என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய பட்ஜெட் 2026"

    • எதிர்கால ஒப்பந்தங்கள் மீதான வரி 0.02%-லிருந்து 0.05%-ஆகவும், ஆப்ஷன்ஸ் மீதான வரி 0.15%-ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.
    • பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறையாகும்.

    இந்தியாவில் கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பின் ஞாயிற்றுக்கிழமையான இன்று மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். இந்நிலையில் இன்று இந்தியப் பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறையாகும். ஆனால் பட்ஜெட்டை ஒட்டி இன்று பங்குச்சந்தைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அந்தவகையில் பிற்பகலுக்கு பின் நடைபெற்ற வர்த்தகத்தின் போது, மும்பை பங்குச்சந்தையின் 30 முக்கிய பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 1,600 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் முன்னணி 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 500 புள்ளிகளுக்கு மேல் சரிவைக் கண்டது.

    பட்ஜெட் உரை முடிந்தவுடன் தற்போது சென்செக்ஸ் 1546 புள்ளிகள் சரிவுடனும், நிஃப்டி 495 புள்ளிகள் சரிவுடனும் வர்த்தகம் முடிந்தது. இந்த சரிவிற்கு காரணம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பங்குச்சந்தை பரிவர்த்தனை வரி. பங்குகள் பரிவர்த்தனை வரியை உயர்த்தி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டநிலையில்  இந்த சரிவு நிகழ்ந்துள்ளது. இதன்படி, எதிர்கால ஒப்பந்தங்கள் மீதான வரி 0.02%-லிருந்து 0.05%-ஆகவும், ஆப்ஷன்ஸ் மீதான வரி 0.15%-ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.


    • சிறுபான்மை சமூகங்களுக்கு எந்த ஆதரவையும் வழங்கவில்லை.
    • திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் விளைவு என்ன?

    மத்திய பட்ஜெட் 2026 பல்வேறு பிரச்சனைகளுக்கு எந்த தீர்வையும் வழங்கவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில்,

    "மோடி அரசாங்கத்திடம் யோசனைகள் தீர்ந்துவிட்டன. பட்ஜெட் 2026 இந்தியாவின் பல பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களுக்கு ஒரு தீர்வையும் வழங்கவில்லை.

    "திட்டச் செயல்பாடு முறை" இப்போது "சவாலான பாதை" ஆகிவிட்டது.

    "சீர்திருத்த விரைவு ரயில்" எந்த "சீர்திருத்த" சந்திப்பிலும் அரிதாகவே நிற்கிறது.

    இறுதி விளைவு: கொள்கை தொலைநோக்கு பார்வை இல்லை, அரசியல் உறுதிப்பாடு இல்லை.

    நமது அன்னமிடும் விவசாயிகள் இன்னும் அர்த்தமுள்ள நலத்திட்ட ஆதரவு அல்லது வருமான பாதுகாப்பு திட்டத்திற்காக காத்திருக்கிறார்கள்.

    சமத்துவமின்மை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் காணப்பட்ட நிலைகளை தாண்டிவிட்டது, ஆனால் பட்ஜெட் அதை பற்றி குறிப்பிடக்கூட இல்லை. பட்டியல் சாதி, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு எந்த ஆதரவையும் வழங்கவில்லை.

    நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை மேலும் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள மாநில அரசுகளுக்கு அவை எந்த நிவாரணத்தையும் வழங்குவதாக தெரியவில்லை. கூட்டாட்சித் தத்துவம் பலியாகிவிட்டது," என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், மத்திய பட்ஜெட்டில் என்னென்ன இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் பட்டியலிட்டு விளக்கியுள்ளார்.

    அதில், "- உற்பத்தித் துறை: புத்துயிர் பெறுவதற்கான உத்தி இல்லை; 13% என்ற நிலையிலேயே தேங்கி நிற்கிறது. "மேக் இன் இந்தியா" எங்கே?

    - வேலைவாய்ப்புகள்: நமது இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனுக்காகவோ அல்லது பணியிடங்களில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்காகவோ எந்த ஒரு தீவிர திட்டமும் இல்லை. முந்தைய பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் விளைவு என்ன?

    - ஏற்றுமதி/வர்த்தகம்: ஏற்றுமதி சரிவு, கட்டண அபாயங்கள், வர்த்தக பற்றாக்குறை, சுருங்கி வரும் உலகளாவிய பங்கு ஆகியவற்றிற்கு எந்த பதிலும் இல்லை. வீழ்ச்சியடைந்து வரும் ரூபாய்க்கு ஏதேனும் திட்டம் உள்ளதா?

