என் மலர்
தோஷ பரிகாரங்கள்
- வீட்டின் கிழக்கு திசையில் காலியிடம் இருக்க வேண்டும்.
- கிழக்கும் வடக்கும் சேரும் மூலையை ஈசான்யம் என்பார்கள்.
* கிழக்கு பாகத்தின் பலன்கள் ஆண்களுக்குரியது . கிழக்கு பாகம் பொதுவாக தாழ்வாக இருக்க வேண்டும். வீட்டின் கிழக்கு திசையில் காலியிடம் இருக்க வேண்டும். இதனால் உடல் நலம், பொருளாதாரம் மற்றும் வம்ச விருத்தி உண்டாகும். வீட்டை சுத்தப்படுத்தும் தண்ணீர் கிழக்கிலிருந்து வெளியேறினால் அந்த வீட்டு ஆண்களுக்கு உடல்நலம் சிறப்பாக இருக்கும். கிழக்கில் கிணறு, செப்டிக்டங்க் இருந்தால் நன்மைகள் உண்டாகும்.
* கிழக்கும் வடக்கும் சேரும் மூலையை ஈசான்யம் என்பார்கள். எல்லா திசைகளிலும் சிறந்தது ஈசான்ய மூலை. வீட்டின் ஒவ்வொரு அறையிலும் ஈசான்ய மூலை தூய்மையாக இருக்க வேண்டும். கனமான பொருட்கள் இருக்கக் கூடாது மற்றும் தடுப்புகள் இருக்கக் கூடாது. வீட்டின் ஈசான்ய மூலையில் உயரமான மரங்கள் இருக்கக் கூடாது. ஈசான்யத்தில் கிணறுகள் இருக்கலாம். பூஜை அறை ஈசான்ய திசையில் அமைக்கலாம். வீட்டை சுத்தப்படுத்தும் தண்ணீர் ஈசான்ய மூலை வழியாக வெளியேறினால் செல்வ வளம் மற்றும் வாரிசு வளர்ச்சி உண்டாகும்.
- சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட திருத்தலங்கள் ‘அட்டவீரட்ட தலங்கள்’ என்று போற்றப்படுகின்றன.
- இந்த ஆலயங்களுக்கு உங்கள் ராசிக்கு யோக பலம் பெற்ற நாளில் சென்று வழிபட வேண்டும்.
சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட 8 திருத்தலங்கள் 'அட்டவீரட்ட தலங்கள்' என்று போற்றப்படுகின்றன. அந்த ஆலயங்களுக்கு உங்கள் ராசிக்கு யோக பலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். தலங்கள் உள்ள ஊர் மற்றும் அதன் சிறப்புகள் வருமாறு:-
1. திருக்கடையூர் - எமதர்மனை காலால் உதைத்தது
2. திருக்கண்டியூர் - பிரம்மனின் தலையைக் கொய்தது
3. திருவதிகை - திரிபுரத்தை எரித்தது
4. திருவழுவூர் - யானையின் தோலை உரித்தது
5. திருப்பறியலுார் - தட்சனை சம்ஹாரம் செய்தது
6. திருக்கோவிலுார் - அந்தகாசுரனை வதம் செய்தது
7. திருக்குறுக்கை - மன்மதனை எரித்தது
8. திருவிற்குடி - ஜலந்தராசுரனை வதம் செய்தது
- அனைத்து வகையான கட்டிட அமைப்பு முறைகள் பற்றி ‘வீட்டு வாஸ்து’ குறிப்பிடும்.
- நிலம் அல்லது தன்மைகள் பற்றிச் சொல்வது ‘பூமி வாஸ்து.’
வாஸ்து என்பது வீடு, மனை ஆகியவற்றைப் பற்றிய செய்திகளைச் சொல்வது மட்டுமே என்று சிலர் நினைக்கின்றனர். உண்மையில் வாஸ்து நான்கு வகையாக உள்ளது. அதைப் பற்றி இங்கே பார்ப்போம்.
பூமி வாஸ்து
நிலம் அல்லது மனையின் தன்மைகள் பற்றிச் சொல்வது 'பூமி வாஸ்து.' மனையானது கிழக்கு மனையா, மேற்கு மனையா, வடக்கு மனையா, அல்லது தெற்கு மனையா என்பது பற்றிக் குறிப்பிடும். மேலும் மனைக்கு ஒரு பக்கத்தில் மட்டும் சாலையா, இரு பக்கமும் சாலைகளா, மூன்று புறங்களும் சாலைகளா, அல்லது நான்கு பக்கங்களும் சாலைகளா என்பதையும் எடுத்துக்காட்டும். பூமியில் சல்லிய தோஷங்கள் ஏதாவது உள்ளதா?, மனையானது சாலையில் இருந்து பள்ளத்தில் உள்ளதா?, அந்த மனையில் மண்ணின் நிறம் மற்றும் இதற்கு முன்பு அந்த இடம் என்னவாக இருந்தது என்பதையும் குறிப்பிடும்.
வீட்டு வாஸ்து
வீடு, அரண்மனை, வியாபாரம் மற்றும் தொழில் நிறுவனங்கள், பள்ளி - கல்லூரிகள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், பொதுத்துறை கட்டிடங்கள் போன்ற அனைத்து வகையான கட்டிட அமைப்பு முறைகள் பற்றி 'வீட்டு வாஸ்து' குறிப்பிடும். ஒரு இடத்தில் எந்த அளவில், எந்த முறையில், எப்போது, எவ்வாறு கட்டிடங்களை அமைக்க வேண்டும் என்பதையும், சொந்த வீடு அல்லது வாடகை வீட்டு விஷயங்களையும் இது எடுத்துக்காட்டும்.
