search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Graduate youth"

    • மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.
    • மோட்டார் சைக்கிளில் அவினாசி- கோவை ரோட்டில் சென்றனர்.

    நீலாம்பூர்

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் சிவசக்தி நகரை சேர்ந்தவர் இவரது மகன் கவுதம் (வயது 22). விக்னேஷ் (22).

    நேற்று இரவு 9.30 மணியளவில் இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் அவினாசி- கோவை ரோட்டில் சென்றனர். மோட்டார் சைக்கிளை கவுதம் ஓட்டிச் சென்றார். மோட்டார் சைக்கிளில் கணியூர் மேம்பாலத்தை கடந்து சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த கார் கண்இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் கவுதம், விக்னேஷ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது விக்னே ஷ் பரிதாபமாக இறந்தார். ஆம்புலன்சு ஊழி யர்கள் உயிருக்கு போராடிய கவுதமை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தகவல் கிடைத்ததும் கருமத்தம்பட்டி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசார ணை நடத்தி வருகிறார்கள். பலியான விக்னேஷ் நாமக்கல் எஸ்.பி. புதூரை சேர்ந்தவர். 

    • ஈரோடு அருகே தனியார் நிதி நிறுவனத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாக பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார்(32). எம். சி.ஏ பட்டதாரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்று நான் மற்றொரு தனியார் நிதி நிறுவனத்தில் எனது பெயரில் 15 பவுன் நகையை அடமானம் வைத்துள்ளேன். அந்த நகையை நீங்கள் மீட்டு அதற்குண்டான பணத்தை தருமாறு அந்த நிதி நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டார்.

    இதை உண்மை என்று நம்பிய அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமார் வங்கி கணக்கில் 2 தவணையாக ரூ. 3.50 லட்சம் போட்டு உள்ளனர். பின்னர் அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமார் கூறிய நிதி நிறுவனத்திற்கு சென்று விவரங்கள் கேட்டபோது அப்படி ஒரு பெயரில் நகை அடமானம் வைக்கப்படவில்லை என தெரிய வந்தது. பிரேம்குமார் மோசடி செய்து பணம் பெற்றதும் தெரிய வந்தது.

    இது குறித்து அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமார் க்கு போன் செய்த போது வருகிறேன் என்று கூறி காலம் தாழ்த்தி வந்து உள்ளார். இது தொடர்பாக நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில் மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பிரேம்குமார் சென்றது போலீசாருக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் பிரேம்குமாரை மடக்கி பிடித்தனர். அப்போது அந்த நிதிநிறுவனத்தில் பிரேம்குமார் இதே போல் மோசடியில் ஈடுபட முயன்றது தெரிய வந்தது. பிரேம்குமாரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    விசாரணையில் பிரேம்குமார் ஏற்கனவே ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நீதி நிறுவனத்தில் இதே போல் மோசடியில் ஈடுபட்டு பணத்தை பெற்றது தெரிய வந்தது.

    மேலும் இவர் மீது நாமக்கல்லில் பொருளாதார குற்றப்பிரிவில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இது குறித்து ஈரோடு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர்.

    பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். பிரேம்கு மாருக்கு நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது உதவி செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே குடும்ப தகராறு காரணமாக பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பவளக்கொடி. இவர்களுக்கு வெற்றிவேல் (வயது 23), விக்னேஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். முருகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பட்டதாரியான வெற்றிவேல் கூலி வேலைக்கு சென்று வந்தார். வெற்றிவேலுக்கும், அவரது தாய்க்கும் இடையே குடும்ப தகராறு இருந்தது தெரியவந்தது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

    நேற்று இரவு வெற்றிவேல் சாப்பிட்டுவிட்டு, பின்னர் தூங்க சென்றார். அவரது அறையின் கதவு மூடி இருந்தது. இன்று காலை நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை. உடனே சந்தேகம் அடைந்த தாய், தம்பி கதவை தட்டினர். ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது வெற்றிவேல் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதுகுறித்து தொப்பூர் போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்து வெற்றிவேல் உடலை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குடும்ப தகராறு காரணமாக வெற்றிவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    கோபியில் உள்ள ஒரு வங்கியில் ரூ.80 ஆயிரம் எடுத்து சென்ற முதியவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற பட்டதாரி வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    கோபி:

    ஈரோடு மாவட்ட கோபி தமிழ் நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 70) ஓய்வு பெற்ற ஆசிரியர்.

