என் மலர்
தோஷ பரிகாரங்கள்
- 28-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
- தேர்த்திரு விழா மார்ச் 1-ந்தேதி நடக்கிறது.
கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் டவுன்ஹாலில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் தேர்த்திருவிழா விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசி மாத தேர்த்திரு விழா அடுத்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி கடந்த மாதம் தேர் முகூர்த்தக்கால் நடப்பட்டது. கடந்த 14-ந் தேதி பூச்சாட்டு, 20-ந் தேதி கிராம சாந்தி நடந்தது.
அதைத்தொடர்ந்து தேர்த்திருவிழாவுக்கான கொடியேற்று விழா, அக்னிசாட்டு நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இதை யொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. விநாயகர், அம்மன் எழுந்தருளி அக்னிசாட்டு கம்பத்தை மேளதாளத்தோடு எடுத்து கோவிலை சுற்றி வந்து இரவு 8 மணியளவில் கோவில் வளாகத்தில் அக்னிசாட்டு கம்பம் வைக்கப் பட்டது. அப்போது பக்தர்கள் சிலர் பக்தி பரவசத்தில் சாமியாடினர்.
இதில் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங் கேஸ்வரர் சுவாமிகள், கோவில் செயல் அலுவலர் செல்வம் பெரிய சாமி, முன்னாள் அறங்காவலர் ராம்கி, ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சண்முகம் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேர்த்திருவிழாவையொட்டி கோவில் கோபுரம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இன்று (புதன்கிழமை) புலிவாகனத்தில் அம்மன் வீதி உலா, நாளை (வியாழக்கிழமை) கிளி வாகனத்திலும், 24-ந் தேதி சிம்ம வாகனத்திலும், 25-ந் தேதி அன்ன வாகனத்திலும், 26-ந் தேதி காமதேனு வாகனத்திலும், 27-ந் தேதி வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.
28-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா 1-ந் தேதி மதியம் 2.05 மணிக்கு நடக்கிறது. வருகிற 2-ந் தேதி பரிவேட்டை-குதிரை வாகனம், 3-ந் தேதி தெப்பத் திருவிழா, 4-ந் தேதி தீர்த்தவாரி கொடியிறக்கம், 6-ந் தேதி வசந்த விழாவுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.
- தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் இதுவும் ஒன்று.
- இக்கோவில் அருகே பரிகார பூஜைகள் தினந்தோறும் நடந்தபடி இருப்பதைக் காணலாம்.
தென் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகின்ற இத்தலம் ஈரோடு மாவட்டம் பவானியில், நான்கு மலைகளுக்கு இடையில், பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் இத்தலம் உள்ளது. காவிரி, பவானி நதிகள் கூடும் சங்கமத் துறையில் அமைந்துள்ளதால் சிவனுக்கு சங்கமேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது. முனிவர் விஸ்வாமித்திரரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்டதால் காயத்ரி லிங்கேஸ்வரர் என்றும் அழைக்கபடுகிறார்.
தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் இதுவும் ஒன்று. பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது. இக்கோவில் அருகே பரிகார பூஜைகள் தினந்தோறும் நடந்தபடி இருப்பதைக் காணலாம். இந்த ஊரில் எரிக்கப்படும் சடலங்களின் மண்டை ஓடு வெடித்து சிதறுவதில்லையாம். இத்தலத்து மண்ணிற்குள் ஏராளமான சிவலிங்கங்கள் இருப்பதால் இவ்வாறு நடப்பதாக கூறப்படுகிறது.
மரணத்தருவாயில் உள்ள இளைய தலைமுறையினருக்காக இங்கு பிரார்த்தித்தால் அவரது தலைவிதி மாறும் என்ற நம்பிக்கை உண்டு. இத்தலத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரியை வணங்கிட திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், சகல நோய்களும் நீங்கும், குடும்ப பிரச்சனைகள் தீரும், தொழில் விருத்தி அடையும், அகால மரண தோஷம் நீங்கும். இக்கோவிலில் உள்ள அமிர்தலிங்கேஸ்வரர் சந்நிதி சிறப்புடையதாகும். லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். இக்கோவிலில் நல்ல வெண் திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
- தீராத கடன் தொல்லை தீரவும் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறார்கள்.
- 48 நாட்கள் இக்கோவில் இறைவனை வழிபட்டால் அனைத்து விதமான தீராத நோய்களும் தீரும்.
