என் மலர்tooltip icon

    கோவில்கள்

    தென் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்ட எல்லையான விளாத்திகுளம் நகரில் குளத்தங்கரை அருகில் அமைந்துள்ளது மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில்.
    தென் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்ட எல்லையான விளாத்திகுளம் நகரில் குளத்தங்கரை அருகில் அமைந்துள்ளது மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில். மிகவும் தொன்மை வாய்ந்த புராண சிறப்பு கொண்ட இந்த திருக்கோவிலில் அருள்பாலிக்கும் இறைவனின் பெயர் சொக்கலிங்க சுவாமி என்பதாகும். அம்பாளின் திருநாமம் மீனாட்சி அம்பாள். ஆலய தீர்த்தம் சிவகங்கை தீர்த்தம், தல விருட்சம் வில்வ மரம்.

    மீனைப்போலவே கண் இமை கொட்டாமல் உலகனைத்தையும் தனது கடாட்சத்தினால் காப்பாற்றி வருபவள் மீனாட்சி அன்னை. உலகனைத்துக்கும் அம்மையும், அப்பனுமாக உள்ளவர் ‘மீனாட்சி சுந்தரேசுவரர்’. இவ்விரு சிறப்புகளையும் ஒருங்கே பெற்று மீனாட்சி அம்மன் உடனுறை சந்தரேசுவரர் அமர்ந்து ஆட்சி செய்யும் திருத்தலம் விளாத்திகுளம் ஆகும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இக்கோவில் அமைந்து இருந்தாலும், விருதுநகர் மாவட்ட எல்லையையும், ராமநாதபுரம் மாவட்ட எல்லையையும் ஒட்டி ஆலயம் அமைந்துள்ளது. ஆதிகாலத்தில் திம்மராஜபுரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. விளாமரமும், அத்திமரமும் இணைந்து ஊருக்கு அருகில் உள்ள குளத்தின் கரையில் இருந்ததால் ‘விளா-அத்தி-குளம்’ என்பது மருவி, ‘விளாத்திகுளம்’ என பெயர் பெற்றது.

    இவ்வூரில் தேர்ந்த அந்தணர் ஒருவர் இருந்தார். அவர் வாரந்தோறும் கால்நடையாகவே மதுரை சென்று மீனாட்சி அம்மனையும், சொக்கநாத சுவாமியையும் தரிசித்து திரும்புவதை வழக்கமாக கொண்டு இருந்தார். நாளடைவில் ஏற்பட்ட தள்ளாத முதுமை காரணமாக அவரால் மதுரைக்குச் செல்ல இயலவில்லை. இருப்பினும், அன்னை மீது கொண்டு இருந்த தாளா பக்தியினால், அன்னையை காண முடியாத ஏக்கத்தில், அவரது இறையருளை பெற வேண்டி நடந்து செல்ல முடியாவிட்டாலும் தவழ்ந்து, தவழ்ந்தாவது மதுரைக்கு செல்வது என்று எத்தனித்தார்.

    பக்தனின் முடிவை அறிந்து மனமிரங்கிய அன்னை மீனாட்சி, ‘திம்மராஜபுரத்தில் விளாமரமும், அத்திமரமும் சேர்ந்த குளக்கரை அருகே தமக்கும், தனது இறைவனாருக்கும் ஆலயம் அமைக்க வேண்டியும், அந்த இடத்தில் அமர்ந்து தான் அருள்பாலிப்பதாகவும், அங்கே தன்னை காண வரலாம்’ என்றும் ஆணையிட்டார். அதன்படி சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த வயோதிக அந்தணரால் கட்டப்பட்டதே இந்தத் திருக்கோவில்.

    இக்கோவில் கட்டி முடித்து திருக்குட நன்னீராட்டு பெருவிழா (கும்பாபிஷேகம்) நடந்த தினத்தன்று அன்னை மீனாட்சியும், சுவாமி சொக்கநாதரும் வயோதிக அந்தணர் வேடத்தில் வந்து நிட்சேப நதியில் மூழ்கி, கருவறையில் நுழைந்து ஒளிப்பிழம்பாகி மறைந்தனர் என்று ஒரு செவி வழிச் செய்தி கூறப்படுகிறது.

    இந்தத் திருக்கோவிலின் முன் மண்டபம், கொடி மரம் மற்றும் மகாமண்டபம் முதலியன பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டவை ஆகும். அதற்கு அடையாளமாக மீன் சின்னம் காணப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் நடைபெறும் விழாவை போன்றே சித்திரை திருவிழா, கந்த சஷ்டி, நவராத்திரி, திருவாதிரை, விசாகம், மகாசிவராத்திரி திருவிழா ஆகியவை இக்கோவிலிலும் நடைபெற்று வருகிறது. மாதந்தோறும் பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, அஷ்டமி, திருவிளக்கு பூஜை ஆகியவை நடக்கிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    எட்டயபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், அருப்புக்கோட்டையில் இருந்து 46 கிலோமீட்டர் தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து 48 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. மதுரை- நெல்லை ரெயில் வழித்தடத்தில் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் இருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருத்தலம் இருக்கிறது.
    கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருக்கும் தம்பதியர்களைச் சேர்த்து, மகிழ்ச்சியாக வாழ வைக்கும் கேரள மாநிலம், பெருவனம் இரட்டையப்பன் கோவில்.
    கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருக்கும் தம்பதியர்களைச் சேர்த்து, மகிழ்ச்சியாக வாழ வைப்பதுடன், புதிய தொழில்களைத் தொடங்குவதற்கான நல்வழியைக் காட்டும் கோவிலாகவும் விளங்குகிறது கேரள மாநிலம், பெருவனம் இரட்டையப்பன் கோவில்.

    தல வரலாறு :

    பூரு முனிவர் அடர்ந்த வனப்பகுதியில் சிவபெருமானை நோக்கிக் கடுமையாகத் தவமிருந்து வந்தார். அவருடைய தவத்தில் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான், பார்வதி தேவியுடன் சேர்ந்து அர்த்தநாரீசுவரராக அவருக்குக் காட்சியளித்தார். அந்தக் காட்சியைக் கண்டு மகிழ்ச்சியடைந்த பூரு முனிவர், “தான் கண்ட தோற்றத்திலேயே இங்கு கோவில் கொள்ள வேண்டும்” என்று இறைவனிடம் வேண் டினார்.

    இறைவனும் அவருடைய வேண்டுதலை நிறைவேற்றிட அங்கு அர்த்தநாரீஸ்வரராகக் கோவில் கொள்வதாகச் சொல்லி, அவரிடம் லிங்கம் ஒன்றைக் கொடுத்து விட்டு மறைந்தார். பூரு முனிவர், இறைவன் கொடுத்த அந்த லிங்கத்தை நிலத்தில் நிறுவி வழிபடாமல், தன் கையிலேயே வைத்துக் கொள்வது என்று முடிவு செய்தார்.

    அந்த லிங்கத்தை அபிஷேகம் செய்து வழி படுவதற்காக, அங்கு நிலத்தில் தனது கை விரல்களால் மூன்று கோடுகளைப் போட்டு ஒரு குளத்தை உருவாக்கினார். அதனால், முனிவர் கைகளால் தொட்டுத் தோற்றுவித்த அந்தக் குளத்திற்குத் ‘தொடுகுளம்’ என்ற பெயரும் ஏற்பட்டது. அந்தக் குளத்தில் தண்ணீர் இல்லாத போது, பூரு முனிவர் போட்ட மூன்று கோடுகளைத் தற்போதும் காணமுடியும் என்கின்றனர்.

    இறைவன் கொடுத்துச் சென்ற லிங்கத்தை, எப்போதும் தன்னுடனேயே வைத்துக் கொண்டிருந்த முனிவர், அந்த லிங்கத்துக்குத் தினமும் தான் தோற்றுவித்த தொடுகுளத்திலிருந்து தண்ணீர் எடுத்து அபிஷேகம் செய்து வழிபட்டு கொண்டிருந்தார்.

    ஒரு நாள் அவர் குளிக்கச் சென்ற போது, அந்த லிங்கத்தை அங்கிருந்த ஆலமரம் ஒன்றின் மேல் வைத்து விட்டுச் சென்றார். அவர் திரும்ப வந்து, அந்த லிங்கத்தை எடுக்க முயற்சித்த போது, அந்த லிங்கம் அம்மரத்திலிருந்து எடுக்க முடியாமல் போனது. அதனால் வருத்தமடைந்த முனிவர், அந்த லிங்கத்தை அங்கேயே வைத்து வழிபட முடிவு செய்தார்.

    அதன் பின்னர், ஆலமரத்தில் இருந்த லிங்கத்தை வழிபடுவதற்காக அவர் கீழிருந்து 24 படிகளை அமைத்தார். தான் தோற்றுவித்த தொடுகுளத்திலிருந்து தண்ணீர் எடுத்து வந்து, அந்தப் படிகளில் ஏறிச் சென்று லிங்கத்திற்குத் தினமும் அபிேஷகம் செய்து வழிபட்டு வந்தார்.

    பூரு முனிவரால் நிறுவி வழிபாடு செய்யப்பட்ட இந்தக் கோவிலுடன், பூரு முனிவர் வேண்டுதலுக்கேற்ப, அவருக்குக் காட்சியளித்த அர்த்தநாரீசுவரர் தோற்றத்திலான கோவிலும் சேர்ந்து அமைந்திருக்கிறது. இக்கோவிலைப் பரசுராமர் நிறுவி வழிபட்டு வந்தார் என்று சொல்லப்படுகிறது. ஒரே கோவில் வளாகத்தில் இரண்டு சிவபெருமான் சன்னிதிகள் அமைந்து இருப்பதால், இக்கோவிலை இரட்டையப்பன் கோவில் என்றே அழைக்கின்றனர்.

    ஆலய அமைப்பு :

    மூன்றடுக்குக் கோபுரங்களைக் கொண்ட இக்கோவிலில் பூரு முனிவரால் நிறுவப்பட்ட சன்னிதியில் சிவபெருமான் மேற்கு நோக்கிய நிலையில் காட்சியளிக்கிறார். இவரைப் பூரு முனிவர் வழிபட்டது போன்று, நாமும் 24 படிகள் ஏறிச் சென்றுதான் வழிபட முடியும். இங்கிருக்கும் லிங்கம் உயரமான இடத்தில் இருப்பதால் இங்குள்ள சிவபெருமானை மாடத்திலப்பன் என்று அழைக்கின்றனர். மகாதேவர் என்று பொதுவாக அழைப்பதுமுண்டு.



    பரசுராமரால் நிறுவப்பட்ட, பூரு முனிவருக்குக் காட்சியளித்த அர்த்தநாரீசுவரர் சன்னிதியில் சிறிய லிங்கத்திற்குள் பார்வதி வடிவை அமைத்து, அந்த லிங்கத்தை இணைத்துக் கொண்ட பெரிய லிங்கம் வடிவில் இறைவன் மேற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். இந்தச் சன்னிதிக்குப் பின்புறம் பார்வதி தேவியும், அருகில் கணபதியும், தெற்குப் பகுதியில் தட்சிணாமூர்த்தியும் இருக்கின்றனர். கோவிலின் சுற்றுப்பகுதியில் கோசாலை கிருஷ்ணன் சன்னிதி ஒன்று இருக்கிறது.

