என் மலர்tooltip icon

    கோவில்கள்

    குடும்பப் பகை, அரசியல் பகை என்று அனைத்துப் பகைகளும் நீங்கும் கோவிலாகக் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கும் பட நிலம் பரப்பிரம்மம் கோவில் அமைந்திருக்கிறது.
    குடும்பப் பகை, அரசியல் பகை என்று அனைத்துப் பகைகளும் நீங்கி அவர்களுக்கிடையில் நட்பைத் தொடரச் செய்யும் கோவிலாகக் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கும் பட நிலம் பரப்பிரம்மம் கோவில் அமைந்திருக்கிறது.

    தல வரலாறு :

    படநிலம் பரப்பிரம்மம் கோவில், தானாகத் தோன்றிய கோவில் என்கின்றனர். இக்கோவில் தோற்றத்திற்கான தல வரலாறு என்ன? எப்படி இங்கு வழிபாடுகள் தொடங்கின? என்பதற்கான வரலாறு எதுவுமில்லை. முந்தைய காலத்தில் இக்கோவிலைச் சுற்றியிருக்கும் பல கிராமப்பகுதிகளை உள்ளடக்கிய நூறநாடு பகுதியின் நிர்வாக மையமாகப் படநிலம் இருந்திருக்கிறது.

    நூறநாடு பகுதி யாருக்குச் சொந்தம்? என்பதில் கேரளாவின் வடபகுதியை ஆண்ட அரசருக்கும், தென்பகுதியை ஆண்ட அரசருக்கும் இடையே எல்லைப் பிரச்சினை இருந்தது. இரு படையினருக்கும் அடிக்கடி போர் நடைபெறும் இடம் என்பதால் இந்தப் பகுதி படநிலம் (படைநிலம் அல்லது போர் நிலம்) எனப் பெயர் பெற்றுள்ளது.

    நூறநாடு பகுதியில் இருந்த 22 கிராமப் பகுதிகளின் தலைவர்களில் நூறு கோடி கருப்பன்கள் மற்றும் கடக்கால் கருப்பன்கள் உள்ளிட்ட சிலர் தென்பகுதி அரசருக்கும், வேட்டதாசன் மற்றும் வேட்டடிக்கல் கருப்பன்கள் உள்ளிட்ட சிலர் வட பகுதி அரசருக்கும் ஆதரவாக இருந்து வந்தனர்.

    இரண்டு பகுதி அரசர்களுக்கிடையில் நடைபெற்றதாகக் கருதப்படும் இப்போரில் இருபுறமும் பல வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் இக்கோவிலுக்கு அருகிலுள்ள சிரா எனும் பகுதியில் புதைக்கப்பட்டனர். இரண்டு பிரிவுகளுக்குமிடையில் இங்கு அடிக்கடி நடைபெற்ற போரால் உயிரிழப்புகள் மட்டுமின்றி, விவசாயப்பணிகளும், பிற பணிகளும் செய்ய முடியாமல் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டன.

    இதனால் ஆலயம் மற்றும் கிராமப்பகுதிகளில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அங்கிருந்த பொதுமக்கள் தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்காமல் தவித்தனர். இந்தப் போரை எப்படியாவது முடிவுக்குக் கொண்டு வர நினைத்த அவர்கள், இரண்டு அரசருக்கும் நெருக்கமாக இருந்த பாழூர் பனமன தம்பிரான் என்பவரை அணுகித் தங்களது கோரிக்கையை வைத்தனர்.

    அவரும் இரு நாட்டு அரசர்களையும் சந்தித்துப் போரைக் கைவிடும்படி வேண்டினார். ஆனால், இரு நாட்டு அரசர்களும் அவரது வேண்டுகோளை நிராகரித்து விட்டனர். அதனால் மன வருத்தமடைந்த அவர், இரண்டு அரசர்களும் போர் நிறுத்தம் செய்திட வேண்டி தற்போது ஆலயம் இருக்கும் இடத்தின் கிழக்குப் பகுதியில் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

    இரண்டு அரசர்களும் அவரது உண்ணாவிரதத்தை முதலில் கண்டு கொள்ளவில்லை. அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவர் இறந்து போய்விட்டால், தங்களுக்கு சாபம் வந்து சேர்ந்து விடுமோ என்று நினைத்துப் பயந்த இரண்டு அரசர்களும் அவர் முன்னிலையில் போரைக் கைவிடுவதாக ஒப்புக்கொண்டனர். அதன் பிறகு, அங்கிருந்த பரப்பிரம்மம் கோவிலில், போர் ஆயுதங்களைப் போட்டுப் போர் நிறுத்தம் செய்தனர் என்கிறது ஒரு வரலாறு.

    கோவில் அமைப்பு :

    ஆலமரம் ஒன்றின் கீழ் அமைந்திருக்கும் இக்கோவிலில், தானாகத் தோன்றிய ஓம் எனும் வரிவடிவச் சிலையே இறைவனாக இருக்கிறது. இக்கோவிலுக்குச் சுற்றுச்சுவர்கள், கூரை, கதவுகள் என்று எதுவுமில்லை. அதனால், பிற கோவில்களில் இருப்பது போன்ற நடை திறப்பு, நடை அடைப்பு செயல்பாடுகள் இங்கு இல்லை.

    இங்குள்ள இறைவன், பரப்பிரம்மமான சிவபெருமானாகவே நினைத்து வழிபடப்படுகிறார். இக்கோவிலில் தினசரி அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தில் கேரளக் கோவில் களில் தரும் சந்தனக் குழைவு தரப்படுவதில்லை, திருநீறு மட்டுமே வழங்கப்படு கிறது.



    சிறப்பு விழாக்கள் :

    இக்கோவிலில் மகா சிவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலையில் சிவபெருமானின் மகனாகக் கருதப்படும் சுப்பிர மணியக் கடவுளுக்கான காவடியாட்டம் எனும் சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இந் நிகழ்வுக்காகக் கோவிலைச் சுற்றிலும் உள்ள ஊர்களிலிருந்து பல காவடிகள் கொண்டு வரப்படுகின்றன. இந்தக் காவடியாட்டத்தைக் காணப் பல்லாயிரக் கணக்கான மக்கள் வருகின்றனர்.

    அன்றைய தினம் மாலையில் கெட்டு உத்சவம் எனும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது. இறைவன் சிவபெருமானின் வாகனமாகக் கருதப்படும் நந்தியின் உருவங்களைச், சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் 50 அடி உயரம் வரை உருவாக்கி, அதை மரத்தேர்களில் வைத்துக் கோவிலுக்குக் கொண்டு வருகின்றனர். மிகவும் வண்ணமயமாக நடைபெறும் இவ்விழாவினைக் காண கேரளாவின் பல மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர்.

    இங்கு மகா சிவராத்திரி தவிர, விருச்சிக மகோத்சவம், இருபத்தியெட்டாம் ஓணம், சப்தகாயஜனம் எனும் விழாக்களும் சிறப்பு விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.

    இக்கோவிலில் வழிபடுபவர்களுக்குப் பகை நீங்கி நட்பு தொடரும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. மேலும், இங்கு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர்கள் கருத்து வேறுபாடுகளின்றி மன மகிழ்வோடு நீண்டகாலம் வாழ்வர் எனும் நம்பிக்கையும் உள்ளது. இதனால், இக்கோவிலில் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறுகின்றன. கேரளக் கோவில்களிலேயே இந்த ஆலயத்தில்தான் மிக அதிகமான திருமணங்கள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    பரப்பிரம்மம் :

    அண்டத்தின் மூலக் காரணமே பரப்பிரம்மம் தான். ஆகாயம், வாயு, அக்னி, நிலம், நீர் எல்லாமே இதிலிருந்து வந்தவையே என்கிறது அக்னி புராணம். பரப் பிரம்மத்தைக் ‘கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்’ என்பர். பரப்பிரம்மம் காலம், அண்டங்களைக் கடந்தது. ஸத் (உண்மை), சித் (அறிவு), ஆனந்தம் ஆகிய மூன்றுமே பரப்பிரம்மத்தின் தன்மைகள் என்று ரிக் வேதம் கூறுகிறது.

    இறைவன் படைக்கும் முன்பாக இந்தப் பிரபஞ்சம் பெயர், உருவம் இல்லாமல், சுத்த வெளியாய், நிர்க்குணமாய்ச் சின்மாத்திரப் பரப்பிரம்மமாக இருந்தது. மாயாசக்தி தத்துவக் குணத்தை முதன்மையாக விளக்கும் அதில், பரப்பிரம்மம் பிரதி பலிப்பதனால் தோன்றிய பிரதி பிம்பமே ஈசுவரன் எனப்படுகிறது. இந்த ஈசுவரன் அந்த மாயையை வசப்படுத்திக் கொண்டு, பிரம்மா, விஷ்ணு, உருத்திர வடிவங்களாக நின்று, உலகங்கள் அனைத்தையும் படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழில்களைக் கொண்டு வழிநடத்தி வருகிறான்.

    மாயையினால் உண்டான பிரபஞ்சமும், மாயா சரீரமும் தோன்றி மறைந்து, ஜீவன்களை மீண்டும் பிறப்பு இறப்புகளுக்குள் கொண்டு வரும். முடிவில் எந்தப் பரப்பிரம்மத்திலிருந்து தோன்றியதோ, அந்தப் பரப்பிரம்மத்திலேயே ஒன்றாகக் கலந்துவிடும் என்று சித்தர் தத்துவம் தெரிவிக்கிறது.

    அமைவிடம் :

    கேரள மாநிலம் காயங்குளத்தில் இருந்து எடப்பன், பண்டாளம் வழியாக பத்தினம்திட்டா செல்லும் பேருந்து வழித்தடத்தில் படநிலம் அமைந் திருக்கிறது. காயங்குளத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும், பத்தனம்திட்டாவில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கும் படநிலம் ஊருக்குச் செல்ல, இரு நகரங்களில் இருந்தும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    மகாராஷ்டிர மாநிலம், ஜெய்ப்பூர் நகருக்கு அருகேயுள்ள உஜ்ஜயினில் கால பைரவர் தனிக்கோவிலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
    சிவபெருமானின் உக்கிர வடிவங்களுள் ஒன்றாக விளங்குகிறது பைரவர் திருக்கோலம். காவல் தெய்வமான இவரும், சிவனைப் போல் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்து வருகிறார். இவருக்கு சிவாலயங்களில் தனிசன்னிதி உண்டு. தன்னை நாடி வருகின்ற பக்தர்களின் பாவத்தை போக்குவதால் பைரவர் என அழைக்கப்பட்டார். குறிப்பாக எதிரிகளால் துன்பம் அடைபவர்கள், பைரவர் சன்னிதிக்கு சென்று வழிபட்டு அர்ச்சனை செய்தால், எதிரிகளின் தொல்லை ஒழியும். தீவினைகள் அழியும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வறுமை நீங்கி செல்வச்செழிப்புடன் வாழ்வார்கள். வளமான வாழ்க்கை வந்தமையும்.

    தல வரலாறு :

    முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்ற அரக்கன், சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் மேற்கொண்டான். அவன் முன் சிவபெருமான் தோன்ற கால தாமதமானது. உடனே அந்தகாசுரன் பஞ்சாக்னிகுண்டம் அமைத்து, அதன் நடுவே அமர்ந்து அன்ன ஆகாரமின்றி கடும் தவம் இருக்கத் தொடங்கினான். அவன் உதடுகள் ‘ஓம் நமசிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை இடைவிடாமல் உச்சரித்துக் கொண்டே இருந்தன. அவன் தவத்தை கண்டு மகிழ்ந்த ஈசன், அந்தகாசுரன் முன்பு தோன்றி அவன் வேண்டியபடி அரிய, பல வரங்களை வழங்கினார்.

