என் மலர்
தோஷ பரிகாரங்கள்
- சூரிய பகவானுக்கு உகந்த ஞாயிற்று கிழமை தை மாதப் பிறப்பு நிகழ்வது மிகச் சிறப்பு.
- வியாபாரம், தொழில் விருத்தியாகி சகல காரியங்களும் சித்தியாகும்.
மனிதர்களுக்கு ஆன்ம பலம் மிக முக்கியம். பலம் பெற்ற ஒரு ஆன்மாவால் உலகில் அடைய முடியாத வெற்றியே கிடையாது. நவநாகரீக உலகில் பகலில் தூங்குவதும் இரவில் விழித்து வேலை பார்ப்பது போன்ற கலாச்சார மாற்றத்தால் பலர் ஆன்ம, ஆத்ம பலம் குறைந்து இயந்திரமாக வாழ்கிறார்கள். நீங்கள் எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை அடைவதற்கு மந்திரம் யந்திரம் தந்திரம், இரவு வேலை என்று அலைய வேண்டிய அவசியம் இல்லை. கால புருஷ 5-ம் அதிபதி சூரியனை வலுப்படுத்தினால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறும்.
தமிழ் மாதங்களை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.தை முதல் ஆனி வரையான 6 மாதங்களை உத்ராயணம் எனவும் ஆடி முதல் மார்கழி வரையான 6 மாதங்களை தஷ்ணாயண காலமாகவும், பிரிக்கப்பட்டுள்ளது. சூரியன் மகர ராசியில் நுழையும் மகர சங்கராந்தியன்று, உத்ராயணம் துவங்கும் தை மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். கால புருஷ 5-ம் அதிபதி சூரியன் கால புருஷ 10-ம்மிடமான மகர ராசியில் சனியின் வீட்டில் தனது சுய நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிக்கும் தைமாத முதல் நாளில் சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் ஆரம்பமாகும்.
அன்று உலக உயிர்களுக்கு உணவு வழங்கும் உழவுத் தொழிலுக்கு உதவும் சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து வழிபட வேண்டும். இந்த வருடம் சூரிய பகவானுக்கு உகந்த நாளான ஞாயிற்று கிழமை 15.1.2023 அன்று தை மாதப் பிறப்பு நிகழ்வது மிகச் சிறப்பு.
ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்த புது அரிசியில் பொங்கல் செய்ய வேண்டும். புதுப் பானையில் மஞ்சள், குங்குமம் வைத்து மஞ்சள் கொடி கொத்தை எடுத்து கங்கணம் தயாரித்து பானையை சுற்றிக் கட்ட வேண்டும். பின்பு புது அரிசியுடன் வெல்லம், பாசிப்பருப்பு பால், நெய்,முந்திரி,திராட்சை சேர்த்துப் புதிய அடுப்பில்வைத்துப் அவரவர் சம்பிரதாய முறைப்படி சர்க்கரைப் பொங்கல் வைத்து முழுக்கரும்பு, மஞ்சள் செடி கொத்து, சிவப்புபூசணி பத்தை, கிழங்கு வகை, பழ வகைகள், வெற்றிலை, பாக்கு தேங்காய் ஆகியவற்றுடன்சூரியன், குல, இஷ்ட தெய்வத்திற்கு படைத்து வணங்க வேண்டும். பூஜை முடிந்ததும் கோமாதாவான பசுவுக்கும் முன்னோர்களை நினைத்து காகத்துக்கும் பொங்கல் வைத்தப் பிறகு அனைவரும் பொங்கல் சாப்பிட வேண்டும்.
சூரிய பகவானை தைத்திருநாள் அன்று சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட இயற்கை சக்தியான சூரியனிடமிருந்து அதிகாலையில் வரும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை உடலில் படும்போது நரம்புகள் புத்துணர்வடைந்து உற்சாகமடைந்து உடல் வலிமையும் பெறுகின்றன. ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கும். கண்களில் உள்ள குறைபாடுகள் சீராகும். அறிவுவளரும். சத்ரு பயம், கடன் தொல்லை, உஷ்ண நோய்கள் விலகும். படிப்படியாக கஷ்டங்கள் விலகும்.
வியாபாரம், தொழில் விருத்தியாகி சகல காரியங்களும் சித்தியாகும். அனைத்து விதமான பாவங்களும் விலகி நிரந்தரமான முழுமையான வெற்றிகள் கிட்டும். மனதில் உள்ள கவலைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பார்கள். அரசாங்க உதவி, அரசு வேலை, அரசியல் ஆதாயம் போன்றவற்றை சூரிய வழிபாட்டின் மூலமே பெற முடியும். சூரியன் உதயமாகும் போது ஆத்மார்த்மாக ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தை சொல்லி வந்தால் எல்லா தடைகளும் நீங்கி சகல ஐஸ்வர்யங்களுடன் ஆத்ம பலம், ஞானம் போன்ற அனைத்தும் கிடைக்கும். பித்ருக்களாகிய முன்னோர்களின் நல்லாசி சூரிய ஒளி மூலமாக கிடைத்து பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறும்.
- குருவிற்கு இனிப்பு சுவை பிடிக்கும்.
- சர்க்கரைப் பொங்கல் படைத்தும் வழிபடுவது நல்லது.
திருமண வயதை எட்டும் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு குரு பலம் வந்து விட்டதா என்று ஜோதிடரிடம் கேட்டு அதற்கேற்ப திருமணம் செய்வது பலரின் நடைமுறை வழக்கமாக இருக்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் குரு பலம் வரவில்லை என்றால், அவரது திருமணத்தை தள்ளிப்போடுவதும் வழக்கமாக இருக்கிறது. ஆனால் 'குரு பலம் மட்டுமே திருமணத்தை தீர்மானிக்கிறதா?' என்றால், 'இல்லை' என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் திருமணமே செய்துகொள்ளாமல் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையில் எல்லாம் குரு பலம் வராமல் இருந்திருக்குமா?
