என் மலர்tooltip icon

    கோவில்கள்

    அருணகிரி நாதர் இங்கு நீண்டகாலம் தங்கியிருந்து முருகப்பெருமானை வழிபட்டு, பாடி பரவசப்பட்ட இடம் இந்த வயலூர். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    குன்றுதோறும் குமரன் இருப்பது வழக்கம். அப்படி ஒரு குன்றுமீதுதான் ஏற இருக்கிறோம் என்ற எதிர்பார்ப்போடு எங்களின் வயலூர் பயணம் இருந்தது. திருச்சியில் இருந்து மேற்கே 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது வயலூர். அந்த ஊருக்கு இட்டுச் செல்லும் பாதையும் வயல்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. நெல்லும், வாழையும், தென்னையுமாக செழித்து நிற்கிறது ஊர்.. நாங்கள் காரில் சென்று கொண்டிருந்தோம். போகப் போக.... பசுமை கண்களை குளிர்வித்துக்கொண்டே வந்தது. ரசித்துக்கொண்டே சென்றபோது ...என்ன இன்னும் எந்த குன்றையும் காணவில்லையே தப்பான வழியில் போகிறோமோ என்று சந்தேகம் வேறு.. இதோ வந்தேவிட்டது வயலூர்..

    வழக்கமாக குன்றின்மேல் குடியிருக்கும் முருகன் இங்கு குன்றில்லாத சமவெளியில் குடியிருக்கிறான். அழகான ஆலயம்.

    இனி கோயிலை பற்றி...

     இந்த திருத்தலத்தின்பெருமை ஞானம் விளையும் திருத்தலம் என்பது.  ஆ என்ற காமதேனுவும், சோமன் வழிபட்ட சோமரசம்பேட்டையும் சூழ இருக்கிறது வயலூர். இங்கு கந்தன் தனது வேலால் குத்தி ஒரு திருக்குளத்தை உருவாக்கி தந்தையாகிய சிவபெருமானை வழிபட்டதாக கூறுகிறது புராணம்.  அக்னித்தீர்த்தம் என்று அழைக்கப்படும் அந்த தீர்த்தம் அக்னித்தேவனும் வழிபட்டதால் ஆலயத்தின் சிவபெருமான் அக்னீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தேவி முன்னிலை நாயகி என்று அழைக்கப்படுகிறார்.

    உறையூரை தலைநகராக கொண்டு சோழர்கள் ஆட்சி செய்த காலம் அது.. வேட்டைக்குச்சென்ற சோழ மன்னன் தாகத்தோடு ஓரிடத்தில் அமர, அங்கு 3 கிளைகளுடன் காட்சி தந்ததாம் ஒரு கரும்பு. அதனை ஒடித்தபோது ஒரு கரும்பில் இருந்து ரத்தம் கொட்ட பதறிப்போனான் மன்னன். உடனடியாக அந்த இடத்தைத் தோண்ட அங்கு லிங்க ரூபத்தில் எழுந்தருளினார் சிவபெருமான். அவருக்கு கோயில் கட்ட நினைத்த மன்னனின் ஆசை ஈடேறவில்லை. அதன் பின்னர் சிறு கோயிலாக எழுந்தது இந்த ஆலயம்..

    ‘அருளில் சீர் பொய்யாத கணபதி

    திருவக் கீசன் வாழும் வயலியில்

    அழகு கோயில் மீதில் மருவிய பெருமானே ’

    இந்த பாடலின் அழகும் அருணகிரி நாதரின் வாக்கும் இனிமையே இங்குள்ள முருகனைப்போல. வயலூரின் சிறப்பே, அருணகிரிநாதருக்கு முருகன் மயில் மீது அமர்ந்து காட்சி கொடுத்து திருப்புகழ் பாட வைத்ததுதான். சும்மா இரு. சொல்லற என்று சொல்லி, வா என் புகழ் பாடு என அருள் சுரந்து அருணகிரிநாதருக்கு முன்மொழிந்து தந்த இடம் வயலூர் என்கிறது இந்த கோயிலின் தல வரலாறு. அவர் இங்கு நீண்டகாலம் தங்கியிருந்து முருகப்பெருமானை வழிபட்டு, பாடி பரவசப்பட்ட இடம் இந்த வயலூர்.

    அருணகிரிநாதர் மட்டுமல்ல, ஞானவரோதயர் என்ற அடியாருக்கு அருள் புரிந்த திருத்தலம். இந்த ஞானவரோதயர், கந்தபுராணத்தில் 7 ஆவது காண்டமாகிய உபதேச காண்டம் பாடியவர். விராலிமலைத் தலப்புராணமும் இவர் பாடியிருக்கிறார்.

    தாய், தந்தையை வழிபட்டு அனைவருக்கும் வழிகாட்டுகிறான் இந்த வயலூர் முருகன்.  அதனால் கோயிலுக்குள் சென்றதும் நாம் எதிர்கொள்வது சிவ சொரூபமே.

    பிள்ளையாரப்பாவுக்கு இல்லாத முதல் வணக்கமா? இந்த திருத்தலத்தில் உள்ள கணபதி பொய்யாக்கணபதியாக பெயர் கொண்டுள்ளார். இவரிடம் வேண்டினால் பொய்க்காது என்பது வாக்கு. இவர் சந்நிதிக்கு அருகே அருணகிரி நாதருக்கு பீடம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    எதிர்புறம் கல்லால மரத்தடியில் தட்சிணாமூர்த்தியின் தவக்கோலக்காட்சி. பொய்யாக்கணபதி சந்நிதியை அடுத்து முத்துகுமார சாமி. மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள முருகனைக்காண கண் கோடி போதுமோ? இந்த ஜென்மம்தான் தீருமோ?

    அடுத்து முத்துகுமார சுவாமியை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சகிதமாக காட்சியளிக்கிறார். வடபுற மூலையில் மகாலட்சுமி அருள்பாலிக்கிறார். வயலூர் முருகனை தரிசிப்பவருக்கு எனது அருள் கண்டிப்பாக உண்டு என்பதுபோல காட்சி தருகிறாள் மகாலட்சுமி..

    கோயிலின் வெளியே கல்லால மரத்தடியில் வேல் வடிவில் உள்ள தோற்றத்தை இடும்பன் கோயில் என்றும், கிராம தேவதைக்கோவில் என்றும் சொல்கிறார்கள். முருகன் கை வேலின் வடிவமாகிய தேரடியான் கோயிலும் வந்தோர்க்கு வளம் தரும் அம்சமாக காட்சியளிக்கிறது.

    வயலூர் முருகனை வழிபட்டு இறவாப்புகழை பெற்றார் அருணகிரிநாதர் என்ற ஒன்று போதும் இந்த தலத்தின் பெருமைக்கு சான்று. பழனி, திருச்செந்தூருக்கு வேண்டுதல் வைத்தவர்கள் இந்த கோயிலில் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தலாம். ஆனால், வயலூரானுக்கு வைத்த வேண்டுதலை வேறு கோயிலில் செலுத்த முடியாது அசலோடு வசூலித்துவிடுவான் இந்த வடிவேலன் என்பது இந்த ஊர் மக்களின் சொல்லாக இருக்கிறது.

    தத்து திருப்புதல் என்ற நேர்த்திக்கடன் இந்த கோயிலின் வழக்கமாக இருக்கிறது. தோஷம் உள்ள குழந்தைகளை குறிப்பிட்ட காலம் வரை கோயிலுக்கு தத்து கொடுத்தலும், உரிய காலம் முடிந்ததும் தத்து திருப்புதலும் செய்கிறார்கள்.

    திருமண பரிகார தலமாகவும் வயலூர் இருக்கிறது. வரம் தருவான் வயலூரான் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாகவும், பெரும்பாலான நேரங்களில் நிஜமாகவும் இருக்கிறது. இந்த கோயிலில் வைகாசி விசாகம், கார்த்திகை திருவிழா, சஷ்டி விழா என  வழக்கமான விழாக்களும் வெகு விமரிசையாக நடக்கின்றன.

    இந்த கோயிலுக்கும், கிருபானந்த வாரியருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. இந்த கோயில் கோபுரம் அமைக்க வாரியார் நிதி திரட்ட பெரும் முயற்சி செய்தார். இதனால் கோயில் அறக்கட்டளைக்குழுவில் கிருபானந்தவாரியார் இருந்தார்.

    கடன்தொல்லையோ, பிள்ளைகளுக்கான வேண்டுதல்களோ, திருமண பரிகாரங்களோ எதுவானாலும் வந்தவர்களின் மனம் குளிர வைக்கிறான் இந்த வயலூர் முருகன். வைத்த கண் வாங்காமல் பார்க்க வைக்கும் இந்த வடிவேலனை, வயலூர் நாயகனை கண்குளிர பார்த்துவிட்டு வந்தவர்களின் மனங்களையும் இவர் ஆட்சிகொண்டு விடுகிறான். 
    27 நட்சத்திரங்களுக்கு உகந்த பைரவர் கோவில்கள் உள்ளன. 27 நட்சத்திரக்காரர்களும் அவர்களுக்கு உகந்த பைரவர் கோவில்களில் வழிபாடு செய்தால் எண்ணங்கள் நிறைவேறும்.
    1. அஸ்வினி : ஸ்ரீஞான பைரவர்-கோவை, பேரூர், பட்டீஸ்வரர் கோவில், இங்கு பைவருக்கு நாய் வாகனம் இல்லை.

    2. பரணி : ஸ்ரீமகா பைரவர்- திருப்பத்தூர் அருகில் உள்ள பெரிச்சி கோவில்.

    3. கார்த்திகை : ஸ்ரீ சொர்ண பைரவர்-திருவண்ணாமலை.  4. ரோகிணி : ஸ்ரீகால பைரவர்-பிரம்ம கிரக்கண்டீஸ்வரர் கோவில்-கண்டியூர், தஞ்சாவூர்.

    5. மிருகசீரிஷம் : ஸ்ரீ சேத்திரபால பைரவர்- சேத்திரபாலபுரம் (குத்தாலம் அருகில்)

    6. திருவாதிரை : ஸ்ரீவடுக பைரவர்-ஆண்டாள் கோவில் (பாண்டிச்சேரி-விழுப்புரம் பாதையில் 18 கி. மீ. )

    7. புனர்பூசம் : ஸ்ரீவிஜய பைரவர்-பழனி சாதுசுவாமி கள் மடாலயம்.

    8. பூசம் : ஸ்ரீ ஆவின் பைரவர்-(திரு) வாஞ்சியம்- வாஞ்சி நாதர் கோவில்.

