search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேம்புலி அம்மன் கோவில்
    X
    வேம்புலி அம்மன் கோவில்

    500 ஆண்டுகள் பழமையான வேம்புலி அம்மன் கோவில்

    சென்னையில் 50-க்கும் மேற்பட்ட அம்மன் திருத்தலங்களில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான பழவந்தாங்கல் வேம்புலி அம்மன் ஆலயம் சற்று வித்தியாசமானது.
    ஒவ்வொரு அம்மன் கோவிலுக்கும் ஏதாவது ஒரு வரலாற்று பின்னணி இருக்கும். சென்னையில் 50-க்கும் மேற்பட்ட அம்மன் திருத்தலங்கள் உள்ளன. அவற்றில் பழவந்தாங்கல் வேம்புலி அம்மன் ஆலயம் சற்று வித்தியாசமானது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த ஆலயம் இருக்கிறது. ஆனால் சுமார் 377 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த இடத்தில் வேம்புலி அம்மன் இருப்பது ஊர் மக்களுக்கு தெரிய வந்தது.

    அந்த காலகட்டத்தில் பழவந்தாங்கல் மிகவும் குக்கிராமமாக இருந்தது. இப்போது இருக்கும் ரெயில், சாலை வழித்தடங்கள் எதுவுமே இல்லை. அந்த கிராமத்தை இணைக்க ஒரு வழி பாதையே இருந்தது. அந்த கிராமத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும் விவசாயிகள்.

    அவர்கள் விவசாயம் செய்வதற்கு ஏற்ப பழவந்தாங்கல் சுற்றுப்புற பகுதிகள் அனைத்தும் வயல்களாக இருந்தன. ஏரி பாசனத்தின் மூலம் விவசாய சாகுபடியை அந்த கிராம மக்கள் செய்து வந்தனர். அந்த விவசாய நிலங்களுக்கு இடையே இருந்த ஒரு வேப்பமரத்து அடியில்தான் வேம்புலி அம்மன் குடியிருந்தாள். ஆனால் அங்கு அம்மன் இருப்பது அந்த ஊர் மக்களுக்கு தெரியாமலேயே இருந்தது.

    வேம்புலி அம்மன் தன்னை ஒரு காலக்கட்டத்தில் வெளிப்படுத்தி கொள்ள முடிவு செய்தாள். அதற்காக அவள் சில அற்புதங்களை நிகழ்த்தினாள். விவசாய வேலைக்கு வரும் ஆண்களும், பெண்களும் மதியம் உணவு அருந்திவிட்டு அந்த வேப்ப மரத்தடியில் சற்று நேரம் ஓய்வெடுப்பது வழக்கமாகும்.

    ஒரு தடவை அப்படி விவசாயிகள் அந்த மரத்தடியில் ஓய்வெடுத்து கொண்டிருந்தனர். அன்றைய தினம் அவர்களுக்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது. சில்லென்று குளிர்ந்த காற்று வீசியது போல் அவர்களது உடல் களைப்பு நீங்கியது. அதோடு மனமும் மிகவும் லேசானது போல இருந்தது.

    வேப்பமரத்தடியில் படுத்து தூங்கிய விவசாயிகளுக்கு மனம் புத்துணர்ச்சி பெற்றது போல மாறியது. குறிப்பாக மனதில் இருந்த கவலைகள் அனைத்தும் நீங்கி அமைதியான ஒரு உணர்வு ஏற்பட்டது. இது அந்த பகுதி விவசாயிகளுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

    நாளடைவில் அந்த வேப்ப மரத்தடியில் அமர்ந்து தங்களது குறைகளை வாய்விட்டு சொன்னால் அதை உடனுக்குடன் தீரும் அதிசயத்தை அந்த கிராமத்து மக்கள் கண்டனர். அவர்களுக்கு இந்த அனுபவங்கள் ஆச்சரியமாக இருந்தன. எந்த பிரச்சினையாக இருந்தாலும் அந்த வேப்பமரத்தடியில் இருந்துவிட்டு வந்தால் போதும் சரியாகிவிடும் என்று மக்கள் மனப்பூர்வமாக நம்பினார்கள்.

    அந்த சமயத்தில் வேம்புலி அம்மன் ஒரு பக்தை மூலம் தன்னை வெளிப்படுத்தினாள். அந்த பக்தை சாமி ஆடி அருள் வாக்கு கூறினாள். சாமி ஆடிய அந்த பெண்ணிடம் அந்த ஊர் மக்கள் நீ யார்? என்ன வேண்டும் என்று கேட்டனர். உடனே அந்த பெண், ‘‘நான் வேம்புலி அம்மன்.... நீண்ட நாட்களாக இந்த வேப்ப மரத்தடியில்தான் இருக்கிறேன். உங்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியது நான் தான். எனக்கு இந்த வேப்ப மரத்தடியில் ஒரு கோவில் கட்டி வழிபடுங்கள். என்னை நீங்கள் நம்பி ஆலயம் அமைத்தால் உங்கள் குலத்தை நான் காப்பாற்றுவேன்’’ என்று தெரிவித்தாள்.

