search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hand over"

    • கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்வதாக கலெக்டர் உறுதி அளித்தார்.
    • மாயாண்டியின் உடலை பெற்றுக் கொள்வதாக அவர்களது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலந்து சென்றனர்.

    நெல்லை:

    தச்சநல்லூர் அருகே உள்ள கரையிருப்பு நாடார் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 57). இவருக்கு புஷ்பம் என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

    கொலை

    கடந்த 26-ம் தேதி கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக வெளியே சென்ற மாயாண்டி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. கடந்த 1-ம் தேதி அவர் தாழையூத்து சிதம்பரம் நகர் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இது தொடர்பாக தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி அவருடன் பணிபுரிந்த மாரிமதன் (25) என்பவரை கைது செய்தனர். மாயாண்டியிடம் இருந்த ரூ.12 ஆயிரம் பணத்தை திருடுவதற்காக அவரை கொலை செய்ததாக மாரிமதன் வாக்குமூலம் அளித்தார்.

    3-வது நாளாக போராட்டம்

    இதற்கிடையே கொலை செய்யப்பட்ட மாயாண்டியின் குடும்பத்தினர் ரூ. 25 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டி அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இன்று 3-வது நாளாக போராட்டம் நீடித்தது. அவர்களுடன் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மாயாண்டியின் மனைவி புஷ்பம் தனது 2 மகள்கள் மற்றும் கரையிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் மனு அளிக்க வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக நெல்லை மாவட்ட பா.ஜ.க. தலைவர் தயா சங்கர் தலைமையில் கட்சி நிர்வாகிகளும் வந்திருந்தனர்.

    கலெக்டர் பேச்சுவார்த்தை

    கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை வழங்கினர். அந்த மனுவில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் ரூ.25 லட்சம் நிவாரணம் வேண்டும் என கேட்டிருந்தனர். அது குறித்து உடனடியாக பரிசீலனை செய்வதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

    அவர்களுக்கு ஆதரவாக மாநில இளைஞரணி தலைவர் நயினார் பாலாஜி, மாவட்ட செயலாளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர்.

    அவர்களுடன் நெல்லை கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். நிவாரணம் வழங்குவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்வதாக அவர் உறுதியளித்தார்.

    மேலும் மாயாண்டியின் 2 மகள்களும் நன்றாக படித்துள்ளனர் என்பதால் அவர்களுக்கு தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி கொடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

    இதனையடுத்து மாயாண்டியின் உடலை பெற்றுக் கொள்வதாக அவர்களது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலந்து சென்றனர்.

    ஆரோக்கியமான உறவு தொடர வேண்டு மானால் பாகிஸ்தான் தாவூத் இப்ராகிம், சையது சலாவுதீன் ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. #India #DawoodIbrahim #SayeedSalahudeen
    புதுடெல்லி:

    காஷ்மீர் புலவாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகளால் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒரு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாடுகள் வற்புறுத்தலை தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தானில் பதுங்கியுள்ள இந்தியாவில் தேடப்படும் நபர்களை ஒப்படைக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள் வட்டாரம் கூறியுள்ளது. மேலும் அவர்கள் கூறியதாவது:-

    இந்தியாவுடனான ஆரோக்கியமான உறவு தொடர வேண்டும் என்ற பொறுப்புணர்வை நிரூபிக்க பாகிஸ்தான் அந்நாட்டில் தங்கியுள்ள தேடப்படும் இந்தியர்களான தாவூத் இப்ராகிம், சையது சலாவுதீன் ஆகியோரை ஒப்படைக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருந்தால் இந்த இந்திய நபர்களை விரைவாக ஒப்படைக்க வேண்டும்.

    இப்போதைக்கு பாகிஸ்தானில் இருந்து இந்தியா எதிர்பார்ப்பது இது ஒன்று தான். இவர்கள் இந்தியாவில் தேடப்படுபவர்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளவர்கள். தாவூத் இப்ராகிம் 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்.

    ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தலைவரான சையது சலாவுதீன் என்கிற முகமது யூசுப் ஷா அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவர். இந்தியாவிலும் 50-க்கும் மேற்பட்ட பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடையவர். காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியது, கடத்தல், ஹவாலா பணபரிமாற்றம் போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்.

    ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசாரை பொறுத்தவரை, பாகிஸ்தான் குறைபாடுள்ள வெளியுறவு கொள்கையை பின்பற்றி வருகிறது.

    இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
    தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அனுமதி வழங்கியுள்ளது. #vijaymallya
    லண்டன்:

    ‘கிங் பி‌ஷர்’ குழும நிறுவனங்களின் தலைவர் விஜய் மல்லையா (62).  இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழிலதிபரான மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில், தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அனுமதி வழங்கியுள்ளது.  இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு எதிராக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு இங்கிலாந்து அனுமதி வழங்கியுள்ளது.  #vijaymallya 
    போலீஸ் நிலையத்தில் இறந்த ரவுடியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ரவுடி மரணம் தொடர்பாக 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். #RowdyDeath
    பெரம்பூர்:

    சென்னை வியாசர்பாடி பி.வி.காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). ரவுடியான இவர் மீது எம்.கே.பி. நகர், வியாசர்பாடி, சோழவரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கடந்த 13-ந் தேதி இரவு எம்.கே.பி. நகர் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது கார்த்திக், அவரது கூட்டாளிகள் 3 பேர் கத்தியுடன் சுற்றி வந்தனர். இதனை பார்த்த போலீசார் அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

    போலீசார் நேற்று முன்தினம் கார்த்திக்கிடம் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மயங்கி விழுந்து இறந்தார். இதையடுத்து கார்த்திக்கின் உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் எழும்பூர் மாஜிஸ்திரேட்டு சந்தோஷ்குமார் விசாரணைக்கு பின்னர் கார்த்திக் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவருடைய உறவினர்களிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது. இதேபோல் எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்திய போலீசார், கார்த்திக் உறவினர்களிடம் எழும்பூர் மாஜிஸ்திரேட்டு அரவிந்தன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    பின்னர் கார்த்திக்கின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெரம்பூரில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. கார்த்திக் மரணத்தால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க வியாசர்பாடி, எம்.கே.பி.நகர் உள்ளிட்ட இடங்களில் சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமாரி, மேற்கு மண்டல போக்குவரத்து இணை கமிஷனர் சுதாகர், துணை கமிஷனர்கள் சாய்சரண் தேஜஸ்வி, ஈஸ்வரன், உதவி கமிஷனர்கள் அழகேசன், ஹரிகுமார், விஜய் ஆனந்த் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கார்த்திக் மரணம் தொடர்பாக எம்.கே.பி. நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், ராஜா, கொடுங்கையூர் போலீஸ்காரர் ஷியாம்சுந்தர் ஆகியோரை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்ற துணை கமிஷனர்கள் உத்தரவிட்டனர். #RowdyDeath
    டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் போட்டித்தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். #TNPSC #MKStalin
    சென்னை:

    டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் போட்டித்தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



    வேலை வாய்ப்பு தேடும் லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வேலை வாய்ப்புக்கான போட்டி தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி செய்வதாக வரும் செய்திகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. “மாநில அரசில் உள்ள பதவிகளுக்கு போட்டித்தேர்வுகளை நடத்தி பணியாளர்களை தேர்வு செய்வது மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கடமை” என்று அரசியல் சட்டத்தின் பிரிவு 320 தெளிவாக கட்டளை பிறப்பித்து இருக்கிறது. அந்த அரசியல் சட்ட கடமையை தனியாருக்கு தாரை வார்க்க அரசு பணியாளர் தேர்வாணையம் முயற்சிப்பது அரசியல் சட்ட விரோதம் என்பதை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

    மாநில, சார்நிலை மற்றும் அமைச்சு பணிகளுக்கு நேரடி நியமனத்திற்கு போட்டி தேர்வு, அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வுகள், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப்பணி மற்றும் மாநில குடிமைப் பணி அதிகாரிகளுக்கான அரையாண்டு தேர்வுகளை நடத்தும் மிக முக்கியமான பொறுப்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இருக்கிறது. இந்த ஆணையம் நடத்தும் எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வுகளை நம்பித்தான் எண்ணற்ற இளைஞர்கள் குரூப்-1 பதவிகளான சார்பு ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் போன்ற பதவிகளுக்கும், அதே போல் குரூப்-2, குரூப்-3, குரூப்-4 ஆகிய பல்வேறு அரசு பதவிகளுக்கும் போட்டி தேர்வுகளை எழுதுவதற்கு முன் வருகிறார்கள்.

    இரவு பகலாக படித்து அரசு ஊழியராகவோ, அரசு அதிகாரியாகவோ ஆகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கிராமப்புற மாணவர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து சென்னையில் நெருக்கடி மிகுந்த விடுதிகளில் தங்கி படிக்கிறார்கள். இதுபோன்ற போட்டித் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் வசதிக்காகவே தலைவர் கருணாநிதி உலகப்புகழ் பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்து கொடுத்தார் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் அவ்வப்போது புகார்கள் வெளிவந்தாலும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டி தேர்வுகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்கும் என்று இன்னமும் லட்சக்கணக்கான கிராமப்புற ஏன் நகர்ப்புற மாணவர்களும் நம்பி, தேர்வுபெற உழைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த நம்பிக்கையை தகர்த்து எறியும் விதத்தில் போட்டித்தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி செய்யும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஏற்கனவே பாலிடெக்னிக் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் தனியார் நிறுவனங்களில் நடைபெற்ற முறைகேடுகள், இமாலய ஊழல்கள் எல்லாம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புகாரின் அடிப்படையில் தான் விசாரிக்கப்பட்டு வருகிறது என்பதை ஏனோ மறந்து விட்டு, போட்டி தேர்வுகள் அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைக்க முயற்சிப்பது “கண்ணை விற்று சித்திரம் வாங்குவதற்குச் சமம்” என்பதை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உணர வேண்டும்.