தஞ்சாவூரின் தென்பகுதியில் கோனூர்நாடு கோட்டை தெருவில் அமைந்துள்ளது, கோனூர்நாடு அகத்தீஸ்வரர் கோவில். இந்த ஆலயத்தில் நடைபெறும் பிரதோஷ வழிபாட்டின் போது நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுவது வழக்கம். திருமண தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தொடர்ச்சியாக 21 பிரதோஷ நாட்களில், நந்தியம் பெருமான், ஈசன், அம்பாள் ஆகியோருக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளைக் கண்டு களித்து வழிபாடு செய்தால் விரைவில் திருமண யோகம் வாய்க்கும். குழந்தைச் செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தீராத கடன் தொல்லை தீரவும் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறார்கள். தொடர்ச்சியாக 21 திங்கட்கிழமைகள் இத்தல இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டால், கடன் தொல்லை நீங்குவதோடு, யோகம் மிகுந்த வாழ்க்கை அமையும் என்கிறார்கள். தொடர்ந்து 48 நாட்கள், கோவிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி, 21 தீபம் ஏற்றி, அடி பிரதட்சணம் செய்து இறைவனை வழிபட்டால் அனைத்து விதமான தீராத நோய்களும் தீரும்.
இந்த ஆலயத்தில் வியாழக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அன்றைய தினம் ஏலக்காய், பச்சை கற்பூரம், கிராம்பு, ஜாதிபத்திரி, ஜாதிக்காய் ஆகியவற்றை இறைவனுக்கு சமர்ப்பித்து, அர்ச்சனை செய்ய வேண்டும். பின்பு அவற்றை எடுத்துக்கொண்டு வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்து வழிபட்டால், கல்வியிலும் தொழிலிலும் மேன்மை வந்து சேரும்.
தேய்பிறை அஷ்டமி அன்று இத்தலத்தில் உள்ள பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அன்றைய தினம் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவற்றால் தனித்தனியாக 3 தீபம் ஏற்றி, மிளகு மாலை சாற்றி வழிபட்டால், எப்பேர்பட்ட கண் திருஷ்டியாக இருந்தாலும் அகலும். மேலும் தீராத பகை நீங்குவதோடு, குடும்ப பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
ருத்ராட்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பந்தலை, இந்த ஆலய இறைவன் அகத்தீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மன் சன்னிதிகளில் பொருத்தியுள்ளனர். சிவ ஆலயங்களில் ருத்ராட்ச பந்தல் அமைந்திருப்பது அரிதான ஒன்று. ருத்ராட்ச பந்தலில் காட்சி தரும் சிவனை வழிபட்டால் பிறவி பலனை அடையலாம் என்பது ஐதீகம். அத்தகைய சிறப்பை கொண்டுள்ள கோனூர்நாடு அகத்தீஸ்வரரை வணங்கினால் பாவங்களும், தீராத ஜென்ம தோஷங்கள் தீரும் என்கிறாா்கள்.
தஞ்சாவூரில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும், ஒரத்தநாட்டில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும் கோனூர்நாடு அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் ரெயில்நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பழைய பஸ் நிலையம் சென்று, கோனூர்நாடு செல்வதற்கான பஸ்களில் ஏறி கோவிலை அடையலாம்.
-சண்முகம், தஞ்சாவூர்.
- நன்மை தருவார்-மத்தியபுரி அம்மன் திருக்கல்யாணம் 4-ந்தேதி நடக்கிறது.
- 5-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
கோவில் மாநகரமான மதுரைக்கு எத்தனையோ புகழும், வரலாறுகளும் உள்ளன. பாண்டிய மன்னர்களின் மரபுகளில் ஒன்றாக மன்னர்கள் முடி சூட்டிக்கொள்வதற்கு முன்பாக சிவபூஜை செய்வது வழக்கம். அதன்படி பாண்டிய மன்னராக முடி சூட்டுவதற்கு முன்பாக சிவபெருமானும், ராணியாக மீனாட்சி அம்மனும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்து வழிபட்ட தலமே மதுரையில் உள்ள இன்மையில் நன்மை தருவார் கோவிலாகும். புகழ்பெற்ற இந்த கோவிலின் மாசி பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு மாசி பெருந்திருவிழா இன்மையில் நன்மை தருவார் கோவிலில் வருகிற 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நிகழ்ச்சியின் தொடக்கமாக நாளை(புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் கொட்டகை முகூர்த்தம் நடைபெறுகிறது.
24-ந் தேதி மாலை 7 மணிக்கு வாஸ்து சாந்தி, 25-ந் தேதி காலை 7.42 மணி முதல் 8.45 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து தினசரி பிரியாவிடையுடன்-இன்மையில் நன்மை தருவார், மத்தியபுரி அம்மனுடன் காலையிலும், மாலையிலும் ரிஷப வாகனம், மரச்சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான இன்மையில் நன்மை தருவார்-மத்தியபுரி அம்மன் திருக்கல்யாண வைபவம் 4-ந்தேதி காலை 8 மணி முதல் 8.53 மணிக்குள் நடைபெறுகிறது. 5-ந் தேதி காலை 8 மணி முதல் 8.53 மணிக்குள் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெறுகிறது. 6-ந் தேதி காலை உற்சவ சாந்தி, பைரவர் பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
- வடகிழக்கு திசையில் மாடிப்படி அமைவதை தவிர்க்கலாம்.
