என் மலர்tooltip icon

    கோவில்கள்

    நம் வாழ்வில் அறிந்தோ, அறியாமலோ செய்த தவறால் பெண் சாபத்திற்கு ஆளாகியிருந்தால், திருவிசநல்லூர் கோவிலில் வந்து வழிபட சாபம் பாவம் நீங்கும்.
    கேரள மன்னன் கணபதி என்பவனின் பெண் பாவத்தை போக்கிய திருத்தலம் திருவிசநல்லூர் ஆகும். பெண்களை வஞ்சித்து, ஏமாற்றி வாழ்ந்த கணபதியின் பெண் பாவம் இங்கு வழிபட அகன்றதாம். நம் வாழ்வில் அறிந்தோ, அறியாமலோ செய்த தவறால் பெண் சாபத்திற்கு ஆளாகியிருந்தால், இத்தலம் வந்து வழிபட சாபம் பாவம் நீங்கும்.

    இத்தல ஈசனின் திருநாமம் சிவயோக நாத சுவாமி என்பதாகும். சுயம்பு மூர்த்தியான இவர், கிழக்கு நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தல விருட்சங்களாக அரசு, வில்வம் உள்ளன. சம்பந்தரின் பாடல் பெற்ற தலம் இது.

    திருவிசநல்லூர் பகுதியில் சிறந்த சிவ பக்தரான மகான் ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் என்பவர், சவுந்தர நாயகி சமேத சிவயோகிநாத சுவாமி திருக்கோவிலில் தினமும் காலையில் வழிபாடு செய்து வந்தார். ஒருநாள் கூட தவறியதில்லை. ஒருமுறை கார்த்திகை அமாவாசை தினம் அன்று இவர் தமது முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்ய ஏற்பாடு செய்தார். மிகுந்த ஆசாரத்துடன் அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது.

    அன்று காலையில் சிரார்த்த நேரத்திற்கு முன்னால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒருவர், வெங்கடேச தீட்சிதரின் இல்லத்து வாசலுக்கு வந்து, தான் மிகவும் பசியுடன் இருப்பதாகவும், உண்ண ஏதாவது தருமாறு வேண்டினான். அவனது தோற்றத்தைக் கண்டு இரங்கிய மகான், இல்லத்தில் சிரார்த்தத்திற்காகச் செய்யப்பட்ட உணவை அளித்தார்.

    அவரது செயலைக் கண்ட அந்தணர்கள், ‘இது சாஸ்திர விரோதம். இதற்கு பரிகாரமாக ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் காசி சென்று கங்கையில் நீராட வேண்டும். இல்லாவிட்டால் ஊர் விலக்கு செய்து, அவரை குடும்பத்துடன் நீக்கி வைக்க வேண்டும்’ என்று கூறியதுடன், சிரார்த்தம் செய்யவும் மறுத்து விட்டனர்.

    ‘வடநாட்டில் இருக்கும் கங்கையில் ஒரே நாளில் நீராடித் திரும்ப முடியுமா? கும்பகோணத்தில் இருந்து காசியில் இருக்கும் கங்கைக்கு சென்று வருவதற்குள், அடுத்த ஆண்டு திதி வந்து விடுமே!’ என்று மகான் வருந்தினார். இறைவனை நினைத்து மனமுருகி ‘கங்காஷ்டகம்' என்னும் துதி பாடினார். அவர் பாடி முடித்ததும், அவர் வீட்டுக் கிணற்றில் இருந்து கங்கை பொங்கி வழிந்தது. கிணற்றிலிருந்து நீர் மேலெழுந்து வழிந்து பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்து வெள்ளக்காடானது.

    இதைக் கண்டு அதிசயித்த மக்கள், ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதரிடம் மன்னிப்புக் கேட்டு, அந்த கங்கை நீரில் நீராடினர். சிரார்த்தம் செய்ய வந்த அந்தணர்கள் தங்கள் தவறை உணர்ந்து மகானிடம் மன்னிப்புக் கேட்க, மகானும் கங்கையிடம் தணியுமாறு பிரார்த்தித்தார். கங்கையும் அடங்கி அக்கிணற்றிலேயே நிலைத்தது என்பது ஐதீகம். அதைத் தொடர்ந்து திதி கொடுக்கப்பட்டது.

    காலையில் நடந்த இந்த நிகழ்வுகளின் காரணமான, மகானால் திருவிசநல்லூர் ஆலயத்திற்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியவில்லை. அன்று மாலை திருவிசநல்லூர் ஈசன் கருவறையில் மூர்த்தங்களிடம், ஒரு துண்டுச் சீட்டு இருந்தது. அதில், ‘இன்று மதியம் ஸ்ரீதர அய்யாவாள் வீட்டின் திதியில் உண்டதால், இரவு நைவேத்தியம் வேண்டாம்’ என்று அந்தத் துண்டுச் சீட்டில் எழுதியிருந்தது.

    ஏழையாக வந்து, அய்யாவாள் வீட்டில் திதி உணவை உண்டது சிவபெருமானே என்றுணர்ந்த அனைவரும், ஸ்ரீதர அய்யாவாளை போற்றிப் புகழ்ந்தனர்.

    இந்த அற்புத நிகழ்வே ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று திருவிசநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச மடத்தில் நிகழ்கிறது.

    மகான் தன்னுடைய கங்காஷ்டகத்தில், ‘கங்கையே நீ இங்கேயே ஸ்திரமாக இரு’ என்று வேண்டுகிறார். அதனால் இந்தக் கிணற்றிலுள்ள தீர்த்தம் எல்லா நாளிலும் கங்கை தீர்த்தமே!. இன்றைக்கும் கார்த்திகை அமாவாசையில் இந்தக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். மகான் வசித்த இல்லம் மடமாக மாற்றப்பட்டுள்ளது.

    இங்கு கங்கை பொங்கும் விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழா நாட்களில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசை அன்று தான் கங்கை கிணற்றில் பொங்குகிறது. அன்றைய இரவு முழுவதும் திவ்ய நாம சங்கீர்த்தனம் நடக்கும். கார்த்திகை அமாவாசையன்று அதிகாலை காவிரி நதிக்குச் சென்று, சங்கல்ப ஸ்நானம் செய்து விட்டு, அங்கிருந்து தீர்த்தம் கொணர்ந்து கிணற்றில் விடுவார்கள்.

    பிறகு கிணற்றுக்கு கங்கா பூஜை நடத்திவிட்டு காலை ஐந்து மணியிலிருந்து எல்லோரும் நீராடுவார்கள். அப்போது அங்கு நடக்கும் கங்கா பூஜையின்போது அந்த கிணற்றில் கங்கை பொங்கி வருவதன் அடையாளமாக நுரை மிகுந்துகொண்டு நீர் மட்டம் உயர்ந்து வருமாம். அன்று ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும் சிறிதும் நீர் மட்டம் குறையாது. இந்த ஞானம் வழியும் கிணறான திருவிசநல்லூர் தலத்திற்குச் சென்று கார்த்திகை அமாவாசையன்று நீராடுவது பெறுவதற்கு அரிய பெரும் பாக்கியமாகும்.



    சிவயோகி ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் சிவனும், விஷ்ணுவும் ஒன்றே என்று மக்களுக்கு போதித்தவர். தினமும் திருவிசநல்லூர் ஈசனை காலையில் வழிபட்டு விட்டு, அருகில் உள்ள திருவிடை மருதூருக்குச் சென்று, மாலை வேளையில் மகாலிங்க சுவாமியையும் வணங்கி வருவார். அதன் பின்பே தினமும் இரவு உணவை உண்பார்.

    திருவிசநல்லூரில் இருந்து திருவிடைமருதூருக்கு செல்லும் வழியில் வீரசோழன் என்ற ஆறு குறுக்கிடும். ஆற்றைக் கடந்து சென்றுதான் தினமும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை தரிசித்து வருவார். ஒரு நாள் வீரசோழன் ஆற்றில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதரால், ஆற்றினைக் கடக்க முடியவில்லை. இதனால் வீடு திரும்பிய அவர், மகாலிங்க சுவாமியை தரிசிக்காததால் கவலையுற்றார்.

    உணவருந்தாமலேயே படுக்கைக்குச் சென்றார். திடீரென வீட்டு வாசல் கதவு தட்டும் ஓசை கேட்டது. ‘நள்ளிரவு நேரத்தில், இந்த அடை மழையில் யார் கதவைத் தட்டுவது’ என்ற யோசனையுடன் கதவைத் திறந்தவருக்கு இன்ப அதிர்ச்சி. திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலய அர்ச்சகர் பிரசாத தட்டுடன் நின்று கொண்டிருந்தார். ‘அய்யா! இன்று ஆற்றில் கடுமையான வெள்ளம் ஓடுகிறது. அதனால் மகாலிங்க சுவாமியை காண உங்களால் வர முடியவில்லை என்பதை அறிந்து கொண்டேன். சுவாமியை தரிசிக்காமல், இரவு உணவு உண்ண மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆகவே தான் திருக் கோவில் பிரசாதத்துடன் வந்து விட்டேன்’ என்றார் அர்ச்சகர்.

    பிரசாதத்தைப் பெற்றுக்கொண்ட மகான், மகாலிங்க சுவாமியின் கருணையை எண்ணி வியந்தார். அர்ச்சகரை இரவு வீட்டிலேயே தங்கி செல்ல வேண்டினார். அர்ச்சகரும் சம்மதித்தார். உறக்கத்தில் கடும் குளிரால் அர்ச்சகர் அவதியுறுவதைக் கண்ட மகான், கம்பளியை எடுத்து வந்து அர்ச்சகருக்கு போர்த்தி விட்டார். பொழுது விடிந்தது. மழையும் நின்றது. உறக்கத்தில் இருந்து எழுந்த மகான், அர்ச்சகரைக் காணாமல் திகைத்தார். தன்னிடம் சொல்லாமலே சென்று விட்டாரே என்று எண்ணி விட்டு, விடிந்ததும் விடியாததுமாக, அந்த அதிகாலையிலேயே திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை தரிசிக்க புறப்பட்டார்.

    அங்கு மகாலிங்க சுவாமி சன்னிதியில் முதல் நாள் இரவு தன் வீட்டிற்கு வந்த அர்ச்சகர் நின்று கொண்டிருப்பதை கண்டார். அப்போது தான் அவரும் கோவிலுக்கு வந்திருந்தார். இன்னும் கோவில் நடை திறக்கப்படாமல் இருந்தது. அர்ச்சகரிடம் சென்ற ஸ்ரீதர வெங்கடேசர் நேற்று நடந்ததை நினைவுபடுத்தி, ‘சுவாமி! என்னிடம் சொல்லாமலேயே வந்து விட்டீர்களே!’ என்று வருத்தப்பட்டார்.

    அர்ச்சகர் திகைத்தவாறே, ‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?. நான் எப்போது உங்கள் வீட்டிற்கு வந்தேன்? கடுமையான மழை காரணமாக, நான் நேற்று மாலையிலேயே திருக்கோவிலை சாத்திவிட்டு என் வீட்டிற்குச் சென்று விட்டேனே!’ என்றார்.

    பின்னர் கோவிலைத் திறந்து கருவறை கதவை திறந்த போது, ஸ்ரீதர வெங்கடேசர், நேற்று இரவு அர்ச்சகருக்கு போர்த்தி விட்ட கம்பளி, ஈசனின் திருமேனியை தழுவிக்கொண்டிருந்தது. அப்போதுதான் அவர்களுக்கு தெரிந்தது “நேற்று நள்ளிரவில் கொட்டும் மழையில் ஸ்ரீதர வெங்கடேசர் வீட்டுக்கு சென்று பிரசாதம் உண்ணக்கொடுத்து, அவர் வீட்டில் தூங்கி வந்தது திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியே'' என்பது. ஈசனின் கருணையை எண்ணி இருவரும் உள்ளம் நெகிழ்ந்தனர்.

    பின்னர் ஈசன் அருளால் அற்புதங்கள் பல புரிந்த ஸ்ரீதர வெங்கடேசர் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமியிடம் ஜோதி வடிவில் ஐக்கியமானார். கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று திரு விடைமருதூர் திருக்கோவில் மகாலிங்க சுவாமிக்கு, ஸ்ரீதர வெங்கடேசர் மடத்திலிருந்து வழங்கப் பெறும் வஸ்திரம் சாத்தப்படுகிறது.

    அதுபோல அன்று உச்சிகாலப் பூஜையின் நைவேத்தியம், திருநீறு முதலிய பிரசாதங்கள் திருக்கோவில் சிவாச்சாரியார் மூலம் மகானின் மடத்துக்கு தந்தருளும் ஐதீக நிகழ்வும் இன்றளவும் நடக்கிறது.

    நான்கு யுக பைரவர்கள்

    இந்த ஆலயத்தில் 4 பைரவர்கள் ஒரே சன்னிதியில், யுகத்திற்கு ஒரு பைரவராக அருள்கின்றனர். எனவே இவர்களை சதுர்கால பைரவர்கள் என்று அழைக்கிறார்கள். ஞான கால பைரவர், சொர்ண ஆகர்ஷண பைரவர், உன்மத்த பைரவர், யோக பைரவர் என்பது இவர்களின் திருநாமங்கள்.

    கும்பகோணம்- மயிலாடுதுறை செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவிடைமருதூர். அங்கிருந்து வடமேற்கில் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருவிசநல்லூர் திருத்தலம் இருக்கிறது.
    வடக்கில் உள்ள காசியில் ‘இறந்தால்தான் முக்தி’. ஆனால், தென்காசியில் பிறந்தாலும், இருந்தாலும், இறந்தாலும், கண்டாலும் முக்தி கிடைக்கும்.
    பழங்காலத்தில் தென்காசி, செண்பக வனமாக இருந்தது. தென்காசிக்கு அருகிலிருந்த விந்தன்கோட்டை என்ற இடத்திலிருந்து தென்காசிப்பகுதியை பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்தனர். அப்போது ஆண்டுவந்த குலசேகர பாண்டியன், மழலைச் செல்வம் இல்லாமையால் வருந்தினான்; சிவனை வேண்டினான்.

