என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • உலகளவில் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது
    • குவாட் கூட்டாண்மை, அமெரிக்க அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முக்கியமானது

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கொரோனா தடுப்புப் பிரிவு அதிகாரி ஆஷிஷ் ஜா, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக பாராட்டு தெரிவித்தார்.

    உலகளவில் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், தடுப்பூசி உற்பத்தி செய்யும் அளவு அபரிமிதமாக இருப்பதால், தடுப்பூசிகளின் முக்கிய ஏற்றுமதியாளராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான குவாட் (QUAD) கூட்டாண்மை, அமெரிக்க அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முக்கியமானது என்றும் கூறினார்.

    உலக நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பனா ஜோ பைடன் நிர்வாகத்தின் முடிவு குறித்து பேசிய அவர், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கும் அமெரிக்கா தொடர்ந்து தடுப்பூசிகளை வழங்கும் என்றார்.

    • ரஷியா, உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தும் என, அமெரிக்கா சந்தேகம்
    • உக்ரைனில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் அறிவுரை

    வாஷிங்டன்:

    உக்ரைன்-ரஷியா இடையேயான போர் 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் ரஷிய படைகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னதாக உக்ரைன் இந்த வாரம் ரசாயன வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக ரஷியா குற்றம் சாட்டி இருந்தது.

    இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி, இந்த போரில் அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷியா திட்டமிட்டு வருவதை இது காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். அது போன்ற தாக்குதல்களை நடத்தினால் அது ரஷியாவின் மிக கடுமையான தவறாக கருதப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

    இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள இந்திய தூதரம், உக்ரைனில் மீதம் உள்ள அனைத்து இந்தியர்களும் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தி உள்ளது. தொடர்ந்து மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு உக்ரைனில் இருந்து வெளியேற கிடைக்கும் வழிகளை இந்தியர்கள் பயன்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே கடந்த 19ந் தேதி இந்தியர்கள் வெளியேறுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், இதனால் ஏராளமான இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேறி விட்டனர் என்றும் இந்திய தூதரக தகவல்கள் தெரிவித்துள்ளன.

    • இங்கிலாந்தின் 57-வது பிரதமராக இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்வானதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    இங்கிலாந்தின் 57-வது பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மூன்றாம் சார்லஸ் அரசரால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரிஷி சுனக்கிற்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், அரசர் 3-ம் சார்லசை இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, அரசர் 3-ம் சார்லஸ், முறைப்படி புதிய பிரதமராக சுனக்கை அறிவித்தார்.

    இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் பேசுகையில், பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்வாகி இருப்பது நம்பமுடியாத மைல் கல். அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் உள்பட 200 பேரால் பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்வாகி உள்ளார். எல்லைகளை தகர்த்தெறிந்து அவர் சாதித்திருக்கிறார் என புகழாரம் சூட்டினார்.

    • கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க பாராளுமன்றத்திற்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
    • கலவரத்தை தூண்டியதாக டிரம்ப் மீது புகார் கூறப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த அதிபர் தேர்தலில் ஜோபைடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறிய டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்தார்.

    இதையடுத்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க பாராளுமன்றத்திற்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் பலியானார்கள். கலவரத்தை தூண்டியதாக டிரம்ப் மீது புகார் கூறப்பட்டது.

    இது தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் பாராளுமன்றத்தில் நடந்த கலவரம் தொடர்பாக டிரம்ப் வருகிற நவம்பர் 4-ந் தேதிக்குள் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் 14-ந் தேதி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்றும் விசாரணை குழு உத்தரவிட்டுள்ளது.

    • வெள்ளை மாளிகையில் 24-ந்தேதி ஜனாதிபதி ஜோபைடன், தனது மனைவியுடன் தீபாவளி கொண்டாட உள்ளார்.
    • கமலா ஹாரீஸ், டிரம்ப் வீடுகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.

    வாஷிங்டன் :

    இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி இந்தியாவில் வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதைப்போல பல நாடுகளிலும் வாழும் இந்தியர்கள் இந்த பண்டிகையை விமரிசையாக கொண்டாட உள்ளனர்.