    9. ஆயில்யம் : ஸ்ரீ பாதாள பைரவர்-காளஹஸ்தி.

    10. மகம் : ஸ்ரீநர்த்தன பைரவர்-வேலூர் கோட்டை யின் ஒரு பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில்.

    11. பூரம் : ஸ்ரீ கோட்டை பைரவர்-பட்டீஸ்வரம்-தேனு புரீசுவரர்கோவில்.

    12. உத்திரம் : ஸ்ரீ ஜடாமண்டல பைரவர்- சேரன்மகா தேவி அம்மைநாதர் கைலாசநாதர் கோவில்.

    13. அஸ்தம் : ஸ்ரீ யோக பைரவர்-திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்.

    14. சித்திரை : ஸ்ரீ சக்கர பைரவர்-தர்மபுரி- மல்லி கார்ச்சுன -காமாட்சி கோவில் கோட்டை சிவன் கோவில் என்றும் தகடூர் காமாட்சி கோவில் என்றும் இக்கோவிலை அழைக்கிறார்கள்.

    15. சுவாதி:ஸ்ரீ ஜடா முனி பைரவர்- புதுக்கோட்டை அருகே உள்ள பொற்பனைக் கோட்டை தற்போது திருவரங்குளம் என்று அழைக்கப்படுகிறது.

    16. விசாகம் : ஸ்ரீ கோட்டை பைரவர்-திருமயம்.

    17. அனுஷம் : ஸ்ரீ சொர்ண பைரவர்- கும்பகோணம் அருகே உள்ள ஆபத்சகாய ஈஸ்வரர் கோவில்.

    18. கேட்டை : ஸ்ரீகதாயுத பைரவர்- சூரக்குடி- சொக்கநாதர் கோவில்.

    19. மூலம் : ஸ்ரீ சட்டநாதர் பைரவர்-சீரகாழி-பிரம்ம புரீசுவர் கோவில்.

    20. பூராடம் : ஸ்ரீகால பைரவர்-அவிநாசி- அவிநாசியப்பர் கோவில்.

    21. உத்திராடம் : ஸ்ரீவடுகநாதர் பைரவர்-கரூர்- கல்யாணபசுபதி ஈஸ்வரர் கோவில்.

    22. திருவோணம் : திருப்பத்தூர் அருகே உள்ள ஸ்ரீ மார்த்தாண்ட பைரவர்-வைரவன்பட்டி-வளரொளி நாதர் கோவில்.

    23. அவிட்டம்: சீர்காழி பிரம்மபுரீசுவர் கோவிலில் அஷ்ட பைரவர் சந்நிதி.

    24. சதயம் : ஸ்ரீசர்ப்ப பைரவர்-சர்ப்பம் ஏந்திய பைரவர்-சங்கரன் கோவில் தலம்.

    25. பூரட்டாதி : கோட்டை பைரவர்- ஈரோடு அருகே கொக்கரையான் பேட்டை கிராமத்தில் உள்ள பிரம்ம லிங்கேஸ்வரர் கோவில்.

    26. உத்திரட்டாதி :  ஸ்ரீ வெங்கல ஓசை பைரவர்- சேங்கனூர்-சத்தியகிரி ஈஸ்வரர் கோவில் கும்ப கோணம், பந்தநல்லூர் பாதையில் உள்ளது.

    27. ரேவதி : ஸ்ரீ சம்காரமூர்த்தி பைரவர்- தாத்தையங்கார் பேட்டை, காசி விசுவநாதர் கோவில். 
    சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஷ்டலட்சுமி கோவிலில் அஷ்டலட்சுமிகளின் வடிவங்கள் எட்டும் சிற்ப நூல் விதிப்படி நிறுவப்பட்டிருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சென்னை பெசன்ட் நகரில் அஷ்டலட்சுமி ஆலயம் உள்ளது. அக்கோவிலில் அஷ்டலட்சுமிகளின் வடிவங்கள் எட்டும் சிற்ப நூல் விதிப்படி நிறுவப்பட்டிருக்கிறது.
    இக்கோவிலின் தரைத்தளத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்ரீ மகாலட்சுமியின் பிரதான சன்னதிகள் அமைந்துள்ளன. கிழக்கே திருமுக மண்டலம். அப்படியே பிரகாரத்தில் சுற்றினால் தென் பகுதியில் ஸ்ரீ ஆதிலட்சுமி, மேற்கில் ஸ்ரீ தானிய லட்சுமி, வடக்கில் ஸ்ரீ தைரியலட்சுமி, மீண்டும் 'ஸ்ரீ மகா லட்சுமியின்' பிரதான சன்னதி உள்ளது.

    பின்பு இரண்டாவது தளத்திற்கு ஏறினால் முதலில் கிழக்கு முகமாக அருள்பாலிக்கும் ஸ்ரீ கஜலட்சுமியை தரிசனம் செய்யலாம். அதன்பிறகு பிரகாரத்தில் சுற்றினால் தென்பகுதியில் ஸ்ரீ சந்தானலட்சுமி, மேற்கில் ஸ்ரீவிஜயலட்சுமி, வடக்கில் ஸ்ரீ வித்யா லட்சுமிகளையும் வழிபாடு செய்யலாம். அதன்பிறகு 'ஸ்ரீ கஜலட்சுமி' சன்னதியிலிருந்து மூன்றாவது தளத்திற்கு மேலேறி சென்றால், பிரதான நிலையில் ஸ்ரீ தனலட்சுமி அருள் காட்சி தருவாள். இவ்வாறாக அஷ்டலட்சுமிகளையும், பிரதான சன்னதியில் ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ மகாலட்சுமி மூர்த்தங்களையும் தரிசித்து சகல சவுபாக்கியங்களையும் பெறலாம்.

    இந்த அஷ்ட லட்சுமி ஆலயத்தில் அமைந்துள்ள அஷ்டாங்க விமானத்தில் ஒன்பது கருவறைகளுடன் கூடிய சிறு சிறு கோவில்கள் உள்ளன. அவை தரைத்தளத்தில் நான்கும், இரண்டாம் தளத்தில் நான்கும், மூன்றாவது தளத்தில் ஒன்றுமாக நிறுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலின் முதல் நிலைக் கோஷ்டங்களில் அஷ்ட லட்சுமிகளின் எட்டு வடிவங்களும் அதைச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறாகவே இரண்டாம் நிலையில் 'தென்கிழக்கு' மூலையில் ஸ்ரீ லட்சுமி கல்யாணத் திருக்கோலமும், 'தென்மேற்கு' மூலையில் ஸ்ரீவைகுண்டக் காட்சியும், 'வடமேற்கு' மூலையில் ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீமத் ராமானுஜர், ஸ்ரீமத்வாசாரியார் போன்ற மகா ஞானிகளின் திருவுருவங்களையும், வடகிழக்கில் 'தேவாசுரர்கள் அமிர்தம் பெற திருப்பாற் கடலையும் கடையும் எழிற் காட்சியும்' அதைச் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு நம் கண்ணையும், கருத்தையும் கவர்ந்து கொள்கின்றன.

    மூன்றாவது நிலையில் ஒரு புறம் 'ஸ்ரீ மகா விஷ்ணுவின்' தசாவதாரக் கோலங்களும், ஒரு புறம் சைவ சம்ப்ரதாயத்தின்படி ஸ்ரீ ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தவம் ஓதும் பிம்பத்தையும், ஒருபுறம் வைஷ்ணவ சம்ப்ரதாயப்படி தூப்புல் ஸ்ரீநிகமாந்த மகா தேசிகரின் திருவுருவத்தையும் தரிசிக்கலாம். பிரதான கோவிலின் முன்புறமாக இருபுறமும் சங்கநிதி, பதுமநிதி என இரண்டு பொக்கிஷங்களுக்கும் இரண்டு கோவில்கள் உள்ளன.

    மாவிளக்கு ஏற்றிய ஸ்ரீ மகாலட்சுமி


    புரட்டாசி மாதம் விஷ்ணு வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும். குறிப்பாக புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகள் மிகமிகச் சிறந்தவை. அதிலும் மூன்றாம் சனிக்கிழமை உத்தமோத்தமமானது ஆகும். இந்த காரணத்தால்தான் புரட்டாசி மூன்றாம் சனி அன்று பெருமாள் கோவில்கள் நிரம்பி வழிகின்றன. திருமலை திருப்பதிக்கு சென்றால் சுவாமியை தரிசிக்கவே முடியாதபடி பெரும் மக்கள் கூட்டம் அலைமோதும் இந்த மாத நாட்களில் மாவிளக்கேற்றி விசேஷமாக நாம் பகவான் விஷ்ணுவையும், தாயார் ஸ்ரீ லட்சுமி தேவியையும் வணங்கி வழிபட்டால் நமது கஷ்டங்கள் எல்லாம் விலகி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் ஏற்படும் என்பது ஐதீகம். இதற்கு மகாலட்சுமியே ஒரு இடத்தில் முன்னுதாரணமாக மாவிளக்கேற்றி மாதவனை வழிபட்டிருக்கிறாள்.

    சென்னை, பெசன்ட்நகர் ஸ்ரீ அஷ்டலட்சுமி கோவிலில் தான் ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் வரும், 3ஆவது சனிக்கிழமை அன்று அன்னை மகாலட்சுமி மாவிளக்கேற்றும் சடங்கு நடைபெறுகிறது. இவ்வாலயத்தில் புரட்டாசிச் சனியன்று காலையில் வழக்கம் போல் தினசரி பூஜைகள் நடந்து முடிந்த பிறகு சுமார் 9 மணிக்கு மேல் இங்கு உற்சவ மூர்த்தியாக உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் முன்பு அன்னக்கூட உற்சவம் நடைபெறும். அதன்பிறகு இங்குள்ள அஷ்ட லட்சுமிகளின் சன்னதிகளில் ஒரு சன்னதிக்கு ஒரு மாவிளக்கு என்ற விதத்தில் எட்டு சன்னதிகளிலும் எட்டு மாவிளக்குகள் ஏற்றப்படுகின்றன.

    இவற்றை ஸ்ரீ மகாலட்சுமியே ஏற்றுவதாக ஐதீகம் பிறகு அவை அனைத்தும் ஒவ்வொன்றாக உற்சவர் ஸ்ரீ நிவாசப் பெருமாள் முன்பு கொண்டு செல்லப்பட்டு அந்த எட்டு மாவிளக்கின் தீபச் சுடர்களாலும் பெருமானின் முன்பு உள்ள ஒரு பெரிய அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது.

