என் மலர்tooltip icon

    கோவில்கள்

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நாகலா புரம் - பிச்சாட்டூர் சாலையில் உள்ள ராமகிரியில் வாலீஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான, தத்புருஷம் என்ற முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர். இவர் காசியில் சிவகணங்களுக்கு தலைவனாக விளங்குகிறார். ஆணவம் கொண்ட பிரம்மனின் தலையை கொய்தவர் இவர்தான். சனி பகவானை, சனீஸ்வரனாக்கி நவக் கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமைச் சேர்த்தவரும் இவரே.

    இப்படி பல சிறப்புகளைக் கொண்ட பைரவரை, காலபைரவர், மார்த்தாண்ட பைரவர், வடுக பைரவர், ஷேத்திரபாலகர், சத்ருசம்ஹார பைரவர், சொர்ண பைரவர் என்று பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறோம். இவர் எல்லா சிவாலயங்களிலும், ஈசானிய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில், நாய் வாகனத்துடன் காட்சிதருவார். இது தவிர பைரவருக்கு தனி கோவில்களும் பல இடங்களில் உள்ளன.

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நாகலா புரம் - பிச்சாட்டூர் சாலையில் உள்ள ராமகிரியில் வாலீஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. இங்கு வாலீஸ்வரர் சன்னிதியை விட, காலபைரவரின் சன்னிதியே பெரிதாக உள்ளது. நின்ற கோலத்தில் காலபைரவர் காட்சிதருகிறார். அவருக்கு எதிரே அவருடைய வாகனமான நாயின் உருவம் பெரிய அளவில் காணப்படுகிறது.

    தலவரலாறு

    இந்த ஆலயத்தின் தல வரலாறு ராமாயண காலத்தோடு தொடர்புடையது. இலங்கை வேந்தனான ராவணனை வதம் செய்ததால், ராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. தோஷத்தை போக்கிக் கொள்வதற்கு ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட நினைத்தார், ராமபிரான். அதற்காக சிவலிங்கம் கொண்டுவர அனுமனை காசிக்கு அனுப்பினார். அனுமனும் காசிக்குச் சென்று அங்கிருந்து ஒரு சிவலிங்கத்தை எடுத்துக்கொண்டு திரும்பினார்.

    ஆனால் காசியின் காவல் தெய்வமாக இருக்கும் காலபைரவரின் அனுமதியை அனுமன் கேட்கவில்லை. இதனால் சிவலிங்கத்தை எடுத்து சென்ற அனுமனை, பைரவர் தடுத்து நிறுத்தினார். அதே நேரத்தில் தேவர்கள் பலரும் அங்கு வந்து, ராமரின் பூஜைக்காக சிவலிங்கம் தேவைப்படுவதைக் கூறி, அனுமனை செல்ல அனுமதிக்கும்படி வேண்டினர். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க காலபைரவர், அரைமனதுடன் அனுமன் சிவலிங்கத்தை எடுத்துச்செல்ல அனுமதித்தார்.

    இருந்தாலும் காலபைரவரின் மனம் சமாதானம் ஆகவில்லை.எப்படியாவது சிவலிங்கத்தை மீட்க வேண்டும் என்று நினைத்தார். சூரிய பகவான் மற்றும் வருணபகவான் துணையுடன் அனுமனுக்கு கடுமையான தாகம் ஏற்படும் படிச் செய்தார். சிவலிங்கத்தை கொண்டு செல்லும் வழியில் தாகத்தால் அனுமன் தவித்தார்.

    அப்போது கங்கா தேவியிடம், “அனுமன் செல்லும் வழியில் ஒரு நீர்நிலையை ஏற்படுத்தவேண்டும்” என்று காலபைரவர் கூறினார். அதன்படியே கங்காதேவி அங்கே ஒரு குளத்தை ஏற்படுத்தினாள். குளத்தைக் கண்டதும் அனுமனுக்கு உற்சாகம் பெருக்கெடுத்தது. அந்த வேகத்திலேயே அவருடைய உற்சாகம் வடிந்தும் போனது. கையில் வைத்திருக்கும் சிவலிங்கத்தை யாராவது வாங்கிக் கொண்டால்தானே தண்ணீர் அருந்தமுடியும்? அனுமன் சுற்றும் முற்றும் பார்த்தார். அதற்காகவே காத்திருந்த காலபைரவர், ஒரு சிறுவனாக வடிவம் கொண்டு அனுமன் முன்பாகத் தோன்றினார்.

    அந்தச் சிறுவனிடம் சிவலிங்கத்தைக் கொடுத்த அனுமன், “எக்காரணத்தைக் கொண்டும் சிவலிங்கத்தைக் கீழே வைக்கக்கூடாது” என்று சொல்லிவிட்டு தண்ணீர் அருந்தச் சென்றார். அனுமன் அந்தப் பக்கம் போனதுதான் தாமதம், சிறுவனாக வந்த காலபைரவர் சிவலிங்கத்தை தரையில் வைத்துவிட்டு மறைந்துவிட்டார்.

    திரும்பி வந்து பார்த்த அனுமன், தான் கொண்டு வந்த சிவலிங்கம் தரையில் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். அந்தச் சிவலிங்கத்தை கைகளால் எடுக்க முயன்றார். அவரால் எடுக்க முடியவில்லை. வாலினால் கட்டி இழுக்க முயன்றார். ஆனாலும் இயலவில்லை. தன்னிடம் இருந்து சிவலிங்கத்தைப் பெற்று கீழே வைத்தது காலபைரவர்தான் என்பதை உணர்ந்துகொண்ட அனுமன், காலபைரவரை வழிபட்டு அவருடைய அருளால் மற்றொரு சிவலிங்கத்தைப் பெற்றுக்கொண்டு ராமேஸ்வரம் சென்றதாகத் தலவரலாறு கூறுகிறது.

    ‘தனக்கு இப்படி ஒரு நிலை இந்தக் குளத்தால்தானே ஏற்பட்டது’ என்ற கோபத்தில், அனுமன் அங்கிருந்த சிறு மலையைப் பெயர்த்து குளத்தில் வீசினார். ராமபிரானின் வழிபட்டுக்காக அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம் அந்த மலை மீது பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த இடத்திற்கு ராமகிரி என்றும் பெயர் ஏற்பட்டது.

    அனுமன் வாலினால் கட்டி இழுத்ததால், இந்த ஆலயத்தில் அருளும் இறைவன் ‘வாலீஸ்வரர்’ என்னும் திருப்பெயர் கொண்டார். இறைவனின் சன்னிதிக்கு நேராக ஆஞ்சநேயரும், அவருக்கு அடுத்தபடியாக நந்திதேவரும் காட்சி தருகிறார்கள். அம்பிகையின் திருநாமம் ‘மரகதாம்பிகை.’

    இந்தத் தலத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டைக்குக் காரணமாக இருந்த காலபைரவர், ‘சந்தான பிராப்தி பைரவர்’ என்று அழைக்கப்படுகிறார். பைரவர் சன்னிதிக்கு அடுத்தபடியாக காளிமாதாவின் சன்னிதியை தரிசிக்கலாம். மேலும் விநாயகர், பிரம்மதேவர், விஷ்ணு, சண்முகர், அமர்ந்த கோலத்தில் வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, சூரியபகவான் போன்ற பரிவார தெய்வங்களும் இத்தலத்தில் அருள்புரிகின்றனர்.

    இந்தக் கோவிலில் காலபைரவர் சந்தான பிராப்தி பைரவராக அருள்கிறார். எனவே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கே வந்து பைரவரை வேண்டிக்கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும், குழந்தையைக் கொண்டு வந்து பைரவருக்கு கொடுத்து விட்டு, பிறகு பைரவரின் வாகனமான நாய் உருவத்தை விலையாகக் கொடுத்து திரும்பவும் குழந்தையைப் பெற்றுச் செல்கிறார்கள். ‘திருக்காரிக்கரை’ என்ற பெயரிலும் இந்த ஊர் அழைக்கப்பட்டு வந்ததாகத் தெரியவருகிறது. சுந்தரமூர்த்தி நாயனார், தம்முடைய தேவாரத்தில் இடையாற்றுத் தொகை என்ற பதிகத்தில் இந்தத் தலத்தை, ‘கடங்கள் ஊர் திருக்காரிக்கரை கயிலாயம்' என்று வைப்புத்தலமாக வைத்துப் பாடி இருக்கிறார். சிவபெருமானுக்கு முன் நந்தி இல்லாததால் இங்கு பிரதோஷ வழிபாடு நடைபெறுவதில்லை.

    நந்தியின் வாயில் இருந்து கொட்டும் தண்ணீர்.

    கோவிலுக்கு வெளியில் ஒரு தீர்த்தக் குளம் இருக்கிறது. அந்த தீர்த்தக் குளத்தின் ஒரு கரையில் இருக்கும் நந்தி சிலையின் வாயில் இருந்து, தீர்த்தக் குளத்துக்குள் தண்ணீர் விழுந்துகொண்டே இருக்கிறது. இந்தத் தீர்த்தம் ‘நந்தி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் இருந்து வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டிக்கொண்டு இருக்குமாம். இந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. தண்ணீர் சுவையாக இருக்கும். நோய்களை குணப்படுத்தி ஆரோக்கியம் தரும் வல்லமை மிக்கதாக இத்தீர்த்தம் உள்ளது என்கிறார்கள்.

    இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    சென்னை - திருப்பதி சாலையில் சென்னையில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவில், நாகலாபுரத்துக்கும் பிச்சாட்டூருக்கும் இடையில் உள்ளது ராமகிரி. இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள கோவிலுக்குச் செல்ல ஆட்டோ வசதி உள்ளது.
    வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரத்தில் கவுண்டன்ய மகாநதியின் கரை ஓரத்தில் அருள்மிகு கெங்கை அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரத்தில் கவுண்டன்ய மகாநதியின் கரை ஓரத்தில் அருள்மிகு கெங்கை அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை வாரி வழங்கி நல்லாசி புரிகிறாள்.

    மிகவும் புராதனம் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1-ந் தேதி கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டு அருளாசி பெற்று செல்கின்றனர்.

