search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    திருமண தடை, கண் திருஷ்டி, கடன் பிரச்சனைகளை தீர்க்கும் கோவில்
    X

    திருமண தடை, கண் திருஷ்டி, கடன் பிரச்சனைகளை தீர்க்கும் கோவில்

    • தீராத கடன் தொல்லை தீரவும் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறார்கள்.
    • 48 நாட்கள் இக்கோவில் இறைவனை வழிபட்டால் அனைத்து விதமான தீராத நோய்களும் தீரும்.

    தஞ்சாவூரின் தென்பகுதியில் கோனூர்நாடு கோட்டை தெருவில் அமைந்துள்ளது, கோனூர்நாடு அகத்தீஸ்வரர் கோவில். இந்த ஆலயத்தில் நடைபெறும் பிரதோஷ வழிபாட்டின் போது நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுவது வழக்கம். திருமண தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தொடர்ச்சியாக 21 பிரதோஷ நாட்களில், நந்தியம் பெருமான், ஈசன், அம்பாள் ஆகியோருக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளைக் கண்டு களித்து வழிபாடு செய்தால் விரைவில் திருமண யோகம் வாய்க்கும். குழந்தைச் செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    தீராத கடன் தொல்லை தீரவும் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறார்கள். தொடர்ச்சியாக 21 திங்கட்கிழமைகள் இத்தல இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டால், கடன் தொல்லை நீங்குவதோடு, யோகம் மிகுந்த வாழ்க்கை அமையும் என்கிறார்கள். தொடர்ந்து 48 நாட்கள், கோவிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி, 21 தீபம் ஏற்றி, அடி பிரதட்சணம் செய்து இறைவனை வழிபட்டால் அனைத்து விதமான தீராத நோய்களும் தீரும்.

    இந்த ஆலயத்தில் வியாழக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அன்றைய தினம் ஏலக்காய், பச்சை கற்பூரம், கிராம்பு, ஜாதிபத்திரி, ஜாதிக்காய் ஆகியவற்றை இறைவனுக்கு சமர்ப்பித்து, அர்ச்சனை செய்ய வேண்டும். பின்பு அவற்றை எடுத்துக்கொண்டு வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்து வழிபட்டால், கல்வியிலும் தொழிலிலும் மேன்மை வந்து சேரும்.

    தேய்பிறை அஷ்டமி அன்று இத்தலத்தில் உள்ள பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அன்றைய தினம் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவற்றால் தனித்தனியாக 3 தீபம் ஏற்றி, மிளகு மாலை சாற்றி வழிபட்டால், எப்பேர்பட்ட கண் திருஷ்டியாக இருந்தாலும் அகலும். மேலும் தீராத பகை நீங்குவதோடு, குடும்ப பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

    ருத்ராட்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பந்தலை, இந்த ஆலய இறைவன் அகத்தீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மன் சன்னிதிகளில் பொருத்தியுள்ளனர். சிவ ஆலயங்களில் ருத்ராட்ச பந்தல் அமைந்திருப்பது அரிதான ஒன்று. ருத்ராட்ச பந்தலில் காட்சி தரும் சிவனை வழிபட்டால் பிறவி பலனை அடையலாம் என்பது ஐதீகம். அத்தகைய சிறப்பை கொண்டுள்ள கோனூர்நாடு அகத்தீஸ்வரரை வணங்கினால் பாவங்களும், தீராத ஜென்ம தோஷங்கள் தீரும் என்கிறாா்கள்.

    தஞ்சாவூரில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும், ஒரத்தநாட்டில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும் கோனூர்நாடு அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் ரெயில்நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பழைய பஸ் நிலையம் சென்று, கோனூர்நாடு செல்வதற்கான பஸ்களில் ஏறி கோவிலை அடையலாம்.

    -சண்முகம், தஞ்சாவூர்.

    Next Story
    ×