search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    லட்சுமிநரசிம்மா், கோவில் தோற்றம்
    X
    லட்சுமிநரசிம்மா், கோவில் தோற்றம்

    அரசாளும் யோகம் தரும் புளியங்குடி லட்சுமி நரசிம்மர் கோவில்

    புதிதாக உருவெடுத்துள்ள தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது புளியங்குடி லட்சுமி நரசிம்மர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    நான்கு யுகங்களுள் முதலாவதான கிருத யுக காலத்தில், கிழக்குத் தொடர்ச்சி மலையில் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது. பக்தனுக்காக இந்த அவதாரம் நிகழ்ந்ததால், மகாவிஷ்ணு கருடன் மீதேறி வரவில்லை. வைகுண்டத்தில் இருந்து நேராகப் பூவுலகுக்கு வந்தார். இரணியனை அழித்து, தம் பக்தனான பிரகலாதனைக் காத்தார். அத்தோடு பிரகலாதனை ஆட்சி பீடத்தில் அமர்த்தி அருளாசி புரிந்து, விண்ணுலகம் சென்றார். இந்த பெரும் பணிகளை வெறும் இரண்டே நாழிகைக்குள் செவ்வனே செய்து முடித்தார், நரசிம்மர். இதனால் நரசிம்ம அவதாரம் ‘பூரண அவதாரம்’ என்றும், நரசிம்மர் ‘பெரிய பெருமாள்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

    இரணிய வதம் முடிந்தும், ஆவேசம் தணியாமல் இருந்தார் நரசிம்மர். இரணியனின் ரத்தம் பூமியில் சிந்தாதபடி வாயில்வைத்து உறிஞ்சியதால், உக்கிரத்துடன் இருந்த நரசிம்மரிடம் ரஜோ குணம் அதிகரித்தது. இதனால் கிழக்குத்தொடர்ச்சி மலை வழியாக மேற்குத்தொடர்ச்சி மலைக்கு வந்த நரசிம்மர், அங்கிருந்த வனத்தில் சிங்கமாகவே திரிந்தார். அப்போது தாகத்தில் இருந்த நரசிம்மர், அங்கிருந்த பழச்சாறு சுவை கொண்ட ‘நிட்சையப்ப நதி’யின் நீரைப் பருகி தாகம் தணிந்தார். அதேசமயம், தம்முடைய அவதார நோக்கம் பூரணமாகிவிட்டதை மறந்திருந்தார். இதனால் உலக இயக்கம் தடைப்பட்டது. தேவலோகம் களை இழந்தது. பூமியிலுள்ள உயிரினங்கள் அஞ்சி நடுங்கின. நரசிம்மரின் உக்கிர சொரூபத்தையும், ஆவேசத்தையும் பார்த்து அங்கிருந்த வனவிலங்குகள் அபயக்குரல் எழுப்பின.

    அதேசமயம் மகாவிஷ்ணு வைகுண்டத்தில் இல்லாததால் மகாலட்சுமி சோகத்தில் ஆழ்ந்தார். தன் வேதனையை சிவன், பிரம்மாவிடம் கூறினார். இந்நிலையில், பூமியில் இருந்து வெளிப்பட்ட அபயக்குரல் சிவன், மகாலட்சுமி, பிரம்மா ஆகியோரின் காதில் விழுந்தது. அவர்கள் மூவரும் அபயக்குரல் வந்த திசை நோக்கி புறப்பட்டனர். விண்ணிலிருந்து புறப்பட்ட அவ்வேளையில் மகாலட்சுமியின் நிழல், வனத்தில் இருந்த நரசிம்மரின் மீது படர்ந்தது.

    அக்கணமே நரசிம்மர் சாந்த சொரூபியாக மாறினார். தம்முடைய அவதார நோக்கம் முழுமையாக நிறைவேறிவிட்டதை உணர்ந்தார். தம்மீது படர்ந்த அந்நிழலுக்கு உயிர் கொடுத்து, மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்து மனநிறைவு கொண்டார். பின்னர் தம் இடது மடியில் லட்சுமியை அமர்த்தி அரவணைத்தபடி சிவன், பிரம்மாவுக்குத் தரிசனம் தந்தார். பின்பு அவ்விடத்திலேயே லட்சுமி நரசிம்மராகக் குடிகொண்டார். அப்போது பிரம்மா, சிவன், தேவாதி தேவர்கள் அனைவரும் பூமாரி பொழிந்து லட்சுமி நரசிம்மரை வாழ்த்தி வணங்கினர்.

