என் மலர்tooltip icon

    கோவில்கள்

    நாகர்கோவில் நகரத்தின் மத்தியில் நாகராஜா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தல புராணத்தை அறிந்து கொள்ளலாம்.
    நாகர்கோவில் நகரத்தின் மத்தியில் நாகராஜா கோவில் அமைந்துள்ளது. கோவில் கிழக்கு பார்த்தது. என்றாலும் தெற்கு திசையில் உள்ள கோபுர வாசல் வழியே செல்லும் வழக்கம் காலம் காலமாய் நடக்கிறது. வாகனங்களில் செல்பவர்கள் தெற்கு முகப்பு வழி மட்டுமே செல்ல முடியும்.

    கோவிலின் முன்பகுதியில் வாகனங்களை நிறுத்த வசதி உண்டு. கோவிலின் அருகே திருக்கோவில் அலுவலகம் உள்ளது. கோவிலின் பூஜை, வழிபாடு குறித்த விவரங்களை இங்கு கேட்டுக் கொள்ளலாம்.

    கோவிலின் அருகே அமைந்துள்ள சிறிய குளம், பெரிய அரசமரங்கள், பெரிய வளாகம் எல்லாம் இக்கோவிலுக்குச் சிறப்பைக்கொடுப்பவை. கிழக்கு வாசல் வழியும் நடந்து நேராக கோவிலுக்கு வர முடியும்.

    தல புராணமும் வரலாறும்:

    நாகராஜா கோவிலுக்கு என்று தனியாக தலபுராணம் கிடையாது. இது சமணக் கோவிலாக இருந்தது. கி.பி. 16-ம் நூற்றாண்டு வரை சமணப்பள்ளியாக இருந்த இக்கோவிலின் வழிபாட்டு பழமை பற்றிய சான்றுகள் கிடைக்கவில்லை. கல்குளம் வட்டம் சிதறால் கோவில் ஒரு சமண தலம். இதன் காலம் 8-ம் நூற்றாண்டுக்கு முன் உள்ளது.

    ஆரம்ப காலத்தில் நாகராஜா என்னும் தர்ணேந்திரன் இக்கோவிலின் முக்கிய தெய்வமாக இருந்தது. 16-ம் நூற் றாண்டு கல்வெட்டு குண வீரபண்டிதன், கமலவாக பண்டிதன் இருவரும் நாகராஜா பூஜையை மேற்பார்வையிட்ட சமணர்கள் எனத் தெரிவிக்கிறது. இவர்கள் ஆச்சாரியர்கள். இது ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு சமண தெய்வமாகவும், பாமர தெய்வமாகவும் இக்கோவிலில் இருந்திருக்கிறது. நாகர் வழிபாடு, கதைகள் அப்போதே பரவலாயிருக்கலாம். இந்த நாகராஜா பற்றிய சமண கதைகள் உண்டு.

    சமணத்தின் 23-ம் தீர்த்தங்கரர் பார்சுவநாதர். இவருக்கு பிறவிகள் தோறும் துன்பமளித்தவன் சமடன். இவன் கடைசி பிறவியில் மகிபாலன் என்னும் பெயரில் பிறக்கிறான். அப் போது பாசுவநாதருக்கு தாத்தா முறை. மகிபாலன் ஒரு மரக்கட்டையை நெருப்பிலிட்டான். பார்சுவநாதனாக இருந்த சிறுவன் அந்த கட்டையில் இரு பாம்புகள் உள்ளன. அவற்றை நெருப்பில் போடாதே என்கிறான்.

    ஆனால் மகிபாலன் கேட்கவில்லை. அதனால் பாம்புகள் இறக்கின்றன. பார்சுவன் ஓதிய மந்திர மகிமையால் ஆண் பாம்பு நாகராஜனாகவும் (தர்ணேந்திரன்) பெண் பாம்பு நாகராணியாகவும் (பத்மாவதி) பிறக்கின்றனர். தீர்த்தங்கரர்கள் ஒவ்வொரு வருக்கும் யட்சனும் யட்சியும் பணிவிடையாளர்களாக இருப்பர். பார்சுவநாதருக்கு தர்ணேந்திரனும், பத்மாவதியும், யட்சனும் யட்சியுமாக இருந்தனர் என்பது ஸ்ரீபுராணம்.

    இதன்படி இக்கோவிலின் தெற்கு கருவறையில் இருப்பது தர்ணேந்திரன். நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (கி.பி.1588) கருங்குள வளநாட்டு கும்பிகுளத்து திருக்குருகை பெருமாள் இக்கோவிலுக்கு நிபந்தம் கொடுத்துள்ளார்.இந்த கல்வெட்டில் தார்வனந்தாள்வார் என்ற பெயர் முதலில் வருகிறது.

    அனந்தன் ஆதிசேஷனின் பெயர். இவன் ஆயிரம் தலைகளை உடையவன். பார்சுவநாதர் புராணத்தில் இடம் பெறும் ஆயிரம் தலையுடைய நாகராஜனுக்கு இணையான தெய்வம் திருமாலை தாங்கும் ஆதிசேஷன்.

    இதனால் இக்கோவில் வைணவ கோவில் ஆனது. 1643-ம் ஆண்டு கல்வெட்டு இக்கோவிலை ஸ்ரீகிருஷ்ணன் கோவில் எனக் கூறும். இப்போது மூலவரின் எதிரே உள்ள கொடி மரத்தின் பட்டத்தில் ஆமை படம் இடம் பெறுகிறது.

    ஆமை கொடி நாகராஜருக்கு, பலராமனின் கொடியிலும் ஆமை இருக்கும். எனவே இக்கோவிலின் மூல புராணமாக சமணத்தின் ஸ்ரீபுராணத்தையும் இந்துக்களின் பாகவதத்தையும் கொள்ளலாம். இந்தக் கோவில் கட்டுமானம் தொடர்பாக ஒரு கதை வழங்குகிறது. இக்கோவிலை முதலில் வைஷ்ணவ கோவிலாக கட்ட ஆரம்பித்தவன் சிறைவாய் மூத்த தம்புரான் ஆன ஜெயதுங்க நாட்டு சங்கர நாராயணர் வென்று மண்கொண்ட பூதலவீர வீர உதய மார்த்தாண்டன் என்பவன் ஆவான். இவன் சோழகுல வல்லிபுரம் என்ற களக்காட்டை (திருநெல்வேலி மாவட்டம்) தலைநகராகக் கொண்டு தன் புதிய அரண்மனையில் இருந்து வேணாட்டை ஆண்டவன். (1516 முதல் 1585 வரை)

    இந்த அரசனுக்கு தீர்க்க முடியாத சரும வியாதி வந்தது. தொழுநோய் என ஒரு வைத்தியன் சொன்னான். மன்னன் தன் உடலைப் பட்டால் மூடிக் கொண்டுதான் அமைச் சர்களையே சந்தித்தான். ஜோதிடர்கள் அவனது சரும வியாதி நாகதோஷத்தால் வந்தது. நாஞ்சில் நாட்டு நாகராஜா கோவிலில் வழிபட்டால் இந்த வியாதி தீரும் என்றான். மன் னனும் அப்படியே செய்தான்.

    இந்தக் கோவிலின் தலவிருட்சம் என்று கூறப்படும் ஓடவள்ளி செடியைத் தன் உடம்பில் தேய்த்துக் கொண்டு 41 மண்டலங்கள் இக்கோவிலில் இருந்தான். இதனால் அவன் நோய் குணமானது-. இவன் இக்கோவிலில் சில பகுதிகளைக் கட்டினான் என்பதும் ஒரு கதை.

    கோவில் அமைப்பு

    நாகராஜா திருக்கோவிலின் இன்றைய கட்டிட அமைப்பு குறிப்பிட்ட காலத்தில் வடிவமைக்கப்பட்டதல்ல. கி.பி.15-ம் நூற்றாண்டில் இருந்து 20-ம் நூற்றாண்டு வரை 400 ஆண்டுகளில் படிப்படியாக கட்டப்பட்டது. ஆரம்ப காலத்தில் உள்ள கட்டுமானம் பற்றிய செய்திகள் கல்வெட்டுகளில் இல்லை. இப்போதுள்ள கருவறைப் பகுதியும் அர்த்தமண்டபமும் முன்பு இருந்திருக்கலாம்.

    உள் பிரகாரம், வெளிப்பிரகாரம், மதில், முன் பகுதிக் கோபுரம் ஆகியன பிற்கால வளர்ச்சிகள். இந்த கோவில் இருக்கின்ற இடத்தைச் சுற்றி வயல்களும் குளங்களும் இருந்தன என்னும் செய்தியை 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாய்மொழியாகக் கேட்டவர்கள் இருக்கிறார்கள். இப்போது கோவில் இருக்கும் இடத்தைச் சுற்றி சிறிய, பெரிய குளங்கள் இருந்தன.

    கோவிலின் மேற்கே இப்போது இருக்கும் ஸ்டேடியம் 35 ஆண்டுகளுக்கு முன்புவரை கள்ளர் குளம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. கோவிலின் தெற்குப் பகுதியில் உள்ள நாகராஜா திடல் கூட 40 ஆண்டு களுக்கு முன்பு குளமாக இருந்தது. இதன் பழைய பெயர் உமைபங்கன் ஏரி. இப்படியான நீராதாரங்களின் நடுவில் இக்கோவில் இருந்தது. இது 20-ம் நூற்றாண்டு ஆரம்பகால நிலை.

    இன்றும் கோவிலின் பொலிவுக்கு கோவிலின் கிழக்கு, தெற்கு பகுதியில் உள்ள வளாகமும், கிழக்கில் உயர்ந்து நிற்கும் அரச மரம், வடக்கில் இருக்கும் சிறிய குளம் போன்றவையும் காரணம். கோவிலின் தெற்கு பக்கம் உள்ள வாயில் மகாமேரு. பக்தர்கள் பொதுவாக இந்த வாயிலைப் பெரிதும் பயன்படுத்துகின்றனர். மகாமேரு கேரள பாணி கட்டிடம். கிழக்கு வாசல் உமபங்கன் வாயில் எனப்படும். கோவிலின் கோபுரமாகக் கருதப்படும் வாயிலின் முகப்பு ஓட்டுக்கூரை.

    மொத்தக் கோவில் 72 சென்ட் நிலரப்பில் உள்ளது. அனந்தகிருஷ்ணன் சன்னதிக்கும், நாகராஜர் சன்னதிக்கும் இரண்டு வாசல்கள் உள்ளன. அனந்தகிருஷ்ணன் சன்னதி வாசலில் கொடிமரம், பெரிய மணி மண்டபம், (ஒரு காலத்தில் யானை கட்டப்பட்ட இடம்), ஓட்டுப்பணி கூரை. இது கிழக்கு பிரகாரம், பிற மூன்று பிரகாரங்களும் வெட்டவெளியில் அமைந்தவை.

    கோவிலுக்குள் செல்வதற்கு இரண்டு வாசல்கள். நாகராஜ் சன்னதி வாசலில் இரண்டு பெரிய நாகர் சிற்பங்கள் உள்ளன. தர்ணேந்திரன், பத்மாவதி இருவரும் இந்த நாகர்கள். பர்சுவநாதரின் யட்சன், யட்சிகள், இவ்வாசலைக் கடந்ததும் காண்பது மகாமண்டபம். மகா மண்டபம் 29 தூண்களைக் கொண்ட பெரிய மண்டபம். இதன் வடபகுதியில் நாகராஜனின் கோவிலும் தென் பகுதியில் அனந்தகிருஷ்ணன் கோவிலும், நடுவில் சிவனின் சிறு கருவறையும் உள்ளன. இவை மூன்றும் கிழக்கு நோக்கியவை.

    இம்மூன்று கோவில்களைச் சுற்றிலும் மேல்கூரையுள்ள பிரகாரம் உண்டு. இந்த உட்பிரகாரத்தை சுற்றிலும் உயர்ந்த திண்ணை உண்டு. நாகராஜர் கருவறையை உட்பிரகாரத்தில் இருந்து பார்க்கும் வசதி உள்ளது.

    இரண்டு கருவறைகள்

    நாகராஜர் இருக்கும் கருவறை இரண்டு அறைகளைக் கொண்டது. ஓலைவேய்ந்த கூரையால் ஆனது. இத்தகைய அமைப்புடைய குமரி மாவட்ட கருவறை இது ஒன்றுதான். பழமையையும் மரபையும் பாதுகாப்பதன் தொடர்ச்சி. மூலவர் ஐந்து தலைகளைக் கொண்ட ஐம்பொன் கவசத்தால் பொதியப்பட்ட நாகர். இது கல்படிமம். இது சுயம்புவாக உருவானது என்பது ஐதீகம்.