மேலும் அந்தக் கட்டிடம் வங்கியா, மருத்துவமனையா, வணிக வளாகமா, பள்ளி- கல்லூரியா, உணவகமா, தங்கும் விடுதியா, தொழிற் சாலையா, தகவல் தொழில்நுட்ப அலுவலகமா, வாடிக்கையாளர் சேவை மையமா, மற்ற பொதுத்துறை நிறுவனமா, ஊடகங்கள் சார்ந்த அலுவலகமா என்பதைப் பொறுத்து அதன் வடிவமைப்புகளையும் இது சொல்லும். முக்கிய நுழைவுவாசல், வரவேற்பறை, பின்புறம் அமையும் வாசல்கள், சமையலறை, உணவு உண்ணும் அறை, ஓய்வு அறை, பணியாற்றும் அலுவலகம், தலைமை அதிகாரியின் அறை, மின்சாதனங்கள் அறை, படிக்கட்டுகள், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம், விளையாட்டு மைதானங்கள், கேளிக்கை விடுதிகள், பாத்ரூம்-டாய்லெட் போன்ற எல்லா அறைகளின் அமைப்பையும் இது குறிப்பிடும்.
இருக்கை வாஸ்து
வீடுகள், வியாபார, தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற கட்டிடங்கள் ஆகியவற்றில் இடம்பெறும் இருக்கைகள், ஊஞ்சல்கள், படுக்கைகள் அமைக்கும் விதம் பற்றி கூறுவது 'இருக்கை வாஸ்து.' ஒரு வீடோ, அலுவலகமோ அல்லது வேறு நிறுவனம் சார்ந்த கட்டிடங்களோ எதுவாக இருந்தாலும், அங்கு பணியாற்றுபவர்கள் அமர்வதற்கான இடம், மீட்டிங் ஹால்கள், கேண்டீன்கள், ஓய்வு எடுக்கும் இடம் பற்றிய எல்லாவித தகவல்களையும் சொல்லும் வாஸ்து இது. நிறுவனத்தின் தலைவர் எங்கே அமர வேண்டும், அவரைச் சந்திக்க வருபவர்கள் எங்கே அமர வேண்டும், பணிபுரிபவர்கள் எங்கே அமர வேண்டும் என்ற நுட்பங்களையும் இது தெளிவுபடுத்தும்.
வாகன வாஸ்து
இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், தேர், பல்லக்கு போன்ற அனைத்து வகையான போக்குவரத்து சாதனங்கள் பற்றிய தெளிவை ஏற்படுத்தும் வாஸ்து இது. இரு சக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமோ வீட்டின் அத்தியாவசிய ஒரு தேவையாக மாறிவிட்டது. அந்த வாகனத்தை வீட்டில் எப்படி நிறுத்துவது, வாகனங்களை எப்போது வாங்குவது, வாராந்திர பூஜை போன்ற முறைகளை இது விரிவாகச் சொல்கிறது. நமது பயணங்களுக்குத் துணை செய்யும் வாகனங்களின் முக்கியத்துவம் பற்றி இந்த வாஸ்து பிரிவு குறிப்பிடுகிறது.
- ஒரு மணி நேரத்திற்கு ஒரு கிரகத்தின் ஓரை நடைபெறும்.
- ஓரைகளையும், அவற்றிக்கான பலன்களையும் இங்கே பார்க்கலாம்.
அறிவியல் கணக்குப்படி இரவு 12 மணி முதல் மறு நாள் இரவு 11.59 மணி வரையான நேரத்தை, ஒரு நாள் என்கிறோம். அதே நேரம் ஜோதிட கணக்குப்படி சூரியன் உதிக்கும் நேரத்தில் இருந்துதான் நாள் தொடங்குகிறது. அதன்படி காலை 6 மணி முதல் மறுநாள் காலை 5.59 மணி வரை, ஒரு நாள் ஆகும். ராகு, கேது தவிர மற்ற 7 கிரகங்களும், நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் தங்களின் கதிர்களை, ராசிக்காரர்கள் மீது வீசி அதற்கேற்ப பலன்களைக் கொடுக்கின்றன. இந்த கதிர்வீச்சு நேரத்தை 'ஓரை' என்கிறோம்.
ஜோதிடக் கணக்குப்படி சூரியன், சுக்ரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என்ற ரீதியில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு கிரகத்தின் ஓரை நடைபெறும். ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு ஓரை உரிமையானது. அந்த நாளில் அந்த ஓரையைக் கொண்டுதான் நாள் தொடங்கும். உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உரியது. அந்த நாளில் சூரிய ஓரையுடன் தான் நாள் தொடங்கும். அதன்பிறகு சுக்ரன், புதன், சந்திரன், குரு, செவ்வாய் ஓரைகள் தொடர்ந்து வரும். அதன்பிறகு மீண்டும் சூரியன், சுக்ரன் என்று இந்த வட்டம் சுழலும். இப்படி ஒவ்வொரு நாளும், அந்தந்த கிழமைக்குரிய கிரகத்தின் ஓரையுடன்தான் நாள் தொடங்கும்.
ஓரைகளையும், அவற்றிக்கான பலன்களையும் இங்கே பார்க்கலாம்.
சூரிய ஓரை: எல்லாவற்றுக்கும் முதன்மையானது சூரியன். அந்தக் கோள் 'ராஜகிரகம்' என்று அழைக்கப்படுவதால், அரசு சார்ந்த செயல்களைச் செய்ய இந்த நேரம் ஏற்றது. வழக்கு தொடர்பான முயற்சிகளை மேற்கொள்வது, உயர் பொறுப்பில் உள்ளவர்களை சந்திப்பது, சொத்துக்கள் தொடர்பான முடிவு எடுப்பது என முயற்சிகளை மேற்கொள்வதற்கு இந்த ஓரை மிகச்சிறப்பானது. அதே நேரம் சூரிய ஓரையில், புதிய முயற்சி களுக்கான ஒப்பந்தங்களை முடிவு செய்யக்கூடாது. நல்ல செயல்களை மேற்கொள்ள இந்த ஓரை சிறந்தது அல்ல. குறிப்பாக புதிய வீட்டிற்கு குடிபோகக் கூடாது.