    இக்கோவிலுக்குக் கிழக்கே குதிரான்மலா சாஸ்தா, மேற்கே எடத்திருத்தி சாஸ்தா, வடக்கே அகமாலா சாஸ்தா, தெற்கே வழுத்துக்காவு சாஸ்தா என நான்கு திசைகளிலும் நான்கு சாஸ்தாகள் காவல் தெய்வங்களாக இருக்கின்றன.

    வழிபாடு :

    இந்த ஆலயம் தினமும் அதிகாலை 5 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் தினசரி வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் தினமும் ஐந்து கால பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு, பிற சிவபெருமான் கோவில்களில் செய்யப்படும் சிவபெருமானுக்குரிய சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகின்றன.

    இக்கோவிலில் ‘பூரம் திருவிழா’ 1400 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப் பெற்று வருகிறது. கேரளாவின் பல கோவில்களில் நடைபெற்று வரும் ‘பூரம் திருவிழா’க்கள் இங்கிருந்தே சென்றிருக்கின்றன. கேரளாவில் மிகவும் புகழ் பெற்றதாக இருக்கும் ‘திருச்சூர் பூரம் திருவிழா’ 200 ஆண்டுகளாகத்தான் நடத்தப் பெற்று வருகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

    வழிபாட்டுப் பலன்கள் :

    திருமணத் தடையை அகற்றி, விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், குழந்தைப்பேறு வேண்டியும், கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருக்கும் தம்பதியினர் ஒன்றுபட்டுச் சேர்ந்து வாழ வேண்டியும் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் அதிகமாகச் செய்யப்படுகின்றன.

    புதிய தொழில்கள் தொடங்கவும், வணிகம் பெருகவும், கல்வி, வேலைகளில் பல்வேறு சிறப்புகளைப் பெற்றிடவும் இங்கு சங்காபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். வயதானவர்கள் வாழ்வு நீடிக்க வேண்டியும், அவர்களது வாழ்க்கை தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டியும் சிறப்பு வேள்வியை நடத்தி இங்குள்ள இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர்.

    அமைவிடம் :

    கேரளாவில் திருச்சூர் நகரிலிருந்து திருப்பிரையார் செல்லும் வழியில் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தாயம்குளங்கரா எனும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, தெற்கு திசையில் 100 மீட்டர் தூரம் சென்று பெருவனம் கோவிலை அடையலாம். திருச்சூரிலிருந்து இக்கோவிலுக்குச் செல்ல நகரப்பேருந்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
    சென்னை பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வேணுகோபால கண்ணன் ஆலயம்.
    சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து மேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவிலும், பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே ஒரு கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது பவளக்காரத் தெரு. இங்கு வேணுகோபால கண்ணன் ஆலயம் அமைந்துள்ளது.

    பவள வியாபாரி ஒருவர் கனவில் கண்ணன் தோன்றி கடற்கரை ஓரம் தனக்கொரு ஆலயம் அமைக்கும்படி உத்தரவிட்டார். அதன்படி அந்த வியாபாரி வடக்கு நோக்கி பயணம் மேற்கொண்டு வட மதுரைக் கண்ணனைக் கண்ணாறக் கண்டு, மனதைப் பறிகொடுத்தார். பின் அதே போன்று ஒரு சிலை வடித்து, யமுனை நீருடன் சென்னை வந்து, பவளக்காரத் தெருவில் வேணுகோபால கண்ணனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். பின்னாளில் நிறைய சன்னிதிகள் ஆலயத்தில் அமைக்கப்பட்டன.

    ஐந்து நிலை ராஜகோபுரம் சீகிருஷ்ணா என்ற வண்ணப் பலகையுடன் நம்மை இந்த தலத்திற்கு வரவேற்கிறது. ஆலய ராஜகோபுரம், விமானம் மற்றும் கட்டிட அமைப்பை பார்க்கையில் இத் திருத் தலம் மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதை நாம் அறியலாம். ராஜகோபுரம் கடந்து உள்ளே நுழைந்தால் தீபஸ்தம்பம், பலிபீடம் மற்றும் கொடி மரத்தைக் காணலாம். இவ்வாலய கொடிமரம் 1894-ம் ஆண்டில் நிறுவப்பட்டது.

    கர்ப்பக்கிரகத்தில் மூலவர் வேணுகோபால கண்ணன் தனிச் சன்னிதியில் நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். வலது, இடது கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், மற்ற இரு கரங்களில் புல்லாங்குழல் ஏந்தி இசைக்கும் கோலத்தில், வலது மற்றும் இடது பக்கங்களில் ருக்மணி மற்றும் சத்யபாமாவும், பின்புறம் பசுவுடனும் அருள்பாலிக்கின்றார்.

    உற்சவர் கண்ணன் சதுர்புஜங்களுடன், ருக்மணி- சத்யபாமா சமேதராய் காட்சி அளிக்கின்றார். மூலவர் சன்னிதிக்கு எதிரே பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருட பகவானின் சன்னிதி அமைந்துள்ளது. கருவறை விமானத்தில் திருமால் சயனம், லட்சுமி நரசிம்மர், ராமர் உருவங்கள் சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

    கர்ப்பக்கிரகத்தை விட்டு வெளியே வருகையில் வெளிப் பிரகாரத்தில் இரண்டு யானை சிலைகள் கம்பீரமாக அமைந்து தாயார் சன்னிதிக்கு வழி காட்டுகின்றன. மூலவர் ருக்மணித் தாயார், தனிச் சன்னிதியில் அமர்ந்த கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கிறார். மேல் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரையுடனும் காட்சி தருகிறார். மூலவருக்கு சற்று முன்பாக உற்சவர் தாயார் எழுந்தருளியுள்ளார். புன்னகையுடனும், சேவிப்போரின் குறைகளை தீர்ப்பவராகவும் தாயார் திகழ்கிறார். தாயார் சன்னிதிக்கு எதிரேயுள்ள மண்டபத்தில் தாயார் ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது. தாயார் கருவறை விமானத்தில் லட்சுமி திருவுருவங்கள் சுதைச் சிற்பமாக நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது.

    மூலவர் சன்னிதிக்கு இடது புறத்தில் தனிச்சன்னிதியில் சீனிவாசர் நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். இவருக்கு முன்னால் சீதேவி, பூதேவி சமேதராய் சீனிவாசர் உற்சவராக அழகிய வனப்புடன் புன்முறுவல் பூத்த முகத்துடன் காட்சி தருகிறார்.



    சீனிவாசர் சன்னிதிக்கு அடுத்த சன்னிதியில் மூலவர் மற்றும் உற்சவராக ஆண்டாள் கைகளில் சவுகந்தி மலர் ஏந்தி சவுந்தர்யமாய் அருள்பாலிக்கின்றார். ஆண்டாள் சன்னிதியை அடுத்துள்ள சன்னிதியில் மூலவர் மற்றும் உற்சவராக சீராமர், சீதை, லட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோர் சேவை அருளுகின்றனர். பெருமாள் சன்னிதிக்கும், தாயார் சன்னிதிக்கும் நடுவே அமைந்துள்ள மண்டபத்தில் தனிச்சன்னிதியில் முன்புறம் சக்கரத்தாழ்வாரும் பின்புறம் யோக நரசிம்மரும் காட்சியளிக்கின்றனர்.

    பெருமாள் சன்னிதிக்கு வலது புறமுள்ள சன்னிதியில் திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார் எழுந்தருளியுள்ளார்கள். பெருமாள் இடதுபுறமுள்ள சன்னிதியில் சீராமானுஜர், மணவாளமாமுனிகள் எழுந்தருளியுள்ளனர். தாயார் சன்னிதியை ஒட்டியுள்ள மண்டபத்தில் விஷ்வக்சேநர், நாதமுனிகள், திருக்கச்சி நம்பிகள், கூரத்தாழ்வார் சன்னிதிகள் அமையப் பெற்றுள்ளன.

    திருமணம் கைகூட வெற்றிலை, பாக்கு, மாலை, பழங்களுடன் ஜாதகத்தையும் வைத்து பெருமாள் சன்னிதியில் அர்ச்சனை செய்து மனமுருக வேண்டி வழிபடுகின்றனர். இந்த பிரார்த்தனை மூலம் விரைவில் திருமணம் கைகூடுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    எதிரிகளின் தொல்லை, பயம் நீங்க, காரிய சித்தி ஏற்பட சக்கரத்தாழ்வார் மற்றும் யோக நரசிம்மரை வழிபடுகின்றனர்.

    வைகானஸ ஆகம முறைப்படி ஆறு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும். ஆலய தீர்த்தம் கிருஷ்ண புஷ்கரணி. ஆலய விருட்சம் பின்ன மரம்.

    வருடம் முழுவதும் உற்சவம் :

    இந்த ஆலயத்தில் சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆடி மாதம் ஆடிப்பூரம், ஆண்டாள் உற்சவம், வெள்ளி தோறும் தாயாருக்கு உற்சவம், ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி மாதம் சனிக்கிழமை சீனிவாசர் கருட சேவை, நவராத்திரி, விஜய தசமியன்று பரிவேட்டை, பவித்ர உற்சவம், ஐப்பசி மாதம் தீபாவளி, அன்னக்கூட திருப்பாவாடை உற்சவம், கார்த்திகை மாதம் தீப உற்சவம், மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி, மார்கழி மாத உற்சவம், தை மாதம் ரத சப்தமி, தை அமாவாசை, மாசி மாதம் மகம் உற்சவம், பங்குனி மாதம் உத்திரத்தில் திருக்கல்யாண உற்சவம் என ஆண்டு முழுவதும் விழாக்கள் விமரிசையாக நடைபெறுகின்றன.

    இவை தவிர அனுமன் ஜெயந்தி உற்சவம், மாத பிறப்பு, ஏகாதசி, அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் பெருமாள் புறப்பாடும், வெள்ளிக்கிழமைகளில் தாயார் புறப்பாடும், ஆழ்வார் ஆச்சாரியர்கள் வருட திருநட்சத்திர சாற்றுமுறைகளும் விமரிசையாக நடைபெறுகிறது. பகல் பத்து, இராப்பத்து உற்சவ நாட்களில் உற்சவருக்கு கிருஷ்ண லீலை காட்சிகளை அலங்காரமாக செய்கின்றனர். 
    நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் உள்ளது அன்னமலை தண்டாயுதபாணி கோவில். இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    அமைதியைத் தேடி பலர் இமயமலைக்கு செல்வார்கள். ஆனால் நம் தமிழ்நாட்டிலேயே அதற்கு இணையான ஒரு புனிதமான இடம் உள்ளது. அதுதான் நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் உள்ள அன்னமலை தண்டாயுதபாணி கோவில். மஞ்சூர் கீழ்குந்தாவை அடுத்துள்ள அன்னமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் வழியில், நம்மை வரவேற்கும் வகையில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    விநாயகர் தரிசனம் :

    கோவிலுக்குச் செல்வதற்கு முன்பாக இடதுபுறம் உள்ள விநாயகரை தரிசிக்க வேண்டும். விநாயகரை வணங்கி விட்டு சென்றால் வலதுபுறம் அன்னதானக் கூடம் உள்ளது. இதற்கு அடுத்து வலது புறம் சென்றால் தண்டாயுதபாணியை தரிசனம் செய்யலாம். கருவறையில் முருகப்பெருமான் கையில் தண்டம் ஏந்தி காட்சி அளிக்கிறார். இந்த ஆலயத்தில் உள்ள சிவன் குகை, இங்கு வரும் பக்தர்களை கவரும் வகையில் உள்ளது. இது தவிர நாகராஜர் சன்னிதி, நவக்கிரகங்கள் போன்றவற்றையும் தரிசிக்கலாம்.