    கெங்கையம்மன் வரலாறு :

    முன்னொரு காலத்தில் ஜமதக்கினி என்கிற முனிவர் தனது மனைவி ரேணுகாதேவி (கெங்கையம்மன்) மற்றும் மகன்களுடன் வாழ்ந்து வந்தார். ரேணுகாதேவி நாள்தோறும் தாமரை குளத்தில் நீராட செல்வது வழக்கம். நீராட செல்லும்போது மண்ணால் குடம் செய்து, நீராடிவிட்டு திரும்பி வரும்போது மண் குடத்தில் தண்ணீர் எடுத்து வருவார். அதேபோல் ஒருநாள் ரேணுகாதேவி தாமரை குளத்திற்கு சென்று நீராடி உள்ளார். அப்போது வான்வழியே சென்ற கந்தர்வனின் நிழல் குளத்தில் தெரிந்துள்ளது. அந்த கந்தர்வன் அழகில் சில நொடிகள் ரேணுகாதேவி மயங்கி உள்ளாள். இதை ஞான திருஷ்டி மூலம் உணர்ந்த ஜமதக்கினி முனிவர், தனது மனைவி கற்பு நெறியை தவறி விட்டதாக கடும் கோபம் கொண்டார். இந்த குற்றத்திற்கு தண்டனையாக தனது மகன் பரசுராமனிடம் உனது தாயின் தலையை வெட்டி கொண்டு வா என ஆணையிட்டார். தந்தை சொல்லை வேத வாக்காக எடுத்துக் கொண்ட பரசுராமன் ஏன், எதற்கு என கேள்வி கேட்காமல் தனது தாயின் தலையை வெட்ட புறப்பட்டார்.

    தனது மகனே தன் தலையை வெட்ட வருவதை கண்ட ரேணுகாதேவி மகனால் வெட்டப்பட்டு இறப்பதை விட தனது உயிரை தானே மாய்த்துக் கொள்வதே மேல் என முடிவு செய்து ஓடத் துவங்கினாள். அப்போது சலவை தொழிலாளி ஒருவரது வீட்டில் மறைந்து கொண்டாள். அங்கும் பரசுராமன் வரவே கடலில் வீழ்ந்து இறப்பதே மேல் என முடிவு செய்து கடலை நோக்கி ஓடினாள். தொடர்ந்து ரேணுகாதேவியை பரசுராமன் விரட்டி வந்தார். அப்போது ரேணுகாதேவி வெட்டியான் ஒருவரது வீட்டில் பதுங்கி கொண்டார். இதனை அறிந்த பரசுராமன் அங்குவந்து தனது தாயின் தலையை வெட்ட முயன்றார். அதனை தடுத்த வெட்டியானின் மனைவி சண்டாளச்சியின் தலையை வெட்டினார். பின்னர் தனது தாயின் தலையை வெட்டினார்.

    பின்பு தனது தந்தையிடம் சென்ற பரசுராமன், உங்கள் கட்டளையை நிறைவேற்றி விட்டேன் என கூறினார். அப்போது ஜமதக்கினி முனிவர் தனது மகனிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். அதனை தருகிறேன் என கூறினார். அப்போது பரசுராமன் தனது தாயை உயிர்பித்து தருமாறு வேண்டினார். அப்போது ஜமதக்கினி முனிவர் ஒரு பாத்திரத்தில் புனித நீரை கொடுத்து இந்த தண்ணீரை கொண்டு வெட்டப்பட்டு கிடக்கும் உடலுடன் தலையை சேர்த்து வைத்து உயிர்ப்பித்து கொள் என்றார். இதனையடுத்து மகிழ்ச்சியில் திளைத்த பரசுராமன், வேகமாக சென்று உயிர்ப்பிக்கும்போது அவசரத்தில் சண்டாளச்சியின் உடலில் ரேணுகாதேவியின் தலையையும், ரேணுகாதேவியின் உடலில் சண்டாளச்சியின் தலையையும் வைத்து புனிதநீரை தெளித்தார். இதன்பின்னர் ரேணுகாதேவியும், சண்டாளச்சியும் உயிர் பெற்றனர்.

    இந்த புராணத்தை கொண்டுதான் குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் 1-ந் தேதி சிரசு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது கெங்கையம்மன் கோவிலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் இருந்து அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, கெங்கையம்மன் கோவில் சிரசு மண்டபத்தில் உள்ள சண்டாளச்சியின் உடலில் பொருத்தப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படும்.

    தனது மகனால் வெட்டப்பட்டு மீண்டும் உயிர்பெற்ற கெங்கையம்மன் பிற்காலத்தில் உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயாக இருந்து காத்து வருவதோடு, அவர்களுக்கு வேண்டிய வரங்களை தந்து அருள்புரிந்து வருகிறார்.

    கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் :

    குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவினையொட்டி அம்மனுக்கு காப்பு கட்டிய நாள் முதல் பக்தர்கள் கோவிலில் கூழ் ஊற்றியும், மா விளக்கு ஏற்றியும் அம்மனை வழிபட்டு வருகின்றனர். மேலும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறினால் அம்மனுக்கு தங்களால் இயன்ற அளவு தேங்காய் உடைப்பதாக வேண்டி கொள்வர். அதேபோல் அம்மன் சிரசு ஊர்வலம் தொடங்கியது முதல் சிரசு செல்லும் வழிநெடுகிலும் பக்தர்கள் மூடைமூடையாக தேங்காய்களை உடைத்து வேண்டுதல்களை நிறைவேற்றுவர். அதேபோல் கோவில் மண்டபத்தில் அம்மன் வீற்றிருக்கும்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் லட்சக்கணக்கான தேங்காய்களை உடைத்து வழிபடுவர். லட்சக்கணக்கான தேங்காய்களை பக்தர்கள் உடைத்து வழிபடுவதில் இருந்தே கேட்ட வரம் அருள்பவள் கெங்கையம்மன் என்பது நிரூபணமாகிறது.

    கவுண்டன்ய நதிக்கரையில் பக்தர்களுக்கு அருள் வழங்கும் கெங்கையம்மன் :

    கிழக்கு - மேற்காக அமைந்துள்ள கோவிலின் முகப்பில் வேப்பமரமும், பின்புறம் அரச மரமும் இயற்கையிலேயே அமைந்துள்ளது. கோவிலில் கெங்கையம்மன் அம்மன் மூலவர் கிழக்கு நோக்கி அமர்ந்த வண்ணம் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அம்மன் சன்னதியை சுற்றிலும் துர்கை, பைரவி, வராகி, தாட்சாயிணியும், முகப்பில் ஒருபுறம் விநாயகரும், மற்றொருபுறம் பாலமுருகர் சன்னதியும் அமைந்துள்ளது.

    அம்மன் சன்னதியின் பின்புறம் நாககன்னிகளும், நாக தேவதை சிலையும் அமைந்துள்ளது. மூலவர் சன்னதியை ஒட்டியபடி அம்மன் சிரசு மண்டபம் அமைந்துள்ளது. சிரசு திருவிழா அன்று ஊர்வலமாக கொண்டு வரப்படும் கெங்கையம்மன் சிரசு, சிரசு மண்டபத்தில் உள்ள சண்டாளச்சி உடலுடன் பொருத்தப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின் அன்றைய நாள் முழுவதும் கெங்கையம்மன் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை வாரி வழங்குகிறார்.

    பல ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணி கமிட்டி சார்பில் மிகுந்த பொருட்செலவில் கோவிலில் பல்வேறு கட்டிட பணிகள் நடைபெற்று வெகுசிறப்பாக கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது கெங்கையம்மன் கோவில் புதிய பொலிவுடன் காட்சி அளிக்கிறது. கோவிலின் உள்புறம் சுற்றியும் கெங்கையம்மன் கோவில் வரலாற்றை கண்முன் நிறுத்தும் வகையில் கலைநயம்மிக்க வேலைப்பாட்டுடன் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘வரதராஜப் பெருமாள் ஆலயம்’ மிகவும் பழமையானது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில், அழகு கொஞ்சும் சிறிய கிராமம் தளிஞ்சி. இதன் பிரதான சாலையை ஒட்டி, அகன்று பரந்துள்ள நீரோடை உள்ளது. அதைக் கடந்து வலது புறம் திரும்பினால் சிவபெருமான் ஆலயம் இருக்கிறது. அகஸ்தீஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி அருள்பாலிக்கும் இந்த சிவலாயத்தைக் கடந்ததும், ஒரு பெருமாள் கோவில் உள்ளது.

    ‘வரதராஜப் பெருமாள் ஆலயம்’ என அழைக்கப்படும் இந்தக் கோவில், மிகவும் பழமையானது. இருப்பினும் சமீபத்தில் சீரமைக்கப்பட்ட இந்த ஆலயம் அழகாகவே விளங்குகிறது. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலய முகப்பில் இறைவன் சன்னிதியை தரிசித்தபடி கருடாழ்வார் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.

    முன் மண்டப வாசலில் இடதுபுறம் கிருஷ்ணரும், வலதுபுறம் ஆஞ்சநேயரும் வீற்றிருக்கின்றனர். அடுத்துள்ள அர்த்த மண்டபத்தில் இடதுபுறம் விஷ்ணு துர்க்கையின் திருமேனி உள்ளது. கருவறையில் வரதராஜப் பெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். இங்கு பெருமாளுக்கு நான்கு கரங்கள். மேல் இரண்டு கரங்களில் சங்கு, சக்கரத்துடன் காட்சி தரும் இறைவன், தனது வலது கீழ் கரத்தில் அபய முத்திரையுடன் சேவை சாதிக்கிறார். மேலும் தனது இடது கீழ் கரத்தை இடையில் ஊன்றியபடி காட்சி தருகிறார். பெருமாளின் இருபுறமும் ஸ்ரீதேவியும், பூ தேவியும் உள்ளனர்.

    இங்கு தினசரி இரண்டு கால பூஜைகள் நடை பெறுகின்றன. வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி 30 நாட்கள் உள்ளிட்ட சிறப்பு நாட்களில், பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த ஆலயத்தில் உள்ள இறைவனுக்கு உற்சவ மூர்த்தி இல்லை என்பதால், சுவாமி வீதி உலா வருவம் நிகழ்வு இங்கு கிடையாது.

    ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள்

    தங்கள் வீட்டில் திருமண வயதை நெருங்கியும், திருமணம் ஆகாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெற வேண்டி, இங்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஏராளம். அவர்கள் வேண்டிக்கொண்ட சில வாரங்களிலேயே திருமணம் கை கூடிவிடுகிறது. அதனால் மகிழ்ச்சியும் பெற்றோர், பிள்ளைகளின் திருமணத்தை இறைவனின் சன்னிதியில் வைத்தே நடத்தி விடுகின்றனர். தங்களது பிரார்த்தனை நிறைவேறியதும், தேங்காய் துருவல் நைவேத்தியம் செய்து, அதை பக்தர்களுக்கு வினியோகம் செய்கின்றனர். தவிர புளியோதரை, பொங்கல், தயிர்சாதம் போன்றவற்றையும் நைவேத்தியமாக படைப்பது உண்டு.

    இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர். வியாழக்கிழமை தோறும் வெண்ணெய் சாத்தப்பட்டு, சிரித்த கோலத்தில் காட்சி தரும் இந்த ஆஞ்சநேயரிடம் பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை சமர்ப்பிக்கின்றனர்.

    தங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும். தங்களின் கடன் தொல்லை தீர வேண்டும். பயிர் செழித்து வளர வேண்டும் என்று பக்தர்கள் வைக்கும் பலவிதமான கோரிக்கைகளை, இத்தல ஆஞ்சநேயர் தவறாமல் நிறைவேற்றித் தருவதாக, பக்தர்கள் அனைவரும் சிலிர்ப்போடு கூறுகின்றனர்.

    தங்களது கோரிக்கை நிறைவேறியதும் ஆலயம் வரும் பக்தர்கள், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டியும், வடை மாலை சாத்தியும் தங்கள் நன்றியை செலுத்திவிடுகின்றனர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தளிஞ்சி என்ற இந்த தலம்.
    நம் பயங்கள் அனைத்தையும் போக்கி, நமக்கு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து செல்வங்களையும் நன்மைகளையும் அளிக்கும் “ஸ்ரீ முருதேஸ்வரர்” சிவன் கோவிலை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.
    உலகநாதனாகிய சிவபெருமான் அபிஷேக பிரியன் என்பதை நாம் அனைவரும் அறிவோம். சிவபெருமான் நமக்கு வரும் அத்தனை பயங்களையும் நீக்கும் வல்லமை கொண்டவர். குறிப்பாக சிவ பக்தர்களுக்கு மரணபயம் என்பதே இருக்காது. அப்படி நம் பயங்கள் அனைத்தையும் போக்கி, நமக்கு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து செல்வங்களையும் நன்மைகளையும் அளிக்கும் “ஸ்ரீ முருதேஸ்வரர்” சிவன் கோவிலை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

    500 ஆண்டுகளுமேல் பழமையான இக்கோவிலின் இறைவன் “முருதேஸ்வரர்” என அழைக்கப்படுகிறார். புராணங்களின் படி சிவபெருமானிடமிருந்து பிராண லிங்கத்தை பெற்ற ராவணன் அதை இலங்கைக்கு கொண்டு சென்று ஸ்தாபிக்க தென்திசை நோக்கி பயணமானான். இந்த பிராண லிங்கத்தை இலங்கைக்கு ராவணன் கொண்டு சென்று ஸ்தாபிப்பதை தடுக்க, ராவணன் சந்தியாகால பூஜை செய்யும் வேளையில், அந்தண இளைஞன் வேடத்தில் வந்த விநாயகர் தனது தந்திரத்தால் இந்த லிங்கத்தை இப்பகுதியில் ஸ்தாபித்து விட்டார். பூஜை முடிந்து திரும்பி வந்த ராவணன், லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டதை கண்டு அதிர்ந்து தனது இருபது கைகளால் இந்த லிங்கத்தை எடுக்க முயன்ற போது அச்சிவலிங்கம் நான்காக உடைந்தது. அதில் ஒரு பகுதி இக்கோவிலின் மூலவர் விக்ரகம் ஆனதாக கூறப்படுகிறது.

    கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இக்கோவிலுக்கு 20 நிலைகள் கொண்ட அழகிய வடிவமைப்புடன் கூடிய மிக உயரமான ராஜகோபுரம் இருக்கிறது. இக்கோவிலுக்கு பின்பகுதியில் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய சிவன் சிலை இருக்கிறது. இதர தெய்வங்களுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. சனிபகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது.

    தல சிறப்பு

    இந்த கோவிலுக்கு குழந்தை பாக்கியம், சிறந்த கல்வி, திருமணம் நடக்க, போன்ற பல வேண்டுதல்களோடு பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களை அவர்களின் குடும்பத்தோடு அமர்த்தி “சர்வதேவ பூஜை” என்ற சக்திவாய்ந்த தோஷ நிவர்த்தி பூஜை செய்யப்படுகிறது. இப்பூஜையின் போது நைவேத்தியமாக “எள், நெய், வெல்லம், பச்சை பயறு, ஏலக்காய்பொடி கலந்த “கஜ்ஜாய பிரசாதம்” படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது.

    எமபயம் மற்றும் நோய்கள் நீங்க சிவன் மற்றும் பார்வதிக்கு “ருத்ர அபிஷேகம்” செய்கின்றனர். இங்குள்ள கோவிலில் அணையா தீபம் எரிகிறது. இதில் எண்ணெயை ஊற்றி, நாணயங்களை போட்டு, தங்களின் முக தோற்றம் அவ்வெளிச்சத்தில் தெரிகின்றதா என பக்தர்கள் பார்க்கிறார்கள். அப்படி தங்களின் உருவம் தெரிந்தால் தங்களுக்கு செல்வ செழிப்பு ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    கோவில் அமைவிடம் :

    ஸ்ரீ முருதேஸ்வரர் கோவில் கர்நாடக மாநிலத்தில், உத்தர கன்னட மாவட்டத்தில், பட்கல் என்கிற ஊரில் அமைந்துள்ளது. இங்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

    கோவில் நடை திறந்திருக்கும் நேரம் :

    காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணிவரை
    மதியம் 3.00 மணி முதல் இரவு 8.15 வரை

    கோவில் முகவரி :

    ஸ்ரீ முருதேஸ்வரர் கோவில்,
    பட்கல், உத்தர கன்னட மாவட்டம்
    கர்நாடகா - 581350

    தொலைபேசி எண் :

    422 2615258
    422 2300238
    மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் வலங்கைமான் மகா மாரியம்மனை வேண்டிக்கொண்டால் தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
    சுவாமி : அருள்மிகு மகா மாரியம்மன்

    தலச்சிறப்பு : மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் இந்த அம்பாளை வேண்டிக்கொள்வர். நோய் குணமானவுடன், 'பாடைகாவடி' எடுத்து பிரார்த்தனையை நிறைவேற்றுவர். பக்தர்கள், "தன் உடல் நலமடைந்தால் உற்சவ காலத்தில் பாடை மீது படுத்து ஆலயத்தை வலம் வருவதாக வேண்டிக் கொள்வர்". பங்குனி மாதம் நடைபெறும் உற்சவத்தின் போது ஆயிரக்கணக்கான பாடை வழிபாடுகள் நடைபெறும்.

    உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் பாடை மீது படுக்க, கயிறால் கட்டுவர். பிறகு சுமந்து வருவர். கொள்ளிச் சட்டி எடுக்க வேண்டிய முறை உள்ளவர் அதனை எடுத்துக் கொண்டு முன்னால் வருவார். இவர்கள் ஆலயத்தை வலம் வந்ததும் பாடை பிரிக்கப்படும். பிரித்ததும் மஞ்சள் நீரைத் தெளிக்க, படுக்கும் போது மயக்கமுற்றவர் தெளிந்தெழுவார். வேண்டுதல் நிறைவேற்றப்பட்டதும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவார்கள். இப்படிப்பட்ட பாடைக் காவடி வழிபாடுகளை ஏற்பதுதான் இந்த மாரியம்மனுக்குச் சிறப்பாகும்.

    தல வரலாறு : வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் காதக் கவுண்டர் என்பவர் வசித்து வந்தார். அவர் மனைவி பெயர் கோவிந்தம்மாள். இருவரும் இறைபக்தி மிக்கவர்கள். காதக் கவுண்டர் விவசாய வேலை செய்து வந்தார். அவர் மனைவி பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று தின்பண்டங்கள் விற்கும் அங்காடி வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்திற்காகப் புங்கஞ்சேரிக்கு கோவிந்தம்மாள் சென்றிருந்தார். அன்று வெள்ளிக்கிழமை, நல்ல வியாபாரம் நடந்தது நெல்லும், காசும், நிறையக் கிடைத்தன. எல்லாம் இறையருள் என்றெண்ணிக்கொண்டு மகிழ்ச்சியாக, அங்குள்ள ஒரு குளத்திற்கு குளிக்கச் சென்றார்.

    அப்போது, ஒரு பிராமணரும் அவரது மனைவியும் குழந்தையுடன் அங்கிருந்த அடைக்கலங்காத்த அய்யனார்கோயில் பக்கம் போவதைப் பார்த்தார். குளித்துவிட்டுக் கரையேறிய பின் அய்யனார்கோயில் பக்கமிருந்து குழந்தை அழும் குரலைக் கேட்டார் கோவிந்தம்மாள். அங்கே விரைந்து சென்ற கோவிந்தம்மாள், பெண் குழந்தை ஒன்று அங்கே அழுது கொண்டு இருப்பதைக் கண்டாள். தெருக்காரர்கள் ஓடி வந்தனர், குழந்தையைக் கொண்டு வந்து விட்டவர்களைத் தேடிப் பார்த்தனர். அங்கு யாரும் தென்படவில்லை. அழுது கொண்டிருந்த அந்தக் குழந்தையைக் கோவிந்தம்மாள் தூக்கினாள். குழந்தை அழுவதை மறந்து அழகாகச் சிரித்தது.

