என் மலர்
வழிபாடு
- கருவறையில் கருடன் அமிர்த கலசத்தை ஏந்தி காட்சி தருகிறார்.
- கருடன் ஐந்தரை அடி உயரத்தில் மிக கம்பீரமாகக் காட்சி தருகிறார்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், வெள்ளமசேரி என்ற சிறிய கிராமத்தில், சுமார் 1800 ஆண்டுகள் பழமையான கருடன் ஆலயம் உள்ளது. இதை 'கருடன் காவு' என்கின்றனர்.
பாம்புக் கடிக்கு இந்த ஆலயத்தில் ஒரு மண்டலத்திற்கு வழிபாடு செய்தால் பூரணமான குணம் ஏற்படும் என்பது நம்பிக்கை.
இங்கு கருவறையில் கருடன் தன் இரு கரங்களில் தன்வந்திரி பகவான் போன்றே அமிர்த கலசத்தை ஏந்தி காட்சி தருகிறார்.
இதே போன்று கருட பகவானுக்குரிய இன்னொரு அரிய ஆலயம், கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், கோலாதேவி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் கருடன் ஐந்தரை அடி உயரத்தில் மிக கம்பீரமாகக் காட்சி தருகிறார். ராமாயண காலத்தோடு தொடர்பு கொண்டதாகக் கருதப்படும் கோலாதேவி கருட சுவாமி ஆலயத்தை, ராமானுஜர் பிரதிஷ்டை செய்ததாகக் கூறுகின்றனர்.
சீதா தேவியை ஸ்ரீ ராம-லட்சுமணர் தேடிச் சென்றபோது ராவணனால் வெட்டப்பட்டு வீழ்ந்து கிடந்த ஜடாயுவைக் கண்டனர். இறந்த ஜடாயுவுக்கு ராமர் நீத்தார் கடன் நிறைவேற்றிய இடமே இந்த கோலா தேவி என்று இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.
- 108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற திருத்தலம்.
- திருமாலிருஞ்சோலை. மதுரைக்கு அருகே உள்ளது.
108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற திருத்தலம் திருமாலிருஞ்சோலை. மதுரைக்கு அருகே உள்ளது.
தென்திருப்பதி என்று போற்றப்படும் இக்கோயில் அழகர்கோவில் என்று வழங்கப்படுகிறது. இங்கு வற்றாத புனித தீர்த்தம் நூபுரகங்கை (சிலம்பாறு) எனப்படும். இங்கு ஆண்டு முழுவதும், மாதந்தோறும் ஒவ்வொரு விதமான திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதில் முக்கிய அம்சமாக கருதப்படும் திருவிழாக்களில் ஆண்டுதோறும் ஆனி மாதம் நடைபெறும் முப்பழ உற்சவ விழா.
முப்பழ உற்சவ விழாவில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, அலங்காரம் செய்யப்படும். தொடர்ந்து மா, பலா, வாழை ஆகிய முப்பழங்களும் ஒருசேர ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத கள்ளழகர் பெருமாளுக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து நெய்வேத்தியம் செய்யப்படும்.
இதேபோல இந்த கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலிலும் முப்பழ உற்சவ விழா நடக்கும்.
- ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும்.
- திருப்பாவாடை எனப்படும் தளிகை நிகழ்ச்சி நடைபெறும்.
ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் விழாக்களில் ஜேஷ்டாபிஷேகம் விழா முக்கியமான ஒன்றாகும்.
ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும்.
ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி காலை 6 மணிக்கு கருட மண்டபத்தில் இருந்து பட்டர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு வருவர் காவிரி ஆற்றில் 1 தங்கக் குடம், 28 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்படும் அங்கிருந்து காலை
7 மணிக்கு தங்கக் குடத்தில் உள்ள புனித நீர் யானை மீது வைத்தும் 28 வெள்ளிக் குடங்களைத் தோளில் சுமந்தும் அம்மா மண்டபம் சாலை, ராஜகோபுரம் வழியாக கோயிலுக்கு எடுத்து வரப்படும்.
ஜேஷ்டாபிஷேகத்தின் மறுநாள் காலை திருப்பாவாடை எனப்படும் தளிகை நிகழ்ச்சி நடைபெறும். அப்போது, மூலஸ்தானத்துக்கு எதிரே உள்ளே மண்டபத்தில் தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெருமளவில் சமர்ப்பிக்கப்படும் அன்ன பிரசாதத்தில் பலாச்சுளை, தேங்காய், மாங்காய், வாழைப்பழம், நெய் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் சேர்க்கப்படும். பெரிய பெருமாளுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
- சுமார் 2,000 ஆண்டுகள் பழைமையானது.