    சிவன், ‘செண்பகத்தோப்புக்கு வந்து வழிபடு’ என்றார். அவ்வாறே செய்தான் பாண்டியன். அதன்பிறகே அவனுக்கு ஆண் குழந்தைப் பிறந்தது. அதற்கு உலகநாத பாண்டியன் என்று பெயர் வைத்தான். உலகநாதனுக்குத் திருமணம் முடித்து வைத்தான் குலசேகரன். உலகநாதனுக்கும் குழந்தை இல்லை.

    தந்தையின் சொல்படி உலகநாதனும், காசி விசுவநாதரை கசிந்துருகி வேண்டினான். அதன்பலனாக செண்பகத்தோப்பில் ஒரு சிறிய பெண் குழந்தையைக் கண்டான். பராசக்தியின் வடிவமான அந்தக் குழந்தைக்குக் ‘குழல்வாய் மொழி’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தான்.

    பருவமடைந்த அந்தப்பெண் சிற்றாற்றங்கரையில் சோலை அமைத்து, சிவபெருமானை வழிபட்டு, ‘இறைவா! உன்னையே கணவனாக அடைய வேண்டும்’ என்று வேண்டியது. இறைவன், “ஐப்பசி உத்திர நாளில் உன்னைத் திருமணம் செய்து கொள்வேன்” என்று கூறி, அதன்படியே குழல்வாய்மொழியைத் திருமணம் புரிந்து கொண்டார். திரு மணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் கோவிலுக்குள் சென்று மறைந்தனர்.

    குலசேகர பாண்டியனின் பேரன் பராக்கிரம பாண்டியன். முருக பக்தனான பராக்கிரம பாண்டியன் தினமும் காசிக்குச் சென்று வழிபட எண்ணினான். ஒருநாள் முருகப்பெருமான் தோன்றி, இவன் கையில் ஒரு ககனக் குளிகையைக் கொடுத்தார். ககனக்குளிகையை வாயில் இட்டால் யாருக்கும் தெரியாமல் வானில் பறக்கும் ஆற்றல் வந்துவிடும். ககனக்குளிகையினை வாய்க்குள் வைத்துக்கொண்டு விந்தன்கோட்டையில் இருந்து வான்வழியாக அதிகாலை 4 மணிக்கு காசி நகருக்குச் சென்று காசி விசுவநாதரை தினமும் வழிபட்டு, சூரிய உதயத்திற்கு முன்னர் கோட்டைக்கு வந்துவிடுவது அவனது வழக்கம்.

    ஒருநாள் அரசி தானும் வருவதாகக் கூறியதால், அவளையும் அழைத்துச் சென்றான். திரும்பி வரும்போது ஒரு சிவலிங்கத்தையும் எடுத்து வந்தான். அப்போது அரசி உடல் நிலை பாதிக்கப்பட்டாள். எனவே இருவரும் ஒரு சோலையில் இறங்கினர். மூன்று நாட்களில் உடல்நிலை சரியானதும், அங்கிருந்து புறப்படத் தயாரானார்கள். தாங்கள் கொண்டுவந்த லிங்கத்தை, வைத்த இடத்திலிருந்து எடுக்க முயன்றபோது எடுக்க இயலவில்லை. இருவரும் வருந்தினர். அச்சமயம், ‘இந்த லிங்கம் இச்சோலையிலேயே இருக்கட்டும்' என்று இறைவன் அசரீரியாக ஆணையிட, இருவரும் அந்த லிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து அதற்கு ‘சிவகாசி என்று பெயரிட்டு விந்தன் கோட்டைக்குத் திரும்பினர்.

    கோட்டை வந்த மன்னன் தமக்கும் ஒரு சிவலிங்கம் வேண்டும் என்றும் அதற்கு காசி விசுவநாதர் என்ற பெயரே சூட்டப்பட வேண்டும் என்றும் கோவிலும் எழுப்பிக்க வேண்டும் என்றும் சிந்தனையில் ஆழ்ந்தான்.

    இந்நிலையில், ஒருநாள் அரசன் கனவில், இறைவன் அந்தணர் வடிவில் வந்து, ‘வடக்கே காசியிலுள்ள கோவிலை பகைவர்கள் அழித்துவிட்டமையால், தெற்கே தமக்குக் கோவில் கட்டித் தரவேண்டும்’ என்று ஆணையிட்டார். மேலும், ‘உன் மூதாதையர்கள் வழிபட்ட சிவலிங்கம் செண்பக வனத்தில் உள்ளது. கோட்டையிலிருந்து சாரை சாரையாக ஊர்ந்து செல்லும் கட்டெறும்பு வரிசை எங்கு முடிகிறதோ அங்கு லிங்கம் உண்டு. அந்த இடத்தில் கோவில் கட்டுவாயாக’ என்றார்.

    உடனே கண் விழித்த மன்னன் கட்டெறும்பு வரிசையைப் பின் தொடர்ந்தான். எறும்புக்கூட்டம் சிற்றாற்றின் கரையிலுள்ள செண்பகத் தோட்டத்திற்குள் சென்று நின்றது. அங்கே தெய்வீகக் காட்சியைக் கண்டான்.

    செண்பகத்தோப்பில் கோவில் கட்டக் கருதினான் பராக்கிரமன். இதற்காக இந்தத் தோப்புக்கு வடக்குப்புறமாக ஓடிய சிற்றாற்றைத் தெற்குப்புறமாக ஓடச்செய்தான். முதலில், ‘சிவமது கங்கை' என்றும் அழைக்கப்படும் சிற்றாற்றங்கரையில் ‘காவேரி கங்கை’ அம்மனுக்கு கோவில் அமைத்தான். அங்கு விநாயகரையும் எழுந்தருளச் செய்தான்.

    இதன்பின் ஈசனுக்கு கோவில் எழுப்ப நாள் குறிக்கப்பட்டது. 1368-ம் ஆண்டு வைகாசி மாதம் 10-ம் நாள், தசமி திதி, வெள்ளிக்கிழமை, உத்திர நட்சத்திரமும் மீன லக்னமும் கூடிய சுபயோக சுப தினத்தில் புதிய கோவிலுக்கு அஸ்திவாரம் இடப்பெற்றது. வடக்கே உள்ள காசியில் இருப்பதைப் போன்று கருவறையை அகலமாக அமைத்து சிவலிங்கத் திருமேனியை சுற்றிவர வசதியாக இடம் அமைத்தான். காசியிலுள்ள லிங்கத்தைப் போன்று காட்சி தரும் இப்பெருமான் ‘ரிக் வேத பெருமான்’ எனப் போற்றப்படுகிறார். கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தை மன்னன் கோட்டையிலிருந்தே வழிபடுவதற்கேற்ப தன் கோட்டையை அமைத்திருந்தான்.

    பிற கோவில்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு இத்திருக்கோவிலுக்கு உண்டு. இரண்டு பெரிய யானைகள் பெரும்தேர் ஒன்றை இழுத்துச் செல்லும் வண்ணம் இக்கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவில் முழுவதும் சிற்பங்கள் அமைந்திருப்பது இத்தலத்தின் தனிப்பெருமையாகும். ஒன்பது நிலைகளுடன் 178 அடி உயரம் கொண்ட இந்த ஆலயத்தின் ராஜகோபுரத்தில் அடி முதல் முடிவரை 800 கவின்மிகு சுதைச்சிற்பங்கள் உள்ளன.

    ராஜகோபுரத்திற்கு முன் அகன்ற வெளித்திடல் உள்ளது. கோபுரத்தின் வடக்குப் பகுதியில், கிழக்கு முகமாக நின்ற திருக்கோலத்தில், எட்டுக்கரங்களுடன் மகிஷாசுரமர்த்தினி, மங்கையரின் மாங்கல்யம் காக்கும் தாயாக அருள்பாலிக்கிறார். பில்லி, சூனியம், சூழ்ச்சி, வீண்பழி ஆகியவற்றிலிருந்து பக்தர்களைக் காத்து வருகிறாள்.


    உலகம்மை, காசி விஸ்வநாதர்

    முகப்பு மண்டபத்தின் தெற்கு வரிசையில் மேற்கிலிருந்து கிழக்காக அகோர வீரபத்திரர், மன்மதன், திருமால், காளி சிலைகளும், வடக்கு வரிசையில் மேற்கிலிருந்து கிழக்காக வீரபத்திர சட்டைநாதர், ரதி, பதஞ்சலி - புலிக்கால் முனிவருடன் அமைந்த மகாதாண்டவமூர்த்தி, ஊர்த்துவ தாண்டவமூர்த்தி ஆகிய சிலைகளும் உள்ளன. மண்டபத்தின் முன்னர் சன்னிதியை நோக்கி இரு பக்கத் தூண்களிலும் இரண்டு அழகிய பெண்களின் சிலைகளும் வடிக்கப்பெற்றுள்ளன. தென்காசிக்கு ஒப்பான தலம் உலகில் இல்லை என்பதற்கு இந்தச் சிற்பங்களும் ராஜகோபுரமும் சான்றாக உள்ளன.

    கருவறையில் கருணையே வடிவாய் வீற்றிருக்கும் காசி விஸ்வநாதரை தரிசித்து, தென்வரிசையில் இருக்கும் சந்திரசேகரரையும், வடக்குப் பகுதியில் தெற்கு நோக்கி நின்றாடும் நடராஜப் பெருமானையும், பராக்கிரம பாண்டியனையும் வணங்கி பிரகாரத்திற்குள் வலம் வர வேண்டும்.

    ஈசனுக்கு வலப்புறம் தனிச்சன்னிதியில் அபய வரத ஹஸ்தங்களுடன் உலகம்மை பத்மபீடத்தில் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    பிரகாரத்தில், மூன்று கால்கள், மூன்று கைகள், பெரிய திருமேனியுடன் இயற்கைக்கு மாறாகக் காட்சி தரும் சுரதேவரை சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் அரைத்து அபிஷேகம் செய்து வழிபட்டால் மிகுதியான காய்ச்சல் குணமாகும் என்பது நம்பிக்கை.

    வடக்குப் பிரகாரத்தில் பராக்கிரம பாண்டியன் காசிக்கிணற்றை அமைத்துள்ளான். கங்கைக்கும் இந்தக் கிணற்றுக்கும் தொடர்பு உண்டாம். இக்கிணற்றில் கங்கை எப்போதும் சுரந்துகொண்டே இருக்குமாம்.

    வெளிப்பிரகாரத்தில் வீற்றிருக்கும் பைரவருக்கு வடை மாலை சாத்தி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். முகப்பு மண்டபத்தில் துர்க்கை சன்னிதியும் நவக்கிரகங்களும் உள்ளன. மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்ஷம் ஆகிய நான்கு அம்சங்களால் சிறப்புப் பெற்றது தென்காசி.

    வடக்கிலுள்ள காசியைவிட தெற்கிலுள்ள இந்த தென்காசி புனிதமானது என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. வடக்கில் உள்ள காசியில் ‘இறந்தால்தான் முக்தி’. ஆனால், தென்காசியில் பிறந்தாலும், இருந்தாலும், இறந்தாலும், கண்டாலும் முக்தி கிடைக்கும். விசுவநாதரையும் உலகம்மையையும் வழிபடுவோருக்கு இன்பம் ஓங்கும். துன்பம் நீங்கும். பகை அழியும். வெற்றி கிட்டும். அறிவுநிலை பெருகும். திருமணம் நிகழும். பிள்ளை பாக்கியம் கிடைக்கும். பிணி எல்லாம் தீரும். வறுமை நீங்கும். பெருமை சேரும். பேறுகள் அத்தனையும் கிட்டும்.

    இரண்டாம் பராக்கிரம பாண்டியன் :

    ‘இறைவனுக்காக எழுப்பிய இந்த ஆலயம், காலத்தால் சிதைவு அடையுமானால், அந்தச் சிதைவுகளை அகற்றிச் செப்பம் செய்பவர்களின் காலடியில், உலகத்தார் கண்முன்னே வீழ்ந்து வணங்குவேன். மேன்மேலும் விருத்தி செய்வோர் திருவடியிலும் என் திருமுடியைத் தாழ்த்தி இறைஞ்சுவேன். இத்திருக்கோவிலைத் திரிசேர் விளக்கெனக் காப்பவர்கள் திருவடியை என் திருவடிமேல் தாங்குவேன். சாஸ்திரங்களையும், ஆகம நூல்களையும் ஆராய்ந்து அமைக்கப்பட்ட காசி விசுவநாதர் ஆலயத்தைக் காப்பவர்களின் பரம்பரையினரையும் வணங்குகிறேன்; அவர்களும் நலமும் வளமும் பெறுவார்கள். அவர்களுக்கு நான் குற்றேவல் பணி செய்வேன்’ என்று பராக்கிரம பாண்டியன் கல்வெட்டில் பொறித்து வைத்துள்ளது ஈசன்பால் கொண்டுள்ள மாறாப்பற்றை நிலைநிறுத்துகிறது.

    சுமார் 180 ஆண்டுகளுக்கு முன் சில காரணங்களால் தென்காசி ராஜகோபுரம் தீக்கிரையானது. ‘தினத்தந்தி’ அதிபர் பத்ம பா.சிவந்தி ஆதித்தன் தலைமையிலான திருப்பணிக்குழு, சிதைக்கப்பெற்ற கோபுரத்தை அகற்றி, புனரமைத்து பெரும் பாக்கியம் பெற்றது. இதனால் பா.சிவந்தி ஆதித்தனார் ‘இரண்டாம் பராக்கிரம பாண்டியன்’ என்று பாராட்டப்பட்டார். 1990, 2006-ம் ஆண்டுகளில் பா.சிவந்தி ஆதித்தனார் தலைமையில் திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்று இரண்டு முறை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    திருநெல்வேலி மாவட்டம், தென்காசி பழைய பேருந்து நிலையம் அருகில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் தென்காசி உள்ளது. மதுரையிலிருந்து ராஜபாளையம், புளியங்குடி, கடைய நல்லூர் வழியாகவும் தென்காசிக்கு வரலாம்.
    கோலாலம்பூர் தலைநகரிலிருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது பத்துமலை முருகன் கோவில். இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தொல்காப்பிய மரபுப்படி மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்தின் கடவுள் முருகன் என்றாலும், அந்த அற்புதக் கடவுள் அனைத்து இடங்களிலுமே கோவில் கொண்டுள்ளார்.

