என் மலர்tooltip icon

    கோவில்கள்

    மயிலாப்பூருக்கு மட்டுமல்ல சென்னை மாநகருக்கே இன்று அருள்புரியும் ஆதி சக்தியாக முண்டகக்கண்ணியம்மன் திகழ்ந்து கொண்டிருக்கிறாள்.
    சென்னை மாநகரின் இதயப் பகுதியாகத் திகழும் மயிலாப்பூருக்கு எத்தனையோ சிறப்பம்சங்கள் உள்ளன. மயிலையில் அம்மன் என்றதும் மறுவினாடி முண்டகக்கண்ணி அம்மன் தான் நம் மனக்கண் முன் வந்து நிற்பாள். மயிலாப்பூருக்கு மட்டுமல்ல சென்னை மாநகருக்கே இன்று அருள்புரியும் ஆதி சக்தியாக முண்டகக்கண்ணியம்மன் திகழ்ந்து கொண்டிருக்கிறாள். சென்னையில் உள்ள பழமையான பல ஆலயங்களுடன் ஒப்பிடுகையில் முண்டகக்கண்ணி அம்மன் அதைவிட பழம்பெருமையும், பல்வேறு சிறப்புக்களையும் கொண்டிருப்பது தெரியவரும்.

    சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் இருக்கும் பகுதி ஒரு குளமாக இருந்தது. அந்த குளக்கரையில் பல நூறு ஆண்டு வயதுடைய மிகப்பெரிய ஆலமரம் இருந்தது. குளத்துக்கு வரும் மக்கள் அந்த ஆலமரத்தடியில் அமர்ந்து செல்வது வழக்கம்.

    ஒரு நாள் அந்த ஆலமரத்தடியில் அந்த ஊர் பகுதி மக்கள் அமர்ந்து இருந்தபோது அம்மன் தன்னை சுயம்புவாக வெளிப்படுத்தி இருப்பதை கண்டனர். அவர்களில் ஒருவர் மீது அருள் வந்து அம்மன் தன்னை வெளிப்படுத்தி இருப்பதை தெரிவித்தாள். ஒரு தாமரை மொட்டு எப்படி இருக்குமோ, அப்படி அந்த சுயம்பு வடிவம் இருந்தது. கிராமமக்கள் அந்த சுயம்பு அம்மனை தங்களின் காவல் தெய்வமாக கருதினார்கள். எனவே அந்த ஆல மரத்தடியில் குடிசை ஒன்று அமைத்து அம்மனை வழிபடத் தொடங்கினார்கள்.

    அந்த அம்மனுக்கு ஒரு பெயர் வைக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்தபோது கிராமத்தில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு பெயரை கூறினார்கள். ஊரின் எல்லையில் இருப்பதால் எல்லை அம்மன் என்று பெயர் வைக்கலாம் என்று நினைத்தனர். அப்போது தாமரைக்குளக்கரையில் தோன்றியதாலும், தாமரை மொட்டு வடிவத்திலேயே தன்னை அம்மன் சுயம்புவாக வெளிப்படுத்திக் கொண்டதாலும் தாமரை என்ற தமிழ்ச் சொல்லுக்குரிய முண்டகம் என்பதை கொண்டு தொடங்க அம்மனை சேர்த்து முண்டகக்கண்ணி அம்மன் என்ற பெயர் வைக்கலாம் என்ற கருத்து எழுந்தது. அம்பிகையின் விருப்பமும் அதுவாகவே இருந்தது. இதனால் அந்த அம்மன் முண்டகக்கண்ணி அம்மன் என்று அழைக்கப்பட்டாள்.

    லஸ்சில் இருந்து சாந்தோம் செல்லும் அந்த சாலையில் சென்றால் இடதுபுறம் பெரிய ஆர்ச் நம்மை வரவேற்கும். அந்த வழியில் சென்றால் அது கோவில் அருகில் நம்மை கொண்டு போய் சேர்த்துவிடும். முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் மிக, மிக சிறிய கோவில். கிழக்குதிசை நோக்கிய இத்தலத்தில் பெரிய பெரிய பிரகாரங்களோ, பிரமாண்ட கோபுரங்களோ, விமானங்களோ இல்லை. சாலையோரத்தில் உள்ள இத்தலத்தின் ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. அந்த கோபுரத்தில் மகிஷாசுரமர்த்தினி, ராஜராஜேஸ்வரியின் சுதை வடிவங்கள் எழில்மிகு சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

    கோபுர தரிசனம் செய்து விட்டு உள்ளே நுழைந்தால் இடது பக்கம் 2 பெரிய அரச மரங்கள் நிற்பதை காணலாம். அதன் கீழ் விநாயகரும், நாகர் சிலைகளும் உள்ளன. விநாயகரை வணங்கி முண்டகக் கண்ணியம்மனை வழிபட செல்லலாம். அம்மன் ஓலைக்குடிசையில் இருக்கிறாள். அவளை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வசதிக்காக மகா மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மகாமண்டபத்தில் வரிசையில் நின்று முண்டகக்கண்ணி தாயை பொறுமையாக, கண்குளிர கண்டு நன்றாக தரிசனம் செய்யலாம். காலையில் சென்றால் அபிஷேகத்தையும் மாலையில் சென்றால் அலங்காரத்தையும் பார்க்கலாம்.

    வேப்பிலை பாவாடை உடுத்தி, வெள்ளி கைபொருத்தி, சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மனை தரிசிக்கும் போது மனதுக்கு நிறைவாக இருக்கும். சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளின் ஒரே அம்சமாக முண்டகக்கண்ணி அம்மன் திகழ்வதாக தல வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாந்த சொரூபியான இந்த அன்னை நாம் கேட்பதை எல்லாம் அருள்பவள். அவளிடம் மனம் உருக வேண்டினால் அவள் நிச்சயம் கைவிட மாட்டாள்.

    முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்தை 044-24981893 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பெறலாம்.

    கும்பகோணம் - சுவாமிமலை சாலையில் உள்ள புளியஞ்சேரிக்கு வடக்கே 3 கிலோமீட்டர் தூரத்தில் இன்னம்பர் திருத்தலம் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    நமக்கெல்லாம் தமிழ் இலக்கணத்தை வடித்துக் கொடுத்தவர் குறுமுனி அகத்தியர். அந்த அகத்தியருக்கு தமிழ் இலக்கணத்தை எடுத்துரைத்தவர் திருஇன்னம்பரில் எழுந்தருளி இருக்கும் ஈசன். இங்குள்ள ஈசனின் திருநாமம் ‘ஐராவதேஸ்வரர்’ என்பதாகும். அகத்தியருக்கு தமிழ் இலக் கணத்தைப் போதித்ததால் ‘எழுத்தறிநாதர்’ என்று அழைக்கப்படுகிறார். வடமொழியில் அட்சரபுரீஸ்வரர். ‘அட்சரம்’ என்றால் ‘எழுத்து’ என்று பெயர்.

    சுதன்மன் எனும் சிவபக்தன், இன்னம்பர் எழுத்தறிநாதரை அனுதினமும் வழிபட்டு வந்தான். அவன் இன்னம்பர் ஆலயத்தின் நிர்வாகக் கணக்கு வழக்குகளை கவனிக்கும் பொறுப்பிலும் இருந்தான். ஒருமுறை அந்தப் பகுதியை ஆண்டு வந்த மன்னன், இன்னம்பர் கோவிலின் வரவு-செலவுக் கணக்குகளை ஆய்வு செய்ய நினைத்தான். ஆகையால் அந்த கணக்கு வழக்குகளை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு சுதன்மனுக்கு கட்டளையிட்டான். சுதன்மனும் ஆலயக் கணக்கை எடுத்துக்கொண்டு போய் மன்னனிடம் சமர்ப்பித்தான். ஆனால் அந்தக் கணக்கு வழக்கு களில் மன்னனுக்கு ஐயம் ஏற்பட்டது.

    “நாளை பகல் பொழுதுக்குள் என்னிடம் சரியாக இன்னம்பர் ஆலயக் கணக்குகளைச் சமர்ப்பித்தாக வேண்டும்” என்று உத்தரவிட்டான் மன்னன்.

    ‘எந்த இடத்தில் கணக்கில் தவறு செய்தோம்’ என்று தெரியாத நிலையில் மனக்குழப்பம் அடைந்தான் சுதன்மன். பின்னர் எழுத்தறிநாதரின் கருவறை முன்பாக அமர்ந்து சிவபெருமானை நினைத்து துதித்தான். தன் வேதனையை, தனக்கு வந்திருக்கும் துன்பத்தை நீக்க வேண்டும் என்று ஈசனை பிரார்த்தித்தான். மறுநாள் மன்னனைச் சந்திக்கச் சென்றான்.

    அவனைப் பார்த்து வியந்த மன்னன், “இன்று காலையிலேயே இன்னம்பர் ஆலயக் கணக்கு வழக்கு களை என்னிடம் மிகச் சிறப்பாக ஐயமுற விளக்கி விட்டீர்களே. இப்போது எதற்காக வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டான்.

    சுதன்மனுக்கு ஒன்றுமே புரியவில்லை. குழப்ப நிலையிலேயே அரசவையை விட்டு வெளியே வந்தவன், எழுத்தறிநாதரின் ஆலயத்திற்குள் ஓரிடத்தில் படுத்து கண்ணயர்ந்தான். அப்போது அவன் கனவில் தோன்றிய ஈசன், “அன்பனே! நான்தான் உன் உருவத்தில் மன்னனிடம் சென்று நீ எழுதவேண்டிய கணக்கை எழுதி ஆலயக் கணக்கு வழக்குகளை ஒப்படைத்தேன்” என்றுக் கூறி மறைந்தார்.

    இறைவனின் அருட்கருணையை நினைத்து, தன் கடைசிக் காலம் வரை இன்னம்பர் கோவிலிலேயே வழிபட்டு, சிவலோகப் பதவி அடைந்தான் சுதன்மன்.

    ஆலயத்தில் மூலவர் எழுத்தறி நாதர், மிகப்பெரிய லிங்க வடிவில் கம்பீரமாக, கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக ருத்திராட்சப் பந்தலின் கீழ் அருள்புரிகிறார். கருவறை கோஷ்டத்தில் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். முருகப்பெருமான், தட்சிண கயிலாய லிங்கம், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, மகாலட்சுமி, சண்டேஸ்வரர், பைரவர் ஆகியோர் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்கிறார்கள். இத்தல எழுத்தறிநாதரை 27 நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.

    ஈசனின் கருவறை விமானம் கஜபிருஷ்ட வடிவில் இருக்கிறது. விமானத்தின் கிழக்குப் புறம் ஈசன், அம்பாள், சுதன்மன் மற்றும் மன்னனின் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள பைரவரை தேய்பிறை அஷ்டமி நாட்களில் பால், பன்னீர், விபூதி, சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் செய் தாலோ, அல்லது நெய்தீபம், மிளகு தீபம் ஏற்றி வழிபட்டாலோ கடன் பிரச்சினை, நோய்கள் விலகும் என்கிறார்கள்.

    இங்குள்ள நடராஜர் சிலை கடலில் இருந்து கிடைத்ததாகக் கூறுகிறார்கள். இவரை மாத திருவாதிரை நாட்களில் அபிஷேகம் செய்து வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் இல்லத்தில் நிறையும். எழுத்தறிநாதரின் வாசல் அருகே நான்கு திருக்கரங்களுடன் தெற்கு நோக்கியபடி சவுந்தரநாயகி என்னும் நித்திய கல்யாணி அம்மன் திருமணக் கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார். இந்த அன்னையை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சைப்பழ தீபம் ஏற்றி குங்குமார்ச்சனை செய்து வழிபட்டால் வெகு விரைவில் தடைகள், தோ‌ஷங்கள் விலகி திருமணம் நடைபெறும்.