    நேர்மையான தலைவரின் கீழ் உள்ள ஓர் அரசுப் பணியாளர் தேர்வாணையம் இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடும் இப்படியொரு விபரீத முடிவை எப்படி எடுக்க முயற்சிக்கிறது என்பதும், தனது அரசியல் சட்ட கடமையில் இருந்து விலகும் பொறுப்பற்ற செயலை ஏன் அமல்படுத்தத் துடிக்கிறது என்பதும் மர்மம் நிறைந்ததாக இருக்கிறது. தகுதியில்லாதவர்களை எல்லாம் உறுப்பினர்களாக நியமித்து ஏற்கனவே அரசு பணியாளர் தேர்வாணையம் அ.தி.மு.க.வின் தலைமைக்கழகமாக மாற்றப்பட்டிருக்கும் நிலையில், போட்டித் தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்க நினைப்பதில் ஏதோ உள்நோக்கம் இருப்பது போல் தெரிகிறது. பல்வேறு முறைகேடுகளுக்கு வித்திடும் உள்நோக்கத்துடன் அரசு பதவிகளுக்கான போட்டி தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்கும் இந்த முயற்சியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உடனடியாக கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    திருப்பனந்தாள், சீர்காழி, மயிலாடுதுறை உள்பட தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டுள்ள மேலும் 7 சிலைகள் மீட்கப்பட இருக்கிறது. இந்த சிலைகளை ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு சம்மதம் தெரிவித்து உள்ளது.
    சென்னை:

    தமிழக கோவில்களில் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்திச்சென்று விற்பனை செய்யப்பட்ட சாமி சிலைகளை, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் மீட்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு கடத்திச்செல்லப்பட்ட 3 சிலைகளை, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளனர். தற்போது மேலும் 7 சாமி சிலைகள் ஆஸ்திரேலியாவில் உள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    இந்த சிலைகளை மீட்பதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் நேற்று முன்தினம் சென்னை கோட்டையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அமைச்சர் கே.பாண்டியராஜன் தலைமையில் நடந்த இந்தக்கூட்டத்தில், ஆஸ்திரேலிய தூதரக அதிகாரி சூசன்கிரேஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்து சமயஅறநிலையத்துறை சார்பில் இந்தக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர்.

    ஆனால், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் யாரும் இந்தக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

    சுமார் 1 மணி நேரம் இந்தக்கூட்டம் நடந்தது. ஆஸ்திரேலியாவில் உள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கும் 7 சிலைகள், தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டவை என்பதற்கான ஆதாரங்களை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஆவணங்களாக இந்தக்கூட்டத்தில் எடுத்து வைத்தார்.

    ஆவணங்களை பார்வையிட்ட ஆஸ்திரேலிய அதிகாரிகள் சிலைகளை திருப்பிக்கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டனர்.

    விரைவில் 7 சிலைகளையும் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டுக்கொண்டுவர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 7 சிலைகள் பற்றிய விவரங்களையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர்.

    அதன் விவரம் வருமாறு:-

    திருப்பனந்தாள், சீர்காழி, மயிலாடுதுறை

    1. குழந்தை வடிவிலான நின்ற நிலையில் இருக்கும் சம்பந்தர் பஞ்சலோகசிலை - சீர்காழி சாயவனம் சிவன் கோவிலில் உள்ள சிலையாகும். 1,300 ஆண்டுகள் பழமையான இந்த சிலை ரூ.75 லட்சம் மதிப்புடையது.

    2. நடனமாடும் சம்பந்தர் சிலை - ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சிலை ரூ.4.59 கோடி மதிப்புடையது. தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே இருக்கும் மானம்பாடி கிராமத்தில் உள்ள நாகநாத சுவாமி கோவிலிருந்து இந்த சிலை திருடப்பட்டது.

    3. துவாரபாலகர் கல்சிலைகள் -2, திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள அத்தாளநல்லூர், மூன்றீஸ்வர உடையார் சிவன்கோவிலில் திருடப்பட்ட சிலைகள் ஆகும். 1,200 ஆண்டுகள் பழமையான இந்த சிலைகளின் மதிப்பு ரூ.4.98 கோடியாகும்.