    - ஏழை மற்றும் நடுத்தர வர்க்கம்: பணவீக்கத்திலிருந்து நிவாரணம் இல்லை; சேமிப்பு குறைகிறது, கடன் அதிகரிக்கிறது, ஊதியம் தேக்கமடைந்துள்ளது. நுகர்வோர் தேவையை மீண்டும் தூண்டுவதற்கு ஏன் எந்த யோசனையும் இல்லை?

    - தனியார் முதலீடு: நம்பிக்கைக்குரிய சமிக்ஞை இல்லை - அந்நிய நேரடி முதலீடு மற்றும் ஊதிய தேக்கம் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ஏன் சிறிய மாற்றங்கள் மட்டும், கட்டமைப்பு சீர்திருத்தங்கள் இல்லை?

    - உள்கட்டமைப்பு: வாக்குறுதிகள் மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றன, செயல்பாடு இல்லை - நகரங்கள் இன்னும் வாழத் தகுதியற்றவையாகவே உள்ளன. எப்போது நமக்கு "ஸ்மார்ட் சிட்டிகள்" அல்லது வாழ தகுதியான நகரங்கள் கிடைக்கும்?

    - சமூக பாதுகாப்பு: சமூக பாதுகாப்பு, நலத்திட்டங்கள் குறித்து ஒரு குறிப்பிடத்தக்க அறிவிப்பும் இல்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு பதிலாக வந்த புதிய சட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஒரு வார்த்தைகூட இல்லை. ஏன்?

    இந்த பட்ஜெட் எந்தத் தீர்வுகளையும் வழங்கவில்லை, கொள்கையின்மை மறைக்க முழக்கங்களை கூட வழங்கவில்லை!" என குறிப்பிட்டுள்ளார்.

    • மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
    • இது சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும்.

    2026-27 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆன இது 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் ஆகும்.

    தேர்தலை ஒட்டி இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் எந்த பிரத்யேக அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

    இந்நிலையில், மாற்றம் இல்லாத ஏமாற்றம் என்று பட்ஜெட் குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "மத்திய பாஜக அரசை பட்ஜெட்டில் தமிழ்நாட்டை நினைவு கூர வைக்க தேர்தலால் கூட முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

    • மத்திய பட்ஜெட் குறித்து மோடி பெருமிதம்.
    • மத்திய பட்ஜெட் வளர்ந்த இந்தியா திட்டத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

    2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்று இருந்த நிலையில், பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, "மத்திய பட்ஜெட் 140 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். 2047 வளர்ந்த இந்தியா திட்டத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ளது. அருமையான பட்ஜெட்டை அளித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சாதனை படைத்துள்ளார். இளைஞர்களின் திறமையை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் பட்ஜெட்," என தெரிவித்துள்ளார்.

    மேலும், "இன்றைய பட்ஜெட் ஒரு வரலாற்று சிறப்புமிக்கது, ஏனெனில் இது  பெண் சக்திக்கு—இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. ஒரு பெண் நிதியமைச்சராக, நிர்மலா ஜி தொடர்ந்து 9ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.

    இந்த பட்ஜெட் பல துறைகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த எதிர்கால நோக்கமுடைய பட்ஜெட் இந்தியாவை செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களின் மையமாக மாற்றும்," என்றார்.

    • ராணுவ ஓய்வூதியத் திட்டங்களுக்காக ரூ.1,71,338 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.
    • விமான உதிரிபாகங்களுக்கான அடிப்படை சுங்கவரியில் இருந்து விலக்கு.

    2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது.

    அதன்படி மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ரூ. 7.8 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

    கடந்த பாதுகாப்பு துறைகான நிதி கடந்த ஆண்டை விட 15% அதிகரிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக நடப்பு பட்ஜெட்டில், ராணுவத் தளவாடங்களை நவீனப்படுத்த ரூ.2.19 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் ரூ.1.80 லட்சம் கோடியை விட 21.84% அதிகமாகும்.

    ராணுவப் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் உள்ளிட்ட அன்றாடச் செலவுகளுக்கு ரூ.3,65,478 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ராணுவ ஓய்வூதியத் திட்டங்களுக்காக ரூ.1,71,338 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்புத் துறையில் இறக்குமதி செய்யப்படும் விமான உதிரிபாகங்களுக்கான அடிப்படை சுங்கவரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

    மேலும், ரஃபேல் போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்த நிதியாண்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்புத் துறையில் தற்சார்பு நிலையை எட்டவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் இந்த பட்ஜெட் பெரும் உந்துதலாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தானுடன் மோதல் ஆகியவற்றால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் இந்த ஆண்டு பாதுகாப்பு துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.  

    • தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப நேரடி பயிற்சி, திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தும்.
    • கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) துறை ஒரு வளர்ந்து வரும் தொழில்துறை.

    பாராளுமன்றத்தில் தனது தொடர்ச்சியான 9ஆவது பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடு முழுவதும் 15,000 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) கன்டன்ட் கிரியேட்டர் ஆய்வகங்களை அமைக்க மும்பையில் உள்ள இந்திய கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

    2030ஆம் ஆண்டுக்குள் இரண்டு மில்லியன் வல்லுநர்கள் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ள ஒரு துறையில் இந்திய இளைஞர்களை பணிக்கு தயார்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் ஆகும்.

    "இந்தியாவின் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) துறை ஒரு வளர்ந்து வரும் தொழில்துறை," என்று கூறிய நிதியமைச்சர், எதிர்கால பணியாளர் தேவைகளை பூர்த்தி செய்ய ஆரம்பகால அறிமுகம் மற்றும் முறையான பயிற்சி ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார்.

    முன்மொழியப்பட்ட இந்த ஆய்வகங்கள், தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப நேரடி பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆன இது 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் ஆகும்.
    • புதிய வருமான வரி சட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

    2026-27 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆன இது 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் ஆகும்.

    பட்ஜெட்டில் வருமான வரி குறித்த முக்கிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

    அதன்படி, திருத்தப்பட்ட புதிய வருமான வரி சட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய மார்ச் வரை கால நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ITR-1 மற்றும் ITR-2 வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு ஜூலை 31-ஆம் தேதியும், தணிக்கை தேவைப்படாத வணிகங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதியும் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்திற்கானTax Collected at Source (TCS), 5% லிருந்து 2%ஆகக் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வருமான வரி தாக்கல் செய்யும்போது பொய் கணக்கு காட்டினாலோ, தவறான தரவுகள் வழங்கினாலோ 100% அபராதம் விதிக்கப்படும் எனவும் வருமான வரி தாக்கல் தொடர்பான சிறிய குற்றங்களுக்கு கிரிமினல் வழக்கு கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தனி நபர் வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வருமான வரி முறையின்படி,  ஆண்டு வருமானம் ரூ.4 லட்சம் வரை 0 வரி, 4 லட்சம்-8 லட்சம் வரை 5% வரி, 8 லட்சம் - 12 லட்சம் வரை 10% வரி, 12 லட்சம் - 16 லட்சம் வரை 15% வரி, 16 லட்சம் - 20 லட்சம் வரை 20% வரி , 20 லட்சம் - 24 லட்சம் வரை 25 % வரை, 24 லட்சத்திற்கு மேல் 30% வரி செலுத்த வேண்டும்.

    இதுதவிர DATA CENTRE டெவலப்பர் நிறுவனங்களுக்கு 2047ம் ஆண்டு வரை வரி விடுமுறை (Tax holiday) அளிக்கப்படும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்துக்களின் வரி குறைக்கப்பட்டுள்ளது. தனிநபர் பயன்பாட்டுக்கான இறக்குமதி பொருட்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.

    புற்றுநோய் சிகிச்சைக்கான 17 மருந்துகளுக்கு சுங்க வரி முழுமையாக நீக்கம், 7 அரிய நோய்களுக்கான மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரி நீக்கம், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் மூலம் ஒரு நபருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைக்கான வட்டிக்கு இனி வருமான வரி கிடையாது. மேலும், இதற்காக TDS பிடிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வெளிநாட்டு இந்தியர்கள் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு இனி முதலீடு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

    • புதிய ரெயில்வே திட்டங்கள் தவிர வேறு எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
    • இது பெரும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.

    சென்னை:

    மத்திய அரசின் பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் இன்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கான கீழ்க்கண்ட் அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்த்தார்.

    அதாவது கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டம், விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான ரூ.3548 கோடி கல்வி நிதி, ஜல்ஜீவன் திட்டத்துக்கான ரூ.3,112 கோடி நிதி, புதிய ரெயில்வே திட்டங்கள், நிதி ஆணையம் பரிந்துரைப்படி ஒன்றிய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50 சதவீத நிதிப்பகிர்வு ஆகியவற்றை எதிர்பார்த்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    இதில் புதிய ரெயில்வே திட்டங்கள், தவிர வேறு எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இது பெரும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.

    • சுரங்கம் அமைக்கப்பட்டு கனிமங்கள் எடுக்கப்படும்.
    • இந்தியா அரிய வகை கனிமத் தேவைகளுக்குப் பெருமளவு சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதியை நம்பியுள்ளது.