சந்திர ஓரை: திங்கட்கிழமை, சந்திர ஓரையை தொடக்கமாக கொண்டு செயல்படும் நாள். வளர்பிறை காலத்தில் வரும் சந்திர ஓரைகள் நற்பலன்களை வழங்கும். இந்த ஓரையில் திருமணத்துக்கு நாள் குறித்தல், பெண் பார்த்தல், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்குதல், கல்வி, கலைகளை கற்கத் தொடங்குதல், நெடுந்தொலைவு பயணம் புறப்படுதல், கால்நடைகள் வாங்குதல் போன்றவற்றைச் செய்யலாம். பொதுவாக இந்த ஓரையில், அனைத்து வகையான நற்காரியங்களையும் செய்யலாம். தேய்பிறை காலத்தில் வரும் ஓரையில் செய்யும் காரியங்கள் அவ்வளவு பலன்களைக் கொடுக்காது.
சுக்ர ஓரை: வெள்ளிக்கிழமையில் இந்த ஓரையில்தான் நாள் தொடங்கும். ஆண் - பெண் உறவு, அழகு, கவர்ச்சி, தூய்மை, பொருளாதாரம் ஆகியவற்றை சுக்ரன் வழிநடத்துகிறார். எனவே இந்த ஓரை நேரத்தில் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம். ஆண்- பெண் உறவிற்கு, மருந்து சாப்பிட, கடனை மீட்டெடுக்க, புதிய ஆடை, அணிகலன் வாங்க ஏற்ற நேரம் இது. குறிப்பாக பெண்கள் தொடர்பான காரியங்களை மேற்கொள்ள சிறப்பான ஓரையாக, சுக்ர ஓரை பார்க்கப்படுகிறது. நிலத்தை உழவு செய்வதற்கும் இந்த ஓரையை தேர்வு செய்யலாம்.
சனி ஓரை: சனிக்கிழமையை முதன்மையான கொண்ட ஓரை இது. சனி பகவான், ஆயுள், தொழில், முற்பிறப்பு பலன் ஆகியவற்றின் வழிகாட்டி. தீயவற்றில் எல்லாம் தீயது, கொடிய நேரத்தைத் தரும் ஓரை இது. ஆனாலும் இந்த ஓரையில், நிலம், சொத்து தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். நிலத்தை உழுதல், இரும்பு, மின்சாரப் பொருட்களை வாங்குதல், தோப்பு, கிணறு அமைத்தல் போன்ற காரியங்களை சனி ஓரையில் செய்யலாம்.
குரு ஓரை: வியாழக்கிழமையில் முதல் ஓரையாக இது தொடங்கும். அனைத்துவிதமான காரியங்களைச் செய்யவும், சிறந்ததாக இந்த குரு ஓரை திகழ்கிறது. அதே போல் தீய செயல்களை இந்த நேரத்தில் செய்தால், கொடிய கேடான பலன் வந்து சேரும். குரு ஓரை நேரத்தில் திருமணத்திற்கான தாலி செய்ய தங்கம் வாங்கலாம். சுப காரியங்களுக்கான ஆடை, அணிகலன்களை வாங்குவதும் நல்லது. தங்கம் தொடர்பான வேலைகள் மற்றும் புதிய தொழில் தொடங்குவதற்கு இந்த ஓரை நேரம் ஏற்றதாகும்.
முதலிரவு, விதை நடுதல், நாற்று நடுதல், சேமிப்பு கணக்கு தொடங்குதல், தொழில் தொடங்க பொருள் கொள்முதல் செய்தல் போன்ற காரியங்களையும் இந்த ஓரையில் செய்யலாம்.
செவ்வாய் ஓரை: செவ்வாய்க்கிழமையில் முதல் ஓரையாக இந்த ஓரை வரும். ரத்தம், மருத்துவம், புவி, நெருப்பு மற்றும் அதிகாரம் போன்றவற்றிக்கு உரியவராக செவ்வாய் திகழ்கிறார். எனவே இந்த ஓரையில் நற்காரியங்களை செய்தல் கூடாது. எந்த ஒரு புதிய செயலையும் தொடங்க வேண்டாம். இந்த ஓரையில் போர் தொடுத்தல், போர்க்கருவிகள் செய்தல், வண்டிகளை பழுது நீக்குதல், வீடு மனை நிலம் வாங்குதல் மற்றும் விற்றல், மருந்து சாப்பிடுதல், ஏரிக்கரை மேம்படுத்துதல் மற்றும் அணை கட்டுதல் போன்ற பணிகளைச் செய்யலாம்.
புதன் ஓரை: புதன்கிழமையானது, இந்த ஓரையில்தான் தொடங்கும். புதன் என்பதற்கு அறிவன் என்றும் பொருள் உண்டு. எனவே இந்த ஓரையில் அறிவுசார்ந்த செயல்களை செய்வது சிறப்பான பலன்களைத் தரும். அறிவியல் ஆராய்ச்சி களை மேற்கொள்வது, ஜோதிடம் கணிக்கத் தொடங்குவது, தேர்வு எழுதுவதற்கான வேலைகளைச் செய்வது, போட்டிகளில் பங்கேற்பது, கடிதத் தொடர்பு மேற்கொள்வது, தொழில்நுட்பம் சார்ந்த புதிய பொருட்களை வாங்குவது, புதிய கணக்கு தொடங்குவது போன்ற செயல்களை இந்த ஓரையில் செய்யலாம். நற்செயல்களைச் செய்ய சிறந்த ஓரை இது.
