என் மலர்
வழிபாடு
- புனித ரமலானில் மூடப்படும் நரக வாசல்கள்.
- நரகத்தில் 7 கதவுகள் உள்ளன.
புனித ரமலானில் மூடப்படும் நரக வாசல்கள்
புனித ரமலான் மாதம் வந்துவிட்டால் நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)
நரகத்திற்கு ஏழு வாசல்கள் உண்டு. அந்த ஏழு வாசல்களும் ரமலான் மாதம் முழுவதும் இறையருளால் மூடப்படும். அந்த நரகத்தில் நுழைபவர்கள் யாரென்றால் ஷைத்தானைப் பின்பற்றும் வழிகேடர்கள்தான். இதோ இறைவன் கூறுவதை பார்ப்போம்:
'எனது இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக! என்று இப்லீஸ் (சைத்தான்) கூறினான்'. 'நிச்சயமாக நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவனாக, குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும் வரையில்' என்று இறைவன் கூறினான்.
(அதற்கு இப்லீஸ்)'என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டு விட்டதால், நான் இவ்வுல கில் (வழிகேட்டைத் தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன். அவர்களில் அந்த ரங்க சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்ல டியார்களைத் தவிர' என்று கூறினான்.
(அதற்கு இறைவன் 'அந்தரங்க சுத்தியுள்ள என் நல்லடியார்களின்)' இந்த வழி என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும். நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை, உன்னைப் பின்பற்றி வழி கெட்டவர்களைத் தவிர' என்று கூறினான்.
'நிச்சயமாக (உன்னை பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும். அதற்கு ஏழு வாசல் உண்டு; ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும்.' (திருக்குர்ஆன் 15:36-44)
நரகத்தில் 7 கதவுகள் உள்ளன. அவை:
1) ஜஹன்னம்
2) லளா
3) ஹூதமா
4) ஸயீர்
5) ஸகர்
6) ஜஹீம்
7) ஹாவியா
இவ்வாறு ஏழு வகையான நரகத்தை குறிப் பிட்டு அதன் மூலம் அதனுடைய ஏழு வகையான வழிகளையும், ஏழு வகையான வாசல்களையும், ஏழு வகையான படித்தரங்களையும் இறைவன் நாடுகின்றான்.
பாவம் செய்தவர்கள் அவர்களின் பாவங்களுக்குத்தக்கவாறு அவர்கள் ஏழு வகையினராக வகைப்படுத்தப்பட்டு ஏழுவகையான வாசல்களின் வழியாக வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வரப்பட்டு உள்ளே நுழைவிக்கப்படுவார்கள்.
இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:
(அந்நாளில்) நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் அங்கே வந்த வுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் உங்களை நோக்கி: "உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென்பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில் லையா?" என்று கேட்டார்கள் ;
(இதற்கு அவர்கள்) "ஆம் (வந்தார்கள்)" என்று கூறுவார்கள்; எனினும் காஃபிர் களுக்கு வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டது. நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்" என்று (அவர்களுக்குக்) கூறப்படும்; பெருமை அடித்துக் கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது. (திருக்குர் ஆன் 39:71,72)
ஆகவே, ரமலானில் மூடப்படும் நரக வாசல் கள் நமது வாழ்நாள் முழுவதும் அது மூடப் பட்டதாகவே இருக்கட்டும். நரக நெருப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள இறைவழியில் நடப்போம்.
- மனக்கட்டுப்பாட்டுக்கு பயிற்சி அளிக்கும் நோன்பு.
- மனதை கட்டுப்படுத்துவது சவாலான காரியம்.
மனக்கட்டுப்பாட்டுக்கு பயிற்சி அளிக்கும் நோன்பு
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல், உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டது. (அதன்மூலம்) நீங்கள் மனத்தூய்மையுடையோர் ஆகலாம்." (திருக் குர்ஆன் 2:183)
நோன்பின் மூலம் மனது தூய்மை அடைவதாக திருக்குர் ஆன் அழகாக தெரிவிக்கிறது. மனதை கட்டுப்படுத்தி, அதை தூய்மைப்படுத்தும்போது, மனிதனின் பிற உறுப்புகள் தானாகவே தூய்மை அடைந்து விடுகின்றன.
"அறிந்து கொள்ளுங்கள், மனித உடலில் ஒரு சதைத்துண்டு உள்ளது. அது சீர்பட்டு விட்டால், உடலுறுப்புகள் யாவும் சீராகிவிடும். அது பாழாகி விட்டால் உடலுறுப்புகள் யாவும் பாழாகிவிடும். அறிந்து கொள்ளுங்கள்! அதுதான் உள்ளம்". (அறிவிப்பாளர்:நுஅமான் பின் பஸீர் (ரலி), நூல்:புகாரி)
நோன்பு கடமையாக்கப்பட்டதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இருந்தாலும், அடிப்படையான காரணம் மனக்கட்டுப்பாட்டை பெறுவதற்குதான் நோன்பு கடமையாக்கப்பட்டு இருக்கின்றது என இஸ்லாம் கூறுகிறது.
மனக்கட்டுப்பாடு எப்படி கிடைக்கும்? ஆம், மனதை தூய்மையாக வைத்திருப்பதினால் கிடைக்கும். மனதை தூய்மையாக வைத்திருந்தால் தானாகவே, ஆரோக்கியம் கிடைத்துவிடும், பசிக்கொடுமையை தெரிந்து கொள்ளலாம். மனஅமைதி கிடைத்திடும், ஏழைகள் மீது இரக்கம் பிறந்துவிடும், மன இச்சைகளை ஒதுக்கித் தள்ள முடியும், ஏழைகளுடன் உறவாடி, அவர்களின் சுமைகளை அறிந்து கொள்ள முடியும்.
