என் மலர்tooltip icon

    கோவில்கள்

    தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்த தலங்களில் ஒன்று, கோடகநல்லூர் பெரியபிரான் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்த தலங்களில் ஒன்று, கோடகநல்லூர் பெரியபிரான் கோவில். கார்கோடகன் என்ற நாகத்தின் பாவத்தைப் போக்கிய மகாவிஷ்ணு இங்கு பெரிய பிரானாக வீற்றிருக்கிறார். இவரை ப்ருஹன், மாதவன் என்றும் அழைக்கிறார்கள். ‘ப்ருகன்’ என்ற வடமொழிக்கு ‘பெரியவன்’ என்று பொருள். இக்கோவிலில் தற்போதும் விஷ்ணு பகவானை, கார்கோடகன் நாகம் தங்கியிருந்து வணங்குவதாக நம்பிக்கை நிலவுகிறது. அகத்தியர் பிரம்ம ஞானத்தினை அளித்து வருவதாகவும் கருதப்படுகிறது. எனவே தான் செவ்வாய் தோஷம் நீங்க, இங்கு பக்தர்கள் பலரும் விசேஷ பிரார்த்தனை செய்து பயனடைந்து வருகிறார்கள். குறிப்பாக ராகு, கேது தோஷம் நீங்க மக்கள் இங்கு வந்து வணங்கி நலம்பெறுகின்றனர்.

    கருவறையில் மூலவரான பெரியபிரான், சங்கு - சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். அவருடன் ஸ்ரீதேவியும், பூதேவியும் வீற்றிருந்து அருள்கிறார்கள். இத்தல மூலவரை, கோடகன் பாம்பு தனது கையால் தாமிரபரணியில் உள்ள சகதியாலும், மண்ணாலும் உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. எனவே தான் மூலவர் மீது கல்சுதை வர்ணம் பூசப்பட்டுள்ளது. இவருக்கு அபிஷேகம் கிடையாது.

    உற்சவர் ரங்கநாதனுக்கும் அவருடன் அருள்பாலிக்கும் ஸ்ரீதேவி- பூதேவிக்கும் தான் அபிஷேகம் செய்யப்படுகிறது. கோவிலின் தீர்த்தம் தாமிரபரணி தீர்த்தம். இக்கோவிலில் மிகவும் விசேஷமானது அமிர்தக் கலசம். இந்த அமிர்தக் கலசத்தை, பக்தர்கள் தாங்கள் வேண்டுதல் நிறைவேறியப் பின்பு கோவிலுக்கு வந்து பச்சை பயிறு, வெல்லம் மற்றும் நெய் ஆகியவை கொண்டு தயாரிப்பார்கள். இந்த அமிர்தக் கலசம் பகவானின் அருள் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்தக் கோவிலுக்கு வரும்போது யாராவது ஒரு பக்தர் அமிர்தக்கலசம் படைத்து பகவானுக்கு சாத்திக் கொண்டிருக்கும் போது வருபவர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள்.

    இந்த ஆலயத்தின் பின்புறத்தில் நீண்ட படித்துறை உள்ளது. இங்கு ஸ்நானம் செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கும். தடைப்பட்ட திருமணம் நடைபெறும். கல்விச்செல்வம் பெருகும் என்கிறார்கள். எல்லா வளமும் கிடைக்க தாமிரபரணி ஆற்றின் கரையில் அமர்ந்து, பெரியபிரான் நமக்கெல்லாம் அருள் வழங்கிக் கொண்டு இருக்கிறார். திருநெல்வேலியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் கோடகநல்லூர் திருத்தலம் அமைந்துள்ளது.
    திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் தென்திருப்பேரையில் இருந்து இடதுபுறம் திரும்பிச் சென்று, ஏரல் தாமிரபரணிக் கரையில் சேர்மன் அருணாசல சுவாமிகள் ஆலயத்தை அடையலாம்.
    திருச்செந்தூர் அருகே உள்ள மேலப்புதுக்குடியைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவர், தெய்வீக முனிவர் ஒருவர் கொடுத்த ஏடுகளைப் பார்த்து, பாம்பு, பூரான் போன்ற கொடிய விஷ ஜந்துகளின் விஷத்தை இறக்கக்கூடிய வைத்தியம் செய்துவந்தார். இவருடைய வழித்தோன்றல் ராமசாமி. இவர் உமரிக்கட்டைச் சேர்ந்த சிவனைந்தம்மாளை மணமுடித்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. ஒரு நாள் இந்த தம்பதியர், அருஞ்சுனை காத்த அய்யனாரை வணங்கி விட்டு, சுனையில் குளித்தபோது துறவி ஒருவரை சந்தித்தனர். அவர், “நீங்கள் இருவரும் செட்டியாபத்து சென்று, அங்குள்ள ஐந்து வீட்டு சாமியைத் தரிசனம் செய். உனக்கு ஆண் குழந்தை பிறக்கும். அவனுக்கு அருணாசலம் என பெயரிடுங்கள். அவன் தெய்வ நிலை கொண்ட குழந்தையாக வளருவான்” என்று கூறினார்.

    அதன்படி அந்த தம்பதியர் செட்டியாபத்து சென்று வழிபட்டனர். இதையடுத்து விக்கிரம ஆண்டு புரட்டாசி மாதம் 18-ம் நாள் உத்திர நட்சத்திரத்தில், அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தைப் பிறந்தது. அதற்கு அருணாசலம் என்று பெயரிட்டனர். சிறுவயதில் அருணாசலம், மூலக்கரையில் ஓலைச்சுவடியில் ‘அரிஓம் நம’ என்று எழுதி தமிழ் மொழியைக் கற்றார். ஆரம்ப பள்ளியை முடித்தவுடன், ஏரலில் வாழ்ந்த சித்தப்பா சிவசுப்பிரமணியம் அரவணைப்பில், பண்ணைவிளையில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆங்கிலம் மற்றும் தமிழை கற்று முடித்தார். இவர்களுக்கு ஏரல், சிறுத் தொண்டநல்லூர், பழையகாயல் கிராமங்களில் பெருஞ்சொத்து இருந்தது.

    கல்வியோடு, தனது வழி முன்னோர்களின் விஷக்கடி மருத்துவத்தையும் கற்று தேர்ந்தார். இவரது ஆறிவாற்றலையும் ஆங்கிலப் புலமையையும் கண்ட ஆங்கில அரசு, சிறுதொண்டநல்லூர் கிராமத்துக்கு முன்சீப்பாக இவரை நியமித்தார்கள். அப்போது ஒரு முறை ‘பொய் சாட்சி சொல்ல வேண்டும்’ என்று மேல் அதிகாரி ஒருவர் கூறியதால், அந்தப் பதவியை உதறித் தள்ளினார்.

    இதற்கிடையில் அருணாசலத்திற்கு திருமணம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். அப்போது, “இது சுட்டமண்.. இதில் எதுவும் ஓட்டாது” என்று கூறிவிட்டார். ஆனாலும் வீட்டில் உள்ள பெரியவர்கள், அவரிடம் அன்பு என்னும் அணையைப் போட்டு திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளும்படி சொன்னார்கள். இதையடுத்து யாருக்கும் பாதகம் இல்லாத வகையில் “28 வயது ஆகட்டும்” என்று கூறிவிட்டார்.

    அப்பழுக்கற்ற மனிதராய், பிரம்மச்சாரியாக வாழ்ந்த அருணாசலத்தை, அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் பிஷப்வெஸ்டன், ஏரல் பஞ்சாயத்துக்கு சேர்மனாக நியமித்தார். ஏரல் சேர்மனான அவர், ஏரலில் பள்ளிக்கூடங்களைத் தொடங்கினார். தெருவிளக்குகளை அமைத்தார். விளக்குகள் இரவு நேரங்களில் அணைந்து விடாமல் இருக்க, பணியாளர்களை நியமனம் செய்தார். ஊருக்குள் கழிவு நீர் தங்காமல் இருக்க, வடிகால் வசதி செய்து கொடுத்தார். ஊராட்சி எல்லைக்குள் மரக்கன்றுகள் நட்டார்.

    ஒரு நாள் அவரது கனவில் சிவபெருமான் தோன்றினார். “நீ இன்னும் 8 நாட்களில் என்னோடு வந்து சேர்” என்று கூறிவிட்டு மறைந்தார். மறுநாள் எழுந்தவுடன் தனது தம்பி கருத்தபாண்டியை அழைத்த அருணாசலம், “தம்பி.. காலம் கனிந்துவிட்டது. நான் இறைவனிடம் கலக்கும் நாள் வந்துவிட்டது. நான் வருகிற அமாவாசை அன்று ஆடி மாதம் 13-ம் நாள் செவ்வாய்க்கிழமை அன்று உச்சிப் பொழுதில், இறைவனோடு என்னை இணைத்துக்கொள்வேன். என்னுடைய உடல் மறைந்தாலும் நான் எப்போதும் உங்களுடன்தான் இருப்பேன். என்னை நம்பி வரும் பக்தர்களுக்கு, வேண்டிய வரம் அளிப்பேன். அவர்களை காலம் காலமாக காத்துவருவேன்” என்றார்.

    அதைக் கேட்ட அவரது தம்பி கலங்கிப்போனார். குறிப்பிட்ட காலத்தில் அருணாசலம், பஞ்சாயத்துக்குச் சென்றார். அங்குள்ள கோப்புகள் அனைத்திலும், முறையாக கையொப்பம் வைத்தார். நகரத்தினை சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் நலனைக் காக்கும் வண்ணம், அரசு ஆணையில் கையெழுத்து இட்டார். அதன்பின் அமாவாசை நாளுக்காகக் காத்திருந்தார்.

    அந்த நாளும் வந்தது. “இதோ வருகிறேன்” என்று கூறி தனது அறைக்குள் சென்றார். தனது கட்டிலில் ராஜ மிடுக்கோடு படுத்தார். கண்களை மூடினார். தியானத்தில் ஆழ்ந்தார். உச்சிப் பொழுது வந்தது. உறங்கிய நிலையிலேயே இறைவன் திருவடிப்பேற்றை அடைந்தார். அப்போது அவருக்கு வயது 28 ஆகும் (2.10.1880 - 27.7.1908). இந்தச் செய்தி காட்டுத் தீ போல பரவியது. ஏரல் மக்கள் மட்டுமல்ல சுற்று வட்டாரக் கிராம மக்களும் கலங்கிய கண்களோடு கூடினர்.

    அருணாசலம் கூறியபடி தென்மேற்கில் உள்ள தாமிரபரணி நதிக்கரையில், படர்ந்த ஆலமரத்தின் அடியில் சுவாமிகளை அமர்ந்த கோலத்தில் வைத்து அடக்கம் செய்தனர். உரிய சடங்குகள் நடத்தப்பட்டது. கருடன் சங்கொலியுடன் சுவாமியை வலம் வந்தது. கருடன் நிழல் அவரது உடலில் பட்டது. அவர் படித்த நூல்கள், பயன்படுத்திய விலை மதிப்பு மிக்க பொருட்கள், உயர்ந்த அணிகலன்கள் ஆகியவற்றை அவரது காலடியில் வைத்து உடலை மலர்களாலும், மண்ணாலும் மூடினார்கள். அன்றுமுதல் அவர், பக்தர்களுக்கு அருள்புரியும் ஆனந்தநிலை ஆரம்பமானது.

    அருணாசல சுவாமிகள் பல அற்புதங்கள் புரிய ஆரம்பித்தார். அவர் தெய்வ நிலையடைந்த சில நாளில், அவர் உடல் வைக்கப்பட்ட இடத்தில் புதைக்கப்பட்ட விலை உயர்ந்த பொருட்களை திருட சிலர் வந்தனர். அப்போது பாம்புகள் கூட்டம் படமெடுத்து, படையெடுத்து வந்து, அவர்களை விரட்டியது. அஞ்சி நடுங்கிய திருடர்கள் ஆளுக்கொரு பக்கமாக ஓடினர். இந்தக் காட்சி ஊர் மக்களின் கனவில் தெரிந்தது. அவர்கள் அனைவரும் அருணாசல சுவாமிகளின் ஜீவசமாதிக்கு வந்து பார்த்தனா். அங்கு மண் தோண்டப்பட்டு இருப்பதையும், அதன் அருகே கடப்பாறை மற்றும் மண்வெட்டி இருப்பதையும் கண்டனர். உடனே இனி தெய்வ நிலை பெற்ற அவருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று அனைவரும் நினைத்தனா். அருணாசல சுவாமிகளின் தந்தை ராமசாமி அதற்கான பணியை மேற்கொண்டார். சிறிய அளவிலான கோவில் கட்டப்பட்டது. அருணாசல சுவாமிகள், சேர்மனாக இருந்த காரணத்தால் அனைவரும் அவரை ‘சேர்மன் சுவாமி’ என்று அழைத்தனர்.

    சுவாமி சேர்மன் கோவிலைப் பற்றி ஆங்கிலேய கலெக்டர் பேட்துரை என்பவர், 1916-ம் ஆண்டு எழுதிய அரசு குறிப்பேட்டில், ‘இந்த கோவில் முன்பு அனைத்து சாதி, மதத்தினரும் கூடுகிறார்கள். நோயை குணமாக்கி செல்கிறார்கள். பில்லி - சூனியம் தீருகிறது. இங்குள்ள புற்று மண்ணை கையால் எடுத்து மருந்தாக உட்கொள்கின்றனர். உடம்பில் பூசி நோய் குணமடைகிறார்கள்’ என எழுதி வைத்துள்ளார்.