- நெல்லையப்பர் தேர் தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர்.
திருநெல்வேலியில் மிகவும் பிரசித்திபெற்ற பழைமையான சைவத் திருத்தலமாக நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் விளங்குகிறது. இந்த திருத்தலம் சுமார் 2,000 ஆண்டுகள் பழைமையானது.
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவத் தொண்டாற்றிய திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சைவத் தலம். இந்தக் கோயிலில் உள்ள மூலவர், `நெல்லையப்பர்', `சுவாமி வேணு நாதர்', `நெல்வேலி நாதர்' என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
இந்த கோயிலில் ஆனித் திருவிழாவும், ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவும் முக்கியமான வைபவங்களாக நடை பெற்று வருகின்றன. ஆனிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நடப்பது திருத்தேரோட்டம். விழாவின் 9-ம் நாளில் நடக்கும் இந்த தேரோட்டம் மிகச் சிறப்பானது.
இக்கோயில் நெல்லையப்பர், அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் என ஐந்து தேர்கள் உள்ளன. இதில் நெல்லையப்பர் தேர் தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர் என்னும் பெருமையைக் கொண்டதாகும். சுமார் 70 அடி உயரமும், 450 டன் எடையுடன் மிகவும் கம்பீரமாக இந்த தேர் காணப்படும். மிகச் சிறப்பான தேர் விழா இன்று.
- இன்று பவுர்ணமி.
- திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கோவில் தேரோட்டம்
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, ஆனி 7 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை.
திதி: சதுர்த்தசி காலை 7.44 மணி வரை. பிறகு பவுர்ணமி.
நட்சத்திரம்: கேட்டை இரவு 8.58 மணி வரை. பிறகு மூலம்.
யோகம்: மரண, அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று பவுர்ணமி. சோழவந்தான் ஸ்ரீஜெனகை மாரியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருக்கோளக்குடி ஸ்ரீசிவபெருமான் வெள்ளி விருஷப சேவை. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி தெப்பம். திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர், சாத்தூர் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் கோவில் தேரோட்டம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் குசாம்பிகை புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-நட்பு
மிதுனம்-நலம்
கடகம்- நன்மை
சிம்மம்-பக்தி
கன்னி-தனம்
துலாம்- சோர்வு
விருச்சிகம்-சாதனை
தனுசு- புகழ்
மகரம்-சிந்தனை
கும்பம்-மகிழ்ச்சி
மீனம்-திறமை
- திருப்பணி செய்து பலம் மிக்கதாக மாற்றியவர்கள் 5 அடியார்கள்.
- திருச்செந்தூர் ஆலயத்தின் பகுதியிலேயே மூவர் சமாதி உள்ளது.
திருச்செந்தூர் ஆலயத்தை திருப்பணி செய்து பலம் மிக்கதாக மாற்றியவர்கள் 5 அடியார்கள். அவர்களில் மூவருக்கு திருச்செந்தூர் ஆலயத்தின் பகுதியிலேயே சமாதி உள்ளது.பெரும்பாலான ஆலயங்கள், கடற்கரையில் இருந்து கொஞ்சம் தொலைவிலேயே அமைக்கப்பட்டிருக்கும். கட்டிடத்தின் பலம் கருதியும் இதுபோல் செய்வார்கள்.
ஆனால் முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் செந்திலாண்டவர் திருக்கோவில், கடற்கரையில் இருந்து வெறும் 67 மீட்டர் தொலைவில்தான் அமைந்திருக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் 133 அடி உயரமுள்ள திருக்கோயிலின் ராஜகோபுரம் இருப்பதும் கடற்கரையில் இருந்து வெறும் 140 மீட்டரில் தான். எல்லாவற்றையும் விட மிகப்பெரிய வியப்பு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலின் கருவறை இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும் கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் அமைய பெற்றுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குறித்த தகவல்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. அதன்படி இந்த ஆலயம் கட்டப்பட்டு சுமார் 3000 ஆண்டுகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த ஆலயத்தை கட்டியவர்கள் யார் என தெரியவில்லை என்றாலும் கூட இந்த ஆலயத்தை திருப்பணி செய்து பலமிக்கதாக மாற்றியவர்கள் ஐந்து அடியார்கள். அவர்களில் மூவருக்கு திருச்செந்தூர் ஆலயத்தின் பகுதியிலேயே மூவர் சமாதி உள்ளது. மற்ற இருவருக்கும் வேறு பகுதிகளில் சமாதி இடம் பெற்றுள்ளது.
