என் மலர்tooltip icon

    கோவில்கள்

    அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய ஒரு புனிதமான இடம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம். சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி; பரவச அனுபவம் தரும் ஆன்மிகத் தலம். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த சதுரகிரி சித்தர்களின் பூமியாக உள்ளது.

    தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு என்ற கிராமம் உள்ளது.இங்கிருந்து 15 கிலோ மீட்டர் பயணித்தால் தாணிப்பாறை என்ற மலையடிவாரப்பகுதி உள்ளது.இதுதான் சதுரகிரியின் நுழைவாசல்.இங்கிருந்து 5 மைல்கள் தூரம் அடர்ந்த காட்டுப்பாதையில்(சாலை வசதி கிடையாது.பாதை கரடு முரடானது)பயணித்தால் சதுரகிரியை அடையலாம்.

    சதுரகிரி உச்சிக்கு செல்ல மூன்று பாதைகள் இருந்தாலும் தாணிப்பாறை பாதையே பக்தர்களுக்கு உகந்தது. எனினும் இவ்வழியே பயணப்படுவோர் பருவகாலச் சூழ்நிலையை அறிந்து தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்வது நல்லது. மலைப்பாதையின் குறுக்கே சில ஆறுகளில் மழைக் காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். எனவே மிகவும் கவனமாக செல்ல வேண்டும். கோடை காலம் தவிர மற்ற சூழ்நிலைகளில் மலைப்பகுதியில் குடிநீருக்கு அதிகம் சிரமம் இருக்காது எனினும் குடிநீர் கொண்டு செல்வது நல்லது.

    நான்கு அல்லது ஐந்து மலைகளை கடந்தே சதுரகிரியை அடையமுடியும். எனவே பாதையில் ஏற்ற இறக்கம் இருக்கும். நாவல் மரம், பலா மரம்,நெல்லி மரம், ஒரு யானையே ஒளிந்துகொள்ளலாம் போன்ற உடல் பருத்த பெருமரங்கள், வகைவகையான மூலிகைச் செடிகொடிகள், சித்தர்கள் வசித்த குகைகள், ஆங்காங்கே சலசலத்து ஓடும் ஓடைகள் இன்னும் எத்தனையெத்தனையோ அற்புதங்கள் நிறைந்த இடம்.

    சிலிர்ப்பூட்டும் செங்குத்தான மலையில்,உச்சியில் கோயில் கொண்டிருக்கிறார் சுந்தர மகாலிங்க சுவாமி. ஒருமுறை தரிசித்தாலே நமது உள்மனத்தில் குடிகொண்டுவிடுகிறார். மகாலிங்கரைத் தரிசிக்க நடையாகத்தான் மலையேறிச் சென்றாக வேண்டும். வேறு வழியில்லை. காரோ, கட்டை வண்டியோ,அவ்வளவு ஏன், ஹெலிகாப்டரில்கூட சென்று இறங்க முடியாது.

    சித்தர்களின் தலைமைப்பீடம் சதுரகிரி என்கிறார்கள்.எண்ணற்ற சித்தர்கள் பலர் சதுரகிரி மலையில் கூடி ஆன்மீக விவாதங்கள் நடத்துவது உண்டாம்.இதற்கென அவர்கள் பயன்படுத்தும் குகைகள் பிரமிப்பை ஏற்படுத்தும் வண்ணம் காணப்படுகின்றன.சித்தர்கள் ஏற்படுத்திய தீர்த்தங்கள் இன்றைக்கும் இருக்கின்றன. சித்தர்கள் வசித்த குகைகளில் மனிதர்களால் செல்ல இன்றளவும் இயலாத ஒன்றாகவே உள்ளது.

    மனித நேயம் அறிந்த மனிதனே மகான்/சித்தன் ஆகிறான்.பின்னாளில் சிவம்/தெய்வமும் ஆகின்றான்.

    வான்மீகி, கோரக்கர், கமலமுனி, சட்டைமுனி, அகத்தியர், சுந்தரானந்தர், கருவூரார், அகப்பைச்சித்தர்,கொங்கணர், தன்வந்திரி, பாம்பாட்டிச்சித்தர், இராமதேவர், இடைக்காட்டுச்சித்தர், திருமூலர், போகர், அழுகுணிச்சித்தர், காலாங்கிநாதர், மச்சமுனி,ஆகியோர் பதிணென் சித்தர்கள் எனப்படுவர். 18 சித்தர்களும் சேர்ந்து ஒரே சந்நிதியில் காட்சி தருவது சந்தன மகாலிங்கம் கோயிலில் மட்டுமே.

    வருடத்துக்கு ஒருமுறை இந்த சித்தர்களுக்கு விஷேச பூசை நடைபெறும். சித்தர் சட்டநாதர் வாழ்ந்த குகையை இப்போதும் இங்கு காணலாம். சந்தன மகாலிங்கம் சந்நிதியில் இருந்து மிகஅருகில் அமைந்திருக்கிறது இந்த குகை. சதுரகிரியில் சந்தன மகாலிங்கம் சந்நிதியில் மகாசிவராத்திரியின் போது பக்தர்கள் தங்கள் கைகளாலேயே புஷ்பங்கள் சமர்பித்து சந்தன மகாலிங்கத்தை வழிபடலாம். மகாசிவராத்திரியின் போது இங்கு நான்கு கால பூஜைகள் நடைபெறும். ஒவ்வொரு காலம் முடிந்ததும் பக்தர்கள் வரிசையில் சென்று இறைவனை தரிசிக்கலாம். சந்தன மகாலிங்கம் கோயிலில் மட்டுமே அம்பாளுக்கு தனிசந்நிதி உண்டு.

    தன்னை தரிசிக்க வரும் எவரையும் எந்தவித சிரமத்திற்கும் உள்ளாக்குவதில்லை மகாலிங்க ஸ்வாமிகள். மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லும் போது வழி மாறி செல்லாமல் இருக்க பைரவர்கள்(நாய்கள்) பக்தர்களை பார்த்து வாலாட்டிவிட்டு "என் பின்னாலே வா." என்பது போல் வழிகாட்டிக்கொண்டே செல்லும். பக்தர்கள் சற்று ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்து உட்காரும் போது நாய்களும் ஒரி இடத்தில் உட்காருகின்றன. நாம் எந்திரித்து நடக்க ஆரம்பித்தவுடன் நாய்களும் நமக்கு வழிகாட்டியாக எந்திரித்து நடக்க ஆரம்பிக்கின்றன.

    வருடந்தோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் சிவராத்திரி தினத்தன்று இம்மலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அதிகமான மக்கள் மலையேறிச் சென்று வழிபட்டு வருகின்றனர்.

    அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய ஒரு புனிதமான இடம்.
    திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் இருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது, அன்னை சாரதாம்பாள் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ஸ்தல வரலாறு:

    திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் இருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது, அன்னை சாரதாம்பாள் ஆலயம். சிருங்கேரி சங்கரமடம் என்று வடிவமைக்கப்பட்ட அரைவட்ட முகப்பைக் கடந்ததும் இந்த ஆலயத்தின் முகப்பைக் காணலாம்.

    கோவிலுக்குள் நுழைந்ததும் இடது புறம் வித்யா கணபதி சன்னிதியும், வலதுபுறம் பால சுப்பிரமணியர் சன்னிதியும் உள்ளன. இந்த பிள்ளையார் மற்றும் முருகன் திருமேனிகள் வெள்ளை சலவைக்கல்லால் ஆனது என்பது சிறப்பம்சமாகும். பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் பளீரென காட்சி தரும் இந்தத் திருமேனிகள் நம்மை சிலிர்க்க வைப்பவை. அடுத்து உள்ளது மகா மண்டபம்.

    16 பிரமாண்ட தூண்களுடன் அனிவெட்டி முறையில் அமைந்துள்ளது இந்த மண்டபம். மண்டபத்தைச் சுற்றி மேல்புறம் ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாறு வண்ண ஓவியத்தில் தீட்டப்பட்டுள்ளது. மகாமண்டபத்தின் மேல்புறம் பஞ்சபூத தலங்களின் இறைவனின் திருவுருவும் ஆலயத்தின் தோற்றமும் வண்ணக் கலவையில் வரையப்பட்டு நம் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

    இதையடுத்து அர்த்த மண்டபம் சற்றே வித்தியாசமான முறையில் காட்சி தருகிறது. இந்த மண்டபத்தின் மேல்பகுதி, எண் சதுர வடிவில் அமைந்திருப்பதுடன் அஷ்டலட்சுமிகளின் திருமேனிகள் சுதை வடிவில் அழகுற அமைந்துள்ளன. கருவறையில் அன்னை சாரதாம்பாள் பத்மாசன நிலையில் இரு கால்களை மடக்கியபடி அமர்ந்த திருக்கோலத்தில் இளநகை தவழும் இன்முகத்துடன் அருள்பாலிக்கிறாள்.

    இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். அன்னை தனது மேல் வலது கரத்தில் கிளியையும் இடது மேல் கரத்தில் அமிர்த கலத்தையும் தாங்கி, கீழ் வலது கரத்தில் அபய, வரத ஹஸ்த முத்திரையுடன் காட்சி தருகிறாள். கீழ் இடது கரத்தில் ஜபமாலையையும் புத்தகத்தையும் தாங்கி நிற்கிறாள்.

    இந்த அன்னையின் திருமேனி வெண் பளிங்கு கற்களால் உருவாக்கப்பட்டுள்ளதால், அன்னையின் முகம் வெள்ளை வெளேரென்ற நிறத்துடன் ஒளிர்விடுகிறது. அம்பாள் கரத்தில் இருக்கும் புத்தகம் கல்வியையும், ஜபமாலை தியானத்தையும், கிளி ஞானத்தையும், அமர்த கலசம் அழிவற்ற நிலையான முக்தியையும் உணர்த்துவதாக கூறுகின்றனர்.