    அந்தக் குழந்தையின் அழகில் மயங்கிய அத்தெருவாசிகள் அனைவரும் அக்குழந்தையைத் தாமே வளர்க்க வேண்டுமென்று போட்டியிட்டனர். கடைசியாக அந்தக் தெரு நாட்டாண்மைக்காரர் வளர்ப்பார் என்ற முடிவுக்கு வந்தனர். தனக்கு குழந்தை கிடைக்கவில்லையே என்று கோவிந்தம்மாளுக்கு வருத்தம். புங்கஞ் சேரியில் கோழிகளும், ஆடு, மாடுகளும் திடீரென இறக்கத் தொடங்கின பலருக்கு அம்மை நோய் தாக்கியது. அய்யனார் கோயிலில் கிடைக்கப் பெற்ற அந்தப் பெண் குழந்தைக்கும் அம்மை வார்த்து விட்டது, ஊரே பெரும் துயரம் அடைந்தது. இந்நிலையில் ஒருவர் ஆவேசம் வந்து, அந்தப் பெண் குழந்தையைக் கோவிந்தம்மாளிடம் கொடுத்துவிட வேண்டும். அப்போதுதான் இந்த ஊர் நலம் பெறும் என்று கூறினார்.

    ஊடனே கோவிந்தம்மாளை அழைத்து அக்குழந்தையைக் கொடுத்துவிட்டனர். குழந்தையை எடுத்து வந்து சீதளா எனப் பெயரிட்டுக் கோவிந்தம்மாள் வளர்க்கத் தொடங்கினாள். ஆனால் கடுமையான அம்மையால் மூன்றாம் நாள் அக்குழந்தையின் உயிர் பிரிந்து விட்டது. ஆறாத்துயரம் அடைந்த கோவிந்தம்மாளும் அவர் கணவரும், குழந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து தம் வீட்டு கொல்லையில் அடக்கம் செய்து விட்டனர். (சிலர் அக்குழந்தை ஏழரை ஆண்டுகள் கோவிந்தம்மாள் வீட்டில் வளர்ந்து பல அற்புதங்களைச் செய்து, பின்னரே இறந்ததாகவும் கூறுகிறார்கள்).

    பின்னர், குடமுருட்டி ஆற்றில் நீராடிவிட்டு வருவோரில் சிலர், கோவிந்தம்மாள் வீட்டுக் கொல்லைப்புறம் வந்த போது ஆவேசமாக வந்து ஆடினர். அவர்கள் நான்தான் மாரியம்மன் குழந்தை வடிவில் இங்கு வந்தேன். என்னை வழிபடுவோருக்கு அருள் புரிவேன் என்று கூறினார். அன்தபடி குழந்தையைச் சமாதி செய்த இடத்தில் கீற்று கொட்டகை போடப்பட்டது மக்கள் வந்து வழிபடத் தொடங்கினர் பின்னர் அவ்விடத்தில் கோயிலும் எழுப்பப் பெற்றது சீதளாதேவி மகாமாரியம்மன் கோயிலாகப் பெயர் பூண்டு வரந்தரும் தெய்வமாக அன்னை பராசக்தி அங்கே விளங்கலானாள். அதுவே வலங்கைமான் மாரியம்மன் கோயில் தோன்றி வளர்ந்த வரலாராக கூறப்படுகிறது.

    நடைதிறப்பு : காலை 5.30 மணி முதல் பிற்பகல் 1.00 வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை, ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் நடைசாத்தப்படுவது இல்லை.ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 11.00 மணி வரை நடைதிறந்து இருக்கும்.


    கோயில்முகவரி : அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்,
    வலங்கைமான் - 612 804,
    திருவாரூர் மாவட்டம்.

    தொலைபேசி எண் : 04374-264575
    பச்சைப்பசேல் வயல் வெளிகள், தென்றல் வருடும் நெற்கதிர்கள், மெல்லிய ரீங்காரத்துடன் அசைந்தாடும் கரும்புத் தோட்டங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் ஊரின் நடுவே அமைந்துள்ளது இந்த அழகிய காமாட்சிபுரம் ஆலயம்.
    ஒரு சமயம் ஏதோ காரணமாக இறைவனுடன் அன்னை காமாட்சி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாள்.

    இறைவியின் வாக்குவாதம் இறைவனுக்குப் பிடிக்கவில்லை. கோபமடைந்த இறைவன் இறைவியை பூலோகம் செல்லும்படி சபித்தார். வேதனையடைந்த இறைவி, இறைவனிடம் “நான் தங்களை வந்தடைவது எப்போது?” எனக் கேட்டாள்.

    கோபம் தணிந்த ஈசன் “பந்தணைநல்லூருக்கு அருகே நான் விசுவநாதர் என்ற நாமத்துடன் கோவில் கொண்டுள்ளேன். அங்கு வந்து நீ என்னை பூஜிப்பாயாக!” என அருளினார்.

    இதையடுத்து இறைவி, இத்தலம் வந்து இறைவனை நோக்கி தவமிருந்து பூஜை செய்தாள்.

    மனம் குளிர்ந்த இறைவன், அன்னை காமாட்சியை தன்னுடன் இணைத்துக் கொண்டார். அந்தத் தலம் ‘காமாட்சிபுரம்’ என அன்னையின் பெயராலேயே அழைக்கப்படலாயிற்று.

    பச்சைப்பசேல் வயல் வெளிகள், தென்றல் வருடும் நெற்கதிர்கள், மெல்லிய ரீங்காரத்துடன் அசைந்தாடும் கரும்புத் தோட்டங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் ஊரின் நடுவே அமைந்துள்ளது இந்த அழகிய ஆலயம்.

    சிறிய கோபுரத்துடன் கூடிய அழகிய முகப்பு மண்டபம், நம் கண்களைக் கவரும். கிழக்கு திசை நோக்கி அமைந்த பழமையான இந்த ஆலயத்தின் முகப்பைத் தாண்டி உள்ளே சென்றால், விசாலமான பிரகாரம் உள்ளது. அடுத்துள்ள மகாமண்டபத்தில் வலதுபுறம் இறைவி விசாலாட்சி நின்ற கோலத்தில் புன்னகை தவழ அருள்பாலிக்கிறாள். இறைவியின் கருவறை நுழைவு வாசலின் இருபுறமும் துவாரபாலகியரின் சுதை வடிவத் திருமேனிகள் உள்ளன. இத்தலத்தின் பெயருக்குக் காரணமான அன்னை காமாட்சியை, இறைவி விசாலாட்சியின் கோஷ்டத்தில் தரிசிக்கலாம்.

    விசுவநாதர், விசாலாட்சி

    அர்த்த மண்டபத்தின் முன் நந்தியும், பலி பீடமும் இருக்கிறது. நுழைவு வாசலின் இருபுறமும் துவாரபாலகர்களின் அழகிய திருமேனிகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. கருவறையில் இறைவன் காசி விசுவநாதர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி தன்னைத் தானே பூஜை செய்து கொண்டவர் என பக்தர்கள் கூறுகின்றனர்.

    பிரகாரத்தின் மேற்கு திசையில் விநாயகர், முருகன், வள்ளி- தெய்வானை, மகாலட்சுமி கஜலட்சுமி ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்கின்றனர். வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரரின் சன்னிதி உள்ளது. கிழக்கில் சனீஸ்வரனுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. எனவே இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் இல்லை. பைரவர், சூரியன் திருமேனிகளும் கிழக்குப் பிரகாரத்தில் உள்ளன.

    தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடக்கிறது. சிவராத்திரி, நவராத்திரி, மார்கழி மாதம், சோம வாரம், கார்த்திகை போன்ற நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி பவுணர்மியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

    ஊடல் காரணமாக கணவனைப் பிரிந்த இறைவி, மீண்டும் அவருடன் சேர்ந்த தலம் இது. எனவே பிரிந்து வாழும் தம்பதியர் இத்தலத்து இறைவன் - இறைவியை பிரார்த்தனை செய்தால் மீண்டும் அவர்கள் இணைந்து வாழ்வர் என்பது நம்பிக்கையாக திகழ்கிறது.

    தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் - பந்தநல்லூர் பேருந்துத் தடத்தில் பந்தநல்லூருக்கு வடமேற்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது காமாட்சிபுரம்.
    கருங்கல்லால் ஆன பிரமிடு வடிவ கருவறைக் கோபுரங்கள் கொண்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் உள்ள சாயா சோமேஸ்வரர் திருக்கோவில்.
    பகல் நேரம் முழுவதும் தூணின் நிழல் சிவபெருமான் மீது விழும் அதிசயக் கோவில், சூரியனின் மனைவி சாயா வழிபடும் இறைவன், சிவன் - விஷ்ணு - சூரியன் ஆகிய மூவருக்கும் முக்கோண அமைப்பில் அமைந்த ஆலயம், கருங்கல்லால் ஆன பிரமிடு வடிவ கருவறைக் கோபுரங்கள் கொண்ட கோவில், ராமாயணம், மகாபாரதக் காட்சிகள் தூணில் சிற்பங்களாக அமைந்துள்ள திருத்தலம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் உள்ள சாயா சோமேஸ்வரர் திருக்கோவில்.

    புராண வரலாறு :


    இக்கோவிலை சூரியனின் மனைவியான சாயாதேவி வழிபடுவதாக தல வரலாறு சொல்கிறது. ‘சாயா’ என்பதற்கு ‘நிழல்’ என்று பொருள். அதன் படியே சுவாமி சன்னிதியின் எதிரே சூரியன் பயணம் செய்ய, ஏழு குதிரைகளுடன் கூடிய பீடம் மட்டுமே அமைந்துள்ளது. சிலை வடிவம் இல்லை. இந்த ஐதீகத்தில் குண்டூர் சோழர்கள் ஆட்சியில் எழுப்பப்பட்டதுதான் இந்த பனகல் சாயா சோமேஸ்வரர் திருக்கோவில் ஆகும்.

    கி.பி. 1040 முதல் 1290-ம் ஆண்டுகளில் இந்தப் பகுதியில் ஆட்சி செய்த குண்டூர் சோழர்கள் காலத்தில், இங்கு எண்ணற்ற ஆலயங்கள் எழுப்பப்பட்டன. அதில் பனகலில் மட்டும் இரண்டு சிவாலயங்கள் கட்டப்பட்டன. அதில் ஒன்று சாயா சோமேஸ்வரர் திருக்கோவில். இது முக்கோண வடிவிலும், மூன்று கருவறை விமானங்கள், மூன்று பிரமிடு வடிவிலும் கருங்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.