    அனந்தகிருஷ்ணன் கோவில் கருவறை அந்தராளம், அர்த்தமண்டபம் என அமைந்தது. அர்த்தமண்டபத்தில் இருந்து பக்தர்கள் வழிபடலாம். கருவறை தெய்வமான அனந்தகிருஷ்ணன் தர்ணேந்திரனாக இருந்தவர். கடுசர்க்கரைப் படிமம். நின்றகோலம். ஆடையின்றி கிரீடா மகுடத்துடன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகப்படத்துடன் காட்சியளிக்கிறார்.

    இடுப்பிலிருந்து நாகம் தலைக்கு மேல் படத்துடன் நிற்கிறது. இவரின் இடது வலது புறங்களில் பத்மாவதி அம்பிகாபதி யட்சிகன் நின்ற கோலம். மூன்று தலை நாகம் இவர்களின் தலைமேல் உள்ளது. வலது கை மலர், இடது கை லோலாஹஸ்தம், இப்போது இவர்கள் பாமா-ருக்மணி. நாகராஜர் கருவறைக்கும் அனந்தகிருஷ்ணனின் கருவறைக்கும் இடைப்பட்ட சிறிய கோவிலில் சிவன் இருக்கிறார். இங்கு சிவன் ஆவுடையில் லிங்க வடிவில் இருக்கிறார், கல் படிமம். எதிரே நந்தி உண்டு.

    கொடிமரத்தில் ஆமை

    இந்தக் கோவிலின் பிரதான மூலவர் நாகராஜர் என்றாலும், அனந்த கிருஷ்ணர் சன்னிதிக்கு எதிரிலேயே கொடி மரம் இருக்கிறது. தை மாதத்தில் அனந்த கிருஷ்ணருக்கே பிரம்மோற்சவமும் நடக்கிறது.

    அப்போது அனந்தகிருஷ்ணர் திருத்தேரில் எழுந்தருள்வார். தைமாத ஆயில்ய தினத்தன்று ஆராட்டு வைபவமும் நடைபெறும். பெருமாள் கோவில்களில் கொடி மரத்தின் உச்சியில் கருடன் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு ஆமை உள்ளது. பாம்பும், கருடனும் பகைவர்கள் என்பதால், இத்தல பெருமாள் சன்னிதியின் கொடி மரத்தில் ஆமை இருப்பதாக ஐதீகம் கூறப்படுகிறது. விழாக்களில் வாகனமாகவும் ஆமையே இருக்கிறது.
    கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாடகை மலை அடிவாரத்தில் அருள்மிகு சமுக்தியாம்பிகை, அருள்மிகு கால சம்ஹாரபைரவர், அருள்மிகு சரபேஸ்வரர் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.
    கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் அங்கலக்குறிச்சியில் மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் எழில் மிகு இயற்கை சூழலில் மூலிகைகள் நிறைந்த தாடகை மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஆத்மநாதவனம். இங்கு அருள்மிகு சமுக்தியாம்பிகை, அருள்மிகு கால சம்ஹாரபைரவர், அருள்மிகு சரபேஸ்வரர் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். சித்த வழிபாட்டு முறையை பின்பற்றும் இத்திருக்கோவிலில் அருஉருவமாய் இருக்கும் சித்தர் நடராஜயாகவ குருவின் வழிகாட்டுதலின்படி பூஜைகள் நடைபெறுகிறது.

    இக்கோவிலில் சித்தர் நடராஜ யாகவர் அருஉருவமாய் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாகவும், சித்த புருஷர்களின் இருப்பை உணர முடிவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். இக்கோவிலின் மூலக்கோவிலானது ஆத்மநாதவனத்தில் இருந்து சுமார் 5.கி.மீ. தொலைவில் கோட்டூர் மலையாண்டி பட்டினத்தில் அமைந்துள்ள ‘ஆதி அமரநாயகி உடனமர் ஆதிசங்கரர்’ திருக்கோவில் ஆகும். இத்திருக்கோவில் மாசி மாதம் சிவராத்திரியின் பொழுது நடைபெறும் நான்காம் காலப் பூஜையில் சிவலிங்கத்தின் மீது தானாக தோன்றும் சிவ ஜோதியை பக்தர்கள் காணமுடியும். இந்நிகழ்வை இறைவனே ஜோதி வடிவாக காட்சி தருவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

    அருள்மிகு சமுக்தியாம்பிகை

    அத்திருக்கோவிலின் முதன்மை தெய்வம் “அருள்மிகு சமுக்தியாம்பிகை”. 9 அடிஉயரத்திலான அழகிய சிலாரூபத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு அம்பிகைக்கு நித்யபடி நடைபெறும் அபிஷேகங்கள் யாரும் காண முடியாத வண்ணம் திரையிட்டே நடத்தப்படுகிறது. இங்கு அம்பிகைக்கு வருடத்தின் குறிப்பிட்ட நாட்களில் 6 சிறப்பு மஹா அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது. கார்த்திகை மாதம் வளர்பிறை தசமி திதியில் பழச்சாறுகளைக் கொண்டு நடத்தப்படும் மானசாபிஷேகம் மட்டுமே பக்தர்களால் காணமுடியும். இங்கு அம்பிகைக்கு தேங்காய் மாலை வழிபாடு பக்தர்களால் நடத்தப்படுகிறது. இவ்வழிப்பாட்டின் மூலம் திருமணத்தடை நீக்கி, குழந்தையின்மை நீங்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

    இக்கோவிலின் பைரவமூர்த்தியானவர் 8 அடி உயரத்தில் 8 கைகளுடன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். எங்கும் காணமுடியாத வண்ணம் பைரவரின் நாய் வாகனமானது சுவாமியின் திருமுகத்தை பார்த்தபடி இருப்பது தனிச்சிறப்பாகும். இங்கு பிரதிமாதம் தேய்பிறை அஷ்டமி அன்று காலை 11 மணிக்கும் மற்றும் 4 மணிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. அஷ்டமி இரவு 7.50 க்கு நடைபெறும் அர்த்தஜாம பூஜையின் போது சித்தர்கள் வருவதாகவும் அதனை அங்கு பரவும் நறுமணம் மூலம் உணர்வதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.

    தேய்பிறை அஷ்டமியன்று திரளாக பக்தர்கள் பூசணி தீபம் ஏற்றியும், பாலாபிஷேகம் செய்தும், தொழில் தடை, கல்வித்தடை, கடன் மற்றும் பணப்பிரச்சினைகளிலிருந்து விடுபட வழிபாடு செய்கின்றனர். கார்த்திகை மாதம் வரும் காலாஷ்டமி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

    தேய்பிறை அஷ்டமியன்று மட்டையுடன் கூடிய முழுத் தேங்காயை பைரவரிடம் சமர்பித்து தங்களது கோரிக்கையை பிரார்த்திக்கின்றனர். பின்னர் அத்தேங்காயை வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். அக்கோரிக்கை நிறைவேறிய பின்பு அந்த தேங்காயை மீண்டும் கோவிலில் செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

    இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சரபேஸ்வரர் சிலை, சித்தர்களால் வழங்கப்பட்டது. இவ்விக்கிரகம் போல் வேறு எங்கும் இல்லை என்பது தனிச்சிறப்பாகும். நீரால் சூழப்பட்டுள்ள சிறு கருவறையில் சரபேஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஒரு சிறு பாலத்தின் வழியே அர்ச்சர்கள் சென்று பூஜை செய்கின்றனர். உடல், மனநோய் மற்றும் கெட்ட சக்திகளின் தொல்லையில் இருந்து விடுபடவும் பவுர்ணமி இரவில் பல மூலிகைகளால் ஆன அவுஷதா அபிஷேகம் நடைபெறுகிறது.

    இந்த அவுஷதா அபிஷேகம் இக்கோவிலில் மட்டுமே நடைபெறுவது தனிச்சிறப்பாகும். பல்வேறு மூலிகைகளைக் கொண்டு கோவிலிலேயே தயாரிக்கப்படும் பச்சை நிற குங்குமம் அம்பிகையின் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இங்கு தேய்பிறை அஷ்டமி, ஜாம பூஜை மற்றும் பவுர்ணமியன்று வழங்கப்படும் சித்த மூலிகை தீர்த்தம் பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது. பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் மற்றும் கோட்டூர் செல்லும் பஸ்களின் மூலம் அங்கலக்குறிச்சி சென்று அங்கிருந்து ஆட்டோ, கார் மற்றும் நடைப்பயணம் மூலம் ஆத்மநாத வனத்தை அடையலாம்.

    ஆலய தொடர்புக்கு- 94895 09305 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
    திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே நல்லூர் கிராமத்தில் சித்திரகுப்தருக்கு சிறிய கோவில் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இந்தக் கோவில் கருதப்படுகிறது.
    எமதர்மராஜனின் தலைமைக் கணக்காளரான சித்திரகுப்தரின் அவதாரம் குறித்து, புராணக் கதைகள் பலவுண்டு.

    கயிலையில் பரமேஸ்வரன், பார்வதியுடன் அளவளாவிக் கொண்டிருந்த சமயத்தில், பிரம்மா, திருமால், இந்திரன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்கள் அங்கு வந்தனர். அவர்களில் தர்மத்தின் காவலரான எமனின் முகம் வாடியிருந்தது.

    இதனைக்கண்ட ஈசன், “முக வாட்டத்திற்கான காரணமென்ன?” என்று வினவினார்.

    அதற்கு எமதர்மராஜா, “சுவாமி! என்னுடைய பணியில், பாரம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. உயிர்களின் பாவ - புண்ணியக் கணக்கை நான் ஒருவனே கணக்கிட வேண்டியுள்ளது. பூலோகவாசிகளின் காலம் முடிந்துவிட்ட போதிலும், அவர்களின் உயிர்களை எமலோகத்துக்கு எடுத்துச்செல்ல, அவர்கள் விவரங்கள் எதுவுமில்லை. எனவே, எனக்கு உதவியாக, பாவ - புண்ணியக் கணக்குகளை முறையாகவும், ரகசியமாகவும் பார்க்கத் தெரிந்த ஓர் உத்தமன் இருந்தால், நான் நிம்மதியாக இருப்பேன்” என்றார்.

    “நேரம் வரும்போது உன் கோரிக்கை நிறைவேறும்” என்று ஈசன் அருளினார். அதற்கான காலம் விரைவிலேயே கனிந்தது. அகலிகையின் சாபத்தால், இந்திரனுக்கு குழந்தைப் பேறு இல்லாமல் போனது. இதனால் வருத்தமுற்ற இந்திரன், சிவபெருமானை வேண்டினான்.

    ஈசனோ, “பத்தினி கொடுத்த சாபத்தை மாற்ற இயலாது” என்றார். அப்போது அருகில் இருந்த பார்வதிதேவி, எமதர்மனுக்கு ஈசன் கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்தினார்.

    எமதர்மன், இந்திரன் இருவரது கோரிக்கையையும் நிறைவேற்ற ஒரு காரியம் செய்தார். இந்திரனின் அரண்மனையில் இருந்த காமதேனுவின் கருப்பையில் சித்திரகுப்தனைப் புகச்செய்து, பசுவுக்கு குழந்தையாகப் பிறக்கச் செய்தார். அத்துடன், “சித்திரகுப்தனை விரதம் இருந்து வணங்கினால், அவர்களின் பாவச்சுமை குறையும்” என்று அருள்புரிந்தார். இந்திரனும் இந்திராணியும் பெருமகிழ்வு கொண்டனர். பிறக்கும்போதே கையில் ஏடு, எழுத்தாணி என்று கணக்கர் பதவியுடன் அவதரித்தவர், சித்திரகுப்தர்.