கோச்சாரப்படி ஒருவருடைய ஜாதகத்தில், அவரது ராசிக்கு 2, 5, 7, 9 ஆகிய இடங்களில் குரு பகவான் சஞ்சரிக்கும் போது, குரு பலம் ஏற்படுகிறது. அப்படி பார்த்தால், குரு பலம் ஏற்படும் வேளையில், திருமண வயதில் உள்ள அனைவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் அல்லவா? ஆனால் அப்படி நிகழ்கிறதா? என்றால், அது கேள்விக் குறிதான். ஏனெனில் அவரவர் பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளின் படிதான் திருமணம் என்பது நடைபெறும்.
எனவே குரு பலத்திற்கும், திருமணம் நடப்பதற்கும் சம்பந்தம் இல்லை. எப்படி என்றால், ஒரு ஜாதகருக்கு குரு பலம் சிறு வயதிலும் வரும், நடுத்தர வயதிலும் வரும், வயதான பிறகும் வரும். அப்படி இருக்கும்போது, குரு பலம் வரும்போதெல்லாம் திருமணம் நடைபெறுவதில்லைதானே. எனவே, திருமணம் நடைபெறும் காலம் என்று பார்க்கும் போது, அவரவர் ஜாதகத்தில் வரும் திசை, புத்தி, அந்தரத்தினைப் பொறுத்தே திருமணம் நடைபெறுகிறது.
அதாவது ஜாதகத்தின் படி குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் ஆகியவற்றில் வீற்றிருக்கும் கிரகம், களத்திரகாரகனான சுக்ரன் இருக்கும் இடத்தை பார்க்கும் கிரகம் போன்றவற்றைப் பொறுத்தே திருமணம் நடைபெறுகிறது. மேலும், திருமண ஸ்தானங்களான 2-ம் இடம், 7-ம் இடம், 9-ம் இடம் போன்ற இடத்தின் ஸ்தானாதிபதி சாரத்தில் கிரகங்கள் இருந்தாலும், அந்த கிரகங்களின் திசை, புக்தி காலங்களிலும் திருமணம் நடைபெறும். மேற்சொன்ன விதிகளின் படி குரு சம்பந்தம் பெறுமேயானால், அந்த குருவின் திசை, புத்தி காலங்களிலும் திருமணம் நடந்தேறும்.
அப்படி என்றால் குருவால் என்னதான் பயன் என்கிறீர்களா?.. அதையும் பார்ப்போம்.
புத்திரகாரகன், தனகாரகன், ஒழுக்கம், அறிவு விருத்தி அடைவது, உயர் பதவி யோகம் பெறுதல், மரியாதை, ஆசிரியன், ஆலோசனை வழங்குபவர் போன்ற காரகங்களின் அடிப்படையில் குரு பகவான் பலன் தருவார். குரு பார்க்க கோடி நன்மை என்பது அனைவருக்கும் தெரியும். குரு பகவான் இருந்த இடங்களை விட பார்க்கும் இடம் நன்மை அடையும். ஜாதகத்தில் நல்ல ஸ்தானங்களில் குரு பார்வை இல்லாதவர்கள், குரு பகவானிடம் சரணடைதல் மிகுந்த நன்மையைத் தரும்.
அருகிலுள்ள சிவன் கோவிலுக்குச் சென்று குரு பகவானை தரிசிப்பது நல்லது. குருவிற்கு உகந்த நாள் வியாழன். அன்றைய தினம் குரு பகவானை உள்ளார்ந்து நினைத்து விரதம் மேற்கொள்ளும் போது, குருவின் அனுக்கிரகம் கிடைக்கும். குரு பகவானுக்கு உகந்த பொன்னிறம் அல்லது மஞ்சள் ஆடை அணிந்து குருவை வழிபட்டால், அவரால் ஏற்படும் தோஷங்கள் விலகி நன்மைகள் கிடைக்கப்பெறும். உதாரணமாக கல்வி விருத்தி அடைதல், உயர்பதவி கிடைத்தல், தனகாரகன் என்பதால் செல்வச்செழிப்பு அதிகரிக்கும்.
புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் அல்லது புத்திர தோஷம் உள்ளவர்கள், குரு பகவானை வழிபடுவதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கொண்டைக் கடலையை மாலையாக கோர்த்து, குரு பகவானுக்கு அணிவித்தலும் மிகவும் நன்மையைத்தரும். குருவிற்கு இனிப்பு சுவை பிடிக்கும். ஆதலால் சர்க்கரைப் பொங்கல் படைத்தும் வழிபடுவது நல்லது. குரு ஸ்லோகம், குரு மந்திரம், குரு காயத்ரியை உச்சரிப்பதால், குருவின் அனுகிரகம் முழுமையாக நமக்கு கிடைக்கும். இவற்றை வியாழன் தோறும் 30 அல்லது 108 முறை பாராயணம் செய்வது நன்மையைத் தரும்.
'ஜோதிடச்சுடர்' என்.ஞானரதம்,சென்னை.
- சனி என்றாலே அனைவரும் பயப்படுகிறார்கள்.
- பலர் நினைப்பதுபோல சனி பகவான் தீங்கிழைப்பவர் அல்ல.
