என் மலர்tooltip icon

    கோவில்கள்

    திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சமயபுரம் செல்லும் வழியில், திருவரங்கம் அருகில் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருவானைக்காவல் திருத்தலம் அமைந்துள்ளது.
    துன்பமும் இன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. இந்த உண்மையை அறிந்து ஏற்று வாழ்ந்தால் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியே.

    துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர்
    இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
    எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு
    அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே'

    என்கிறார் அப்பர் என்றழைக்கப்படும் திருநாவுக்கரசர். ‘துன்பமும் துயரமும் இன்றி, என்றும் குன்றாத இன்பத்தை விரும்புவீா்களேயானால், இரவு - பகல் எப்பொழுதும் திருஆனைக்காவல் அண்ணல் ஜம்புகேஸ்வரரை வழிபடுவீராக’ என்பது இதன் பொருள்.

    நமது உடலில் நவ துவாரங்கள் எனப்படும் ஒன்பது வாசல்கள் உள்ளன. புலன்களால் பெறும் இன்பம் நிலையில்லாதது. முதலில் இன்பமாகத் தோன்றி, பின் துன்பத்தைத் தருவதாகும். எனவே துன்பமும் துயரமும் இன்றி என்றும் நிலையான இன்பத்தை பெற நினைக்கும் மனிதன், தன் உடலிலுள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டும்.

    இதை எடுத்துணர்த்தும் விதமாகத்தான் திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கருவறை எதிரில் வாசல்கள் கிடையாது. அதற்குப் பதிலாக ஒன்பது துவாரங்களுடன் கூடிய கல் ஜன்னல்களே காணப்படுகின்றன. இதனை ‘திருச்சாலகம்’ என்கிறார்கள். பக்தர்கள் இந்த ஒன்பது துளை வழியேதான் சுவாமியை தரிசிக்க வேண்டும்.

    ஜம்புகேஸ்வரரை கருவறை முன் உள்ள ஒன்பது துளைகள் வழியாக, தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் வழிபட்டு வந்தால் நவக்கிரக தோஷங்கள் யாவும் விலகும். இங்குள்ள மூலவர் சன்னிதி, சிறிது சிறிதாக கீழே இறங்கி, தரைமட்டத்துக்கும் கீழே அமைந்துள்ளது. இங்கு கருவறைக்குள் நீர் கசிந்துகொண்டே இருக்கிறது. ஆம்! இத்தல சிவலிங்கமே, காவிரி நீரால் உருவாக்கப்பட்டதுதான் என்கிறது தலபுராணம்.

    அதனால்தான் இத்தலம் பஞ்சபூத தலங்களில் நீருக்கு உரித்தானதாக குறிப்பிடப்படுகிறது. ஐப்பசி மாதம் என்பது மழைக் காலம். இந்தக் காலத்தில் ஈசனின் கருவறைக்குள் அதிக ஈரம் கசிந்து அதிகமான நீர் சுரப்பதால் ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று செய்ய வேண்டிய அன்னாபிஷேகத்தை, இந்தத் திருத்தலத்தில் மட்டும் வைகாசி பவுர்ணமியன்று செய்கிறார்கள்.

    ஒருமுறை தியானத்தில் இருந்த ஈசனிடம், அன்னை உமையவள் தமக்கு யோகத்தையும், போகத்தையும் போதித்தருளுமாறு வேண்டுகிறாள். உடனே ஈசன், “உமையவளே, பூமியின் நடுப்பாகத்தில் காவிரிக் கரையோரம் உள்ள ஞானபூமியை அடைந்து தவமியற்று. அங்கு யாம் வந்து உரிய காலத்தில் உபதேசம் அருள்வோம்” என்றுரைத்தார்.

    அதன்படி அன்னை உமையவள் கொள்ளிடத்துக்கும், காவிரிக்கும் இடையில் அமைந்த வெண் நாவல் மரங்கள் நிறைந்த, இத்தலத்தை அடைந்து காவிரி நீரைத் திரட்டி லிங்கத் திருஉருவம் அமைத்து தவமியற்றி வந்தாள். எனவே இத்தல ஈசனுக்கு ‘நீர்த்திரள் நாதர்’ எனும் திருப்பெயரும் உண்டு. உமையவளின் தவத்திற்கு இரங்கி அந்த நீர் லிங்கத்திலேயே திருக்காட்சி கொடுத்து, யோக - போக தத்துவத்தை போதித்தார் சிவபெருமான்.

    சிவபெருமான் குருவாகவும், உமையவள் மாணவியாகவும் இருந்து இங்கு உபதேசம் பெற்றதால், இத்தல அம்பாள் அகிலாண்டேஸ்வரிக்கும், இத்தல மூலவர் ஜம்புகேஸ்வரருக்கும் திருமண வைபவம் நடத்தப்படுவது இல்லை. அதுபோல இங்கு தினமும் பள்ளியறைக்கு ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் எழுந்தருளுவதற்குப் பதிலாக, மீனாட்சி - சொக்கரே எழுந்தருள்கின்றனர். ஆண்டுதோறும் ஆடி வெள்ளியில் அகிலாண்டேஸ்வரியை மாணவியாக பாவித்து, இத்தல ஈசனான ஜம்புகேஸ்வரர் குருவாக இருந்து உபதேசம் செய்யும் விழா சிறப்பாக நடத்தப்படுகிறது.

    பவுர்ணமி தோறும் அகிலாண்டேஸ்வரி அம்பாள் சன்னிதியில் உள்ள மகா மேருவிற்கு ‘நவாவரண பூஜை’ சிறப்பாக நடக்கிறது. 51 சக்தி பீடங்களில் ‘ஞானசக்தி பீடம்’ எனும் வராஹி பீடத் தலமாக இத்தலம் விளங்குகிறது. இங்கு அகிலாண்டேஸ்வரி அம்மன் காலையில் லட்சுமியாகவும், பகலில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும், இரவில் வராஹியாகவும் திருக்காட்சித் தருகிறாள்.

    தல வரலாறு

    முற்காலத்தில் காவிரியின் ஓரத்தில் வெண்நாவல் மரத்தின்கீழ் இருந்த சிவலிங்கத்திற்கு, சிலந்தி ஒன்றும், யானை ஒன்றும் அனுதினமும் பூஜை செய்து வந்தன. சூரிய வெப்பம் சிவலிங்கத்தின் மீது விழுவதை தடுக்கவும், நாவல் இலை சருகுகள் விழாதிருக்கும் பொருட்டும் சிலந்தி தனது வாயால் சிவலிங்கத்தின் மேல் பகுதியில் வலை பின்னியது.

    அதே நேரத்தில் யானை, தனது துதிக்கையில் காவிரிநீர் எடுத்துவந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டது. யானை அபிஷேகம் செய்யும்போது, சிலந்தியின் வலையை பிய்த்து எறிந்துவிடும். இதனால் கோபம்கொண்ட சிலந்தி, யானையின் துதிக்கையில் புகுந்து கடித்தது. வலி தாங்க முடியாமல் பிளிறிக்கொண்டே யானை தனது தும்பிக்கையை தரையில் ஓங்கி அடித்தது. இதனால் சிலந்தியும், யானையும் மடிந்தன. யானை பின்னாளில் சிவகணங்களின் தலைவன் ஆகியது. சிலந்தியோ மறுபிறப்பில் கோச்செங்கட் சோழனாகப் பிறந்ததாக தல வரலாறு கூறுகிறது.

    முற்பிறவி நினைவால் அரசனாக இருந்த கோச்செங்கட் சோழன், யானை புக முடியாத வாசல் கொண்ட மாடக்கோவில்களை சிவபெருமானுக்காக எழுப்பினான். அப்படி அந்த மன்னன் கட்டிய முதல் திருக்கோவில் திருவானைக்கா எனும் திருவானைக்காவல் திருத்தலமாகும். யானை இங்கு சிவலிங்கத் திருமேனியைக் காத்து நின்று முக்தி அடைந்ததால் இத்தலம் திருவானைக்காவல் என்றானது.

    இங்கு ஈசன் மேற்கு நோக்கியும், அம்பாள் கிழக்கு நோக்கியும் இருந்து அருள்பாலிக்கின்றனர். இத்தல ஜம்புகேஸ்வரரை 11 முறை வலம்வந்து வழிபடுவது சிறப்பாக சொல்லப்படுகிறது. வல்வினைகள் எனும் பாதகங்கள், கிரக தோஷ கெடு பலன்கள், உடல் நோய்கள், வறுமை, பாவங்கள் விலகிச் செல்ல ஜம்புகேஸ்வரரை வலம்வந்து வழிபட வேண்டும்.

    இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை எழுப்பிய பணியாளர்களுக்கு, சிவபெருமானே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து, திருநீற்றை கூலியாகக் கொடுத்ததாகவும், அது பின்னர் அவரவர் உழைப்புக்கு ஏற்ற வகையில் தங்கமாக மாறியதாகவும் தலபுராணம் கூறுகிறது. இதனால்தான் இத்தல நான்காவது திருச்சுற்று மதிலை ‘திருநீற்றான் மதில்' என்று அழைக்கிறார்கள். மாதந்தோறும் பவுர்ணமி நாளின் அந்திப் பொழுதில் இந்த திருநீற்றான் மதிலை, திருமுறைகளை பாராயணம் செய்தபடி வலம் வந்து வழிபடும் ‘திருநீற்றான் மதில் வலம்' வரும் நிகழ்வு இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    அமைவிடம்

    திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சமயபுரம் செல்லும் வழியில், திருவரங்கம் அருகில் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருவானைக்காவல் திருத்தலம் அமைந்துள்ளது.

    சிவ.அ.விஜய் பெரியசுவாமி
    அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோடாலி கருப்பூர் என்ற இந்த தலம் கோவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடாலி கருப்பூர் என்பது ஒரு கிராமமே. ‘கருப்பூர்’ என்ற பெயரில் தமிழகத்தில் நிறைய ஊர்கள் உள்ளன. இந்த ஊர் பக்கத்து ஊரான கோடாலியை தன்னுடன் இணைத்துக் கொண்டு ‘கோடாலி கருப்பூர்’ என அழைக்கப்படுகிறது.

    இங்குள்ள ஆலயத்தின் பெயர், ‘ஸ்ரீ ராம நாராயண பெருமாள் ஆலயம்’ என்பதாகும். இந்தக் கோவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் கம்பீரமாக காட்சி தருகிறது.

    உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம். நடுவே பீடம். அதை அடுத்து கொடிமரம். அதன் பிறகு கருடாழ்வார் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். அடுத்துள்ள சிறப்பு மண்டபத்தை அடுத்து மகாமண்டபம் உள்ளது.

    மகாமண்டபத்தின் வலதுபுறம் ஆழ்வார்களின் திருமேனிகள் உள்ளன. அடுத்துள்ள அர்த்த மண்டபத்தை தொடர்ந்து உள்ள கருவறையில் ஸ்ரீராம பிரான், சீதாதேவி மற்றும் லட்சுமணனுடன் சேவை சாதிக்கிறார். ராமரின் திரு உருவம் புன்னகை தவழும் இன்முகத்துடன் விளங்குவதுடன், அவர் கரங்களில் உயரமான வில் மற்றும் அம்புகள் உள்ளன.