- நிலம் சதுரமாகவோ செவ்வகமாகவோ இருப்பது நல்லது.
அடுக்குமாடி வீடுகள் கட்டுவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய வாஸ்து நெறிமுறைகள்:-
கட்டிடம் கட்டப் போகும் நிலம் சதுரமாகவோ செவ்வகமாகவோ இருப்பது நல்லது.
கட்டிடம் கட்டப் போகும் நிலத்திற்கு தெற்கு அல்லது வடக்கு பகுதியிலோ குலம் குட்டை ஏறி போன்ற நீர் நிலைகள் இல்லாமல் இருப்பது நன்று.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தெற்கு மேற்கு, தென்மேற்கு வாசற்படியை தவிர்க்கலாம் சிலர் ஜாதகத்திற்கு இது சிறப்பாக இருக்கிறது என்றால் அவர்கள் வைத்துக் கொள்ளலாம்.
அடுக்குமாடி கட்டிடம் மையப் பகுதியில் திறந்த வெளி இருப்பது சிறப்பு சூரிய ஒளி பாய்வதால் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடத்திற்கு சிகப்பு கருப்பு மற்றும் வெளிர் நீளம் வண்ணத்தில் பெயிண்ட் அடிப்பதை தவிர்க்கலாம்.
கட்டிடத்தின் வாசற்படி மற்றும் ஜன்னல்களின் மொத்த எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருப்பது நல்லது.
குடியிருப்பின் பால்கனி கிழக்கு மற்றும் வடக்கு திசையில் அமைந்திருப்பது நல்லது.
வடகிழக்கு திசையில் மாடிப்படி அமைவதை தவிர்க்கலாம்.
குபேர வாசல்
பொதுவாகவே வடக்கு பார்த்த வீடு எல்லோரும் விரும்புகின்ற வீடு. வடக்கு பார்த்த வாசலும் சிறப்புடையது. வடக்கை பார்த்த வாசலில் வாசல் வடக்கு பக்கம் நடு பகுதியில் அமைந்து உள்ளதா என்பது மிக முக்கியம். இந்த வாசலை தான் குபேர வாசல் என்றும் அழைப்பர். வடக்கு பார்த்த வாசல் வடகிழக்கில் இருந்தால் அது ஈசானிய மூலை ஓரளவுக்கு பரவாயில்லை. வடமேற்கு மூலையில் வடக்கு பார்த்த வாசப்படி அமைப்பதை தவிர்க்கலாம்.
வடக்கு பகுதியில் அமைந்துள்ள வடக்கு வாசல் மிகச் சிறப்பான பலன்களை தரக்கூடியது. அதில் குறிப்பாக குரு லக்னாதிபதி குரு நட்சத்திர அதிபதி உள்ளவர்கள் குரு திசை நடக்கும்போது சிறப்பான பலனை பெறுவார்கள். குரு உச்சத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கும் ஜாதகத்தில் மற்ற விதங்களில் குரு பலமாக இருந்து பலன் கொடுத்து வருபவர்களுக்கும் இந்த வடக்கு வாசல் நிஜமாகவே குபேரவாசல் தான்.
- வாசனைத் திரவியங்களோடு கூடிய தயிர் அபிஷேகம் எதிரிகளை அழிக்கும்.
- சுத்தமான நீரால் செய்யப்படும் தாராபிஷேகத்தால் கஷ்டங்கள் நீங்கும்.
சிவனைத் தூய நல்லெண்ணையில் வாசனைத் திரவியங்கள் கலந்து நூறு குடம் அபிஷேகம் செய்தால் வாழ்வில் நோய் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும்.
கோமூத்திரம் கலந்த பஞ்சகவ்யத்தைப் பத்துக்குடம் அபிஷேகம் செய்தால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி, மாசு மருவற்ற தேகத்தினைப் பெறலாம். சுத்தமான பசுவின் கறந்த பால் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் தீர்க்காயுசு கிடைக்கும்.
சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் மன துக்கமும், இனிய கானம் பாடும் திறமையும், குயிலினும் இனிய குரலும் கிடைக்கும். எலுமிச்சம்பழம் ஆயிரம் கொண்டு அபிஷேகம் செய்தால் அஞ்ஞானம் நீங்கிவிடும்.
சர்க்கரையினால் நூறு மூட்டை அபிஷேகம் செய்ய வாழ்வில் இல்லாமை நீங்கி, மனநிறைவு உண்டாகும்.இளநீர் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் பேரானந்தமும், கைலாசவாசனின் காலடியில் வாழும் பேறும் கிட்டும்.
10 ஆயிரம் பழங்கள் சேர்த்து செய்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் வாழ்வில் வீரத்துடன் எதையும் சாதிக்கும் மனோபலமும், சகல காரியங்களில் வெற்றியும் கிடைக்கும். தயிர் நூறு குடம் அபிஷேகம் செய்தால் மேலான சம்பத்து கிடைக்கும்.