சனி பகவானை திருநள்ளாறு சென்றோ அல்லது அருகிலுள்ள ஆலயத்தில் அமைந்திருக்கும் நவக்கிரக சனியையோ வழிபட்டு, அவருக்கு மூன்று சனிக்கிழமைகள் தொடர்ந்து எள் சாதம் படைத்து, அதனை ஏழை- எளியவர்களுக்கும், வயதானவர்களுக்கும் தானமாக வழங்கலாம். இதனால் உங்களுக்கான சோதனைகள் மறைந்து மன அமைதி உண்டாகும். ஆஞ்சநேயர் மந்திரத்தை அனுதினமும் உச்சரித்து வருவதனாலும், சனி பகவானால் ஏற்படும் இடையூறுகள் அகலும்.
சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தி வணங்குங்கள். பெற்றோர் அல்லது அவர்களுக்கு இணையான அனுபவம் பெற்ற முதியவர்களிடம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆசிபெறுங்கள். சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து தரிசித்து வருவதுடன், விஷ்ணு சஹஸ்ர நாமத்தை சொல்லி வழிபடுவதும் சிறப்பான பலன்களைத் தரும். ஊனமுற்றோருக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருவதாலும், சனியின் தாக்கம் குறையும்.
பொதுவாக சனி என்றாலே அனைவரும் பயப்படுகிறார்கள். 'எனக்கு ஏழரைச் சனி நடக்கிறது, எனக்கு அஷ்டமத்துச் சனி நடக்கிறது' என்று அச்சம் அடைபவர்கள் ஏராளம். ஆனால் பலர் நினைப்பதுபோல சனி பகவான் தீங்கிழைப்பவர் அல்ல. அவர் பாவ-புண்ணியங்களுக்கு ஏற்றபடி பலன்களை அளிக்கும் நீதிமான். அதனால்தான் தராசு சின்னத்தைக் கொண்ட துலாம் ராசியில் சனி பகவான் உச்சம் பெறுகிறார். அதோடு நவக்கிரகங்களில் அவருக்கு மட்டுமே 'ஈஸ்வர' பட்டம் இருக்கிறது. கோச்சாரம் என்பது தற்போதைய கிரகநிலைகளை குறிக்கும். அதன்படி எந்த ராசிக்கு சனி என்ன பலன் தருகிறார் என்பதை வைத்தே, பலன் கூறப்படுகிறது.
ஏழரைச் சனி
ஒருவர் பிறந்த ராசிக்கு மொத்தம் 7½ ஆண்டுகள் சனி பிடிப்பதைத்தான், 'ஏழரைச் சனி' என்கிறோம். ஒருவரின் ஜென்ம ராசிக்கு முந்தைய ராசியில் 2½ ஆண்டுகள், பிறந்த ராசியில் 2½ ஆண்டுகள், அதற்கு அடுத்த ராசியில் 2½ ஆண்டுகள் என்று இருப்பதையே, இந்த 7½ ஆண்டுகள் குறிக்கும். உங்களுடைய ராசி மேஷம் என்று வைத்துக்கொண்டால், அதற்கு முந்தைய வீடான மீன ராசியில் சனி சஞ்சரிக்கும் நேரத்தில் இருந்து உங்களுக்கு ஏழரைச் சனி தொடங்கும். உங்கள் ராசிக்கு அடுத்த ராசியான ரிஷப ராசியைக் கடக்கும் வரை இந்த ஏழரைச் சனி நீடிக்கும். உங்கள் ராசிக்கு முந்தைய வீட்டில் சனி சஞ்சரிக்கும் போது, அவர் 'விரயச்சனி'யாகவும், உங்கள் ராசியில் சஞ்சரிக்கும்போது 'ஜென்மச் சனி'யாகவும், ராசிக்கு அடுத்த இடத்திற்குச் செல்லும் போது, 'பாதச்சனி'யாகவும் பெயர்மாற்றம் அடைகிறார்.
விரயச் சனி
ஏழரைச் சனியில் முதல் 2½ ஆண்டுகள், உங்கள் ராசிக்கு முந்தைய இடமான விரய ஸ்தானத்தில், சனி பகவான் இருப்பார். அப்போது நீங்கள் முன்னெடுக்கும் காரியங்களில் தோல்வி, வியாபாரத்தில் நஷ்டம், தேவையற்ற பணவிரயம், மருத்துவச் செலவு, கல்வியில் மந்தம், குடும்பத்தில் அடிக்கடி பொருட்கள் விரயமாதல், பயணங்களில் விபத்து, அலைச்சல் போன்றவை ஏற்படக்கூடும். சம்பந்தப்பட்ட நபரின் ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் இருந்தால், இந்த பாதிப்புகள் அனைத்தும் வெகுவாக குறையும்.
ஜென்மச் சனி
ஏழரைச் சனி காலத்தில் அடுத்த 2½ ஆண்டுகள் உங்கள் ராசியிலேயே, சனி பகவான் இருப்பார். இதனை ஜென்மச் சனி என்பர். இந்த 2½ ஆண்டுகளும் அதிக சோதனைகளைக் கொடுப்பார். உடல்நலக்குறைவு, தொழிலில் பெரும் மாறுதல், தொழில் இழப்பு, இடம்பெயர்தல் போன்ற அசுப பலன்கள் அதிகமாக நடந்தேறும். மனைவிக்கு ஆரோக்கியமின்மை, உறவினர்களின் பகை, சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு, சொத்து இழப்பு, சோதனை மேல் சோதனை உண்டாகும். சிறைவாசம், நீதிமன்றம் செல்லக்கூடிய நிலை என்று விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறலாம். இந்த காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட நபரின் ஜாதகத்தில் சனிக்குரிய தசாபுத்தி சாதகமாக அமையப் பெற்றிருந்தால், கெடுபலன்கள் சற்று குறைந்து, மன அமைதி ஏற்படும்.