- பொருந்தாத இரு ஜாதகங்களை இணைத்து தரும் படி ஜோதிடரை நிர்பந்தம் செய்தல் கூடாது.
- சில தம்பதியினர் குழந்தை பிறந்த பிறகு பிரியும் நிலை ஏற்படும்.
தம்பதியினரின் பிரச்சினையை உலவியல் ரீதியாக ஆய்வு செய்யும் போது பல காரணங்கள் உண்மையான பிரச்சினையாகவும் சில காரணங்கள் மிகவும் அநர்த்தமாகவும் இருக்கிறது. அவை எதனால் என்றும் பார்க்கலாம்.
ஒரு வீட்டிற்கு ஒரே குழந்தை இருப்பதே முதல் காரணம். ஒரு குழந்தையை அளவு கடந்த அன்பினை செலுத்தி வளர்த்து விடுகிறார்கள். அந்த குழந்தை தனக்கே கட்டுப்பட்டு தன் விருப்ப படியே இருக்க வேண்டும் என்ற பெற்றோர்களின் எண்ணம் பல குழந்தைகளின் திருமண வாழ்வை அழிக்கிறது. சம்பந்திகளின் கருத்து வேறுபாடு தம்பதியினரின் நெருக்கத்தை குறைக்கிறது. விட்டுக் கொடுத்து வாழும் தன்மை குறைவதால் சிறிய விஷயத்தை பெரியதாக்கி தம்பதியினரை பல பெற்றோர்கள் பிரித்து விடுகின்றனர்.
திருமணத்திற்கு முன்பு சம்பந்திகளிடம் கருத்து வேறுபாடு வந்தால் திருமணத்தை ரத்து செய்வது திருமணத்திற்கு பிறகு தம்பதியினரை வாழவிடாமல் செய்வதைவிட உத்தமம். திருமணமாகி 1 மாதம் அதிகபட்சம் 3 மாதத்திற் கெல்லாம் ஜோதிடரையும் நீதிமன்றத்தையும் அணுகுபவர்கள் முதலில் கூறும் பிரச்சினை சம்பந்திகள் பிரச்சினைதான். தம்பதியினர் மன மகிழ்ச்சியுடன் இருந்தால் மட்டுமே இல்வாழ்கை இனிமையாக இருக்கும்.
பெற்றோர்களின் ஈகோ தம்பதியினருக்கு நிம்மதியின்மையை தருகிறது. தற்காலத்தில் ஆண், பெண் இருவரும் வேலைக்கு சென்றால் மட்டுமே பொருளாதார நெருக்கடி இல்லாமல் இருக்கும் என்ற நிலை இருப்பதால் தம்பதிகள் இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். இருவருக்கும் ஆண், பெண் நண்பர்கள் அதிகமாக இருக்கிறார்கள். தம்பதிகள் தங்களுக்குள் நல்லிணக்கம் ஏற்பட்ட பிறகு தங்களுடைய நண்பர்களை வாழ்க்கை துணைக்கும் குடும்பத்திற்கும் அறிமுகம் செய்வது உத்தமம்.
திருமணத்திற்கு முன்பே நண்பர்களை அறிமுகம் செய்து வீண் வதந்தி, பிரச்சினைகளை தவிர்த்தால் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். அத்துடன் ஆணுக்கு வருமானம் அதிகமாகவும் பெண்ணுக்கு வருமானம் குறைவாகவும் இருந்தால் நல்லது. ஆணுக்கு வருமானம் குறைவு அல்லது வேலையே இல்லாமல் திருமணம் செய்யும் போது ஒரிரு மாதத்தில் பிரச்சினை வந்துவிடுகிறது. இது தம்பதிகளுக்கு ஈகோ பிரச்சினை வந்து மற்றவரை அடக்க முயல்கிறார்கள்.
பொருந்தாத இரு ஜாதகங்களை இணைத்து தரும் படி ஜோதிடரை நிர்பந்தம் செய்தல் கூடாது. இரு குடும்பத்தின் தொழில், தகுதி ஒத்து போகும் போது திருமண பொருத்தத்தை பெரிதாக கருதாமல் திருமணம் நடந்த பிறகு வருந்தி பிரயோசனம் இல்லை.
ஆண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்த இடத்தில் பெண் ஜாதகத்தில் சனி இருப்பதும் பெண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்த இடத்தில் ஆண் ஜாதகத்தில் சனி இருப்பதும் சிறப்பில்லை. இந்த அமைப்பு இருந்தால் திருமணத்திற்கு பின் தொழில் வேலையில் பாதிப்பு ஏற்பட்டு, ஜாதகனுக்கு கையில் பணம் தங்காது , சுப மங்கலப் பொருட்கள் சேராது, , குடும்பத்தில் பிரிவினை ஏற்படும், சரியான தூக்கம் வராது.
6, 7-ம் அதிபதி ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால் திருமணத்தில் தடை ஏற்படும். அதிர்ஷ்ட வசமாக திருமணம் நடந்தாலும், (எத்தனை திருமணம் நடந்தாலும்) அத்தனையும் தோல்வியில் முடியும். ஜனன கால ஜாதகத்தில் 2, 7-ம் பாவகம், அதிபதிகள் 6,8-ம் அதிபதிகளுடன் சம்பந்தம் பெறும் போது விவகாரத்து ஏற்படும். 2, 7-ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறும் வக்ர கிரகங்கள் பிரிவினையை தரும். 2, 7-ம் பாவகம், அதிபதிகள் 12-ம் பாவகம், அதிபதிகளுடன் சம்பந்தம் பெறும் போது பிரிவினை ஏற்படுகிறது.