கரும்புச்சாறு நூறு குடம் அபிஷேகம் செய்தால் தேக ஆரோக்கியம், உடல் வலிமை பெற்று விளங்கும்.மஞ்சள் தூளினால் அபிஷேகம் செய்தால் அரசனின் அன்பிற்கு பாத்திரமாகும் நிலை உண்டாகும். திராட்சை ரசம் செல்வத்தினை அளிக்கும்.
பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் இகபர சுகங்களில் இருந்து நம்மை விடுவித்து சொர்கக நிலையை நமக்கு அளிக்கும்.
அரிசிமாவினால் அபிஷேகம் செய்தால் எத்தகைய கடன்கள் இருந்தாலும் அவற்றில் இருந்து நம்மை விடுவிக்கும்.
அன்னாபிஷேகம், பதினொரு மூட்டை அரிசியால் அன்னம் சமைத்து அதனை லிங்க சொரூபமான சிவனுக்கு அபிஷேகம் செய்தால் வயிற்றில் உண்டாகும் சகலவிதமான நோய்களும் பஞ்சாகப் பறந்துவிடும்.
தூய்மையான மங்களகரமான கங்கை நீர் நூறு குடம் கொண்டு அபிஷேகம் செய்தால் மனத்தில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, பயம் போய், மனநிம்மதி உண்டாகும்.
சந்தனக்குழம்பினை பன்னீரில் கரைத்து அபிஷேகம் செய்தால் இறைவனிடம் மாசற்ற பக்தி உண்டாகி அஞ்ஞானம் விலகும். ருத்ரம் ஜபித்த ஆயிரம் கலசங்களில் வைக்கப்பட்டுள்ள கங்கை நீரால் கங்காதரனைக் குளிர்வித்தால் மந்திரசித்தி ஏற்படும்.
ஈசனின் திருமேனியில் இருந்து தோன்றிய விபூதியினால் அபிஷேகம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
தங்கத்தாமரை மொட்டுகள் செய்து அதனால் அபிஷேகம் செய்தால் சொர்க்க போகம் கிடைக்கும்.
மாதுளை- அரச பதவி கொடுக்கும்
நெய்- மோட்சத்தைக் கொடுக்கும்
அன்னம்- வயிற்று நோயை நீக்கும்
நெல்லிக்கனி- பித்தம் நீக்கும்
பழரசங்கள்- வறட்சியைப் போக்கும்
நெய் அபிஷேகம் செய்தவுடன் ஆறிய வெந்நீர் அபிஷேகம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் வாசனை கலந்த சுத்த தண்ணீரால் அபிஷேகம் செய்து, அடுத்தது தொடங்க வேண்டும்.
ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் வகை வகையான மலர்களை சிவன் தலையில் வைக்க வேண்டும். ஈசனுக்கு அபிஷேகம் செய்யும் பொழுது சல்லடைக்கண்கள் உள்ள தாராபாத்திரத்தில் அபிஷேகம் செய்தால் நன்மைகள் பல உண்டு.
சுத்தமான நீரால் செய்யப்படும் தாராபிஷேகத்தால் கஷ்டங்கள் நீங்கும். சுகம், குழந்தை பாக்கியம் ஏற்படும். நெய் அபிஷேகம் செய்தால் நோய் நீங்கி வம்ச விருத்தி ஏற்படும். சர்க்கரை கலந்த பாலாபிஷேகம் செய்ய மந்திர ஏவல்களால் பாதிப்பு ஏற்படாது.
வாசனைத் திரவியங்களோடு கூடிய தயிர் அபிஷேகம் எதிரிகளை அழிக்கும். தேன், வியாதி களை நீக்கும், கரும்புச்சாறு துக்கங்களை நீக்கி சந்தோஷத்தை கொடுக்கும்.
- அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
- இன்று பூச்சொரிதல் விழா நடக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மாசித்திருவிழா பூத்தமலர் பூ அலங்கார மண்டகப்படியுடன் நேற்று தொடங்கியது.
இதையொட்டி காலையில் அம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்பட 21 வகையான பொருள்களால் மகா அபிஷேகம், அலங்காரம், பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாலையில் மூலஸ்தான அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் கோவில் மண்டபத்தில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி அலங்காரம் மற்றும் ரோஜா, மல்லிகை, சம்பங்கி உள்பட பல்வேறு மலர்களால் சிவன், முருகன், ஆண்டாள், வாராகி அம்மன் கோலங்கள் போடப்பட்டது. இதேபோல் பூத்தமலர் பூ அலங்காரத்தில், கரகங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
மாசித்திருவிழாவில், இன்று (வெள்ளிக்கிழமை) பூச்சொரிதல் விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.
- குளிகை காலத்தில் செய்யப்படும் எந்த ஒரு காரியமும் மறுபடியும் நடக்கும் என்பது ஐதீகம்.