    நாகராஜர் சன்னிதி அருகில் காட்சி முனை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து பார்த்தால் சிவன்குகை மற்றும் மலையை வந்து முத்தமிட்டு செல்லும் மேகக் கூட்டங்களை கண்டு ரசிக்கலாம்.

    அன்னமலை முருகன் கோவிலின் வரலாற்றை பற்றி பார்க்கலாம்..

    சிவன் குகை :

    கடந்த 1936-ம் ஆண்டு கீழ்குந்தாவில் உள்ள ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் 8-வதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கிருஷ்ணன் என்று பெயர் சூட்டினார்கள். கிருஷ்ணன் சிறு வயது முதலே முருகனின் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தான். திடீரென்று ஒரு நாள் சிறுவன் கிருஷ்ணனைக் காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடினார்கள். அப்போது அவன் கடவுளைத் தேடி அங்குள்ள சிவன் குகைக்குள் இருந்தான். அங்கேயே 3 ஆண்டுகள் முருகனின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தான்.



    ஒரு நாள் அவனுக்கு முருகப்பெருமானின் தரிசனம் கிடைத்தது. அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘நான் இங்கே தான் இருக்கிறேன். பல ஆண்டு களுக்கு முன்னால் வேள்விகளும், அன்னதானமும் நடைபெற்ற புனிதமான இடம் இது. இங்கு மீண்டும் அன்னதானம் தொடர வேண்டும். நான் இங்கேயே கோவில் கொள்ள விரும்புகிறேன்.

    அதற்கான வேலையை நீ தொடங்குவாயாக’ என்று கூறி விட்டு மறைந்தார். ஆனால் ஏழையான கிருஷ்ணனால் எப்படி கோவில் கட்ட முடியும். அதே நேரத்தில் முருகனின் கட்டளையை நிறைவேற்ற கிருஷ்ணன் கற்களை சேகரித்து வந்து, மலை உச்சியில் அடுக்கிக்கொண்டிருந்தான். இதைப் பார்த்த ஊர்மக்கள் விஷயம் கேள்விப்பட்டு, அவனுடன் இணைந்தனர். இதன் பலனாக அங்கு 1975-ம் ஆண்டு கோவில் கட்டி முடிக்கப்பட்டது.

    இன்று அழகாக காட்சி அளிக்கிறது அன்னமலை தண்டாயுதபாணி கோவில். முருகப்பெருமான் எப்படி கிருஷ்ணனுக்கு காட்சி அளித்தாரோ, அதே கோலத்தில் பழனி தண்டாயுதபாணியாக குடிகொண்டிருக்கிறார். இந்தக் கோவிலில் அன்னதானம் செய்தால் வேண்டுதலை முருகன் நிறைவேற்றுவதாக ஐதீகம் உள்ளது.

    அன்னமலை முருகன் கோவிலில் எப்போது சென்றாலும் முருகனை தரிசிக்கலாம். கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்றைய தினம் பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    அமைவிடம் :

    கோவையில் இருந்து 82 கிலோமீட்டர் தூரத்திலும், ஊட்டியில் இருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் அன்னமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. ஊட்டி, குன்னூரில் இருந்து மஞ்சூர் குந்தாவுக்கு 30 நிமிடங்களுக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. மேலும் கோவையில் இருந்து காரமடை, வெள்ளியங்காடு வழியாக அன்னமலைக்கு தினமும் காலை, மாலையில் பஸ் வசதி உண்டு.
    உஜ்ஜைனில் அமைந்துள்ள மங்களநாதர் சிவாலயம், செவ்வாய் அவதரித்த தலமாகும். இன்று இந்த கோவில் வரலாற்றை விரிவாக பார்க்கலாம்.
    நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய் மங்களகரமான வாழ்வை அருள்பவர். தைரியம், வலிமை, பெருந்தன்மை, கண்டிப்பு, வைராக்கியம், பகைவரை எதிர்க்கும் ஆற்றல் ஆகியவற்றை கொடுப்பவரும் இவரே. செவ்வாய்க்கு ‘குஜன்’ என்ற பெயரும் உண்டு. ‘கு’ என்றால் பூமி. ஜன் என்றால் பிறந்தவன் எனப்பொருள். இவரை பூமாதேவியின் மகன் என்பார்கள். மங்களன், அங்காரகன் என்பது இவரது வேறு பெயர்களாகும்.

    மத்திய பிரதேசத்தின் தலைநகரான உஜ்ஜைனில் அமைந்துள்ள மங்களநாதர் சிவாலயம், செவ்வாய் அவதரித்த தலமாகும். இதனால் இது அங்காரக ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய் தலமாக கருதப்படுகிறது. நாட்டின் பல இடங்களில் செவ்வாய்க்கு கோவில்கள் இருந்தாலும், செவ்வாய் பிறந்த தலமாக உஜ்ஜைனி மங்களநாதர் கோவில் உள்ளதால், இங்குள்ள வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    செவ்வாய் பகவான், செந்நிற மேனி, புன்னகை பூத்த முகம், நான்கு கைகள், கதை, சக்தி ஆயுதம், சூலம் ஏந்தி வரத முத்திரையுடன் விளங்குபவர். பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இந்த ஆலயத்தில் செவ்வாய் பகவான், மங்களநாதர் என்ற பெயரில் சிவலிங்க திருமேனியாக காட்சியளிக்கிறார். பொதுவாக சிவன் கோவில்களில் மூலவருக்கு எதிரில் நந்தி சிலை இருக்கும். ஆனால் இங்கு மங்களநாதர் கருவறையின் முன்பு செவ்வாய் பகவானின் வாகனமாக கருதப்படும் ஆடு உருவம் வைக்கப்பட்டுள்ளது.

    ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் 4,7,8,12 இடங்களில் செவ்வாய் இருந்தால், அது தோஷமாக கருதப்படுகிறது. இதனால் அந்த ஜாதகருக்கு திருமண தடைஏற்படும்; விபத்து நேரிடும், அடிக்கடி காயம் ஏற்படும் என்கிறது ஜோதிட பலன். இந்த தோஷ நிவர்த்திக்காக மக்கள் செவ்வாய் தலத்திற்குச் சென்று, செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து பரிகார பூஜைகள் செய்கின்றனர்.

    உஜ்ஜைனி மங்களநாதர் கோவில் 5 அடி உயர கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. மங்களநாதர் கோவில் கருவறை, பூமத்தியரேகையின் நேர்க்கோட்டில் அமைந்துள்ளது. திருமணத்தடை ஏற்படுபவர்கள், செவ்வாய்க் கிழமைகளில் விரதம் இருந்து அங்காரனுக்கு சிவப்பு ஆடை சாத்தி, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து, துவரம் பருப்பு பொடி கலந்த அன்னத்தை நிவேதனம் செய்து, பிறகு அதனை தானம் செய்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் கைகளால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாம். அர்ச்சனை அபிஷேக பொருட்களை வெளியில் விற்கும் கடையில் வாங்கும் பக்தர்கள், பூசாரி மந்திரம் சொல்ல தாங்களாகவே சாமிக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.



    செவ்வாய் அவதார வரலாறு :

    முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்ற அரக்கன், சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தான். அவன் தவம் இருந்த இடம் உஜ்ஜைனி. அவனது தவத்தை கண்டு மகிழ்ந்த பரமேசுவரன் தோன்றினார். ஈசனை தரிசித்த அந்தகாசுரன், ‘இறைவா! உமது தரிசனம் கண்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன். எனது ரத்தம் தரையில் விழுந்தால் அதில் இருந்து என்னைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் பிறக்க வேண்டும். எனது உள்ளம் மகிழும்படியாக இந்த வரத்தை எனக்கு வழங்கி அருளவேண்டும்’ என்று வேண்டினான். பக்தர்கள் வேண்டியதை வாரி வழங்குவதே இறைவனின் முதல் கடமை என்பதால், அசுரன் கேட்ட வரத்தை அப்படியே வழங்கினார் சிவபெருமான்.

    வரம் பெற்ற அரக்கனுக்கு ஆணவம் தலை தூக்கியது. மமதையில் தன் நிலை மறந்து உஜ்ஜைனி நகரில் இருந்த முனிவர்கள், ரிஷிகள், மக்கள் என பேதம் பார்க்காமல், அனைவருக்கும் துன்பம் விளைவித்தான். அவனது செய்கையால் நிலைகுலைந்து போன முனிவர்கள், சிவபெருமானை நோக்கி வழிபாடு நடத்தினர். பக்தர்களின் துயர் களைய பரமேஸ்வரன் முன் வந்தார். அதன்படி அந்தகாசுரனுடன் போரிட முடிவுசெய்தார்.

    ஒருநாள் இரவு அவர் சூலாயுதத்துடன் அந்தகாசுரன் முன் தோன்றினார். வந்திருப்பது பரம்பொருள் என்று அறியாத அசுரன், சிவனை எதிர்த்துத் தாக்கினான். இரு வருக்கும் இடையே வானத்தில் கடுமையான போர் நடந்தது. இந்த யுத்தம் பல ஆண்டுகள் நீடித்தது. போர் முடிவடையும் நேரத்தில் சிவபெருமானின் உடலில் இருந்து வியர்வையின் சொட்டுகள் நிலத்தில் விழுந்தன.

    அது நிலத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, செவ்வாய் கிரகம் பிறந்தது. அரக்கன் அந்தகாசுரனின் உடலில் இருந்து விழுந்த ரத்தத் துளிகளை செவ்வாய் கிரகம் உள்வாங்கி அதை பூமியில் விழாமல் தடுத்தது. இதைத் தொடர்ந்து சிவபெருமான் அந்தகாசுரனை சூலாயுதத்தால் அழித்தார். தேவர்களும், முனிவர்களும் ஆனந்தம் அடைந்தனர். இந்த வரலாறு கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. அரக்கனின் ரத்தத்தை செவ்வாய்க்கிரகம் உள்வாங்கி கொண்டதால் அது சிவப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.



    மங்களநாதர் கோவிலில் மார்ச் மாதம் அங்காரக சதுர்த்தியன்று சிறப்பு பூஜையும், சிறப்பு யாகங்களும் நடைபெறும். அப்போது நடைபெறும் ‘பட்’ பூஜா மிகவும் பிரசித்தமானது. சதுர்த்தி, சப்தமி, அஷ்டமி, துவாதசி திதிகளிலும், செவ்வாய்க்கிழமைகளிலும் இந்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

    அன்னாபிஷேகம் :

    கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கும், உற்சவமூர்த்திக்கும் பக்தர்கள் தயிரால் அபிஷேகம் செய்து அன்னாபிஷேகம் செய்கின்றனர். பிறகு அந்த அன்ன பிரசாதத்தை பக்தர்களுக்கு வினியோகம் செய்கின்றனர். தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற அந்த வேண்டுதலை செய்கின்றனர்.     
    மங்களநாதர் சன்னிதி

    உஜ்ஜைனி மங்களநாதர் கோவில் தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். பின்னர் கற்பூர ஆரத்தி காட்டும்போது ஏராளமான கிளிகள் கூட்டமாக வந்து கோவில் வளாகத்தில் வந்து காத்திருக்கும். அந்தக் கிளிகளுக்கு, கோவில் அர்ச்சகர் பிரசாதத்தைக் கொடுக்கிறார். தரிசனத்திற்காக வரும் பக்தர் களும், கிளிகளுக்கு தானியங்களை காணிக்கையாக வழங்குகிறார்கள். அவற்றை கிளிகள் சாப்பிடுகின்றன. மங்களநாதரே கிளிவடிவில் வந்து பிரசாதம் பெற்றுக் கொண்டு, பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதாக நம்பிக்கை நிலவுகிறது.

