search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shreyas Iyer"

    • பரபரப்பான இந்த போட்டியில் வீரர்களின் உணர்ச்சி தருணங்கள் மாறி மாறி இருந்தன.
    • கிரிக்கெட் உண்மையிலேயே கணிக்க முடியாத விளையாட்டாகும்.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக 224 ரன் இலக்கை எடுத்து ராஜஸ்தான் சாதனை வெற்றியை பெற்றது.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன் குவித்தது. இதனால் ராஜஸ்தான் அணிக்கு 224 ரன் என்ற இமாலய இலக்கு இருந்தது.

    சுனில் நரைன் 56 பந்தில் 109 ரன்னும் (13 பவுண்டரி, 6 சிக்சர்), ரகுவன்ஷி 18 பந்தில் 30 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். அவேஷ்கான், குல்தீப் சென் தலா 2 விக்கெட்டும், போல்ட், யசுவேந்திர சாஹல் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசி பந்தில் வெற்றி பெற்று சாதித்தது. அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 60 பந்தில் 107 ரன்னும் (9 பவுண்டரி, 6 சிக்சர்), ரியான் பராக் 14 பந்தில் 34 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), போவெல் 13 பந்தில் 23 ரன்னும் (1 பவுண்டரி 3 சிக்சர்) எடுத்தனர். ஹர்சித் ரானா, சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும், வைபவ் அரோரா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    224 ரன் இலக்கை எடுத்ததன் மூலம் ராஜஸ்தான் தனது சாதனையை சமன் செய்தது. 2020-ம் ஆண்டு ஷார்ஜாவில் நடந்த போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக ராஜஸ்தான் 224 ரன் இலக்கை எட்டி பிடித்து சாதனை புரிந்து இருந்தது. அதை நேற்று சமன் செய்தது.

    ராஜஸ்தான் அணி பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றி குறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

    பட்லர் ஒரு சிறப்பான வீரர். அவர் களத்தில் இருக்கும் போது எந்த ஒரு இலக்கும் பாதுகாப்பாக இருக்காது. இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

    6-வது விக்கெட் விழுந்த பிறகு ரோமன் போவல் உள்ளே வந்து அடுத்தடுத்து 2 சிக்சர்கள் அடித்ததும் நாங்கள் இன்னும் ஆட்டத்தில் இருப்பது போல உணர்ந்தோம். அவர் ஆட்டம் இழந்த பிறகு ஜோஸ் பட்லர் அதிரடியை வெளிப்படுத்தினார். எங்களுக்கு அதிர்ஷ்டமும் இருந்தது.

    இது மிகவும் வேடிக்கையான விளையாட்டு. சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசினார்கள். இந்த பிட்ச் அவர்களுக்கு பொருத்தமாக இருந்தது.

    ஜோஸ் பட்லர் கடந்த 6-7 ஆண்டுகள் செய்ததை தொடர்ந்து செய்துள்ளார். தொடக்க வீரரான அவர் 20 ஓவர் வரை பேட்டிங் செய்தால் எந்த ரன் இலக்கையும் எடுத்து விடுவார். டக் அவுட்டும் ஆவார். கடைசி வரை நின்று வெற்றியும் பெற வைப்பார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கொல்கத்தா அணி 2-வது தோல்வியை தழுவியது. 223 ரன் குவித்தும் வெற்றி பெற முடியாமல் தோற்றதால் அந்த அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஏமாற்றம் அடைந்துள்ளார். தோல்வி குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. கசப்பான மாத்திரை போல் இருக்கிறது. பரபரப்பான இந்த போட்டியில் வீரர்களின் உணர்ச்சி தருணங்கள் மாறி மாறி இருந்தன. இந்த நிலை ஏற்படும் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. கிரிக்கெட் உண்மையிலேயே கணிக்க முடியாத விளையாட்டாகும்.

    இந்த ஆட்டத்தில் நாங்கள் சரியான முறையில் தான் பந்து வீசினோம். கொஞ்சம் தவறினால் கூட பேட்ஸ்மேன்கள் பந்தை மைதானத்துக்கு வெளியே அனுப்பி விடுகிறார்கள்.