    அன்னையின் வலது புறம் ஆதிசங்கரர் சன்னிதியும் இடதுபுறம் சாரதா பீடத்தின் 33–வது பீடாதிபதி ஸ்ரீ சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதி சன்னிதியும் உள்ளன. மூலவரின் இருப்பிட அமைப்பும், மூலவரின் விமானமும் எண் கோண அமைப்பில் அமைந்துள்ளது. விமானத்தின் எட்டு திசைகளிலும் குரு, கிருஷ்ணர், முருகப்பெருமான், விஷ்ணு, சிவபெருமான், பார்வதி, பிரம்மா, தத்தாத்திரேயர் ஆகிய எட்டு பேரின் சுதை வடிவ திருமேனிகள் ஆளுக்கு ஒரு திசையாக எட்டு திசை நோக்கி அருள்பாலிக்கின்றன.

    தாமரைப்பூ கவிழ்ந்திருக்கும் நிலையிலான தோற்றத்தில் காணப்படுகிறது அம்மன் கருவறை விமானம். சிவ–விஷ்ணு பேதம் களையும் தலமாக இத்தலம் விளங்குகிறது. அன்னை சாரதாம்பாளின் கருவறையில் சிறிய அளவில் சிவபெருமானின் லிங்கத் திருமேனி உள்ளது. பிரதோஷ நாட்களில் இந்த லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.

    திருவிழாக்களும் பூஜைகளும் :

    அனைத்து பவுர்ணமி நாட்களிலும் ஸ்ரீ சக்கர நவாவரண பூஜை நடைபெறுகிறது. அன்றைய தினம் சுமங்கலி கன்னியா பூஜையும் சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்த பூஜை முடிந்ததும் சுமங்கலி பெண்களுக்கு புடவை, சட்டைத்துணி, மங்கலப் பொருட்களை தருவது வழக்கமாக உள்ளது.

    சிறுமிகளை அம்மனாகப் பாவித்து பாவாடைத் துணியையும் அன்பளிப்பாகத் தருகின்றனர். இந்த ஆலயத்தில் வருடத்தில் நான்கு நவராத்திரி விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த விழாக்கள் ஒவ்வொரு முறையும் 9 நாட்கள் நடைபெறும். தை–மாசி மாதத்தில் ராஜ மாதங்கி நவராத்திரியும், ஆடி மாதத்தில் வாராகி நவராத்திரியும், பங்குனி–சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரியும், புரட்டாசியில் சாரதா நவராத்திரியும் கொண்டாடப்படுகின்றன.

    இந்த நாட்களில் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகளும், மாலையில் எந்திரத்தை வைத்து ஆவரண பூஜையும் நடைபெறும். அன்னைக்கு தினசரி லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்யப்படுகிறது. இந்த பாராயண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். தை மாதம் இரண்டு மற்றும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சுமார் 300 பக்தர்கள் பங்குபெறும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடைபெறுகிறது.

    மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை அன்று, கூட்டு வழிபாடு நடைபெறுகிறது. சுமார் 100–க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு குங்கும அர்ச்சனை செய்து பயன்பெறுகின்றனர். புரட்டாசி மாத நவராத்திரியின் கடைசி நாளன்று, உலக நன்மைக்காக அன்னையின் முன் சண்டிஹோமம் நடத்தப்படுகிறது.

    திருமணமாக வேண்டி கன்னிப் பெண்கள் அம்பாளிடம் தங்கள் கோரிக்கைகளைக் கூறி வேண்டிக் கொள்கின்றனர். மணமானதும் அன்னைக்கு புடவை கொண்டு வந்து சாத்துகின்றனர். இந்த புடவைகளை ஆலய நிர்வாகம், குடிசை வாழ் பெண்களுக்கு தானமாகத் தந்து உதவுவது உண்மையில் பாராட்ட வேண்டிய செயலாகும்.

    கல்விச் செல்வம் வேண்டி ஏராளமான மாணவர்கள் அன்னையை வேண்ட, அவர்களின் பிரார்த்தனைகள் பலிப்பதும் நிஜம். ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் மகாவிஷ்ணுவின் தசாவதாரத் திருமேனிகள் வரிசையாக வீற்றிருக்கின்றன. மச்சம், கூர்மம், வராகர், நரசிம்மர், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி ஆக பத்து அவதாரங்களின் திருமேனிகள் கண்கவர் அழகில் பார்ப்பவர் மனதைக் கவருகின்றன.

    கிழக்குப் பிரகாரத்தில் அகல்யா, திரவுபதி, சீதை, தாரா, மண்டோதரி ஆகிய பஞ்ச கன்னிகைகளின் சன்னிதி உள்ளது. இவர்களை வணங்குவதால் பாவம் அகலும். கெட்ட கனவுகள் அண்டாது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களின் சன்னிதி அமைந்துள்ளது.

    தனி மண்டமாக காட்சி தரும் இந்த மண்டபத்தின் மேல் பகுதியில் அழகிய விமானம் காட்சி தருகிறது. இந்த விமானத்தில் அஷ்டதிக்கு பாலகர் களின் சுதை வடிவ திருமேனிகள் உள்ளன. நவக்கிரகங்களை நாம் சுற்றும் போதே இந்த எட்டு திசைகளையும் பாதுகாக்கும் அஷ்டதிக்கு பாலகர்களையும் நாம் சுற்றி வந்துவிடலாம்.

    தினசரி காலை 6 மணிக்கு இரண்டு மயில்கள் இந்த ஆலயம் வந்து, இறைவியின் விமானத்தின் அருகே சுமார் ஒரு மணி நேரம் அமர்ந்து மெல்லிய குரல் கொடுத்துவிட்டு பின் பறந்து சென்று விடுவது இன்றும் காணக்கூடிய அதிசய காட்சியாகும். தினசரி 3 கால பூஜை நடக்கும்

    இந்த ஆலயம் காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

    ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் இருந்து, இந்த ஆலயத்திற்கு நடந்தே சென்று விடலாம். ஆட்டோ வசதியும் உண்டு. கல்வி கண்ணை திறக்கவும், கன்னியருக்கு விரைந்து மணம் நடந்தேறவும் அன்னை சாரதாம்பாள் அருள்புரிவாள் என்று பக்தர்கள் நம்புவது உண்மையே!
    சென்னை சுற்றுப்புறப் பகுதிகளில் இந்த பஞ்ச பிரம்ம ஆலயங்களும் அமைந்திருக்கின்றன. ஒரே நாளில் வழிபட ஏதுவாக உள்ள இந்த ஆலயங்களைப் பற்றி இங்கே சிறிய குறிப்புகளாகப் பார்க்கலாம்..
    அகத்திய முனிவரிடம் சீடனாக இருந்தவர், உரோமச மகரிஷி. இவர் அரியத்துறை என்ற இடத்தில் யாகம் செய்வதற்காக பிரம்மதேவனை நோக்கி கடுமையான தவம் இருந்தார். அவருக்கு காட்சி கொடுத்த பிரம்மன், உரோமச மகரிஷி யாகம் செய்வதற்காக ஆரணி மரங்களை உரசி அதில் இருந்து வெளிப்பட்ட தீயை யாக குண்டத்தில் போட்டு எரியச் செய்தார். ஆரணி மரங்கள் உரசியபோது ஏற்பட்ட பெரும் சத்தத்தில் நிலத்தில் பெருவெடிப்பு ஏற்பட்டு உள்ளிருந்து நீர் வெளிப்பட்டு நதியாக ஓடியது. அதுவே ‘ஆரணி நதி’ என்றானது.

    மேலும் அந்த ஆரணி ஆற்றங்கரையில் சிவபெருமானின் ஐந்து முகங்களான ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் ஆகியவற்றை குறிக்கும் வகையில் 5 தலங்களும் உருவாகின. இவை ‘பஞ்ச பிரம்ம தலங்கள்’ என்று பெயர் பெற்றன. சென்னை சுற்றுப்புறப் பகுதிகளில் இந்த 5 ஆலயங்களும் அமைந்திருக்கின்றன. ஒரே நாளில் வழிபட ஏதுவாக உள்ள இந்த ஆலயங்களைப் பற்றி இங்கே சிறிய குறிப்புகளாகப் பார்க்கலாம்..

    திருக்காரிக்கரை

    சென்னையில் இருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுருட்டப்பள்ளி என்ற இடத்தைத் தாண்டியதும் திருக்காரிக்கரை உள்ளது. இந்த ஊர் தற்போது ராமகிரி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தின் மூலவராக வாலீஸ்வரர் அருள்கிறார். அம்பாளின் திருநாமம் மரகதாம்பாள் என்பதாகும். பஞ்ச பிரம்ம தாங்களில், சிவபெருமானின் ஈசான முகத்திற்குரிய தலமாக இந்த ஆலயம் பார்க்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனி, வடக்கு பக்கம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. நந்திக்கும், சிவலிங்கத்திற்கும் நடுவே ஆஞ்சநேயர் இருப்பது அபூர்வமான அமைப்பாகும். நந்தியின் வாய் பகுதியில் இருந்து நீர் சுரந்தபடியே இருக்கிறது. எந்த காலத்திலும் வந்துகொண்டே இருக்கும் இந்த நீர், மலையில் உச்சியில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் காலபைரவரும் பிரதான மூர்த்தியாக விளங்குகிறார்.

    வாமதேவபுரம்

    சென்னையில் இருந்து வடக்கு பகுதியில் 47 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆரணி பேரூராட்சி. இங்குள்ள பெரியபாளையம் எஸ்.பி. கோவில் தெருவில், பிச்சாலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச பிரம்ம தலங்களில், சிவபெருமானின் வாமதேவ முகத்திற்குரியது இந்த ஆலயம். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த ஆலயத்தின் மூலவர், சுயம்பு மூர்த்தியாவார். இறைவனின் திருநாமம் பிச்சாலேஸ்வரர் என்பதாகும். அம்பாளின் பெயர், மரகதவல்லி. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் விசேஷமானது. இந்த சிவலிங்கத்தில் பாணம் எனப்படும் மேற்பகுதியில், அம்பாளின் பாதம் பதிந்திருக்கிறதாம்.

