என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    • பக்தியோடும், மகிழ்ச்சியோடும் காணிக்கைகளை செலுத்துகின்றனர்.
    • இதனால் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன.

    முருக பக்தர்கள் திருவிழாக்களில் பழனிக்கு வேண்டுதலை மட்டும் முருகனிடம் வைக்காமல் காணிக்கைகளை உண்டியலில் செலுத்துகின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறிய பின்னரும் முருகனை கண்டு வழிபட்டு உண்டியலில் பக்தியோடும், மகிழ்ச்சியோடும் காணிக்கைகளை செலுத்துகின்றனர். இதனால் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன.

    காணிக்கைகளை அளிப்பதால் செல்வம் பெருகும். சேவல், புறா போன்ற பறவைகளை காணிக்கையாக செலுத்துவதால் நோய்கள், பில்லி, சூனியம், தரித்திரம் உள்ளிட்ட தீய வினைகள் நீங்கும், ஆயுள் பெருகும். விவசாயிகள் தங்கள் உழவு செழிக்க வேண்டும் என்பதற்காக பசு, எருது போன்றவற்றையும் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். வேளாண்மை செழிப்பதோடு, குடும்ப கஷ்டங்கள் விலகி தொழிலில் உற்பத்தி பெருகும்.

    அதேபோல் முருகன் கோவிலில் அன்னதானம் என்பது சிறப்பாக நடைபெற்று வருகிறது. அன்னதானம் செய்வதால் ஆயுள் பெருகும், குடும்பத்தில் முருகப்பெருமானே ஆண்குழந்தையாகி பிறப்பான் என்பது ஐதீகம். பழனி பகுதியை ஆண்ட மன்னர்கள் முருகப்பெருமானுக்காக இடைவிடாது பூஜைகள் பல செய்தும், நிலங்களை தானமாகவும் வழங்கினர். இதற்கான கல்வெட்டுகள் பல விளக்குகின்றன. நிலங்களை காணிக்கை போன்று தானம் செய்வதால் தலைமுறைகள் சிறக்கும்.

    வேலின் மகத்துவம்

    முருகனின் கரத்தில் இருக்கும் வேல், அநீதி அழிக்கும் ஆயுதம். முருகப்பெருமானை நாடுகிற மனிதர்களின் மனத்துணிவு வேலை விட உறுதியாக இருந்தால் வாழ்வின் துன்ப கணைகளை தகர்க்க முடியும். முருகனை வழிபடுபவர்கள் அக அழகோடு சென்றால், அவர்கள் வாழ்வை பொருளுடையதாக மாற்றி கருணை வழங்குபவன் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது.

    • இந்த கோவில் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
    • கிராம தெய்வமாக விளங்குகிறது மாகாளியம்மன் ஆலயம்.

    திருப்பூர் மாவட்டம், திருப்பூர் மாநகராட்சி, நெருப்பெரிச்சல் கிராமம், 5-வது வார்டுக்குட்பட்ட கூலிபாளையத்தில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவில் சுற்று வட்டாரத்தில் உள்ள கோவில்களில் மிகப்பழமையான கோவிலாகவும், மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகவும் உள்ளது.

    வேண்டி வரும் பக்தர்களின் குறைகளை போக்கும் வல்ல தெய்வமாக விளங்கும் மாகாளியம்மனின் அருளை பக்தர்கள் பெறவும், அம்மனின் பிரசித்தியை உலகம் அறிந்து கொள்ளவும், கோவில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

    உலகில் ஆன்மாக்கள் உய்யும் வண்ணம் எந்நாட்டிலும் பொன் நாடாகவும், நமது கொங்குநாட்டின் சிறந்த பகுதியாகவும் ஸ்ரீபுரி என்னும் மஹாலட்சுமி வாசம் செய்கின்ற தொழில் நகரமாம் திருப்பூர் நொய்யல் நதியின் வடபால் அமைந்துள்ள திவ்யமான கூலிபாளையம் எனும் பகுதியில் 130 ஆண்டுகளுக்கும் பழமையான தன்னை நாடிவரும் பக்தர்களின் மனக்குறைகள் நீங்கிடவும், வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டியதை அருள்பாலிக்கும் கிராம தெய்வமாக விளங்குகிறது மாகாளியம்மன் ஆலயம்.