    சேர்மன் சுவாமியின் சமாதி வைத்த இடத்தில், அவரின் தந்தை தனது கைகளால் சிறிது மண்ணை எடுத்து லிங்கம் போல் பிடித்து வைத்துள்ளார். அந்த லிங்கம் தான் இன்று இரண்டு அடிக்கு மேல் வளர்ந்து உள்ளது. தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர் எடுத்து லிங்கத்தினை அபிஷேகம் செய்தும், அந்த லிங்கம் கரையாமல் உள்ளது. அந்த லிங்க அபிஷேக தீர்த்தத்தினால் பல நோய்கள் தீருகிறது. மருத்துவர்களால் கைவிடப்பட்ட வலிப்பு நோய், மனநோய், அரிப்பு, கட்டி உள்ளிட்ட பல நோய்களுக்கு இங்கே தீர்வு கிடைக்கிறது. நோய் பாதிப்பு உள்ளவா்கள், தாமிரபரணியில் காலையிலும், மாலையிலும் நீராடி, லிங்க அபிஷேகத் தீர்த்தத்தில் நிலக்காப்பை கரைத்து உடம்பில் பூசியும், குடித்தும் விரதங்கள் மேற்கொண்டு வந்தால், 21 நாட்களில் நோய் தீர்ந்து விடுகிறது. குழந்தை இல்லாதவர்கள் தீர்த்தம், நிலக்காப்பு ஆகிய இரண்டையும் பூசியும், குடித்தும் விரதங்கள் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

    இந்த லிங்கத்திற்கு பக்தர்கள், கவசம் செய்து கொடுத்தனர். ஆனால் வளர்ந்த லிங்கத்தில் அந்தக் கவசத்தினை மூடமுடியவில்லை. ஆகவே கவசம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்து 112 வருடங்களை தாண்டி விட்டது. இங்கு நாள் தோறும் திருவிழாதான். ஒவ்வொரு அமாவாசையிலும், பவுர்ணமியிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். அருணாசல சுவாமியின் கோலம், நின்ற ராஜ கோலமாகும். இங்கு நான்கு கால பூஜை நடக்கிறது. காலை, மதியம். மாலை, இரவு நேரங்களில், காலம் தவறாமல் பூஜைகள் நடக்கிறது.

    பூஜை நேரங்களில் தாமிரபரணி தீர்த்தம் எடுத்து வரப்பட்டு விநாயகர், மூலவர், லிங்கம் ஆகியவற்றின் திருமேனிகளுக்கு அபிஷேகம் செய்கின்றனர். சேர்மன் சுவாமிக்கு கரையில்லாத வேட்டி, தலைப்பாகை, துண்டு, மலர் மாலைகள் சூட்டப்படும். அதன்பின் சுவாமிக்கு உப்பில்லாத பச்சரிசி சோறு நைவேத்தியமாகப் படைக்கப்படும். பூஜை நேரங்களில் சுவாமிக்கு 16 வகையான தீபாராதனைகள் காட்டப்படும்.

    இந்த ஆலயத்தில் சித்திரைத் திருவிழா, ஆடி அமாவாசை திருவிழா, தை அமாவாசை திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும். தை அமாவாசை திருநாளில் லட்ச கணக்கான பக்தர்கள் இங்கு கூடுவார்கள்.

    மந்திரவாதிகளை விரட்டிய பெரும்படை

    ஆடு மாடு மேய்க்கும் சிறுவர்கள் மீது, அருணாசல சுவாமிக்கு அலாதி பிரியம் உண்டு. அவர் சமாதி நிலை அடைந்தாலும் அந்தப் பிரியம் விட்டுப் போகவில்லை. ஆகவே அந்த சிறுவர்களுக்குக் காட்சி கொடுத்தார். சேர்மன் சுவாமிகளின் புகழ், தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் பரவியது. கேரள மக்கள் அதிகமாக வரத் தொடங்கினர். கேரள மந்திரவாதிகள் சிலர் சேர்மன் சக்தியை தங்கள் வசப்படுத்தி கொள்ள விரும்பினர். ஆனால் சித்துக்கள் தெரிந்த கொடியவர்கள் மீது சோ்மன் சுவாமி தனது சித்துக்களை காட்டத் தொடங்கினார். தனது வெள்ளிப் பிரம்பை, அவர்களை நோக்கி வீசி எச்சரித்தார். அதனால் அவர்கள் சுவாமியை கட்டிபோட பூஜையை தொடங்கினர்.

    அப்போது ஒரு பெரும் போர்ப்படை அங்கு வருவது போல மந்திரவாதிகளின் கண்களுக்கு தெரிந்தது. அந்த பெரும் படையை பார்த்த மந்திரவாதிகள், உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடினர். பின் அவர்கள் தங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டனர்.

    அமைவிடம்

    திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் தென்திருப்பேரையில் இருந்து இடதுபுறம் திரும்பிச் சென்று, ஏரல் தாமிரபரணிக் கரையில் சேர்மன் அருணாசல சுவாமிகள் ஆலயத்தை அடையலாம். குரும்பூரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் ஏரல் உள்ளது. திருச்செந்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருந்து பேருந்து வசதி உண்டு.

    முத்தாலங்குறிச்சி காமராசு
    ராமநாதபுரத்துக்கு தெற்கே 10 கி.மீ. தொலைவில் உள்ள திருப்புல்லாணியில் பிரசித்தி பெற்ற ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ராமநாதபுரத்துக்கு தெற்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்புல்லாணி. இங்கு பிரசித்தி பெற்ற ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவில் உள்ளது.
    மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 44-வது கோவிலாகும். ஆழ்வார்களில் திருமங்கையாழ்வாரால் 20 பாடல்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற புகழ் பெற்ற புண்ணிய தலம்.

    இந்த கோவில் தீர்த்தம், மூர்த்தி, தலம் என்ற மூன்று சிறப்புகளுடன் புராணப் புகழ் பெற்றும், சரித்திர புகழுடன் சிறந்த திவ்ய தேசமாக விளங்குகிறது.
    விஷ்ணுவின் அவ தாரமான ராமபிரான் ஜெகநாதனை வணங்கி அவரால் கொடுக்கப்பட்ட வில்லைப் பெற்று ராவண சம்ஹாரம் செய்து சீதா பிராட்டியை மீட்க அனுக்கிரகிக்கப்பட்ட தலமாகவும், ராமபிரானை ராவணன் தம்பி விபீஷணன் சரண் அடைந்து இலங்கைக்கு அரசனாக முடிசூடப்பட்ட தலமாகவும் விளங்குகிறது.

    கடற் கடவுள் தன் பத்தினியோடு ராகவனை சரணடைந்து தன் குற்றம் மன்னிக்கப்பட்ட இடமாகவும், சுகசாரணர் களுக்கு அபயம் அளித்து, புல்லவர், கண்ணுவர் போன்ற முனிவர்கள் ஆதிஜெகநாதரை சரணடைந்து பரமபதம் பெற்ற தலமாகவும் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் விளங்குகிறது.

    ஆகவே, இந்த தலம் சராணாகதி தருமத்தை அனுஷ்டிக்கக்கூடிய புண்ணிய ஸ்தலமாக திகழ்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இத்த லத்திலுள்ள மூர்த்தியை வணங்கி பகவான் பாதம் அடியில் அர்ச்சாரூபியாய் அமர பாக்கியம் பெற்ற பரிசுத்தமான அரசமர நிழலில் நாகப்பிரதிஷ்டை செய்து, நிவேதனம் செய்த பாயாசத்தை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாக ஏராளமான தம்பதியர்கள் பெருமாளை தரிசிக்க வருகின்றனர்.

    இத்தலத்தில் வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கும். தாயாருக்கு புடவை சாத்துதலையும், பெருமாள் சாமிக்கு துளசி மாலை அணிவித்தலையும் பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். ராமர் சயன நிலையில் இருப்பது இக்கோவிலின் சிறப்பு அம்சம். எங்கும் காண இயலாத விசேஷ அசுவத்தமும் (அரசமரம்), நாகத்தின் மீது நடமாடும் சந்தானக்கண்ணனும், சிற்பக்கலையின் களஞ்சியமாக கிரீடம், பட்டாக்கத்தியுடன் காட்சியளிக்கும் தர்ப்பசயணன் ராமனும், ரசாயண சத்துக்கள் நிரம்பிய சக்கர தீர்த்தமும் இத்தலத்தின் மாபெரும் சிறப்புக்கு சான்றுகளாய் திகழ்கின்றன.

    கோவில் தல விருட்சமாக உள்ள அரச மரம் சாமி சன்னதியின் மேற்கில், வெளிப் பிரகாரத்தில் நாய்ச்சியார் சன்னதிக்கு பின் பக்கம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. ஆற்று நீர், குளத்து நீர், கடல் நீர் என மூன்று நீர்ப் பெருமை பெற்ற தலமாக திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் சாமி கோவில் விளங்கி வருகிறது.

    பழங்கால சிற்பக்கலையின் நுணுக்கங்களை கோவிலுக்குள் எங்கும் காண முடிகிறது. பெருமாள் சன்னதிக்கும் தாயார் சன்னதிக்கும் எதிரில் வெளிப்பக்கம் பக்தி உலாவு மண்டபத்தில் காணப்படும் சேதுபதிகளின் வண்ண வடிவங்கள், தானீகர்களின் பதுமைகளும் கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. தர்ப்பசயன ராமன் திருமேனி அமைப்பும், அவருடைய நாபீ கமலத் தண்டின் அமைப்பும் பார்க்க பார்க்க பக்தர்களின் மனதை பரவசப்படுத்தும்.

    பங்குனி மாதத்தில் ஆதி ஜெகநாத பெருமாள் சாமி பிரம்மோத்சவம், சித்திரையில் பட்டாபிராமன் பிரம்மோத்சவம், ஆடியில் சூடிக்கொடுத்த நாச்சியார் உற்சவம், ஆவணியில் திருப்பு வித்திரோத்சவம், மார்கழியில் பகல்பத்து, ராப்பத்து உற்சவங்கள், புரட்டாசியில் தாயார் நவராத்திரி உற்சவம், விஜயதசமி ஆகிய உற்சவங்கள் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.

    தினமும் நான்கு கால பூஜைகள் நடை பெறுகிறது. ராமநாதபுரத்தில் இருந்து ஏராளமான டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த கோவிலில் 2002, 2012-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது.

    மனிதனுக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது தெய்வங்களை வணங்கி பிரார்த்தனை செய்வது என்பது மரபு. நம்பிக்கையுடன் வழிபட்டால் நல்ல தீர்வு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. நமது பிரச்சினைகள் நீங்கி நலமோடும், வளமோடும் வாழ பெருமாளை வணங்கி வழிபடுவோம்.

    நடை திறக்கும் நேரம்

    தினமும் காலை 7.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 12.15 மணி வரை நடை திறந்திருக்கும். அதன் பின்னர் நடை சாத்தப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். இரவு 8.00 மணிக்கு நடை சாத்தப்படும். புரட்டாசி சனிக்கிழமைகளில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணி வரை நடை திறந்திருக்கும். பின்னர் நடை சாத்தப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8.30 மணி வரை திறந்தே இருக்கும்.

    நேர்த்திக்கடன்

    புரட்டாசி சனிக்கிழமை களில் ஆதி ஜெகநாத பெருமாளை தரிசிக்க கூட்டம் அலைமோதும். பக்தர்கள் சுவாமிக்கு துளசி மாலை சாத்தியும் தாயாருக்கு பட்டு சாத்தியும் வழிபடுவார்கள். தாங்கள் வேண்டியதை நிறை வேற்ற மனமுருகி வேண்டிக் கொள்வார்கள். வேண்டுதல் நிறைவேறியவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவார்கள். பெருமா ளுக்கு நைவேத்தியம் செய்தும் பக்தர்களுக்கு வழங்குவார்கள்.

    கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள்

    திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் கோவிலில் ஆதி ஜெகநாதருக்கு பங்குனி மாதத்திலும், ராமருக்கு சித்திரை மாதத்திலும் பிரம்மோற்சவ விழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். இந்த விழாக்களின்போது ஜெகநாதர், ராமர் இருவரும் கருட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். ஜெகநாதர் பங்குனி உத்திரத்தன்றும், சித்ரா பவுர்ணமியன்று ராமரும் தேரில் எழுந்தருளுவது கண் கொள்ளாக் காட்சியாகும். வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, பொங்கல், தீபாவளி மற்றும் வாரத்தின் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

    கடலரசனுக்கு மன்னிப்பு வழங்கிய இடம்

    ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு வெளியில் விளங்கும் 22 தீர்த்தங்களுள் இத்திருத்தலத்தில் உள்ள தீர்த்தமும் அடங்கும். ஆதி சேது என்னும் இடம் இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. ராமேஸ்வரத்தில், தீர்த்தங்கள் வகையில் கூறப்படும் தேவிபட்டணம் என்பது இத்தலத்தின் அருகில் உள்ளது. இங்குக் கடலில் நவக்கிரகம் உள்ளது. மக்கள் அதனை வழிபட்டுப் புத்திரப் பேறு அடையும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள்.

    விபீஷணன் இங்குதான் சரண் அடைந்தான். இலங்கை வேந்தனாக முடி சூட்டப்பட்டதும் இங்குதான். கடலரசனுக்கு பகவான் மன்னிப்பு வழங்கிய இடம்.
    புத்திரப்பேறு இல்லாதவர்கள் நாகப்பிரதிஷ்டை செய்து இங்கு தரப்படும் பால் பாயாசத்தை அருந்தினால் மலட்டுக்குறை நீங்கும். திருமணமாகி தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோஷம் பெற இயலாதவர்கள் ஆண்- வாரிசு இல்லாதவர்கள், பிரம்மகத்தி தோஷம் உடையவர்கள் அனைவரும் இத்தலத்திற்கு வந்து நாக பிரதிஷ்டை செய்து கோவில் பால் பாயாசத்தை உண்டு, சர்ப்பசாந்தி ஹோமம் செய்தால் முன் வினைப்பாவம் விலகும்.
    சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் புட்லூர் அங்காளம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் புட்லூர் அங்காளம்மன் ஆலயம் அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலுக்கு சமீபகாலமாக வெள்ளமென பக்தர்கள் திரண்டு வந்து அம்மன் அருளினைப் பெற்றுச் செல்கின்றனர். இந்த ஆலய தல வரலாறு வருமாறு:-

    பொன்மேனி என்ற பெயருடைய விவசாயி ஒருவர் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார். வறுமையை சமாளிக்க அவர் மகிசுரன் என்பவனிடம் தனது நிலத்தை அடமானம் வைத்து பணம் வாங்கினார்.