    களப்பிரர்கள் காலத்தில் தமிழகத்தில் இருந்து தெலுங்கு தேசத்திற்குச் சென்றவர்கள் சோடர்கள் எனும் தெலுங்குச் சோழர்கள். சிற்றரசர் களான இவர்கள் பொத்தப்பி, வெலநாண்டு, நெல்லூர் முதலிய இடங்களில் ஆட்சி செய்தனர்.

    இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் தெலுங்கு சிற்றரசர்களான இவர்களில் ஒருவரே குண்டூர் மாவட்டத்தில் ஆட்சி செய்த மகாமண்டலீசுவர பல்லய சோட மகாராஜா ஆவார். இவரின் வழிவந்தவர்களே குண்டூர் சோழர்கள் என கூறப் படுகிறது. இவர்கள் பனகலைத் தலைநகராகக் கொண்டு, நல்கொண்டா, மெகபூப் நகர் மற்றும் கம்பம் மாவட்டங்களில் ஆட்சி செய்து வந்தனர்.

    பனகலில் கலைநயம் கொண்ட சாயா சோமேஸ்வரர் மற்றும் பச்சலா சோமேஸ்வரர் திருக்கோவில்கள் எழுப்பப்பட்டன. அதேபோல, விவசாயத்திற்காக உதய சமுத்திரம் என்ற பிரமாண்ட ஏரியும் உருவாக்கப்பட்டது.



    கி.பி. 1290-ல் ஆட்சிக்கு வந்த தெலுங்கு மன்னர் பரம்பரையைச் சார்ந்த காக்கத்தியர்கள் ஆட்சிக் காலத்தில், இக்கோவிலுக்கு சாசனங்கள் எழுதப்பட்டன. கோவில் திருப்பணிகளும் நடைபெற்றன. ஆலயத்தில் குண்டூர் சோழர்கள் மற்றும் காக்கத்தியர்கள் கால கலைகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாலயத்தின் பெரும்பகுதி கலைச்சிற்பங்கள், டெல்லி சுல்தானின் காலத்தில் சிதைக்கப்பட்டுள்ளன.

    ஆலய அமைப்பு :

    பனகல் என்ற ஊரின் தென்பகுதியில் சாயா சோமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் கிழக்கே, வற்றாத திருக்குளம் உள்ளது. இதற்கான நீர், ஸ்ரீசைலத்தில் இருந்து பனகல் உதய சமுத்திரம் ஏரிக்கு வந்து, அதிலிருந்து இத்திருக்குளத்திற்கு வந்து சேருகின்றது. கோவிலின் வாசல் மூன்று புறம் இருந்தாலும், தெற்கு வாசலை நோக்கியே ஆலய நுழைவு வாசல் அமைக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு நோக்கியபடி, சாயா சோமேஸ்வரர் காட்சி தருகிறார். எதிரில் நந்தி, பலிபீடம் உள்ளது. ஆலயத்திற்கு வடக்கு நோக்கிய விஷ்ணு சன்னிதி, மேற்கு நோக்கிய சூரியன் சன்னிதி இருக்கின்றன. போரில் ஏற்பட்ட சிதைவால், அங்கு பீடங்கள் மட்டுமே காணப்படுகின்றன. கருவறை முன்புறம், விநாயகர், முருகன் பீடங்கள் அமைந்துள்ளன. கருவறையில் ஐந்து படிகள் கீழே, சாயா சோமேஸ்வரர் பூமியோடு தன்னைப் பிணைத்துக் கொண்டு, லிங்கத் திருமேனியில் நமக்கு காட்சியளிக்கிறார்.

    சிவன், விஷ்ணு, சூரியன் சன்னிதிகளின் எதிரே மையமாக, நான்கு நாற்பட்டை வடிவத் தூண்கள் அமைந்துள்ளன. இந்தத் தூண்களின் கற்கள் அபூர்வமானதாக உள்ளன. இதில் மகாபாரதம், ராமாயணம் சிற்பங்கள் வெகு நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து வெளிப்படும் ஒளியே, கருவறையில் நிழலாக தோன்றுவதாக நம்பப்படுகிறது.

    இவ்வாலயத்தில் அமைந்திருந்த விஷ்ணு, சூரியன், நந்திகள், அம்மன் சிலைகள் டெல்லி சுல்தானியர்களின் காலத்தில் நடைபெற்ற போரால் சிதைந்துள்ளன. அவற்றுக்கெல்லாம் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஆலயத்தில் விநாயகர், குமாரசுவாமி, சாயா சோமேஸ்வரர், மகாவிஷ்ணு, சூரியன், யோகினி மாதா, நடராஜர், பைரவர், காளிக்கா மாதா ஆகிய சன்னிதிகள் அமைந்துள்ளன. ஆலய வளாகத்தில் தனியே சிறிய சிவாலயம் ஒன்றும் உள்ளது. தலமரமாக அவதம்பர் என்ற அபூர்வ மரம் உள்ளது. இதில் தத்தாத்ரேயர் தவமியற்றுவதாக நம்பப்படுகிறது. எதிரே திருக்குளம் பிரமாண்டமாக அமைந்துள்ளது.



    உயிரோட்டமான நந்தி :

    ஆலய வளாகத்தில் 7 நந்திகள் தலை வெட்டப்பட்ட நிலையிலும் கம்பீரமான தோற்றத்துடன் காட்சியளிக்கின்றன. அதில் முதல் நந்தியை, கழுத்தில் கைகளால் தடவிப் பார்த்தால், உயிருள்ள நந்தியைத் தழுவுவது போன்று உணர்வு ஏற்படுகிறது. இது நம் முன்னோர்களின் கலைத் திறமையை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

    தூண் சிற்பங்கள் :

    மூன்று கருவறைக்கும் மையமாக உள்ள பகுதியில் சதுர வடிவ நான்கு தூண்கள் அமைந்துள்ளன. இவை நான்குமே சிற்பக்கலைகளின் சுரங்கமாக உள்ளன. சிறிய இடத்திற்குள் ராமாயணம், மகாபாரதம் இவற்றினை நம் கண்முன்னே கொண்டு வருகின்றன. அதில் மானாக உருவம் எடுத்த மாரீசனை ராமன் கொல்லுதல், மானின் தலை கீழே விழ, அதிலிருந்து மாரீசன் வெளிப்படுதல் போன்ற காட்சி அருமையாக வடிக்கப்பட்டுள்ளது. இதே போல, நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் விலங்குகளை, ஒரே கட்டத்தில் செதுக்கியிருப்பது, சுற்றுச்சூழல் அறிவியலில் நம்மவர்கள் நிபுணர்களாக இருந்துள்ளனர் என்பதை உறுதிசெய்யும் விதமாக இருக்கிறது.

    ஆலய நிழல் அதிசயம் :

    பகல் நேரம் முழுவதும் லிங்கத் திருமேனியின் மீதும், அதன் பின் புறம் சுவரிலும், ஒரு தூணின் நிழல் விழுகின்றது. அதுமட்டுமின்றி, பகல் முழுவதுமே இந்த தூணில் நிழல் ஒரே இடத்திலேயே இருப்பதுதான் பெரிய ஆச்சரியம். பவுர்ணமி நேரத்திலும் இந்த நிழல் விழுவதாக கோவில் பக்தர்கள் கூறுகின்றனர். கருவறைக்கு முன்புறம் நான்கு பட்டை வடிவ தூண்கள் உள்ளன. ஆனால் கருவறைக்குள் விழும் நிழல் எந்த தூணுக்கானது என்பதை கண்டறிய முடியவில்லை. மேலும், கருவறை வாசலில் நின்றால், நம்முடைய நிழல் இண்டாகவும், சுவாமி மீது விழும் நிழல் அதே நிலையிலும் இருப்பது உலக அதிசயம்தான்.

    இவ்வாலயம் தெலுங்கானா மாநில தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. காலை முதல் மாலை வரை இந்த ஆலயத்தை தரிசனம் செய்யலாம்.

    அமைவிடம் :

    தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில், நல்கொண்டாவை அடுத்து 4 கிலோமீட்டர் தொலைவில் பனகல் உள்ளது. ஐதராபாத் நகரில் இருந்து சுமார் 110 கி.மீ., வாரங்கல்லில் இருந்து 145 கி.மீ. தொலைவிலும் நல்கொண்டா இருக்கிறது. ஐதராபாத்தில் இருந்தும், வாரங்கல்லில் இருந்தும் நல்கொண்டா செல்ல அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.
    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இயற்கை எழில் சூழ்ந்த மலைச்சாரலிலே அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. இத்தலத்தில் இறைவன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம்.
    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இயற்கை எழில் சூழ்ந்த மலைச்சாரலிலே அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. எண்ணற்ற சித்தர்கள், தங்கள் தவ வலிமையைப் பெருக்கிக் கொண்ட ஆற்றல் நிறைந்த இடமாக இது விளங்கு கிறது.

    இறைவன் அருள்புரியும் திருத்தலங்களில் இந்த திருமூர்த்தி மலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இத்தலத்தில் இறைவன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம். எனவே கேட்டதெல்லாம் கிடைக்கும். இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் சிறிய குன்றில் சுயம்புவாக அருள்பாலிக்கின்றனர். இது ஒரு குடவரைக் கோவிலாகும். குரு அம்சமான தத்தாத்ரேயர் அவதரித்த புண்ணிய ஸ்தலம் இதுவாகும்.

    சப்த ரிஷிகளில் முதன்மையானவராக விளங்குபவர், அத்ரி மகரிஷி. இவரது தர்மப் பத்தினியாக இருந்தவர் கற்புக்கரசி அனுசுயாதேவி. இவர் அத்ரி முனிவருடன் சேர்ந்து தவ வாழ்க்கை மேற்கொண்ட புனித யோக பூமிதான் திருமூர்த்தி மலை. பதஞ்சலி மகரிஷி, திருமந்திரத்தை அருளிய திருமூலர் மற்றும் குரு தத்தாத்ரேயர் ஆகியோர் அந்த தெய்வீகத் தம்பதியருக்குப் பிறந்த அவதாரப் புருஷர்கள் ஆவார்கள்.

    மும்மூர்த்திகளே தமக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்பது அத்ரி மகரிஷியின் விருப்பம். இவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டும், இவரது மனைவி அனுசுயாதேவியின் கற்பின் மகிமையை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் இங்கு தோன்றினர்.