    மாலை சுமார் 5 மணியளவில் சகஸ்ரநாம அகண்ட பாராயணமும், பூஜைகளும், நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களைப் பாடி பகவானை சேவித்தலும் வரிசையாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ மகாலட்சுமியே மாவிளக்கேற்றி மாதவனை வழிபடும் இந்த ஆராதனை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கிறார்கள்.
    திருவாரூர் தியாகேஸ்வரர் திருக்கோவில், சப்த விடங்க திருத்தலங்களுள் ஒன்று. இங்கு எழுந்தருளியிருக்கும் தியாகராஜர், முதலில் திருமாலால் திருப்பாற்கடலில் வைத்து வணங்கப்பட்டவர். இந்த ஆலயத்தின் சிறப்புகளைப் பற்றி பார்க்கலாம்...
    திருவாரூர் தியாகேஸ்வரர் திருக்கோவில், சப்த விடங்க திருத்தலங்களுள் ஒன்று. ‘விடங்கம்’ என்பதற்கு உளியினால் செதுக்கப்படாதது என்று பொருள். பஞ்சபூதத் தலங்களில் நிலத்திற்கு உரிய திருத்தலமாக இது திகழ்கிறது. சிவபெருமானின் ஆணைப்படி விஸ்வகர்மாவால், திருவாரூர் நகரமும், ஆலயமும் நிர்மாணிக்கப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன. இந்த ஆலயத்தின் சிறப்புகளைப் பற்றி பார்க்கலாம்...

    முதலாம் ஆதித்தச் சோழனால் திருப்பணி செய்யப்பட்ட இந்த ஆலயம், அதன் பின்னர் முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் மற்றும் நாயக்க மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மராட்டிய மன்னர்களால் பராமரிக்கப்பட்டிருக்கிறது.

    இங்கு எழுந்தருளியிருக்கும் தியாகராஜர், முதலில் திருமாலால் திருப்பாற்கடலில் வைத்து வணங்கப்பட்டவர். பின்னர் இந்த தியாகராஜ மூர்த்தம், திருமாலால் இந்திரனுக்கும், இந்திரனால் முசுகுந்த சக்கரவர்த்திக்கும் அளிக்கப்பட்டது.

    இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தி ஆவார். எனவே நித்திய பூஜை, திருமஞ்சனம் ஆகியவை மூலவரின் அருகில் இருக்கும் மரகத லிங்கத்திற்கு தான் நடைபெறுகின்றன. பஞ்ச தாண்டவங்களில், அஜபா தாண்டவம் இங்கு நடைபெறுகிறது. வாயால் சொல்லாமல் சூட்சும மாக ஒலிப்பதால் இதற்கு ‘அஜபா’ என்று பெயர்.

    தியாகேசர் சன்னிதியில் மேல் வரிசையில் ஒன்பது விளக்குகள் உள்ளன. நவக்கிரகங்களே இங்கே, தீப வடிவில் இறைவனை வழிபடுவதாக ஐதீகம். மூலவருக்கு முன்பாக ஆறு மற்றும் ஐந்து அடுக்குகள் கொண்ட இரண்டு விளக்குகள் காணப்படுகின்றன. இந்த விளக்குகள் ஏகதச ருத்திரர்களை குறிக்கிற தாம்.

    தியாகேசருக்கு சந்தனத்தின் மீது குங்குமப் பூவையும், பச்சை கற்பூரத்தையும் சேர்த்து இழைத்து கிடைக்கும் செந்நிற திரவியத்தை பூசுகிறார்கள்.

    இந்த ஆலயத்தில் மாலை வேளையில் தேவர்களின் தலைவனான இந்திரன் வந்து வழிபடுவதாகவும், சாயரட்சை பூஜை வேளை யில் மற்ற தேவர்களும், ரிஷிகளும் கலந்து கொள்வதாகவும் ஐதீகம்.

    முசுகுந்த சக்கரவர்த்தி, விடங்கரின் விக்கிரகத்தை தேவேந்திரனிடம் கேட்டார். அப்போது இந்திரன் வைத்த பரீட்சையில் அசல் விக்கிரகத்தை செங்கழுநீர்ப்பூவின் மூலமாக சரியாக முசுகுந்த சக்கரவர்த்தி கண்டுபிடித்தார். எனவே இத்தல தியாகேச பெருமானுக்கு செங்கழுநீர்ப்பூ சமர்ப்பிப்பது சிறப்புக்குரிய தாகும். இவருக்கு நைவேத்தியமாக நெய் தேன்குழல், பெரிய உளுந்துவடை ஆகியவை படைக்கப்படுகின்றன.

    ஆலயத்தின் மூன்றாவது பிரகாரத்தின் வடமேற்கு திசையில், ஈசான்யத்தை நோக்கி கமலாம்பிகை சன்னிதி அமைந்துள்ளது. இந்த அம்பிகையானவள், கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகிய மூவரின் சங்கமம் ஆவாள். இந்த அம்பிகைக்கு தனிக் கொடி மரம் உள்ளது. இவர் சிவபெருமானைப் போல, தன்னுடைய சிரசில் கங்கையையும், பிறை சந்திரனையும் சூடி, யோக வடிவில் அமர்ந்து அருள்பாலிக் கிறாள்.

    இந்தக் கோவிலின் ஆதிசக்தியான நீலோத்பலாம்பிகைக்கும் தனிச் சன்னிதி காணப்படுகிறது. நான்கு கரங்கள் கொண்ட இந்த அன்னையின் அருகில், முருகப்பெரு மானை இடுப்பில் வைத்தபடி தோழி ஒருத்தியும் இருக்கிறாள். அன்னை தன்னுடைய கரங்களில் ஒன்றால், முருகப்பெருமானின் தலையை தடவிக் கொடுத்தபடி இருப்பது அபூர்வ தரிசனம் ஆகும்.

    இங்கு சண்டேஸ்வரருக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன. ஆதிசண்டேஸ்வரர் வெள்ளை உடையுடன் உற்சவராகவும், மற்றொருவர் எமசண்டேஸ்வரராகவும் அருள்பாலிக்கின்றனர். பிறக்க முக்தி தரும் தலமாக திருவாரூர் திகழ்வதால், இங்கு எமனுக்கு வேலை இல்லை. எனவே எம சண்டேஸ்வரர் அருள்வதாக நம்பிக்கை.
    நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோவில் ஆகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோவில் ஆகும். மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்

    கோயிலின் சிறப்பு

    இக்கோயிலின் திருவிழாக் காலங்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திரள் திரளாக வந்து கூடுவர். கோயிலில் பகல் மற்றும் இரவு நேரத்தில் அன்னதானம் கொடுக்கப்படும். அநேகமாக வெகு தொலைவில் இருந்து இக்கோயிலுக்கு வரும் பக்தர்களில் இங்கு தங்கிச்செல்வோரே அதிகம். இதனால் தொலைவில் இருந்து வருவோரின் நலன் கருதி கோயிலில் தங்குவதற்கான தங்குமிட வசதிகள் உள்ளன. தமிழர் மட்டுமன்றி தென்னிலங்கை சிங்களவர்களும் இக்கோயிலுக்கு வந்து செல்வர்.

    வரலாறு

    நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது. தமிழர்களின் முன்னோர்களான நாகர் இனத்தவர்கள் போற்றப்படுகின்றனர். நாகர்களின் முக்கிய வழிபாடாகக் காணப்பட்டது நாகவழிபாடு. ஈழத்தமிழர்களிடையேயும், தமிழகத் தமிழர்களிடையேயும், ஆதியிலிருந்தே நாகவழிபாடு காணப்பட்டதென்பதற்கு அதன் எச்சங்களாகக் காணப்படும் வழிபாட்டு முறைகளும், ஊர்ப்பெயர்களும் சான்றாகக் காணப்படுகின்றன. நாகர்கோயில் நாகதேவன்துறை, நாகதீவு போன்ற பெயர்களும், இன்றும் மக்களால் பின்பற்றப்பட்டுவரும் நாகவழிபாட்டுமுறையும், இக்கூற்றை உறுதி செய்கின்றது. ஆரியர் வருகை காரணமாக முதன்மை வழிபாடாகக் காணப்பட்ட நாகவழிபாடு அருகியே பின்பற்றப்பட்டது. ஆதியிலே காணப்பட்ட நாகவழிபாட்டுத் தலங்கள் யாவும், நாகதம்பிரான் கோயில், நாகம்மாள் கோயில் என உருமாற்றம் பெற்றன.

    ஈழத்தில் நாகர்களின் முக்கிய பிரதேசமாக நயினாதீவு காணப்பட்டுள்ளது. ஆதியில் நாகர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகக் காணப்பட்டுப் பின்னர், நாகபூசணி அம்மன் திருக்கோயிலாக மாற்றம் பெற்ற தலமே, நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயமாகும். இக்கோவிலின் கருவறையிலுள்ள சீறும் ஐந்தலை நாகச்சிலை, பல்லாயிரமாண்டுகள் பழமையானதென ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஈழத்திலே காணப்படும் பெரும்பாலான கோயில்கள். ஐதீகம் மற்றும் புராணக் கதைகளோடு மட்டும் தொடர்பு கொண்டவையாகக் காணப்படும்போது, நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம், பல்வேறு தொடர்புகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.

    வரலாற்றுக் குறிப்புகள், சாசன ஆதாரங்கள், தமிழ் இலக்கியத் தொடர்புகள், கர்ண பரம்பரைச் கதைகள், புராண வரலாறுகள் எனப் பல்வேறுபட்ட தொடர்புகளையுடையதாக விளங்கும் சிறப்புப் பெற்றது இவ்வாலயம். இவ்வாலயம் அமைந்துள்ள தீவும் மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்டு, பல்வேறு வகையில் ஆலயத்தோடும் தொடர்பு கொண்டுள்ளது. சரியான வரலாறுகள் காணப்படாதவிடத்து இலக்கியங்களே வரலாறாகவும் கருதப்படுவதுண்டு. ஈழத் தமிழர்களின் தொன்மையும் வரலாறும் இலக்கியங்களில் பொதிந்து கிடக்கின்றது.

