search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சித்தடேக் சித்தி விநாயகர் திருக்கோவில்- மகாராஷ்டிரா
    X
    சித்தடேக் சித்தி விநாயகர் திருக்கோவில்- மகாராஷ்டிரா

    சித்தடேக் சித்தி விநாயகர் திருக்கோவில்- மகாராஷ்டிரா

    மகாராஷ்டிர மாநிலத்தில் அஷ்ட விநாயகர்கள் ஆலயம் அமைந்துள்ளது. அவற்றில் ஒன்றுதான் சித்தடேக் என்ற ஊரில் உள்ள சித்தி விநாயகர் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    மகாராஷ்டிர மாநிலத்தில் அஷ்ட விநாயகர்கள் ஆலயம் அமைந்துள்ளது. அவற்றில் ஒன்றுதான் சித்தடேக் என்ற ஊரில் உள்ள சித்தி விநாயகர் திருக்கோவில். புனேவில் இருந்து சுமார் 110 கிலோமீட்டர் தொலைவில் சித்தடேக் உள்ளது. நம் ஊரில் குன்றின் மேல் அருள்புரியும் முருகப்பெருமானைப் போல, சித்தடேக்கில் உள்ள சித்தி விநாயகர் கோவிலும் சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது. இத்தல மூலவரான விநாயகப்பெருமான், தானாக (சுயம்பு) தோன்றியவர் என்பது சிறப்புக்குரியதாகும்.

    இந்த விநாயகரின் உயரம் வெறும் மூன்று அடிதான். அகலம் 2½ அடி. பொதுவாக விநாயகருக்கு தொந்தி வயிறு காணப்படும். ஆனால் இங்குள்ள விநாயகருக்கு வயிறு தட்டையாக இருக்கிறது. இது ஒரு அபூர்வமாக அமைப்பாகும். விநாயகரின் இருபக்க மடியிலும், சித்தி மற்றும் புத்தி ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர். இந்த விநாயகரை தனியாக வலம் வந்து வழிபட முடியாது. அப்படி வலம் வர வேண்டும் என்றால் மலையையும் சுற்றி வந்துதான் வழிபட முடியும். இந்த மலையை சுற்றி வருவதற்கு சுமார் அரை மணி நேரம் ஆகும்.

    தல வரலாறு

    ஒரு பிரளய காலம் முடிந்து மீண்டும் உயிர்களை படைக்கும் பணியில் பிரம்மன் ஈடுபட முற்பட்டார். அந்தப் பணியைத் தொடங்குவதற்கு முன்பாக, விநாயகப்பெருமானை வழிபட வேண்டும் என்று நினைத்தார். விநாயகரும், “ஓர் எழுத்து மந்திரத்தை உபதேசம் செய்து வா” என்று அசரீரியாக வந்து உத்தரவிட்டார்.

    அதன்படி பிரம்மதேவனும் இடைவிடாது, ‘ஓம்’ என்ற ஓர் எழுத்து மந்திரத்தை சொல்லி, விநாயகப் பெருமானை நினைத்து தவம் செய்து வந்தார். பல ஆண்டுகளாக அவர் புரிந்த அந்த தவத்தில் மகிழ்ந்த விநாயகப்பெருமான், பிரம்மதேவனின் முன்பாகத் தோன்றினார்.

    விநாயகரை வணங்கிய பிரம்மதேவன், “நான் செய்யப்போகும் படைப்புத் தொழிலில் எந்தவித இடையூறும், தடைகளும் வராதபடி காத்தருள வேண்டும்” என்று வேண்டினார். விநாயகரும் அப்படியே வரங்களை அளித்து அங்கிருந்து மறைந்தார்.

    ஆனால் பிரம்மன் தன்னுடைய படைப்புத் தொழிலை தொடங்கியதும், ஏராளமான அபசகுனங்கள் ஏற்பட்டன. மகாவிஷ்ணுவின் காதில் இருந்து மது, கைடப என்னும் இரண்டு அசுரர்கள் தோன்றினர். அவர்கள் தேவர்களையும், பிரம்மனையும் துன்புறுத்தினர். படைத்தல் தொழிலையும் செய்யவிடாமல் தடுத்தனர். இதனால் தேவலோகத்தில் இருந்த தேவர்களும், பூமியை காத்துக் கொண்டிருந்த பூமாதேவியும் மிகவும் சிரமப்பட்டனர். அவர்கள் அனைவரும் வைகுண்டம் சென்று, அங்கு சயன கோலத்தில் நித்திரையில் ஆழ்ந்திருந்த மகாவிஷ்ணுவை எழுப்பி, தங்களைக் காத்தருளும்படி வேண்டினர்.

    மகாவிஷ்ணுவும் தேவர்கள் மீது இரக்கம் கொண்டு, மது, கைடப அசுரர்களுடன் போரிட்டார். காலங்கள் பல கடந்த நிலையிலும், அந்த இரண்டு அசுரர்களையும், மகாவிஷ்ணுவால் வெற்றிகொள்ள முடியவில்லை. இதையடுத்து சிவபெருமானிடம் சென்ற மகாவிஷ்ணு, “நான் இந்தப் போரில் அசுரர்களை வெல்ல முடியாததற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்.

    அதற்கு சிவபெருமுான், “எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும்முன்பாக விநாயகரை துதிக்க வேண்டும் என்பதை மறந்து விட்டாயா?” என்று எதிர்கேள்வி கேட்டார்.

    அசுரர்களுடன் போரிட வந்தபோது, விநாயகரை வணங்காமல் வந்தது அப்போதுதான் மகாவிஷ்ணுவுக்கு புரிந்தது. உடனே அவர் ஒரு மலை குன்றின் மீது அமர்ந்து “கணேஷாய நம” என்று ஜபிக்கத் தொடங்கினார். அவருடைய அந்த பக்தியால் மகிழ்ந்த விநாயகர், விஷ்ணுவுக்கு காரிய சித்தியை அளித்தார். அதன்பிறகு போர்க்களம் புகுந்த மகாவிஷ்ணு, அந்த இரண்டு அசுரர்களையும் கண நேரத்தில் வதம் செய்து வெற்றிகண்டார்.

    இதையடுத்து மகாவிஷ்ணுவுக்கு, விநாயகர் காரிய சித்தியை வழங்கிய குன்றின் மேல் அவருக்கு கோவில் அமைக்கப்பட்டது. அதுவும் நாளடைவில் சிதிலமானது. பல ஆண்டுகளுக்குப்பிறகு அந்த பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன், குன்றின்மேல் சிதிலமடைந்த ஆலயம் இருப்பதை அறிந்து, தினமும் அந்த ஆலயத்திற்கு வந்து விநாயரை வழிபட்டதோடு, அவருக்கு ரொட்டியையும் நைவேத்தியமாக படைத்து வந்தான்.

    அதன்பிறகான பேஷ்வா காலத்தில் இந்த ஆலயத்திற்கு திருப்பணிகள் செய்யப்பட்டது. இந்த ஆலயத்தின் அருகிலேயே வியாச முனிவருக்கு சன்னிதி உள்ளது. அங்குதான் அவர் யாகம் செய்தார் என்று கூறப்படுகிறது. நாம் தரிசிக்க வேண்டிய விநாயகர் ஆலயங்களில் இதுவும் முக்கியமான ஒன்றாகும்.
    Next Story
    ×