    நல்ல வேளையாக இந்த தோல்வி எங்களுக்கு இப்போதே கிடைத்து விட்டது. முக்கியமான நேரத்தில் தோல்வி அடைந்திருந்தால் அது கடினமாக இருக்கும். தவறுகளில் இருந்து நாங்கள் கற்றுக் கொண்டு வலுவாக மீண்டு வருவது முக்கியம்.

    சுனில் நரைன் கொல்கத்தா அணியின் விலை மதிக்க முடியாத சொத்து. அவரால் போட்டியை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும்.

    இவ்வாறு ஸ்ரேயாஸ் அய்யர் கூறியுள்ளார்.

    • இவ்விரு அணிகளும் சூப்பராக விளையாடி வருவதால் யாருடைய கை ஓங்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
    • ஜோஸ் பட்லர், அஸ்வின் ஆகியோர் காயத்தால் பஞ்சாப்புக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் விளையாடவில்லை.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்சும், ராஜஸ்தான் ராயல்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளும் சூப்பராக விளையாடி வருவதால் யாருடைய கை ஓங்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

    5 ஆட்டங்களில் ஆடியுள்ள கொல்கத்தா 4 வெற்றி (ஐதராபாத், பெங்களூரு, டெல்லி, லக்னோவுக்கு எதிராக) ஒரு தோல்வி (சென்னைக்கு எதிராக) என 8 புள்ளிகளுடன் உள்ளது. முந்தைய லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் 162 ரன் இலக்கை கொல்கத்தா 15.4 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து அசத்தியது. அதில் விக்கெட் கீப்பர் பில்சால்ட் 89 ரன்கள் நொறுக்கினார். அந்த அணியில் சால்ட், சுனில் நரின், ஸ்ரேயாஸ் அய்யர், ஆந்த்ரே ரஸ்செல் ஆகியோர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க்கும் நல்ல நிலைக்கு திரும்பி விட்டார். சொந்த ஊரில் ஆடுவது கொல்கத்தாவுக்கு கூடுதல் பலமாகும். இந்த சீசனில் உள்ளூரில் ஆடியுள்ள 2 ஆட்டத்திலும் கொல்கத்தா வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு தொடரில் 10 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. லக்னோ, டெல்லி, மும்பை, பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகளை தோற்கடித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்சுக்கு எதிராக மட்டும் தோல்வியை சந்தித்துள்ளது.

    ஜோஸ் பட்லர், அஸ்வின் ஆகியோர் காயத்தால் பஞ்சாப்புக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. இன்றைய ஆட்டத்திற்கு திரும்புவார்களா என்பது குறித்து அணி நிர்வாகம் தரப்பில் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனாலும் சாம்சன், ரியான் பராக், ஜெய்ஸ்வால், டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல் என்று நட்சத்திர வீரர்களுடன் ராஜஸ்தான் வலுவாகவே உள்ளது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 27 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 13-ல் ராஜஸ்தானும், 14-ல் கொல்கத்தாவும் வெற்றி கண்டுள்ளது. ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டில் வருமாறு:-

    கொல்கத்தா: பில் சால்ட், சுனில் நரின், ரகுவன்ஷி, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), வெங்கடேஷ் அய்யர், ஆந்த்ரே ரஸ்செல், ரிங்கு சிங் அல்லது ரமன்தீப்சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் ஆரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி.

    ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், தனுஷ் கோடியன் அல்லது பட்லர், சஞ்சு சாம்சன் (ேகப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ெஹட்மயர், ரோமன் பவெல், குல்தீப் சென் அல்லது ேகஷவ் மகராஜ், டிரென்ட் பவுல்ட், அவேஷ்கான், யுஸ்வேந்திர சாஹல்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ஒப்பந்த பட்டியலில் இருந்து இருவரின் பெயரும் நீக்கப்பட்டது.
    • ரஞ்சி கோப்பையின் நான்கு, ஐந்தாம் நாள் போட்டிகளில் களமிறங்கவில்லை.

    இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் உள்ளூர் போட்டிகளிலும் விளையாட வேண்டியது அவசியம் என்று முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மேலும், இவ்வாறு செய்யாத பட்சத்தில் இந்திய அணியில் விளையாடுவதற்கான ஒப்பந்த பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    எனினும் ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்தனர். இதன் காரணமாக பி.சி.சி.ஐ. வெளியிட்ட இந்திய அணி வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் இருந்து இருவரின் பெயரும் நீக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து ஸ்ரேயஸ் அய்யர் ரஞ்சி கோப்பையில் விளையாடினார். ரஞ்சி கோப்பை போட்டிகளில் சிறப்பாக ஆடியதை தொடர்ந்து ஸ்ரேயஸ் அய்யர் பெயரை மீண்டும் ஒப்பந்த பட்டியலில் சேர்க்கலாமா என்று பி.சி.சி.ஐ. ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுதவிர ஸ்ரேயஸ் அய்யருக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அவர் ஐ.பி.எல். தொடரின் சில போட்டிகளை விளையாட முடியாத சூழல் உருவாகலாம் என்றும் கூறப்பட்டது. முதுகு வலி காரணமாக ரஞ்சி கோப்பையின் நான்கு மற்றும் ஐந்தாம் நாள் போட்டிகளில் அவர் களமிறங்கவில்லை.

    இது தொடர்பாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஸ்ரேயஸ் அய்யர் இந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக துவக்கத்தில் இருந்தே விளையாடுவார் என்று கூறப்படுகிறது. 2024 ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணி தனது முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை மார்ச் 23-ம் தேதி எதிர்கொள்கிறது. 

    • மும்பை - தமிழ்நாடு அணிகளுக்கு இடையே நடந்த ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் ஷ்ரேயாஸ் விளையாடினார்
    • அப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அவர் 95 ரன்கள் எடுத்தார்

    இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெற்ற 2-வது தேசிய போட்டியின் போது முதுகு வலி ஏற்பட்டதாக ஷ்ரேயாஸ் ஐயர் தொடரின் மீதமுள்ள 3 போட்டிகளில் இருந்து விலகினார்.

    பின்னர், மும்பை - தமிழ்நாடு அணிகளுக்கு இடையே நடந்த ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் ஷ்ரேயாஸ் விளையாடினார். அப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அவர் 95 ரன்கள் எடுத்தார்.

    அதன் பிறகு, ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் மும்பை - விதர்பா அணிகள் மோதின. அப்போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

    அப்போட்டியின் 4 மற்றும் 5-ம் நாட்களில், முதுகு வலி காரணமாக ஷ்ரேயாஸ் விளையாடவில்லை. முதுகு வலி காரணமாக கடந்த ஆண்டு அவர் அறுவை சிகிக்சை செய்திருந்தார்.

    இந்நிலையில், முதுகு வலி காரணமாக வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ், முதல் சில போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இது கொல்கத்தா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வீரர்கள் ஒப்பந்தத்தில் யார் இடம் பெற வேணடும் என்பதை நான் முடிவு செய்யவில்லை.
    • நானும், கேப்டன் ரோகித் சர்மாவும் போட்டியில் ஆடக்கூடிய 11 வீரர்களை மட்டுமே தேர்வு செய்வோம்.

    தர்மசாலா:

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான ஷ்ரேயாஸ் அய்யர், இஷான்கிஷன் ஆகியோர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் நீக்கப் பட்டனர். இருவரும் முதல் தர போட்டியான ரஞ்சி டிராபியில் விளையாட மறுத்ததால் பி.சி.சி.ஐ. இந்த நடவடிக்கையை எடுத்தது.

    கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்தது. ஒட்டு மொத்தத்தில் இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் இந்த விவகாரம குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வாய் திறந்துள்ளார். பி.சி.சி.ஐ.யின் ஒப்பந்தத்தை நான் முடிவு செய்யவில்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக ராகுல் டிராவிட் கூறியதாவது:-

    இந்திய அணியில் இடம் பெறுவதற்கான பட்டியலில் அவர்கள் (இஷான்கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர்)எப்போதும் இருக்கிறார்கள். யாரும் அணியில் இடம்பெற முடியாது என்பது கிடையாது. உள்ளூர் போட்டிகளில் விளையாடும் அனைவருமே இந்திய அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி தேர்வு குழுவினர்களின் கவனத்தை பெறவேண்டும்.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வீரர்கள் ஒப்பந்தத்தில் யார் இடம் பெற வேணடும் என்பதை நான் முடிவு செய்யவில்லை. ஒப்பந்தம் தொடர்பான முடிவுகளை கிரிக்கெட் வாரியமும், தேர்வு குழுவினரும் தான் எடுப்பார்கள். இதற்கான அளவுகோல் என்ன என்பது கூட எனக்கு தெரியாது.