    அந்தவகையில் அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டது. நாட்டின் பல மாகாணங்களின் தலைநகர், கவர்னர் மாளிகைகளில் தீபாவளி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    தலைநகர் வாஷிங்டனில் அரசு சார்பில் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இதில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்திய-அமெரிக்க பிரபலங்கள் தலைநகரில் குவிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரீஸ், தனது வீட்டில் நேற்று பண்டிகையை கொண்டாடினார். இதற்காக பிரபலமான இந்திய-அமெரிக்கர்கள், இந்திய தூதரக அதிகாரிகள் என ஏராளமானோருக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

    மேலும் முன்னாள் ஜனாதிபதி டிரம்பும் புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று தீபாவளி கொண்டாடினார். இதில் பங்கேற்பதற்காக சுமார் 200 இந்திய-அமெரிக்கர்களுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

    இதில் இந்திய நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும், பங்கேற்றவர்களுக்கு இந்திய உணவுகளும் பரிமாறப்பட்டன.

    இதைப்போல வெள்ளை மாளிகையில் வருகிற 24-ந்தேதி ஜனாதிபதி ஜோபைடன், தனது மனைவி ஜில் பைடனுடன் தீபாவளி கொண்டாட உள்ளார். இதில் ஏராளமான இந்தியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்நது 26-ந்தேதி வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன், தனது அமைச்சகத்தில் தீபாவளி விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் ஏராளமான தூதரக அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    முன்னதாக நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த 15-ந்தேதி தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது. இதில் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், செனட்டர் சக் சியூமர், இந்திய துணை தூதர் ரந்திர் ஜெய்ஸ்வால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், அடுத்த ஆண்டு (2023) முதல் தீபாவளி பண்டிகைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என அறிவித்தார். இது தீபங்களின் திருவிழா குறித்து அறிய குழந்தைகளை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் பேசிய செனட்டர் சியூமர், 'நாங்கள் எங்கள் சமூகத்தையும், எங்கள் இந்திய சமூகத்தையும் நேசிக்கிறோம், நாங்கள் அனைவரும் இங்கு நியூயார்க்கில் எங்கள் பன்முகத்தன்மையுடன் ஒன்றிணைவதை நாங்கள் விரும்புகிறோம்' என்று தெரிவித்தார்.

    • பள்ளி குழந்தைகள் தீபாவளி தீப திருவிழாவை அறிவதற்கு ஊக்க மளிக்கும் வகையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.
    • இந்திய தூதரக அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ்லால் நியூயார்க் மேயருக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

    நியூயார்க்:

    நியூயார்க் நகரில் வசித்து வரும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் தீபாவளிக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனை ஏற்று அடுத்த ஆண்டு முதல் (2023) தீபாவளி திருநாள் அன்று பள்ளிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படும் என நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது தீபாவளி திருநாள் என்றால் என்ன என்பதை பற்றி நான் நிறைய கேள்வி பட்டு இருக்கிறேன்.

    இதனால் பள்ளி குழந்தைகள் தீபாவளி தீப திருவிழாவை அறிவதற்கு ஊக்க மளிக்கும் வகையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்தார். இதையடுத்து இந்திய தூதரக அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ்லால் நியூயார்க் மேயருக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

    • அமெரிக்காவில் அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது.
    • அமெரிக்காவில் கடந்த மாத நிலவரப்படி நுகர்வோர் விலை பணவீக்கம் 8.2 சதவீதமாக உள்ளது.

    வாஷிங்டன் :

    அமெரிக்காவில் எந்தவொரு ஜனாதிபதி பதவிக்கு வந்தாலும் அவரது 4 ஆண்டு பதவிக்காலத்தின் மத்தியில் (2 ஆண்டுகளுக்குபின்) நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும். இது இடைக்கால தேர்தல் ('மிட்டேர்ம் போல்ஸ்') என அழைக்கப்படுகிறது.