    ஈசன் அளித்த வரத்தின்படி, உயிரினங்களின் பாவ - புண்ணியக் கணக்குகளைப் பதிவுசெய்து, பராமரிக்கும் பொறுப்பை ஏற்று, பணியைத் தொடங்கினார் சித்திரகுப்தர். பவுர்ணமிதோறும் ஜீவன்களின் பாவ - புண்ணிய விவரங்களை எழுதிவருகிறார் என்பது ஐதீகம். ஆதலால், சித்திரகுப்தர் அவதரித்த சித்திரா பவுா்ணமியன்று விரதமிருந்து வழிபட்டால், ஒருவர் செய்த பாவங்கள் குறைந்து, புண்ணியங்கள் பெருகி, எல்லா நலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இன்னொரு புராணக்கதை. உமையவள் ஒருமுறை விளையாட்டாக ஓவியம் வரைந்து கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த எம்பெருமான், “ஓவியம் மிகவும் அழகாக, தத்ரூபமாக இருக்கிறதே” என்று பாராட்டினார். உடனே, ஓவியத்தை உயிர்ப்பிக்கும்படி பார்வதி வேண்டினார். தம் பத்தினி சொல்வதை மறுக்க இயலாத, இளகிய மனம் கொண்ட இறைவன், “சித்திர புத்திரனே வா” என்று பார்வதி வரைந்த ஓவியத்தைப் பார்த்து அழைத்தார். அக்கணமே ஓவியம் உயிர்பெற்றது. அதிலிருந்து ‘சித்திரகுப்தர்’ தோன்றினார். சித்திரகுப்தனுக்கு ஏதாவது பொறுப்பு தரவேண்டும் என்று தேவி கேட்க, எமதர்மராஜன் முன்பு வேண்டியது நினைவுக்குவர, எமதர்மராஜாவின் தலைமைக் கணக்காளராக நியமித்தார்.

    நவக்கிரகங்களுள் கேதுவுக்கு அதிபதியாகவும் சித்திரகுப்தர் விளங்குகிறார். ஜனனகால ஜாதகத்தில் கேது சரியில்லை என்றால், திருமணத்தடை, குழந்தையின்மை, உடல் உபாதை, நிம்மதியின்மை, சொத்துத் தகராறு போன்ற பல சிக்கல்கள் உருவாகும். இந்த பாதிப்பு உள்ளவர்களும், கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் சித்திரகுப்தரை வழிபட்டு, சிக்கல்கள் நீங்கப்பெறலாம்.

    சித்திரகுப்தருக்கு இந்தியாவில் 11 இடங்களில் தனிக்கோவில்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தர் கோவில் அனைவரும் அறிந்ததுதான். இது தவிர திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே நல்லூர் கிராமத்திலும் சிறிய கோவில் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இந்தக் கோவில் கருதப்படுகிறது. இவ்வாலயத்தை ‘நயினார்கோவில்’ என்று இப்பகுதி மக்கள் அழைத்து வருகின்றனர்.

    சித்திரகுப்தர் அவதரித்த நாளில், தங்கள் விளைநிலங்களில் விளைந்த காய்கனிகள், தானியங்கள், பழங்கள், கிழங்குகளை சித்திரபுத்திர நயினாருக்குப் படைத்து மகிழ்கின்றனர். இனிப்புப் பலகாரங்கள், சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடும் வழக்கமும் உள்ளது. குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்ய விரும்பும் தம்பதியர் ஒரு வாரம் விரதமிருந்து, மூன்று வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் இரண்டு மல்லிகைப்பூ மாலை அல்லது ரோஜாப்பூ மாலை அணிவித்து, தேங்காய், பழம் கொடுத்து அர்ச்சனை செய்து, நான்காவது வாரம் பொங்கலிட்டு வழிபட பலன் கிடைப்பதாக கூறுகிறார்கள்.

    அமைவிடம்

    திருநெல்வேலியில் இருந்து 32 கி.மீ தொலைவில், தென்காசி செல்லும் மெயின் ரோட்டிலுள்ள சிறு நகரம் ஆலங்குளம். இங்கிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ளது நல்லூர் கிராமம். இங்கு வைத்திலிங்க சுவாமி கோவில் முன்புள்ள நயினார் தெருவில் சித்திரகுப்தர் கோவில் இருக்கிறது. ஆலங்குளத்தில் இருந்து பேருந்து, சிற்றுந்து வசதிகள் உள்ளன.

    கீழப்பாவூர் கி.ஸ்ரீமுருகன்
    பழமையானதும், புராதனமான அழகிய கோவில்தான், ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ ஆலயம் ஆகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தொண்டை நாட்டின் தலைநகரமாக இருந்த காஞ்சி, வரலாற்றுப் பெருமையும் கலாசாரப் புகழையும் கொண்டது. “தெண்ணீர் வயல் தொண்டை நன்னாடு சான்றோருடைத்து” என்று ஒளவையாரால் போற்றிப் பாடப்பட்ட இடம் அது. “புஷ்பேசு ஜாதி, புருஷேசு விஷ்ணு, நாரீஷு ரம்பா, நகரேஷு காஞ்சி” என வடமொழிப் புலவர் ஒருவா் பாடியுள்ளார். அதாவது ‘பூக்களில் சிறந்தது ஜாதி முல்லை/மல்லி, புருஷர்களில் பெரியவர் விஷ்ணு, பெண்களில் சிறந்தவர் ரம்பா, நகரங்களில் சிறந்தது காஞ்சிபுரம்’ என்பது இதன் பொருள்.

    “கல்வியிற் கரையிலாத காஞ்சி” என்று நாயன்மாரும், இந்தப் பெருநகரைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர். நம் நாட்டில் ‘மோட்சபுரி’கள் என்று சொல்லப்படுகின்ற ஏழு மகா ஷேத்திரங்களுள் காஞ்சியும் ஒன்று. அயோத்தி, மதுரா, ஹரித்துவார், காசி, உஜ்ஜயினி, துவாரகை ஆகிய ஆறும் மற்ற நகரங்கள் ஆகும். கி.மு 2-ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கருதப்படும் பதஞ்சலி முனிவர் இயற்றிய மகாபாஷ்யத்திலும், சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை நூலிலும், புலவர் உருத்திரங்கண்ணனார் எழுதிய பெரும்பாணாற்றுப்படையில் இருந்தும் காஞ்சியின் மேன்மையை நாம் அறிய முடியும்.

    சைவ, வைஷ்ணவ, பவுத்த, ஜைன மத ஸ்தாபன பீடங்களாகவும், காஞ்சிபுரம் சிறப்புற்று விளங்கி இருக்கிறது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திவ்ய தேசங்கள் இங்கு பரவலாக இருக்கின்றன. அவற்றுள் பழமையானதும், புராதனமான அழகிய கோவில்தான், ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ ஆலயம் ஆகும். இந்த ஆலயம் கி.பி. 7-ம் நூற்றாண்டிற்கு முன்பே கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன. இந்த ஆலயத்தில் கடந்த ஆண்டுதான் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது.

    தல வரலாறு

    ஒரு சமயம், பிரம்மதேவரது மனம் மாசு படிந்து அழுக்காகக் காணப்பட்டது. மனதில் உள்ள அழுக்கு நீங்க, கங்கை நதிக்கரை ஓரத்தில் பிரம்மதேவர் கடுந்தவம் செய்தார். தவம் செய்து கொண்டிருந்தபோது ஒரு நாள், அவருடைய காதில் விழுந்த சில ஒலிகளை கூர்ந்து கவனித்தாா்.

    “மாசு ஒழிய, உள்ளம் தூய்மையடைய, ஓராயிரம் வேள்விகள் நடத்த வேண்டும். நடத்தி முடித்த அடுத்த கணமே உன் மாசு அழிந்துவிடும். ஆனால், ஆயிரம் யாகங்கள் நடத்துவதற்கு உன் ஆயுட்காலம் போதாது. எனவே காஞ்சிக்குச் செல். அந்த சத்திய விரத ஷேத்திரத்தில் ஒரு வேள்வி செய்தால், ஆயிரம் வேள்வி செய்ததற்கு சமம்” என்று அந்த ஒலியின் ஊடே ஓர் அசரீரி கேட்டது.

    இதையடுத்து அசரீரி சொன்னபடி, காஞ்சி பகுதிக்கு வந்த பிரம்மதேவர், மற்ற முனிவர்களுடன் இணைந்து அந்த வேள்வியை சிறப்பாக நடத்திக் கொண்டிருந்தாா். குண்டத்தில் இருந்து அக்கினி ஜுவாலை கொளுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தது. இந்த நிலையில் தன்னை அருகில் வைத்துக் கொள்ளாமல், தனியாக யாகம் செய்யும் பிரம்மதேவரின் மீது, அவரது மனைவியான சரஸ்வதிக்கு கோபம் உண்டானது. பிரம்மனின் வேள்வியை அழிக்க நினைத்த சரஸ்வதி தேவி, ‘வேகவதி’ என்ற பெரிய ஆறாக உருமாறி, வேள்வி நடைபெற்ற பகுதியை நோக்கி சீறிப்பாய்ந்து வந்தாள்.

    இதையறிந்த பிரம்மதேவன் செய்வதறியாமல், மகாவிஷ்ணுவை நினைத்து வேண்டினார். இதையடுத்து மகாவிஷ்ணு, ‘யதோக்தகாரி’யாய் வந்து, ஆற்றின் குறுக்கே படுத்து நீரை அங்கிருந்து மேற்கொண்டு செல்லவிடாமல் தடுத்தார். அதைத் தொடர்ந்து பிரம்மதேவரின் வேள்வி, நல்லபடியாக நிறைவுபெற்றது. அந்த வேள்வி குண்டத்தில் இருந்து, பல்லாயிரம் சூாியா்களின் ஒளி பொருந்திய தோற்றத்தில் வரதராஜப் பெருமாள் தோன்றினார். யதோக்தகாரி தோன்றிய ஏழாம் நாள்தான் வரதராஜர் என்னும் தேவராஜப் பெருமாள் தோன்றினார். யதோக்தகாரி என்பதற்கு சொன்னபடி செய்பவர் என்று பொருள். எனவேதான் இத்தல இறைவன் ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். யதோக்தகாரியின் ஜென்ம நட்சத்திரம் சித்திரை மாதத்தில் வரும் புனர்பூசம், தேவராஜப் பெருமாளுக்கு அஸ்தம். எனவே பக்தர்கள் ஸ்ரீ யதோக்காரியை உபாயமாகவும், ஸ்ரீ தேவராஜ பெருமாளை உபேயமாகவும் கருதி வழிபடுகிறார்கள்.

    காஞ்சிக்கு அருகே அவதரித்த பொய்கையாழ்வார் மற்றும் ஆழ்வார்களில் முதன்மையானவரான நம்மாழ்வார் ஆகியோர் இத்தலப் பெருமாளைப் போற்றி, ஏராளமான பாசுரங்கள் பாடியிருக்கிறார்கள். ஸ்ரீ மணவாள மாமுனிகள், இந்தக் கோவிலில்தான் சுமார் ஒரு வருட காலம் தங்கியிருந்து பிரசங்கம் செய்தார்.

    காஞ்சிபுரம் வரும் பக்தர்கள், சொன்னவண்ணம் செய்த பெருமாளை பார்க்காமல் செல்வதில்லை. இந்தக் கோவிலானது காஞ்சிபுரத்தில் திருக்கச்சி நம்பி தெருவின் வட பகுதியில் இருக்கிறது.

    ரா.சுந்தர்ராமன்
    திருமணம், மகப்பேறு ஆகியவற்றுக்காகவும் நோய் குணமாகவும் சொத்து தகராறு, குடும்பத்தகராறு நீங்கவும் தோரணமலை முருகனை வழிபட்டு வருகின்றனர்.
    முருகப் பெருமான் அருளாட்சி செய்யும் எத்தனையோ மலைதலங்களை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். பழனி, மருதமலை, திருத்தணி பழமுதிர்ச்சோலை என்று முருகன் வீற்றிருக்கும் மலை தலங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

    அந்த வரிசையில் இடம் பெற்றுள்ள “தோரணமலை” முழுக்க முழுக்க வித்தியாசமானது. மிகுந்த தனித்துவம் கொண்டது. தென்காசியில் இருந்து கடையம் செல்லும் வழித்தடத்தில் இத்தலம் உள்ளது. இந்த மலையின் உச்சியில் முருகன் குடி கொண்டிருக்கிறான். இந்த முருகப்பெருமானுக்கு உள்ள மிகப்பெரிய சிறப்பு என்ன தெரியுமா?

    தமிழ் வாழ வழி வகுத்த குறுமுனியான அகத்தியர், மருத்துவ உலகமே வியந்து பார்க்கும் தேரையர் சித்தர் இருவரும் பல நூறு ஆண்டுகளாக வழிபட்ட பெருமையும், மகிமையும் இந்த முருகப் பெருமானுக்கு உண்டு. பல நூறு ஆண்டுகளாக மலை உச்சியில் இருப்பதாலோ என்னவோ, இந்த முருகன் மிகச்சிறந்த வரப்பிரசாதியாகத் திகழ்கிறார். நீங்கள் என்ன ஆசைப்பட்டு கேட்டாலும் சரி... தொழில் விருத்தி ஆகவேண்டுமா? குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு சச்சரவுகளா? கடன் தொல்லையா? நல்ல வேலை வேண்டுமா? பதவி உயர்வு வேண்டுமா? திருமணம் நடக்க வேண்டுமா? புத்திரப் பாக்கியம் வேண்டுமா? இப்படி நீங்கள் என்ன கேட்டாலும் தோரணையாக வாழ தோரண மலை முருகன் வாரி வழங்க தயங்குவதே இல்லை.