    மேற்கு பிரகாரத்தில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி - பூதேவியுடன் தனிச் சன்னிதியில் சேவை சாதிக்கிறார். இங்கு புரட்டாசி சனி, வைகுண்ட ஏகாதசி, ராம நவமி ஆகிய நாட்களில் மூலவருக்கும், தேவியர்களுக்கும், ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    இங்குள்ள ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி அன்று சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. தினசரி இரண்டு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயத்தில், விசேஷ நாட்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    திருமணத் தடையை விலக்குவதிலும், விரைந்து திருமணம் நடைபெற அருள் புரிவதிலும் இங்குள்ள ஆஞ்சநேயர் வல்லவர் என பக்தர்கள் கூறுகின்றனர். ஆஞ்சநேயரிடம் வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும், அவருக்கு வடை மாலை சாத்தி, தயிர் சாதப் பிரசாதத்தை பக்தர்களுக்கு வினியோகம் செய்து மகிழ்கின்றனர்.

    மனவேறுபாடுகளால் கவலைப்படும் தம்பதிகள், இங்கு வந்து ஸ்ரீ ராமபிரானையும், சீதாதேவியையும் வேண்டிக் கொள்கின்றனர். சில தினங்களிலேயே அவர்களிடையே உள்ள பிணக்கு மறைந்து மனம் மகிழும் தம்பதிகளாய் வாழத் தொடங்குவது கண்கூடாக காணும் உண்மை என்கின்றனர் பக்தர்கள்.

    இப்படி மனம் மகிழும் தம்பதிகள் இங்கு வந்து ஸ்ரீ ராமபிரானுக்கும் சீதாதேவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து, தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் கூடி நிற்கும் பக்தர்களுக்கு வித விதமான பிரசாத வகைகளை வினியோகம் செய்தும் மகிழ்கிறார்கள்.

    சொத்துப் பிரச்சினையால் தனித்து நிற்கும் சகோதரர்களில் யாராவது ஒருவர் இங்கு வந்து ராம பிரான், சீதாதேவி, லட்சுமணன் ஆகியோரை வணங்க, சகோதரர்களின் பிணக்கு தீர்ந்து இருவரும் ஒரு சுமுக முடிவுக்கு வருவார்கள். இது இத்தல ராமபிரானின் அருளால்தான் என்று பக்தர்கள் சிலிர்ப்போடு விவரிக்கின்றனர்.

    தம்பதிகளிடையே ஒற்றுமை, சகோதரப் பிணைப்பு ஆகியவை இங்குள்ள ராமபிரானின் அருளால் நிறைவேறுவதால் சனிக்கிழமை மட்டுமின்றி ஏனைய நாட்களிலும் இந்த ஆலயம் தேடி நிறைய பக்தர்கள் வருகை தருவது கண்கூடான நிஜமே. இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோடாலி கருப்பூர் என்ற இந்த தலம், கும்பகோணத்தில் இருந்து அணைக்கரை செல்லும் நெடுஞ்சாலையில் அணைக்கரையில் இருந்து வடமேற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

    மல்லிகா சுந்தா்
    சோளிங்கர் வழித்தடத்தில் 750 ஆண்டுகள் பழமை வாய்ந்த பரமபதநாதர் வீற்றிருக்கும் ஆலயம் இருக்கிறது. அரசுக் குறிப்பேடுகளில் கோதண்டராம சுவாமி ஆலயம் என்று அழைக்கப்படுகிறது.
    சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில், வேலூர் மாவட்டம் நெமிலி தாலுக்காவில், காவேரிப்பாக்கம் - சோளிங்கர் வழித்தடத்தில் சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் திசைமுகன்சேரி என்ற கிராமம் உள்ளது. இங்கு பரமபதநாதர் வீற்றிருக்கும் 750 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் இருக்கிறது. அரசுக் குறிப்பேடுகளில் கோதண்டராம சுவாமி ஆலயம் என்று அழைக்கப்படும், இந்தக் கோவில் இருக்கும் ஊர் தற்போது ‘ஐயம்பேட்டை சேரி’ என்று அழைக்கப்படுகிறது.

    இத்திருக்கோவிலின் கர்ப்பக்கிரக பின்புற மதில் சுவரில் உள்ள குறிப்பின் மூலம், 1881-ம் ஆண்டில் 10 பேர் ஒத்துழைப்புடன் இத்திருக்கோவில் திருப்பணி நடந்ததாக அறியப்படுகிறது. பக்தி மார்க்கத்தில் திளைக்கும் ஆன்மிகக் கொடையளிப்பவர்கள், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெருமக்கள் மற்றும் தனவான்கள், தங்களால் இயன்ற பணக்கொடை ஈந்து, ‘கோதண்டராம சுவாமி பக்த ஜன ஸபா’ என்ற அமைப்பை ஏற்படுத்தி திருப்பணிகளை மேற்கொண்டனர்.

    ‘சத்யவ்ரத ஷேத்திரம்’ என்னும் காஞ்சிபுரத்தில் ஸ்ரீமன் நாராயணன், ‘தேவாதிராஜ’னாக நின்ற திருக் கோலத்திலும், காவேரிப்பாக்கம் அருகே திருப்பாற்கடல் என்னும் அற்புதப் பதியில் பள்ளிகொண்ட பெருமாளாக சயனக் கோலத்திலும், வடக்கே சோளசிங்கபுரம் என்னும் சோளிங்கரில் அமிர்தவல்லி சமேத நரசிங்கப் பெருமாளாக யோக நிலையிலும் எழுந்தருளியிருக்கிறார். இந்த ஆலயங்கள் எல்லைகள் போல் அமைந்திருக்க, திசைமுகன்சேரியில் ஸ்ரீதேவி -பூதேவி சமேதராய் ஆதிசேஷன் படுக்கையில், அமர்ந்த திருக்கோலத்தில் பரமபதநாதர் அருள்பாலிக்கிறார்.

    தல வரலாறு


    படைப்புத் தொழிலை செய்யும் பிரம்மா, ஒரு முறை தனது படைப்புத் தொழிலை சற்று ஒதுக்கி வைத்து விட்டு, மகா விஷ்ணுவை நோக்கி தவம் மேற்கொண்டார். அவர் தவம் மேற்கொண்ட இடம் இந்த ‘திசைமுகன்சேரி’ ஆகும். பிரம்மாவின் தவத்தை மெச்சிய மகாவிஷ்ணு அவர் முன்பாகத் தோன்றினார். அப்போது தனக்கு ஏற்பட்ட சில சந்தேகங்களைக் கேட்டு அறிந்து கொண்ட பிரம்மா, இந்த இடத்திலேயே பரமபதநாதராக வீற்றிருந்து மக்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று வேண்டினார். விஷ்ணுவும் அப்படியே அருள்செய்து, இந்த தலத்தில் பரமபதநாதராக சேவை சாதிக்கிறார்.

    இந்த ஆலயத்தில் பெருமாள் சன்னிதிக்கு எதிரே, ஒரு காலை மடித்தும், மற்றொரு காலை குத்துக்காலிட்டும், பெருமாளை தன் தோளில் சுமந்து செல்லும் தோற்றத்தில் கருடாழ்வார் வீற்றிருக்கிறார். கர்ப்பக்கிரகத்தில் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக கிழக்கு நோக்கிய திசையில், ஆதிசேஷன் படுக்கையில் அமர்ந்த திருக்கோலத்தில் பரமபதநாதர் சேவை சாதிக்கிறார். வலது காலை மடித்துக் கொண்டும், இடது காலை தொங்கவிட்டு பூமியைத் தொட்டுக் கொண்டும், சங்கு சக்கரதாரியாய், தன்னை வழிபடும் பக்தர்களின் மனக் குறைகளை உடனே போக்கும் வரப்பிரசாதியாய் அமர்ந்த திருக்கோலத்தில் திகழ் கிறார். இந்த ஆலயத்தின் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி-பூதேவி சமேத வைகுந்தநாதர், நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளனர்.

    மகாமண்டபத்தில் பத்மாசனக் கோலத்தில், இரு கரங்களிலும் தாமரை மலர் ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடனும் புன்னகை பூத்த முகத்துடன், கனகவல்லித் தாயார் தனிச் சன்னிதியில் இருந்து அருள்கிறார். கோதண்ட ராமர், சீதாதேவி, லட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோர் தனிச் சன்னிதியில் ஒரே குடும்பமாக சேவை சாதிக் கிறார்கள். மேலும் இந்த ஆலயத்தில் சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர் சன்னிதிகளும், ஆலயத்திற்கு வெளியே ஆஞ்சநேயர் சன்னிதியும் இருக்கிறது. இந்த ஆஞ்சநேயர் தனது இடையில் சிறிய குறுவாளை வைத்திருக்கும் தோற்றத்தில் காணப்படுகிறார். தவிர இங்கு ராமாநுஜர், நம்மாழ்வார், விஷ்வக்சேனர் மூல விக்கிரகங்களும் இத்திருக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    இங்குள்ள ஆஞ்சநேயரிடம் கோரிக்கைகளை சமர்ப்பித்த பக்தர்கள், தங்களின் கோரிக்கைகள் நிறைவேறிய பின், மார்கழி மாதத்தில் மாலை அணிந்து ஒரு மண்டலம் வரை விரதம் அனுஷ்டித்து வேண்டுதலை பூர்த்தி செய்கின்றனர். கனகவல்லித் தாயாரிடம் திருமணத்தடை நீங்கவும், மனக்குறைகள் நீங்கவும் வேண்டிக் கொள்கின்றனர். எதிரிகள் தொல்லை, பயம் நீங்க சக்கரத்தாழ்வாரிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.

    பரமபதநாதர் இத்திருக்கோவிலில் வீற்றிருப்பதால், இங்கு சொர்க்கவாசல் என்ற தனி வாசல் கிடையாது. பிரதான வாசல் வழியாகத்தான், வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் புறப்பாடு கண்டருளுகிறார்.

    இந்த ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம், ராமநவமி, அனுமன் ஜெயந்தி, நவராத்திரி, சீதா கல்யாணம், புரட்டாசி சனிக்கிழமை வழிபாடுகள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை போன்ற உற்சவங்கள் மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது.

    ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 107 மற்றும் 108-வது திவ்ய தேசங்களாக திருப்பாற்கடலும், பரமபதமும் கூறப்படுகிறது. இந்த இரு திருத்தலங்களும் அர்ச்சாவதார மூர்த்தி கோலத்தில், வேலூர் மாவட்டத்தில் காவேரிப்பாக்கம் அருகே அபிமான ஷேத்திரங்களாக அமைந்திருப்பது, பூலோகவாசிகளுக்கு கிடைத்தற்கரிய பேறு என்று கூறப்படுகிறது.

    இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்தத் திருத்தலம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி வரை முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    மு.வெ.சம்பத்
    சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகில் உள்ளது வைரவன்பட்டி திருத்தலம். இன்று இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    முருகப்பெருமான் ஆலயங்களில், கந்தசஷ்டி அன்று அம்பாளிடம் சிவசக்தி வேல் வாங்கி, கந்தபெருமான் சூரனை சம்ஹாரம் செய்யும் பெருவிழா நடைபெறும். அதுபோல ஆண்டுதோறும் கார்த்திகை மாத வளர்பிறை சஷ்டியில், சூரபதுமனின் படைத் தளபதிகளான மகாதமிட்டிரன், வக்கிரதமிட்டிரன், கும்பாண்டார் முதலியவர்களை, அம்பாளிடம் சூலம் வாங்கி பைரவர் சம்ஹாரம் செய்யும் பெருவிழா ஒன்று இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகிலுள்ள வைரவன்பட்டி திருத்தலத்தில் ‘சம்ஹார சஷ்டி’ என்ற பெயரில் இந்த விழா நடக்கிறது.

    காசிப முனிவருக்கும் - மாயைக்கும் சூரபத்மன், சிங்கன், தாரகன் எனும் மூன்று அசுர புத்திரர்கள் பிறந்தனர். அவர்கள் கடுந்தவமியற்றி ஈசனிடம் பெருவரங்கள் பெற்றனர். சிவபெருமானிடம் பெற்ற அளவற்ற வரங்களால் தேவருலகையே தங்கள் வலிமையால் ஆட்டிப் படைத்தனர். இதனால் கலக்கமுற்ற தேவர்கள், பூலோகம் வந்து அழிஞ்சல் வனத்தில் ஒளிந்திருந்தனர். ஆயினும் தேவர்கள் மறைந்திருந்த இடங்களைத் தேடிப்பிடித்து அசுரர்கள் அழித்தனர். அசுரர்களின் தொல்லையைத் தாங்கமுடியாத தேவர்கள் அழிஞ்சல் வனத்திலிருந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்து, ஈசனிடம் முறையிட்டனர்.

    அவர்களுக்கு அபயம் அளிக்க சிவபெருமான், தன்னிலிருந்து பைரவரைத் தோற்றுவித்தார். பைரவரிடம் இருந்து பூதப்படைகள் தோன்றின. அந்தப் பூதப்படைகளுக்கு விநாயகரும், நந்திதேவரும் தலைமை தாங்கினர். போர்க்களத்தில் சூரபத்மனின் படைத் தளபதிகளான மகாதமிட்டிரன், வக்கிரதமிட்டிரன், கும்பாண்டார் முதலியவர்களுடன் கடும்போர் நடைபெற்றது. இறுதியாக இத்தல அழிஞ்சல்வன நாயகியான, வடிவுடை நாயகி அம்பாளிடம் சூலத்தைப் பெறுகிறார் பைரவர். அதனை அசுரர்களை நோக்கி ஏவுகிறார். அது அவர் களைக் கோர்த்துக்கொண்டு இழுத்து வருகிறது.

    பைரவர் சூலத்திடம், “அவர்களை மலைகளாக்கிடுக” என ஆணையிடுகிறார். சூலம் அவ்வாறே செய்ய அவர்கள் கீழே விழுந்து மலைகளாயினர். பின்னர் சூலம் அந்த அழிஞ்சல் வனத்தில் இருந்த சிவ தீர்த்தத்தில் மூழ்கி, பைரவரின் திருக் கரத்தை அடைகிறது. தேவர்கள் பைரவரைத் துதித்தனர்.

    பைரவரும், “தேவர்களே.. பயப்பட வேண்டாம். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறுமுகன் தோன்றி அசுரர்களை அழிப்பான். அதுவரை நீங்கள் அருகிலுள்ள இடத்தில் தங்கியிருங்கள்” என அருளினார். தேவர்கள் அங்கு இளைப்பாறியக் காரணத்தால்தான் அத்தலத்திற்கு இளையாற்றங்குடி என்று பெயர் வந்தது. பின்பு அழிஞ்சல் வனத்தில் இருந்த சிவபெருமானுக்கும், அம்பிகைக்கும் இடையில் கோவில் கொண்டார் பைரவர். அன்றுமுதல் இந்த அழிஞ்சல் வனம் ‘வைரவன் பட்டி' என வழங்கலாயிற்று.

    வைரம் எப்படி உறுதியாக இருக்கிறதோ அவ்வாறே பைரவரும் தம்மைச் தஞ்சமென்று அண்டிய பக்தர்களை உறுதியாகக் காத்தருள் புரிவார். இத்தல பைரவரை, ‘வைரவர்’ என்றும், ‘வயிரவர்’ என்றும் அழைக்கிறார்கள்.

    பைரவருக்கு துணையாக விநாயகரும் இந்தப் போரில் ஈடுபட்டதால், வைரவன்பட்டிக்கு அருகில் பிள்ளையார்பட்டி என்ற ஊரும், கோவிலும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பைரவரின் அசுர சம்ஹாரம் முருகப்பெருமான் நிகழ்த்திய சூரசம்ஹாரத்திற்கும் முன்பே நிகழ்ந்த சம்ணஹாரமாதலால் இதனை ‘சம்ஹார சஷ்டி' என்று அழைக்கின்றனர். பைரவர் இத்தலத்தில் அசுரர்களை அழித்த நாள் கார்த்திகை மாதம் வளர்பிறை சஷ்டியாகும். இதனால் கார்த்திகை மாதம் இத்தலத்தில் பைரவருக்கு ‘சம்பக சஷ்டி' எனும் சம்ஹார சஷ்டி விழா நடைபெறுகிறது.

    இந்த சம்ஹார சஷ்டி ஐதீக விழாவில் முதலில் விநாயகரும், நந்தியும், துர்க்கையும், இறுதியாக பைரவரும் போருக்கு எழுந்தருளுகின்றனர். பைரவர் அம்பாளிடம் சூலம் பெறுதல், அசுரனை அழித்தல் முதலியன சிறப்பாக நடத்திக் காண்பிக்கப்படுகிறது. வைரவன் பட்டி ஈசனின் திருநாமம் ‘வளரொளி நாதர்’ என்பதாகும். அம்பாளின் திருநாமம் ‘வடிவுடை நாயகி.’ இங்கு ஈசன் கிழக்கு நோக்கிய வண்ணமும், அம்பாள் தெற்கு நோக்கிய வண்ணமும் எழுந்தருளியுள்ளனர். இத்தல இறைவன் பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் ஜோதி வடிவில் அருளியதால் ‘வளரொளி நாதர்’ என்று அழைக்கப்படுகிறார்.

    இங்கு சுவாமி சன்னிதிக்கும், அம்பாள் சன்னிதிக்கும் நடுவில், தெற்கு நோக்கியவாறு பைரவர் எழுந்தருளி உள்ளார். சூலம், நாகம், கபாலம், டமருகம் தாங்கி, பத்ம பீடத்தில் நின்ற திருக்கோலத்தில் பைரவர் வீற்றிருக்கிறார். பைரவரின் முன்னால் பைரவ பீடமும், அதில் பாதுகைகளும், பின்னால் வலப்புறம் நோக்கிய நாய் வாகனமும் அமைந்துள்ளன. ஆலயத்தின் எதிரில் வயிரவ தீர்த்தம் உள்ளது.

    அமைவிடம்

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்திலும், திருப்பத்தூர் யோகபைரவர் அருளும் திருத்தளிநாதர் திருக்கோவிலில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்திலும் வைரவன்பட்டி திருத்தலம் அமைந்துள்ளது.

    சிவ.அ.விஜய் பெரியசுவாமி
    பெண்களால் இடப்படும் சாபங்கள் முத்தாளம்மன் ஆலய அன்னையை ஆராதிப்பதால் விலகுகிறது என்று பக்தர்கள் கூறுகின்றனர். எனவே இந்த ஆலயம் பெண் சாப நிவர்த்தி தலமாக விளங்குவது நிஜமே!
    சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

    ஓலைப்பெட்டி ஒன்று, காவிரி வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. அப்போது ஆற்றங்கரையில் இருந்தவர்கள், அந்தப் பெட்டியை கரை சேர்த்து பிரித்து பார்த்தனர்.

    என்ன ஆச்சரியம்? உள்ளே ஒரு அம்மன் சிலை. ஊர் மக்கள் அந்த சிலையை, ஒரு கீற்று கொட்டகையை ஏற்படுத்தி, அதனுள் பிரதிஷ்டை செய்து வணங்கத் தொடங்கினர். அம்மனின் அருள் சக்தி அந்த ஊர் முழுவதும் பரவத்தொடங்கியது. காலப்போக்கில் அந்த இடம் மெருகேறி ஒரு சிறிய ஆலயம் உருவானது. அதுவே, முத்தாளம்மன் ஆலயம்.

    ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் மகா மண்டபம் காணப்படுகிறது. மண்டபத்தின் வலதுபுறம் கம்பத்தடியான் திருமேனியைத் தரிசிக்கலாம். அத்துடன் வீரபத்திரன் மற்றும் கருப்பண்ணசாமி திருமேனிகளும் உள்ளன. தொழில் அபிவிருத்தி அடையவும், வியாபாரம் நல்லபடியாக நடக்கவும் கம்பத்தடியானை வேண்டிக்கொள்ள பக்தர்களின் பிரார்த்தனை பலிக்கிறது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும், கம்பத்தடியானுக்கு அபிஷேக - ஆராதனைகள் செய்து புத்தாடை அணிவித்து தங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றனர்.

    மகாமண்டபத்தின் வடக்கில் மதுரைவீரனின் திருமேனி உள்ளது. அடுத்துள்ள கருவறையில் மூலவர் முத்தாளம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் இன்முகம் மலர அருளாட்சி புரிகிறாள். இங்கு அன்னையின் திருமேனி சுதையினால் உருவாக்கப்பட்டது. எனவே அன்னைக்கு எந்தவித அபிஷேகமும் கிடையாது. மாறாக அன்னையின் முன், அன்னையின் விக்கிரக சிரசு ஒன்று உள்ளது. அனைத்து அபிஷேக - ஆராதனைகளும் இந்த திருவுருவ விக்கிரகத்திற்கே நடைபெறுகின்றன. இங்கு அன்னைக்கு தினசரி பாலாபிஷேகம் நடைபெறுகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திரவியப்பொடி, மஞ்சள் பொடி, பால், சந்தனம், தயிர், இளநீர் முதலியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

    தை மாத கடைசி வெள்ளிக்கிழமையில் அன்னைக்கு லட்சார்ச்சனை நடைபெறுகிறது. அன்னை முத்தாளம்மன் பலநூறு குடும்பங்களுக்கு குல தெய்வமாக விளங்குகிறாள். இந்த குல மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இங்கு வந்து மொட்டை அடித்து, காது குத்தி, பெயர் வைக்கும் விழாக்களை அன்னையின் சன்னிதியிலேயே செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமை 108 சுமங்கலிகள் பங்கு பெறும் விளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பெண்களுக்கு, பூ, பழம்,ஜாக் கெட் துணி, தாலி சரடு, தட்டு ஆகியவை ஆலய நிர்வாகத்தால் தரப்படுகிறது. பெண்களால் இடப்படும் சாபங்கள் அன்னையை ஆராதிப்பதால் விலகுகிறது என்று பக்தர்கள் கூறுகின்றனர். எனவே இந்த ஆலயம் பெண் சாப நிவர்த்தி தலமாக விளங்குவது நிஜமே!