பாதச் சனி
உங்கள் ராசிக்கு அடுத்த இடத்தில் கடைசி 2½ ஆண்டுகள் சனி இருப்பதை, 'பாதச்சனி' என்பர். இந்த காலகட்டத்தில் இதுவரை இருந்த சோதனைகள் சற்றே குறையும். ஆனால் துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டதாகக் கருத முடியாது. பாதச்சனி காலத்தில், சனி பகவான் உங்களுக்கு அனுபவத்தைக் கொடுப்பார். இருப்பினும் அதிர்ஷ்ட வாழ்வு வாழ தடை ஏற்படுத்துவார். பெற்றோருக்கு கெடுபலன்களைத் தருவார். குடும்பத்தில் கருத்துவேறுபாட்டை தோற்றுவிப்பார். பாதச்சனி நடைபெறும் காலத்தில் கடைசி 6 மாதங்களில் வருமானம் முன்னேற்றம் தரும். குடும்பத்தில் சிக்கல் குறையும். நல்லவர்களுடன் நட்பு ஏற்படும். நலமிக்க வாழ்வு அமையும். வழக்கில் வெற்றி உண்டாகும். வாகன யோகம் கிடைக்கும்.
'ஜோதிடச்சுடர்' ந.ஞானரதம், சென்னை.
- ஏழில் ராகு இருப்பவர்களுக்கு கவனமாக திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டும்.
- நட்சத்திரப் பொருத்தம் பார்க்காமல் கட்டப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும்.
ஏழில் ராகு நிச்சயமாக திருமணத்தை தடை செய்ய மாட்டார். திருமணத்தை நடத்தி பிரச்சினையை தருவார். காதல் கலப்பு திருமணத்தால் பிரச்சினை தருவார். ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை நடத்தி பிரச்சினை தருவார். முதல் மனைவி இருக்கும் போதே சட்டத்திற்கு எதிராக இரண்டாம் திருமணத்தை தருவார்.
தனித்த ராகுவும், குரு பார்வை பெற்ற ராகுவும் பெரிய தொந்தரவை தருவதில்லை. எனினும் தனித்த ராகு இருப்பவர்களுக்கு திருமண வாழ்வில் மாமியார், நாத்தனார் அல்லது நெருங்கிய உறவுகளின் தலையீட்டால் மண வாழ்வில் நெருடல் இருந்து கொண்டே தான் இருக்கும்.
ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் ராகு சேர்க்கையால் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருமண வாழ்வில் இருப்பார்கள். பெண் ஜாதகத்தில் செவ்வாய் ராகு சேர்க்கை இருப்பவர்களுக்கு கணவரிடம் இருந்து கிடைக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் உரிமைகள் கிடைக்காததால் பிரச்சினை பிரிவினையை ஏற்படுத்துகிறது. சந்திரன் ராகு சேர்க்கை இருக்கும் ஆண்கள் மனைவியை தேவைக்கு மட்டும் பயன்படுத்துவார்கள்.
சனி ராகு சம்பந்தம் கர்ம பந்தத்தால் இணைந்து கர்ம வினையை கழிக்க முயன்று கர்ம வினையை அதிகப்படுத்துபவர்கள். ஏழில் ராகு இருப்பவர்களுக்கு கவனமாக திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டும். நட்சத்திரப் பொருத்தம் பார்க்காமல் கட்டப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும். சென்ற பிறவியில் தம்பதிகளுக்குள் இருந்த நிறைவேறாத ஆசையின் பிரதி பலிப்பாக இப்போதைய வாழ்வு அமையும்.
பரிகாரம்
கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகளை சேர்ந்து வாழ வைக்க முயற்சி செய்வது மிகச் சிறந்த பரிகாரம்.
பஞ்சமி திதியில் கருட வழிபாடு செய்ய வேண்டும்.
தினமும் ராகு வேளையில் துர்க்கை அல்லது காளியை வழிபட வேண்டும்.
நாகர்கோவில் நாகராஜா கோவில் சென்று வழிபட வேண்டும்.
- ஏழில் அமர்ந்த கிரகமே வாழ்க்கை துணை அமைவதை தடை செய்கிறது.
- திருமணம் கால தாமதமாகவே நடக்கும்.
ஒருவரின் வாழ்க்கை தரம் வேகமாக உயர்வதற்கும், தாழ்வதற்கும் சனி மிக முக்கிய காரணமாகும். சனி என்றால் கர்ம பந்தம் . கர்ம பந்தம் இல்லாத ஒருவருடன் சம்பந்தம் ஏற்படாது. அந்த வகையில் ஏழில் சனி முழுமையான கர்மபந்தம். பூர்வ ஜென்ம விட்ட குறையின் தொடர்ச்சி. சென்ற பிறவியில் தம்பதிகளாக வாழ்ந்தவர்களே இந்த பிறவியிலும் தம்பதிகளாக வாழ்வார்கள். குறைந்தது 27 வயதிற்குப் பிறகே திருமணம் நடக்கிறது.
சனி நின்ற நட்சத்திர சார அடிப்படையில் திருமணம் நடக்காத நிலையும் உண்டு. ஒருவர் மற்றவருக்கு செய்த நல்ல, தீய செயல்களின் பதிவுகள்படி வாழ்க்கை இருக்கும். சனி தாமதத்தை குறிக்கும் கிரகம். சனி தான் நின்ற பாவகத்தின் மூலம் ஜாதகருக்கு கிடைக்க வேண்டிய பலனை தாமதப்படுத்துவார். திருமணம் கால தாமதமாகவே நடக்கும். ஜாதகரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் தன்மை குறைந்த களத்திரமே கிடைக்கும்.