    இந்த ஆலயத்தில் புதிதாக கல்ஹார திருப்பணிகள் செய்வித்து, துவார சக்திகள் ராகு, கேது, குதிரை, சிலா உருவ திருமேணிகள் அமைக்கப்பட்டு தை மாதம் 12-ம் நாள் அதாவது இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் விநாயகர், மாகாளியம்மனுக்கு மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா நடைபெறுகிறது.

    கும்பாபிஷேக விழாவில் பக்தகோடி பெருமக்கள் கலந்து கொண்டு, மாகாளியம்மனை வணங்கி, இம்மையிலும், மறுமையிலும் நீங்காத செல்வம் பெற கோவில் திருப்பணி குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.

    • செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் இந்த மாலையை அணியலாம்.
    • அனைத்து கிரக தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.

    ஈரோடு அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டைசுற்றி பாளையம் பைரவர் பீடம் விஜய் சுவாமிஜி, பொதுமக்களின் தொழில் வளர்ச்சி, குடும்ப நிம்மதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக சிறப்பு பூஜைகள் நடத்தி வருகிறார். இவர் கருங்காலி மாலைகள் குறித்த அரிய தகவல்களை கூறி அதை பக்தர்களுக்கு அளித்து வருகிறார்.

    இதுபற்றி அவர் கூறியதாவது:-

    நம் வாழ்வில் மகத்தான மகிழ்ச்சியை கொண்டு வர நவக்கிரக நாயகரான செவ்வாய் பகவானின் ஆசீர்வாதம் மிக முக்கியம். அவரது ஆசீர்வாதத்தை பெற விரும்புபவர்கள் கருங்காலி மாலையை கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். செவ்வாய் பகவானுக்கு உரிய இந்த கருங்காலி மாலை அணிபவர்களுக்கு செவ்வாய் பகவான் அளிக்கும் அனைத்து பலன்களும் கிடைக்கும்.

    மேலும் எந்தவிதமான பிரச்சினைகளையும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்டவர்களாக விளங்குவார்கள், மன உறுதி அதிகமாவதுடன், உடல் பிரச்சினைகள் நீங்கும். குலதெய்வ அருள் பெருகும். செல்வவளம் அதிகமாகும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். அனைத்து கிரக தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.

    மாங்கல்ய பலம் பலப்படும். செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் இந்த கருங்காலி மாலையை அணிந்தால் தோஷம் நீங்குவதுடன், திருமண தடை நீங்கும். கணவன்-மனைவிக்குள் பிரச்சினைகள் இருந்தால் அந்த பிரச்சினைகள் அகன்று கணவன்-மனைவி உறவு மேம்படும்.

    பைரவ பீடத்தில் கருங்காலி மாலைகள் முறைப்படி பூஜை செய்யப்பட்டு, மந்திரங்களால் உரு ஏற்றி பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. அணிந்து கொண்டால் தொழில் வளர்ச்சி அடையும். பொருளாதாரம் முன்னேற்றம் பெறும்.

    இவ்வாறு பைரவர் பீடம் விஜய் சுவாமிஜி கூறினார்.

    • புதிய வீட்டில் குடியேறும்போது சில தீய சக்திகளும் அங்கே இருக்கலாம்.
    • வீட்டின் முன்பாக வெண் பூசணிக்காயை கட்டி தொங்க விட என்ன காரணம் என்று பலரும் நினைக்கலாம்.

    வீ ட்டின் கிரகப்பிரவேசம் எனப்படும் புதுமனைப் புகுவிழா சமயத்தில், புதிய வீட்டின் முன்பாக வெண் பூசணிக்காய் கட்டி தொங்க விடுவார்கள். எவ்வளவோ காய்கள் இருக்க, வீட்டின் முன்பாக வெண் பூசணிக்காயை கட்டி தொங்க விட என்ன காரணம் என்று பலரும் நினைக்கலாம். வளர்ச்சியடையாத வெண்பூசணியின் நிறம் அடர் பச்சை நிறத்தில் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக மாறி வெளிர் சாம்பல் நிறம் வரை மாறுபடும். முதிர்ந்த வெண் பூசணியின் மேல் பகுதியில் ஒரு தனித்துவமான வெள்ளை சாம்பல் சூழப்பட்டிருக்கும். இதனால் இந்த பூசணிக்காயை 'சாம்பல் பூசணிக்காய்' என்றும் சொல்வார்கள்.

