என் மலர்tooltip icon

    இலங்கை

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 200 காளைகள் வாடிவாசல் வழியாக திறந்தி விடப்படுகிறது.
    • செந்தில் தொண்டமான் மற்றும் மலேசிய எம்.பி. சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரபலமானது. தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் இந்த ஜல்லிக்கட்டு அமைந்துள்ளதாக கருதப்படும்.

    உலகமெங்கும் தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டு ரசித்து வருகிறார்கள். இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் ஏராளமான தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், இலங்கையில் ஜல்லிக்கட்டு போன்றவை இதுவரை நடத்தப்பட்டது இல்லை.

    இந்த நிலையில் திருகோணமலையில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் வழிகாட்டுதலில் போட்டியை நடத்த முயற்சி மேற்கொண்டனர். போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பமானது. வாடிவாசல் வழியாக காளைகளை சீறிப்பாய, மாடுபிடி வீரர்கள் மாடுகளை பிடித்தனர்.

    சிறந்த மாடுகளுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட இருக்கிறது.

    இலங்கை வரலாற்றிலேயே முதல்முறையாக தற்போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டுள்ளது. இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முயற்சியில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    200 காளைகள் வாடிவாசல் வழியாக சீறப்பாய இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும், 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த போட்டியை செந்தில் தொண்டமான் மற்றும் மலேசிய எம்.பி. சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    • உளவு கப்பல்கள் மூலம் 750 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள இடங்களை துல்லியமாக கண்காணிக்க முடியும்.
    • எதிர்ப்பையும் மீறி இலங்கை சீன கப்பல்களுக்கு அனுமதி கொடுத்தது.

    கொழும்பு:

    சீன ராணுவத்தில் பல்வேறு பெயர்களில் உளவுக்கப்பல்கள் இயங்கி வருகின்றன. அந்த கப்பல்களை ஆய்வு கப்பல் என சீன அரசு கூறி வந்தாலும் அவை அபாயகரமான உளவு கப்பல்கள் என அமெரிக்க, ஐரோப்பிய பாதுகாப்பு துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கு சீனாவில் இருந்து ஷின்யான் 1,2,3 மற்றும் ஷியாங் யாங் ஹங் 1,3,6,16 உள்ளிட்ட உளவு மற்றும் போர் கப்பல்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு அதி நவீன வசதிகள் கொண்ட சீனாவின் 2 உளவு கப்பல்களுக்கு இலங்கை துறைமுகத்தில் நிறுத்த அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியது. இந்த உளவு கப்பல்கள் மூலம் 750 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள இடங்களை துல்லியமாக கண்காணிக்க முடியும்.

    இலங்கைக்கு மிக அருகில் இருக்கும் இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணுமின்நிலையம், கூடங்குளம் அணு மின் நிலையம் உள்ளிட்ட 6 கடற்படை தளங்களை நவீனகருவிகள் மூலம் கண்காணிக்க வாய்ப்பு இருந்ததால் இந்தியா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    சீன உளவு கப்பல்களை தங்கள் கடற்பகுதிக்குள் அனுமதிக்கக் கூடாது என இலங்கைக்கு இந்தியா வலியுறுத்தியது. ஆனால் இந்த எதிர்ப்பையும் மீறி இலங்கை சீன கப்பல்களுக்கு அனுமதி கொடுத்தது.

    இந்த சூழ்நிலையில் இலங்கை கடற்பரப்பில் மற்றொரு அறிவியல் ஆராய்ச்சி கப்பலான சியாஸ் யாஸ் ஹாஸ்-3 என்ற கப்பலை இம்மாதம் நிறுத்துவதற்காக சீனா அனுமதி கோரியது. இம்மாதம் 5-ந்தேதி முதல் மே மாதம் வரை இலங்கை மற்றும் மாலத்தீவு கடற்பகுதியில் ஆய்வு நடத்தப்போவதாக சீனா கூறியது.

    ஆனால் இந்த கப்பல் இலங்கை வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது இலங்கை அதிபர் விக்கிரமசிங்கேவிடம் இந்திய பாதுகாப்பு கவலைகளுக்கு மதிப்பு அளிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

    இந்தியாவின் இந்த கோரிக்கையை ஏற்று சீன ஆராய்ச்சி கப்பல்கள் இலங்கை துறைமுகத்துக்குள் நுழைய ஒரு ஆண்டு தடை விதித்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

    எந்தவொரு ஆராய்ச்சி கப்பலையும் இலங்கை துறைமுகங்களில் நிறுத்தவோ அல்லது செயல்படவோ அனுமதிக்க மாட்டோம் என இலங்கை தெரிவித்துள்ளது.