    அதுவும் இவரிடம் மலை ஏறி வந்து யார் ஒருவர் கண்ணீர் விட்டு தமது கோரிக்கைகளை வைக்கிறாரோ, அவரை தோரணமலை மேலும் அழவிடுவதில்லை.

    உலகத்தை சமப்படுத்த தென்பகுதியில் உள்ள பொதிகை மலைக்கு செல் என்று சிவபெருமான், அகத்தியருக்கு உத்தரவிட்டு, அவர் வந்த கதை உங்களுக்கு தெரிந்ததுதான். அகத்திய முனிவர் பொதிகைக்கு வந்து கொண்டிருந்தபோது கடையம் அருகே உள்ள தோரணமலையை பார்த்து வியந்தார். எனவே அந்த மலையில் சிறிது காலம் தூங்கி செல்லலாம் என்று அகத்தியர் மலை உச்சிக்கு சென்றார்.

    தோரணமலையில் பச்சை பசேவென விளைந்து கிடந்த சுமார் 4 ஆயிரம் மூலிகை செடி வகைகளை பார்த்ததும் அகத்தியர் மேலும் மகிழ்ச்சி அடைந்தார். அந்த மூலிகைகள் என்னென்ன நோய் தீர்க்கும் என்பதை கண்டுபிடித்தார். அந்த தகவல்களை எல்லாம் அவர் குறிப்புகளாக எழுதினார். அவைதான் இன்று அகத்தியர் மருத்துவ நூல்களாக உலகம் முழுவதும் பரவியுள்ளன. ஆக அகத்தியரின் மருத்துவ ஆய்வுக்கு வித்திடப்பட்ட இடம் இந்த தோரணமலை என்பது குறிப்பிடத்தக்கது.

    அகத்தியரின் சீடராக வந்து சேர்ந்த தேரையரும் மருத்துவத்தில் நிறைய புதுமைகளை செய்தார். அவர்கள் இருவராலும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோரணமலை மிகப்பெரும் மருத்துவ தொழிற்சாலை போல செயல்பட்டது. சில ஆண்டுகளுக்கு பிறகு அகத்தியர் தோரணமலையில் இருந்து பொதிகை மலைக்கு சென்று விட்டார். அவரது சீடர் தேரையரோ, அந்த தோரணமலையின் ஒரு பகுதியில் ஜீவசமாதி ஆகிப்போனார்.

    இதன் காரணமாக தோரணமலை, அழகன் முருகன் ஆராதனை செய்யப்படாத நிலை ஏற்பட்டது. நாளடைவில் ஒட்டுமொத்த தோரணமலையும் மக்கள் கவனத்தில் இருந்து திசைமாறிப் போனது. மிகவும் சிறப்பாக வழிபடப்பட்ட முருகனும் கால ஓட்டத்தில் அருகில் உள்ள சுனைக்குள் போகும் நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால் முருகன் எத்தனை நாட்களுக்குத்தான் அந்த சுனைக்குள் இருப்பார்? மீண்டும் மக்கள் வந்து தன்னை தரிசித்து பயன்பெறட்டும் என்று முருகப்பெருமான் திருவுளம் கொண்டான். தோரணமலை அருகில் உள்ள முத்துமாலைபுரம் என்ற ஊரை சேர்ந்தபெருமாள் என்பவர் கனவில் தோன்றினார்.
    “நான் தோரணமலை உச்சியில் உள்ள சுனைக்குள் கிடக்கிறேன். என்னை வெளியில் எடுத்து வைத்து வணங்குங்கள்” என்றான்.

    மறுநாள் விடிந்ததும் பெருமாள் ஆட்களை அழைத்து கொண்டு மலை உச்சிக்கு சென்றார். சுனையில் உள்ள தண்ணீரை இறைத்து வெளியேற்றினார்கள். சொன்னபடி தோரணமலைமுருகன் அங்கே இருந்தார். அந்த சிலையை எடுத்து மலை அடி வார குகையில் வைத்து வழிபட்டனர். இன்றும் அந்த சிலையே தோரணமலை சன்னிதானத்தில் மூலவராக உள்ளார்.

    பெருமாளின் மகனும் ஆசிரியருமான ஆதிநாராயணன், தோரணமலை முருகன் பற்றிய சிறப்புகளை பரப்பச் செய்தார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள சுமார் 150 சினிமா தியேட்டர்களில் சிலைடு மூலம் தோரணமலை முருகன் பற்றிய தகவலை பரப்பினார். இதையடுத்து மக்கள் சாரை, சாரையாக தோரணமலைக்கு வரத்தொடங்கினார்கள். பக்தர்கள் வசதிக்காக அவர் தோரணமலை உச்சிக்கு செல்ல சுமார் 1000 படிகள் கொண்ட படியை ஏற்படுத்தினார். சுனைகளையும் மேம்படுத்தினார்.

    தற்போது அவரது குமாரர் செண்பகராமன், தோரணமலை முருகன் சிறப்புகளை உலகம் முழுமைக்கும் பரவச்செய்யும் தன்னலமற்ற பணியில் “தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இதனால் தோரணமலை முருகனை வழிபட வருபவர்கள் எண்ணிக்கை உயர்ந்தபடி உள்ளது. சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்கும் தோரணமலை முருகன் கோவிலில் தமிழ்மாத கடைசி வெள்ளிக்கிழமை தோறும் உச்சிகால பூஜையின் போது (11 மணி முதல் 1.30 மணி வரை) சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அன்னதானம் நடக்கின்றன.

    திருமணம், மகப்பேறு ஆகியவற்றுக்காகவும் நோய் குணமாகவும் சொத்து தகராறு, குடும்பத்தகராறு நீங்கவும் தோரணமலை முருகனை வழிபட்டு வருகின்றனர். மருத்துவ படிப்பு, விரும்பிய வேலை, தொழில் அமையவும் உயர்பதவி கிடைக்கவும் அருள்பாலிக்கிறான் முருகன். செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் கார்த்திகை, விசாகம் ஆகிய நட்சத்திரங்களும் முருகனை வழிபட உகந்ததாகும். மலை அடிவாரத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

    இத்தலத்து முருகன் கிழக்கு நோக்கி திருச்செந்தூர் முருகனை பணித்தபடி உள்ளார். எனவே இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் திருச்செந்தூரில் வழிபட்ட அதே பலன்கள் கிடைக்கிறது. பொதுவாக இருநதிகளுக்கு இடையில் உள்ள தலம் சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும். தோரணமலையை சுற்றி ராமநதி, ஜம்புநதி ஒடுகின்றன. இதுதவிர இப்போதும் இந்த மலையில் தேரையரும், மற்ற சித்தர்களும் அரூப நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    மலை உச்சியில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்தால், மனம் குளிர்ந்து விடுகிறது. எந்த ஒரு மலையிலும் கிடைக்காத மனஅமைதியை அங்கு நீங்கள் பெற முடியும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் தேரையர் உள்ளிட்ட சித்தர்களின் ஆசியும் சேர்ந்து கிடைக்கும். முருகனின் அருளையும், சித்தர்களின் ஆசியையும் ஒருங்கேப் பெறவே முக்கிய நாட்களில் இங்கு விமரிசையாக விழா நடத்தப்படுகிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தைப்பூசம் இந்த புராணமலையில் சிறப்பாக நடைபெற உள்ளது.

    மலைஉச்சியில் மின்சாரம், குடிநீர், கழிவறை ஆகிய மூன்று முக்கியமான வசதிகள் இல்லாதது மிகப்பெரும் மனக்குறையாக உள்ளது. முருகப்பக்தர்கள் நினைத்தால் மூன்று மாதத்தில் அந்தத்திருப்பணிகளை செய்து முடித்து விடமுடியும். முருகப்பெருமான் அருளால் மூழ்கியுள்ள இந்த மலைத்தலத்தில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்துவிட்டது. இதனால் படிக்கட்டுகள் சிதிலமடைந்து விட்டன. சில இடங்களில் மலை ஏற முடியாத அளவுக்கு உள்ளன.

    அதுபோன்று இந்த ஆலயத்தில் கழிவறை வசதிகளும் போதுமான அளவுக்கு இல்லை. 55 ஆண்டுகள் இறைபணி செய்து முருகனுடன் ஆதி நாராயணன் ஐக்கியமாகிவிட்டதால் அவரது மகன் கே.ஏ.செண்பகராமன் தோரணமலை ஸ்ரீமுருகன் கோவில் விழா பணிகளை திறம்பட மேற்கொள்ள அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறார்.

    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தோரணமலையில் இந்தத்திருப்பணிகள் செய்பவர்களின் குடும்பமும் நிச்சயம் வாழையடி வாழையாக தழைக்கும்.

    தோரணமலை முருகன் பற்றிய கூடுதல் தகவல்களை செண்பகராமனிடம் 9965762002 என்ற எண்ணில் பெறலாம்.
    திருநெல்வேலி நகரில் நின்ற, இருந்த, படுத்த திருக்கோலத்தில் மகாவிஷ்ணு சேவை சாதிக்கும் ஆலயம்தான், கரியமாணிக்கப் பெருமாள் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    நெல்லையப்பர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் திருநெல்வேலி, ‘முழுதும் கண்டராம பாண்டியன்’ என்ற மன்னனால் பெருமை பெற்ற திருத்தலம் ஆகும். இந்த திருநெல்வேலி நகரில் நின்ற, இருந்த, படுத்த திருக்கோலத்தில் மகாவிஷ்ணு சேவை சாதிக்கும் ஆலயம்தான், கரியமாணிக்கப் பெருமாள் கோவில்.

    சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமையான இந்த ஆலயம், பாண்டியர், சோழர், மற்றும் நாயக்கர் காலத்தில் மிகச்சிறப்பாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ராஜராஜ சோழ மன்னனுக்கு ‘கரிய மாணிக்கன்’ என்ற சிறப்பு பெயர் உண்டு. இந்த மன்னனின் ஆட்சி காலத்தில் இக்கோவில் மறுசீரமைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

    நமக்கெல்லாம் மகாபாரதம் அருளியவர் வியாச முனிவர். இவரது முதன்மையான சீடர் பைலர். இவர் தாமிரபரணி ஆற்றின் கரையில் வாழ்ந்து வந்தார். இவர் தாமிரபரணி குறுக்குத்துறையில் அமர்ந்து ஸ்ரீனிவாச பெருமாளை நினைத்து தவம் புரிந்தார். அந்த காலத்தில் இங்கு கோவில் இல்லாத காரணத்தினால், மனதிற்குள்ளேயே பெருமாளை நினைத்து பூஜை செய்து வந்தார், பைலர் முனிவர். ஒரு கோடி மலரால் ஸ்ரீனிவாசரை அர்ச்சனை செய்தார்.

    அந்த கோடி மலரும் ஒன்றாகச் சேர்ந்து, மிக பிரகாசமான நீல ரத்தினமானது. அந்த நீலரத்தினத்திற்குள் இருந்து ஸ்ரீனிவாசர் காட்சி கொடுத்தார். அவரை பைலர், ‘நீலமணிநாதர்’ என்ற திருநாமம் சூட்டி வணங்கினார். இதனால்தான் இந்த ஷேத்திரம் ‘ஸ்ரீ நீலரத்ன ஷேத்திரம்’ ஆனது. இந்த தலம் ‘வேணுவனம்’ என்றும் போற்றப்படுகிறது.

    “பகவானே.. உங்கள் வடிவத்தை காண நான் பேறு பெற்றுள்ளேன். வடக்கே திருப்பதியில் வேங்கட மலையில் குடிகொண்ட வேங்கடாசலபதி பெருமானே! இந்த அடியவனுக்கு காட்சி கொடுத்தது போலவே, நீவிர் தேவா்கள் புடைசூழ தோன்றி பக்தர்களுக்கு அருள் வழங்க வேண்டும். உம்மைத் தேடி வரும் பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

    “சனி, சூரியன் ஆகிய கிரகங்களினால் ஏற்பட்ட உபாதைகளை நீக்கி, கண்ணுக்கு ஒளி தரும் என் கரிய மாணிக்கமே” என இத்தல இறைவனைப் பற்றி நம்மாழ்வார் பாடுகிறார். இதன் மூலம் இந்த திருக்கோவிலானது, சனி மற்றும் சூரியனின் கிரக தோஷங்களைப் போக்கும் ஆலயம் என்பது உறுதியாகிறது.