    ஒரு முறை அத்ரி மகரிஷி வெளியே சென்ற போது, மும்மூர்த்திகளும் அனுசுயாவை தேடி வந்து தங்களுக்கு நிர்வாணமாக பிச்சையிடுமாறு வேண்டினர். அனுசுயாவை தன் கணவனை மனதால் நினைத்து, தீர்த்தத்தை அவர்கள் மீது தெளிக்க மூவரும் குழந்தைகளாக மாறினர். பின் அந்த குழந்தைகளுக்கு நிர்வாணமாக பாலூட்டி, அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்ச்சி நடந்த தலமே திருமூர்த்தி மலை.

    இந்த மலையின் மீது ‘பஞ்சலிங்க அருவி’ என அழைக்கப்படும் அருவி ஒன்றும் உள்ளது. அங்கே மலையின் மீது பஞ்ச லிங்கம் உள்ளது. அத்ரி மகரிஷியும் அவரது மனைவி அனுசுயாவும் தினமும் இந்த பஞ்ச லிங்கத்தை வழிபட்டு வந்துள்ளார்கள். இன்னமும் அவர்கள் தினமும் இந்த பஞ்ச லிங்கத்தை வழிபடுவதாக நம்பப்படுகிறது. மேலும் குரு முனி அகத்தியர் கண்டு வணங்கிய இடமே ‘பஞ்சலிங்கம்’ என வழங்கப்படுகிறது.

    பழனியில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில், உடுமலையில் இருந்து 20 கி.மீ தொலைவில் திருமூா்த்தி மலை அமைந்துள்ளது. உடுமலையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    சென்னை, மயிலாப்பூரில் தெற்கு மாட வீதியில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது, காமாட்சி சமேத வெள்ளீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சென்னை, மயிலாப்பூரில் தெற்கு மாட வீதியில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது, காமாட்சி சமேத வெள்ளீஸ்வரர் ஆலயம். பழமை வாய்ந்த இந்த ஆலயம், மயிலாப்பூரைச் சுற்றி அமைந்துள்ள சப்த ஸ்தான சிவாலயங்களில் மூன்றாவதாக கருதப்படுகிறது.

    மகாபலி சக்கரவர்த்தி மிகப்பெரிய யாகமும், தானமும் செய்தார். அதனால் தன்னுடைய பதவிக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சிய இந்திரன், திருமாலிடம் வேண்டினான். இதையடுத்து வாமன அவதாரம் எடுத்த திருமால், மகாபலியிடம் வந்து மூன்றடி மண் தானமாக கேட்டார். வந்திருப்பது திருமால் என்பதை அறிந்த அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார், மகாபலியை தானம் கொடுக்க விடாமல் தடுக்க முயன்றார்.

    ஆனால் அதையும் மீறி மகாபலி தானம் செய்ய கமண்டல நீரை எடுத்தார். அப்போது சுக்ராச்சாரியார், வண்டு உருவம் எடுத்து கமண்டலத்திற்குள் சென்று, நீர் வரும் பாதையை அடைத்தார். இதையறிந்த திருமால், தர்ப்பை புல் ஒன்றை எடுத்து நீர் வரும் பாதையை குத்தி விட, அதில் சுக்ராச்சாரியாரின் ஒரு கண் பார்வை பறிபோனது.

    இழந்த கண் பார்வை திரும்ப கிடைப்பதற்காக, சிவபெருமானை வேண்டி தவம் செய்தார், சுக்ராச்சாரியார். குருந்த மரத்தின் கீழே சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபனம் செய்து அவர் தவம் செய்த இடம் தற்போதைய மயிலாப்பூர் ஆகும். அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், சுக்ராச்சாரியாருக்கு கண் பார்வையை மீண்டும் வழங்கி அருள்புரிந்தார். அந்த இடத்தில் தான் தற்போது வெள்ளீஸ்வரர் ஆலயம் இருக்கிறது.

    ஆலயம் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. உள்ளே தெற்கு நோக்கிய தனிச் சன்னிதியில் விநாயகப் பெருமான் சித்தி, புத்தி சமேதராக நின்ற கோலத்தில் அருள்கிறார். அவருக்கு முன்பாக தென்கூர் செல்வ விநாயகர் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இது வேறு எங்கும் காணக் கிடைக்காத காட்சியாகும்.

    கிழக்கு நோக்கியபடி இருக்கும் கரு வறையில் வெள்ளீஸ்வரர் லிங்கத் திருமேனியுடன் காட்சி தருகிறார். நாகாபரண அலங்காரத்தில் சிவபெருமானை தரிசிப்பது சிறப்பு வாய்ந்ததாகும். சிவபெருமான் சன்னிதி எதிரே நந்தியம் பெருமான் தனி மண்டபத்தில் அருள்கிறார். நந்திக்கு பின்பாக கொடிமரம், பிரம்ம சக்தி பீடம் உள்ளது. கருவறை நுழைவு வாசல் முன்பு இருபுறங் களிலும் விநாயகர், முருகப்பெருமான் இருக்கிறார்கள்.

    சிவபெருமான் சன்னிதிக்கு வலது புறத்தில், தெற்கு நோக்கிய திசையில் தனிச் சன்னிதியில் காமாட்சி அம்மன் எழுந்தருளியுள்ளார். நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருளும் இந்த அம்மன், மேல் இரு கரங்களில் மலரை ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரை காட்டியும் அருள்பாலிக்கிறாா். அம்பாளின் கருவறையில் உள்ள ஸ்ரீசக்கரம், காஞ்சி சங்கராச்சாரியாரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    சுவாமியின் கருவறை கோஷ்டத்தில் மகா கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன், கோமுகியில் சண்டிகேஸ்வரர் அருள்கின்றனர். அதற்கு அடுத்ததாக துர்க்கையம்மன் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறாள். உள் பிரகாரத்தில் விநாயகர், சமயக்குரவர்கள் நால்வர், சிவசூரியன், சப்த கன்னியர், வீரபத்திரர், உண்ணாமுலையம்மனுடன் அண்ணாமலையார், சரஸ்வதி, லட்சுமி, சோமாஸ்கந்தர், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் உள்பட மேலும் பல தெய்வங்களின் திருமேனிகள் உள்ளன.

    ஆலயத்தின் தென்மேற்கு பகுதியில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமியை தனிச் சன்னிதியில் தரிசிக்கலாம். இந்த சன்னிதியின் முன்பாக கொடி மரம், பலிபீடம் இருக்கிறது. சன்னிதியின் முன்பாக அருணகிரிநாதர், வீரபாகு ஆகியோர் இரு பக்கங்களிலும் உள்ளனா். முத்துக்குமார சுவாமி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். மேல் இரு கரங்களில் வேல், சேவல்கொடி தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரை காட்டியும் அருள்பாலிக்கிறார்.

    இந்தச் சன்னிதியில் நேர் எதிரே, சிவாகாமி சமேத நடராஜர் அருள்கிறார். உள் பிரகாரத்தில் இருந்து வெளியே வருகையில் பைரவரை தரிசனம் செய்யலாம். வெளிப்பிரகாரத்தில் சுக்ரேஸ்வரர் தனிச் சன்னிதியில் இருக்கிறார். குருந்த மரத்தடியில் லிங்க வடிவில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை, நின்றபடி வழிபடும் சுக்ராச்சாரியாரின் சிலை உருவத்தையும் நாம் காண முடியும்.

    இவ்வாலயத்தில் விசாலமான கல்மண்டபம் உள்ளது. இதில் தான் விழாக் காலங்களில் எம்பெருமான் மற்றும் உபய உற்சவ விக்கிரகங்கள் வீதி உலா காணும் முன் அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த மண்டபத்தின் வெளியில் உள்ள தூணில் ஆஞ்சநேயர் மற்றும் விநாயகர் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தாற்போல் சரபேஸ்வரர் சன்னிதி உள்ளது. அதன் எதிரே சனீஸ்வரர் அருள்கிறார். நவக்கிரகங்களும் உள்ளன. ஆலயத்தின் தல விருட்சம் குருந்த மரம் ஆகும்.

    வழிபாட்டு பலன்கள் :

    * சுக்ரேஸ்வரர் சன்னிதியில் மன முருக வேண்டிக் கொண்டு, அங்குள்ள கல்வெட்டில் உள்ள பதிகங்களைப் பாடினால் கண் பார்வை குறைபாடுகள் நீங்குவதாக பலனடைந்தவர்கள் கூறு கின்றனர்.

    * நினைத்த காரியம் நிறைவேறவும், மனக்குறைகள் நீங்கவும், திருமணம் நடக்கவும் காமாட்சி அம்மனை வேண்டி பலனடைகின்றனர்.

    * செல்வம் பெருகவும், திருமணத்தடை நீங்கவும் வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமியை வழிபடுகின்றனர்.

    * எதிரிகளின் தொல்லை, பயம் அகலவும், காரிய சித்தி பெறவும் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்குகின்றனர்.

    * ஏழரைச் சனியில் இருந்து நிவாரணம் பெற ஒவ்வொரு சனிக்கிழமையும் நெய் அல்லது எள் எண்ணெய் கொண்டு விளக்கேற்றி சனீஸ்வரரை வழிபடு கிறார்கள்.

    * காரியத்தடை நீங்க, வேலை வாய்ப்புப் பெற, வெளிநாட்டில் வேலை கிடைக்க ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபடுகின்றனர்.

    * குடும்பத் தகராறு நீங்கவும், வழக்கில் வெற்றி பெறவும், இழந்த செல்வத்தை மீட்கவும் வராகி அம்மனை தொழுகின்றனர்.

    சரபேஸ்வரர் சன்னிதி :

    இரண்யகசிபுவை வதம் செய்த பிறகும், நரசிம்மரின் உக்கிரம் அடங்கவில்லை. அவரது உக்கிரத்தை தணிக்கும் பொருட்டு, சிவபெருமான், சரபம் என்னும் பட்சியாக உருவம் கொண்டார். ‘சரபம்’ என்பதற்கு ‘சிங்கத்தை அடக்கக் கூடிய எண்கால் பறவை’ என்று பொருள். எட்டுக் கால்களும், இரண்டு பெரிய இறக்கைகளும், சிங்க முகமும், நீண்ட மூக்கும், நரியின் வாலும் கொண்ட பட்சியாக உருவெடுத்த சிவபெருமான், தன்னுடைய எட்டு கால்களாலும், நரசிம்மரைப் பற்றி, அலகுகளால் கிழித்து, அவரது தோலை உரித்து நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாக புராணங்கள் சொல்கின்றன.