    4. நந்தி கல்சிலை - 1,100 ஆண்டுகள் பழமையான இந்த சிலை மயிலாடுதுறை அருகேயுள்ள கொல்லுமாங்குடி கிராமத்தில் இருக்கும் கைலாசநாதர் கோவிலில் இருந்து இந்த சிலை திருடப்பட்டிருந்தது.

    5. ஆறுமுகம் கல்சிலை - தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அருகில் உள்ள மானம்பாடி கிராமத்தில் இருக்கும் நாகநாத சுவாமி கோவிலில் திருடப்பட்ட சிலையாகும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சிலை ரூ.1.32 கோடி மதிப்புடையதாகும்.

    6. பத்ரகாளி சிலை - 900 ஆண்டுகள் பழமையான இந்த சிலை மயிலாடுதுறை அருகேயுள்ள கொல்லுமாங்குடி கிராமத்தில் இருக்கும் கைலாசநாதர் கோவிலில் இருந்து திருடப்பட்டிருந்தது.

    இந்த சிலை கடத்தல் வழக்கில் அமெரிக்கா வாழ் இந்தியர் சுபாஸ் சந்திர கபூர், மும்பையை சேர்ந்த வல்லப பிரகாஷ், ஆதித்த பிரகாஷ், சஞ்சீவி அசோகன், தஞ்சாவூர் கரந்தட்டான்குடியைச் சேர்ந்த ஊமைத்துரை, அண்ணாதுரை, லட்சுமி நரசிம்மன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் மும்பையைச் சேர்ந்த சூர்யபிரகாஷ், ராஜபாளையத்தைச் சேர்ந்த மாரிசாமி ஆகியோர் இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்கள்.

    தமிழரசன் உறவினர்களிடம் கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து அவரது உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதித்தனர். #ThoothukudiShooting
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22ந் தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பேரணியாக சென்றனர். அப்போது போலீசார் தடுத்ததால் மோதல் உண்டானது.

    அப்போது ஏற்பட்ட கலவரம் காரணமாக போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். பலியானவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன.

    இதில் சண்முகம் (38), செல்வசேகர் (42), கார்த்திக் (20), கந்தையா (58), காளியப்பன் (22), ஸ்னோலின் (17), தமிழரசன் (42) ஆகிய 7 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

    இந்த நிலையில் 7 பேரின் உடல்களையும் டெல்லி எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர் அல்லது திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தலைமையில் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் அம்பிகா பிரசாத் பத்ரா தலைமையில், தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவர்கள் மனோகரன், சுடலைமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர், நீதித்துறை நடுவர்கள் முன்னிலையில் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்தனர்.

    உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி இந்த பிரேத பரிசோதனை நடைபெற்றது. நேற்று முன்தினம் மதியம் 12.45 மணிக்கு தொடங்கி நேற்று அதிகாலை 2 மணி வரை 7 பேரின் உடல்களும் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மீதமுள்ள 6 பேரின் உடல்க‌ளும் கோர்ட்டு உத்தரவுப்படி பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

    பிரேத பரிசோதனை முடிந்த சண்முகம், கார்த்திக், செல்வசேகர் ஆகிய 3 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. நேற்று காலை காளியப்பன், கந்தையா ஆகியோரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் ஸ்னோலின், தமிழரசன் ஆகியோரது உடல்களை பெற அவர்களது உறவினர்கள் மறுத்து விட்டார்.

    ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியிலிருந்து நிரந்தரமாக அகற்ற வேண்டும், இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி உள்ள‌னர்.

    ஸ்னோலின், தமிழரசன் உடலை அவர்களது உறவினர்கள் இன்று காலை வரை வாங்கவில்லை. இதையடுத்து அவர்களிடம் கலெக்டர் சந்தீப்நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா மற்றும் அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் தமிழரசன் உடலை பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் சம்மதித்தனர்.

    இதைத்தொடர்ந்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தார். இதையடுத்து தமிழரசனின் உறவினர்களும் அங்கு வந்தார்கள். தொடர்ந்து தமிழரசனின் தாய் ராமலெட்சுமி அம்மாளிடம் அரசு அறிவித்த ரூ.20 லட்சம் உதவித்தொகைக்கான காசோலையை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து தமிழரசனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மறுபிரேத பரிசோதனை முடிந்த ஸ்னோலின் உடல் மட்டும் தொடர்ந்து பிணவறையில் பாதுகாக்கப்படுகிறது.

    மேலும் பிரேத பரிசோதனை செய்யப்படாத அந்தோணி செல்வராஜ், கிளாஸ்டன், ஜான்சி, மணிராஜ், ரஞ்சித் குமார், ஜெயராமன் ஆகிய 6 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஒரு வாரத்துக்கு பிறகு பிரேத பரிசோதனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  #ThoothukudiShooting
    ×