    உணவுகளில் மிகவும் அதிக பிராண (உயிர்சக்தி) சக்தி கொண்ட சில உணவுகள் உள்ளன. அதில் வெண் பூசணிக்குத்தான் முதலிடம். வெண் பூசணியானது, உணவிலும் மிக அதிக சக்திகளைக் கொடுக்கும் உணவாக இருக்கிறது. ஆசிய நாடுகளின் சமையலில் சூப்களில் கட்டாயம் சேர்க்கப்படும் ஒரு உணவுப் பொருளாக, வெண் பூசணி இருக்கிறது. பெரும்பாலும் இந்தியா மற்றும் சீனாவில் இவை விரும்பி உண்ணப்படும் காயாக உள்ளது. இது உடல்நலத்தைப் பேணிப் பாதுகாப்பதில் முன்னிலை வகிக்கிறது.

    பழங்காலத்தில் வீடுகளிலேயே கூட வெண் பூசணியை வளர்த்திருக்கிறார்கள். அப்படி வளரும் வெண் பூசணியை, ஏழைகளுக்கு, இயலாதவர்களுக்கு தானம் அளித்தால் அது புண்ணியம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. வெண்பூசணியில் செய்யப்படும் உணவைத் தொடர்ந்து சாப்பிடுவதால், புத்திக்கூர்மையும், உடல் புத்துணர்வும், மன சமநிலையும் ஏற்படும் என்கிறார்கள்.

    இந்த வெண் பூசணிக்காயில், மிக அதிக அளவில் நோ்மறை பிராண சக்தி இருக்கிறது. அதனால்தான் நாம் புதியதாக கட்டிக் குடியேறும் வீட்டின் முன்பாக வெண் பூசணிக்காயை கட்டி வைக்கிறோம். புதிய வீட்டில் குடியேறும்போது சில தீய சக்திகளும் அங்கே இருக்கலாம். வீட்டின் முன்பாக கட்டப்படும் வெண் பூசணியில் இருக்கும் நேர்மறை சக்தியானது, அங்குள்ள எதிர்மறை சக்திகளை அகற்றிவிடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதனால்தான் வெண் பூசணியை, புதியதாக குடியேறும் வீடுகளின் முன்பாக கட்டி தொங்கவிடுகிறார்கள்.

    • பணமே இந்த காலத்தில் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக உள்ளது.
    • பணப்பெட்டியை எப்போதும் சுத்தமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் மற்ற எல்லாவற்றையும் விட நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய இடம் பணப்பெட்டி வைக்கும் அறைக்கு... ஏனென்றால் பணமே இந்த காலத்தில் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக உள்ளது.

    வடக்கு திசை குபேரன் திசையாகும். குபேரன் செல்வத்துக்கு அதிபதி. எனவே பணப்பெட்டி வடக்கு திசையை நோக்கி பணப்பெட்டியை வைக்கலாம். இது தவிர தென் மேற்கு மூலையிலும் பணப்பெட்டி இடம்பெறலாம். தென் மேற்கு மூலையில் வடக்கு பார்த்தப்படி பணப்பெட்டியை வைப்பதே மிக சிறந்தது. இவ்வாறு அமைக்கும் பெட்டியில் வைக்கும் பணம் அள்ள, அள்ள குறையாமல் இருக்கும். செல்வம் வேகமாக சேரும்.

    பணப்பெட்டியை எப்போதும் சுத்தமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதில் உள்ள பணம் முழுவதையும் எடுத்து விடாமல் அதில் ஒரு ரூபாயாவது போட்டு வைக்க வேண்டும்.பணப்பெட்டி இருக்கும் அறையின் கதவு ஒற்றையாக இருக்க வேண்டும். அந்த அறையின் நுழைவு வாயில் வடக்கு திசையிலோ, கிழக்கு திசையிலோ இருக்க வேண்டும். இதனால் செல்வ செழிப்பு கூடும். நுழைவுவாயில் வட மேற்கிலோ, தென்மேற்கிலோ அல்லது தென் கிழக்கு திசையிலோ இருக்க கூடாது. இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படும்.

