என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் வகித்து வருகின்றன.
    • டிசம்பர் மாதத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றது.

    நியூயார்க்:

    ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் 2021 மற்றும் 2022 ஆகிய 2 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இந்தியா செயல்பட்டு வருகிறது. மாதந்தோறும் பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் வகித்து வருகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்தியா தலைவராக இருந்தது.

    இந்நிலையில், நடப்பு டிசம்பர் மாதத்துக்கு இந்தியா மீண்டும் தலைவர் ஆகியுள்ளது. நேற்று தலைமை பொறுப்பை ஏற்றது. ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ், தலைவர் இருக்கையில் அமர்ந்தார்.

    இந்தியா தலைவராக இருக்கும் இந்த மாதத்தில், பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான நிகழ்ச்சிகள் ஐ.நா.வில் நடக்கின்றன. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தலைமை தாங்குகிறார்.

    • செனட்சபையில் இந்த மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.
    • ஜனாதிபதி ஜோ பைடன் அதில் கையெழுத்திட்டதும் அது சட்டமாகும்.

    வாஷிங்டன்

    அமெரிக்காவில் கடந்த 2015-ம் ஆண்டு அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது.

    இந்த சூழலில் கடந்த ஜூன் மாதம் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு, நாடு முழுவதும் கருக்கலைப்புக்கு தடைவிதித்து சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது. இதை தொடர்ந்து, ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கான சட்ட அங்கீகாரத்தையும் சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்யலாம் என்கிற அச்சம் எழுந்தது. இதனைத் தவிர்க்கும் வகையில் ஓரின சேர்க்கையாளர்களின் திருமண உரிமையை பாதுக்கும் மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தின் செனட்சபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் செனட்சபையில் இந்த மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்த 12 உறுப்பினர்கள் உள்பட 61 பேர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 36 பேர் எதிராக வாக்களித்தனர். இதன் மூலம் செனட் சபையில் அந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. இதையடுத்து அந்த மசோதா தற்போது பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    அங்கும் மசோதா நிறைவேறும் பட்சத்தில் அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி ஜோ பைடன் அதில் கையெழுத்திட்டதும் அது சட்டமாகும்.

    • அமெரிக்காவில் ஹவாய் தீவில் மவுனா லோவா என்கிற எரிமலை உள்ளது.
    • தீவில் வசிக்கும் சுமார் 2 லட்சம் மக்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளது.

    வாஷிங்டன் :

    அமெரிக்காவின் மேற்கே பசிபிக் பெருங்கடலையொட்டி அமைந்துள்ள ஹவாய் தீவில் மவுனா லோவா என்கிற எரிமலை உள்ளது. இது உலகின் மிகப்பெரிய எரிமலை ஆகும்.

    38 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த எரிமைலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. பெரிய அளவிலான நிலநடுக்கங்களை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு எரிமலை வெடிப்பு தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வெடிப்பை தொடர்ந்து எரிமலையில் இருந்து நெருப்பு குழம்பு வெளியேறி வருகிறது. எனினும் அது தற்போது எரிமலை வாயின் விளிம்புகளுக்கு உள்ளாக முடிந்திருக்கின்றன என்றும், எனவே அது குறித்து அச்சுறுத்தல் தற்போதைக்கு இல்லை என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதே சமயம் எரிமலை வெடிப்பு மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும் என்றும் நெருப்பு குழம்பின் ஓட்டம் விரைவாக மாறக்கூடும் என்றும் எச்சரித்து ஆய்வு மையம், எரிமலைக் குழம்பு குடியிருப்பு பகுதிகளை நோக்கிச் செல்லத் தொடங்கினால் அங்கிருந்து வெளியேற தயாராக இருக்குமாறு தீவில் வசிக்கும் சுமார் 2 லட்சம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

    கடந்த 1843ம் ஆண்டில் இருந்து இப்போது வரை 33 முறை சீற்றம் கண்ட மவுனா லோவா கடைசியாக கடந்த 1984-ம் ஆண்டில் வெடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

    • ஏரியில் மூழ்கிய நண்பரை காப்பாற்ற சென்று 2 இந்திய மாணவர்கள் உயிரிழந்தனர்.
    • மாணவர்கள் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் ஒஜார்க்ஸ் என்ற இடத்தில் வார இறுதி நாளில் திருவிழா கொண்டாட்டம் நடந்தது. இதில் இந்தியாவை சேர்ந்த 2 மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அவர்களில் ஒருவர் ஏரியில் குதித்து நீச்சல் அடித்துள்ளார். நீரின் ஆழத்திற்கு சென்ற அவர் அதன்பின் மேலே வரவே இல்லை. இதனால் உடன் சென்ற அவரது நண்பர் பதற்றமடைந்து, நண்பரை காப்பாற்ற எண்ணி, அவரும் நீருக்குள் குதித்து அவரை தேடினார். இந்த சம்பவத்தில் இருவரும் நீருக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

    தெலுங்கானாவைச் சேர்ந்த இருவரும் அமெரிக்காவில் உள்ள மாகாண பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளனர் என மிசோரி மாகாண போலீசார் தெரிவித்தனர். விசாரணையில், அவர்கள் உத்தெஜ் குந்தா (24), சிவா கெல்லிகாரி (25) என அடையாளம் காணப்பட்டனர். இதனால் அவர்களது உறவினர்கள் சோகம் அடைந்துள்ளனர்.