    உஜ்ஜைனி ரெயில் நிலையத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிப்ரா நதிக்கரையில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.
    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ளது அருள்மிகு கோதண்டராமேஸ்வரர் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ளது, அருள்மிகு கோதண்டராமேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனின் பெயர் கோதண்டராமேஸ்வரர். இறைவியின் பெயர் அகிலாண்டேசுவரி. கோவிலின் தல விருட்சம் வில்வ மரம். கயத்தாறு ராமர் தீர்த்தம், கோடி தீர்த்தம் ஆகியவை தல தீர்த்தங்களாக உள்ளன.

    ராமபிரான் சீதாதேவியோடும், தம்பி லட்சுமணனோடும் வனவாசம் புரிந்தபோது, இந்த இடத்திற்கு வருகை புரிந்துள்ளார். அதற்கு ஆதாரமாக அவரது இரு பாதங்களும் பாறையின் மேல் பதிந்துள்ளன. அதன் நினைவாகவே இந்தத் திருக்கோவில் எழுப்பப்பட்டு உள்ளது.

    ‘பூமி வெங்கானம் நண்ணி
    புண்ணிய தீர்த்தமாடி
    ஏழிரண்டாண்டில் வா’

    என அன்னை வழியாய், தந்தை சொல் ஏற்ற ராமபிரான், சீதா தேவியோடும், தம்பி லட்சுமணனோடும் வனம் புகுந்தார். அந்த காலத்தில் காடாக இருந்த இந்தத் திருக்கோவில் அமைந்து உள்ள இடத்தின் அருகே வந்தபோது, சீதா தேவிக்கு தாகம் ஏற்பட்டது. தன் மனைவியின் தாகம் தீர்ப்பதற்காக, தான் வைத்திருந்த கோதண்டத்தால், தரையில் அம்பை எய்தார், ராமபிரான். அம்பு நிலத்தைக் கீறியதில் உள்ளிருந்து ஊற்று ஒன்று பெருகி வந்து ஆறாக ஓடத் தொடங்கியது. அந்த ஆறு ‘கசந்த ஆறு’ என்று அழைக்கப்பட்டது. அதுவே அந்த ஊரின் பெயராகவும் ஆனது. அதுவே காலப்போக் கில் மருவி ‘கயத்தாறு’ என்றானதாக கூறப்படுகிறது.

    ஊற்று ஏற்படுத்த கோதண்டத்தை ராமபிரான் வளைத்த போது, ஸ்ரீராமருடைய பாதங்கள் அழுந்திய பாறை யில் அவருடைய இரு பாதங்கள் பதிந்து இருப்பதாக தல புராணம் சொல்கிறது. அந்தப் பாறையில் உள்ள ராமர் பாதத்தை இன்றும், பக்தர்கள் பக்தி சிரத்தையுடன் வழிபாடு செய்து வருகிறார்கள்.

    பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள், இந்த ஆலயத்தின் உள்ள அம்மன் சன்னிதிக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. இக்கோவிலின் தென்கிழக்கு மூலையில் இருந்த வைணவக் கோவில், காலத்தின் கோலத்தால் அழிந்துபோனது. அந்தப் பெருமாள் கோவிலின் உற்சவ விக்கிரகங்களும், கல் விக்கிரகங்களும் இந்த ஆலயத்தில் காணக்கிடைக்கின்றன. வசைகவி புலவன் ஆண்டான் கவிராயர், ‘பாழை மணங்கமழும் கயத்தாற்றுப் பதியே’ என பாடி, ‘என்னாளும் உன்கோவில் நாசம்தானே’ என்று பாடியிருப்பது, ஆலயம் சிதையுண்டு போனதற்கு சான்று பகிர்வதுபோல் இருக்கிறது.

    கோதண்டராமேஸ்வரர் ஆலயத்தின் முன்பு உள்ள சிற்றாறு, எத்தகைய வறட்சி யான காலகட்டத்திலும் வற்றாத ஊற்றாக பெருகி ஓடுகிறது. ராமர் பாதம் உள்ள பாறையில் இருந்து ஊற்று நீர் ஓடி வருவது தனிச்சிறப்பாகும். இந்த ஆறு வடக்கில் இருந்து தெற்காக ஓடுவது மற்றொரு தனிச்சிறப்பு.

    ஆலய கருவறையில் சுவாமி கோதண்டரா மேஸ்வரர், லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். ராமபிரான் பூஜை செய்த இறைவன் இவர் என்று சொல்லப்படுகிறது. மூலவரை தரிசித்து வேண்டும் வரம் பெற்று திரும்பும்போது, மகாமண்டபத்தின் இடதுபுற சுவற்றில் கல் திறவு கொண்ட சுரங்கம் உள்ளது. அதில் நான்கு கற்கள் இருக்கிறது. அதை நகர்த்தினால் உள்ள ஒரு அறை (நிலவறை) தெரிகிறது. இந்தச் சுரங்க அறையில்தான் முன்பு இத்திருக்கோவில் உற்சவ விக்கிரகமும், திருவாபரணங்களும் பாதுகாக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கின்றனர்.

    நாள்தோறும் இந்தக் கோவிலில் நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. தினசரி காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். ஐப்பசி விசு திருநாளும், பங்குனி மாதம் நடைபெறும் தேரோட்ட திருவிழாவும் இங்கு நடைபெற்று வரும் முக்கிய திருவிழாக்களாகும்.

    திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ் சாலையில், திருநெல்வேலியில் இருந்து 57 கிலோமீட்டர் தொலைவிலும், கோவில்பட்டி நகரின் மத்தியிலும் இக்கோவில் அமைந் துள்ளது.
    பல்வேறு சிறப்புகளைப் பெற்று விளங்குகிறது இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள, மாவிட்டபுரம் கந்தசாமித் திருக்கோவில்.
    இலங்கை நாட்டின் புகழ் பெற்ற பழம் பெரும் கந்தன் ஆலயம், நகுல முனிவருக்கு கீரியின் முகம் நீக்கியருளிய தீர்த்தம் இருக்கும் கோவில், சோழர், பாண்டியர் என பல்வேறு மன்னர்களும் போற்றி வழிபட்ட கோவில் என பல்வேறு சிறப்புகளைப் பெற்று விளங்குகிறது இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள, மாவிட்டபுரம் கந்த சாமித் திருக்கோவில்.

    மாவிட்டபுரம் என்பதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. மா + விட்ட + புரம் என பிரித்து பொருள் கொண்டால், மா மரவடிவிலான அசுரனை, சம்ஹாரம் செய்து, அவ்வடிவம் நீங்கிய தலம் என்று பொருள் கொள்ளலாம். மற்றொன்று, மாருதப்புரவீகவல்லியின் மா- குதிரை/பெருநோய், விட்ட- நீங்கிய, புரம்- தலம் என்பதால், மாவிட்டபுரமானதாக, மற்றொரு காரணம் கூறப்படுகிறது.

    தலபுராணம் :

    சோழமன்னனின் மகளாகப் பிறந்தவள், மாருதப்புரவீகவல்லி. பேரழகு மிகுந்த இவளை சீராட்டி, பாராட்டி வளர்த்தனர். ஆனால், முற் பிறவியில் அயக்கிரீவ முனிவரின் சாபத்தால் குன்மநோயும், குதிரை முகமும் தோன்றி இளவரசியை வாட்டியது. இக்குறை தீர சோழ, பாண்டிய சேரநாட்டு திருத்தலங்கள் பலவற்றிலும் நீராடி இறைவனை வழிபட்டுவந்தாள்.

    தல யாத்திரையின்போது பேரூர் ஆதீன முதல்வரான சாந்தலிங்க முனிவரைத் தரிசனம் செய்தாள். முனிவர் அவளிடம், இலங்கை நாட்டில் அமைந்துள்ள நகுலேச்சரம் என்ற தலத் தீர்த்தமான கண்டகித் தீர்த்தத்தில் நீராடினால் சாபம் முழுவதும் நீங்கும் என்றார். (அன்னை பார்வதி நீராடி மகிழ, சிவ பெருமானால் உருவாக்கப்பட்ட தீர்த்தமாகும் இது. இந்து மகாக் கடலில் இது அமைந்துள்ளது).

    அதன்படியே கதிர்காமம் தீர்த்தம் முடித்து, நகுலேச்சரம் வந்து நகுலமுனிவரைச் சந்தித்தாள். எனக்கு ஏற்பட்ட கீரிமுகம், இத்தலத்து நீராடிய பிறகே நல்லமுகம் கிடைத்தது. அதேபோல் நளன், அர்ச்சுனன் முதலானோர் நலம் பெற்றதைக் கூறி, இத்தலத்து தீர்த்தத்தில் நீராடி வழிபட நகுலமுனிவர் அறிவுரை கூறினார். அதன்படியே நீராடி, கந்தனை வணங்கி வழிபட்டு வந்த அவளுக்கு, நோய் நீங்கி, இயல்பான அழகு முகம் கிடைத்தது. இச்செய்தி நாடெங்கும் பரவியது. அது முதல் இத்தலம் துரகானன விமோசனபுரி என்று வடமொழியிலும், மாவிட்டபுரம் என தமிழிலும் அழைக்கப்பட்டது.

    தன் மகளின் நோய் தீர்த்த இறைவனுக்குக் கோவில் கட்ட மன்னன் முயற்சி செய்தான். அதன்படியே மிகப் பெரிய ஆலயம் எழுப்பப்பட்டு வந்தது. எம்பெருமானால் திருவுள்ளப்படி தில்லை மூவாயரவருள் ஒருவரான பெரிய மனத்துளார் என்பவரை இலங்கைக்கு அனுப்பி வைத்தனர். இந்தியாவில் இருந்து கந்தசாமியின் விக்கிரகம், இலங்கை துறைமுகம் வந்து இறங்கியது. இதுவே காங்கேயன் துறைமுகம் என தற்போது அழைக்கப்படு கிறது.

    இத்தலத்தில் மாருதப்புரவீகவல்லி மீது காதல் கொண்ட உக்கிரசிங்கசேனன், இளவரசியின் தந்தையிடம் அனுமதி பெற்று, கோவில் திருப்பணி முடிந்த பிறகு, மணம் புரிய சம்மதித்தான். அதன்படி, மாவிட்டபுரம் கந்தன் ஆலயம் வெகு நேர்த்தியாக கட்டி முடிக்கப்பட்டு, குடமுழுக்கு சிறப்பாக நடத்தி, ஆலய நிர்வாகத்தை தீட்சிதரிடம் ஒப்படைத்தனர். ஆலய நிர்வாகத் தீட்சிதர் பரம்பரை, குறைவின்றி நிர்வாகம் செய்து வந்தது. இளவரசி மாருதப்புரவீகவல்லி, உக்கிரசிங்கசேனனின் பட்டத்தரசியானாள்.

    இதன் பிறகு, போர்ச்சுகீசியர்களுக்கும், பகைமை கொண்ட நாட்டு மக்கள் சிலராலும், உள்நாட்டு யுத்தம் காரணமாகவும் பல்வேறு இன்னல்களை அனுபவித்தது இவ்வாலயம்.

