search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேப்பாக்கம் மைதானத்தில் குறைந்த ரன்: ரசிகர்கள் ஏமாற்றம்
    X

    சேப்பாக்கம் மைதானத்தில் குறைந்த ரன்: ரசிகர்கள் ஏமாற்றம்

    சேப்பாக்கம் மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதால் பவுண்டரி, சிக்சர்கள் பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். #IPL2019
    ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்கள் பேட்ஸ்மேன்களின் அதிரடியைத்தான் விரும்புவார்கள். பந்துகள் பவுண்டரி, சிக்சர்களாக செல்லும்போது மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதப்பார்கள். சேப்பாக்க மைதானத்தில் இதுவரை நடந்த 4 ஆட்டத்திலும் சூப்பர் கிங்ஸ் அணிதான் வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால் இதில் 2 ஆட்டத்தில் மிகவும் குறைந்த ரன்களே எடுக்கப்பட்டது.

    கடந்த 23-ந்தேதி நடந்த தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் 70 ரன்களே எடுக்க முடிந்தது. நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியால் 108 ரன்களே எடுக்க முடிந்தது. சேப்பாக்கம் ஆடுகளம் மோசமாக இருந்தது.

    சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றாலும் அதிரடியான ஆட்டத்தை காண இயலாததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான ஆட்டத்திலும் ஸ்கோர் 180 ரன்னுக்கு செல்லவில்லை. பொதுவாக ரன் குவிப்புக்கு ஏற்ற வகையில் ஆடுகளம் இருந்தால்தான் ரசிகர்களுக்கு உற்சாகம் இருக்கும்.

    சென்னையில் இன்னும் 3 ‘லீக்’ ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. ஐதராபாத்துடன் 23-ந்தேதியும், மும்பையுடன் 26-ந்தேதியும், டெல்லியுடன் மே மாதம் 1-ந்தேதியும் மோதுகிறது. இந்த ஆட்டங்களிலாவது ரன் குவிப்புக்கு ஏற்ற வகையில் ஆடுகளத்தை அமைக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.



    இந்த ஐபிஎல் சீசனில் ஒவ்வொரு மைதானத்திலும் எடுக்கப்பட்ட ரன்களின் சராசரி (ஓவர்) வருமாறு:-

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம்- 9.69, பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியம்-9.15, மும்பை வான்கடே மைதானம்-8.72, ஜெய்ப்பூர் மான்சிங் ஸ்டேடியம்-8.40, ஐதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியம்- 8.36, மொகாலி மைதானம்- 8.24, டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானம்- 7.84, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம்- 6.57.
    Next Story
    ×