சனி நீசம், அஸ்தமனம், வக்ரம் பெற்றவர்கள் மற்றும் செவ்வாய், ராகு, கேதுக்களுடன் சம்பந்தம் இருப்பவர்களும் தொழில் நிமித்தம் அல்லது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். சனி மந்ததன்மை மற்றும் பொய் பேசுவதற்கு காரணமாக இருப்பதால் வெறுப்பால் பிரிவு ஏற்படுகிறது. கடக, சிம்ம லக்னத்திற்கு சனி மன நிறைவான மண வாழ்க்கையை தருவதில்லை.ஏழாம் இடத்தோடு சனி சம்மந்தம் இருந்தால் எளிதில் விவாகரத்தும் கிடைக்காது. வயதான பிறகே புரிதல் ஏற்பட்டு அன்னியோன்ய தம்பதிகளாக வாழ்வார்கள்.
பரிகாரம்
திருமணம் முடியும் வரை சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு பால் அபிசேகம் செய்து வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம். பித்ருக்கள் வழிபாடு மிக அவசியம்.
சனிக்கிழமை திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று வர வேண்டும்.
பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள்,தொழிலாளிகள், துப்புரவுதொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவி நல்ல பலனை தரும்.
சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம், நல்லெண்ணெய் தானம், இரும்புச் சட்டி தானம் செய்வது சிறப்பு.
- தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் தீருவதற்கு ஒரு வழி இருக்கிறது.
- சனி பகவானின் தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.
தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் நம்மை மீறியும் ஏதேனும் பாவங்களைச் செய்துவிடுகிறோம். எவர் மனதை காயப்படுத்தி, நோகடித்துவிடுகிறோம். நம் இன்றைய பிறப்பு என்பதே கர்மா எனப்படுகிறது. இந்தப் பிறப்பு எடுத்ததற்குக் காரணமே, முந்தைய பிறவியில் செய்த வினைகளைத் தீர்ப்பதற்குத்தான் என்கிறது சாஸ்திரம். ஒருவரின் பிறப்பில், ஏழு தலைமுறை பாவமும் சேர்ந்திருக்கும் என்றும் அறிவுறுத்துகிறது சாஸ்திரம்.
இத்தனை பாவங்களில் இருந்தும் நாம் விடுபடுவதற்கு, காஞ்சி மகாபெரியவா, அருளியுள்ள விஷயம் மிக மிக எளிதானது.
''ஒருவர் ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களும் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களும் என சகலமும் தீருவதற்கு ஒரு வழி இருக்கிறது.
சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்கு பொடியாக்கிக் கொள்ளுங்கள். அதனை கையில் வைத்துக்கொண்டு சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். மனதார வேண்டிக் கொண்ட பிறகு, அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் செல்லுங்கள்.
மரத்தடி விநாயகர், தெருமுனை விநாயகரை தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். மூன்று முறை வலம் வந்து விநாயகரைச் சுற்றிலும் பச்சரிசிப் பொடியைத் தூவிவிடுங்கள்.
அந்தப் பொடியை நோக்கி எறும்புகள் வரும். வரிசையாக வந்து எறும்புகள் அதனை எடுத்துச் செல்லும். நீங்கள் போடுகிற பச்சரிசியை, பச்சரிசிப் பொடியை எறும்புகள் தூக்கிச் சென்றாலே உங்களுடைய பல பாவங்கள், நீங்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கிவிடும்.
அதெப்படி... பச்சரிசிப் பொடி கெடாமல் இருக்குமா? என்று கேள்வி எழலாம். எறும்பின் எச்சில் பட்டதுமே அரிசி மாவு கெடும் தன்மையை இழந்துவிடுகிறது. இந்த மாவு அல்லது பொடி இரண்டேகால் வருடங்கள் கெடாமல் இருக்கும். இப்படி எறும்புகள் எடுத்து வந்த பொடியை, புற்றுக்குள் இருக்கும் பொடியை, இரண்டே கால் வருடங்களாக இருக்கும் பொடியை முப்பத்து முக்கோடி தேவர்களும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை கிரக நிலை மாறும். அப்போது அரிசிப் பொடியின் குணமும் மாறிவிடும். இதனால்தான், எறும்புக்கு அடிக்கடி பச்சரிசி பொடி இடவேண்டும் என்கிறது சாஸ்திரம்.
ஒரேயொரு எறும்பு நாம் இடுகிற ஒரேயொரு துளி பச்சரிசிப் பொடியைச் சாப்பிட்டால், அது நூறு அந்தணர்களுக்கு உணவிட்டதற்குச் சமம். மேலும் சனி பகவானின் தொல்லையில் இருந்தும் விடுபடலாம். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டமச் சனி முதலான சனிதோஷமும் பெரிய தாக்கத்தையோ கெடு பலனையோ உண்டாக்காது.
அதனால்தான், அரிசிமாவில் கோலமிடுவது வழக்கமாகவே இருக்கிறது. அந்த அரிசிமாவு எறும்புக்கும் பூச்சிகளுக்கும் உணவாகின்றன'' என்று காஞ்சி மகான் அறிவுறுத்தியுள்ளார்.
- குழந்தைகளுக்கான அறை வடமேற்கில் அமைக்கலாம்.
- குளியலறை வடமேற்கில் அல்லது தென்கிழக்கில் அமைக்கலாம்.
வீட்டின் படுக்கையறை சதுரமாகவோ செவ்வகமாகவோ இருக்கலாம் வீட்டின் உரிமையாளர் குடும்பத் தலைவர் படுக்கையறை தென்மேற்கு திசையில் அமைவது நலம். படுக்கை தெற்கு பக்கம் அல்லது கிழக்குப் பக்கம் தலை வைத்து படுப்பது போல் இருந்தால் சிறப்பு. நாம் படுத்து உறங்கும்போது நம் தலைக்கு நேராக மேலே பீம் போன்றவை இல்லாமல் இருத்தல் நல்லது.