    இத்தல மூலவர் நின்ற திருக்கோலத்தில் கரியமாணிக்கப் பெருமாளாகவும், சயனத் திருக்கோலத்தில் அனந்த பத்மநாபப் பெருமாளாகவும், அமர்ந்த திருக்கோலத்தில் லட்சுமி நாரயணராகவும் காட்சி தருவது மிகச்சிறப்பானதாகும். இங்கு இரண்டு தாயார் சன்னிதிகள் உள்ளன. சவுந்திரவல்லி மற்றும் கோதைவல்லி ஆகிய இருவரும் தனித்தனி சன்னிதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். இங்கு தாமிரபரணி தீர்த்தம், பத்மநாப தீர்த்தம் ஆகிய இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. இந்த ஆலயத்தின் விமானம், ‘ஆனந்த விமானம்’ என்று அழைக்கப்படுகிறது. ஆலயத்தில் தல விருட்சம், மூங்கில் ஆகும். இக்கோவிலில் வடக்கு நோக்கியபடி, தனிச்சன்னிதியில் அமா்ந்து அனுமன் அருள்பாலிக்கிறாா்.

    இந்த ஆலயம் 17 ஆயிரத்து 800 சதுர அடி பரப்பளவு கொண்டதாகும். சூரியன், சனி, ராகு, கேது ஆகிய கிரகதோஷங்களை நீக்கும் பரிகாரங்களுக்கு முக்கிய தலமாக இது விளங்குகிறது. வைகானச ஆகமப்படி இந்த கோவில் கட்டப்பட்டு, வழிபாடுகள் நடைபெறுகின்றன. புராண காலப்படி, ஸ்ரீ கிருஷ்ணவர்ம மகாராஜவிற்கு, இத்தல இறைவனான கரியமாணிக்கப் பெருமாள் காட்சி கொடுத்துள்ளார். அவரால்தான் இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டதாக செவிவழிச் செய்தி ஒன்றும் சொல்லப்படுகிறது. அதுபோலவே மணப்படை வீடு ஸ்ரீ விஷ்ணுவர்த்த மகாராஜாவுக்கும், இத்தல இறைவன் அருள்பாலித்து உள்ளார்.

    திருமலை திருப்பதியை போலவே, தை மாதம் வரும் ரத சப்தமி அன்று ஏழு வாகனங்களில் பெருமாள் புறப்பாடு நடைபெறுவது, தமிழ்நாட்டில் இத்திருத்தலத்தில் மட்டும்தான். பங்குனி மற்றும் தை திருவோணத்தில் 4 ரத வீதிகளில் கருட வாகனத்தில் அமர்ந்து பெருமாள் வீதி உலா வருவார். பின் கருடசேவை சங்கமம் மற்றும் தீபாராதனை ஆகியவை, டவுண் கீழ ரதவீதி பெரிய தேர் அருகில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் தென்திருப்பதி வெங்கிடநாத பெருமாள் திருக்கோவில், மகிழ் வண்ணநாதர், லட்சுமி நரசிங்க பெருமாள், சங்காணி வரதராஜ பெருமாள், கரிய மாணிக்கப் பெருமாள் ஆகிய பெருமாள்கள், கருட வாகனத்தில் இந்தக் கோவில் முன்பு சேவை சாதிப்பது மிகச்சிறப்பானதாகும்.

    திருமலையைப் போலவே இந்த ஆலயத்திலும் ஏழு நிலைகளைக் கடந்து இறைவனை தரிசிக்க வேண்டும். பந்தல் மண்டபம், வேணுகோபால் பஜனைமடம் உள்ள மண்டபம், மகாமண்டபம், மணி மண்டபம், கருட மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பக்கிரகம் என 7 நிலை இருப்பதால், இது ‘தென் திருப்பதி’ என கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் சித்திரை விஷு திருவிழா, வைகாசி விசாகத் திருவிழா, ஆனிமாத திருமஞ்சனம், ஆடி சுவாதி, ஆவணி உறியடி திருவிழா, புரட்டாசி சனிக்கிழமை கருட சேவை, ஐப்பசி விஷு கருடசேவை, கார்த்திகை மாதம் கார்த்திகைத் திருநாள், மார்கழி மாதம் 30 நாளும் திருப்பாவை பாராயணம் செய்யும் நிகழ்வு போன்றவை நடைபெறுகிறது.

    பெண்கள் கைகங்கர்ய சபை சார்பில், மார்கழி மாதம் 27-ம் நாள் ஆண்டாள் உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் திறப்பு மிகச்சிறப்பாக நடைபெறும். தை மாதம் ஆலய வருஷாபிஷேகம் 10 நாள் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. இரண்டாம் நாள் லட்சார்ச்சனை, புஷ்பாஞ்சலியும் வெகு விமரிசையாக நடத்தப்படும். 10 நாள் நடைபெறும் பங்குனி உத்திர பெரு விழாவில், 10-ம் திருநாள் அன்று தேரோட்டம் நடைபெறும். பங்குனி வளர்பிறையில் ராமநவமி உற்சவமும், திருவீதி உலாவும் நடக்கும்.

    இத்தலம் பிராத்தனை தலமாகும். “இங்கு நீலமணிநாதர், கரியமாணிக்கம் என்ற பெயரில் கண் நோய் தீர்க்கும் ஆண்டவராகவே உள்ளார்” என நம்மாழ்வாரால் பாடப்பட்ட தலமாகும். இங்குள்ள கருடனுக்கு இரண்டு சிவப்பு கண்கள் பொருந்தியிருப்பது, கண்நோய் தீர்ப்பதை உணர்த்துவதாக உள்ளது.

    சனி தோஷம் உள்ளவர்கள், சனிக்கிழமைகளில் இங்கு வந்து வணங்கி நின்றால் சனி பகவானால் வரும் பிரச்சினைகள் குறையும். புதன்கிழமை இத்தலம் வந்து வழிபடுவோருக்கு கல்விகளில் முன்னேற்றம் உண்டாகும். வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி நாராயணரை வணங்குபவர்கள், விரைவில் திருமணம் கைகூடும் பாக்கியம் பெறுவர். மார்கழி மாதம் நடைபெறும் ஆண்டாள் உற்சவத்தில் கலந்து கொண்டால், வேண்டிய வரம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்கள், திருமண பேறு பெறுவார்கள். குழந்தை வரம் கிடைக்கிறது. குழந்தைகளை திருவோணம் நட்சத்திரத்தில் இத்தல இறைவனுக்கு தத்து கொடுத்து, மீண்டும் பெற்றுச் செல்லும் நிகழ்வு அதிகமாக நடக்கிறது. இந்த கோவிலில் சந்தான கோபாலகிருஷ்ணனுக்கு, சுதர்சன ஹோம பூஜை செய்யப்படுகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 7.15 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்


    இத்திருத்தலம் திருநெல்வேலி நகரம் நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது. திருநெல்வேலி நகர சந்தி விநாயகர் திருக்கோவில் பஸ் நிலையத்தில் இறங்கி, அரை கிலோமீட்டர் தூரத்தில் கோவிலை அடையலாம்.

    திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி நகரம் மற்றும் திருநெல்வேலி நகரம் வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளிலும் சென்று இத்திருத்தலத்தை அடையலாம்.

    முத்தாலங்குறிச்சி காமராசு
    திருவையாறு திருத்தலத்தில் தான் இசையுலகின் அவதார புருஷரான சற்குரு தியாகராச சுவாமி வாழ்ந்து, பொன்னி நதியின் வடகரையில் சமாதியடைந்துள்ளார்.
    திருவையாறு திருத்தலத்தில் தான் இசையுலகின் அவதார புருஷரான சற்குரு தியாகராச சுவாமி வாழ்ந்து, பொன்னி நதியின் வடகரையில் சமாதியடைந்துள்ளார்.

    ஐந்து நதிகள் பாதிருவையாறு திருத்தலத்தில் தான் இசையுலகின் அவதார புருஷரான சற்குரு தியாகராச சுவாமி வாழ்ந்து, பொன்னி நதியின் வடகரையில் சமாதியடைந்துள்ளார்.யும் திருவையாறு, வயல் வளத்திலும், இசைப் பெருக்கிலும், ஆன்மிக நலத்திலும் செழித்துள்ள பூமி. இத்திருத்தலத்தில் தான் இசையுலகின் அவதார புருஷரான சற்குரு தியாகராச சுவாமி வாழ்ந்து, பொன்னி நதியின் வடகரையில் சமாதியடைந்துள்ளார்.

    திருவாரூரில் பிறந்திருந்தாலும் முக்தி தலமான இங்கே தான், அவருக்கு ஆண்டு தோறும் இசைப் பெருவிழா தை மாதத்தில் நடைபெற்று வருகிறது. உலகெங்கும் உள்ள இசை விற்பன்னர்கள் திருவையாறு வந்து, தங்கள் குருவுக்கு சங்கீத காணிக்கையாக ‘பஞ்சரத்ன கீர்த்தனை’ பாடுவது கண்ணுக்கும் காதுக்கும் இனிமையான ஒன்றாகும்.

    தியாகராசர் தினமும் வழிபட்டு பாடிய பட்டாபிராமர் கோவில், காவிரியின் தென்கரையில் மோகனாம்பாள்புரம் என்னும் புது அக்ரகாரத்தில் இருக்கிறது. பசுமையான இச்சிற்றூருக்கு திருவையாறு சாலையில் இருந்து ½ கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்லலாம். அல்லது வாகனங்கள் மூலம் செல்லலாம்.

    இந்த ஆலயம் கிழக்கு பார்த்த வண்ணம் அமைந்துள்ளது. தோரண வாசலில் இருபுறமும் அம்ருத கலச ஹஸ்த கருடாழ்வாரும், சஞ்சீவ பர்வத ஹஸ்த ஆஞ்சநேயரும் சுதை வடிவில் நிற்கின்றனர். உள்ளே பலிபீடம், கொடிமரம், மூன்று நிலை ராஜகோபுரம் இருக்கின்றன. மகா மண்டபத்தில் மூலவரைப் பார்த்தபடி பெரிய திருவடி கருடனும், அருகே சிறிய திருவடி ஆஞ்சநேயரும் சேர்ந்தே இருக்கின்றனர். அர்த்த மண்டபத்தில் தென்திசை நோக்கி ஆழ்வார்களின் சன்னிதி இருக்கிறது. அதைக் கடந்தால், கருவறையில் மூலவர் வீற்றிருக்கும் தோற்றம், எந்த ஆலயத்திலும் காண முடியாத கண்கொள்ளாக் காட்சியாக பார்ப்போரைப் பரவசப்படுத்துகிறது.

    பொதுவாக வில்லேந்தியபடி சீதா மற்றும் லட்சுமணன், அனுமனுடன் நின்ற கோலம் காட்டும் சக்கரவர்த்தி திருமகனான ராமபிரான், இங்கு வித்தியாசமான கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார். பட்டாபிஷேக ராமபிரானாக இடதுகாலை மடித்து வைத்து, வலது காலை தொங்கவிட்டு அமர்ந்த நிலையில், இடது கை மடித்து முழங்காலை அணைத்தபடி இருக்க, வலது கரம் ஞான முத்திரையுடன் விளங்குகிறது. எந்த ஆயுதமும் ஏந்தாத பட்டாபிஷேகக் காட்சியாக அது உள்ளது. மூலவரின் பீடத்தில் அமர்ந்துள்ள அனுமன் ஒரு கரத்தால் அரியணையைத் தாங்க, மறு கரத்தால் வாய் மீது கை வைத்தபடி பவ்வியமாக சேவை சாதிக்கிறார்.

    புன்னகை பூக்கும் புருஷோத்தமனின் இடப்புறம் சீதாப்பிராட்டி அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கிறார். சுவாமிக்கு வலது புறம் இளைய பெருமாள் லட்சுமணன் தனது வில்லும், தமையனது வில்லுமாக இரு வில்களை ஏந்தியபடி நிற்கிறார். அவருக்குப் பக்கத்தில் பரதன் வெண் கொற்றக்குடையுடன் நிற்கிறார். சீதைக்குப் பக்கத்தில் சத்துருக்ணன் கவரி வீசி நிற்கும் கோலம் காட்டுகிறார். அருகே ராமதூதனான ஆஞ்சநேயர் மண்டியிட்டு அமர்ந்து, ஒரு கையால் வீணையைத் தடவியபடி மறுகரத்தில் ராமாயணச் சுவடி ஏந்தி காட்சி தருவது சிறப்பம்சம்.