    வரம் பெற்ற அந்தகாசுரனுக்கு அரக்க குணத்தோடு, ஆணவமும் தலை தூக்கியது. தன்னை வெல்லும் ஆற்றல் யாருக்கும் இல்லை என்ற எண்ணத்தில், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பல இன்னல்களைச் செய்தான். அந்தகாசுரனின் அடாவடித்தனம் நாளுக்கு நாள் அதிகரித்தது. அவனது கொட்டத்தை அடக்க நினைத்து தேவேந்திரன் முதலான தேவர்கள் அவனோடு போர் புரிந்தனர். ஆனால் அவனை யாராலும் வெல்ல முடியவில்லை. பிரம்மதேவனும் கூட தனது சக்திகளைப் பயன்படுத்தி அந்தகாசுரனை அழிக்க முயன்றார். அவரும் தோல்வியையேத் தழுவினார். வேறு வழியின்றி பிரம்மாவும், தேவர்களும் அந்தகாசுரனிடம் அடிபணிந்து நமஸ்கரித்து ‘உங்கள் கட்டளையை ஏற்று நடக்கிறோம். எங்களை காத்தருளவேண்டும்’ என்று கூறி சரணடைந்தனர்.



    வெற்றி மமதை தலைக்கேறிய நிலையில் அந்தகாசுரன், அகிலமே நடுங்கும் வகையில் வாய் விட்டு சிரித்தான். பின்னர், ‘போரிடுவதில் ஆண்சிங்கம் போன்றவன் நானொருவனே! என்னை வெல்வோர் யாருமில்லை; எனவேநீங்கள் அனைவரும் பெண்கள் போல் வளையல் அணிந்து, கண்களில் மைதீட்டி, சேலையுடுத்தி வாழ வேண்டும். யாரேனும் ஆண் போல் உடையணிந்து வந்தால் அந்தக் கணமே அவர்கள் அழிக்கப்படுவார்கள். ஜாக்கிரதை’ என்று கட்டளையிட்டான். வேறுவழியின்றி, தேவர்கள் அதற்குக் கட்டுப்பட்டனர்.

    இந்த இழிநிலையை சிவ பெருமான் ஒருவரால் மட்டுமே மாற்ற முடியும் என தேவர்கள் அனைவரும் நினைத்தனர். எனவே மந்தார மலையை அடைந்து சிவபெருமானை நினைத்து தவம் செய்தனர். அவர்களுக்கு காட்சி கொடுத்த சிவபெருமான், அந்தகாசுரனின் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதாக கூறினார். அதன்படி சிவபெருமான் தன்னுடைய தத்புருஷ முகத்தில் இருந்து, பைரவரை உருவாக்கி அந்தகாசுரனின் அட்டகாசத்தை முடிவுக்கு கொண்டு வர அனுப்பிவைத்தார்.

    கடுங்கோபத்துடன் சென்ற பைரவர், அந்தகாசுரனின் சேனைகள் அனைத்தையும் அழித்து, முடிவில் அவனை தன் சூலத்தால் குத்தித் தூக்கினார். அதைக்கண்டு தேவர்கள் ஆனந்தம் அடைந்தனர். பைரவரை போற்றி துதித்தனர்.

    அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலைநிறுத்த பல பைரவர்களை சிவபெருமான் தோற்றுவித்ததாக புராணங்கள் கூறுகின்றன. பைரவ மூர்த்தியானவர், கொடுமையை அழிப்பதில் எவ்வளவு கோபம் கொள்கிறாரோ, அதேபோன்று கருணை புரிவதிலும் ஈடுஇணையற்றவர். பக்தர்களின் பயத்தைப் போக்கி வெற்றியைத் தேடித்தருபவர். கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் நிகழ்ந்ததாக சத்ருத்ர சம்ஹிதாவின் 8-வது அத்தியாயம் குறிப்பிடுகிறது. தேவர்கள் வேண்டுகோளுக்கேற்ப உஜ்ஜயினில் கால பைரவர் தனிக்கோவிலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

    மகாராஷ்டிர மாநிலம், ஜெய்ப்பூர் நகருக்கு அருகேயுள்ள உஜ்ஜயினில் காலபைரவர் ஆலயம் உள்ளது. தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் ஆலயம் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். கோவிலின் நுழைவுவாசல் கோட்டை வடிவில் மால்வா கட்டிடக் கலைக்கு சான்றாக விளங்குகிறது.

    கோவில் சுவரில் விநாயகர், விஷ்ணு, தேவி ஒரு சேர அமைந்த புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. கோவில் அருகே ஆல மரத்தடியில் சிவலிங்கமும், அதன் எதிரே நந்தியும் இருக்கின்றன. மூலவர் காலபைரவர் 2 அடி உயரத்தில் நாய் வாகனம் இன்றி காட்சியளிக்கிறார். அவரது உடல் முழுவதும் வெள்ளிக் கவசத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது.



    காலபைரவர் தனி ஆலயங்களில் பிரசித்தி பெற்ற தலங்கள் பல இருந்தாலும், உஜ்ஜயினி காலபைரவர் ஆலயத்திற்கு தனி மகிமை உண்டு. இந்த ஆலயம் உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்களை தன்பால் இழுக்கிறது. இங்கு அஷ்டமி திதியில் பைரவ பூஜை செய்தால் எதிரிகள் அழிவர்; எத்தகைய நோயும் குணமாகும்; இழந்தவற்றை மீண்டும் பெறலாம் என்று நம்பிக்கையோடு கூறுகின்றனர் பக்தர்கள்.

    மது பாட்டில் சமர்ப்பிக்கும் பக்தர்கள் :

    பொதுவாக பைரவர் ஆலயங்களுக்கு செல்லும் பக்தர்கள், பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிஷேகம் செய்தும், வடை மாலை சாத்தியும், வெண் பொங்கல் நைவேத்தியம் செய்தும் வழிப்படுவார்கள். ஆனால் உஜ்ஜயினி காலபைரவர் ஆலயத்தில் ஒரு வினோத வழக்கம் உள்ளது. ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அர்ச்சனைப் பொருளுடன் மதுபாட்டிலையும் வாங்கி, அதை பைரவருக்கு சமர்ப்பிக்கின்றனர்.

    கோவில் குருக்கள் அதை வாங்கி பைரவர் வாயில் ஒரு தட்டைவைத்து மதுவை ஊற்றுகிறார். என்ன ஆச்சரியம்! மது பைரவர் வாய் வழியாக உள்ளே செல்கிறது. பாதி மது உள்ளே சென்றவுடன் மீதி தட்டில் தங்கிவிடுகிறது. மீதம் மது இருக்கும் பாட்டிலை வாங்கி வரும் பக்தர்களிடம் கொடுக்கிறார்கள். சிலர் பிரசாதமாக எடுத்து செல்கிறார்கள். பலர் அங்கேயே விட்டுவிடுகிறார்கள். பல ஆய்வாளர்கள் இந்த பீடத்தை சோதித்தும் பார்த்துவிட்டனர். இந்த அதிசயத்தைக் காணவே, வெளிநாட்டினர் பலர் இந்த ஆலயத்திற்கு வருகிறார்கள்.

    அகோரிகள் நடத்தும் தந்திர பூஜை :

    கால பைரவர் ஆலயத்திற்குப் பின்னால் ஒரு குகைக்குள் பாதாள பைரவர் சன்னிதி இருக்கிறது. இங்கே அகோரிகள் அமர்ந்து பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு, தோஷம் நீங்க இரவு நேரங்களில் தந்திர பூஜை நடத்துகின்றனர். பிறகு பக்தர்கள் கையில் கருப்பு கயிறு கட்டி விடுகிறார்கள். கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும், இங்கே வழிபடுபவர்களின் பிரச்சினைகள் அகலுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை என்கின்றனர் பக்தர்கள்.
    முருகப்பெருமான் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் திருக்கோலத்தில் அருளும் திருத்தலமே குமரக்கோட்டம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    முருகப்பெருமான் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் திருக்கோலத்தில் அருளும் திருத்தலமே குமரக்கோட்டம். இங்கு முருகப்பெருமான் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் ‘பிரம்ம சாஸ்தா’ வடிவில் அருள்கிறார். முருகர் மான் தோலை இடுப்பிலும், தர்ப்பையால் ஆன அரைஞாண் கொடியும் அணிந்துள்ளார்.

    கீழ் வலது திருக்கரத்தில் அபயம் வழங்கும் திருக்கோலம், மேல் வலது திருக்கரத்தில் ருத்திராட்ச மாலை, கீழ் இடக்கரத்தை மடி மீது பொருத்தி, மேல் இடக்கரத்தில் கமண்டலத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

    இத்தலத்தில் முருகப்பெருமான், சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தன் பக்தர்களுக்கு அருள்புரி கிறார். குமரக்கோட்டத்தில் முருகப்பெருமான், பிரம்ம சாஸ்தா கோலத்தில் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் திருக்கோலத்தில் அருளுவதால், இப்பிறவியில் கஷ்டப் படுபவர்கள் மற்றும் வாழ்க்கையே இவ்வளவுதானா? என சலித்துக் கொள்பவர்கள், கஷ்டத்தையும் நஷ்டத்தையுமே இப்பிறவியில் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள், இறைவா! எனது தலை எழுத்தை மாற்றிக் கொடு என எண்ணுபவர்கள் வழிபட வேண்டிய தலம் குமரக்கோட்டம். இங்கு அருள்புரியும் குமரன் நிச்சயமாக நமது தலைவிதியை மாற்றிக் கொடுப்பான்.



    ஆம்! குமரக்கோட்டம் குமரனை வணங்கினால், நம் விதியையும் முருகனின் அருளால் வெல்லலாம் என்பது நிச்சயம். ஒரு முறை பிரளயம் வந்து உலகமே அழிந்து போயிற்று. அப்போது பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்த மார்கண்டேயர் திருமாலிடம், ‘உலக உயிர்கள் அனைத்தும் என்னாயின?’ என வினவ, திருமாலோ ‘என் வயிற்றில் உள்ளன’ என உரைத்தார். இதை நம்பாத மார்கண்டேயர் காஞ்சீபுரம் வந்தார். அங்கு உலகம் அழிந்தாலும் அழியாத காஞ்சீபுரம் ஏகாம்பரநாதரை வணங்கி வாழ்வு பெற்றார்.

    இதனைக் கண்ணுற்ற திருமாலும் காஞ்சீபுரம் வந்து ஏகாம்பரநாதரைப் பணிந்தார். பின்பு குமரக்கோட்டம் வந்த திருமால், தன்னுடைய மருமகனுடன் ‘உருகும் உள்ளத்தான்’ என்றத் திருநாமத்தில் தனிச் சன்னிதியில் எழுந்தருளினார். ஆம்! குமரக்கோட்டத்தில் ‘உருகும் உள்ளப் பெருமாள்’ என்ற திருநாமத்தில் தனிச்சன்னிதியில் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார் மகாவிஷ்ணு.

    குமரக்கோட்டத்து குமரனை, கச்சியப்ப சிவாச்சாரியார் என்னும் அர்ச்சகர் பூஜித்து வந்தார். அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘வடமொழியில் மிகவும் பிரசித்திப்பெற்ற கந்த புராணத்தின் ஆறு சங்கிதைகளுள் சங்கர சங்கிதையின் முதற்காண்டமாகிய சிவ ரகசியக் காண்டத்தில் உள்ள எமது வரலாற்றை கந்தபுராணம் என்ற பெயரில் பாடுவாயாக’ என்று கூறினார். மேலும் ‘திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என முதல் அடியையும் எடுத்துக் கொடுத்தார் கந்தபெருமான்.



