search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மானஸாதேவி கோவில்- ஹரியானா
    X
    மானஸாதேவி கோவில்- ஹரியானா

    மங்களங்கள் அருளும் அன்னை மானஸாதேவி கோவில்- ஹரியானா

    ஹரியானா சண்டிதேவி மந்திரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ள பிலாஸ்பூர் கிராமத்தில் மானஸாதேவி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ஹரியானா மாநிலம், பஞ்ச்குலா மாவட்டத்திலுள்ள பிலாஸ்பூர் பகுதி ஒரு காலத்தில் சக்தி வழிபாட்டிற்குரிய பகுதியாகத் திகழ்ந்தது. இங்கு தேவி உபாசகர்கள் தேவியை சண்டி, காளிகா, மானஸா, பீகா என்ற பல பெயர்களில் வழிபட்டு வந்துள்ளனர். பிலாஸ்பூரில் மானஸாதேவி என்ற பெயரில் இரண்டு ஆலயங்களில் கோயில்கொண்டு அருள்பாலித்து வருகிறாள். மானஸாதேவி வழிபாடு இமயமலைப் பிராந்தியத்தின் கலாசாரத்தையும் நம்பிக்கையையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. ஹரியானா மாநிலத் தலைநகரான சண்டிகர், அங்குள்ள ஸ்ரீசண்டிதேவியின் பெயராலேயே அமைந்தது. இப்பகுதியில் மிகப் பிரபலமான இந்த சண்டிதேவி மந்திரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ள பிலாஸ்பூர் கிராமத்தில் மானஸாதேவி ஆலயம் அமைந்துள்ளது.

    சிவாலிக் மலையடிவாரத்திலுள்ள இயற்கை எழில் மிகுந்த அழகிய சிறிய கிராமமான பிலாஸ்பூரில் 100 ஏக்கர் விஸ்தீரணமுள்ள விசாலமான இடத்தில் இரண்டு பழமையான ஆலயங்கள் உள்ளன. சுமார் 200 ஆண்டுகட்கு முன்பு மணி மஜ்ரா என்றழைக்கப்பட்ட இப்பகுதியை ஆண்ட கோபால் சிங் என்ற மன்னரால் இந்த மானஸாதேவி ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்திலிருந்து சுமார் 200 மீ. தொலைவில் பாட்டியாலா மன்னராக இருந்த கரம்சிங் 1840ல் மானஸாதேவிக்கு இன்னொரு ஆலயத்தைக் கட்டினார். மன்னர் வசமிருந்த இப்பகுதி சுதந்திரம் அடைந்தவுடன், இந்தியாவோடு இணைக்கப்பட்டது. மானஸாதேவி ஆலய வளாகத்தில் இரண்டு தனித்தனி ஆலயங்கள் உள்ளன.

    மன்னர் கோபால் சிங் கட்டிய முதல் ஆலயமான மானஸாதேவி ஆலயம், இப்பகுதியில் வழக்கமாகக் காணப்படும் நாகரா பாணியாக இன்றி, நான்கு மூலைகளிலும் கூர்மையான கோபுரங்கள் மற்றும் நடுவே பெரிய உருண்டையான கோளம் ஆகியவற்றோடு முகலாயப் பாணியில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆலயத்தின் நடு நாயகமாக பிரதான தேவதையாக மானஸாதேவியையும், நான்கு மூலைகளிலும் பரிவார சந்நதிகளையும் கொண்டு பஞ்சாயதன ஆலயமாக
    அமைந்துள்ளது. அக்காலத்தில் கருவறையில் பிண்டி எனப் படும் மூன்று கூழாங்கற்களே துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி தேவிகளாக பக்தர்களால் வழிபடப்பட்டன. ஆனால், துர்க்கையின் அம்சமான மானஸாதேவியின் திருவுருவமும் கருவறையில் இருக்க வேண்டுமென்பதற்காக அவற்றின் பின்புறம் மானஸாதேவியின் மார்பளவு பளிங்குச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    தற்போது மார்பளவு பளிங்கு விக்கிரகமான மானஸாதேவியோடு, பிண்டி உருவத்திலுள்ள மூன்று விக்கிரகங்களும் சேர்த்தே வழிபடப்படுகின்றன. இந்தப் பிண்டி களுக்கும் பிரபாவளி அணிவிக்கப்பட்டு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. அழகிய இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இந்த மானஸாதேவி ஆலயத்தின் அருகேயே சண்டி ஹோமம் நடத்தும் பொருட்டு விசாலமான யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. பழமையான, பிரதானமான மானஸாதேவி ஆலயத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் பாட்டியாலா மன்னரால் 1840ல் கட்டப்பட்ட இன்னொரு மானஸாதேவி ஆலயம் காணப்படுகிறது. இதனை பாட்டியாலா ஆலயம் என்கிறார்கள். வட இந்திய ஆலயப் பாணியில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் நான்கு புறங்களிலும் நான்கு சிறிய கூர்மையான கோபுரங்களும், பரிக்ரமா எனப்படும் பிராகாரங்களும் அமைந்துள்ளன.

    கருவறையில் நடுநாயகமாக உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகள் அமைந்த வெள்ளி மண்டபத்தில் பளிங்குக் கல்லில் வடிக்கப்பட்ட தேவி, வெள்ளிக் கவசத்தோடு காட்சி தருகிறாள். தேவியின் விக்கிரகத்தோடு இங்கும் பிண்டி என்ற சுயம்பு வடிவங்களும் வணங்கப்படுகின்றன. இந்த இரு ஆலயங்களின் சுவர்களிலும் ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற புராணக் காட்சிகளும், தேவியின் திருவுருவங்களும் அழகுற வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.
    பிலாஸ்பூர் மானஸாதேவி ஆலயத்தில், ஏப்ரல்-மே மாதத்தில் வஸந்த நவராத்திரியும், ஆஸ்வீன மாதமான செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் சரத் நவராத்திரியும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. நவராத்திரியின் ஏழு மற்றும் எட்டாவது நாட்களில், சுத்தம் செய்யப்படும் இரண்டு மணி நேரம் மட்டுமே ஆலயங்கள் அடைக்கப்படுகின்றன. பிற நாட்களில் அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இடைவெளியின்றி திறந்து வைக்கப்படுகின்றன.

    நவராத்திரி விழாக்களின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயங்களில் கூடுகின்றனர். பண்டாரா எனப்படும் கோயில் சாப்பாடு கூடத்தில் அன்றாடம் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் செய்யப்படுகிறது. மானஸாதேவி மற்றும் பாட்டியலா ஆலயங்கள் ஸ்ரீமாதா மானஸாதேவி ஆலயக் குழுவினால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீமானஸாதேவி ஆலயம் கோடைக்காலத்தில் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், குளிர்காலத்தில் காலை 5 முதல் இரவு 9 வரையிலும் திறந்து வைக்கப்படுகின்றது. சக்தி த்வஜம் என்ற கொடிமரத்திலிருந்து ஆலயம் வரை அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் பக்தர்கள், தேவியை தரிசிக்க வரிசையில் நிற்கின்றனர். பக்தர்கள் தாங்கள் தயாரித்த பிரசாதங்களை தேவிக்கு அர்ப்பணிக்கலாம்.  இந்தப் பிரசாதங்கள் தேவியின் காலடிகளில் வைக்கப்பட்டு பக்தர்களிடம் திரும்பத் தரப்படுகின்றன.

    சண்டிகரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் பஞ்ச்குலா பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் மானஸாதேவி ஆலயம் அமைந்துள்ளது.
    Next Story
    ×