    வைணவக் கோவில்களில் சாளக்கிராமக் கற்கள் அல்லது மாலை இருக்கும். ஆனால் இத்திருக்கோவிலின் கருவறையில் உள்ள அனைத்து மூர்த்தங்களுமே சாளக்கிராம கற்களால் உருவாக்கப்பட்டவை என்பது சிறப்பினும் சிறப்பானதாகும். இங்கே உள்ள அனைத்து உற்சவர் மூர்த்தங்களுமே மூலவர்கள் போலவே வடிவமைக்கப்பட்டு, அதே பெயரிலேயே இருப்பது கூடுதல் சிறப்பு.

    ஆலயம் வலம் வரும் போது தெற்கு பிரகாரத்தில் வேம்பும் வில்வமும் இணைந்து எழுந்துள்ள அதிசய மரம் இருக்கிறது. ஆலயத்தின் தலவிருட்சமான இந்த மரம், பக்தியும் பசுமையும் பரப்பி வருகிறது. தலவிருட்சத்தின் அருகே சக்கரத்தாழ்வாருக்கு சிறிய சன்னிதி உள்ளது. பதினாறு கரங்களில் பதினாறு ஆயுதங்கள் தாங்கி, இடதுகாலை தூக்கி வைத்து ஓடிவரும் பாவனையில் சுதர்சனரும், அவருக்கு பின்புறமாக யோக நரசிம்மரும் தம்மை அடிபணியும் அன்பருக்கு அச்சம் அகற்றி அருள்புரிகின்றனர்.

    தினந்தோறும் இத்திருக்கோவில் வந்து சேவித்த தியாகராசர், ராமபிரானை நினைத்து ஏராளமான கீர்த்தனைகள் பாடியிருந்தாலும், 90 கோடி ராமநாமம் ஜெபித்தது பெருமைக்குரியது.

    சங்கீத மூவரில் மற்றொருவரான முத்துசாமி தீட்சிதர், தியாகராசரின் அழைப்பின் பேரில் இத்தலம் வந்து ‘மாமவ பட்டாபிராமா’ என்ற மணிரங்கு ராக கீர்த்தனையை இசைத்துள்ளார்.

    இந்த ஆலயத்தில் ராமநவமி 10 நாள் திருவிழா, வைகுண்ட ஏகாதசி விழாக்கள் இங்கே விசேஷம். இசை பயில்பவர்களும், இல்லறத்தில் இனிமை நிலவ விரும்புபவர்களும், நல்ல பதவி வேண்டுபவர்களும் இத்தலத்துப் பட்டாபிராமர் சன்னிதி முன் நின்று தரிசித்தால் எண்ணியது நிறைவேறும் என்பது திண்ணம்.

    தியாகராசர் ஆராதனைக்கு வரும் சங்கீத வித்வான்கள், இந்த சன்னிதி வந்து சேவிக்காமல் செல்லமாட்டார்கள் என்று பெருமையுடன் கூறுகிறார்கள். இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    டாக்டர் ச.தமிழரசன்
    நாகப்பட்டினம் மாவட்டம், செம்பனார் கோவில் கடைவீதியில் அழகுற அமைந்துள்ளது சுவர்ணபுரீஸ்வரர் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    நாகப்பட்டினம் மாவட்டம், செம்பனார் கோவில் கடைவீதியில் அழகுற அமைந்துள்ளது சுவர்ணபுரீஸ்வரர் ஆலயம். இந்தக் கோவில் கீழ் திசை நோக்கி அமைந்திருக்கிறது. உள்ளே நுழைந்ததும் கொடி மரம் காணப்படுகிறது. அதன் இடதுபுறம் திரும்பி நடந்து, எதிரே தென்படும் படிகளைக் கடந்தால் மகாமண்டபத்தை அடையலாம்.

    மகாமண்டபத்தில் இறைவனின் சன்னிதிக்கு முன், நந்தியும் பலிபீடமும் உள்ளன. மகாமண்டபத்தில் இருந்து அர்த்த மண்டபத்திற்கு செல்லும் நுழைவு வாசலின் இடதுபுறம் சூரிய மகா கணபதி, சூர்ய லிங்கம், வலது புறம் சந்திரலிங்கம், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் திருமேனிகள் உள்ளன.

    மகாமண்டபத்தின் வடபுறம் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தைக் கடந்தபின் உள்ள அர்த்தமண்டபத்தை அடுத்து கருவறை தென்படுகிறது. அதன் உள்ளே மூலவர் லிங்கத் திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘சுவர்ணபுரீஸ்வரர்.’ இறைவி பெயர் ‘சுகந்த குந்தாளம்பிகை.’ அம்பாளுக்கு ‘மருவார் குழலியம்மை’ என்ற பெயரும் உண்டு.

    கருவறை கோட்டத்தின் தெற்கே கோஷ்ட கணபதி, மேற்கே தட்சிணா மூர்த்தி, கிழக்கே அர்த்தநாரீஸ்வரர், வடக்கே பிரம்மா, சிவதுர்க்கை ஆகியோரது திருமேனிகள் உள்ளன. சண்டீஸ்வரர் சன்னிதி வடக்குப் பிரகாரத்தில் உள்ளது.

    தெற்குப் பிரகாரத்தில் இறைவி சுகந்த குந்தாளம்பிகை தனிச் சன்னிதியில் மேற்கு திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறாள். மேற்கு பிரகாரத்தில் பிரகாச பிள்ளையார், நால்வர், சீனிவாசப் பெருமாள், காசி விஸ்வநாதர், பாலசுப்ரமணியம், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, நாகர் ஆகியோரது திருமேனிகளும் இருக்கின்றன.

    கிழக்கு பிரகாரத்தில் வீரபத்திரர், நவக்கிரக நாயகர்கள் அருள் பாலிக்கின்றனர். சம்பந்தர், அப்பர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலம் இது. இந்த ஆலயத்தில் இரண்டு தல விருட்சங்கள் உள்ளன. அவை.. வில்வம் மரம், வன்னி மரம் ஆகும்.

    இந்த ஆலயத்தில் பிரதோஷம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. அதேபோல் நவராத்திரி, சிவராத்திரி, ஆண்டுப் பிறப்பு, மகம், திருவாதிரை போன்ற நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு ஆராதனைகளும் அபிஷேகங்களும் செய்யப்படுகின்றன. ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையில் இங்கு நடைபெறும் குத்து விளக்குப் பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொள்வர்.

    ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதே போல் கார்த்திகை மாதம் நடைபெறும் சங்காபிஷேகமும் இந்த ஆலயத்தில் மிகவும் பிரசித்தம். ஆனித் திருமஞ்சனம் அன்று நடராஜர் - சிவகாமி அம்மன் வீதி உலா வருவார்கள்.

    தங்க நகைகளை புதிதாக வாங்கும் பெண்கள், இங்குள்ள இறைவிக்கு அதனை அணிவித்து அழகு பார்த்துவிட்டு, அதன் பிறகே தாங்கள் அணிந்து கொள்ளும் பழக்கத்தை வெகுவாக கடைப்பிடிக்கிறார்கள். இதனால், தங்களுக்கு மேலும் ஆபரணங்கள் சேரும் என்று பெண்கள் நம்புகின்றனர்.

    இந்த ஆலயத்தில் சப்தமாதர்கள் மிகவும் பிரசித்தம். தெற்கு பிரகாரத்தில் அருள்பாலிக்கும் இந்த சப்த மாதர்களிடம், சுற்று வட்டாரப் பெண்களுக்குப் பாசம் அதிகம். ஆம்.. மணமாகாத பெண்கள், இந்த சப்த மாதர்களைப் பூஜித்து 7 ரவிக்கை துண்டுகளை வைத்துப் படைத்து, அதை ஏழைப் பெண்களுக்கு தானமாகக் கொடுக்கின்றனர். இப்படி செய்தால், அவர்களுக்கு விரைவில் திருமணம் பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து ஆக்கூர் செல்லும் வழித்தடத்தில், மயிலாடுதுறையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செம்பனார் கோவில்.

    மல்லிகா சுந்தர்
    நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் ரெயில் நிலையத்திற்கு கிழக்கே, நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆச்சாள்புரம் என்ற திருத்தலம்.
    நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் ரெயில் நிலையத்திற்கு கிழக்கே, நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆச்சாள்புரம் என்ற திருத்தலம். திருமணசம்பந்தரின் தந்தையான சிவபாத இருதயர், சம்பந்தரை அணுகி “மறை முறைப்படி வேள்விகள் செய்வதற்கு, ஒரு பெண்ணை மணம் செய்து கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். சம்பந்தர் முதலில் மறுத்தார். சிவபாதர் மீண்டும் வலியுறுத்தவே திருவருளை நினைத்து, சம்பந்தர் சம்மதம் தெரிவித்தார்.

    சிவபாத இருதயர், நம்பியாண்டார் நம்பியின் மகளான சொக்கியாரை மணம் பேசினார். சம்பந்தர் ஆச்சாள்புரம் வந்தார். இறைவனை வழிபட்டு மணக் கோலம் பூண்டார். திருநீலநக்க நாயனார் மணவிழா சடங்குகளை நடத்தினார். மணப்பெண்ணுக்கு ‘ஸ்ரீ தோத்திர பூரணாம்பிகை’ என்ற பெயரும் உண்டு. சம்பந்தர், இறைவன் திருவடியை சேரும் நினைவோடு ‘கல்லுர்ப் பெருமணம்..’ எனத் தொடங்கும் பதிகம் பாடி இறைவனை வழிபட்டார்.

    அப்போது இறைவன் சிவலோகத் தியாகர், ஜோதிப் பிழம்பாகத் தோன்றி “நீயும் நின் மனைவியும், திருமணம் காண வந்த அனைவரும் இந்த ஜோதியில் புகுந்துகொள்ளுங்கள்” என்று அருளினார்.

    சம்பந்தர் ‘காதலாகி..’ எனத் தொடங்கும் நமச்சிவாய திருப்பதிகம் பாடினார். கூட்டத்தில் இருந்த பலர் ஜோதியில் கலக்க, சிலர் பயத்துடன் பின் வாங்கி ஒடத் தொடங்கினர். நந்தி பகவான் அவர்களை துரத்தி தடுத்து நிறுத்தினார். பின்னர் அவர்களும் ஜோதியில் கலந்தனர். அப்படி நந்தி ஆர்ப்பரித்து துரத்திய தலங்களில் ‘ஆர்ப்பாக்கம்’ என்ற திருத்தலமும் ஒன்றாகும். ரிஷபமான நந்தி துரத்தியதால், இத்தலத்திற்கு ‘ரிஷபம் துரத்தி’ என்ற பெயரும் உண்டு. இந்த ஊரில் உள்ளது கயிலாசநாதர் ஆலயம். இறைவன் கைலாசநாதர். இறைவி அகிலாண்டேஸ்வரி.

    சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது, இந்த ஆலயம். கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டியதும் மகாமண்டபம் உள்ளது. மகா மண்டபத்தின் தென் திசையில் இறைவி அகிலாண்டேஸ்வரியின் சன்னிதி காணப்படுகிறது. மகா மண்டபத்தில் பூலோகநாதர், சிவலோகநாதர், சம்பந்தர், சுந்தரர் திருமேனிகள் உள்ளன.

    அர்த்தமண்டபம் நுழைவு வாசலில் விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

    கருவறையில் இறைவன் கயிலாசநாதர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். தேவக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பிரம்மா ஆகியோரும், திருச்சுற்றில் சண்டிகேஸ்வரரும், பைரவரும் வீற்றிருந்து அருள்கிறார்கள். இந்த ஆலயத்தில் சித்திரா பவுர்ணமி அன்று, சுமார் 500 பேர் இந்த ஆலயத்திற்கு அலகு காவடி சுமந்து வந்து நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். அன்று அன்னதானமும் நடைபெறும். ஆலயத்தின் தல விருட்சம் வேம்பு ஆகும். இங்கு பிரதோஷம் வெகு சிறப்பாக நடைபெறும். கார்த்திகை மாத கார்த்திகைகளில் சொக்கபனை தீபம் ஏற்றப்படுகிறது. எமபயம் நீக்கும் தலமாக இத்தலம் விளங்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர். இந்த ஆலயம தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை, பக்தா்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் இருந்து 4 கிலோமீட்டா் தொலைவில் கொப்பியம் சாலையில் உள்ளது ஆர்ப்பாக்கம் ஆலயம்.