    ஆனால் பாவம் நிலத்தை அவரால் திருப்பவே முடியவில்லை. கடனை உடனே திருப்பித் தருமாறு மகிசுரன் வற்புறுத்தினான். கொடுக்க முடியாமல் பொன்மேனி திணறவே, கோபம் வந்தது மகிசுரனுக்கு.

    அந்த ஊரில் இருந்த பூங்காவனத்திற்குச் சென்று, அன்றைய இரவிற்குள் நிலத்தை உழுது, விதைத்து, நீர்பாய்ச்சுமாறு கட்டளையிட்டான். ஒரேநாளில் இவை அனைத்தையும் செய்வது என்றால் எளிதான காரியமா என்ன? ஆனாலும் அவனால் வேறு என்னதான் செய்ய முடியும்?சிவராத்திரி அன்று கோவிலுக்குச் சென்று சிவன் அருளைப் பெற முடியாமல் போயிற்றே என்று வருந்தியவாறே, பூங்காவனம் சென்றான் பொன்மேனி. தான் எப்போதும் வணங்கி வரும் இஷ்ட தெய்வமான கருமாரியை கரங்கூப்பி வணங்கியவாறு, நிலத்தை அந்த இரவு நேரத்தில் உழத் தொடங்கினான். திடீரென்று அவனது ஏர் கலப்பை ஏதோ ஒன்றில் இடித்தது போலத் தெரிந்தது.

    என்ன அது? என்று அவன் கீழே குனிந்து உற்றுப்பார்த்தபோது, அங்கே ரத்தம் பீறிட்டு வழிந்தோடிக் கொண்டிருந்தது. பிசுபிசுவென்று வடிந்த ரத்தம், பின்னர் வேகமாகப் பீய்ச்சுவதைப் பார்த்ததும் பொன்மேனிக்கு கண்கள் இருண்டு, மயக்கம் வந்தது. அப்படியே மயக்கமானான். அப்போது ஒரு அசரீரி குரல் அவன் காதுகளில் விழுந்தது.

    பயப்படாதே பக்தனே! சற்றுமுன் வயதான பெரியவராக சிவபெருமானும். வயதான மூதாட்டி போல பராசக்தியாகவும் வந்தது நாங்கள்தான். நீ தண்ணீர் கொண்டு வந்ததும் சிவன் சென்றுவிட்டார். நான், இங்கே உன் நிலத்தில் மண்புற்றாக மாறினேன். அந்தப் புற்றில்தான் நீ, உன் கலப்பையால் இடித்து என்னைக் காயப்படுத்தி விட்டாய். அதனால்தான் அதில் ரத்தம் வழிந்தோடுகிறது. வலி தாங்காமல் நான் அப்படியே அங்கு படுத்துவிட்டேன்.

    கவலைப் படாதே. இதனால் எதுவும் தவறாகி விடவில்லை. மாறாக நல்லதையே நீ செய்திருக்கிறாய். அதாவது, இடித்துக் காயப்படுத்தியதன் மூலம் இந்த உலகிற்கு நீ என்னைக் காண்பித்து விட்டாய். எங்களைப் பூஜிக்கும் பேற்றையும் நீ அடைந்து விட்டாய் இவ்வாறு அந்த அசரீரி சொன்னது. பொன்மேனி சுய உணர்வுக்கு வந்து, தன் காதுகளில் ஒலித்த அந்தக் குரல் பார்வதி தேவியினது என்பதைப் புரிந்து கொண்டான். அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
    இதனையடுத்து ஊர் முழுவதும் இந்தச் செய்தி காட்டுத் தீயாகப்பரவியது. அங்கேயே சயன நிலையில் அங்காளம்மனைப் பிரதிஷ்டை செய்வது என ஊரார் முடிவு செய்தனர். அப்படியே அம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டாள். பூங்காவனத்தில் தோன்றிய அம்மன் என்பதால் பூங்காவனத்தம்மன் என்னும் சிறப்பு பெயரும் புட்லூர் அங்காள பரமேசுவரிக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    புட்லூர் ஆலயத்துக்கு இன்னொரு தல வரலாறும் சொல்லப்படுகிறது. ஒரு தடவை சிவனும், பார்வதியும் மேல்மலை யனூருக்கு புட்லூர் வனம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். நீண்ட தூரம் நடந்து களைப் படைந்ததால் வேப்ப மர நிழலில் கர்ப்பிணியாக இருந்த பார்வதி அமர்ந்தாள். தாகமாக இருப்பதால் தண்ணீர் வேண்டும் என்று கேட்டாள். உடனே சிவபெருமான் அருகில் இருந்த கூவம் நதியை தாண்டி சென்று புனிதநீர் எடுத்து வந்தார். அந்த சமயத்தில் பலத்த மழை பெய்து கூவம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் சிவபெருமானால் நதியை கடந்து வர இயலவில்லை. எனவே வெள்ளம் குறையட்டும் என்று சிவன் காத்திருந்தார். இதற்கிடையே பசி-தாகத்துடன் இருந்த பார்வதி அப்படியே தரையில் விழுந்து விட்டாள். அவளை சுற்றி மண் குவிந்து புற்றாக வளர்ந்து விட்டது. இந்த நிலையில் அங்கு திரும்பி வந்த சிவபெருமான், புற்றுக்குள் பார்வதி அமர்ந்து விட்டதை அறிந்து அங்கேயே நின்று விட்டார். அதை பிரதிபலிக்கும் வகையில் புட்லூர் தலத்தில் சிவபெருமான், தாண்டவ ராயன் அம்சமாக சற்று கவலை தோய்ந்த முகத்துடன் இருப்பதை பார்க்கலாம்.

    புட்லூர் தலத்தில் பரமேஸ்வரி அமர்ந்த புற்று தற்போதும் வளர்ந்தபடி உள்ளது. இத்தல நாயகி நவக்கிரக தோஷங்களை நீக்கி, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தருகிறாள். தன்னை நம்பி வரும் பக்தர்களின் திருஷ்டியை விலக்கி, அவர்கள் மீது படிந்துள்ள பில்லி, சூனிய தோஷங் களை விரட்டுகிறாள். சிலருக்கு அவள் பாம்பாக காட்சி கொடுக்கிறாள். சிலருக்கு மூதாட்டியாக காட்சி கொடுக்கிறாள்.

    மேலும் ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் மல்லாந்து படுத்திருப்பது போல அம்மனே இத்தலத்தில் இயற்கையாக தோன்றி உள்ளாள். இந்த அதிசய தோற்றத்தை பக்தர்கள் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் பார்த்திருக்க முடியாது. எனவேதான் புட்லூர் தலத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தபடி உள்ளது. புட்லூர் அங்காள பரமேசுவரி அம்மன் கோவிலில் உள்ளே கர்ப்பகிரகத்துக்கு நேர் எதிரில் மண்புற்றாக மல்லாந்தவாக்கில் பூங்காவனத் தம்மன் எழுந்தருளி இருக்கிறாள். சுயம்பு புற்று முழுக்க முழுக்க மஞ்சளும், குங்குமம் துலங்க அன்னை அருள்பாலிக்கிறாள். அன்னை ஈசானிய மூலையில் காலை நீட்டி தென்மேற்கில் தலைவைத்து மல்லாந்து இருக்கிறாள். அந்த சன்னதியில் கால் வைத்த மறு வினாடி எல்லா பக்தர்களுக்கும் உடம்பில் ஒருவித சிலிர்ப்பு ஏற்படுகிறது.

    மண்புற்று மாதாவுக்கு அப்பால், கருவறையில் சூலம் தாங்கிய அங்காள பரமேஸ்வரி, எலுமிச்சம்பழ மாலைகளுடன் ஏற்றமான பூ அலங்காரங்களுடன் புன்னகை துலங்க காட்சி அளிக்கிறாள். சந்நதியை விட்டு வெளியே வந்தால், பிரகாரத்தில் தென்கிழக்கு மூலையில் தலவிருட்சமாக வேம்பு இருப்பதை பார்க்கலாம். அதன்கீழ் சுயம்புவாக உயர்ந்திருக்கும் இன்னொரு மண்புற்று, உள்ளது. அதன் உள்ளிருக்கும் அன்னைக்கு அளிப்பதற்காக எடுத்து வரப்படும் அழுதப்பால் இந்த புற்றில் அர்ப்பணம் செய்யப்படு கிறது. இந்தப் புற்றைச் சுற்றி வரும்போதே மகளிர் தங்கள் புடவையின் முந்தானையில் இருந்து ஒரு பகுதியை கிழித்து வேப்ப மரக்கிளையில் கட்டி முடிச்சிடுகிறார்கள். வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன.

    இந்த அம்மனின் சந்நிதியில் ஒருமுறை காலடி எடுத்து வைத்தால் மனக்குறைகள் அகலும், தடைகள் விலகும், பில்லி, ஏவல், சூனியம், பேய், பிசாசுகள் போன்ற எவை இருப்பினும் இருந்த இடம் தெரியாமல் விலகிப் புண்ணியங்கள் சேரும் என்பது இவள் அற்புதம் அறிந்த மக்களின் மனதில் இருக்கும் மாறாத நம்பிக்கையாகும்.

    இத்தகைய சிறப்புடைய புட்லூர் அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை கூழ் வார்த்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.

    குழந்தை வரம் கிடைக்கும்


    திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கோயிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிரகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வதன் மூலம், அவர்களுடைய பிரார்த்தனை நிறைவேறும்.

    செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6:30 முதல் இரவு 8 மணி வரை; மற்ற நாட்களில் காலை 6:30 முதல் மதியம் 1:00 மணி மற்றும் 2:00 முதல் இரவு 8:30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    வானமாமலை பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் இது 48-வது திவ்ய தேசம் ஆகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    வானமாமலை பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் இது 48-வது திவ்ய தேசம் ஆகும். இக்கோவில் நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் அமைந்துள்ளது. இத்தலத்து இறைவனின் பெயர் ‘வானமாமலை’ என்கிற ‘தோத்தாத்திரி நாதர்’. உற்சவர் தெய்வநாயகப் பெருமாள். இத்தலத்திற்கு திருச்சிரீவரமங்கை, திருவரமங்கை, திருச்சிரீவரமங்கள நகர், தோத்தாத்திரி சேத்திரம், வானமாமலை என பல பெயர்கள் உள்ளன. 108 திவ்ய தேசங்களில், எட்டு ஆலயங்கள் சுயம்பு தலமாகும். அந்த எட்டு தலங்களில் இந்த ஆலயமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்ரீவரமங்கை என்னும் இத்தலத்திற்கு வானமாமலை, நாங்குநேரி, தோத்தாத்ரி, ஸ்ரீவரமங்கை நகர் என்ற பல்வேறு பெயர்களும் உண்டு. பிரம்மாண்ட புராணம், ஸ்கந்த புராணம், நரசிம்ம புராணம் போன்றவற்றில் இத்தலம் பேசப்படுகிறது. உரோம(ரிஷி) முனிவர் தவஞ்செய்து திருமாலைக் கண்டதால் உரோமசேத்திரம் என்றும், ஸ்ரீவரமங்கையாக திருமகள் இவ்விடத்தில் வந்து வளர்ந்து பிறகு எம்பெருமானை மணந்து கொண்டதால் ஸ்ரீவரமங்கை (ஸ்ரீவரமங்கல நகர்) எனவும், ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகணை சேரி எனவும், மரங்கள் நிறைந்த வனமும் மலையும் சூழ்ந்த இடமாதலின் வானமாமலை எனவும் பேச்சு வழக்காயிற்று.

    தைல அபிஷேகம்

    இங்கு இறைவனுக்கு தினந்தோறும் தைல அபிஷேகம் நடைபெறும். அந்த எண்ணையை எடுத்து இங்குள்ள நாழிக்கிணற்றில் ஊற்றி வருகின்றனர். இந்த நாழிக்கிணற்றில் உள்ள எண்ணையை நம்பிக்கையுடன் உண்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை ஆகும்.

    ஆழ்வார் திருநகரியை ஆண்ட மன்னரான காரிக்கு குழந்தைபேறு இல்லாததால், திருக்குறுங்குடிக்குச் சென்று வேண்டினார். மன்னரின் கனவில் தோன்றிய நம்பிராயர் எப்படிபட்ட குழந்தைவேண்டும் என்று வினவினார். அதற்கு காரி தங்களைப்போன்ற ஒரு ஆண்பிள்ளை வேண்டுமென்றார். அவ்வாறே ஆகும் என உரைத்த நம்பிராயர், இங்கிருந்து கிழக்கே சென்றால் நான்கு ஏரிகள் சூழ்ந்த இடத்தில் எறும்புகள் சாரைசாரையாகச் செல்லும்.

    அதற்கு நேர் மேலே கருடன் வட்டமிட்டுக் கொண்டிருப்பான். அந்த இடத்தில் அகழ்ந்தால் வானமாமலை தென்படுவான். அவன் கேட்டதை அருளுவான் என்றார். அதன்படி அந்த இடத்தைக் கண்டறிந்து அங்கே மன்னன் அகழ்ந்தபோது, அங்கே வானமாமலைப் பெருமாள் கிடைத்தார். நாங்குநேரி என்ற அவ்வூரிலேயே அவரை நிலைநாட்டி அவருக்கு கோயில் கட்டி அவரை வழிபட்டார். அதன்பிறகு நம்பிராயர் அருளியபடியே காரி மன்னருக்கு மகனாக நம்மாழ்வார் பிறந்தார்.

