழுந்து நின்று சிவமணியுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்து அசத்தினார்.

    இந்நிலையில், இந்தியாவின் செஸ் வீரராக இங்கு நிற்பதில் பெருமை அடைகிறேன் என சர்வதேச கூட்டமைப்பின் துணை தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    மேலும், செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை மிகவும் சிறப்பாக நடத்தியதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டார்.

    • சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணை தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு.
    • செஸ் விளையாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

    44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் சென்னையில் நடைபெற்றது.

    இதில் அர்காடி வோர்கோவிச் சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

    அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில் முதலமைச்சர் கூறியுள்ளதாவது:

    புகழ்வாய்ந்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தமிழ்நாட்டிற்கே பெருமையான தருணம் ஆகும்.

    கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் போன்ற மாசற்ற நேர்மையும் பரந்த அனுபவமும் கொண்ட ஒருவர் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக இருப்பதால் இந்த விளையாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும். உலக செஸ் கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அர்க்கடி துவார்கோவிச்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சுமுகமாக நடத்துவதில் அவரது பங்கு இன்றியமையாதது. தலைவராக அவரது முதல் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைந்ததைப்போல இரண்டாவது பதவிக்காலமும் அமையும் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது.
    • சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணை தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டார்.

    சென்னை:

    சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நிறைவு விழா ஆகஸ்டு 9-ம் தேதி நடக்க இருக்கிறது.

    இந்நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் சென்னையில் நடைபெற்றது.

    இதில் அர்காடி வோர்கோவிச் சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக 157 ஓட்டுகள் கிடைத்தன.

    அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நாளை தொடங்கி ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் முதன் முறையாக சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நாளை தொடங்கி ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    இதன் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நாளை மாலை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்கள்.

    இந்த போட்டி பற்றி, நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 19-ந்தேதி செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார்.

    இந்த ஜோதி நாடு முழு வதும் 72 நகரங்கள் வழியாக கொண்டு வரப்பட்டு நேற்று முன்தினம் புதுச்சேரி வழியாக கோவை பந்தய சாலைக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி சென்றடைந்தது. அங்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



    அதன்பிறகு சேலம், நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சாவூர் வழியாக இன்று காலையில் மாமல்லபுரம் வந்தடைந்தது. இந்த சுடரை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டு அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் வழங்கினார். அப்போது பலூன்கள் பறக்கவிடப்பட்டது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட போலீஸ் ஜீப்பில் ஊர்வலமாக மேள தாளம் முழங்க கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, ரேஸ் பைப், ஜீப் வீரர்கள் அணிவகுப்பு என 5 ஆயிரம் பேர்களுடன் சிறப்பான வரவேற்புடன் மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாக மேடைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஒலிம்பியாட் ஜோதியை போட்டி நடைபெறும் போர் பாயிண்ட்ஸ் அரங்கத்திற்கு கொண்டு செல்லும் வீரரிடம் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வர லட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ்.பாலாஜி, பேரூராட்சி தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதைத்தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் ஜோதி சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னை வந்தடைந்த ஜோதியை மாநில கல்லூரி மைதானத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மெய்யநாதன், சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் தொடக்க விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கம் நோக்கி ஜோதி ஓட்டம் தொடங்கியது. ஜோதியை விஸ்வநாதன் ஆனந்த் ஏந்திச் சென்றார்.

    ஊர்வலத்தில் இருசக்கர வாகனங்களில் மாணவர்கள் அணிவகுத்து சென்றனர். கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஒலிம்பியாட் ஜோதி நேரு ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள அலங்கார மேடைக்கு வந்தடைகிறது. நாளை நடைபெறும் தொடக்க விழாவின்போது இந்த ஜோதி ஏற்றப்படுகிறது.

    ×