மனதை கட்டுப்படுத்தி, அதை பக்குவப்படுத்தவும், தூய்மையாக வைத்துக் கொள்ளவும் நினைப்பவர்களுக்கு நோன்பு வைப்பதன் மூலம் அவை கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அன்புச்சகோதரர்களே! உலகில் ஈ, தேனீ ஆகிய இரண்டையும் காணுகின்றோம். ஈ மலத்திலும் உட்காரும், மலரிலும் உட்காரும். ஆனால் தேனீமலரில் மட்டுமே உட்காரும். ஈ நமது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பது; தேனீயோ உடல் நலனுக்கு உதவுவது; தேனை சேகரித்துத் தருகிறது. "அதில் (தேனில்) மனிதர்களுக்கு நிவாரணம் இருக்கிறது" என்று திருக்குர் ஆன் (16:69) குறிப்பிடுகின்றது.
மனித மனம் ஈயைப் போன்றது. அதை தேனீ போல மாற்ற வேண்டும். அதாவது நல்லதை நினைக்கவும், சொல்லவும், செய்யவும் பழக்க வேண்டும். இந்த முயற்சியுடைய வாழ்க்கைக்குத் தான் இஸ்லாமிய வாழ்க்கை என்று பெயர். சிறந்த உடையை உடுத்திக் கொள்வதிலும், நறுமணம் பூசிக் கொள்வதிலும், சுவையான உணவு வகைகளை உண்டு மகிழ்வதிலும், அழகிய முறையில் வீட்டை அலங்கரிப்பதிலும் ஆர்வமும், அக்கறையும் நாம் அதிகம் காட்டுகின்றோம்.
அதேநேரத்தில், மனதை கட்டுப்படுத்து வதிலும், அதை சுத்தப்படுத்துவதிலும் எவ்வளவு கவனக்குறைவாக இருக்கிறோம் என்பதை எண்ணிப்பாருங்கள். மனதை கட்டுப்படுத்துவது மிகப்பெரும் சவாலான ஒரு காரியம். அந்த சவாலை சமாளிக்கும் ஒரு அற்புதமான களம் தான் நோன்பு.
மனித உறுப்புகளை மனசு கட்டுப்படுத்துகிறது. அந்த மனதை நோன்பு கட்டுப்படுத்தி, சுத்தப்படுத்தி, பக்குவப்படுத்துகிறது. மனதை கட்டுப்படுத்தி, சுத்தப்படுத்த நினைக்கும் முஸ்லிம்களே, ரமலான் மாதம் முப்பதிலும் நோன்பு வையுங்கள். உடலும், உள்ளமும் சுத்தமாகும். மனது உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.
- சூரியனார்கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை.
- சென்னை ஸ்ரீமல்லீஸ்வரர் விடையாற்று உற்சவம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, பங்குனி 18 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சஷ்டி இரவு 6.02 மணி வரை. பிறகு சப்தமி.
நட்சத்திரம்: கேட்டை இரவு 7.37 மணி வரை. பிறகு மூலம்.
யோகம்: மரண, அமிர்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சூரியனார்கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. சென்னை ஸ்ரீமல்லீஸ்வரர் விடையாற்று உற்சவம். சமயபுரம் ஸ்ரீமாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன், காஞ்சீபுரம் காமாட்சியம்மன் தலங்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் சிம்ம வாகன உலா. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளத்தில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-இன்பம்
ரிஷபம்-சாந்தம்
மிதுனம்-வரவு
கடகம்-உயர்வு
சிம்மம்-ஆக்கம்
கன்னி-ஆதரவு
துலாம்- முயற்சி
விருச்சிகம்- நன்மை
தனுசு- புகழ்
மகரம்- பயிற்சி
கும்பம்-ஆர்வம்
மீனம்-நிம்மதி
- கத்தோலிக்க திருச்சபைகளில் இன்று இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரை ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாடு நடக்கிறது.
- ஆலயங்கள் மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது.
சென்னை:
கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் முடிந்துவிட்டது. இதையொட்டி இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. 3-வது நாள் அவர் உயிர்த்தெழுவார் என்ற அடிப்படையில் உலகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
சென்னையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கத்தோலிக்க திருச்சபைகளில் இன்று இரவே ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாடு தொடங்குகிறது. சென்னையில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகளில் இன்று இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரை ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாடு நடக்கிறது. மேலும் சி.எஸ்.ஐ., பெந்தெகொஸ்தே, இ.சி.ஐ., லுத்ரன், மெத்தடிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு திருச்சபைகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணி முதல் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களில் ஆயர்கள் இயேசு உயிர்த்தெழுந்தது குறித்த சிறப்பு செய்தியை வழங்குவார்கள்.
சென்னையில் உள்ள சாந்தோம் பேராலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், எழும்பூர் தூய இருதய ஆண்டவர் ஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை ஆலயம், மாதவரம் புனித அந்தோணியார் ஆலயம், ராதாகிருஷ்ணன் சாலை கதீட்ரல் பேராலயம், மயிலாப்பூர் நல்மேய்ப்பர் ஆலயம், ராயப்பேட்டை வெஸ்லி ஆலயம், சூளை ஆன்ட்ரூஸ் ஆலயம், வேப்பேரி தூய பவுல் ஆலயம், சின்னமலை ஆலயம், அண்ணாநகர் ஆலயம் என சென்னையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாடு நடக்கிறது.