    நானும், கேப்டன் ரோகித் சர்மாவும் போட்டியில் ஆடக்கூடிய 11 வீரர்களை மட்டுமே தேர்வு செய்வோம். ஒரு வீரருக்கு ஒப்பந்தம் உள்ளதா? இல்லையா? அவர் தேர்வு செய்யப்படுவாரா என்பதை நாங்கள் ஒருபோதும் ஆலோசித்தது கிடையாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஷ்ரேயாஸ், இஷான் ஆகிய இருவரை மட்டும் தண்டிப்பது சரியல்ல.
    • ரோகித் சர்மா அல்லது விராட் கோலியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாநில அணிக்காக உள்ளூரில் விளையாட வேண்டும்.

    இந்திய அணியின் 2023 -24 வருடத்திற்கான மத்திய சம்பள ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிசன் ஆகிய 2 வீரர்களை பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இஷான், ஷ்ரேயாஸ் மட்டுமல்லாமல் இந்தியாவுக்காக விளையாடாத நேரங்களில் கேப்டன் ரோகித், கோலி உள்ளிட்ட அனைத்து வீரர்களும் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டுமென்று 1983 உலகக் கோப்பை வென்ற அணியில் இருந்த முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் கேட்டுக் கொண்டுள்ளார்.

     

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அனைவரும் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டும். இப்போது ஐபிஎல் மீது மட்டுமே ஆர்வம் இருக்கிறது. பொழுதுபோக்கிற்கு ஐபிஎல் நன்றாக இருக்கும். ஆனால் உண்மையான கிரிக்கெட் 5 நாட்கள் விளையாடுவதில் தான் உள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவது உங்களுடைய ஃபார்மை தக்க வைக்க உதவும்.

    எனவே ரோகித் சர்மா அல்லது விராட் கோலியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாநில அணிக்காக உள்ளூரில் விளையாட வேண்டும்.

    அங்கிருந்து தான் நீங்கள் நாட்டுக்காக விளையாட வந்தீர்கள். அதனால் ஷ்ரேயாஸ், இஷான் ஆகிய இருவரை மட்டும் தண்டிப்பது சரியல்ல. அனைவரையும் தண்டிக்க வேண்டும். அனைவரையும் ஒரே கண்ணாடியில் பார்க்க வேண்டும்.

    எங்களுடைய கேரியரை துவங்கும் போது நாங்கள் எங்களுடைய மாநில அணிக்காக மிகவும் பெருமையுடன் உள்ளூரில் விளையாடுவோம். அந்த பெருமையான உணர்வை தற்போதைய இளம் வீரர்களிடம் பார்க்க முடியவில்லை.

    இவ்வாறு கீர்த்தி ஆசாத் கூறினார்.

    • ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் திறமையான கிரிக்கெட் வீரர்கள்.
    • அவர்கள் மீண்டும் வலுவாக திரும்பி வருவார்கள் என்று நம்புகிறேன்.

    ஊதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. இதில் வழக்கம்போல் ஏ+, ஏ, பி மற்றும் சி என நான்கு பிரிவுகளுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டிருந்தது. இந்த புதுப்பிக்கப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து இந்திய அணியின் இளம் வீரர்கள் வீரர்கள் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

    கடந்தாண்டு பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் ஷ்ரேயாஸ் ஐயர் கிரேட் பி பிரிவிலும், இஷான் கிஷான் கிரேட் சி பிரிவிலும் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரும் ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியது.

    இந்நிலையில் பிசிசிஐ-யின் இந்த முடிவு சர்ச்சையாக மாறிவரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதானின் எக்ஸ் தள பதிவு வைரலாகி வருகிறது.

    அந்த பதிவில், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் திறமையான கிரிக்கெட் வீரர்கள். அவர்கள் மீண்டும் வலுவாக திரும்பி வருவார்கள் என்று நம்புகிறேன்.

