என் மலர்
ரஷ்யா
- ரஷிய எண்ணெய் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
- இதில் 2 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
மாஸ்கோ:
ரஷிய நாட்டில் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள அங்கார்ஸ்க் நகரில் அங்கார்க் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய் ஆலை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்த ஆலையில் நேற்று திடீரென தீப்பற்றியது. இந்தத் தீ மின்னல் வேகத்தில் பரவியது. உடனடியாக தீயணைக்கும் படையினர் வரவழைக்கப்பட்டு பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தத் தீ விபத்தில் 2 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
- எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ரஷிய அதிபர்தான் முடிவு செய்ய வேண்டும்.
- நாங்கள் எந்த ஒரு நிகழ்வையும் தவறவிட மாட்டோம்.
மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் காரணமாக அந்நாட்டுடனான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தோனேசியாவில் அண்டையில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளதாக ரஷிய அதிபர் மாளிகையின் துணை தலைமை அதிகாரி ஸ்வெட்லானா லுகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரஷிய அரசு செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
(ரஷிய அதிபர்) நிச்சயமாக ஜி20 உச்சி மாநாட்டிற்கு செல்வார் என்று நான் நம்புகிறேன். ஆனால் இது குறித்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அடுத்த உச்சி மாநாடு நடைபெற ஒரு வருடம் இருக்கும் போது, இது குறித்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது.
நான் பார்க்கும் விதம் என்னவென்றால் இதற்கான வாய்ப்புகள் அனைத்தும் உள்ளன. நாங்கள் எந்த ஒரு நிகழ்வையும் தவறவிட மாட்டோம் என்று நான் நம்புகிறேன். அது ஒரு கருத்தரங்கு அல்லது மாநாடாக இருந்தாலும் ரஷியா தனது நிலைப்பாட்டை நிரூபிக்க, தனது கருத்துக்களை வெளிப்படுத்த எந்த நிகழ்விலும் பங்கேற்பது முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- புதின் உடல்நிலை மோசமாக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
- குண்டு வைத்து பாலத்தை சீரமைக்கும் பணி விரைந்து நடத்தி முடிக்கப்பட்டது.
மாஸ்கோ:
ரஷிய அதிபர் புதின், தலைநகர் மாஸ்கோவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்தபோது மாடி படிக்கட்டில் இறங்கியபோது தவறி கீழே விழுந்ததாகவும், இதில் அவரது முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
மேலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் தனது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதின் பொது வெளியில் தோன்றினார்.
கடந்த அக்டோபர் மாதம் ரஷியாவின் கிரீமியா பகுதியில் உள்ள பாலத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் பாலத்தின் ஒரு பகுதி முற்றிலும் சேதமடைந்தது. பாலத்தை சீரமைக்கும் பணி விரைந்து நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து அப்பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
கிரீமியா பாலத்தை புதின் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பாலத்தில் காரை ஓட்டி சென்றார். பின்னர் பாலத்தின் பழுது பார்ப்பு பணிகள் குறித்த அறிக்கையை துணை பிரதமர் மராட் குஷ்னுலினிடம் கேட்ட புதின், கட்டுமான தொழிலாளர்களிடம் உரையாடினார்.
கிரீமியா பாலத்தை புதின் பார்வையிட்ட காட்சிகள் அரசு தொலைக்காட்சியில் காட்டப்பட்டன.
உக்ரைன் மீதான ரஷியா வின் போர் 10 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் ரஷியாவுக்குள் இருக்கும் 2 ராணுவ தளங்களை உக்ரைன் ராணு வம் டிரோன் மூலம் தாக்கியதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
- இந்த எண்ணெய் விலை வரம்பை ஏற்க ரஷியா மறுத்துள்ளது.
- இந்த விலை வரம்பு ரஷியா பெறும் வருவாயைக் கட்டுப்படுத்த ஒரு முக்கியமான கருவி ஆகும்.
மாஸ்கோ:
ரஷியாவில் இருந்து வரும் எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 60 அமெரிக்க டாலர்கள் ஆக ஐரோப்பிய ஒன்றியம் நிர்ணயித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து ஜி7-ல் சேர்க்கப்பட்டுள்ள பணக்கார நாடுகள் இந்த விலை வரம்பை நிர்ணயித்துள்ளன. மேலும், ரஷியாவிலிருந்து உலகிற்கு வரும் எண்ணெய் தடையின்றி தொடர்ந்து வழங்குவதே இதன் நோக்கமாகும்.