இதையொட்டி ஆலயங்கள் மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. ஈஸ்டர் வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொள்கிறார்கள். வழிபாடு முடிந்ததும் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி இன்று இரவு முதல் சென்னையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் உள்ளிட்ட பலர் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
- திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, பங்குனி 17 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பஞ்சமி இரவு 6.27 மணி வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: அனுஷம் இரவு 7.24 மணி வரை. பிறகு கேட்டை.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதியுலா. சென்னை ஸ்ரீமல்லீஸ்வரர், மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருத்தலங்களில் விபியாற்று உற்சவம். திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் தீர்த்தம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீசீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பக்தி
ரிஷபம்-உழைப்பு
மிதுனம்-கடமை
கடகம்-வரவு
சிம்மம்-ஊக்கம்
கன்னி-அன்பு
துலாம்- வரவு
விருச்சிகம்- ஆரோக்கியம்
தனுசு- நற்செய்தி
மகரம்-கடமை
கும்பம்-உண்மை
மீனம்-பணிவு
- பரிகாரம் செய்ய சொன்னாங்க செஞ்சேன் ஏதும் நடக்கல.
- பரிகாரம் செய்பவர்கள் மனதிலும் தோன்றும் விரக்தி.
ஜோதிடர் சொன்ன "எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம்… ஒன்னும் பிரயோஜனம் இல்லை. எதுவும் நடக்கலே.. பல நேரங்களில் ஜோதிட ஆலோசனைகளின் பேரிலும் அல்லது தோஷங்களுக்காக பரிகாரம் செய்பவர்கள் மனதிலும் தோன்றும் விரக்தி இது.
பரிகாரம் செய்ய சொன்னாங்க செஞ்சேன் ஏதும் நடக்கல எடைக்கு எடை காணிக்கை தர சொன்னாங்க அப்படியும் ஏதும் நடக்கல.. என்று புலம்புகிறார்கள்... பரிகாரம் என்றால் உண்மையில் என்னவென்று தெரியாதவர்களுக்காக இந்த கதை.
பரிகாரம் தொடர்பான குட்டி கதை...
ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார். நேரம் போனது தெரியாமல் வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது மாலை நேரம் வந்து எங்கும் இருள் சூழத் தொடங்கிவிட்டது. அப்போது தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதை போல இருந்தது. மிகப்பெரிய உருவமாக இருந்தபடியால் ஏதேனும் கொடிய மிருகமாகத் தான் இருக்கவேண்டும் என்று கருதி, வில்லில் அம்பைப் பூட்டி மரத்தை நோக்கி பாணத்தை செலுத்தினான்.
அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து `ஐயோ… அம்மா' என்ற குரல் கேட்டது. ஏதோ ஒரு மிருகத்தின் ஓலம் கேட்கும் என்று எதிர்பார்த்தால் இப்படி மனிதனின் ஓலம் கேட்கிறதே… யாரையோ தவறுதலாக கொன்று விட்டோமோ என்று அஞ்சி மரத்தை நோக்கி விரைந்தான். அங்கு சென்று பார்த்தால் பதினாறு வயதையொத்த சிறுவன் ஒருவன் இவரின் அம்புக்கு பலியாகி வீழ்ந்து கிடந்தான்.
`இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்து விட்டதே' என்று பதைபதைத்த அரசன், உடனே காவலாளிகளை கூப்பிட்டு, `இவன் பெற்றோர் அருகே தான் எங்காவது இருக்க வேண்டும். உடனே கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டான். வீரர்கள் நாலாபக்கமும் விரைந்தனர். கடைசியில் ஒரு விறகுவெட்டி தம்பதியினரை அழைத்து வந்தனர்.
"இவர்கள் தான் அந்த பாலகனின் பெற்றோர். காட்டில் விறகு வெட்டி பிழைப்பது தான் இவர்கள் தொழில்" என்று மன்னனிடம் கூறினார்கள். மன்னன் அவர்களிடம் நடந்ததைக் கூறி, "என்னை மன்னித்து விடுங்கள். நான் வேண்டுமென்று உங்கள் மகனை கொல்லவில்லை. அறியாமல் நடந்த தவறு இது. போதிய வெளிச்சம் இல்லாததாலும் தூரத்திலிருந்து அம்பெய்ததாலும் மரத்தின் மீதிருந்தது ஏதோ ஒரு விலங்கு என்று எண்ணிவிட்டேன்…."
தான் சொன்னதைக் கேட்டு அவர்கள் சமாதானாக வில்லை என்று யூகித்துக் கொண்டான் அரசன். அடுத்த நொடி கைதட்டி தனது காவலர்களை அழைத்தவன் இரண்டு பெரிய தட்டுக்கள் கொண்டு வருமாறு கட்டளையிட்டான்.
அருகே நின்று கொண்டிருந்த அமைச்சரிடம், இரண்டு தட்டுக்களை அவர்கள் முன்பு வைக்கச் சொன்னான். தட்டுக்கள் வைக்கப்பட்ட பிறகு அதில் ஒரு தட்டில் பொற்காசுகளை கொட்டி தான் அணிந்திருந்த விலைமதிப்பற்ற ஆபரணங்கள் நகைகள், நவரத்தின மாலை, முத்தாரம் என அனைத்தையும் வைத்தான்.
பின்னர் தன் இடுப்பிலிருந்த உடைவாளை உருவி, அதை மற்றொரு தட்டில் வைத்தான். "மக்களை காக்கவேண்டிய நானே எனது குடிமகன் ஒருவன் உயிரிழக்க காரணமாகி விட்டேன். நான் தண்டிக்கப் படவேண்டியவன். பாதிக்கப்பட்ட உங்களிடமே தீர்ப்பை கூறும் வேலையை விட்டு விடுகிறேன்.
நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் இது தான். இதோ ஒரு தட்டு நிறைய பொற்காசுகள் விலைமதிப்பற்ற ஆபரணங்களும் இருக்கின்றன. அவற்றை எடுத்துக் கொண்டு என்னை மன்னியுங்கள்.