    கோயில் கருவறையில் ஆதிசேடன் குடையாய் இருக்க, வானமாமலைப் பெருமாள் வைகுண்டபதியாக அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கிறார். அவருக்கு இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி தாயார்கள் காட்சி தருகின்றனர். இவர் களுக்கு ஊர்வசியும் திலோத்தமையும் சாமரம் வீசுகின் றனர். பிருகு முனிவர், மார்க்கண்டேய முனிவர், சூரியன், சந்திரன் ஆகியோர் பெருமாளை சேவித்தபடி, கருவறையில் வீற்றிருக்கின்றனர். அர்த்த மண்டபத்தில் கருடாழ்வார், விஷ்வக்சேனர் இருக்கிறார். இந்த 13 விக்கிரகங்களும் சுயம்புகள் என்றும். வைகுண்டத்தில் பெருமாள் எப்படி வீற்றிருப்பாரோ அத்தகைய கோலத்திலேயே சுவாமி இங்கு இருப்பதாக நம்பிக்கை உள்ளது.

    இத்திருக்கோவிலில் அமைந்துள்ள ஒவ்வொரு தூண்களிலும் நான்கைந்து சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சிறப்பானவை, அனுமனை அணைத்து நிற்கும் ராம பிரானின் திருக்கோலமும், பீமனை எட்டிப்பிடிக்கும் புருஷாமிருகத்தின் சிற்பமும் ஆகும்.

    சனிக்கிழமை எண்ணெய் அபிஷேகம்

    ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருவோணத்தன்று பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. இம்மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமையும் பெருமாளுக்கு நல்லெண்ணை அபிஷேகம் சிறப்பாக நடைபெறும். புரட்டாசியின் மற்ற நாட்களை விட சனிக்கிழமை பக்தர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசியில் வரும் சனிக்கிழமை காலை 7 மணிக்கு நடை திறக்கப்படும்.

    தொடர்ந்து 8 மணிக்கு சிறப்பு நல்லெண்ணெய் அபிஷேகம் நடைபெறும். 10 மணிக்கு கால சாந்தி பூஜை நடைபெறும். 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை பால், தயிர் அபிஷேகங்களை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறும். பெருமாளை வணங்க வரும் பக்தர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் சர்க்கரை பொங்கல், புளியோதரை உள்ளிட்ட நைவேத்தியம் படைப்பார்கள். வானமாமலை பெருமாளுக்கு புரட்டாசியில் கருட சேவை கிடையாது.

    உற்சவ திருவிழா

    இக்கோவிலில் தினமும் காலை 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஆறுகால பூஜைகள் நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் சித்திரை பிரமோற்சவம், வைகாசி மாதத்தில் வைகாசி வசந்த உற்சவம், ஆவணி மாதத்தில் ஆவணி பவித்ர உற்சவம், தை மாதத்தில் வரும் அமாவாசையன்று எண்ணெய் காப்பு, பங்குனி மாதத்தில் திருக்கல்யாண உற்சவம் ஆகியவை முக்கிய திருவிழாக்களாகும்.

    கருட சேவை

    வானமாமலை பெருமாளுக்கு தை அமாவாசை அன்று தான் ஒரு கோட்டை (3 கொப்பரை) எண்ணெய் காப்பு வெகு விமரிசையாக நடைபெறும். இத்திருநாளில் பக்தர்களின் கூட்டம் சொல்லி மாளாத அளவிற்கு இருக்கும். இரவு கருட சேவை நடைபெறும். பங்குனி, சித்திரை மாதத்தில் 5-வது நாள் கருட சேவை நடைபெறும். ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி அன்றும், ஆவணி மாதத்தில் வரும் அமாவாசை அன்றும் கருட சேவை சிறப்பாக நடைபெறும்.

    தீராத நோய் தீர்க்கும் எண்ணெய்

    இது தானாக தோன்றிய தலம். பெருமாளுக்கு தினம் தைல அபிஷேகம் உண்டு. அந்த எண்ணையை எடுத்து சுமார் 25 அடி நீளமும் 15 அடி அகலமும் உள்ள கிணற்றில் ஊற்றி விடுகிறார்கள். இந்த எண்ணையை நம்பிக்கையுடன் உண்டால் தீராத வியாதிகள் நீங்கும். இங்குள்ள பெருமாளின் சடாரியில் நம்மாழ்வாரின் திருஉருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. பகவான், மதுகைடபர்களை சம்ஹரித்துப் பூமியைப் புனிதமாக்கி, ஆனந்தமயமாக, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, இங்குக் காட்சி கொடுக்கிறார். ஊர்வசியும் திலோத்தமையும், பெருமாள் பக்கம் நின்று வெண் சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றனர். தல புராணம் இந்த தலத்தைப் பூலோக வைகுந்தமாகப் பேசுகிறது.

    சிந்து சேத்து அரசன் குசாசன முனிவரால் சாபம் பெற்று நாய் வடிவத்துடன் அலைந்து திரிந்து இத்தலத்தில் உள்ள சேற்றுத் தாமரைப் புஷ்கரணியில் நீராடும்போது நாய் வடிவம் மாறித் தன் பழைய அரச வடிவத்தைப் பெற்று விளங்கினான். திருமால் மது-கைடபன் என்னும் அரக்கர்களை அழித்தபோது ரத்தம் பரவித் துர்நாற்றம் வீசப் பூதேவியின் வேண்டுகோள்படி சக்கராயுதத்தை ஏவி அமிர்தமழை பொழியச் செய்து அமுக்கையும், நாற்றத்தையும் போக்கினார்.

    மணவாள முனிவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட அஷ்டதிக் புஜங்களில் ஒருவர் ஸ்ரீ வானமாமலை ஜீயர் சாமி. ஒவ்வொரு ஐப்பசி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று வானமாமலை ஜீயர் சாமிகள் மணிவாள முனிவர் அணிந்த தங்க மோதிரம் அணிந்து கொண்டு தீர்த்தம் சாதிப்பது வழக்கம்.

    கஷ்டம் வராமல் இருக்கவும் நோய்களினால் உள்ளமும், உடலும் கெட்டு திண்டாடாமல் இருக்கவும், மாணவர்கள் நன்கு படிக்கவும், குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிலைக்கவும் தோத்தாரி நாதப் பெருமாளை வணங்கி, அவருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தைலத்தை உண்டு வந்தால் போதும். வாழ்க்கை இனிக்க ஆரம்பிக்கும்.
    மயிலாடுதுறை அபயாம்பிகை சமேத மயூரநாதரை வழிபட்டால் கருத்துவேறுபாடு நீங்கி தம்பதி ஒற்றுமை சிறக்கும் என்கிறார்கள். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகளில் நீராடி தங்களின் பாவங்களைப் போக்கிக்கொள்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். அப்படி தங்கள் நீர்நிலைகளில் வந்து நீராடுபவர்களை புனிதப்படுத்தி விட்டு,அவர்களின் பாவங்களை ஏற்றுக் கொள்கின்றன. அப்படி பாவங்களால் மாசுபடும் இந்த நதிகள் ஒவ்வொருஆண்டு துலா மாதம் என்னும் ஐப்பசியில் மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரியில் நீராடிதங்களிடம் உள்ள பாவங்களைப் போக்கிக் கொள்வதோடு, தங்களை மென்மேலும் புனிதப்படுத்திக் கொள்வதாக ஐதீகம்.

    மூன்று நதிகள் தவிர, சப்த கன்னியரும் கூட ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் நீராடுவதாக சொல்லப்படுகிறது. எனவே ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது சிறப்பான ஒன்றாக கருதுகிறார்கள். ஐப்பசி மாதம் முழுவதும் நீராட முடியாதவர்கள், ‘கடை முழுக்கு’ என்று சொல்லப்படும், ஐப்பசி மாத கடைசி நாள் அன்று மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நீராடி, மயிலாடுதுறை அபயாம்பிகை சமேத மயூரநாதர் மற்றும் அருகில் உள்ள கருங்குயில்நாதன் பேட்டை ஆனந்தவல்லி சமேத சக்தி புரீஸ்வரர் ஆகியோரை வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

    திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களிலும், திருநாவுக்கரசர் ஒரு பதிகத்திலும் மயூரநாதரைப் போற்றிப் பாடியுள்ளனர். கோவிலின் முதற்சுற்றுப் பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் மயிலம்மன் சன்னிதி இருக்கிறது. இங்கு அம்மன் மயில் வடிவில் தாண்டவம் ஆடி ஈசனை வழிபட்டதால் ‘மயிலாடுதுறை’ என்ற பெயர் உண்டானது. ஐப்பசி திரு விழாவின் ஐந்தாம் நாளில் சிவ-பார்வதி இருவரும் ஆடிய மயூர தாண்டவத்தை இங்கு தரிசிக்கலாம். இங்கு நடராஜர் மயூரத் தாண்டவ திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். தினமும் மாலையில் இவருக்குத்தான் முதல் பூஜை செய்யப்படுகிறது. இவருக்கு நேரே மயிலம்மன் சன்னிதி இருக்கிறது.

    கருவறையில் மூலவர் மயூரநாதர் கிழக்குநோக்கி சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். கருவறை கோஷ்டத்தில் ஆலிங்கன மூர்த்தி தரிசனம் அளிக்கிறார். இவரை வழிபட்டால் கருத்துவேறுபாடு நீங்கி தம்பதி ஒற்றுமை சிறக்கும் என்கிறார்கள். இத்தல அம்மனின் திருநாமம் ‘அபயாம்பிகை’ என்பதாகும்.

    முன்னூறு வருடங்களுக்கு முன்பு மயிலாடுதுறை அருகிலுள்ள நல்லத்துக்குடி என்னும் திருத் தலத்தில், சிவபக்தி நிறைந்த குடும்பத்தில் கிருஷ்ணசாமி எனும் சிறுவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவன் உண்ண உணவில்லாமல் பசியில் தனித்திருந்தான். அவன் மனம் மயிலாடுதுறை அபயாம்பிகையை எண்ணித் துதித்தது. அப்போது சாதாரண பெண்வடிவில் வந்த அபயாம்பிகை அம்பாள், தங்கக் கிண்ணத்தில் தாம் கொண்டுவந்த அன்னத்தை எடுத்து கிருஷ்ண சாமிக்கு ஊட்டினாள். அப்போதே மிகுந்த ஞானமும், கல்வியும், கவி புனையும் ஆற்றலும் கைவரப்பெற்றான் அந்தச் சிறுவன். அதுமுதல் கிருஷ்ணசாமி தினமும் அதிகாலையில் நல்லத்துக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்து மயூரநாதர் ஆலயத்தில் தொண்டாற்றி, அர்த்தஜாம பூஜை முடிந்தபின்பு நல்லத்துக்குடிக்கு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    ஒருநாள் அர்த்தஜாம பூஜை முடிந்து நல்லத்துக்குடிக்கு கிருஷ்ணசாமி திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது ஓரிடத்தில் இருளில் கால் இடறி விழுந்தார். ‘அபயாம்பிகை அம்மா! எனக்கு இந்த இருளில் ஒளி காட்டி அருளக் கூடாதா?” என அன்னையை அழைத்தார். என்ன ஆச்சரியம்! அன்னை அபயாம்பிகை திருக்கரத்தில் கைவிளக்கு ஏந்தி அவர்முன் தோன்றி ஒளிவீச வழிகாட்டினாள். கிருஷ்ணசாமி மெய்மறந்து அன்னையைத் துதித்தார். நல்லத்துக்குடி வரை அபயாம்பிகை அம்மன் கையில் விளக்குடன் வந்து வழிகாட்டி மறைந்தாள். அன்று முதல் அனுதினமும் அர்த்தஜாம பூஜை முடிந்து நல்லத்துக்குடிக்குச் செல்லும் கிருஷ்ணசாமியின் முன்பு கைவிளக்கு ஒன்று தோன்றி அவரது வீடுவரை ஒளிவீசி வழிகாட்டி வருமாம். அந்தரத்தில் மிதந்தபடி அருள்வழி காட்டி தினமும் கிருஷ்ணசாமியை அழைத்துச் செல்லும் விளக்கைக் கண்ட ஊரார் ஆச்சரியப்பட்டனர்.

    ஒருநாள் அபயாம்பிகை அம்மன் முன்பு நின்று வழிபட்டுக்கொண்டிருந்த கிருஷ்ண சாமிக்கு, யாவரும் கேட்கும்வண்ணம் கருவறையில் இருந்து அசரீரி கேட்டது. “அன்பனே! சதகம் எனும் நூறுப் பாடல்களை செந்தமிழால் எம்மைப் புகழ்ந்து பாடுக. உன்னுடைய அந்தச் சதகப் பாடல்களின் மூலம் யார் என்னைத் துதித்து வழிபட்டாலும், அவரது குலம் சிறந்து விளங்க அருள்புரிவேன்” என்றது அந்தக் குரல்.

    “அம்மா! கவி பாடும் அளவுக்கு எனக்குத் திறமை இல்லையே? நானெப்படி உன் மீது பாமாலை சூடுவேன்?” என்று கிருஷ்ணசாமி மனமுருக வேண்ட, “அதற்கு நானே அருள்புரிவேன்” என்று அவருக்கு கவிபாடும் திறனை அன்னை அருளினாள்.

    திருக்கடையூர் அபிராமி அம்மன் மீது நூறு பாடல்களைக் கொண்ட ‘அபிராமி அந்தாதி’ பாடியதன் மூலம் சுப்பிரமணியன் ‘அபிராமி பட்டர்’ ஆனார். அதே போல மயிலாடுதுறை அபயாம்பிகை அம்மன் மீது நூறு பாடல்களைக் கொண்ட ‘அபயாம்பிகை சதகம்’ பாடியதன் மூலம் கிருஷ்ணசாமி ‘அபயாம்பிகை பட்டர்’ ஆனார். இந்த சதகத்தை தினமும் பாராயணம் செய்து வந்தால், வாழ்வில் எல்லா வளங்களையும் பெறலாம் என்பது நம்பிக்கை.