    இந்த சரபேஸ்வரருக்கு, வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் தனிச் சன்னிதி இருக்கிறது. இவருக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு கால வேளையில் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை) சிறப்பான அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடக்கின்றன. இந்தச் சன்னிதியின் வெளியே வலது புறம் பிரத்யங்கிரா தேவியும், இடதுபுறம் சூலினி துர்க்கையும் அருள்கிறார்கள்.

    தினமும் ஆறுகால பூஜை நடைபெறும் இந்த ஆலயம் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
    அருள்மிகு பச்சைவண்ணர் பெருமாள் கோவிலில் பவளவண்ணப் பெருமாளைத் தரிசிக்கும் பக்தர்கள் இந்த பச்சை வண்ணர் பெருமாளையும் ஒரு சேர சேவித்தால் புண்ணியம், என்பது சான்றோர்களின் எண்ணம் ஆகும்.
    சுவாமி : ஸ்ரீ பச்சைவண்ணர் (மரகத வண்ணம்).
    அம்பாள் : மரகதவல்லித் தாயார்.

    தலச்சிறப்பு : இத்திருப்பதியின் நுழைவு வாயில் கிழக்கு நோக்கியும், மூலவர் பச்சை வண்ணர் என்கிற மரகத வண்ணர் அமைந்துள்ள மண்டபவாயில் தெற்கு நோக்கியும், மூலவர் பச்சை வண்ணர் பெருமாள் கிழக்கு நோக்கியும் சேவார்த்திகளுக்குத் தரிசனம் வழங்கிக் கொண்டுள்ளார். தாயார் சந்நிதி தனிச் சந்நிதியாக உள்ளது. தாயார் சந்நிதிக்கு முன்பு பீடத்தில் யந்திரபிரவாசனி (ஸ்ரீசுத்தமந்திரம்) சிலா ரூபத்தில் பிரதிட்டை செய்து வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீனிவாசப்பெருமாள் நின்ற திருக்கோலத்தில் உள்ளார். இங்கு மகாலெட்சுமி தாயார் உற்சவ ரூபத்தில் கஜலட்சுமியாகக் காட்சித் தருகிறார். ஆதிசேசன் காவலாக உள்ளார்.

    தல வரலாறு : தொண்மைக் காலத்தில் திருவட்டாறு என்கிற பகுதி யாதவக்குப்பம் என்று ஆகி, பிறகு அப்பெயர் மருவி தற்போது கோனேரிகுப்பம் என்று வழங்கப்படும் பகுதியானது. பசுக்கள் நிறைந்த யாதவர்கள் நிறைந்த பகுதியாக விளங்கியது. அச்சமயம் மரீச்சி என்னும் மகரிஷி இப்பகுதியில் வாழ்ந்து வந்ததாகவும், அவர் மகாவிஷ்ணுவின் பரமபக்தர் என்றும், அதனால் சதா மகாவிஷ்ணுவை நினைத்துக் கயண்டும், அவரின் புகழைப் பாடிக்கொண்டு இருந்தவர் என்றும், இதனால் இவரின் பக்திக்கு மகிழ்ந்து மகாவிஷ்ணு, இராம அவதாரத்தில் விஷ்ணுரூபத்தில் பச்சைநிற மேனி கொண்டு இந்த மரீச்சி மகரிஷிக்குக் காட்சித் தந்த இடமாகக் இத்திருத்தலம் கருதப்படுகிறது.

    பொது தகவல் : இத்திருத்தலம் திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படவில்லை. ஆனால் பவளவண்ணப் பெருமாளைத் தரிசிக்கும் பக்தர்கள் இந்த பச்சை வண்ணர் பெருமாளையும் ஒரு சேர சேவித்தால் புண்ணியம், என்பது சான்றோர்களின் எண்ணம் ஆகும். திவ்ய தேசங்களில் 2 பெருமாள் உருவங்களில் இவர் ஒருவராகவே காட்சித் தருவது சிறப்பு ஆகும். எனவே பவளவண்ணர் பெருமாளைச் சேவிக்கச் செல்லும் சேவார்த்திகள் பச்சை வண்ணரையும் சேவிக்க வேண்டும் என்ற கருத்தை வலியூட்டுகின்றனர்.

    நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 வரை.


    கோவில் முகவரி :

    அருள்மிகு மரகதவல்லித் தாயார் உடனுறை பச்சைவண்ணர் பெருமாள் திருக்கோவில்,
    பெரிய காஞ்சிபுரம்,
    காஞ்சிபுரம் மாவட்டம்.
    அட்சய திருதியை தொடங்கி, 8 நாட்கள் லட்சுமி தேவி அஷ்டலட்சுமியாக, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தோற்றத்தில் காட்சியளித்து அருள்கிறார். சிறப்பு மிக்க இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.
    கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், அடுவச்சேரியில் அமைந்திருக்கிறது, வாசுதேவபுரம் மகாவிஷ்ணு கோவில். இங்கு அட்சய திருதியை தொடங்கி, 8 நாட்கள் லட்சுமி தேவி அஷ்டலட்சுமியாக, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தோற்றத்தில் காட்சியளித்து அருள்கிறார். சிறப்பு மிக்க இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.

    தல வரலாறு

    விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாக அமைந்தது, பரசுராமர் அவதாரம். பரசுராமர் ஒருமுறை, மகாலட்சுமியைத் தன் கைகளால் தழுவிய நிலையில் இருப்பது போன்ற மகாவிஷ்ணு சிலை ஒன்றை உருவாக்கினார். அதனை ஓரிடத்தில் நிறுவி, ஆலயம் அமைத்தார். பின்னர் அதை வேதியர்களிடம் ஒப்படைத்துச் சென்றார்.

    பரசுராமரிடம் இருந்து அந்தக் கோவிலைப் பெற்றவர்கள், கோவிலுக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் சிறப்பாகச் செய்து, லட்சுமி தேவியின் அருளைப் பெற்றுச் செல்வ நிலையில் உயர்ந்தனர். பிற்காலத்தில் அவர்களது மரபுவழியில் வந்தவர்கள், கோவில் பணிகளில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருக்கத் தொடங்கினர். அதனால், அவர்களுக்கு லட்சுமியின் அருள் கிடைக்காமல் போனது. மேலும் அவர்கள் செல்வத்தை இழந்து, வறுமையில் வாடினர். கோவில் பணிகள் எதையும் செய்யாததாலும், கோவிலுக்கு வந்து வழிபடுபவர்கள் இல்லாமையாலும், அந்த இடம் மனித நடமாட்டமில்லாமல் மாறிப் போனது.

    ஒரு கட்டத்தில் வழிபாடின்றி கிடந்த ஆலயத்தில் பூஜைகளைச் செய்ய, லட்சுமிதேவியே அங்கு வந்தாள். அங்கிருந்த சாலக்குடி ஆற்றில் நீரெடுத்து, கோவில் பணிகள் அனைத்தையும் செய்து வரத் தொடங்கினாள். அப்படி ஒருநாள் லட்சுமி தேவி நீர் எடுத்து வரும்போது, அவரைப் பார்த்து வில்வமங்கள சுவாமிகள் ஆச்சரியமடைந்தார்.

    அவர், லட்சுமி தேவியிடம் “ஆற்றில் இருந்து நீரெடுத்துச் செல்வது ஏன்?” என்று கேட்டார்.

    லட்சுமி தேவி, அங்கிருக்கும் மகாவிஷ்ணு கோவில் குறித்த செய்தியைத் தெரிவித்து, அங்கு கோவில் பணி செய்து வந்தவர்கள், அதனைத் தொடர்ந்து செய்யாமல் விட்டுவிட்ட தகவலையும் சொன்னாள்.

    வில்வமங்கள சுவாமிகள், கோவிலைப் புறக்கணித்தவர்கள் திருந்திட, அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி, அவர்கள் மீது கருணைப் பார்வையைச் செலுத்தி, அவர்களை நல்வழிப்படுத்த லட்சுமிதேவியிடம் வேண்டினார். லட்சுமிதேவியும் அவர் வேண்டுகோளை ஏற்று, அட்சய திருதியை நாள் முதல் எட்டு நாட்களுக்கு, ஆலயத்தில் அஷ்டலட்சுமியாக இருந்து அருள் புரிவதாகவும், அவர்களது வறுமையைப் போக்கி அருளுவதாகவும் கூறினாள்.

    உடனே வில்வமங்கள சுவாமிகள், கோவில் பணிகளைச் செய்து வந்தவர்களை அழைத்து வந்து, அக்கோவிலில் மீண்டும் வழிபாடுகளைச் செய்யும்படி அறிவுறுத்தினார். அவர்களும் சுவாமிகள் சொன்னபடி, கோவில் பணிகளை மீண்டும் செய்யத் தொடங்கினர்.

    பின்னர் ஆலயத்தில் அட்சயதிருதியை தொடங்கி எட்டு நாட்களுக்கு லட்சுமி தேவி, அஷ்டலட்சுமியாக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தோற்றத்தில் அவர்களுக்குக் காட்சிஅளித்தாள். அதனால் கோவில் பணிகள் செய்தவர்களும், கோவிலுக்குச் சென்று வழிபட்டவர்களும் மீண்டும் அனைத்துச் செல்வங்களையும் பெற்று, உயர்ந்த நிலையை அடைந்தனர் என்று இக்கோவிலின் தலவரலாறு சொல்லப்படுகிறது.

    ஆலய அமைப்பு :

    கேரளக் கட்டுமான முறையில் அமைந்த இக்கோவிலின் கருவறையில் மகாவிஷ்ணு நான்கு கைகளுடன் அமர்ந்த நிலையில் இருக்கிறார். இவருக்குப் பின்புறத்தில் லட்சுமி தேவி சிற்பம் இருக்கிறது. அட்சய திருதியை நாளில் தொடங்கி 8 நாட்களுக்கு மட்டும் மகாவிஷ்ணுவின் இடதுபுறத்தில் லட்சுமிதேவி அமர்ந்த நிலையில் காட்சியளிப்பாள்.