    1996-ல் இவ்வாலயத்தின் புனரமைப்பு பணி மீண்டும் தொடங்கியது. 2011 -லிருந்து மக்கள் வழிபடத் தொடங்கினர். திருப்பணி இன்னமும் நடைபெற்று வருகிறது. மக்களும் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.

    ஆலய அமைப்பு :

    ஆலயம் நான்கு திசைகளிலும் வாயில்களைக் கொண்டிருந்தாலும், கிழக்கு, மேற்கு, தெற்கு வாசல்கள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளன. மேற்கு வாசலில் 80 அடி உயர ராஜகோபுரம் கலைநயத்துடன் விண்ணை முட்டி நிற்கின்றது. அருகே வேட்டை மண்டபம் அமைந்துள்ளது. நான்கு மாடவீதிகள் விளங்க, மூன்று பிரகாரங்களுடன் ஆலயம் அமைந்துள்ளது.

    ஆலயம், வில்லு மண்டபம், தட்டி மண்டபம், ராஜகோபுரம், வசந்த மண்டபம், துவார கோபுரம், ஸ்தம்ப மண்டபம், ஸ்நபன மண்டபம், மகா மண்டபம் அந்தராள மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகியவையும் முறைப்படி கட்டப்பட்டுள்ளன. இளவரசியின் குதிரைமுகம் மற்றும் அழகு முகம் கொண்ட சிலைகள், சிற்பங்கள் நிறைந்த ஸ்நபன மண்டபத்தில் அமைந்துள்ளது.

    ஆலயத்தில், விநாயகர், சந்தானகோபாலர், மகாலட்சுமி, சிதம்பரேஸ்வரி சமேத சிதம்பரேஸ்வரர், தண்டாயுதபாணி, வைரவர், நவக்கிரங் கள், நாகராஜர், சண்முகர், முத்துக்குமார சுவாமி, சுப்பிரமணியர், சந்திரசேகரர், மாயூரர், ஆகியவை ஒருங்கே அமைந்துள்ளன.

    இவற்றிற்கெல்லாம் நடுநாயகமாக மாவைக்கந்தன் வள்ளி தெய்வானை சமேத கந்தசாமியாக நின்ற கோலத்தில் அருள் வழங்குகின்றார். இவர்களின் பின்புறம் காவலாக, மயில் அழகுற காட்சி தருகின்றது. இந்த வடிவம் சோழர் காலத்தைச் சார்ந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    இவ்வாலயத்தில் மாருதப்புரவீகவல்லி வழிபட்ட செம்புவேல், சிவலிங்கம், தான் தோன்றி விநாயகர் மூன்றுமே இன்றும் காட்சி தருகின்றன. முதல் மரியாதை இவர்களுக்கு செய்த பிறகே பிற தெய்வங்களுக்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன.



    விழாக்கள் :


    ஆடி அமாவாசையில் கண்டகி தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது இத்தலத்தின் தனிச்சிறப்பு. தைப்பூசம் லட்சார்ச்சனை, ஆனி, ஆடியில் 25 நாட்கள் பிரமோற்சவம், அலங்காரத் திருவிழாவாக நடைபெறுகிறது. இவ்விழாவில் இலங்கையின் அனைத்துப் பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. இது தவிர, ஐப்பசி சுக்ர வாரம், நவராத்திரி, கந்தசஷ்டிவிழா, கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவாரம், மார்கழி திருவெம்பாவை என விழாக்கள் குறைவின்றி நடைபெறுகின்றன.

    இவ்வாலயம் மாவை ஆதீனம் வாயிலாக சிறப்புடன் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கி.பி. 789-ம் ஆண்டில் பெரியமனத்துளார் என்ற தீட்சிதரால் தொடங்கப்பட்ட ஆலயம். இன்று 39-வது ஆதீனமாக ரத்தினசபாபதி குருக்கள் நிர்வாகம் செய்துவருகிறார்.

    ஆறுகால பூஜை நடைபெறும் இவ்வாலயத்தை, காலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் தொடர்ச்சியாக தரிசனம் செய்யலாம். பூஜைகள்அனத்தும் குமார தந்திரப்படி மேற்கொள்ளப்படுகிறது.

    தலமரம் :

    காஞ்சீபுரத்தில் இருந்து கொண்டு வந்த மாமரமே, தலமரமாகும். தலத் தீர்த்தம் கண்டகித் தீர்த்தம் என்னும் இந்து மகா சமுத்திரம் ஆகும். இது சிவபெருமானால், பார்வதியின் குளியலுக்காக உருவாக்கப்பட்ட புண்ணிய தீர்த்தமாகும். இது யுகங்களைக் கடந்து, கலியுகத்திலும் தன் அருளையும், சக்தியையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இத்தீர்த்தத்தில் நீராடிய பிறகே, மாருதப்புரவீகவல்லியின் நோயும், குதிரை முகமும் குணம் பெற்றது.

    பரிகாரத் தலம் :


    மாவைக் கந்தன் எவ்விதவேண்டுதலையும் நிறைவேற்றித் தரும் வள்ளலாக விளங்குகின்றான். வேண்டுதலுடன் வருபவர், கண்டகி தீர்த்தத்தில் நீராடி, நகுலேசுவரரை வழிபட்டு, மாவைக் கந்தனிடம் வந்து மனமுருகி பிரார்த்திக்க வேண்டும். வேண்டுதலை ஓராண்டுக்குள் நிறைவேற்றித் தருவது, மாவைக் கந்தனின் வழக்கம் என்பது, பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக அமைந்துள்ளது.

    அமைவிடம் :

    இவ்வாலயம், இலங்கை நாட்டின் வட பகுதியான யாழ்ப்பாணம் மாவட்டத்தில், தெல்லிப்பழை வட்டத்தில், காங்கேசன் துறைமுகத்தில் இருந்து தெற்கே 5 கி.மீ., யாழ்ப்பாணத்திற்கு வடக்கே 17 கி.மீ., தொலைவில், மாவிட்டபுரம் திருத்தலம் அமைந்துள்ளது. பலாலி விமான தளம் மேற்கே 2 கி.மீ. தொலைவிலும், அமைந்துள்ளது. மாவிட்டபுரத்திற்கு பேருந்து, ரெயில் வசதிகள் உள்ளன.

    பல்வேறு பெருமைகள் கொண்ட மாவைக் கந்தன் திருக்கோவில் திருப்பணிகள், யுத்த சூழலுக்குப் பின்பு, நிதானமாக நடந்தேறி வருகிறது. கந்தன் அடியார்கள்ஆதரவு இருந்தால், விரைந்து நிறைவேறி குடமுழுக்கும் நடை பெறும். உதவியவர்களுக்கு மாவைக் கந்தனின் அருளும் பூரணமாய்க் கிடைக்கும்.
    பல நூற்றாண்டுகளைக் கடந்த பந்த நல்லூர் ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    பல நூற்றாண்டுகளைக் கடந்த பந்த நல்லூர் ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. பசுபதீஸ்வரர் அருள்புரியும் சிவாலயமும், இந்த பெருமாள் ஆலயமும் அடுத்தடுத்து அமைந்திருப்பது அரியும், சிவனும் ஒன்றே என்ற சொற்றொடரை மெய்பிக்கும் சான்று என்றே கூறலாம்.

    ஆலய அமைப்பு :

    இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மொட்டைக் கோபுரத்தைக் கடந்ததும் விசாலமான பிரகாரம். பலிபீடம், கொடிமரத்தை அடுத்து கருடாழ்வார் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். அடுத்துள்ள மகாமண்டபத்தின் நுழைவாசலின் இருபுறமும் துவாரபாலகர்கள் நின்று கொண்டிருக்க, மகாமண்டபத்தின் உள்ளே நுழைந்தால் வலது புறம் ஆழ்வார்களின் திருமேனிகள் காணப்படுகின்றன. அதனை அடுத்து ‘வெங்கடாஜலபதி, இரு தேவிகளுடன் தனிச் சன்னிதியில் சேவை சாதிக்கிறார். மகாமண்டபத்தின் வடகிழக்கு மூலையில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

    பெருமாள் - தாயார் :

    அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேவை சாதிக்கும் அழகைக் காண கண்கோடி வேண்டும். பெருமான் அபய ஹஸ்த முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். இறைவனின் சன்னிதியின் தென்புறம் பரிமள வள்ளித் தாயாரின் தனி ஆலயம் உள்ளது. ஆலயத்தின் நுழைவுவாசலைக் கடந்தால் மகாமண்டபமும், அதன் முன் நுழைவு வாசலில் ஜெய, விஜய துவார பாலகிகளின் திருமேனிகளும் உள்ளன. கருவறையில் தாயார் பீடத்தில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு தாயாருக்கு நான்கு கரங்கள். மேலே உள்ள இரு கரங்களில் தாமரை மலரையும், கீழே உள்ள இரு கரங்களில் அபய, ஹஸ்த முத்திரைகளையும் தாங்கி அருள்பாலிக்கிறார்.

    தல வரலாறு:

    இந்த ஆலயத்தில் அருள்புரியும் ஆதிகேசவப் பெருமாளுக்கு ஒரு தனிப்பட்ட தல வரலாறு உண்டு. அது என்ன?

    அன்னை பார்வதிக்கு பந்து விளையாட வேண்டுமென ஆசை. அதை சிவனிடம் கூறினாள். சிவனோ, நான்கு வேதங்களை பந்தாக்கி அம்மையிடம் தந்தார். அம்மையோ தன் தோழியர்களுடன் ஒரு நாள் மாலை வேளையில் பந்தாடத் தொடங்கினாள். சூரியன் அஸ்தமன நேரம் வந்ததும், விளையாட்டிற்கு இடையூறு வந்துவிடுமோ என்றெண்ணிய சூரியன் மறையாது நீண்ட நேரம் நிலைத்திருக்க, பகல்பொழுது நீண்டுக் கொண்டே போயிற்று.

    உலகங்கள் சோர்ந்தன. உலக இயக்கத்திற்கு நேர்ந்த தடையை விலக்கச் சென்ற நாரதரையும், பின்பு நேரில் சென்ற சிவபெருமானையும் அன்னையார் கவனிக்கவில்லை. தன்னை கவனியாது இருந்த பார்வதி மேல் சினங்கொண்டார் சிவன். எனவே கோபம் கொண்டு பந்தை அவர் எட்டி உதைக்க, பந்து மண்ணுலகில் வந்து விழுந்தது. தன் தவறை உணர்ந்து பார்வதி சிவனிடம் மன்னிப்பு கேட்க, இறைவனோ தேவியை பசுவாகக் கடவது எனச் சபித்தார்.

    இறைவனின் ஆணைப்படி உமை பசு உருவம் கொண்டு, தமையன் கேசவன் மாட்டிடையனாகப் பின் தொடர பூவுலகம் வந்தாள். பந்து வந்து வீழ்ந்த கொன்றைக் காட்டில், சரக்கொன்றை மரநிழலில் சுயம்பு லிங்கமாக இருந்த புற்றின்மீது பாலைச் சொரிந்து வழிபட்டாள்.

    கேசவனும், பசு உருவில் உமையும் கண்ணுவ முனிவர் ஆசிரமத்தில் இருந்து வந்தனர். முனிவரின் பூஜைக்கு பால் குறைந்து போக, சுயம்பு மூர்த்தியின் மீது பசு பாலைச் சொரிவதைக் கண்ட கேசவன் பசுவைக் கோலால் அடிக்க, பசு துள்ளியதில் ஒரு காலின் குளம்பு புற்றின் மீது பட்டு தேவி தன் உருவம் அடைந்தாள். கேசவன் வடிவம் நீங்கி ஆதிகேசவப் பெருமாள் ஆகி தென்புறம் திருக்கோவில் கொண்டார்.