ரஷிய எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 60 அமெரிக்க டாலர் என்ற உச்சவரம்பை நிர்ணயிக்கும் நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்றுள்ளது, அதேபோல, ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவை ஆஸ்திரேலியா மற்றும் ஜி-7 நாடுகளும் ஆதரித்துள்ளன.
உக்ரைன் போர் தொடங்கிய பின், ஐரோப்பிய ஒன்றியம் ஜி-7 நாடுகளும் ரஷியாவிலிருந்து இறக்குமதியாகும் எண்ணெய்க்கு தடை விதித்துள்ளன.
இதற்கிடையே, தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த விலை வரம்பு ரஷியா பெறும் வருவாயைக் கட்டுப்படுத்த ஒரு முக்கியமான கருவி ஆகும். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் எண்ணெய் விநியோகம் சீராக கிடைத்திட வழி செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் எண்ணெய் விலை வரம்பை ரஷியா ஏற்க மறுத்து இந்த முடிவை நிராகரித்துள்ளது.
- பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்த நிலையில் இருந்தாலும் அது தற்போதும் மனிதர்களை தாக்கக்கூடிய தன்மையுடன் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
- பருவநிலை மாற்றம் காரணமாக பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்திருந்த ஏரியின் அடியில் சுமார் 12 வைரஸ்களை கண்டுபிடித்தனர்.
ஐரோப்பியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் சைபீரியாவில் 48,500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரசை கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரசை பனிப்பாறைகளுக்கு கீழே புதைந்த நிலையில் கண்டெடுத்துள்ளனர்.
ரஷியாவில் சைபீரியா பகுதியில் உள்ள பெர்மா ப்ரோஸ்டில் இருந்து சேகரிக்கப்பட்ட பண்டைய மாதிரிகளை ரஷியா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
பருவநிலை மாற்றம் காரணமாக பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்திருந்த ஏரியின் அடியில் சுமார் 12 வைரஸ்களை கண்டுபிடித்தனர். அதில் ஒரு வைரஸ் சுமார் 48,500 ஆண்டுகளாக புதைந்திருந்த ஜாம்பி வைரஸ் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்த வைரஸ்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்த நிலையில் இருந்தாலும் அது தற்போதும் மனிதர்களை தாக்கக்கூடிய தன்மையுடன் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறும்போது, "இந்த ஜாம்பி வைரஸ்கள், பெரும்பாலும் அமீபா நுண்ணுயிர்களை பாதிக்கும் தன்மை கொண்டவை. இவை மனிதர்களை தாக்கும் ஆபத்து மிகவும் குறைவு.
பனிப்பாறைகள் உருகும்போது இது போன்ற பழமையான வைரஸ்கள் வெளிபட்டாலும் வெளிப்புற சூழலில் எவ்வளவு காலம் தொற்றாக இருக்கும் என்பதும், தனக்கு பொருத்தமான ஒரு உயிர் மீது எப்படி தாக்கும் என்பதையும் மதிப்பிடுவது சாத்தியம் இல்லை.
புவி வெப்பமயமாதல் போன்றவற்றால் தொடர்ந்து பனிப்பாறைகள் உருகும் நிலையில் ஆர்க்டிக் பகுதியில் அதிக மக்கள் குடியேறுவதும், ஆபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறினர்.
- முதியவர் பொதுமக்களை துப்பாக்கியால் சுடும்காட்சி கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.
- கேமிராவில் பதிவான கண்காணிப்பு காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மாஸ்கோ:
ரஷியாவின் தெற்கு பகுதியான கிரிம்ஸ்க் நகரில் நேற்று 66 வயது முதியவர் ஒருவர் திடீரென தான் கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டார்.
அவர் ரோட்டோரம் நடந்து கொண்டே இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டார். அவரது இந்த வெறிச்செயலை பார்த்த பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர்.
