search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சென்னிமலை முருகப்பெருமான் ஆலயம்
    X
    சென்னிமலை முருகப்பெருமான் ஆலயம்

    3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னிமலை முருகப்பெருமான் ஆலயம்

    ஈரோடு மாவட்டத்தில் அமைந்த முக்கியமான திருக்கோவிலில் ஒன்று, சென்னிமலை முருகப்பெருமான் ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தின் சிறப்புகளைப் பற்றி அறிந்துகொள்வோம்..
    ஈரோடு மாவட்டத்தில் அமைந்த முக்கியமான திருக்கோவிலில் ஒன்று, சென்னிமலை முருகப்பெருமான் ஆலயம் ஆகும். அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இந்தக் கோவில், சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. இந்த ஆலயத்தின் சிறப்புகளைப் பற்றி அறிந்துகொள்வோம்..

    அனந்தன் என்ற நாகத்திற்கும், வாயுதேவனுக்கும் இடையே ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி ஏற்பட்டது. அவர்களுக்குள் நடந்த சண்டையில், மேரு மலை உடைந்து பல பகுதிகளாக பிரிந்து பல இடங்களில் விழுந்தன. இதில் மலையின் சிகரப்பகுதி, பூந்துறை என்ற இடத்தில் விழுந்தது. அந்த இடமே சென்னிமலை. இந்த ஊருக்கு ‘சிரகிரி, புஷ்பகிரி, மகுடகிரி’ போன்ற பெயர்களும் உண்டு.

    இந்த மலையின் ஒரு பகுதியில் காராம் பசு ஒன்று, தினமும் பால் சொரிய விடுவதை, அந்த பசுவின் உரிமையாளர் கண்டார். இதையடுத்து அவர் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தார். அப்போது பூரண முகப்பொலிவுடன் முருகப்பெருமானின் சிலை கிடைத்தது. அந்த விக்கிரகத்தின் இடுப்பு வரை நல்ல வேலைப்பாடுடனும், முகம் அற்புத பொலிவுடனும் இருந்தது. ஆனால், இடுப்புக்கு கீழ் பாதம் வரை சரியான வேலைப்பாடு இல்லாமல் கரடு முரடாக இருந்தது. அதை ஒரு குறையாக எண்ணி, அந்தப் பாகத்தையும் சிறந்த சிற்பியைக் கொண்டு உளியால் சரி செய்தனர். ஆனால் அப்படி செய்தபோது, சிலையிலிருந்து ரத்தம் கொட்டியதாகவும், இதனால் அதே நிலையில் சென்னிமலையில் அந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    மூலவரான சென்னிமலை ஆண்டவர், நடுநாயக மூர்த்தியாக ஆலயத்தில் வீற்றிருக்கிறார். இவர் நவக்கிரகங்களில் செவ்வாய் அம்சமாக அமைந்துள்ளார். மூலவரைச் சுற்றி நவக்கிரகங்களின் மற்ற எட்டு கிரகங்களும் அழகிய தேவ கோஷ்டங்களில் அழகுற அமைந்து அருள்பாலிக்கிறார்கள். இங்கு மூலவரை வலம் வந்து வணங்கினாலே நவக்கிரகங்களையும் வழிபட்ட பலன் உண்டு. இத்தலம் செவ்வாய் பரிகார சிறப்பு தலமாகும். மூலவர் தண்டாயுதபாணி கோலத்தில் அருள்பாலிக்கிறார். சென்னிமலையில் மூலவருக்கு ஆறு கால பூஜை வேளையில் மட்டும் அபிஷேகம் நடக்கிறது. இதர நேரங்களில் உற்சவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. வள்ளி-தெய்வானை தேவியர் இருவரும், ஒரே கல்லில் பிரபையுடன் வீற்றிருக்கும் தனிச் சன்னிதி வேறு எங்கும் காண முடியாத அரியதாகும்.

    சென்னிமலை ஆண்டவரின் தினசரி அபிஷேகம் மற்றும் நைவேத்திய காரியங்களுக்கு, கோவிலால் பராமரிக்கப்பட்டு வரும் இரண்டு அழகிய பொதி காளைகள் மூலம் தினசரி அடிவாரத்திலிருந்து திருமஞ்சன தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது. சென்னிமலையில் அமைந்த முருகன் சன்னிதியை அடைய 1,320 திருப்படிகள் கடந்து செல்ல வேண்டும். அமாவாசை, சஷ்டி, கார்த்திகை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகின்றனர். வருடாந்திர பிரம்மோற்சவ தைப்பூசத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம், பங்குனி உத்திரமும் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆலயத்திற்கு மேலும் ஒரு பெருஞ் சிறப்பு உண்டு. அது முருகப்பெருமானுக்கு எல்லா ஆலயங்களிலும் ஒலிக்கவிடப்படும் ‘கந்தசஷ்டி கவசம்’ பாடல் அரங்கேறிய திருத்தலம் இதுவாகும். காங்கயம் அருகேயுள்ள மடவிளாகத்தைச் சேந்தவர், பாலன் தேவராய சுவாமிகள். மைசூரு தேவராச உடையாரின் காரியஸ்தர்களில் ஒருவரான இவர், சிறந்த முருக பக்தர். இவர், தான் இயற்றிய கந்தசஷ்டி கவசம் பாடலை, இந்த சென்னிமலை கோவிலில்தான் அரங்கேற்றம் செய்துள்ளார்.

    பின்னாக்கு சித்தர்

    சென்னிமலை முருகன் கோவிலில், பதினெட்டு சித்தர்களில் ஒருவராக கருதப்படும் பின்னாக்கு சித்தர் என்பவருக்கு சன்னிதி உள்ளது. இந்த சித்தர், இங்குதான் சமாதி அடைந்தார் என்று சொல்லப்படுகிறது. இவர் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு, தன் நாக்கை பின்னுக்கு மடித்து அருள்வாக்கு கூறிய காரணத்தால், இந்தப் பெயர் வந்ததாக சிலர் சொல்கின்றனர். அதுவே மருவி பலரும் இவரை ‘புண்ணாக்கு சித்தர்’ என்று அழைக்க வழி செய்து விட்டதாகவும் கூறுகின்றனர்.

    இதே போல் சத்திய ஞானியை குருவாகக் கொண்ட சரவணமுனிவர் என்பவர், சிரகிரி வரலாற்றை எழுதினார். அப்போது அவருக்கு முருகப்பெருமான் காட்சியளித்ததாக கூறப்படுகிறது. இந்த முனிவரின் சமாதியும், மலையின் மேல் பகுதியில் இருக்கிறது.

    ஈரோட்டில் இருந்து சுமார் 27 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, சென்னிமலை திருத்தலம்.
    Next Story
    ×