    சுருட்டப்பள்ளி

    சென்னையில் இருந்து சுமார் 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுருட்டப்பள்ளி. பஞ்ச பிரம்ம தலங்களில், சிவபெருமானின் தத்புருஷ முகத்திற்குரிய தலம் இது. இந்த ஆலயத்தில் இறைவனின் திருநாமம் பள்ளிகொண்டீஸ்வரர். அம்பாளின் திருநாமம் மரகதவல்லி. திருப்பாற்கடலை கடைந்தபோது, கடலுக்குள் இருந்து முதலில் ஆலகால விஷம்தான் வெளிப்பட்டது. உலகை அழிக்கும் அந்த விஷத்தை சிவபெருமான் உண்டார். அந்த விஷம் அவரது உடலுக்குள் இறங்காமல் இருக்க, அவரது கழுத்தை அம்பாள் பிடித்தார். இதனால் விஷம் ஈசனின் கழுத்திலேயே நின்றது. விஷத்தின் வீரியத்தால் அம்பாளின் மடியில் மயங்கி விழுந்தார் ஈசன். இப்படி அம்பாளின் மடி மீது தலை வைத்தபடி சயன கோலத்தில் ஈசன் இருக்கும் சிறப்புமிக்க ஆலயம் இதுவாகும். பொதுவாக அனைத்து ஆலயங்களிலும் ஈசன், சிவலிங்க வடிவிலேயே காட்சி தருவார். ஆனால் இங்கு மனித உருவத்துடன் அம்பாளின் மடியில் தலை சாய்த்தபடி சயன கோலத்தில் காட்சி தருவது அபூர்வமானது. இந்த மூலவரை வழிபாடு செய்தால் குடும்ப பிரச்சினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    நைமிசான்யம் (கருங்காலி)

    சென்னை பொன்னேரியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பழவேற்காடு. இங்கிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் கருங்காலி திருத்தலம் அமைந்துள்ளது. இது பஞ்ச பிரம்ம தலங்களில், சிவபெருமானின் அகோர முகத்திற்குரிய தலமாகும். 1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த ஆலயம், ஆரணி நதி, கடலில் கலக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது. இந்தத் தீர்த்த அமைப்பின் காரணமாக, இந்த ஆலயம் காசி, கயா, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களுக்கு நிகரானதாக கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம், 18 சித்தர்களில் ஒருவரான சட்டை முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். இத்தல இறைவனின் திருநாமம் சிந்தாமணீஸ்வரர், அம்பாளின் திருநாமம் சிவகாமவல்லி என்பதாகும். இத்தல கால பைரவர், திருமண பாக்கியம் அருள்வதால், பைரவத்தலமாகவும் இது விளங்குகிறது.

    அரியத்துறை

    சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் சாலையில் கவரப்பேட்டை என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் அரியத்துறை அமைந்துள்ளது. பஞ்ச பிரம்ம தலங்களில், சிவபெருமானின் சத்யோஜாதம் முகத்திற்குரிய தலம் இதுவாகும். இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் தெற்கு பார்த்த நிலையில் காணப்படுகிறது. எனவே இது பரிகாரத்தலமாக விளங்குகிறது. அதே நேரம் அம்பாளின் சன்னிதியும் தெற்கு நோக்கி உள்ளது. எனவே திருமண பாக்கியம் அருளும் ஆலயமாகவும் இது திகழ்கிறது. இந்த ஆலய இறைவன் வரமூர்த்தீஸ்வரர் என்றும், அம்பாள் மரகதவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர். உரோமச மகரிஷி பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் இங்கு மூலவராக உள்ளது. இந்த லிங்கம் சதுர ஆவுடையாரைக் கொண்டது. இந்த ஆலயத்தில் சுயம்பு காலபைரவரை தரிசனம் செய்யலாம்.
    திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் வடாரண்யேஸ்வரர், அம்பிகை வண்டார்குழலி. இத்தலம் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு எனும் ஊரில் அமைந்துள்ளது. சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் ஐம்பெரும் அம்பலங்களில் ரத்தின சபை ஆகும். இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்கப் பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, ஈசனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோயில் இது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காளி பீடம்.

    தலைவலி மருந்தீடு காமாலை சோகை சுரம்’ என்று துவங்கும் பழனி திருப்புகழ் பாடலில் “மாகாளி நாண முளம் அவைதனில் நடித்தோனை’ என்ற அடிகளில் திருவாலங்காட்டில் சிவபெருமான் ஆடிய போட்டி நடனத்தில் காளியை தோற்கடித்த வரலாற்றை அருணகிரிநாதர் தெரிவிக்கிறார். சிவபெருமானின் தாண்டவக் கோலத்தைக் காணவிரும்பத் தவமிருந்த சுனந்த முனிவருக்கு திருவாலங்காடு தலத்தின் பெருமையை எடுத்துக்கூறி அங்கு சென்று தவமியற்றக் கூறினார் சிவபெருமான். அதன்படி சுனந்தர் திருவாலங்காடு வந்து கடும் தவமியற்றினார். நெடுங்காலம் செல்லவே அவர் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றி புல் வளர்ந்து அதன் உச்சியில் முஞ்சிப் புல்லும்  (நாணல்) வளர்ந்து விட்டது! அதனால் அவருக்கு முஞ்சிகேசர் என்ற பெயரும் வந்தது.

    அதேநேரம் சிவனின் திருக்கரத்தில் ஆபரணமாக இலங்கிய கார்கோடகன் என்னும் பாம்பு ஈசனின் கையிலேயே நஞ்சைக் கக்கி விட்டது. அக்குற்றத்திற்காக அந்தப் பாம்பையும் திருவாலங்காடு சென்று தவமியற்றக் கட்டளையிட்டார் ஈசன்.  காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார். திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம் என்று சொல்லப்படும். வலக்காலை உடம்புடன் ஒட்டி உச்சங்கால் வரை தூக்கி நின்றாடும் நாட்டியம் இதுவாகும். இத்தலத்து நடராஜர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார்.

    எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள இந்த திரு உருவத்தைக் காண நம் மெய் சிலிர்க்கும். யாருக்கும் அடங்காத காளி வெட்கித் தலை குனிய வைத்த நடனமான இந்த ஊர்த்துவ தாண்டவ நடனம் பார்த்துப் பரவசமடைய வேண்டியதாகும். ஒருமுறை காளிக்கும், சிவனுக்கும் நடனப் போட்டி நடந்தது. சிவபெருமானை விட நன்றாக நடனமாடி வந்த காளி கடைசியில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும் காலை மேலே நேராகத் தூக்கியவுடன் காளியான சக்தி வெட்கித் தலைகுனிந்து தோற்றுப் போனாள். நடராஜர் சந்நதிக்கு எதிரே காளியின் சந்நதி இருக்கிறது. வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்லா வகையான இன்பங்களும் கிடைக்கும் என்கிறது தல புராணம்.

    இண்டாவது சுற்றுப் பிராகாரம். வலதுபுறத்தில் இறைவி வண்டார் குழலம்மை சந்நதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. நேரே இறைவன் கருவறைக்குச் செல்லும் நுழைவு வாயில். இந்த நுழைவு வாயிலின் மேற்புறம் சிவபெருமானின் ஐந்து சபைகளும் அழகிய சுதைச் சிற்பங்களாக காட்சி தருகின்றன.
    பிராகாரத்தில் வலமாக வரும்போது ஆருத்ரா அபிஷேக மண்டபம், ரத்தினசபை வாயில் உள்ளது. சபைக்கு எதிரில் நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. அடுத்து தெற்கு நோக்கிய அம்பாள் சந்நதி உள்ளது. அம்பிகை நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சிதருகிறாள். அம்பிகை கருவறையில் கோஷ்ட மூர்த்தங்கள் இல்லை. சந்நதியிலுள்ள சிற்பக் கலையழகு வாய்ந்த கல்தூண்கள் காண அழகுடையவை. ரத்தின சபையில் நடராஜப் பெருமானின் ஊர்த்துவ தாண்டவ உற்சவத் திருமேனி தரிசிக்கத்தக்கது.

    சிவகாமி, காரைக்காலம்மையார் திருமேனிகள் அருகிலுள்ளன. ரத்தின சபையில் பெரிய ஸ்படிகலிங்கமும், சிறிய மரகதலிங்கமும் உள்ளன. இவற்றிற்கு நான்கு கால அபிஷேகம் நடைபெறுகிறது. ரத்தின சபையை வலம் வரும்போது சாளரத்தில் சண்டேஸ்வரரின் உருவம் உள்ளது. ரத்தினச் சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது. திருவாலங்காட்டுச் செப்பேடுகள்: தமிழகத்தின் சரித்திரத்தின் முக்கியமான பகுதியை வெளிப்படுத்திய செப்பேடுகள் திருவாலங்காட்டில் கிடைத்தன. ஒரு பெரிய வளையத்தில் சேர்த்து சோழ முத்திரையுடன் தமிழிலும், வடமொழியிலும் பொறிக்கப்பட்ட சாசனங்களுடன் கிடைத்த அந்த 22 செப்பேடுகள் சோழ வம்ச சரித்திரத்தை நன்கு புலப்படச் செய்தன. இவை இன்று சென்னை அரும்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.

    சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இந்த சிவ தலம் உள்ளது. திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் பேருந்தில் சென்று திருவாலங்காடு நிறுத்தத்தில் இறங்கினால் கோயில் மிக அருகிலேயே இருக்கிறது. இந்த தலம் தலைக்கு உரிய தலமாக கூறப்படுகிறது. காரணம் இத்தல இறைவியின் பெயர் வண்டார் குழலி - வண்டுகள் மொய்க்கும் வகையில் வாசமுள்ள கூந்தலையுடைய அன்னை ஆகவே இத்தலம் தலைக்குரிய திருமுடி தலமாக கூறப்படுகிறது.
    தேவிபட்டினம் ராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது மஹிஷமர்த்தினி எனும் உலகநாயகி அம்மன் கோவில். இந்த கோவில் தேவிபட்டினம் என்று அழைக்கப்படுகிறது. அம்பிகையின் சக்தி பீடங்களில் இது வீரசக்தி பீடமாக வழிபடப்படுகின்றது.
    தேவிபட்டினம் ராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது மஹிஷமர்த்தினி எனும் உலகநாயகி அம்மன் கோவில். இந்த கோவில் தேவிபட்டினம் என்று அழைக்கப்படுகிறது. அம்பிகையின் சக்தி பீடங்களில் இது வீரசக்தி பீடமாக வழிபடப்படுகின்றது.