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    திருச்சி கீழ ஆண்டாள் தெருவில் உள்ளது முத்தாளம்மன் ஆலயம். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது. பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.

    மல்லிகா சுந்தர்
    தில்லைஸ்தானம் பேருந்து சாலையின் அருகிலேயே உள்ளது சீனிவாசப் பெருமாள் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தில்லைஸ்தானம் பேருந்து சாலையின் அருகிலேயே உள்ளது சீனிவாசப் பெருமாள் ஆலயம். முகப்பில் அழகிய ராஜகோபுரம் உள்ளே நுழைந்ததும் கொடிமரம் உள்ளது. அடுத்து உள்ளது மகாமண்டபம். அதைத் தொடர்ந்து கருவறை முகப்பில் இரு துவாரபாலகர்கள் காவல் காக்க உள்ளே கருவறையில் சீனிவாசப் பெருமாள் ஸ்ரீதேவி - பூதேவியுடன் சேவை சாதிக் கிறார். நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் எம்பெருமானின் முன், உற்சவர் மற்றும் தேவியர் திருமேனிகள் உள்ளன.

    திருச்சுற்றில் தெற்கில் தாயார் அலர்மேல் மங்கையின் தனி சன்னிதியும், சக்கரத்தாழ்வார் சன்னிதியும் உள்ளன. வடக்கில் அனுமன் கையில் அமிர்த கலசத்தை ஏந்தியபடி அருள்புரிகிறார். அனுமனின் இந்த அமைப்பு மிகவும் சிறப்பான அமைப்பாக கருதப்படுகிறது. சீதாதேவி வனவாசத்தின் போது ஒரு நாள் மயக்கமடைய, அனுமன் கலசத்தில் இருந்த அமிர்தத்தை சீதைக்கு தர, சீதையின் மயக்கம் தெளிந்ததாம்.

    சீதையின் நோய் தீர்த்த அமிர்த கலசத்துடன் கூடிய இந்த அனுமனை வேண்டுவதால் நோய்கள் குணமாவதாக பக்தர்களின் நம்பிக்கை.

    வியாபாரம் பெருகவும், திருமணம் விரைந்து நடக்கவும், நோய்கள் தீரவும் அனுமனிடம் வேண்டிக் கொள்ளும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் அனுமனுக்கு அபிஷேகம் செய்து வெண்ணெய் காப்பிட்டு, தங்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றனர்.

    இந்த ஆலயத்தில் சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் மிகச் சிறப்பாக பத்து நாட்கள் நடைபெறுகிறது. இந்த பத்து நாட்களும் பெருமாள் வீதியுலா வருவதுண்டு. பத்தாம் நாள் பெருமாள் ஸ்ரீதேவி - பூதேவியுடன் தேரில் பவனி வரும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

    கார்த்திகை மாதம் கடைசி நாளன்று லட்ச தீபம் ஏற்றப்பட்டு ஆலயம் ஒலிமயமாக ஜொலிக்கும். கார்த்திகை அன்று சொக்கப்பனை தீபம் ஏற்றப்படும். தாயார் ஒவ்வொரு மாதமும் உள்சுற்றில் உலா வருவதுண்டு. மார்கழியில் ஏகாதசியில் சொர்க்கவாசல் திறப்பும், இராப்பத்து உற்சவமும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. சுற்றிலும் அழகிய மதில் சுவர்களுடன் கூடிய இந்த ஆலயம் இந்து அறநிலையத் துறையால் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

    வேண்டும் வரம் தரும் சீனிவாசப்பெருமாளையும் அமிர்த கலசத்துடன் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயரையும் தில்லைஸ்தானம் சென்று நாமும் ஒரு முறை தரிசித்து வரலாமே.

    அமைவிடம்

    கல்லணை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் கல்லணையில் இருந்து 30 கி.மீ தொலைவிலும், திருவையாற்றில் இருந்து 1 கி.மீ தொலைவிலும் உள்ளது தில்லைஸ்தானம் என்ற இந்த தலம்.
    கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை பகுதியில் சாஸ்தா கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை பகுதியில் சாஸ்தா கோவில் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தின் கருவறைக்கு மேற்கூரை இல்லை. அதற்குப் பதிலாக சிலந்தி வலை போன்று, கூம்பு வடிவம் கொண்ட ஒரு திரை அமைக்கப்பட்டுள்ளது.

    தல வரலாறு

    அனந்தன் காடு என்று அழைக்கப்பட்ட திரு வனந்தபுரம் பகுதியை, கர மகாராஜா என்பவர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் அந்தப் பகுதியில் பல கோவில்கள் கட்டப்பட்டன. அப்படிக் கட்டப்பட்ட கோவில்களுள், கரமனை சிலந்தி வலை சாஸ்தா கோவிலும் ஒன்றாக இருக்கிறது.

    ஒரு முறை கர மகாராஜா மாலை வேளையில் காட்டின் வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு இடத்தில் சிலந்தி வலை பின்னப்பட்டிருந்தது. அதன் கீழ் பகுதியில் சாஸ்தா சிலை ஒன்று இருப்பதை கர மகாராஜா கண்டார். அந்தச் சிலையை ஊருக்குள் எடுத்துச் சென்று, அந்த சாஸ்தாவிற்குத் தனி கோவில் கட்ட வேண்டுமென்று நினைத்தபடி அங்கிருந்து திரும்பினார். காலையில் எழுந்ததும் தனது படை வீரர்களை அனுப்பி, அந்த சாஸ்தா சிலையை ஊருக்குள் எடுத்து வரச் சொல்ல வேண்டுமென்று நினைத்தபடி தூங்கினார்.

    அன்றிரவு அவரது கனவில் தோன்றிய சாஸ்தா, “அரசனே, காட்டுக்குள் இருக்கும் என்னை ஊருக்குள் கொண்டு வந்து கோவில் கட்ட வேண்டாம். நான் தற்போதிருக்கும் இடத்திலேயே இருக்க விரும்புகிறேன். எனக்கு இந்த இடத்திலேயே கோவில் கட்டி வழிபடலாம். என் கோவிலுக்குக் கூரை எதுவும் அமைக்க வேண்டாம். எனக்கு வானமே பரந்த வெளியாக இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டு மறைந்தார்.

    மறுநாள் காலையில் கண் விழித்த அரசன், சாஸ்தா கனவில் சொன்னபடி, அந்த இடத்திலேயே ஒரு கோவிலைக் கட்டினார் என்றும், சாஸ்தா விருப்பப்படி அந்தக் கோவிலுக்கு மேற்கூரை அமைக்கப்படவில்லை என்றும் இந்த ஆலயத்தின் தல வரலாறு சொல்லப்படுகிறது.

    கோவில் அமைப்பு

    இக்கோவில் கருவறைக்கு மேற்கூரை இல்லை என்றாலும், சிலந்தி வலை போன்று கூம்பு வடிவ அமைப்பில் விமானம் அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோவில் கருவறையின் நான்குபுறச் சுற்றுச் சுவர்களிலும் ஜன்னல் அமைக்கப்பட்டு, சாஸ்தாவை நான்கு புறத்திலிருந்தும் பக்தர்கள் காண வசதி செய்யப்பட்டிருக்கிறது. திருவனந்தபுரம் பகுதியில் இருக்கும் பல சாஸ்தா கோவில்களில், இந்த ஆலயம் மிகவும் பழமையானது ஆகும். எனவே இத்தல சாஸ்தாவை, ‘ஆதி சாஸ்தா’ என்றே அழைக்கின்றனர். இங்கிருக்கும் சாஸ்தா சிலந்தி வலையின் கீழ் இருந்து கிடைத்ததால், ‘சிலந்தி வலை சாஸ்தா’ என்றும் அழைக்கப்படு கிறார்.

    இந்த ஆலயத்தின் வளாகத்தில் கணபதி, பகவதி யட்சி ஆகியோருக்கான சிலைகளும் இடம் பெற்றிருக்கின்றன. இங்கிருக்கும் அரச மரத்தடியில் சிவலிங்கம் ஒன்றும், நாக தெய்வங்களும் நிறுவப்பட்டிருக்கின்றன.

    இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு ‘சாஸ்தா பாட்டு’ நடத்தப்பெறுகிறது. இந்த திருத்தலத்தில் சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும், சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இங்கு மலையாள நாட்காட்டியின்படி, விருச்சிகம் (கார்த்திகை) மாதம் முதல் நாளில் தொடங்கி, 41 நாட்கள் மண்டல பூஜை நடத்தப்பெறுகிறது. மண்டல பூஜை நிறைவு நாளில், கரமனை ஆற்றில் சாஸ்தாவிற்கு ஆறாட்டு விழா நடத்தப்படுகிறது.

    திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த சாஸ்தா கோவிலை, சபரிமலை ஐயப்பன் கோவிலைப் போன்றே கருதுகின்றனர். சபரிமலை ஐயப்பனுக்கு இருமுடி கட்டிக் கொண்டு போவதைப் போன்று, இந்தக் கோவிலுக்கும் பக்தர்கள் பலர், இருமுடி கட்டி வந்து, இங்கிருக்கும் சாஸ்தாவிற்கு நெய் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். அனைத்து மலையாள மாதப் பிறப்பு நாட்களிலும் இங்கிருக்கும் சாஸ்தாவிற்கு நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    இப்பகுதியில் இருப்பவர்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி களுக்கான அழைப்பிதழை, முதலில் இந்த சாஸ்தா கோவிலில் வைத்துதான் வழிபாடு செய்கின்றனர். அதன் பின்னரே, அழைப்பிதழை உறவினர் மற்றும் நண்பர்களுக்குக் கொடுக்கின்றனர்.

    இக்கோவில் சபரிமலையைப் போன்றது என்பதால், சபரிமலைக்குச் சென்று அடையக்கூடிய பலன்கள் அனைத்தையும், இக்கோவிலில் வழிபட்டு அடையலாம் என்று இந்த ஆலயத்திற்கு வந்து செல்லும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    கேரள மாநிலம், திருவனந்தபுரம் கரமனை பகுதியில் இருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல, திருவனந்தபுரம் கிழக்குக் கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமான நகரப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    தேனி மு.சுப்பிரமணி
    தஞ்சாவூர் மாவட்டம் நேமம் என்ற ஊரில் ஐராவதேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தஞ்சாவூர் மாவட்டம் நேமம் என்ற ஊரில் ஐராவதேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் ‘ஐராவதேஸ்வரர், பாரிஜாதவனேஸ்வரர், பிரம்மபுரேஸ்வரர், இந்திராபுரீஸ்வரர், புஷ்பபுரீஸ்வரர், ஐராவதபுரீஸ்வரர்’ என பல பெயர்களில் அழைக்கப்படு கிறார். இறைவியின் பெயர் ‘அலங்காரவல்லி’ என்பதாகும்.