    வீட்டில் பணத்தை அலமாரியில் வைப்பதாக இருந்தால் அதிகமான எடையை ஏற்றக்கூடாது. அலமாரியின் மேல் தட்டிலோ அல்லது நடுத்தட்டிலோதான் பணத்தை வைக்க வேண்டும். பணம் இருக்கும் தட்டில் துணிமணிகளை வைக்கக்கூடாது. இது செல்வம் கரைந்து போக வழி வகுக்கும். பணம் இருக்கும் இடத்தில் வாசனை திரவியங்களை போட்டு வைக்க கூடாது. பணம் இருக்கும் பெட்டியின் கால் ஆடக்கூடாது. பணப்பெட்டியை சுவருக்கும் புதைத்து வைப்பதாக இருந்தால், அந்த பெட்டியின் கீழ் தட்டில் தான் பணத்தை வைக்க வேண்டும். மேல்தட்டில் வைக்கக்கூடாது.

    • அஷ்டம சனியில் தொட்டது துலங்காது
    • ஏழரைச் சனியின் முதல் பகுதியை விரையச் சனி என்பார்கள்.

    ஒருவரின் சந்திரன் நின்ற ராசிக்கு, முன் ராசியிலும், பின் ராசியிலும், சந்திரன் நின்ற ராசியிலும் சனீஸ்வரன் சஞ்சாரம் செய்யும் காலம் தான் ஏழரைச் சனியாகும். அந்த மூன்று வீடுகளிலும் தலா இரண்டரை வருடங்கள் வீதம் மொத்தம் ஏழரை ஆண்டுகள் தங்கிவிட்டுப் போகும் கால கட்டமே ஏழரைச் சனியாகும்.

    ஏழரைச் சனியின் முதல் பகுதியை விரையச் சனி என்பார்கள். பண நஷ்டம், காரிய நஷ்டம், உடல் உபாதைகள் என்று நஷ்டமாகவே அக்காலம் இருக்கும். அடுத்த பகுதியை ஜென்மச் சனி என்பார்கள். அதாவது ராசியை சனி பகவான் கடந்து செல்லும் காலம். அந்தக் கால கட்டங்களில் மனப் போராட்டமாக இருக்கும். மன உளைச்சல்களாக இருக்கும். அடுத்த பகுதியை கழிவு சனி என்பார்கள். அந்தக் காலகட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள் குறைந்ததாக இருக்கும்

    அஷ்டமச் சனி: ஒருவரது ராசிக்கு எட்டாவது இடத்தில் கோச்சார சனி வருவது தான் அஷ்டமத்து சனி. அஷ்டம சனியில் தொட்டது துலங்காது, அஷ்டமத்து சனி காலத்தில் பூர்வீகத்தை விட்டு இடம் பெயர நேரும். வீண் பிரச்சினைகள் சிக்கி, பழி ஏற்க நேரும்.புத்தி தடுமாற்றம் மிகுதியாக இருக்கும். புத்தி வேலை செய்யாது ஆனால்உணர்ச்சி மட்டும் வேலை செய்யும். ஏழரை சனி 7 1/2 ஆண்டுகளில் செய்யும் வேலையை அஷ்டமச் சனி இரண்டரை வருடத்தில் செய்து முடித்து விடும்.

    3 சுற்று ஏழரை, அஷ்டமச் சனியை கடந்தவர்கள் பலர் எந்த பதட்டமும் இல்லாமல் நிதானமாக சனி பகவான் என்றால் யார் ? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். 3 சுற்றிலும் அடி வாங்கி ரண வேதனையில் முற்றும் துறந்த முனியாக ஞான மார்க்கத்திற்கு முக்திக்கு வழி தேடி சென்றவர்களும் இருக்கிறார்கள்.

    லக்னம் வலிமை பெற்றவர்களையும் சந்திரனுக்கு குரு பார்வை இருப்பவர்களுக்கும், தர்ம கர்மாதிபதி யோகம் அமைந்தவர்களையும் எந்த சனிப் பெயர்ச்சியும் எதுவும் செய்யாது. ஜாதகத்தில் சாதகமான தசா புத்தி இல்லாமல் போனாலும் குரு, சனி, சந்திரன் பலவீனமாக இருந்தாலும் தாக்கம் மிகுதியாகவே இருக்கும். இந்த காலகட்டத்தில் சாதகமற்ற தசாபுத்தி இருந்தால் சொந்த தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் ஏற்ற இறக்கம், தடை தாமதம், பண விரயம், பண இழப்பு இருக்கும்.சிலர் தவறான தொழில் முதலீடு செய்து பாதிப்படைகிறார்கள். அதிக முதலீடு செய்த முதலீட்டாளர்கள் , தொழிலில் கொடி கட்டி பறந்தவர்கள் கூட மிகச் சாதாரணமாக கண் இமைக்கும் முன் தொழிலில் சரிசெய்ய முடியாத இழப்பை சந்திக்கிறார்கள். இதனால் தொழிலை விட்டு விலகவும் முடியாமல் மேலே தொழிலை தொடரவும் முடியாமல் மன உளைச்சலை சந்திக்கிறார்கள்.