அப்படி மன்னிக்க விருப்பம் இல்லை என்றால், மற்றொரு தட்டில் இருக்கும் உடைவாளை எடுத்து என்னை வெட்டி வீழ்த்தி உங்கள் மகனைக் கொன்றதற்கு பழி தீர்த்துக் கொள்ளுங்கள்.." என்று தனது கிரீடத்தை கழற்றி மந்திரியிடம் கொடுத்து இந்த பெற்றோர் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான் அரசன்.
உடன் வந்த காவலர்களுக்கும் மந்திரி பிரதானிகளும் நடப்பதை பார்த்து திகைத்துப் போய் நின்றனர். அந்த விறகுவெட்டி நம் மன்னனை வெட்டிவிட்டால் என்ன செய்வது? மக்களுக்கும் மகாராணியாருக்கும் என்ன பதில் சொல்வது… செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.
சில நிமிடங்கள் மௌனத்திற்கு பிறகு விறகு வெட்டி பேச ஆரம்பித்தான்… "ஒன்று நான் இந்த ஆபரணங்களையும் பொற் காசுகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அல்லது மன்னரை கொல்ல வேண்டும்… அப்படித்தானே…?
நான் எதைச் செய்யப் போகிறேன் என்று அறிந்துகொள்ள அனைவரும் படபடப்புடன் காத்திருக்கிறீர்கள் சரி தானே? நான் விரும்புவது இந்த பொற்காசுகளையோ ஆபரணங்களையோ அல்ல… என் மகனே போய்விட்டபிறகு இவற்றை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்..?
"ஐய்யய்யோ'' அப்படியென்றால் இவன் மன்னரை கொல்லப் போகிறான் போலிருக்கிறதே எல்லாரும் வெடவெடத்து போனார்கள். விறகுவெட்டி தொடர்ந்தான்…
"நீங்கள் நினைப்பது போல நான் மன்னரைக் கொல்ல விரும்பவில்லை. அவர் அளிக்கும் பொன் பொருளையும் விரும்பவில்லை. நான் விரும்பியது எதுவோ அது கிடைத்துவிட்டது. தான் செய்த தவறு குறித்து மன்னர் மனம் வருந்தவேண்டும் என்று விரும்பினேன். அவரோ வருந்திக் கண்ணீர் விட்டதோடு பெருந்தன்மையாக தனது உயிரையும் பதிலுக்கு தியாகம் செய்ய துணிந்துவிட்டார். அது ஒன்றே எனக்கு போதும்.
மன்னரை தண்டிப்பதால் என் மகன் எனக்கு மீண்டும் கிடைக்கப் போவதில்லை. ஆனால், இந்த நாடு ஒரு நல்ல மன்னனை இழந்துவிடும். நான் அப்படி செய்தால் என் மகனின் ஆன்மாவே என்னை மன்னிக்காது.
அதே நேரம் நான் பொன்னையும் பொருளையும் பெற்றுக் கொண்டால் என் மகனின் உயிருக்கு நான் விலைபேசியது போலாகிவிடும்.
மன்னர் தான் செய்த தவறுக்கு உளப்பூர்வமாக மனம் வருந்தி சிந்திய கண்ணீரே போதுமானது. எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம்" என்று கூறி தன் மனைவியை அழைத்துக் கொண்டு தன் வழியே போய்விட்டான் விறகுவெட்டி. ஒரு விறகுவெட்டிக்கு இப்படி ஒரு பெருந்தன்மையா? இப்படி ஒரு ஞானமா என்று வியந்து போனார்கள் அனைவரும்.
இந்த கதை கூறும் நீதி...
அந்த மன்னன் தான் நாம். நாம் செய்யும் பாவங்கள் தான் அந்த கொலை. அந்த விறகுவெட்டி தான் இறைவன். இப்போது புரிகிறதா எப்படிப்பட்ட மனதுடன் பரிகாரம் செய்யவேண்டும் என்று.
பெரும் பாவத்தை செய்து பரிகாரம் செய்தால் போச்சு என்று ஆணவத்தால் பணத்தாலோ, ஆடம்பர யாகங்களாலோ, ஆண்டவனுக்கு வெள்ளி தங்க ஆபரணங்களை செலுத்தினாலும் சரி, அர்ச்சகரையோ, அல்லது அந்த ஆலயத்தை சார்ந்தவரை வேண்டுமானால் திருப்தி படுத்தலாம், ஆண்டவனை ஒரு நொடி கூட திரும்பி பார்க்க கூட வைக்க முடியாது.
ஆனால், இந்த கதையில் வரும் மன்னன் நிலையில் நின்று, ஆண்டவா, மனதுக்குள் வேறு எந்த சிந்தனையுமின்றி நீங்கள் செய்த தவறை, நினைத்து, அறியாமல் நடந்த தவறை எண்ணி வருந்தி மனமுறுகி, இனி எக்காலத்திலும் இதுபோல் நிகழாவண்ணம் நான் பார்த்துக் கொள்கிறேன். இந்த ஒரு முறை மன்னித்து விடு! என உளமுருகி மன்றாடி கேளுங்கள். ஆண்டவன் முன் நீங்கள் கண் மூடி மனம் வருந்தி வேண்டும் போது ஆண்டவன் உங்களை கண்திறந்து பார்ப்பான். கருணை புரிவான். இப்படி செய்யும் பரிகாரங்கள் தான் பலனளிக்கும்.
- உப்பை தரையில் சிந்தக்கூடாது.
- பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.
பொதுவாகவே வீட்டில் நிம்மதி இல்லை என்றால் கோவிலுக்கு சென்று, கடவுளை வழிப்பட்டு மனதை ஒரு நிலைப்படுத்தி வருவது பலரது வழக்கம். ஒரு சில விஷயங்களை வீட்டில் நாம் கடைப்படித்து வந்தாலும் அமைதி, செல்வம் மற்றும் இன்பம் என அனைத்தும் நிறைந்திருக்கும். அவற்றை பற்றி சற்று தெளிவாக பார்க்கலாம்.