*குழந்தைகளுக்கான அறை வடமேற்கில் அமைக்கலாம். போதுமான சூரிய ஒளியும் காற்றோட்டம் நிறைந்ததாக அறை அமைய வேண்டும். மனதிற்கு இதமான புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய வண்ணங்களில் சுவர்கள் இருப்பின் குழந்தைகளை மகிழ்ச்சியில் வைத்திருக்கும். அவர்கள் படிக்கும் பகுதி சுத்தமாக புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் சரியாக அடுக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.
*குளியலறை வடமேற்கில் அல்லது தென்கிழக்கில் அமைக்கலாம். போதுமான சூரிய வலியும் காற்றோட்டமும் இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே வீட்டில் எப்பொழுதும் குளியல் அறையில் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல் உடனுக்குடன் சீர் செய்ய வேண்டும். குளியலறைக்கும் பூஜை அறைக்கும் இடைவெளி சற்று அதிகமாக இருக்க வேண்டும் பக்கத்து பக்கத்தில் இருக்கக் கூடாது.
*அனைவரும் புழங்கக்கூடிய அறை அல்லது கூடம் வட திசையில் இருக்க வேண்டும். வீட்டின் தலைவர் வடக்கு நோக்கியோ கிழக்கு நோக்கியோ அமரும் வண்ணம் அவரது இருக்கை அமைய வேண்டும்.
- நவக்கிரகங்களில் உள்ள குருபகவானுக்கு பரிகார தலமாக இந்த கோவில் உள்ளது.
- முற்பிறவியில் செய்த பாவத்தின் தீய விளைவுகள் நீங்கும் என்பது ஐதீகம்.
சோழ வளநாட்டில், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடி என்ற ஊரில் ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. சோழ வள நாட்டில் உள்ள தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் காவிரிக்கு தென் கரையில் உள்ள 127 தலங்களில் 98-வது தலமாக இந்த கோவில் விளங்குகிறது.
சர்வ தோஷங்களையும் போக்கும் இந்த கோவிலுக்கு வந்து முறையாக வழிபடுபவர்களுக்கு முற்பிறவியில் செய்த பாவத்தின் தீய விளைவுகள் நீங்கும் என்பது ஐதீகம்.
நவக்கிரகங்களில் உள்ள குருபகவானுக்கு பரிகார தலமாக இந்த கோவில் உள்ளது. இக்கோவிலின் தல விருட்சம் பூளைச்செடி ஆகும்.
இக்கோவிலுக்கு 14 தலைமுறைகள் புண்ணிய பேறு பெற்றவர்களே வருகை தர இயலும். முதலில் கலங்காமற் காத்த விநாயகரை வணங்கி பின்னர் கொடி மரம் சென்று அங்குள்ள துவஜ கணபதியை வணங்கி நேராக சென்று சாமியை (ஆபத்சகாயேஸ்வரர்) தரிசிக்க வேண்டும்.
பின்னர் குரு தெட்சிணாமூர்த்தியை வணங்கி சங்கல்பம் செய்து அர்ச்சனை போன்றவற்றை முடித்து பிரகாரத்தில் உள்ள சோமாஸ்கந்தர், முருகன், மகாலெட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், உற்சவர் குருமூர்த்தி ஆகியோரை வழிபட்டு ஏலவார் குழலி அம்மை மற்றும் சனிபகவானை தொழுது கொடிமரத்தில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
தொடர்ந்து குருபரிகாரமாகிய 24 நெய் தீபங்களை தீபம் ஏற்றும் இடத்தில் ஏற்றி கோவிலை 3 முறை வலம் வந்து ஒவ்வொரு முறையும் கொடி மரத்தின் கீழே விழுந்து நமஸ்காரம் செய்து பரிகாரத்தை நிறைவு செய்ய வேண்டும்.
ஆலங்குடி குருபகவான் கோவில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு வடக்கே 7 கிலோ மீட்டர் தொலைவிலும், கும்பகோணம்-மன்னார்குடி பஸ் மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
- எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருங்கள்.
- உங்கள் மனசாட்சி தான் சனிபகவான்.
3 சுற்று ஏழரை, அஷ்டமச் சனியை கடந்தவர்கள் பலர் எந்த பதட்டமும் இல்லாமல் நிதானமாக சனி பகவான் என்றால் யார் ? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். 3 சுற்றிலும் அடி வாங்கி ரண வேதனையில் முற்றும் துறந்த முனியாக ஞான மார்க்கத்திற்கு முக்திக்கு வழி தேடி சென்றவர்களும் இருக்கிறார்கள்.
லக்னம் வலிமை பெற்றவர்களையும் சந்திரனுக்கு குரு பார்வை இருப்பவர்களுக்கும், தர்ம கர்மாதிபதி யோகம் அமைந்தவர்களையும் எந்த சனிப் பெயர்ச்சியும் எதுவும் செய்யாது. மேலே கூறிய அமைப்புகள் இருந்தும் ஜாதகத்தில் சாதகமான தசா புத்தி இல்லாமல் போனாலும் குரு, சனி, சந்திரன் பலவீனமாக இருந்தாலும் தாக்கம் மிகுதியாகவே இருக்கும். இந்த காலகட்டத்தில் சாதகமற்ற தசாபுத்தி இருந்தால் சொந்த தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் ஏற்ற இறக்கம், தடை தாமதம், பண விரயம், பண இழப்பு இருக்கும்.சிலர் தவறான தொழில் முதலீடு செய்து பாதிப்படைகிறார்கள்.