    • தற்போது இந்த கோவிலைச் சுற்றிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகள் உள்ளன.
    • தற்போது அனைவரும் சிமெண்டால் செய்யப்பட்ட பொம்மைகளை வைக்கிறார்கள்.

    கடலூரில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தென்னம்பாக்கம் கிராமம். இங்குள்ள அய்யனார் கோவில், மதுரை அழகர் கோவிலைப் போன்று பிரசித்திப்பெற்றதாகும். இந்தக் கோவிலுக்கு கடலூரில் இருந்து தூக்கணாம்பாக்கம் வழியாகவும், புதுச்சேரியில் இருந்து ஏம்பலம் வழியாகவும், வில்லியனூர் வழியாகவும் செல்லலாம். இங்குள்ள இறைவன் 'அழகுமுத்து அய்யனார்' என்று அழைக்கப்படுகிறார். இவர் தலையில் கிரீடமும், வலது கையில் பிரமாண்ட வாளும், இடது கையில் கேடயமும் தாங்கி கம்பீரமாக காட்சி தருகிறார்.

    கோவிலுக்குள் நுழையும் போது பிரமாண்ட குதிரை, யானை சிலைகளை தரிசிக்கலாம். இவற்றில் அய்யனாரின் வாகனமாக கருதப்படும் குதிரை, 375 ஆண்டுகள் பழமையானதாக சொல்லப்படுகிறது. அய்யனார் கையில் உள்ள வாளைச் சுற்றிலும், ஏராளமான வேண்டுதல் சீட்டுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை அய்யனார் நிறைவேற்றுவதாக நம்பிக்கை.

    தற்போது இந்தக் கோவிலைச் சுற்றிலும் எங்கு பார்த்தாலும், பொம்மைகள் அணிவகுத்து நிற்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, டாக்டர், வக்கீல், போலீஸ் என பல்வேறு பொம்மைகள் காணப்படுகின்றன. குழந்தை வரம் கேட்பவர்கள் 27 நாட்கள் விரதம் இருந்து 3 முறை வந்து சித்தரை வேண்டினால், 28-வது நாள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி வேண்டுதல் நிறைவேறியவர்கள் குழந்தை பொம்மை செய்து கோவில் முன்பாக வைக்கிறார்கள்.

    இதேபோல் கை, கால் பிரச்சினை உள்ளவர்கள் பிரார்த்தனை செய்து, அது குணமான பிறகு கை அல்லது கால் உருவம் செய்து வைக்கின்றனர். திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள். அது நிறைவேறியதும், மணமக்கள் கோல பொம்மையை செய்து வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    அந்த வரிசையில் டாக்டர், என்ஜினீயர், வக்கீல், போலீஸ் போன்ற ஆசைகள் நிறைவேறினால், அந்த தோற்றத்தில் செய்யப்பட்ட பொம்மைகளை செய்து வைக்கின்றனர். இப்படி எண்ணற்ற பொம்மைகள் இங்கே இருப்பதை வைத்தே, இந்த ஆலயம் எவ்வளவு சக்திவாய்ந்தது என்பதை உணர்ந்துகொள்ள முடியும். தற்போது இந்த கோவிலைச் சுற்றிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகள் உள்ளன.

    கடந்த காலங்களில் மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளை வைத்து பக்தர்கள் வழிபட்டுள்ளனர். அது நாளடைவில் மழையில் நனைந்து கரைந்து போனது. அதனால் தற்போது அனைவரும் சிமெண்டால் செய்யப்பட்ட பொம்மைகளை வைக்கிறார்கள்.

    • ஏழரைச் சனி காலத்தில் நடைபெறும் திருமணம், மண வாழ்க்கை பாதிக்காது.
    • 30 வயதிற்கு மேல் ஆகியும் திருமணத்தை தள்ளி போடுகிறார்கள்.