    இதையடுத்து கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்தை எழுதத் தொடங்கினார். காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் உள்ள மாவடிக்குச் சென்று தினமும் 100 பாடல்களை அங்கிருந்து எழுதி, பின்பு தினமும் இரவு அன்று எழுதிய நூறு பாடல்களையும் குமரக்கோட்டம் முருகன் கருவறையில் வைத்து அடைத்து விடுவார். மறுநாள் அதிகாலை, முருகப்பெருமானின் கருவறையைத் திறக்கும்போது, அப்பாடல் களில் தவறுகள் இருந்தால் குமரக்கோட்டம் குமரனே திருத்தம் செய்திருப்பாராம். கூடவே ‘காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி’ என காப்புச் செய்யுளையும் இயற்றி, கந்தபுராணத்தை நிறைவு செய்தார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

    அதைத் தொடர்ந்து முருகப்பெருமானின் ஆணைப்படி ‘கந்த புராணம்’ குமரக்கோட்டத்தில் அரங்கேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அரங்கேற்றத்திற்கு வந்திருந்த தமிழ் புலவர் களுக்கு ஏற்பட்ட ஐயப்பாட்டைப் போக்க, முருகப்பெருமானே புலவர் வடிவில் வந்து அவர்களின் ஐயத்தைப் போக்கினார். இந்த ஆலயத்தில் சந்தான கணபதி, முருகன் வழிபட்ட சேனாபதீஸ்வரர், வரசித்தி கணபதி, தண்டபாணி, சண்முகர், முத்துக்குமார சுவாமி, பைரவர் மற்றும் நவவீரர்களுக்கும் சன்னிதிகள் உள்ளன.

    பாம்பன் குமரகுருதாச சுவாமிகளுக்காக இத்தல முருகன் ரெயிலை தாமதமாக வரச் செய்தான். பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் சிலை ஆலய நுழைவு வாசலிலேயே எழிலுற அமைந்துள்ளது. உற்சவர் முருகப் பெருமான், வள்ளி- தெய்வானையுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ‘கந்த புராணம்’ அரங்கேறிய மண்டபம் ஆலயத்தில் இருக்கிறது. இத்தல பைரவரை அஷ்டமியிலும், முருகனுக்குரிய சஷ்டி, கிருத்திகை நாட்களிலும் வழிபட்டு வந்தால் பகை, பிணி விலகி சகலத்திலும் நன்மையே உண்டாகும்.

    இத்தல முருகனுக்கு தேன் அபிஷேகம் தினமும் செய்யப்படுகிறது. இதனைக் கண்குளிர கண்டு தரிசித்தாலே சகல நற்பேறுகளும் கிட்டும். குமரக்கோட்டம் குமரனுக்கு தீபாவளியில் மட்டும் நல்லெண்ணெய் அபிஷேகம் உண்டு. இங்கு மாத கிருத்திகை, திருக்கார்த்திகை, சஷ்டி, கந்த சஷ்டி விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. திருக்கார்த்திகையில் ஆலயம் முழுவதும் தீபங்களால் சுடர்விடும்.
    திருச்செந்தூரில் மற்றொரு சிறப்பு வாய்ந்த வெயிலுகந்தம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வரலாற்றை இன்று அறிந்து கொள்ளலாம்.
    திருச்செந்தூர் என்றாலே அறுபடை வீடுகளில் 2-ம் படை வீட்டில் அமர்ந்திருக்கும் செந்திலாண்டவ பெருமான்தான் அனைவரது கண்முன்பும் வந்து நிற்கும். அதேபோல் சிறப்பு வாய்ந்த மற்றொரு கோவிலும் திருச்செந்தூரில் அமைந்து உள்ளது என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கிறதா?. ஆம்! அந்த கோவிலின் பெயர் வெயிலுகந்தம்மன் திருக்கோவில்.

    இந்த கோவிலில் கொலு வீற்றிருக்கும் அம்மனின் பெயர் ஸ்ரீ வெயிலுகந்தம்மன். தல விருட்சம் பன்னீர் மரம். தீர்த்தம்-வதனாரம்ப தீர்த்தம். திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ளது இக்கோவில்.

    இனி இந்த கோவிலை பற்றியும், இக்கோவிலில் எழுந்தருளியுள்ள அம்மனின் சிறப்புகளையும் காண்போம்!.

    கந்தபுராணத்தின்படி, முருகப்பெருமான் பத்மாசூரனை அழிப்பதற்கு முன்பே அவருடைய தாய் பராசக்தியானவள் திருச்செந்தூரில் அமர்ந்தருளியிருக்கின்றார். பத்மாசூரனை பற்றி தெரிந்து கொண்ட பிறகு அவனை அழிப்பதற்கு முருகப்பெருமான் இங்கு வந்து தன் தாயை வணங்கி வேண்டி நிற்க, அன்னையும் கருணை கூர்ந்து தன் மகனுக்கு வெற்றி தரும் சக்தி வேலை கொடுத்தபடியினால், ‘வேல் உகந்த அம்பாள்’ என்று இந்த அம்பாள் அழைக்கப்பட்டார். அதுவே பின்பு பேச்சு வழக்கில் “வெயிலுகந்தம்மன்” என்று மருவி வழங்கலாயிற்று. அதன்பிறகே அன்னையின் ஆணைப்படி இந்நகரை முருகப்பெருமான் நிர்மாணித்ததாக கூறப்படு கிறது.

    சூரபத்மனுடன் நடந்தபோரின் போதும் அன்னையே பல வடிவம் கொண்டு போருக்கு உதவினாள். சூரனை அழித்ததினால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட, சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்து தவம் இயற்றும்படி அன்னை ஆணையிட, அதன்படியே சுப்பிரமணியரும் செய்திட்டார்.

    பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தையும், ஜபமாலையுடன் தவமியற்றும் கோலத்தில் சுப்பிரமணியர் இருக்கும் கோலத்தையும், திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்றும் காணலாம். அன்னையும், கிழக்கு முகமாக சிவபூஜை செய்யும் தன் மகனை ஆசீர்வதிக்கும் கோலத்தில் பத்திரகாளி அம்மன் அம்சத்தில் அருள்பாலிப்பதை(கோவிலுக்கு சற்று தொலைவில்) காணலாம்.

    அன்னைக்கு சிறப்பு மரியாதை அளிக்கும் விதமாக முருகப்பெருமானுக்கு நடைபெறும் ஆவணி மற்றும் மாசி திருவிழாவிற்கு முன்பாக வெயிலுகந்தம்மனுக்கு பத்து நாட்கள் உற்சவம் நடைபெறுகிறது. மேலும் தினந்தோறும் முருகப்பெருமானுக்கு நிவேதன பொருட்கள் எடுக்கும் முன்பாக அன்னை வெயிலுகந்தம்மனுக்கு முதல் மரியாதையாக நிவேதன பொருட்கள் கொடுத்த பிறகே எடுக்கப்படுகிறது.



    சூரசம்ஹாரம் நடை பெறும் நாளுக்கு முந்தைய இரவு, முருகப்பெருமானே சூட்சும உருவில் இத்திருக்கோவில் வந்து தன் அன்னைக்கு பூஜை செய்து அருள் பெற்று வேல் வாங்கி செல்வதாக ஐதீகம். எனவே அன்று இரவு பூஜை செய்யும் பாத்திரங்கள் தயாராக வைக்கப்பட்டு கோவில் திருக்காப்பிடப்படுகிறது.

    அம்மன் இவ்வூரின் வடக்கே கோவில் கொண்டுள்ளதால், இவளே ஊர் காளியாகவும் வணங்கப்பட்டு வருகிறாள். சித்திரை மாதத்தில் திருச்செந்தூரில் மற்ற பிற அம்மன் கோவில்களில் கொடை விழா தொடங்கும் முன்பாக அன்னை வெயிலுகந்தம்மனுக்கு மரியாதை செய்த பின்பே கொடை விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    திருச்செந்தூரின் முக்கியமான பிரசித்தி பெற்ற தீர்த்தமான வதனாரம்ப தீர்த்தம் இங்குள்ளது. இந்த தீர்த்தம் ஏற்பட ஒரு சுவையான கதையும் உண்டு.

    கி.பி.எட்டாம் நூற்றாண்டில் வரகுணபாண்டியன் என்ற மன்னனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமலே இருந்து வந்தது. திருச்செந்தூர் வந்து கந்த சஷ்டி விரதம் இருந்த பின் மன்னனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தையின் உடல் மனித உடலாகவும், முகம் குதிரை முகமாகவும் காணப்பட்டது. இதனால் மன்னன் மிகவும் கவலை கொண்டு முருகப்பெருமானிடம் வேண்டினான். ஒருநாள் மன்னனின் கனவில் கந்தன் தோன்றி, “ இந்த குறையை போக்கிட என் அன்னையினால் மட்டுமே முடியும். ஊரின் வடக்கில் உள்ள என் அன்னையை வேண்டிக்கொள். குறை நீங்கும்” என கூறினான்.

    மன்னனும் மறுநாளே சென்று அன்னையை தேட, காட்டினில், கயிலாய மலையை போன்ற இடத்தினில் அன்னையை கண்டு தன் குறையை நீக்கும்படி மனமுருக வேண்டினான். அன்னையின் அருகிலேயே குடில் ஒன்றும் அமைத்து அங்கேயே தங்கி விரதம் இருந்தான். இதனால் மன மகிழ்ந்த அன்னை மன்னனிடம், “ஆடி மாதம் செவ்வாய்க்கிழமையன்று தன் எதிரில் இருக்கும் கடலினில் குழந்தையுடன் சென்று நீராடினால் குழந்தையின் குதிரை முகம் நீங்கி அழகிய உருவம் பெறுவாள்” என்று அசரீரியாக கூறினாள்.

    அதன்படி வரகுணபாண்டிய மன்னனும் தன்னுடைய பச்சிளம் குழந்தையை எடுத்துக்கொண்டு அன்னையை நினைத்தபடி கடலுக்குள் இறங்கினான். அதுவரை பெரும் அலைகளாக வந்து கொண்டு இருந்த கடலில் இருந்து சிறிய அலைகள் மட்டுமே வர தொடங்கியது. மன்னன் குழந்தையோடு கடலில் தீர்த்தமாடி வரவும், குழந்தையின் முகம் அழகிய பெண் முகமாக மாறியது. இவ்வாறு ஆனபடியினால்தான் இந்த இடம் வதனாரம்ப(வதனம்+ஆரம்பம்=வதனாரம்பம்) தீர்த்தம் என வழங்கப்படலாயிற்று.



    இதனால் மனமகிழ்ச்சி அடைந்த மன்னன், குழந்தையின் உடலில் ‘நலுங்கு மஞ்சள்‘(மஞ்சள் மற்றும் குங்குமம் கலந்து) பூசி, செவ்வரளி மாலை அணிவித்தும் அலங்காரம் செய்து அன்னையை தரிசனம் செய்ய சென்றான். அங்கே அன்னையோ, அவளது முகம் மாறி குதிரை முக தோற்றத்தோடு வீற்றிருப்பதை கண்ட மன்னன், ‘என் குழந்தையின் குதிரை முகத்தைப் பெற்றுக்கொண்டு உன் முகத்தை என் குழந்தைக்கு கொடுத்து விட்டாயே. இந்த பாவத்தில் இருந்து என்னை காக்க வேண்டும்’ என்று அழுது வேண்டினான்.