    இத்தலத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமி நாளில் மயூரநாதருக்கு அன்னாபிஷேகமும், கார்த்திகை மாத அனைத்து திங்கட் கிழமைகளின் அந்திப்பொழுதில் 1008 சங்காபிஷேகமும் வெகுச்சிறப்பாக நடைபெறுகிறது.

    அமைவிடம்

    மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.

    சிவ.அ.விஜய் பெரியசுவாமி
    புதிதாக உருவெடுத்துள்ள தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது புளியங்குடி லட்சுமி நரசிம்மர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    நான்கு யுகங்களுள் முதலாவதான கிருத யுக காலத்தில், கிழக்குத் தொடர்ச்சி மலையில் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது. பக்தனுக்காக இந்த அவதாரம் நிகழ்ந்ததால், மகாவிஷ்ணு கருடன் மீதேறி வரவில்லை. வைகுண்டத்தில் இருந்து நேராகப் பூவுலகுக்கு வந்தார். இரணியனை அழித்து, தம் பக்தனான பிரகலாதனைக் காத்தார். அத்தோடு பிரகலாதனை ஆட்சி பீடத்தில் அமர்த்தி அருளாசி புரிந்து, விண்ணுலகம் சென்றார். இந்த பெரும் பணிகளை வெறும் இரண்டே நாழிகைக்குள் செவ்வனே செய்து முடித்தார், நரசிம்மர். இதனால் நரசிம்ம அவதாரம் ‘பூரண அவதாரம்’ என்றும், நரசிம்மர் ‘பெரிய பெருமாள்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

    இரணிய வதம் முடிந்தும், ஆவேசம் தணியாமல் இருந்தார் நரசிம்மர். இரணியனின் ரத்தம் பூமியில் சிந்தாதபடி வாயில்வைத்து உறிஞ்சியதால், உக்கிரத்துடன் இருந்த நரசிம்மரிடம் ரஜோ குணம் அதிகரித்தது. இதனால் கிழக்குத்தொடர்ச்சி மலை வழியாக மேற்குத்தொடர்ச்சி மலைக்கு வந்த நரசிம்மர், அங்கிருந்த வனத்தில் சிங்கமாகவே திரிந்தார். அப்போது தாகத்தில் இருந்த நரசிம்மர், அங்கிருந்த பழச்சாறு சுவை கொண்ட ‘நிட்சையப்ப நதி’யின் நீரைப் பருகி தாகம் தணிந்தார். அதேசமயம், தம்முடைய அவதார நோக்கம் பூரணமாகிவிட்டதை மறந்திருந்தார். இதனால் உலக இயக்கம் தடைப்பட்டது. தேவலோகம் களை இழந்தது. பூமியிலுள்ள உயிரினங்கள் அஞ்சி நடுங்கின. நரசிம்மரின் உக்கிர சொரூபத்தையும், ஆவேசத்தையும் பார்த்து அங்கிருந்த வனவிலங்குகள் அபயக்குரல் எழுப்பின.

    அதேசமயம் மகாவிஷ்ணு வைகுண்டத்தில் இல்லாததால் மகாலட்சுமி சோகத்தில் ஆழ்ந்தார். தன் வேதனையை சிவன், பிரம்மாவிடம் கூறினார். இந்நிலையில், பூமியில் இருந்து வெளிப்பட்ட அபயக்குரல் சிவன், மகாலட்சுமி, பிரம்மா ஆகியோரின் காதில் விழுந்தது. அவர்கள் மூவரும் அபயக்குரல் வந்த திசை நோக்கி புறப்பட்டனர். விண்ணிலிருந்து புறப்பட்ட அவ்வேளையில் மகாலட்சுமியின் நிழல், வனத்தில் இருந்த நரசிம்மரின் மீது படர்ந்தது.

    அக்கணமே நரசிம்மர் சாந்த சொரூபியாக மாறினார். தம்முடைய அவதார நோக்கம் முழுமையாக நிறைவேறிவிட்டதை உணர்ந்தார். தம்மீது படர்ந்த அந்நிழலுக்கு உயிர் கொடுத்து, மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்து மனநிறைவு கொண்டார். பின்னர் தம் இடது மடியில் லட்சுமியை அமர்த்தி அரவணைத்தபடி சிவன், பிரம்மாவுக்குத் தரிசனம் தந்தார். பின்பு அவ்விடத்திலேயே லட்சுமி நரசிம்மராகக் குடிகொண்டார். அப்போது பிரம்மா, சிவன், தேவாதி தேவர்கள் அனைவரும் பூமாரி பொழிந்து லட்சுமி நரசிம்மரை வாழ்த்தி வணங்கினர்.

    இந்தப் புராணப் பின்னணி கொண்ட ஷேத்திரம்தான் புளியங்குடி லட்சுமி நரசிம்மர் கோவில். புதிதாக உருவெடுத்துள்ள தென்காசி மாவட்டத்தில் இத்தலம் அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகிய நான்கு சிறப்பம்சங்களைக் கொண்டது இந்த ஆலயம். நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது அகோபிலம் என்றாலும், அது பூர்த்தியானது புளியங்குடியில்தான். எனவே ‘தட்சிண அகோபிலம்’ ஆக விளங்கும் இந்த ஷேத்திரம், நரசிம்மரின் பரிபூரண அனுக்கிரகத்தைத் தரும் என்பது ஐதீகம்.

    இந்த நரசிம்மர் கோவில் கிழக்கு நோக்கி உள்ளது தனிச்சிறப்பு. வழக்கமாக மேற்கு நோக்கி எழுந்தருளும் நரசிம்மர், இங்கு கிழக்கு நோக்கியுள்ளது அபூர்வ அமைப்பாகும். இடது மடியில் மகாலட்சுமித் தாயாரை அமர்த்தி, இடக்கரத்தால் அணைத்தபடி இருக்கிறார். தாயாரோ தம் வலக்கரத்தால் பெருமாளை நன்கு பற்றியபடி அருளாட்சி புரிந்துவருகிறார். சிங்கத் தோற்றம், யாழிமுகம் என அபூர்வத் திருமேனியுடன் சிவன், பிரம்மா ஆகியோருக்குத் தரிசனம் தந்த கோலத்தில் நரசிம்மர் இங்கு அருள்பாலிக்கிறார். ‘மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது’ என்பது போல, சுமார் ஓர் அடி உயர விக்கிரகத் திருமேனியில் அவதார நோக்கம் பூர்த்தியான பூரண மகிழ்ச்சியில் எழுந்தருளி இருக்கும் வரும் நரசிம்மர், புன்னகை தவழ, வரத ஹஸ்த நாயகனாக எழில்கோலம் பூண்டிருக்கிறார். இவரை தரிசித்த உடனேயே கவலைகள் பறந்தோடி மகிழ்ச்சி பிறந்துவிடுகிறது.

    இங்கு சங்கடஹர சதுர்த்தி, நரசிம்மப் பிரதோஷமாகக் கொண்டாடப்படுகிறது. பிரதோஷ காலமான மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் மூலவருக்கும், தலைவாசலில் (மகாமண்டபம்) உள்ள படிக்கும் (படிபூஜை) சிறப்பாக அபிஷேக, ஆராதனைகள் நடக்கின்றன. வாசல்படியில் வைத்து இரணியனை நரசிம்மர் சம்ஹாரம் செய்ததை நினைவுகூரும் விதமாக இந்தப் ‘படிபூஜை’ நடத்தப்படுகிறது. சிவப் பிரதோஷ காலத்தில் நந்தி பகவானின் இரு கொம்புகளுக்கிடையே ஈசனைக் காண்பது மரபு. அதுபோல் நரசிம்மப் பிரதோஷத்தன்று படியின்மேல் இறைவனைக் காண்பது மரபு. நரசிம்ம அவதார காலமான இரண்டு நாழிகை (சுமார் 48 நிமிடங்கள்) காலம், சந்தியா வேளையில் நரசிம்மரை இங்கு வழிபட்டால் விசேஷமான பலன்களைப் பெறலாம்.

    எதிரிகள் தொல்லையால் பாதிக்கப்படுபவர்கள், வயிறு தொடர்பான நோய்களால் அவதிப்படுபவர்கள், தொழில் மற்றும் வியாபாரத்தில் மீளமுடியாத கடன் தொல்லையால் நிம்மதியற்றவர்கள், கிரக தோஷங்களால் பாதிக்கப்படுபவர்கள், மனபயம் உள்ளவர் ஆகியோர் நரசிம்மப் பிரதோஷத்தன்று தரிசனம் செய்து சிறப்பான பலன்களைப் பெறலாம். நரசிம்மருடைய சினம் தணிந்த தலம் என்பதால், கோப குணமுள்ளவர்கள் இங்கு வழிபட்டு சாந்தமாகலாம்.

    சுவாதி நட்சத்திரம் அன்று இங்கு நரசிம்மரை வழிபடுவோருக்கு, கடன் தொல்லையில் இருந்து மீண்டு வருவதுடன் குபேர சம்பத்தும் கிடைக்கப்பெறும். சுவாதி நட்சத்திரம் அன்று இந்த லட்சுமி நரசிம்மரை, பிரகலாதனைப் போன்று ஆழ்ந்த நம்பிக்கையுடன் வழிபடுவோருக்கு பாவங்கள் அகன்று புண்ணியங்கள் சேரும். அத்துடன், தோஷங்கள் நீங்கி இப்பூவுலக ராஜ்ஜியப் பதவிகள் அனைத்தும் கிடைக்கும். அரசாளும் யோகமும் வந்துசேரும் என்பது நம்பிக்கை. இங்கு புதன்கிழமை சுக்ர ஓரையில் இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் நரசிம்மருக்கு அர்ச்சனை செய்யும் ஆண், பெண் திருமண காரியங்கள் வெற்றி பெறுகின்றன.

    நரசிம்மர், பானகப் பிரியர். எனவே வெல்லத்தினால் ஆன பானகம் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகித்தால் நினைத்த காரியங்கள் வெற்றியாகும். இங்கு பக்தர்களுக்கு தித்திப்பான தீர்த்தம் வழங்கப்படுகிறது. அவதாரம் பூர்த்தியான அதி உன்னதத் தலமான இங்கு நரசிம்மரை வழிபட்டால், அகோபிலத்தில் உள்ள நவ நரசிம்மர்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

    இந்த ஆலயத்தில் சித்ரா பவுர்ணமி, கிருஷ்ண ஜெயந்தி, உறியடித் திருவிழா, ராம நவமி, புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி, திருப்பாவை விழா, அனுமன் ஜெயந்தி, தைத் திருவிழா ஆகியவை முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகின்றன. இங்கு பாஞ்சராத்ர ஆகமப்படி தினமும் நான்கு கால பூஜை நடக்கிறது.

    இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    பெயர்க்காரணம்

    பாண்டிய மன்னர்கள் காலத்தில் ‘பாண்டிய சதுர்வேதி மங்கலம்’ என்றும், நாயக்க மன்னர்கள் காலத்தில் ‘தென்புதுவை’ என்றும் அழைக்கப்பட்ட இந்தப் பகுதி, பிரகலாதனின் பேரனான மகாபலிச் சக்கரவர்த்தி சேர நாட்டை ஆண்டுவந்தபோது, ‘கல்லக நாடு’ என்ற பெயரில் தற்போதைய கேரளாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. இதன்தொடர்ச்சியாக, பிரகலாதனின் வம்சாவளியினர் இங்குள்ள மலைப் பகுதிகளில் கோட்டை கட்டி ஆண்டு வந்துள்ளனர். சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பு, இங்குள்ள ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கோட்டைகள் அழிந்து விட்டதாகக் கருதப்படுகிறது. எனினும் பிரகலாதன் வம்சாவளியினர் இங்கேயே வாழ்ந்து வந்துள்ளனர். இதன்பொருட்டு இத்தலத்துக்கு உருவான ‘பிரகலாதன்குடி’ என்ற பெயரே, ‘புளியங்குடி’ எனத் திரிந்ததாக சொல்கிறார்கள். தற்போது இங்கு வசித்துவரும் மலைவாழ் மக்கள் பிரகலாதன் வம்சத்தினர் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

    அமைவிடம்

    தென்காசியில் இருந்து ராஜபாளையம் செல்லும் வழியில் 30 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து ராஜபாளையம் வழியாக தென்காசி செல்லும் பாதையில் 114 கிலோமீட்டா் தூரத்திலும், திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் பாதையில் 70 கிலோமீட்டர் தொலைவிலும் புளியங்குடி உள்ளது. புளியங்குடி பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றால் லட்சுமிநரசிம்மர் ஆலயத்தை அடையலாம்.

    கீழப்பாவூர் கி.ஸ்ரீமுருகன்.
    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமீயச்சூர் மேகநாத சுவாமி ஆலயம், பல்வேறு சிறப்புகளைக் கொண்டு விளங்குகிறது. இந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமீயச்சூர் மேகநாத சுவாமி ஆலயம், பல்வேறு சிறப்புகளைக் கொண்டு விளங்குகிறது. இந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    காசிபரின் மனைவி விநதை. ஏற்கனவே காசிபரின் மற்ற மனைவியர்களின் மூலம் பிறந்த மகன்கள் தேவர்களாகவும், அசுரர்களாகவும் இருந்து, ஒருவரை ஒருவர் தாக்கி வந்தனர். தனது பிள்ளைகள் அவர்களை போல ஆகிவிடக்கூடாது என நினைத்தாள் விந்தை. எனவே தேவகுருவின் ஆலோசனைப்படி தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு, இமயமலை முதல் ஒவ்வொரு தலமாக சென்று சிவபெருமானை நோக்கி தவமிருந்து வந்தார்.

    அதன்படி காவிரிக்கரையில் சிவமயமான சூழல் உள்ள திருமீயச்சூர் தலத்துக்கும் வந்தார். இங்கே வந்தவுடன், விநதையின் பிள்ளைகளிடம் வித்தியசமான உணர்வுகள் தொற்றிக்கொண்டது. ஆனந்தமடைந்த விநதை, இத்தலத்திலேயே பல நாட்கள் தங்கி தவமேற்றினார். இதையடுத்து இறைவன் வெளிப்பட்டு, அவளது பிள்ளை களுக்கு பகை உணர்வு நீங்க ஆசி வழங்கினார். விநதையின் பிள்ளையில் ஒருவரான கருடனை, திருமாலுக்கு வாகனமாகும் வரத்தை அருளினார்.