    ஏழரை சனிக்கும் மனித வாழ்விற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. சனி பகவான் கொடுப்பதை தடை செய்யும் அதிகாரம் வேறு எந்த கிரகத்திற்கும் கிடையாது. பலருக்கு திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் போன்ற பல்வேறு சுப விஷயங்கள் நடைபெறுவது ஏழரைச் சனியின் காலத்தில் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. பல வருடங்களாக தடைபடும் திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற பல்வேறு சுப நிகழ்வுகள் இந்த காலகட்டத்தில் எளிமையாக நடந்து விடும்.

    ஏழரை சனியின் காலத்தில் தான் ஆணிற்கு குடும்பம் என்றால் என்ன? மனைவி குழந்தைகளுக்கு ஒரு மனிதன் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் என்ன? உழைப்பின் அவசியம், உழைப்பால் உயரும் நெறி முறை போன்ற பல்வேறு வாழ்க்கை தத்துவத்தை புரிய வைப்பார்? பெண்களுக்கு கணவர், புகந்த வீட்டாருடன் எப்படி அனுசரித்து வாழ்வது? கணவனின் பொருளாதாரத்தில் எப்படி குடும்பம் நடத்த வேண்டும், குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும் போன்ற பல்வேறு இல்வாழ்க்கை உண்மைகளை புரிய வைப்பார்.

    சுய ஜாதகத்தில் ஏழாமிடத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் தசா புக்தி சாதகமாக இருந்தால் ஏழரைச் சனி காலத்தில் நடைபெறும் திருமணம், மண வாழ்க்கை பாதிக்காது. தங்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வரன் அமையாத காரணத்தால் ஏழரை சனியின் மேல் பழிபோடுகிறார்கள். அல்லது சுயவிருப்பு வெறுப்பு காரணமாக ஏழரை சனி வந்தால் திருமணம் செய்யக் கூடாது என 30 வயதிற்கு மேல் ஆகியும் திருமணத்தை தள்ளி போடுகிறார்கள். பல வருடங்களாக திருமணமே வேண்டாம் என்று கூறுபவர்களுக்கு கூட ஏழரை சனியின் காலத்தில் திருமணம் தானாக நடந்து விடும்.

    அஷ்டமச் சனியும் திருமணமும்

    ராசிக்கு எட்டாம் இடத்தில் நிற்கும் சனியின் ஏழாம் பார்வை இரண்டாமிடமான தனம்,வாக்கு, குடும்பஸ்தானத்திற்கு இருப்பதால் வாய் கொடுத்து மாட்டிக் கொள்பவரைப் போல தேவையற்ற வம்புக்கு சென்று தானே அதில் மாட்டிக் கொள்வர். அதாவது வம்பு, வழக்கு, தகராறில் ஈடுபடுதல், பிறர் விஷயங்களில் கலகம் செய்ய நினைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால், தனக்கு ஏற்பட வேண்டிய இன்பமான நிலையை தானே கெடுத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பை உருவாக்கிக் கொள்வார்கள்.மேலும் ஜனன கால ஜாதக ரீதியாக சாதகமற்ற தசை புத்தி நடப்பவர்களுக்கு தொழில், உத்தியோகத்தில் எதிர்பாராத இடர்களை சந்திக்க நேரும் என்பதால் திருமணத்தை தவிர்ப்பது நல்லது.

    பரிகாரம்

    எனவே ஏழரை சனியின் காலத்தில் முயற்சித்தால் திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடி வரும்.ஏழரைச் சனியால் திருமணம் தடைபடுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஜனன கால ஜாதக ரீதியான சனி பகவானால் திருமணத் தடை இருப்பவர்கள், சரியான திருமண வாழ்வு அமையாமல் மன நிம்மதி இழந்து அல்லாடுபவர்கள் சனிக்கிழமை திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபட திருமணத் தடை அகலும். திருமணத்திற்குப் பிறகு இல்லறம் நல்லறமாகும்.

    • இந்த பரிகாரம் நல்ல பலனைத்தரும்.
    • மிகவும் எளிய பலனுள்ள பரிகாரம் இது.