    தல வரலாறு

    தேவலோக சபையில், அதன் தலைவரான இந்திரன், மற்ற தேவர்கள், தேவ ரிஷிகள் அமர்ந்திருந்தனர். சபையின் மையத்தில் ரம்பை, மேனகை, ஊர்வசி ஆகியோரது நடனம் அரங்கேற, அதற்கு நாரதர் வீணை வாசித்தார். அனைவரும் அந்த மூன்று அழகிகளின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்தனர். ஆட்டம் முடிந்ததும் மற்ற இரு ஆடலரசிகள் சென்றுவிட, ரம்பை மட்டும் களைப்புடன் மேடையில் படுத்து உறங்கி விட்டாள். காற்று அவளது ஆடைகளை அகற்றுவதை அவள் உணரவில்லை. ஆடை கலைந்திருந்ததை உணராமல், வெட்கமின்றி படுத்திருந்த அவளைப் பார்த்தார் நாரதர்.

    கோபம் தலைக்கேற “பூவுலகில் பிறந்து எந்தவித சொர்க்க சுகமும் இன்றி வாடுவாயாக” என சபித்தார்.

    திடுக்கிட்டு எழுந்த ரம்பை நாரதரின் சாபத்தை உணர்ந்தாள்.

    “நான் அறியாமல் செய்த தவறு இது. எனவே என்னை மன்னித்து சாபத்தை நீக்கி அருள்புரியுங்கள்” என நாரதரிடம் வேண்டினாள் ரம்பை.

    “சிவபெருமானை வழிபடு. அவரது அருள்பெற்று சாபம் நீங்கப் பெறுவாய். பின்னர் சொர்க்கம் வந்து சேர்” எனக்கூறி மறைந்தார் நாரதர்.

    ரம்பை பூலோகம் வந்தாள். பாலாற்றில் நீராடி பாடலீஸ்வரரை வழிபட்டாள். சூரியன் வழிபட்ட தலம் இது. அங்குள்ள முனிவர்களிடம் தன் நிலையைத் தெரிவித்தாள். அவர்கள் ரம்பைக்கு, பஞ்சாட்சர ஜெபத்தை உபதேசம் செய்தனர். அந்த மந்திரத்தை உச்சரித்தபடி ஈசனை வழிபட்டு வந்தாள், ரம்பை.

    அதே வேளையில், இந்திர சபையில் ரம்பை இல்லாத குறையை இந்திரன் உணர்ந்தான். ரம்பை இல்லாத சபை அவனுக்கு இன்பம் அளிக்கவில்லை. பூவுலகில் ரம்பை தவம் செய்வதை அறிந்து அவளை அழைத்துவர சித்திரரதன் என்ற கந்தர்வனை அனுப்பினான். சித்திரரதன், ரம்பையை சந்தித்து இந்திரனின் விருப்பத்தைக் கூறினான். “சிவனது அருள் பெறாமல், என்னால் வானுலகம் வர இயலாது” என்று கூறி அனுப்பினாள் ரம்பை. இருந்தாலும் இந்திரனும் ஒவ்வொருவராக தூது அனுப்பியபடியே இருந்தான்.

    தன்னுடைய தவத்திற்கு இந்திரனால் இடையூறு ஏற்படுவதை உணர்ந்த ரம்பை, தவம் செய்யும் இடத்தை மாற்ற எண்ணினாள். அதற்காக துர்வாச முனிவரை சந்தித்தாள். அவர், பிரம்மாவும் இந்திரனும் தவமிருந்து வழிபட்ட பாரிஜாதவனேஸ்வரரை வழிபடக் கூறினார்.

    ரம்பை உடனே கும்பகோணத்திற்கு மேற்கே வலது கரையில் உள்ள பிரம்மேஸ்வரம் சென்று, காவிரியில் நீராடி மரவுரியும் மான் தோலும் உடுத்தி, விபூதியும் ருத்ராட்சமும் அணிந்து, மல்லி, ஜாதி, செண்பக மலர்களால் இறைவனை மூன்று வேளையும் வழிபட்டாள். ஓராண்டு காலம் இடையூறின்றி தவமிருந்தாள். அப்போது இந்திரன், தவம் செய்து கொண்டிருந்த ரம்பையை பலவந்தமாக தேவலோகம் அழைத்துவர ஐராவத யானையை அனுப்பினான்.

    ஐராவதம் யானை, ரம்பையை தன் துதிக்கையால் தூக்கிச் செல்ல முயன்றது. ரம்பை, சிவலிங்கத்தை திடமாக பற்றிக்கொண்டாள். ஐராவதம் யானையும், சிவலிங்கத்தோடு ரம்பையை வளைத்து தூக்க முயன்றது. அப்போது சிவலிங்கம் பருத்து வளரத் தொடங்கியது. யானை தன் துதிக்கையை விடுவிக்க முடியாமல் தவித்தது. ரம்பையிடமும் கோடி சிங்கங்களின் வலிமை வெளிப்பட்டது. இறுதியில் யானை, லிங்கத்தின் முன்பாக ரத்தம் கக்கி தளர்ந்து விழுந்து உயிர்நீக்கும் நிலையை அடைந்தது.

    ரம்பையையும் ஐராவதத்தையும் மீட்க வேறு வழி அறியாத இந்திரன், தனது விமானத்தில் ஏறி பாரிஜாத வனம் வந்து இத்தல ஈசனைத் துதித்தான். சிவபெருமான் எதிரில் தோன்றி தன்னை பயத்தால் இறுக அணைத்திருந்த ரம்பைக்கும், உயிர் நீக்கும் தருவாயில் இருந்த ஐராவதத்திற்கும் ஆறுதல் அளித்தார். ரம்பையும், இந்திரனும், ஐராவதமும் தேவலோகம் சென்றனர். அங்கிருந்து தெய்வ மரங்களின் பூக்களை மழையாகப் பொழிந்தனர். எனவே பூக்களால் நிறைந்த இத்தலம் ‘புஷ்பபுரம்’ என்று அழைக்கப்பட்டது. பாரிஜாத வனம், ஐராவதபுரம், புஷ்ப புரம் என அழைக்கப்பட்ட அந்த தலமே தற்போது ‘நேமம்’ என்று அழைக்கப்படுகிறது.

    ஆலய அமைப்பு

    ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் சிறு விமானமும், ராஜகோபுரமும் உள்ளன. அடுத்து நந்தி மண்டபம் உள்ளது. இங்கு நந்தி பகவான் தரை மட்டத்தில் இருந்து இரண்டரை அடி பள்ளத்தில் காட்சி தரு கிறார். அருகே உள்ள காவிரி நதியில் வெள்ளம் வரும்போது தண்ணீர் ஊற்றெடுத்து நந்தியின் செவிகள் வரை நிற்குமாம். இந்த நந்தி பகவானின் முன்பு, மழை வேண்டி வருண ஜெபம் செய்தால் நிச்சயம் மழை பெய்யும் என் கிறார்கள்.

    மணிமண்டபத்தை அடுத்து மகாமண்டபம் உள்ளது. மகாமண்டபத்தின் இடதுபுறம் லட்சுமி நாராயண பெருமாள் சன்னிதி உள்ளது. அடுத்து அர்த்த மண்டபம். அதையடுத்த கருவறையில் இறைவன் ஐராவதேஸ்வரர் லிங்கத்திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். தேவக்கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, ஆலய திருச்சுற்றில் விநாயகர், வள்ளி - தெய்வானை சமேத முருகன், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரக நாயகர்கள் வீற்றிருக்கின்றனர்.

    ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம். ஆலயத்தின் தீர்த்தங்கள் மூன்று. அவை, பிரம்ம தீர்த்தம். ஸூதா கூபம், காவிரி ஆகும். பிரம்ம தீர்த்தம் பிரம்மாவால் அமைக்கப்பட்டது. ஸூதா கூபம் என்பது கிணறு. இது ஆலயத்தின் தென்திசையில் உள்ளது. காவிரி ஆலயத்தின் வட திசையில் ஓடுகிறது. ஆலயத்தின் பின்புறம் ஒரு பெரிய திருக்குளம் உள்ளது.

    பல நூறாண்டுகள் பழமையான இந்த ஆலயம், தினமும் காலை 6.30 மணி முதல் 10 வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    இரண்டு அம்மன்கள்


    மகாமண்டபத்தின் வலதுபுறம் இரண்டு அம்மன் சன்னிதிகள் உள்ளன. முதலில் உள்ளது ஆதி அலங்கார வல்லியின் சன்னிதி. இந்த அம்மனேஆலயத்தில் முதலில் இருந்தது. ஒருநாள் திடீரென்று அம்மன் சிலை காணாமல் போனது. அதையடுத்து புதியதாக ஒரு சிலையை செய்து வைத்தனர். அந்த அம்மனின் பெயரும் அலங்காரவல்லிதான்.

    இந்த நிலையில் ஒரு நாள் ஆலய அர்ச்சகர் கனவில் வந்த ஆதி அம்மன், “நான் காவிரி மணலில் புதையுண்டு கிடக்கிறேன். என்மேல் எந்த பின்னமும் இல்லை. என்னை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து வழக்கம் போல் அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்” எனக்கூறி மறைந்தது. அதன்படி அந்த அம்மனின் சிலையை கண்டுபிடித்து மீண்டும் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தனர். அந்த அம்மனே ஆதி அலங்காரவல்லி.

    அமைவிடம்


    தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கல்லணை செல்லும் சாலையில், 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நேமம் என்ற இந்த தலம். சாலையின் ஓரத்திலேயே ஆலயம் இருக்கிறது.

    ஜெயவண்ணன்
    கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள ஆஸ்ராமம் என்னும் அழகிய சிற்றூரில் உள்ளது சாஸ்தா ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ளது ஆஸ்ராமம் என்னும் அழகிய சிற்றூர். இங்குள்ள சாஸ்தா ஆலயம் ஒன்று, கன்னியாகுமரிக்கு ஆன்மிகப் பயணம் வரும் பக்தர்கள், தவறாமல் விஜயம் செய்யும் கோவிலாக இருக்கிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் வரலாறு, சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் வரலாற்றோடு தொடர்புடையது.

    ஒரு காலத்தில் வனமாக இருந்த சுசீந்திரம் பகுதி, ‘ஞானாரண்யம்’ என அழைக்கப்பட்டது. அந்த வனத்தின் ஒரு பகுதியில் அத்திரி மகரிஷி ஆசிரமம் அமைத்து தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவருடைய தர்ம பத்தினி அனுசூயா தேவி. இவர் கற்பில் சிறந்தவர். ஒரு முறை அனுசூயா தேவியின் கற்பை சோதிக்க எண்ணிய சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும், அத்திரி மகரிஷி இல்லாத நேரத்தில் அடியார்களின் வடிவத்தில் ஆசிரமத்துக்கு வந்தனர். மூன்று அடியார்களும், அனுசூயா தேவியிடம் பிச்சை கேட்டனர். சற்றும் தாமதிக்காமல் அனுசூயா தேவி, தன் கணவனின் பாத தீர்த்த சக்தியால் அறுசுவை உணவுகளை நொடிப் பொழுதில் தயாரித்தாள். அவர் களுக்கு ஆசனம் இட்டு அமரச் செய்து விருந்தளிக்க முன்வந்தாள்.