    விநதை அத்தலத்திலேயே 12 ஆண்டுகள் தவமேற்றினார். இதையறிந்து காசிபர் இத்தலம் வந்தார். சிவபெருமான் தோன்றி, “இத்தலம் ‘விந்தா சேத்திரம்’ எனப்படும். இங்கு வியாழக்கிழமை வழிபாடு செய்பவர்கள் முக்தி அடைவார்கள்” என்று கூறி மறைந்தார்.

    நோய் தீர்க்கும்..


    உஜ்ஜனியைச் சேர்ந்த சவுபாக்கியன் என்பவன், பெரும் செல்வந்தன். அதே நேரம் யாருக்கும் தானம் செய்யாத கஞ்சன். பணம் சேர்க்க ஆசைப்பட்டு பல பாவங்களையும் செய்துவந்தான். அந்தப் பகுதியை ஆண்ட மன்னன், சவுபாக்கியனுக்கு, சிவாலயத்தின் நிர்வாகங்களை கவனிக்கும் பொறுப்பை அளித்திருந்தார். அவனோ, அந்த சொத்துக்களையே அபகரிக்க ஆரம்பித்து விட்டான்.

    ஒருநாள் காளி கோவிலுக்கு சிங்க வாகனம் செய்வதற்காக, மரம் வாங்கி வெட்டி பாதக்குறடு செய்தான். அப்போது அக்குறடு அவன் வலது காலில் பட்டது. அதனால் ஏற்பட்ட காயம், பெரு நோயாக மாறி அவனை இம்சித்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தான்.

    ஜோதிடர் ஒருவர் “உனது செல்வங்களில் மூன்றில் ஒரு பங்கை சிவபெருமான் பூஜைக்கு அர்ப்பணித்துவிடு. அதன் பின் ஆலய யாத்திரை செய்து வா. எந்த தலத்தில் தங்கும் போது உன் நோய் குறைகிறதோ, அங்கு தங்கி வழிபடு. எல்லாம் சரியாகிவிடும்” என்றார்.

    அவ்வாறே செய்த சவுபாக்கியன் பல தலங்களுக்குச் சென்று விட்டு, இறுதியில் திருமீயச்சூர் வந்தான். இங்கு கோவில் உள்ள புஷ்கரணியில் நீராடினான். அப்போது அவனது காயங்களில் எரிச்சல் இல்லை. இந்த அதிசயத்தை கண்டு பல மணி நேரம் நீராடினான். உடலில் இருந்த புண்கள் மறைந்தன. உடல் பொன்னிறமாயிற்று. புதிய அழகும், தேக சுகமும் பெற்றான். பிறகு ஒரு மண்டலம் இத்தலத்திலேயே தங்கி வழிபட்டான்.

    ஆலய அமைப்பு

    திருமீயச்சூர் திருக்கோவிலும், திருமீயச்சூர் இளங்கோவிலும் ஒரே ஆலயத்தில் விளங்கும் திருக்கோவில்கள். திருமீயச்சூர் திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத் திருப்பதிகம் ஒன்றையும், திருமீயச்சூர் இளங்கோவில் திருநாவுக்கரசர் அருளிய தேவாரத் திருப்பதிகம் ஒன்றையும் பெற்று விளங்குகின்றன.

    திருமீயச்சூர் கோவில் மூல விமானம் தனிக் கலையழகோடு திகழ்கிறது. கோவிலின் வடக்கு உள் பிரகாரத்தில் இளங்கோவில் காணப்படுகிறது. ஒரு கோவிலை திருத்தி விரிவுபடுத்தி கட்டத் தொடங்கு முன், நித்திய பூஜைக்கு பிறிதொரு சிவலிங்கம் நிறுவி, சிறிய கோவில் அமைத்து வழிபடுவது வழக்கம். இந்த சிறிய கோவிலை தொடர்ந்து 12 ஆண்டுகள் வழிபட்டால் அது தனி ஆலயமாகி விடும். அப்படி உருவானதுதான் இந்த இளங்கோவில்.

    மூலவர் சுயம்புலிங்கம், தாயார் லலிதாம்பாள். ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் தோன்றிய தலம் இதுவே. இத்தலத்திற்கு தலவிருட்சம் வில்வம் ஆகும். கோவிலில் தினமும் 6 கால பூஜை நடக்கிறது. வெள்ளிக்கிழமை தோறும் ஸ்ரீலலிதாம்பிகாவுக்கு விசேஷ ஆராதனை நடைபெறும்.

    ஆடிப்பெருக்கு, விநாயகர்சதுர்த்தி, நவராத்திரி, வைகாசி பவுர்ணமி அன்று ஏக தின லட்சார்ச்சனை, திதி மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. மார்கழி மாதம் திருவாதிரை விசேஷமானது. தை பொங்கல் அன்று இத்தல இறைவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தைமாதம் 10 நாள் பிரம்மோற்சவம் நடைபெறும்.

    இத்தலத்தின் வடக்கு உள் பிரகாரத்தில் சுவாமி கோஷ்டத்தில் உள்ள கல்யாண சுந்தரேசுவரரை, மணமாகாத பெண்கள் பிரார்த்தனை செய்து கொண்டு மலர் மாலை சாத்தி வழிபட்டு வந்தால் விரைவிலேயே திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    திருவாரூர் மாவட்டத்தில் திருமீயச்சூர் திருத்தலம் உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் மெயின் ரோட்டில் பேரளம் என்ற இடத்தில் இடதுபுறம் திரும்பி 1 கிலோமீட்டர் தூரம் சென்றால் கோவிலை அடையலாம்.

    இழந்ததை மீட்டும் தரும் கோவில்

    கோளபன் என்ற அரசன் நல்லாட்சி நடத்தினாலும், முற்பிறவி வினை, அவனை கெட்டவனாக மாற்றியது. இந்த நிலையில் மதங்க தேசத்து அரசன் கும்பகரன், கோளபன் நாட்டின் மீது படையெடுத்து வந்தான். 6 மாத காலம் போர் நடந்தது. இதனால் கோளபன் நாட்டில் உணவுக்கு பஞ்சம் ஏற்பட்டது. மக்களின் நன்மை கருதி, அவன் போரை கைவிட்டான். இறுதியில் காட்டுக்குச் சென்றான். இதைப் பயன்படுத்திய கும்பகரன் பல சிவாலயங்களை சூறையாடினான்.

    கோளபனிடம் அவனது மனைவி பிரஜிதை, “ஒருவர் முகர்ந்த பூவை முகராமலும், பிறரது ஆடைகளை அணியாமலும், கிடைத்த உணவை உண்டு காட்டில் தவமியற்றி வந்தால் ஸ்ரீதேவி அருள் கிடைக்கும்” என்று கூறி அனுப்பிவைத்தாள். அதன்படியே கோளபனுக்கு தேவியின் அருள்கிடைத்தது. அவன் இழந்த ஆட்சியையும், பொருளையும் திரும்பப் பெற்றான். இது நடந்தது திருமீயச்சூர் திருத்தலம். எனவே இங்கு வந்து வணங்கினால், இழந்த பொருளை மீட்கலாம் என்பது நம்பிக்கை.

    கோபம் தணிக்கும் ஈசன்

    சூரியன் பிரகாசமாக இருந்தாலும், ஒரு காலகட்டத்தில் கரிய நிறமாக காட்சியளித்தார். இதையடுத்து அவர், மற்ற தேவர்களை போல தானும் செந்நிறமாக மாற வேண்டும் என பிரார்த்தனை செய்தார். ரிஷிகளின் ஆலோசனைப்படி சூரியன், இத்தலத்துக்கு வந்து சிவபெருமானை வணங்கினார். இதையடுத்து அவரது கருமை நிறம் நீங்கி செந்நிறமானது. எனவே இத்தல சிவபெருமான் ‘மிகிராருனேஸ்வரன்’ என அழைக்கப்பட்டார்.

    பல காலம் கழித்து சூரியன் மீண்டும் இங்கு வந்தார். அப்போது ஈசனைக் காணவில்லை. அருகில் இருந்த காட்டிற்குள் தேடினார். அங்கே யோகநிலை நீங்க சுயம்பு லிங்க மூர்த்தியாக ஈசன் காட்சி தந்தார். தன் கணவரின் யோக நிலையை கலைத்த சூரியன் மீது, லலிதா தேவிக்கு கோபம் வந்தது. அவர் சூரியனுக்கு சாபம் அளிக்க முற்பட்டார். ஆனால் அவரது கோபத்தை ஈசன் தணித்தார். இதையடுத்து கோபம் தணிந்த லலிதாதேவி, சாந்த நாயகியாக இங்கு அமர்ந்துள்ளார்.

    கோவில் வளாகத்தில் அன்னையின் கோபத்தினை, முகவாயை பிடித்து தடுக்கும் ஈசனை நாம் தரிசிக்கலாம். ஒரு பக்கம் இருந்து பார்த்தால் இந்த அன்னை சிரிப்பது போலவும், மறுபக்கம் இருந்து பார்த்தால் கோபமாக இருப்பது போலவும் காட்சியளிப்பார்.

    அகத்திய வில்வம்

    சித்தர்களில் முதன்மை பெற்ற அகத்தியர், வில்லவன், வாதாபி என இரு அரக்கர்களை வதம் செய்தார். இதனால் அவருக்கு ‘ஹத்தி தோஷம்’ ஏற்பட்டது. அகத்தியருக்கு அடிக்கடி வயிற்றுவலி உண்டானது. எனவே முருகப்பெருமானிடம் பாபவிமோசனம் வேண்டினார். அவர் ஆலோசனைப்படியே இக்கோவில் இருக்கும் வனத்துக்கு வந்தார். அங்கே காட்டின் நடுவில் ஜோதி லிங்கமாக சிவன் காட்சி தந்தார். அவரை வணங்கி நின்றவுடன் பாவம் அழிந்து சிவஞானம் பெற்றார். அகத்தியர் பூஜை செய்த வில்வ மரத்தை உள்ளே வைத்து ஆலயம் எழுப்பப்பட்டு உள்ளது. அங்கு காணப்படும் வில்வமரம் “அகத்திய வில்வம்” என்றே அழைக்கப்படுகிறது.

    முத்தாலங்குறிச்சி காமராசு
    இங்கிலாந்து நாட்டின் தலைநகராக விளங்கும் லண்டன் மாநகரின் நீஸ்டன் என்ற இடத்தில் சுவாமி நாராயணா கோவில் அமைந்துள்ளது. இது ஐரோப்பா கண்டத்திலேயே மிகப் பெரிய இந்து ஆலயம் என்ற புகழுக்குரியது.
    இங்கிலாந்து நாட்டின் தலைநகராக விளங்கும் லண்டன் மாநகரின் இதயப் பகுதியாக விளங்குவது நீஸ்டன் என்ற இடம். இங்கு சுவாமி நாராயணா கோவில் அமைந்துள்ளது. இது ஐரோப்பா கண்டத்திலேயே மிகப் பெரிய இந்து ஆலயம் என்ற புகழுக்குரியது. முழுவதும் வட இந்திய பாணியில், கூரான உயர்ந்த கோபுரங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயம், இங்கிலாந்து நாட்டினரை மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள மக்களைக் கவர்ந்து ஒரு சுற்றுலாத் தலமாக பரிணமிக்கிறது.

    பல்கேரிய வெண் கற்களையும், இத்தாலி மற்றும் இந்திய பளிங்குக் கற்களையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான இந்தக் கலைக் கோவிலில் காணும் இடமெல்லாம் கண்கவர் சிற்பங்கள் நம் விழிகளை விரியச் செய்கின்றன. வெள்ளைக் கற்களால் வளைந்து நெளிந்து உயர்ந்து நிற்கும் தோரணவாயில் நம்மை வரவேற்கிறது.

    விசாலமான திறந்த வெளியைத் தாண்டி உள்ளே நுழைந்ததும், மரத்தினால் கட்டிடமும் தூண்களில் சிற்ப வேலைப்பாடும் அமைந்த பெரிய கூடம் காட்சியளிக்கிறது. அதுதான் பஜனை மற்றும் தியானம் செய்யும் ‘ஹாவேலி கூடம்’ என்பதாகும்.

    பிறகு உட்புறமாகவே படிகளில் ஏறிச் சென்றால் அற்புதமான ஆலயம், அதில் 72 வெள்ளைப் பளிங்குத் தூண்கள். அவைகளின் நாற்புறத்திலும் சிறியதும் பெரியதுமான வேலைப்பாடமைந்த சிற்பங்கள், நம் சிந்தையைக் கவர்கின்றன. ராமாயண, மகாபாரத, சிவ லீலை காட்சிகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டு நமக்குள் ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. மேலே விதானத்திலும், அங்கே உருவாகியுள்ள குவி மாடத்திலும் சிற்பங்கள் செதுக்கப்பட்டு நம் சிந்தையைச் சிலிர்க்க வைக்கின்றன.

    “சரி.. இது கலைக்கோவில் மட்டும் தானா?” என்றால், வழிபாட்டுக்குரிய வெண்ணிற சுவாமி சிலைகளும், சன்னிதிகளில் அமைக்கப்பட்டு விமானத்தின் கீழ் கருவறைகளில் தோன்றி அருட்காட்சி அளிக்கின்றன. உள்ளே நுழைந்தவுடன் மகாமண்டபத்தில் முதலில் கணபதிப் பெருமான் நின்ற திருக்கோலத்தில் தனிச்சன்னிதியில் எழுந்தருளி முதல் வணக்கத்தை ஏற்றுக் கொள்கிறார். அடுத்து ராமன் - சீதாப்பிராட்டி, லட்சுமணன் ஒரு சன்னிதியிலும் அருள்காட்சி தருகின்றனர்.