    முதலாம் ராஜராஜ சோழனின் பட்டத்து அரசியான லோக மகா தேவியின் பெயரில் இவ்வூர் அமைக்கப்பட்டதாகக் கூறுவர். உலக மகா தேவி பட்டினம் என்பது நாளடைவில் தேவிபட்டினம் என இவ்வூரில் வீற்றிருக்கும் அம்மன் பெயரிலேயே அழைக்கப்படுகிறது பட்டினம் என்பது கடற்கரையை ஒட்டியுள்ள ஊர்களை குறிப்பதாலும் இது கடற்கரையை ஒட்டியிருப்பதாலும் தேவிபட்டினம் என அழைக்கப்படுகிறது. தேவி பட்டினம் என்றாலே அனைவருக்கும் ராமர்  கடலுக்குள் பிரதிஷ்டை செய்த நவக்கிரகங்கள் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் ராமர் ராவணனை வதம் செய்ய இலங்கை செல்லும் முன்  இங்குள்ள  உலகநாயகி அம்மனை வழிபட்டு சென்றுள்ளார்.

    பராசக்தி, தன் ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக எடுத்த அவதாரமே, துர்க்கை அல்லது காளி. மகிஷாசுரன் என்ற அரக்கன் சிறந்த சிவ பக்தன். எருமை போல உருமாறும் சக்தி கொண்ட இவன் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் அளவில்லா துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவனை அழிப்பதற்காக பராசக்தி, திரிகுணா என்ற பெயரில் தோன்றினாள்.

    இவளுக்கு சிவபெருமான் சூலத்தையும், திருமால் சக்கரத்தையும், பிரம்மா கமண்டலத்தையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும், அக்னியும், வருணனும் சக்தியையும், வாயு வில்லையும், ஐராவதம் மணியையும், எமன் தண்டத்தையும், நிருருதி பாசத்தையும் கொடுத்தார்கள். தவிர, காலன் கத்தி, கேடயத்தையும், சமுத்திரம் தாமரை மலரையும், குபேரன் பான பாத்திரத்தையும், சூரியன் ஒளிக்கதிர்களையும், ஆதிசேஷன் நாகபரணத்தையும்  அளித்தார்கள்.

    ஹிமவான் சிம்ம வாகனமானான். சர்வ சக்தி பொருந்திய இந்த தேவி தன்னுடைய பதினெட்டுக்கரங்களிலும் ஆயுதங்களை ஏந்தி சிம்ம வாகனத்தில் சென்று மகிஷனை வதம் செய்ததால் மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள். மகிஷனை அழித்த அவள் கோபம் குறைந்து சாந்த நிலையில் சுயம்பு வடிவில் இத்தலத்தில் அருட்பாலிக்கிறாள். இந்த உலகை காப்பதற்காக மகிஷாசுரனுடன் 9 நாள் போராடி பத்தாம் நாள் வெற்றி பெற்று இங்கு ஓய்வு எடுக்க சயன கோலத்தில் சுயம்புவாக உலகநாயகி என்ற திருநாமத்துடன் தங்கியதாகவும், சொல்லப்படுகிறது.

    நவராத்திரி நாயகியான இந்த தேவியை வழிபடுவதால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.இத்தல அம்மனுக்கு உருவம் ஏதும் கிடையாது. எதற்கெடுத்தாலும் பயப்படுபவர்கள், மன தைரியம் இல்லாதவர்கள், எதிரி தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வீரசக்தி பீடமான உலக நாயகி அம்மன் ஆலயத்துக்கு சென்று வணங்கி நல்லருள் பெறலாம்.
    ஸ்ரீதுர்க்கை அம்மன் சில இடங்களில் தனியாகக் கோவில் கொண்டும் அமர்ந்துள்ளாள். அவ்வாறு தனியாக கோவில் கொண்டுள்ள தலங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரிக்கு இந்தியாவில் பல இடங்களில் கோவில்கள் அமைந்துள்ளன. ஸ்ரீதுர்க்கை பல இடங்களில் காளியாகவும், சண்டிகையாகவும், மகிஷாசுர மர்த்தினியாகவும் காட்சி தருகிறார். எல்லா சிவாலயங்களிலும் துர்க்கைக்கென்று தனி சன்னதி இருக்கம். சில இடங்களில் தனியாகக் கோவில் கொண்டும் அமர்ந்துள்ளாள்.

    * மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் கதிராமங்கலம் என்ற சிற்றூரில் மிகப்பிரபலமான வனதுர்கா பரமேஸ்வரியாக காட்சி தருகிறாள். கம்பர் வழிபட்ட துர்க்கை இவள். மிருகண்ட முனிவரின் மகனாய் பிறந்த மார்கண்டேயருக்கு சிரஞ்சீவியாக வாழும் வழியைக் காட்டியவர். இதே வழித்தடத்தில் பாஸ்கர ராஜபுரம் என்ற இடத்தில் `விஷ்ணு துர்க்கைக்கு' தனிக்கோவில் உண்டு. இவளை வணங்குவோர் வாழ்வில் என்றும் அமைதியும் சாந்தியும் நிலவும்.

    * கும்பகோணத்திற்கு அருகில் பட்டீஸ்வரம் என்ற இடத்தில் வீற்றிருக்கும் துர்க்கா பரமேஸ்வரி சோழ மன்னர்களுக்கு குலதெய்வமாக விளங்கியவள். கேட்டவர்களுக்கு கேட்ட வரங்களை கொடுக்கும் தாயுள்ளம் கொண்டவள் இந்த துர்க்கை.

    * நெல்லை மாவட்டத்தில் உள்ள சீவலப்பேரியில் தாமிரபரணி நதிக்கரையில் துர்க்கை அம்மன் கோவில் கொண்டுள்ளாள். ஒரு காலத்தில் பல்லவர்களின் தலைநகராக விளங்கிய சேந்தமங்கலத்தில் (விழுப்புரத்திற்கு அருகில்) துர்க்கைக்கென்று ஒரு கோவில் உள்ளது.

    * திருத்தணி - திருப்பதி வழித்தடத்தில் பொன்பாடி ரெயில் நிலையத்திற்கு அருகில் மாத்தூரில் `மகிஷாசுரமர்த்தினி' குடி கொண்டுள்ளாள் ரெயில் பாதை அமைக்கத் தோண்டிய இடத்தில் கிடைத்த சிலையை அங்கேயே கோவில் கட்டி மகிஷாசுரமர்த்தினியை வழிபட்டு வருகிறார்கள்.

    * கும்பகோணத்திற்கு அருகில் உள்ள அம்மன்குடி துர்க்கா பரமேஸ்வரி ஆலயம் புகழ் பெற்ற ஒன்றாகும். எல்லா கிரக தோஷத்திற்கும் இங்கு அர்ச்சனை செய்யப்படுகிறது. இக்கோவிலில் தனி நவக்கிரக சன்னதி கிடையாது. எல்லா அர்ச்சனைகளும் நவக்கிரக நாயகியான ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரிக்கே செய்யப்படுகிறது.

    * சிதம்பரத்திற்கு அருகில் உள்ள சிவபுரிக்கு அருகில் உள்ள திருக்கழிப்பாலை என்ற இடத்தில் உள்ள சிவன் கோவிலில் `சதுராக்னி துர்க்கை' தனிச்சந்நதியுடன் காட்சி தருகிறாள்.

    * நெல்லை தாழைïத்துப் பாதையில் கங்கை கொண்டானுக்கு அருகில் உள்ள பாராஞ்சேரியில் `சயன துர்க்கை' படுத்தவாறு காட்சி தருகிறார். வேறெங்கும் இத்தகைய வடிவில் துர்க்கையை காண முடியாது.

    * தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள புஞ்சை என்ற ஊரில் ஸ்ரீதுர்க்கா தேவி குடி கொண்டுள்ளாள். இதற்கு அருகிலேயே சேத்தமங்கலத்தில் சுயம்புவான துர்க்கையைக் காணலாம்.

    * ஸ்ரீராமர் பூஜித்த துர்க்கைக்கு வேதாரண்யத்தில் பெரிய கோவில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த துர்க்கை இவள்.

    * வைத்தீஸ்வரன் கோவிலுக்கு அருகில் உள்ள திருவானப் புதூரில் உள்ள துர்க்கையின் பெயரிலேயே இவ்வூர் `துர்க்கை சந்நிதி' என்றே அழைக்கப்படுகிறது. அரியானா மாநிலத்தின் தலைநகர் சண்டீகரில் குன்றின் மீது `சண்டிகை' வீற்றிருக்கிறாள். அவள் பெயரிலேயே இந்நகரம் `சண்டிகர்' என விளங்குகிறது.

    * தென்ஆற்காடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் என்ற கிராமத்தில் சாமுண்டீஸ்வரிக்கு தனிக்கோவில் உள்ளது.
    சென்னை-மீஞ்சூர் சாலையில், சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மேலூரில் உள்ளது அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை அருள்மிகு திருமணங்கீசர் ஆலயம்.
    இச்சா சக்தியாக திருவுடையம்மன் அருள் வழங்கும் தலம், மேலூர். சென்னை-மீஞ்சூர் சாலையில், சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மேலூர். சாலையின் இடப்புறம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை அருள்மிகு திருமணங்கீசர் ஆலயம் என எழுதப்பட்ட அலங்கார வளைவு நம்மை வரவேற்கிறது. இவ்வளைவிலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்துள் நுழைந்ததும் வலதுபுறத்தில் அம்பாள் சந்நதி, தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னை தன் மேலிருகரங்களில் பாசாங்குசத்தைக் கொண்டிருக்கிறாள்.