    இந்திரன் தனது சாபம் நீங்கி அம்மனுக்கு ஆரம்பத்தில் சிறிய ஆலயம் கட்டினான் என்றும்,ஆதியில் அன்னைக்கு நாகம் அயலிலுள்ள புளியந்தீவில் இருக்கும் நாகதம்பிரானிடம் பூப்பறித்து கடல்வழியாக வரும் வேளையில் கருடன் இடைமறித்து நாகத்தை கொல்ல எத்தனிக்கும் பொழுது அவ்வழியே வந்த வணிகரான மாநாய்க்கன் பிணை தீர்த்து நாகத்தை வழிபடச்செய்தான் என்றும்,மகாபாரதத்தில் அர்சுனன் நாகங்களைக் கொன்ற பாவங்கள் தீர நாகதீவு (நயினாதீவு) வந்து நாககன்னியை மணந்து பப்பரவன் என்ற மகனைப் பெற்றதும் அந்த மகனின் பெயரிலே இன்றும் அம்பாளின் ஆலயத்திடலுக்கு பப்பரவன் திடல் என்றும் அழைப்பர்.

    மணிமேகலையில் நாக இளவரசியான பீலிவளை மீது கிள்ளி என்னும் சோழ வேந்தன் காதலுற்று அவளைப் பிரிந்து வருடந்தோறும் நடத்தும் இந்திர விழாவையும் நடத்த மறந்தான் என்றும் இவர்களின் குழந்தையே தொண்டமான்இளந்திரையன் என்றும் இவனின் சந்ததியினரே பிற்காலத்தில் தொண்டைமான் சந்ததியினரும் தொண்டைமண்டலத்தேசத்தவரும்.ஆவர் எனவே நயினாதீவானது பல கர்ணபரம்பரைக் கதைகளோடும் பலபுராண இதிகாசங்களோடும் பின்னிப் பிணைந்திருப்பதை அதன் எச்சங்களில் இருந்து அறியமுடிகிறது.

    விழாக்கள்

    இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ அழகிய சித்திரத்தேரில் பவனி வரும் ரதோற்பவமும் 5ம்திருவிழாவாக குடைத்திருவிழாவும்,7ம் திருவிழா அன்று வாயுபட்சணி என்ற சர்ப்பத்தில் வீதியுலாக்காட்சியும்,10ம்,13ம் திருவிழா கையிலைக்காட்சியும் 10ம்திருவிழா இரவு திருமஞ்சத்தில் எழுந்தருளி வீதியுலாவும்,11ம்திருவிழா காலை ஆலயவரலாறுடன் தொடர்புடைய கருட/சர்ப்பபூசையும் அன்று இரவு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய பூந்தண்டிகையில் வீதியுலாவும்,13ம்திருவிழா இரவு சப்பரத்திருவிழாவும், 15ம்திருவிழாவாக அம்பாள் ஊர்மனையூடாக வெளியே காவிச்சென்று ஊரின் மேற்குப் பக்கமாக இருக்கும் கங்காதரணி தீர்தக்கேணியில் தீர்த்தமாடல் விழாவும்,16ம்நாள்விழாவாக அம்பாள் அழகிய மின்குமிழிகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி கடலினிலே தெப்பத்திருவிழாவும்,மகோற்பவகாலங்களில் நடைபெறும் சிறப்பான விழாக்களாகும்.இங்கு அது மட்டுமல்லாது நவராத்திரி, கேதாரகௌரி விரதம், வரலட்சுமி விரதம் ஆடிப்பூரம்,கந்தசஷ்டி,பிள்ளையார் பெருங்கதை,திருவெம்பாவை போன்றன மிகச்சிறப்பாக செய்யப்படுகிறது. 
    ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்காள கடற்கரையில் அமைந்திருக்கும் கடற்கரை பகுதி சேதுகரையில் உள்ளது ஶ்ரீஅனுமாருக்கு ஒரு திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்காள கடற்கரையில் அமைந்திருக்கும் கடற்கரை பகுதி சேதுகரை. இராமேஸ்வரம் யாத்திரை செல்லும் அனைத்து பக்தர்களுக்கும் இந்த இடம் பிரபலம். இங்கு கடலில் நீராடுவது, பாபங்கள் அனைத்தும் அகற்றும் என்பதால் யாத்திரிகள் அனைவரும் இங்கு கடல் நீராடுவார்கள். அமாவாசை அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  தற்போது இந்த இடத்தில் அனுமாருக்கான ஒரு திருக்கோயிலை தவிர மற்றபடி தனிமைப்பட்டுள்ளது,

    முதலில் கூறியபடி சேது கரையில் ஶ்ரீஅனுமாருக்கு ஒரு திருக்கோயில் உள்ளது. கடலை நோக்கி உள்ளது இக்கோயில். கடலரிப்பிலிருந்து தப்ப கடலை ஒட்டி சற்றே வலுவான மதில் சுவர் உள்ளது. கோயிலை ஒட்டிய கடல் பகுதியில் பல சிற்பங்கள் ஒதுங்கியுள்ளது. பல சிற்பங்கள் பின்னப்பட்டவைகளாகவே இருக்கின்றன. பழைய காலத்தில் இங்கு கோயில்களோ அல்லது பூஜைக்குறிய சிற்பங்களோ இருந்திருக்க வேண்டும், காலப்போக்கில் இவை கடலுக்கு இரையாகியிருக்கலாம். தற்பொழுது உள்ள திருக்கோயில் மிக எளிமையான கோயில். பெரிய கூடம் தான் கோயில். அக்கூடத்தின் மேற்கு பக்கமாக நடுவில் கர்ப்பகிரஹம். கர்ப்பகிரஹத்தில் ஶ்ரீஆஞ்சநேயர் உள்ளார். திருக்கோயில் புதிதாக இருந்தாலும், ஶ்ரீஆஞ்சநேயர் சிலை மிக பழமை வாய்ந்ததாக உள்ளது. இந்த க்ஷேத்திரத்தில் கோயில் கொண்டிருக்கும் இறைவனுக்கு "சேது பந்தன ஶ்ரீ ஜய வீர ஆஞ்சநேயர்" என்பது திருநாமம்.

    இங்குள்ள ஶ்ரீஆஞ்சநேயரின் சிலை, நாயக்கர்கள் கால கலை அமைதியுடன் காணப்படுகிறது. இவ்வாஞ்சநேயரின் சிற்பம், தஞ்சாவூர் வல்லம், ஶ்ரீரங்கம் ரங்கவிலாஸ், மன்னார்குடி இராஜகோபுரம் ஆகிய இடங்களில் காணப்படும் சிற்பத்தை ஒத்துள்ளது. இவை அனைத்தும் தஞ்சாவூர் நாயக்கர்கள் பங்களிப்பு. சிறிய வித்யாசம் என்றால் இந்த மூன்று க்ஷேத்திரங்களிலும் ஶ்ரீஆஞ்சநேயர் கல்லால் ஆன "திருவாச்சி"யுடன் காணப்படுகிறார் ஆனால் சேது கரையில் ஶ்ரீஆஞ்சநேயருக்கு கல்திருவாச்சி இல்லை.

    இந்த க்ஷேத்திரத்திலுள்ள ஆஞ்சநேயர் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் அமைதி தருபவராகவும் உள்ளார். ஶ்ரீஜய வீர ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் சுமார் ஏழு அடி உயரமுள்ளார். கடலில் நள சேதுவை பார்த்த வண்ணம் இருக்கிறார். அவருடைய இரு திருப்பாதங்களும் நேர பார்த்த வண்ணம், சேதுவில் நடப்பதற்கு தயாராக இருப்பது போல் உள்ளது. பாதங்களை தண்டைகள் அலங்கரிக்கின்றன. இடுப்பில் சங்கலியில் இணைக்கப்பட்ட கத்தியிருக்கிறது. அவரது தூக்கிய வலது திருக்கரத்தால் ’அபய முத்திரை’ காட்டி பக்தர்களுக்கு ஆசிகள் வழங்குகிறார். அவரது இடது திருக்கரம் ’சௌகந்திகா’ மலரின் காம்பினை மார்போடு பிடித்துள்ளது.

    பகவானின் முககமலம் மலர்ச்சியாகவும், அழுத்தமாகவும், நேர் கொண்ட பார்வையாகவும் உள்ளது. காதில் அணிந்திருக்கும் குண்டலம் தோள்களை தொட்டவண்ணமுள்ளது. அவரது கேசம் அழகாக கட்டப்பட்டுள்ளது [பின்புறம் என்பதால் பார்க்க முடியாது]. அவரது வால் கால் அருகாமையில் சுருண்டு உள்ளது [பின்புறம் என்பதால் பார்க்க முடியாது]. பகவானின் மலர்ந்த கண்கள், விழிப்புடனும் அதே சமயம் அமைதியுடனும், சாந்தமாகவும் உள்ளது. பல்வேறு பாவங்கள் அந்த அழகிய மலர்ந்த கண்களில் ஒளிப்பது விசேடமே.

    சீதாபிராட்டியாரை மீட்க வானர சேனையுடன் இலங்கை செல்ல ஸ்ரீஇராமர் நள சேது கட்டியதை கொண்டாடும் வகையில் வருடம் தோறும் தீர்த்தவாரி உத்ஸவம் மிக விமர்சையாக இங்கு கொண்டாடப்படுகிறது. திருப்புல்லாணி ஆதி ஜகன்நாதர் மற்றும் பட்டாபிஷேக இராமர் உத்ஸவர்கள் இங்கு ஆதி சேதுவிற்கு வந்து கடலில் தீர்த்தவாரி செய்வார்கள்.

    சேது பந்தன ஶ்ரீஜய வீர ஆஞ்சநேயர் திருக்கோயிலில் திருப்புல்லாணி ஆதி ஜகன்நாதர் மற்றும் பட்டாபிஷேக இராமர் உத்ஸவர்களுக்கு விசேட அபிஷேகங்கள் செய்விக்கப்படும். அதை அடுத்து ஶ்ரீஆஞ்சநேயருக்கும் விசேட அபிஷேகம் நடக்கும்.

    சேது பந்தன ஶ்ரீ ஜய வீர ஆஞ்சநேயர் திருக்கோயில்,
    சேதுக்கரை,
    ராமநாதபுரம் மாவட்டம்,
    தமிழ் நாடு 
    திருமணம் தடை படுபவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டியவர்களும் திருவலஞ்சுழிநாதர் திருக்கோவிலில் உள்ள சுவேத விநாயகப் பெருமானை வழிபட்டால் தாங்கள் எண்ணிய எண்ணம் ஈடேறும் என்பது நம்பிக்கை.
    மூலவர் : திருவலஞ்சுழிநாதர், கற்பகநாதேஸ்வரர், கபர்த்தீசர், கற்பகநாதர்
    அம்மன்/தாயார் : பெரியநாயகி, பிருஹந்நாயகி
    தல விருட்சம் : வில்வம்
    தீர்த்தம் : காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம்
    வழிபட்டோர் : ஹேரண்ட முனிவர், ஆதிசேஷன், உமையம்மை, இந்திரன், திருமால், பிரமன்
    தேவாரப் பாடல்கள் :- திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்

    தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 25வது தலம். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள விநாயகர் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறார் .விநாயகர் பாற்கடலில் உள்ள அமுதமயமான கடல் நுரையினால் உருவானதால் சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) என பெயர் பெற்றார்.

    சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 88 வது தேவாரத்தலம் ஆகும். ஆதிசேஷன் வெளிப்பட்டப் பள்ளத்தில் காவிரியாறு பாய்ந்து பாதாளத்தில் அழுந்தியது. ஏரண்ட முனிவர் அப் பாதாளத்தில் இறங்க, காவிரி வெளிவந்து, வலமாய்ச் சுழித்துக்கொண்டு சென்ற காரணத்தால், இப் பெயர் பெற்றது. இத்தலம் ஒரு திருப்புகழ் தலம்.

    தல வரலாறு:

    அகஸ்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து வெளிப்பட்ட காவிரி , சோழ நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கும் செய்தி அறிந்த சோழ மன்னன் தனது பரிவாரங்களுடன் சென்றான். வலம் சுழித்துச் சென்ற காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. பாய்ந்து வந்த காவிரியாறு இங்குள்ள சிவனை வலம் வந்து ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கிவிட்டது. அதுகண்ட சோழ மன்னன் கவலையுற்றுத் ஹேரண்ட மகரிஷி என்ற முனிவரிடம் சென்று மன்னன் முறையிட்டான், முனிவரும் திருவலஞ்சுழி வந்தடைந்து சிவனை வழிபட்டார்.

    அசரீரியாக இறைவன், "மன்னனோ மகரிஷியோ இறங்கி அப்பாதாளத்தில் புகுந்தால் அப் பள்ளம் மூடிக்கொள்ளும். அப்போது காவிரி வெளிப்படும்" என்றருளினார். இதைக் கேட்ட முனிவர் நாட்டுக்காகத் தியாகம் செய்ய முன்வந்தார். அவர் அந்த பிலத்துவாரத்தில் இறங்கி தன்னைப் பலி கொடுக்கவும் பள்ளம் மூடிக்கொள்ள காவிரி வெளிப்பட்டாள். இன்றும் மஹாசிவராத்திரி நாளில் இரவில் நான்கு ஜாமங்களிலும் ஆதிசேஷன் வெளிப்பட்டு வழிபடுவதாகச் செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது.

    திருவலஞ்சுழியில் உள்ள தல விநாயகர் ஸ்வேத விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். தேவர்கள் திருப்பாற்கடலை கடையத் தொடங்கும் முன் விநாயக பூஜை செய்ய மறந்தார்கள். மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு, தேவர்களும், அசுரர்களும் இணைந்து, பாற்கடலில் அமுதம் கடைந்தனர். வாசுகியானது மந்திர மலையின் பாரம் தாங்காமல், தனது கொடிய விஷத்தை பாற்கடலில் கக்கியது. அதன்படி கக்கப்பட்ட ஆலகால விஷத்தின் கொடுமை தாங்காது தேவர்களும் அசுரர்களும் ஈசனிடம் சென்று முறையிட்டனர்.ஈசன் அவர்களிடம், விநாயகப் பெருமானை வழிபட்டால் தடையின்றி அமுதம் கிடைக்க பெறுவீர்கள் என அருளினார். தேவர்களுடன் அசுரர்களும், பாற்கடலை அடைந்து கடல் நுரையினை சேர்த்து விநாயகர் வடிவமாக செய்து வழிபட்டனர். அதன்பின் பாற்கடலை கடைந்து, அமுதம் கிடைத்து மகிழ்ந்தனர். விநாயகர் பாற்கடலில் உள்ள அமுதமயமான கடல் நுரையினால் உருவானதால் சுவேத விநாயகர் - வெள்ளை விநாயகர் என பெயர் பெற்றார் .

    தேவேந்திரன் அகல்யையால் ஏற்பட்ட சாபத்தை போக்கி கொள்ளும் பொருட்டு, சுவேத விநாயகர் - வெள்ளை விநாயகரை கையில் எடுத்துக் கொண்டு, பூலோகத்தில் உள்ள சிவ தலங்களை தரிசனம் செய்துவிட்டு இத்தலத்திற்கு வந்தடைந்தார். அந்த விநாயகர் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்யத் திருவலஞ்சுழியே ஏற்ற இடம் என இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்ட இந்திரன் ஒரு கோயிலும் கட்டினான். இன்றும் இந்திரன் பூஜித்த அந்த வெள்ளை விநாயகர் மூர்த்தி அருள் பாலிக்கிறார். இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்று தேவேந்திரன் வந்து வெள்ளை விநாயகரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம்.

    திருவலஞ்சுழியில் உள்ள ஸ்வேத விநாயகர். மற்ற ஆலயங்களில் நடப்பது போன்ற அபிஷேகம் இவருக்கு இங்கே இல்லை. சுமார் 10 அங்குல உயரமே உள்ள இந்த வெள்ளைப் பிள்ளையாருக்கு புனுகு மட்டும் சாத்துவார்கள். மேலும் பச்சைக் கற்பூரத்தைக் அரைத்து, இந்த விநாகயரின் திருமேனியைத் தொடாமல் அவர் மேல் மெள்ள தூவி விடுவார்கள் அதனால் இந்த விநாகயர் தீண்டாத் திருமேனி ஆவார்.

    முருகனுக்கு ஆறு படை வீடு இருப்பதுபோல விநாயகருக்கு இந்தியா முழுவதும் 10 படை வீடுகள் உள்ளன. அதில் இத்தலமும் ஒரு படை வீடு என்பது சிறப்பு.

    விநாயகர் திருமண தலம்: மகாவிஷ்ணுவின் நேத்திர கமலங்களிலிருந்து தோன்றிய இந்திரதேவியாகிய கமலாம்பாளையும், பிரம்மாவின் வாக்கிலிருந்து தோன்றிய புத்தி தேவியாகிய வாணியையும் இத்தலத்தில் சுவேத விநாயகப் பெருமான் திருமணம் செய்துகொண்டார். எனவே திருமணம் தடை படுபவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டியவர்களும் இங்குள்ள சுவேத விநாயகப் பெருமானை வழிபட்டால் தாங்கள் எண்ணிய எண்ணம் ஈடேறும் என்பது நம்பிக்கை.

    கோவில் அமைப்பு:

    இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. அழகான கோபுரம் கிழக்கு நோக்கியுள்ளது. அம்பாள் வலப்பக்கம் திருமணக் கோலக்காட்சி தருகிறார். இங்குள்ள அஷ்டபுஜகாளி சிறப்புவாய்ந்த மூர்த்தம். இங்குள்ள பைரவ மூர்த்தி மிகவும் உக்கிரம் வாய்ந்தவர். திருவிடைமருதூருக்குரிய பரிவாரத் தலங்களுள் திருவலஞ்சுழி விநாயகருக்கு உரிய தலமாகும்.

    கிழக்கு நோக்கி உள்ள ஒரு இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. அம்பாள் பெரியநாயகியின் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளது. இத்தகைய அமைப்புள்ள தலங்கள் திருமணத் தலங்கள் என அழைக்கப்படுகின்றன.இறைவனுக்கும், இறைவிக்கும் உள்ள தனித்தனி சன்னதிகள் போக அஷ்டபுஜ மஹாகாளிக்கும், வெளிப் பிரகாரத்தில் பைரவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. சனீஸ்வரலுக்கும் இவ்வாலயத்தில் தனி சந்நிதி உள்ளது.

    பிள்ளையார் உள்ள மண்டபம் இந்திரனால் அமைக்கப்பட்டது என்று புராணங்கள் கூறுகின்றன. சித்திரத் தூண்களும், கல்குத்துவிளக்கும் கொண்ட அழகான மண்டபமாக இது விளங்குகிறது. இச்சந்நிதியிலுள்ள கருங்கல் பலகணி நுணக்கமான சிற்ப வேலைப்பாடுடன் திகழ்கிறது. இத்தலம் திருமுறைத் தலம் என்பதை விட வெள்ளை விநாயகர் தலம் என்ற பெயரிலேயே மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது.

    இதலத்தின் தீர்த்தங்களாக காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம் ஆகியவையும், தலமரமாக வில்வமரமும் உள்ளது. ஹேரண்ட முனிவர், ஆதிசேஷன், உமையம்மை, இந்திரன், திருமால், பிரமன் ஆகியோர் வழிபட்ட தலம் என்ற பெருமையும் திருவலஞ்சுழிக்கு உண்டு.

    இத்தலம் ஒரு திருப்புகழ் தலம். இங்கு உள்பிராகாரத்திலுள்ள முருகப்பெருமான் ஆறு திருமுகங்களும், பன்னிரு கரங்களும் கொண்டு மயில் மீதமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் அருகில் நிற்கின்றனர். திருப்புகழில் இத்தல முருகர் மீது ஒரு பாடல் உள்ளது.

    சிறப்புக்கள் :

    இங்கு வேண்டிக்கொள்ள திருமணத்தடைகள் நீங்கும். முகம் பொலிவு பெறும் என்பது நம்பிக்கை.

    திருவிழா

    மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி

    போன்:  -

    குருக்கள் 9443092442

    அமைவிடம்  :

    கும்பகோணத்தில் இருந்து 6 கி.மி. தொலைவில் சுவாமிமலைக்கு அருகே இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர், பாபநாசம், சுந்தரப் பெருமாள் கோயில் முதலிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துச் சாலையில் சென்று கோயிலை அடையலாம். கோயில் சாலையோரத்தில் உள்ளது. 
    மணக்கரை நாதர் கோவில், 800 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். திருமணத் தடை, நவக்கிரகதோஷம் உள்ளவர்கள், இங்குள்ள அனுமனுக்கு வடைமாலை, வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்து பயனடைந்து வருகின்றனர்.
    தென்பாண்டி சீமையை ஆண்டு வந்தான், உக்கிரவழுதி பாண்டியன். அவன் காலத்தில் தாமிரபரணி ஆறு பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீர் கரைகளை கடந்து ஊருக்குள் நுழைந்தது. இதனால் குடிமக்கள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பொதுமக்களும், படைவீரர்களும் மன்னனிடம் முறையிட்டனர். மன்னனும் தன் சேனைப்படை வீரர்களுடன் தாமிரபரணி கரையில் முகாமிட்டான். படைவீரர்களையும், பொதுமக்களையும் திரட்டி வந்து தாமிரபரணிக்கு கரை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டான். ஆனால் அவனின் முயற்சி பலனளிக்கவில்லை. இதனால் நிம்மதியின்றி அலைந்து திரிந்து கொண்டிருந்தான். அவன் மனமோ இறைவன் மீது நாட்டம் கொண்டது.