    பிறையும், நாகமும் சூடிய சிவ பெருமாள் - பார்வதி தேவியுடன் இருக்கும் ஒரு சன்னிதியும், அதன் எதிரே கங்கையும் உள்ளது. பக்கத்து சன்னிதியில் கதாயுதம் ஏந்தி நின்ற கோலத்தில் ஆஞ்சநேய சுவாமி வீற்றிருக்கிறார். மூலவராக ராதை சமேத கிருஷ்ணபகவானும், அவருடன் பலராமனும் ஒரே சன்னிதியில் நின்ற நிலையில் அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தில் தினமும் வழிபாடுகள் நடை பெறுகின்றன. தினமும் பகல் 12 மணிக்கு நடைபெறும் தீபாராதனை, பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. இந்த ஆலயம் மாலை 6 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.

    டாக்டர். ச.தமிழரசன்
    இயற்கை அழகு கொஞ்சித் தவழும் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடர்களின் சிறிய குன்றில் திருமலை முத்துக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது.
    சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பொறியில் இருந்து அவதரித்தவர் சிவக்குமாரன். பார்வதிதேவியால் ஞானப் பால் ஊட்டி வளர்க்கப்பட்ட சக்தி மைந்தன் முருகப்பெருமான். அந்தக் குமரன், குன்றிருக்கும் இடத்தில் எல்லாம் குடியிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.

    தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகரில் இருந்து வடக்கு திசையில் 8 கிலோமீட்டர் தொலைவில் பண்பொழி (பைம்பொழில்) என்ற ஊர் உள்ளது. இங்கு இயற்கை அழகு கொஞ்சித் தவழும் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடர்களின் சிறிய குன்றில் திருமலை முத்துக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலவராக இருந்து முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். இவரை ‘முத்துக்குமாரசுவாமி’ என்றும், ‘குமாரசாமி’ என்றும் அழைக்கின்றனர்.

    இந்த முருகப்பெருமான் நான்கு கரங்களுடன் மேல்நோக்கிய வலது கையில் சக்தி ஆயுதம், இடது கையில் வச்சிராயுதம் தாங்கியும், கீழ்நோக்கிய வலது கையில் அபயக்கரம், இடது கையில் சிம்ம கர்ண முத்திரையும் காட்டி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். தேவார வைப்புத் தலமான இந்தக் கோவில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 520 அடி உயரத்தில் உள்ளது. கோவிலுக்கு செல்ல சுமார் 600 படிக்கட்டுகள் ஏற வேண்டும். அந்த படிக்கட்டுகள் ஸ்கந்த கோஷ்டப் பித்ருக்கள் வசிக்கும் தேவ படிக்கட்டுக்கள் எனச் சொல்லப்படுகிறது. ஆகையால், இந்த தலத்திற்கு வந்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால், நம் சந்ததிகளுக்கு நல்ல சிறப்பான வாழ்வு அமையும். நல்ல வாரிசுகள் உருவாகும் என்பது ஐதீகம்.

    தல வரலாறு

    முன்னொரு காலத்தில் திருமலைக் கோவிலில் ஒரு வேல் மட்டும் இருந்தது. அந்த வேலுக்கு, பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் அபிஷேகம் மற்றும் பூஜைகளைச் செய்து வந்தார். ஒருநாள் நண்பகல் பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக ஒரு புளிய மரத்தடியில் அர்ச்சகர் படுத்திருந்தார். அப்போது, முருகப்பெருமான் அவரது கனவில் எழுந்தருளி, “பட்டரே! இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் இங்கிருந்து சற்று தொலைவிலுள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் சிலை வடிவில் இருக்கிறேன். நீ அங்கு சென்று எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியை தோண்டிப் பார். அதற்குள் சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபடு” என்றார்.

    அதன்படியே பந்தளத்தை ஆண்ட அரசருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, குறிப்பிட்ட இடத்தில் இருந்து முருகப்பெருமான் சிலையை எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினார்.

    இத்தலத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு, பார்வதிதேவி தன் வாயால் அருளிச் செய்த ‘தேவி பிரசன்ன குமார விதி’ப்படி எட்டுக்கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இக்கோவிலில் மற்ற கோவில்கள் போன்று பள்ளி யறையில் சுவாமியைப் பாதுகை செய்வது இல்லை. மூலவருக்குப் பால், பழம், ஊஞ்சலுடன் சயனப் பூஜை மட்டுமே செய்யப்படுகிறது.

    திருமலையின் வெளிப்பிரகாரத்தில் வடமேற்குப் பகுதியில் தனிக் கோவிலாகத் திருமலைக்காளி கோவில் இருக்கிறது. இங்கே காளியம்மன் வடதிசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார். இந்த ஆலயம் முருகப்பெருமானின் பிரதிஷ்டை நடைபெறுவதற்கு முன்பே இருந்த ஆலயம் என்கிறார்கள். இந்தக்காளி திருமலையின் காவல் தெய்வமாக பார்க்கப்படுகிறார். முருகனை தரிசிக்க படிகள் செல்லும் இடத்தின் மேற்கே, தனிச்சன்னிதியாக இடும்பன் சன்னிதி அமைந்துள்ளது.

    கோவில் உள்பிரகாரத்தில் வடகிழக்கில் ஈசானத்தில் தெற்கு நோக்கி காலபைரவர் சன்னிதி உள்ளது. இங்கு 5½ அடி உயரமுள்ள கம்பீரமான தோற்றத்துடன் பைரவர் வீற்றிருக்கிறார். முருகன் சன்னிதியை அடுத்து 16 படிகள் ஏறிச்சென்றால், விநாயகருக்கு தனி சன்னிதி இருக்கிறது. அவர் ‘உச்சிப்பிள்ளையார்’ என அழைக்கப்படுகிறார்.

    திருமலைக்கோவில் வரலாற்றை எழுதிய பேராசிரியர் கணபதிராமன், “சிலப்பதிகாரத்தில் வரும் நெடுவேள்குன்றம் என்பது இக்குன்றமே” என்றும், “கண்ணகி இக்குன்றைக் கடந்தே சேரநாடு சென்றாள்” என்றும் ஆராய்ச்சிக் குறிப்பேட்டில் கூறியுள்ளார். அருணகிரிநாதர் தமது நூலான திருப்புகழில் திருமலை முருகனைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

    இந்த ஆலய முருகனுக்கு மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை, மாதாந்திர கார்த்திகை நட்சத்திர நாள், தமிழ் மாதப்பிறப்பு நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. முருகப்பெருமான் அவதரித்த விசாக நட்சத்திரத்திற்கு உகந்த கோவிலாக திருமலை முத்துக்குமரசுவாமி கோவில் உள்ளது. இதனால் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்தக் கோவிலுக்கு வாழ்வில் ஒரு முறையாவது வந்து செல்ல வேண்டும். விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய முருகனுக்குரிய நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஓடவள்ளி, நள மூலிகை, திருமலைச் செடி ஆகிய மூலிகைகள் வளர்கின்றன. செல்வ விருத்திக்காக, திருமலை செடியின் வேரையும், தனகர்ஷண யந்திரத்தையும் இணைத்து ஒரு காலத்தில் பூஜை செய்திருக்கிறார்கள். இன்று இந்த மூலிகைகளை அடையாளம் காண முடியவில்லை.

    ‘வி' என்றால் ‘மேலான' என்றும், ‘சாகம்' என்றால் ‘ஜோதி' என்றும் பொருள்படும். விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரகணங்களைக் கொண்டது. இந்த கிரகணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால், விசாக நட்சத்திரத்தினர் இங்கு சென்று வழிபட்டுவந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும்.

    தீர்த்தக்குளம்

    ‘ஓம்’ என்ற வடிவம் கொண்ட உயர்ந்த குன்றில் அமைந்துள்ள, இந்தக் கோவிலின் தீர்த்தத்தை ‘பூஞ்சுனை’ என்று அழைக்கின்றனர். இது அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்டது. நாள்தோறும் ஒரு தாமரை மலர் இந்தச் சுனையில் மலரும். அதைப் பறித்து, இந்திராதி தேவர்களும், சப்த கன்னியர்களும் முருகனுக்குச் சூட்டி வழிபடுவதாக நம்பிக்கை நிலவுகிறது. இத்தகைய அற்புதமான இந்த ஆலயத் தீர்த்தத்தில் நீராடினால் பலவித நோய்கள் நீங்குவதாக சொல்கிறார்கள். இங்குள்ள தீர்த்தக்கரையில் சப்த கன்னியர்களும் வாசம் செய்கின்றனர்.

    கேரள மாநிலத்தின் எல்லையில் இக்கோவில் அமைந்துள்ளது. பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றி செல்கின்றனர்.

    அமைவிடம்

    செங்கோட்டையில் இருந்து வடமேற்கில் 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் வடமேற்குத் திசையில் இருக்கின்றது. தென்காசி மற்றும் செங்கோட்டையில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. 2012-ம் ஆண்டு முதல் மலை மேல் வாகனங்கள் சென்று வர தார் சாலையாக மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    மருத்துவர் நா.மோகன்தாஸ்
    அத்திரி முனிவருக்கும், அவரது துணைவி ஆனுசூயாவிற்கும் மும்மூர்த்திகளும் ஒரே லிங்க உருவில் இங்கு காட்சி அளித்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
    தமிழகத்தின் தென்கோடியில் திருவனந்தபுரம் - கன்னியாகுமரி நெடுஞ்சாலை வழியில் பழையாற்றின் கரை அருகே இயற்கை எழில்சூழ, நெடிதுயர்த்த கோபுரக் காட்சியுடன் தாணுமாலயன் கோவில் பொலிவுடன் அமைந்துள்ளது.

    தாணு என்பது சிவ பெருமானையும், மால் என்பது திருமாலையும், அயன் என்பது பிரம்மனையும் குறிப்பிடுவது ஆகும். இந்த ஸ்தலத்திற்கு வீரகேரள சதுர்வேதிமங்கலம் ராஜராஜ வளநாட்டுத் திருச்சி வந்திபுரம், நாஞ்சி நாட்டு சிவந்திரம் என்ற பெயர்களும் பெருமை தருவதாக உள்ளது. இந்திரன் தனது சாப விமோசனம் பெற்றதும் இந்த ஸ்தலத்தில் தான்.

    அத்திரி முனிவருக்கும், அவரது துணைவி ஆனுசூயாவிற்கும் மும்மூர்த்திகளும் ஒரே லிங்க உருவில் இங்கு காட்சி அளித்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது.

    விமோசனம்

    இந்திரன் தான் அடைந்த சாப விமோசனம் பெற்றதினால், அவனே அர்த்தசாம பூஜை செய்து வருவதாக ஐதீகம். இந்த கோவிலின் ராஜகோபுரம் 7 நிலைகளை கொண்டதும் 134½ அடி உயரமுள்ளதாகும். கோபுரத் தில் உள்ள 7 நிலைகளிலும் பச்சிலை மருந்துகளால் ஸ்தல புராணமும், கோவில் ஸ்தல வரலாறும் வரையப் பட்டுள்ளது. கோவிலுக்குள் ஏராள மான கலை அழகு நிறைந்த சிற்பங்கள், தூண்கள் கல் மண்டபங்கள், இசைத் தூண் கள் உள்ளன.

    சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த செண்பகராமன் மண்டபம், ஊஞ்சல் மண்டபம், குலசேகர மண்டபம், வசந்த மண்டபம், அலங்கார மண்டபம் 12 ராசிகளையும் பூமியைப் பார்த்து தலைகீழாக அமைந் துள்ள நவக்கிரக மண்டபம், சித்திரசபை ஆகியவைகள் கலைச்சிறப்பு மிக்கவை யாகும். ஒரே கல்லில் 18 அடி உயரத்தில் சீதாராமன் சன்னதிக்கு எதிரே கம்பீரமாக விஸ்வரூப கோலத்தில் காட்சி தரும் ராமபக்த அனுமன், வேறு எங்கும் காண முடியாத கண் கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது. கி.பி. 7-ம் நூற்றாண்டு முதல் உள்ள நூற்றுக்கணக்கான கல் வெட்டுகள் இந்த கோவிலில் உள்ளன.

    தலைமையிடம்

    குமரி மாவட்டத்தில் உள்ள 490 கோவில்களின் முதன் மைக்கோவிலாக சுசீந்திரம் கோவில் சிறப்பு பெற்று வரு கிறது. நாகர்கோவிலை தலைமை யிடமாகக் கொண்டு அனைத்து அரசு அலுவலகங் களும் இயங்கி வரும்பொழுது தேவசம் தலைமையிடம் மட்டும் சுசீந்திரத்தில் இயங்கி வருவதிலிருந்து தாணுமால யன் கோவிலின் பெருமையை உணர முடியும். கி.பி.1410-ம் ஆண்டில் சேர மன்னர் ‘‘ஸ்ரீஉதயமார்த் தாண்ட வர்மா’’ வினால் அலங்கார மண்டப மும், இசைத் தூண்களும் அமைக்கப்பட்டு சிறப்பு பெற்றுள்ளன. இந்த கோவிலில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து தமிழகத்துடன் இணைந்த பின்பு முன்புபோல் ஆகம விதிப்படி பூஜைகளும் திருவிழாக்களும் நடை பெற்று வருகின்றன.
    ஒரே கல்லினால் ஆன அபூர்வ ரிஷபாரூடர் சிற்பத்தைக் கொண்டதுமான சிறப்புமிக்க தலமாக விளங்குகிறது, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருலோக்கி அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில்.
    குரு பகவானுக்கு பாப விமோசனம் அளித்ததும், திரு விசைப்பா பாடலில் இடம் பெற்றதும், தேவார வைப்புத் தலங்களில் ஒன்றானதும், மன்மதனுக்கு உயிர்பிச்சை அளிக்க வேண்டி ரதிதேவி வழிபட்டதும், ஒரே கல்லினால் ஆன அபூர்வ ரிஷபாரூடர் சிற்பத்தைக் கொண்டதுமான சிறப்புமிக்க தலமாக விளங்குகிறது, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருலோக்கி அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில்.