    ஹர்திக் போன்ற வீரர்கள் சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை என்றால், அவரும் அவரைப் போன்றவர்களும் தேசிய கடமையில் இல்லாதபோது வெள்ளை பந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்க வேண்டுமா? இது அனைவருக்கும் பொருந்தவில்லை என்றால், இந்திய கிரிக்கெட் எதிர்பார்த்த முடிவுகளை அடையாது.

    என்று பதான் கூறியுள்ளார். 

    • கிரேடு ஏ+ பிரிவில் சீனியர் வீரர்களான ரோகித், விராட் கோலி, பும்ரா, ஜடேஜா ஆகியோர் உள்ளனர்.
    • இளம் வீரரான ஜெய்ஸ்வால் கிரேடு பி பிரிவில் இடம் பிடித்துள்ளார்.

    2023- 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியீட்டது. இதில் 2 முக்கிய வீரர்களான இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை பிசிசிஐ புறகணித்துள்ளது.

    கிரேடு ஏ+ பிரிவில் சீனியர் வீரர்களான ரோகித், விராட் கோலி, பும்ரா, ஜடேஜா ஆகியோர் உள்ளனர். கிரேடு ஏ பிரிவில் தமிழக வீரர் அஸ்வின், சமி, சிராஜ், கேஎல் ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா இடம் பெற்றுள்ளனர்.

    கூடுதலாக, இந்த இடைப்பட்ட காலத்திற்குள் குறைந்தபட்சம் 3 டெஸ்ட் அல்லது 8 ஒருநாள் போட்டிகள் அல்லது 10 டி20 போட்டிகளில் விளையாடும் வீரர்கள், விகித அடிப்படையில் தானாகவே கிரேடில் சேர்க்கப்படுவார்கள். உதாரணமாக, துருவ் ஜூரல் மற்றும் சர்பராஸ் கான், இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளனர், அவர்கள் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் 5வது டெஸ்டின் பிளேயிங் 11-ல் இடம்பெற்றால், கிரேடு 'சி'-ல் சேர்க்கப்படுவார்கள்.

    ஆகாஷ் தீப், விஜய்குமார் வைஷாக், உம்ரான் மாலிக், யாஷ் தயாள் மற்றும் வித்வத் கவேரப்பா ஆகிய விளையாட்டு வீரர்களுக்கான வேகப்பந்து வீச்சு ஒப்பந்தங்களையும் தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது.

    அனைத்து வீரர்களும் தேசிய அணியில் விளையாடத காலங்களில் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. பரிந்துரைத்துள்ளது.

    இளம் வீரரான ஜெய்ஸ்வால் கிரேடு பி பிரிவில் இடம் பிடித்துள்ளார்.

    கிரேடு ஏ+ (ரூ. 7 கோடி)

    ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஜடேஜா

    கிரேடு ஏ (ரூ.5 கோடி)

    அஸ்வின், முகமது சமி, முகமது சிராஜ், கேஎல் ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா

    கிரேடு பி (ரூ. 3 கோடி)

    சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், ஜெய்ஸ்வால்

    கிரேடு சி (ரூ.1 கோடி)

    ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாகுர், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பரத், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் மற்றும் ரஜத் படிதார்.

    • இந்திய அணியில் ரன் குவிக்க திணறியதால் உள்ளூர் போட்டிகளில் விளையாட வலியுறுத்தல்.
    • காயம் காரணமாக ரஞ்சி போட்டியில் விளையாட முடியாது என ஷ்ரேயாஸ் அய்யர் அறிவித்ததால் சிக்கல் ஏற்பட்டது.

    இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர். இவருக்கு பிசிசிஐ-க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. கிரிக்கெட்டில் சிறுசிறு காயம் ஏற்பட்டு அணியில் இருந்து விலகி மீண்டும் அணிக்கு திரும்ப தயாராகும்போது ரஞ்சி டிராபியில் விளையாடி திறமையை நிரூபிக்க வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்துவது உண்டு.

    அதேபோல் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து அதிக ரன்கள் அடிக்க முடியாமல் ஃபார்ம் இன்றி தவிக்கும்போதும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வலியுறுத்துவது உண்டு.

