search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோவில் தோற்றம், அங்காள பரமேஸ்வரி
    X
    கோவில் தோற்றம், அங்காள பரமேஸ்வரி

    சுமார் 300 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி ஆலயம்

    சுமார் 300 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி ஆலயம் குச்சிபாளையம் என்ற சிறிய கிராமத்தில் உள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    குச்சிபாளையம் என்ற சிறிய கிராமத்தில் உள்ளது, அங்காள பரமேஸ்வரி ஆலயம். சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், ஆரம்பத்தில் ஒரு கீற்று கொட்டகையாக இருந்தது. காலப்போக்கில் அந்த கீற்று கொட்டகை ஓட்டு குடிலாகவும், பின் கட்டிடமாகவும் உருமாறி இருக்கிறது. ஆலயத்தின் முன் பகுதியில் அழகிய மகாமண்டபம் கட்டப்பட்டு, கடந்த 2017-ம் ஆண்டு குடமுழுக்கு திருவிழா நடைபெற்றது. தற்போது ஆலயம் புத்தம் புது மெருகுடன் கண்கவர் வண்ணத்துடன் அழகாய் காட்சி தருகிறது.

    கால ஓட்டத்தில் ஆலயம்தான் உருமாறி இருக்கிறதே தவிர, ஆலயத்தில் அருள்பாலிக்கும் அன்னையின் அருளில் எந்த மாற்றமும் இல்லை. அன்றுபோல் இன்றும் குழந்தையின் நலம் காக்கும் அன்னையைப் போல, பக்தர்களின் நலன் காத்து வருகிறாள், அங்காள பரமேஸ்வரி அம்மன்.

    ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலய வளாகத்தினுள் நுழைந்ததும் வலதுபுறம் பாவாடை ராயனும், இடதுபுறம் பேச்சாயி அம்மனும் அருள்பாலிக்கின்றனர். அடுத்துள்ளது மகா மண்டபம். அர்த்த மண்டப நுழைவு வாசலின் இருபுறமும் துவார பாலகிகள் அருள்பாலிக்க, இடது புறம் விநாயகரும், வலதுபுறம் முருகனும் வீற்றிருக்கின்றனர்.

    கருவறையில் அன்னை அங்காள பரமேஸ்வரி, பீடத்தில் அமர்ந்த கோலத்தில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இளநகை தவழும் முகத்துடன் வீற்றிருக்கும் அன்னையை காண கண் கோடி வேண்டும் என்றால் அது மிகையாகாது.

    இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்ற நாளில், அன்னைக்கு லட்சார்ச்சனை செய்யப்படுகிறது. ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் பல நூறு பக்தர்கள் பால் காவடி, அலகு காவடி, கரகம், பால் குடம் சுமந்து அருகே உள்ள புனித நதியான காவிரியில் இருந்து புறப்பட்டு ஆலயம் வருவார்கள். அவர்கள் பக்திப் பெருக்குடன் வரும் காட்சி பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கும். ஊர் மக்கள் அவர்களுக்கு பாத நீராட்டி கற்பூர தீபம் காட்டி வழிபடுவர். ஆலயம் வந்ததும் அவர்கள் வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும் நிறைவுபெறும். அன்று இரவு அன்னை வீதியுலா வருவதுண்டு. இப்படி தங்கள் இல்லம் தேடி வரும் அன்னையை ஊர் மக்கள் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.

    சித்திரை மாத பவுர்ணமி அன்று அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்றும் அன்னை வீதியுலா வருவதுண்டு. தவிர அன்று கஞ்சி காய்ச்சி பக்தர்களுக்கும், ஊர் மக்களுக்கும் வழங்குவார்கள். ஆடி வெள்ளிக்கிழமைகள், தை வெள்ளிக்கிழமைகள், நவராத்திரி போன்ற நாட்களில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    இத்தல அன்னை அங்காள பரமேஸ்வரி பல குடும்பங்களுக்கு குலதெய்வமாய் விளங்குகிறாள். எனவே குல மக்கள் தங்கள் பிரார்த்தனைகள் மற்றும் நேர்த்திக் கடனை செலுத்த அடிக்கடி இங்கு வருவதுண்டு. அன்னையிடம் வேண்டிக் கொள்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது உறுதி என்கின்றனர், பக்தர்களும்.. பலன் பெற்றவர்களும்.

    இந்த ஆலயம் தினமும் காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரை, பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    ஊரின் நடுவே அமர்ந்து கிராம தேவதையாய் அருள்பாலிக்கும் அன்னை அங்காள பரமேஸ்வரி, ஊர் மக்களின் குடும்பத்தில் ஒருத்தியாய் திகழ்கிறாள் என்று பக்தர்கள் நம்புவது உண்மையே.

    அமைவிடம்

    நாகப்பட்டினம் மாவட்டம் திருநாங்கூர் அருகே உள்ளது குச்சிபாளையம் கிராமம். இங்கு தான் அங்காள பரமேஸ்வரி அன்னை அருள்கிறாள். சீர்காழி- காரைக்கால் பேருந்து பாதையில் உள்ள அண்ணன் பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் இந்த ஆலயம் உள்ளது. இத்தலம் செல்ல திருநாங்கூர், மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் இருந்து நகர பேருந்துகள் உள்ளன. ஆட்டோ வசதியும் உண்டு.

    மல்லிகா சுந்தர்

    Next Story
    ×