    இந்து தர்மும் கலாசாரமும் இறைவனை மையமாகக் கொண்டவை. இறைவனை முதற்பொருளாக்கி அவனிடம் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வதேயே வாழ்வாக கொண்டவர்கள் இந்துக்கள். தொன்றுதொட்டு வரும் இந்த வாழ்க்கை முறைக்கு ஆதாரமாக விளங்கும் ஆலயங்கள் யாவும், இறைவனின் திருவிளையாடல்களை, அல்லது அங்கு வழிபட்டு பேறுபெற்ற அடியார்களின் வரலாற்றை ஆதாரமாகக் கொண்டவைகளாகும். இத்தகைய ஆலயங்களில் ஒன்றே குரு பகவானின் பாவங்களை போக்கிய, திருலோக்கி அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வர சுவாமி ஆலயம். முற்காலத்தில் ஏமநல்லூர் என்று அழைக்கப்பட்ட இத் தலம், 217 தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

    கல்வெட்டுகளில் இவ்வூர், மாமன்னன் முதலாம் ராஜராஜனின் தேவியருள் ஒருவரான திரைலோக்கிய மாதேவியின் பெயரில், ‘விருதராச பயங்கர வளநாட்டு மண்ணி நாட்டு திரைலோக்கியாகிய மாதேவியார் சதுர்வேதி மங்கலம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜராஜனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ராஜேந்திரச் சோழன் காலம் தொடங்கி (கி.பி.1012-1014) மூன்றாம் ராஜராஜ சோழன் காலம் (கி.பி.1236) வரையான பல கல்வெட்டுகள் இவ்வாலயத்தில் காணப்பட்டாலும், இவ்வாலயத்தை கட்டியவர் யார் என்ற விவரம் எதிலும் இடம்பெறவில்லை.

    அப்பர் பெருமான் ‘ஏமநல்லூர்’ என தன் சேத்திரக்கோவையில் இவ்வூரை குறிப்பிட்டுள்ளார். ஏமநல்லூர் என்பதில் வரும் ‘ஏமம்’ என்ற சொல்லுக்கு ‘பொன்’ என்று பொருள். நவக்கிரகங்களில் ‘பிரஹஸ்பதி’ எனப்படும் குரு பகவானுக்கு ‘பொன்னவன்’ என்றொரு பெயரும் உண்டு. பொன்னவனான குரு தன் தோஷம் போக்கியருளுமாறு இங்குள்ள இறைவனை வேண்டி வழிபட்டதால் இவ்வூருக்கு ‘ஏமநல்லூர்’ என்ற பெயர் ஏற்பட்டதாக தலவரலாறு கூறுகிறது. கருவூர்த்தேவர் தனது திருவிசைப்பாவில் ‘திரைலோக்கிய சுந்தரம்’ என இவ்வூரை குறிப்பிட்டுள்ளார். திரைலோக்கியே ‘திருலோக்கி’ என மருவியுள்ளது.

    பிருகு முனிவர், தேவ குருவான பிரஹஸ்பதி மற்றும் சுகேது ஆகியோர் இவ்வாலய இறைவனை வழிபட்டுள்ளனர். திருக் குறுக்கை திருத்தலத்தில் சிவனின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதனை, அவனது மனைவி ரதிதேவியின் வேண்டுதலின் பேரில் சிவன் உயிர்ப்பித்து அளித்த சிறப்புக்குரிய தலம் இதுவாகும். இத்தல இறைவன் ‘சுந்தரேஸ்வரர்’. இறைவியின் திருநாமம் ‘அகிலாண்டேஸ்வரி.’ தலவிருட்சம் சரக்கொன்றை. தீர்த்தம் - லட்சுமி தீர்த்தம்.

    தலவரலாறு

    ஒருசமயம் குரு பகவான், தன்னை அறியாது செய்த பாவங்களுக்கு விமோசனம் வேண்டி ஆலய தரிசனத்தை மேற்கொண்டு பல தலங்களை தரிசித்து வந்தார். ‘மத்தியார்ச்சுனம்’ எனப்படும் திருவிடைமருதூருக்கு வருகை தந்து, அங்குள்ள மகாலிங்க சுவாமியை வழிபட்டார். குருபகவானுக்கு அருள்பாலித்த மகாலிங்கசுவாமி, “எனக்கு கிழக்கு திசையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் சுந்தரேஸ்வர பெருமானை வழிபட்டால், உம்மை பிடித்த பாவங்கள் விலகி விமோசனம் கிடைக்கும்” எனப் பணித்தார்.

    அதன்பேரில் இத்தலம் வந்த குரு பகவான் தவம் இயற்றினார். ஒரு சித்திரை மாதம் அவிட்ட நட்சத்திரம் (குருவின் திருநட்சத்திரம்) அன்று, சுந்தரேஸ்வர பெருமானின் லிங்கத் திருமேனிக்கு குரு பகவான் கொன்றை மாலை அணிவித்து, முல்லைப் பூவால் அர்ச்சனை செய்தார். பசு நெய்யால் விளக்கேற்றி, தயிர் அன்னம் நிவேதனம் செய்து பெருமானது திருவருளை வேண்டினார். அவரது சிரத்தையான பூஜையில் மகிழ்ந்த சுந்தரேஸ்வரப் பெருமான், தேவர்களும் பூதகணங்களும் புடைசூழ, ரிஷப வாகனத்தில் அன்னை அகிலாண்டேஸ் வரியை ஆலிங்கனம் செய்தவாறு குரு பகவானுக்கு காட்சிதந்தார்.

    மேலும் “பிரஹஸ்பதியே! பூலோகத்தில் வாழ்பவர்கள் திருமணம் செய்து கொண்டு இனிய இல்லறம் நடத்த, நீ முக்கிய காரணமாக இருப்பாய். உனது பார்வை மூலம் எல்லாவிதமான தோஷங்களும் விலகி, குரு பலம் பெற்று அனைவரும் மகிழ்ச்சியான இல்வாழ்க்கை வாழ்வர். அதற்கேற்ப உனது பலமும் பெருகட்டும்” என்று வரமருளினார்.

    மன்மதன் உயிர்பெற்ற வரலாறு


    அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான கொற்கை எனப்படும் திருக்குறுக்கை திருத் தலத்தில், சிவபெருமானின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்டான், காமத்தின் கடவுளாக பாவிக்கப்படும் மன்மதன். அவனது பிழையைப் பொறுத்து, மீண்டும் அவனுக்கு உயிர்பிச்சை அளிக்கும்படி, சிவபெருமானை ரதிதேவி வேண்டினாள்.

    “திரைலோக்கி சுந்தரனை வணங்கி வழிபட, உன் கணவன் உயிர்பெற்று வருவான்” என சிவன் வரமளித்தார். அதன் பொருட்டு இத்தலம் வந்த ரதிதேவி, இங்குள்ள இறைவனை வணங்கி வழிபட இறையருளால் மன்மதன் உயிர்பெற்றான். பின்னர் இருவரும் ஒன்றாக இறைவனை வணங்கி அருள்பெற்றனர். இதை குறிக்கும் விதமாக இவ்வாலயத்தில் இடம்பெற்றுள்ள ரதி-மன்மத, ஆலிங்கன மூர்த்தியின் சிலாரூபம் பேரழகு பெட்டகமாக திகழ்கிறது. வலது கையில் புஷ்பம் ஏந்தியும், இடது கையால் ரதியின் தோளைத் தழுவியபடியும் மன்மதன் காட்சி தருகிறான். வலது கரம் காமதேவனை அணைத்தும், இடது கையில் ஜடை மாலையும், தலையில் அலங்காரக் கொண்டையுடன் உடலை சற்று வளைத்து ஒய்யாரமாக நிற்கும் ரதிதேவியின் வடிவம் வார்த்தை களால் வருணிக்க இயலாததாகும்.

    ஆலய அமைப்பு

    தேரோடும் வீதிகள் நான்கும் சூழ, நடுநாயகமான ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சமீபத்தில் கட்டப்பட்ட மூன்றுநிலை ராஜகோபுரத்தின் வாசலை அடுத்து, வவ்வால் நெற்றி மண்டபம் காணப்படுகிறது. அடுத்ததாக 36 தூண் களைக் கொண்ட மண்டபம் இடம்பெற்றுள்ளது. இந்த மண்டபத்தின் மேற்கூரை எண்கோண வடிவில் மூன்று அடுக்குகளையும், சதுரவடிவில் ஓர் அடுக்கையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கணித சக்கரவர்த்தி என்பவர் இம்மண்டபத்தைக் கட்டியதாக கூறப்படுகிறது.

    இம்மண்டபத்தின் தென்பகுதியில் ‘அன்னை அகிலாண்டேஸ்வரி’ என்ற பெயரில் உமாதேவியார் வீற்றிருக் கிறார். இவ்வாலயத்தின் அம்மன் சன்னிதி, சுவாமி சன்னிதிக்கு வலதுபக்கத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து மகாமண்டபம் உள்ளது. இங்கு ஆலிங்கனமூர்த்தியாக இடம்பெற்றுள்ள ரதி-மன்மதன் சிற்பம் இருக்கிறது. அதையடுத்து அர்த்த மண்டபம். இந்த மண்டபத்தை தாண்டி கருவறையில், மூலவர் திரைலோக்கிய சுந்தரரான சுந்தரேசப்பெருமான் சிவலிங்க வடிவில் அருள்பாலிக் கிறார்.

    கருவறைக் கோட்டத்தில் தென் முகக் கடவுள், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேற்கு பிரகாரத்தில் கன்னிமூல கணபதியும், அதனருகில் கிழக்கு நோக்கி புதிதாக அமைக்கப் பெற்ற சித்திரசபையில் உமாமகேஸ்வரமூர்த்தி ரிஷப வாகனத்திலும் அருள்பாலிக்கின்றனர். அருகில் குருபகவான் கரங்கூப்பிய நிலையில் இருக்கிறார். இதன் பின்புறம் கண்ணாடி பொருத்தப்பெற்று, குரு பகவான் பூஜித்த சிவலிங்கத் திருமேனி வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு இடதுபுறம் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இது தவிர விஸ்வநாதர், பைரவர், துர்க்கை, சண்டேசர் சன்னிதிகளும் இங்கு காணப்படுகின்றன.

    பரிகாரத் தலம்

    நாள்தோறும் இருகால பூஜைகள் நடைபெறும் இவ்வாலயம், ஒரு விசேஷ பரிகாரத் தலமாகும். ‘பூலோகத்தில் வாழ்பவர்கள் திருமணம் செய்து கொண்டு இனிய இல்லறம் நடத்த, நீ முக்கிய காரணமாக இருப்பாய்’ என குரு பலத்தை குருபகவானுக்கு ஈசன் அருளியதும், ரதிதேவி வேண்டுகோளுக்கிணங்க காமக்கடவுளை மீண்டும் பிறக்கச்செய்து அருள்பாலித்ததுமான ஒப்பற்ற திருத்தலம் இதுவாகும். எனவே திருமணத்தடை உள்ளவர்கள், மக்கட்பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட அந்தக் குறைகள் விரைவில் நீங்கும்.

    மேலும் ஒருவரது ஜாதகத்தில் குரு மறைந்திருந்தாலோ, பகை வீட்டில் இருந்தாலோ, அந்த ஜாதகர் இங்கு வந்து இறைவனை வணங்கினால், சிவனருளோடு, குருவருளையும் பெறலாம். ரதிதேவி மன்மதனை திரும்பப்பெற்ற தலமாதலால், சிறந்த மாங்கல்ய தோஷ பரிகார தலமாகவும் இது விளங்குகிறது. ஆகவே கல்யாணத்திற்கு காத்திருக்கும் ஆண்களும், பெண்களும் இத்தலம் வந்து, உமாமகேஸ்வரப் பெருமானையும் குரு பகவானையும் தரிசித்து இனிய இல்லற வாழ்வு அமையும் பாக்கியத்தைப் பெறலாம்.

    அபூர்வ உமாமகேஸ்வரர்


    குரு பகவானுக்கு ரிஷப வாகனத்தில் காட்சியளித்த உமாமகேஸ்வர வடிவம், மிகமிக அற்புதமான சிற்ப வடிவமாகும். கருங்கல்லாலான நந்தியின் மேல் ஒரு பீடத்தில், சிவம் தழுவிய சக்தியாக, சக்தி தழுவிய சிவமாக காட்சியளிக்கும் அரிய கருங்கற்திருமேனியான இது, வேறெங்கும் காணமுடியாத அபூர்வ படைப்பாகும். இரு கரங்களில் சூலம், மான் ஏந்தியும், முன் வலது கரம் அபய முத்திரையுடனும், இடது கரம் அம்பிகையை அணைத்தும் அழகு வடிவத்தில் சிவபெருமான் வலது காலைத் தொங்கவிட்டு இடது காலை மடக்கி அமர்ந்துள்ளார். அம்பிகையும் அவருக்கு ஈடுகொடுத்து இடது காலை மடக்கியும் வலது காலை சாய்த்துத் தொங்கவிட்டும் உடம்பை வளைத்தவாறு ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் எழில் வடிவத்தை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அம்பிகையின் வலது கரம் பெருமானது இடுப்பைப் பற்றிக் கொண்டும், இடது கரத்தில் மலர் ஏந்தியும், உலக நாயகனைப் பார்த்து ரசிக்கும் பூரிப்பில் அவர் முகம் பார்த்தபடி காட்சியளிக்கிறார்.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்


    இவ்வாலயம் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் திருப்பனந்தாளில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறை மற்றும் கும்பகோணத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. மேற்கண்ட ஊர்களில் இருந்து ஏராளமான பஸ் வசதிகளும் உள்ளன.

    நெய்வாசல் நெடுஞ்செழியன்
    ×