* பணம் கொடுக்கல் வாங்கலை வீட்டின் வாசல் படியில் வைத்து செய்ய கூடாது.
* செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமையில் செய்து நல்லது.
* வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
* வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது.
* வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.
* எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.
* உப்பை தரையில் சிந்தக்கூடாது.
* காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிக்க செய்வது நல்லது.
* தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.
* வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்த்தால் செல்வம் பெருகும்.
* விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். `அணைப்பது' என்று கூற கூடாது.
* வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்க வேண்டும்.
* அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும்.
* பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.
* அமாவாசையன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.
* இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.
- அட்சதைக்கு முனை உடைபடாத பச்சரிசியை மட்டும் பயன்படுத்துவார்கள்.
- அட்சதை தூவுவதால் அங்கு தீய சக்திகள் விலகுகிறது.
திருமணம் போன்ற அனைத்து சுப காரியங்களிலும் அரிசியில் மஞ்சள் கலந்து, அட்சதை தயாரித்து, அதை தூவி ஆசீர்வாதம் செய்வது வழக்கமாக உள்ளது. யாகங்கள், ஹோமங்கள் ஆகியவற்றிலும் அட்சதை முக்கியமான பொருளாக இடம்பெறுகிறது. அட்சதைக்கு அரிசியை பயன்படுத்துவதற்கு பல முக்கியமான காரணங்கள் உள்ளன.
சங்க காலத்திற்கு முன்பிருந்தே நம்முடைய வழிபாடு, விழாக்கள் ஆகியவற்றில் அட்சதை பயன்படுத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

அட்சதை தூவி ஆசிர்வாதம் செய்தல்
* திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் மலர் தூவி ஆசிர்வாதம் செய்வதை விட, அட்சதை தூவி வாழ்த்துவது மிகவும் உயர்வானதாகும்.
* அட்சதை இல்லாத பட்சத்தில் மலர்களை பயன்படுத்தலாம். சமஸ்கிருதத்தில் அக்ஷதம் என்ற சொல்லுக்கு இடிக்கப்படாத அல்லது பாதிக்கப்படாத என்று பொருள்.
* அட்சதை தயாரிப்பதற்கு முனை உடைபடாத பச்சரிசியை மட்டும் பயன்படுத்துவார்கள்.
* அரிசியோடு, மஞ்சள், பசு நெய் சேர்த்து உருவாக்கப்படுவதற்கே அட்சதை என்று பெயர்.
* வெள்ளை அரிசியில், மஞ்சளும், நெய்யும் சேர்க்கும் போது அதில் தேவதைகளின் அம்சம் நிறைந்து காணப்படும். மணமக்கள் மீது தூவுவதன் அர்த்தம்
* இதை திருமணத்தின் போது மணமக்கள் மீது தூவுவதால், தேவதைகளே வந்து அவர்களை ஆசீர்வதிப்பதாக அர்த்தம்.
* அரிசி, மஞ்சள், நெய் மூன்றும் தெய்வங்களுக்கு இணையாக கருதப்படும் மங்கள பொருட்கள் ஆகும். இவை மூன்றையும் ஒன்றாக
சேர்க்கும் போது தானாக அதற்கு தெய்வீக தன்மை என்பது வந்து விடும்.
* அரிசி சந்திரனுக்குரிய தானியமாகும். மஞ்சள் குருவிற்குரிய நிறமாகும். நெய் மகாலட்சுமியின் அம்சமாகும். இவை மூன்றும் சேரும் இடத்தில் சுபிட்சம் இருக்கும். அது மட்டுமின்றி அரிசிக்கு உணர்வுகளையும், சக்திகளையும் ஈர்க்கும் சக்தி உண்டு.
* ஆன்மிக ரீதியாக அரிசியை உடலுடனும், மஞ்சளை ஆன்மாவுடனும், நெய்யை தெய்வத்துடனும் ஒப்பிடுவார்கள்.
மணமக்களை வாழ்த்துதல்
* உடல், ஆன்மா ஆகியவை தெய்வ சக்தியோடு இணைந்து மணமக்களை வாழ்த்துகிறோம் என்பதை குறிக்கவே அட்சதையை பயன்படுத்தி ஆசீர்வாதம் செய்கிறார்கள்.
* திருமாங்கல்யம் அணிவிக்கும் போது அட்சதை தூவுவதால் அங்கு தீய சக்திகள் விலகுகிறது.
* பொதுவாகவே அரிசியை கைகளால் தொட்டு கொடுக்கக் கூடாது என்று சாஸ்திரம் உள்ளது. அட்சதையையும் கைகளால் தொட்டு கொடுக்கக் கூடாது. அதனாலேயே ஒரு தட்டில் வைத்து, அட்சதையை கொடுக்கிறார்கள். இதனால் அதன் தெய்வீக தன்மை குறையாமல் இருக்கும்.
* அட்சதை என்பது செல்வ வளம், வரம், வம்ச விருத்திக்கு வழிவகுக்கும் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.
- விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
- பிரமோற்சவ விழா 13-ந்தேதி வரை கோலாகலமாக நடக்கிறது.
திருமலை:
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந்தேதி அங்குரார்ப்பணத்துடன் தொடங்கி 13-ந்தேதி வரை கோலாகலமாக நடக்கிறது. விழா ஏற்பாடுகள் குறித்து திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் தலைமையில் மறு ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு பிறகு நிருபர்களிடம் வீரபிரம்மன் கூறியதாவது:-
ஏப்ரல் 5-ந்தேதி திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வாகன சேவை தினமும் காலை 7 மணியில் இருந்து 10 மணிவரையிலும், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரையிலும் நடக்கிறது.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 9-ந்தேதி இரவு கருட வாகனம், ஏப்ரல் 10-ந்தேதி அனுமந்த வாகனம், ஏப்ரல் 13-ந்தேதி சக்கர ஸ்நானம் நடக்கிறது.
பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்குதல், கலாசார நிகழ்ச்சிகள், பாதுகாப்பு, குடிநீர், மோர், மலர் மற்றும் மின் விளக்கு அலங்காரம் போன்ற அனைத்து ஏற்பாடுகளை செய்ய அந்தந்தத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். வாகன சேவைக்கு முன்னால் பக்தி பஜனைகள் மற்றும் கோலாட்டங்கள் நடக்கிறது.
விழாவில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பக்தர்களை மீட்டு மருத்துவனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும். பக்தர்களுக்கு ராமகோடி புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும். போதுமான எண்ணிக்கையில் ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களை நியமித்து பக்தர்களுக்கு சேவை செய்யப்படும்.
ஏப்ரல் 17-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை ராம நவமி உற்சவம், ஏப்ரல் 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை வருடாந்திர தெப்போற்சவம் நடக்கிறது. இந்த விழாக்களும் வெகுவிமரிசையாக நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்று காலையில் பெரிய தேரோட்டம் நடைபெற்றது.
- பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை முட்டியது.
திருப்பரங்குன்றம்:
முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனி பெரு விழாவாகும். 15 நாட்கள் நடைபெறும் இந்த விழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு முருகப்பெருமான் தெய்வானையுடன் காலையில் பல்லக்கிலும், மாலையில் தங்க மயில் வாகனம், தங்க குதிரை வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல் வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதில் மதுரையில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் ஆகியோர் கலந்து கொண்டு முருகப்பெருமான் திருமணத்தை நடத்தி வைத்தனர். விழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்பாளை திருமண கோலத்தில் தரிசித்தனர்.
இதையடுத்து இரவு மீனாட்சி அம்மன் மற்றும் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்பாரி வாகனத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலையில் பெரிய தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் உற்சவர் சன்னதியில் முருகன் தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காலை 5.30 மணிக்கு முருகப்பெருமான் தேரில் எழுந்தருளினார். அங்கு கூடியிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிரிவலப்பாதை வழியாக ஆடி அசைந்து சென்றது பக்தர்களை பரவசப்படுத்தியது. அப்போது பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை முட்டியது.
தேரின் முன்பாக சிறிய தேரில் விநாயகர் சென்றார். விழாவில் திருப்பரங்குன்றம், அவனியாபுரம், நிலையூர், கூத்தியார்குண்டு, தனக்கன் குளம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், உள்ளூர், வெளியூர் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரை வரம் பிடித்து இழுத்து சுவா மியை தரிசனம் செய்தார்கள்.
தேரோட்டத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணி செல்வம், பொம்ம தேவன், சண்முகசுந்தரம், ராமையா, கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்.
- அம்பாளின் கருவறைக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கோவில் தோற்றம்
தில்லை நடராஜர் ஆலயத்தை சுற்றி பல சிவாலயங்கள் உள்ளது. ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு வகையில் நடராஜர் ஆலயத்தோடு தொடர்பு கொண்டவைதான். இவற்றில் பல ஆலயங்கள் அற்புதங்கள் நிறைந்தவையாகவும் உள்ளது. அப்படி ஒரு ஆலயம்தான், தில்லைவிடங்கன் என்ற கிராமத்தில் உள்ள விடங்கேஸ்வரர் கோவில்.

தில்லைக்கு வலது கண், தில்லைவிடங்கன் கிராமம். மன்னர் காலத்தில் மாரிமுத்தாப்பிள்ளை என்ற தமிழ்ப் புலவர் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் தில்லை நடராஜர் ஆலயத்தில் நடக்கும் உச்சிகால பூஜையில் கலந்துகொண்டு தேவாரம், திருவாசகம் பாடுவதோடு, தான் இயற்றிய தமிழ் பாடல்களையும் இறைவன் முன்பாக பாடுவார். அவர் தில்லை நடராஜர் ஆலயத்திற்கு செல்லும்போது, தனது தோட்டத்தில் இருந்து வாழைப்பழம் எடுத்துச் செல்வார். இது ஒரு நாளும் தவறியது இல்லை.
ஒரு நாள் கடுமையான காற்றுடன் மழை பெய்தது. அதனால் தில்லை நடராஜர் கோவிலுக்கு எப்படிச் செல்வது என்ற கவலையில் ஆழ்ந்தார். ஒரு கட்டத்தில் ஈசனை மனதில் நினைத்துக் கொண்டு கோவிலுக்குச் செல்லத் தொடங்கினார். வழியில் கந்தமங்கலம் என்ற கிராமத்திற்கு வந்தபோது, மழையின் கடுமை அதிகமானது. இதற்கு மேல் செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டதால், அந்த கிராமத்திலேயே ஒரு ஓரமாக தங்கினார். சில மணி நேரங்களுக்குப்பிறகு மழை குறைந்ததும் மீண்டும் கோவிலை நோக்கி பயணித்தார்.
`நாம் செல்வதற்குள் உச்சிகால பூஜை முடிந்துவிடுமோ? ஈசனுக்கு வாழைக் கனியை கொடுக்க முடியாதோ?' என்ற கவலையோடு, `நமசிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்தபடியே கோவிலை அடைந்தார். அவரைப் பார்த்ததும் கோவில் அர்ச்சகர்கள், "வாருங்கள் புலவரே.. இறைவனுக்கு கனியை கொடுத்து விட்டு எங்கே சென்றீர்கள்? உச்சிகால பூஜை தொடங்கப்போகிறது. வந்து சாமியை தரிசனம் செய்யுங்கள்" என்றனர்.