    முருகப்பெருமான் தமிழ்நாட்டில் பழநி, திருப்பரங்குன்றம், திருத்தணிகை, குன்றக்குடி போன்ற மலைகளில் மட்டுமன்றி, பழமுதிர்ச்சோலையில், கடல் அலை தாலாட்டும் திருச்செந்தூர் மற்றும் நதிக்கரை ஓரங்களிலும் கூட கோவில் கொண்டு கோலோச்சுகிறார்.

    தென்னகத்தில் முருகன் என்றும், வடபுறத்தில் கார்த்திகேயன் எனவும் போற்றப்படும் தெய்வம், இலங்கையில், கதிர்காமம், யாழ்ப்பாண நல்லூர், லண்டன், கிழக்கு ஹேம், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் தமிழர்களின் தனித் தெய்வமாக அருளாட்சி புரிகிறான்.

    குகைக் கோவில் :

    மலேசிய மண்ணில் முருகன் வீற்றிருக்கும் இடம் சற்று வித்தியாசமானது. குகன் என்ற பெயருக்கேற்ப குகையில் வாழுகிறான். குகை என்றதும் இங்கே உள்ள கல் மலையில் குனிந்து செல்லும் குறுகிய குகை அல்ல. மர வளம் மிகுந்த உயர்ந்த சுண்ணாம்பு மலைக்குகையில் கோவில் கொண்டு பரவசப்படுத்துகிறான். ‘பது கேவ்’ என்றால் மலாய் மொழியில் ‘சுண்ணாம்பு குகை’ எனப் பொருள்படும். தமிழர்கள் பேச்சு வழக்கில் பத்துமலை ஆக்கிவிட்டனர்.

    பசுமை போர்த்திய நெடிய மலைத் தொடரின் அடிவாரத்தில் 140 அடி உயரத்தில் பொன்னிறத்தில் மின்னும் வேலவன் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக உயர்ந்த சிலை இதுதான். இந்தியாவிலிருந்து சென்ற சிற்பிகளின் கைவண்ணத்தில் 2006-ல் உருவானது இந்தச் சிலை.



    சிவாலயம் :

    வலப்புறத்தில், அரச மரத்தடியில் விநாயகருக்கு கோவில் உள்ளது. அவருக்கு தோப்புக் கரணம் போட்டு விட்டு, சில படிகள் ஏறினால் நந்தி தேவர் அமர்ந்திருக்க, அருகில் சுந்தரேசர் சிவலிங்கமாக வீற்றிருக்கிறார். தேவ கோட்டத்தில் தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தி, மேற்கு கோட்டத்தில் லிங்கோத்பவர், வடக்கு நோக்கி நான்முகனும், துர்க்கா தேவியும் அருள்புரிகின்றனர். அருகே சண்டிகேசர் வீற்றிருக்கும் சன்னிதியையும் தரிசித்து விட்டு கீழே வந்தால் மீனாட்சி அம்மன் புன்னகை தவழ காட்சிதருகிறாள்.

    சரி.. குகையில் வாழும் சுப்ரமணியரைத் தரிசிக்கச் செல்வோம். பொன்னிற வேலவனின் அருகே இருக்கும் தோரண வாயிலைக் கடந்து 272 செங்குத்தான படிகளில் ஏறவேண்டும். படிகளை ஒட்டி அமைந்த செயற்கை நீரருவி ஆலயத்திற்கு அழகு சேர்க்கிறது.

    குகை வாசலில் நுழைந்தவுடன் நமது வலக்கை பகுதியில் இடும்பனுக்கு சிறு சன்னிதி உள்ளது. அவர் காவடி எடுப்போரின் முன்னோடி அல்லவா. அவரை வேண்டிக் கொண்டு கொஞ்ச தூரம் படிகளில் சென்றால் மூலவர் முருகன் இருக்கிறார்.

    இவ்வளவு பெரிய குகைக்குள் உள்ள ஒரு சிறு குகைக்குள் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். கீர்த்தியில் பெரியவராய் உருவத்தில் சிறிய மூர்த்தியாக வெள்ளியால் மின்னுகிறார்.

    அவரது திருவடி அருகே வேல் ஒன்று உள்ளது. அதற்கு தான் அபிஷேகம் செய்கிறார்கள். அந்த இடத்துக்கு சென்றதும் நமக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது.

    இப்பெருமானைப் பிரார்த்தித்துக் கொண்டால் கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மூலவரான முருகர் தனியாக நின்றபடி தரிசனம் தருகிறார். மூலவர் சன்னிதிக்கு மேலே சற்று உயரமான இடத்தில், சுப்ரமணியர் தன் தேவியர்கள் இருவருடன் காட்சி தருகிறார்.

    இப்பெருங்குகையின் உள்ளே ஒரு பகுதியில் பழநி தண்டாயுதபாணிக்கு சன்னிதி எழுப்பப்பட்டுள்ளது.

    மலாய் மொழியும், சீன மொழியும் பேசப்படும் இந்நாட்டில் இருக்கும் இந்த இயற்கைக் கோவிலின் இறை சன்னிதியில் ‘கந்தா போற்றி.. கடம்பா போற்றி’ என்று தமிழில் அர்ச்சிக்கிறார்கள். அந்த முருகனின் தேன்தமிழ்ப் பாக்களின் இசை காற்றில் மிதந்து கொண்டிருந்தது.



    வித்தியாசமான வழிபாட்டு அனுபவத்துடன் படிகள் இறங்கி கீழே வந்தால், பொன்னிற சிலைக்கு இடப்புறம், அதாவது சிவாலயத்துக்கு எதிரே சனீஸ்வரன் வீற்றிருக்கும் தனி சன்னிதியும், எதிரே ஒன்பது கோள்கள் இருக்கும் நவக்கிரக சன்னிதியும் இருக்கிறது. அந்த இடத்தில் ஆஞ்சநேயருக்கும் சன்னிதி அமைந்துள்ளது.

    தல வரலாறு :

    மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மாரியம்மன் கோவில் அமைத்து பக்தி செலுத்திக் கொண்டிருந்த வணிகத் தமிழரான தம்பு சாமிப்பிள்ளை என்பவரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, தனது அருட்சக்தி இந்த இடத்தில் இருப்பதை உணர்த்தினார். அப்போது மலேசியாவை ஆண்டு கொண்டிருந்த ஆங்கில ஆட்சியாளரின் அனுமதி பெற்று 1891-ல் சன்னிதியையும் கோவிலையும் அமைத்து வழிபாடுகளைத் தொடங்கினார்.

    தைப்பூசம் :

    சுப்ரமணிய சுவாமிக்கு உகந்த கார்த்திகை, கந்தசஷ்டி போன்ற விழாக்களை விட பத்துமலை தைப்பூசவிழா உலகப் புகழ்பெற்றது. தமிழகத்தில் பழநிமலை போல மலேசியாவில் பத்துமலையில் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விரதமிருந்து மஞ்சள் ஆடை அணிந்து, பால் குடங்களை ஏந்தியும், காவடிகள் தூக்கியும், நாக்கில் வேல் குத்திக்கொண்டும், கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக வந்து மலை ஏறி வழிபடுகிறார்கள்.

    மலேசியத் தமிழர்கள் மட்டுமல்லாது, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நாடுகளிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் மக்கள் கூட்டம் அலைமோதும். மலாய், சீன மக்களும் பிரார்த்தித்துக் கொண்டு தைப்பூச விழாவில் பங்குபெறுவது பரவசமான காட்சியாகும்.

    கோலாலம்பூர் தலைநகரிலிருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த ஆலயம்.

    குன்றிருக்கும் இடமெங்கும் குமரன் இருப்பான் என்பதனை விட தமிழர் இருக்கும் இடமெல்லாம் தமிழ்க்கடவுளான முருகன் காட்சிதந்து அருள்புரிகிறான் என்பது தான் உண்மை.
    தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டுமே என்று வேண்டும் கன்னிப்பெண்களின் கவலை தீர்க்கும் ஸ்தலமாக உள்ளது கபிஸ்தலம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்.

    தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டுமே என்று கன்னிப்பெண்கள் கவலைப்படாத நாளே இருக்க முடியாது. இந்தக் கவலை தீர அவர்கள் வேண்டாத தெய்வங்களும் இருக்க முடியாது. இவர்களது கவலையைத் தீர்க்கும் அன்னை கபிஸ்தலத்தில் இருக்கிறாள்.

    ஆம்! கீழ கபிஸ்தலத்தில் உள்ளது ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். இறைவன் பெயர் ஏகாம்பரேஸ்வரர். இறைவி பெயர் காமாட்சி அம்பிகை. ஆலயம் கீழ்திசை நோக்கி உள்ளது. உள்ளே நுழைந்ததும் பிரகாரத்தில் உள்ள பலிபீடம், நந்தியைக் கடந்தால் மகாமண்டபம் காணப்படும்.

    அந்த மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் பைரவர் மற்றும் சனீஸ்வரன் திருமேனிகள் உள்ளன. அடுத்துள்ள அர்த்த மண்டபம் நுழைவுவாசலில் இடதுபக்கம் இரட்டை பிள்ளையாரும், வலதுபுறம் காசி விசுவநாதரும் அருள்பாலிக்கின்றனர்.

    அடுத்துள்ள கருவறையில் இறைவன் ஏகாம் பரேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தின் வலது புறம் இறைவி காமாட்சி அம்பிகையின் சன்னிதி உள்ளது. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் வலது கரத்தில் தாமரை மலரையும், மேல் இடது கரத்தில் அங்குசத்தையும் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய, வரத, ஹஸ்த முத்திரைகளுடன் நின்ற நிலையில், புன்னகை தவழும் இன்முகத்துடன் அன்னை அருள்பாலிக்கும் அழகே அழகு.

    இறைவனின் கருவறை தேவ கோட்டத்தில் தென் திசையில் தட்சிணாமூர்த்தியும், வட திசையில் துர்க்கை அம்மனும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் மேல் திசையில் பிள்ளையார், சுப்ரமணியர் சன்னிதிகளும், வட திசையில் சண்டீஸ்வரர் சன்னிதியும் உள்ளது. பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.

    அஷ்டமியில் பைரவருக்கும், சதுர்த்தியில் விநாய கருக்கும், கார்த்திகை நாட்களில் முருகப்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.



    நவராத்திரியின் 10 நாட்களும் இறைவிக்கும், இறைவனுக்கும் தினம் தினம் விதவிதமான அலங்காரங்கள் செய்து பக்தர்களின் மனம் மகிழும்படி செய்கின்றனர். மார்கழி 30 நாட்களும், சோமவாரம், பொங்கல், தீபாவளி போன்ற நாட்களில் இறைவன் இறைவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    பொங்கல் திருநாளில் இறைவன், இறைவி வீதியுலா வருவதுண்டு. தை முதல் நாள் காவிரியில் தீர்த்தவாரி திரளான மக்களோடு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

    குழந்தைபேறு இல்லாதவர்கள் இங்கு நடைபெறும் பிரதோஷத்தில் 11 நாட்கள் கலந்து கொண்டு இறைவன், இறைவிக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால், அவர்களுக்கு குழந்தை பேறு உறுதி என்கின்றனர் பக்தர்கள்.

    திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் வேண்டும் என இறைவியிடம் முறையிடுகின்றனர். அத்துடன் கண்ணாடி வளையல்களை மாலையாகக் கோர்த்து, அன்னையின் கழுத்தில் அணிவித்து வணங்குகின்றனர். பின், அந்த வளையல்களை பிற பெண்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கின்றனர்.

    அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுகிறது. 90 நாட்களுக்குள் அந்தப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாவது உறுதி எனக் கூறுகின்றனர் பக்தர்கள்.

    கல்யாணமாகாத கன்னிப் பெண்களை தன் பெண்களாய் பாவித்து, அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து அருளும் அன்னை காமாட்சி அம்பிகையை தன் தாயென கன்னியர் போற்றி மகிழ்வதில் வியப்பென்ன இருக்கிறது.

    ஆலயம் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள பாபநாசம் என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது கீழ கபிஸ்தலம்.
    முதலாம் குலோத்துங்கச் சோழன் அழகுற கட்டிய ஆலயம் ஒன்று புள்ளம்பாடி கிராமத்தில் உள்ளது. இந்த ஆலயம் தற்போது சிதம்பரேஸ்வரர் என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.
    தென் தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்களில், சோழர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள். இவர்கள் தாங்கள் ஆண்டு வந்த பகுதிகளில் எல்லாம் ஆலயங்களை அமைப்பதில் ஆர்வம் கொண்டிருந்தனர் என்பதை வரலாறு மூலம் நாம் அறிய முடிகிறது. அவர்கள் கட்டிய ஆலயங்கள் பல நூறு ஆண்டுகளைக் கடந்து, இன்றும் சோழ மன்னர்களின் பெயரை பறைசாற்றிக் கொண்டிருப்பது சொல்லித தெரியவேண்டியதில்லை.

    முதலாம் குலோத்துங்கச் சோழன், சோழ நாட்டை ஆண்ட காலத்தில் (கி.பி.1080) அழகுற கட்டிய ஆலயம் ஒன்று புள்ளம்பாடி கிராமத்தில் உள்ளது. சுமார் 900 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், அந்த கிராமத்தின் மகுடமாக திகழ்கிறது என்றால் மிகையல்ல. இந்த ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகள் மூலம் பல தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. கல்வெட்டில் இந்த ஊரின் பெயர் புள்ளன்பாடி என்றும், இது கானக்கிளியூர் நாட்டுப் பிரிவின் கீழ் இருந்த ஊர் என்றும், கோவிலின் பெயர் ‘மதுராந்தக ஈஸ்வரம்’ என்றும் காணப்படுகிறது.