    ஆலயத்திற்கு கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. ராஜகோபுரத்தின் வலதுபுறம் தெற்கு நோக்கியபடி நான்கு திருக்கரங்களுடன் கையில் ஜெபமாலையை ஏந்தி தவக்கோலத்தில் மற்றொரு அம்பாளான ‘சுகந்த குந்தளாம்பிகை’ அருள்பாலிக்கிறாள். ‘அழகிய மணம் பொருந்திய கூந்தலைக் கொண்டவள்’ என்பது இதன் பொருள். ‘பூங்கொம்பு நாயகி’ என்றும் அன்னையை அழைக்கிறார்கள். மகா மண்டபத்தில் நவக்கிரகங்கள் உள்ளன. கஜலட்சுமி, பிட்சாடனர், காட்சி கொடுத்த நாதர், மகாலிங்கேஸ்வரர், காசி விஸ்வநாதர் - விசாலாட்சி சன்னிதிகளும் உள்ளன. செண்பக மரம் இந்த ஆலயத்தின் தல மரமாக உள்ளது.

    சுதன்மனுக்கும், அகத்தியருக்கும் முறையே கணக்கு, இலக்கணங்களை முறைப்படுத்தி இத்தல ஈசன் அருளியதால் இத்தலத்தில் அனுதினமும் வித்யாப்பியாசம் செய்விக்கிறார்கள். குழந்தைகளை அழைத்துவந்து அம்மையப்பனை வழிபட்டு, பின்னர் பூ காம்பினால் அல்லது நெல்லினால் சிவாச்சாரியார் குழந்தைகளின் நாக்கில் ‘ஓம் அட்சரபுரீஸ்வராய நமஹ’, ‘ஓம் அகத்தியாய நமஹ’, ‘ஓம் சரஸ்வதியே நமஹ' என எழுதுகிறார். இப்படிச் செய்வதால் குழந்தைகள் படிப்பில் இருக்கும் மந்தநிலை மாறி நன்றாக படிப்பார்கள் என்பது நம்பிக்கை. வித்யாப்பியாசம் என்பது இந்த ஆலயத்தில் அனுதினமும் நடைபெற்றாலம், சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாட்களில் குழந்தைகளை கூட்டி வந்து ஈசனை வழிபட்டு வித்யாப்பியாசத்தை தொடங்குவது அதிக அளவில் நடக்கிறது.

    அமைவிடம்

    கும்பகோணம் - சுவாமிமலை சாலையில் உள்ள புளியஞ்சேரிக்கு வடக்கே 3 கிலோமீட்டர் தூரத்தில் இன்னம்பர் திருத்தலம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் மிக அருகாமையில் திருப்புறம்பயம் சாட்சிநாதர் ஆலயமும் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து வடமேற்கே 6 கிலோமீட்டர் தூரம் சென்றால் இன்னம்பர் திருத்தலத்தை அடையலாம்.

    ஆலய பிரகார வலம்

    ஆலயத்தில் இருக்கும் பிரகாரத்தை வலம் வருவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இறைவனை வழிபட்டு முடித்ததும், ஆலயத்தை பிரகாரம் சுற்றி வருவார்கள். பரிகாரத்திற்காக பிரகாரம் சுற்றுவதும் வழக்கமாக இருந்தது. பிரகாரம் வரும் பொழுது ஓம்காரம் ஒலிக்க வேண்டும். உள்மன பாரம் குறைய வேண்டும். இறைநாமம் சொன்னாலே பலன்கள் பலமடங்கு கிடைக்கும். பிரகாரம் வலம் வரும் பொழுது மிக வேகமாக நடக்கக்கூடாது. அருகில் வருபவர்களிடம் தகாத சொற்களையும், குடும்பப் பிரச்சினைகளையும் சொல்லிக் கொண்டு வரக்கூடாது. தெய்வ சிந்தனையிலேயே வலம் வந்தால் தான் நினைத்தது நடக்கும். கால் இரண்டும் நடக்க, கையிரண்டும் ஏதோ செய்ய, மனம் வேறு சிந்திக்க, கண்கள் எதையோ பார்க்க நாம் கடமைக்கு பிரகாரம் வரக்கூடாது. கடவுள் சிந்தனையோடு வலம் வரவேண்டும். கோவிலை விட்டு வெளியில் வரும் போது கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம் என்று சொல்லி கோபுரத்தை வணங்கிவிட்டு வீடு திரும்ப வேண்டும்.

    சூரிய பூஜை


    ஒரு முறை துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளானது, இந்திரனின் வெள்ளை யானை. ஐராவதம் என்ற பெயர் கொண்ட அந்த யானை, இத்தல இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றது. அதனால் இத்தல ஈசனுக்கு ‘ஐராவதேஸ்வரர்’ என்று பெயர். ‘இனன்’ என்றால் ‘சூரியன்’ என்று பொருள். சூரியன் இத்தல ஈசனை நம்பி வழிபட்ட ஊர் என்பதால், ‘இனன்நம்பூர்’ என்று பெயர் பெற்றது. காலப்போக்கில் இதுவே மருவி ‘இன்னம்பூர்’ என்றாகி, தற்போது ‘இன்னம்பர்’ என்று வழங்கப்படுகிறது. இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி 31-ந் தேதி, புரட்டாசி 12-ந் தேதி மற்றும் பங்குனி மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் மூலவர் எழுத்தறிநாதரின் மீது தன்னுடைய சூரியக் கதிர்களை வீசி, சூரிய பகவான் வழிபாடு செய்கிறார். இந்த நாட்களில் ஆலயத்தில் நடைபெறும் சூரிய பூஜை, திருவிழா போல் கொண்டாடப்படுகிறது.

    சிவ.அ. விஜய் பெரியசாமி
    திருநெல்வேலி புது பஸ் நிலையத்தில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலையில் உள்ளது முன்னீர்பள்ளம் சிவன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    பாஞ்சால நாட்டில் சூரியக் குலத்தைச் சேர்ந்த மதுராந்தகன் என்னும் மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். இவன் நல்ல நீதிமான். தானங்களை செய்பவன். ஆனால் நதிதேவதைகளை மதிப்பது இல்லை. குலகுருவாகிய கன்வ மகரிஷி பாவப் புண்ணியப் பலன்களைப் பற்றியும், ஜல தானத்தின் மகிமைகளையும் அவனுக்கு எடுத்துக் கூறினார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த மன்னன், “தண்ணீர் தானம் செய்ய அவசியம் இல்லை” என்று கூறிவிட்டான். இறுதிவரை மற்ற அனைத்து தானங்களையும் செய்தவன், ஏரி, குளங்களை அமைக்கவில்லை.

    இதனால் அடுத்தப் பிறவியில் பல்லியாக பிறந்தான். ராஜ மாளிகை ஒன்றில் பூச்சிகளை தின்று வாழ்க்கையைக் கழித்தான். ஒரு முறை அந்த மாளிகை வணிகரைக் காண, கன்வ மகரிஷி வந்தார். அவரை வணிகர் வரவேற்று பாதங்களை நீரால் கழுவினார். அப்போது சிதறிய நீர்த்துளி பல்லியின் மீதுபட்டது. உடனே அதற்கு முன்ஜென்ம நினைவு வந்தது. அது கன்வ மகரிஷியை அறிந்து கொண்டு, “மகரிஷியே, என்னைக் காப்பாற்ற வேண்டும்” என்று மன்றாடியது.

    பல்லி உருவத்தில் இருப்பது மதுராந்தகன் என்பதை புரிந்துகொண்ட கன்வ மகரிஷி, “மன்னா உனக்கு பல முறை நீரின் பெருமைகளை எடுத்துரைத்தேன். அதிக அளவு மற்ற தானங்களைச் செய்த நீ, ஜல தானம் என்னும் ஏரி, குளங்களை அமைக்கவில்லை. ஆனாலும் நீ மன்னிக்கப்பட வேண்டியவன். பல்லியான உன்னை ஒரு சந்தனப் பேழையில் வைத்து தென் திசை அனுப்புகிறேன். அங்கு தாமிரபரணி தீர்த்தத்தில் உனக்கு மனித உருவமும், ஞானமும் கிடைக்கும்” என்று கூறினார்.

    அதன்படி தென்திசை வந்தப் பல்லி, அங்கும் இங்கும் அலைந்து கடைசியாகத் தாமிரபரணிக் கரையில் உள்ள முன்னீர்பள்ளத்தை அடைந்தது. அங்கு தபசிகள் கூடி தாமிரபரணிக்கு புஷ்கரணி யாகம் நடத்திக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட பல்லி மகிழ்ச்சியில், அங்கிருந்த ஒரு தபசியின் கமண்டல நீருக்குள் விழுந்தது. தபசி கோபத்தில் கமண்டலத்தைத் தாமிரபரணியில் வீசினார். அங்கு விழுந்த பல்லி அழகான மனிதனாக (மதுராந்தகன்) மாறியது. அதைக்கண்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

    அதன்பிறகு மதுராந்தகன், அங்கேயே பல காலம் தங்கியிருந்து தீர்த்த நீராடி சிவபெருமானை வழிபட்டான். மேலும் ஜல தானம், பானகம், மோர் போன்றவைகளைத் தானம் செய்தான்.

    முன்னீர்ப்பள்ளம் கிராமம், கி.பி.1120-22 ஆண்டுகளில் ‘ஜெயசிங்க நாட்டு கீழ் களக் கூற்றம்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வல்லபன் என்ற மன்னன், மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி பராக்ரம பாண்டியன் ஆகிய இருவரும் சிற்றரசர்களாய் ஆண்ட காலத்தில் இந்தப் பகுதி சிறப்புடன் விளங்கியிருக்கிறது. பின்னர் 1544-ல் விஜயநகர மன்னன் அச்சுதராயரின் காலத்தில், ‘மூன்று நீர்ப்பள்ளம்’ என விளங்கிய இத்தலம், தற்போது ‘முன்னீர்ப்பள்ளம்’ என்று அழைக்கப்படுகிறது.

    ஸ்ரீவல்லப மன்னன் ஆண்ட காலத்தில், தன் சொந்த வழிபாட்டுக்கு ஒரு சிவலிங்கம் செய்து தர, ஒரு சிற்பியை நியமித்தான். சிற்பி முறையாக ஒரு சிவலிங்கத்தைச் செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த அடியவர் ஒருவர், தனக்கு அந்த லிங்கத்தைத் தரும்படி கேட்டார். ஆனால் “மன்னனுக்காக செய்யப்படும் சிவலிங்கம் இது. எனவே தர முடியாது” என்று சிற்பி மறுத்துவிட்டார்.

    அங்கிருந்து சென்ற அடியவர், பொதிகை மலை போய்விட்டு, மீண்டும் அந்த வழியாக வந்தபோது, அதே சிற்பியிடம் சிவலிங்கத்தைத் தரும்படி மறுபடியும் கேட்டார். இப்போதும் சிற்பி மறுக்கவே, தான் கையில் வைத்திருந்த மூலிகைச் சாற்றை அந்த சிவலிங்கத்தின் மீது எறிந்தார். மூலிகைச் சாறு பட்டதும், அந்த சிவலிங்கம் தீப்பிழம்பாக எரிந்தது. பயந்து போன சிற்பி, இதுபற்றி மன்னனிடம் தெரிவித்தார்.

    மன்னன் அந்த இடத்திற்கு வந்து, அடியவரைச் சந்தித்து விசாரித்தபோது, “சிவலிங்கம் செய்யப்பட்ட கல்லில் தேரை குடிகொண்டிருப்பதால், அது பூஜைக்குரியது அல்ல” என்றார்.

    இதையடுத்து அந்த அடியவரையே சிவலிங்கம் செய்துதரும்படி மன்னன் பணித்தான். அடியவரும் அகமகிழ்ந்து, ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர் ஆகிய முன்று நீர்நிலைகளில் உள்ள இடங்களிலும் மூன்று சிவலிங்கங்களைத் தோற்றுவித்து, மன்னனிடம் ஒப்படைத்துவிட்டு மறைந்தார். அப்போதுதான் அடியவராக வந்தது சிவபெருமான் என்பதை அனைவரும் உணர்ந்தனர்.

    பரிபூரண கிருபேஸ்வரி, பரிபூரணகிருபேஸ்வரர்

    மனம் மகிழ்ந்த மன்னன், மூன்று சிவலிங்கங்களில் ஒன்றை தன்னுடைய வழிபாட்டுக்காக வைத்துக் கொண்டான். இரண்டாவதை முன்னீர்பள்ளத்திலும், மூன்றாவதை தருவை என்ற ஸ்ரீவல்லப நகரிலும் பிரதிஷ்டை செய்தான். இரண்டு இடங்களிலும் கோவில்களை கட்டி கும்பாபிஷேகமும் செய்தான். இதையடுத்து சிவபெருமான் முன்னீர்பள்ளத்தில் ‘பரிபூரண கிருபேஸ்வர’ராகவும், தருவையில் ‘வல்லப பாண்டீஸ்வர’ராகவும் அருளாட்சி செய்யத் தொடங்கினார்.

    பின்னர் கி.பி.1554-ல் விஜயநகர மன்னன் அச்சுதராயர் அனுப்பிய மல்லப்ப நாயக்கர், அருகில் இருக்கும் ஊர்களில் இருந்து 87 அந்தணர்களைக் குடியமர்த்தி, லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலைக் கட்டி அக்ரகாரம் அமைத்து, நில மானியங்களை ஏற்படுத்தி, நீர் வசதிக்காகக் கால்வாய்களையும் அமைத்தார். சிவனையும், திருமாலையும் வழிபடும் போதுதான் வழிபாடு முழுமையடைந்து பரிபூரணக் கிருபையைப் பெறமுடியும். எனவே இவ்வூரில் சிவன் - விஷ்ணு ஆலய வழிபாடுக்கு ஏற்பாடு செய்தார். ‘சவுந்தர்ய கயிலாயம்’ என இவ்வூர் போற்றப்படுகிறது. பரிபூரண கிருபேஸ்வரர் கிழக்கு நோக்கியச் சன்னிதியிலும், பரிபூரண கிருபேஸ்வரி அம்மன் தெற்கு நோக்கிய தனிச் சன்னிதியிலும் அருள்பாலித்து வருகிறார்கள். இவ்விரு சன்னிதிகளுமே எழில் நிறைந்த அழகு விமானங்களுடன் விளங்குகின்றன.

    சரியாக கல் தேர்வு செய்யத் தவறிய சிற்பி, சாபம் பெற்று, அம்பாள் சன்னிதியில் பல்லியாக இருந்தார். இப்போதும் அம்மன் கால் பகுதியில் தலைகீழாக இறங்கும் நிலையில் பல்லி இருப்பதைக் காணலாம். இது பார்ப்பதற்கு லிங்க ரூபம் போல் காட்சியளிக்கும். சாபம் தீர தவமிருந்த சிற்பியின் பக்திக்கு மனமிரங்கிய சிவபெருமான், நாராயணரை வழிபடச் சொன்னார். அதன்படி நாராயணரை வழிபட்டு மனித உருவம் பெற்ற சிற்பி, சிவன் அருளால் திருமாலுக்கு, மரகதக் கல்லால் அழகான சிலை ஒன்றை வடித்தார். அதன் மூலம் நாராயணரின் அருளையும் பெற்று, மீண்டும் ஸ்ரீ வல்லப மன்னரிடம் ஆஸ்தான பிரதம ஸ்தபதியாக பதவி வகித்தார் என்று தல வரலாறு சொல்கிறது.

    விநாயகர் முதல் நந்தி வரை சிவ பரிவாரங்கள் புடைசூழ ஒரு சுற்றுப் பிரகாரத்துடன் அமைந்துள்ள பகுதி ‘முன் மண்டபம்’, ‘கயிலாய மண்டபம்’ எனப் போற்றப்படுகிறது. இங்கு திருமாலின் தசாவதாரத் தோற்றத்துடன் பல பரிவாரத் தேவதைகளும் அருள் தருகிறார்கள். மல்லப்ப நாயக்கர் கட்டிய லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில்தான், சிற்பி வடிவமைத்த மரகதச்சிலை உள்ளது. சிறந்தக் கட்டிடக்கலையின் உயர்ந்த நுணுக்கங்களுடனும், ஒரு சுற்று பிரகாரம் கொண்ட இந்த ஆலயத்தில் திருமகளை மடியில் அமர்த்தியபடி இருக்கும் திருமாலின் அருள் வெள்ளம் அனைத்துப் பக்தர்களையும் அரவணைக்கிறது.

    இந்த நாராயணர் கோவிலுக்கும், சிவன் கோவிலுக்கும் ஒரே நாளில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அழகிய கிராமத்தில் நாராயண தீர்த்தம், அக்னி தீர்த்தம், பித்ரு தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்களும் உள்ளன. இரண்டு திருக்கோவில்களிலுமே ஆண்டு உற்சவங்களும், மாத உற்சவங்களும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. பில்லி, சூன்யம் விலகவும், தீராத நோய் தீரவும், வீடுகளில் உள்ள தோஷங்கள் நீங்கவும், குழந்தைப் பாக்கியம் பெறவும் பக்தர்கள் இங்கு வந்து வழிபாடுகள் செய்கின்றனர். வியாபார அபிவிருத்திக்காகவும், சகல ஐஸ்வர்யங்கள் பெறவும் இத்தலத்தில் பிரார்த்தனை நடைபெறுகிறது. குலதெய்வம் எதுவெனத் தெரியாத குடும்பத்தினர், அந்தக்குறை தீர இங்கு பூஜை செய்கின்றனர். இந்த கோவிலில் தம்பதி சகிதமாக காட்சிதரும் நவக்கிரகங்களை வழிபடலாம். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் இரட்டைப் பல்லி வழிபாட்டைப் போல, இத்தலத்தில் ஒற்றைப் பல்லி வழிபாடு பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.

    இந்த ஆலயத்தில் சித்திரையில் விஷு திருவிழா, வைகாசியில் சூரசம்காரம், ஆனி மாத அனுச நட்சத்திரத்தில் வருஷாபிேஷகம் சிறப்பாக நடைபெறுகிறது. ஆடி பூரத்தின் போது உற்சவரான மனோன்மணியம் அம்மைக்கு வளைகாப்பு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். புரட்டாசி மாதம் நவராத்திரி கொலுவில் அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அருள்தருகிறாள். ஐப்பசி மாதம் கந்த சஷ்டி திருவிழா நடைபெறும். கார்த்திகை மாதம் திங்கட்கிழமை தோறும் சோமவாரம் நடத்துவார்கள். திருக்கார்த்திகையில் ஆலயத்தில் 1008 தீபம் ஏற்றப்படும். மார்கழி மாதம் திருவாதிரை, மாசிமாத சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவையும் மிகச்சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் முன்னீர் பள்ளம் உள்ளது. திருநெல்வேலி புது பஸ் நிலையத்தில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலையில் 10-வது கிலோ மீட்டரில் முன்னீர்பள்ளம் சிவன் கோவில் உள்ளது.

    முத்தாலங்குறிச்சி காமராசு
    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் பிச்சாண்டார் கோவில் திருக்க ரம்பனூரில் அமைந்துள்ளது உத்தமர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் பிச்சாண்டார் கோவில் திருக்க ரம்பனூரில் அமைந்துள்ளது உத்தமர் கோவில். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருளும் தலம். 108 திவ்யதேசங்களில் 32-வது கோவிலான இக்கோவில் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.    

    சிவன், பிச்சாடனாராக வந்து தன் தோஷம் நீங்கப் பெற்ற தலம் என்பதால் இந்த ஊர் “பிச்சாண்டார் கோவில்’ என்றும், மகா விஷ்ணு கதம்ப மரமாக நின்ற ஊர் என்பதால் கதம்பனூர் என்றும் கரம்பனூர் என் றும் அழைக்கப்படுகிறது. கணவனும், மனைவியும் இல்லற வாழ்க்கையில் சேர்ந்து வாழ்வதே உத்தமம்.
    இவ்வாறு ஒருவருக்கொரு வர் இணக்கமாக வாழ்பவர்களை உத்தமர் என்பர். இங்கு மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக இருப்பதால் திருமங்கையாழ்வார் இத்தலத்தை உத்தமர் கோவில் என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.     
     
    படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனக்கென தனியே கோவில் இல்லையே என்ற மனக்குறை இருந்தது. எனவே, மகாவிஷ்ணு அவரை பூலோகத்தில் பிறக் கும்படி செய்தார். பிரம்மா இத்தலத்தில் பெருமாளை வணங்கி தவம் செய்து வந் தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக மகா விஷ்ணு, கதம்ப மரத்தின் வடிவில் நின்று கொண்டார். இதையறிந்த பிரம்மா கதம்ப மரத்திற்கு பூஜைகள் செய்து, சுவாமியை வணங்கினார்.

    அவரது பக்தியில் மகிழ்ந்த மகா விஷ்ணு காட்சி தந்து, நீ எப்போதும் இங்கேயே இருந்து என்னை வழிபட்டு வா, நீ பெற்ற சாபத்தால் உனக்கு கோவில்கள் இல்லா விட்டாலும் இங்கு தனியே வழிபாடு இருக்கும் என்றார். அதன்படி பிரம்மாவும் இங்கேயே தங்கினார். பிற் காலத்தில் இவருக்கும் சன் னதி கட்டப்பட்டது.
    பிரம்மாவுக்கு இடப்புறத் தில் ஞான சரஸ்வதி தனி சன் னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் கைக ளில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடி, ஜெப மாலையு டன் காட்சி தருவது சிறப்பு. பிரம்மாவிற்கு தயிர் சாதம், ஆத்தி இலை படைத்தும், சரஸ்வதிக்கு வெள்ளை வஸ் திரம், தாமரை மலர் மாலை சாத்தியும் வழிபட்டால் ஆயுள் கூடும், கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. குருப் பெயர்ச்சியின்போது பிரம் மாவிற்கு விசேஷ பூஜை கள் நடக்கிறது.

    விஷ்ணு கிழக்கு பார்த்த படி பள்ளி கொண்ட கோலத் திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்தி லும் உத்யோக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். பூரணவல்லி தாயார் தனிச்சன்னதியில் அருளுகிறாள். இவள் என்றும் உணவிற்கு பஞ்சமில்லா நிலையைத் தரக்கூடியவள். அருகில் மகாலட்சுமிக்கும் தனிச்சன் னதி இருக்கிறது. இவ்விரண்டு தாயார்களது தரிசனம் விசேஷ பலன்களை தரக் கூடியது.

    பெருமாளுக்கு நேர் பின் புறத்தில் சிவன் மேற்கு பார்த்த படி லிங்க வடிவில் இருக்கிறார். இவர் பிட்சாடனராக கோஷ்டத்திலும், உற்சவராக வும் இருக்கிறார். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த் திகளும் தனித்தனி சன்னதிகளில் அம்பாள்களுடன் காட்சி தருகின்றனர். ஒரே தலத்தில் மும்மூர்த்தி களையும் தரிசனம் செய்வது அபூர்வம்.

    கார்த்திகை தீபத்திருவிழா வின்போது மூவருக்கும் மூன்று திசைகளில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு ஒன்றாக உலா வருகின்றனர். தைப்பூசத் திருவிழாவில் சிவனுக்கும், மாசி மகத்தில் பெருமாளுக்கும் கொள்ளிடத்தில் தீர்த்தவாரி விழா நடக்கிறது. சிவகுரு தெட்சிணா மூர்த்தி, விஷ்ணு குரு வரதராஜர், குரு பிரம்மா, சக்தி குரு சவுந்தர்ய பார்வதி, ஞான குரு சுப்பிரமணியர், தேவ குரு வியாழன், அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆகிய ஏழு குரு சுவாமிகளும் குருவிற்குரிய இடங்களில் இருந்து அருளுகின்றனர். குருப் பெயர்ச்சியின்போது ஏழு குருக்களுக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடக்கிறது. எனவே இத்தலம் சப்தகுரு தலம் எனப்படுகிறது.

    சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார் வதிதேவி அவரை தனது கணவன் என நினைத்து பணி விடை செய்தாள். இதைக் கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மா வின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாலமும் (மண்டை ஓடு) அவரது கையு டன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன் றும் அவரால் கபாலத்தை பிரிக்க முடியவில்லை. அவ ருக்கு படைக்கப்பட்ட உணவு கள் அனைத்தையும் கபா லமே எடுத்துக்கொண்டது.

    எவ்வளவு உணவு இட்டா லும் கபாலம் மட்டும் நிறைய வேயில்லை. பசியில் வாடிய சிவன், அதனை பிச்சைப் பாத்திரமாக ஏந்திக்கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அவர் இத்தலத்திற்கு வந்த போது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும் படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாவத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசி நீக்கியது. இதனால் தாயார் பூரண வல்லி என்ற பெயரும் பெற்றாள். மகாவிஷ்ணுவும் பள்ளி கொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி தந்தார்.

    இக்கோவிலில் புரட்டாசி மாதம் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சிவன் சன்னதிகளில் நடராஜர் திருமஞ்சனமும், புரட்டாசி சனிக்கிழமைகளில் மூலவர் புருஷோத்தம பெருமாளுக்கு திருமஞ்சன மும் நடைபெறுகிறது. நவராத்தி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரியில் மும்மூர்த்தி களுக்கும் முப்பெரும் தேவி யர்களுடன் விசேஷ பூஜைகள் நடத்தப்படுகிறது.

    நவராத்திரி விழாவில் குறிப்பாக விஜயதசமியன்று (அக்டோபர் 8-ந்தேதி, புரட் டாசி 21) கல்விக்கடவுளான ஞான சரஸ்வதிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகி றது. அம்பாளுக்கு முன்பாக ஓலைச்சுவடிகள் வைக்கப் பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. மேலும் கல்வியை தொடங்கும் குழந் தைகளுக்கு நெல்லில் எழுதி ஏடு தொடங்கும் நிகழ்ச்சி இந்த கோவிலில் விமரிசையாக நடத்தப்படுகிறது. புரட்டாசி மாதம் நடைபெறும் இந்த வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி-அம்பாளை தரிசித்து வருகின்றனர்.

    பாவம் பறந்தோடும்

    சிலர் நிறைய பாவம் செய்து இருப்பார்கள். அந்த பாவம், பல பரிகாரங்கள் செய்தும் தீராமல் இருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில் இருப்பவர்கள் திருக்கரம்பனூர் தலத்தில் 3 நாட்கள் தங்கி வழிபாடுகள் செய்தால் பொதும், அது எத்தகைய பெரிய பாவமாக இருந்தாலும் சரி, பஞ்சாக பறந்தோடி விடும்.
    சிலருக்கு முன்னோர் அல்லது பெரியவர்கள் சாபம் ஏற்பட் டிருக்கும். அவர்கள் எது செய்தாலும் காரியத்தடை உண்டாகும். எதையும் முழுமையாக செய்ய முடியாமல் தவிப்பவர்களின் இச்சாபம் இத்தலத்தில் எளிதில் விரட்டியடிக்கப்படும்.

    வாரிசு இல்லாமல் தவிப்பவர்கள், கொடிய நோயால் துடிப்பவர்கள், இங்குள்ள புருஷோத்தமனிடம் மனம்விட்டு பிரார்த்தித்தால் நிச்சயம் நல்லது நடக்கும்.
    தம்பதியர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் குடும்பம் சிறக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் கிடைக்க, கிரக தோஷங்கள் நீங்க, வேண்டிக் கொள்ளலாம். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய் வித்து, நிவேதனம் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.
    திருவள்ளூர் அருகே எலுமியன்கோட்டூர் எனும் சிற்றூர் உள்ளது கனககுசாம்பிகை சமேத தெய்வநாயகேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருவள்ளூர் அருகே எலுமியன்கோட்டூர் எனும் சிற்றூர் உள்ளது. இங்கு கனககுசாம்பிகை சமேத தெய்வநாயகேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. மகா பிரளய காலத்தில் உலகத்தைக் காப்பாற்ற, தாம் தங்குவதற்கு அமைதியான இடம் என்று சிவபெருமான் தேர்வு செய்த தலம் என்பதால், இது மன அமைதி தரும் திருத்தலமாக திகழ்கிறது.

    புராண காலத்தில் தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்ற மூன்று அசுரர்கள் விண்ணில், பொன், வெள்ளி, இரும்புக்கோட்டை கட்டி ஆண்டுவந்தனர். அவர்கள் தேவர்களுக்குப் பெருந்துன்பம் விளைவித்து வந்தனர். இதுபற்றி தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். உடனே அசுரர்களை அழிக்க ஆயத்தமானார் ஈசன்.

    பூமியே- தேராக, சூரிய சந்திரர்கள் - சக்கரங்களாக, பிரம்மன் -தேரோட்டியாக, மேருமலை - வில்லாக, வாசுகி - நாணாக, நாராயணப் பெருமாளை அம்பாகக்கொண்டு, அசுரர்களின் பறக்கும் நகரங்களை ஒரே அம்பில் வீழ்த்தப் புறப்பட்டார். தேவர் படைக்குத் தலைமையேற்று, திரிபுர அசுரர்களை அழிக்க மரமல்லிகை வனம் வழியே சென்றார். அப்போது சிவனுடன் சென்ற தேவர்கள், விநாயகரை வழிபட மறந்துவிட்டனர்.

    இதனால் தேர் அச்சு முறிந்து, தேர் நிலை குலைந்தது. தேர் கீழே கவிழாமல் மகாவிஷ்ணு தாங்கிப் பிடித்தார். தேரில் இருந்த பரமன், தம் கரத்திலிருந்த வில்லை தரையில் ஊன்றி நின்றார். அப்போது சிவன் கழுத்திலிருந்த கொன்றை மலர் மாலை தரையில் விழுந்தது. பின்னர் அந்த மாலை சுயம்பு லிங்கமாக மாறியது.

    நீர்ப்பரப்பின் அருகிலுள்ள பசுமையான சோலை போன்று விளங்கிய அந்த இடம் ‘இலம்பை’ என்றழைக்கப்பட்டது. இங்கு சுயம்புவாகத் தோன்றி, தீண்டாத் திருமேனியுடன் விளங்கும் சிவபெருமான், தேவர் படைக்குத் தலைமை ஏற்று சம்காரத்திற்குச் சென்றதால் ‘தெய்வ நாயகேஸ்வரர்’ என்று அழைக்கப்படலானார்.

    ஒரு சமயம் திருஞானசம்பந்தர் சிவத்தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடிவிட்டு, இத்தலம் வழியே திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் முன்பாக சிறுவன், முதியவர் தோற்றத்தில் வந்த இறைவன், ‘இவ்விடத்தில் சிவன் குடிகொண்டிருக்கிறார். அவரைக் குறித்துப் பதிகம் பாடு’ என்றார். அதன்படி இங்குவந்த சம்பந்தர், சிவன் இருக்கும் இடத்தைக் காணமுடியாமல் திரும்பிச் சென்றார். மீண்டும் வெள்ளைப் பசு வடிவில் அவரை மறித்த சிவன், கோவிலை நோக்கிச் சென்று மறைந்தார். இறைவனின் இருப்பிடத்தை உணர்ந்து கொண்ட சம்பந்தர் தெய்வநாயகேஸ்வரர் குறித்துப் பதிகம் பாடி இறைவனை தரிசித்து மகிழ்ந்தார்.

    பல்வேறு புராணப் பெருமைகள் கொண்ட இத்தல இறைவனை வழிபாடு செய்தால், முன்ஜென்ம பாவம் விலகும். பேரின்ப நிலை கிடைக்கும். உடல் பொலிவு உண்டாகும் என்கிறார்கள். இத்தலத்தில் யோக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். தலைசாய்த்து, கண்களை மூடி, வலது கரத்தை தன் இதயத்தில் வைத்து சின்முத்திரைக் காண்பித்தவாறு அபூர்வக் கோலத்தில் இவர் வீற்றிருக்கிறார். 16 வகை செல்வங்களையும் வாரிவழங்கும் இந்த யோக தட்சிணாமூர்த்தியை, குரு தோஷம் உள்ளவர்கள் அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபடலாம்.

    மன இறுக்கம் உள்ளவர்கள், திங்கட்கிழமை தெய்வ நாயகேஸ்வரரையும், சக்கர பீடத்தில் எழுந்தருளியுள்ள கனக குசாம்பிகையை வழிபடுவதோடு, குரு தோஷம் அகலவும், குரு பலம் பெறவும் வியாழக்கிழமை யோக தட்சிணாமூர்த்தியையும் நெய் தீபமேற்றி 11 முறை வலம்வந்து வழிபட வேண்டும். சருமத் தொடர்பான நோய் நீங்கவும், இழந்த செல்வம், செல்வாக்கு, பதவி போன்றவற்றைத் திரும்பப் பெறவும் இவ்விதம் வழிபட்டுப் பலன் பெறலாம்.

    இந்த ஆலயத்தில் குருப்பெயர்ச்சி, மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை, ஆடிப்பெருக்கு ஆகியன இவ்வாலய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    சென்னை - அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில் கடம்பத்தூரில் இறங்கி பேரம்பாக்கம் வந்து ஆட்டோ மூலம் இக்கோவிலை அடையலாம். சென்னை - பூந்தமல்லி - வளர்புறம் - மப்பேடு - பேரம்பாக்கம் வழியாக நரசிங்கபுரம் வரை பேருந்து வசதியுள்ளது. இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரம் சொந்த வாகனம் அல்லது ஆட்டோ மூலம் பயணித்து எலுமியன்கோட்டூர் தலத்தை அடையலாம். ஸ்ரீபெரும்புதூர் - சுங்குவார்சத்திரம் வழியாக மதுரமங்கலம் வந்து, 6 கி.மீ. பயணித்தாலும் ஆலயத்தை அடைய முடியும்.

    கீழப்பாவூர் கி.ஸ்ரீமுருகன்
    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் இருந்து கொடைக்கானல் செல்லும் மலை சாலையில் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பூத நாச்சியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
    வத்தலகுண்டில் இருந்து மலைப்பாம்பு போல, வளைந்து வளைந்து செல்கிறது அந்த தார் சாலை. கொடைக்கானலை நோக்கிச் செல்லும் அந்தப் பாதையில் கார் அல்லது பஸ்சில் பயணம் செய்யும் போது பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தால் நமக்கு மரண பயம் ஏற்படுவது சகஜம். அவ்வளவு பயங்கரமான பள்ளத்தாக்குகள்.

    அந்தச் சாலையில் சுமார் 30 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தால் ஊத்து என்ற மலைக்கிராமம் வரும். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் அந்த ஊரின் நடுவே மலையைப் பிளந்து கொண்டு அம்மன் சிலை ஒன்று சுயம்புவாய் வெளிப்பட்டது. ஊர் மக்களுக்கு ஏக மகிழ்ச்சி.

    அந்த அம்மனுக்கு ‘பூத நாச்சியம்மன்’ எனப் பெயரிட்டு சிறிய ஆலயம் அமைத்து வழிபடத் தொடங்கினர். சுமார் அரை அடி உயரமே இருந்த அந்த சுயம்பு அம்மன், வளர வளர ஆலயமும் மெருகேறத் தொடங்கியது. தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக ஆலயத்தை சற்றே விரிவுபடுத்திய மக்கள், அம்மனோடு சில பரிவார தெய்வங்களையும் பிரதிஷ்டை செய்தனர்.

    தொடக்கத்தில் அரை அடி உயரமே இருந்த அம்மன், தற்போது இரண்டு அடி உயரத்தில் கருவறையில் அருள்பாலிப்பதைக் காணும் போது நம் மேனி சிலிர்ப்பதை தவிர்க்க இயலாது. சாலையின் ஓரத்திலேயே இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. முன் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் விநாயகரும், வலது புறம் முருகப் பெருமான் வள்ளி - தெய்வானை சமேதராகவும் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

    மகா மண்டபத்தை அடுத்து உள்ள கருவறை முகப்பில் இருபுறமும் உள்ள துவாரபாலகிகளின் சிலைகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. அத்தனை அழகு. கருவறையில் அன்னை ‘பூத நாச்சியம்மன்’ உளி படாத சுயம்புவாய் மஞ்சளில் குளித்தாற்போல, மங்களகரமான தோற்றத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். அன்னையின் பின்புறம் ஐந்து தலை நாக சிற்பம் படமெடுத்து அன்னைக்கு குடைபோல் காட்சி தரும் அழகே அழகு. ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளதால், அன்னையும் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.

    ஆலயத்தின் திருச்சுற்றில் பல ஆண்டுகளைக் கடந்த தல விருட்சமான அரச மரம் காட்சி தருகிறது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.

    பொதுவாக மலைப்பாதையில் விபத்துகள் நடப்பது சகஜம். ஆனால் அன்னை சாலையோரம் அமர்ந்து அருளாட்சி செய்வதால், இந்த ஊரில் விபத்துக்களே நடந்ததில்லை என பக்தர்கள் கூறுகின்றனர்.

    செவ்வாய், வெள்ளி, மாதப் பிறப்பு, பொங்கல், நவராத்திரி நாட்களில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    தைப்பூசம், பங்குனி உத்திரம், சஷ்டி நாட்களில் முருகப்பெருமானுக்கு விஷேச ஆராதனைகளும் அபிஷேகங்களும் செய்யப்படுகின்றன. சதுர்த்தி நாட்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.

    ஆடி மாதம் 17 மற்றும் 18-ம் நாட்களில் அன்னைக்கு திருவிழா நடத்தப்படுகிறது. அந்த நாட்களில் ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். இந்தப் பகுதியின் அருகே உள்ள மூலை ஆறு, தலை ஆறு ஆகிய நதிகளில் இருந்து அன்னைக்கு கரகம், பால்குடம், முளைப்பாரி சுமந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அன்னையின் சன்னிதிக்கு வந்து தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார்கள். பக்தி பெருக்கோடு அவர்கள் அன்னையின் சன்னிதியில் நுழையும் போது நம் மனமும் சிலிர்ப்பது உண்மை.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    ஊத்து ஊரின் காவல் தெய்வமாய் மட்டுமின்றி, அந்த மலைப் பாதையை கடக்கும் பயணி களுக்கு துணையாய் நின்று காக்கும் தெய்வமாகவும் இந்த சுயம்பு பூத நாச்சியம்மன் அருள்புரிகிறாள் என்று பக்தர்கள் நம்புவது நிஜமே!

    அமைவிடம்

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் இருந்து கொடைக்கானல் செல்லும் மலை சாலையில் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊத்து என்ற கிராமத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

    ஜெயவண்ணன்
    கேரளா மாநிலம் மஞ்சப்புரா அம்பாடத்து மாளிகா என்ற திருக்கோவிலில் ஐயப்பனுக்கு விக்கிரகமே இல்லாமல் இருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ஐயப்பன் என்றாலே அனைவர் மனதிலும் தோன்றும் உருவம், பத்மாசன நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்தபடி இருக்கும் சிலை அமைப்புதான். ஆனால் கேரளா மாநிலம் மஞ்சப்புரா அம்பாடத்து மாளிகா என்ற திருக்கோவிலில் ஐயப்பனுக்கு விக்கிரகமே இல்லாமல் இருக்கிறது.

    கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி என்ற இடத்தில் அருகில் உள்ளது மஞ்சப்புரா என்ற கிராமம். இங்கு தான் அம்பாடத்து மாளிகை ஐயப்பன் ஆலயம் உள்ளது. இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு திருமணத் தடை நீங்கும். குழந்தைப்பேறு கிடைக்கும். தீராத நோய் தீரும் என்று சொல்லப்படுகிறது. மேலும் சனி தோஷத்தால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் இந்த ஆலய வழிபட்டால் விலகுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

    இந்த ஆலயத்தில் ஐயப்பனுக்கு சிலை இல்லை. வெள்ளி முத்திரையுடனான தடி, திருநீற்றுப் பை, ஒரு கல் ஆகியவையே, ஐயப்பனாக நினைத்து வழிபடப்படுகிறது.

    இங்கே மாளிகைபுறத்து அம்மனுக்கு தனிச் சன்னிதி அமைக்கப்பட்டிருக்கிறது.

    இந்த ஆலயம் பக்தர்கள் வழிபாட்டிற்காக தினமும் திறக்கப்படுவதில்லை. சபரிமலை வழிபாட்டுக்கான நிகழ்ச்சி நிரலின்படி மட்டுமே இந்த ஆலயமும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன.

    ஒவ்வொரு மாதத்திலும் முதல் ஐந்து நாட்களிலும், கார்த்திகை மாதம் முதல் நாளில் தொடங்கி 41 நாட்கள் வரை நடைபெறும் மண்டல பூஜை நாட்களிலும், ஐயப்பன் தோற்றம் பெற்ற நாளாகக் கருதப்படும் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திர நாளிலும் ஆலயம் திறந்திருக்கும்.

    அந்த நாட்களில் காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் ஆலயத்தில் வழிபாடு செய்யலாம்.

    சபரிமலை வழிபாடு காலங்களில் மட்டுமே ஆலயம் திறக்கப்பட்டாலும், அங்குள்ள வழிபாட்டு முறைகளே இங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை தரிசனம் செய்ய பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    பிரபாவதி மாணிக்கவாசகம்
    தொழில் வளம் பெருகி, செல்வம் அதிகரிக்கச் செய்யும் சிறப்புமிக்கதாக ஆலயமாக திகழ்கிறது தேனி மாவட்டம் கோம்பை என்னும் ஊரில் உள்ள திருமலைராயப் பெருமாள் கோவில்.
    தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், கோம்பை என்னும் ஊருக்கு மேற்கே இருக்கும் மலைப்பகுதியில் அமைந்திருக்கிறது, திருமலைராயப் பெருமாள் கோவில். தொழில் வளம் பெருகி, செல்வம் அதிகரிக்கச் செய்யும் சிறப்புமிக்கதாக இந்த ஆலயம் திகழ்கிறது.

    தல வரலாறு

    கோம்பை என்னும் ஊரின் மேற்கே மலைப்பகுதியில் வசித்த சில குடும்பத்தினர், மாடுகளை வளர்த்துப் பராமரித்து வந்தனர். அவர்கள், தாங்கள் வளர்க்கும் மாடுகளில் இருந்து கிடைக்கும் பாலை தினமும் கோம்பை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் இருக்கும் ஊர்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து திரும்புவார்கள். அவர்களில் ஒரு பால்காரர், தான் வளர்த்த மாடுகளிடம் இருந்து கிடைத்த பாலை விற்பதற்காகக் கோம்பை நகருக்கு எடுத்துச் சென்றார்.

    அவர் செல்லும் வழியில் ஓரிடத்தில் இருந்த மரத்தின் வேரில் கால் இடறிக் கீழே விழுந்தார். அப்போது, அவர் தலையில் சுமந்து வந்த பால் பானை கீழே விழுந்து, அதிலிருந்த பால் முழுவதும் தரையில் சிதறிப் போனது. ‘நாம் கொண்டு வந்த பால் முழுவதும், இப்படி வீணாகிப் போய்விட்டதே’ என்று நினைத்த அவர், வருத்தத்துடன் வீடு திரும்பினார்.

    மறுநாள், அவர் பாலை எடுத்துக் கொண்டு வந்த போதும், அதே இடத்தில் மீண்டும் கால் இடறி விழுந்து, அவர் கொண்டு வந்த பால் முழுவதும் தரையில் சிதறியது. இப்படியே சில நாட்கள், அந்த இடத்திற்கு வந்ததும் அவர் கால் இடறி விழுவதும், அவர் கொண்டு வரும் பால் தரையில் கொட்டிப் போவதுமாக வாடிக்கை யானது.

    அதனால் கவலையடைந்த அந்தப் பால்காரர், ஒருநாள் கோபத்துடன் வீட்டிற்குச் சென்று ஒரு கோடரியை எடுத்துக் கொண்டு, மீண்டும் அந்த இடத்துக்குத் திரும்பி வந்தார். அங்கு, தினமும் தனது காலை இடறி விழச் செய்யும் மரத்தின் வேரை வெட்டினார். அப்போது அந்த வேரில் இருந்து ரத்தம் வெளியேறியது. அதனைக் கண்டு பயந்த பால்காரர் கோடரியை அங்கேயேப் போட்டுவிட்டு வீட்டிற்குத் திரும்பிப் போய்விட்டார்.

    அன்றிரவு, கோம்பையின் ஆட்சியாளராக (ஜமீன்) இருந்தவரின் கனவில் தோன்றிய இறைவன், “கோம்பைக்குத் தினமும் பால் கொண்டு வரும் பால்காரர் வரும் வழியில், அவரது கால் இடறிக் கீழே விழச் செய்து, பால் முழுவதும் நானிருக்கும் இடத்தில் கொட்டச் செய்தேன். இப்படிச் சில நாட்கள் நடந்த நிலையில், இன்று அந்தப் பால்காரர், அவரது கால் இடறச் செய்யும் மரத்தின் வேரைக் கோடரியைக் கொண்டு வந்து வெட்டினார். நான், அந்த வேரிலிருந்து ரத்தம் பெருகச் செய்தேன். அதனைக் கண்டு பயந்துபோன அவர் வீட்டுக்குத் திரும்பிச் சென்று விட்டார். பால் சிதறி விழுந்த இடத்தில் நான் சுயம்புவாக எழுந்தருளியிருக்கிறேன். எனக்கு அந்த இடத்தில் கோவில் அமைத்து வழிபடுங்கள்” என்று சொல்லிவிட்டு மறைந்தார்.

    மறுநாள் காலையில் ஆட்சியாளர், அந்தப் பால்காரரை வரவழைத்து விசாரித்தார். பின்னர் அவரிடம், முதல் நாள் இரவில் இறைவன் தனது கனவில் தெரிவித்த செய்தியையும் சொன்னார். இதனை அறிந்த மக்கள் ஆட்சியாளர் வீட்டின் முன்பாக ஒன்று கூடினர். அதன் பிறகு, ஆட்சியாளர் அந்தப் பால்காரரை மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். ஆட்சியாளரின் பின்னால் அங்கிருந்தவர்கள் அனைவரும் சென்றனர்.

    அங்கு பால்காரர், தான் கால் இடறி விழுந்த இடத்தினை அடையாளம் காண்பித்தார். அந்த இடத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி, பால் சிதறியிருந்த இடத்தில் இருந்த மண்ணை அகற்றிப் பார்த்த போது, அங்கு இறைவன் சுயம்புவாக இருந்ததைக் கண்டனர். அதன் பிறகு, ஆட்சியாளர் அந்த இடத்தில் இறைவனுக்குத் தனிக் கோவில் அமைத்தார் என்று இங்கு இந்த ஆலயம் அமைந்ததற்கான காரணமாக, தல வரலாறு சொல்லப்படுகிறது.

    கோவில் அமைப்பு

    கோம்பை மலைப்பகுதியில் அமைந்திருக்கும் இக்கோவிலின் கருவறையில், இறைவன் தலையைத் தென்பகுதியிலும், காலை வடபகுதியிலும் வைத்தபடி, முகத்தினைக் கிழக்கு நோக்கிப் பார்த்தபடி கிடந்த நிலையில் (சயன கோலத்தில்) காட்சி தருகிறார். இங்கிருக்கும் இறைவன் ‘திருமலைராயப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். பூதேவி, ஸ்ரீதேவி ஆகியோர் உடனிருக்கின்றனர். இக்கோவிலுக்கான உற்சவர் என்று அழைக்கப்படும் விழாக்கால இறைவன், ‘ஸ்ரீரெங்கநாதர்’ என்னும் பெயரில் கோம்பை ஊரின் மையப் பகுதியில் கோவில் கொண்டிருக்கிறார்.

    இந்த ஆலயத்தின் வளாகத்தில் விநாயகப்பெருமான், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் ஆகியோருக்குத் தனிச்சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தல விநாயகர் ‘தும்பிக்கை ஆழ்வார்’ என்னும் பெயரில் அழைக்கப்படுகிறார்.

    இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி நாட்கள், புரட்டாசி மாதச் சனிக்கிழமைகள், மார்கழி மாதத்தின் 30 நாட்கள் போன்றவற்றில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திர நாளில் தேரோட்டம் நடத்தப்பெறுகிறது. (சில வருடங்களாக இத்தேரோட்டம் நடத்தப் பெறாமல் இருந்து வருகிறது). இவை தவிர, இங்கு விஷ்ணுவுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப் படுகின்றன.

    இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுபவர்களுக்கு அவர்கள் வேண்டியது அனைத்தும் கிடைக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. இங்கு, வணிகர்கள் தங்கள் தொழில் வளம் பெருகவும், செல்வம் பெருகவும் வேண்டி வழிபட்டுச் செல்கின்றனர். இக்கோவில் இறைவனிடம் வேண்டியது கிடைக்கப் பெற்றவர்கள், இங்குள்ள இறைவனுக்குப் பாலாபிசேகம் செய்து நன்றிக்கடன் செலுத்துகின்றனர். சிலர் முடிகாணிக்கை, அங்கப்பிரதட்சணம் செய்து வழிபடுவதும் உண்டு.

    ராமக்கல் மலை

    கோம்பை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியை ஒட்டி, பால்காரர் கொண்டு வந்த பாலைக் கொட்டச் செய்து தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட இறைவன் திருமலைராயப் பெருமாள் அருள்புரிவதாக சொல்லப்படும் ராமக்கல் மலை இருக்கிறது. கோவிலின் பின்புறம் இருக்கும் இம்மலையானது, தொலைவில் இருந்து பார்க்கும்போது அமைதியான மனிதனின் முகம் போன்று தெரிகிறது. பால்காரர் கோடரியால் வெட்டிய போது, வெளியேறிய ரத்தம் படிந்த பகுதியே இம்மலையில் ராமநாமம் இட்டது போன்று தெரிகிறது என்கின்றனர். இம்மலையை இக்கோவிலின் சிறப்புகளில் ஒன்றாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்தக் கோவில் தினமும் காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்


    தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் கோம்பை என்னும் ஊர் இருக்கிறது. தேனி, போடி, உத்தமபாளையம் ஆகிய ஊர்களில் இருந்து கோம்பை செல்லப் பேருந்து வசதிகள் அதிக அளவில் இருக்கின்றன. கோம்பையில் இருந்து மேற்கே 6 கிலோமீட்டர் தொலைவில் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்கு நடந்தோ அல்லது வாகனங்களை ஏற்பாடு செய்தோ செல்ல முடியும்.

    தேனி மு.சுப்பிரமணி
    சீரடி சாய்பாபாவின் தரிசனம் நேரடி காட்சியாகவே ஒருவருக்கு கிடைத்திருக்கிறது. இந்த வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    சீரடி சாய்பாபாவின் தரிசனம் நேரடி காட்சியாகவே ஒருவருக்கு கிடைத்திருக்கிறது. அந்த அளவுக்குப் பாக்கியம் பெற்றவர் ஜெய்குமார் என்கிற ஜெய்மகராஜ். வேலூரில் மருந்து கம்பெனி நடத்தி வருகிறார்.

    ஒருமுறை அவர் தன் மகள் வைஷ்ணவியுடன் வேலூர் ஒட்டேரி கூட்டு வழிச்சாலையில் இருந்து பாலமதி முருகன் கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு குளவிமேடு இயற்கை எழில் நிறைந்த மலைப்பகுதி வழியாக திரும்பி கொண்டிருந்தார். அப்போது மலை அடிவாரத்தை ஒட்டி பாறை ஒன்றினை எதேச்சையாகப் பார்த்தார். அங்கு ஒரு அற்புதத்தைக் கண்டார்.

    அந்தப் பாறைமேல் கால்மேல் கால் போட்டப்படி தந்தை மகள் இருவரையும் பார்த்து சிரித்தப்படி கையசைத்து அருகில் வருமாறு அழைத்திருக்கிறது ஒரு உருவம். அவர் சற்று அருகில் வந்து பார்த்த போது சீரடி சாய்பாபாவை ஒத்திருந்தது அந்த உருவம். சாலையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள அந்த இடத்தை நோக்கி வாகனத்தில் இருந்து இறங்கி ஓடிவந்தனர்.

    அதுமாலை நேரம் அருகில் செல்லச் செல்ல அங்கிருந்த பாபா உருவம் சிறிது சிறிதாக மறைந்து திடீரென்று அந்தப் பாறை முழுவதும் ஜெகஜோதியாக செந்நிறமாக மாறியது. இங்கே அமர்ந்தவரை எங்கே காணோம் எனத் திகைத்து மேலே பார்க்க வானமே குபீரென்று தங்கமயமாக மாறி இருக்க அதையே பாபாவின் திவ்ய சொரூபமாக உணர்ந்து மெல்ல மெல்ல தன் நிலைக்கு வந்தவர் பாறையைத் தொட்டு வணங்கியபின் தன் மகளுடன் வீடு திரும்பிவிட்டார்.

    அன்று இரவு முழுவதும் பாபாவின் நினைவு அவரை ஆட்கொண்டது மட்டுமல்லாமல் தூக்கமில்லாமல் செய்துவிட்டது. அதற்கொரு காரணம் இல்லாமல் இல்லை. பாபா அமர்ந்திருந்த பாறையை வணங்கியபின் தன் இருசக்கர வாகனத்தில் ஏறி புறப்பட தயாரான போது சாலையில் இருள் சூழ்ந்த அந்த மாலை நேரத்தில் அங்குள்ள மக்கள் தங்கள் ஆடு, மாடுகளை மேய்த்து விட்டு ஊர்திரும்பும் வேளையில் ஒரு பெரியவர் மட்டும் ஆடுகளை ஓட்டிக் கொண்டு மலைப்பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

    இந்த வேளையில் பெரியவர் ஏன் மலைப்பகுதிக்கு செல்ல வேண்டும் என்று ஜெய்மகராஜ் நினைத்துக் கொண்டிருந்த போது பெரியவர் அங்கு நின்று இவரைத் திரும்பி பார்த்து இந்த இடம் விலைக்கு வர இருக்கிறது வாங்கிக் கொள்ளுங்கள் என்று அவராகவே கூறிவிட்டு ‘விறுவிறு’ வென்று நிற்காமல் போய்விட்டார். இது அவருக்கு சாய்பாபா நேரடியாக கூறியது போல் இருந்தது.

    மறுநாள் பொழுது விடிந்ததும் முதல் வேலையாக தன் நண்பருடன் பாபா அமர்ந்த பாறை இருந்த இடத்துக்குச் சொந்தக்காரரைப் பார்க்க புறப்பட்டு விட்டார். அந்த இடத்தைத் தனக்கு விலைக்கு தருமாறு கேட்க சென்றார். இடத்து உரிமையாளர் தருகிறேன். ஆனால் பாறை உள்ள பகுதி மட்டும் தான் என்னுடையது. மீதி சாலைப் பக்கத்தில் உள்ளது என் அண்ணனுடையது அவர் யாருக்கோ அதை விலைபேசி அட்வான்ஸ்கூட வாங்கி விட்டார் என்று கூறினார். என்ன செய்வது என்று ஜெய்மகராசும் நண்பரும் புரியாமல் திகைத்தனர்.

    இந்தத் திகைப்பு வெகுநேரம் நீடிக்கவில்லை. சில நிமிடங்களிலேயே அந்த அதிசயம் நடந்தது. முன்பகுதி இடத்தின் உரிமையாளர் திடீரென்று அங்கே வந்திருக்கிறார். தன் தம்பியிடம் இவர்கள் யார் எதற்காக இங்கே வந்திருக்கிறார்கள் என்பதை யெல்லாம் கேட்டுவிட்டு அடுத்த கணம் ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்தவர் அந்த இடம் வேண்டாம் என்று அட்வான்ஸை திருப்பி வாங்கிக் கொண்டு போய்விட்டார்.

    இப்பொழுது உங்களுக்கே அதைத் தருகிறேன். வாங்கிக் கொள்கிறீர்களா? என்றவுடன் பாபா தான் இப்படி ஒரு வழியை நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறார் என்று மகிழ்ச்சியில் துள்ளி தன்னிடமிருந்த பணம் ரூ-.10,001ஆக அட்வான்ஸ் கொடுத்து விட்டு சென்றனர்.அன்று மாலையே ஓடோடிச்சென்று பாறை மீது பாபா உருவப்படத்தை வைத்து கற்பூர ஆரத்தி காட்டி வழிபாடு செய்தார். அன்றிலிருந்து அது அருள்தரும் பாபா பாறையானது.

    முதலில் அந்த இடத்தின் வடமேற்கு மூலையில் தன் குடும்ப வழிபாட்டுக்காக சாய்பாபா, கிருஷ்ணர், ராகவேந்திரர் என்ற அளவில் வழிபாடு செய்யத் திட்டமிட்டு இருந்தார். ஆனால், காலத்தின் கட்டளை பாபாவின் எண்ணம் அப்படி இருக்கவில்லை. பாபா அவருக்கு மேலும் ஒரு அதிசயத்தை நிகழ்த்தினார். ஜெய்மகராஜ் வேலை நிமித்தமாக வேலூரிலிருந்து பஸ்சில் ஆற்காடு சென்று கொண்டிருந்த போது பக்கத்தில் ஜோல்னா பையுடன் நடுத்தர வயதுடைய ஒருவர் பேசிக் கொண்டு வந்தார். வேலூரில் ஜலகண்டேஸ்வரர் இருக்கிறார்.

    ஆணைகுளத்தம்மன், நாராயணி அம்மன் இந்தத் தெய்வங்களுக்கு ஆலயம் உள்ளது போல பாபாவுக்கு நீங்கள் ஏன் ஆலயம் கட்டக்கூடாது. கட்டினால் என்ன கட்டுங்கள் என்று சிறிது தோரனையாகக் கூறிவிட்டு இந்தாருங்கள் இதைப் போட்டுப் பாருங்கள் உங்களுக்குத் தேவையான ஆலயத்திற்குப் பெயர் வைப்பது முதல் கட்டிடம் கட்டுவது வரை அனைத்து விவரங்களும் இதில் அடங்கியுள்ளது எனக் கூறியபடி ஒரு சிடி.யைத் தந்திருக்கிறார்.