    அதுவரை ஆசனத்தில் அமர்ந்திருந்த அடியார்கள், உடனடியாக எழுந்துவிட்டனர். அதைக் கண்டு மனம் வருந்திய அனுசூயா தேவி, “நான் என்ன தவறு செய்துவிட்டேன்?” என்று மூவரிடமும் கேட்டாள்.

    அதற்கு அந்த அடியார்கள், “மழை இல்லாத காரணத்தால் ஒரு மண்டலம் உணவில்லாமல் வருந்திய நாங்கள், தற்போது உண்ண வேண்டு மென்றால் அதற்கு ஒரு நோன்பு உண்டு. அந்நோன்பு முடியாமல் நாங்கள் உணவு உட்கொள்ளக்கூடாது” என்று கூறியவர்கள், மேலும் தொடர்ந்து, “பிறக்கும்போது எந்தக் கோலத்தில் இருந்தாயோ அந்தக் கோலத்தில் அன்னம் பரிமாறினால்தான் நாங்கள் உணவு அருந்துவோம்” என்றனர்.

    இதைக்கேட்ட அனுசூயாதேவி திடுக்கிட்டாள். எனினும் மனதைத் தேற்றிக் கொண்டு, ‘கணவனே கடவுள் என்றும், கற்பே நன்னெறி என்றும் நினைத்து வாழும் நான் என் கற்பின் பெருமையால் அடியார்கள் கூறியவாறு அமுது படைப்பேன்’ எனத் தெளிந்து, தனது கணவர் காலைக் கழுவி வைத்திருந்த பாத தீர்த்தத்தை கையில் எடுத்து, கணவனை மனதில் தியானித்துக் கொண்டு “இவர்கள் மூவரும் குழந்தைகளாக மாறக்கடவது” என அடியாளர் களின் தலையில் தீர்த்த நீரைத் தெளித்தாள்.

    என்ன ஆச்சரியம்? ஆக்கல், அழித்தல், காத்தல் ஆகிய முத்தொழிலையும் செய்யும் அந்த மும்மூர்த்திகளும், பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளானார்கள். பின்பு, தான் பிறந்தபோது இருந்த நிலையில் அமர்ந்து மூவருக்கும் உணவூட்டினாள், அனுசூயா தேவி.

    தங்களின் கணவர்கள் குழந்தையாக மாறியதைக் கேள்விப்பட்ட முப்பெரும் தேவியரும், அத்திரி முனிவரின் ஆசிரமம் வந்து தங்களுக்கு மாங்கல்ய பிச்சை அளிக்குமாறு அனுசூயா தேவியை வேண்ட, அவளும் மீண்டும் அவர்களுக்கு சுயவுருவை அளித்தாள்.

    அப்படிப்பட்ட பெருமை நிறைந்த அத்திரி மகரிஷியும், அனுசூயா தேவியும் தங்கியிருந்த ஆசிரமம்தான், தற்போது ‘ஆஸ்ராமம்’ என்றழைக்கப்படும் சிற்றூர். இந்த அத்திரி மகரிஷியே இங்கு சாஸ்தாவாக அமர்ந்து அருள்பாலிப்பதாகக் கூறுவதும் உண்டு. அத்திரி மகரிஷி யாகம் செய்த ஓமகுண்டம்தான், கோவிலின் அருகில் உள்ள தீர்த்தக்குளம் என்கின்றனர். இக்குளத்தில் ஒரு மண்டலம் நீராடினால் எல்லா நோய்களும் நம்மைவிட்டு நீங்கும் என்பது இவ்வூர் மக்களின் நம்பிக்கை.

    சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பார்வை இழந்த ஒருவர் தினமும் இக்கோவிலில் சாஸ்தாவை வழிபட்டு வந்துள்ளார். ஒருநாள் இவர் கோவிலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தபோது, அவரது கண்களில் யாரோ மைதீட்டுவது போல உணர்ந்துள்ளார். உடனே திடுக்கிட்டு எழுந்துள்ளார். என்ன ஆச்சரியம்? அவரது இரு கண்களிலும் பார்வை வந்துவிட்டது. உடனே சாஸ்தாவை வணங்கி “அஞ்சனம் எழுதியது கண்டேன் சாஸ்தா!” என உரக்கக்கூவினார்.

    அது நாளடைவில் மருவி ‘அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’வாக மாறிவிட்டதாம். ‘அஞ்சனம்’ என்றால் ‘மை.’ ‘எழுதிய’ என்றால் ‘தீட்டிய’ என்று பொருள். ‘கண்களில் மை தீட்டிய கடவுள்’ என இவரை வழிபடுகின்றனர்.

    இங்கே உள்ள சாஸ்தா வித்தியாசமான வடிவில் காட்சியளிக்கிறார். பொதுவாக சாஸ்தா கோவில்களில், சபரிமலை ஐயப்பனைப் போலவே, சாஸ்தாவின் சிலையும், கால்களை மடக்கி உட்கார்ந்த வடிவில் இருக்கும். ஆனால் இங்கே சாஸ்தா இடது காலை மடக்கி, ஒரு கையை அதன் மீது வைத்துள்ளார். வலது காலை வித்தியாசமாக மடக்கி வைத்திருப்பதோடு, வலக்கையில் கதாயுதம் ஏந்தியபடி காட்சியளிக்கிறார். சாஸ்தாவின் தலைமுடி, சுருள் கேசமாக தோள்பட்டைக்குக் கீழே கிடப்பதோடு, நடு உச்சியில் கொண்டையும் பூநூலும் போட்டிருப்பதும் ஒரு விசேஷமான அம்சமாகும். கழுத்தில் பதக்கமும், இரு கைகளிலும் கோதண்டராம பதக்கமும், திருநீற்றுப் பட்டையும் அணிந்துள்ளார்.

    இங்குள்ள சாஸ்தாவின் உருவம் மற்ற கோவில் சாஸ்தாவின் சிலைகளோடு ஒப்பிடும் போது மிகவும் பெரியது. முன் மண்டபத்தைத் தாண்டி கருவறையின் மேல்பகுதியில் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் உள்ளே நாகர், கணபதி சிலைகள் காணப்படுகின்றன. கோவிலின் அருகில் ஆலமரத்தடியில், தீர்த்த குண்டம், மோன தவத்தில் ஆழ்ந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருவிழா வெகு பிரசித்தம்.

    அமைவிடம்

    நாகர்கோவில் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், நான்கு கிலோமீட்டர் தொலைவில், சுசீந்திரம் அருகில் ஆஸ்ராமம் அமைந்துள்ளது.

    நாஞ்சில் ராம்
    கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், மாவேலிக்கரை அருகிலுள்ள தாழக்கரை என்ற இடத்தில் சுப்பிரமணியசாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
    கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், மாவேலிக்கரை அருகிலுள்ள தாழக்கரை என்ற இடத்தில் சுப்பிரமணியசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு அருளும் முருகப்பெருமான் தனது கையில் நெற்கதிர்கள் மற்றும் தீப்பந்தங்களை தாங்கி வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தருகிறார்.

    தல வரலாறு


    கேரள ஜோதிடக் கணிப்பு முறைகளில் ஒன்று தேவப் பிரசன்னம் பார்ப்பது. இந்த ஜோதிடக் கணிப்பு வழி முறையில், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு யோகீஸ்வரன் என்பவரால் கண்டறியப்பட்டு கட்டப்பட்டதுதான் இந்த சுப்பிரமணியசாமி ஆலயம் என்று சொல்லப்படுகிறது. தொடக்கக் காலத்தில், எடப்பள்ளி எலங்கூர் சுவரூபம் என்பவரின் பராமரிப்பில் இருந்துவந்த இக்கோவில், பிற்காலத்தில் வாரிய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு, 1979-ம் ஆண்டு முதல் ‘ஹைந்தவ சேவா சமிதி’ என்னும் பதிவு பெற்ற அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 1979-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்த ஆலய வளாகத்தில் பல துணைத் தெய்வங்களுக்கான சன்னிதிகள் அமைக்கப்பட்டதுடன், கோவிலும் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்று இந்த ஆலயத்திற்கான தல வரலாற்று தகவல்கள் சொல்லப்படுகின்றன.

    கோவில் அமைப்பு

    இந்த ஆலயத்தின் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் முருகப்பெருமான், சாதாரண மனிதனைப் போல, கையில் நெற்கதிர்கள் மற்றும் தீப்பந்தம் ஏந்திய நிலையில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். இதுஒரு வித்தியாசமான தோற்றமாக பார்க்கப்படுகிறது. ஷடாட்சர மந்திர முறைகளைப் பின்பற்றி நிறுவப்பட்டிருக்கும் இந்த முருகன் கோவில் வளாகத்தில், கணபதி, மகாதேவர், கிருஷ்ணர், சாஸ்தா, தேவி, யோகீஸ்வரன், ராட்சசன் மற்றும் நாகராஜா ஆகியோருக்கும் தனித் தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

    1.75 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் வளாகத்தில், கோவிலின் வடமேற்குப் பகுதியில் நாக தேவதைகளுக்கான ‘சர்ப்பக் காவு’ அமைந்திருக்கிறது. ‘சர்ப்பக் காவு’ எனப்படும் பசுமை நிறைந்த தோப்புப் பகுதியை இங்கிருப்பவர்கள் புனிதமானது என்றும், இங்கு ஏராளமான தெய்வீகப் பாம்புகள் தங்கியிருக்கின்றன என்றும் சொல்கிறார்கள். இந்தப் பகுதியில் ‘சித்திரக்குடா’ எனும் பெயரில் பாம்பு தெய்வங்கள் பல நிறுவப்பட்டிருக்கின்றன.

    இந்தக் கோவிலில் அனைத்து முருகப்பெருமான் ஆலயங்களிலும் நடைபெறும் சிறப்பு வழிபாடுகள் அனைத்தும் வெகு விமரிசையாக செய்யப்படுகின்றன. இது தவிர ஆண்டு தோறும் தை மாதம் பூசம் நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் சேர்ந்து வரும் தைப்பூசத் திருநாளில், தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலையில், குன்னம் தர்மசாஸ்தா கோவிலில் இருந்து பக்தர்களின் காவடி ஊர்வலம் தொடங்குகிறது. மாலையில், புதியகாவு தேவி கோவிலில் இருந்து பாஸ்மகாவடி கொண்டு வரப்படுகிறது. இந்த ஊர்வலத்தில் மயூரரதம் பங்கேற்கிறது.