முதல் மூவர்களான மௌனசுவாமி, காசிசுவாமி, ஆறுமுகசுவாமி ஆகிய மூவருக்கும் திருச்செந்தூர் கோவில் அருகிலேயே உள்ளது.
கோயில் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள நன்னீர் ஊற்று என்றழைக்கப்படும் நாழிக்கிணறு முருகப்பெருமானால் உருவாக்கப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன.

இந்த நாழிக்கிணற்றின் தென் பகுதியில் தான் மௌனசுவாமி, ஆறுமுகசுவாமி,காசிசுவாமி ஆகியோரின் சமாதி அமைந்திருக்கிறது. இந்த சமாதியில் தினமும் பூஜைகளும் அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன.
நான்காவதாக வள்ளிநாயக சுவாமியின் ஜீவ சமாதி திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரத்தில் வடக்கு வெளிப்பிரகாரத்தில் இருந்து சரவணப் பொய்கை செல்லும் பாதையில் வலப்புறத்தில் அமைந்துள்ளது.
ஐந்தாவது தேசியமூர்த்திசுவாமியின் ஜீவசமாதியை தரிசிக்க வேண்டும் என்றால் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் உள்ள ஆழ்வார்திருநகரி என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து ஆற்றைக் கடந்தோ அல்லது வேறு மார்க்கமாகவோ ஆழ்வார்தோப்பு என்ற ஊருக்கு செல்ல வேண்டும். அந்த ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள காந்திஸ்வரம் சிவன் ஆலயத்தின் பின்புறம் அமைந்துள்ளது தேசிய மூர்த்தி சுவாமிகளின் ஜீவசமாதி.
திருச்செந்தூர் முருகனை தரிசிக்க செல்பவர்கள் மூவர் சமாதியை பார்த்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் மற்ற இருவரது ஜீவசமாதியை பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதனால் திருச்செந்தூர் செல்வோர் முருகப்பெருமானின் ஆலய திருப்பணிகளை மேற்கொண்ட ஐவரின் ஜீவசமாதியை தரிசிக்கும் நல்ல வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
- ஆனி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார்.
- அரையர் என்றால் தலைவன் என்று பொருள்.
வைணவ ஆசாரிய பரம்பரையில் முதல் ஆச்சாரியார் ஸ்ரீ நாத முனிகள். அவர் 1200 வருடங்களுக்கு முன்னால் நம் தமிழ்நாட்டில் காட்டுமன்னார்குடி என்னும் ஊரில் ஆனி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார்.
வைணவத்துக்கும், ஆழ்வார்களின் தமிழ் பாசுரங்களுக்கும், தமிழ் பண்ணிசைக்கும் நாடகக் கலைக்கும், அவர் செய்த சேவை அளப்பரியது. இசைக் கலையையும் நாடகக் கலையையும் வளர்ப்பதற்காக அவர் செய்த இன்னொரு முக்கியமான விஷயம் அரையர் சேவை. அரையர் என்றால் தலைவன் என்று பொருள்.
திருமாலுக்கு அரையன் என்ற பெயர் உண்டு. ''அன்றாயர் குல மக்களுக்கு அரையன் தன்னை'' என்பது திருமங்கையாழ்வார் பாசுரம். அரையர், அறையர், விண்ணப்பம் செய்வார், பாடுவான், இசைக்காரர், தம்பிரான்மார் என்றெல்லாம் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.
முக்கியமான உற்சவங்களில் ஆழ்வார் பாசுரங்களை இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழால் ஓதப்பட வேண்டும் என்பதற்காகவே, இம்மூன்று கலைகளையும் அறிந்த, அரையர் மரபை உண்டாக்கினார் நாதமுனிகள் தன் காலத்தில் உருவாக்கினார்.
திருக்கோயில் உற்சவர் முன் நடைபெறும் அரையர் சேவையின் போது அரையர்கள் பஞ்சகச்சம் அணிந்து, அரையர் குல்லாய் எனப்படும் கூம்பு வடிவத் தொப்பியும் இறைவனுக்கு சாத்தப்பட்ட மாலையும் தனித்துவமாக அணிந்திருப்பர். காதுகளை மறைக்கும் வகையில் இரண்டு பட்டைகள் தொங்கும்.