    ஜெயவண்ணன்
    கடம்பதுறை, தட்சிணாகாசி, குழித்தண்டலை என்று பல்வேறு பெயர்களில் இந்த பெயர் அழைக்கப்படுகிறது. இங்குள்ள கடம்பவன நாதர் ஆலயம் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 65-வது திருத்தலம் ஆகும்.
    மலைக்கோட்டை மாநகர் திருச்சிராப்பள்ளிக்கு வடமேற்கே 33 கிலோ மீட்டர் தொலைவில் கரூர் நெடுஞ்சாலையில் உள்ள காவிரி பாயும் வளமான நகரம் குளித்தலை. கடம்பதுறை, தட்சிணாகாசி, குழித்தண்டலை என்று பல்வேறு பெயர்களில் இந்த பெயர் அழைக்கப்படுகிறது. இங்குள்ள கடம்பவன நாதர் ஆலயம் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 65-வது திருத்தலம் ஆகும்.

    ‘துறை’ என்றால் ‘ஆற்றின் கரையோரம் அமைந்த ஊர்’ என்று பொருள்படும். எனவே கடம்ப மரங்கள் நிறைந்த காவிரிக்கரை ஊர் என்பதால் ‘கடம்பந்துறை’ என்பது பொருந்தமேயாகும். பெயருக்கு ஏற்ப திருக்கோவிலின் வெளிச்சுற்றில் உள்ள நந்தவனம் முழுவதும் கடம்ப மரங்கள் நின்று அசைத்தாடுகின்றன. இத்தல கடம்பவன நாதருக்கு கடம்பமரம் தலவிருட்சமாக இருப்பதில் ஆச்சரியமில்லை.

    “முற்றிலா முலையாள் இவளாகிலும்
    அற்றந்தீர்க்கும் அறிவில ளாகிலும்
    கற்றைச் செஞ்சடை யான்கடம்பந் துறைப்
    பெற்றம் ஊர்தியென்றால் எங்கள்
    பேதையே”

    என்பது அப்பர் பெருமானின் முதல் தேவாரப் பதிகமாகும். அவர் பத்துப் பாக்களால் இத்திருத்தலத்தைப் பாடிப் பரவியுள்ளார்.

    வடக்கு நோக்கியுள்ள ஐந்நிலை ராஜகோபுரத்தைத் தரிசித்து விட்டு உள்ளே நுழைந்தால், நந்தி தேவர் அமர்ந்திருக்க கருவறையின் உள் சிறிய சிவலிங்கத் திருமேனியுடன் காட்சி தருகிறார் கடம்பவனநாதர். இவர் வடக்கு திசை நோக்கி வீற்றிருப்பது பெருஞ்சிறப்பாகச் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சிவாலயங்களில் சென்னை கோயம்பேடு குறுங்காலீசுவரரும், குளித்தலை கடம்பவனநாதரும் மட்டும்தான் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளனர்.

    மூலவருக்குப் பின்புறம் கருவறையில் சப்த கன்னியர்கள் வீற்றிருப்பது எங்குமில்லாதச் சிறப்பாகும்.

    இதுபற்றி தல வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது. தூம்ரலோசனன் என்ற அரக்கனை அழிக்க அம்பிகை துர்க்கை வடிவெடுத்துப் போரிடச் சென்றாள். அவளால் அரக்கனின் அட்டகாசத்தை அடக்க முடியாமல் போக, சப்த கன்னியரை துணைக்கு அழைத்துக் கொண்டு போரிட்டாள். அதன்பின் வெற்றி கிடைத்தது. அசுரனை அழித்த தோஷம் நீங்க இத்தல இறைவனை தினமும் பூசிப்பதாக ஐதீகம். எனவே இத்திருக் கோவிலில் துர்க்கை அம்மன் திருமேனி இல்லை.

    சப்தகன்னியருள் ஒருவரான சாமுண்டியே துர்க்கையாக இருப்பதாகவும், அவருக்கே ராகுகால பூஜை நடைபெறுவதாகவும் கூறுகின்றனர். சுவாமி வடக்கு நோக்கி இருப்பதால் எதிரே தெற்கு நோக்கியபடி ஆடவல்லான் நடராஜர் இருக்கிறார். அவரது காலடியில் முயலகன் இல்லை.

    பொதுவாக ஒரு ஆலயத்தை பிரகார வலம் வரும்போது, கருவறை கோஷ்டத்தின் பின்புறம் லிங்கோத்பவரோ, மகாவிஷ்ணுவோ இருப்பார்கள். ஆனால் இங்கே தட்சிணாமூர்த்தி இருக்கிறார். கிழக்கு நோக்கியபடி விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், அவர் எதிரே லிங்கோத்பவர் காட்சி தருகிறார்கள்.

    கிழக்கு நோக்கிய தனிச்சன்னிதியில் அம்பிகை ‘முற்றிலா முலை அம்மை’ என்ற பெயரில் அருளாட்சி தருகிறார். அப்பர் முதல் பதிகத்தில் முதல் வரியிலேயே இந்த அன்னையைப் பற்றி குறிப்பிடுகிறார்.

    அறுபத்து மூவர் மூர்த்தங்களும், நவக்கிரகங்களும் திருக்கோவில் சுற்றில் காணப்படுகின்றன.

    கடம்பவன நாதரை சப்தகன்னியர் மட்டுமில்லாது அகத்தியரும், கண்வ முனிவரும் வழிபட்டுள்ளனர். முருகப்பெருமான் பூஜித்த தலம் என்பதால் ‘கந்தபுரம்’ என்றும், அசுரனிடம் இருந்து திருமால் வேதங்களை மீட்க இத்தல இறைவனை வழிபட்டதால் ‘சதுர்வேதபுரம்’ என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

    “காமன் காய்ந்த பிரான் கடம்பந்துறை நாமம் ஏந்த தீவினை நாசமே” -என்ற அப்பரின் வாக்குப் புனிதமாக நம் தீவினைகள் தீர்க்கும் கடம்பந்துறை திருக்கோவிலை ஒரு முறை வலம் வரலாமே.

    டாக்டர் ச.தமிழரசன்
    சென்னையில் 50-க்கும் மேற்பட்ட அம்மன் திருத்தலங்களில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான பழவந்தாங்கல் வேம்புலி அம்மன் ஆலயம் சற்று வித்தியாசமானது.
    ஒவ்வொரு அம்மன் கோவிலுக்கும் ஏதாவது ஒரு வரலாற்று பின்னணி இருக்கும். சென்னையில் 50-க்கும் மேற்பட்ட அம்மன் திருத்தலங்கள் உள்ளன. அவற்றில் பழவந்தாங்கல் வேம்புலி அம்மன் ஆலயம் சற்று வித்தியாசமானது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த ஆலயம் இருக்கிறது. ஆனால் சுமார் 377 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த இடத்தில் வேம்புலி அம்மன் இருப்பது ஊர் மக்களுக்கு தெரிய வந்தது.

    அந்த காலகட்டத்தில் பழவந்தாங்கல் மிகவும் குக்கிராமமாக இருந்தது. இப்போது இருக்கும் ரெயில், சாலை வழித்தடங்கள் எதுவுமே இல்லை. அந்த கிராமத்தை இணைக்க ஒரு வழி பாதையே இருந்தது. அந்த கிராமத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும் விவசாயிகள்.

    அவர்கள் விவசாயம் செய்வதற்கு ஏற்ப பழவந்தாங்கல் சுற்றுப்புற பகுதிகள் அனைத்தும் வயல்களாக இருந்தன. ஏரி பாசனத்தின் மூலம் விவசாய சாகுபடியை அந்த கிராம மக்கள் செய்து வந்தனர். அந்த விவசாய நிலங்களுக்கு இடையே இருந்த ஒரு வேப்பமரத்து அடியில்தான் வேம்புலி அம்மன் குடியிருந்தாள். ஆனால் அங்கு அம்மன் இருப்பது அந்த ஊர் மக்களுக்கு தெரியாமலேயே இருந்தது.

    வேம்புலி அம்மன் தன்னை ஒரு காலக்கட்டத்தில் வெளிப்படுத்தி கொள்ள முடிவு செய்தாள். அதற்காக அவள் சில அற்புதங்களை நிகழ்த்தினாள். விவசாய வேலைக்கு வரும் ஆண்களும், பெண்களும் மதியம் உணவு அருந்திவிட்டு அந்த வேப்ப மரத்தடியில் சற்று நேரம் ஓய்வெடுப்பது வழக்கமாகும்.

    ஒரு தடவை அப்படி விவசாயிகள் அந்த மரத்தடியில் ஓய்வெடுத்து கொண்டிருந்தனர். அன்றைய தினம் அவர்களுக்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது. சில்லென்று குளிர்ந்த காற்று வீசியது போல் அவர்களது உடல் களைப்பு நீங்கியது. அதோடு மனமும் மிகவும் லேசானது போல இருந்தது.

    வேப்பமரத்தடியில் படுத்து தூங்கிய விவசாயிகளுக்கு மனம் புத்துணர்ச்சி பெற்றது போல மாறியது. குறிப்பாக மனதில் இருந்த கவலைகள் அனைத்தும் நீங்கி அமைதியான ஒரு உணர்வு ஏற்பட்டது. இது அந்த பகுதி விவசாயிகளுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

    நாளடைவில் அந்த வேப்ப மரத்தடியில் அமர்ந்து தங்களது குறைகளை வாய்விட்டு சொன்னால் அதை உடனுக்குடன் தீரும் அதிசயத்தை அந்த கிராமத்து மக்கள் கண்டனர். அவர்களுக்கு இந்த அனுபவங்கள் ஆச்சரியமாக இருந்தன. எந்த பிரச்சினையாக இருந்தாலும் அந்த வேப்பமரத்தடியில் இருந்துவிட்டு வந்தால் போதும் சரியாகிவிடும் என்று மக்கள் மனப்பூர்வமாக நம்பினார்கள்.

    அந்த சமயத்தில் வேம்புலி அம்மன் ஒரு பக்தை மூலம் தன்னை வெளிப்படுத்தினாள். அந்த பக்தை சாமி ஆடி அருள் வாக்கு கூறினாள். சாமி ஆடிய அந்த பெண்ணிடம் அந்த ஊர் மக்கள் நீ யார்? என்ன வேண்டும் என்று கேட்டனர். உடனே அந்த பெண், ‘‘நான் வேம்புலி அம்மன்.... நீண்ட நாட்களாக இந்த வேப்ப மரத்தடியில்தான் இருக்கிறேன். உங்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியது நான் தான். எனக்கு இந்த வேப்ப மரத்தடியில் ஒரு கோவில் கட்டி வழிபடுங்கள். என்னை நீங்கள் நம்பி ஆலயம் அமைத்தால் உங்கள் குலத்தை நான் காப்பாற்றுவேன்’’ என்று தெரிவித்தாள்.

    இதையடுத்து அந்த பகுதி மக்கள் தங்கள் ஊருக்கு அம்மன் வந்துவிட்ட மகிழ்ச்சியில் வேம்புலி அம்மனுக்கு கோவில் கட்ட முடிவு செய்தனர். அதன்படி வேப்ப மரத்துக்கு அருகில் வேம்புலி அம்மனுக்கு ஆலயம் கட்டப்பட்டுள்ளது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மற்ற கடவுள் சன்னதிகளும் அங்கு கட்டப்பட்டன.
    விநாயகர், முருகன் இருவரும் அம்மன் கருவறைக்கு முன்பு இருபுறமும் தனித்தனி சன்னதிகளில் அழகாக எழுந்தருளி உள்ளனர். காவல் தெய்வமான காத்தவராயனுக்கு தனி சன்னதி உள்ளது. அங்குள்ள மரத்தடிகளில் நாகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

    வேம்புலி அம்மன் கோவிலுக்கு அருகில் சப்த கன்னியர்களுக்கு தனியாக ஒரு கோவில் இருக்கிறது. இங்குள்ள ஏழு கன்னியர் சிலைகளும் அற்புதமான வடிவமைப்பில் உள்ளன. சென்னையில் உள்ள சக்தி தலங்களில் வேறு எங்குமே இப்படி கன்னியர் சிலைகளை பார்க்க இயலாது.