    அதற்கு அன்னை, “என்னிடம் வந்து, யார் என்னை ‘அம்மா’ என்று அழைத்தாலும் அவர்கள் வேண்டியதை கொடுக்காமல் இருக்க என்னால் முடியாது” என்றும், மேலும் நீ செய்த கர்ம பலனின்படி, என்ன துன்பம் அனுபவிக்க வேண்டும் என்று இருக்கிறதோ, அதை நான் பெற்றுக்கொண்டேன். உன் கர்ம பலன் தீர்ந்ததும், நான் பெற்ற குதிரை முகம் மாறி விடும்” என்றும் அன்னை கூறினாள். அதுபோலவே சில காலம் கழிந்தபின் அன்னையின் முகம் மாறி தன் முகத்தோடு காட்சியளித்தாள்.

    அதன்பிறகு வரகுணபாண்டியமன்னன், அன்னைக்கு கோவில் எழுப்பி, கோவிலுக்காக நிலங்களும், மானியங்களும் எழுதி வைத்தான். இந்த நிகழ்வை குறிக்கும் விதமாக இன்றும் பெண் பக்தர்கள் ஒவ்வொரு ஆடி மாதமும் செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலையில், அம்மனுக்கு எதிரில் இருக்கும் வதனாரம்ப தீர்த்தத்தில் நீராடி நலுங்கு மஞ்சள் பூசி, செவ்வரளி மாலை அணிந்து அன்னையை வணங்குகின்றனர். இப்படி வேண்டினால் அழகு வடிவம் பெறுவதோடு, தீர்க்க சுமங்கலிகளாக இருப்போம் என்பது பெண்களின் நம்பிக்கை.

    அம்மன் மீது வீசப்படும் தின்பண்டம்

    இந்த கோவிலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அன்னைக்கு ஆவணி மற்றும் மாசி மாதத்தில் பத்து நாட்கள் உற்சவம் நடைபெறும். அப்போது தினமும் காலையில் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகள் கடந்து கோவிலுக்குள் நுழையும்போது, ஊரில் இருக்கும் சிறு குழந்தைகள் தாங்கள் கொண்டு வந்த தின்பண்டங்களை அன்னைக்கும் கொடுப்பது போல், அன்னையின் மீது தின்பண்டங்களை எறிகிறார்கள். அதன்பின் கோவிலில் சிறிது நேரம் விளையாடி விட்டு திரும்புகிறார்கள். வீட்டினில் செய்த தின்பண்டங்களை எந்த கோவிலிலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதற்கு மாறாக இங்கு மட்டும் அனுமதிக்கப்படுவது வேறெந்த தலங்களிலும் நடைபெறாத அற்புதமாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு நடைபெறும் மண்டபத்தினை ‘அம்மன் மண்டபம்’ என்று ஊர் மக்கள் அழைக்கிறார்கள்.

    ஆவணி மற்றும் மாசி திருவிழாவின் பத்தாம் திருநாள் அன்று அம்மன் கடலில் தீர்த்தவாரி செய்து முருகப்பெருமான் எதிரில் சண்முகவிலாசம் மண்டபத்தில் எழுந்தருளி சண்முகருக்கு நேர் எதிர் சேவையாகி தன் மகனுக்கு ஆசிகளை வழங்கி, ‘இனி உனது உற்சவம்(திருவிழா) சிறப்பாக நடைபெற நான் உறுதுணையாக இருப்பேன்’ என்று உறுதி கூறுவதாக ஐதீகம். பின்பு அன்னை மற்றும் சண்முகருக்கு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெறுகிறது.
    தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள மருதமலையின் மீது இக்கோயில் அமைந்துள்ளது.
    தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள மருதமலையின் மீது இக்கோயில் அமைந்துள்ளது. இம்மலை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைச் சேர்ந்தது. கோயம்புத்தூர் பேருந்து நிலையத்திலிருந்தும், தொடருந்து நிலையத்திலிருந்தும் இங்கு செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன. மலை அடிவாரம் வரை தமிழக அரசுப் பேருந்துகள் செல்கின்றன. மலையின் மீது படியேறி கோவிலுக்கு நடந்து செல்லலாம்; அல்லது கோயில் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கட்டணச் சிற்றுந்துகளில் மலைப்பாதையில் செல்லலாம். தனியார் இரு சக்கர வாகனங்களும் மகிழுந்துகளும் கட்டணம் செலுத்தி மலைப்பாதை மூலம் மேலே கோயிலுக்குச் செல்லலாம்.

    கோயில் அமைப்பு :

    புதியதாக அமைக்கப்பட்ட பாதை இராஜகோபுரத்தின் வழியே நேராக தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்கிறது. இராஜகோபுர நுழைவாயிலைத் தாண்டினால் கல்லாலான கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர், அவர்முன் வைக்கப்பட்டுள்ள பெரிய மயில்முக குத்துவிளக்கு, அடுத்து உலோகக் கொடிமரம், மயில்வாகனம், முன்மண்டபத்தில் வரதராஜப் பெருமாள் சன்னிதி, அர்த்தமண்டபத்தில் கருவறையின் நுழைவாயிலின் இருபுறத்திலும் விநாயகரும் (இடப்புறம்) வீரபத்திரரும் (வலப்புறம்), கருவறையில் தண்டத்துடன் காட்சிதரும் தண்டாயுதபாணி என இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

    வலம்புரி விநாயகரின் முன்னுள்ள மயில்முக விளக்கின் அடிப்புற ஆமைவடிவமும் அதனைத் தொடர்ந்த மேற்தண்டிலுள்ள பாம்பு உருவங்களும் குறிப்பிடத்தக்கவை. இது தனிப்பட்ட முருகன் கோயிலாக இருந்தாலும் இங்கு முருகன், சோமாஸ்கந்தனாக வெளிமண்டபத்தில் வலப்புறம் பட்டீசுவரர், இடப்புறம் மரகதாம்பிகை சன்னிதிகளுடன் உள்ளார். மரகதாம்பிகை சன்னிதிக்கு எதிராக வெளி மண்டபத்தில் நவகிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளது. மற்றும் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர் ஆகியோருக்கும் வெளிமண்டபச் சுவற்றில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.



    மலையின் அடிவாரத்திலிருந்து நடைப்பயணமாகச் செல்லும் போது, பாதையின் தொடக்கத்தில் தான்தோன்றி விநாயகர் சன்னிதியும், சற்று மேலே சென்றால் இடும்பன் சன்னிதியும் அமைந்துள்ளன. மலையின் மீது சென்றதும் அங்கிருந்து கோயிலுக்குச் செல்லும் இறுதிப் படிக்கட்டுகள் ஆதிமூலஸ்தானத்திற்கு நேரெதிராக உள்ளன. இப்பாதைவழிச் செல்பவர்கள் ஆதி மூலஸ்தானத்தில் சுயம்புவாக உள்ள சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையையும் அதற்கடுத்து, பஞ்சமுக விநாயகரையும் வழிபட்டபின் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்லலாம்.

    ஆதிமூலஸ்தானம் :

    மருதமலைக் கோயிலின் ஆதி மூலஸ்தானத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வயானையுடன் மூவரும் சுயம்புலிங்க வடிவில் உள்ளனர். இங்கு வள்ளியின் சுயம்பு உருவம், தெய்வயானையை விட சற்று உயரமாகக் காணப்படுகிறது. ஆதிமூலஸ்தான கருவறை விமானமும், முன்புறம் தைப்பூசக் கல்யாண உற்சவ மண்டபமும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன.

    பாம்பாட்டி சித்தர் குகைக்கோயில் :

    இக்கோவிலின் தெற்குமூலையில் பாம்பாட்டி சித்தர் குகைக்கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகள் கீழிறங்குகின்றன. இக்குகைக்கோயில் சிறு குடைவரை அமைப்பில் உள்ளது.[2] உட்புறத்தில் ஒரு பாறை பாம்பு வடிவில் உள்ளது. பாம்பாட்டி சித்தருக்கு முருகன் பாம்பு வடிவில் காட்சியளித்ததார் என்பது மரபு வரலாறு. பாம்பாட்டி சித்தர் சன்னிதி முன்புறமுள்ள தியான மண்டபத்தில் இங்கு வருகை தருவோர் அமர்ந்து அமைதியாக தியானம் செய்து வழிபடுகின்றனர். தண்டாயுதபாணி கோயில் தலவிருட்சம் இக்கோயிலுக்கு முன்னால் உள்ளது. இக்கோயிலுக்கு இறங்கி வரும் பாதையில் சப்த கன்னியருக்கு ஒரு சிறு சன்னிதி அமைந்துள்ளது.
    திருவேற்காட்டில் சுமார் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாலாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    திருவேற்காடு என்றவுடன் தேவி கருமாரி அம்மன் கோயில்தான் நினைவுக்குவரும். அதே திருவேற்காட்டில் பாலாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இது சுமார் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.

    63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த மண். இத்தல முருகப்பெருமான், அருணகிரிநாதரின் 'திருப்புகழ்' பாடல் பெற்றவர். தொண்டை மண்டலத் தேவாரத் திருக்கொயில்களில் 23 வது கோயிலாகத் திகழ்கிறது. 12 பாடல்களால் திருஞான சம்பந்தர் பாடித் துதித்த திருவிடம்; சேக்கிழார் போற்றிய திருத்தலம் எனப் பல சிறப்புகளைக்கொண்டது இந்த வேதபுரீஸ்வரர் கோயில்.

    நான்கு வேதங்களும் வேல மரங்களாக மாறி நின்று ஈசனை வழிபட்டக் காரணத்தால், வேற்காடு (வேல் காடு) என்று பெயர் பெற்றது. தேவி கருமாரி அம்மன் கோயிலிலிருந்து தென்மேற்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கி இருக்கும் கோயிலுக்கு முன்பாகப் புதுபிக்கப்பட்டிருக்கும் திருக்குளம்.

    ஐந்து நிலை ராஜகோபுரத்தைத் தரிசித்து உள்ளே நுழைந்தால், உயர்ந்து விரிந்த கூரை ரம்மியத்தைக் கொடுக்கிறது. பீடத்துடன் தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரம் கைகூப்பி வணங்கச் செய்கிறது. கருவறையை நோக்கி இருக்கும் நந்தி சிறிதாக- அழகாக அமைக்கப்பட்டுள்ளது. பிரதோஷத் தினத்தில் நந்தி அபிஷேகம் காண பக்தர்கள் பெருமளவில் கூடுவார்கள்.

    சிவலிங்கத்தின் பின்னால் கிழக்கு நோக்கி ஈசனும் அம்பாளும் திருமணக்கோலத்தில் அகத்திய முனிவருக்குத் திருக்காட்சி கொடுக்கும் தரிசனம் காண கண் கோடி வேண்டும். பக்தர்கள் அனைவரும் கருவறை வாயில்வரை அர்த்த மண்டபத்தில் நின்று இறைவனைத் தரிசிப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது.

    இங்கு வந்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். சிவன் பார்வதியுடன் கணபதி எழுந்தருளிய சந்நிதி உள்ளது. மூலவரின் கருவறை விமானம் யானையின் பின்புறத் தோற்றம் (கஜபிருஷ்டம்) கொண்டது.



    சந்திரர், சூரியர், தாமரை வடிவில் நவகிரகங்கள் உள்ளனர். பிராகாரத்தின் தென்புறத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிள்ளையாரைத் தனித் தனியாகத் தரிசிக்கலாம். சைவக் குரவர்கள் நால்வர், 63 நாயன்மார்கள் வரிசையாக எழுந்தருளியிருப்பது பரவசத்தைத் தருகிறது. மேற்குப் புறத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அநபாய சோழன், சேக்கிழார், வடக்கே சண்டிகேஸ்வரர், நின்ற கோலத்தில் பிரம்ம தேவன், துர்க்கை முதலிய தெய்வங்களும் எழுந்தருளி இருக்கின்றனர்.

    கருவறையின் பின்புறத்தில் லிங்கோத்பவர் அருள்புரிகிறார். மாத சிவராத்திரி நாள்களில் மாலை வேளையில் அவருக்கு 5 நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்க்கை இனிதாகும். கல்வி, ஞானம், செல்வம், இறையருள் கிட்டும்.