- சுப காரியங்களுக்கு குளிகை காலம் உகந்ததாகவும், அசுப காரியங்களை செய்யாமல் தவிர்க்கப்பட வேண்டிய காலமாகவும் குறிப்பிடப்படுகிறது.
சுப காரியம் எதுவானாலும், அதைச் செய்வதற்கு பொருத்தமான நல்ல நேரத்தை தேர்ந்தெடுப்பது உலக வழக்கம். ராகு காலம், எம கண்டம் ஆகிய நேரங்களில் யாரும் எந்த ஒரு சுப காரியத்தையும் செய்ய மாட்டார்கள். ஆனால், பலரும் குளிகை காலத்தை தேர்வு செய்து சில முக்கியமான விஷயங்களை செய்து வருவது நடைமுறையில் உள்ளது. காரணம், குளிகை காலத்தில் செய்யப்படும் எந்த ஒரு காரியமும் மறுபடியும் நடக்கும் என்பது ஐதீகமாகவும், பொதுவான நம்பிக்கையாகவும் இருந்து வருகிறது.
குளிகை காலம் என்ற வேளையில் சொத்து வாங்குவது, சுப நிகழ்ச்சிகளை மேற்கொள்வது, கடனைத் திருப்பிக் கொடுப்பது, தங்க நகைகள் வாங்குவது, பிறந்த நாளைக் கொண்டாடுவது போன்ற விஷயங்களை செய்யலாம். அதன் காரணமாக தடைகள் எதுவும் இல்லாமல் அந்த விஷயங்கள் தொடர்ச்சியாக நடந்து வரும் என்பது மட்டுமல்லாமல், அவை போன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்வதற்கான வாய்ப்பும் ஏற்படும் என்பதும் மக்களின் மத்தியில் அதிக நம்பிக்கையுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதனால் சுப காரியங்களுக்கு குளிகை காலம் உகந்ததாகவும், அசுப காரியங்களை செய்யாமல் தவிர்க்கப்பட வேண்டிய காலமாகவும் குறிப்பிடப்படுகிறது. அதன் காரணமாக, அடகு வைப்பது, கடன் வாங்குவது, வீட்டைக் காலி செய்வது, இறந்தவர் உடலைக் கொண்டு செல்வது போன்ற விஷயங்களை குளிகை நேரத்தில் செய்வது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.
குளிகை காலம் உருவானதற்கு பின்னால் ஒரு சுவாரசியமான நிகழ்வை இங்கே பார்க்கலாம்...
ராவணனின் மனைவியான மண்டோதரி, நிறை மாத கர்ப்பிணியாக இருந்த சமயத்தில், அவளுக்கு எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்று அறிந்த ராவணன், குல குரு சுக்ராச்சாரியாரைச் சந்தித்தான். "குருவே..எனக்கு பிறக்கப் போகும் குழந்தை, பல வித்தைகளுக்கு தலைவனாகவும், எவராலும் வெல்ல முடியாத வலிமை கொண்டவனாகவும், அழகில் சிறந்தவனாகவும் விளங்க எந்த நேரத்தில் பிறந்தால் நல்லது என்று சொல்லுங்கள்.." என்று கேட்டான். அதற்கு "கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் பிள்ளை பிறந்தால், அந்த குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும்.." என்று சுக்ராச்சாரியார் யோசனை தெரிவித்தார்.
அதன் அடிப்படையில், ராவணன் மேற்கண்ட யோசனையைச் சொன்ன சுக்ரன் உட்பட அனைத்து நவக்கிரக அதிபதிகளையும் சிறைபிடித்து, ஒரே அறையில் அடைத்து வைத்தான். ஒரே இடத்தில் கிரக அதிபதிகள் அனைவரும் இருப்பதால், மண்டோதரிக்கு பிரசவ வலி இருந்தபோதிலும் குழந்தை பிறப்பதற்கான சூழல் ஏற்படவில்லை.
"இந்தச் சிக்கலை தீர்க்க வேண்டுமானால், நம் ஒன்பது பேர்களைத் தவிர, நல்ல காரியத்தை விருத்தி செய்வதற்காக ஒரு புதிய உபக்கிரக அதிபதியாக ஒருவனை சிருஷ்டி செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுக்க வேண்டும். அதனால், நமக்கு நன்மை ஏற்படுவதுடன், அவனை சிருஷ்டிக்கும் அதே சமயத்தில் மண்டோதரிக்கு சுகப்பிரசவமும் ஏற்படும்" என்று சுக்ராச்சாரியார் தெரிவித்தார்.