    இந்த ஆலயத்தில் மகாவிஷ்ணுவுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இங்கு வந்து வழிபடுபவர்களுக்குப் பயம் விலகி, நீண்ட ஆயுள் கிடைக்கும். மாங்கல்ய பலன், குழந்தைப்பேறு கிடைக்கும். விவசாயம் மற்றும் வணிகம் பெருகும் என்பதுடன் அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும் என்பது பொதுவான பலனாக இருக்கிறது.

    இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், பட்டுத்துணி, கண்ணாடி ஆகியவற்றை வாங்கிக் கோவில் சன்னிதியில் சமர்ப்பித்து வழிபடுகின்றனர். கோவில் அர்ச்சகர்கள், சமர்ப்பிக்கப்படும் பட்டுத்துணி மற்றும் கண்ணாடியை வழிபாட்டிற்குப் பின்பு, மீண்டும் பக்தர்களிடமேத் திருப்பித் தந்துவிடுகின்றனர். இந்தப் பொருட்களை வீட்டின் பூஜையறையில் வைத்தால், வீட்டில் செல்வம் பெருகும் எனும் நம்பிக்கை இருக்கிறது.

    இதே போன்று, சுமங்கலிப் பெண்கள் அரிசி மற்றும் மஞ்சள் ஆகியவற்றைச் சமர்ப்பித்து வழிபடுகின்றனர். அரிசியை மகாவிஷ்ணுவுக்கும், மஞ்சளை லட்சுமி தேவிக்கும் சமர்ப்பிப்பதாகச் சொல்லி, அர்ச்சகர் சொல்லும் மந்திரங்களைச் சொல்லி வழிபடுகின்றனர். இதன் மூலம், வீட்டிலிருக்கும் அனைவருக்கும் நல்ல உடல் நலமும், பொருள் வளமும் கிடைக்கும் என்கின்றனர்.

    இந்தத் திருத்தலத்தில் சித்திரை மாதம் அட்சய திருதியை நாளில் தொடங்கி 8 நாட்கள் லட்சுமிதேவி, அஷ்டலட்சுமியாக அருள்கிறார். அட்சய திருதியை நாள் அன்று வீரலட்சுமி, இரண்டாம் நாளில் கஜலட்சுமி, மூன்றாம் நாளில் சந்தான லட்சுமி, நான்காம் நாளில் விஜயலட்சுமி, ஐந்தாம் நாளில் தான்யலட்சுமி, ஆறாம் நாளில் ஆதிலட்சுமி, ஏழாம் நாளில் தனலட்சுமி, எட்டாம் நாளில் மகாலட்சுமியாக காட்சி தருகிறாள். இந்த எட்டு நாட்களிலும் தாம்பூல சமர்ப்பண வழிபாடு எனும் சிறப்பு வழிபாடு நடத்தப் பெறுகிறது.

    அமைவிடம்

    எர்ணாகுளத்தில் இருந்து ஆலுவா செல்லும் பேருந்தில் அத்தாணி என்னும் இடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து மேற்கே 5 கிலோமீட்டர் தூரம் சென்றால் அடுவச்சேரியை அடையலாம்.
    கல்வியில் ஆர்வமின்றி இருக்கும் மாணவர்களுக்கு, கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கவும், மாணவர்களுக்கான நினைவுத்திறனை அதிகரிக்கவும், மூலிகை மருந்தைப் பிரசாதமாகத் தரும் கோவிலாக தட்சிண மூகாம்பிகை கோவில் திகழ்கிறது.
    கல்வியில் ஆர்வமின்றி இருக்கும் மாணவர்களுக்கு, கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கவும், மாணவர்களுக்கான நினைவுத்திறனை அதிகரிக்கவும், தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றிடவும் மரபு வழியிலான மூலிகை மருந்தைப் பிரசாதமாகத் தரும் சிறப்புமிக்கக் கோவிலாக கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், வடக்கு பரவூரில் (வடக்கன் பரவூர்) அமைந்திருக்கும் தட்சிண மூகாம்பிகை கோவில் திகழ்கிறது.

    தல வரலாறு :

    கொல்லூர் மூகாம்பிகை மீது பரவூர் தம்பிரான் என்பவர் அதிக பக்தி கொண்டிருந்தார். இவர் அடிக்கடி கொல்லூர் சென்று மூகாம்பிகையை வழிபட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். வயதான காலத்தில், அவருக்குக் கொல்லூர் சென்று வருவது மிகவும் கடினமாகிப் போனது.

    அதனால் மனம் வருந்திய அவர், நாள்தோறும் தன்னுடைய மனக்கவலையை நீக்கியருளும்படி மூகாம்பிகையை வேண்டிக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் கனவில் தோன்றிய மூகாம்பிகை, “கொல்லூர் வந்து என்னை வழிபட முடியவில்லையே என்கிற கவலை இனி உனக்கு வேண்டாம். நீ இருக்கும் இடத்திற்கு அருகே எனக்கு ஒரு கோவிலைக் கட்டினால், நான் அங்கு வந்தருள்கிறேன்” என்று தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து, பரவூர் தம்பிரான், பரவூரில் தாமரை மலர்கள் நிரம்பி இருக்கும் ஒரு குளத்தை உருவாக்கி, அதன் நடுவில் கருவறை அமைத்து, அதனுள் மூகாம்பிகை சிலையை நிறுவி இக்கோவிலைக் கட்டியதாகத் தல வரலாறு சொல்லப்படுகிறது.

    கோவில் அமைப்பு :


    சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பாகக் கட்டப்பட்ட இக்கோவிலில் தாமரை மலர்கள் நிரம்பிய குளத்தின் நடுவில் அமைந்திருக்கும் கருவறையில் மூகாம்பிகை அமர்ந்த நிலையில் இருக்கிறார். இங்கிருக்கும் மூகாம்பிகை தட்சிண மூகாம்பிகை என்று அழைக்கப் பெறுகிறார். இங்குள்ள கலைவாணிக்கு வீணாவாணி, வித்யாதாரிணி என்ற வேறு பெயர்களும் உண்டு. இக்கோவில் வளாகத்தில், கணபதி, சுப்பிர மணியர், விஷ்ணு, யட்சி, வீரபத்திரர், ஆஞ்சநேயர் போன்றவர்களுக்கான சிலைகளும் வழிபாட்டுக்காக நிறுவப் பெற்றுள்ளன.

    இந்த ஆலயத்தில் நாள்தோறும் ஸ்ரீ வித்யா மந்திர புஷ்பாஞ்சலி, சரஸ்வதி பூஜை, திரிமதுரம், சுட்டுவிளக்கு, மூகாம்பிகை மருந்து எனும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் பெறுகின்றன. தை மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் தொடங்கி, உத்ரட் டாதி நட்சத்திரம் வரையிலான பத்து நாட்கள் நடைபெறும் ஆண்டுத் திருவிழா சிறப்புக்குரியது. இவ்விழாவில், எட்டாவது நாளில் உத்சவபலி, ஒன்பதாவது நாளில் வலியவிளக்கு, பத்தாவது நாளில் மூகாம்பிகைக்கு ஆறாட்டு விழா போன்றவை நடைபெறுகின்றன. மேலும் புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவை தவிர, தேர்வு காலங்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

    கல்வி தொடக்க வழிபாடு :

    தங்களுடைய பிள்ளைகளின் கல்வி சிறப்பாக அமைய விரும்பும் பெற்றோர், விஜயதசமி நாளில் இக்கோவிலுக்கு வந்து, தங்கள் பிள்ளைகளின் கல்வித் தொடக்கத்திற்கான (வித்யாரம்பம்) சிறப்பு வழிபாடுகளைச் செய்கின்றனர். இவ்வழிபாட்டின் போது, பெற்றோர் இங்கிருக்கும் மூகாம்பிகையை வணங்கித் தங்கள் குழந்தையின் விரல் கொண்டு அரிசியில் எழுத வைக்கின்றனர். இதனை “எழுத்துநிரித்து” என்றும் கூறு கிறார்கள். இந்நாளில் இசை, நடனம், ஓவியம் போன்ற சில சிறப்புக் கலைப் பயிற்சிகளின் தொடக்கத்திற்கும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. பிற நாட்களில், பக்தர்களின் வேண்டுதலுக்கேற்ப இக்கோவிலில் கல்வி தொடக்க வழிபாடு செய்யப்படுகிறது.

    இக்கோவிலில் வழிபடும் மாணவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிப்பதுடன், தேர்வில் அதிக மதிப்பெண்களும் கிடைக்கும் என்கிறார்கள். இசை, நடனம், ஓவியம் உள்ளிட்ட சிறப்புக் கலைப் பயிற்சிகளில் தேர்ச்சியடைய விரும்புபவர்கள், இங்கு வந்து சிறப்பு வழிபாடுகள் செய்து பயனடைகின்றனர்.

    நீங்காத நோயுடையவர்கள், செய்யும் செயல்களில் தடை காண்பவர்கள் இத்தலத்தில் தரப்படும் அர்ச்சனைப் பொருட்களைப் பெற்று, பெயர், நட்சத்திரம் ஆகியவற்றை அர்ச்சகரிடம் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் பிரசாதத் தட்டை, கோவில் முன்பு அதற்கென வைக்கப்பட்டிருக்கும் உண்டியலில் செலுத்த வேண்டும். இப்படிச் செய்பவர்களுக்குச் சிறந்த பலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    மூலிகை மருந்து வழிபாடு :

    இக்கோவிலில் மூகாம்பிகைக்குத் தினமும் இரவு மரபு வழியில் தயாரிக்கப்படும் “மூலிகை மருந்து” படைத்து வழிபாடு நடைபெறுகிறது. மறுநாள் காலையில், இந்த மூலிகை மருந்தை வாங்கி அருந்தும் மாணவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும் என்பதுடன், மாணவர்களின் கல்வி மீதான சோம்பல் நீங்கி, ஆர்வம் அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரை யிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :
     
    கேரள மாநிலம், எர்ணாகுளத்திலிருந்து குருவாயூர் செல்லும் சாலையில் 25 கிலோ மீட்டர் தொலைவில், வடக்கன் பரவூர் (வடக்குப் பரவூர்) எனுமிடத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்கு செல்ல எர்ணாகுளம், குருவாயூர் நகரங்களிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
     
    ×