முதியவர் சுட்டதில் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 61 வயது முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்தார். 3 பேரை சுட்டுக்கொன்ற பிறகு கொலையாளியும் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதர் யார்? என்று தெரியவில்லை. எதற்காக அவர் இந்த செயலில் ஈடுபட்டார் என்பதும் மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் பொதுமக்களை துப்பாக்கியால் சுடும்காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சி தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதில் முதியவர் நடந்து கொண்டே துப்பாக்கியால் சுடுவதும் சிலரை பக்கத்தில் இருந்து சுட்டுக்கொன்ற காட்சிகளும் உள்ளன. இந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரஷியாவின் அடுக்குமாடி குடியிருப்பில் காஸ் கசிவு ஏற்பட்டது.
- இந்த விபத்தில் சிக்கி 4 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
மாஸ்கோ:
ரஷியாவின் தென்கிழக்கு பகுதியைச் சேர்ந்த ஷாக்லீன் தீவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் திடீரென காஸ் கசிந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. விசாரணையில், 1980-ம் ஆண்டில் கட்டப்பட்ட குடியிருப்பு என்பதும், காஸ் கசிவால் விபத்து நடந்தது உறுதிபடுத்தப்பட்டது. இதில் 4 குழந்தைகளும் பலியாகினர். மேலும், 33 பேரை தேடும் பணி நடந்து வருகிறது என அம்மாகாண கவர்னர் தெரிவித்தார்.
- வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்தார்.
- உக்ரைன், ரஷியா மோதல் தொடங்கியதில் இருந்து ஜெய்சங்கரும் லாவ்ரோவும் சந்திப்பது இது 5வது முறை
மாஸ்கோ:
வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக மாஸ்கோ சென்றுள்ளார். ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் உடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த பிப்ரவரியில் உக்ரைன், ரஷியா இடையே மோதல் தொடங்கியதில் இருந்து ஜெய்சங்கரும் லாவ்ரோவும் இதுவரை நான்கு முறை சந்தித்துள்ளனர். இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், மாஸ்கோவில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:
இந்த ஆண்டில் இது எங்களது ஐந்தாவது சந்திப்பு. எங்கள் பேச்சுக்கள் ஒட்டுமொத்த உலகளாவிய நிலைமை மற்றும் குறிப்பிட்ட பிராந்திய பிரச்சினைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.
சர்வதேச நிலைமையைப் பொறுத்தவரையில் கடந்த சில ஆண்டுகள் நிலவிய கொரோனா பெருந்தொற்று, நிதி அழுத்தங்கள் மற்றும் வர்த்தக சிக்கல்கள்; இவை அனைத்தும் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இவற்றிற்கெல்லாம் மேலாக, உக்ரைன் - ரஷியா மோதலால் ஏற்பட்டுள்ள விளைவுகளை தான் இப்போது பார்க்கிறோம்.
உக்ரைன்-ரஷியா இடையேயான மோதலை பொறுத்தவரையில், பேச்சுவார்த்தைக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்பதை இந்தியா மீண்டும் கடுமையாக வலியுறுத்துகிறது. பயங்கரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற வற்றாத பிரச்சினைகளும் உள்ளன என தெரிவித்தார்.
- ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
- ரஷியா-உக்ரைன் போருக்கு மத்தியில் ஜெய்சங்கரின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
மாஸ்கோ:
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரு நாள் பயணமாக ரஷியா சென்றடைந்தார். அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் ரஷியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
முக்கியமாக ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் இருவரும் விவாதிக்கின்றனர்.
ரஷியா-உக்ரைன் போருக்கு மத்தியில் ஜெய்சங்கரின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த ஆண்டும் ஜெய்சங்கர் ரஷியா சென்றிருந்தார். அதைத்தொடர்ந்து ரஷிய வெளியுறவு மந்திரி கடந்த ஏப்ரலில் இந்தியா வந்ததும் குறிப்பிடத்தக்கது.
- சுமார் 250 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
- தீ விபத்து ஏற்படுவதற்கு சற்று முன்பு ஓட்டலில் சண்டை மூண்டதாக தகவல்
மாஸ்கோ:
ரஷியாவின் மாஸ்கோ அருகில் உள்ள கோஸ்ட்ரோமாவில் உள்ள பிரபல ஓட்டலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் அவசரம் அவசரமாக வெளியேறினர். எனினும் கரும்புகை சூழ்ந்ததால் பலர் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். ஓட்டலின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது.
தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 250 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். எனினும் தீயில் சிக்கியும் இடிபாடுகளில் சிக்கியும் 13 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
யாரோ ஒரு நபர் ஃபிளேர் துப்பாக்கியைப் பயன்படுத்தியபிறகே தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்படுவதற்கு சற்று முன்பு ஓட்டலில் சண்டை மூண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதற்கும் ஃபிளேர் துப்பாக்கிக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
தீவிபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். உணவக இயக்குனரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- நாசகார ஆயுதம் மூலம் தாக்குதலை நடத்த திட்டமிடுவதாக உக்ரைன் மீது ரஷியா குற்றம்சாட்டியது.
- அணுசக்தி திறன் கொண்ட படைகளின் இந்த ஒத்திகையை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆய்வு செய்தார்.
மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பை தொடங்கி 8 மாதங்கள் கடந்துள்ளது. உக்ரைனின் முக்கிய பகுதிகளை கைப்பற்றிய ரஷியா, தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இப்போதைக்கு இல்லை.
இதற்கிடையே உக்ரைன் அணுமின் நிலையங்களில் அணுக் கழிவுகளை பயன்படுத்தி நாசகார ஆயுதங்களை அந்த நாடு தயாரித்து வருவதாகவும், அதன் மூலம் தாக்குதலை நடத்த திட்டமிடுவதாகவும் ரஷியா குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டை உக்ரைன் மறுத்துள்ளது. அத்துடன் ரஷியாதான் அப்படிப்பட்ட நாசகாச ஆயுதங்களை தயாரிப்பதாக எதிர்குற்றச்சாட்டை முன்வைத்தது.
இந்த பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் உக்ரைன் படைகள் அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், அதற்கு தக்க பதிலடி தரும் வகையில் ரஷிய சிறப்பு படைகள் பயிற்சியை தொடங்கின. நவீன ஏவுகணைகளை செலுத்தி ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன. அணுசக்தி திறன் கொண்ட படைகளின் இந்த ஒத்திகையை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று காணொலி காட்சி வாயிலாக ஆய்வு செய்தார்.
தரை, கடல் மற்றும் வான் பாதுகாப்பு மற்றும் தடுப்புப் படைகள் பயிற்சியில் ஈடுபட்டதாகவும், பாலிஸ்டிக் மற்றும் கப்பல் ஏவுகணைகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் கிரெம்ளின் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆர்க்டிக் பகுதியில் உள்ள பேரண்ட்ஸ் கடலில் இருந்து சினேவா பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்த, நீர்மூழ்கிக் கப்பல் குழு தயாராகும் காட்சிகளை ரஷிய அரசு ஊடகம் வெளியிட்டது. கிழக்கு பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் இருந்து ஏவுகணைகளை சோதனை செய்வதும் இந்த பயிற்சியில் அடங்கும். ரஷிய படைகளின் இந்த ஒத்திகையின்மூலம், உக்ரைன் போர் அணு ஆயுத மோதலாக மாறக்கூடும் என அஞ்சப்படுகிறது.
- ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு விரிவான கூட்டாண்மையை தொடர்ந்து உருவாக்க ஆவலுடன் இருப்பதாக புதின் தெரிவித்துள்ளார்.
- நம் ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் நெருக்கமான, பொதுவான பணிகளைத் தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக மூன்றாவது முறையாக தேர்வானதை அடுத்து ஜின்பிங் மீண்டும் சீன அதிபராக பதவியேற்கிறார். இதையடுத்து, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஜி ஜின்பிங்கிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு விரிவான கூட்டாண்மையை தொடர்ந்து உருவாக்க ஆவலுடன் இருப்பதாக புதின், ஜின்பிங்கிடம் கூறியுள்ளதாக ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்லின் தெரிவித்துள்ளது.
மேலும், ஜின்பிங் செழிப்பாகவும், புதிய வெற்றிகளை பெற விரும்புகிறேன். நமது நாடுகளுக்கிடையேயான மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் எங்கள் ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் நெருக்கமான, பொதுவான பணிகளைத் தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று புதின் தெரிவித்துள்ளார்.