    இதுதொடர்பாக, தெலுங்கானா மந்திரி கே.டி.ராமராவ் கூறுகையில், இந்திய மாணவர்களின் உடல்களை இந்தியாவுக்கு விரைவாக கொண்டு வருவதற்கான உதவிகளை மேற்கொள்ளும்படி எனது குழுவினரை கேட்டு கொண்டுள்ளேன் என தெரிவித்தார்.

    • சீனாவில் அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
    • மக்கள் நடத்தும் அமைதி வழி போராட்டத்திற்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் என ஐ.நா. அறிவுறுத்தியது.

    நியூயார்க்:

    சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது வேகமெடுத்து வருகிறது. கடந்த சில நாட்களாக 40 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. வைரஸ் பரவல் அதிகரிப்பால் பல்வேறு மாகாணங்களில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீனா விதித்து வருகிறது.

    ஜிங்ஜங்க் மாகாணத்தில் 100 நாட்களுக்கு மேலாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த மாகாணத்தின் உரும்யூ நகரில் கடந்த 24-ம் தேதி ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். ஊரடங்கு காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளை அதிகாரிகள் சீல் வைத்து மூடினர். இதனால் அங்கு தீ பற்றியபோது வீடுகளை விட்டு மக்கள் வெளியேற முடியாமல் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    இதற்கிடையே, சீன அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக அங்குள்ள மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் சீன அரசுக்கு எதிராகவும், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே, கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் சீனா முழுவதும் தீவிரமடைந்து வருகிறது.

    இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதி வழியில் போராடும் மக்களின் உணர்வுகளுக்கு சீன ஆட்சியாளர்கள் உரிய மதிப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

    • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பொறுப்பை இந்தியா அடுத்த மாதம் ஏற்க உள்ளது.
    • இதையடுத்து, ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் சிலை திறக்கப்படுகிறது.

    நியூயார்க்:

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பொறுப்பை இந்தியா டிசம்பர் மாதம் ஏற்கிறது. இதையொட்டி மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை ஒன்றை ஐ.நா.வுக்கு இந்தியா பரிசளித்துள்ளது.

    இந்த சிலை ஐ.நா. தலைமையகத்தின் வடபகுதியில் உள்ள புல்வெளியில் நிறுவப்படுகிறது. அடுத்த மாதம் 14-ம் தேதி மத்திய வெளியுறவு மந்திரி ஐ.நா. செல்கிறார். அப்போது இந்த சிலை திறக்கப்படுகிறது. இந்த சிலை திறப்பு விழாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மகாத்மா காந்தி சிலையை புகழ்பெற்ற சிற்பியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ராம் சுதர் வடிவமைத்துள்ளார். இதன்மூலம் ஐ.நா. தலைமையகத்தில் முதல் முறையாக மகாத்மா காந்தி சிலை இடம்பெறுகிறது.

    முன்னதாக, கடந்த 1982-ம் ஆண்டு சூரிய கடவுளின் சிலை ஒன்றை இந்தியா ஐ.நா.வுக்கு பரிசளித்து இருந்தது. இந்த தகவல்களை ஐ.நா.வுக்கான இந்தியாவின் பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    • மின்கோபுரத்தில் சிக்கிய விமானத்தை மீட்கும் பணி நடைபெறுகிறது.
    • 2 நபர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் உயர்அழுத்த மின் கோபுரத்தின் மீது குட்டி விமானம் மோதி விபத்துக்குள்ளானது. மேரிலேண்ட் மாநிலம் மோன்ட்கோமெரி பகுதியில் இரவு நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    அந்த விமானம் நியூயார்க்கின் வெஸ்ட்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து மோன்ட்கோமெரி விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக விபத்தில் சிக்கி உள்ளது. இதனால் 100 அடி உயரத்தில், மின் கோபுரத்தில் விமானம் தொங்கிக்கொண்டிருந்தது. இந்த விபத்தால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் தடைபட்டது. வீடுகள், தெருக்கள் அனைத்தும் இருளில் மூழ்கின.

    விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலையில் விமானத்தில் இருந்த 2 நபர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மின்கோபுரத்தில் சிக்கிய விமானத்தை மீட்கும் பணி நடைபெறுகிறது. மின்தடை ஏற்பட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின்விநியோகம் சீரடைந்துள்ளது.

    • 1992ம் ஆண்டில் உறைய வைக்கப்பட்ட கரு முட்டை பயன்படுத்தப்பட்டது.
    • அமெரிக்க தம்பதியினருக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளன.

    அமெரிக்காவின் மேற்கு பகுதியை சேர்ந்த ஒரேகான் மாகாணத்தில் வசிக்கும் பிலிப் - ரேச்சல் தம்பதியினருக்கு செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி இரட்டை குழந்தை பிறந்துள்ளது. ஆனால் இதில் உள்ள அதிசயம், இந்த குழந்தைகள் 30 வருடங்களுக்கு முன்பு அதாவது 1992ம் ஆண்டில் கிரையோபிரிசர்வ் முறையில் உறைய வைக்கப்பட்ட கரு முட்டை மூலம் பிறந்துள்ளன.

    பிலிப்- ரேச்சல் தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகளும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளன. இந்த நிலையில் கரு மூட்டையை தானமாக பெற்று செயற்கை கருத்தரிப்பு மூலம் மேலும் குழந்தை பெற முடிவு செய்த அவர்கள், அதற்காக அமெரிக்காவில் உள்ள தேசிய கருமுட்டை மையத்தை நாடினர்.


    அந்த மையத்தில் 1992ம் ஆண்டில் இருந்து திரவ நைட்ரஜனில் பூஜ்ஜியத்திற்குக் கீழே 200 டிகிரி மைனஸ் வெப்ப நிலையில் உறைய வைக்கப்பட்ட கரு முட்டை அவர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது. இந்த கருமுட்டையை பயன்படுத்தி செயற்கை கரூவூட்டல் மூலம் உருவான இரட்டை குழந்தைகள் தற்போது பிறந்துள்ளது.

    மருத்துவ உலகத்தில் இது புதிய சாதனையாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு 27 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்டிருந்த கருமுட்டையிலிருந்து கடந்த 2020ம் ஆண்டு பிறந்த மோலி கிப்சனின் சாதனையை இந்த குழந்தைகள் தற்போது முறியடித்துள்ளன.

    ஆண் குழந்தைக்கு திமோத்தி என்றும், பெண் குழந்தைக்கு லிடியா என பெயர் சூட்டியுள்ள இரட்டை குழந்தைகளின் தந்தை பிலிப், நாங்கள் பெற விரும்பும் குழந்தைகளின் எண்ணிக்கையை மனதில் வைத்திருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். 


    கடவுள் நமக்குக் கொடுக்க விரும்பும் அளவுக்கு எங்களிடம் குழந்தைகள் இருக்க வேண்டும் என்று நாங்கள் எப்போதுமே நினைத்ததாக அவர் கூறினார். மேலும் கரு தத்தெடுப்பு பற்றி கேள்விப்பட்டபோது, ​​நாங்கள் அதை செய்ய விரும்பினோம், எங்களுக்கு ஏற்கனவே குழந்தைகள் இருந்தாலும் இவர்கள்தான் எங்களுடைய மூத்த குழந்தைகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் 1992ம் ஆண்டிலிருந்து உறைய வைக்கப்பட்ட கருமுட்டை மூலம் பிறந்துள்ளதால், திமோத்தியும், லிடியாவும் தற்போது உலகிலேயே வயதான குழந்தைகளாக கருதப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆர்டெமிஸ்-3 திட்டத்தில் மனிதர்கள் நிலவில் இறங்கி பூமிக்கு திரும்பும் திட்டம் தொடங்கப்படும்.
    • ஓரியன் விண்கலம் வெற்றி கரமாக நிலவின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப் பட்டதாக நாசா அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்ப திட்டமிட்டுள்ள அமெரிக்கா விண்வெளி கழகமான நாசா, ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதில் முதற்கட்டமாக சோதனை முயற்சியாக ஓரியன் விண்கலம், ராக்கெட் மூலம் நிலவுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. மனிதர்கள் இல்லாமல் ஏவப்பட்ட ஓரியன் விண்கலம், நிலவின் சுற்று வட்டப்பாதை அருகே சென்றது.

    விண்கலம் புறப்பட்ட ஒரு வாரத்துக்கு பிறகு நிலவின் சுற்று பாதையில் நிலைநிறுத்த அதனை கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள் இயக்கினர். இந்த நிலையில் ஓரியன் விண்கலம் வெற்றி கரமாக நிலவின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப் பட்டதாக நாசா அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    மேலும் ஓரியன் விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழையும் வீடியோவையும் நாசா வெளியிட்டு உள்ளது.

