என் மலர்tooltip icon

    கோவில்கள்

    முருகப்பெருமானின் பெருமைகளை எடுத்துரைக்கும் ஆறுபடை வீடுகளைப் பற்றி சிறிய குறிப்புகளாக இங்கே பார்க்கலாம்..
    முருகப்பெருமானுக்கு முகங்களும் 6. முருகனின் படை வீடுகளும் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களும் 6 பேர், சரவணபவ என்ற  முருகப்பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்து. ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு போன்றவற்றை குறிக்கும். இந்த  தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவரும் முருகப்பெருமான்தான்.

    தேவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த சூரபதுமனையும், அவனது சகோதரர்களையும் அழிப்பதற்காக ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர், முருகப்பெருமான். அவர், சூரபதுமனின் ஆணவத்தை அழித்து அவனை தனக்குள் ஐக்கியப்படுத்திக்கொண்ட நாளை, ‘சூரசம்ஹார தினம்’ என்ற வகையில் கந்தசஷ்டி நாள் அன்று கொண்டாடி வருகிறோம். இந்த நாளில்

    திருப்பரங்குன்றம்

    முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதன்மையானது, திருப்பரங்குன்றம் திருத்தலம். சூரபதுமனிடம் அடிமைப்பட்டுக் கிடந்த தேவர்களை, அந்த அசுரனை வதம் செய்து விடுவித்தார், முருகப்பெருமான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக, தேவேந்திரன் தன்னுடைய மகளான தெய்வானையை முருகப்பெருமானுக்கு திருமணம் செய்து வைத்தான். அதன்படி முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்ற சிறப்புமிக்க தலம் இது. இங்கு தனது மனைவி தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் முருகப்பெருமான் காட்சி தருகிறார்.

    ஆனாலும் அந்த உருவம் புடைப்புச் சிற்பமாக இருப்பதால், ஞானத்தின் அடையாளமாக கருதப்படும் வேலுக்குத் தான் இங்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆரம்ப காலத்தில் இங்கு வேல் வழிபாடு மட்டுமே இருந்ததாக கூறுப்படுகிறது. இங்கு சரவணப்பொய்கை, லட்சுமி தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. திருமணத் தடை இருப்பவர்கள், இந்தக் கோவிலுக்கு திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வந்து வழிபாடு செய்தால், விரைவில் திருமணம் நடைபெறும். பவுர்ணமி நாட்களில், திருப்பரங்குன்றம் மலையை வலம் வந்தால் நன்மைகள் பலவும் கிடைக்கும்.

    மதுரையில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, திருப்பரங்குன்றம் திருக்கோவில்.

    திருச்செந்தூர்

    ஆறுமுகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது திருத்தலம் இது. மேலும் கடற்கரையோரம் அமைந்த ஒரே திருக்கோவிலும் இதுதான். பொதுவாக முருகப்பெருமானின் திருக்கோவில் அனைத்தும் ஏதாவது ஒரு குன்றின் மீதுதான் அமைந்திருக்கும். ஆனால் திருச்செந்தூர் திருத்தலம் சமதளத்தில் அமைந்திருப்பதாக பலரும் கூறுவார்கள். ஆனால் இதுவும் முன்காலத்தில் குன்றாக இருந்த இடம்தான் என்றும், பின்னாளில் கடல் மட்ட உயரம் காரணமாக சமதளமாக மாறிப்போனதாகவும் சில ஆய்வுகள் சொல்கின்றன. இங்கு குன்று இருந்ததற்கு சான்றாக, தற்போது இருக்கும் வள்ளிக்குகை பகுதியை சுட்டிக்காட்டுகிறார்கள்.

    சூரபதுமனை, முருகப்பெருமான் வதம் செய்த இடம் இதுவாகும். இங்கு ராஜ அலங்காரத்தில் சண்முகனாக, கைகளில் அன்னை தந்த வேல் தாங்கி வெற்றிவீரனாக அருள்கிறார் முருகப்பெருமான். இங்கு நடைபெறும் கந்தசஷ்டி விழாவும், அதன் ஒருபகுதியாக நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வும், உலக பிரசித்திப்பெற்றதாகும். தற்போது கொரோனா தடைக்காலம் என்பதால், அந்த நிகழ்வுகள் சில கட்டுப்பாட்டுடன் நடைபெற உள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிறப்பால் ஊமையான குமரகுருபர சுவாமிகள், தனது ஐந்தாவது வயதில் இத்தலம் வந்து பேசும் திறனைப் பெற்றார் என்பது வராலாற்று பதிவு. இங்குள்ள முருகப்பெருமான், தன் கைகளில் ருத்ராட்ச மாலையும், தாமரை மலரும் கொண்டு பூஜிக்கும் அருட்கோலத்தில் வீற்றிருக்கிறார். இங்கு முருகப்பெருமான் பூஜித்த பஞ்ச லிங்கங்கள் உள்ளன. இதனை பெரும்பாலான மக்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. கருவறையின் வடக்குப் பகுதியில் உள்ள சிறிய வாசல் வழியாக நுழைந்து சென்றால், இந்த பஞ்ச லிங்கங்களை தரிசிக்க முடியும். இந்த ஆலயத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ராஜகோபுரம் மிகவும் பெரியது. மூலவரான சுப்பிரமணியர் கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு நோக்கியும் அருள்புரிகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலத்திற்குச் செல்ல ரயில் வசதிகளும், பேருந்து வசதிகளும் உண்டு. தூத்துக்குடியில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருச்செந்தூர் திருத்தலம்.

    திருவாவினன்குடி (பழநி)

    கந்தனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாவது தலம் இது. பழநி என்ற பெயர் தற்போது நிலைத்திருந்தாலும், இதன் ஆதிகால பெயர் ‘திருவாவினன்குடி’ என்பதாகும். மலையடிவாரத்தில் சற்று மேல்புறத்தில் ஒரு ஆலயம் அமைந்திருக்கிறது. திருமகளும், அலைமகளும், காமதேனுவும் பூஜித்த இடம் இது. அதேபோல் மலை உச்சியில் பாலதண்டாயுதபாணி திருக்கோவில் அமைந்துள்ளது. மலை உச்சியில் உள்ள முருகனின் சிலையானது, நவபாஷாணத்தால் செய்யப்பட்டது. இதனைச் செய்தவர், போகர் என்னும் சித்தர் ஆவார். சித்திரை மாதம் அக்னி நட்சத்திர காலத்தில்தான், இந்த நவபாஷாண சிலையை போகர் இங்கு நிறுவியதாக சொல்லப்படுகிறது. எனவே அந்த அக்னி நட்சத்திர நாட்கள் இங்கு விசேஷசமாக கொண்டாடப்படும்.

    மலை உச்சியில் வீற்றிருக்கும் பாலதண்டாயுதபாணி, ஆண்டி கோலத்தில் பாலகனாக அருள்பாலிக்கிறார். இவருக்கு செய்யப்படும் ராஜ அலங்காரம் மிகவும் விசேஷமானதாகும். இங்கு இறைவனின் நவபாஷாண சிலையின் மீது சாத்தப்பட்ட சந்தனம், மிகவும் புனிதமான பிணி தீர்க்கும் மருந்தாக மாறுகிறது. இங்கு அபிஷேகம் செய்த பஞ்சாமிர்தமும், விபூதியும் கூட நம்பினோரின் நோய்களை நீக்கி நன்மை செய்கிறது. இந்த ஆலயத்திற்கு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். போகர் முனிவருடன் அருணகிரிநாதர், நந்தியடிகள், தேவராய சுவாமிகள், நக்கீரர் போன்ற எண்ணற்ற முனிவர்கள், சித்தர்கள் இங்கு வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலத்திற்கு செல்ல, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பேருந்து வசதி உள்ளது. திண்டுக்கல்லில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் பழநி திருக்கோவில் அமைந்துள்ளது.