குல்லாய் முழுவதும் சரிகை வேலைப்பாடுடன் அமைந்திருக்கும். அவர்களுக்கு பரம்பரையாக வந்த கைத்தாளமும் இத்தகு அரிய கலை வைணவக் கோயில்களில் மட்டும் காணப்படும். நாதமுனிகளின் அவதார உற்சவம் ஸ்ரீ ரங்கம், திருவல்லிக்கேணி, திருப்பதி முதலிய எல்லா கோவில்களிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவதோடு ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பஜனை மடங்களிலும், வைணவர்கள் இல்லங்களிலும் அனுசரிக்கப்படும்.
- சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருப்பதி ஸ்ரீ ஏழு மலையப்பன் புஷ்பாங்கி சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆனி-6 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திரயோதசி காலை 7.40 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம்: அனுஷம் இரவு 6.25 மணி வரை பிறகு கேட்டை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழு மலையப்பன் புஷ்பாங்கி சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள், மதுராந்தகம் ஏரி காத்த ஸ்ரீ கோதண்டராமர் கோவில்களில் சுவாமி புறப்பாடு. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் தங்க கைலாச வாகனத்திலும், அன்னை ஸ்ரீ காந்திமதியம்பாள் தங்கக் கிளி வாகனத்திலும் பவனி. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி வெண்ணைதாழி சேவை. திருக்கோளக்குடி கண்டதேவி, காணாடுகாத்தான் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் தேரோட்டம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நற்செயல்
ரிஷபம்-லாபம்
மிதுனம்-வெற்றி
கடகம்-திறமை
சிம்மம்-தேர்ச்சி
கன்னி-பொறுமை
துலாம்- கடமை
விருச்சிகம்-உழைப்பு
தனுசு- பொறுப்பு
மகரம்-சாந்தம்
கும்பம்-தாமதம்
மீனம்-முயற்சி
- விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம்.
- மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாகும்.
சிவனுக்குரிய எட்டு வகையான விரதங்களில் பிரதோஷ விரதமும் ஒன்று. திரியோதசியும் சதுர்த்தசியும் இணையும் நாளை பிரதோஷம் என்கிறோம். வளர்பிறை, தேய்பிறை என மாதத்திற்கு இரண்டு பிரதோஷங்கள் வீதம் வருடத்திற்கு மொத்தம் 24 பிரதோஷங்கள் வருகிறது. தினமும் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு உள்ள 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம். தினமும் வருவதற்கு நித்ய பிரதோஷம் என்று பெயர்.
அப்படி வரக்கூடிய பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் அவர்களுடைய கோவிலுக்குச் சென்று அவரை வழிபடுவது என்பது மிகவும் சிறப்பான ஒன்று.
பிரதோஷ வேளையில் சிவனை வழிபடுவதால் நமது முற்பிறவி குற்றங்கள், சகல தோஷங்கள் நீங்கி நலம் கிடைக்கும். பாவம் விலகி புண்ணியம் சேரும். வறுமை அகலும். பயம், மரண வேதனை நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மகப்பேறு பெறுவர். பிறவி ஒழித்து முக்தி பேற்றினை அடைவர். கல்வியில் மேன்மை பெறுவார்கள்.
இன்று ஆனி ஆனி மாத வளர்பிறை பிரதோஷ தினம் என்பதால் திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள நந்தியம்பெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சிவபெருமானை வழிபட்டால் தோஷங்கள் விலகி துன்பங்கள் நீங்கி நல்லது நடக்கும்.
- துவாதசியும் திரயோதசியும் சேர்ந்து வரும் பிரஷத்தையே திவ்ய பிரதோஷம் என்பார்கள்.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறையில் திரயோதசி தினத்தன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை, பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் சிவபெருமானை வழிபட்டால் தோஷங்கள் விலகி துன்பங்கள் நீங்கி நல்லது நடக்கும் என்பது ஐதீகம். பிரதோஷ கால நேரத்தில் நந்திக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடத்துவார்கள்.
அபிஷேகத்துக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டால் அபரிமிதமான பலனைப்பெற முடியும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதிலும் ஒவ்வொரு மாதமும் எந்த கிழமைகளில், எந்த திதி சேர்க்கையுடன் பிரதோஷம் வருகிறது என்பதை பொருத்து பலன்கள் அமையும்.