அதிக முதலீடு செய்த முதலீட்டாளர்கள் , தொழிலில் கொடி கட்டி பறந்தவர்கள் கூட மிகச் சாதாரணமாக கண் இமைக்கும் முன் தொழிலில் சரிசெய்ய முடியாத இழப்பை சந்திக்கிறார்கள். இதனால் தொழிலை விட்டு விலகவும் முடியாமல் மேலே தொழிலை தொடரவும் முடியாமல் மன உளைச்சலை சந்திக்கிறார்கள். இந்த காலத்தில் தொழிலாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் கருத்து வேறுபாடு மிகுதியாகும். முதலாளிகளுக்கு சரியான வேலையாட்கள் கிடைக்கமாட்டார்கள்.
மேலும் ராசிக்கு 3,6,11-ல் சனி வரும் போது பல புதிய எண்ணங்கள் உதயமாகும். பல புதிய தொழில் முனைவோர்கள் உருவாகுவார்கள். மிகக் குறுகிய காலத்தில் வாழ்வில் பார்க்க முடியாத பெரிய பணத்தை சம்பாதிக்கிறார்கள். ஏழரை, அஷ்டமச் சனி ஆரம்பித்தவுடன் வாழ்நாளில் மீள முடியாத இழப்பை சந்திக்க நேருகிறது. புதிய தொழில் முனைவோர்கள், புதியதாக பெரிய தொழில் முதலீடு செய்பவர்கள் சுய ஜாதக ஆலோசனைக்குப் பிறகே தொழில் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
அதாவது கோட்சார சனி சாதகமாக இருக்கும் காலங்களில் சம்பாதித்த பணத்தை கோட்சார சனி சாதகமற்ற இடங்களுக்கு வரும் காலங்களில் இழந்துவிடுகிறார்கள். சனிபகவான் கர்ம காரகர், ஆயுள் காரகர், ஒருவர் ஜாதகத்தில் ஜனனம் முதல் வாழ்நாள் இறுதி வரை சனி பகவானின் ஆதிக்கம் தான் தொடரும். சனிபகவான்-வாயு, காற்று .அதாவது பிராணன் (சுவாசம்), குரு பகவான் அங்கத்தில் மூக்கு என்றால் அதனுள் ஏற்படும் சுவாசக்காற்று சனி பகவானே.
கால புருஷ 10, 11-ம் அதிபதி என்பதால் தொழில், உத்தியோகம் அதன் மூலமாக கிடைக்கக்கூடிய லாப நஷ்டங்களுக்கு இவர்தான் பிரதிநிதியானவர். நீதி வழங்கும் நீதிமானாவார். சனி பகவானை கணிப்பதற்கு மிகப்பெரிய ஞானம் வேண்டும். கொடுப்பதும் அதனை கெடுப்பதும் அவரே. கொடுக்கும் போது அளவில்லாமல் கொடுப்பார். அதேபோல கெடுக்கும் போது அனைத்தையும் உருவி விடுவார்.
நன்மை செய்தால் நன்மையை பலனாகவும், தீமை செய்தால் தீமையை பலனாகவும் தருபவர். இதற்காக தான் "நன்மை செய்யாமல் இருந்தாலும் பரவாயில்லை மற்றவர்களுக்கு கெடுதலை செய்யாமல் இருப்பது நல்லது" என்று சொல்வார்கள். யாரையும் எளிதாக ஏய்துவிடலாம் ஏமாற்றியும் விடலாம். ஆனால் இது சனி பகவானிடம் செல்லாது.
பரிகாரம்
ஒரு மனிதன் சனி பகவானால்தான் அறிவுக்கும் சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கிறது என்பதை உணருகிறார்கள். 'நம்ம கையில எதுவும் இல்லை' என்கிற சரணாகதி தத்துவமும் புரிகிறது. எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருங்கள். உங்களை சனி பகவான் உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பார். மனசாட்சியை மீறி எது செய்தாலும் சனியின் பாதிப்பிற்கு ஆளாக நேரும்.
உங்கள் மனசாட்சி தான் சனிபகவான். சனி பகவான் தான் உங்கள் மனசாட்சி. பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் தூக்குவோர், துப்புரவு தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவிகள் நல்ல பலன் தரும்.
தொழிலாளிகள், வேலையாட்களால் பிரச்சினையை சந்திப்பவர்கள் சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் சிவ வழிபாடு அன்னதானம் செய்வது சிறப்பு.
சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல் வேண்டும்.
தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.
தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் தாக்கம் குறையும்.
திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபட்டு அன்னதானம் செய்ய வேண்டும்.
சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபடலாம்.
- ஏழில் அமர்ந்த கிரகமே வாழ்க்கை துணை அமைவதை தடை செய்கிறது.
- ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் மனைவியைக் குறிக்கும் கிரகமாகும்.
ஆண் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு குரு பார்வை ஆதர்சன தம்பதிகள்.பெண் ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய் சம்பந்தம் தம்பதிகளிடையே கருத்து பரிமாற்றம் அன்பு மிகுதியாகும். உரிய வயதில் திருமணம் நடைபெறும். இனிய இல்லறம் அமையும். ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் மனைவியைக் குறிக்கும் கிரகமாகும்.
ஆண் ஜாதகத்தில் குரு சம்மந்தம் இல்லாத சுக்கிரன் ஏழில் இருக்கும் போது காரகோ பாவகநாஸ்தி. ஆடம்பரத்திற்கும், அதிகப்படியான சந்தோஷத்திற்கும் சுக்கிரன் காரண கிரகமாக இருப்பதால் தகுதிக்கு மீறிய ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு வாழ்க்கை இழந்தவர்களும் விவாகரத்தானவர்களுமே அதிகம்.
சுக்கிரன் வக்கிரம், நீசம் அஸ்தமனமாகும் போதும் ராகு, கேதுக்களுடன் சம்பந்தம் பெரும் போதும் கணவனால் மனைவிக்கு பிரயோஜ னமற்ற நிலை அல்லது மனைவியை பராமரிக்க முடியாத நிலை அல்லது பிரச்சினைக்கு உரிய மனைவியை அடைவார்கள். சென்ற பிறவியில் மனைவியை அலட்சியம் செய்தவர்களுக்கு இது போன்ற வினைப் பதிவு இருக்கும்.