    அன்னை இறைவனை அடைய வடக்கு நோக்கி தவமிருந்தாள். இறைவனும் தவத்தினை ஏற்றார். இந்த பெருமாள் ஆலயம் ஒரு தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.

    ஆராதனைகள் :

    தோஷ நிவர்த்தி பெற வேண்டிக் கொள்பவர்கள் பிரசாதம் படைத்து அதை பக்தர்களுக்கு புரசை இலையில் வினியோகம் செய்கின்றனர். இதன் மூலம் தங்கள் தோஷம் விலகுவதாக அவர்கள் நம்புகின்றனர்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு புளிசாதம், சர்க்கரை பொங்கல், வடை முதலியன நைவேத்தியம் செய்கின்றனர்.

    ைவகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி, மாத பிறப்புகளில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று அன்னதானமும் நடைபெறும். ஏராளமானவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

    மாதந்தோறும் பெருமாளுக்கு திருவோண நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தினசரி இங்கு பெருமாளுக்கு சாயரட்சை பூஜையில் தோசை நைவேத்தியம் செய்கின்றனர்.

    இங்கு அருள்பாலிக்கும் ஆஞ்சநேயரிடம் திருமணமாக வேண்டி வேண்டிக் கொள்ளும் கன்னிப் பெண்கள் தங்கள் பிரார்த்தனை பலித்ததும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி, வாைழப்பழத்தை விளக்காக்கி அதில் தீபமேற்றி தங்கள் நன்றிக் கடனை செலுத்துகின்றனர்.

    தினசரி மூன்று கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், காலை 7.30 மணி முதல் 9 மணி வரையிலும், பகல் 11 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    தவமிருந்து சிவனை மணந்தாள் பார்வதி. தவமிருந்த பார்வதிக்கு துணையாய் உடன் இருந்து அன்னையைக் காத்தார் பெருமாள். இத்தலம் சென்றால் இருவரையும் ஒரு சேர தரிசிக்கலாம்.

    தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் மணல்மேடு பேருந்து வழித்தடத்தில் திருப்பனந்தாளில் இருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது பந்த நல்லூர் என்ற இத்தலம்.
    இன்று குன்றக்குடி என்றும், மக்களால் குன்னக்குடி எனவும் வழங்கப் பெறும் இத்திருத்தலம் புராணங்களில் மயூரகிரி, சிகண்டி மலை என்று போற்றப்படுகிறது.
    கி.பி. 1780-களில் சிவகங்கைச் சீமையை அரசாண்டு, ஆங்கில ஏகாதிபத்தியத்துடன் பல்வேறு கட்டங்களில் சுதந்திரப் போர் புரிந்து, இறுதியில் 1801-ல் துக்கிலிடப்பட்டவர்கள் பெரிய மருதுவும், அவர் தம்பி சின்ன மருதுவும்.

    பிளவை நோய் தீர்த்த விபூதி :

    ஒருமுறை பெரிய மருதபாண்டியருக்கு பிளவை என்னும் நோய் ஏற்பட்டு, எவ்வளவு ராஜ வைத்தியம் செய்தும் குணமாகவில்லை. வலி அதிகமாக இருந்ததால் துடித்துப் போனார்.

    இந்த நிலையில் பெரிய மருதுவைப் பார்க்க வந்த ஒருவர், ‘ஒரு முருக பக்தர் வந்து, பிரார்த்தித்துக் கொண்டு திருநீறு பூசினால் குணமாகும்’ என்று தெரிவித்தார்.

    உப்பு வாணிகம் செய்து கொண்டிருந்த காடன் செட்டியார் என்பவரை அழைத்து வந்தார்கள். அவர் தனது குலதெய்வமான முருகனை வேண்டிக் கொண்டு விபூதி பூசிவிட்டு கூட இருந்து உதவினார். ஓரிரு தினங்களில் பிளவைக் கட்டி உடைந்து வலி நீங்கியது.

    இது புராணக் கதையல்ல.. வரலாற்று நிகழ்வு. ‘வீரமருது பிளவை நோய் தீர்த்த விரல் மருந்தே! ஆறுமுக அப்பா குன்றக்குடி யோங்கும் அற்புதமே’ என்ற குன்றக்குடி பாமாலையில் வரும் வரிகள் இதனை மெய்ப்பிக்கின்றன.

    நோய் குணமான நெகிழ்ச்சியில் இருந்த பெரிய மருது, காடன் செட்டியாரின் குலதெய்வமான குன்றக்குடி ஆறுமுகனைப் பார்க்க விரும்பினார். சுற்றிலும் புதர் மண்டி, கவனிப்பின்றி இருந்த குன்றக்குடி மலைக் கோவிலைப் பார்வையிட்டு, திருப்பணிகளை செய்யத் தொடங்கினார். தாம் வந்து தங்கி பணிகளைப் பார்வையிட வசதியாக குன்றக்குடியில் ஒரு சிறிய அரண்மனையையும் நிறுவினார்.

    திருப்பணிகள் செய்த மருதுசகோதரர் :

    திரு வீதிக்குத் தென்திசையில் உள்ள தீர்த்தக் குளத்தை செப்பனிட்டு, படித்துறைகள் கட்டி, சுற்றிலும் தென்னை மரங்களை நட்டு வைத்தார். அதற்கு ‘மருதாவூரணி’ என்று பெயர் சூட்டப்பட்டது.

    மூலவரின் பீடத்தின் கீழ் மாறியிருந்த எந்திரத் தகட்டை செப்பனிட்டு சாத்தினார். மூலவர் சன்னிதியில் மயில் மண்டபம், உற்சவர் சன்னிதியில் அலங்கார மண்டபம் மற்றும் சுற்றுச் சுவர்களை கட்டினார். அங்குள்ள ராஜ கோபுரமும் பெரிய மருதுவால் கட்டப்பட்டதே ஆகும். அடிப்பகுதியில் மருது பாண்டியன் உபயம் என்று பொறித்து, ஒரு தங்க கவசம் செய்து உற்சவ மூர்த்திக்கு சாத்தினார். தேர் செய்து, தைபூச விழாவினைப் பெரிய அளவில் நடத்தினார். காடன் செட்டியார் பெயரில் மண்டகப்படி ஏற்படுத்தி, அன்னதானச் சத்திரமும் கட்டினார் என்று தல வரலாறு கூறுகிறது.

    காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரரையே தனது வழிபடு தெய்வமாகக் கருதி, அங்கே ஒன்பது நிலை ராஜகோபுரம் அமைத்திருந்த மருது சகோதரர்கள், குன்றக்குடி சண்முகநாதரிடம் தீராத அன்பு கொண்டு திருப்பணிகள் செய்து உற்சவமூர்த்திக்கு எதிரில் உள்ள அலங்கார மண்டபத்தின் இரு தூண்களிலும் கூப்பிய கரங்களுடன் சிலை வடிவமாக இன்றும் காட்சி தருவது காலத்தால் அழியாத கலைச் சின்னமாகும். சிலைக்கு கீழே பிளவை நோய் தீர்த்த பெருமை கல்வெட்டில் காணப்படுகிறது.

    ஆலய அமைப்பு :

    இன்று குன்றக்குடி என்றும், மக்களால் குன்னக்குடி எனவும் வழங்கப் பெறும் இத்திருத்தலம் புராணங்களில் மயூரகிரி, சிகண்டி மலை என்று போற்றப்படுகிறது. இதற்குக் காரணம், தொலைவில் நின்று பார்க்கும் போது, குன்றானது நிமிர்ந்து நிற்கும் மயில் போலத் தோற்றமளிப்பதே ஆகும்.



    முருகப்பெருமானின் வாகனமாகிய மயில், தனது ஆணவத்தால் சாபம் பெற்றிருந்தது. சூரசம்ஹாரம் முடிந்ததும் வேலவன் இவ்வூருக்கு வந்து மயிலுக்கு சாப விமோசனம் கொடுத்து மலைமேல் குடி கொண்டதாகப் புராணக்கதை சொல்கிறது.

    குன்றக்குடியில், மலைக் கோவில், கீழ் கோவில் என்றும் இருபகுதிகள் உள்ளன. கீழே குடைவரைக் கோவிலில் தேனாற்று நாதரும், அழகம்மையும் கிழக்கு நோக்கி காட்சித்தருகிறார்கள். அவர்களுக்கு அருகில் சுந்தரேஸ்வரர், அண்ணாமலையார், மலைக் கொழுந்தீசர், சண்டேசர் சிலை வடிவங்கள் உள்ளன.

    மலையின் நுழைவு வாசல், மயிலின் தோகை போல் தோன்றுவதால், அங்கே உள்ள பிள்ளையார் ‘தோகையடி விநாயகர்’ என்று போற்றப்படுகிறார். அவரை வழிபட்டுவிட்டு மலை ஏறத் தொடங்கினால், மேலே முருகனுக்கு காவடி எடுத்த இடும்பன் சன்னிதி உள்ளது. சற்று தள்ளி இடப்புறம் தேவியோடு தோன்றும் வல்லப கணபதி காட்சித்தருகிறார். மலைக் கோவில் வாசலில் முருகனின் படைத்தளபதி வீரபாகு நம்மை வரவேற்கிறார்.

    தலைவாசலில் தெற்குநோக்கிய ராஜகோபுரம் கம்பீரமாக நிற்கிறது. மலை மீது கோவிலில் ஒளி பிரகாரம்தான் உள்ளது. அதில் நால்வர், தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், சொர்ணகணபதி, பைரவர், நடராஜர் ஆகியோர் சன்னிதிகளும், சோமாஸ்கந்தர், விசாலாட்சி சன்னிதிகளும் வடகிழக்கில் நவக்கிரக சன்னிதியும் விளங்குகிறது.

    கருவறையில் கிழக்கு நோக்கியபடி மூலவர் ‘சண்முகநாதர்’ என்ற பெயர் பெற்று, ஆறு முகங்களும், பன்னிரு கரங்களுமாக, சுகாசன நிலையில், வலது காலை மடித்து வைத்தும், இடது காலை தொங்கவிட்டும், நிற்கும் மயில் மீது வீற்றிருப்பது போல் இருக்கும் காட்சி காண்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

    பொதுவாக முருகப்பெருமான் ஆலயங்களில் முருகனுக்கு இருபுறமும் தேவியர் இருவரும் நின்று கொண்டிருப்பார்கள். ஆனால் இங்கே வலதுபுறம் வள்ளியும், இடதுபுறம் தெய்வானையும் தனித்தனியாக மயில்களின் மீது இருப்பது வேறெங்கும் காணமுடியாத தோற்றமாகும்.

    இத்திருக்கோவிலில் வைகாசி விசாகம், கந்தசஷ்டி கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் நிறைவேற்றுவது பிரசித்தி பெற்றது.

    பல குடும்பங்களுக்குக் குல தெய்வமாக விளங்கும் சண்முகநாதப் பெருமானிடம், மக்கள் தங்கள் குழந்தைகளைக் கொண்டு வந்து ‘நீயே காப்பு’ என்று தத்து கொடுத்துச் செல்வது அவர்களின் நம்பிக்கையைப் பறைசாற்றுகிறது.