    ஒரு நாள் தாமிரபரணி கரை ஓரத்தில் லிங்க ரூபத்தில் இறைவனை கண்டான். அந்த லிங்கத்தின் முன்பு மண்டியிட்டான். “தாமிரபரணியை தடைபோட என்னால் இயலவில்லை. ஆனால் இறைவா உன்னால் முடியும்” என லிங்கநாதரை தீர்க்கமாக பற்றிக்கொண்டான். பல நாள் அங்கேயே தங்கினான். தினமும் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து, லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான்.

    ஒரு நாள் இறைவன் அசரீரியாக பேசினார். “உக்கிரவழுதி! உன் பக்தியை மெச்சுகிறேன். மக்களுக்காக நீ படும் வேதனை என்னை ஈர்த்து விட்டது. தாமிரபரணிக்கு கரை அமைக்கும் முயற்சியை என்னை நம்பி செய். எம் அருளால் உனது முயற்சி வெற்றியாகும்” என்று அருளினார்.

    மன்னன் அகமகிழ்ந்து, இறைவனை வணங்கி, தன் படை வீரர்களைத் திரட்டி, தாமிரபரணி நதி நீர் ஊருக்குள் நுழையாதபடி கரை அமைக்கும் பணியில் மீண்டும் ஈடுபட்டான். ஊர் முழுக்க தண்டோரா போட்டான். இறைவன் உத்தரவு கிடைத்து விட்டது, இனி என்ன? என ஊர் மக்கள் உற்சாகமாக திரண்டனர்.

    இறைவனும் ஒரு குதிரை வீரனாக மக்களோடு மக்களாக தோன்றினார். பலவகையான படை வீரர்களை உருவாக்கினார். மன்னர் படையோடு சிவபெருமான் படையும் தாமிரபரணி கரையில் திரண்டனர். நதிக்கரையில் மணலால் கரை அமைத்தனர். மிக வேகமாக வேலை நடைபெறுகிறது. மன்னனுக்கு சந்தோஷம். ‘நம் மக்களிடம் இவ்வளவு திறமையா?’ என எண்ணி வியந்தான்.

    வேலைகள் முடிந்ததும், லிங்கத்தின் முன்னால் வந்த மன்னன் இறைவனுக்கு நன்றி கூறி நின்றான். அப்போது குதிரை வீரனாக இருந்த சிவபெருமான், லிங்கத்துக்குள் சென்று மறைந்தார். அவருடன் வந்த சேனைகளும் மறைந்தனர். “இதுவரை நமக்கு உதவி செய்தது சிவபெருமானும், அவரின் சேனைகளுமா?” என சிவபெருமானின் அருளை எண்ணி மகிழ்ந்தான் மன்னன்.

    இறைவன் உறைந்த லிங்க ரூபத்துக்கு, ஆகம விதிப்படி கோவில் அமைத்தான். அவருக்கு சொக்கநாதர் என பெயர் வைத்தான். தொடர்ந்து பூஜைகள் செய்து வழிபட்டான். மக்களும் தவறாமல் வெள்ளத்தில் இருந்து தங்களை காப்பாற்ற தங்களுக்காக மண் சுமந்த சிவபெருமானை வணங்கி நின்றனர். பிற்காலத்தில் தெற்கு நோக்கி மீனாட்சியை பிரதிஷ்டை செய்து வணங்கினர். சுரதேவர், தட்சணாமூர்த்தி, கன்னி மூல விநாயகர், வள்ளி- தெய்வானை உடனாய முருகன், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரன், பைரவர், சூரியன், சந்திரன் அதிகார நந்தி என ஆலயத்தில் அனைத்து தெய்வங்களும் அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள்.

    மன்னனின் வேண்டுகோளை ஏற்று, சிவனே மணலால் கரை அமைத்ததால் இத்தலம் ‘மணல்கரை’ எனப்பெயர் பெற்றது. பின் ‘மணக்கரை’யாக மருவியது. இக்கோவில், 800 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். உக்கிரவழுதி மன்னனால் கட்டப்பட்டு, பிற்காலத்தில் கொங்குராயர் என்ற மன்னரால் விரிவுபடுத்தப்பட்டது. திருமணத் தடை, நவக்கிரகதோஷம் உள்ளவர்கள், இங்குள்ள அனுமனுக்கு வடைமாலை, வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்து பயனடைந்து வருகின்றனர். புதிதாக வீடு கட்டுபவர்கள் சிவபெருமானால் அமைக்கப்பட்ட மணல் கரையில் உள்ள ஆற்று மணலை சிறிது எடுத்துக்கொண்டு போய், தங்களின் புதிய கட்டிடத்துக்குப் பயன்படுத்துகிறார்கள்.

    மணக்கரைநாதர், மீனாட்சி உடனாய சொக்கநாதராக இருப்பதால் இங்கு வந்து தொடர்ந்து வணங்கி வந்தால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கிறது. மணவாழ்வில் பிரச்சினை இருந்தால் கூட பிரிந்த தம்பதிகள் ஒன்றாய் கூடுகிறார்கள்.

    இங்கு நடைபெறும் திருக்கல்யாணத்துக்கும், கொங்கராயகுறிச்சியில் உள்ள சிவன் கோவிலில் நடைபெறும் திருக்கல்யாணத்துக்கும் ஆறாம்பண்ணை வரதராஜப் பெருமாள் கோவிலில் இருந்து தாய் வீட்டு சீதனம் கொண்டு வருவது கொங்குராயர் மன்னர் காலத்திலேயே நடந்து வந்துள்ளது. தற்போது அனைத்து திருவிழாக்களும் நிறுத்தப்பட்டு, ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறும் கோவிலாக உள்ளது. தற்போது கோவிலில் திருப்பணி நடந்து வருகிறது.

    மலைபார்வதி அம்மன்

    மணக்கரையில் மலைபார்வதி அம்மன் கோவில் மிகவும் விசேஷமானது. இந்த அம்மனுக்கு தை மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடைவிழா நடத்துவார்கள். மலை பார்வதி அம்மனை வணங்க, சுமார் 3 கிலோ மீட்டர் மலையில் கரடு முரடான பாதை வழியாக பக்தர்கள் நடந்து சென்று பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். அரசுவேலை கிடைக்க அம்மனை வேண்டி நிற்கிறார்கள். வேலை கிடைத்தவுடன் நன்றி செலுத்த கண்ணீர் மல்க, மீண்டும் மலையேறி வந்து மக்கள் நிற்பதை காணலாம்.

    அமைவிடம்

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலூகாவில் உள்ள மணக்கரைக்கு, திருநெல்வேலி- தூத்துக்குடி சாலையில் உள்ள வல்லநாட்டில் இருந்தும், திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் உள்ள கருங்குளத்தில் இருந்தும் ஆட்டோ மற்றும் பஸ் வசதி உண்டு.
    விநாயகருக்கு பல ஆயிரம் ஆலயங்கள் இருந்தாலும், புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவராக விளங்குகிறார். இது 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம்.
    மூலவர்:  மணக்குள விநாயகர்
    தீர்த்தம்: மூலவருக்கு மிக அருகில் தீர்த்தம் உள்ளது.
    பழமை:  500 வருடங்களுக்கு முன்
    புராண பெயர்:  மணக்குளத்து விநாயகர்
    ஊர்: புதுச்சேரி

    தலவரலாறு

    பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிகாலத்தில் கி.பி.1688ல் பிரெஞ்சுகாரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று கட்டினர். இங்கோட்டைக்கு பின்புறம் அமைந்திருந்த கோயிலே மணக்குள விநாயகர் திருக்கோயில். இத்திருத்தலத்தின் மேல் பகுதியில் ஒரு குளம் இருந்ததாகவும் அது கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அவ்விடத்தில் மணல் அதிகமாக வந்ததாகவும் ஆகவே அக்குளத்திற்கு மணற்குளம் என்று பெயர் வந்ததாகவும் உறுதியாகச் சான்றுகளுடன் கூறுவர். புதுச் சேரியைப் பற்றி அறியக் கிடக்கின்ற பல தரப்பட்ட வரலாற்றுச் செய்திகள் இந்த உண்மையை வலியுறுத்துகின்றன. இந்த மணற்குளத்தின் கீழ்க் கரையில் தான் விநாயகர் ஆலயம் எழுப்பப் பட்டிருக்கின்றது. இதன் காரணமாக இந்த ஆலயத்திற்கு மணற்குள விநாயகர் ஆலயம் என்ற பெயர் வந்தது.

    இந்தக் கோவிலுக்கு அருகில் இருந்த மணலால் ஆன குளத்தில் வற்றாத நீரூற்று இருந்ததாகவும், அந்த சுவையான நீரால் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன. அதனால்தான் இவருக்கு ‘மணக்குள விநாயகர்’ என்ற பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள். இவருக்கு ‘வெள்ளைக்கார பிள்ளையார்’ என்ற பெயரும் உண்டு.

    தலப்பெருமை

    அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட கோயில் இந்த கோயில் மட்டுமே. உற்சவர் வில்புருவமும் மூன்று பதமாகவும் நிற்கிறார். வேறு எங்குமே பார்த்திர முடியாத சிறப்பு இது. விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. இங்கு சித்தி புத்தி அம்மைகள் மனைவியாக உள்ளனர்.

    சிவதலங்களில் இருக்கும் நடராஜரைப் போல் நர்த்தன விநாயகர் இங்கு இருக்கிறார். தொல்லைக் காசு சித்தர் இந்த மணக்குளத்து விநாயகரை வணங்கியுள்ளார். பாரதி, அரவிந்தர் அன்னை ஆகியோர் இத்தலத்தின் தீவிர பக்தர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு தினந்தோறும் அன்னதானம் நடைபெறுகிறது. மூன்று வேளையும் பிரசாதம் செய்து பக்தர்களுக்கு தருகிறார்கள்.