பரிகாரம்
வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சுக்கிர ஓரையில் மகாலட்சுமிக்கு மல்லிகை மாலை அணிவித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
6 வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்களுக்கு 9 வாரம் மங்கலப் பொருட்களான பூ, மஞ்சள், குங்குமம் , வளையல், வெற்றிலை, பாக்கு கொடுத்து ஆசி பெற வேண்டும்.
ஸ்ரீரங்கம் சென்று தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும்.
- ஏழில் அமர்ந்த கிரகமே வாழ்க்கை துணை அமைவதை தடை செய்கிறது.
- பலருக்கு திருமணத்திற்கு பின்பே பிரச்சினையை ஏற்படுத்துகிறது.
ஏழில் அமர்ந்த குரு லக்னத்தை பார்க்கும் என்பதால் அது பெரிய பாதிப்பைத் தராது. சிலருக்கு கால தாமதமாக திருமணம் நடக்கும். பலருக்கு திருமணத்திற்கு பின்பே பிரச்சினையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மேஷ லக்னத்திற்கு ஏழாமிடமான துலாத்தில் நிற்கும் குருவும், மகர லக்னத்திற்கு ஏழாமிடமான கடகத்தில் உச்சம் பெறும் குருவும் காலதாமதம் மற்றும் பிரிவினையைத் தருகிறது. கடக லக்னத்திற்கு ஏழில் வக்ரம் பெற்ற குருவும் திருமணத்தில் தடை அல்லது திருமணத்திற்கு பின் பிரிவினையைத் தருகிறது.
ஏழில் நின்ற குரு லக்னத்தைப் பார்ப்பதால் பிரச்சினை இருந்தாலும் கவுரவத்திற்காக பிரியாமல் விட்டுக் கொடுக்காமல் வாழ முயற்சிக்கிறார்கள்.பெண்கள் ஜாதகத்தில் குரு செவ்வாயுடன் சேருவதோ அல்லது செவ்வாயைப் பார்ப்பதோ சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் குரு சுக்கிரனை பார்ப்பதோ அல்லது சுக்கிரனுடன் சேர்வதோ சிறப்பு அல்லது தம்பதிகளின் ஜாதகத்தில் ஏழாம் அதிபதியுடன் சேர்வதோ அல்லது ஏழாம் அதிபதியை பார்ப்பதோ சிறப்பு. மேற்கண்ட எந்த நிலையும் இல்லாத போது திருமண வாழ்க்கை கடமைக்காக வாழ்வது போல் இருக்கும்.
திருமணத்திற்குப் பின் குழந்தை இல்லாத காரணத்தால் ஏற்படும் பிரிவினைகளுக்கு குரு முக்கிய காரணமாகிறது குழந்தை நல்ல நிலையில் உருவாக காரணமாக குரு இருப்பதால் குழந்தை பிறக்காமல் இருத்தல் அல்லது குழந்தையை வளர்க்க முடியாமை போன்ற காரணங்களால் பிரிவினை ஏற்படுகிறது. நம்பிக்கை, நாணயத்திற்கு காரக கிரகம் குருவாகும். ஒருவருக்கு மற்றவர் மேல் நம்பிக்கை, நாணயம் குறைவதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் காரணமாகிறது. கருக்கலைப்பு மற்றும் குரு துரோகம் செய்தவர்களுக்கும் இது போன்ற வினைப் பதிவு இருக்கும்.
பரிகாரம்
16 வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வாசனை மலர்களால் அர்ச்சித்து 16 நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். 16 அந்தணர்களுக்கு 16 வாரம் சமைக்கத் தேவையான உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும்.
திருச்செந்தூர்சென்று முருகனை வழிபட வேண்டும். வசதியற்றவர்களின் திருமணத்திற்கு தாலிக்கு பொன் தானம் தர வேண்டும்.
- எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
- வாங்கல் கொடுக்கல்களில் சிக்கல்கள் ஏற்படும்.
சிவல்புரிசிங்காரம் பேசியதாவது:-
அனுமன் மூல நட்சத்திரம், அமாவாசை திதியில் பிறந்தவர் எனவே அன்று பிறந்தவர்கள் எல்லாம் அனுமன் கவசம் பாடி சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபட்டால் முன்னேற்றத்தின் முதல்படிக்கு செல்லலாம். அதுமட்டுமல்ல ஏழரைச் சனி,அஷ்டமத்துச் சனி,அா்த்தாஷ்டச் சனி, கண்டகச் சனி போன்றவற்றின் ஆதிக்கத்தில் சிக்கி இருப்பவர்களுக்கு தடைகளும், தாமதங்களும் ஏற்படும். வாங்கல் கொடுக்கல்களில் சிக்கல்கள் ஏற்படும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். அப்படிப்பட்டவர்கள் அனுமனை வழிபட்டால் தடைகள் தானாக விலகும். எதிரிகள் பலம் குறையும்.எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
துளசி மாலை அணிவித்தால் துயரங்கள் துள்ளி ஓடும். வடைமாலை சூட்டினால் வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும். இப்போது மிதுனம்,கடகம், துலாம், தனுசு,மகரம். கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் சனி ஆதிக்கத்தில் இருப்பவர்கள். அவர்கள் அவசியம் அனுமன் வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும்.அதுமட்டுமல்லாமல் மற்ற ராசிக்காரர்களும் அனுமன் வழிபாட்டை மேற்கொண்டால் சீரும், சிறப்பும் செல்வாக்கும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.






