search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "IPL Season 2019"

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவ் காயம் காரணமாக எஞ்சிய போட்டியில் ஆடவில்லை. இந்நிலையில் தற்போது உடல் தகுதி பெற்று, உலக கோப்பையில் பங்கேற்க உள்ளார்.
  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவ், கடந்த 5ம் தேதி பஞ்சாப்புக்கு எதிரான  ஆட்டத்தில் பந்தை தடுக்க பாய்ந்து விழுந்த போது (14-வது ஓவர்) இடது தோள்பட்டையில் காயம் அடைந்தார். வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக வெளியேறினார்.

  எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளில் (அதாவது பிளே-ஆப் சுற்றில்) விளையாட வாய்ப்பில்லை என்றே தோன்றுவதாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்தார். அதேபோல் அந்த தொடரின் கடைசி ஆட்டங்களில் விளையாடவில்லை.  இதையடுத்து உலக கோப்பைக்கான இந்திய அணியில் கேதர் ஜாதவ் இடம் பெற்றிருந்தார். காயம் ஏற்பட்டதையடுத்து, அவரது உடல்நலம் குணமடைவதை பொருத்தே கேதருக்கு பதிலாக, யாரை தேர்வு செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

  கேதரின் உடல் நலனை கவனித்து வந்த இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பர்ஹர்ட், அவர் குணமடைய பயிற்சி அளித்து வந்தார். உடல்நிலை தேறி வந்த நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு உடல் தகுதி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் கேதர் குணமடைந்தார் என தெரிய வந்துள்ளது.

  இந்நிலையில் 22ம் தேதி இங்கிலாந்து செல்லும் இந்திய அணியினருடன் கேதரும் செல்ல உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிடும் என தெரிகிறது.

  ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற சிஎஸ்கே-யை காட்டிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கே கூடுதல் வாய்ப்பு உள்ளது என அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
  ஐபிஎல் 12-வது சீசனில் இறுதிப் போட்டி ஐதராபாத்தில் இன்று இரவு நடக்கிறது. இதில் தலா மூன்று முறை கோப்பைகளை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

  இதில் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்பதே மில்லியன் கேள்விக்குறி?. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைக் காட்டிலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கே கூடுதல் வாய்ப்பு என அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘இறுதிப் போட்டி சென்னைக்கு மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. அவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த வேண்டுமென்றால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

  சென்னை அணி பந்து வீச்சில் அசத்தி வருகிறது. இது மாறுபட்ட ஆடுகளம். ஆகையால், மும்பை அணிக்கு சற்று கூடுதல் வாய்ப்பு உள்ளது’’ என்றார்.
  கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. #IPL2019 #KKRvRR

  ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா ஈடன்கார்டன் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்சும், ராஜஸ்தான் ராயல்சும் சந்தித்தன. இதில் ‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் சுமித் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பத்திலேயே பேரிடி விழுந்தது. 3-வது பந்திலேயே கிறிஸ் லின் (0), வருண் ஆரோனின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில்லும் (14 ரன்) அவரது பந்து வீச்சிலேயே விக்கெட்டை தாரைவார்த்தார். இதனால் கொல்கத்தாவின் ரன்வேகம் மந்தமானது. அடுத்து வந்த நிதிஷ் ராணாவும் (21 ரன்) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. முதல் 10 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுக்கு 49 ரன்களுடன் மோசமான நிலையில் தத்தளித்தது.

  4-வது வரிசையில் களம் கண்ட கேப்டன் தினேஷ் கார்த்திக், பிற்பகுதியில் மின்னல் வேகத்தில் ஆடி அதிர வைத்தார். அவர் சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபாலின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் துரத்தியடித்தார். இன்னொரு பக்கம் சுனில் நரின் (11 ரன்), ஆந்த்ரே ரஸ்செல் (14 ரன்), கார்லஸ் பிராத்வெய்ட் (5 ரன்) கைகொடுக்க தவறினாலும் தினேஷ் கார்த்திக் தனி வீரராக போராடி அணியை தூக்கி நிறுத்தினார். ஜோப்ரா ஆர்ச்சரின் ஓவரில் 2 சிக்சர்களை பறக்க விட்ட தினேஷ் கார்த்திக், கடைசி ஓவரிலும் பவுண்டரி, சிக்சர்கள் நொறுக்கி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். செஞ்சுரியை எட்ட அவருக்கு கடைசி பந்தில் 4 ரன் தேவைப்பட்டது. ஆனால் கடைசி பந்தில் அவரால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
  20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் 75 ரன்களை திரட்டினர். கேப்டன் தினேஷ் கார்த்திக் 97 ரன்களுடன் (50 பந்து, 7 பவுண்டரி, 9 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். 20 ஓவர் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