    திருவேரகம் (சுவாமிமலை)

    முருகப்பெருமான், தன் தந்தையான ஈசனுக்கு உபதேசம் செய்த இடம் இந்த சுவாமிமலை. இது முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்காவது திருத்தலம். சுவாமி என்பது இங்கு எல்லோருக்கும் பெரியவராகிய சிவபெருமானையே குறிக்கிறது. இருப்பினும் மகனுக்கு சீடனாக இருந்து ஈஸ்வரன் உபதேசம் பெற்றதால், குருவாகிய முருகனுக்கு மேல் பகுதியிலும், சிவனுக்கு கீழ் பகுதியிலும் சன்னிதிகள் அமைந்துள்ளது. இங்கு உள்ள 64 படிகளில், 60 படிகள் 60 தமிழ் ஆண்டுகளையும், 4 படிகள் 4 யுகங்களையும் குறிப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

    கோவிலின் நுழைவு வாசலில் சிவனின் இடது தோளில், குழந்தையாக வடிவேலன் அமர்ந்து உபதேசம் செய்யும் காட்சி சுதை சிற்பமாக உள்ளது. பாம்பன் சுவாமிகள், அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சாரியார் போன்ற பல யோகிகள் பாமாலை பாடி இங்குள்ள முருகனை துதித்துள்ளனர். இங்கு வழிபடும் பக்தர்களுக்கு கல்வி வளம், குழந்தைப் பேறு கிடைக்கும். குரு மூர்த்த சன்னிதி என்பதால், இங்கு உபநயனம் எனப்படும் பூணூல் விழாக்கள் நடத்துவது பிரசித்தமாகும்.

    கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் சுவாமிமலை இருக்கிறது. இத்தலத்திற்குச் செல்ல ஏராளமான பேருந்துகள் இயங்குகின்றன.

    திருத்தணி

    சூரபதுமனையும், அவனது சகோதரர்களான சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோரையும் முருகப்பெருமான் வதம் செய்தார். அவர்களின் அழிவு வழி போர்க் கோலத்துடன் ஆவேசமாக இருந்த முருகப்பெருமான், தன்னுடைய கோபம் தணிய வந்து அமர்ந்த தலம் திருத்தணி. ‘செரு’ என்றால் கோபம் என்றும், ‘தணி’ என்றால் ‘குறைதல்’ என்றும் பொருள். முன்காலத்தில் ‘செருத்தணி’ என்று அழைக்கப்பட்டு வந்த ஊரே, தற்போது ‘திருத்தணி’ என்று வழங்கப்படுவதாக கூறுகிறார்கள். திருச்செந்தூரில் சூரபதுமனை வதம் செய்தபிறகு வந்து கோபம் தணித்த இடம் இது என்பதால், இந்த ஆலயத்தில் முருகப்பெருமானின் பிரசித்திப் பெற்ற நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    முருகப்பெருமானின் ஐந்தாவது வீடு இது. முருகப்பெருமான், குறத்திப் பெண்ணான வள்ளியை மணம் புரிந்து கொண்டதும் இந்தத் தலத்தில்தான். சுமார் 400 அடி உயரமுள்ள சிறிய மலைமீது பக்தர்கள் செல்ல வசதியாக 365 படிகள் உள்ளன. வருடத்தின் நாட்களை இப்படிகள் குறிப்பதாக சொல்லப்படுகிறது. தணிகைநாதன், தணிகேசர், தணிகைவள்ளல் என்றெல்லாம் புகழப்படும் இந்த தல நாயகனுக்கு ஆடிக்கிருத்திகை மிகவும் விசேஷம். வள்ளிமலை திருப்புகழ் சுவாமிகள் தொடங்கி வைத்த திருப்படி பூஜையும் இங்கு நடைபெறுகிறது. அருணகிரிநாதர், முத்துசாமி தீட்சிதர், ராமலிங்க வள்ளலார், கச்சியப்ப தேசிகர் போன்ற மகான்கள் இங்கு வந்து தணிகைநாதனின் அருட்பார்வை பெற்றுள்ளனர்.

    சென்னையில் இருந்து சுமார் 86 கிலோமீட்டர் தொலைவிலும், வேலூரில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தூரத்திலும் திருத்தணி அமைந்துள்ளது.

    பழமுதிர்சோலை (அழகர்மலை)

    முருக பக்தர்களின் மனம் கவரும் வகையில் அமைந்த தலம் இது. பசுமையான சூழலில் மலை மீது அமைந்துள்ள இந்த ஆலயத்தில் வள்ளி-தெய்வானையுடன் தம்பதி சமேதராக முருகப்பெருமான் அருள்புரிந்து வருகிறார். அழகர்கோவிலுக்கு மேலே சுமார் நான்கு கிலோமீட்டர் உயரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இது முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஆறாவது திருக்கோவில் ஆகும். தொடக்க காலத்தில் முருகனின் அம்சமாக கருதப்படும் வேலுக்குதான் இங்கு வழிபாடு நடைபெற்று வந்தது. தற்போது சிலை ரூபத்தில் பிரதிஷ்டை செய்து வணங்கும் முறை உள்ளது.

    தமிழ் கடவுளான முருகன் சிறுவனாக வந்து, நாவல் மரத்திலிருந்து நாவல் பழங்களை உதிர்த்து தமிழ் மூதாட்டி அவ்வையிடம் ‘சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ எனக்கேட்டு வாழ்வின் தத்துவத்தை விளக்கிய தலம் இது. ‘பழம் உதிர் சோலை’ என்பதே ‘பழமுதிர்சோலை’ என்றானது.

    இதன் அருகே உள்ள ‘நூபுரகங்கை’ என்னும் பிரசித்திபெற்ற தீர்த்தம் உள்ளது. இதன் உற்பத்தி ஸ்தானத்தை இன்னும் கண்டறிய முடியாததே இதன் சிறப்பு. இங்குள்ள தீர்த்தங்களுக்கு காவல் தெய்வமாக ராக்காயி அம்மன் உள்ளார். இவருக்கு அமாவாசை தினத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. பழமுதிர்சோலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகர் கோவிலும் பிரசித்தி பெற்றது என்பதால் இங்கு வரும் பக்தர்கள் ஏராளம்.

    மதுரையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, அழகர்மலை.

    ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில், குரு பகவானுக்குரிய சிறப்பு வாய்ந்த திருத்தலமாக பார்க்கப்படுகின்றது. இந்த தலத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில், குரு பகவானுக்குரிய சிறப்பு வாய்ந்த திருத்தலமாக பார்க்கப்படுகின்றது. குருப்பெயர்ச்சி தினத்தில் குருவருள் பெற பக்தர்கள் தேடி வரும் கோவில்களில் முதன்மையானதாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இந்தக் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தின் இறைவன் ‘ஆபத்சகாயேஸ்வரர்’ என்றும், அம்மன் ‘ஏலவார் குழலி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். சுயம்பு லிங்கமாக தோன்றிய இத்தல இறைவன், குருவின் அம்சமாக பார்க்கப்படுகிறார். குருப்பெயர்ச்சி, தை பூசம், பங்குனி உத்திரத்தின் போது தட்சிணாமூர்த்திக்கு தேர்திருவிழா, சித்ரா பவுர்ணமி விழா ஆகியவை இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.

    இங்குள்ள அம்பிகை, இந்த தலத்தில் தவம் இருந்து இறைவனைத் திருமணம் செய்துகொண்டதாக தல வரலாறு சொல்கிறது. விஸ்வாமித்திரர், முகுந்தர், வீரபத்திரர் வழிபட்ட புண்ணிய தலம் இது. சோழர்களால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோவில், குரு பகவானின் சிறப்புக்குரிய தலங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை, மகாகுரு வாரமாக கொண்டாடப்படுகின்றது. இந்தக் கோவிலில் உள்ள குருபகவானுக்கு மாசி மாதம் வரும் வியாழக்கிழமைகளில் மட்டும்தான் அபிஷேகம் நடத்தப்படுகின்றது. குருப்பெயர்ச்சி தினத்தை விட, மாசி மாத வியாழக்கிழமை வழிபாடு இந்த தலத்தில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

    தட்சிணாமூர்த்தி ஆலகால விஷத்தை குடித்து தேவர்களை காத்ததால், இந்தத் தலத்திற்கு ‘ஆலங்குடி’ என பெயர் வந்தது. இங்கு ஆலமரத்திற்குக் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்தபடி காட்சி தருகிறார், தட்சிணாமூர்த்தி. மாதா, பிதா என்பதற்கு அடுத்ததாக குருவை வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்தக் கோவிலுக்குள் நுழைந்ததும் முதலில் அம்மன் சன்னிதியை தரிசிக்கலாம். அதன் பின்னர் சுவாமி சன்னிதியை வழிபடலாம். அதற்கு பிறகு குருவின் சன்னிதி இருக்கிறது.

    திருவாரூரிலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, ஆலங்குடி திருத்தலம். திருவாரூரில் இருந்து ஏராளமான பேருந்து வசதிகள் இருக்கின்றன.
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சொர்ணமலை என்ற திருத்தலத்தில் குன்றின் மீது அமைந்த முருகன் ஆலயத்தில் வேல் வழிபாடு இன்றுவரை வழக்கத்தில் இருப்பது சிறப்புக்குரியதாகும்.
    ‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்பதுபோல, வேல் என்பது முருகப்பெருமானின் வழிபாட்டில் முன்னோடியாக இருந்திருக்கிறது. தொடக்க காலங்களில் அனைத்து பகுதிகளிலும் வேல்தான் வழிபாட்டிற்குரியதாக இருந்தது என்பதை பல ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. ஏனெனில் தமிழன், அந்த வேலை ஞானத்தின் பிறப்பிடமாக கருதினான். வேலினை ஆதித் தமிழன் வடிவமைத்ததே ஞானத்தின் உருவமாகத்தான் என்பதை, அந்த வேலை நாம் கூர்ந்து கவனித்தாலே உணர்ந்துகொள்ள முடியும். ஒரு மனிதனுடைய அறிவு என்பது வேலின் அடிப்பகுதியைப் போல ஆழ்ந்து இருக்க வேண்டும். அப்படி ஆழ்ந்திருக்கும் அறிவானது, மேற்பகுதியைப் போல நன்றாக அகன்றும் இருக்க வேண்டும். அதோடு அந்த அறிவானது, வேலின் முனைப்பகுதி போல கூர்மையாகவும் இருக்க வேண்டும். இப்படி அமைந்த காரணத்தால்தான், வேலை ஞானத்தின் பிறப்பிடமாக முன்னோர்கள் அமைத்தார்கள்.

    அந்த வேல்தான், பல ஆலயங்களிலும் முன் காலத்தில் முதன்மை வழிபாட்டுக்குரியதாக இருந்திருக்கிறது. திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, தமிழகத்தின் தென்கோடியான கன்னியாகுமரியில் உள்ள ‘முருகன் குன்றம்’ என்ற திருத்தலம், வடகோடியான சென்னை குரோம்பேட்டையில் உள்ள ‘குமரன் குன்றம்’ என்ற திருத்தலம் என பல இடங்களிலும் வேல்தான் பிரதான வழிபாட்டுக்குரியதாக இருந்துள்ளது. காலப்போக்கில்தான் இங்கெல்லாம், முருகனின் திருவுருவங்கள் உருவாக்கப்பட்டும், பிரதிஷ்டை செய்யப்பட்டும் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த வரிசையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சொர்ணமலை என்ற திருத்தலத்தில் குன்றின் மீது அமைந்த முருகன் ஆலயத்தில் வேல் வழிபாடு இன்றுவரை வழக்கத்தில் இருப்பது சிறப்புக்குரியதாகும்.

    ஆலயக் கருவறையில் முருகப்பெருமானின் சிலை வடிவுக்கு பதிலாக, வேலே மூலவராக வழிபடப்படும் திருக்கோவில்தான், கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் திருக்கோவில் ஆகும். இங்கு கருவறையில் மூலவராக முருகப்பெருமானின் கதிர்வேல் எனும் திருக்கைவேல் அமைந்து உள்ளது. கோவில்பட்டியில் இருந்து பிழைப்புக்காக இலங்கைக்கு வணிகம் செய்யச்சென்ற சுப்ரமணியன் எனும் முருக அடியவர், இலங்கையில் உள்ள கதிர்காமம் முருகன் மேல் மிகுந்த பக்தி உள்ளவர். கதிர்காமத்தில் வேல் வழிபாடே சிறப்பாக உள்ளது. அந்த முருகன் அடியவர் இலங்கையில் இருந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பும் பொழுது, கதிர்காமம் முருகனைப் பிரிய மனம் இல்லாமல் கவலை கொண்டார். தன் அடியவரின் வாட்டம் போக்க எண்ணிய கதிர்காமம் முருகன், அந்த அடியவரிடம் இருந்த வேலுக்குள் தம்மை செலுத்தினார்.

    பின்னர் அசரீரியாய், “அன்பனே.. உன் பொருட்டு யாம் இந்த வேல் மூலம் உன் ஊரான கோவில்பட்டிக்கு வருகிறேன். கதிர்காமத்தில் இருந்து பிடி மண் கொண்டு சென்று அங்கு உள்ள மலைக்குன்றில் மூலவராக எமது இந்த திருக்கை வேல் வைத்து வழிபடு. உன் வாட்டம் மற்றும் அடியவர்களின் வாட்டத்தையும் யாம் களைவோம்” என்று கதிர்காமம் முருகன் அருளி மறைந்தார். கோவில்பட்டிக்கு அந்த கதிர்காம கந்தனின் திருக்கை வேல் உடன் திரும்பிய அந்த முருக பக்தர், பின்னாளில் இலங்கை கதிர்காமம் முருகப்பெருமான் கூறியபடி மலைக்குன்றில் ஆலயம் எழுப்பினார். அந்த கதிர்காம முருகன் திருக்கை வேல் தான், இங்கு மூலவராக உள்ளது.

    இத்தலத்தில் மாணிக்க விநாயகர், பழனி ஆண்டவர், பைரவர் சன்னிதிகளும் உள்ளன. கந்தசஷ்டியில் இத்தலம் வந்து சத்ரு சம்கார வேல் பதிகம், வேல்மாறல் ஆறு முறை பாராயணம் செய்து மூலவர் கதிர்வேலை வழிபட்டால் பகை, பில்லி, சூன்யம், வறுமை, தரித்திரம், உடல் மற்றும் மன நோய்கள் அகலும். சஷ்டி, கிருத்திகை, விசாகம், பூசம் நட்சத்திர நாட்களில் இத்தலம் வந்து, கதிர்வேலுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, சிகப்பு மலர்கள் கொண்டு இத்தல மூலவரை வழிபட வேண்டும். தொடர்ச்சியாக 8 மாதங்கள் இப்படிச் செய்து வந்தால், நம் எண்ணங்கள் யாவும் பூர்த்தியாகும். தொழில் விருத்தி உண்டாகும். சகல அந்தரங்க குடும்ப பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.

    இத்தலத்தில் வழிபடுவது, இலங்கை கதிர்காமம் முருகன் ஆலயத்தில் வழிபடுவதற்கு நிகரானது. கிருத்திகை நட்சத்திர நாளன்று இந்தக் கோவிலில் உள்ள வேலுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அன்னப் பிரசாதத்தை மகப்பேறுக்காக ஏங்கும் பெண்கள் உட்கொண்டு, குழந்தை வரம் பெறுகிறார்கள். மாதம் தோறும் இங்கு சொர்ணமலையை சுற்றி கிரிவலம் நடக்கிறது. கிரிவலம் வரும் வழியில் ‘ஒளி குகை’ என்ற குகையின் வாசல் உள்ளது. அங்கு யாரும் செல்வதில்லை. அங்கு சித்தர்கள் பலர் தவம் இருந்து வருவதாக கூறுகிறார்கள். சில நேரங்களில் நள்ளிரவு பொழுதுகளில் பஜனை சத்தம் கேட்பதாகவும் கூறுகிறார்கள். திருக்கார்த்திகை தீப திருநாள் இங்கு சிறப்பு. திருக்கார்த்திகை நன்னாளில் இந்த சொர்ணமலை குன்றில் ‘திருக்கார்த்திகை தீபம்’ ஏற்றுகிறார்கள். இங்கு சூரசம்காரம் கந்த சஷ்டியில் வெகுச் சிறப்பாக நடைபெறுகிறது.

    விருதுநகர் அருகில் உள்ள கோவில்பட்டியில் சொர்ணமலை அமைந்துள்ளது. கோவில்பட்டியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவில் இருக்கிறது. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனாய பூவனநாத சுவாமி கோவிலுடன் இணைந்த திருக்கோவில் இதுவாகும்.
    தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தென்குடி திட்டை என்ற திருத்தலம். இந்தக் கோவிலில் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.
    தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தென்குடி திட்டை என்ற திருத்தலம். பிரளய காலத்தில் அழியாமல் இருந்து, மந்திர ஒலிகள் தோன்றிய மகத்தான தலம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு. இந்தக் கோவிலில் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.