    மதுராந்தகன் என்பது முதலாம் ராஜேந்திரனின் பெயர் ஆகும். அவரது பெயரால், இவரது பேரன் குலோத்துங்கன் கட்டிய ஆலயம் இது. இந்த ஆலயம் கடந்த 11.11.2012-ல் குடமுழுக்கு திருவிழா கண்டது. அதன் மூலம் தற்போது இந்த ஆலயம் புதுப்பொலிவு பெற்றுத் திகழ்கிறது.

    ஆலய அமைப்பு :

    இந்த ஆலயம் தற்போது சிதம்பரேஸ்வரர் என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. இந்தக் கோவில் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாக வீற்றிருக்கிறது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்ததும், நந்தியும், கொடிமரமும் காணப்படுகின்றன. அடுத்துள்ள மகாமண்டபத்தின் வலது புறம் அம்பாள் சன்னிதி இருக்கிறது. இத்தல அன்னையின் திருநாமம் ‘சிவகாமி அம்மை’ என்பதாகும். அன்னை கருவறையில் நின்ற கோலத்தில் புன்னகை தவழும் இன்முகத்துடன் அருள்பாலிக்கிறாள்.

    மகாமண்டபத்தை அடுத்து துவாரபாலகர்கள் இருபுறமும் கம்பீரமாக நிற்க அர்த்தமண்டபமும், அதை அடுத்து இறைவன் சிதம்பரேஸ்வரரின் கருவறையும் உள்ளது. கருவறையில் சிவலிங்கத் திருமேனியுடன் இறைவன் கீழ் திசை நோக்கி அருள்புரிகிறார். மகாமண்டபத்தின் இடதுபுறத்தை உற்சவர் சிலைகள் அலங்கரிக்கின்றன. மத்தியில் உச்சி விதானத்தில் 12 ராசிகளும் வடிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம் உள்ளது. இறைவனையும், இறைவியையும் மகாமண்டபத்தின் மத்தியப் பகுதியில் நின்று கரங்குவித்து வணங்கும் பக்தர்கள், சற்றே தங்கள் தலையை உயர்த்தி தங்களது ராசி பதிக்கப்பட்ட சக்கரத்தையும் வணங்குவது இங்கு வழக்கமான ஒன்றாகும்.


    துர்க்கை, சிதம்பரேஸ்வரர்

    இறைவனின் தேவக்கோட்டத்தின் தென்புறம் நர்த்தன கணபதி மற்றும் தட்சிணாமூர்த்தியும், மேல்திசையில் மகாவிஷ்ணுவும், வடக்கில் பிரம்மாவும், கோஷ்ட துர்க்கையும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். திருச்சுற்றின் கிழக்கில் சூரியன், சந்திரன், காலபைரவர், சனீஸ்வரன், நீலாதேவி, ஜோஸ்டா தேவி ஆகியோரும், தெற்கில் துர்க்கை, அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், மெய்பொருள் நாயனார் ஆகியோரது திருமேனிகளும், மேற்கில் சித்தி விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத சண்முகநாதர், கஜலட்சுமி ஆகியோர் திருமேனிகளும் உள்ளன.

    இந்த ஆலயத்தில் இரண்டு தல விருட்சங்கள் உள்ளன. அவை வன்னிமரம் மற்றும் வில்வமரம். ஆலயத்தின் தெற்குப் பிரகாரத்தில் இந்த இரண்டு தல விருட்சங்களும் செழித்து வளர்ந்து தழைத்தோங்கி நிற்கின்றன. ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் வீற்றிருந்து அருள்புரிகிறார்கள். சுமார் 900 ஆண்டுகளைக் கடந்த இந்த ஆலய முகப்பானது கிழக்கு திசையில் ஐந்து நிலை ராஜகோபுரத்தால் அலங்கரிக்கப்படுவது போல், வடக்கு மற்றும் தெற்கு வாசல்களை மூன்று நிலை கோபுரங்கள் அலங்கரிக்கின்றன.

    திருவிழாக்கள் :

    நவராத்திரியின் போது 9 நாட்களும் உற்சவர் அம்மனை, தினம் ஒரு அலங்காரத்தில் அலங்கரிக்கிறார்கள். அந்த அம்மனை மகாமண்டபத்தில், பக்தர்கள் தரிசனம் செய்ய அமர்த்தி இருப்பார்கள். இந்த அலங்கார அழகைக் காணவே பக்தர்கள் கூட்டம் இந்த நாட்களில் ஆலயத்தில் அலைமோதும். 10-ம் நாள் விஜயதசமி அன்று அம்பு போடும் திருவிழா வெகு விமரிசையாக நடந்தேறும்.

    மார்கழி 30 நாட்களும் இறைவன், இறைவிக்கு மார்கழி பூஜை சிறப்பாக நடைபெறு கிறது. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகமும், மாதப் பிரதோஷங்களும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. கார்த்திகை சோமவார நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    தைப்பூசம் பங்குனி உத்திரம், கந்தசஷ்டி 6 நாட்களும் முருகப்பெருமானுக்கும், தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

    கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை அன்று சொக்கப்பனை திருவிழா மிக அமர்க்களமாக நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை ராகு கால நேரத்தில் துர்க்கைக்கு நடைபெறும், சிறப்பு ஆராதனையில் ஏராளமான பெண்கள் கலந்து கொள்கின்றனர்.

    ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும். பக்தர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் சிதம்பரேஸ்வரரையும் சிவகாமியம்மையையும் புள்ளம்பாடி சென்று நாமும் ஒரு முறை தரிசிக்கலாமே.

    திருச்சி- அரியலூர் நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புள்ளம்பாடி என்ற கிராமம். திருச்சியில் இருந்து புள்ளம்பாடி செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
    மகேந்திர வர்மன் பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டிய அந்த ஆலயமே கீழக்காட்டூரில் உள்ள வரதராஜப்பெருமாள் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ஆலயம் அமைப்பதில் பல்லவர்கள் வல்லவர்கள். அவர்கள் கட்டிய ஆலயங்கள் தமிழ் நாட்டில் ஏராளம். அவைகள் இன்றும் பல்லவ மன்னர்களுடைய பெருமைகளை பறைசாற்றிக் கொண்டிருப்பது நிஜம்.

    மாமன்னன் மகேந்திர வர்மன் காலத்தில் (கி.பி.600-630), அவன் செய்த தெய்வத் தொண்டுகளும், ஆலய திருப்பணிகளும் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டன.

    வரதராஜ பெருமாளுக்கு திருக்கோவில் கட்ட நினைத்த மன்னன் நான்கு வேதங்களிலும் சிறந்த வேத விற்பன்னர்களை ஓரிடத்தில் குடியமர்த்தினான். அவன் குடியமர்த்திய அந்த இடத்திற்கு அவணிமாணிக்கம் எனப் பெயரிட்டான். அந்த ஊரில் வரதராஜ பெருமாளுக்கு ஆலயம் ஒன்றை கட்டுவித்தான். அவணி மாணிக்கம் என்ற பெயர் காலப்போக்கில் ‘கீழக் காட்டூர்’ என மாறியது.

    மகேந்திர வர்மன் பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டிய அந்த ஆலயமே கீழக்காட்டூரில் உள்ள வரதராஜப்பெருமாள் ஆலயம். ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் எதிரே கருடாழ்வார் தனி மண்டபத்தில் அருள்பாலிக்கிறார்.

    ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் விசாலமான மகாமண்டபம் உள்ளது. மகா மண்டபத்தின் கீழ்புறம் பக்த ஆஞ்சநேயர் மேற்கு திசை நோக்கி வீற்றிருந்து அருள்கிறார். அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவு வாசல் இடதுபுறம் பிள்ளையாரும், வலது புறம் நாகர் திருமேனிகளும் உள்ளன. அடுத்துள்ள கருவறையில் இறைவன் வரதராஜப் பெருமாள், பத்ம பீடத்தின் மேல் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

    பெருமாளின் இருபுறமும் தாயார் ஸ்ரீதேவியும், பூதேவியும் அருள்பாலிக்கின்றனர். பல்லவர் கால பெருமாள் திருமேனிகளில் இங்கு சேவை சாதிக்கும் வரதராஜ பெருமாளின் திருமேனியே மிகப் பெரிய திருமேனி எனச் சொல்கின்றனர் பக்தர்கள்.

    சுயம்பு மூர்த்தியான இத்தல பெரு மாளின் திருவுருவம் கண்களை மகிழ்விப்பதாக உள்ளது. மேல் இரு கரங்களில் பொன்னாழியும், வெண் சங்கும் வீற்றிருக்க, கீழ் இடது கரத்தை மடி மீது வைத்த வண்ணம் இருக்க, வலது கரம் அபயம் காட்டி வரம் தரும் வரதராஜனாகவே விளங்குகிறார். இங்குள்ள பெருமாளின் உயரம் 8 அடி 2 அங்குலம் என பக்தர்கள் குறிப்பிடும் போது நம்மால் வியக்காமல் இருக்க முடியாது அல்லவா?. ஆலயத்தின் தல விருட்சம் பாரிஜாதம். தீர்த்தம் மகாலட்சுமி தீர்த்தம்.



    இங்கு மகாமண்டபத்தில் மிகச் சிறிய அளவிலான மகாலட்சுமி நாராயணப் பெருமாள் அருள்பாலிக்கிறார். இங்கு அருள்பாலிக்கும் ஆஞ்சநேயரின் திருமேனி தாரு மரத்தில் உருவாக்கப்பட்டது. எனவே, இங்கு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெறுவது கிடையாது. மாறாக, ஆஞ்சநேயரின் திருமேனியில் சாம்பிராணி தைலமும், சந்தனத் தைலமும் மட்டுமே சாற்றுகின்றனர்.

    இந்த பக்த ஆஞ்சநேயரை மனதார வேண்டிக்கொண்டால் விரைவாக திருமணம் நடந்தேறுவதாக பக்தர்கள் சொல்கின்றனர். தங்களது வேண்டுதல் பலித்ததும் பக்தர்கள், எள்ளு சாதத்தை நைவேத்தியம் செய்து ஆலயம் வரும் மற்ற பக்தர்களுக்கு வினியோகம் செய்வதுடன், பக்த ஆஞ்சநேயருக்கு பச்சை நிற வஸ்திரம் சாத்தி மகிழ்கின்றனர்.

    இந்த ஆலயத்தில் அர்ச்சனை தமிழிலும் நடைபெறுவது பாராட்டப்பட்ட ஒன்றாகும். அனைத்து சனிக்கிழமைகள், வைகாசி விசாகம், வைகுண்ட ஏகாதசி, தமிழ் மற்றும் ஆங்கில வருடப் பிறப்பு போன்ற நாட்களில் பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆங்கில வருடப் பிறப்பு நாட்களில் இறைவன், இறைவி வீதியுலா வருவதுண்டு.

    இந்த ஆலயத்திற்கு அருகேயே வஜ்ரதம்பேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இங்குள்ள பெருமாளின் திருமேனியில் வலது கை அருகே, பிரயோக சக்கர ஆயுதம் உள்ளது.

    எனவே, இத்தலத்து பெருமாளை வணங்குவோரின் பகைவர்கள் நிர் மூலமாகி, நிம்மதியான, அமைதியான வாழ்க்கையை அந்த பக்தர்களுக்கு வழங்குவதில் இத்தல இறைவன் வல்லவர் என பக்தர்கள் நம்புவது நிஜமே!

    தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள்- மணல்மேடு பேருந்து சாலையில் திருப்பனந்தாளில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கீழக்காட்டூர் என்ற இந்த தலம்.
    மணப்பேறு, மகப்பேறு மட்டுமின்றி, மருத்துவர்கள் கைவிட்டோரையும் காத்தருளும் அன்னை, என்ற பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, வெட்டுவாணம் எல்லையம்மன் ஆலயம்.
    ரேணுகாதேவியின் அம்சமாய்த் தோன்றிய அன்னை, படவேடு ஆலயத்தின் எல்லை தெய்வம், மணப்பேறு, மகப்பேறு மட்டுமின்றி, மருத்துவர்கள் கைவிட்டோரையும் காத்தருளும் அன்னை, ஆடி மாதத்தில் ஏழு வெள்ளிக்கிழமைகள் விழாக்கோலம் பூணும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வெட்டுவாணம் எல்லையம்மன் ஆலயம்.

    தலவரலாறு :

    ஜமதக்னி என்ற முனிவரும், அவரின் தர்ம பத்தினியான ரேணுகாதேவியும் சிவன், பார்வதி அம்சங்களாக அவதரித்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு விசு, விசுவாஸ், விஸ்வரூபன், பரஞ்ஜோதி, பரசுராமன் என ஐந்து புதல்வர்கள். இவர்களில் பரசுராமனே கடைக்குட்டி.

    தன் கணவர் ஜமதக்னிக்காக அருகில் உள்ள நதிக்குச் சென்று அங்கே மண்ணைக் கொண்டு குடம் செய்து நீர் மொண்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் ரேணுகாதேவி.

    ஒரு சமயம் ஆற்றிற்குச் சென்று மணலால் குடம் செய்து ஆற்றில் நீர் மொண்ட போது, தண்ணீரில் கந்தர்வன் ஒருவனின் முகம் பிரபதிபலித்தது. பார்த்த மாத்திரத்தில் அந்த கந்தர்வனின் உருவம் அவளது மனதை ஆட்கொண்டது. ரேணுகாவும் அந்த வசீகரத்தில் மூழ்கிடவே, அவளின் சக்தி வீணாக, குடம் ஆற்றோடு கரைந்து போனது.

    இதனால் அச்சமுற்று சுயநினைவிற்கு வந்த ரேணுகை, தன் தவறை உணர்ந்தாள். அவளால் மீண்டும் மணலால் குடம் செய்ய சக்தி கூடவில்லை. வெறுங்கையோடு ஆசிரமம் திரும்பினாள். ஜமதக்னியிடம் விலங்கு விரட்டியதால் குடம் தவறி விழுந்து விட்டதாகப் பொய் கூறினாள்.