    அந்த வகையில் அங்கு ஜோ பைடன் ஜனாதிபதியாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், அவருடைய பதவிக்காலத்தில் மத்தியில், அடுத்த மாதம் 8-ந் தேதி நாடாளுமன்ற கீழ்சபையில் உள்ள (பிரதிநிதிகள் சபை) மொத்த இடங்களான 435 இடங்களுக்கும், மேல்சபையான செனட் சபையில் மொத்தம் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தல் வெற்றி, 2024-ம் ஆண்டு அங்கு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் எந்தக்கட்சி ஜெயிக்கப்போகிறது என்பதற்கு சமிக்ஞையாக அமையும்.

    அமெரிக்காவில் கடந்த மாத நிலவரப்படி நுகர்வோர் விலை பணவீக்கம் 8.2 சதவீதமாக உள்ளது. இதற்கு அங்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட வாகன எரிபொருட்கள் விலை உயர்வு முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் சங்கிலித் தொடர்போல மற்ற விலைவாசிகளும் உயர்ந்துள்ளன. இது மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது அடுத்த மாதம் நடக்கிற நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் எரிபொருட்கள் விலையை குறைப்பதற்காக கையிருப்பில் இருந்து கச்சா எண்ணெயை அதிகளவில் விடுவிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.

    இது தொடர்பாக அவர் நேற்று முன்தினம் ஆற்றிய உரையில் கூறியதாவது:-

    உக்ரைன் மீது ரஷிய அதிபர் புதின் படையெடுத்ததால்தான் எரிபொருட்கள் விலை உயர்ந்தன. இது சர்வதேச சந்தையை உலுக்கியது. எனவே எரிபொருட்கள் விலையைக் குறைக்க என்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருகிறேன்.

    அந்த வகையில் எரிசக்தித்துறை அமெரிக்காவின் மூல உபாய கையிருப்பில் இருந்து டிசம்பர் மாதம் வரையில் மேலும் 1 கோடியே 50 லட்சம் பீப்பாய் எண்ணெயை விடுவிக்கும்.

    கையிருப்பில் இருந்து கச்சா எண்ணெயை விடுவிக்கிறபோது, அது எரிபொருட்கள் விலை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே நாங்கள் தேசிய சொத்தான கச்சா எண்ணெய் கையிருப்பை தொடர்ந்து பொறுப்புடன் பயன்படுத்தப்போகிறோம்.

    இப்போது மூல உபாய கச்சா எண்ணெய் கையிருப்பு சுமார் பாதிக்கு மேல் நிரம்பி உள்ளது. அதாவது சுமார் 40 கோடி பீப்பாய் இருப்பு இருக்கிறது. எந்தவொரு அவசர நிலைக்கும் இது போதுமானதை விட அதிகம் ஆகும்.

    தூய்மையான எரிசக்திக்கான மாற்றத்தை தாமதப்படுத்தாமல் அல்லது ஒத்தி வைக்காமல், அமெரிக்கா பொறுப்புடன் எண்ணெய் உற்பத்தியை நிறுத்தவில்லை. உற்பத்தியை தாமதப்படுத்தவில்லை.

    நாங்கள் தினமும் 1 கோடியே 20 லட்சம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்கிறோம். அடுத்த ஆண்டு எண்ணெய் உற்பத்தியில் சாதனை அளவை எட்டும் பாதையில் இருக்கிறோம்.

    ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 70 அமெரிக்க டாலராக (சுமார் ரூ.5,600) வீழ்ச்சி அடையும்போது, கையிருப்பை நிரப்புவதற்காக அமெரிக்கா எண்ணெய் வாங்கும்.

    கச்சா எண்ணெய் விவகாரத்தில் எனது முடிவில் அரசியல் உள்நோக்கம் எதுவும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உக்ரைனுக்கு எதிராக ஏவ ஈரானிடம் இருந்து டிரோன்களை ரஷியா வாங்கியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது.
    • அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.

    வாஷிங்டன்:

    ரஷியாவிற்கு ஆதரவாக ஈரான் படைகள் கிரிமியாவில் இருப்பதற்கான ஆதாரம் அமெரிக்காவிடம் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை பாதுகாப்பு கவுன்சில் அமைப்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், உக்ரைனுக்கு எதிராக ஈரானில் தயாரிக்கப்பட்ட டிரோன்களை ஏவுவதில் ரஷிய படைகளுக்கு உதவுவதற்காக, 2014-ல் ரஷியாவால் சட்ட விரோதமாக இணைக்கப்பட்ட உக்ரைனின் ஒரு பகுதியான கிரீமியாவிற்கு குறைந்த அளவு தனது படைகளை ஈரான் அனுப்பி உள்ளது.