லக்ன சுப வலுப் பெற்றவர்களுக்கு 12-ம் அதிபதி, 12-ல் நின்ற கிரகங்களின் அந்தர காலங்களில் சுபமாகவோ/அசுபமாகவோ குறுகிய பிரிவினை ஏற்படுகிறது. 12-ம் அதிபதி குறுகிய கால தசை நடத்தும் கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், கேது போன்ற கிரகங்களாக இருந்தால் பாதிப்பும் குறுகிய காலமாகவே இருக்கிறது. நீண்ட காலம் தசை நடத்தும் குரு, சனி, ராகு, புதன், சுக்கிர தசைகள் வாழ்நாள் முழுவதையும் பிரிவினையுடனே கழிக்கச் செய்கிறது. லக்னம் வலிமை இழந்தவர்களில் பலர் வாழ்க்கை துணையுடன் சேருவோமா? என்ற சந்தேகத்துடன் ஜோதிடரை அணுகுகிறார்கள்.
ஜோதிட ரீதியான தீர்வு
பெண்கள் ஜாதகத்தின் ஜனன சுக்கிரனுக்கு கோச்சார செவ்வாய் சம்பந்தம் பெறும் போதும் ஜனன 7-ம் அதிபதிக்கு கோச்சார 5-ம் அதி பதிக்கு சம்பந்தம் பெறும் போதும் சேர்ந்து வாழும் மன நிலையும் ஈர்ப்பும் உருவாகும் காலம். ஆண் ஜாத கத்தின் ஜனன செவ்வாய் அல்லது குருவுக்கு கோச்சார குரு அல்லது சுக்கிரன் சம்பந்தம் பெறும் போதும் ஜனன 7ம் அதிபதி கோச்சார 5-ம் அதிபதி சம்பந்தம் பெறும் போதும் முயற்சி செய்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.
கோச்சார குரு 2, 7-ம் அதிபதியுடன் சம்பந்தம் பெறும் போதும் சேர்ந்து வாழும் மனநிலை உருவாக்கும். சில தம்பதியினர் குழந்தை பிறந்த பிறகு பிரியும் நிலை ஏற்படும். குழந்தை பிறந்த பிறகு பிரித்தவர்கள் குழந்தையின் 9-ம் அதிபதிக்கு கோச்சார குரு சம்பந்தம் பெறும் காலத்தில் சேரும் வாய்ப்பு அதிகரிக்கும்.
பரிகாரம்
திருச்செங்கோடு அர்த்தநாதீஸ்வரர் வழிபாடும் சங்கரன் கோவில் சங்கர நாராயணர், கோமதியம்மன் வழிபாடும் கைமேல் பலன் தரும்.
பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி
- சரணகோஷம் முழங்க பாதயாத்திரையாக வருகின்றனர்.
- பழனி ஆண்டவனுக்கு காவடி எடுத்தால் சகல வினைகள் நீங்கும்.
பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவில் 'பாதயாத்திரை' என்பது தனி சிறப்பு பெற்று விளங்குகிறது. மார்கழி மாதத்தில் பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். ஒரு சிலர் தை மாதத்தில் இருந்து முருகனை எண்ணி தங்கள் விரதத்தை தொடங்குகின்றனர். ஆகவே தை மாதம் தொடங்கி விட்டாலே பழனியில் பக்தர்கள் கூட்டத்தை அதிகம் பார்க்க முடியும்.
குறிப்பாக காரைக்குடி, தேவகோட்டை, நத்தம், திருச்சி, ராமநாதபுரம் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திண்டுக்கல் வழியே காவடி எடுத்து, முருகா...! முருகா...! என்ற சரணகோஷம் முழங்க பாதயாத்திரையாக வருகின்றனர். அப்போது அவர்கள் முருகனுக்கு பிடித்த காவி, பச்சை வண்ண உடையை அணிந்து பரவசத்துடன் வருவதை பார்க்கலாம்.
இதில் செட்டிநாடு என்றழைக்கப்படும் காரைக்குடி நகரத்தார் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மயில்காவடி, சேவல்காவடி, எடுத்து ஆடிக்கொண்டே வருகின்றனர். பழனி ஆண்டவனுக்கு காவடி எடுத்தால் சகல வினைகள் நீங்கும். தோஷங்கள் விலகும். வாழ்வில் ஆனந்தம் பெருகும். பாதயாத்திரையாக வருவதால் நம் முன்ஜென்ம பாவ வினைகள் நீங்கி நம் வாழ்வு சிறப்பு பெறும் என்பது ஐதீகமாக உள்ளது.
- நம் வீட்டிலும் பூஜை அறையை ஈசான மூலையில் அமைக்கலாம்.
- ஈசான மூலை அடைபட்டதாக இருக்கக் கூடாது.
பூஜை அறை என்றாலே நம் எல்லோர் நினைவுக்கும் உடனே வருவது ஈசானிய மூலை. காரணம் இறைவன் உறையும் இடம் ஈசானிய மூலை எனலாம். நம்முடைய பூமிப்பந்தும் வடகிழக்கு பக்கமாகத்தான் சாய்ந்து இருக்கிறது.
பிரபஞ்சத்திலிருந்து ஆவாரம் ஆற்றலும் வடக்கிழக்கின் வழியே தான் மற்ற இடங்களுக்கு பரவுகிறது எனவும் கூறுவர். கோவில்களில் யாகசாலை அமைக்கும் போது ஈசான மூலையை வடகிழக்கு மூலையை தெரிவு செய்வார்கள் என்பதை பார்க்கின்றோம்.