    பாலாம்பிகை தெற்கு நோக்கியபடி தனிச் சந்நிதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். அருகில் நடராஜர், சிவகாமி அம்பாள் உள்ளனர். அம்பிகை சந்நிதி அருகில் பைரவர் உள்ளார். இவரை சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டுவந்தால் அஷ்டமச் சனி, ஏழரைச் சனி, 'அர்த்தாஷ்டமச் சனி' பாதிப்புகள் விலகும்.

    சனீஸ்வரருக்குத் தனிச் சந்நிதி பெரிதாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதர், மூர்க்க நாயனாருக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன.

    முருகப் பெருமான், சுப்பிரமணியராகக் காட்சியளிக்கிறார். சூரசம்ஹாரம் முடிந்த பின்னர், சூரபத்மனைக் கொன்ற பாவம் நீங்க வேலால் கிணறு உருவாக்கி (வேலாயுதத் தீர்த்தம்), இத்தலத்தில் உள்ள வேதபுரீஸ்வரரை வழிபட்டார். அந்த 'ஸ்கந்த லிங்கம்' முருகனுக்கு முன்பாகவே வைக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து 9 ஞாயிற்றுக்கிழமைகள் அல்லது கார்த்திகை மாத ஞாயிறு, திங்கள்கிழமைகளில் நீராடி வேதபுரீஸ்வரரை வழிபட்டால் தோல் சம்பந்தமான நோய்கள் அகலும் என்பர். பிராகாரத் தூணில் ஐந்துதலை நாகம் குடைப்பிடிக்க, காலடியிலும் நாகத்துடன் தேவி கருமரியம்மன் வீற்றிருக்கும் சிற்பம் சிறப்பு வாய்ந்தது.
    விக்கிரவாண்டி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளுக்கு அருகில் கும்பகோணம் மார்க்கத்தில் சத்தியகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
    முன்னொரு காலத்தில் வாயு தேவனுக்கும், ஆதிசேஷனுக்கும் இடையே, தங்களுள் யார் பலசாலி என்ற போட்டி ஏற்பட்டது. ஆதிசேஷன் மேரு மலையைத் தன் உடம்பால் இறுக்கிப்பிடித்துக்கொள்ள, வாயுதேவன் பெருங் காற்றை வீசி அந்த மலையை அசைக்க முயன்றான். அப்பொழுது மேருமலையின் ஒன்பது சிகரங்கள் பெயர்ந்து, ஒன்பது கண்டங்களில் வீழ்ந்தன. இந்த ஒன்பது சிகரங்களில் ஒன்றான கந்தமானம் என்னும் சிகரம் ஏழு சிறுகூறுகளாக பிரிந்து பரதகண்டத்தின் ஏழு இடங்களில் விழுந்தது. ஏழில் ஒன்றான சத்தியம் என்னும் சிறுகூறு விழுந்த இடத்திற்கு ‘சத்தியகிரி’ என்ற பெயர் ஏற்படலாயிற்று. இவ்வூரில் சுயம்புவாகத் தோன்றி அருள்பாலிப்பவரே சத்தியகிரீஸ்வரர்.

    ‘கடவுள், தேவர், மனிதர் எவராயிருந்தாலும் தனக்கான வரையறை களைத் தாண்டி நடக்கும்போது, அதற்கான விளைவுகளை ஒருநாள் ஏற்கவேண்டியிருக்கும்’ என்பது இந்து மதத்தின் கோட்பாடாகும். பிரணவத்தின் பொருள் சொல்லத் தெரியாத பிரம்மனை, சிறையில் அடைத்தார் முருகப் பெருமான். சிவபெருமான் விடுவிக்கக் கூறியும் அவர் உடன்படவில்லை. இதையடுத்து வேதத்தின் பொருளை தனக்கு உரைக்குமாறு, முருகப்பெருமானிடம் ஈசன் கேட்டார்.

    அதற்கு முருகப்பெருமானோ, ‘கைகட்டி, வாய் பொத்தி சீடனின் பாவனையில் இருந்து கேட்டால்தான், வேதத்தின் பொருளை உரைக்க முடியும்’ என்று நிபந்தனை விதித்தார். சிவபெருமானும் அவ்வாறே சீடன் பாவனையில் வேதத்தின் பொருளை கேட்டார். இதனால் தந்தை சீடனாகவும், மகன் குருவாகவும் இருக்கும்படியான விபரீதம் ஏற்பட்டது. அதன்காரணமாக குமரனுக்கு, சிவத்துரோக தோஷம் ஏற்பட்டது. இதனைப் போக்கிக்கொள்ள இந்த வரலாறு நடந்த சுவாமி மலையில் இருந்து இறங்கி, சத்தியகிரி என்னும் தலத்தை அடைந்தார் முருகப்பெருமான்.

    அங்கு குமார தீர்த்தத்தை ஏற் படுத்தி அனுதினமும் அந்தத் தீர்த்தத்தில் நீராடினார். மேலும் அருகில் இருந்த சத்திய புஷ்கரணியிலும், சுப்பிரமணிய நதியிலும் (பழவாறு) நீராடி மூன்றாண்டுகள் சத்தியகிரீஸ்வரரை வணங்கி வழிபாடு செய்து வந்தார். இவ்வாறு சேய் (முருகன்), தந்தையை (சிவனை) வழிபட்டதால், சத்தியகிரிக்கு ‘சேய்ஞலூர்’ என்ற பெயர் ஏற்பட்டது. சேய்ஞலூர் காலப்போக்கில் மருவி சேங்கனூர் ஆனது.

    இந்த சம்பவத்திற்கு பிறகு ஒரு சமயம் முருகப்பெருமான் இத்தலத்தில் வந்து தங்கினார். சூரபதுமனை வதம் செய்வதற்காக செல்கின்ற வழியில் பெரும் படையுடன் அவர் இங்கு தங்கியதாக கூறப்படுகிறது. அப்போது தேவதச்சன், இந்த தலத்தை ஒரு நகரமாக ஆக்கியதாகவும், அதனால் இந்தத் தலத்திற்கு குமரபுரம் என்றும் பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள்.

    இதைத்தவிர இத்தலத்தில் பலமுனிவர்கள் விலங்குகளாகவும், மரங்களாகவும், பறைவைகளாகவும் உருவகம் கொண்டு வழிபட்டதால் இவ்வூர் ‘அசுமகாதக வனம்’ என்றும், சண்டேஸ்வர நாயனார் அவதரித்த தலம் என்பதால் ‘சண்டேஸ்வரபுரம்’ என்றும் குறிப்பிடப்படுகின்றது. (சண்டேஸ்வர நாயனார் இவ்வூரில் அவதரித்திருந்தாலும் அவரது வரலாற்றுடன் இவ்வாலயம் அதிக தொடர்புடையதாக இல்லை. அவர் முக்தியடைந்த திருவாய்ப்பாடி திருத்தலமே அவரது வரலாற்றுடன் அதிக தொடர்புடையதாக உள்ளது).



    சேங்கனூர் ஊரின் நடுவில் சத்தியகிரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற 274 தலங்களில் இது 41–வது திருத்தலமாகும். காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இந்தக் கோவில், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புக்களையும் கொண்டது. கிழக்கு பார்த்து கட்டுமலைக் கோவிலாக சத்தியகிரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மலையின் மேலே ஒரு பிரகாரம், மலைக்குக் கீழே ஒரு பிரகாரம் என இரண்டு பிரகாரங் களுடன், தேரோடும் நான்கு மாடவீதிகளும் உள்ளன.

    கர்ப்பக் கிரகத்தில் சத்தியகிரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். கோஷ்டத்தில் இரண்டு தட்சிணாமூர்த்திகள் வீற்றிருக்கின்றனர். மேலும் விஷ்ணு, பிரம்மாவும் அருள் பாலிக்கின்றனர், கர்ப்பக் கிரகத்தின் முன் அர்த்தமண்டபமும், மகாமண்டபமும் அமைந்துள்ளன. அர்த்தமண்டபத்தில் நடராசப் பெருமான், சமயக் குரவர் நால்வர் உள்ளனர். மகாமண்டபத்தில் தட்டினால் ஓசையைத் தரும் பைரவரும், சூரிய– சந்திரர்களும், சகிதேவி அம்பாளும் எழுந்தருளி இருக்கிறார்கள். மலைப்பிரகாரத்தின் மேல்பகுதியில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி சன்னிதிகள் உள்ளன. வடபுறத்தில் சண்டேஸ்வரர் சன்னிதியும், தீர்த்தக் கிணறும் இருக்கின்றன. கட்டுமலைக்குக் கீழே மலை வாசலை அடுத்து, தெற்குமுகமாக முருகன் சன்னிதி உள்ளது. கீழவீதியில் மேற்கு நோக்கி சீனுவாசப்பெருமாள் எழுந்தருளியுள்ளார்.

    சத்தியகிரீஸ்வரர் ஆலயத்திற்கு மேற்கே ஈஸ்வரனால் உருவாக்கப்பட்ட, சத்திய புஷ்கரணி என்னும் தீர்த்தக்குளம் உள்ளது. இந்த குளத்தில் நீராடினால் சகல புண்ணியமும் உண்டாகும் என்பது நம்பிக்கை. வடக்கே 1½ கிலோமீட்டர் தொலைவில் மண்ணியாறு (இது சுப்பிரமணிய நதி, சத்திய நதி என்றும் குறிப்பிடப்படுகின்றது) ஓடுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் தர்ம வாழ்வும், மோட்சமும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதே போல் திருக்கோவிலுக்கு வடக்கில் குமாரசுவாமியால் உருவாக்கப்பட்ட குமார தீர்த்தம் இருக்கிறது. இங்கு நீராடினால் சிவதுரோகம், குருதுரோகம் போன்ற பாவங்கள் நீங்கும் என்பதும், கிழக்கே பெருமாள் கோவிலின் பின்புறத்தில் அரிச்சந்திரனால் உருவாக்கப்பட்ட, மலையப்பன் குளம் என்னும் அப்பன் குளத்தில் நீராடினால் இஷ்டசித்தி உண்டாகும் என்பதும் ஐதீகமாக இருந்து வருகிறது.

    தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறும் இக்கோவில் காலை 7 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    திருப்பனந்தாளிலிருந்து தொடங்கி திருவாய்ப்பாடி, சேங்கனூர், திருமங்கலக்குடி, திருவிசநல்லூர் சிவாலயங்களையும், திருவெள்ளியங்குடி திவ்யதேசத்தையும் ஒரே நாளில் தரிசனம் செய்து வரலாம்.

    விக்கிரவாண்டி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளுக்கு அருகில் கும்பகோணம் மார்க்கத்தில் நெடுஞ்சாலையிலிருந்து 1½ கிலோமீட்டர் தூரத்தில் கிழக்கில் சேங்கனூர் அமைந்துள்ளது. கும்பகோணம், ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் ஆகிய ஊர்களிலிருந்து இவ்வாலயத்திற்குச் செல்ல பேருந்து வசதியுள்ளது. இந்த ஆலயத்தில் அருகில் உள்ள ரெயில் நிலையம் கும்பகோணம் ஆகும்.
    நாகதோஷம் இருப்பவர்கள், பாம்பு தெய்வங்களுக்கு முட்டையைப் படைத்து வழிபடும் தலமாகக் கேரள மாநிலம், பேரளச்சேரியில் உள்ள சுப்பிரமணியா கோவில் அமைந்திருக்கிறது.
    நாகதோஷம் இருப்பவர்கள், தங்களுடைய தோஷத்தைப் போக்கி வளமான வாழ்க்கையைத் தர வேண்டி, பாம்பு தெய்வங்களுக்கு முட்டையைப் படைத்து வழிபடும் தலமாகக் கேரள மாநிலம், பேரளச்சேரியில் உள்ள சுப்பிரமணியா கோவில் அமைந்திருக்கிறது.