    ஆனால் பிரபல நட்சத்திர வீரர்கள் பெரும்பாலும் ரஞ்சி போட்டிகளில் விளையாடுவதில்லை. நேரடியாக இந்திய அணிக்கு தகுதி பெறுவார்கள். அந்த வகையில் ஷ்ரேயாஸ் அய்யர் ரஞ்சி டிராபியில் விளையாட ஆர்வம் காட்டவில்லை. இதனால் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

    இதற்கிடையே காயம் காரணமாகத்தான் ரஞ்சி டிராபியில் விளையாடவில்லை என ஷ்ரேயாஸ் தெரிவித்ததாகவும், அதேவேளையில் அவருக்கு காயம் இல்லை பயிற்சியாளர் தெரிவிததாகவும் தகவல் வெளியானது.

    இந்த நிலையில் ரஞ்சி கோப்பைக்கான மும்பை அணியில் ஷ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்பட்டுள்ளார்.

    மார்ச் 2-ந்தேதி தொடங்கும் அரையிறுதி போட்டியில் மும்பை- தமிழ் நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ரஞ்சி டிராபி காலிறுதியில் தமிழ்நாடு அணி சவுராஷ்டிராவை இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    மும்பை- பரோடா இடையிலான போட்டி டிராவில் முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் மும்பை அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

    மற்றொரு அரையிறுதி போட்டியில் விதர்பா- மத்திய பிரதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. காலிறுதியில் மத்திய பிரதேசம் ஆந்திராவை வீழ்த்தியிருந்தது. கர்நாடகாவை விதர்பா வீழ்த்தியிருந்தது.

    • இஷான் கிஷன் ரஞ்சி தொடரில் விளையாடாமல் பாண்ட்யாவுடன் சேர்ந்து ஐபிஎல் தொடருக்கு தயராகி வருகிறார்.
    • ஷ்ரேயாஸ் முதுகு வலி காரணமாக ரஞ்சி தொடரில் இருந்து விலகினார்.

    இந்திய அணியின் இளம் வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பிசிசிஐ மத்திய ஒப்பந்தகளில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஞ்சி டிராபி தொடரில் விளையாடாததால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

    தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இஷான் கிஷன் பிசிசிஐ-யிடம் தெரிவித்தார். மேலும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கு தமக்கு அனுமதி கொடுக்குமாறு கேட்டார். அதற்கு உடனடியான அனுமதி வழங்கப்பட்ட நிலையில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடாத அவர் துபாய்க்கு சென்று 2024 புத்தாண்டு பார்ட்டியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அதன் பிறகு சில தொடர்களில் இஷான் கிஷன் களற்றி விடப்பட்டார். மேலும் இஷான் கிஷனை ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடச் சொல்லி பிசிசிஐ வலியுறுத்தியுறுத்தியது. ஆனால் அவர் ரஞ்சி தொடரில் விளையாடாமல் ஹர்திக் பாண்ட்யாவுடன் சேர்ந்து ஐபிஎல் தொடருக்கு தயாரியாகி வந்தார்.

    இவரை போல ஷ்ரேயாஸ் அய்யர் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வேண்டும் என்றும் பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அவர் முதுகுபிடிப்பு காரணமாக நடப்பு ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக கூறினார். இதனால் அதிருப்தி அடைந்த பிசிசிஐ, அவரை பரிசோதித்து அறிக்கை சமர்பிக்கும் படி என்சிஏவிற்கு பிசிசிஐ உத்திரவிட்டிருந்தது.

    அதன்படி என்சிஏ மருத்துவர் நிதின் படேல் பிசிசிஐ-க்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், ஷ்ரேயாஸ் ஐயருக்கு எந்தவிதமான புதிய காயங்களும் ஏற்படவில்லை. மேலும் அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் தான் இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஆகிய இருவரும் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பது கேள்விகுறியாகி உள்ளது.

    2022-23 மத்திய ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, இஷான் கிஷன் சி பிரிவிலும் ஷ்ரேயாஸ் அய்யர் பி பிரிவிலும் இடம்பிடித்துள்ளார்கள்.  