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த புலவர், `சுவாமி என்ன சொல்கிறீர்கள்? நான் மழையால் பல மணி நேரம் ஓரிடத்தில் ஒதுங்கி நின்று விட்டு இப்போதுதான் ஆலயத்திற்கு வருகிறேன். வழக்கமாக நான் அளிக்கும் வாழைப்பழம் கூட என் கையில்தான் உள்ளது. ஆனால் ஏற்கனவே நான் வந்து பழம் தந்ததாக நீங்கள் சொல்கிறீர்களே?" என்று கேட்டார்.
அர்ச்சகர்களும் ஆச்சரியப்பட்டுப் போயினர். வந்தது ஈசன்தான் என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டனர். உடனே இறைவனின் மகிமையை எண்ணி, கண்ணீர் வடித்த புலவர், இறைவனை நினைத்து மனமுருகப் பாடினார். பின்னர் அவர் இதுபற்றி தன் ஊர் மக்களிடம் கூறினார். ஆனால் அவர்கள் யாரும் அதை நம்பத் தயாராக இல்லை.
அன்று இரவு புலவர் உறங்கியதும், அவரது கனவில் தோன்றிய ஈசன், "என்னைக் காண நீ தினம் தினம் பல சிரமங்களை சந்தித்து தில்லை வருகிறாய். இனி நீ அப்படி தில்லை வரவேண்டிய அவசியம் இல்லை. தில்லைவிடங்கனில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிச்சாவரம் வனப்பகுதியில் நான் இருக்கிறேன். என்னைக் கொண்டு வந்து இங்கே வைத்து வழிபாடு செய். உனக்கு எல்லா வளங்களும் கிடைக்கும்" என்றார்.
மறுநாள் காலை இதுபற்றி ஊர் மக்களிடம் புலவர் தெரிவித்தார். ஆனால் யாரும் நம்பவில்லை. வழக்கம்போல அவரை எள்ளி நகையாடினர். இருப்பினும் மனம் தளராத அந்த புலவர், ஈசன் சொன்ன இடத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கே ஒரு சிவலிங்கம் இருப்பது கண்டு மகிழ்ந்தார். ஆனால் அந்த சிவலிங்கம் பெரியதாக இருந்ததால், எப்படி இங்கிருந்து தூக்கிச் செல்வது என்று தவித்தார்.
அப்போது அருகில் மரத்தை வெட்டும் சத்தம் கேட்டு, அங்கு சென்றார். அங்கே சிலர் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் சிவலிங்கத்தை, தன் ஊருக்கு கொண்டு செல்ல உதவும்படி கேட்டார். ஆனால் அவர்களோ, `அப்படிச் செய்தால் எங்களுக்கு ஒரு நாள் கூலி போய்விடும். அந்த கூலியை நீங்கள் தருவதாக சொன்னால், நாங்கள் சிவலிங்கத்தை எடுத்து வந்து உங்கள் ஊரில் கொடுக்கிறோம்" என்றனர்.
அவரும் சரி என்று கூற, அவர்கள் சிவலிங்கத்தை தில்லைவிடங்கன் கிராமத்தில் கொண்டு வந்து சேர்த்தனர். அப்போதுதான் ஊர் மக்கள், புலவரை நம்பினர். ஊர் மக்கள் அனைவரும் புலவரிடம் மன்னிப்பு கேட்டனர். பின்னர் சிவலிங்கத்தை தூக்கி வந்தவர்களுக்கு ஊதியம் கொடுக்க அவர்களைத் தேடியபோது, அவர்கள் அங்கே இல்லை. அந்த சிவலிங்கத்தை தூக்கி வந்தவர்கள் அனைவரும் தேவலோகத்தைச் சேர்ந்த தேவர்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டனர்.
முதல் வேலையாக அந்த சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஒரு சிறிய ஆலயம் அமைத்தனர். அந்த ஊரிலேயே இருந்த ஒரு சிற்பி, அம்பாள் சிலை வடிக்கத் தொடங்கினார். அதையும் அதன் அருகிலேயே பிரதிஷ்டை செய்தனர். நாளடைவில் பல்வேறு சன்னிதிகளுடன் இந்த ஆலயம் விரிவாக்கம் பெறத் தொடங்கியது என்று இந்த ஆலயம் உருவான வரலாறு சொல்லப்படுகிறது.

ஆலய அமைப்பு
கிழக்கு பார்த்தபடி அமைந்த இந்த ஆலயம், மகா மண்டபத்தின் வெளியே நந்தி, பலிபீடம், இடதுபக்கம் நவக்கிரக சன்னிதியைக் கொண்டுள்ளது. மகா மண்டபத்தின் மேலே சிவன்-பார்வதியும், அவர்களின் இருபுறமும் நந்தியும் சுதைச் சிற்பங்களாக காட்சி தருகின்றனர். அவர்களை வணங்கி ஆலயத்திற்குள் நுழைந்தால், இடப்பக்கம் நால்வர் சன்னிதி, தொடர்ந்து விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், நடராஜர் - சிவகாம சுந்தரி சன்னிதிகளும், வலது பக்கம் ஒரே சன்னிதியில் சூரியன் - சந்திரன், பைரவர், சனீஸ்வரன் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர். ஆலயத்தில் தெற்கு நோக்கி பர்வதாம்பாள் நான்கு திருக்கரங்களோடு காட்சி தருகிறார். கருவறைக்குள் வட்டவடிவிலான பீடத்தில் விடங்கேஸ்வரர் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
இந்த ஆலய இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்கிறார்கள். திருமணத் தடை உள்ள பெண்கள், வளர்பிறையில் வரும் ஞாயிற்றுக்கிழமையில் காலை 7 மணி முதல் 9 மணிக்குள், அம்பாளின் திருப்பாதத்தில் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, மலர்கள் சமர்ப்பித்து மஞ்சள் கட்டிய திருமாங்கல்யக் கயிற்றை அம்மனின் பாதத்தில் வைத்து பூஜிப்பார்கள். இதனால் திருமணம் விரைவில் நடந்தேறும் என்கிறார்கள்.