  அடுத்து 176 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியில் ரஹானேவும், சஞ்சு சாம்சனும் முதல் 5 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்து அட்டகாசமான தொடக்கம் ஏற்படுத்தி தந்தனர். ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் ஆட்டத்தின் போக்கு மாறியது. ரஹானே 34 ரன்களிலும் (21 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), சாம்சன் 22 ரன்னிலும் வெளியேறினர். இந்த சீசனில் தனது கடைசி ஐ.பி.எல். ஆட்டத்தில் ஆடிய பென் ஸ்டோக்ஸ் (11 ரன்) ஏமாற்றம் அளித்தார். கேப்டன் ஸ்டீவன் சுமித் (2 ரன்), ஸ்டூவர்ட் பின்னி (11 ரன்) ஆகியோரும் தாக்குப்பிடிக்கவில்லை. இவர்கள் 5 பேரையும் சுழற்பந்து வீச்சாளர்கள் பியூஸ் சாவ்லாவும், சுனில் நரினும் இணைந்து காலி செய்தனர்.

  இந்த சிக்கலுக்கு மத்தியில் இறங்கிய 17 வயதான ரியான் பராக், ராஜஸ்தான் அணியை காப்பாற்றினார். அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பிய ரியான் பராக் 47 ரன்களில் (31 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ‘ஹிட் விக்கெட்’ ஆனார். கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டது. இந்த ஓவரை எதிர்கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர் முதல் பந்தை பவுண்டரிக்கும், அடுத்த பந்தை சிக்சருக்கும் அனுப்பி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

  ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் தனது 4-வது வெற்றியை ருசித்தது. ஜோப்ரா ஆர்ச்சர் 27 ரன்களுடன் களத்தில் இருந்தார். கடைசி 6 ஆட்டங்களில் வரிசையாக தோற்றுள்ள கொல்கத்தாவுக்கு மொத்தத்தில் இது 7-வது தோல்வியாகும்.

   #IPL2019 #KKRvRR
  ஐபிஎல் தொடரில் அதிக முறை ஆட்ட நாயகன் விருதை பெற்ற வீரர்கள் வரிசையில் கிறிஸ் கெய்லை நெருங்குகிறார் டி வில்லியர்ஸ். #IPL2019
  ஐபிஎல் கிரிக்கெட்டில் ரசிகர்களை சிக்சர்கள் விளாசி குதூகலப்படுத்துவதில் ‘யுனிவர் பாஸ்’ என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் இன்னும் ஜாம்பவானாக திகழ்கிறார். அவருக்கு ‘மிஸ்டர் 360’ என்று அழைக்கப்படும் ஏபி டி வில்லியர்ஸ் எந்த வகையில் சளைத்தவர் அல்ல.

  நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக ஏபி டி வில்லியர்ஸ் 44 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 82 ரன்கள் குவித்து ஆட்மிழக்காமல் இருந்தார். கிறிஸ் கெய்ல் 10 பந்தில் 23 ரன்கள் அடித்தார்.  82 ரன்கள் விளாசி ஆர்சிபி-யின் ஸ்கோர் 202 ரன்கள் உயர காரணமாக இருந்ததால் ஏபி டி வில்லியர்ஸ் ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் இது ஏபி டி வில்லியர்ஸின் 20-வது ஆட்ட நாயகன் விருதாகும்.  கிறிஸ் கெய்ல் 21 ஆட்ட நாயகன் விருதுடன் முதல் இடத்தில் உள்ளார். இவர் சாதனையை சமன் செய்ய டி வில்லியர்ஸ்க்கு இன்னும் ஒரு விருதுதான் தேவை. ரோகித் சர்மா, எம்எஸ் டோனி, டேவிட் வார்னர், யூசுப் பதான் ஆகியோர் 16 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்று 3-வது இடத்தில் உள்ளனர்.
  பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி 17 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பெங்களூரு அணி. #IPL2019 #RCBvKXIP

  12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் அரங்கேறிய 42-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர்கொண்டது. பெங்களூரு அணியில் தோள்பட்டை வலியால் அவதிப்படும் ஸ்டெயினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு டிம் சவுதி சேர்க்கப்பட்டார். இதே போல் பவான் நெகி நீக்கப்பட்டு இந்த சீசனில் முதல்முறையாக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் வாய்ப்பு பெற்றார்.

  ‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் கேப்டன் அஸ்வின் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான விராட் கோலி 3 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பினார். ஆனாலும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறிய கோலி 13 ரன்களில், முகமது ஷமி வீசிய ஷாட்பிட்ச் பந்தில் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் பார்த்தீவ் பட்டேல் 43 ரன்களிலும் (24 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), அடுத்து வந்த மொயீன் அலி 4 ரன்னிலும், அக்‌ஷ்தீப் நாத் 3 ரன்னிலும் வெளியேறினர். அப்போது பெங்களூரு அணி 4 விக்கெட்டுக்கு 81 ரன்களுடன் திண்டாடியது. சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வினும், முருகன் அஸ்வினும் ரன்வேகத்துக்கு அணை போட்டனர்.


   

  இதைத் தொடர்ந்து டிவில்லியர்சும், மார்கஸ் ஸ்டோனிசும் இணைந்து அவசரமின்றி விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 13.1 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. அதன் பிறகு ரன்ரேட்டை உயர்த்த அதிரடி வேட்டை நடத்தினர். இதனால் ஸ்கோர் மளமளவென எகிறியது. முகமது ஷமியின் ஓவரில் டிவில்லியர்ஸ் ‘ஹாட்ரிக்’ சிக்சர் விளாசி உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். வில்ஜோனின் இறுதி ஓவரில் இருவரும் இணைந்து 3 சிக்சர், 2 பவுண்டரி விரட்டியடித்தனர். இவர்களின் வாண வேடிக்கையால் ஸ்கோர் 200 ரன்களை தாண்டியது.

  20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. தனது 33-வது அரைசதத்தை எட்டிய டிவில்லியர்ஸ் 82 ரன்களுடனும் (44 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்), ஸ்டோனிஸ் 46 ரன்களுடனும் (34 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர். கடைசி 3 ஓவர்களில் மட்டும் 64 ரன்கள் திரட்டினர். தனது பந்து வீச்சில் பவுண்டரி, சிக்சர் எதுவும் அடிக்க விடாத சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 4 ஓவரில் 15 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். முருகன் அஸ்வின், முகமது ஷமி, வில்ஜோன் ஆகியோருக்கும் தலா ஒரு விக்கெட் கிடைத்தது.

  அடுத்து மெகா இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியும் அதிரடியில் மிரட்டியது. கிறிஸ் கெய்ல் 23 ரன்களும் (10 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), மயங்க் அகர்வால் 35 ரன்களும், லோகேஷ் ராகுல் 42 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதன் பிறகு நிகோலஸ் பூரனும், டேவிட் மில்லரும் சிறிது நேரம் அச்சுறுத்தினர். 17-வது ஓவர் வரை (3 விக்கெட்டுக்கு 167 ரன்) பஞ்சாப் அணிக்கு வெற்றி வாய்ப்பு தென்பட்டது.

  ஆனால் இறுதி கட்டத்தில் அபாரமாக பந்து வீசிய பெங்களூரு பவுலர்கள் மேலும் 4 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினர். 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுக்கு 185 ரன்களே எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மில்லர் 24 ரன்னிலும், பூரன் 46 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள்.

  அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கும் பெங்களூரு அணிக்கு இது 4-வது வெற்றியாகும். பஞ்சாப் அணிக்கு 6-வது தோல்வியாகும்.

  #IPL2019 #RCBvKXIP
  ஐபிஎல் போட்டியின்போது நடுவருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி வாக்குவாதம் செய்தார். இந்த விவகாரம் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் அணி தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். #SouravGanguly #MSDhoni
  கொல்கத்தா:

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

  போட்டியின் கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் அந்த ஓவரை வீசினார். பரபரப்பாக வீசப்பட்ட அந்த ஓவரில் ஒரு பந்து இடுப்புக்கு மேல் வீசப்பட்டது. இது நோ பாலாக முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர், இல்லை என அறிவிக்கப்பட்டது.  இதை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த டோனி, மைதானத்துக்குள் புகுந்து அந்த பந்தை நோ-பாலாக அறிவிக்கும்படி நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். ஆனால் அவரது கோரிக்கையை நடுவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். பின்னர், டோனியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

  இது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், ‘அனைவரும் மனிதர்கள் தான். அவர் போட்டியில் கூற வந்தது என்ன என்பதை கவனிக்க வேண்டும். அவரது போட்டி மனப்பான்மையை இந்த செயல் தெளிவுப்படுத்துகிறது’ என கூறினார்.

  ஆடுகளத்தில் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக டோனிக்கு, போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  #SouravGanguly #MSDhoni

  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 58 ரன்கள் குவித்த எம்எஸ் டோனி, எனது சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று என தெரிவித்துள்ளார். #IPL2019 #RRvCSK
  12-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்தது. பட்லர் 23 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 28 ரன்னும், கோபால் 19 ரன்னும் எடுத்தனர்.

  பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சென்னைக்கு ஆரம்பம் அதிர்ச்சியாக இருந்தது. 24 ரன்னுக்குள் 4 விக்கெட்டை (5.5 ஓவர்) இழந்தது. அதன்பின் டோனி - அம்பதி ராயுடு ஜோடி சிறப்பாக விளையாடியது.

  அம்பதி ராயுடு 57 ரன்னில் அவுட் ஆனார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 95 ரன் சேர்த்தது. கடைசி ஓவரில் சென்னை வெற்றிக்கு 18 ரன் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் வீசிய அந்த ஓவரில் 3-வது பந்தில் டோனி (58 ரன்) அவுட் ஆனார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  கடைசி பந்தில் 3 ரன் தேவைப்பட்ட நிலையில் சான்ட்னெர் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 6-வது வெற்றி (7 ஆட்டம்) இதுவாகும். ராஜஸ்தான் 5-வது தோல்வியை (6 ஆட்டம்) சந்தித்தது.

  வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-

  கடைசி கட்டத்தில் எங்களுக்கு அவர்கள் (ராஜஸ்தான்) நெருக்கடியை உருவாக்கினர். இதுபோன்ற வெற்றியை பெறும்போது நிறைய வி‌ஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். இந்த வெற்றியை கொண்டாடும்போது எதிர்மறை சம்பவங்களில் இருந்து நாம் வெளிவருவது முக்கியம். இல்லாவிட்டால் பின்னர் அது எங்களுக்கு போட்டி தொடரில் காயத்தை ஏற்படுத்தி விடும். கடைசி 2 ஓவர்களில் இரண்டு பெரிய ஷாட் அடிக்க வேண்டும் என்று கருதினேன்.

  இங்கு (ஜெய்ப்பூர்) எங்களுக்கு ரசிகர்கள் அதிகளவு ஆதரவு அளித்தனர். அவர்களுக்கு நன்றி. எனது சிறந்த இன்னிங்சில் இதுவும் ஒன்று என்பதை மறக்கமாட்டேன். அதனால் இந்த மைதானம் எனக்கு சிறப்பு வாய்ந்தது. இந்த வெற்றி மூலம் அடுத்த ஆட்டங்களில் சில புதிய பந்து வீச்சாளர்களை பரிசோதித்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.
  தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜ்-க்குப் பதில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ கெல்லியை தேர்வு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் #IPl2019 #KKR
  தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜ்-யை ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாங்கியது. இளம் வீரரான இவர் இலங்கை அணிக்கெதிராக விளையாடும்போது காயம் அடைந்தார். இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.  அவருக்கு மாற்று வீரரை இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தேர்வு செய்யாமல் இருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ கெல்லியை தேர்வு செய்துள்ளது. இவர் ஆஸ்திரேலிய சர்வதேச அணிக்காக விளையாடியது கிடையாது. பிக் பாஷ் தொடரில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிக்காக விளையாடியவர்.
  சேப்பாக்கம் மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதால் பவுண்டரி, சிக்சர்கள் பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். #IPL2019
  ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்கள் பேட்ஸ்மேன்களின் அதிரடியைத்தான் விரும்புவார்கள். பந்துகள் பவுண்டரி, சிக்சர்களாக செல்லும்போது மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதப்பார்கள். சேப்பாக்க மைதானத்தில் இதுவரை நடந்த 4 ஆட்டத்திலும் சூப்பர் கிங்ஸ் அணிதான் வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால் இதில் 2 ஆட்டத்தில் மிகவும் குறைந்த ரன்களே எடுக்கப்பட்டது.

  கடந்த 23-ந்தேதி நடந்த தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் 70 ரன்களே எடுக்க முடிந்தது. நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியால் 108 ரன்களே எடுக்க முடிந்தது. சேப்பாக்கம் ஆடுகளம் மோசமாக இருந்தது.

  சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றாலும் அதிரடியான ஆட்டத்தை காண இயலாததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான ஆட்டத்திலும் ஸ்கோர் 180 ரன்னுக்கு செல்லவில்லை. பொதுவாக ரன் குவிப்புக்கு ஏற்ற வகையில் ஆடுகளம் இருந்தால்தான் ரசிகர்களுக்கு உற்சாகம் இருக்கும்.