    அவளின் பொய்யைத் தன் ஞானத்தால் உணர்ந்த முனிவர், தன் பிள்ளைகளை அழைத்தார். ரேணுகை செய்த குற்றத்திற்கு தண்டனையாக அவளின் தலையை வெட்டுமாறு பணித்தார். முதல் நான்கு மகன்களும் மறுத்துவிட்டனர். அதனால் கோபம் கொண்ட முனிவர் அவர்களைச் செடி கொடிகளாக மாறும்படிச் சபித்தார். கடைசி மகனான பரசுராமனிடமும் அதே உத்தரவை இட்டார். மறுப்பின்றி பரசுராமன் ஒப்புக் கொண்டு, தன் தந்தையிடம் இரண்டு வரங்களைக் கேட்டார். அவரும் தருவதாக ஒப்புக் கொண்டார்.

    இதையடுத்து பரசுராமன் தன் தாய் என்றும் பாராமல், கையில் கோடரியோடு ரேணுகையைத் துரத்தினார். உயிர் பயத்தால் ஓடிய ரேணுகை, அருந்ததியப் பெண்ணைக் கட்டியணைத்துத் தன்னைக் காக்கும்படி வேண்டி நின்றாள். அதற்குள் அங்கு வந்த பரசுராமன் தன் கையில் இருந்த கோடரியால் வீச, அது இருவரின் தலையையும் துண்டித்தது.

    தன் தாயின் தலையைக் கையில் ஏந்தியபடி ஜமதக்னி முன் நின்றார் பரசுராமன். பின்னர் தான் கேட்க விரும்பிய வரங்களைக் கேட்டார். அதன்படி தன் தாய் ரேணுகைக்கு மீண்டும் உயிர்ப்பிக்க வழிபிறந்தது. ஆனால் அவசர கோலத்தில் இரு பெண்களுக்கும் தலை மாறி பொருந்தியவுடன் இருவருமே உயிர்பெற்றனர்.

    இருபெண்களின் தலை வெட்டுப்பட்ட ஊரே ‘வெட்டுவாணம்’ என வழங்கப்பட்டது. மேலைவித்தூர் என்ற பழைய பெயர் மறைந்து போனது என தல வரலாறு குறிப்பிடுகிறது. இந்த ரேணுகையே வெட்டுவாணம் தலத்தின் மூலநாயகி ஆவாள்.


    எல்லையம்மன் அழகிய திருக்காட்சி

    மற்றொரு வரலாறு :

    வெட்டுவாணம் வழியே புண்ணிய தீர்த்த மாக ஓடும், நதியின் கால்வாய் சீரமைப்பு பணி நடைபெற்று வந்தது. விவசாயி ஒருவர் மண் வெட்டியால் அகலப்படுத்தியபோது ஒரு கல் வெட்டுப்பட்டது. அதிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்தது. இதனைக் கண்ட அந்த விவசாயி மயங்கி விழுந்தான். அப்போது அசரீரி ஒலித்தது. ‘இத்தலத்து தெய்வமான எல்லையம்மன் நான். இவ்வளவு காலம் பூமியில் மறைந்திருந்த நான் வெளிப்படும் நேரம் வந்துள்ளது. என்னை பிரதானமாக வைத்து ஆலயம் எழுப்புங்கள்’ என்றது. இவ்வூரில் அம்மன் வெட்டுண்டதால் இத்தலம் வெட்டுவாணம் ஆனது. ஊர்மக்கள் ஒன்று கூடி எல்லையம்மனுக்கு அழகிய ஆலயம் ஒன்றை எழுப்பினர்.

    கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற அம்மன் கோவிலாகத் திகழும் சோட்டாணிக்கரை பகவதியம்மன் ஆலய புராண வரலாற்றின்படி பரசுராமன் உருவாக்கிய 108 துர்க்கை அம்மன் தலங்களில் வெட்டுவாணமும் ஒன்று எனக் கூறப்படுகிறது.

    ஆலய அமைப்பு :

    தேசிய நெடுஞ்சாலையில், வெட்டுவாணம் ஊரின் சாலையோரம் ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய ஐந்துநிலை ராஜகோபுரமும், அதனையொட்டி அழகிய மண்டபமும், எழிலான திருக்குளமும், குளத்தின் மேற்புறம் புற்றும், வேம்பும் ஒருங்கே அமைந்துள்ளன.

    ஆலயத்தில் நுழைந்து இடதுபுறம் நாகர் சிலையின் பீடத்தில் பழமையான பெரிய வேம்புமரம் தலமரமாக அமைந்துள்ளது. தென்மேற்கே அலங்கார மண்டபம் இருக்கிறது. தென்மேற்கில் உற்சவ மண்டபமும், வடமேற்கில் தீபம் ஏற்றும் அட்ட நாக தீப மண்டபமும் அமைந்துள்ளன.

    நடுநாயகமாக அன்னை வெட்டுவாணம் எல்லையம்மன், கருவறையில் கழுத்தளவு மேனியளாக, அழகிய அகன்ற கண்கள் கொண்டு அழகுற அருள்காட்சி வழங்குகின்றாள். அன்னை எல்லையம்மன் என்று வழங்கப்பட்டாலும், இவளின் புராணப் பெயர் ரேணுகாதேவியாகும்.

    அம்மனின் பின்புறம் முழு உருவ சுதைச் சிற்பம் அழகுற அருள்கோலத்தில் காட்சி அளிக்கிறது. அபிஷேக ஆராதனை, சிரசு அம்மனுக்கும், அலங்காரம் உள்ளிட்டவை இரு அம்மன்களுக்கும் செய்யப்படுகின்றது.

    பரிகாரத் தலம் :

    இத்தல இறைவி மணப்பேறும், மகப்பேறும் அருளும் கண்கண்ட தெய்வம் என்பது கண்கூடான ஒன்று. அருமருந்துகளாக அம்மனின் அபிஷேக மஞ்சள் நீரும், தல மரத்து வேப்பிலையும், புனிதமான குங்குமமும் அருட்பிரசாதங்களாக விளங்குகின்றன

    செவ்வாய்க்கிழமைகளில் காலை 8 மணி முதல் 9 மணி வரை நாகதோஷ நிவர்த்தி பூஜையில் கலந்துகொண்டு அனைத்துவித நாக தோஷங்களும் நீங்கப்பெறலாம்.

    உடல் நலிவுற்றவர்கள் இங்கு விற்கப்படும் மண் பொம்மைகளை வாங்கி காணிக்கை செலுத்துகின்றனர். விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு வரும் நோய்களுக்கு வேண்டிக் கொண்டு அவை குணம் பெற்ற பின்பு, விலங்கு பொம்மைகளைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

    அன்னையின் அருள்பெருக்கால், இவளை நாடி வரும் பக்தர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் இருந்தும் ஏராளமானோர் வழிபட்டுப் பலன் பெற்றுச் செல்கின்றனர்.


    தீபம் ஏற்றும் மேடை

    அழகிய திருக்குளம் :

    அம்மன் ஆலயத்தின் நேர் எதிரே அழகிய படிகள் கொண்ட சதுர வடிவிலான திருக்குளம் வெகு நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. எப்போதும் நீர் நிறைந்து காணப்படும் இத்திருக்குளத்தின் படிகளில், லட்ச தீப விழாவின் போது விளக்கேற்றி வழிபடும் காட்சி, மனம் கவரும் விதமானது. இத்திருக்குளமே தலத் தீர்த்தமாக அமைந்துள்ளது.

    விழாக்கள் :

    அம்மனுக்கு ஆடி மாதம் முழுவதுமே விழாக் கோலம் தான். ஆடி முதல் வெள்ளிக்கிழமையில் இருந்து ஏழு வெள்ளிக்கிழமைகளில் விழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

    இந்த ஆலயத்தில் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனம் செய்யலாம். வெள்ளிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து தரிசனம் செய்யலாம்.

    அமைவிடம் :

    வேலூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வேலூரில் இருந்து மேற்கே 23 கி.மீ. தொலைவில், ஜவ்வாது மலைச்சாரலிலும், பாலாறு நதிக்கரை ஓரத்திலும் நடுநாயகமாக இவ்வாலயம் அமைந்துள்ளது.
    ரெயில் மூலம் வர விரும்புவோர் சென்னை சென்ட்ரல் ெரயில் வழித் தடத்தில் குடியாத்தம் ெரயில் நிலையம் வந்து, அங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தை வந்தடையலாம்.
    பத்ரவல்லீஸ்வரர் கோவில் தீர்த்தத்தில் நீராடி இத்தல இறைவனை வழிபாடு செய்தால் வலிப்பு நோய், நரம்பு கோளாறு நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
    திருவாரூர் மாவட்டம் திருவீழிமிழலையில் உள்ளது பத்ரவல்லீஸ்வரர் திருக்கோவில். முன் காலத்தில் இந்த ஆலயம் இருந்த பகுதியில் காத்யாயன முனிவர் வசித்து வந்தார். அவரது மகளாகப் பிறந்த பார்வதி தேவி, காத்யாயினி என்ற பெயருடன் வளர்ந்து வந்தார். காத்யாயினியை மணம் முடிக்க சிவபெருமான், முதியவர் வேடத்தில் அங்கு வந்தார்.

    அவரை யார் என்று அறியாத முனிவர், ‘ஒரு முதியவருக்கு என் மகளைக் கட்டிக் கொடுக்க விருப்பமில்லை’ என்று மறுத்து விட்டார். இதையடுத்து தனது நெற்றிக்கண்ணைத் திறந்து, தான் யார் என்பதை முனிவருக்கு உணர்த்தினார் ஈசன். அதன்பிறகே தனது மகளான காத்யாயினியை சிவபெருமானுக்கு முனிவர் மணம் முடித்து வைத்தார். இறைவனுக்கும், இறைவிக்கும் திருமணம் நடைபெற்ற தலம் என்பதால், இங்குள்ள இறைவனை ‘மாப்பிள்ளை சுவாமி’ என்றும் அழைக்கிறார்கள். சிம்ம ராசிக்காரர்கள் இத்தல அம்பாளை தரிசித்தால், திருமணத் தடை நீங்கி, நல்ல துணை கிடைக்கும் என்பது ஐதீகம்.

    தல வரலாறு :

    புரூரவஸ் என்ற அரசனின் மனைவி பத்ரவல்லிக்கு, வலிப்பு நோய் உண்டானது. பல இடங்களில் சிகிச்சைப் பெற்றும், அந்த நோய் குணமாகவில்லை. இதையடுத்து திருவீழிமிழலை விழிநாதரை வணங்கி, தன் வலிப்பு நோய் நீங்க முறையிட்டாள். அன்றிரவு அவள் கனவில் தோன்றிய ஈசன், ‘திருவீழிமிழலை தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் நோய் நீங்கப் பெறுவாய்’ என்று அருளினார்.

    அதன்படியே பத்ரவல்லியும், தீர்த்தத்தில் நீராடி, நோய் நீங்கப் பெற்றாள். தன்னுடைய நோயைப் போக்கிய இறைவனுக்கு ஆலயம் அமைக்க பத்ரவல்லி விருப்பம் கொண்டாள். அவளின் எண்ணத்தை விநாயகப்பெருமானிடம் சொல்லி வேண்டினாள். அவர் வழங்கிய பணமுடிப்பை கொண்டு ஆலயத்தை நிர்மாணித்ததாக கூறப்படுகிறது.

    இந்த ஆலயத்திற்கு இன்னொரு வரலாறும் சொல்லப்படுகிறது. அதையும் பார்க்கலாம்.



    மகாவிஷ்ணுவின் சக்ராயுதத்தை சலந்தரன் என்ற அரக்கன் பறித்துச் சென்றான். அதனை மீட்டுத் தரும்படி, சிவபெருமானை வேண்டினார் திருமால்.

    ‘பூலோகத்தில் வீழிச்செடிகள் அடர்ந்த இடத்தில் இருக்கும் என்னை அனுதினமும் பூஜித்து வந்தால், சக்ராயுதம் கிடைக்கும்’ என்று அருளினார் ஈசன்.

    அதன்படி விஷ்ணுவும் மனம் தளராமல், தினமும் சிவ பூஜை செய்து வந்தார். விஷ்ணுவின் பெயரால் தீர்த்தம் உண்டாக்கி, அதில் இருந்து நீரை எடுத்து அபிஷேகம் செய்ததுடன், தினமும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு ஈசனை வழிபட்டார். ஒருநாள், சிவபெருமானின் திருவிளையாடலால் ஆயிரம் தாமரை மலர்களில் ஒன்று குறைந்தது. அந்த ஒரு தாமரை மலருக்குப் பதிலாக, தன்னுடைய ஒரு கண்ணையே மலராக அர்ப்பணித்தார் விஷ்ணு.

    அவரது பூஜையில் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான், சலந்தரனை வதம் செய்து சக்ராயுதத்தை மீட்டு விஷ்ணுவிடம் வழங்கினார். விஷ்ணு, சிவபெருமானுக்கு அர்ப் பணித்து பூஜை செய்த கண்மலர், இறைவனின் பாதத்தில் இருப்பதை இன்றும் காணலாம்.

    இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி இத்தல இறைவனை வழிபாடு செய்தால் வலிப்பு நோய், நரம்பு கோளாறு, திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் பூந்தோட்டம் என்ற இடம் உள்ளது. அங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் திருவீழிமிழலை இருக்கிறது.
    நாகை மாவட்டம் பொறையாறு அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
    உலகில் பிறப்பு ஒன்று உண்டு என்றால், இறப்பு வருவது நிச்சயம். மனிதனாக பிறந்தவர்கள் மரணத்தில் இருந்து தப்ப முடியாது. இருப்பினும் நாம் எதிர் கொள்ளும் மரணம், துன்பத்தை, பயத்தை தராமல் இருக்க இறையருள் அவசியம். மனிதன் மரணத்தை நினைத்து பயந்து அதனால் அடையும் மனசஞ்சலத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. மரண பயம் நீங்க அதற்கென்று அமையப்பெற்ற ஆலயங்களை தேடிச் சென்று இறைவனை பயபக்தியுடன் வழிபட்டு, தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொண்டால் மன அமைதி கிடைக்கும்.

    புராண இதிகாசங்களில் திருக்கடையூர், திருவீழிமிழலை, திருவையாறு, திருவெண்காடு, திருவைக்காவூர், திருவாஞ்சியம் ஆகிய திருத்தலங்கள் மரண பயம் போக்கும் தலங்களாக கூறப்பட்டுள்ளன. இவற்றுள் திருக்கடையூர் மிகவும் பிரசித்திப்பெற்றது.