    கீழிரு கரங்களில் அபய - வரத முத்திரைக் காட்டி அருள் காட்சித் தருகின்றாள். தேவியின் கண்களில் ஒளிரும் கருணை நம் மனதை குளிர்விக்கிறது. பெரிய ஆலயங்களில் அருளும் அம்பிகையின் அலங்கார அணிகளோ, ரத்னாபரணங்களின் ஜொலி ஜொலிப்போ இல்லையென்றாலும் தஞ்சமென நாடி வரும் அடியவரை எக்காலமும் காப்பேன் எனச் சொல்லாமல் சொல்கிறது, அன்னையின் ஆனந்தப் புன்னகை பூத்த திருமுகம்.

    உலகத்தில் உள்ள சகல நன்மைகளையும் அருளும் இவளை மங்களநாயகி தாயே என பக்தர்கள் பாசத்தோடு அழைத்து தொழுகிறார்கள். அன்னையின் சந்நதியில் பக்தைகள்  லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் செய்வது வழக்கம்.  இதனால் தங்களின் வாழ்வு வளம் பெறுவதாக சொல்கிறார்கள், பலனடைந்த பக்தர்கள். அம்பாளின் திருமுன் சிம்மமும், பலிபீடமும், கொடிமரமும் காணப்படுகின்றன.

    அம்பாள் சந்நதிக்கும் கொடிமரத்துக்கும் இடையில் அமைந்துள்ள அழகிய மண்டபத்தை மிளகு மாற்றியான் மண்டபம் என குறிப்பிடுகிறார்கள். அதற்குப் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் இருக்கிறது. நாயக்க மன்னராட்சிக் காலத்தில் மிளகுக்குச் சுங்கவரி வசூலிக்கும் வழக்கம் இருந்தது. இப்பகுதிக்கு ஒரு வணிகன் மிளகு மூட்டைகளுடன் வந்தான். வரி செலுத்த விரும்பாத அவன் தன் மூட்டைகளில் பயறு இருப்பதாக அதிகாரிகளிடம் பொய் சொன்னான்.

    சந்தைக்குச் சென்று மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த வணிகன், மிளகு மூட்டைகள் பயறு மூட்டைகளாக மாறி இருந்ததைக் கண்டு பதறித் துடித்தான். பின் மனம் வருந்தி இச்சா சக்தியாக அருள்புரியும் திரிபுரசுந்தரியிடம் மன்னிப்பு கேட்டான். மனம் திருந்திய வணிகனுக்கு அருள்புரிந்திட திருவுளம் கொண்ட தேவி பயறு மூட்டைகளை மீண்டும் மிளகு மூட்டைகளாக மாற்றினாள். அன்னையின் மகிமையை அனுபவ பூர்வமாய் உணர்ந்த அந்த வணிகன் சுங்கவரியாக செலுத்த வேண்டிய பணத்தை ஆலயத்திற்கு காணிக்கையாகச் செலுத்தினான். அம்பாள் சந்நதிக்கு முன் மண்டபத்தையும் கட்டிக் கொடுத்தான். அதுதான் மிளகுமாற்றியான் மண்டபம்.

    திருமணங்கீசர், அம்பிகை ஆலயத்திற்கு மேற்கே தனிச்சந்நதியில் கிழக்கு நோக்கி அருள்கிறார். இவரை சுகந்தபுரீஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். ஆதிகாலத்தில் அடர்ந்த வனப்பகுதியாக இருந்த இந்த இடத்தில் செல்வந்தர் ஒருவரின் பசு தினமும் காட்டில் மேய்ந்து விட்டு வீட்டிற்கு வந்து தன் கன்றுக்கு மட்டும் பால் கொடுத்துவிட்டு மீண்டும் காட்டிற்குச் சென்று விடுமாம். இதைக் கேள்விப்பட்ட அந்தச் செல்வந்தர் தானே அதன் காரணத்தைக் கண்டறிய பசுவைப் பின் தொடர்ந்தார்.

    அங்கே அவருக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது. பசு செல்லும் திசையிலிருந்து நாகலிங்கப்பூவின் நறுமணம் வீசியது. ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து, அங்கிருந்த புற்றின் மேல் பசு பால் சொரிவது கண்டு வியந்தார். உடனே புற்றை இடித்துப் பார்த்தார். அதில் சிவலிங்கம் வெளிப்பட்டதைக் கண்ட அவர், ஆனந்தத்தோடு அந்த இடத்திலேயே அரனுக்கு ஒரு ஆலயம் அமைத்து வழிபட்டார். லிங்கம் இருந்த பகுதியைச் சுற்றி நாகலிங்கம் மற்றும் சரக்கொன்றை மரங்கள் இருந்தனவாம்.

    மலர்களின் சுகந்தம் சூழ அமர்ந்திருந்த இப்பெருமானை, மக்கள் சுகந்தபுரீஸ்வரர் என அழைத்தனர். காலப்போக்கில் இறைவன் திருமணங்கீஸ்வரர் ஆனார். இப்போதும் மண்புற்றுதான் சிவலிங்கமாக உள்ளது. அதன்மேல் செப்புக் கவசம் சார்த்தி அபிஷேக ஆராதனைகள் செய்து வருகின்றனர். பௌர்ணமி தினத்தில் மேலூர் திருவுடையம்மனை முதலில் இச்சா சக்தியாய் வழிபட்டு, அடுத்து ஞான சக்தியான திருவொற்றியூர் திரிபுரசுந்தரியைத் தரிசித்து, அடுத்து கிரியா சக்தியான திருமுல்லைவாயில் லதாமத்யம்பா எனும் கொடியிடை அம்மனைத் தரிசிப்பதன் மூலம் மூவரின் அருளும் கிடைக்கிறது என பக்தர்கள் கூறுகின்றனர்.

    இந்த மூன்று தேவியரின் திருவுருவச் சிலைகளையும் ஒரே சிற்பிதான் வடித்தாராம். பார்வதி - பரமேஸ்வரர் அச்சிற்பிக்கு வரமருள முன் வந்தபோது, அச்சிற்பியோ, ‘எனக்கொன்றும் வேண்டாம். வெள்ளிக்கிழமை அன்று வரும் பௌர்ணமியில் இம்மூன்று தேவியரையும் தரிசிப்பவர்களுக்கு நல்லன தந்தருள வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டாராம். அதன்படி இத்தலம் வருவோரின் குறைகளை சடுதியில் களைந்தருள்கிறார் இத்தல ஈசன். அன்னை திருவுடையம்மனோ, தன் பக்தர்களுக்கு  மழலை வரம், திருமண வரம் தருவதில் கருணையை மழையாய் பொழிந்தருள்கிறாள்.
    திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள சிந்தாமணி கிராமத்தில் வீற்றிருந்து, தன்னை வணங்கி வரும் அடியவர்களுக்கு அருள்கிறாள் அழகு நாச்சியம்மன். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள சிந்தாமணி கிராமத்தில் வீற்றிருந்து, தன்னை வணங்கி வரும் அடியவர்களுக்கு அருள்கிறாள்  அழகு நாச்சியம்மன். நெல்லை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக திகழும் குற்றாலம், தென்காசிக்கு இடையில் அமைந்துள்ளது சிந்தாமணி கிராமம். மூன்று போக நெல் விளையும் முத்தான பூமி.

    அங்கு தனது விவசாய நிலத்தை ஒட்டி இருந்த தென்னந்தோப்பின் ஒரு பகுதியை வெட்டி, திருத்தி அதிலும் பயிர் வைக்க எண்ணினார் குப்பாண்டி. அதன் படி ஐப்பசி மாதம் வளர்பிறையில் அந்த நிலத்தில் ஏர் கட்டினார். அந்த நிலத்தின் தென்பகுதியில் ஏர் வரும் போது கலப்பையின் கொழுவில் ரத்தம் படிந்திருந்தது. அதைக்கண்ட குப்பாண்டி பாம்பு ஏதாச்சும் கொழுவில் மாட்டி இறந்து விட்டதோ, என்று வருந்தினார்.

    அந்த நேரம் கஞ்சி கலையத்தை தலையில் தாங்கி, அவரது மனைவி பொன்னுதாயி அவ்விடம் வந்தாள்.வயலில் கலப்பை முன் நின்று பூமி நோக்கி, தனது கணவன் இரு கரம் கூப்பி வணங்கி நிற்பதை கண்டாள். கவுளை கண் மூடி கை தொழும் நேரம், கஞ்சி கலயத்தை இறக்கி வைக்க, கணவனை அழைப்பது நல்லதல்ல என்று மனதிற்குள் நினைத்தாள்.

    கண்ணை மூடிய குப்பாண்டி ‘‘என்ன படைச்ச சிவனே, அய்யா, நான் தெரிஞ்சும் தெரியாம குத்தம் குறை செஞ்சிருந்தா என்ன மன்னிச்சிடப்பா. என்று வேண்டிக்கொண்டு நாலா புறமும் பார்த்தவாறு தன்னை ஒரு சுற்று சுற்றினார். வடக்கு திசையில் வயல் வரப்பில் தனது மனைவி பொன்னுத்தாயி கலயத்துடன் நிற்பதை கண்டார். ‘‘நீ எப்போம் வந்த, என்று கேட்க, அதற்கு பொன்னுத்தாயி, நீங்க நிலம் பார்த்து சாமி கும்பிடும்போதே வந்திட்டேன். என்று பேசிய படியே கலயத்தை இறக்கும் கணவனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

    கொத்தமல்லி துவையல் கூட்டுடன் கஞ்சி குடித்து முடித்து ஏப்பம் விட்ட குப்பாண்டி, நீ வீட்டுக்கு போ, என்றதும். பொன்னுத்தாயி, கணவனிடம் கேட்டாள். கலப்பை கட்டுமுன்னே சாமி கும்பிடுவீக, இது என்ன புதுப்பழக்கம், 3 உழவு உழுத பிறகு சாமி கும்பிடுதீக என்ற மனைவியின் கேள்விக்கு பதிலுரைத்தார் குப்பாண்டி.