    தல வரலாறு:

    படைப்புக் கடவுளான பிரம்மனுக்குத், தன்னைத் தவிர வேறு எவராலும் படைப்புத் தொழிலைச் சிறப்பாகச் செய்ய முடியாது என்கிற கர்வம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர், தன்னுடைய படைப்புத் தொழிலின் பெருமைகளைப் பற்றிச் சிவபெருமானிடம் சொல்லி, அவரது பாராட்டுகளைப் பெற்றுச் செல்லலாம் என நினைத்துக் கயிலாய மலைக்கு வந்தார்.

    அவர் வந்த வேளையில், இறைவன் சிவபெருமான் தியானத்தில் இருந்தார். அதனால், கயிலாய மலையில் இருந்த விநாயகர், முருகன், நந்தி, சிவகணங்கள், முனிவர்கள் என்று அனைவரும் வெளியில் காத்திருந்தனர். அங்கிருந்த அனைவருக்கும் மரியாதை செலுத்திய பிரம்மன், சிறுவனாக இருந்த முருகனுக்கு மட்டும் மரியாதை செலுத்தவில்லை.

    இதனால் கோபமடைந்த முருகன் பிரம்மனிடம் சென்று, ‘படைப்புத் தொழில் செய்யும் உமக்கு ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா?’ என்று கேட்டார்.

    அந்தக் கேள்விக்குப் பிரம்மனால் பதில் சொல்ல முடியவில்லை. அவர் பிரணவத்தின் பொருள் தெரியாமல் விழித்தார். உடனே, ‘பிரணவத்தின் பொருள் தெரியாமல் படைப்புத் தொழில் செய்வது மட்டுமில்லாமல், அதை நினைத்துப் பெருமை கொள்கிறாயா?’ என்று சொல்லியபடி அவரைத் தலையில் குட்டிச் சிறையில் அடைத்தார் முருகன்.

    தியானத்திலிருந்து எழுந்த சிவபெருமான், பிரம்மனை முருகன் சிறை வைத்திருப்பதை அறிந்து அங்கே வந்தார். அவர் முருகனிடம் பிரம்மனை விடுவிக்கும்படி வேண்டினார். தனது தந்தையே நேரில் வந்து வேண்டியதால் முருகனும் பிரம்மனை விடுதலை செய்தார். அதன் பின்னர், சிவபெருமான், ‘பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?’ என்று முருகனிடம் கேட்டார்.

    உடனே முருகன், ‘நன்றாகத் தெரியுமே’ என்றார்.

    ‘அப்படியானால் அப்பொருளை எனக்குச் சொல்ல முடியுமா?’ என்று கேட்டார் இறைவன்.

    அதைக் கேட்ட முருகன், ‘உரிய முறையில் கேட்டால் உங்களுக்கு விளக்கமாகச் சொல்வேன்!’ என்றார்.

    இதையடுத்து சிவபெருமான் முருகன் முன்பாகச் சீடனாக அமர்ந்து, பிரணவம் குறித்து விளக்கம் கேட்டார். முருகனும் சிவபெருமானுக்குப் பிரணவ மந்திரத்தின் முழுப் பொருளையும் விளக்கினார். அன்று முதல், சுவாமியாகிய சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனார். அதனால் முருகன், சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன் சுவாமி என்றும் பல பெயர்களால் போற்றப்பட்டார். இந்தக் கதை நம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

    முருகன் படைப்புக் கடவுளைச் சிறை வைத்ததால், பிரம்மன் படைப்புத் தொழிலைச் செய்ய முடியாமல் போனது. அதனால், முருகனுக்கு ஒருவரின் தொழிலைச் செய்ய விடாமல் தடுத்த பாவம் வந்து சேர்ந்தது. அதனால், முருகன் அந்தப் பாவத் திலிருந்து விடுபடுவதற்காகத் தந்தை சிவபெருமானின் அறிவுறுத்தலின்படி, நாகப்பாம்பாக உருவம் கொண்டு, பூமியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கிணறு ஒன்றில் வாழ்ந்து வந்தார். அவரைச் சூரிய வெப்பம், மழை ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பல பாம்புகள் அவருக்குக் குடையாக நின்று அவரைக் காத்துக் கொண்டிருந்தன.

    தனது மகனின் நிலையை நினைத்து வருந்திய பார்வதி தேவி, சிவபெருமானிடம், முருகனை நாகப்பாம்பு உருவிலிருந்து விடுவிப்பதற்கான வழிமுறைகளைக் கேட்டார். சிவ பெருமான் சொன்ன வழிமுறைகளின்படி, பார்வதி தேவி பதினெட்டு சஷ்டி விரதங்களை மேற்கொண்டு, கிணற்றில் பாம்பு வடிவிலிருந்த முருகனைத் தொட்டதும் முருகன் உண்மையான தோற்றத்தைப் பெற்றார்.



    ‘திரேதா யுகத்தில்’ சீதையைத் தேடி இந்தப் பகுதிக்கு வந்தார் ராமபிரான். அந்த இடம் சுப்பிரமணியர் கோவில் இருக்க வேண்டிய பகுதி என்பதை அறிந்தார். அங்கு சுப்பிரமணியர் கோவில் அமைக்கத் திட்டமிட்ட அவர், அனுமனை இமய மலைக்குச் சென்று சுப்பிரமணியர் சிலையைச் செய்து கொண்டு வரும்படி அனுப்பினார்.

    ராமர், சுப்பிரமணியருக்குக் கோவில் அமைத்துக் கும்பாபிஷேகம் செய்யத் திட்டமிட்டிருந்த நாளுக்குள் அனுமன் அங்கு வந்து சேராததால், ராமர் தன் கையில் அணிந்திருந்த வளையல் ஒன்றினை எடுத்துக் கோவில் கருவறையில் சிலையாக நிறுவிக் கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்து விட்டார். அதனால், இந்தப்பகுதிக்கு இளவரசனின் (ராமனின்) வளையல் என்பதன் மலையாள மொழிச் சொல்லான ‘பெருவலா’ என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் இந்தப்பெயர் மருவிப் ‘பேரளச்சேரி’ என்று மாற்றமடைந்து விட்டது என்கின்றனர்.

    கோவில் அமைப்பு :

    இங்கு சுப்பிரமணியர் நாக வடிவில் இருந்ததால், இக்கோவிலில் தாமிரம் மற்றும் வெண்கலத்தால் ஆன பாம்பு சிலைகளே முதன்மைக் கடவுளாக இருக்கின்றன. கோவில் வளாகத்தில் பல இடங்களில் பாம்புகளின் கற்சிலைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன.

    இக்கோவில் தினமும் அதிகாலை 4 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.15 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்கள், இக்கோவிலில் தினமும் நடைபெறும் நாகபூஜையில் கலந்து கொண்டு தங்களுடைய தோஷத்தைப் போக்கி வளமான வாழ்க்கையை வழங்கும்படி வேண்டிச் செல்கின்றனர். இக்கோவிலில் வழிபடும் பக்தர்கள் ‘முட்ட ஒப்பிக்கல்’ எனப்படும் நடைமுறையினைப் பின்பற்றி, கோவிலிலுள்ள பாம்புக் கடவுள்களுக்கு முட்டையைப் படைத்து வழிபடுகின்றனர்.

    ஆலயத்தில் மலையாள மாதமான தனுர் மாதத்தில் (தமிழ் மார்கழி) ‘கொடியேற்றம் விழா’ எனப்படும் எட்டு நாள் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழா நாட்களில் சாக்கையர் கூத்து, கதகளி, பரயன் துள்ளல், ஓட்டன் துள்ளல் சீதாங்கன் துள்ளல் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பெறுகின்றன.

    கோவில் வளாகத்தில் சுப்பிரமணியர் நாகப்பாம்பு வடிவத்தில் வாழ்ந்த கிணறு என்று கருதப்படும் மிகப்பெரிய படிக்கிணறு இருக்கிறது. இந்தப் படிக்கிணறை மலையாளத்தில் ‘சிரா’ என்றழைக்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் படிக்கிணற்றைப் போல் மிகப்பெரியதாகவும், அந்தக் கட்டுமானத்தைப் போன்ற தோற்றமுடையதாகவும் இருக்கும் இந்தக் கிணறு, தென்னிந்தியாவின் மிகப்பெரிய படிக்கிணறு என்பது குறிப்பிடத்தக்கது.

    நாக தோஷம் :

    ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கும் பல வகையான தோஷங்களில் நாக தோஷமும் ஒன்று. லக்னத்திலிருந்து 1,5,9 இடங்களில் சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இருந்தால் அது ‘நாக தோஷம்’ எனப்படுகிறது. ஒருவரின் முந்தைய பிறவியில், ஆண் நாகமும், பெண் நாகமும் ஒன்றாக இணைந்திருக்கும் நிலையில் அதைத் துன்புறுத்தியிருந்தால், இந்தப் பிறவியில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாமிடத்தில் ராகு என்ற கரு நாகம் நின்று, கணவனுக்குத் தோஷத்தை உண்டாக்கும்.

    பாம்பு தன்னுடைய பசிக்காக இரையைத் தேடிச் செல்லும் பொழுது, அதைத் துன்புறுத்தியிருந்தால், இந்தப் பிறவியில் அவருடைய ஜாதகத்தில் தொழில் இடமான லக்னத்துக்குப் பத்தாமிடத்தில் ராகுவோ, கேதுவோ நின்று தொழில் நிலைக்குத் தோஷத்தை ஏற்படுத்தும். பாம்பு முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலத்திலோ அல்லது பாம்பு தனது குட்டிகளுடன் ஒன்றாக இருக்கும் காலத்திலோ அதைத் துன்புறுத்தியிருந்தால், இந்தப் பிறவியில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாமிடமான புத்தி நிலையில் ராகுவோ, கேதுவோ நின்று புத்திர நிலையில் தோஷத்தையும் ஏற்படுத்தும் என்கின்றன ஜோதிட நூல்கள்.

    அமைவிடம் :

    கேரளாவில் கண்ணூர் நகரிலிருந்து கூத்தம்பாரா செல்லும் வழியில் 14 கிலோமீட்டர் தொலைவில் பேரளச்சேரி சுப்பிர மணியர் கோவில் அமைந்துள்ளது. கண்ணூர் பேருந்து நிலையத்தில் இருந்து இக்கோவிலுக்குச் செல்லப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
    திருநெல்வேலி மாவட்டம் அத்தாளநல்லூரில் உள்ள கஜேந்திரவரத பெருமாள் கோவில் பழமைவாய்ந்ததாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் இருந்து முக்கூடல் செல்லும் வழியில் அமைந்து உள்ளது அத்தாளநல்லூர். இங்குள்ள அருள்மிகு கஜேந்திரவரத பெருமாள் கோவில் பழமைவாய்ந்ததாகும். இத்தலத்து இறைவனின் பெயர் கஜேந்திர வரதர். இறைவியர் ஸ்ரீதேவி, பூதேவி. தீர்த்தம் விஷ்ணுபாத தீர்த்தம், கஜேந்திர மோட்ச தீர்த்தம். தல விருட்சம் நெல்லி மரம்.