எனவே நம் வீட்டிலும் பூஜை அறையை ஈசான மூலையில் அமைக்கலாம். பொதுவாக ஈசான மூலை வளர்ந்திருந்தால் சிறப்பு. இந்த ஈசானி மூலையில் கடவுள் படங்களை கிழக்கு நோக்கி வைக்கலாம் அல்லது வடக்கு நோக்கி வைக்கலாம். ஈசான மூலை அடைபட்டதாக இருக்கக் கூடாது நல்ல காற்றோட்ட வசதி உள்ளதாக இருத்தல் சிறப்பு. குறிப்பாக கிழக்கில் இருந்து சூரியக்கதிர்கள் ஈசான மூலைக்குள் வருவது நல்லது.
இவ்வாறு ஈசான மூலையில் பூஜையறை அமைக்க இயலவில்லை என்றால் வீட்டின் கிழக்கு பக்கத்தில் அதாவது வடகிழக்கு தென்கிழக்கு நடுவில் பூஜை அறை அமைக்கலாம். இதற்கும் வாய்ப்பு குறைவாக இருப்பின் வடக்கு திசை அதாவது வடகிழக்கு வடமேற்கு இரண்டிற்கும் இடைப்பட்ட இடத்தில் பூஜை அறை அமைக்கலாம். மேற்படி எந்த இடத்தில் அமைத்தாலும் பூஜை மாடம் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி இருத்தல் சிறப்பு.
வாஸ்து முறைப்படி படிக்கட்டுகள்
ஒரு வீட்டில் படிக்கட்டுகள் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. வெளியில் இருந்து வீட்டுக்கு செல்லும் படிக்கட்டுகள், வெளிப்பகுதியை வீட்டின் உட்பகுதியோடு இணைக் கிறது. ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் இரண்டு தளங்களை இணைக்கிறது. இவ்வாறு தொடர்பு பாலங்களாக விளங்கும் படிக்கட்டுகள் வாஸ்துவில் முக்கிய இடம் பெறுகிறது. கட்டிடக்கலை வல்லுனர்களும் கட்டுமான பொறியாளர்களும் வாஸ்து சாஸ்திர நிபுணர்களும் படிக்கட்டுகள் அமையும் இடத்தையும் அவை எத்திசை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் கவனமாக கருத்தில் கொள்கின்றனர்.
வீட்டில் எப்பொழுதும் நல்ல மங்கலமான நேர்மறையான சக்தி நிறைந்திருக்க வேண்டும் எனும் கோணத்தில் வாஸ்து செயல்படுகிறது. வீட்டின் எல்லா பகுதிகளிலும் சமமான நேர்மறை சக்தி இணக்கமாக விளங்க வேண்டும் என்பதில் வாஸ்து சாஸ்திரம் மிகுந்த அக்கறை காட்டுகிறது. எனவே தான் படிக்கட்டுகள் அமைப்பதில் வாஸ்துவின் பங்கு மிக முக்கியமாகிறது.
வீட்டின் தென்கிழக்கு பகுதியில் படிக்கட்டுகள் அமையும் என்றால் கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். தென்மேற்கில் அமைகிறது என்றால் மேற்கை பார்த்தவாறு அமைய வேண்டும். வடமேற்கில் அமைந்தால் வடக்கு திசை பார்த்தவாறு அமைய வேண்டும். வடகிழக்கில் மாடிப்படி அமைவதை தவிர்க்கலாம்.
- சிவகங்கை தீர்த்தத்திற்கு கிழக்கில் சக்கர தீர்த்தம் அமைந்துள்ளது.
- ஈசான்ய லிங்கத்தை வழிபட்டால் மாபெரும் ஞானியாக விளங்குவார்கள்.
அண்ணாமலையின் வடக்குத் திசையில் குபேர லிங்கமும், குபேர தீர்த்தமும் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் வறுமை எல்லாம் நீங்கி, சிவபிரான் திருவடியை அடையலாம். இந்த குபேர தீர்த்தத்திற்கு அருகே வசிட்ட முனிவரால் அமைக்கப்பட்ட வசிட்ட தீர்த்தம் உள்ளது.
இதில் வசிட்டர், ஐப்பசி மாதத்தில் மூழ்கி, முனிவர்களுக்கு எல்லாம் முதன்மையாக இருக்கப் பெற்றார். அப்படிப்பட்ட தீர்த்தத்தில் நீராடியவர்களுக்கு வேதத்திற்கு அங்கமாய் இருக்கின்ற சாத்திரங்கள் எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும். அவர்கள் பாவக்கடலையும் கடப்பார்கள். அண்ணாமலையின் ஈசான்ய திசையில் ஈசான்ய லிங்கம் மற்றும் ஈசான்ய தீர்த்தம் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் மூழ்கி ஈசான்ய லிங்கத்தை வழிபட்டால் மாபெரும் ஞானியாக விளங்குவார்கள்.
திருவிளையாடல்களைச் செய்யும் அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் சிவகங்கை தீர்த்தம் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தை தினமும் மனதில் நினைத்தாலே கங்கையில் நீராடிய பலன்கள் உண்டாகும். அநேக உருத்திரர்கள் இந்த தீர்த்தத்தில் மூழ்கித்தான் பெரும் பயன் அடைந்தார்கள்.
இந்த சிவகங்கை தீர்த்தத்திற்கு கிழக்கில் சக்கர தீர்த்தம் அமைந்துள்ளது. திருமால் "வராக"அவதாரம் எடுத்த போது இந்த சக்கர தீர்த்தத்தில் தான் மூழ்கினார். எனவே இந்த தீர்த்தம் பெரும் சிறப்பாக விளங்கியது.