பொதுவாக கருவறைக்குள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் திருமணத் தடை என்ற கூட்டுப் பிரார்த்தனைக்காக மட்டும், அம்பாளின் கருவறைக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
பேச்சுக் குறைபாடு உள்ளவர்கள், தொடர்ச்சியாக ஐந்து மாதங்கள் திங்கட்கிழமை தோறும் காலையில் இவ்வாலயம் வந்து, அப்போது இறைவனுக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளைக் கண்டு, அபிஷேக தீர்த்தத்தை வாங்கி பருகினால், பேச்சுக் குறைபாடு நீங்கும் என்கிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தம்பதியராக இங்கே வந்து மகா மண்டபத்தில் அமர்ந்து `ஓம் நமசிவாய' என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.
இவ்வாலயத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப்படும். மேலும் வாரந்தோறும் திங்கட்கிழமை பூஜை, பிரதோஷம் ஆகிய தினங்களும் சிறப்பாக வழிபடப்படும்.
அமைவிடம்
சிதம்பரத்தில் இருந்து கிள்ளை செல்லும் பேருந்தில் சென்றால் தில்லைவிடங்கன் கிராமத்தை அடையலாம்.
- ருத்ராட்சத்தை, சிவனுடைய கண்கள் என்று கூறுவர்.
- ருத்ராட்சத்திற்கு 14 வித பெயர்கள் உண்டு.
ருத்ராட்சத்தை, சிவனுடைய கண்கள் என்று கூறுவர். ருத்ராட்ச மரத்தை, ஒரு தெய்வீக விருட்சம் எனப் போற்றுவார்கள். அம்மரத்துப் பழத்தின் உள்ளிருக்கும் விதையே, ருத்ராட்சம். சொல்லுக்கடங்கா மகிமை வாய்ந்த ருத்ராட்சத்தை, யாவரும் அணிதல் அவசியம். ருத்ராட்சத்திற்கு 14 வித பெயர்கள் உண்டு. `யோகராசா' என்னும் நூலை ஆராய்ந்தால், பல உண்மைகள் புரியும்.
ஒரு முக ருத்ராட்சம்:- சிவன். இதை அணிந்தால் பிரம்மஹத்தி தோஷம் முதல் எல்லா தோஷங்களும் நிவர்த்தியாகும். இதை அணிந்திருப்பவரை எந்தவிதமான எதிர்ப்பாலும் வெற்றிகொள்ள முடியாது.
இரு முக ருத்ராட்சம்:- இதற்கு `ஹர சவுரி' என்று பெயர். ஹோகத்தி முதலிய தோஷங்கள் விலகும்.
மூன்று முக ருத்ராட்சம்:- இதற்கு `அக்னி ருத்ராட்சம்' என்று பெயர். இதை அணிந்தால் பருத்திப் பொதியில் நெருப்புப் பற்றினால் பொசுங்கி விடுவதுபோல, மூன்று பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கும்.
நான்கு முக ருத்ராட்சம்:- இதற்கு `தத்தாத்ரேயர்' என்று பெயர். இதை அணிந்தவர்களுக்கு மனிதனைக் கொன்ற பிரம்மஹத்தி நிவர்த்தியாகும்.
ஐந்து முக ருத்ராட்சம்:- இதை `காலக்னி' என்று கூறுவர். இது ஜீரண சக்தியை உண்டாக்கும். குடிப்பழக்கம் முதலிய செய்யத் தகாத விஷயங்களால் ஏற்பட்ட பாவங்கள் விலகும்.
ஆறு முக ருத்ராட்சம்:- இதனை `ஷண்முக ருத்ராட்சம்' என்பர். இதை அணிந்தால் கருவை அழித்த பாவம் நீங்கும்.
ஏழு முக ருத்ராட்சம்:- `ஆனந்த ருத்ராட்சம்' என்பது இதன் பெயர். இதை அணிவர்களுக்கு ஐஸ்வர்யம் நிலைக்கும்.
எண் முக ருத்ராட்சம்:- இதனை `விநாயகர் ருத்ராட்சம்' என்பர். பொய், களவு, சூது போன்ற பஞ்சமா பாதகங்கள் செய்த பாவம், இதனை அணிவதால் குறையும்.
ஒன்பது முக ருத்ராட்சம்:- 'பைரவ ருத்ராட்சம்' என்று பெயர். இதையணிந்தால் சிவலோக பதவி கிட்டும்.
பத்து முக ருத்ராட்சம்:- இதற்கு 'விஷ்ணு' என்று பெயர். இதை அணிந்தால் பல்வேறு தோஷங்கள் அகலும்.
பதினோரு முக ருத்ராட்சம்:- `ஏகாதச ருத்ராட்சம்' என்பது இதன் பெயர். இதையணிந்தால் பல யாகங்களைச் செய்த புண்ணியம் கிடைக்கும்.
பன்னிரண்டு முக ருத்ராட்சம்:- இதனை `அர்க்க ருத்ராட்சம்' என்பர். இதனை அணிந்தால் பல புண்ணிய நதிகளின் நீராடிய பலன் கிடைக்கும். நீராடும் தண்ணீரும் கூட இந்த ருத்ராட்சத்தால் புனிதத்துவம் பெறும்.
பதின்மூன்று முக ருத்ராட்சம்:- `காம ருத்ராட்சம்' இதன் பெயர். இது எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும். நினைத்தது நினைத்தபடி சித்திக்கும்.
பதினான்கு முக ருத்ராட்சம்:- இதற்கு `ஸ்ரீகண்ட ருத்ராட்சம்' என்று பெயர். இதை அணிபவர்கள் தங்களின் குலத்திற்கு பெருமை சேர்ப்பார்கள்.