அந்த வகையில் இன்றைய பிரதோஷம் திவ்ய பிரதோஷம் ஆகும். துவாதசியும் திரயோதசியும் சேர்ந்து வரும் பிரஷத்தையே திவ்ய பிரதோஷம் என்பார்கள்.
இந்த பிரதோஷத்தில் வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இன்று மாலை சிவாலயங்களுக்கு சென்று திருவாசகம் பாடி, வில்வ இலை சாத்தி, 16 தீபம் ஏற்றி வழிபட்டால் அந்த பலனை பெற முடியும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- மழை எதிரொலியால் ஓடைகளில் குளிக்க தடை.
- இரவில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவி லுக்கு அமாவாசை, பவுர்ண மிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்தில் 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
அந்த வகையில் பிரதோ ஷம், ஆனி மாத பவுர்ண மியை முன்னிட்டு இன்று முதல் வருகிற 22-ந்தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. பிரதோஷ நிகழ்ச்சியில் பங் கேற்க சென்னை, நெல்லை, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு நள்ளிரவு முதல் வருகை தந்தனர்.
வானம் மேக மூட்டத்துடன் மழை பெய்வது போன்ற சூழல் நிலவியதால் குறைந்த அளவிலான பக்தர்களே வந்திருந்தனர். இதையடுத்து காலை 6.15 மணிக்கு வனத்துறை கேட் திறந்துவிடப்பட்டது. குளுமையான சூழலால் பக்தர்கள் சிரமமின்றி மலையேறி சென்றனர். தற்போது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதாலும், மழை பெய்தால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதாலும், அப்படியே வந்தாலும் கோவிலுக்குச் செல்ல முடியாமல் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும் பக்தர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருந்தது.
இன்று மாலை சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இரவில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது என்றும், தரிசனம் முடிந்து திரும்பி வருபவர்கள் ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது என வனத்துறையினர் தெரி வித்துள்ளனர்.
நாளை மறுநாள் (21-ந் தேதி) ஆனி மாத பவுர்ணமி நாளில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்ட நல்லடியார்களின் விருப்பம் எதுவாக இருக்கும்?
- மனிதர்கள் விரும்பும் அந்த சொர்க்கத்தின் பாதை எளிதாக இருப்பதில்லை.
ஏக இறைவன் அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்ட நல்லடியார்களின் விருப்பம் எதுவாக இருக்கும்?
"இந்த உலக வாழ்க்கையின் நன்மைகளை விட மறுமை வாழ்க்கையில் இறைவனின் திருப்பொருத்தத்தை பெற்று சொர்க்கத்தில் வாழ வேண்டும்" என்பது தான்.
மனிதர்கள் விரும்பும் அந்த சொர்க்கத்தின் பாதை எளிதாக இருப்பதில்லை. இறைவனின் சோதனையுடன், உலக வாழ்வில் காணப்படும் தற்காலிக இன்பங்களின் சோதனைகளும் நிறைந்தது.
அதே நேரத்தில் திருக்குர்ஆன் (2:286) குறிப்பிடுகின்றது: 'அல்லாஹ் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக (பொறுப்புகளை சுமத்தி) சிரமப்படுத்துவதில்லை. அவர் சம்பாதித்த நன்மையின் பலனும் அவருக்கே; அவர் சம்பாதித்த தீமையின் விளைவும் அவருக்கே'.
இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால், இறைவனிடம் இருந்து நமக்கு சோதனைகள் வரும். ஆனால் அவை நமது சக்திக்கு மீறியதாக இருக்காது என்பது இறைவனின் உறுதிமொழியாகும். எனவே நமக்கு இறைவன் தரப்பில் இருந்து வரும் சோதனைகளைக் கண்டு நாம் கலங்காமல் அந்த இறைவனிடமே சரண் அடைந்து அந்த சோதனைகளில் வெற்றி பெற வேண்டும்.
திருக்குர்ஆன் வசனத்திலே, `யார் என்ன நன்மை சம்பாதித்தார்களோ அதன் பலன் அவருக்கே, அது போல அவர் தீமைகளை சாம்பாதித்திருந்தால் அதன் விளைவும் அவருக்கே' என்று அல்லாஹ் விளக்குகின்றான்.
இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நாம் நன்மைகள் செய்திருந்தால் அதன் பலனைக்கொண்டு நமக்கு வரும் சோதனைகளில் வெற்றி பெறலாம். அதே நேரத்தில் நாம் தீமைகள் செய்திருந்தால் அதற்குரிய பலனை நாம் அனுபவித்தே தீர வேண்டும் என்பதும் இறைவனின் கட்டளையாகும்.