    2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.

    பட்ஜெட்டில், கனிமவளங்கள் நிறைந்த மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் பிரத்யேகமான அரிய கனிமவள மண்டலங்கள் (Rare Earth Corridors) அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 4 மாநிலங்களையும் ஒன்றிணைக்கும் சிறப்பு வழித்தடம் அமைக்கப்படும். 

    சுரங்கம் தோண்டுதல், பதப்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் இவை அமைக்கப்டுடுகிறது. 

    பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "இந்த அரிய கனிமவள மண்டலங்கள் மூலமாக நம் நாட்டிலேயே கனிம சுரங்கம் அமைக்கப்பட்டு கனிமங்கள் எடுக்கப்படும்.

    கனிமங்களை எடுப்பது மட்டுமல்லாமல் அவற்றை உற்பத்தி செய்வது, அதுதொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.

    இந்தியா அரிய வகை கனிமத் தேவைகளுக்குப் பெருமளவு சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதியை நம்பியுள்ளது.

    அரிய வகை கனிமங்கள் மின்சார வாகனங்களின் மோட்டார்கள், காற்றாலைகள், ஸ்மார்ட்போன்கள், செமிகண்டக்டர்கள் மற்றும் பாதுகாப்புத் துறை உபகரணங்களைத் தயாரிக்க மிக அவசியமானவை.

    எனவே பட்ஜெட் அறிவிப்பு உள்நாட்டிலேயே கனிம உற்பத்தியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

    • நிர்மலதா சீதாராமன் ஒன்றரை மணி நேரம் பட்ஜெட்டை வாசித்தார்.
    • மத்திய பட்ஜெட்டில் ஒரு தொலைநோக்கு திட்டம் கூட இல்லை எனக்கூறி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.

    பாராளுமன்றத்தில் இன்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் 2026-2027-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தொடர்ந்து தாக்கல் செய்த 9-வது பட்ஜெட் இதுவாகும். சரியாக காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசத் தொடங்கிய நிர்மலதா சீதாராமன் ஒன்றரை மணி நேரம் பட்ஜெட்டை வாசித்தார்.

    இதனிடையே, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் ஒரு தொலைநோக்கு திட்டம் கூட இல்லை எனக்கூறி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.

    இதனை தொடர்ந்து, நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை நிறைவு செய்த உடன் அவை நாளை காலை 11 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

    • பல்வேறு துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
    • சட்டமன்றத் தேர்தல் வரும் சூழலில் இந்த பட்ஜெட்டில் அவற்றுக்கு சிறப்பு கவனம் இருக்கும்.

    2026-27 நிதியாண்டிற்கான மத்திய யூனியன் பட்ஜெட் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும்.

    இந்தாண்டு தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வரும் சூழலில் இந்த பட்ஜெட்டில் அவற்றுக்கு சிறப்பு கவனம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க 6 அம்ச திட்டத்தை நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார். மேலும் பல்வேறு துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

    மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. பட்ஜெட்டில், பங்குகளை  வாங்குவதற்கும் விற்பதற்குமான வரி சற்றே உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் முதியீட்டாளர்கள் பீதியடைந்தனர். 

    எனவே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி சுமார் 300 புள்ளிகள் வரை சரிந்தது.

    தற்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1060 புள்ளிகள் சரிந்து 81,506 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

    தேசிய பங்குச்சந்தை எண் நிஃப்டி 389 புள்ளிகள் சரிந்து 25,029 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.    

    • 7 அரிய நோய்களுக்கான மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரி ரத்து.
    • மைக்ரோவேவ் ஓவன்களுக்கு சுங்க வரியில் விலக்கு அளிக்கப்படும்.

    புதுடெல்லி:

    2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

    * பயணிகள் விமான உறுதிபாகங்களுக்கான இறக்குமதி வரி இனி இல்லை.

    * கலால் மற்றும் சுங்க வரி விதிப்பு நடைமுறை எளிமையாக்கப்படும்.

    * கலால் வரியை தவறாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * புற்றுநோய் சிகிச்சைக்கான 17 மருந்துகளுக்கு சுங்க வரி முழுமையாக நீக்கம்.

    * 7 அரிய நோய்களுக்கான மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரி ரத்து.

    * மைக்ரோவேவ் ஓவன்களுக்கு சுங்க வரியில் விலக்கு அளிக்கப்படும்.

    * காலணி தயாரிப்புக்கான மூலப்பொருட்களை வரியில்லாமல் இறக்குமதி செய்ய சலுகைகள் வழங்கப்படும். 

    ×