    மேலும் இந்த ஆலயத்தில் சித்திரை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திர நாளில் தொடங்கி, 10 நாட்கள் ஆண்டுத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த விழாவின் தொடக்க நாளில் பக்தர்களின் வீட்டு வாசலிலேயே பிரசாதங்களைப் பெறும் ‘பறையெடுப்பு’ நிகழ்வு நடக்கிறது. பின்வரும் நாட்களில் உத்சவபலி, பள்ளிவேட்டை மற்றும் ஆறாட்டு விழா போன்றவை சிறப்பாக நடத்தப் பெறுகின்றன. இத்திருவிழா நாட்களில் ஏழு நாட்கள் பாகவத புராணம் பாராயணம் செய்யப்படுகிறது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்கும் சஷ்டி விரத நிகழ்வு மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

    சமூக மற்றும் பண்பாட்டு ஒற்றுமைக்கான கோவிலாகக் கருதப்படும் இந்த ஆலயத்தில், நெற்கதிர்களைச் சுமக்கும் இறைவன் செல்வத்தின் காவலராகக் கருதப்படுகிறார். மேலும், இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் உடல் மற்றும் மன நோய்களை நீக்கும் கடவுளாகவும் இத்தல முருகப்பெருமான் இருக்கிறார். இங்கிருக்கும் முருகப்பெருமான் பக்தர்களின் ஒவ்வொரு உடற்பகுதியையும் காத்து வருகிறார் என்றும், அவருடைய அருளைப் பெற்ற பக்தர்களிடம் நவக்கிரகங்கள் அனைத்தும் செயலற்றவர்களாகவே இருப்பார்கள் என்றும் சொல்கின்றனர். இதனால் நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடலாம்.

    இதற்கு சான்றாக ஒருமுறை முருகப்பெருமான் நாரதரிடம், “என்னிடம் வரும் பக்தர்களுக்குப் பயம் எதுவும் இருக்காது. என்னிடம் பக்தியுள்ளவர்களுக்கு எதிரிகளும் இல்லை; எந்தவிதமான நோய்களும் இல்லை” என்று புராணங்களில் சொல்லியிருப்பதை சுட்டிக் காட்டுகின்றனர். இக்கோவிலில் உடல் மற்றும் மன நலத்திற்கான வழிபாடு முதன்மையானதாக இருக்கிறது. அச்சம் விலக விரும்புபவர்கள் இக்கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடுகளைச் செய்து பயனடைகின்றனர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்


    கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரையில் இருந்து கிழக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தாழக்கரை என்னும் இடத்தில் இந்த சுப்பிரமணியசாமி கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலுக்குச் செல்ல மாவேலிக்கரையில் இருந்து நகரப் பேருந்து வசதி இருக்கிறது. மாவேலிக்கரை நகருக்கு பந்தளம், செங்கனூர், ஹரிப்பாடு போன்ற நகரங்களில் இருந்து அதிகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    -தேனி மு.சுப்பிரமணி
    வைத்தீஸ்வரன் கோவிலில் தம்பதி சமேதராய் அருள்பாலிக்கும் ராமபிரான், தன்னை நாடும் பக்தர்களின் குறைகளை தீர்த்து வைப்பதுடன், அவர்களது குடும்பத்தில் ஒற்றுமையும் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவ அருள்புரிகிறார்.
    ராமபிரான், பறவைகளின் அரசனான ஜடாயுவுக்கு அருள்பாலித்த தலம் வைத்தீஸ்வரன் கோவில். எனவே இங்கு ராமருக்கு தனியாக ஆலயம் ஒன்று உள்ளது. ஸ்ரீ விஜய கோதண்டராமன் ஆலயம் என்பது அதன் பெயர். அழகிய இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலய முகப்பினுள் நுழைந்ததும் உள்ள மகா மண்டபத்தில் பீடம் இருக்க, அடுத்துள்ள கருவறையில் ஸ்ரீ ராமர், சீதாதேவி மற்றும் லட்சுமணருடன் அருள்பாலிக்கிறார். ராமரின் பாதத்தின் அருகே பக்த ஆஞ்சநேயரின் திருமேனி உள்ளது.

    இங்கு ராமபிரான் ‘விஜய கோதண்டராமர்’ என்ற திருநாமத்துடன் அருள் புரிந்து வருகிறார். வழக்கமாக ராமரின் இடது புறம் காட்சி தரும் சீதாதேவி, இங்கு ராமரின் வலது புறம் காட்சி தருகிறார். ராமரின் இடது கரத்தில் கோதண்டம் காட்சி தருவதால், இவர் ‘கோதண்ட ராமர்’ என்ற திருநாமம் கொண்டுள்ளார்.

    ஆலயப் பிரகாரத்தின் தென் திசையில் 13 அடி உயரத்தில் பிரமாண்டமாக வீற்றிருக்கும் ஆஞ்சநேயரின் திருமேனி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. வண்ணக் கலவையில், சுதைச் சிற்பமாக உள்ள இந்த ஆஞ்சநேயரை தரிசிக்கும் போது, அவரது கருணை பொங்கும் கண்களை நாம் பார்த்து கொண்டே இருக்கலாம். ஆம், அந்த கண்களில் அவ்வளவு கருணை, சாந்தம் அழகு மிளிர்கிறது. மேற்கு திருச்சுற்றில் ஆதி ஆஞ்சநேயரின் திருமேனி உள்ளது.

    சீதா தேவியை ராவணன் சிறை எடுத்து சென்றபோது, அவனை தடுத்து நிறுத்தி வானில் அவனுடன் போரிட்டார் ஜடாயு. அப்போது ஜடாயுவின் இறக்கையை வாள் கொண்டு வெட்டினான் ராவணன். அதில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய ஜடாயு, அங்கு வந்த ராமனிடம், ராவணன் சீதையை சிறை எடுத்துச் சென்ற விவரத்தை கூறிவிட்டு உயிர் நீத்தார். இதையடுத்து ராமபிரான், ஜடாயுவுக்கு இறுதிச்சடங்குகளைச் செய்து மோட்சம் அளித்தார். ஜடாயுவுக்கு வைத்தீஸ்வரன் கோவில் ஆலயத்தில் அருள்பாலிக்கும் வைத்தியனாத சுவாமியும் அருள்பாலித்தார்.

    இன்றும் வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியனாத சுவாமி ஆலயத்தின் தென் பாகத்தில் ஜடாயு சமாதி உள்ளது. அந்த இடத்தில் ஜடாயு குண்டம் ஒன்றில் விபூதி நிறைந்து உள்ளது. இங்கு ராமநவமி வெகுச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ராமபிரானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அனுமன் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஏராளமான பக்தர்கள் அன்று ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை சூட்டி தங்கள் பிரார்த்தனைகளை நிறைவு செய்கின்றனர்.

    குழந்தை வரம் வேண்டியும், கல்வியில் உயர்நிலை வேண்டியும் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். அந்த பிரார்த்தனை நிறைவேறியதும், ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி, வடைமாலை சாத்தி, தேங்காய் பழங்களுடன் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு அந்தப் பிரசாதத்தைக் கொடுக்கிறார்கள். சனிக்கிழமை தோறும் இந்த ஆஞ்சநேயரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக ஆலயம் திறந்திருக்கும்.

    இங்கு தம்பதி சமேதராய் அருள்பாலிக்கும் ராமபிரான், தன்னை நாடும் பக்தர்களின் குறைகளை தீர்த்து வைப்பதுடன், அவர்களது குடும்பத்தில் ஒற்றுமையும் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவ அருள்புரிகிறார்.

    அமைவிடம்

    நாகை மாவட்டம் சீர்காழி - மயிலாடுதுறை சாலையில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில் புதிய பேருந்து நிலையம் அருகே இந்த ஆலயம் இருக்கிறது.
    பிப்பிலர் என்ற முனிவருக்கு வானத்தை முட்டுவதுபோல காட்சி தந்ததால் ‘வானமுட்டி பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார்.
    காவிரி வடகரைப் பகுதியில் உள்ள வைணவத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வதும், சுமார் 1,000 ஆண்டுகள் பழம்பெருமைக்குரியதும், பிதுர் தோஷம், ஹத்தி தோஷம், சனி தோஷம் உள்ளிட்ட தோஷங்களுக்கு நிவர்த்தி தலமாக விளங்குவதும், அத்திமரத்தில் 14 அடி உயரத்திற்கு வடிவமைக்கப்பட்ட மூலவரைக் கொண்டதுமான ஆலயம், கோழிகுத்தி தயாலட்சுமி சமேத வானமுட்டி பெருமாள் திருக்கோவில்.

    அத்திமரத்தில் வடிக்கப்பட்ட மகாவிஷ்ணுவின் மூர்த்தங்கள், மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட அபூர்வ சிலா ரூபம் காஞ்சி மாநகரில் வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ளது. அங்குள்ள புனித தீர்த்தமான அனந்தசரஸ் குள தீர்த்தத்தில் இருக்கும் இந்த அத்தி வரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அந்த வைபவம் சமீபத்தில்தான் நடந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது காஞ்சிபுரம் அத்திவரதரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவரை தரிசனம் செய்யாமல் விட்டு விட்டோமே என்று வருத்தம் கொள்பவர்களும் இருக்கலாம். அப்படி வருந்துபவர்கள் அனைவரும், கோழிகுத்தி என்ற ஊரில் உள்ள அத்திர மரத்தால் ஆன வானமுட்டி பெருமாளை தரிசனம் செய்து, அந்தக் குறையைப் போக்கிக் கொள்ளலாம்.

    காஞ்சி அத்திவரதர் அத்திமரத்தால் செய்யப்பட்ட சிலாரூபமாகும். ஆனால் கோழிகுத்தி பெருமாளோ, 1000-ம் ஆண்டு பழமையான வேருடன் கூடிய அத்தி மரத்திலேயே செதுக்கப்பட்ட வடிவமாகும். காஞ்சி அத்தி வரதரை நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தரிசிக்க முடியும். ஆனால் இவரை அனுதினமும் தரிசிக்கலாம். இத்தல இறைவனின் பெயர் ‘சீனுவாசப் பெருமாள்’ என்பதாகும். பிப்பிலர் என்ற முனிவருக்கு, வானத்தை முட்டுவதுபோல காட்சி தந்ததால் ‘வானமுட்டி பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். ஆலயத்தின் உற்சவரை சபக்தப்ரியன், வரதராஜன் என்று அழைக்கிறார்கள். இறைவியின் பெயர் ‘தயாலட்சுமி.’ இந்த அன்னை மூலவரின் திருமார்பில் இருப்பவர். பூமாதேவி சிலை ரூபமாக காட்சி தருகிறார். கோவில் விமானம் ‘சந்திர விமானம்’ என்றும், தீர்த்தம் ‘விஸ்வ புஷ்கரணி’, ‘பிப்பில மகரிஷி தீர்த்தம்’ என்றும் வழங்கப்படுகிறது. இத்தல விருட்சமாக அத்தி மரம் உள்ளது.

    தல வரலாறு

    பிப்பிலர் என்பவர், முழு நேரமும் இறை சிந்தனையுடன் தூய்மையான வாழ்க்கை வாழ்ந்த தவச்சீலர் என்றும், முற்பிறவியில் நிர்மலன் என்ற பெயரில் மன்னனாக இருந்து பலரை கொன்றவர் என்றும் சொல்லப்படுகிறது. இவருக்கு, விதிவசத்தால் ஒரு காலகட்டத்தில் சரும நோய் உண்டானது. அதன்பின்னர் அவர் முழுநேரமும் இறை நாட்டத்துடன் வாழத்தொடங்கினார். ஒருநாள் இறைவனை வழிபடும் நேரத்தில் “என்னையே உனக்கு அர்ப்பணித்திருக்கிறேன். எனக்கு ஏன் இப்படி ஒரு வேதனை? இதற்குத் தீர்வு தரமாட்டாயா?” என்று மனமுருகி வேண்டினார்.