உடனே சனீஸ்வரன் தனது சக்தி அம்சம் மூலம், தன் மனைவி ஜேஷ்டாதேவிக்கு ஒரு மகன் பிறக்கும்படி செய்கிறார். அவரே குளிகன். அவர் பிறந்த அதே நேரத்தில், மண்டோதரியும் அழகான ஒரு மகனை பெற்றெடுக்கிறாள். அவன்தான் மேகநாதன். குளிகன் பிறக்கும்போதே நல்ல காரியங்களை நடத்தி வைக்கும் தன்மை கொண்டவனாக இருந்ததால், நவக்கிரக அதிபதிகள் அனைவரும் அவனை வாழ்த்தினார்கள். தினமும் பகல் மற்றும் இரவு ஆகிய வேளைகளில் குளிகை நேரம் என்ற அளவில் ஒரு நாழிகை நேரம் ஒதுக்கப்பட்டது. அந்த நேரம் 'காரிய விருத்தி வேளை' என்று அழைக்கப்படுகிறது.
- நாட்டில் 80 சதவீதம் காதல் திருமணம் தோல்வியாகவே முடிகிறது.
- 10 சதவீதம் பேர் உண்மையாக வாழ்பவர்கள்.
பெற்றோர்களால் நடத்தப்படும் திருமணத்தில் சறுக்கல் ஏற்பட்டால் பெற்றோர், உடன் பிறந்தவர்கள் மற்றும் தன் இனத்தவரால் நியாயம் கிடைக்க செய்ய முடியும். சமூதாய அங்கீகாரமும் உண்டு. காதல் திருமணத்திற்கு உறவுகளின் ஆதரவோ, சமுதாய அங்கீகாரமோ நியாய, தர்மமோ இருக்காது.
பெற்றோர்கள் குழந்தைகளின் மேல் வைத்திருக்கும் அதிகப்படியான நம்பிக்கை, அன்பு, செல்போன் இந்த மூன்றும் தான் பிள்ளைகளின் தவறான காதலுக்கு காரணம். பிள்ளைகளின் திருமண காலம் அறிய ஜோதிடரை அணுகிய பெற்றோர்கள் தற்போது என் குழந்தை தவறான நட்பில் உள்ளது இது சரியாகுமா? சரி செய்ய முடியுமா? என்று கேட்கிறார்கள். ஒரு பிள்ளை தவறான நட்பில் ஈடுபடுகிறது என்றால் அதற்கு 2 காரணங்கள் இருக்கின்றன.
1. குழந்தைகளின் மேல் உள்ள அதீத அன்பால் அவர்கள் செய்யும் எல்லா செயலையும் பெற்றோர்கள் ஆதரிப்பது அல்லது கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.
2. பல குடும்பங்களில் கணவன்-மனைவி கருத்து வேறுபாட்டால் குழந்தைகளை முறையாக பராமரிக்காததால் குழந்தைகள் தவறான நண்பரை தேர்வு செய்கிறார்கள்.
மூன்றாவது வகை ஒன்று உள்ளது. பணக்கார வரன் என்றால் அந்த வரனை முடிப்பதில் ஆர்வமும் பண வசதி இல்லாத வரன் என்றால் அதை உதாசீனமும் செய்கிறார்கள்.
பணத்திற்காக தவறை கண்டு கொள்ளாததால் அது விவாகரத்து வரை செல்கிறது. அதே போல் பிள்ளைகளை மட்டும் தவறாக கூற முடியாது. சில குழந்தைகளின் ஜனன ஜாதகத்தில் தவறான நட்பிற்கான கிரக சேர்க்கை இருக்கும் . ஆனால் கோச்சாரமும் தசா புத்தியும் சாதகமாக இல்லாத போது ஜனன கால ஜாதக அமைப்பை வைத்துக் கொண்டு 24 மணி நேரமும் குழந்தையின் செயல்களை கண்காணித்து மனதை நோகடித்து தவறான பாதையில் ஈடுபட வைத்து விடுகிறார்கள்.
நாட்டில் 80 சதவீதம் காதல் திருமணம் தோல்வியாகவே முடிகிறது. இதில் 10சதவீதம் பேர் உண்மையாக வாழ்பவர்கள். மீதம் உள்ள 10 சதவீதம் பேர் தோல்வியை வெளிக்காட்டாமல் நன்றாக வாழ்வது போல் நடிக்கின்றனர்.
சிலர் வயிற்றில் குழந்தையுடனும், சிலர் கையில் குழந்தையுடனும் விவாகரத்துக்கும் மறு திருமணத்திற்கும் ஒடிக்கொண்டு இருக்கிறார்கள். மறு விவாகமும், விவாகரத்தும் ஒருவரை நிம்மதியாக வாழ விடாது.
அதனால் பெற்றோர்களே குழந்தைகளின் நண்பர்களாக இருந்து குழந்தைகளை நல்வழிப் படுத்துங்கள். பிள்ளைகளே பெற்றோர்களின் ஆலோசனைகளை பின்பற்றுங்கள் இதுவே நமக்கு என்றும் நன்மை தரும்.
பரிகாரம்: குழந்தைகளின் தவறான நட்பால் பிரச்சினைகளை சந்திக்கும் பெற்றவர்கள் வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுகிழமைகளில் ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபட வேண்டும்.