    ஆதீனகர்த்தரின் கட்டுப்பாட்டில் இயங்கும், குன்றக்குடி சண்முகநாத சுவாமி திருக்கோவில், தினமும் காலை 5 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

    மருது பாண்டியரின் பிளவை நோய் மட்டுமல்ல, மக்களின் பிணிகளையும், கவலை களையும் போக்க வல்ல அருணகிரிநாதர் பாடிய குன்றக்குடி குமரனை, நாமும் மலை ஏறிச் சென்று மனமாற தரிசிக்கலாமே.

    அமைவிடம் :

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் காரைக்குடியில் இருந்து எட்டு கி.மீ. தொலைவில் இருக்கிறது, குன்றக்குடி. திருமயம் - திருப்பத்தூர் சாலையில் இருந்தும் செல்லலாம். கற்பகவிநாயகர் அருள்பாலிக்கும் பிள்ளையார் பட்டியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில்தான், குன்றக்குடி குமரன் இருக்கிறார்.
    திவ்ய தேசங்களில் 48-வது திவ்ய தேசமான வானமாமலை பெருமாள் கோவில் நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் அமைந்துள்ளது.
    நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் அமைந்துள்ளது, வானமாமலை பெருமாள் கோவில். 108 வைணவ திவ்ய தேசங்களில் இது 48-வது திவ்ய தேசம் ஆகும். இத்தலத்து இறைவனின் பெயர் ‘வானமாமலை’ என்கிற ‘தோத்தாத்திரி நாதர்’. உற்சவர் தெய்வநாயகப் பெருமாள்.

    இத்தலத்திற்கு திருச்சிரீவரமங்கை, திருவரமங்கை, திருச்சிரீவரமங்கள நகர், தோத்தாத்திரி சேத்திரம், வானமாமலை என பல பெயர்கள் உள்ளன. 108 திவ்ய தேசங்களில், எட்டு ஆலயங்கள் சுயம்பு தலமாகும். அந்த எட்டு தலங்களில் இந்த ஆலயமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    இத்திருத்தலத்தை பற்றிய செய்திகள் பிரமாண்ட புராணம், கந்தபுராணம் மற்றும் நாரத புராணங்களில் இடம் பெற்றுள்ளன. லட்சுமி தாயார் இத்திருத்தலத்தில் குழந்தையாக பிறந்ததால், இத்திருத்தலம் வரமங்கை என்றும் அழைக்கப்படுகிறது. ஆதிசேஷன் இத்திருத்தலத்தில் தவமிருந்து மகாவிஷ்ணுவை சுமக்கும் பாக்கியம் பெற்றான். கருடாழ்வாரும் இங்கு தவம் இயற்றி வைகுண்ட வாசலில் நிற்கும் பேறு பெற்றார்.

    இத்திருக்கோவிலில் அமைந்துள்ள ஒவ்வொரு தூண் களிலும் நான்கைந்து சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சிறப்பானவை, அனுமனை அணைத்து நிற்கும் ராமபிரானின் திருக்கோலமும், பீமனை எட்டிப்பிடிக்கும் புருஷாமிருகத்தின் சிற்பமும் ஆகும். கருவறையில் தோத்தாத்திரி நாதர், பட்டாபிஷேக கோலத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அவரது அருகில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருமருங்கிலும் இருக்க, ஊர்வசியும், திலோத்தமையும் சாமரம் வீசிக்கொண்டு இருக்கின்றனர்.

    தங்கமயமான ஆதிசேஷன் குடைபிடிக்க வைகுண்டத்தில் மகாவிஷ்ணு இருக்கும் கோலத்தை இங்கே காணலாம். பிருகு, மார்க்கண்டேயர், சந்திரர், சூரியர் ஆகியோரும் வெளியே விஸ்வக்சேனர் ஆக 11 பேர் ஏகாசனத்தில் இருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

    முன்னொரு காலத்தில் காட்டிற்கு வேட்டைக்கு சென்ற சிந்து தேசத்து மன்னன், வழி தவறி தனது நண்பர்களையும், பணியாளர்களையும் விட்டு நெடுந்தூரம் சென்று விட்டான். காட்டிற்குள் ஒரு சிறு குடிசையை கண்ட மன்னன், அந்த குடிசைக்குள் சென்றான். அப்போது அந்த குடிசைக்குள் கொஞ்சம் உணவு இருப்பதை பார்த்த மன்னன், அந்த உணவை உண்டு பசியாறிக்கொண்டான்.

    அந்த நேரத்தில் வெளியில் சென்று விட்டு திரும்பிய ‘குஷாணனா’ என்னும் முனிவர், தனது குடிசைக்குள் வேறு ஒருவர் இருப்பதையும், விஷ்ணுவிற்கு படைப்பதற்காகத் தான் வைத்து இருந்த உணவை அவர் தின்று விட்டதையும் கண்டு கடும் சினம் கொண்டார். ஆத்திரத்தில் முனிவர், அந்த மன்னனை ‘நாயாக மாறுவாய்’ என்று சபித்து விட்டார்.



    சாபம் பெற்ற மன்னன், ‘எப்போது நான் சாபத்தில் இருந்து விடுதலை ஆவேன்?’ என்று முனிவரை கேட்டான். அதற்கு முனிவர், ‘உலகத்தின் மிகச் சிறந்த தீர்த்தத்தில் நீராடும்போது உன் சாபம் நீங்கப் பெறுவாய்’ என்று விமோசனம் கூறினார்.

    நாயாக மாறிய மன்னன் காட்டில் அலைந்து திரிகையில், வேடர்களால் பிடிக்கப்பட்டு இத்திருத்தலம் அமைந்துள்ள இடத்திற்கு வந்து சேர்ந்தான். பின்னர் இத்தலத்தில் உள்ள சேற்று தாமரை தீர்த்தத்தில் வேடர்களுடன் நீராடியபோது தனது சாபம் நீங்க பெற்றான். பிறகு ஆலயத்தில் இறைவனை வழிபட்டு நாடு திரும்பியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.

    இத்திருத்தலம் ஒரு சுயம்பு தலமாகும். இத்திருத்தலத்தின் சேற்று தாமரை தீர்த்தமே திருப்பாற்கடல் என்று கூறப்படுகிறது. நம்மாழ்வார் இத்தலத்து இறைவனை பத்து பாசுரங்களில் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்.

    இக்கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகிறது. சித்திரை பிரமோற்சவம், வைகாசி வசந்த உற்சவம், ஆவணி பவித்ர உற்சவம், தை அமாவாசை எண்ணெய்க் காப்பு, பங்குனி திருக்கல்யாண உற்சவம் ஆகியவை முக்கிய திருவிழாக்களாகும்.

    திருநெல்வேலியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது நாங்குநேரி. திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் அனைத்து பஸ்களிலும் கோவிலுக்கு செல்லலாம்.

    நோய் தீர்க்கும் எண்ணெய்

    இத்திருத்தலத்தின் இறைவனுக்கு தினமும் எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்பட்ட எண்ணெய், அங்குள்ள ஒரு கிணற்றில் ஊற்றப்படுகிறது. பின்னர் அந்த கிணற்றில் இருந்து எடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. இந்தப் பிரசாத எண்ணெயானது சகல நோய்களையும் தீர்க்கும் அருமருந்து என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.
    பக்தர்களே அர்ச்சனை ஆராதனை செய்யும் ஆலயம் என்ற பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, காஞ்சீபுரம் திருநிலை பெரியாண்டவர் ஆலயம்.
    சிவன்- சக்தி பாதங்கள் பதிந்த தலம், 21 சிவ கணங்கள் சாப விமோசனம் பெற்ற ஊர், வானமே கூரையாய் வாழும் இறைவன், பக்தர்களே அர்ச்சனை ஆராதனை செய்யும் ஆலயம், மனித வடிவ நந்தி பகவான் அருளும் கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, காஞ்சீபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில் உள்ள திருநிலை பெரியாண்டவர் ஆலயம்.

    புராண வரலாறு :

    சிவபெருமானின் திருவுளப்படி மகதநாட்டு மன்னன் விளாசநாதன் - தேவகி தம்பதியினருக்குச் செல்வ மகளாகப் பிறந்தாள், உமாதேவி. அக்குழந்தைக்கு பூங்குழலி எனப் பெயரிடப்பட்டது. நாரதரின் அறிவுரைப்படி, பூங்குழலி இறைவனை மணம் புரிய அவ்வப்போது, தியானம் செய்து வந்தாள்.

    இந்நிலையில், சடாமுடி முனிவரின் சாபத்தால் வேதாளமாக மாறிய இந்திரன், மகதநாட்டு மக்களைத் துன்புறுத்தியும், கொன்று தின்றும் அச்சத்தை ஏற்படுத்தி வந்தான். சிவனடியாரான மகத நாட்டு மன்னனால் அவனை ஒன்றும் செய்ய இயலவில்லை. இதைக் கண்டு வருந்திய பூங்குழலி வேதாளத்துடன் போர் புரிந்தாள். ஆனால், அவளாலும் வெல்ல முடியாமல் மூர்ச்சையானாள்.

    அப்போது வேடன் வடிவில் வந்த சிவபெருமான், மகதநாட்டு மன்னனின் அனுமதியோடு வேதாளத்தை அடக்கி அழித்தார். வேதாளமாய் இருந்த இந்திரனின் சாபம் நீங்கியது. அதற்குப் பரிசாக மன்னன் வாக்களித்தபடி, பூங்குழலியை மணந்தார். இத்திருமண வைபவத்தை திருமால், லட்சுமி, பிரம்மா உள்ளிட்ட தேவர்களும், மன்னனும், நாட்டு மக்களும் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

    இதற்கிடையே சுந்தரபத்திரன் என்ற அசுரன், தான் புரிந்த கடுந்தவத்தால், சிவன்- பார்வதி இணைந்த சக்தியைத் தவிர, வேறு எந்த சக்தியாலும் அழிக்க முடியாத வரத்தினைப் பெற்றான். அதன் விளைவாக இந்திரலோகம் அவன் வசமானது. சிவபெருமான் பூமிக்குச் சென்ற நிலையில், கயிலாயத்தையும், கைப்பற்றத் துணிந்தான். அவன் பெற்ற வரம் அவன் கண்களை மறைத்தன. அதன்படியே இறைவனும் இறைவியும் பூமியில் பிறந்து, ஓருருவாகி சுந்தர பத்திரனை வதம் செய்தனர் என்கிறது தல புராணம்.

    மற்றொரு தலபுராணம் :

    முன் காலத்தில் தன் மனைவியோடு, திருக்கழுக்குன்றம் வந்தார் ஒரு சிவனடியார். அங்கு வேதகிரீஸ்வரரிடம், தனக்கு பிழைக்க ஒரு வழிகாட்டும்படி வேண்டி நின்றார். அன்று இரவு அவர் கனவில் வந்த இறைவன், ‘விடிந்த பிறகு உங்கள் முன் தோன்றும் பன்றியைப் பின்தொடருங்கள் வழி கிடைக்கும்’ எனக் கூறி மறைந்தார். அதன்படியே ஒளிவீசும் பன்றி அங்கே தோன்றியது. அதனைப் பின்தொடர்ந்து வடகிழக்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சென்ற போது, ஓரிடத்தில் பன்றி, ஜோதி வடிவாய் அசையாமல் நின்று மறைந்தது. இது இறைவன் செயலே என முடிவு செய்து அதே பகுதியில் தங்கி, விவசாயம் செய்து பிழைத்து வந்தனர். அவர் களின் வறுமையும் நீங்கியது.