    சிவபெருமானின் அட்ட வீரட்ட தலங்களில் திருக்கடையூரும் ஒன்றாகும். நாகை மாவட்டம் பொறையாறு அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மூலவர் அமிர்தகடேஸ்வரர் சுயம்புலிங்கமாக வீற்றிருந்து அருள்புரிந்து வருகிறார். எமனை உதைத்த காலசம்ஹார மூர்த்திக்கு தனி சன்னிதி உள்ளது. அம்பாளின் திருநாமம் அபிராமி.

    பிரம்மா, ஞான உபதேசம் பெற வேண்டும் என சிவபெரு மானிடம் வேண்டினார். அதற்கு சிவபெருமான், பிரம்மாவிடம் வில்வ விதை ஒன்றைக்கொடுத்து இந்த விதை நடப்பட்ட ஒரு முகூர்த்தத்திற்குள் எந்த இடத்தில் முளை விடுகிறதோ அங்கு நீ என்னை வழிபடு என்றார். சிவபெருமான் கட்டளைப்படி பிரம்மாவும் அந்த விதையை பல இடங்களில் நட்டுப்பார்த்தார். திருக்கடவூரில் தான் வில்வ விதையில் இருந்து முளை வந்தது. இதனால் இந்தப்பகுதிக்கு வில்வவனம் என்ற பெயர் ஏற் பட்டது.

    சாகாவரம் தரும் அமிர்தத்தை பெற வேண்டி தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்தனர். அப்போது வெளிப்பட்ட அமிர்தத்தை அசுரர்களுக்கு கொடுக்க விரும்பாத தேவர்கள் அதை குடத்தில் வைத்து எடுத்துக்கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் நீராடுவதற்காக ஒரு இடத்தில் குடத்தை வைத்தனர். நீராடி விட்டு வந்து குடத்தை எடுக்க முயன்ற போது குடத்தை எடுக்க முடியவில்லை. அந்த குடம் பாதாளம் வரை ஊடுருவி சென்று சிவலிங்கமாக மாறி இருப்பதை கண்டார்கள். அமிர்தம் இருந்த இடம் பூமியில் வேர் ஊன்றிவிட்ட இடம் என்பதால் இந்தப்பகுதி திருக் கடவூர் எனப்பெயர் பெற்றது.

    தலவரலாறு :

    மிருகண்டு முனிவரும், அவரது மனைவியும் குழந்தைப்பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்களின் பக்தியை மெச்சிய இறைவன் அவர்கள் முன் தோன்றி, ஆயிரம் ஆண்டுகள் வாழும் கெட்ட குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா? அல்லது 16 வயது வரை மட்டும் வாழும் அறிவில் சிறந்த மகன் வேண்டுமா? என கேட்டார். அதற்கு அவர்கள் 16 வயது வரை மட்டுமே வாழக் கூடிய தலைச்சிறந்த மகனே எங்களுக்கு போதும் என்றனர்.

    இறைவன் அவர்கள் விருப்பப்படியே வரம் அளித்தார். மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் மார்க்கண்டேயன் என்ற மகன் பிறந்தான். மார்க்கண்டேயன் அறிவில் சிறந்தவராகவும், சிறந்த சிவபக்தராகவும் விளங்கினார். அவருக்கு 16 வயது ஆன போது அவரது பெற்றோர், இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் 16 வயது தான் என்பதை மார்க்கண்டேயனிடம் கூறினர். எனக்கு நீண்ட ஆயுளை சிவபெருமானால் மட்டுமே வழங்கமுடியும். ஆதலால் நான் ஒவ்வொரு ஆலயமாக சென்று வழிபடுகிறேன் என பெற்றோரிடம் கூறி விட்டு மார்க்கண்டேயன் ஒவ்வொரு ஆலயமாக தரிசித்து வந்தார். அவ்வாறே திருக்கடையூர் வந்தபோது அவருடைய ஆயுள் முடியும் நாள் வந்தது. எமன் தன் பணியை முடிக்கும் பொருட்டு பாசக் கயிற்றை மார்க்கண்டேயன் மீது வீசினான்.

    எமனைக்கண்டு அச்சமடைந்த மார்க்கண்டேயன் தான் வழிபட்டு கொண்டு இருந்த லிங்கத்தை ஆரத்தழுவிக்கொண்டான். எமனும் தனது பாசக்கயிற்றை லிங்கத்தின் மீதும் சேர்த்து வீசினான். சிவபெருமான் தன்னை காக்கும் பொருட்டு லிங்கத்தில் இருந்து திரிசூலத்துடன் வெளிப்பட்டு காலனை காலால் எட்டி உதைத்தார். காலனை சூலாயுதத்தால் கொன்று காலனுக்கு காலனாக, காலசம்ஹார மூர்த்தியாக விளங்கினார். பின்னர் மார்க்கண்டேயனுக்கு என்றும் 16 வயதுடன் சிரஞ்சீவியாக வாழும் வரத்தை வழங்கி அருள்புரிந்தார். பின்னர் பூமாதேவி, பிரம்மா, மகாவிஷ்ணு ஆகியோர் வேண்டுதலுக்கு இணங்க எமன் உயிர் பெற்றதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

    ஆலய அமைப்பு :


    ஆலயத்தின் மேற்கில் ஏழு நிலை ராஜகோபுரம் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. கருவறையில் அமிர்தகடேஸ்வரர் சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். கருவறை சுற்றுப்பிரகாரத்தில் முருகன், லட்சுமி, சோமாஸ்கந்தர், நடராஜர், விவ்வனேஸ்வரர், பைரவர், பஞ்சபூதங்கள், சூரியன், அகத்தியர், சப்தகன்னியர்கள், 64 நாயன்மார்கள் ஆகியோர் சன்னிதிகள் உள்ளன. இந்த கோவிலில் நவக் கிரகங்கள் இல்லை.



    கருவறைக்கு முன்பு உள்ள மண்டபத்தில் காலசம்ஹார மூர்த்தி வலது காலை ஊன்றி இடது காலை உயர்த்தி எமனை உதைக்கும் நிலையில் காட்சி அளிக்கிறார். அருகில் மார்க்கண்டேயன் கூப்பிய கரத்துடன் நிற்கிறார். எருமை வாகனத்துடன் கரம் கூப்பியவாறு நிற்கும் எமனுக்கு தனி சன்னிதி உள்ளது. எமனின் பாசக்கயிறு பட்டதால் லிங்கத்தின் உச்சியில் ஒரு பிளவும், மேனியில் ஒரு தழும்பும் உள்ளது. கோவில் வெளிப்பிரகாரத்தில் கிழக்கு நோக்கியவாறு அன்னை அபிராமி அம்மன் சன்னிதி உள்ளது. முருகப்பெருமான் ஒரு முகத்துடன், நான்கு திருக் கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.

    அமாவாசையன்று வானில் தோன்றிய முழுநிலவு :

    தஞ்சையை ஆண்ட 2-ம் சரபோஜி மன்னர் ஒருமுறை திருக்கடையூர் வந்தார். அப்போது திருக்கடையூரில் வாழ்ந்து வந்த பட்டர் ஒருவர், அபிராமியின் மீது அளவு கடந்த அன்பு கொண்டு இருந்தார். அவரிடம் மன்னர் இன்று என்ன திதி என்று கேட்டார். அபிராமியின் நினைவில் இருந்த பட்டர் அமாவாசையை, பவுர்ணமி திதி என்று தவறாக கூறிவிட்டார்.

    பட்டரை பற்றி கோவில் அர்ச்சகர்கள் தவறான தகவல்களை மன்னரிடம் கூறியிருந்தனர். இதனால் கோபமடைந்த மன்னர் இன்று இரவு பவுர்ணமியை காணாவிட்டால் பட்டருக்கு தண்டனை வழங்கப்படும் என்றார். அம்மனிடம் பாரத்தை போட்டு விட்டு பட்டர், அபிராமி மீது 100 பாடல்களை கொண்ட அந்தாதி பாடல்களை பாட தொடங்கினார். 79-வது பாடலை பாடிய போது அன்னை அபிராமி தனது காதில் இருந்த தோடு ஒன்றை கழற்றி ஆகாயத்தில் வீச, அது பவுர்ணமியாக தோன்றியது. அபிராமி அந்தாதி பாடி முழு மதியை ஆகாயத்தில் காட்டியது அரசனை மெய்சிலிர்க்க வைத்தது. பட்டருக்கு அருள் செய்த அன்னையின் அருளை வியந்து போற்றிய அவர் பட்டரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

    நீண்ட ஆயுள் பெற தம்பதியர் பூஜை :

    மரண பயத்தை கடக்கும் ஊர் என்ற காரணத்தால் 60 வயது நிரம்பியவர்கள் கோவிலுக்கு மனைவியுடன் வந்து ஆயுள் வேள்வி செய்கின்றனர். 60 வயது தொடங்கும் போது உக்ரரத சாந்தியும், 61 வயது தொடக்கத்தில் சஷ்டியப்த பூர்த்தி சாந்தியும், 71 வயது தொடக்கத்தில் பீமரத சாந்தியும், 80 வயது தொடக்கத்தில் சதாபிஷேகமும் செய்து கொள்கின்றனர். என்றும் இளமையுடன் வாழ சிறப்பு ஹோமங்களும், பூஜைகளும் செய்யப்படுகிறது. இந்த பூஜைகளை அவரவர் பிறந்த தமிழ் மாதம், பிறந்த நட்சத்திரம், திதி வாரம் கூடி வரும் நாளில் செய்து கொள்வது சிறந்தது. திருக்கடையூர் கோவிலில் 60-வது திருமண வழிபாடு நடத்தினால் ஒரு கோடி பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    திருவிழாக்கள் :

    சித்திரை மாதம்-பிரம்மோற்சவம், ஆடிமாதம்-ஆடிப்பூர உற்சவம், தை அமாவாசை உற்சவம், கார்த்திகை மாதம் 1,008 சங்காபிஷேகம்.

    வழியும் - தூரமும் :

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை-தரங்கம்பாடி செல்லும் வழியில் மயிலாடுதுறையில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. சீர்காழியில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் இந்த தலம் அமைந்துள்ளது. மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் இருந்து பஸ் வசதி உள்ளது. ரெயிலில் வருபவர்கள் மயிலாடுதுறை, சீர்காழியில் இறங்கி அங்கிருந்து திருக்கடையூர் செல்லலாம்.
    சித்தர்கள் வழிபடும் ஆலயம், மணியோசைக்கு பதிலாக, மந்திர ஓசைகள் மட்டுமே ஒலிக்கும் ஆலயம், சித்தர்கள் உருவாக்கிய மந்திரப்பாவை அம்மன் சன்னிதி கொண்ட ஒரே ஆலயம்.
    சித்தர்கள் வழிபடும் ஆலயம், மணியோசைக்கு பதிலாக, மந்திர ஓசைகள் மட்டுமே ஒலிக்கும் ஆலயம், சித்தர்கள் உருவாக்கிய மந்திரப்பாவை அம்மன் சன்னிதி கொண்ட ஒரே ஆலயம். அணையாத தீபம் கொண்ட ஆலயம். அடியார்களையே அர்ச்சகர்களாகவும், பெண் அர்ச்சகர்களையும் கொண்ட ஆலயம், சமயப் பணியோடு, கல்வி, மருத்துவம் போன்ற சமுதாயப் பணிகளையும் மேற்கொள்ளும் ஆலயம் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, சென்னை பள்ளிக்கரணை அன்னை ஆதிபராசக்தி ஆலயம்.

    சித்தர்கள் உருவாக்கிய மந்திரப்பாவை :

    அதர்மங்கள் தலை தூக்கி, ஆன்மிகத்திற்கு குறைவு ஏற்படும் போது, அதனைச் சரி செய்ய சித்தர் பெருமக்கள், தங்களின் பேராற்றல் வாயிலாக, நற்செயல் புரிவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் மக்களின் தீமைகளை ஒழித்து, நன்மைகள் ஓங்கிட, சித்தர்களின் எண்ணத்தில் தோன்றிய ஆலயமாகத் திகழ்வது, அன்னை ஆதிபராசக்தி கோவில்.

    எதிரிகளின் தொல்லைகள் என்பது இன்று நேற்றல்ல, காலங் காலமாய் தொடர்ந்து வரும் ஒரு செயலாகும். இதனை புராணங்கள் மற்றும் காவியங்கள் மூலமாக நம்மால் அறிய முடிகிறது. இதே தொல்லைகள் சித்தர்களுக்கும், முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் ஏற்பட்டது. உன்னத நோக்கத்திற்காக தவம் இருந்து வந்த சித்தர் பெருமக்களுக்கும், கெடுதல் செய்து, தவத்தை தடை செய்யும் தீய சக்திகள் இவர்கள் மீதும் ஏவப்பட்டன.

    இந்தத் தொல்லைகளைக் களைந்து, நல்வழி காண, ஒரு உத்தம சக்தியைப் பெற, அகத்திய மகரிஷியிடம் சித்தர்கள் வேண்டுதல் வைத்தனர். அதற்கு அவர், இதற்கு ஏற்றவராகத் திகழும் தேரையரை நாடுமாறு அறிவுறுத்தினார்.

    சித்தர்கள் தேரையரை நாடிய பின்பு, தம் குழுவோடு தியானத்தில் அமர்ந்து, ஆத்ம சக்தியான பராசக்தியையும், சிவபெருமானையும் வணங்கினர். அதன்பின் மனோ சக்தியினால் நுண்ணிய அதிர்வுகளை மந்திரங்களாக்கினர். அந்த மந்திரங்களுக்கு உரிய துடி சக்திகள், காப்பு சக்திகள், இவர்களுக்குரிய கோணங்களாக்கி உரிய பீஜ மந்திரம் அளித்து, ஒரு யந்திரத்தை உருவாக்கினர்.