    இறைவியின் நாமம் ‘மங்களாம்பிகை’ என்பதாகும். திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், ஒரு பஞ்சலிங்க தலமாக விளங்கி வருகிறது. இந்தக் கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மத்தியில் மூலவர் ஐந்தாவது லிங்கமாக உள்ளார். பஞ்ச பூதங்களுக்கும் உரிய தலமாகவும் இது விளங்குகிறது.

    இத்தலத்தில் உள்ள இறைவன் தானே தோன்றியதால் ‘ஸ்ரீவயம்பூதேஸ்வரர்’ என்றும், வசிஷ்ட மகரிஷி தவமிருந்து வழிபட்டதால் ‘வசிஷ்டேஸ்வரர்’ என்றும், பசுக்கள் வணங்கி வழிபட்ட தலம் என்பதால் ‘பசுபதீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். அனந்தீஸ்வரர், தேனுபுரீஸ்வரர், ரதபுரீஸ்வரர், நாகநாதர், நாகேஸ்வரர் என்ற பெயர்களும் இத்தல இறைவனுக்கு உண்டு.

    திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில், திட்டை குரு பகவான் ‘ராஜகுரு’வாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். நவக்கிரகங்களின் வரிசையில் ஐந்தாவதாக இருப்பவர், வியாழ பகவான் எனப்படும் குரு. மற்ற கிரகங்களுக்கு இல்லாத சிறப்பு குருவுக்கு உண்டு.

    நவக்கிரகங்களில் சூரியன்-ராஜா. சந்திரன்- ராணி. செவ்வாய் கிரகம் - சேனாதிபதி. புதன் - இளவரசர். குரு பகவான் - ராஜ மந்திரி. மதி நிறைந்த அமைச்சர் என்ற அந்தஸ்தில் உள்ளனர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

    இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும், குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    இந்த கோவில் நடை பகலில் திறப்பது கிடையாது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று மட்டும் இரவில் நடை திறக்கப்படுகிறது. அப்போதுதான் சுவாமியை தரிசிக்க முடியும்.
    மூலவர்     –  பொதுஆவுடையார் (மத்தியபுரீஸ்வரர்)
    பழமை     –  500 வருடங்களுக்கு முன்
    ஊர்     –  பரக்கலக்கோட்டை
    மாவட்டம்     –  தஞ்சாவூர்
    மாநிலம்     –  தமிழ்நாடு

    வான் கோபர், மகா கோபர் என்ற இரு முனிவர்களுக்கு, “இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?” என்று சந்தேகம் வந்தது. தங்களுக்குத் தீர்ப்பு சொல்லும்படி இருவரும் சிதம்பரம் சென்று நடராஜரிடம் வேண்டினர். அவர் இத்தலத்தில் காத்திருக்கும்படி சொல்லி, தான் அவர்களுக்கு தீர்ப்பு வழங்குவதாக கூறினார். அதன்படி இத்தலம் வந்த இரு முனிவர்களும் புளிய மரத்தின் கீழ் அமர்ந்தனர். நடராஜர், ஒரு கார்த்திகை மாத, திங்கட்கிழமையன்று சிதம்பரத்தில் பூஜைகள் முடிந்த பிறகு இங்கு வந்து, ஒரு வெள்ளால மரத்தின் கீழ் நின்று இருவருக்கும் பொதுவாக, “இல்லறமாயினும், துறவறமாயினும் நல்லறமாக இருந்தால் இரண்டுமே சிறப்பு” என்று பொதுவாக தீர்ப்புக் கூறிவிட்டு, பின்பு வெள்ளால மரத்திலேயே ஐக்கியமானார். தீர்ப்பு சொல்வற்காக வந்த சிவன் என்பதால் இவர் “பொது ஆவுடையார்” என்றும், “மத்தியபுரீஸ்வரர்” என்றும் பெயர் பெற்றார்.

    ரூபமாகவும் (வடிவம்), அரூபமாகவும் (வடிவம் இல்லாமல்), அருவுருவமாகவும் (இலிங்கம்) வழிபடப்பெறும் சிவன், இத்தலத்தில் வெள்ளால மரத்தின் வடிவில் அருள் செய்கிறார்.

    எனவே, இங்கு இலிங்க வடிவம் கிடையாது. கோயில் திறக்கப்படும்போது, வெள்ளால மரத்தின் முன்பக்கத்தில் ஒரு பகுதியில் மட்டும் சந்தன காப்பு சாத்தி, ஆடைகள் அணிவித்து சிவலிங்கமாக அலங்காரம் செய்கின்றனர். அப்போது சன்னதிக்குள் மரத்தை காணமுடியாதபடி சுற்றிலும் வெண்ணிறத் துணியால் மறைத்துவிடுகிறார்கள். நமக்கு இலிங்க உருவம் மட்டுமே தெரிகிறது. கருவறையில் ஆல மரத்திற்கு முன்பாக சிவனின் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. சிவன், முனிவர்களுக்கு காட்சி தந்ததன் அடையாளமாகப் பாதம் வைக்கப்பட்டிருக்கிறது.

    இக்கோயிலில் பகலில் நடை திறப்பது கிடையாது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று மட்டும் இரவில் நடை திறக்கப்படுகிறது. அப்போதுதான் சுவாமியை தரிசிக்க முடியும். அன்றிரவில் 10 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 11 மணிக்கு சுவாமிக்கு அலங்காரமும், பூஜைகளும் நடக்கிறது. அப்போது சுவாமியை தரிசிக்க முடியாதபடி திரையிடப்படுகிறது. அதன்பின் 11.30க்கு மீண்டும் நடை அடைக்கப்பட்டு நந்தி, விநாயகர், பெத்த பெருமாள், மகாகோபர், வான்கோபர் சன்னதிகளில் பூஜை நடத்திவிட்டு, பின்பு நள்ளிரவு 12 மணிக்கு மீண்டும் சுவாமி சன்னதி திறக்கப்படுகிறது. அப்போதுதான் சுவாமியை தரிசிக்க முடியும். பக்தர்களின் தரிசனம் முடிந்தபின்பு, சூரிய உதயத்திற்கு முன்பாகவே நடை சாத்திவிடுகின்றனர். தைப்பொங்கலன்று ஒருநாள் மட்டும் அதிகாலையில் இருந்து, மாலை 7 மணி வரையில், நாள் முழுதும் நடை திறக்கப்படுகிறது. அன்று சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுவது சிறப்பம்சம்.

    தைப்பொங்கல், கார்த்திகை சோமவாரம் தவிர, சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம் என எந்த பண்டிகையும் இங்கு கொண்டாடப்படுவதில்லை. சிவனின் குரு அம்சமான தெட்சிணாமூர்த்தி, சிவன் கோயில்களில் கோஷ்ட சுவரில், கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். இத்தலத்தில் சுவாமியே ஆலமரத்தின் வடிவில் அருளுகிறார். எனவே, இத்தலத்தை குரு தலமாகவும் கருதலாம். இங்கு சிவனாக கருதப்படும் ஆலமரத்தின் இலையே பிரதான பிரசாதமாக தரப்படுகிறது. பக்தர்கள் இந்த இலையைக் கொண்டு சென்று வீட்டில் வைத்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பதும், விவசாய நிலங்களில் இட்டால் விவசாயம் செழிக்கும் என்பதும் நம்பிக்கை.

    இக்கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், சுவாமி சன்னதி கதவிற்கே பூஜைகள் நடத்தப்படுகிறது. பக்தர்கள் அப்போது சன்னதி கதவையே சுவாமியாக பாவித்து மாலைகள் சாத்தி வழிபட்டு, பிரகாரத்தில் இருந்து ஆலமரத்தை தரிசித்துவிட்டு செயல்கிறார்கள். திருமணத் தடை, புத்திர தோஷம் உள்ளவர்கள் இம்மரத்தில் தாலி, தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள். இக்கோயிலில் பெண்கள் முடி வளருவதற்காக விளக்குமாறை காணிக்கையாக செலுத்துகின்றனர். தென்னங்கீற்றில் உள்ள குச்சிகளை, தங்களது கையால் விளக்குமாறாக செய்து, அதை காணிக்கை செலுத்துகின்றனர். இவ்வாறு செய்வதால் தென்னங்கீற்று போலவே முடி வளரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு கிடைக்கும் விளக்குமாறுகளே ஆயிரக்கணக்கில் குவிந்துவிடும் என்கிறார்கள்.