    25 நாட்களுக்கும் மேலான பயணத்துக்கு பிறகு ஓரியன் விண்கலத்தை வருகிற டிசம்பர் 11-ந் தேதி பசிபிக் பெருங்கடலில் தரையிறக்க திட்டமிடப் பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சி வெற்றி, என்பது ஆர்டெமிஸ்-2 பணியின் செயல்பாட்டை தீர்மானிக்கும். இது விண்வெளி வீரர்களை தரையிரங்காமல் நிலவை சுற்றி அழைத்து செல்லும்.

    இறுதியாக ஆர்டெமிஸ்-3 திட்டத்தில் மனிதர்கள் நிலவில் இறங்கி பூமிக்கு திரும்பும் திட்டம் தொடங்கப்படும். இந்த பணிகள் முறையே 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் நடைபெற உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

    • டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், டிரம்பின் டுவிட்டர் கணக்கு மீதான தடையை நீக்கினார்.
    • டிரம்ப் டுவிட்டர் கணக்கு தடை நீக்கம் குறித்து எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.

    கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப் தோல்வி அடைந்தார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக டிரம்ப் கூறினார். இதையடுத்து டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க பாராளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக டிரம்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

    இதற்கிடையே டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், டிரம்பின் டுவிட்டர் கணக்கு மீதான தடையை நீக்கினார். இந்த நிலையில் டிரம்ப் டுவிட்டர் கணக்கு தடை நீக்கம் குறித்து எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டிரம்ப் மீதான டுவிட்டர் தடையானது ஒரு மிகப்பெரிய தவறு. அது திருத்தப்பட வேண்டும். அவர் சட்டத்தை மீறவில்லை என்றாலும் அவரது கணக்கை தடை செய்ததில் டுவிட்டர் ஒரு பெரிய தவறை செய்துள்ளது என்றார்.

    • சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
    • சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து அங்கு சிக்கி இருந்தவர்களை போலீசார் மீட்டனர்.

    விர்ஜினியா:

    அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணம் செஷபீக் நகரில் உள்ள பிரபல வால் மார்ட் சூப்பர் மார்க்கெட்டுக்குள் மர்ம நபர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அவர் அங்கிருந்த மக்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார்.

    இதனால் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து மக்கள், ஊழியர்கள், அலறியடித்து கொண்டு ஓடினர். துப்பாக்கி சூட்டில் பலர் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து அங்கு சிக்கி இருந்தவர்களை போலீசார் மீட்டனர்.

    இந்த துப்பாக்கி சூட்டில் பலர் பலியானதாக தகவல் வெளியானது. ஆனால் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்து உடனடியாக தெரிவிக்கப்படாமல் இருந்தது.

    உள்ளூர் ஊடகங்கள் கூறும்போது, துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து தெரியவில்லை. ஆனால் பலியானவர்களின் எண்ணிக்கை 10-க்கும் மேல் இருக்காது என்று தெரிவித்தனர்.

    இந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியாகி உள்ளதாகவும் பலர் காயம் அடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய நபர் இறந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக செஷபீக் நகர போலீசார் கூறும்போது, வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கியால் சுட்ட நபர் இறந்து விட்டார் என்றனர்.

    ஆனால் மர்ம நபர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை போலீசார் சுட்டு கொன்றார்களா? என்பது தெரிவிக்கவில்லை. மேலும் அந்த நபரின் விவரங்களையும் போலீசார் தெரிவிக்கவில்லை.

    • டுவிட்டர், மெட்டா, அமேசான் ஆகிய நிறுவனங்கள் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
    • 2022-ல் இதுவரை 1,35,000 ஊழியர்கள் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    வாஷிங்டன்:

    பொருளாதார சூழல் காரணமாக செலவுகளைக் குறைப்பதற்காக உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதன்படி பிரபல சமூக வலைத்தள நிறுவனமான டுவிட்டர், மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

    இதையடுத்து பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் இருந்தும், 13 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

    இப்படி முக்கிய நிறுவனங்களில் 2022-ம் ஆண்டில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் ஊழியர்கள் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், கூகுள் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் பல மாதங்களாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாமல் தொடர்ந்து எச்சரிக்கை மட்டுமே விடுத்து வந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. யாரையும் உடனடியாக பணியிலிருந்து நீக்கப் போவதில்லை. பணியாளர்களின் செயல் திறன்கள் கண்காணிக்கப்பட்டு 2023-ம் ஆண்டில் செயல் திரை கண்காணிக்க உள்ளது. 2023-ம் ஆண்டில் 10,000 ஊழியர்கள் வரை பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ×