search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாய்பாபா
    X
    சாய்பாபா

    வேலூரில் பாறையில் காட்சியளித்த சாய்பாபா

    சீரடி சாய்பாபாவின் தரிசனம் நேரடி காட்சியாகவே ஒருவருக்கு கிடைத்திருக்கிறது. இந்த வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    சீரடி சாய்பாபாவின் தரிசனம் நேரடி காட்சியாகவே ஒருவருக்கு கிடைத்திருக்கிறது. அந்த அளவுக்குப் பாக்கியம் பெற்றவர் ஜெய்குமார் என்கிற ஜெய்மகராஜ். வேலூரில் மருந்து கம்பெனி நடத்தி வருகிறார்.

    ஒருமுறை அவர் தன் மகள் வைஷ்ணவியுடன் வேலூர் ஒட்டேரி கூட்டு வழிச்சாலையில் இருந்து பாலமதி முருகன் கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு குளவிமேடு இயற்கை எழில் நிறைந்த மலைப்பகுதி வழியாக திரும்பி கொண்டிருந்தார். அப்போது மலை அடிவாரத்தை ஒட்டி பாறை ஒன்றினை எதேச்சையாகப் பார்த்தார். அங்கு ஒரு அற்புதத்தைக் கண்டார்.

    அந்தப் பாறைமேல் கால்மேல் கால் போட்டப்படி தந்தை மகள் இருவரையும் பார்த்து சிரித்தப்படி கையசைத்து அருகில் வருமாறு அழைத்திருக்கிறது ஒரு உருவம். அவர் சற்று அருகில் வந்து பார்த்த போது சீரடி சாய்பாபாவை ஒத்திருந்தது அந்த உருவம். சாலையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள அந்த இடத்தை நோக்கி வாகனத்தில் இருந்து இறங்கி ஓடிவந்தனர்.

    அதுமாலை நேரம் அருகில் செல்லச் செல்ல அங்கிருந்த பாபா உருவம் சிறிது சிறிதாக மறைந்து திடீரென்று அந்தப் பாறை முழுவதும் ஜெகஜோதியாக செந்நிறமாக மாறியது. இங்கே அமர்ந்தவரை எங்கே காணோம் எனத் திகைத்து மேலே பார்க்க வானமே குபீரென்று தங்கமயமாக மாறி இருக்க அதையே பாபாவின் திவ்ய சொரூபமாக உணர்ந்து மெல்ல மெல்ல தன் நிலைக்கு வந்தவர் பாறையைத் தொட்டு வணங்கியபின் தன் மகளுடன் வீடு திரும்பிவிட்டார்.

    அன்று இரவு முழுவதும் பாபாவின் நினைவு அவரை ஆட்கொண்டது மட்டுமல்லாமல் தூக்கமில்லாமல் செய்துவிட்டது. அதற்கொரு காரணம் இல்லாமல் இல்லை. பாபா அமர்ந்திருந்த பாறையை வணங்கியபின் தன் இருசக்கர வாகனத்தில் ஏறி புறப்பட தயாரான போது சாலையில் இருள் சூழ்ந்த அந்த மாலை நேரத்தில் அங்குள்ள மக்கள் தங்கள் ஆடு, மாடுகளை மேய்த்து விட்டு ஊர்திரும்பும் வேளையில் ஒரு பெரியவர் மட்டும் ஆடுகளை ஓட்டிக் கொண்டு மலைப்பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

    இந்த வேளையில் பெரியவர் ஏன் மலைப்பகுதிக்கு செல்ல வேண்டும் என்று ஜெய்மகராஜ் நினைத்துக் கொண்டிருந்த போது பெரியவர் அங்கு நின்று இவரைத் திரும்பி பார்த்து இந்த இடம் விலைக்கு வர இருக்கிறது வாங்கிக் கொள்ளுங்கள் என்று அவராகவே கூறிவிட்டு ‘விறுவிறு’ வென்று நிற்காமல் போய்விட்டார். இது அவருக்கு சாய்பாபா நேரடியாக கூறியது போல் இருந்தது.

    மறுநாள் பொழுது விடிந்ததும் முதல் வேலையாக தன் நண்பருடன் பாபா அமர்ந்த பாறை இருந்த இடத்துக்குச் சொந்தக்காரரைப் பார்க்க புறப்பட்டு விட்டார். அந்த இடத்தைத் தனக்கு விலைக்கு தருமாறு கேட்க சென்றார். இடத்து உரிமையாளர் தருகிறேன். ஆனால் பாறை உள்ள பகுதி மட்டும் தான் என்னுடையது. மீதி சாலைப் பக்கத்தில் உள்ளது என் அண்ணனுடையது அவர் யாருக்கோ அதை விலைபேசி அட்வான்ஸ்கூட வாங்கி விட்டார் என்று கூறினார். என்ன செய்வது என்று ஜெய்மகராசும் நண்பரும் புரியாமல் திகைத்தனர்.

    இந்தத் திகைப்பு வெகுநேரம் நீடிக்கவில்லை. சில நிமிடங்களிலேயே அந்த அதிசயம் நடந்தது. முன்பகுதி இடத்தின் உரிமையாளர் திடீரென்று அங்கே வந்திருக்கிறார். தன் தம்பியிடம் இவர்கள் யார் எதற்காக இங்கே வந்திருக்கிறார்கள் என்பதை யெல்லாம் கேட்டுவிட்டு அடுத்த கணம் ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்தவர் அந்த இடம் வேண்டாம் என்று அட்வான்ஸை திருப்பி வாங்கிக் கொண்டு போய்விட்டார்.

    இப்பொழுது உங்களுக்கே அதைத் தருகிறேன். வாங்கிக் கொள்கிறீர்களா? என்றவுடன் பாபா தான் இப்படி ஒரு வழியை நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறார் என்று மகிழ்ச்சியில் துள்ளி தன்னிடமிருந்த பணம் ரூ-.10,001ஆக அட்வான்ஸ் கொடுத்து விட்டு சென்றனர்.அன்று மாலையே ஓடோடிச்சென்று பாறை மீது பாபா உருவப்படத்தை வைத்து கற்பூர ஆரத்தி காட்டி வழிபாடு செய்தார். அன்றிலிருந்து அது அருள்தரும் பாபா பாறையானது.

    முதலில் அந்த இடத்தின் வடமேற்கு மூலையில் தன் குடும்ப வழிபாட்டுக்காக சாய்பாபா, கிருஷ்ணர், ராகவேந்திரர் என்ற அளவில் வழிபாடு செய்யத் திட்டமிட்டு இருந்தார். ஆனால், காலத்தின் கட்டளை பாபாவின் எண்ணம் அப்படி இருக்கவில்லை. பாபா அவருக்கு மேலும் ஒரு அதிசயத்தை நிகழ்த்தினார். ஜெய்மகராஜ் வேலை நிமித்தமாக வேலூரிலிருந்து பஸ்சில் ஆற்காடு சென்று கொண்டிருந்த போது பக்கத்தில் ஜோல்னா பையுடன் நடுத்தர வயதுடைய ஒருவர் பேசிக் கொண்டு வந்தார். வேலூரில் ஜலகண்டேஸ்வரர் இருக்கிறார்.

    ஆணைகுளத்தம்மன், நாராயணி அம்மன் இந்தத் தெய்வங்களுக்கு ஆலயம் உள்ளது போல பாபாவுக்கு நீங்கள் ஏன் ஆலயம் கட்டக்கூடாது. கட்டினால் என்ன கட்டுங்கள் என்று சிறிது தோரனையாகக் கூறிவிட்டு இந்தாருங்கள் இதைப் போட்டுப் பாருங்கள் உங்களுக்குத் தேவையான ஆலயத்திற்குப் பெயர் வைப்பது முதல் கட்டிடம் கட்டுவது வரை அனைத்து விவரங்களும் இதில் அடங்கியுள்ளது எனக் கூறியபடி ஒரு சிடி.யைத் தந்திருக்கிறார்.

    ஆற்காடு பஸ் நிலையம் வந்தவுடன் இருவரும் இறங்கியபின், சந்தேகம் வந்தால் போன் நம்பர் வாங்கிப் பேசலாம் என நினைத்து அந்த ஜோல்னா பைக்காரரை தேடிப் பிடிக்க வேகமாக நடந்தார். ஆனால் முடியவில்லை. மாயமாக அவர் மறைந்து விட்டார். பாபாவுக்கு ஆலயம் எழுப்ப இந்த அதிசய மனிதர் உருவில் பாபாவே தான் வந்திருக்கிறார் என ஜெய்மகராஜ் நினைத்தார். அன்று கோவில் கட்ட தீர்மானித்தார். முழுவீச்சில் கோவில் கட்ட களம் இறங்கினார். அவர் முயற்சியால் ஸ்ரீஅற்புத ஜெய் சாய்பாபா ஆலயம் உருவானது. அந்த ஆலயத்துக்கு 2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அன்று முதல் தினசரி பூஜைகள் நடந்து வருகிறது. அந்த இடத்திற்கு கோமுகி ஷேத்ரம் என்று பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.

    அன்றிலிருந்து இன்று வரை கோவில் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் நல்ல உள்ளம் உடையவர்கள் பேருதவி செய்த வண்ணம் உள்ளார்கள். குறிப்பாக ஆரணி நாராயணன், வேலூர் காந்தி ஆகியோர் பெரும் பங்காற்றி வருகிறார்கள். வேலூரில் இருந்து 10 கி.மீட்டர் தூரத்தில் குளவிமேடு கிராமத்தில் கோமுகி ஷேத்ரம் அமைந்துள்ளது.

    இங்கே வரும் பக்தர்கள் தெய்வீகப் பேரலையினால் ஆட்கொள்ளப்படுவதுடன் சீக்கிரம் அந்த இடத்தை விட்டு திரும்ப செல்ல மனம் வராது. சீரடியில் உள்ளது போலவே 5 1/2 அடி உயர பளிங்குச்சிலை நடுநாயகமாக வீற்றிருக்க வலதுபுறம் நவநீதகிருஷ்ணன் சிலையும், இடதுபுறம் ராகவேந்தரின் சிலையும், முன்புறம் அகண்டவிளக்கு அணையா தீபம் சகிதம் பாபாவின் திருப்பாதம் தரிசனம் தருகிறது.

    இவ்வளவு பெரிய கோவில் அமையக் காரணமான பாபா அமர்ந்து தரிசனம் தந்த பாறையும், அதைச் சுற்றி இயற்கையாக வளர்ந்த வேப்ப மரங்களும் சீரடி சமாதி மந்திரை ஒட்டிய குருஸ்தான் புனித இடத்தை நினைவுக்கு கொண்டுவரும். எப்படிப்பட்ட கல்மனதையும், கரம் குவித்து வணங்க வைத்து ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி நமோ நம என பக்திபரவசம் பொங்க வணங்க வைத்துவிடும்.

    அதை ஒட்டி அமைந்துள்ள தனியான வேப்பமரக் கிளையில் அவரவர் வேண்டுதல்களைவேண்டி வளையல்கள், மஞ்சள் சரடுகள், சீட்டுகள் கட்டி போட்டுள்ளனர். அந்த பகுதியில் 45 அடி உயர ஆசிர்வாத பாபா சிலை பிரம்மாண்டமாக காட்சி தந்து விண்ணை முட்டி நிற்கிறார். அருகில் அம்மன் கோவில் ஜெய் சாயிமா வளாகத்தில் ஜம்மு-காஷ்மீர் கட்ரா வைஷ்ணவி, கோலாப்பூர் மகாலட்சுமி, காஞ்சி காமாட்சி ஆகியோரின் பளிங்குச் சிலைகள் ஸ்தாபிக்கப்பட்டு அக்டோபர் 3-ந்தேதி வியாழக்கிழமையன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    Next Story
    ×