    சிறப்பு

    விநாயகர் தலங்களில் வேறு எங்குமே இல்லாத சிறப்பாக பள்ளியறை இங்கு உள்ளது. இங்கு பள்ளியறையில் விநாயகரோடு உடன் இருப்பது அவரது தாயார் சக்தி தேவியார் ஆவார். தினமும் நைவேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்வார். இதன் அடையாளமாக பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ மூர்த்தி கொண்டு செல்லப்படுகிறது.

    கிணற்றின் மீதுதான் மூலவர் :

    தற்போது மூலவரான மணக்குளத்து விநாயகர் இருக்கும் பீடம் இருப்பதே நீர் நிலை அமைந்துள்ள ஒரு கிணறு அல்லது குளத்தின் மீதுதான் என்பது இத்தலத்தை நன்கு அறிந்த பலருக்கும் தெரியாத செய்தி. பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு மிக அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்லுகிறது. அதில் தீர்த்தம் உள்ளது. இதன் ஆழம் கண்டுபிடிக்க முடியவிலலை. சென்றுகொண்டே இருக்கிறது. இதில் வற்றாத நீர் எப்போது உள்ளது. இது முன்காலத்தில் இருந்த குளமாவும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள்

    திருவிழா

    விநாயகர் சதுர்த்தி – இத்தலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். அது தவிர ஜனவரி முதல் தேதி அன்றுதான் இத்தலத்தின் பிரமாண்டமான அளவில் பக்தர்கள் கூடுவர்கள்.

    பிரம்மோத்சவம் – ஆவணி – 25 நாட்கள் திருவிழா பவித்திர உற்சவம் – 10 நாட்கள் திருவிழா

    இது தவிர மாதந்தோறும் சங்கடகர சதுர்த்தி தினத்தின் போது மூலவருக்கு அபிடேக ஆராதனைகள் மிக விமரிசையாக நடக்கும். அப்போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வர்

    கோரிக்கைகள்:


    எல்லா விதமான பிரார்த்தனைகளும் இங்கு நிறைவேறுகின்றன. கல்யாணவரம், குழந்தை வரம் உள்ளிட்ட எந்த காரியமானாலும் இவரை வணங்கினால் நன்மை கிடைக்கிறது. தொழில் தொடங்குவோர், புதுக்கணக்கு எழுதுவோர், கல்யாண பத்திரிக்கை வைத்து வழிபட விரும்புவோர், புது வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர்.

    இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவெனில் இந்து மதம் என்றில்லாமல் இசுலாம், கிறித்தவ மதத்தை சார்ந்தவர்களும் வெளிநாட்டினரும் பெருமளவில் இங்கு வந்து வழிபடுகிறார்கள். பாண்டிச் சேரியை விட்டு வெளியூர் கிளம்புவர்கள் இத்தலம் வந்து மணக்குள விநாயகரை வணங்கிவிட்டுத்தான் தாங்கள் போக வேண்டிய ஊருக்கு போகிறார்கள் என்பது ஆச்சர்யமான உண்மை. அத்தனை விசேஷம் படைத்தவர் இந்த மணக்குளத்துவிநாயகர்.

    நேர்த்திக்கடன்

    உண்டியல் காணிக்கை, வெளிநாட்டு பக்தர்களின் உபயம் ஆகியவற்றால் கோயில் மிகுந்த சிறப்புடன் திகழ்கிறது. அமெரிக்க வைரத்தாலேயே கவசம் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்பது அதற்கு உதாரணம். இத்தலத்தில் முக்கியமாக பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனாக சித்தி புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவம் நடத்தி வைக்கிறார்கள் வெள்ளித்தேர் இழுத்தும் நேர்த்திகடன் செலுத்துகிறார்கள். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்கிறார்கள்.
    திருமணம் தடைப்படுவர்கள் வழிபடவேண்டிய சில கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் வழிபாடு செய்தால் நிச்சயம் திருமண விரைவில் நடைபெறுவது உறுதி.
    கருமாரியம்மன்

    திருவேற்காட்டில் உள்ள தேவி ஸ்ரீகருமாரியம்மன், மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக கருதப்படுகிறாள். இந்த அம்மன், திருமணத்தடைகளை தகர்த்தெறியும் சக்தி படைத்தவளாகவும் திகழ்கிறாள். தன் பக்தர்களின் எதிரிகளை விலகச் செய்யும் இந்த அன்னை, திருமணத் தடையையும் அகற்றுவது சிறப்பம்சமாகும். இந்த தேவியை வழிபட்டால் விரைவில் திருமணம் நடந்தேறும் என்கிறார்கள். சென்னையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருவேற்காடு.

    திருப்பரங்குன்றம்

    முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதன்மையானது திருப்பரங்குன்றம். இங்கு தான் முருகப்பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்டதாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன. எனவே இந்த ஆலயமும் திருமண வரம் அருளும் திருத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மேலும் செவ்வாய் தோஷத்தால் திருமணம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்தால், தோஷம் நீங்கி விரைவிலேயே திருமணம் நடைபெறும். ஏனெனில் செவ்வாய் எனப்படும் அங்காரகனின் அதிதேவதையாக முருகப்பெருமான் இருக்கிறார். எனவே இங்கு வந்து வழிபட்டால் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும்.

    உத்திரகோச மங்கை

    ராமநாதபுரத்தில் இருந்து கிழக்கே சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது உத்திரகோசமங்கை திருத்தலம். இங்கு மங்கல நாயகி உடனாய மங்கலநாதர் திருக்கோவில் இருக்கிறது. இத்தல இறைவனும் இறைவியும் சுயம்புவாகத் தோன்றியவர்கள். இத்தல இறைவனை யும் இறைவியையும் வழிபடுவதோடு, இங்குள்ள லிங்கங்கள் அனைத்தையும் வழிபட்டால், திருமணத்தடை தவிடுபொடியாகும் என்பது ஐதீகம். ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 71 கிலோமீட்டர் தொலைவில் இந்தத் திருத்தலம் உள்ளது.

    அமிர்தகடேஸ்வரர்

    மேல்கடம்பூர் என்ற ஊரில் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. நவக்கிரகங்களில் ஒருவராக விளங்கும் அங்காரகன் இந்த ஆலயத் திற்கு வந்து இறைவனை வழிபட்டு, தன்னுடைய சாபத்தை போக்கிக் கொண்டதாக தல வரலாறு சொல்கிறது. எனவே இது ஒரு செவ்வாய்தோஷ நிவர்த்தித் தலமாகவும் விளங்குகிறது. இங்கு வந்து அமிர்தகடேஸ்வரரை வழிபட்டுச் சென்றால், திருமணத் தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் இருந்து தென்மேற்கே, கொள்ளிடம் ஆற்றுப்பக்கம் 5 கிலோமீட்ட சென்றால், மேல்கடம்பூரை அடையலாம்.

    நித்ய கல்யாணப் பெருமாள்

    திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் திருக்கோவில், திருமணத் தடைநீக்கும் திருத்தலங் களில் முக்கியமானதாக உள்ளது. இங்குள்ள பெருமாளை வழிபடுபவர்களுக்கு, நிச்சயமாக விரைவிலேயே திருமணம் நடந்தேறும் என்பது அசைக்க முடியாத உண்மை. திருமணக் கோரிக்கை யோடு வரும் ஆண்களோ அல்லது பெண்களோ, இரண்டு பூமாலைகளுடன் தேங்காய், பழம், ஒரு நெய் தீபம் கொண்டு வர வேண்டும். பூஜை முடிந்தபிறகு, நீங்கள் அளித்த மாலைகளில் ஒன்றை அர்ச்சகர் திருப்பித் தருவார். அதை கழுத்தில் அணிந்தபடி ஆலய பிரகாரத்தை ஒன்பது முறை சுற்றிவர வேண்டும். பின் மாலையை வீட்டிற்கு கொண்டுவந்து பத்திரமாக வைக்க வேண்டும். விரைவில் திருமணம் முடிந்ததும் அந்த மாலையை கொண்டுவந்து, ஆலயத்திற்கு பின்புறம் உள்ள புன்னை மரத்தில் கட்டிவிட வேண்டும். மாமல்லபுரத்தில் இருந்து சென்னை வரும் வழியில் 16 கிலோமீட்டர் தூரத்தில் திருவிடந்தை உள்ளது.

    ஷோடச கணபதி

    திருப்பாசூர் என்ற இடத்தில் ஷோடச கணபதிகள் வீற்றிருக்கின்றனர். ஷோடச கணபதி என்பது 16 வகையான விநாயகர் களைக் குறிப்பிடுவதாகும். இந்த ஆலயம் செவ்வாய் தோஷம் நீக்கும் திருத்தலமாக திகழ்கிறது. அதே நேரம், இங்குள்ள விநாயகர்களை, வளர்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தி அன்று வழிபாடு செய்தால், திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் நடந்தேறும். திருவள்ளூரில் இருந்து மேற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் திருப்பாசூர் திருத்தலம் உள்ளது.

    பொத்தநாகபுடி

    சோளிங்கரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில், பொத்தநாகபுடி என்ற கிராமம் உள்ளது. இங்கு நாகநாதேஸ்வரர் என்ற பெயரில் சிவபெருமானும், நாகவல்லி என்ற பெயரில் அம்பாளும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். முன்காலத்தில் நாகம் வழிபட்ட தலம் என்பதால் இந்த திருத்தலத்திற்கு, நாகபுடி என்ற பெயர் வந்திருக்கிறது. இறைவனின் திருநாமும் நாகேஸ்வரர் என்றானது. இந்த ஆலயம் சர்ப்ப தோஷத்தை மட்டுமின்றி, திருமணத் தடையை நீக்குவதிலும் சிறப்பு மிக்கதாக விளங்குகிறது.
    மகாராஷ்டிரா மாநிலத்தில் மோர்காவ் என்ற இடத்தில் உள்ளது மோரேஷ்வர் திருக்கோவில். இது ‘மயூரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    மகாராஷ்டிரா மாநிலத்தில் அஷ்ட விநாயகர் கோவில்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் மோர்காவ் என்ற இடத்தில் உள்ள மோரேஷ்வர் திருக்கோவில். இது ‘மயூரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறது. முன் காலத்தில் இந்தப் பகுதியில் மயில்கள் அதிகமாக இருந்ததால் ‘மோர்காவ்’ என்ற பெயர் வந்தது. அதுமட்டுமல்ல இந்த ஊரும் மயிலைப்போன்ற தோற்றத்தையே கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ‘மோர்’ என்றால் ‘மயில்’ என்றும், ‘காவ்’ என்றால் ‘கிராமம்’ என்றும் பொருள்.