    இந்திரத்துய்மன் என்னும் மன்னன், அகத்தியரின் சாபத்தால் யானை வடிவம் பெற்றான். அந்த யானை கஜேந்திரன் என பெயர் பெற்று யானைகளுக்கெல்லாம் தலைமை தாங்கியது. இந்த யானை, பொதிகை மலைக்கு சென்று அங்கு தீர்த்தத்தில் நீராடி, சூரியனை வணங்கி, திருக்குற்றாலத்திற்கு சென்று சிவமது கங்கையில் நீராடி, திருக்குற்றாலநாதரை வணங்கியது. பின்னர் மகாவிஷ்ணுவை வணங்குவதற்காக அத்தாளநல்லூருக்கு வந்தது. அத்தாளநல்லூரில் உள்ள தாமரை குளத்தில் நீராடி, தாமரை பூக்களை பறித்து திருமாலுக்கு சூட்ட எண்ணியது.

    குளத்தில் இறங்கி தாமரையை பறிக்கும்போது நாரத முனிவரின் சாபத்தால் முதலையான ஊர்த்துவன் என்கிற கந்தர்வன், கஜேந்திர யானையின் காலை பிடித்துக்கொண்டான். யானை பகீரத முயற்சியில் ஈடுபட்டும் முதலை தனது பிடியை விடவில்லை. உடனே யானை தனது துதிக்கையில் தாமரை மலரை வைத்து ‘ஆதிமூலமே’ என்று அழைத்தது.

    யானையின் அழைப்பை ஏற்று மகாவிஷ்ணு கருட வாகனத்தில் அங்கு வந்து, தனது சக்ராயுதத்தால் முதலையை கொன்று யானைக்கு அருள்பாலித்தார். எனவே இந்த தலத்தை ஆனைக்கு அருள் செய்த தலம் என்றும், ஆனையை காத்த தலம் என்றும் சொல்வார்கள். அத்தி என்றால் யானை என்று பொருள். யானையை ஆட்கொண்டதால் அத்தாள நல்லூர் என்று இவ்வூர் பெயர் பெற்றது. கல்வெட்டுக்களில் இவ்வூரை அத்தாணி நல்லூர், கரிகாத்தபுரி, பொய்மாம் பூம்பொழில் எனவும், இத்தலத்து இறைவனை ஆனைகாத்தருளிய பிரான் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



    பெருமாள், யானைக்கருள் செய்த திரு விளையாடல் நடந்த வரலாற்றுடன் தொடர்புடையதாக இந்தியா முழுவதும் 24 தலங்கள் குறிப்பிடப்பட்டாலும், ஸ்ரீமத் பாகவத்தில் கஜேந்திர மோட்ச திருவிளையாடல் பொதிகை மலையடிவாரத்தில் நடந்ததாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதுவே கஜேந்திர மோட்ச தலமாகும்.

    தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த திருத்தலம் பரிகார தலம் என்ற புனிதம் பெற்றது. திருக்கோவிலின் மேற்கே தாமிர பரணி தெற்கு-வடக்காக பாய்கிறது. இதனால் இந்த தீர்த்த கட்டம் கங்கைக்கு நிகரானது. நின்ற கோலத்தில் காட்சி தரும் இப்பெருமானை வழிபடுவதால் திருப்பதியில் வழிபட்ட பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இத்திருக்கோவிலின் பின்பகுதியில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு தூணில் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாக கருதப்பட்டு அந்த தூணே நரசிம்மராக கருதி வழிபடப் படுகிறது. இந்த தூணிற்கு சந்தனம் மற்றும் மல்லிகை மலர் களால் ஆன சட்டை சாற்றுதல் என்கிற நேர்த்திக்கடன் பக் தர்களால் செய்யப்படுகிறது.

    நாள்தோறும் இத்திருக்கோவில் நடை காலை 5.30 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்து இருக்கும். தினசரி நான்கு கால பூஜைகள் இக்கோவிலில் நடைபெறுகிறது. புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையும், ஆவணி மாத கிருஷ்ண ஜெயந்தியும், மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியும், தைப்பூசமும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படு கிறது.

    இத்தலத்திற்கு செல்வதற்கு வீரவநல்லூர் மற்றும் முக்கூடலில் இருந்து பஸ் வசதி உள்ளது. அருகில் உள்ள வீரவநல்லூரில் ரெயில் நிலையம் உள்ளது. திருநெல்வேலியில் இருந்து வீரவநல்லூருக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது.
    திருக்கல்யாண கோலத்தில் இருக்கும் அன்னை வாலாம்பிகையை தரிசிக்கவும், திருமணத் தடை நீங்கவும் ஒரு முறை நீங்களும் இளங்காடு சென்று இறைவன் இறைவியை தரிசித்து வரலாமே.
    இளங்காடு ஒரு சிறிய கிராமம். வான்பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி ஆற்றின் தெற்கிலும், பிள்ளை வாய்க்காலுக்கு வடக்கிலும் அமைந்திருக்கிறது இந்த ஊர். ராஜகிரி, வாலவனம், இளங்காடு என இந்த ஊருக்கு பல பெயர்கள் உண்டு. எல்லாம் காரணப் பெயர்களே.

    சோழ மன்னர்களுக்கும், இந்த ஊருக்கும் நிறைய தொடர்பு உண்டு. சோழ மன்னன் சுந்தர சோழனுக்கும், மலையமான் மகளான வானவன் மாதேவிக்கும் பிறந்த இரண்டாவது மகன் முதலாம் ராஜராஜ சோழன். இம்மன்னன் தான் போரிட்ட காந்தளூர் சாலைப் போரில் பெரிய வெற்றி பெற்றான். இந்த வெற்றிக்கு அடையாளமாக இளங்காட்டில் ஒரு சிவாலயத்தை கட்டினான். கி.பி.989-க்கு மேல் கி.பி 998-க்குள் இந்த ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டது. அதுவே விஜயவிடங்கேஸ்வரர் ஆலயம்.

    தனது முதல் வெற்றியின் அடையாளமாக தனது முதல் பட்டமான ராஜகேசரி என்ற பெயரையே இவ்வூருக்கு வைத்துள்ளான். அதன்பின்னர் கி.பி. 1004 முதல் கி.பி 1010 வரை தஞ்சை பெரிய கோவிலைக் கட்டி முடித்தான். தனது வெற்றிக்கு அடையாளமாக மட்டுமல்லாமல், தஞ்சை பெரிய கோவிலுக்கு முன்னோடியாகவும் இளங்காடு திருத்தலம் அமைந்ததாக கூறப்படுகிறது.

    ஆலய அமைப்பு :

    1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த சிவாலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் விஜய விடங்கேஸ்வரர் என்பதாகும். வாலவனேஸ்வரர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இறைவி பெயர் வாலாம்பிகை அம்மன். இந்தப் பெயரின் காரணமாக இவ்வூருக்கு வாலைவனம் என்ற பெயர் வந்திருக்கலாம். வாலைவனம் என்பதை தமிழ்படுத்தி இளங்காடு என தற்போது அழைப்பதாகக் கூறுகின்றனர்.

    இந்த சிவாலயத்தின் அமைப்பு தஞ்சை பெரிய கோவிலின் அமைப்பைப் போன்றே உள்ளது. இக்கோவிலின் கருவறையின் மேல் எழுப்பப்பட்டுள்ள விமானம் தஞ்சை பெரிய கோவிலின் கருவறையின் மேலுள்ள விமானம் போலவே காட்சியளிக்கிறது.

    இக்கோவிலின் கருவறையைச் சுற்றி ஒரு பிரகாரம் போல், சுமார் இரண்டு அடி அகல சாந்தாரம் எனும் திருச்சுற்று அமைந்துள்ளது. ஆலய திருச்சுற்றுக்கும் கருவறைக்கும் இடையே உள்ள இந்த திருச்சுற்றின் அமைப்பு நம்மை வியக்க வைக்கிறது. தெற்கு பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி சன்னிதியின் அருகே உள்ள ஒரு நுழைவாசலில் நுழைந்து, இந்த திருச்சுற்று வடக்கில் திரும்பி, மறுபடியும் கிழக்கில் திரும்பி, வடக்கு பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரர் சன்னிதிக்கு முன்பாக பிரகார வலம் நிறைவு பெறுகிறது. முற்றிலும் இறைவனின் கருவறையை சுற்றிய திருச்சுற்றாகவே இது உள்ளது.

    ஆலய விமானம் எத்திசையிலிருந்து பார்த்தாலும் ஒரே மாதிரியாகவே காட்சி அளிக்கிறது. ஆலய முகப்பில் ராஜகோபுர மண்டபம் நுழைவு வாசலாக அமைந்துள்ளது. இந்த வாசலின் இடதுபுறம் விநாயகப் பெருமான் மூஷிக வாகனத்துடனும், வலதுபுறம் முருகப்பெருமானும் காட்சி தருகின்றனர்.

    உள்ளே நுழைந்ததும் நந்தி மண்டபம் உள்ளது. இங்கு நான்கடி உயரமும், நாலரை அடி நீளமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட ஒரே கல்லால் ஆன நந்தி காணப்படுகிறது. இந்த நந்தி தனது கால்களை மடக்கி படுத்த நிலையில் இறைவனை பார்த்த வண்ணம் அமைந்துள்ளது. அடுத்து மகாமண்டபம். அதையடுத்த கருவறைக்கு தென்புறம் விநாயகரும், வடபுறம் ஆதி விஜயவிடங்கேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். இந்த இறைவனின் ஆவுடை சதுர வடிவமானது. மண்டபத்தின் தென்பகுதியில் நால்வர் திருமேனி உள்ளன. வடகிழக்கு பகுதியில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.

    அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் விஜயவிடங்கேஸ்வரர் லிங்கத்திருமேனியில் கீழ்திசை நோக்கி வீற்றிருக்கிறார்.

    திருச்சுற்றில் விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, கஜலட்சுமி, சூரியன், சந்திரன், பைரவர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். தேவக் கோட்டத்தில் பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் அருள்கிறார்கள். வடக்கில் சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது.



    அன்னை வாலாம்பிகை :

    ஆலய பிரகாரத்தில் வடமேற்குப் பகுதியில் வாலாம்பிகை அம்மன் சன்னிதி உள்ளது. மகாமண்டபத்தையும் அர்த்த மண்டபத்தையும் அடுத்துள்ள கருவறையில் அன்னை வாலாம்பிகை நின்ற திருக்கோலத்தில் புன்னகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கும் அழகே அழகு. இங்கு அன்னை நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள்.

    மேல் இரு கரங்களில் தாமரை மலரை ஏந்திய படியும், கீழ் இருகரங்கள் அபய வரத முத்திரையுடனும் காட்சி தருகிறாள். பெரும்பாலும் சிவாலயங்களில் இறைவி தெற்கு நோக்கியே அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் திருவையாறு, திருவானைக்கோவில், திருவண்ணாமலை தலங்களைப் போல, இங்கும் அன்னை கீழ்திசை நோக்கி அருள்பாலிப்பது ஓர் அபூர்வ அமைப்பாகும். இக்கோலத்தை திருக்கல்யாண கோலம் என்று அழைப்பார்கள். எனவே இங்குள்ள இறைவி வாலாம்பிகையை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் தலவிருட்சமான வில்வ மரமும் சிவபெருமான் சடையில் சூடும் சரக்கொன்றை மரமும் உள்ளன. கோவிலுக்கு உரிய தீர்த்தங்கள் மூன்று. ஊரின் வட புறம் ஓடும் காவிரி. ஊரின் தென்புறம் உள்ள முழங்கான் குளம். கோவிலின் ஈசானிய மூலையில் உள்ள தீர்த்தக்கிணறு.

    திருவிழாக்கள் :

    புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா, ஐப்பசி மாத கந்தசஷ்டி விழா, கார்த்திகை மாதத் திருநாள், மார்கழி மாத திருவாதிரை, தை மாதப் பூசத்திருநாள், மாசி மாத மகா சிவராத்திரி விழா, ஐப்பசியில் அன்னாபிஷேகம் என திருவிழாக்கள் மிக சிறப்பாக இங்கு நடைபெறுகின்றன. இது தவிர மாதப் பிரதோஷங்கள், சஷ்டி, கிருத்திகை வழிபாடுகளும் நடைபெறுகின்றன. துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் திறந்திருக்கும்.