    எங்களிடம் உள்ள தகவல் என்னவென்றால், ஈரான் கிரீமியாவில் தனது பயிற்சியாளர்களையும் தொழில்நுட்ப உதவிகளையும் செய்து வருகின்றனர், ஆனால் ரஷிய படைகள் தான் இயக்குகின்றனர் என தெரிவித்தார்.

    உக்ரைனுக்கு எதிராக ஏவுவதற்காக ஈரானிடம் இருந்து டிரோன்களை ரஷியா வாங்கியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.

    • பாகிஸ்தானைச் சேர்ந்த ஷேக் மெக்மூத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க தீர்மானம் கொண்டு வந்தது.
    • ஐ.நா.சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானத்திற்கு 4வது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டது.

    நியூயார்க்:

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அல் கொய்தா அமைப்புக்கான தடை கமிட்டியின் கீழ் மகமூத் பயங்கரவாதியை, கருப்பு பட்டியலில் வைப்பதற்கான முன்மொழிவை இந்தியா மற்றும் அமெரிக்கா கொண்டு வந்தது. இதற்கும் சீனா தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டுள்ளது.

    ஏற்கனவே, லஷ்கர் இ தொய்பாவின் சஜீத் மிர், ஜமாத் உத் தாவா அமைப்பின் அப்துல் ரெஹ்மான் மக்கி, அப்துல் ரவுப் அசார், ஜெய்ஸ் இ முகம்மது தலைவர் மசூத் ஆசார் ஆகியோரை சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்க முடியாமல் தடுத்து சீனா பாதுகாத்து வருகிறது.

    இதில் சஜீத் மிர் என்பவன் மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவன் ஆவான் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விமானத்துக்குள் பாம்பு ஒன்று புகுந்து இருப்பது தெரிய வந்தது.
    • விமானத்துக்குள் பாம்பு எப்படி வந்தது என்பது தெரியவில்லை.

    அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்த நியூஜெர்சிக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் சென்று கொண்டிருந்தது.

    அப்போது விமானத்துக்குள் பாம்பு ஒன்று புகுந்து இருப்பது தெரிய வந்தது. பாம்பை கண்ட பயணிகள் அலறினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் நியூஜெர்சியில் தரையிறங்கியதும், வன அதிகாரிகள் குழு விமானத்துக்குள் சென்று பாம்பை பிடித்தனர். அந்த பாம்பு விஷ தன்மையற்றது என்று தெரிவிக்கப்பட்டது.

    விமானத்துக்குள் பாம்பு எப்படி வந்தது என்பது தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

    • உலகிலேயே அதிகமான ஏழைகள் இருப்பது இந்தியாவில்தான்.
    • இந்தியாவில் 5-ல் ஒரு குழந்தை, ஏழை குழந்தையாக உள்ளது.

    நியூயார்க் :

    ஐ.நா. மேம்பாட்டு திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டமும் இணைந்து புதிய வறுமை குறியீட்டு எண் பட்டியலை வெளியிட்டன. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    உலகத்தில் 111 நாடுகளில் 120 கோடிபேர், அதாவது 19.1 சதவீத மக்கள் வறுமையின் பிடியில் வாழ்கிறார்கள். அவர்களில் பாதிப்பேர், அதாவது 59 கோடியே 30 லட்சம்பேர், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர்.

    இந்தியாவை பொறுத்தவரை, 2005-2006 நிதிஆண்டில் இருந்து 2020-2021 நிதிஆண்டுக்குள் 41 கோடியே 50 லட்சம்பேர், வறுமையின் பிடியில் இருந்து விடுபட்டுள்ளனர்.

    குறிப்பாக, 2005-2006 நிதிஆண்டில் இருந்து 2015-2016 நிதிஆண்டுக்குள் 27 கோடியே 50 லட்சம் பேரும், 2015-2016 நிதிஆண்டில் இருந்து 2020-2021 நிதிஆண்டுக்குள் 14 கோடி பேரும் வறுமையின் பிடியில் இருந்து விடுபட்டார்கள். இது ஒரு வரலாற்றுசிறப்புமிக்க மாற்றம்.