    அந்த பீஜ சக்தி பேராற்றல் பெற்று, இணையில்லாத அழகிய சக்தியாக செயல்படத் தொடங்கியது. அந்த சக்திக்கு, அந்த யந்திர சக்தியை வெளிப்படுத்தும் வடிவம் தந்து, அந்த பேராற்றலை வெளிப்படுத்தும் சக்தியாக, உருவ வடிவில் பாவை சிற்பத்தை வடிவமைத்தனர். அந்த பாவை சிற்பத்தை தாங்கள் தியானம் செய்கின்ற இடங்களில் அமைத்து, வழிபட்டு யோகம் செய்தனர். அந்த பாவை சிற்பமே மந்திரப் பாவையாகும். அந்த மந்திரப்பாவையின் துணையால் எந்தவித இடையூறுகளும் இல்லாமல், தங்கள் யோகத்தை நிறைவு செய்தனர்.



    மந்திரப்பாவையே சித்தர்களின் கலைகளான மணி, மந்திர, ஔஷத, யோகம் எனப்படும் வாத வித்தைகள், மந்திர வித்தைகள், மருத்துவக்கலை, ஞானயோகம் அனைத்தையும் தங்கு தடையின்றி தம்மை வழிபடுபவர்களுக்கு சித்தர்களின் மூலம் ஞானமாக வழங்கி வருகின்றார்.

    மந்திரப் பாவை அம்மன் :

    இவ்வளவு காலம் இப்படி ஒரு அபூர்வ சக்தியின் அம்சம் தெரியாமல் இருந்தது. தற்போது உலகில் அல்லல்படும் மக்களுக்கு உதவும் நோக்கில், சித்தர் பெருமக்களின் நற்கருணையால், இப்பூவுலகில் பள்ளிக்கரணை ஆதிபராசக்தி ஆலயத்தில் தனிச் சன்னிதியில் தமிழகத்தில் வேறெந்த ஆலயத்திலும் காணப்படாத அபூர்வ சக்தி கொண்ட மந்திரப்பாவை அம்மன் எழுந்தருளியுள்ளார்.

    மந்திரப்பாவை அன்னை வடக்கு முகமாக கட்சி தர, கருவறையின் வெளிப்புறம் அகத்தியர், கருவூரார், தேரையர், இடைக்காடர், அழுகண்ணர், சட்டைமுனி, புலத்தியர், போகர், காளங்கிநாதர், சிவவாக்கியர், மச்சமுனி, புலிப்பாணி, திருமூலர், கொங்கணவர், ராமத்தேவர், பாம்பாட்டிச்சித்தர், பிண்ணாக்கீசர், கமலமுனி ஆகிய பதினெண் சித்தர்கள் சுதை வடிவங்களாக நேர்த்தியாக காட்சி தருகின்றனர்.

    மாபெரும் சக்தி கொண்ட மந்திரப்பாவையை, அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் நேரில் வந்து மனமுருகி, தங்களின் பிரார்த்தனைகளை வைத்து வேண்டுதல்களை செய்து கொண்டால், அன்னையின் பீடத்தில் அமைந்துள்ள யந்திர சக்தியாலும், அன்னையின் பேரருளாலும், அவரவர்களின் பிரச்சினைகளுக்கு ஏற்றவாறு மூன்று முதல் ஒன்பது பவுர்ணமிக்குள் வேண்டுதல்கள் கை கூடும் என்கின்றனர் பக்தர்கள்.

    ஆலய அமைப்பு :

    இவ்வாலயத்தின் வாசல் வடக்கு முகமாக அமைந்துள்ளது. எளிய நுழைவு வாசலில் நுழைந்ததும், மேற்கு நோக்கிய வினை தீர்த்த விநாயகர் தனிச் சன்னிதியில் அமர்ந்துள்ளார். அதனை அடுத்து கிழக்கு நோக்கிய அன்னை ஆதிபராசக்தி சன்னிதி நம்மை வரவேற்கிறது. அன்னை ஆதிபராசக்தியே இந்த ஆலயத்தின் ஆதி தெய்வம். கருவறையில் அமர்ந்த நிலையில் இரண்டு அம்மன்கள் உள்ளனர். சிறிய அம்மனுக்கே அபிஷேகம் நடைபெறும். பின்புறம் உள்ள அம்மனுக்கு அலங்காரங்களும் ஆராதனைகளும் உண்டு. சிறிய அம்மன் அருள் நிலைக்கும், பெரிய அம்மன் பொருள் நிலைக்கும் ஆதரவானவர்களாக எழுந்தருளியுள்ளனர்.

    அன்னை ஆதிபராசக்தி ஆலயத்தின் கருவறையைச் சுற்றி, நாற்புறமும் முறையே தாயுமானவர், ராமலிங்க அடிகளார், பட்டினத்தார், பாம்பாட்டி சித்தர் என சித்தர் பெருமக்கள் சிற்ப வடிவங்களாக அருள்பாலிக்கின்றனர்.



    அன்னை ஆதிபராசக்தி ஆலயத்தை கடந்ததும், மந்திரப்பாவை அம்மன் தனிச் சன்னிதியில் வடக்கு நோக்கியவாறு அமர்ந்துள்ளார். மந்திரப்பாவை அம்மன் பத்மாசனக் கோலத்தில் அமர்ந்து, நான்கு கரங்களுடன் அபய, வரத முத்திரையுடனும், மற்ற இரு கரங்கள் ஞான வாள், கேடயம் தாங்கியும் காட்சி தருகின்றார்.

    பூர்வ ஜன்ம வினைகள், எதிரிகளின் மந்திரத் தொல்லைகள், நீண்டகாலமாக நலிவுபடுத்தி வரும் நோய்கள், வாழ்வில் தடைகள் நீங்கவும், யோகம் கை கூடவும், வரப்பிரசாதியாக மந்திரப்பாவை அம்மன் அருள்கின்றார்.

    வலம் வரும் போது, சிவன் தனிச் சன்னிதியிலும், அரசு வேம்பு மரங்கள் இணைந்தும், அதனடியில் நாகமும் அருள்பாலிக்கின்றனர். தென் மேற்கு மூலையின் மாடியில் தியான மண்டபம் அமைந்துள்ளது. தியான மண்டபத்திற்குள், வேண்டுபவர்களுக்கு சகல கலைகளையும் அருளும் ஞானதேவி, கிழக்கு முகமாய் எழுந்தருளியுள்ளார்.

    இந்த ஆலயத்தில் வழங்கப்படும் தீர்த்தமான மந்திரப்பாவை தீர்த்தம், சகல நோய்களையும் தீர்க்கும் அருமருந்தாக அமைந்துள்ளது.

    ஆலய விழாக்கள் :

    தமிழ்ப்புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, சித்திரைப் பவுர்ணமி, ஆடிப்பூரம், தைப்பூசம், நவராத்திரி ஆகிய விழாக்களும், அமாவாசை பவுர்ணமியில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப் படுகின்றன. சக்திமாலை விரதம், மந்திரப்பாவை மங்கல வேள்வி, நவக்கிரக சாப நிவர்த்தி வேள்வி, ஔஷத வேள்வி, ஐஸ்வர்ய வேள்வி, மற்றும் 60, 80 வயது பூர்த்தி வேள்விகள் உள்ளிட்ட பல்வேறு வேள்விகளும் சித்தாகம முறைப்படி, தமிழில், மிகச் சிறப்பாக நடத்தப்படுகின்றன. காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனம் செய்யலாம்.

    அமைவிடம் :

    வேளச்சேரியில் இருந்து தாம்பரம் வழித்தடத்தில் பள்ளிக்கரணை அமைந்துள்ளது. பேருந்து மூலம் வருவோர், பள்ளிக்கரணை தாமரைக்குளம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, கிழக்கு நோக்கி சுமார் 1 கிலோமீட்டர் சென்றால் கோவிலை அடையலாம்.
    சீர்காழியில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் பேருந்து தடத்தில் உள்ள பந்தநல்லூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சோழிய விளாகம் என்ற இந்த தலம்.









    சாமுண்டீஸ்வரர்
    பிருகந்நாயகி
    யானை வழிபாட்டை விளக்கும் ஓவியம்
    கோவில் தோற்றம்



    சிவபூஜை என்பது மானிடர்களுக்கு மட்டும் சொந்த மானதா என்ன?. ‘இல்லை’ என்பதற்கு புராணங்களில் பல ஆதாரங்கள் உண்டு.

    நல்லூரில் சிங்கம், சாத்தமங்கையில் குதிரை, கருவூர் மற்றும் பட்டீஸ்வரத்தில் பசு, சிவபுரத்தில் பன்றி, குரங்காடு துறையில் பாம்பு, சோலூரில் மீன், திருத்தேவன்குடியில் நண்டு, ஆனைக்கா மற்றும் மதுரையில் யானை, திருவெறும்பூரில் எறும்பு இப்படி பல தலங்களில் மிருகங்கள், நீர் வாழ்வன, ஊர்வன என பல உயிர்கள் இறைவனை பூஜித்து பலன் பெற்ற தகவல்கள் புராணங்களில் நிறைய உண்டு.

    சிலந்தி பூஜித்த கதை:

    யானையும் சிலந்தியும் சிவபெருமானை போட்டி போட்டுக் கொண்டு பூஜித்த கதை தெரியுமா? இதோ அந்த வரலாற்றுக் கதை!

    கயிலாயத்தில் கணநாதர்களான மாலியவான், புஷ்பதந்தன் இருவரும் சிவபெருமானின் சாபத்தால் பூலோகத்தில் யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.

    யானையும் சிலந்தியும் ஒரு வனத்தில் வசித்து வந்தன. அங்கே ஒரு மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. காய்ந்து போன மரத்தின் சருகுகள் அந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. இதை கண்ட சிலந்தி பதறியது. சிவபெருமான் மேல் சருகுகள் விழுவதா?

    உடனே சிவபெருமானின் தலைக்கு மேலே சிலந்தி ஒரு வலையை பின்னியது. உதிரும் சருகுகள் அந்த வலையில் சிக்கிக் கொள்ள சிவபெருமானின் மேல் சருகுகள் விழாமல் சிலந்தியால் தவிர்க்கப்பட்டது. அது முதல் சிலந்தி சிவபெருமானை தினந்தினம் பூஜித்து வந்தது.

    ஒரு நாள் அந்த வழியாக வந்த புஷ்பதந்தனான யானை, அந்த சிவலிங்கத்தைக் கண்டது. சிவபூஜை செய்ய அந்த யானைக்கும் ஆசை வந்தது. சிவபெருமானின் மேல் இருந்த சிலந்தி வலையை கண்ட யானை, அந்த வலையை பிய்த்து எறிந்தது. பின் தன் துதிக்கையில் தண்ணீர் கொண்டு வந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தது.

    தினம் தினம் யானை இப்படி செய்யவே சிலந்திக்கு எதுவும் புரியவில்லை.

    நான் சிரமப்பட்டு தினம் கட்டும் வலையை யார் இப்படி பிய்த்து எறிவது? எப்படியும் இதனை கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணிய சிலந்தி, ஒரு நாள் மறைவில் காத்திருந்தது.



    யானையும் வந்தது?. :

    வழக்கம் போல் சிலந்தி வலையை பிய்த்து எறிந்த யானை, தன் துதிக்கையில் தண்ணீர் கொண்டு வந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தது.

    தான் ஆசையாய் கட்டிய வலையை பிரித்த யானையின் மீது சிலந்திக்கு கோபம் கோபமாக வந்தது. உடனே விறு விறுவென ஊர்ந்து யானையின் தும்பிக்கைக்குள் போய் புகுந்து கடித்தது. வலி தாங்க முடியாத யானை பிளிறியது. வலி குறையவில்லை. உடனே தன் துதிக்கையை மூர்க்கத்தனமாக தரையில் அறைந்தது. அது அறைந்த வேகத்தில் சிலந்தி இறந்தது. இதைக் கண்ட சிவ பெருமான் இருவர் முன் தோன்றினார். இருவருக்கும் சாப விமோசனம் அளித்தார்.

    யானையாய் இருந்த புஷ்பதந்தன் கயிலாயத்தை அடைந்து, முன்பு போலவே கணநாதர்களில் ஒருவனாய் இருக்கும்படி அருளினார். சிலந்தியான மாலியவான் பல திருக்கோவில்களை கட்டி வழிபட்டு, பின்னர் கயிலாயம் வரும்படியும், அதற்கு ஏற்றதுபோல் அவன் சோழர் குலத்தில் பிறக்கும்படியும் அருளினார் இறைவன்.

    அவர் அருளியபடி மாலியவான் சோழர் குலத்தில் பிறந்தான். அவனே கோ செங்கோட்சோழன் என்று கூறப்படு கிறது. அவன் தனது ஆட்சி காலத்தில் 70 கோவில்களை கட்டினான். முற்பிறவியில் யானை மேல் ஏற்பட்ட சினம் காரணமாக யானை ஏற முடியாதபடி அனைத்து கோவில்களையும் அவன் மாடக் கோவில்களாகவே கட்டினான்.

    ஆலய அமைப்பு :

    அப்படி அவன் கட்டிய கோவில்களில் ஒன்று சோழிய விளாகத்தில் உள்ள சாமுண்டீஸ்வர சுவாமி ஆலயம்.

    ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம். பலிபீடத்தைத் தொடர்ந்து நந்தி பகவான் தனி மண்டபத்தில் அருள்பாலிக் கிறார். அடுத்து உள்ளது மகாமண்டபம். இந்த மகாமண்டபத்தின் வலது புறம் இறைவி பிருகந்நாயகி அம்பாள் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்கிறாள். அம்மன் சன்னிதியின் முன்பு நந்தியும், பலிபீடமும் உள்ளன.

    அடுத்துள்ள அர்த்தமண்டப நுழைவு வாசலில் இடதுபுறம் இரட்டை விநாயகரும், வலது புறம் சுப்ரமணியரும் அருள் பாலிக்கின்றனர். அடுத்துள்ள கருவறையில் இறைவன் சாமுண்டீஸ்வர சுவாமி, லிங்கத் திருமேனியில் வீற்றிருந்து பக்தர்கள் வேண்டியதை வழங்கி வருகிறார்.

