search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    திருமணம் நடைபெற `குரு பலம் அவசியமா?
    X

    திருமணம் நடைபெற `குரு பலம்' அவசியமா?

    • குருவிற்கு இனிப்பு சுவை பிடிக்கும்.
    • சர்க்கரைப் பொங்கல் படைத்தும் வழிபடுவது நல்லது.

    திருமண வயதை எட்டும் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு குரு பலம் வந்து விட்டதா என்று ஜோதிடரிடம் கேட்டு அதற்கேற்ப திருமணம் செய்வது பலரின் நடைமுறை வழக்கமாக இருக்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் குரு பலம் வரவில்லை என்றால், அவரது திருமணத்தை தள்ளிப்போடுவதும் வழக்கமாக இருக்கிறது. ஆனால் 'குரு பலம் மட்டுமே திருமணத்தை தீர்மானிக்கிறதா?' என்றால், 'இல்லை' என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் திருமணமே செய்துகொள்ளாமல் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையில் எல்லாம் குரு பலம் வராமல் இருந்திருக்குமா?

    கோச்சாரப்படி ஒருவருடைய ஜாதகத்தில், அவரது ராசிக்கு 2, 5, 7, 9 ஆகிய இடங்களில் குரு பகவான் சஞ்சரிக்கும் போது, குரு பலம் ஏற்படுகிறது. அப்படி பார்த்தால், குரு பலம் ஏற்படும் வேளையில், திருமண வயதில் உள்ள அனைவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் அல்லவா? ஆனால் அப்படி நிகழ்கிறதா? என்றால், அது கேள்விக் குறிதான். ஏனெனில் அவரவர் பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளின் படிதான் திருமணம் என்பது நடைபெறும்.

    எனவே குரு பலத்திற்கும், திருமணம் நடப்பதற்கும் சம்பந்தம் இல்லை. எப்படி என்றால், ஒரு ஜாதகருக்கு குரு பலம் சிறு வயதிலும் வரும், நடுத்தர வயதிலும் வரும், வயதான பிறகும் வரும். அப்படி இருக்கும்போது, குரு பலம் வரும்போதெல்லாம் திருமணம் நடைபெறுவதில்லைதானே. எனவே, திருமணம் நடைபெறும் காலம் என்று பார்க்கும் போது, அவரவர் ஜாதகத்தில் வரும் திசை, புத்தி, அந்தரத்தினைப் பொறுத்தே திருமணம் நடைபெறுகிறது.

    அதாவது ஜாதகத்தின் படி குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் ஆகியவற்றில் வீற்றிருக்கும் கிரகம், களத்திரகாரகனான சுக்ரன் இருக்கும் இடத்தை பார்க்கும் கிரகம் போன்றவற்றைப் பொறுத்தே திருமணம் நடைபெறுகிறது. மேலும், திருமண ஸ்தானங்களான 2-ம் இடம், 7-ம் இடம், 9-ம் இடம் போன்ற இடத்தின் ஸ்தானாதிபதி சாரத்தில் கிரகங்கள் இருந்தாலும், அந்த கிரகங்களின் திசை, புக்தி காலங்களிலும் திருமணம் நடைபெறும். மேற்சொன்ன விதிகளின் படி குரு சம்பந்தம் பெறுமேயானால், அந்த குருவின் திசை, புத்தி காலங்களிலும் திருமணம் நடந்தேறும்.

    அப்படி என்றால் குருவால் என்னதான் பயன் என்கிறீர்களா?.. அதையும் பார்ப்போம்.

    புத்திரகாரகன், தனகாரகன், ஒழுக்கம், அறிவு விருத்தி அடைவது, உயர் பதவி யோகம் பெறுதல், மரியாதை, ஆசிரியன், ஆலோசனை வழங்குபவர் போன்ற காரகங்களின் அடிப்படையில் குரு பகவான் பலன் தருவார். குரு பார்க்க கோடி நன்மை என்பது அனைவருக்கும் தெரியும். குரு பகவான் இருந்த இடங்களை விட பார்க்கும் இடம் நன்மை அடையும். ஜாதகத்தில் நல்ல ஸ்தானங்களில் குரு பார்வை இல்லாதவர்கள், குரு பகவானிடம் சரணடைதல் மிகுந்த நன்மையைத் தரும்.

    அருகிலுள்ள சிவன் கோவிலுக்குச் சென்று குரு பகவானை தரிசிப்பது நல்லது. குருவிற்கு உகந்த நாள் வியாழன். அன்றைய தினம் குரு பகவானை உள்ளார்ந்து நினைத்து விரதம் மேற்கொள்ளும் போது, குருவின் அனுக்கிரகம் கிடைக்கும். குரு பகவானுக்கு உகந்த பொன்னிறம் அல்லது மஞ்சள் ஆடை அணிந்து குருவை வழிபட்டால், அவரால் ஏற்படும் தோஷங்கள் விலகி நன்மைகள் கிடைக்கப்பெறும். உதாரணமாக கல்வி விருத்தி அடைதல், உயர்பதவி கிடைத்தல், தனகாரகன் என்பதால் செல்வச்செழிப்பு அதிகரிக்கும்.

    புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் அல்லது புத்திர தோஷம் உள்ளவர்கள், குரு பகவானை வழிபடுவதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கொண்டைக் கடலையை மாலையாக கோர்த்து, குரு பகவானுக்கு அணிவித்தலும் மிகவும் நன்மையைத்தரும். குருவிற்கு இனிப்பு சுவை பிடிக்கும். ஆதலால் சர்க்கரைப் பொங்கல் படைத்தும் வழிபடுவது நல்லது. குரு ஸ்லோகம், குரு மந்திரம், குரு காயத்ரியை உச்சரிப்பதால், குருவின் அனுகிரகம் முழுமையாக நமக்கு கிடைக்கும். இவற்றை வியாழன் தோறும் 30 அல்லது 108 முறை பாராயணம் செய்வது நன்மையைத் தரும்.

    'ஜோதிடச்சுடர்' என்.ஞானரதம்,சென்னை.

    Next Story
    ×