    ஆலயம் மிக சிறியதாக இருந்தாலும் அதை சுற்றி மிக பிரமாண்டமான இட வசதிகள் இருக்கிறது. இதனால் இந்த ஆலயத்திற்குள் அனைத்து வகை திருவிழாக்களையும் மிக அருமையாக நடத்துகிறார்கள். குறிப்பாக ஆடி மாத திருவிழா இந்த ஆலயத்தில் மிக மிக கோலாகலமாக நடத்தப்படுகிறது.
    ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் லட்சக்கணக்கான மக்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

    ஆதிதேவதையாய் காட்சி தந்து கேட்டதை கேட்டவருக்கு வழங்கி அருளாட்சி செய்து வரும் வேம்புலி அம்மன் லட்சக்கணக்கான குடும்பத்தினருக்கு குலத்தெய்வமாக திகழ்கிறாள். பழவந்தாங்கல் பகுதி விவசாய பூமியில் இருந்து மெல்ல மெல்ல நகர் பகுதியாக மாறிவிட்ட போதிலும் வேம்புலி அம்மன் ஆலயத்தின் பழமை சிறப்பு எந்த வகையிலும் மாறவில்லை. அதனால்தான் பழவந்தாங்கல் பகுதிக்கு புதிதாக வந்து குடியேறியவர்களும் அந்த அம்மனை தங்கள் குலத்தெய்வமாக நினைத்து வணங்கி வருகிறார்கள். ஆடி மாதம் அந்த ஆலயத்தில் திரளும் லட்சக்கணக்கான மக்களே இதற்கு சாட்சி.

    சிவப்பு வண்ண சேலை கட்டிய வேம்புலி அன்னையின் சுதை சிற்பம் நம்மை உள்ள முருக வைக்கிறது. இடது காலை மடக்கி, வலது காலை அரக்கனின் தலை மீது வைத்தபடி அமர்ந்திருக்கும் அன்னைக்கு நான்கு கரங்கள்.

    வலது கரங்களில் உடுக்கையும், கத்தியும் இடது கரங்களில் சூலமும், கபாலமும் ஏந்தி காட்சி தருகிறாள். உற்று கவனிக்கும்போது, தாய்மையின் குழைவாய் சிரிக்கும் அன்னையின் இதழோரத்தில் கோரைப் பற்களைக் காண முடியும். ஆனால், அவள் மிகவும்குளுமையானவள். அருகே நின்று அவளோடு பேசி எனக்குத் தா என்று வேண்டியதை கேட்டு அடம்பிடிக்கலாம். கேட்டதில் நியாயமிருப்பின் உடனே தருவாள்.

    செல்வது எப்படி?

    எழும்பூர்-தாம்பரம் ரெயில் மார்க்கத்தில் பழவந்தாங்கல் உள்ளது. ரெயில் நிலையத்தில் இருந்து 5 நிமிடம் நடந்தால் கோவிலை அடையலாம். ஆகம விதிமுறைகளின்படி பூஜைகள் நடக்கும் இந்த கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி பூஜை விசேஷமானது.

    திருச்செந்தூரில் கடலில் நின்றும் போரிட்ட முருகப்பெருமான், அசுரர்களின் ஆணவத்தை ஆகாயத்தில் நின்று அடக்கி, ஒடுக்கிய இடமே திருப்போரூர் திருத்தலம் ஆகும்.
    முருகப்பெருமான், அசுரர்களுடன் மூன்று விதமாக போர் செய்தார். நிலம், கடல், ஆகாயம் ஆகிய மூன்று பகுதிகளில் அவர், சூரபதுமர்களை வெற்றிகொண்டார். திருப்பரங்குன்றத்தில் நிலத்தில் நின்றும், திருச்செந்தூரில் கடலில் நின்றும் போரிட்ட முருகப்பெருமான், அசுரர்களின் ஆணவத்தை ஆகாயத்தில் நின்று அடக்கி, ஒடுக்கிய இடமே திருப்போரூர் திருத்தலம் ஆகும்.

    முருகப்பெருமான் போரிட்டபோது, அசுரர்கள் தங்களின் மாய வித்தைகள் மூலம் மறைந்திருந்து போர்புரிந்தனர். இதனை தனது ஞான திருஷ்டியாலும், பைரவரின் துணையோடும் முருகப்பெருமான் கண்டறிந்தார். மறைந்திருந்த அசுரர்கள், அவரது கண்களில் அகப்பட்ட இடமே இன்னும், ‘கண்ணகப்பட்டு’ என்ற ஊராக, திருப்போரூர் அருகே உள்ளது. இந்த ஊரில்தான் திருப்போரூர் கந்தசுவாமி ஆலயத்தை, மதுரை மீனாட்சி அம்மன் திருவருளால் நிர்மாணித்த சிதம்பர சுவாமிகளின் திருமடம் இருக்கிறது.

    மதுரையில் சங்கப்புலவர் மரபில் அவதரித்தவர், சிதம்பர சுவாமிகள். இவர் மதுரை மீனாட்சி- சொக்கநாதரை அனுதினமும் தியானித்து வந்தார். மீனாட்சி அம்மனின் மீது கலிவெண்பாவும் பாடியுள்ளார். ஒருமுறை சிதம்பர சுவாமிகள் தியானத்தில் இருந்தபோது, அழகிய மயிலொன்று தோகை விரித்து ஆடுவதைக் கண்டு மகிழ்ந்தார். கூடவே மீனாட்சி அம்மன் தோன்றி, “மதுரைக்கு வடக்கே, காஞ்சிக்கு கிழக்கே வங்கக் கடலோரம் ‘யுத்தபுரி’ என்னும் தலம் உள்ளது. அங்கே குமரனின் திருவுருவம் பனைமரக் காட்டிற்குள் புதையுண்டு கிடக்கிறது. அதைக் கண்டெடுத்து, அழகிய திருக்கோவில் நிர்மாணித்து பிரதிஷ்டை செய்து வழிபடு. அந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் முன்ஜென்ம வினைகளும்,தோஷங்களும் அகன்று சகல நன்மைகளும் கிடைக்கும்” என்று அருளி மறைந்தார்.

    மதுரையில் இருந்து மீனாட்சி அம்மன் காட்டிய திசையில் பயணித்த சிதம்பர சுவாமிகள், இறுதியில் யுத்தபுரி என்னும் திருப்போரூரை அடைந்தார். அப்போது அங்கு ஒரு வேம்படி விநாயகர் ஆலயம் மட்டுமே இருந்தது. மற்றப் பகுதிகள் பனங்காடாக காணப்பட்டது. அந்தப் பகுதியில் முருகப்பெருமான் திருவுருவத்தை தேடித்திரிந்தார். இறுதியில் ஒரு பெண் பனை மரத்தின் அடியில், சுயம்பு மூர்த்தியாக கந்தப்பெருமானைக் கண்டார். அந்த சுயம்பு முருகப்பெருமானை விநாயகர் கோவிலில் வைத்து பூஜைகள் செய்து வந்தார்.

    ஒரு நாள் அந்த சுயம்பு வடிவ கந்தப்பெருமானின் உருவில் இருந்து முருகப்பெருமான் தோன்றி, சிதம்பர சுவாமிகளின் நெற்றியில் திருநீறு அணிவித்து ‘சிவாயநம’ ஓதி மறைந்தார். அப்போது சிதம்பர சுவாமிகளுக்கு ஒரு கோவிலின் தோற்றமும், அதன் ஒவ்வொரு அங்கங்களும் துல்லியமாக மனத்திரையில் பதிந்தது. இது இறைவனின் திருவருள் என்பதை உணர்ந்தவர், மனதில் தோன்றிய கோவில் தோற்றத்தையே ஆலயமாக எழுப்பும் விதத்தில் திருப்பணி ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.

    இந்தப் பகுதியை ஆண்ட ஆற்காடு நவாப் மன்னனின் மனைவி, தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர்கள் சிதம்பர சுவாமிகளின் தெய்வீகச் சக்தியை உணர்ந்து இங்கு வந்தபோது, சிதம்பர சுவாமிகள் நவாப் மனைவிக்கு திருநீறு பூச, அவரது வயிற்று வலி நீங்கியது. மகிழ்ச்சி அடைந்த நவாப், திருப்போரூரில் சிதம்பர சுவாமிகள் எழுப்பும் முருகன் கோவிலுக்காக 650 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். கோவில் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று அழகிய திருக்கோவில் எழுந்தது. அதுவே இன்றைய திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவில் ஆகும்.

    ஆலயத்தின் தெற்கே அமைந்துள்ள திருக்குளமான ‘வள்ளையார் ஓடை’ எனும் சரவணப் பொய்கையில் நீராடி, கிழக்குப் பார்த்த ராஜகோபுரத்தை வணங்கி ஆலயத்திற்குள் செல்ல வேண்டும். கருவறையில் முருகப்பெருமான் வள்ளி - தெய்வானையுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கீழே ஒரு சிறு பீடத்தில் முருகப்பெருமான் ஜெபமாலை, கமண்டலம், அபய வரத திருக்கரங்களுடன் பிரம்ம சாஸ்தா வடிவில், வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கிறார்.

    மூலவர் சுயம்பு என்பதால் இந்த சிறிய மூர்த்தியை சிதம்பர சுவாமிகள், அபிஷேக வழிபாட்டிற்காக அமைத்துள்ளார். கருவறையில் உள்ள மூலவருக்கு புனுகுச் சட்டம் சாத்தி, கவசம், திருவாபரணம் முதலியன அணிவிக்கிறார்கள். எதிரில் யானை வாகனமும், பலிபீடமும் உள்ளன. கணபதி, தண்டாயுதபாணி, பிரம்ம சாஸ்தா, துர்க்கை, அகத்தியர், நாகராஜா, வீரபாகு, வீரபத்திரர் சன்னிதிகளும் ஆலய உட்பிரகாரத்தில் காணப்படுகின்றன. கருவறை பின்புறம் பஞ்சலோகத்தில் அமைந்த விநாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், பிரம்மா, தேவேந்திரன், நந்தி, த்வனி சண்டேசர், மாத்ரு சண்டேசர், அஸ்திரதேவர், உபதேச மூர்த்தி சன்னிதிகளும் அமைந்துள்ளன.

    உபதேச மூர்த்தி


    சிவபெருமானது மடியில் இருந்து அவரது திருமுகத்தைப் பார்த்தபடி முருகப்பெருமான் அமர்ந்திருக்க, சிவபெருமானோ தன் குழந்தையிடம் பிரணவப் பொருளை உபதேசம் பெறும் அதி அற்புதத் திருவடிவம் இங்கு இருக்கிறது. இந்த உபதேசமூர்த்திக்கு மரிக்கொழுந்து சாத்தி நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். இங்கு நடக்கும் மாசி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் விழாவில், உபதேச மூர்த்தியாய் உள்ள உற்சவர் வெளியே கொண்டு வரப்படுவார். அவரை பதினாறு கால் மண்டபத்தில் வைக்கப்பட்டு, முருகப்பெருமான் சுவாமிமலையில் நிகழ்த்திய அப்பனுக்கு பாடம் சொன்ன நிகழ்வு இங்கும் நடத்தப்படும். பின்னர் சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத, பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் கூறி மீண்டும் படைப்புத் தொழில் பிரம்மாவிடம் ஒப்படைக்கப்படும் நிகழ்வும் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.

    சக்தி வாய்ந்த ஸ்ரீசக்கரம்

    ஆலய உட்பிரகாரத்தின் வடகிழக்கில் சிதம்பர சுவாமிகள் ஸ்தாபித்த யந்திர ஸ்தாபனமாகிய ஸ்ரீசக்கரம் உள்ளது. இதில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகர், சிவன், உமையவள், சண்டேசர், அஷ்டதிக் பாலகர், பைரவர்களுக்கு உரிய மந்திர எழுத்துகள் பொறிக்கப்பட்டு உள்ளன. கூர்மம், அஷ்டநாகம், அஷ்டகஜங்கள், கணங்கள் ஆகியவை கொண்ட பீடத்தில் இச்சக்கரம் அமைந்துள்ளது. தினமும் இதற்கு பூஜைகள் நடைபெற்றாலும், கந்தசஷ்டி ஆறு நாட்களிலும் விசேஷ அபிஷேகமும், யந்திர மாலா என்ற சிறப்பு பூஜையும் செய்யப்படுகின்றன. இந்தச்சக்கர ஸ்தாபனத்தை வாசனை மலர்கள் தூவி, நெய் தீபம் ஏற்றி, தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகள் வழிபட்டு வந்தால் பதினாறு வகைப்பேறுகளும் கிடைக்கும்.

    அமைவிடம்

    மாமல்லபுரத்தில் இருந்து 15 கி.மீ. தூரத்திலும், திருக்கழுக்குன்றத்தில் இருந்து 21 கி.மீ. தொலைவிலும், சென்னை கேளம்பாக்கத்தில் இருந்து 8 கி.மீ. தூரத்திலும் திருப்போரூர் திருத்தலம் அமைந்துள்ளது.

    சிவ.அ.விஜய் பெரியசுவாமி
    ×