    இத்தலத்தில் சிவபெருமானிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறுவதாக நம்பிக்கை. இவ்வாறு வேண்டுதல் நிறைவேறப்பெற்றவர்கள் இக்கோயிலுக்கு அதிகளவில் காணிக்கை செலுத்துகின்றனர். கார்த்திகை சோமவாரத்தின்போது பக்தர்கள் தங்களது நிலத்தில் விளைந்த நெல், உளுந்து, பயிறு, எள் முதலிய அனைத்து தானியங்களையும், வீட்டு உபயோகப்பொருட்கள், ஆடைகள், அலங்கார பொருட்கள் என எளிய பொருட்களிலிருந்து தங்கக்காசு வரையிலும் அனைத்து பொருட்களையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். இவ்வாறு கோயிலுக்கு செலுத்தப்படும் காணிக்கைகள் பெறுவதற்காகவே, பெரிய பந்தல்கள் போடப்படுகிறது.

    சுவாமிக்கென தனி விமானம் எதுவுமில்லை. மரத்தின் வடிவில் அருளும் சிவபெருமானுக்கு, மரத்தின் இலைகளும், கிளைகளுமே விமானமாக இருக்கிறது. மூலஸ்தானத்திலேயே சுவாமிக்கு முன்புறத்தில் கஜலட்சுமி காட்சி தருகிறாள். அருகிலேயே இரண்டு யானைகளும் வைக்கப்படுகிறது. சிவனுக்கு பூஜை செய்யும்போது, இவளுக்கும் சேர்த்தே பூஜைகள் நடக்கிறது. இங்கு சிவனே பிரதான மூர்த்தியாக இருப்பதால், இங்கு எந்த பரிவார மூர்த்திகளும் இங்கு கிடையாது. கோயிலுக்கு வெளியில் வீரசக்தி விநாயகர், பெத்த பெருமாள் (காவல் தெய்வம்) சன்னதி மட்டும் இருக்கிறது.

    இந்த விநாயகர் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பம்சம். வான் கோபர் அலங்காரத் துடனும், மகா கோபர் துறவி கோலத்திலும் ஒரு புளிய மரத்தின் கீழ் சிலை வடிவில் இருக்கின்றனர். திங்கட்கிழமையன்று நள்ளிரவில் பூஜை முடிந்து தரிசனத்திற்காக சன்னதி நடை திறந்த பின்பு, சுவாமியை தரிசிக்க வந்த ஊர்க்காரர்களில் யார் வயதில் முதிர்ந்தவராக இருக்கிறாரோ அவருக்கு, சிவனுக்கு அபிஷேகம், பூஜை செய்த பிரசாதங்கள் கொடுத்து முதல் மரியாதை செய்கின்றனர். அப்போது அவரிடம் ரூ.1 மட்டும் காணிக்கையாக வாங்குகிறார்கள். இதனை, “காளாஞ்சி” என்கிறார்கள். நள்ளிரவில் சுவாமிக்கான அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, பக்தர்களுக்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்த சந்தனம், மற்றும் வெற்றிலை, பாக்கு தாம்பூலம் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. கோயில் சார்பில் பணியாளர் ஒருவர் இவ்வாறு பக்தர்களுக்கு கொடுக்கிறார். அதன்பின், விடிய, விடிய அன்னதானம் நடக்கிறது.

    காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

    திருவிழா:

    கார்த்திகை சோமவாரம், தைப்பொங்கல்.

    கோரிக்கைகள்:

    இங்கு நியாயமான, அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற வேண்டிக்கொள்ளலாம்.

    நேர்த்திக்கடன்:

    பிரார்த்தனை நிறைவேறியவர்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

    அருள்மிகு பொதுஆவுடையார் கோவில், பரக்கலக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.

    +91- 4373 – 283 295, 248 781

    ஈரோடு மாவட்டத்தில் அமைந்த முக்கியமான திருக்கோவிலில் ஒன்று, சென்னிமலை முருகப்பெருமான் ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தின் சிறப்புகளைப் பற்றி அறிந்துகொள்வோம்..
    ஈரோடு மாவட்டத்தில் அமைந்த முக்கியமான திருக்கோவிலில் ஒன்று, சென்னிமலை முருகப்பெருமான் ஆலயம் ஆகும். அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இந்தக் கோவில், சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. இந்த ஆலயத்தின் சிறப்புகளைப் பற்றி அறிந்துகொள்வோம்..

    அனந்தன் என்ற நாகத்திற்கும், வாயுதேவனுக்கும் இடையே ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி ஏற்பட்டது. அவர்களுக்குள் நடந்த சண்டையில், மேரு மலை உடைந்து பல பகுதிகளாக பிரிந்து பல இடங்களில் விழுந்தன. இதில் மலையின் சிகரப்பகுதி, பூந்துறை என்ற இடத்தில் விழுந்தது. அந்த இடமே சென்னிமலை. இந்த ஊருக்கு ‘சிரகிரி, புஷ்பகிரி, மகுடகிரி’ போன்ற பெயர்களும் உண்டு.

    இந்த மலையின் ஒரு பகுதியில் காராம் பசு ஒன்று, தினமும் பால் சொரிய விடுவதை, அந்த பசுவின் உரிமையாளர் கண்டார். இதையடுத்து அவர் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தார். அப்போது பூரண முகப்பொலிவுடன் முருகப்பெருமானின் சிலை கிடைத்தது. அந்த விக்கிரகத்தின் இடுப்பு வரை நல்ல வேலைப்பாடுடனும், முகம் அற்புத பொலிவுடனும் இருந்தது. ஆனால், இடுப்புக்கு கீழ் பாதம் வரை சரியான வேலைப்பாடு இல்லாமல் கரடு முரடாக இருந்தது. அதை ஒரு குறையாக எண்ணி, அந்தப் பாகத்தையும் சிறந்த சிற்பியைக் கொண்டு உளியால் சரி செய்தனர். ஆனால் அப்படி செய்தபோது, சிலையிலிருந்து ரத்தம் கொட்டியதாகவும், இதனால் அதே நிலையில் சென்னிமலையில் அந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    மூலவரான சென்னிமலை ஆண்டவர், நடுநாயக மூர்த்தியாக ஆலயத்தில் வீற்றிருக்கிறார். இவர் நவக்கிரகங்களில் செவ்வாய் அம்சமாக அமைந்துள்ளார். மூலவரைச் சுற்றி நவக்கிரகங்களின் மற்ற எட்டு கிரகங்களும் அழகிய தேவ கோஷ்டங்களில் அழகுற அமைந்து அருள்பாலிக்கிறார்கள். இங்கு மூலவரை வலம் வந்து வணங்கினாலே நவக்கிரகங்களையும் வழிபட்ட பலன் உண்டு. இத்தலம் செவ்வாய் பரிகார சிறப்பு தலமாகும். மூலவர் தண்டாயுதபாணி கோலத்தில் அருள்பாலிக்கிறார். சென்னிமலையில் மூலவருக்கு ஆறு கால பூஜை வேளையில் மட்டும் அபிஷேகம் நடக்கிறது. இதர நேரங்களில் உற்சவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. வள்ளி-தெய்வானை தேவியர் இருவரும், ஒரே கல்லில் பிரபையுடன் வீற்றிருக்கும் தனிச் சன்னிதி வேறு எங்கும் காண முடியாத அரியதாகும்.

    சென்னிமலை ஆண்டவரின் தினசரி அபிஷேகம் மற்றும் நைவேத்திய காரியங்களுக்கு, கோவிலால் பராமரிக்கப்பட்டு வரும் இரண்டு அழகிய பொதி காளைகள் மூலம் தினசரி அடிவாரத்திலிருந்து திருமஞ்சன தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது. சென்னிமலையில் அமைந்த முருகன் சன்னிதியை அடைய 1,320 திருப்படிகள் கடந்து செல்ல வேண்டும். அமாவாசை, சஷ்டி, கார்த்திகை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகின்றனர். வருடாந்திர பிரம்மோற்சவ தைப்பூசத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம், பங்குனி உத்திரமும் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆலயத்திற்கு மேலும் ஒரு பெருஞ் சிறப்பு உண்டு. அது முருகப்பெருமானுக்கு எல்லா ஆலயங்களிலும் ஒலிக்கவிடப்படும் ‘கந்தசஷ்டி கவசம்’ பாடல் அரங்கேறிய திருத்தலம் இதுவாகும். காங்கயம் அருகேயுள்ள மடவிளாகத்தைச் சேந்தவர், பாலன் தேவராய சுவாமிகள். மைசூரு தேவராச உடையாரின் காரியஸ்தர்களில் ஒருவரான இவர், சிறந்த முருக பக்தர். இவர், தான் இயற்றிய கந்தசஷ்டி கவசம் பாடலை, இந்த சென்னிமலை கோவிலில்தான் அரங்கேற்றம் செய்துள்ளார்.