    2030-ம் ஆண்டுக்குள், வறுமையில் வாழும் ஆண், பெண், குழந்தைகள் எண்ணிக்கையை பாதியாக குறைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இதே ரீதியில் சென்றால், அந்த இலக்கை எட்டுவது சாத்தியமானதுதான்.

    இந்த முன்னேற்றத்தையும் மீறி, 2020-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்குப்படி, உலகிலேயே அதிகமான ஏழைகள் இருப்பது இந்தியாவில்தான். அங்கு 22 கோடியே 89 லட்சம் ஏழைகள் இருக்கிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில்தான் நைஜீரியா (9 கோடியே 67 லட்சம்) உள்ளது.

    இந்த 22 கோடியே 89 லட்சம் ஏழைகளை குறைப்பது கடினமான பணியாகவே இருக்கும். கொரோனா தாக்கம், எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றால் பாதிக்கப்படக்கூடிய நாடாக இந்தியா இருக்கிறது.

    உலகிலேயே அதிகமான ஏழைக்குழந்தைகள் இருப்பதும் இந்தியாவில்தான். 9 கோடியே 70 லட்சம் ஏழைக்குழந்தைகள் உள்ளனர். மற்ற நாடுகளின், அனைத்து வயதினரை சேர்ந்த மொத்த ஏழைகளின் எண்ணிக்கையை விட இது அதிகம். இந்தியாவில் 5-ல் ஒரு குழந்தை, ஏழை குழந்தையாக உள்ளது.

    இந்தியாவில் பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம், காஷ்மீர், ஆந்திரா, சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடந்த 7 ஆண்டுகளில் வறுமை குறைந்துள்ளது.

    இந்தியாவில் கிராமப்புற பகுதிகளில்தான் அதிக ஏழைகள் வசிக்கிறார்கள். நகர்ப்புறங்களில் அவர்கள் எண்ணிக்கை குறைவுதான். அதுபோல், பெண் தலைமை தாங்கும் குடும்பங்களில் வறுமை அதிகமாகவும், ஆண் தலைமை தாங்கும் குடும்பத்தில் வறுமை குறைவாகவும் உள்ளது.

    இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாதுகாப்பான மற்றும் வளமான பாகிஸ்தானைத்தான் அமெரிக்கா விரும்புகிறது.
    • பாகிஸ்தானும் அமெரிக்கா முக்கியமானதாக கருதும் ஒரு உறவு நாடாகும்.

    வாஷிங்டன்:

    பாகிஸ்தான் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் உலகின் ஆபத்தான நாடுகளில் ஒன்று என, அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சில் ஒன்றில் பேசும் போது தெரிவித்தார். அமெரிக்க அதிபர், பாகிஸ்தானுக்கு எதிராக பேசியது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது.

    இதற்கு பாகிஸ்தான் தனது அதிருப்தியை தெரி வித்தது. தலைநகர் இஸ்லா மாபாத்தில் உள்ள பாகிஸ்தா னுக்கான அமெரிக்க தூதரை நேரில் அழைத்து சம்மன் வழங்கியது. இந்த நிலையில் ஜோ பைடன் கருத்துக்கு பதில் அளித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் ஒரு பொறுப்பான அணுசக்தி நாடு என்றும், நாங்கள் மிகவும் தீவிரமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் பாகிஸ்தானை ஆபத்தான நாடு என்று கூறிய விவகாரத்தில் அமெரிக்கா திடீர் பல்டி அடித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் கூறியதாவது:-

    பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் திறன் மீது அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளது. பாதுகாப்பான மற்றும் வளமான பாகிஸ்தானைத்தான் அமெரிக்கா விரும்புகிறது. பாகிஸ்தான் உடனான நீண்ட கால ஒத்துழைப்பை அமெரிக்கா மதிக்கிறது. பாகிஸ்தானும் நாங்கள் முக்கியமானதாக கருதும் ஒரு உறவு நாடாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×