இறைவனின் தரப்பில் இருந்து வரும் சோதனைகளை வென்று வாழ்வில் முன்னேற விரும்பும் மனிதன், அந்த இறைவனிடம் எப்படி பிரார்த்தனை செய்யவேண்டும் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு சுட்டிக்காட்டுகின்றது.
"எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து போயிருப்பினும், பிழை செய்திருப்பினும் நீ எங்களை குற்றம் பிடிக்காதே. எங்கள் இறைவனே! மேலும், எங்களுக்கு முன் சென்றோர் மீது நீ பாரத்தை சுமத்தியது போல் எங்கள் மீதும் பாரத்தை சுமத்தி விடாதே. எங்கள் இறைவனே! மேலும் நாங்கள் தாங்க இயலாத பாரத்தை எங்கள் மீது சுமத்தி விடாதே. எங்களைப் பொறுத்தருள்வாயாக! எங்களுக்கு மன்னிப்பு வழங்குவாயாக! எங்கள் மீது கருணை பொழிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலனாவாய்! (சத்தியத்தை) நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக வெற்றிகொள்ள எங்களுக்கு உதவி செய்வாயாக!".
பாவம் செய்த மனிதர்கள் இறைவனிடம் சரண் அடைந்து வணங்கி மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போது தனது கருணை உள்ளத்துடன் மனிதர்களின் பாவங்களை இறைவன் மன்னிக்கின்றான் என்று பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் இவ்வாறு விளக்குகின்றது:
"நன்கு அறிந்து கொள்ளுங்கள்: அறியாமையின் காரணமாக, ஏதேனும் பாவச் செயலை செய்துவிட்டாலும், உடனடியாக எவர்கள் பாவமன்னிப்புக் கோருகின்றார்களோ அவர்களின் பாவ மன்னிப்பை ஏற்றுக்கொள்வதே அல்லாஹ்வின் பொறுப்பாகும். ஆகவே அத்தகையோரை நோக்கி அல்லாஹ் தன் கருணைப் பார்வையை மீண்டும் திருப்புகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவுடையவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:17).
மேலும் அவர்கள் எத்தகையோர் எனில், மானக்கேடான செயலைச் செய்துவிட்டால் அல்லது (ஏதேனும் பாவங்கள் செய்து) தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டால், உடனே அவர்கள் அல்லாஹ்வை நினைத்து, தம் பாவங்களுக்காக அவனிடம் மன்னிப்புக் கோருவார்கள். (ஏனெனில்) அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னித்தருள்பவன் வேறு யார்? மேலும் தாம் செய்தவற்றில் அறிந்து கொண்டே பிடிவாதமாக இருக்கமாட்டார்கள். (திருக்குர்ஆன் 3:135).
பாவமன்னிப்பு கேட்பவர்களை அல்லாஹ் மன்னித்து அருள்கின்றான். அதோடு அவர்களுக்கு சிறந்த நற்கூலியையும் அளிக்கின்றான். அது என்ன தெரியுமா? சொர்க்கம்.
"இத்தகையோரின் கூலி, அவர்களுடைய இறைவனிடம் இருந்து கிடைக்கின்ற மன்னிப்பும், கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களுமாகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள். நற்செயல்கள் புரிவோருக்கான கூலி எத்துணை நன்றாய் இருக்கின்றது" (திருக்குர்ஆன் 3:136).
'நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை விட்டு மீளுபவர்களை நேசிக்கிறான்'. (திருக்குர்ஆன் 2:222)
'எல்லோரும் பாவம் செய்பவர்கள் தான். அவர்களில் சிறந்தவர் யார் எனில், தனது பாவத்திற்கு பரிகாரம் தேடுபவர்கள்தான்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இறைவனின் நல்லடியார்களே, நாம் அல்லாஹ் காட்டிய வழியில், கண்மணி நபிகள் நாயகம் அவர்கள் வாழ்ந்து காட்டிய பாதையில் நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். பாவங்களில் இருந்து விலகி நன்மைகளை செய்வோம். அறிந்தும் அறியாமலும் பாவம் செய்துவிட்டால், அதற்காக வருந்தி உடனே இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்போம். இதன் மூலம் நாம் சொர்க்கத்தின் பாதையில் நடைபோட முடியும்.