இந்த தீர்த்தத்தை வலம் வருவோரும், இதில் மூழ்கியவர்களும், இந்த நீரை உட் கொண்டவர்களும் துன்பக்கடலில் இருந்து வெளியே வந்து சிவபிரானின் இரண்டு திருவடிகளையும் இடமாக பெருவார்கள். அருணாசலேஸ்வரர் எழுந்தருளி இருக்கின்ற இந்த கோவில் வளாகத்தில் அக்னி திசையில், தாமரையாகிய சிறந்த ஆலயத்தில் வசிக்கும் நான்முகனால் அமைக்கப்பட்ட பிரம்ம தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் மூழ்கினால் கடந்த பிறவிகளில் செய்த தீவினைகள் நீங்கும். இந்த தீர்த்தத்தில் மூழ்கி ஒரு அணு அளவு தங்கத்தை தானம் செய்பவர்கள் பெரும் பதவியை அடைவார்கள்.
- 27 நட்சத்திர தோஷங்கள் நீங்குவதற்கு மகாயாகம் நடத்தப்படுகிறது.
- இந்த கோவில் திருவண்ணாமலை வந்தவாசி தாலுகா இஞ்சிமேடு கிராமத்தில் உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா, பெரணமல்லூர் ஒன்றியம், இஞ்சிமேடு கிராமத்தில், ஸ்ரீ பெருந்தேவிதாயார் சமேத வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீ வரதராஜபெருமாள் தனி சன்னதி, ஸ்ரீ பெருந்தேவி தாயார் சன்னதி, கல்யாண லட்சுமி நரசிம்மர் சன்னதி, ராமர், லட்சுமணர், சீதாதேவி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் தனி சன்னதிகள் உள்ளன.
பிரதி மாதம் சுவாதி நட்சத்திரம், மூல நட்சத்திரம் ஆகிய நட்சத்திர நாட்களில் 27 நட்சத்திர தோஷங்கள் நீங்குவதற்கு மகாயாகம் நடத்தப்படுகிறது. இதில் திருமணத்தடை, வேலை வாய்ப்பு, குழந்தை பாக்கியம், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் பல்வேறு நன்மைக்காகவும் யாகம் நடத்தப்படுகிறது.
பிரதிமாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கோ சாலையில் உள்ள பசுக்களுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதில் வியாபாரம், திருமணநாள், பிறந்த நாள், குழந்தை வரம், பெயர் சூட்டுதல், நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கும் முன்பதிவு செய்து கொண்டு கோ பூஜையில் கலந்து கொண்டு வழிபடலாம். இந்த கோவிலில் புத்தாண்டு திருவிழா, தைமாத திருவிழா, திருப்பாவாடை அன்னக்கூடை திருவிழா, பவுத்திர உற்சவம், திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை, கருடசேவை, கிருஷ்ணஜெயந்தி ஆகியவை முக்கிய விழாக்களாக நடக்கின்றன.
பெருந்தேவி தாயார் சிறப்பு
பல்வேறு கோரிக்கைகளை பெருந்தேவி தாயாரிடம் வைத்து மண் அகல்விளக்கில் தீபம்ஏற்றி 48 நாள் மஞ்சள் வைத்து வணங்கி வந்தால் நன்மைகள் நடக்கும்.
- இங்கு எமகண்டவேளை பூஜைகள் விசேஷம்.
- இக்கோவிலில் கேதுபகவானை தனிச் சந்நதியில் தரிசிக்கலாம்.
சென்னை அருகே உள்ள போரூர் - குன்றத்தூர் சாலையில் உள்ளது கெருகம்பாக்கம். இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால், நீலகண்டேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. போரூர் சந்திப்பில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
இது கேது பகவானுக்குரிய தலமாக கருதப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அன்று இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இறைவனின் திருநாமம், நீலகண்டேஸ்வரர், அம்பிகையின் திருநாமம் ஆதிகாமாட்சியம்மை என்பதாகும். சுவாமி கருவறையின் வலது பக்கம் சண்டிகேஸ்வரர் இருக்கிறார்.
இக்கோயிலில் கேதுபகவானை தனிச் சந்நதியில் தரிசிக்கலாம். இரு நாகங்கள் பின்னிப் பிணந்திருக்க, நடுவில் 'காளிங்க நர்த்தன கண்ணன்'போல இவர் அருள்பாலிக்கிறார். எமகண்ட வேளை கேதுவிற்கு உரியது என்பதால் இவர் சந்நதியில் செய்யப்படும் எமகண்டவேளை பூஜைகள் விசேஷம்.
ஈசனுக்கும் நந்திக்கும் இடையே உள்ள மேல் விதானத்தில், சூரியனை கேது விழுங்குவது போல் ஒரு சிற்பம் காணப்படுகிறது. இதன் கீழ் நின்று ஈசனையும் அம்பிகையையும் மனமுருக வேண்டினால் கேதுவின் கெடுபலன்கள் குறைகிறது. வெளிச்சுற்றில் கேது பகவான் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். புடைப்புச் சிற்பமாக இருக்கும் பின்னிப் பிணைந்த இரண்டு சர்ப்பங்களின் நடுவில் உள்ள நடன கோபாலன், கேதுவாக கருதப்படுகிறார்.
கேது சரியில்லை எனில் திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் வரும்; எந்த காரியமானாலும் அலைச்சலுடன்தான் முடிக்கவேண்டியிருக்கும். எனவே கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரரை தரிசிக்கும்போது கேதுவினால் ஏற்படும் பிரச்னைகள் தீரும்.
- கலசம் முழுவதும் நூலைச் சுற்ற வேண்டும்.
- நூல் சுற்றத் தெரியாதவர்கள், பட்டுத் துணியை சுற்றலாம்.
நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் குடியிருக்க, வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பார்கள். மேலும் மனதில் தீய எண்ணங்கள் இன்றி, நேர்மறையான வார்த்தைகளைப் பேசி வாழ்பவர்களின் வீட்டில் லட்சுமி குடியேறுவாள் என்பது நம்பிக்கை. அதே போல் நம்முடைய குலதெய்வ சக்தியையும், நாம் நம்முடைய வீட்டில் குடியேற்றலாம் என்கிறார்கள்.
அதற்கு மஞ்சள், மண், சந்தனம், குங்குமம், விபூதி, சாம்பிராணி, அடுப்புக்கரி போன்றவற்றை சிறிதளவு எடுத்து, அதை ஒரு சிவப்பு துணியில் வைத்து முடிச்சுப் போட்டு, வீட்டின் வாசல்படி உட்புறம் நிலைப்படியின் மையத்தில் மேல் பகுதியில் ஆணி அடித்து மாட்டி வைக்க வேண்டும். பின்னர் தினமும் அதற்கு தூப, தீபம் காட்டி வழிபட்டு வந்தால், குலதெய்வ சக்தியை வீட்டில் வரவழைக்கலாம் என்பது ஆன்மிக சான்றோர்களின் கருத்து.
ஒரு கலச சொம்பில், சிறிதளவு வெட்டிவேர், பச்சை கற்பூரம், ஏலக்காய், பன்னீர் ஆகியவற்றை போட வேண்டும். பன்னீர் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். பின்னர் அந்த கலசம் முழுவதும் நூலைச் சுற்ற வேண்டும். நூல் சுற்றத் தெரியாதவர்கள், பட்டுத் துணியை சுற்றலாம்.
பின்னர் வீட்டின் பூஜை அறையில் ஒரு பலகை வைத்து, அதன் மீது வாழை இலை போட்டு, அதில் பச்சரிசி பரப்பி, அதன் மீது கலச சொம்பை வைக்க வேண்டும். கலசத்தின் மீது வாழைப்பூவை, நுனிப் பகுதி மேல்நோக்கி இருக்கும்படி வைக்க வேண்டும். வாழைப்பூவுக்கும், கலசத்திற்கும் இடையில் மாவிலை அல்லது வெற்றிலை சுற்றி வைக்க வேண்டும்.
பின்னர் கலசத்திற்கு வில்வ இலை அல்லது ஊமத்தம் பூ கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். கலசத்தின் மீது வைத்திருக்கும் வாழைப்பூ, மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும். பூஜை செய்வதற்கு அந்த மூன்று நாட்களே போதுமானது. தொடர்ந்து பூஜை செய்ய விரும்புவர்கள், வாழைப்பூவை மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். பூஜை முடிந்ததும் பச்சரிசியை சமையல் செய்தும், வாழைப்பூவை வடை செய்தும், அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.
கலசத்தில் உள்ளவற்றை வீட்டைச் சுற்றி தெளித்தும், குளிக்கும் நீாில் விட்டு நீராடவும் செய்ய வேண்டும். அதோடு 'ஓம் பவாய நம, ஓம் சர்வாய நம, ஓம் ருத்ராய நம, ஓம் பசுபதே நம, ஓம் உக்ராய நம, ஓம் மஹாதேவாய நம, ஓம் பீமாய நம, ஓம் ஈசாய நம' என்ற மந்திரத்தை தினமும் 108 முறை காலை மற்றும் மாலை வேளைகளில் பாராயணம் செய்து வழிபட்டு வந்தால் குலதெய்வத்தின் அருளைப் பெறலாம்.
- இக்கோவில் பரசுராமனின் தோஷம் நீக்கிய தலம் ஆகும்.
- அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீ்ங்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு வடக்கு பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் கரையில் விஷ்ணம்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ளது திருக்கானூர் கரும்பீஸ்வரர் திருக்கோவில்.
இக்கோவில் பரசுராமனின் தோஷம் நீக்கிய தலம் ஆகும். இத்தலத்தில் உள்ள சிவனையும், அம்பாளையும் வணங்கினால் உடல்நலக்குறைவு நீங்கி திருமணத்தடை அகலும் என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் வளமான வாழ்க்கையை கரும்பீஸ்வரர் அருள்வார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
திருக்கானூர் கரும்பீஸ்வரர் கோவிலில் தல விருட்சம் வில்வ மரத்தின் இலைகளால் செம்மேனி நாதருக்கு அர்ச்சனை செய்து வஸ்திரம் சாற்றி, நெய் தீபம் ஏற்றி சிவகவசம் பாராயணம் செய்தால் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்படுபவர்கள் நோய் நீங்கி நல்வாழ்வு பெறுவார்கள் என்றும், சவுந்தரநாயகி அம்பாளுக்கு புத்தாடை அணிவித்து, செவ்வரளி மாலை சாற்றி தீபமிட்டு அர்ச்சனை செய்ய திருமண தடை நீங்கி, திருமணம் கைகூடும் என்றும், செம்மேனியப்பருக்கும், அம்பாளுக்கும் எருக்கமாலை அணிவித்து பால், தயிர், நெய், தேன், பன்னீர் அபிஷேகம் செய்ய சந்தானபாக்கியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.
சப்தமி நாளில் இக்கோவிலில் மூலவரையும், அம்பாளையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீ்ங்கும் என இன்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது.
திருக்கானூர் கரும்பீஸ்வரர் கோவிலுக்கு தென் மாவட்டங்களில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் முதலில் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வர வேண்டும். பின்னர் தஞ்சையில் இருந்து பஸ் மூலம் திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்துக்கு வந்து அங்கிருந்து ஆட்டோ மூலம் திருக்காட்டுப்பள்ளி காவிரி பாலத்தை கடந்து சென்றால் கோவிலை அடையலாம்.