    கண்டமீகி என்னும் பகுதியை சக்கரபாணி என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். மிகச் சிறந்த ஆட்சியைக் கொடுத்த அந்த அரசனுக்கு, நெடுநாளாக குழந்தை பாக்கியம் இல்லை. ஒருநாள் மன்னனின் அரண்மனைக்கு வந்த துறவி, அவனிடம் சூரிய பகவானுக்கு பூஜை செய்யும்படி கூறினார்.

    அரசனும் அவ்வாறே செய்ய, சில மாதங்களில் அரசனின் மனைவி கர்ப்பம் தரித்தாள். ஆனால் சூரியனின் அம்சமாக உருவான அந்தக் குழந்தையின் கர்ப்பத்தை தாங்க முடியாமல், அரசனின் மனைவி தவித்தாள். அவள் அந்த கர்ப்பத்தை சமுத்திரத்தில் விட்டாள். அது ஒரு அழகான, பலசாலியான குழந்தையாக உருவெடுத்தது. சமுத்திரராஜன், அந்தணர் உருவெடுத்து அந்தக் குழந்தையை மீட்டு அரசனிடம் ஒப்படைத்தான்.

    அரசன் அந்தக் குழந்தைக்கு, சிந்து என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். சிந்து, வாலிபப் பருவம் அடைந்ததும், சுக்ராச்சாரியாரின் உபதேசப்படி, சூரியனை வழிபாடு செய்து வந்தான். அவனது தவம் இரண்டாயிரம் வருடம் நீண்டது. இதைஅடுத்து சிந்துவின் முன்பாக வந்து தோன்றினார், சூரிய பகவான்.

    சிந்து அவரிடம், “இறவாத வரம் வேண்டும்” என்று கேட்டான். அதற்கு சூரியன், அமிர்தத்தால் செய்யப்பட்ட உணவை அளித்து, “இது உன் வயிற்றில் இருக்கும் வரை நீ இறக்கமாட்டாய்” என்று கூறி மறைந்தார்.

    வரம் கிடைத்ததும் ஆணவமும் குடிகொண்டுவிட்டது சிந்துவுக்கு. அவன் புத்தி தடுமாறி, கர்வத்தினால் எல்லோரையும் அழிக்க ஆரம்பித்தான். தேவர்களையும் தோற்கடித்து சிறையில் அடைத்தான். இதனால் தேவர்கள் அனைவரும், கணேசரை நினைத்து வழிபாடு செய்தனர். விநாயகரும், சிந்துவுடன் போரிட்டு தேவர்களை காக்க எண்ணினார். அதன்படி சிந்துவுடன் போரிட்டார். சிந்து தனது சேனாதிபதி கமலாசுரனுடன் சேர்ந்து விநாயகரை கடுமையாக எதிர்த்தான்.

    உக்கிரமாக நடந்த இந்தப் போரில் சிந்துவையும், கமலாசுரனையும் வதம் செய்தார் விநாயகர். அதில் கமலாசுரனின் உடலை மூன்று பாகங் களாக்கி வீசினார். அதில் தலை விழுந்த இடம்தான் ‘மோர்காவ்’. விநாயகர் மயில் மீது அமர்ந்து போரிட்டதால் இந்தப் பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.

    இந்த ஆலயத்தைச் சுற்றி நான்கு தூண்கள் உள்ளன. முக்கிய நுழைவுவாசல் அருகே ஆமை யின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அடுத்து விநாயகரை நோக்கியபடி நந்தி உள்ளது. இத்தல விநாயகரின் வாகனமான மூஷிகம், தன் இரு கைகளிலும் லட்டு ஏந்தியவாறு உள்ளது. இங்குள்ள மூல விக்கிரகம் மிகவும் அழகானது. விநாயகரின் துதிக்கை இடதுபக்கமாக திரும்பியுள்ளது. அவரது முகமோ கிழக்கு நோக்கி உள்ளது. விநாயகரின் தலைக்கு மேல், ஆதிசேஷன் தன்னுடைய படத்தை விரித்துக் கொண்டிருக்கிறது. விநாயகரின் இருபக்கமும் சித்தி- புத்தி இருவரும் உள்ளனர்.

    இந்தக் கோவிலில் மூன்று கால பூஜை நடக்கிறது. ஆலயம் காலை 5 மணியில் இருந்து இரவு 10 மணி வரை தொடர்ச்சியாக திறந்து வைக்கப்பட்டிருக்கும். மோர்காவ் கிராமம், புனேவில் இருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
    சென்னை பெருநகரைச் சுற்றிலும் நவக்கிரக தலங்கள் இருப்பது விசேஷமானதாகும். அந்த தலங்களைப் பற்றி சிறிய குறிப்புகளாகப் பார்க்கலாம்..
    நவக்கிரகங்களான சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்ரன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியவற்றுக்கான சிறப்பு தலங்கள், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ளன. அதே போல் சென்னை பெருநகரைச் சுற்றிலும் நவக்கிரக தலங்கள் இருப்பது விசேஷமானதாகும். அந்த தலங்களைப் பற்றி சிறிய குறிப்புகளாகப் பார்க்கலாம்..

    கொளப்பாக்கம்

    கொளப்பாக்கத்தில் அகஸ்தீஸ்வரர் கோவில் இருக்கிறது. 1,300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த ஆலயம், சூரியனுக்குரிய தலமாக போற்றப்படுகிறது. இந்தக் கோவிலில் உள்ள சிவலிங்கத்தை, முன்காலத்தில் சூரிய பகவான் வழிபாடு செய்ததாக புராணங்கள் சொல்கிறது. சென்னையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் குன்றத்தூர் செல்லும் சாலையில் இந்த திருத்தலம் உள்ளது.

    சோமமங்கலம்

    சென்னை நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் சோமமங்கலம் உள்ளது. பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையான திருக்கோவிலாக, இங்குள்ள சோமநாதீஸ்வரர் திருக்கோவில் திகழ்கிறது. தட்சனின் சாபத்தால் சந்திரன் தேய்ந்தான். அவன் இங்குள்ள வினைத் தீர்த்தம் என்ற குளத்தில் நீராடி, லிங்கம் ஒன்றை நிறுவி வழிபாடு செய்தான். இதனால் இது சந்திரனுக்குரிய தலமாக விளங்குகிறது. பிராட்வே, காஞ்சிபுரம், குன்றத்தூர் ஆகிய பஸ்நிலையங்களில் இருந்து சோமமங்கலத்திற்கு நேரடி பஸ் வசதிகள் உள்ளன.

    பூந்தமல்லி

    பூந்தமல்லியில் வைத்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. சோழர்களால் கட்டப்பட்ட 1,300 ஆண்டுகள் பழமையான ஆலயம் இது. நவக்கிரக தலங்களில் அங்காரகன் எனப்படும் செவ்வாய் தலமாக இது விளங்குகிறது. செவ்வாய்க்கிழமை அன்று ராகு கால நேரத்தில் அங்காரகனுக்கும், விஷ்ணு துர்க்கைக்கும் மாவிளக்கு தீபம் ஏற்றுவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம். சென்னையில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருத்தலம் உள்ளது. சென்னையின் அனைத்து பகுதியில் இருந்தும் பூந்தமல்லிக்கு பஸ்வசதி உள்ளது.

    கோவூர்

    சென்னையில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கோவூர். இங்கு சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 1,300 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், சோழர் காலத்தில் கட்டப்பட்டதாகும். பஞ்ச ரத்ன கீர்த்தனை பாடல்பெற்றது இந்தத் தலம். நவக்கிரகங்களில் ஒன்றான புதனுக்குரிய வழிபாடு இங்கு நடக்கிறது. ஒவ்வொரு புதன்கிழமையும் வில்வ இலையால் ஈசனை பூஜிப்பது இங்கு விசேஷம்.

    போரூர்

    சென்னை- பெங்களூரு சாலையில் அமைந்துள்ளது போரூர் திருத்தலம். இங்குள்ள ராமநாதீஸ்வரர் கோவில் 800 ஆண்டுகள் பழமையானது ஆகும். சீதையைத் தேடிவந்த ராமபிரான், இத்தலத்தில் 48 நாள் தங்கி விரதம் இருந்து, பின்னர் ராமேஸ்வரம் புறப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது. சிவபெருமானை, குருவாக பாவித்து ராமர் வழிபட்டதால், நவக்கிரக தலங்களில் இது குரு தலமாக விளங்குகிறது. சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் போரூருக்கு நேரடி பஸ்வசதி உண்டு.

    கெருகம்பாக்கம்

    சென்னையில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கெருகம் பாக்கம். இங்குள்ள திருநீலகண்டேஸ்வரர் கோவில், சோழர்களால் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். நவக்கிரகங்களில் கேதுவுக்குரிய தலமாக இது விளங்குகிறது. போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் அனைத்து பஸ்களும் கெருகம்பாக்கத்தில் நின்று செல்லும்.

    குன்றத்தூர்

    சென்னையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, குன்றத்தூர் திருநாகேஸ்வரர் திருக்கோவில். இது முதலாம் குலோத்துங்கச் சோழனால் கி.பி. 1070-ல் கட்டப்பட்டது. நவக்கிரக தலங்களில் இது ராகுவுக்குரிய தலமாக திகழ்கிறது. இங்கு ராகு பகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    பொழிச்சலூர்

    பொழிச்சலூரில் உள்ள அகஸ்தீஸ்வரம் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயம் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்டது. அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் இங்கு உள்ளது. இது சனி பகவானுக்குரிய திருத்தலமாக விளங்குகிறது. பல்லாவரத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் இந்த திருத்தலம் உள்ளது. தாம்பரத்தில் இருந்து பொழிச்சலூருக்கு ஏராளமான பஸ்வசதி உள்ளது.

    மாங்காடு

    சென்னையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் மாங்காடு என்ற ஊரில் வல்லீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த ஆலயம், நவக்கிரகத் தலங்களில் சுக்ரனுக்குரியதாக விளங்குகிறது. அசுரர்களின் குருவாக விளங்கிய சுக்ரன், இங்கு ஈசனை வணங்கியதால், இத்தலத்தில் சுக்ர வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாங்காடு காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் இந்த ஆலயம் உள்ளது. சென்னை மற்றும் தாம்பரம் பகுதிகளில் இருந்து இந்த ஊருக்கு செல்ல ஏராளமான பஸ்வசதி உள்ளது. 
    ×