    குழந்தைப் பேறு வேண்டி மீண்டும் வணங்கி நின்றனர். மீண்டும் கனவில் வந்த இறைவன், ‘ஜோதியாக மறைந்த இடத்தில் நான் மறைந்திருக்கிறேன். அங்கே என்னை பூஜை செய்து வா, உன் வேண்டுதல் நிறைவேறும்’ என்று கூறி மறைந்தார்.

    மறுநாள் அங்கு சென்று அகழ்ந்து பார்த்த போது, அங்கே ஒளி வீசும் சுயம்புலிங்கத் திருமேனியைக் கண்டு மகிழ்ந்தனர். அதன்பின் தொடர்ந்து பூஜைகள் செய்து வந்தனர். இதையறிந்த ஊர்மக்களும் வழிபடத் தொடங்கினர். அவர்களுக்குக் குழந்தைப்பேறும் கிடைத்தது. இன்றும் அந்தச் சந்ததியினரே பூஜை செய்து வருவதாகத் தலபுராணம் கூறுகிறது. அது முதல் குழந்தைப் பேறு தரும் ஆண்டவனாகப் பெரியாண்டவர் திகழ்ந்து வருகின்றார்.



    ஆலய அமைப்பு :

    ஆலயம் ஏரிகளுக்கும், குளங்களுக்கும் நடுவே பசுமையான சூழலில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கே மூன்று நிலை கோபுரம் வரவேற்க, ருத்ராட்ச மரத்தின் அருகே மனித வடிவில், சிவபெருமான் தலையில் கங்கையைத் தாங்கி, எழிலோடு அமர்ந்திருக்கிறார். இவருக்குப் பன்னீரால் அபிஷேகம் செய்து, அந்த நீரை வீட்டிற்குக் கொண்டு சென்றால், வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, அமைதி தவழும் என்பது நம்பிக்கை.

    ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்ததும், விநாயகர், முருகப்பெருமான், பதினாறுகால் மண்டபம் உள்ளன. மண்டபத்தில் மனித வடிவிலான சிவபெருமான், அவரை வணங்கும் அங்காளபரமேஸ்வரி, பட்டினத்தார், திருமூலர், வள்ளலார் சுதைச் சிற்பங்களாகக் காட்சியளிக்கின்றனர். அருகே 21 சிவகணங்களும், நடுவே பெரியாண்டவர் வடிவமும் உள்ளன. இங்கே கொடிமரத்திற்குப் பதிலாக திருநீறை உடலெல்லாம் பூசிய திருநீற்று விநாயகர் காட்சி தருகிறார். இவரின் பின்புறம் மனித வடிவிலான நந்திதேவர் காட்சி தருகிறார்.

    இரண்டாம் நிலையில் சித்திபுத்தி விநாயகர், வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமான் அமர்ந்துள்ளார். மூன்றாம் நிலையில் சுயம்பு லிங்கத்திற்கு பின்புறம் பரம சிவன், அன்னை பார்வதி, அங்காள பரமேஸ்வரி, தட்சிணாமூர்த்தி, பைரவர், அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

    மூன்றாம் நிலையில் வானமே கூரையாக அருளாட்சி செய்து வரும் பெரியாண்டவர், லிங்கத் திருமேனியராக எழிலுடன் காட்சி தருகிறார். இவரின் வலதுபுறம் சுவாமியின் திருப்பாதங்களும், இடதுபுறம் சக்தியின் திருப்பாதங்களும் காட்சியளிக்கின்றன. பெரியாண்டவரை வணங்க வரும் அடியார் அனைவரும், இவற்றுக்கு தங்கள் விருப்பம் போல் அபிஷேக, தீபாராதனை செய்து வணங்கிச் செல்கின்றனர். தலமரம் வில்வம். தல தீர்த்தம் சித்தாமிர்த தீர்த்தம் என்னும் குளம். இது ஆலயத்தின் வடக்கில் அமைந்துள்ளது.

    கார்த்திகை தீபம், மகாசிவராத்திரி ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் அடியவர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். அன்றைய தினம் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக் கும்.

    அமைவிடம் :

    காஞ்சீபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில், திருக் கழுக்குன்றம், ஒரகடம் அருகே அமைந்த ஊராக திருநிலை விளங்குகின்றது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே திருக் கழுக்குன்றத்தில் இருந்து இங்கு வர பேருந்து வசதி உள்ளது. என்றாலும், திருக்கழுக்குன்றத்தில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.
    தமிழ்நாட்டில் பல பைரவர் கோயில்கள் இருந்தாலும் ஸ்ரீசொர்ணகால பைரவர் போன்ற தனி ஆலயம் வேறு எங்கும் இதுபோன்று கிடையாது.
    ஆலய தல வரலாறு

    பழங்காலத்தில் தொண்ட மண்டலம், தொண்ட காருண்யம் என்ற காடுகளை திருத்தி நாடாக்கி அதனை பெளத்த மன்னர்கள் ஆண்டு வந்தனர். கி.பி.3 ஆம் நூற்றாண்டில் இங்கு கல்விக்கூடம் சிறப்பாக இயங்கி வந்தது. வட இந்திய மாணவர்கள் இங்கு கல்வி பயின்றனர். ஹிமசீதன மன்னர் அசுலங்கர் என்ற சமண அறிஞர் பொளத்தர்களை வாதிட்டு வென்று அவர்களை நாடு கடத்தினார் பின்னர் இங்கு சமண கல்வி கூடத்தை அமைத்தார். அப்போது இந்த ஊர் அறவழித்தாங்கி என அழைக்கப்பட்டது.

    பொற்காலத்தில் இந்த பகுதியை பல்லவர்களும் சோழர்களும் ஆட்சி செய்த போது சிவனை போற்றும் சைவ நெறியானது வளம் பெற்றது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் {கி.பி.14ஆம் நூற்றாண்டில்} வீர சம்புவராயன் என்ற மன்னர் இங்கு கோட்டையை கட்டி ஆட்சி செய்து வந்தான். அப்போது வடக்கே இருந்து யாதவராயன் என்ற மன்னன் படையெடுத்து வந்தான் இருவருக்கும் இடையே பெரும்போர் மூண்டது. முதல் நாள் நடந்த போரில் சம்புவராயன் படைகள் நாசமடைவதைக்கண்டு வருந்தினர்.

    அன்று இரவு கால பைரவர் அவரது கனவில் தோன்றி நீ வருத்தப்படவேண்டாம் நாளைய போரில் நீ வெற்றி பெற நான் துனையிருப்பேன் என்றார். அடுத்த நாள் போரில் சம்புவராயன் பெரும் வெற்றி பெற்றான் அழிந்துபோன தனது படையையும், பட்டணத்தையும் இறைவன் காப்பாற்றியதால் இவ்வூரை அழிபடைதாங்கி என பெயரிட்டார்.

    இந்த வெற்றியை அருளிய ஸ்ரீசொர்ணகாலபைரவருக்கு பெரியதொரு கோயிலையும் எழுப்பினார். இக்கோயிலின் மகிமையானது திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் ஆலய ஸ்தலபுராணத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்ரீபைரவப்பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். வந்து வணங்கும் பக்தர்களுக்கு சகல விதமான வெற்றிக்கும் வழியமைத்து தருகிறார்.

    சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. தொல்லைகள் அகன்றிட மற்றவர் செய்த ஏவல், பில்லி, சூனியம் போன்ற அபிசார தோஷங்கள் விலகிட, மருத்துவர்களை தோல்வியுறச் செய்யும் கர்ம வியாதிகளில் இருந்து விடுபட, அஷ்ட தரித்திரம் நம்மை விட்டு விலகி பெருஞ்செல்வம் சேர்ந்திட, தங்கம் நம்மோடு எந்நாளும் தங்கியிருக்க, வம்பு வழக்குகளில் வெற்றி பெற்றிட, பொறாமை, கண்திருஷ்டி அகன்று சுகம் பெற்றிட, தொட்டது துலங்கிட, எதிரிகளும், தடைகளும் மறைந்து எதிலும் வெற்றி பெற்றிட, பைரவரை துதிப்பது மிகவும் அவசியமாகும். பைரவ பூஜைக்கு கைமேல் பலன் என்பது அனுபவ பூர்வ வசனம் ஆகிறது.

    இத்திருக்கோயிலின் சிறப்பம்சங்கள்

    சுமார் 500 வருடங்கள் பழைமையான திருக்கோயில். இத்திருக்கோயில் பைரவர் தெற்கு நோக்கி காட்சிதந்து, சுனவாகனம் கிழக்கு நோக்கி தனிக்கோயிலாக அருள்பாலிக்கிறார், பொதுவாக பைரவரின் வாகனம் மேற்க்கு நோக்கி இருக்கும். காசியிலிருக்கும் ஸ்ரீ கால பைரவருக்கு நிகரான ஷேத்திரம், தமிழ்நாட்டில் பல பைரவர் கோயில்கள் இருந்தாலும் ஸ்ரீசொர்ணகால பைரவர் போன்ற தனி ஆலயம் வேறு எங்கும் இதுபோன்று கிடையாது. ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.



    ஸ்ரீசொர்ணகால பைரவரை வழிபடுவதினால் பலன்

    வாஸ்து பகவானுக்கு குரு என்பதால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். சனி பகவானுக்கு குரு என்பதால் சனி பகவான் தொல்லையிலிருந்து விடுபடலாம். திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சினை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.

    பரிகாரங்களும்.... தீர்வும்....

    வறுமை நீங்க :

    வெள்ளிக்கிழமை மாலை வில்வத்தினால் அர்ச்சனை செய்ய அஷ்ட தரித்திரம் விலகும்.

    பிள்ளைப்பேறு உண்டாக :

    தேய்பிரை அஷ்டமியில் விரதம் இருந்து,செவ்வரளிப் பூவாள் 11 அஷ்டமிகளில் அர்ச்சித்தால் கைமேல் பலன்.

    வழக்குகளில் வெற்றி பெற, வியாபார லாபம் அடைய :

    பைரவருக்கு ஸஹஸ்ர நாம அர்ச்சனை செய்து வடை, சர்க்கரைப் பொங்கல், தேன் முதலியன படைக்கவேண்டும்.

    இழந்த பொருட்களை திரும்ப பெற :

    7 மிளகுகளை துணியில் மூட்டை கட்டி, நல்லெண்ணைய் தீபம் ஏற்ற இழந்தவற்றை திரும்ப பெறலாம்.

    திருமண தடை நீங்க :

    ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்ய மிக விரைவில் பலன்.



    நவக்கிரக தோஷம் விலக :

    சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகால வேளையில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்ய மிக விரைவில் பலன். ஸ்ரீ பைரவரை தொடர்ந்து இடைவிடாமல் வழிபடுவோருக்கு சிறந்த குருநாதர் அல்லது சித்தர் அருள் தன்னால் கிடைக்கும்.

    அமைவிடம் :

    திருவண்ணமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்கா அழிவிடைதாங்கி கிராமம் மதுரா பைரவபுரம்.

    கோவில் திறந்திருக்கும் நேரம்:

    தேய்பிறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

    வழித்தடம்:

    காஞ்சிபுரத்தில் இருந்து வெம்பாக்கம் வழியாக அழிவிடைதாங்கி வந்தடையலாம், வெம்பாக்கத்திலிருந்து ஷேர் ஆட்டோ மூலமாகவும் வரலாம்.

    தொகுப்பு :

    ஸ்ரீராஜசேகர்.பு
    4/43, இரன்டாவது மெயின் தெரு
    அண்ணா நகர், செய்யார் - 604407
    திருவண்ணாமலை மாவட்டம்
    தமிழ்நாடு.

    Mail id:-sreerajasekarp@gmail.com.
    ×