    அது ஒண்ணுமில்ல, கலப்பை கொழுவில, பாம்பு ஏதே மாட்டி செத்திருக்கும் போலுக்கு, கொழுவில ரத்தகறை படிஞ்சிருக்கு. அதான் நல்ல காரியம் செய்யுற சமயம் இப்படி ஆகுதே. அதுவும் நல்ல பாம்பா இருந்திற பிடாதே, அதான் சாமிய கும்பிட்டேன்.

    அப்படியா என்ற பொன்னுதாயி, பதட்டத்துடன் முதல்ல கலப்பை தள்ளி வச்சிட்டு, நீள கம்பு எடுத்து தட்டி, தட்டிப்பாருங்க, ஏன்னா, துண்டுப்பட்ட பாம்புக்கு தான் வீரியம் அதிகம் இருக்கும். கடிச்சி, கிடிச்சி போடாமங்க, ஊரு கண்ணு வேற நமக்கு இருக்கு, அதான் இப்படி யெல்லாம் நடக்குதுபோல என்றாள். மனைவியின் சொல்லைக்கேட்ட குப்பாண்டி தென்னந்தோப்பில் இருந்து நீள கம்பு ஒன்றை கொண்டு வந்து ரத்தம் படிந்திருந்த இடத்தை தட்டுகிறார். அங்கே ஒரு கல் ஒன்று தட்டுப்படுகிறது. உடனே அதை எடுக்க முயற்சிக்கிறார். ஆனால் முடியவில்லை. அவரது மனைவி பொன்னுத்தாயி அருகேயுள்ள வயலில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த நபர்களை அழைத்தாள்.

    வந்த நான்கு பேரும் குப்பாண்டியும் சேர்ந்து ஐந்து பேராக அந்த கல்லை சுற்றியிருந்த மண்ணை அப்புறப்படுத்தி வெளியே எடுத்தனர். அது அழகான ஒரு பெண் அமர்ந்த நிலையில் இருந்த சிலை. ஒரு கை யோகமுத்திரையுடன் இருந்ததால் அது அம்மன் சிலை என்று முடிவு செய்தனர். அம்மன் சிலையின் வலது தோளில் வெட்டுக்காயம் இருந்தது. அந்த காயத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வந்து கொண்டிருந்தது.

    வாய்க்கால் தண்ணீர் கொண்டு சிலையை சுத்தம் செய்து தோட்டத்திற்கு கொண்டு வந்து மர நிழலில் வைத்தனர். ஆனாலும் தொடர்ந்து ரத்தம் வந்து
    கொண்டிருந்தது. குப்பாண்டி மனம் உருகி வேண்டினார். அப்போது ஒரு அசிரீரி கேட்டது. எனக்கு இந்த இடத்தில் கோயில் எழுப்பி வழிபட்டு வாருங்கள் எனது பெயர் அழகு நாச்சியார் என்றும் கிழக்கு திசை நோக்கி வைக்காதே, எனக்கு பிடித்த வட திசையை நோக்கி வைத்து பூஜை செய் என்றது.

    உடனே அம்மன் சிலையை அங்கிருந்த புளியமரத்தின் அடியில் வடக்கு நோக்கி வைத்தனர். அருகே இருந்த ஊர் பிரமுகர் ஒருவரின் வாழை தோட்டத்திலிருந்து பழங்கள் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு படைத்து பூஜை நடந்தது. சுற்றியிருந்தவர்கள் கை கூப்பி வணங்கினர். பூஜை முடிந்த மறுநிமிடம் சிலையிலிருந்து நிற்காமல் வந்து கொண்டிருந்த ரத்தம் நின்றது. மனமகிழ்ந்த விவசாயிகள். வயல் நடவு மற்றும் விதைப்பு நேரங்களிலும், அறுவடை நாட்களிலும் பூஜை செய்து வழிபட்டு வந்தனர்.

    பின்னர் ஒரு நாள் வழிபடும் அன்பர்களின் கனவில் தோன்றிய அம்மன், நான் மழையில் நனைந்து வெயிலில் காய்கிறேன். அது மட்டுமன்றி தனித்தனியாக வந்து பூஜை செய்து என்னை வணங்கி செல்லும் நீங்கள் ஒரு சேர நின்று பூஜித்தால் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன் என்று கூறினாள். அதன் பின்னர் ஊரார்கள் ஒன்று கூடி அம்மனுக்கு கோயில் எழுப்ப முடிவு செய்தனர். அதன் பின்னர் நாட்கள் நகர்ந்தது. அவர்கள் எண்ணியது போல் கோயில் எழுப்பி கொடைவிழா நடத்தப்பட்டது.

    அழகு நாச்சியம்மன் வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் உள்ளார். அம்மனுக்கு கலப்பைக் கொழு பட்டு காயம் பட்டதை நினைவு கூறும் விதமாக, கொடை விழா நடைபெறும்போது அம்மனுக்கு அலங்காரம் செய்கையில் அம்மன் சிலையின் தோள் பகுதியிலிருந்து ரத்தம் கொட்டுவது போன்று குங்குமம் மற்றும் செம்மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும்.

    இப்போதும் அப்பகுதியில் விவசாய பணிகள் தொடங்கும்போது முதல் உழவு செய்யும் முன் பணிகள் சிறப்புற அமைய வேண்டும் என்று அழகுநாச்சியம்மனை வேண்டி பூஜை செய்த பின்னரே உழவு பணியை தொடங்குகின்றனர்.

    அழகுநாச்சியம்மன் கோயில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியிலிருந்து குற்றாலம் செல்லும் வழியில் சுமார் ஒரு கி.மீ தொலைவில் உள்ள சிந்தாமணி கிராமத்தில் அமைந்துள்ளது.
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கொப்புடை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கொப்புடை அம்மன் கோவில் உள்ளது. இத்தலத்தின் மூலவராகவும், உற்சவராகவும் கொப்புடை நாயகி அம்மன் அருள்பாலிக்கிறார்.

    சிவன் தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தான் மூலவரும் உற்சவரும் ஒன்றாக இருக்கும். அதேபோல் அம்மன் தலங்களில் மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மனே உற்சவ மூர்த்தியாக இருப்பது காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோயிலில் தான். காவல் தெய்வம் கருப்பண்ணசாமி வேறெங்கும் இல்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்தபடி இங்கு அருள்பாலிக்கிறார்.

    சரும வியாதிகள், குழந்தைப் பேறு இல்லாமை போன்ற குறைபாடுகளினால் அவதிப்படுவோர், மற்றும் மண வாழ்வில் பல பிரச்சினைகளைச் சந்திப்போர் போன்றவர்கள் அனைவரும் வந்து வழிபட்டு அம்மனின் அருளை பெற்று தங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபடுகின்றனர். உடல்நலக் குறைவினால் அவதிப்படுவோர், இங்கு வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர்.

    சித்திரை மாதம் கடைசி செவ்வாய் கிழமை செவ்வாய்ப் பெருந்திருவிழா தொடங்கி வைகாசி மாதம் முதல் வாரம் முடிய 10 நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதத்தில் நான்கு செவ்வாய் கிழமை வந்தால் அதில் இரண்டாவது செவ்வாய் கிழமையும், ஐந்து செவ்வாய் கிழமை வந்தால் அதில் மூன்றாவது செவ்வாய் கிழமையும் கொப்புடையம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெறும்.

    சித்திரை வருடப்பிறப்பு, புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஆடிச் செவ்வாய், மார்கழி திருப்பள்ளி எழுச்சி, பங்குனி தாராபிஷேகம் ஆகியன இக்கோயிலின் சிறப்பான திருவிழா ஆகும்.

    இக்கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
    ஹரியானா சண்டிதேவி மந்திரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ள பிலாஸ்பூர் கிராமத்தில் மானஸாதேவி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ஹரியானா மாநிலம், பஞ்ச்குலா மாவட்டத்திலுள்ள பிலாஸ்பூர் பகுதி ஒரு காலத்தில் சக்தி வழிபாட்டிற்குரிய பகுதியாகத் திகழ்ந்தது. இங்கு தேவி உபாசகர்கள் தேவியை சண்டி, காளிகா, மானஸா, பீகா என்ற பல பெயர்களில் வழிபட்டு வந்துள்ளனர். பிலாஸ்பூரில் மானஸாதேவி என்ற பெயரில் இரண்டு ஆலயங்களில் கோயில்கொண்டு அருள்பாலித்து வருகிறாள். மானஸாதேவி வழிபாடு இமயமலைப் பிராந்தியத்தின் கலாசாரத்தையும் நம்பிக்கையையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. ஹரியானா மாநிலத் தலைநகரான சண்டிகர், அங்குள்ள ஸ்ரீசண்டிதேவியின் பெயராலேயே அமைந்தது. இப்பகுதியில் மிகப் பிரபலமான இந்த சண்டிதேவி மந்திரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ள பிலாஸ்பூர் கிராமத்தில் மானஸாதேவி ஆலயம் அமைந்துள்ளது.

    சிவாலிக் மலையடிவாரத்திலுள்ள இயற்கை எழில் மிகுந்த அழகிய சிறிய கிராமமான பிலாஸ்பூரில் 100 ஏக்கர் விஸ்தீரணமுள்ள விசாலமான இடத்தில் இரண்டு பழமையான ஆலயங்கள் உள்ளன. சுமார் 200 ஆண்டுகட்கு முன்பு மணி மஜ்ரா என்றழைக்கப்பட்ட இப்பகுதியை ஆண்ட கோபால் சிங் என்ற மன்னரால் இந்த மானஸாதேவி ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்திலிருந்து சுமார் 200 மீ. தொலைவில் பாட்டியாலா மன்னராக இருந்த கரம்சிங் 1840ல் மானஸாதேவிக்கு இன்னொரு ஆலயத்தைக் கட்டினார். மன்னர் வசமிருந்த இப்பகுதி சுதந்திரம் அடைந்தவுடன், இந்தியாவோடு இணைக்கப்பட்டது. மானஸாதேவி ஆலய வளாகத்தில் இரண்டு தனித்தனி ஆலயங்கள் உள்ளன.