- மதுரையில் இருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ளது திருவாதவூர்.
- சனி கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.
மதுரையில் இருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ளது திருவாதவூர். மதுரை ஒத்தக்கடையில் இருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், சுமார் 20 கி.மீ. தொலைவு பயணித்தால், திருவாதவூர் திருத்தலத்தை அடையலாம்.
மாணிக்கவாசகர் அவதரித்த புண்ணியத் திருத்தலம் இது. இங்கே உள்ள ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் இறைவனின் திருநாமம் திருமறைநாதர். வேதநாயகன். அம்பாளின் திருநாமம் வேதவல்லி.
சனி பகவான் இந்தத் தலத்துக்கு வந்து, சிவபெருமானை தவமிருந்து வழிபட்டார். இதனால் வாத நோய் நீங்கப் பெற்றார் சனி பகவான். எனவே, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டால், கைகால் குடைச்சல், செயல் இழப்பு, பக்கவாதம் முதலான வாத நோய்ப் பிரச்சினைகள் விரைவில் குணமாகும் என்பது ஐதீகம்.
மேலும் இங்கே சனி பகவான் தனிச்சந்நிதியில் கோயில் கொண்டிருக்கிறார். எனவே இங்கு வந்து வாத நோயில் இருந்து விடுபட்ட சனீஸ்வரரையும் வேண்டிக்கொண்டால், சனி கிரக தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. திருவாதவூரில் மாணிக்கவாசகர் அவதரித்தது விசேஷம். சனி பகவான் நோய் நீங்கப் பெற்றது சிறப்பு. அதேபோல் பைரவரும் இங்கு மகத்துவம் வாய்ந்தராகப் போற்றப்படுகிறார்.
இங்கு உள்ள பைரவர் மிகுந்த மகிழ்ச்சியுடனும் கனிவுடனும் காட்சி தருகிறார். திருவாதவூரில் சந்நிதி கொண்டிருக்கும் பைரவரை எட்டு அஷ்டமியில் வழிபட்டு வந்தால், தொலைந்து போன வாகனங்கள், பொருட்கள் திரும்பவும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
அதேபோல், திருமறைநாதர், சனிபகவான், பைரவர் முதலானோரை சந்தர்ப்பம் கிடைக்கும் போது இந்தத் தலத்துக்கு வந்து தரிசித்து, ஐந்து நல்லெண்னெய் தீபம் ஏற்றி வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கும் என்பது உறுதி.
வீட்டில் திருவாதவூர் தெய்வங்களை மனதில் நினைத்து விளக்கேற்றி வழிபட்டு வந்தால், தொலைந்து போன பொருட்கள், வாகனங்கள் கிடைக்கும்.
மிகத் தொன்மையான திருவாதவூர் சிவனை வேண்டுங்கள். எல்லா தொல்லைகளில் இருந்தும் விடுபடுவீர்கள்.
- பக்தர்களை காக்கும் அம்மன் ஆலயங்கள் தமிழகத்தில் பல உள்ளன.
- தீர்த்தக்குளம் கோவில் அருகில் மிகப்பெரிய அளவில் அமைந்து உள்ளது.
கோடை காலத்தில் பரவும் அம்மை நோயில் இருந்து பக்தர்களை காக்கும் அம்மன் ஆலயங்கள் தமிழகத்தில் பல இருந்தாலும் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில், பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்று உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் அம்மை நோய் தீர்க்கும் முக்கிய கோவில்களில் ஒன்றாக கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
கரம்பயம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு கரம்பயம் மட்டுமின்றி கரம்பயத்தை சுற்றியுள்ள சுமார் 35-க்கும் மேற்பட்ட கிராம மக்களும், அருகில் உள்ள நகர மக்களில் யாருக்காவது அம்மை நோய் ஏற்பட்டால் அவர்களை அழைத்து வந்து கரம்பயம் முத்துமாரியம்மன் கோவிலில் தங்க வைத்து தீர்த்தம் என்று சொல்லக்கூடிய அபிஷேக பால் வாங்கி கொடுப்பார்கள்.
நான்கு அல்லது ஐந்து நாட்களில் அவர்கள் நோய் பூரண குணமடைந்து விடுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இதற்கு நேர்த்திக்கடனாக முடி இறக்கி காணிக்கை செலுத்துவது, அலகு குத்துவது, காவடி எடுப்பது, பால்குடம் எடுப்பது, வடம் பிடித்து தேர் இழுப்பது உள்ளிட்ட வேண்டுதல்களை பொதுமக்கள் நிறைவேற்றி வருகின்றனர்.
கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவின்போது அம்பாள் வீதி உலா வந்து பொதுமக்களை பார்த்து மகிழ்ந்து அவர்களுக்கு தேவையான அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றி தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் தீர்த்தக்குளம் கோவில் அருகில் மிகப்பெரிய அளவில் அமைந்து உள்ளது. அம்மை நோயால் பாதிக்கப்படும் பக்தா்கள் நோய் தீர்ந்த உடன் இ்ந்த கோவில் தீா்த்தக்குளத்தில் நீராடி பின்னர் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். மேலும் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தா்களும் தீர்த்தக்குளத்தில் உள்ள புனித நீரை தங்கள் தலையில் தெளித்த பின் கோவிலுக்கு செல்கிறாா்கள்.
தீர்த்தக்குளத்தில் அம்மை நோய் தீர்க்கும் அற்புத சக்தி இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். எனவே பிரசித்தி பெற்ற கரம்பயம் முத்து மாரியம்மன் கோவில் தீர்த்தக்குளம் பக்தா்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்று உள்ளது.
கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 7 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக பட்டுக்கோட்டைக்கு வந்து அங்கிருந்து கரம்பயம் முத்து மாரியம்மன் கோவிலை அடையலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து அங்கிருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் வழியில் 7 கி.மீட்டர் தொலைவிற்கு முன்பு உள்ள கோவிலை அடையலாம்.
- மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாக வில்வமரம் உள்ளது.
- இது அனைத்து நோய்களையும் நீக்கும் தன்மை கொண்டது.
சிவபெருமான் வழிபாட்டிற்குரிய பொருட்களில் வில்வ இலைக்கு முக்கிய பங்குண்டு. மூன்று பிரிவுகளைக் கொண்ட வில்வ இலை, திரிசூலத்தின் குறியீடாக பார்க்கப்படுகிறது. இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என மூன்று சக்திகளின் அம்சமாகவும், வில்வத்தைப் போற்றுகிறார்கள். மகாலட்சுமி பாற்கடலில் இருந்து தோன்றியபோது, அவளது கைகளில் இருந்து வில்வம் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாக வில்வமரம் உள்ளது.
வில்வ மரத்தின் கிளைகள் வேதங்களாகவும், இலைகள் சிவசொரூபமாகவும், வேர்கள் கோடான கோடி ருத்திரர்களாகவும் பாவிக்கப்படுகின்றன. சிவனுக்கு பிரியமான வில்வத்தை கொண்டு, அவரை அர்ச்சிப்பதன் மூலம் ஈசனின் திருவருளை எளிதாகப் பெறலாம். முறைப்படி விரதம் இருந்து வில்வ மரத்தை பூஜிப்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். ஒரு வில்வ இலையைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது, லட்சம் தங்க மலர்களைக் கொண்டு அர்ச்சிப்பதற்கு சமம் ஆகும்.
துளசி மாடம் போல், வீட்டில் வில்வ மரம் வளர்ப்பவர்களுக்கு ஒரு போதும் நரகம் கிடையாது. வீட்டில் வில்வமரம் நட்டு வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அதன்படி ஒருவர் தன்னுடைய வீட்டில் வில்வ மரத்தை வளர்ப்பது என்பது, அஸ்வமேத யாகம் செய்ததற்கான பலனைக் கொடுக்கும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பெரும் பாக்கியம் ஏற்படும்.
திருவையாறு, திருவெறும்பூர், ராமேஸ்வரம் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட திருக்கோவில்களில், வில்வம் தல விருட்சமாக அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு பூஜை செய்யப்படும் வில்வம், ஒரு கற்பக மூலிகையாகும். இது அனைத்து நோய்களையும் நீக்கும் தன்மை கொண்டது. வில்வத்தில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவையாகத் திகழ்கின்றன. திருஇடைச்சுரம் என்ற திருத்தலத்தில் உள்ள வில்வ மரம், எட்டு கூட்டிலைகளைக் கொண்டு அமைந்துள்ளது. இவ்வாறு அமைந்தவை 'மகாவில்வம்' என்றும் 'பிரம்ம வில்வம்' என்றும் அழைக்கப்படுகிறது. திருவெண்காட்டில் உள்ள வில்வம் போல், முள் இல்லாத மரங்களும் அரிதாகக் காணப்படுகின்றன.
வில்வத்தால் அர்ச்சனை செய்யும் போது, சிவபெருமானை நாம் இன்னும் நெருங்க முடியும், ஈசனின் அருளைப் பெற முடியும். ஏழரைச் சனியின் பிடியில் இருப்பவர்கள், வில்வத்தால் ஈசனை அர்ச்சித்து வழிபடுவது சிறந்தது. இத்தகைய சிறப்புமிக்க வில்வ மரத்தின் இலைகளை, சோமவாரம் (திங்கட்கிழமை), சதுர்த்தி, அஷ்டமி, அமாவாசை, பவுர்ணமி தினங்களில் மரத்தில் இருந்து பறிக்கக்கூடாது. வில்வ தளம் என்பது மூன்று இலைகள் சேர்ந்தது. அவற்றை தனித்தனியாகக் கிள்ளக்கூடாது என்பதும் ஐதீகம்.