    இதையடுத்து அந்த பகுதி மக்கள் தங்கள் ஊருக்கு அம்மன் வந்துவிட்ட மகிழ்ச்சியில் வேம்புலி அம்மனுக்கு கோவில் கட்ட முடிவு செய்தனர். அதன்படி வேப்ப மரத்துக்கு அருகில் வேம்புலி அம்மனுக்கு ஆலயம் கட்டப்பட்டுள்ளது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மற்ற கடவுள் சன்னதிகளும் அங்கு கட்டப்பட்டன.
    விநாயகர், முருகன் இருவரும் அம்மன் கருவறைக்கு முன்பு இருபுறமும் தனித்தனி சன்னதிகளில் அழகாக எழுந்தருளி உள்ளனர். காவல் தெய்வமான காத்தவராயனுக்கு தனி சன்னதி உள்ளது. அங்குள்ள மரத்தடிகளில் நாகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

    வேம்புலி அம்மன் கோவிலுக்கு அருகில் சப்த கன்னியர்களுக்கு தனியாக ஒரு கோவில் இருக்கிறது. இங்குள்ள ஏழு கன்னியர் சிலைகளும் அற்புதமான வடிவமைப்பில் உள்ளன. சென்னையில் உள்ள சக்தி தலங்களில் வேறு எங்குமே இப்படி கன்னியர் சிலைகளை பார்க்க இயலாது.

    ஆலயம் மிக சிறியதாக இருந்தாலும் அதை சுற்றி மிக பிரமாண்டமான இட வசதிகள் இருக்கிறது. இதனால் இந்த ஆலயத்திற்குள் அனைத்து வகை திருவிழாக்களையும் மிக அருமையாக நடத்துகிறார்கள். குறிப்பாக ஆடி மாத திருவிழா இந்த ஆலயத்தில் மிக மிக கோலாகலமாக நடத்தப்படுகிறது.
    ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் லட்சக்கணக்கான மக்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

    ஆதிதேவதையாய் காட்சி தந்து கேட்டதை கேட்டவருக்கு வழங்கி அருளாட்சி செய்து வரும் வேம்புலி அம்மன் லட்சக்கணக்கான குடும்பத்தினருக்கு குலத்தெய்வமாக திகழ்கிறாள். பழவந்தாங்கல் பகுதி விவசாய பூமியில் இருந்து மெல்ல மெல்ல நகர் பகுதியாக மாறிவிட்ட போதிலும் வேம்புலி அம்மன் ஆலயத்தின் பழமை சிறப்பு எந்த வகையிலும் மாறவில்லை. அதனால்தான் பழவந்தாங்கல் பகுதிக்கு புதிதாக வந்து குடியேறியவர்களும் அந்த அம்மனை தங்கள் குலத்தெய்வமாக நினைத்து வணங்கி வருகிறார்கள். ஆடி மாதம் அந்த ஆலயத்தில் திரளும் லட்சக்கணக்கான மக்களே இதற்கு சாட்சி.

    சிவப்பு வண்ண சேலை கட்டிய வேம்புலி அன்னையின் சுதை சிற்பம் நம்மை உள்ள முருக வைக்கிறது. இடது காலை மடக்கி, வலது காலை அரக்கனின் தலை மீது வைத்தபடி அமர்ந்திருக்கும் அன்னைக்கு நான்கு கரங்கள்.

    வலது கரங்களில் உடுக்கையும், கத்தியும் இடது கரங்களில் சூலமும், கபாலமும் ஏந்தி காட்சி தருகிறாள். உற்று கவனிக்கும்போது, தாய்மையின் குழைவாய் சிரிக்கும் அன்னையின் இதழோரத்தில் கோரைப் பற்களைக் காண முடியும். ஆனால், அவள் மிகவும்குளுமையானவள். அருகே நின்று அவளோடு பேசி எனக்குத் தா என்று வேண்டியதை கேட்டு அடம்பிடிக்கலாம். கேட்டதில் நியாயமிருப்பின் உடனே தருவாள்.

    செல்வது எப்படி?

    எழும்பூர்-தாம்பரம் ரெயில் மார்க்கத்தில் பழவந்தாங்கல் உள்ளது. ரெயில் நிலையத்தில் இருந்து 5 நிமிடம் நடந்தால் கோவிலை அடையலாம். ஆகம விதிமுறைகளின்படி பூஜைகள் நடக்கும் இந்த கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி பூஜை விசேஷமானது.

    Next Story
    ×