    இந்தப் புராணப் பின்னணி கொண்ட ஷேத்திரம்தான் புளியங்குடி லட்சுமி நரசிம்மர் கோவில். புதிதாக உருவெடுத்துள்ள தென்காசி மாவட்டத்தில் இத்தலம் அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகிய நான்கு சிறப்பம்சங்களைக் கொண்டது இந்த ஆலயம். நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது அகோபிலம் என்றாலும், அது பூர்த்தியானது புளியங்குடியில்தான். எனவே ‘தட்சிண அகோபிலம்’ ஆக விளங்கும் இந்த ஷேத்திரம், நரசிம்மரின் பரிபூரண அனுக்கிரகத்தைத் தரும் என்பது ஐதீகம்.

    இந்த நரசிம்மர் கோவில் கிழக்கு நோக்கி உள்ளது தனிச்சிறப்பு. வழக்கமாக மேற்கு நோக்கி எழுந்தருளும் நரசிம்மர், இங்கு கிழக்கு நோக்கியுள்ளது அபூர்வ அமைப்பாகும். இடது மடியில் மகாலட்சுமித் தாயாரை அமர்த்தி, இடக்கரத்தால் அணைத்தபடி இருக்கிறார். தாயாரோ தம் வலக்கரத்தால் பெருமாளை நன்கு பற்றியபடி அருளாட்சி புரிந்துவருகிறார். சிங்கத் தோற்றம், யாழிமுகம் என அபூர்வத் திருமேனியுடன் சிவன், பிரம்மா ஆகியோருக்குத் தரிசனம் தந்த கோலத்தில் நரசிம்மர் இங்கு அருள்பாலிக்கிறார். ‘மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது’ என்பது போல, சுமார் ஓர் அடி உயர விக்கிரகத் திருமேனியில் அவதார நோக்கம் பூர்த்தியான பூரண மகிழ்ச்சியில் எழுந்தருளி இருக்கும் வரும் நரசிம்மர், புன்னகை தவழ, வரத ஹஸ்த நாயகனாக எழில்கோலம் பூண்டிருக்கிறார். இவரை தரிசித்த உடனேயே கவலைகள் பறந்தோடி மகிழ்ச்சி பிறந்துவிடுகிறது.

    இங்கு சங்கடஹர சதுர்த்தி, நரசிம்மப் பிரதோஷமாகக் கொண்டாடப்படுகிறது. பிரதோஷ காலமான மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் மூலவருக்கும், தலைவாசலில் (மகாமண்டபம்) உள்ள படிக்கும் (படிபூஜை) சிறப்பாக அபிஷேக, ஆராதனைகள் நடக்கின்றன. வாசல்படியில் வைத்து இரணியனை நரசிம்மர் சம்ஹாரம் செய்ததை நினைவுகூரும் விதமாக இந்தப் ‘படிபூஜை’ நடத்தப்படுகிறது. சிவப் பிரதோஷ காலத்தில் நந்தி பகவானின் இரு கொம்புகளுக்கிடையே ஈசனைக் காண்பது மரபு. அதுபோல் நரசிம்மப் பிரதோஷத்தன்று படியின்மேல் இறைவனைக் காண்பது மரபு. நரசிம்ம அவதார காலமான இரண்டு நாழிகை (சுமார் 48 நிமிடங்கள்) காலம், சந்தியா வேளையில் நரசிம்மரை இங்கு வழிபட்டால் விசேஷமான பலன்களைப் பெறலாம்.

    எதிரிகள் தொல்லையால் பாதிக்கப்படுபவர்கள், வயிறு தொடர்பான நோய்களால் அவதிப்படுபவர்கள், தொழில் மற்றும் வியாபாரத்தில் மீளமுடியாத கடன் தொல்லையால் நிம்மதியற்றவர்கள், கிரக தோஷங்களால் பாதிக்கப்படுபவர்கள், மனபயம் உள்ளவர் ஆகியோர் நரசிம்மப் பிரதோஷத்தன்று தரிசனம் செய்து சிறப்பான பலன்களைப் பெறலாம். நரசிம்மருடைய சினம் தணிந்த தலம் என்பதால், கோப குணமுள்ளவர்கள் இங்கு வழிபட்டு சாந்தமாகலாம்.