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு மேற்கில் 3 கிலோமீட்டர் தொலைவிலும் கல்லணையில் இருந்து 8 கி.மீ தொலைவிலும் உள்ளது இளங்காடு கிராமம். திருக்காட்டுப்பள்ளியில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.

    திருக்கல்யாண கோலத்தில் இருக்கும் அன்னை வாலாம்பிகையை தரிசிக்கவும், திருமணத் தடை நீங்கவும் ஒரு முறை நீங்களும் இளங்காடு சென்று இறைவன் இறைவியை தரிசித்து வரலாமே.
    ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் திருக்கோயில் சென்னை பாரிமுனையிலுள்ள மண்ணடி பகுதியில் உள்ள தம்புச் செட்டித் தெருவில் அமைந்துள்ளது.
    காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் திருக்கோயில் சென்னை பாரிமுனையிலுள்ள மண்ணடி பகுதியில் உள்ள தம்புச் செட்டித் தெருவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கி.பி.1640ல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டையின் உட்பகுதியில் ஆரம்பத்தில் இருந்தது.ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் பிரம்மஸ்ரீ முத்துமாரி ஆச்சாரி என்பவரால் தம்புசெட்டித் தெருவிற்கு இந்த கோயில் இடமாற்றம் செய்யப்பட்டு வழிபாடுச் செய்யப்பட்டு வருகிறது.

    புராண வரலாற்றில் பரதபுரி, சுவர்ணபுரி என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்ரீ காளிகாம்பாள், பழங்காலத்தில் மீனவர்களும் மற்றவர்களும் செந்தூரம் சாற்றி வழிபட்டதால் நெய்தல் நில காமாட்சி என்ற பெயரிலும் ஸ்ரீ காளிகாம்பாள் அழைக்கப்படுகிறார். காஞ்சிபுரத்தில் உள்ள அன்னை காமாட்சியே ஸ்ரீ காளிகாம்பாளின் 12 அம்சங்களுள் ஒன்றாகும் என்பதை நினைவூட்டும் வகையில், மேற்கு நோக்கி அர்த்த பத்மாசனத்தில் அருளாட்சி செய்யும் ஸ்ரீ காளிகாம்பாள் பாதத்தை நோக்கி அர்த்தமேரு சக்கரம் அமைந்துள்ளது.

    அம்பாளின் தோற்றம் :

    கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீகாளிகாம்பாளின் திருக்கைகளில் அங்குசமும், பாசமும், நீலோத்ப மலரும் காட்சியளிக்கிறது. இடது கை வரதமுத்திரையுடன் காணப்படுகிறது. வலது கால் தாமரையில் வைத்தபடி அன்னை காளிகாம்பாள் பகதர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    அம்பாளின் கருவறையைச் சுற்றி ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர், நவக்கிரகங்கள், வள்ளி தெய்வயானையுடன் அமர்ந்திருக்கும் ஸ்ரீமுருகர், ஸ்ரீவீரபஹாமங்கர் மற்றும் அவரது சீடர் சித்தையா, அன்னையின் பள்ளியறை, ஸ்ரீ கமடேஸ்வரர் சந்நிதி, ஸ்ரீதுர்கா, ஸ்ரீசண்டிகேஸ்வரர், பிரம்மா, சூரிய சந்திரர் சந்நிதிகள் அமைந்துள்ளன.

    வெளிப்பிரகாரத்தை சுற்றி ஸ்ரீ சித்தி விநாயகர், கொடி மரம், வள்ளி, தெய்வானையுடன் கூடிய ஸ்ரீ வட கதிர்காம முருகன், ஸ்ரீசித்திபுத்தி விநாயகர், ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீதுர்கா, யாகசாலை, ஸ்ரீநடராஜர், ஸ்ரீமகாமேரு,ஸ்ரீவீரபத்திர மகாகாளியம்மன், ஸ்ரீநாகேந்திரர், ஸ்ரீவிஸ்வபிரம்மா சந்நிதிகள் அமைந்துள்ளன.

    கோவிலின் சிறப்பு :

    குபேரன் இத்திருத்தலத்திற்கு வந்து அம்பாளை வழிபட்ட பின்னரே அவருக்கு செல்வம் அதிகரித்தது என்ற புராண செய்திகளும் உண்டு. மேலும், மராட்டிய சிங்கம் சத்ரபதி சிவாஜி 1677-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் திகதி அன்று ஸ்ரீகாளிகாம்பாளை வழிபட்ட பின்னரே சிவாஜி தன்னை சத்ரபதியாக முடிசூட்டிக் கொண்டார் என்பது வரலாறு. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் "யாதுமாகி நின்றாய் காளி" என்று தான் எழுதிய பாடல் அன்னை ஸ்ரீ காளிகாம்பாளை மனதில் வைத்து எழுதப்பட்டதாகும்.

    திருவிழாக்கள் :

    சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரி, சித்ரா பவுர்ணமி, வைகாசியில் பிரம்மோற்சவம், ஆடியில் வசந்த உற்சவம், வெள்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் உற்சவம், ஆடிக்கிருத்திகை, ஆவணியில் விநாயக சதுர்த்தி, புரட்டாசியில் சாரதா நவராத்திரி, ஐப்பசியில் கமடேஸ்வரர் அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம்,

    கந்த சஷ்டி உற்சவம், கார்த்திகையில் சோமவார உற்சவம், கார்த்திகை தீபத்திருவிழா, மார்கழியில் மாணிக்கவாசகர் உற்சவம், நடராஜர் ஆருத்ரா தரிசனம், அம்பாளின் தீர்த்தவாரி, தை மாதத்தில் புஷ்பாஞ்சலி, வெள்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் உற்சவம், மகுடாபிஷேகம் ஆகியவை வருடாவருடம் இங்கு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

    பரிகாரம் :


    திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் ஸ்ரீகாளிகாம்பாள் கருவறையில் உள்ள மூலவருக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து அந்த மஞ்சளை பயன்படுத்தி வந்தால் கூடிய விரைவில் பலனை கிடைப்பது உறுதி.

    செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தருவதாக பக்தர்களால் பெரிதும் நம்பப்படுகிறது. மேலும், மேற்கு நோக்கிய நிலையில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

    வழிபாட்டு நேரம் :

    காலை சந்தி பூஜை 6 மணி முதல் 7 மணி வரை, உச்சிக்காலம் பகல் 12 மணி, சாயரட்சை மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை, அர்த்த ஜாமம் இரவு 9 மணிக்கு என பூஜைகள் தினமும் நடைபெறுகிறது.
    சங்கரராமேசுவரர் திருக்கோவிலில் உள்ள ‘வாஞ்சா புஷ்கரணி’ என்ற தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு வந்தால் பிள்ளைப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
    தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்து உள்ளது அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் திருக்கோவில். இத்தலத்து இறைவனின் பெயர் சங்கரராமேசுவரர். இறைவி பாகம்பிரியாள். இங்குள்ள தீர்த்தம் வாஞ்சா புஷ்கரணி. தல விருட்சம் வில்வ மரம்.

    இத்திருக்கோவிலை காசிப முனிவர், கவுதமர், பரத்துவாசர், அத்திரி போன்ற முனிவர்கள் வணங்கி அருள் பெற்றார்கள் என்று வழி, வழியாக தல புராண செய்திகள் கூறுகின்றன. தெய்வீக பயணமாக திருச்செந்தூர் வேலவனை வழிபட வந்த காசிப முனிவர் சோலை மிகுந்த இந்த ஊரை கண்டு மகிழ்ந்து இங்கு ஒரு சிவலிங்கத்தை எழுந்தருள செய்து வழிபாடு நிகழ்த்தினார் என்றும், அதுவே சங்கரராமேசுவரர் கோவில் என்றும் குறிப்பிடுகின்றனர்.

    திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்தவுடன் இந்திரன் தனது மகளாகிய தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார். இந்த திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடக் கிறது. கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் தெய்வானை திருமண படலத்தில் விரிவாக இதனை விளக்குகிறார். சிவனும், பார்வதியும் தங்கள் திருவடிகளில் விழுந்து வணங்கிய மணமக்களை மார்புறத்தழுவி வாழ்த்துகின்றனர்.

    முருகப்பெருமானின் திருமணத்தை கண்டு களிக்க வந்த சிவபெருமானும், பார்வதி தேவியும் சோலை சூழ்ந்த இவ்வூருக்கு எழுந்தருளி தங்குகின்றனர். அச்சமயம் உமையாள், சிவபெருமானிடம் வேதங்களின் விழுப்பொருளாகிய திருமந்திரத்தை உபதேசிக்குமாறு வேண்டுகிறார். இறைவனிடம் அம்பிகை உபதேசம் பெற்ற திருத்தலமாதலின் இவ்வூர் திருமந்திர நகர் என வழங்கப்பட்டது.

    பாண்டிய மன்னராட்சியின் பிற்கால பாண்டிய மரபில் வந்த குறுநில மன்னரான சந்திர சேகர பாண்டியனின் புதல்வரான சங்கரராம பாண்டியன், கயத்தாறை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தான். மன்னர் குலம் தழைக்க, மனை விளங்க மழலை செல்வம் இல்லாது வருந்தினான். மன்னனின் வருத்தத்தை கண்ட பெரியோர்கள், காசி போன்ற புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று புனித நீராடி வருமாறு கூறினார்கள்.

    இதன்படி மன்னன் தனது பரிவாரங்களுடன் புனித நீராட செல்லும்போது, இறைவனது குரல் அசரீரியாக, ‘வேந்தே! நீ, திருமந்திர நகரில் உள்ள வாஞ்சா புஷ்கரணி என்ற தீர்த்தத்தில் நீராடி. அங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டு வா’ என ஒலித்தது.

    அதன்படி மன்னன் வாஞ்சா புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடியவுடன் அசரீரி மீண்டும், ‘அரசே! காசிப முனிவரால் ஸ்தாபனம் செய்து பூஜிக்கப்பட்ட சிவலிங்க பெருமானுக்கு திருக்கோவில் எழுப்புவாயாக’ என்று கூறியது. இறைவனின் கட்டளைக்கு ஏற்ப மன்னரால் இத்திருக் கோவில் கட்டப்பட்டது.

    இத்திருக்கோவிலில் உள்ள ‘வாஞ்சா புஷ்கரணி’ என்ற தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு வந்தால் பிள்ளைப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். பிள்ளைப்பேறு வேண்டுவோர் இங்கு வந்து வழிபட்டால் குழந்தை வரம் தரும் அற்புத திருத்தலமாக இவ்வாலயம் திகழ்கிறது.

    இங்கு காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் நடை திறந்து இருக்கும். தினமும் ஐந்து கால பூஜைகள் இங்கு நடைபெறுகிறது.

    சித்திரை 10 நாட்கள் நடைபெறும் திருவிழா, வைகாசி சண்முகர் புஷ்பாஞ்சலி, புரட்டாசி மாதம் நவராத்திரி விழா மற்றும் பாரிவேட்டை திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை திருவிழா, தைப்பூசம் தெப்பத்தேர் திருவிழா, மாசி மாத மகா சிவராத்திரி திருவிழா, பங்குனி மாதம் காரைக்கால் அம்மையார், சிவ பெருமானிடம் மாங்கனி பெற்ற நிகழ்ச்சி ஆகிய திருவிழாக்கள் இங்கு வெகு சிறப்பாக நடைபெறும்.
    ×