    கண்ணாடி குவளையில் தண்ணீரால் நிரப்புங்கள். அதில் சிறிதளவு கல் உப்பு போடுங்க. அதை இரவு படுக்க செல்லும் முன் வீட்டின் நடு கூடத்தில் வையுங்கள்.

    காலையில் அந்த நீர் பழுப்பு நிறமாக மாறியிருந்தால் வீட்டில் அதிக கண்ணுறுவும், துர் சக்திகளும் இருந்திருக்கிறது என்று அர்த்தம்.

    சில அறைகளில் படுக்கும்போது கெட்ட கனவு வந்தாலோ, அல்லது மனம் சஞ்சலப்பட்டலோ இதேபோல் அந்த அறைகளிலும் இரவு கண்ணாடி குவளை நீரை வைக்கலாம்.

    -ஜோதிடர் சுப்பிரமணியன்.

    • காவல் தெய்வ வழிபாடு என்ற ஒன்றே அனைவருக்கும் மறந்து விட்டது.
    • இது வரை காவல் தெய்வ வழிபாட்டை மறந்தவர்கள் இந்த வருடம் துவங்கலாம்.

    17.1.2023, தை-3, (செவ்வாய்கிழமை)

    பொழுது புலர்ந்தது முதல் இருள் சூழும் வரை தங்கள் ஜீவனத்திற்காக உழைத்து வாழ வேண்டும் என்பது உலக நியதி. ஓடி ஓடி உழைக்கும் மனிதர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவே பண்டிகைகள் கொண்டாடுவதை நமது முன்னோர்கள் கடைபிடித்து வந்தனர். போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத காலத்தில் மனதை உற்சாகப்படுத்தும் சுற்றுலா தலங்களுக்கு எளிதில் சென்று வர முடியாது.

    அதனால் முற்காலத்தில் காணும் பொங்கல் அன்று உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஊரின் அருகில் இருக்கும் கடற்கரை, ஆற்றங்கரை போன்ற இடங்களுக்கு சென்று அசைவ உணவு சமைத்து சாப்பிட்டு மகிழ்வார்கள்.

    கிராமப்புறங்களில் விளையாட்டுப் போட்டிகள், உறி அடித்தல், மரம் ஏறல் போன்ற வீர விளையாட்டுகள் நடைபெறும்.

    இந்த நாளில் ஊரின் எல்லை மற்றும் காவல் தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபட ஊர் மக்களை எளிதில் எந்த கொடிய நோய் , இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாது. கால சூழல் மாற்றத்தால் பல ஊர்களில் எல்லை மற்றும் காவல் தெய்வ வழிபாடு என்ற ஒன்றே அனைவருக்கும் மறந்து விட்டது.

    காவல் தெய்வத்திற்குரிய பூஜை வழிபாடு முறையாக இருந்தால் மட்டுமே ஊர் மக்களுக்கு ஆரோக்கியம், பாதுகாப்பு, தொழில்வளர்ச்சி போன்ற பல காரணிகள் சிறப்பாக இருக்கும். இது வரை காவல் தெய்வ வழிபாட்டை மறந்தவர்கள் இந்த வருடம் துவங்கலாம். அன்று திருமணமாகாத பெண்களுக்காக கன்னி பொங்கலும் ஆண்களுக்காக கன்று பொங்கலும் வைத்து விரைவில் திருமணம் நடக்க வேண்டிக்கொள்ளலாம்.

    காணும் பொங்கல் அன்று வயது முதிர்ந்த பெரியோர்களை நேரில் கண்டு ஆசி பெறுவது சிறப்பு.

    • பிறவிப் பிணி தீர்க்கும் கோ பூஜை... வழிபட்டால் தீரும் பிரச்சனைகள்
    • ஜாதகத்தில் உள்ள அனைத்து விதமான தோஷங்களும் விலகும்.

    மாட்டுப்பொங்கல்/திருவள்ளுவர் தினம் 16.1.2023, தை 2 , (திங்கட்கிழமை)

    இந்து சமயத்தில் பசுவை வணங்குவதைப்பெரும் புண்ணியமாக கருதுகின்றனர். இந்தப் பசுவை கோமாதா என்றும் பெருமையுடன் அழைக்கின்றனர்.

    பசுவின் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வங்களும், புனிதத்திற்குரியவர்களும் இருப்பதாக கருதுகின்றனர்.