    சுவாதி நட்சத்திரம் அன்று இங்கு நரசிம்மரை வழிபடுவோருக்கு, கடன் தொல்லையில் இருந்து மீண்டு வருவதுடன் குபேர சம்பத்தும் கிடைக்கப்பெறும். சுவாதி நட்சத்திரம் அன்று இந்த லட்சுமி நரசிம்மரை, பிரகலாதனைப் போன்று ஆழ்ந்த நம்பிக்கையுடன் வழிபடுவோருக்கு பாவங்கள் அகன்று புண்ணியங்கள் சேரும். அத்துடன், தோஷங்கள் நீங்கி இப்பூவுலக ராஜ்ஜியப் பதவிகள் அனைத்தும் கிடைக்கும். அரசாளும் யோகமும் வந்துசேரும் என்பது நம்பிக்கை. இங்கு புதன்கிழமை சுக்ர ஓரையில் இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் நரசிம்மருக்கு அர்ச்சனை செய்யும் ஆண், பெண் திருமண காரியங்கள் வெற்றி பெறுகின்றன.

    நரசிம்மர், பானகப் பிரியர். எனவே வெல்லத்தினால் ஆன பானகம் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகித்தால் நினைத்த காரியங்கள் வெற்றியாகும். இங்கு பக்தர்களுக்கு தித்திப்பான தீர்த்தம் வழங்கப்படுகிறது. அவதாரம் பூர்த்தியான அதி உன்னதத் தலமான இங்கு நரசிம்மரை வழிபட்டால், அகோபிலத்தில் உள்ள நவ நரசிம்மர்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

    இந்த ஆலயத்தில் சித்ரா பவுர்ணமி, கிருஷ்ண ஜெயந்தி, உறியடித் திருவிழா, ராம நவமி, புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி, திருப்பாவை விழா, அனுமன் ஜெயந்தி, தைத் திருவிழா ஆகியவை முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகின்றன. இங்கு பாஞ்சராத்ர ஆகமப்படி தினமும் நான்கு கால பூஜை நடக்கிறது.

    இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    பெயர்க்காரணம்

    பாண்டிய மன்னர்கள் காலத்தில் ‘பாண்டிய சதுர்வேதி மங்கலம்’ என்றும், நாயக்க மன்னர்கள் காலத்தில் ‘தென்புதுவை’ என்றும் அழைக்கப்பட்ட இந்தப் பகுதி, பிரகலாதனின் பேரனான மகாபலிச் சக்கரவர்த்தி சேர நாட்டை ஆண்டுவந்தபோது, ‘கல்லக நாடு’ என்ற பெயரில் தற்போதைய கேரளாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. இதன்தொடர்ச்சியாக, பிரகலாதனின் வம்சாவளியினர் இங்குள்ள மலைப் பகுதிகளில் கோட்டை கட்டி ஆண்டு வந்துள்ளனர். சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பு, இங்குள்ள ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கோட்டைகள் அழிந்து விட்டதாகக் கருதப்படுகிறது. எனினும் பிரகலாதன் வம்சாவளியினர் இங்கேயே வாழ்ந்து வந்துள்ளனர். இதன்பொருட்டு இத்தலத்துக்கு உருவான ‘பிரகலாதன்குடி’ என்ற பெயரே, ‘புளியங்குடி’ எனத் திரிந்ததாக சொல்கிறார்கள். தற்போது இங்கு வசித்துவரும் மலைவாழ் மக்கள் பிரகலாதன் வம்சத்தினர் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

    அமைவிடம்

    தென்காசியில் இருந்து ராஜபாளையம் செல்லும் வழியில் 30 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து ராஜபாளையம் வழியாக தென்காசி செல்லும் பாதையில் 114 கிலோமீட்டா் தூரத்திலும், திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் பாதையில் 70 கிலோமீட்டர் தொலைவிலும் புளியங்குடி உள்ளது. புளியங்குடி பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றால் லட்சுமிநரசிம்மர் ஆலயத்தை அடையலாம்.

    கீழப்பாவூர் கி.ஸ்ரீமுருகன்.
    Next Story
    ×