    • முதுகுபிடிப்பு காரணமாக நடப்பு ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக ஷ்ரேயாஸ் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • ஷ்ரேயாஸ் முழு உடற்தகுதியுடன் உள்ளார் என்று என்சிஏ மருத்துவர் நிதின் படேல் தெரிவித்துள்ளார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த ஷ்ரேயாஸ் மோசமான ஆட்டம் காரணமாக எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு, அந்த வாய்ப்பு இளம் வீரர்களுக்கு வழங்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து நடைபெற்றுவரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் பங்கேற்க வேண்டும் என்றும் பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதற்கேற்ற வகையில் நடப்பாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதிச்சுற்றுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, விதர்பா, மும்பை, பரோடா, சௌராஷ்டிரா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேச அணிகள் முன்னேறி இருந்தன. மேலும் மும்பை அணி காலிறுதிப்போட்டியில் பரோடா அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

    இந்நிலையில் முதுகுபிடிப்பு காரணமாக நடப்பு ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக ஷ்ரேயாஸ் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில் இஷான் கிஷன் உள்பட பல முன்னணி வீரர்கள் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட மறுத்து ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருவதாக பிசிசிஐ அதிருப்தி தெரிவித்திருந்தது.

    அதிலும் பிசிசிஐயின் ஒப்பந்த பட்டியளில் இடம்பிடித்திருந்த வீரர்கள் இவ்வாறு செய்து வருவது வருத்தமளிப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சில காட்டமான கருத்துகளை தெரிவித்து வந்தார்.

    இந்நிலையில் தற்போது ஷ்ரேயாஸ் காயத்தை காரணம் காட்டி ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகியது சர்ச்சையான நிலையில், அவரை பரிசோதித்து அறிக்கை சமர்பிக்கும் படி என்சிஏவிற்கு பிசிசிஐ உத்திரவிட்டிருந்தது.

    அதன்படி என்சிஏ மருத்துவர் நிதின் படேல் பிசிசிஐ-க்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், ஷ்ரேயாஸ் ஐயருக்கு எந்தவிதமான புதிய காயங்களும் ஏற்படவில்லை. மேலும் அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளார் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக ஷ்ரேயாஸ் காயத்தை காரணமாக கூறி ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளது தெரியவந்துள்ளது.

    இதனால் ஷ்ரேயாஸ் மீது பிசிசிஐ கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை ஷ்ரேயாஸ் ஐயர் மீது பிசிசிஐ நடவடிக்கை மேற்கொண்டால் அவர் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பது கேள்விகுறியாகும் என கருதப்படுகிறது.

    • 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
    • விக்கெட்டை ஷ்ரேயாஸ் அய்யரிடம் பறிக்கொடுத்தார்.

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளஇங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் நான்காம் நாளில் வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார், அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். 399 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் மற்றும் பென் ஃபோக்ஸ் கூட்டணி பொறுமையாக ரன்களை சேர்த்து வந்தது.

    ஸ்டோக்ஸ் மற்றும் ஃபோக்ஸ் ஜோடி இந்திய அணி வெற்றிக்கு எந்த நிலையிலும் பாதகமாக இருக்கும் என்ற இக்கட்டான நிலையில், பென் ஸ்டோக்ஸ் ரன் எடுக்க முயன்ற போது தனது விக்கெட்டை ஷ்ரேயாஸ் அய்யரிடம் பறிக்கொடுத்தார். ரன்களுக்கு இடையில் வேகமாக ஓட வேண்டிய ஸ்டோக்ஸ் சற்றே வேகம் குறைவாக ஓடியது, அவர் பெவிலியன் திரும்ப காரணமாக அமைந்தது.

     


    இதைத் தொடர்ந்து தனது விக்கெட்டை வீழ்த்திய பிறகு, பென் ஸ்டோக்ஸ் செய்த செய்கையை இன்று ஷ்ரேயாஸ் அய்யர் அப்படியே செய்து கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். ரன் எடுக்க முயன்ற போது வேகமாக செயல்பட்ட ஷ்ரேயாஸ் அய்யர், பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை கைப்பற்ற பந்தை வேகமாக ஸ்டம்ப்களை நோக்கி வீசினார்.

    இவர் வீசிய பந்து ஸ்டம்ப்களை பதம் பார்க்க, பென் ஸ்டோக்ஸ் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது தான் ஷ்ரேயாஸ் அய்யர், பென் ஸ்டோக்ஸ் போன்றே கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். 

    ×