    இப்பசுக்களில் மும்மூர்த்திகள் மட்டுமல்ல சத்தியம், தர்மம் என்று எல்லா தேவதைகளும் வசிக்கின்றனர். மாட்டுப்பொங்கல் அன்று கோமாதா எனப்படும் பசுவை பூஜை செய்து வழிபட்டால் பிறவிப் பிணி தீரும். ஜாதகத்தில் உள்ள அனைத்து விதமான தோஷங்களும் விலகும்.

    கடும் உழைப்புக்கும் உழவுக்குத் துணை செய்த கால்நடைகளை ஆராதிக்கும் நாள். உழவுக்கு உதவிய கால் நடைகளுக்கும் பால் தரும் பசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் தான் மாட்டுப்பொங்கல். திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கால்நடைகளை சுத்தப்படுத்தி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி மாலைகள் அணிவித்து அலங்கரிக்க வேண்டும்.

    மாட்டுக் கொட்டகை சுத்தம் செய்து சர்க்கரை பொங்கல் படைத்து கோ பூஜை செய்வது சிறப்பு.மாடுகளை வணங்கி விட்டு வாழை இலையில் பொங்கல் வைத்து அவற்றிற்கு உண்ண கொடுக்க வேண்டும்.  தமிழக கிராமங்களில் உறவினர்கள் மேல்  மஞ்சள் நீர் தெளிப்பது , ஜல்லிக்கட்டு என்னும் மாடுபிடி விளையாட்டு இந்நாளில் நடைபெறும். இந்த நாளில் பசுவை பூஜித்தால் சகல தேவதைகளையும் பூஜித்த பலன் கிட்டும். 

    கோ பூஜை செய்தால் கோடி நன்மை பெறலாம் என்பது நமது முன்னோர் வாக்கு.தினமும் கோபூஜை செய்வது சிறப்பு. தினமும் செய்ய முடியாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டும். அதுவும் முடியாதவர்கள்.சகல ஐஸ்வர்யத்தையும் அள்ளித்தரும் கோ பூஜையை வருடம் ஒருமுறையாவது மாட்டுப்பொங்கல் அன்று செய்து வரவேண்டும்.  

    வருடத்திற்கு ஒருமுறையாவது பசுவை வீட்டிற்கு அழைத்து அதற்கு மஞ்சள்,குங்குமம் வைத்து, மலர்களால் அலங்காரம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து  பழங்கள், அகத்திகீரை போன்றவற்றை தானியங்கள் சாப்பிட கொடுத்து, நெய் விளக்கு ஏற்றி, தீபஆராதனை செய்ய வேண்டும்.பிறகு நெய் விளக்கை கையில் எடுத்து அந்த பசுவை சுற்றி மூன்று முறை வலம் வர வேண்டும். இப்படி வருடத்திற்கு ஒருமுறையாவது கோபூஜை செய்து வந்தால், நம் இஷ்ட தெய்வ குல தெய்வ அருளாசியும் கிடைத்து, தலைமுறை தலைமுறைக்கு சுபிட்சம் கிடைக்கும்.உயர் ஜாதி பசுவை கன்றுடன் ஸ்ரீசுக்தம் சொல்லி கோபூஜை செய்து, தானம் செய்தால் கோர்ட் விவகாரங்கள், வழக்குகளில் வெற்றி ஏற்படும்.விரோதம் நீங்கும்.

    பிதுர் சாபம், ரிஷிகள் சாபம், மூதாதையர் சாபம் ஆகியவை நீங்குகிறது. செல்வவளம் தரும் திருமகள் இதன் பிருஷ்டபாகத்தில்(பின்பாகம்) வசிக்கிறாள். இப்பகுதியைதொட்டு வழிபட்டால் முன் ஜென்ம பாவங்கள் விலகும். இந்திர பூஜையை விட கோ பூஜையே மேலானது என்று ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லி இருக்கிறார்.

    • சில பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்தும் செல்கின்றனர்.
    • மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். அவர்கள் விதவிதமான காவடிகள் ஏந்தியும், வேல் ஏந்தியும், அலகு குத்தியபடியும் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். இந்த நிலையில் சில பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்தும் செல்கின்றனர். இந்த சர்ப்ப காவடி எடுத்து வர தற்போது அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் சட்டத்துக்கு புறம்பாக சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வருகின்றனர். இவ்வாறு பாம்புகளை எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது. இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறி உள்ளார்.

    ×