என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து அப்டேட் கொடுத்த சூர்யகுமார் யாதவ்
- விலா எலும்பையும் தாண்டி மண்ணீரலில் கீறல் ஏற்பட்டு, அதனால் ரத்தக்கசிவு உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது.
- ரத்தப்போக்கு நீடித்தால் உயிருக்கே ஆபத்தாகி விடும்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (24 ரன்) அடித்த பந்தை இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்து அருமையாக கேட்ச் செய்தார். அப்போது மைதானத்தில் விழுந்ததில் அவரது இடது விலாப்பகுதி பலமாக இடித்தது. வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். அதன் பிறகு பீல்டிங் செய்ய வரவில்லை.
அவர் இடது கீழ் விலாஎலும்பு பகுதியில் காயமடைந்திருப்பதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் சில 'ஸ்கேன்' பரிசோதனை மேற்கொண்ட போது, விலா எலும்பையும் தாண்டி மண்ணீரலில் கீறல் ஏற்பட்டு, அதனால் ரத்தக்கசிவு உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது. ரத்தப்போக்கு நீடித்தால் உயிருக்கே ஆபத்தாகி விடும். இதையடுத்து அணி டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஷ்ரேயாஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் விலா எலும்பு பகுதியில் காயமடைந்து ரத்தக்கசிவு ஏற்பட்டதால் ICUவில் அனுமதிக்கப்பட்ட ஷ்ரேயாஸ் உடல்நிலை குறித்து டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் அப்டேட் கொடுத்துள்ளார்.
அதன்படி அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. நல்ல முறையில் நலம் பெற்று வருகிறார். சில நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார். ஆனால் பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை.
என கூறினார்.
மேலும் பிசிசிஐ தரப்பில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து ஷ்ரேயாஸ் இன்று காலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் சீக்கிரம் நலம் பெற ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அவரது குடும்பத்தினர் ஆஸ்திரேலியா விரைகிறார்கள்.