    இவர் நேற்று மதியம் கோபியில் உள்ள ஒரு பாங்கியில் ரூ.80 ஆயிரம் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மர்ம ஆசாமி ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

    திடீரென அவர் திருநாவுக்கரசை மிரட்டி அவரிடம் இருந்த 80 ஆயிரம் பணத்தை பறிக்க முயன்றார். அதிர்ச்சி அடைந்த அவர் “திருடன்..திருடன்..” என சத்தம் போட்டார். அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த ஆசாமியை மடக்கி பிடித்தனர்.

    அவனை மடக்கி கையும்- களவுமாக பிடித்த காளீஸ்வரன், சக்திகுமார், வில்லியம்ஸ் ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் கோபி போலீசில் ஒப்படைத்தனர்

    அந்த வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவனது பெயர் அருண்சுந்தர் என்றும் பவானி அருகே உள்ள கொத்தம்பாளையத்தை சேர்ந்தவர் என்றும் மேலும் அவன் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி என்றும் தெரிய வந்தது.

    அருண்சுந்தர் ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர்வைசர் ஆக பணிபுரிந்து வந்தான். 6 மாதமாக அவன் வேலைக்கு போகவில்லை.

    இந்த நிலையில் தீபாவளிக்கு செலவுக்கு பணம் தேவைப்படவே இந்த வழிப்பறியில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    மேலும் பட்டதாரி வாலிபர் அருண்சுந்தர் கோபி வேலுமணி நகரில் செல்வராஜ் என்பவரது வீட்டில் வீடு வாடகைக்கு உள்ளதா? என்று கேட்டு உள்ளான். அவர் வீடு காலி இல்லை என்று கூறி உள்ளார். அவரது பின்னால் நைசாக வீட்டுக்குள் புகுந்த அருண்சுந்தர் அங்கிருந்த ரூ.32 ஆயிரம் மதிப்புள்ள “லேப்டாப்”பையும் திருடி உள்ளான் இதுவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ராமநாதபுரம் மாவட்டத்தில் செல்போனில் புதிய செயலியை பயன்படுத்தி 80 பெண்களின் அந்தரங்க தகவல்களை திருடிய பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகேயுள்ள தாமரை ஊரணியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். எம்.சி.ஏ. பட்டதாரி.

    அந்த பகுதியில் உள்ள தனது உறவுக்கார பெண் வீட்டுக்கு விருந்துக்கு சென்றுள்ளார் தினேஷ் குமார். அவரிடம் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர் ஆசை ஆசையாய் அனுப்பி வைத்த ஸ்மார்ட் போனை கொடுத்து அதில் வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து கேட்டுள்ளார் அந்த பெண்.

    அந்த ஸ்மார்ட் போனில் டிராக் வியூ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொடுத்த தினேஷ்குமார் அந்த டிராக் வியூ செயல்பாட்டை தனது செல்போன் மூலம் கட்டுப்படுத்த ஏதுவாக வழிவகை செய்துள்ளார்.

    அந்த போனில் இருந்து அந்த பெண் கணவருடன் பேசும் அத்தனை அந்தரங்க விவகாரங்களையும் தன்னுடைய டிராக் வியூ செயலி மூலம் லேப் டாப்பில் பதிவு செய்துள்ளான் தினேஷ் குமார்.

    அவர் கணவருக்கு அனுப்பிய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளான். அதனை வைத்து, தான் யார் என்று தெரிவிக்காமல் அந்த பெண்ணை மிரட்டி ஆசைக்கு இணக்கும் படி வற்புறுத்தி உள்ளான். பணியாவிட்டால் அந்தரங்க காட்சிகளையும் படங்களையும் இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி உள்ளான்.