    மன்னர் கோபால் சிங் கட்டிய முதல் ஆலயமான மானஸாதேவி ஆலயம், இப்பகுதியில் வழக்கமாகக் காணப்படும் நாகரா பாணியாக இன்றி, நான்கு மூலைகளிலும் கூர்மையான கோபுரங்கள் மற்றும் நடுவே பெரிய உருண்டையான கோளம் ஆகியவற்றோடு முகலாயப் பாணியில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆலயத்தின் நடு நாயகமாக பிரதான தேவதையாக மானஸாதேவியையும், நான்கு மூலைகளிலும் பரிவார சந்நதிகளையும் கொண்டு பஞ்சாயதன ஆலயமாக
    அமைந்துள்ளது. அக்காலத்தில் கருவறையில் பிண்டி எனப் படும் மூன்று கூழாங்கற்களே துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி தேவிகளாக பக்தர்களால் வழிபடப்பட்டன. ஆனால், துர்க்கையின் அம்சமான மானஸாதேவியின் திருவுருவமும் கருவறையில் இருக்க வேண்டுமென்பதற்காக அவற்றின் பின்புறம் மானஸாதேவியின் மார்பளவு பளிங்குச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    தற்போது மார்பளவு பளிங்கு விக்கிரகமான மானஸாதேவியோடு, பிண்டி உருவத்திலுள்ள மூன்று விக்கிரகங்களும் சேர்த்தே வழிபடப்படுகின்றன. இந்தப் பிண்டி களுக்கும் பிரபாவளி அணிவிக்கப்பட்டு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. அழகிய இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இந்த மானஸாதேவி ஆலயத்தின் அருகேயே சண்டி ஹோமம் நடத்தும் பொருட்டு விசாலமான யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. பழமையான, பிரதானமான மானஸாதேவி ஆலயத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் பாட்டியாலா மன்னரால் 1840ல் கட்டப்பட்ட இன்னொரு மானஸாதேவி ஆலயம் காணப்படுகிறது. இதனை பாட்டியாலா ஆலயம் என்கிறார்கள். வட இந்திய ஆலயப் பாணியில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் நான்கு புறங்களிலும் நான்கு சிறிய கூர்மையான கோபுரங்களும், பரிக்ரமா எனப்படும் பிராகாரங்களும் அமைந்துள்ளன.

    கருவறையில் நடுநாயகமாக உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகள் அமைந்த வெள்ளி மண்டபத்தில் பளிங்குக் கல்லில் வடிக்கப்பட்ட தேவி, வெள்ளிக் கவசத்தோடு காட்சி தருகிறாள். தேவியின் விக்கிரகத்தோடு இங்கும் பிண்டி என்ற சுயம்பு வடிவங்களும் வணங்கப்படுகின்றன. இந்த இரு ஆலயங்களின் சுவர்களிலும் ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற புராணக் காட்சிகளும், தேவியின் திருவுருவங்களும் அழகுற வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.
    பிலாஸ்பூர் மானஸாதேவி ஆலயத்தில், ஏப்ரல்-மே மாதத்தில் வஸந்த நவராத்திரியும், ஆஸ்வீன மாதமான செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் சரத் நவராத்திரியும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. நவராத்திரியின் ஏழு மற்றும் எட்டாவது நாட்களில், சுத்தம் செய்யப்படும் இரண்டு மணி நேரம் மட்டுமே ஆலயங்கள் அடைக்கப்படுகின்றன. பிற நாட்களில் அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இடைவெளியின்றி திறந்து வைக்கப்படுகின்றன.

    நவராத்திரி விழாக்களின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயங்களில் கூடுகின்றனர். பண்டாரா எனப்படும் கோயில் சாப்பாடு கூடத்தில் அன்றாடம் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் செய்யப்படுகிறது. மானஸாதேவி மற்றும் பாட்டியலா ஆலயங்கள் ஸ்ரீமாதா மானஸாதேவி ஆலயக் குழுவினால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீமானஸாதேவி ஆலயம் கோடைக்காலத்தில் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், குளிர்காலத்தில் காலை 5 முதல் இரவு 9 வரையிலும் திறந்து வைக்கப்படுகின்றது. சக்தி த்வஜம் என்ற கொடிமரத்திலிருந்து ஆலயம் வரை அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் பக்தர்கள், தேவியை தரிசிக்க வரிசையில் நிற்கின்றனர். பக்தர்கள் தாங்கள் தயாரித்த பிரசாதங்களை தேவிக்கு அர்ப்பணிக்கலாம்.  இந்தப் பிரசாதங்கள் தேவியின் காலடிகளில் வைக்கப்பட்டு பக்தர்களிடம் திரும்பத் தரப்படுகின்றன.

    சண்டிகரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் பஞ்ச்குலா பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் மானஸாதேவி ஆலயம் அமைந்துள்ளது.
    மகாராஷ்டிர மாநிலத்தில் அஷ்ட விநாயகர்கள் ஆலயம் அமைந்துள்ளது. அவற்றில் ஒன்றுதான் சித்தடேக் என்ற ஊரில் உள்ள சித்தி விநாயகர் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    மகாராஷ்டிர மாநிலத்தில் அஷ்ட விநாயகர்கள் ஆலயம் அமைந்துள்ளது. அவற்றில் ஒன்றுதான் சித்தடேக் என்ற ஊரில் உள்ள சித்தி விநாயகர் திருக்கோவில். புனேவில் இருந்து சுமார் 110 கிலோமீட்டர் தொலைவில் சித்தடேக் உள்ளது. நம் ஊரில் குன்றின் மேல் அருள்புரியும் முருகப்பெருமானைப் போல, சித்தடேக்கில் உள்ள சித்தி விநாயகர் கோவிலும் சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது. இத்தல மூலவரான விநாயகப்பெருமான், தானாக (சுயம்பு) தோன்றியவர் என்பது சிறப்புக்குரியதாகும்.

    இந்த விநாயகரின் உயரம் வெறும் மூன்று அடிதான். அகலம் 2½ அடி. பொதுவாக விநாயகருக்கு தொந்தி வயிறு காணப்படும். ஆனால் இங்குள்ள விநாயகருக்கு வயிறு தட்டையாக இருக்கிறது. இது ஒரு அபூர்வமாக அமைப்பாகும். விநாயகரின் இருபக்க மடியிலும், சித்தி மற்றும் புத்தி ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர். இந்த விநாயகரை தனியாக வலம் வந்து வழிபட முடியாது. அப்படி வலம் வர வேண்டும் என்றால் மலையையும் சுற்றி வந்துதான் வழிபட முடியும். இந்த மலையை சுற்றி வருவதற்கு சுமார் அரை மணி நேரம் ஆகும்.

    தல வரலாறு

    ஒரு பிரளய காலம் முடிந்து மீண்டும் உயிர்களை படைக்கும் பணியில் பிரம்மன் ஈடுபட முற்பட்டார். அந்தப் பணியைத் தொடங்குவதற்கு முன்பாக, விநாயகப்பெருமானை வழிபட வேண்டும் என்று நினைத்தார். விநாயகரும், “ஓர் எழுத்து மந்திரத்தை உபதேசம் செய்து வா” என்று அசரீரியாக வந்து உத்தரவிட்டார்.

    அதன்படி பிரம்மதேவனும் இடைவிடாது, ‘ஓம்’ என்ற ஓர் எழுத்து மந்திரத்தை சொல்லி, விநாயகப் பெருமானை நினைத்து தவம் செய்து வந்தார். பல ஆண்டுகளாக அவர் புரிந்த அந்த தவத்தில் மகிழ்ந்த விநாயகப்பெருமான், பிரம்மதேவனின் முன்பாகத் தோன்றினார்.

    விநாயகரை வணங்கிய பிரம்மதேவன், “நான் செய்யப்போகும் படைப்புத் தொழிலில் எந்தவித இடையூறும், தடைகளும் வராதபடி காத்தருள வேண்டும்” என்று வேண்டினார். விநாயகரும் அப்படியே வரங்களை அளித்து அங்கிருந்து மறைந்தார்.

    ஆனால் பிரம்மன் தன்னுடைய படைப்புத் தொழிலை தொடங்கியதும், ஏராளமான அபசகுனங்கள் ஏற்பட்டன. மகாவிஷ்ணுவின் காதில் இருந்து மது, கைடப என்னும் இரண்டு அசுரர்கள் தோன்றினர். அவர்கள் தேவர்களையும், பிரம்மனையும் துன்புறுத்தினர். படைத்தல் தொழிலையும் செய்யவிடாமல் தடுத்தனர். இதனால் தேவலோகத்தில் இருந்த தேவர்களும், பூமியை காத்துக் கொண்டிருந்த பூமாதேவியும் மிகவும் சிரமப்பட்டனர். அவர்கள் அனைவரும் வைகுண்டம் சென்று, அங்கு சயன கோலத்தில் நித்திரையில் ஆழ்ந்திருந்த மகாவிஷ்ணுவை எழுப்பி, தங்களைக் காத்தருளும்படி வேண்டினர்.

    மகாவிஷ்ணுவும் தேவர்கள் மீது இரக்கம் கொண்டு, மது, கைடப அசுரர்களுடன் போரிட்டார். காலங்கள் பல கடந்த நிலையிலும், அந்த இரண்டு அசுரர்களையும், மகாவிஷ்ணுவால் வெற்றிகொள்ள முடியவில்லை. இதையடுத்து சிவபெருமானிடம் சென்ற மகாவிஷ்ணு, “நான் இந்தப் போரில் அசுரர்களை வெல்ல முடியாததற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்.

    அதற்கு சிவபெருமுான், “எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும்முன்பாக விநாயகரை துதிக்க வேண்டும் என்பதை மறந்து விட்டாயா?” என்று எதிர்கேள்வி கேட்டார்.

    அசுரர்களுடன் போரிட வந்தபோது, விநாயகரை வணங்காமல் வந்தது அப்போதுதான் மகாவிஷ்ணுவுக்கு புரிந்தது. உடனே அவர் ஒரு மலை குன்றின் மீது அமர்ந்து “கணேஷாய நம” என்று ஜபிக்கத் தொடங்கினார். அவருடைய அந்த பக்தியால் மகிழ்ந்த விநாயகர், விஷ்ணுவுக்கு காரிய சித்தியை அளித்தார். அதன்பிறகு போர்க்களம் புகுந்த மகாவிஷ்ணு, அந்த இரண்டு அசுரர்களையும் கண நேரத்தில் வதம் செய்து வெற்றிகண்டார்.