  சென்னையில் இன்னும் 3 ‘லீக்’ ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. ஐதராபாத்துடன் 23-ந்தேதியும், மும்பையுடன் 26-ந்தேதியும், டெல்லியுடன் மே மாதம் 1-ந்தேதியும் மோதுகிறது. இந்த ஆட்டங்களிலாவது ரன் குவிப்புக்கு ஏற்ற வகையில் ஆடுகளத்தை அமைக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.  இந்த ஐபிஎல் சீசனில் ஒவ்வொரு மைதானத்திலும் எடுக்கப்பட்ட ரன்களின் சராசரி (ஓவர்) வருமாறு:-

  கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம்- 9.69, பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியம்-9.15, மும்பை வான்கடே மைதானம்-8.72, ஜெய்ப்பூர் மான்சிங் ஸ்டேடியம்-8.40, ஐதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியம்- 8.36, மொகாலி மைதானம்- 8.24, டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானம்- 7.84, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம்- 6.57.
  உத்தரபிரதேசத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.அவர்களிடமிருந்து ரூ.3.86 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #IPL2019 #CricketBetting
  பிரயாக்ராஜ்:

  12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழையும். ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது. போலீசாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

  இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் பிரயாக்ராஜ் பகுதியில்  சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.  இந்த சோதனையின்போது லேப்டாப், 20 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூ.3.86 லட்சம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.  ஐ.பி.எல். போட்டி தொடங்கிய சில நாட்களிலேயே சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #IPL2019 #CricketBetting
  பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உலகக்கோப்பையை வெல்ல முடியாது என வாசிம் அக்ரம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை விளாசி உள்ளார்.
  உலகக்கோப்பை போட்டித் தொடர் இங்கிலாந்தில் மே 30-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக ஒவ்வொரு நாட்டு அணியும் வீரர்களை தயார் செய்து வருகின்றன. இன்னும் இரு மாதங்கள் இருக்கும் நிலையில், வீரர்களின் உடற்தகுதிக்கு ஒவ்வொரு அணியும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

  ஆனால், பாகிஸ்தான் அணியின் நிலைமை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. குறிப்பாக 50 ஓவர்கள் போட்டியில் கடந்த 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்குப்பின் அந்த அணியால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை.

  நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியக்கோப்பை என அனைத்திலும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. சமீபத்தில் துபாயில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0-5 என்ற கணக்கில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது.

  துபாயில் பாகிஸ்தானுக்கு சாதகமான சூழல் இருந்தபோதிலும் கூட அந்த அணி வீரர்களின் மோசமான செயல்பாட்டால் கோப்பையை வெல்ல முடியாமல் போனது. பாகிஸ்தான் அணியில் 6 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டாலும், பாகிஸ்தான் அணியில் இருந்த இளம் வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை.

  இந்நிலையில், முன்னாள் இடது கை வேகபந்து வீச்சாளரும், கேப்டனுமான வாசிம் அக்ரம் அந்நாட்டு எழுத்தாளர் சாத் சஜிக்குக்கு அளித்த பேட்டியில் வீரர்களின் உடல்தகுதியை விளாசியுள்ளர். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

  பாகிஸ்தான் வீரர்களுக்கு இன்னும் பிரியாணி சப்ளை செய்யப்பட்டு வருகிறது. வீரர்கள் அனைவரும் ருசியாக பிரியாணி சாப்பிட்டால், சாம்பியன்களுடன் போட்டியிட முடியாது. வெற்றி பெறவும் முடியாது.

  இவ்வாறு வாசிம் அக்ரம் கூறினார்.

  உலகக்கோப்பைப் போட்டிக்கான அணியை பாகிஸ்தான் வரும் 18-ம் தேதி அறிவிக்கிறது. இந்திய அணி வரும் 15-ம் தேதி அறிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  கொல்கத்தா அணிக்காக விளையாட முடியாமல் போனதால் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் 10.6 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ஸ்டார்க் வழக்கு தொடர்ந்துள்ளார்.
  ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். இவரை கடந்த 2018 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9.4 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது. ஆனால், ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் தென்ஆப்பிரிக்கா தொடரின்போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.

  ஐபிஎல் தொடரில் விளையாடும்போது காயம் ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு பெறும் வகையில் இன்சூரன்ஸ் செய்திருந்தார். இதற்காக அவர் பிப்ரவரி 27-ந்தேதி முதல் மார்ச் 31 2018 வரை கவர் ஆகும் வகையில் பிரிமீயர் செலுத்தியுள்ளார். அவருடைய இன்சூரன்ஸ் மதிப்பு சுமார் 10 கோடியே 60 லட்சம் ரூபாய் ஆகும்.

  தற்போது இந்த ரூபாயை வழங்க உத்தரவிடும்படி ஆஸ்திரேலியாவில் உள்ள நீதிமன்றத்தை அணுகியுள்ளார் மிட்செல் ஸ்டார்க்.
  ×