    பல வைத்தியர்கள் முயன்றும் அவரது நோயை குணப்படுத்த முடியவில்லை. என்ன செய்வது என்பதை அறியாத பிப்பிலர், தன் கால்போனப் போக்கில் நடக்கத் தொடங்கினார். சிலநாட்கள் நடந்தபிறகு ஓரிடத்தில் யாழின் இசை ஒலிக்கக் கேட்டு நின்றார். ‘யார் இசைப்பது?, எங்கிருந்து இந்த ஒலி வருகின்றது?’ என்பதை அறிய இசை வந்த திசையை நோக்கி நடந்தார். அங்கே நாரத முனிவர் தெய்வீக வீணையை வாசித்துக் கொண்டிருந்தார். பிப்பிலர் அவரை வணங்க , நாரதர் அவரை நிமிர்ந்துப் பார்த்தார். பிப்பிலரின் நோய் தாக்கத்தை கண்டு மனம் இரங்கிய நாரதர், அவருக்கு ஒரு மந்திரத்தை உபதேசித்து, அதை தினந்தோறும் பாராயணம் செய்து வரும்படி கூறினார். பிப்பிலரும் அப்படியேச் செய்தார்.

    நாரதர் கூறிய மந்திரத்தை தொடர்ந்து பாராயணம் செய்து வந்தார். ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய நாராயணர், “பிப்பிலரே! போன ஜென்மத்தில் நீர் அரசனாக இருந்து பலரை ஹத்தி (கொலை) செய்திருக்கிறாய். அதன் பலனாகத்தான் இந்த சரும நோய், உன் உடலில் தங்கி உன்னை வேதனைப்படுத்துகிறது. அந்தப் பாவ தோஷம் நீங்க வேண்டுமானால், காவிரிக் கரையோரம் உன் யாத்திரையைத் தொடங்கு. புண்ணாக வனம் எனப்படும் திருமூவரூரில் (மூவலூரில்) எழுந்தருளி இருக்கும் ஸ்ரீமார்க்க சகாயேஸ்வரர் உனக்கு வழி காட்டுவார். வழிபாட்டுக்குப்பின் சரும நோய் நீங்கி பொன் உடல் பெறுவாய்” என்று அருளி மறைந்தார்.

    அதன்படி காவிரிக் கரையோரம் தனது யாத்திரையைத் தொடங்கிய பிப்பிலர், வழியில் உள்ள தலங்களை எல்லாம் தரிசித்து உளமார வழிபட்டு மூவலூரை அடைந்தார். மூவலூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமார்க்க சகாயேஸ்வரரை உருக்கமாக வழிபட்டார்.

    இதனால் மனம் மகிழ்ந்த ஈசன், ‘‘பிப்பிலரே! வடக்கு நோக்கிச் செல். உன் கவலை தீரும்!’’ என்றார்.

    பிப்பிலரும் அப்படியே வடக்கு நோக்கிச் சென்று காவிரி ஆற்றில் பகவானைப் பிரார்த்தித்தபடி நீராடினார். அடுத்தவினாடியே அவர் உடலில் சிறிய மாற்றம் ஏற்படத் தொடங்கிற்று. அந்த மகிழ்ச்சியில் ஏதோ ஓர் உள்ளுணர்வு உந்த, அவர் கால்கள் வடதிசையை நோக்கி அவரையும் அறியாமல் நடக்கத் தொடங்கின. ஓரிடத்தில் பெரிய அத்திமரம் தென்பட்டது. அந்த அத்திமரத்தில் சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் ஆகியவற்றுடன் நாராயணர் காட்சி தர, அவரது மார்பில் இருந்து ஒரு ஒளிப்பிழம்பானது வானத்தை முட்டினாற்போல் விண்ணும் மண்ணும் நிறைய நின்றது.

    பிப்பிலரின் உடல் சிலிர்த்து அடங்கியது. அவரது உடலை பற்றியிருந்த சரும வியாதி சிறிது சிறிதாக குறைந்து, முற்றிலுமாக மறைந்து தங்க மயமாக ஜொலித்தது. சரும நோயில் இருந்து விடுபட்ட பிப்பிலர், காவிரிக் கரையிலேயே, ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து தவத்தில் ஈடுபட்டார். பிப்பிலர் தவம் செய்த சிறுமண்டபம் தீர்த்தக்கரை ஓரத்தில் இன்றும் உள்ளது. பிப்பிலர் நீராடிய காவிரி தீர்த்த கட்டத்தை ‘பிப்பில மகரிஷி தீர்த்த கட்டம்’ என்று அழைக்கிறார்கள். இங்கு நீராடினால், வானமுட்டிப் பெருமாளின் அருளால் மெய்ப் பிணி, பாவப் பிணி, பிறவிப் பிணி ஆகிய மூன்றும் நீங்கும் என்கிறார்கள்.

    பிப்பில மகரிஷியின் கோடிஹத்தி தோஷங்களையும் நிவாரணம் செய்ததால் இத்தலம் ‘கோடிஹத்தி’ எனவும், ‘பாப விமோசனபுரம்’ எனவும் அழைக்கப்படலாயிற்று. கோடிஹத்தி என்ற பெயரே நாளடைவில் மருவி, ‘கோழிகுத்தி’ என்றானது. வானமுட்டி பெருமாளின் சிறப்பைக் கேள்விப்பட்ட தஞ்சை சரபோஜி மன்னன், ஒருநாள் கோழிகுத்தி வந்தார். தனக்கு யுத்த தோஷம் உள்ளது. அதை நீக்கி அருள்புரிய வேண்டும் என இத்தல இறைவனை வேண்டி நின்றார். பிப்பிலருக்கு அருளியது போல், சரபோஜி மகாராஜாவுக்கும் அத்தி மரத்தில் வானளாவிய காட்சி தந்து, தோஷத்தை நீக்கியருளினார், பெருமாள்.

    இதனால் மகிழ்ந்த மன்னன், தான் கண்ட காட்சியை அனைவரும் காண வேண்டும் என்று எண்ணி, பெருமாளின் திருக்கோலத்தை, அதே அத்திமரத்தில் 14 அடி உயரத்தில் சிலையாக வடித்தார். அவரையே மூலவராய் கொண்டு ஓர் ஆலயம் எழுப்பினார் என்று ஆலய வரலாறு சொல்லப்படுகிறது.

    கோவில் தோற்றம்

    ஆலய அமைப்பு

    இந்துசமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ்வாலயம், கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய ராஜகோபுரம். அதன் கீழ் துவாரபாலகர்கள் ஜெயன், விஜயனின் அருட்காட்சி தருகின்றனர். அவர்களை வணங்கி விட்டு கடந்தால், பலிபீடம், கொடிமரத்தை தரிசிக்கலாம். பின்னர் விநாயகப் பெருமான் காட்சி தருகிறார். தொடர்ந்து கருடாழ்வாரை தரிசித்து, உள் மண்டபத்தில் நுழையலாம். அங்கே கருவறையில் 14 அடி உயரத்தில் வானமுட்டிப் பெருமாளின் தோற்றத்தைக் கண்டு நாம் சிலிர்க்காமல் இருக்க முடியாது.

    ஒரே ஒரு பிரகாரம்தான் இருக்கிறது. பிரகலாதனுக்கு அருள் செய்த நரசிம்ம மூர்த்திதான் இங்கே உற்சவ மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார். யோக நரசிம்மர் இரண்டு கைகளில் சங்கு - சக்கரம் ஏந்தி அருள்பாலிக்கிறார். இந்த நரசிம்ம மூர்த்தி எந்தவொரு கொடிய துன்பத்தையும் நொடியில் போக்கி அருள்பவர். கிரகக் கோளாறுகள், பகைவர்கள் தொல்லை, கடன் தொல்லை, வியாதிகளில் இருந்து விடுபட இவரை வழிபட்டால் போதும். பிரதோஷ காலத்தில் இந்த நரசிம்ம மூர்த்தியை வழிபட்டால் அங்காரக தோஷம் நிவர்த்தியாகும். மன நிம்மதி ஏற்படும்.

    உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசப் பெருமாளை வழிபாடு செய்யலாம். உள்மண்டபத்தில் மூலவருக்கு வலதுபுறம் சக்கரத்தாழ்வாரும், இடதுபுறம் யோகநரசிம்மரும் கிழக்கு நோக்கியவாறு அருள்கின்றனர். நர்த்தன கிருஷ்ணர் தெற்கு நோக்கியவாறு அருள்புரிகின்றார். அபிஷேகம் செய்ய விரும்புபவர்கள் யோக நரசிம்மருக்கும், வருண மூலையில் உள்ள வரதராஜப் பெருமாளுக்கும் அபிஷேகம் செய்கிறார்கள். வெளிப்பிரகாரத்தின் வடதிசையில் தெற்குநோக்கிய வண்ணம் விஷ்வக்சேனர், ராமானுஜர், பிப்பில மகரிஷி ஆகியோர் அருள்புரிகின்றனர். பிப்பில மகரிஷி அருளிய சனி ஸ்தோத்திரம், பெருமாள் தியான ஸ்லோகம் ஆகியவை ஆலய வழிபாட்டு நேரங்களில் ஓதப்படுகின்றன.

    ஈசான்ய திசையில் மேற்கு நோக்கி தனிச்சன்னிதி கொண்டு ‘சப்தஸ்வர ஸ்வரூப ஆஞ்சநேயர்’ அருள் புரிகிறார். இவர் ஏழு ஸ்வரங்களையும் தன்னில் கொண்டவர். சாதாரணமாக எல்லா கோவிலிலும் சன்னிதியின் மூன்று பக்கங்கள் மூடியும், மூர்த்தம் பார்க்கும் பக்கம் மட்டும் திறந்தும் இருக்கும். ஆனால் இங்கு ஆஞ்சநேயரின் பின் பக்கத்தை பக்தர்கள் தரிசிக்க வசதியாக பின்புறமும் திறந்தே வைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயரின் வால், தலைவரை உயர்ந்து, நுனி கொஞ்சம் வளைந்து நுனியில் மணியுடன் காணப்படுகிறது. சங்கீதம், நாட்டியம் போன்ற கலைத்துறைகளில் வளம் பெற இவரை ஏராளமானோர் தரிசிக்கின்றனர்.

    இத்தல இறைவனை வழிபட்டால், பிதுர் தோஷம், ஹத்தி தோஷம், சனி தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும். கோழிகுத்தி வானமுட்டிப் பெருமாளை தரிசனம் செய்தால், திருப்பதி சீனிவாச பெருமாளையும், சோளிங்கர் யோக நரசிம்மரையும், காஞ்சிபுரம் அத்தி வரதராஜரையும் ஒன்றாகத் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 4 கிலோமீட்டர்தொலைவில் உள்ளது கோழிகுத்தி கிராமம். மயிலாடுதுறையில் இருந்து செல்வதற்கு, மினி பஸ், ஆட்டோ வசதி உள்ளது. இந்த ஆலயம் மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர் ஆலயத்திலிருந்து வடக்கில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

    - நெய்வாசல் நெடுஞ்செழியன்
    ×