    இதையடுத்து மகாவிஷ்ணுவுக்கு, விநாயகர் காரிய சித்தியை வழங்கிய குன்றின் மேல் அவருக்கு கோவில் அமைக்கப்பட்டது. அதுவும் நாளடைவில் சிதிலமானது. பல ஆண்டுகளுக்குப்பிறகு அந்த பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன், குன்றின்மேல் சிதிலமடைந்த ஆலயம் இருப்பதை அறிந்து, தினமும் அந்த ஆலயத்திற்கு வந்து விநாயரை வழிபட்டதோடு, அவருக்கு ரொட்டியையும் நைவேத்தியமாக படைத்து வந்தான்.

    அதன்பிறகான பேஷ்வா காலத்தில் இந்த ஆலயத்திற்கு திருப்பணிகள் செய்யப்பட்டது. இந்த ஆலயத்தின் அருகிலேயே வியாச முனிவருக்கு சன்னிதி உள்ளது. அங்குதான் அவர் யாகம் செய்தார் என்று கூறப்படுகிறது. நாம் தரிசிக்க வேண்டிய விநாயகர் ஆலயங்களில் இதுவும் முக்கியமான ஒன்றாகும்.
    மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை பட்டால் போதும் எல்லா வளமும் கிடைக்கும். சிறப்பு வாய்ந்த சில மகாலட்சுமி கோவில்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    உத்திரமேரூர்:- உத்திரமேரூர் திருத்தலத்தின் தாயார் ஆனந்த வல்லி ஆவார். தாயாருக்குத் தனிச் சந்நிதி உண்டு. இப்பிராட்டியாரின் திருவருளால் மாங்கல்ய பாக்கியம், பிள்ளைப்பேறு முதலியன கிடைப்பதால் இத்தலத்திற்குத் திருமாங்கல்யம் அதிக அளவில் காணிக்கையாகக் கிடைக்கிறது. அழகிய அஷ்டாங்க விமானம் கொண்ட அற்புதத் தலம் இது.

    காஞ்சீபுரம்:- காஞ்சீபுரம் ஸ்ரீ அஷ்டபுஜம் திருக்கோவிலின் தாயார் புஷ்பவல்லி ஆவார். பகவானின் திரு நாமம் அஷ்டபுஜத்தான் என்பது. இத்தலத்தில் ஸ்ரீ வராகப் பெருமாள் தாயாரைத் தன் மடியில் வைத்துக் கொண்டு சேவை சாதிக்கிறார்கள். இது வன்றி ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீலஷ்மி தேவிக்கென தனிச் சந்நிதி உள்ளது.

    சோழிங்கபுரம்:- வடஆற்காடு மாவட்டம் அரக்கோணத்திலிருந்து மேற்கே சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் சோழிங்கபுரம் ஆகும். இந்த மலைக் கோவிலில் தனிச் சந்நிதியில் அமிர்தவல்லித் தாயார் எழுந்தருளியுள்ளார். அண்டிவரும் அன்பர்களுக்கு அமிர்தமயமான பலன் களை வழங்கி வருகிறார்.

    திருத்தங்கல்:- விருதுநகர் மாவட் டம் திருத்தங்கல் என்னும் திருத் தலத்தில் முனிவர்களின் வேண்டுகோளுக் கிணங்க திருமகள் அருண கமல மகாதேவி (செங்கமல நாச்சியார்) என்னும் திரு நாமத்துடன் திருநின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.

    திருக்கண்ண மங்கை:- திரு வாரூருக்கு அடுத்துள்ள திருத்தலம் திருக் கண்ண மங்கையாகும். இங்கு தாயார் அமிர்தவல்லி திருச்சந்திதியில் ஒரு பெரிய தேன்கூடு உள்ளது. பல ஆண்டுகளாக இத்தேன்கூடு இருந்து வருவதாகக் கூறுகிறார்கள். முனிவர்கள் தேனீ வடிவத்தில் இருந்து தாயாரையும் பெருமாளையும் சேவித்து வருவதாக ஐதீகம்.

    உத்தமர்கோவில்:- திருச்சிக்கு அருகில் உள்ள திருத்தலம் பிச்சாண்டார் கோவிலாகும். உத்தமர் கோவில் என்றும் இதனை அழைப்பர். சிவன், பிரும்மா, விஷ்ணு மூவருக்கும் தனிச் சந்நிதிகள் ஒரே ஆலயத்தினுள் அடங்கியுள்ளன. இந்த அற்புதத் திருத்தலத்தின் நாச்சியார் பூர்ணவல்லித் தாயார் ஆவர். பூர்வா தேவி என்றும் அழைக்கப் பெறுகிறார்.

    லால்குடி:- திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடிக்கு திருத்தவத் துறை என்ற பெயரும் உண்டு. இங்குள்ள தலத்தில் தான் தாயார் தவம் இருந்து எம்பெருமானைத் தலைவராக அடைந் தார். இதே போல் நாமக்கல் திருத் தலத்தின் தாயாரும் தவமிருந்து எம் பெருமானைத் தலைவராகப் பெற்றார் என்று கூறப்படுகிறது. இத்தாயாரின் திரு நாமம் ‘ஹரி’ ஆகும்.

    தலைச்சங்காடு:- மாயவரம் - தரங் கம்பாடி பாதையில் ‘தலைச்சங்காடு’ என்ற திருத்தலத்தில் உள்ள தாயார் செங்கமலவல்லி ஆவார். இந்த நாச் சியார் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.

    திருக்கண்ணபுரம்:- தஞ்சை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் எம் பெருமானுக்கு ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், பத்மினி என்னும் நான்கு தேவியர்கள் தம் இரு பக்கம் சூழ எம் பெருமான் சௌரிராஜன் அருட்காட்சி நல்கி வருகிறார். அற்புதத் திருத்தலம் இது.

    நாச்சியார்கோவில்:- கும்ப கோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் மார்க்கத் தில் நாச்சியார்கோவில் என்ற திருத்தலம் உள்ளது. அங்கு எம்பெருமான் இரண்டு திருக்கரங்களுடன் வஞ்சுளவல்லி தாயாரு டன் அருட்காட்சி நல்கி வருவது மிகவும் விசேஷமானது. இங்கு தாயாருக் கெனத் தனிச் சந்நிதி கிடையாது.
    திருவாரூர்:-- திருவாரூரில் ஸ்ரீ லெட்சுமி தேவிக்கு ஒரு ஆலயம் உள்ளது. இத் திருக்கோவிலின் தலவிருக்ஷமான புன்னை மரத்தடியில் தாயார் அவதாரம் செய்துள்ளார் என்பது ஐதீகம். இதனால் இப்பிராட்டி யாருக்குப் புன்னைப் பிராட்டி என்பது திருநாமம.

    ஸ்ரீவில்லி புத்தூர்:- பிராட்டியாரின் அவதாரமான கோதை நாச்சியார் ஸ்ரீ வில்லிப்புத்தூர் திருத்தலத்தில் வடபத்திர சாயியான எம்பெருமானுடன் ஆண்டாளாக இருந்து அருள்பாலித்து வருகிறார்.

    திருமலை:- திருமலை திருப்பதி யில் ஸ்ரீவிக்னேஸ்வரரின் ஆலயம் ஒன்றுள்ளது. அதில் அஷ்ட லட்சுமிகளான ஸ்ரீஆதி லட்சுமி, ஸ்ரீவீரலட்சுமி, ஸ்ரீகஜ லட்சுமி, ஸ்ரீதான்யலட்சுமி, ஸ்ரீவிஜய லட்சுமி, ஸ்ரீதீபலட்சுமி, ஸ்ரீதன லட்சுமி, ஸ்ரீஐஸ் வர்யலட்சுமி எனும் திருநாமங் களோடு அர்ச்சாவதார மூர்த்தி களாக எழுந் தருளி அருள் பாலிக்கிறார்கள். இம் மூர்த்தங்களை ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்து வைத்தார் என்று கூறுகிறார்கள்.

    ஸ்ரீரங்கம்:- ஸ்ரீரங்கம் அம்மா மண்டப வீதி புது அக்ரகாரத்தில் அஷ்ட லட்சுமி மண்டபம் என்றே ஒரு மண்டபம் உள்ளது. அதில் நுழைவுப்பகுதி முன் வாயிலுக்கு ஸ்ரீராஜராஜேஸ்வரி வாசல் என்பது பெயராகும். அம்மண்டபத்தினுள் எண் திசைகளுக்கும் ஒவ்வொன்றாக எட்டு லட்சுமி மூர்த்தங்கள் உள்ளன.

    திருமழிசை:- சென்னை பூந்த மல்லியை அடுத்த திருமழிசையில் வீற் றிருந்த பெருமாள் கோவில் உள்ளது. இந்த பெருமானிடம் அஷ்டலட்சுமிகளும் ஐக்கியமாகி இருக்கிறார்கள். பெரு மாளின் தலை கிரீடத்தில் 4 லட்சுமிகள், மார்பில் 2 லட்சுமிகள், பெருமாளின் இரு பிறமும் பக்கத்துக்கு ஒருவர் என அஷ்டலட்சுமிகள் உள்ளனர். அஷ்டலட்சுமிகள் வீற்றிருக்கும் அந்த பெருமாளை சனிக் கிழமைகளில் துளசி மாலை சாத்தி வழிபட குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

    மதுரையில் அஷ்டலட்சுமி:- மதுரை மையப்பகுதியில் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தின் ஒரு பகுதியில் அஷ்டலட்சுமிகளுக்கு என்று தனி சன்னதி உள்ளது. 8 லட்சுமிகளும் வீற்றிருக்கும் காட்சி அற்புதமாக உள் ளது. மதுரை நகர மக்கள் லட்சுமி வழிபாட்டுக்கும், பரிகார பூஜை களுக்கு இந்த அஷ்டலட்சுமிகளை ஆராதிக்கிறார்கள்.
    ×