    பின்னாக்கு சித்தர்

    சென்னிமலை முருகன் கோவிலில், பதினெட்டு சித்தர்களில் ஒருவராக கருதப்படும் பின்னாக்கு சித்தர் என்பவருக்கு சன்னிதி உள்ளது. இந்த சித்தர், இங்குதான் சமாதி அடைந்தார் என்று சொல்லப்படுகிறது. இவர் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு, தன் நாக்கை பின்னுக்கு மடித்து அருள்வாக்கு கூறிய காரணத்தால், இந்தப் பெயர் வந்ததாக சிலர் சொல்கின்றனர். அதுவே மருவி பலரும் இவரை ‘புண்ணாக்கு சித்தர்’ என்று அழைக்க வழி செய்து விட்டதாகவும் கூறுகின்றனர்.

    இதே போல் சத்திய ஞானியை குருவாகக் கொண்ட சரவணமுனிவர் என்பவர், சிரகிரி வரலாற்றை எழுதினார். அப்போது அவருக்கு முருகப்பெருமான் காட்சியளித்ததாக கூறப்படுகிறது. இந்த முனிவரின் சமாதியும், மலையின் மேல் பகுதியில் இருக்கிறது.

    ஈரோட்டில் இருந்து சுமார் 27 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, சென்னிமலை திருத்தலம்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழ்வது, சுவாமிமலை திருத்தலம். இங்கு அருள்பாலிக்கும் முருகனை, ‘சுவாமிநாதன்’, ‘தகப்பன் சுவாமி’ போன்ற பெயர்களில் அழைக்கிறோம்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழ்வது, சுவாமிமலை திருத்தலம். இங்கு அருள்பாலிக்கும் முருகனை, ‘சுவாமிநாதன்’, ‘தகப்பன் சுவாமி’ போன்ற பெயர்களில் அழைக்கிறோம். இந்த ஆலயத்தில் குருவாக இருந்து தனது தந்தை சிவபெருமானுக்கு, முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாக புராண தகவல்கள் தெரிவிக்கின்றன. தஞ்சாவூரில் இருந்து 32 கிலோமீட்டர் தூரத்திலும், கும்ப கோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

    பிரணவ உபதேசம் கேட்ட

    சிவபெருமான்:

    படைப்புத் தொழில் செய்து வந்ததால், ஆணவத்தில் இருந்தார் பிரம்மன். ஒருமுறை அவரை, முருகப் பெருமான் நேரில் சந்தித்தார். அப்போது பிரம்மனிடம், “படைப்புத் தொழில் செய்யும் உமக்கு ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா?” என்று முருகப்பெருமான் கேட்டார். இக்கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்ல முடியவில்லை. பிரணவத்தின் பொருள் தெரியாமல் திகைத்தார். அவரைத் தலையில் குட்டி சிறையில் அடைத்தார் முருகன்.

    ஈசனே நேரில் வந்து கேட்டுக் கொண்டதற்குப் பின்னர்தான், பிரம்மனை விடுதலை செய்தார், முருகப்பெருமான்.

    பிறகு சிவபெருமான், “பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?” என்று முருகனிடம் கேட்டார்.

    “ஓ நன்றாகத் தெரியுமே” என்றார் முருகன்.

    “அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?” என்றார் ஈசன்.

    “உரிய முறையில் கேட்டால் சொல்வேன்” என்றார் முருகன்.

    அதன்படி சிவபெருமான் இத்தலத்தில், முருகனுக்கு சீடனாக தரையில் பவ்யமாக அமர்ந்தபடி, முருகனிடம் பிரணவத்திற்காக பொருளை உபதேசமாக பெற்றார். அன்று முதல், சுவாமியாகிய சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனார். அதனால் முருகன், ‘சுவாமிநாதன்’ என்றும், ‘பரமகுரு’ என்றும், ‘தகப்பன் சுவாமி’ என்றும் போற்றப்பட்டார். இந்தத் திருத்தலமும் ‘சுவாமிமலை’ என்று அழைக்கப்பட்டது.

    நான்கரை அடி உயர சுவாமிநாதன்:

    இந்தக் கோவிலில் ஞானாசிரியராகிய சுவாமிநாதன் கம்பீரமாக, நான்கரை அடி உயரமுள்ள திருவுருவத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். வலக்கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடக்கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் விளங்க, கருணாமூர்த்தியாகக் காட்சித் தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதைக் கண்குளிரக் காணலாம்.

    மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று திருவருள் பாலிக்கும் சுவாமிநாதனுக்கு, தங்கக் கவசம், வைரவேல், தங்க சகஸ்ர நாம மாலை, ரத்தின கிரீடம் போன்ற பல்வேறு அணிகலன்களும் பூட்டி அடியவர்கள் அழகு பார்க்கின்றனர். சுவாமிநாதன் தங்கத் தேரிலும் அவ்வப்போது பவனி வருவது வழக்கம்.

    நெல்லி மரம் சுவாமிமலையின் தல விருட்சமாகும். நெல்லி மரத்தை வடமொழியில் ‘தாத்ரி’ என்பர். அதனால் சுவாமிமலையை ‘தாத்ரிகிரி’ என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் சிவகிரி, குருவெற்பு, குருமலை, சுவாமி சைலம் போன்ற பெயர்களும் இதற்கு உண்டு.

    மாடக்கோவில்:

    சுவாமிமலை இயற்கையான மலை அன்று. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோவில்தான் சுவாமிமலை. மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கில் கருங்கற் கோவில்கள் இருப்பது பிரமிப்பூட்டும் விந்தைகளில் ஒன்றாகும். சுவாமிமலையில் மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும், முதற் பிரகாரம் கட்டுமலையின் உச்சி யில் சுவாமிநாதப் பெருமானைச் சுற்றியும் அமைந்துள்ளது.

    தெற்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகள் உடையது. பெரும்பாலும் பக்தர்கள் கிழக்குப்புற மொட்டைக் கோபுரத்தின் வழியாகவே திருக்கோவிலுக்குள் நுழைகின்றனர். ஏனெனில், நுழைந்தவுடன் வல்லப கணபதியின் தரிசனம் கிடைக்கிறது.

    மலைக்கோவிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னிதிகள் அமையப் பெற்றுள்ளன. சுவாமிநாதனைக் காண நாம் அறுபது படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும். அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் அறுபது படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன.

    மேல்தளத்தில் முதலில் நமக்குக் காட்சி தருபவர் ‘கண்கொடுத்த கணபதி’ என்ற விநாயகர் ஆவார். இவர் செட்டி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்குக் கண்பார்வையை அருளியதால் இப்பெயர் பெற்றதாக செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றும், இவரை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல கண் பார்வையை அருளி வருகிறார்.
    கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ., தூரத்தில் இருக்கிறது அருள்மிகு ஆதிவராகப் பெருமாள் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    மூலவர்     –     ஆதிவராகப்பெருமாள்
    உற்சவர்     –     ஆதிவராகர்
    தாயார்     –     அம்புஜவல்லி
    தீர்த்தம்     –     வராகதீர்த்தம்
    ஆகமம்/பூசை     –     பாஞ்சராத்ரம்
    பழமை     –     500-1000 வருடங்களுக்கு முன்
    ஊர்     –     கும்பகோணம்
    மாவட்டம்     –     தஞ்சாவூர்
    மாநிலம்     –     தமிழ்நாடு

    ஒருசமயம் இரண்யாட்சன் என்னும் அசுரன், பூமியை பாதாள உலகிற்குள் எடுத்துச்சென்று மறைத்து வைத்தான். தன்னை மீட்கும்படி, பூமாதேவி திருமாலிடம் வேண்டினாள். திருமால் வராக அவதாரம் எடுத்து பாதாளத்திற்குள் சென்று பூமியை மீட்டு வந்தார். இவரே இத்தலத்தில் வராகமூர்த்தியாக அருள்புரிகிறார்.

    கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா உண்டாவதற்கு முன்பாகவே இவர், இத்தலத்தில் எழுந்தருளியிருந்தார். எனவே இவரை,”ஆதிவராகர்” என்று அழைக்கின்றனர். இவரே இங்குள்ள பெருமாள்களுக்கெல்லாம் முந்தியவர். மாசிமகத்திருவிழாவின்போது, கும்பகோணத்திலுள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, வரதராஜர், ராஜகோபாலர் மற்றும் இத்தலத்து மூர்த்தி ஆகிய ஐவரும் காவிரிக்கரைக்கு தீர்த்த நீராட எழுந்தருளுகின்றனர்.

    பிரசாத விசேஷம்: மூலஸ்தானத்தில் சுவாமி, பூமாதேவியை இடது மடியில் அமர்த்திய கோலத்தில் காட்சி தருகிறார். பூமாதேவி திருமாலை வணங்கியபடி இருக்கிறாள். தினமும் இவருக்கு அர்த்தஜாம பூஜையின்போது, கோரைக்கிழங்கு மாவுருண்டையை நைவேத்யமாக படைக்கிறார்கள். பாய் நெய்வதற்குரிய நாணல் புல்லின் அடியில் முளைப்பது கோரைக்கிழங்கு.

    இந்தக்கிழங்கை பொடித்து, அதனுடன் அரிசி மாவு, சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து உருண்டையாகப் பிடித்து வைப்பர். மறுநாள் காலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். பூமியை மீட்டு வந்த பெருமாள் என்பதால். பூமிக்கு கீழே விளையும் கிழங்கு கலந்த நைவேத்யம் இவருக்கு படைக்கப்படுகிறது.

    சுவாமி அமர்ந்த கோலத்தில் இருக்க, அவருக்கு முன்பாக உற்சவர் நின்றபடி இருக்கிறார். உற்சவர் ஆதிவராகர், தனது இடது பாதத்தை ஆதிசேஷன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். சுவாமி முன்பாக “வராக சாளக்கிராமம்” உள்ளது. இதில் சங்கு, சக்கர ரேகைகள் இருப்பது உள்ளன. தினமும் இதற்கு பாலபிஷேகம் நடக்கிறது.

    முன்மண்டபத்தில் விஷ்வக்ஸேனர், நிகமாந்த தேசிகர் சன்னதிகள் உள்ளன. பிரகாரத்தில் துளசி மாடத்தின் கீழ் நாகர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

    ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் சுவாமியை வணங்கி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். வராக தீர்த்தம் கோயிலுக்கு வெளியே இருக்கிறது. இக்கோயிலுக்கு சிறிது தூரத்திலேயே ஆதிகும்பேஸ்வரர் கோயில் மற்றும் 108 திவ்ய தேசங்களில் முக்கியமானதான சாரங்கபாணி, சக்கரபாணி கோயில்கள் உள்ளன.

    காலை 8 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

    பிரார்த்தனை

    திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

    நிலம், வீடு தொடர்பான பிரச்னைகள் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

    நேர்த்திக்கடன்:

    பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து புத்தாடை சாற்றி வழிபடுகின்றனர்.

    வழிகாட்டி :

    கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது. ஆட்டோ, கார்களில் செல்லலாம்.

    அருள்மிகு ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில், கும்பகோணம்-612001 தஞ்சாவூர் மாவட்டம்

    +91- 94422 26413 (மாற்றங்களுக்குட்பட்டது)
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.
    திருச்செந்தூர்:

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.

    கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. 1-ம் திருநாள் முதல் 5-ம் திருநாள் வரையிலும் மாலையில் தங்கத்தேரில் சுவாமி கிரிப்பிரகாரத்தில் வீதி உலா செல்வதற்கு பதிலாக, சுவாமி-அம்பாள்களுடன் சப்பரத்தில் எழுந்தருளி, உள்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் திருநாளான வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. காலையில் சுவாமி வள்ளி-தெய்வானையுடன் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளுகிறார். பின்னர் மதியம் 1.30 மணிக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. பின்னர் கடற்கரைக்கு பதிலாக, கோவில் கிரிபிரகாரத்தில் கிழக்கு பகுதியில் சூரபத்மனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.

    7-ம் திருநாளான 21-ந்தேதி (சனிக்கிழமை) இரவில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 6, 7-ம் திருநாள்களில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மற்ற விழா நாட்களில் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். கோவில் வளாகம், மண்டபம், விடுதிகளில் தங்குவதற்கும், விரதம் இருப்பதற்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் https://www.youtube.com/channel/UCDiavBtRKei0x1fYVup\Ew/live என்ற இணையதளத்தில் நேரலையாக காணலாம். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரிக்கு இந்தியாவில் பல இடங்களில் கோவில்கள் அமைந்துள்ளன. சில இடங்களில் தனியாகக் கோவில் கொண்டும் அமர்ந்துள்ளாள்.
    ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரிக்கு இந்தியாவில் பல இடங்களில் கோவில்கள் அமைந்துள்ளன. ஸ்ரீதுர்க்கை பல இடங்களில் காளியாகவும், சண்டிகையாகவும், மகிஷாசுர மர்த்தினியாகவும் காட்சி தருகிறார். எல்லா சிவாலயங்களிலும் துர்க்கைக்கென்று தனி சன்னதி இருக்கம். சில இடங்களில் தனியாகக் கோவில் கொண்டும் அமர்ந்துள்ளாள்.

    * மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் கதிராமங்கலம் என்ற சிற்றூரில் மிகப்பிரபலமான வனதுர்கா பரமேஸ்வரியாக காட்சி தருகிறாள். கம்பர் வழிபட்ட துர்க்கை இவள். மிருகண்ட முனிவரின் மகனாய் பிறந்த மார்கண்டேயருக்கு சிரஞ்சீவியாக வாழும் வழியைக் காட்டியவர். இதே வழித்தடத்தில் பாஸ்கர ராஜபுரம் என்ற இடத்தில் `விஷ்ணு துர்க்கைக்கு' தனிக்கோவில் உண்டு. இவளை வணங்குவோர் வாழ்வில் என்றும் அமைதியும் சாந்தியும் நிலவும்.

    * கும்பகோணத்திற்கு அருகில் பட்டீஸ்வரம் என்ற இடத்தில் வீற்றிருக்கும் துர்க்கா பரமேஸ்வரி சோழ மன்னர்களுக்கு குலதெய்வமாக விளங்கியவள். கேட்டவர்களுக்கு கேட்ட வரங்களை கொடுக்கும் தாயுள்ளம் கொண்டவள் இந்த துர்க்கை.

    * நெல்லை மாவட்டத்தில் உள்ள சீவலப்பேரியில் தாமிரபரணி நதிக்கரையில் துர்க்கை அம்மன் கோவில் கொண்டுள்ளாள். ஒரு காலத்தில் பல்லவர்களின் தலைநகராக விளங்கிய சேந்தமங்கலத்தில் (விழுப்புரத்திற்கு அருகில்) துர்க்கைக்கென்று ஒரு கோவில் உள்ளது.

    * திருத்தணி - திருப்பதி வழித்தடத்தில் பொன்பாடி ரெயில் நிலையத்திற்கு அருகில் மாத்தூரில் `மகிஷாசுரமர்த்தினி' குடி கொண்டுள்ளாள் ரெயில் பாதை அமைக்கத் தோண்டிய இடத்தில் கிடைத்த சிலையை அங்கேயே கோவில் கட்டி மகிஷாசுரமர்த்தினியை வழிபட்டு வருகிறார்கள்.

    * கும்பகோணத்திற்கு அருகில் உள்ள அம்மன்குடி துர்க்கா பரமேஸ்வரி ஆலயம் புகழ் பெற்ற ஒன்றாகும். எல்லா கிரக தோஷத்திற்கும் இங்கு அர்ச்சனை செய்யப்படுகிறது. இக்கோவிலில் தனி நவக்கிரக சன்னதி கிடையாது. எல்லா அர்ச்சனைகளும் நவக்கிரக நாயகியான ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரிக்கே செய்யப்படுகிறது.

    * சிதம்பரத்திற்கு அருகில் உள்ள சிவபுரிக்கு அருகில் உள்ள திருக்கழிப்பாலை என்ற இடத்தில் உள்ள சிவன் கோவிலில் `சதுராக்னி துர்க்கை' தனிச்சந்நதியுடன் காட்சி தருகிறாள்.

    * நெல்லை தாழைïத்துப் பாதையில் கங்கை கொண்டானுக்கு அருகில் உள்ள பாராஞ்சேரியில் `சயன துர்க்கை' படுத்தவாறு காட்சி தருகிறார். வேறெங்கும் இத்தகைய வடிவில் துர்க்கையை காண முடியாது.

    * தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள புஞ்சை என்ற ஊரில் ஸ்ரீதுர்க்கா தேவி குடி கொண்டுள்ளாள். இதற்கு அருகிலேயே சேத்தமங்கலத்தில் சுயம்புவான துர்க்கையைக் காணலாம்.

    * ஸ்ரீராமர் பூஜித்த துர்க்கைக்கு வேதாரண்யத்தில் பெரிய கோவில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த துர்க்கை இவள்.

    * வைத்தீஸ்வரன் கோவிலுக்கு அருகில் உள்ள திருவானப் புதூரில் உள்ள துர்க்கையின் பெயரிலேயே இவ்வூர் `துர்க்கை சந்நிதி' என்றே அழைக்கப்படுகிறது. அரியானா மாநிலத்தின் தலைநகர் சண்டீகரில் குன்றின் மீது `சண்டிகை' வீற்றிருக்கிறாள். அவள் பெயரிலேயே இந்நகரம் `சண்டிகர்' என விளங்குகிறது.

    * தென்ஆற்காடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் என்ற கிராமத்தில் சாமுண்டீஸ்வரிக்கு தனிக்கோவில் உள்ளது.
    குரு பகவானின் அருளைப் பெறுவதில் முக்கியமான தலமாக, திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் திருக்கோவில் திகழ்கிறது.
    குரு பகவானின் அருளைப் பெறுவதில் முக்கியமான தலமாக, திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் திருக்கோவில் திகழ்கிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாக விளங்கும் இந்த ஆலயம், தேவர்களின் துன்பங் களைப் போக்குவதற்காக முருகப்பெருமான் சூரபது மனை வதம் செய்த இடம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

    பிரம்மனிடம் இருந்து பல வரங்களைப் பெற்ற சூரபதுமன், தேவர்களை கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்தி வந்தான். நீண்டகாலமாக சிறையில் தவித்த தேவர்களை மீட்கும் பொருட்டு, சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்டவர்தான், முருகப்பெருமான் என்று புராணங்கள் சொல்கின்றன. அப்படி அவதரித்த முருகப்பெருமான், சூரபதுமனை அழித்து தேவர்களை காப்பதற்காக திருச்செந்தூர் தலம் வந்து தங்கினார்.

    போருக்கு முன்பாக முருகப்பெருமான், அசுரர்களைப் பற்றியும் அவர்களின் குணங்களைப் பற்றியும், தேவர்களின் குருவான பிரகஸ்பதியிடம் கேட்டறிந்தார். மேலும் சூரபதுமன் உள்ளான அசுரர்களுடன் நடந்த போரில், முருகப்பெருமானுக்கு பல யோசனைகளையும் பிரகஸ்பதி வழங்கினார். முருகப்பெருமான் அசுரர்களை அழித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற அதுவும் ஒரு காரணமாக அமைந்தது.

    இதையடுத்து முருகப்பெருமான், ‘நான் குடிகொள்ளப்போகும் திருச்செந்தூர் திருத்தலம், குருவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் விளங்கும்’ என்று அருளினார். அதன்படி இத்தலம் குரு தலங்களில் முக்கியமானதாக விளங்குகிறது. இங்கு முருகப்பெருமனே, குருவாக கருதப்பட்டு வணங்கப்படுகிறார்.

    இங்குள்ள மேதா தட்சிணாமூர்த்தியும் விசேஷமானவர். இவர் கூர்மம் (ஆமை), அஷ்ட நாகம், அஷ்ட யானைகளுடன் கூடிய பீடத்தின் மீது காட்சி தருகிறார். வலது கையில் சிவபெருமானுக்குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் காட்சி தருகின்றன. தட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது.

    ஜாதகத்தில் குருவின் கோட்சாரம் சரியில்லாதவர்கள், இந்த திருச்செந்தூர் திருத்தலத்திற்கு வியாழக்கிழமைகளில் வந்து வழிபடுவது சிறப்பு. அதிகாலையிலேயே கடற்கரையில் நீராடுவதோடு, அருகில் இருக்கும் நாழிக்கிணறு தீர்த்தத்திலும் நீராட வேண்டும். பின்னர் ஆலயத்திற்குள் சென்று செந்தில் ஆண்டவரை வழிபாடு செய்தால், குரு பகவானின் அருளால் நன்மைகள் பலவும் கிடைக்கும்.
    கேரளாவில் அமைந்த சபரிமலை ஐயப்பன் கோவில், மிகவும் பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஒன்றாகும். இந்தக் கோவிலின் சிறப்புகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
    கேரளாவில் அமைந்த சபரிமலை ஐயப்பன் கோவில், மிகவும் பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஒன்றாகும். இங்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் வருகை தருவார்கள். அதுவும் கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை போட்டு விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அந்த வகையில் இந்த ஆண்டும் சில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் சபரிமலை ஐயப்பன் கோவில் வழிபாடு நடைபெற உள்ளது. எனவே வருகிற கார்த்திகை 1-ந் தேதி முதல் பக்தர்கள் பலரும் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்குச் செல்வார்கள். இந்தக் கோவிலின் சிறப்புகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    * சபரிமலை ஐயப்பன் கோவிலின் சன்னிதானத்தில் மேற்கூரைப் பகுதியில் ‘தத்துவமசி’ என்று எழுதப்பட்டிருக்கும். இதற்கு ‘நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாகவே இருக்கிறாய்’ என்பது பொருளாகும்.

    * சபரிமலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து செல்பவர்கள், 48 மைல் கொண்ட பெரிய பாதையில் செல்ல வேண்டும் என்பது மரபு.

    * சபரிமலை ஐயப்பனை நினைத்து மாலை அணிபவர்கள், அந்த மாலை தன் நெஞ்சில் படும்போதெல்லாம், ஐயப்பன் நம் மனசாட்சியை தட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதை உணர்வதாகக் கூறப்படுகிறது.

    * மகிஷியை வதம் செய்த மணிகண்டன், அந்த அரக்கியின் உடல் வளர்ந்து பூமியின் மேல் பகுதிக்கு வரக்கூடாது என்பதற்காக, அவள் உடல் மீது கனமான கல்லை வைத்ததாக தல புராணம் சொல்கிறது. இதை நினைவுகூரும் வகையில்தான், அழுதா நதியில் எடுக்கப்படும் கற்களை, பக்தர்கள் கல்லிடும்குன்று என்ற பகுதியில் போடுகிறார்கள்.

    * மனிதனின் மனதில் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களை விரட்டும் வகையில்தான், சபரிமலை பதினெட்டாம் படியில் மூன்று கண்களைக் கொண்ட தேங்காய் உடைக்கப்படுகிறதாம். அந்த பதினெட்டாம் படியில் ஏறும்போது பக்தர்கள் அனைவரும் ஐயப்பனிடம் கோரிக்கை வைத்தால் அது உடனடியாக நிறைவேறுமாம். எனவே எவ்வளவு கூட்ட நெரிசலைச் சந்தித்தாலும், பதினெட்டாம் படியில் வைக்கும் கோரிக்கையை பக்தர்கள் எவரும் மறப்பதில்லை என்கிறார்கள்.

    * திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் போல, சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழங்கப்படும் ‘அரவனை பாயசம்’ மிகவும் புகழ்பெற்றது. அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து இந்த பிரசாதம் தயாரிக்கப்படுகிறது.

    * சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தி அன்று தோன்றும் மகர ஜோதியை, அப்பாச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் காணலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாக தெரியும்.

    * சபரிமலை ஐயப்பனுக்கு, விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 ஒரு ரூபாய் நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டு பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். இதற்கு ‘அஷ்டாபிஷேகம்’ என்று பெயர்.

    * சபரிமலை ஐயப்பனின் உற்சவர் திருமேனி, ஆண்டுக்கு ஒரு முறை பம்பை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு ஆராட்டு உற்சவம் செய்யப்படும். பிறகு ஐயப்பனை அலங்கரித்து பம்பா விநாயகர் கோவில் முன்பு மக்கள் தரிசனத்துக்காக 3 மணி நேரம் வைப்பார்கள். சபரிமலை வர இயலாத 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த சமயத்தில், ஐயப்பனின் உற்சவர் திருமேனியை தரிசிக்க முடியும்.
    ×