    இறைவனின் தேவக் கோட்டத்தில் தென் திசையில் அர்த்த நாரீஸ்வரர், நர்த்தன கணபதி, கங்காள மூர்த்தி, தட்சிணாமூர்த்தி ஆகியோரும், மேல்திசையில் மகாவிஷ்ணுவும், வடதிசையில் பிரம்மா, துர்க்கை, பிச்சாடனார் ஆகியோரும் அமர்ந்து அருள் வழங்குகிறார்கள்.



    நான்கு புறமும் அழகிய நெடிந்துயர்ந்த திருமதில் சுவர்கள் ஆலயத்திற்கு அழகு சேர்க்கின்றன. பிரகாரத்தின் வடக்கில் சண்டீகேஸ்வரர் சன்னிதி உள்ளது. தென் பிரகாரத்தில் தீர்த்தங்கர சாஸ்தாவின் திருமேனி திறந்த வெளியில் உள்ளது. இவருக்கு காப்பரிசி நைவேத்தியம் படைத்து, அபிஷேகம் செய்து பிரார்த்தனையோடு வழிபட்டால் மழை பொழியும் என பக்தர்கள் நம்புகின்றனர். ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம் ஆகும்.

    தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்

    ஆராதனைகள் :

    சோமவாரங்கள், சிவராத்திரி, பொங்கல் போன்ற நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மாதப் பிரதோஷங்கள் இங்கு வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. ஐப்பசியில் இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தில் பலநூறு பக்தர்கள் கலந்துகொண்டு பலன்பெறுகின்றனர்.

    மகாமண்டபத்தின் இடதுபுறம் உள்ள இரட்டை விநாயகரிடம் முறையிட்டு பிரார்த்தனை செய்தால், களவு போன பொருட்கள் திரும்பக் கிடைப்பது நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.

    முற்பிறவியில் சிலந்தியாக இருந்து சிவபூஜை செய்ததால், மறுபிறவியில் மன்னர் குலத்தில் பிறந்தான் மன்னன் கோ செங்கோட்சோழன்.

    அதேபோல் இத்தலத்து இறைவனையும் இறைவியையும் வணங்குவதால், நாம் செய்த பாவங்கள் யாவும் கரையும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

    சீர்காழியில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் பேருந்து தடத்தில் உள்ளது பந்தநல்லூர். இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சோழிய விளாகம் என்ற இந்த தலம்.
    நீலகிரி மாவட்டம், குன்னூரின் பஸ் நிலையத்தில் இருந்து அரைகிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேல் கடைவீதியில் தந்தி மாரியம்மன் கோவில் கொண்டு உள்ளார்.
    பராசக்தி என்பது பரபிரம்மம் ஆகும். அதாவது பரந்து விரிந்த பார் உலகையும் ஆட்சி செய்பவள் என்று பொருள். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு ஒரு சக்தி தேவை. அந்த சக்தியாக அன்னை விளங்குகிறாள். ஒரு தாய் தன் குழந்தையை எப்படி பராமரிக்கிறாளோ அப்படி தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் இன்னல்களை தீர்த்து அவர்களுக்கு வேண்டிய வரங்களை வழங்கி துயர் துடைக்கும் அன்னையாக தந்தி மாரியம்மன் விளங்கி வருகிறார்.

    இவர் நீலகிரி மாவட்டம், குன்னூரில் எழுந்தருளி உள்ளார். குன்னூரின் பஸ் நிலையத்தில் இருந்து அரைகிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேல் கடைவீதியில் தந்தி மாரியம்மன் கோவில் கொண்டு உள்ளார். இந்த கோவில் சிறியதாக இருந்தாலும் அதில் வீற்றிருக்கும் தந்தி மாரியம்மனின் அருள் மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

    இதற்கு கோவிலில் 40 நாட்கள் கொண்டாடப்படும் தேர்த்திருவிழாவே சான்று. இந்துக்கள் மட்டுமின்றி இந்த கோவில் திருவிழாவை கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கொண்டாடு கிறார்கள். ஒரு சமய ஒற்றுமை திருவிழாவாக இப்பகுதி மக்கள் இந்த கோவில் திருவிழாவை பல ஆண்டுகளாக நடத்தி வருவது குன்னூர் நகருக்கு பெருமை சேர்க்கிறது.

    ஆலய வரலாறு :

    இன்று குன்னூரில் மலை சரிவுகளில் தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தாற்போல கட்டிடங்கள். ‘குளு, குளு‘ காலநிலை நிலவுவதால் நகரை பெரும்பாலான தனியார் தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் ஆக்கிரமித்து கொண்டன. தற்போது கோவில் இருப்பது கூட இந்த கட்டிடங்களுக்கு மத்தியில் தேடி தான் பார்க்க வேண்டிய நிலை உள்ளது.

    ஆனால் முன்பு இப்பகுதி சிறிய ஊராக காட்சியளித்தது. சுற்றிலும் பசுமை சூழ்ந்த வனப்பகுதிகள். இதனால் ஆங்கிலேயர்கள் காலத்தை சேர்ந்த அதிகாரிகளின் குதிரைகளும், சாரட் வண்டிகளும் தங்கும் இடமாக தான் இந்த பகுதி விளங்கி வந்தது. அதை பராமரிக்கும் பணியிலும், கண்காணிக்கும் பணியிலும் காவலர்கள் ஈடுபட்டு வந்தனர். அவர்களும் குதிரைகள் தங்கும் இடத்தில் தங்கி இருந்தனர்.

    அப்போது எல்லாம் மாலை 5 மணி ஆகி விட்டாலே இருட்ட தொடங்கி விடும். குதிரைகளையும், சாரட் வண்டிகளையும் கண்காணிக்க பெரிய தேக்கு மரத்தில் ஏணியை வைத்து ஏறி அதன் மீது உள்ள லாந்தர் விளக்கில் தீபம் ஏற்றப்படும். அதில் எரியும் வெளிச்சம் அந்த பகுதி முழுவதும் பிரகாசிக்கும். இதை தொடர்ந்து இரவு முழுவதும் குளிரில் நடுங்கியபடியே குதிரைகளையும், சாரட் வண்டிகளையும் கண்காணிப்பார்கள்.

    ஊஞ்சல் ஆடிய சிறுமி :


    இந்த நிலையில் ஒருநாள் காவலாளி ஒருவர் இரவு லாயத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது எதேச்சையாக தேக்குமர லாந்தர் விளக்கை பார்த்தார். அதில் ஒரு சிறுமி கயிறு கட்டிய ஊஞ்சலில் அமர்ந்து ஆடி கொண்டு இருந்தாள். அவள் பட்டொளி வீசும் உடைகளை உடுத்தியும், ஜொலிக்கும் நகைகளையும் அணிந்து இருந்தாள்.

    மறுநாள் இதை காவலர் தனது நண்பர்களிடமும், உறவினர்களிடமும் தெரிவித்தார். அவர்கள், அந்த காவலர் கூறியதை நம்பாமல் கேலி செய்தனர். அன்று இரவும் அந்த காவலர் தேக்குமர லாந்தர் விளக்கை பார்த்த போது ஊஞ்சலில் சிறுமி ஆடிய காட்சியை பார்த்து அதிர்ந்து போனார். அருகில் சென்று பார்த்தார். அந்த காட்சி மறைந்திருந்தது. தொலைவில் நின்று பார்த்த போது மீண்டும் ஊஞ்சலில் சிறுமி ஆடிய காட்சி தோன்றியது.


    தந்தி மாரியம்மன்

    இதை கண்டு பயந்து போன காவலர் மறுநாள் ஊர் பெரியவர்களிடம் தான் இரவு கண்ட காட்சியை கூறி இருக்கிறார். காவலர் சொல்வதில் நம்பிக்கை இல்லாத ஊர்பெரியவர்கள் அன்று இரவு குதிரை லாயத்தில் தங்கினார்கள். சூரியன் மறைந்து இரவு வந்தது. தேக்குமரத்தில் உள்ள லாந்தர் விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது. தீப ஒளியில் குதிரை லாயங்களும், காவலர்கள் தங்கி இருந்த குடியிருப்புகளும் பிரகாசிக்க தொடங்கின.

    சிறிது நேரம் கழித்து.. அந்த காவலர் குதிரை லாயத்தில் இருந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது முன்பு பார்த்தது போலவே தேக்குமர லாந்தரில் பட்டொளி வீசும் நகைகள் சூழ சிறுமி ஊஞ்சலில் ஆடி கொண்டு இருந்தாள். இதை பார்த்து காவலர் மட்டுமில்ல.. அதை பார்க்க வந்த ஊர்பெரியவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெரியவரின் கனவில் பெண் ஒருவர் தோன்றி, நான் தான் மாரியம்மன். இப்பகுதியில் உள்ள லாந்தர் விளக்கு பகுதியில் தோன்றி உள்ளேன். என்னை வழிபடுங்கள் என்று கூறி மறைந்தார். இந்த கனவை அந்த பெரியவர் ஊர் மக்களிடம் தெரிவித்தார்.

    இதை கேட்டு அதிசயித்த ஊர்மக்கள் பொழுது புலர்ந்ததும் சிறுமி காட்சி தந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கே ஒரு சுயம்பு இருப்பதை கண்டனர். அகிலத்தை ரட்சிக்கும் அன்னையே இங்கு மாரியம்மனாக சுயம்புவாக எழுந்தருளி இருப்பதாக கருதிய ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து அன்னை மாரியம்மனுக்கு சிறிய தகரத்தால் ஆன கோவில் கட்டி வழிபட்டனர். ஆங்கிலேயர்கள் இந்த கோவில் அருகே தந்தி கம்பத்தை நட்டனர். அன்று முதல் தந்தி மாரியம்மன் என்று அழைக்கப்பட்டார்.

    கோவில் புனரமைப்பு :

    இந்த கோவிலை புனரமைக்கும் பணியில் பல்வேறு சமூகத்தாரும் ஈடுபட்டனர். 1945-ம் ஆண்டு இந்த கோவிலின் சன்னிதிகள் இரும்பு கம்பிகளை கொண்டு விஸ்தரிக்கப்பட்டு அம்மனின் உற்சவ விக்கிரகம் வைக்கப்பட்டது. ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து 1966-ம் ஆண்டு தகரத்தால் ஆன கோவிலை மாற்றி விமானம் அமைத்து புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தினர்.

    அதன்பிறகு கோவில் முன்பு மண்டபம் அமைக்கப்பட்டன. கடந்த 1991-ம் ஆண்டு மீண்டும் கோவில் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 2008-ம் ஆண்டு தந்தி மாரியம்மன் சேவா சங்கம், குன்னூர் நகர மக்கள் சார்பில் சிற்ப சாஸ்திரப்படி கருவறை, அர்த்த மண்டபம், 3 நிலை விமானமும், மகா மண்டபமும் நிர்மானிக்கப்பட்டன.

    நின்ற திருக்கோலம் :


    இந்த திருத்தலத்தில் தந்தி மாரியம்மன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். அன்னைக்கு நான்கு திருக்கரங்கள். வலது இரு திருக்கரங்களில் சூலம், கத்தியையும், இடது இரு திருக்கரங்களில் அங்குசம், குங்கும சிமிழும் ஏந்தி இருக்கிறார். ஆயிரம் கண் உடையவள் என்று பக்தர்கள் போற்றும் அன்னையானவள் இங்கு தன்னை தரிசிப்பவர்களுக்கு பல்வேறு வரங்களை வழங்குகிறார்.

    இங்கு பூ உத்தரவு கேட்கின்றனர். வெள்ளை பூ வந்தால் காரியம் தாமதம் என்றும், சிவப்பு பூ வந்தால் காரியம் நிறைவேறும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். இங்குள்ள அர்ச்சகர்கள் முதலில் அர்த்த மண்டபத்தில் இருக்கும் அனுக்ஞை விநாயகரிடம் முதலில் அனுமதி பெற்ற பிறகே தந்தி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்கிறார்கள்.


    குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் தோற்றம்

    இந்த கோவிலில் ஏப்ரல் மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா 40 நாட்கள் நடைபெறும். அப்போது குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும். 28 அடி நீளம் 9 அடி அகல குண்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.

    இந்த கோவிலில் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தந்தி மாரியம்மனை தரிசிக்கலாம். தினமும் ஒரு கால பூஜை நடக்கிறது. வெள்ளிக்கிழமை மற்றும் திருவிழா நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

    திருஷ்டி கழிக்கும் வழிமுறை

    ‘கல்லடிப்பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்பார்கள். கண் திருஷ்டி பட்டாலே படமெடுத்து ஆடும் பாம்பு கூட செத்துவிடும் என்றும் கூறுவார்கள். ஆனால் நம் வளர்ச்சியை கண்டு பொறாமைப்படுபவர்கள். நமக்கு திருஷ்டி ஏற்பட்டு விட்டதாக கருதுபவர்கள் இந்த கோவிலுக்கு வந்து திருஷ்டி கழிக்கின்றனர். அவர்கள் முகத்துக்கு வேப்பிலை கொத்தை அர்ச்சகர்கள் வீசி மந்திரம் சொல்கிறார்கள். இப்படி கூறினால் திருஷ்டி கழிவதாக அவர்கள் நம்புகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருஷ்டி கழிப்பதற்காகவே கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

    கருவறையில் பலவகை மண்

    யானை தந்தத்தால் எடுக்கப்பட்ட மண், மசினகுடியில் இருந்து காளை கொம்பால் எடுக்கப்பட்ட மண், கேரள எல்லையில் இருந்து ஏர்க்கலப்பையால் எடுக்கப்பட்ட மண், பாட்டவயலில் இருந்து எடுக்கப்பட்ட மண், மாயாற்று பகுதியில் இருந்து நண்டின் இருப்பிட மண், பொக்காபுரத்தில் நாகபுற்று மண், மனித கால்சுவடு படாத ஆற்று மண் ஆகியவை எடுத்து வரப்பட்டு கருவறையின் பீடத்துக்குள் வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    அமைவிடம் :

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் வழியில் 35 கிலோ மீட்டர் தொலைவில் குன்னூர் உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது. ஊட்டி மலை ரெயிலிலும் குன்னூர் சென்று அடையலாம்.
    ×