    இதையடுத்து கடந்த ஒரு வாரமாக செய்வதறியாமல் தவித்த அந்த பெண் இந்த விவகாரத்தை தனது சகோதரரிடம் தெரிவித்துள்ளார். அவர், தனது சகோதரி அனுப்புவது போல, ஒரு குறிப்பிட்ட இடத்தை சுட்டிக்காட்டி அங்கு வந்தால் தனிமையில் சந்திக்கலாம் என்று கூறி தினேஷ்குமாரின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி உள்ளார்.

    அதனை உண்மை என்று நம்பிய தினேஷ் குமார் அங்கு வந்துள்ளார். அவனை பார்த்ததும் அந்த பெண்ணின் சகோதரரரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தினேஷ்குமார் உறவு முறையில் அந்த பெண்ணிற்கு தம்பி என்பது தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம்.

    உடனடியாக தினேஷ் குமாரை பிடித்து விசாரித்த போது அவன் தான் அந்தரங்க வீடியோ மற்றும் புகைபடங்களை டிராக் வியூ ஆப் மூலம் திருடி வைத்துக்கொண்டு மிரட்டிய சைக்கோ என்பது தெரியவந்தது. அவனை பிடித்து தர்ம அடி கொடுத்து தேவிபட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    தினேஷ்குமாரை கைது செய்த காவல்துறையினர் அவனது வீட்டிற்கு சென்று சோதனையிட்ட போது அங்கிருந்து 2 மடி கணினிகள், 3 செல்போன்கள், பெண்களின் ஆடைகளையும் பறிமுதல் செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

    கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனியார் கல்லூரி ஒன்றில் கணினி டெக்னீசியனாக பணிபுரிந்த போது கல்லூரியில் படித்த மாணவி ஒருவரின் செல்போனில் இருந்து வீடியோக்களை திருடி மிரட்டி உள்ளார். அந்த பெண் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்ததால் தினேஷ் குமாரை அடித்து விரட்டி உள்ளனர். அப்போது காவல்துறையில் புகார் ஏதும் அளிக்கவில்லை.

    அதன்பின்னர் தான் சந்தித்த உறவுக்கார பெண்கள், சகோதரிகள், தோழிகள் என அனைவரது ஸ்மார்ட் போனையும் வாங்கி பார்ப்பது போல அவர்களது போனில் டிராக் வியூ செயலியை பதிவிறக்கம் செய்து அவற்றை தனது செல்போன் மற்றும் மடி கணினியின் கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளான்.

    அந்தரங்க காட்சிகளுடன் சிக்கும் பெண்களை மிரட்டி ஆசைக்கு இணங்க வற்புறுத்தி உள்ளான். அப்படி ஆசைக்கு இணங்கிய பெண்களின் ஆடைகளை மட்டும் அவனது வீட்டில் சேகரித்து வைத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆசைக்கு இணங்காத பெண்களின் வீடியோக்களை ஆன்லைன் மூலம் வெளிநாடுகளில் உள்ள ஆபாச இணையதளங்களுக்கு விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகின்றது.

    தினேஷ்குமார் வெளிநாட்டில் இருந்து பேசுவது போல இணைய வழி தொலைபேசி மூலம் பலரிடம் பேசி உள்ளான். இதனால் அவனை யார் என அடையாளம் காணமுடியாமல் பல பெண்கள் தவித்துள்ளனர்.


    அவனது ஒரு மடிக்கணியில் இருந்து மட்டும் 80-க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க காட்சிகளையும், ஏராளமான பெண்களின் அந்தரங்க உரையாடல்களையும் காவல்துறையினர் கண்டு அதிர்ந்து போயுள்ளனர்.

    இதில் பெரும்பாலானோர் தினேஷ்குமாரின் உறவினர்கள் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

    இதில் அவன் உடன் பிறந்த சகோதரி தனது கணவருடன் பேசிய அந்தரங்க உரையாடல்களும் , கணவருடன் உள்ள அந்தரங்க புகைபடங்களையும் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

    தினேஷ்குமார் மீது தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. நடராஜன், தேவிபட்டினம் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம் சந்த் ஆகியோர் தினேஷ்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×