    ஆற்காடு பஸ் நிலையம் வந்தவுடன் இருவரும் இறங்கியபின், சந்தேகம் வந்தால் போன் நம்பர் வாங்கிப் பேசலாம் என நினைத்து அந்த ஜோல்னா பைக்காரரை தேடிப் பிடிக்க வேகமாக நடந்தார். ஆனால் முடியவில்லை. மாயமாக அவர் மறைந்து விட்டார். பாபாவுக்கு ஆலயம் எழுப்ப இந்த அதிசய மனிதர் உருவில் பாபாவே தான் வந்திருக்கிறார் என ஜெய்மகராஜ் நினைத்தார். அன்று கோவில் கட்ட தீர்மானித்தார். முழுவீச்சில் கோவில் கட்ட களம் இறங்கினார். அவர் முயற்சியால் ஸ்ரீஅற்புத ஜெய் சாய்பாபா ஆலயம் உருவானது. அந்த ஆலயத்துக்கு 2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அன்று முதல் தினசரி பூஜைகள் நடந்து வருகிறது. அந்த இடத்திற்கு கோமுகி ஷேத்ரம் என்று பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.

    அன்றிலிருந்து இன்று வரை கோவில் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் நல்ல உள்ளம் உடையவர்கள் பேருதவி செய்த வண்ணம் உள்ளார்கள். குறிப்பாக ஆரணி நாராயணன், வேலூர் காந்தி ஆகியோர் பெரும் பங்காற்றி வருகிறார்கள். வேலூரில் இருந்து 10 கி.மீட்டர் தூரத்தில் குளவிமேடு கிராமத்தில் கோமுகி ஷேத்ரம் அமைந்துள்ளது.

    இங்கே வரும் பக்தர்கள் தெய்வீகப் பேரலையினால் ஆட்கொள்ளப்படுவதுடன் சீக்கிரம் அந்த இடத்தை விட்டு திரும்ப செல்ல மனம் வராது. சீரடியில் உள்ளது போலவே 5 1/2 அடி உயர பளிங்குச்சிலை நடுநாயகமாக வீற்றிருக்க வலதுபுறம் நவநீதகிருஷ்ணன் சிலையும், இடதுபுறம் ராகவேந்தரின் சிலையும், முன்புறம் அகண்டவிளக்கு அணையா தீபம் சகிதம் பாபாவின் திருப்பாதம் தரிசனம் தருகிறது.

    இவ்வளவு பெரிய கோவில் அமையக் காரணமான பாபா அமர்ந்து தரிசனம் தந்த பாறையும், அதைச் சுற்றி இயற்கையாக வளர்ந்த வேப்ப மரங்களும் சீரடி சமாதி மந்திரை ஒட்டிய குருஸ்தான் புனித இடத்தை நினைவுக்கு கொண்டுவரும். எப்படிப்பட்ட கல்மனதையும், கரம் குவித்து வணங்க வைத்து ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி நமோ நம என பக்திபரவசம் பொங்க வணங்க வைத்துவிடும்.

    அதை ஒட்டி அமைந்துள்ள தனியான வேப்பமரக் கிளையில் அவரவர் வேண்டுதல்களைவேண்டி வளையல்கள், மஞ்சள் சரடுகள், சீட்டுகள் கட்டி போட்டுள்ளனர். அந்த பகுதியில் 45 அடி உயர ஆசிர்வாத பாபா சிலை பிரம்மாண்டமாக காட்சி தந்து விண்ணை முட்டி நிற்கிறார். அருகில் அம்மன் கோவில் ஜெய் சாயிமா வளாகத்தில் ஜம்மு-காஷ்மீர் கட்ரா வைஷ்ணவி, கோலாப்பூர் மகாலட்சுமி, காஞ்சி காமாட்சி ஆகியோரின் பளிங்குச் சிலைகள் ஸ்தாபிக்கப்பட்டு அக்டோபர் 3-ந்தேதி வியாழக்கிழமையன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    சுமார் 300 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி ஆலயம் குச்சிபாளையம் என்ற சிறிய கிராமத்தில் உள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    குச்சிபாளையம் என்ற சிறிய கிராமத்தில் உள்ளது, அங்காள பரமேஸ்வரி ஆலயம். சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், ஆரம்பத்தில் ஒரு கீற்று கொட்டகையாக இருந்தது. காலப்போக்கில் அந்த கீற்று கொட்டகை ஓட்டு குடிலாகவும், பின் கட்டிடமாகவும் உருமாறி இருக்கிறது. ஆலயத்தின் முன் பகுதியில் அழகிய மகாமண்டபம் கட்டப்பட்டு, கடந்த 2017-ம் ஆண்டு குடமுழுக்கு திருவிழா நடைபெற்றது. தற்போது ஆலயம் புத்தம் புது மெருகுடன் கண்கவர் வண்ணத்துடன் அழகாய் காட்சி தருகிறது.

    கால ஓட்டத்தில் ஆலயம்தான் உருமாறி இருக்கிறதே தவிர, ஆலயத்தில் அருள்பாலிக்கும் அன்னையின் அருளில் எந்த மாற்றமும் இல்லை. அன்றுபோல் இன்றும் குழந்தையின் நலம் காக்கும் அன்னையைப் போல, பக்தர்களின் நலன் காத்து வருகிறாள், அங்காள பரமேஸ்வரி அம்மன்.

    ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலய வளாகத்தினுள் நுழைந்ததும் வலதுபுறம் பாவாடை ராயனும், இடதுபுறம் பேச்சாயி அம்மனும் அருள்பாலிக்கின்றனர். அடுத்துள்ளது மகா மண்டபம். அர்த்த மண்டப நுழைவு வாசலின் இருபுறமும் துவார பாலகிகள் அருள்பாலிக்க, இடது புறம் விநாயகரும், வலதுபுறம் முருகனும் வீற்றிருக்கின்றனர்.

    கருவறையில் அன்னை அங்காள பரமேஸ்வரி, பீடத்தில் அமர்ந்த கோலத்தில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இளநகை தவழும் முகத்துடன் வீற்றிருக்கும் அன்னையை காண கண் கோடி வேண்டும் என்றால் அது மிகையாகாது.

    இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்ற நாளில், அன்னைக்கு லட்சார்ச்சனை செய்யப்படுகிறது. ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் பல நூறு பக்தர்கள் பால் காவடி, அலகு காவடி, கரகம், பால் குடம் சுமந்து அருகே உள்ள புனித நதியான காவிரியில் இருந்து புறப்பட்டு ஆலயம் வருவார்கள். அவர்கள் பக்திப் பெருக்குடன் வரும் காட்சி பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கும். ஊர் மக்கள் அவர்களுக்கு பாத நீராட்டி கற்பூர தீபம் காட்டி வழிபடுவர். ஆலயம் வந்ததும் அவர்கள் வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும் நிறைவுபெறும். அன்று இரவு அன்னை வீதியுலா வருவதுண்டு. இப்படி தங்கள் இல்லம் தேடி வரும் அன்னையை ஊர் மக்கள் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.

    சித்திரை மாத பவுர்ணமி அன்று அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்றும் அன்னை வீதியுலா வருவதுண்டு. தவிர அன்று கஞ்சி காய்ச்சி பக்தர்களுக்கும், ஊர் மக்களுக்கும் வழங்குவார்கள். ஆடி வெள்ளிக்கிழமைகள், தை வெள்ளிக்கிழமைகள், நவராத்திரி போன்ற நாட்களில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    இத்தல அன்னை அங்காள பரமேஸ்வரி பல குடும்பங்களுக்கு குலதெய்வமாய் விளங்குகிறாள். எனவே குல மக்கள் தங்கள் பிரார்த்தனைகள் மற்றும் நேர்த்திக் கடனை செலுத்த அடிக்கடி இங்கு வருவதுண்டு. அன்னையிடம் வேண்டிக் கொள்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது உறுதி என்கின்றனர், பக்தர்களும்.. பலன் பெற்றவர்களும்.

    இந்த ஆலயம் தினமும் காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரை, பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    ஊரின் நடுவே அமர்ந்து கிராம தேவதையாய் அருள்பாலிக்கும் அன்னை அங்காள பரமேஸ்வரி, ஊர் மக்களின் குடும்பத்தில் ஒருத்தியாய் திகழ்கிறாள் என்று பக்தர்கள் நம்புவது உண்மையே.

    அமைவிடம்

    நாகப்பட்டினம் மாவட்டம் திருநாங்கூர் அருகே உள்ளது குச்சிபாளையம் கிராமம். இங்கு தான் அங்காள பரமேஸ்வரி அன்னை அருள்கிறாள். சீர்காழி- காரைக்கால் பேருந்து பாதையில் உள்ள அண்ணன் பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் இந்த ஆலயம் உள்ளது. இத்தலம் செல்ல திருநாங்கூர், மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் இருந்து நகர பேருந்துகள் உள்ளன. ஆட்டோ வசதியும் உண்டு.

    மல்லிகா சுந்தர்

    கேரள மாநிலம் திருவல்லாவை அடுத்து ஆலப்புழை, பத்தனம்திட்டை ஆகிய மாவட்டங்களின் எல்லையில் உள்ள நீரேற்றுபுரத்தில் அமைந்திருக்கிறது, சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்.
    கேரள மாநிலம் திருவல்லாவை அடுத்து ஆலப்புழை, பத்தனம்திட்டை ஆகிய மாவட்டங்களின் எல்லையில் உள்ள நீரேற்றுபுரத்தில் அமைந்திருக்கிறது, சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த ஆலயம், ‘பெண்களின் சபரிமலை’ என அழைக்கப்படுகிறது.

    பம்பை ஆறும், மணிமலை ஆறும் மாலைபோல் இருபுறமும் ஓட, இயற்கை வளம் சூழ்ந்த பிரதேசத்தின் நடுவில் இக்கோவில் அமைந்திருக்கிறது. எட்டு கரங்களுடன் கருணை மழை பொழியும் அருள் முகத்துடன், சக்குளத்துக்காவு பகவதி அம்மன் எழிலாக அருள்பாலிக்கிறாள். பெண்கள் பலரும், இருமுடி கட்டி விரதம் இருந்து இந்த அம்மனை தரிசிக்க வருகிறார்கள். அதேபோல் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் பெரும்பாலானோர், இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

    சக்குளத்து அம்மனை தரிசனம் செய்து பிரச்சினைகள் தீர்ந்தவர்களும், நினைத்த காரியம் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தினத்தில் பொங்கல் வைத்து தேவியின் அருளைப் பெறுகிறார்கள். இந்த நாளில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக லட்சக்கணக்கான பெண்கள் மைதானங்களிலும், சாலையின் இரு புறங்களிலும் நின்றபடி, புதிய மண் பானைகளில் ஒரே நேரத்தில் பொங்கலிடுவார்கள். கோவில் முன்புறம் வைக்கப்பட்டுள்ள அடுப்பில் முக்கிய காரியதரிசி, சுப முகூர்த்த வேளையில் பொங்கல் வைப்பதற்கான அடுப்பில் தீயை பற்ற வைத்து தொடங்கி வைப்பார். அப்போது பருந்து ஒன்று கோவிலை வட்டமடித்து செல்வது முக்கிய அம்சமாகும்.

    அதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான பெண்கள் தாங்கள் அமைத்துள்ள அடுப்பில் தீயை மூட்டி பொங்கலிடுவார்கள். பின்னர் பூசாரிகள் 10 தட்டுகளை எடுத்துச்சென்று நைவேத்திய தீர்த்தம் தெளிப்பார்கள். இந்த பொங்கல் வழிபாடு கேரளாவில் மிகவும் பிரபலமானதாகும். தேவியின் அனுகிரகத்தால் நல்ல நிலையில் இருப்பவர்களும், வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருப்பவர்களும் பொங்கல் விழா நடைபெறும் நாளில் குடும்ப சகிதமாக இங்கு வந்து பொங்கல் வைத்து தேவியின் அருளைப்பெற்றுச் செல்கிறார்கள். இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    இங்கு, கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தினத்தில் கார்த்திகை ஸ்தம்பம் (சொக்கப்பனை) கொளுத்தப்படுகிறது. திருக்கார்த்திகை தீபம் ஏற்றி தேவியை எழுந்தருளச் செய்வதன் மூலம் தீமைகள் அகன்று வாழ்வில் நன்மைகள் பல உண்டாகும் என்பது ஐதீகம்.

    வருகிற17-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை இக்கோவிலில் திருவிழா நாட்களாகும். இந்த நாட்களில் 12 நாட்கள் விரதம் இருந்து சபரிமலையை போல் பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து தேவியை வழிபடுகிறார்கள். 27-ந் தேதி மண்டல பூஜை நாளில் குழந்தைகளின் ஆயுள் - ஆரோக்கியம் பெருகவும், நன்கு படிப்பதற்கும், திருமண பாக்கியம் கிடைக்க மாங்கல்ய கலசம் ஆகிய பூஜைகள் உண்டு. அன்றைய தினம் ஒரு லட்சம் கலசங்களில் தேவிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒரே நாளில் இவ்வளவு கலசங்களில் அபிஷேகம் செய்யப்படுவது வேறு எங்கும் நடைபெறுவதில்லை என்று சொல்கிறார்கள். அன்றைய தினத்தில் தங்கத் திருவாபரணங்கள் மேள-தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, தேவிக்கு சார்த்தப் பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்படும்.

    அமைவிடம்

    கேரளாவின் பல பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட கேரள அரசு பஸ்கள் நேரடியாக இயக்கப்படுகிறது. திருவல்லா ரெயில் நிலையத்தில் இருந்து தகழி சாலையில் 10 கிலோமீட்டர் தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு கோட்டயம், சங்கனாச்சேரி, ஆலப்புழை, செங்கன்னூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

    மூலிகை தீர்த்தம்

    தமிழ் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை இந்த ஆலயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. நாவில் தேவியின் மந்திரமும், மனதில் தேவியின் ரூபமுமாய் இந்த நாளில் இங்கு பக்தர்கள் கூட்டமாக வருகை தருகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் பல மூலிகைகள் கொண்டு தீர்த்தம் தயாரிக்கப்பட்டு தேவிக்கு அபிஷேகம் செய்து, அந்த தீர்த்தம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த தீர்த்தத்தைக் குடித்தால் பலவித நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. முதல் வெள்ளிக்கிழமை அன்று தேவியை கோவிலுக்கு வெளியே எழுந்தருளச் செய்து, ஜாதி - மத பேதம் இன்றி சர்வமத பிரார்த்தனை நடைபெறுகிறது. இது ஐஸ்வரியத்துக்கு வழிகாட்டுகிறது.

    வெற்றிலை ஜோதிடம்

    தேவியின் அருள்பெற்ற இக்கோவிலின் முக்கிய காரியதரிசியான நம்பூதிரி, 7 வெற்றிலையும், ஒரு பாக்கையும் கொண்டு மிக துல்லியமாக சொல்லும் வெற்றிலை ஜோதிட பிரசன்னம் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. ஜோதிட கணிப்பின் மூலம் செய்து முடிக்கும் பரிகாரங்கள் வெற்றிக்கு வழிகாட்டுகிறது. கேரளாவில் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பிரமுகர்களும் தங்களது எதிர்காலத்தையும், பிரச்சினைகளையும் அறிந்து கொள்ள இங்கு வருகை தருகிறார்கள்.

    நாரி பூஜை (பாத பூஜை)

    உலகில் எங்கும் இல்லாத ஒரு சம்பிரதாயமாக இக்கோவிலில் ‘நாரி பூஜை’ நடக்கிறது. பெண்களை பீடத்தில் அமரச் செய்து, தேவியாக பாவித்து அவர்களின் பாதத்தை தலைமை பூசாரி தனது கைகளால் கழுவி அவர்களுக்கு பூஜைகள் செய்து வணங்குகிறார்கள். எங்கெல்லாம் பெண்கள் ஆராதிக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒரு பெண்ணிற்கு முதல் மரியாதை கொடுக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பாத பூஜை நடத்தப்படும். இந்த ஆண்டின் நாரி பூஜை 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
    கிருஷ்ண ஷேத்திரங்களான 5 தலங்களில் முதலாவது தலம் என்ற பெருமை உடையது விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள உலகளந்தபெருமாள் கோவில்.
    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உலகளந்தபெருமாள் கோவில் உள்ளது. இது பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்களான 5 தலங்களில் முதலாவது தலம் என்ற பெருமை உடையது. மேலும் 108 திவ்ய தேசங்களில் ஒன்று என்ற சிறப்பு வாய்ந்தது.

    நாலாயிர திவ்யபிரபந்தம் ஆழ்வார்களால் முதன் முதலில் பாடப்பெற்றது என்ற பெருமையும் இக்கோவிலுக்கு உண்டு. இதனால் நாலாயிரபிரபந்த அவதார தலம் என்றும் அழைப் பார்கள். பெருமாளை தமிழ் பாசுரங்களில் பாடியவர்களும், ஆழ்வார்களில் முதன் முதல் தோன்றியவர்களுமான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய 3 ஆழ்வார்களும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளை நேரில் தரிசித்து பாசுரங்கள் பாடி மகிழ்ந்தனர். இதனை நடுநாட்டு திருப்பதி என்றும் அழைப்பார்கள்.

    இந்த கோவில் ஊரின் நடுவே சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமையப் பெற்றுள்ளது. மூலவர் உலகளந்த பெருமாள் மிகப்பெரிய உருவத்துடன் இடது காலை பூமியிலும், வலது காலை ஆகாயத்தை அளக்கும் வகையில் உயர்த்தியும் இருக்கும் வகையில் பிரம்மாண்டமாக வடிவமைத்துள்ளனர். உலகளந்த பெருமாளை தரிசிக்க வருபவர்கள் யாராக இருந்தாலும் அவரது திருமேனியை அண்ணாந்துதான் பார்க்கவேண்டும். இச்சிலையில் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரமும் ஏந்தி பக்தர்களுக்கு ஞானத்தை வழங்குவதாக ஒரு ஐதீகம் உள்ளது.

    கோபுரங்கள்

    இந்த கோவில் மற்றும் கோபுரங்கள் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவ அரசர்களால் பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இக்கோவிலுக்கு கிழக்கு கோபுரம் மற்றும் மேற்கு கோபுரங்கள் மிகப்பெரியதாக இருக்கும். கோவில் வாசலில் உள்ள ராஜகோபுரம், திருமங்கை மன்னன் கோபுரம் என மொத்தம் 4 கோபுரங்கள் உள்ளன. மேலும் பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி தனித்தனியே உள்ளது. இங்குள்ள தாயார் சன்னதி மிக நீண்ட சன்னதி என்ற பெருமை கொண்டது.

    பழமையான ஆலயம்

    திரிவிக்கிரம அவதார தலம் இது. பகவானின் வலக்கையில் சங்கும், இடக்கையில் சக்கரமும், இங்கு மாறித் தென்படுகின்றன. முதலாழ் வார்கள் மூவரும், இந்தத் திவ்ய தேசத்தின், ஒரு வீட்டின் இடைகழியில் சந்தித்து, பகவானையும் பிராட்டியோடு சேவித்து, அந்தாதி பாடின தலம். திருமங்கையாழ்வார், பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூவரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற தலம் இது.

    மகாபலி, மிருகண்டு முனிவர் பிரம்மன், இந்திரன், குட்சி, சவுகர், காச்யபர், காலவரி, குசத்வஜன் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் ஆகியோருக்கு இத்தலப் பெருமாள் பல தடவை நேரிடையாகத் தரிசனம் கொடுத்துள்ளார். இந்தக் கோவில் பஞ்ச கிருஷ்ணாரண்ய சேத்திரங்களில் ஒன்று. ஒரு சமயம் மிருகண்டு முனிவர் இந்த தலத்திற்கு வந்து திருமாலை நோக்கி தவம் செய்தார். திருமாலும் மிருகண்டு முனிவருக்குத் தரிசனம் காட்டி என்ன வேண்டும் என்று கேட்க தனக்கு வாமன அவதாரம் காட்சியை மீண்டும் காட்ட வேண்டும் என்றார்.

    பெருமாளும் உடனே வலது காலை விண்ணில் வைத்து இடது காலை பூமியில் அழுத்தி வாமன அவதாரத்தைக் காட்டினார். இன்னொரு சமயம் இங்கு தங்கி தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களைத் துன்புறுத்திய பாதாள கேது என்ற அரக்கனை திருமால் குசத்வஜன் என்ற மன்னன் மூலம் கொன்று முனிவர்களது பயத்தைப் போக்கியதாக வரலாறு உண்டு. கி.மு.500 -ம் ஆண்டில் கட்டப்பட்ட கோவில் என்பது மிகவும் பிரசித்தம்.

    சொர்க்கவாசல் திறப்பு

    இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிக முக்கியமானது சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி. அடுத்து பங்குனி மாதம் நடைபெறும் பங்குனி பிரம்மோற்சவம். இந்த நிகழ்ச்சி 15 நாட்கள் நடைபெறும், மேலும் ஆவணி மாதத்தில் நடைபெறும் ஸ்ரீருக்மணி சத்தியபாமா, சமேத ஸ்ரீவேனு கோபாலசாமி ஜெயந்தி உற்சவம் சிறப்பானது. இது 11 நாட்கள் நடைபெறும். மேலும் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் இந்த கோவிலில் தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

    இங்கு விஷ்ணுவும், துர்க்கையும் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக் கிறார்கள். மூலவரின் திருமேனி தருவால் (மரம்) ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் நின்ற கோலத்தில் வேறு எங்கும் கிடையாது. சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். சிவாலயங் களின் சுற்றுப்பிரகாரத்தில் தான், விஷ்ணு துர்க்கையைக் காண முடியும். ஆனால், 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி அருகிலேயே விஷ்ணு துர்க்கை அருள்பாலிக் கிறார்கள். இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம்.

    பதவி உயர்வு


    நல்ல பதவிகளை அடைய விரும்புபவர்களும், பதவி உயர்வு வேண்டு பவர்களும், பதவி இழந்தவர்களும் இந்த கோவிலில் வந்து பிரார்த்தனை செய்வார்கள். அவ்வாறு செய்தால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோவிலின் தனிச்சிறப்பு. கல்யாண பாக்கியம், குழந்தை வரம் ஆகியவை வேண்டியும் பலர் வந்து வழிபடுகின்றனர். அவர்களது வேண்டுதல் நிறை வேறுகின்றன. இங்குள்ள சக்கரத்தாழ்வார் விஷ்ணு சொரூபமாக இருப்பதால் சத்ருக்கள் (எதிரிகள்) தொல்லை நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    கோவில் நடைதிறக்கும் நேரம்

    இந்த கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, முன்பகல் 11.30 மணிக்கு நடை சாற்றப்படுகிறது. அதேபோல் மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு சாற்றப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் கூடுதல் நேரம் கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும்.
    ×