    இலங்கை அரசின் இந்த முடிவு சீனாவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    • இலங்கைக்கான இந்திய தூதராக சந்தோஷ் ஜா கடந்த வாரம் பதவி ஏற்றார்.
    • இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர்.

    கொழும்பு:

    இலங்கைக்கான இந்திய தூதராக சந்தோஷ் ஜா கடந்த வாரம் பதவி ஏற்றார். இந்த நிலையில் நேற்று அவர் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனேவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர்.

    மேலும் எரிசக்தி துறையில் இந்தியாவின் அதிக முதலீடுகள், திரிகோணமலை எண்ணெய் சேமிப்பு தொட்டிகள், துறைமுகங்கள், ரெயில்வே மற்றும் பிற துறைகளில் முன்மொழியப்பட்ட கூட்டு திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகளை ஆய்வு செய்தனர்.

    • உடல்நலக் குறைவு காரணமாக விஜயகாந்த் உயிரிழந்தார்.
    • இவரது உடல் அஞ்சலிக்காக தே.மு.தி.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    தே.மு.தி.க. நிறுவன தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (டிசம்பர் 28) காலை உயிரிழந்தார். இவருக்கு திரை பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என பலதரப்பட்டோரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், விஜயகாந்த் மறைவுக்கு இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

     


    இது தொடர்பன முகநூல் பதிவில், "உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன்.

    விஜயகாந்த் மக்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த மனிதர். விஜயகாந்துடன் பல முறை ஏற்பட்ட சந்திப்பின் போது அவருடைய எண்ணங்களிலும் செயல்களின் ஊடாகவும் அவர் ஒரு போற்றப்படக் வேண்டிய தலைவர் என்பதை தான் அறிந்தேன்.

    எவருக்கும் அஞ்சாது மக்களுக்காக உடனுக்குடன் சேவையை செய்யும் அரசியல் தலைவர்.

    மேலும் இலங்கை மக்கள் மீது அதீத அன்பு கொண்ட இவர். இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த மக்களுக்காக பல உதவிகளை செய்துள்ளார்.

    பாமர மக்களுக்கு விருந்தோம்பல் செய்வதில் ஈடு இணையற்றவர்

    இவருடைய இழப்பு தமிழக மக்களுக்கும் ஓர் பேரிழப்பாகும்.

    நடிகர் விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்," என குறிப்பிட்டுள்ளார்.

    • நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள்.
    • போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின்போது போலீசார் கிட்டத்தட்ட 15,000 பேர் கைது.

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, 1000க்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்தார்.

    இன்று விடுவிக்கப்பட்ட 1,004 பேரில், நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கையர்களும் அடங்குவதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, ராணுவ ஆதரவுடன் போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின் போது போலீசார் கிட்டத்தட்ட 15,000 பேரை கைது செய்து பின்னர் மன்னிப்பு கிடைத்து சமீபத்தில் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொதுமக்கள் நடத்திய போராட்டங்களால் இலங்கையில் அதிபராக ரணில் விக்கிரமசிங்கே கடந்த ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
    • இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த கூட்டத்தில் தமிழ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    கொழும்பு:

    இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி அந்நாட்டு அரசியலையும் மாற்றி அமைத்தது. பொதுமக்கள் நடத்திய போராட்டங்களால் இலங்கையில் அதிபராக ரணில் விக்கிரமசிங்கே கடந்த ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.

    இதையடுத்து அவர் நாட்டில் நிலவி வந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீளுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் இலங்கையில் வசித்து வரும் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ் கட்சி தலைவர்களுடன் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கான நில உரிமைகள் வழங்குதல், நல்லிணக்கம், மீன்பிடி தொடர்பாக சட்டங்களை அமல்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    மேலும் இந்தியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும், அவர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்துவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    • அடுத்த மாதம், மற்றொரு சீன ஆய்வுக்கப்பல் இலங்கைக்கு வர திட்டமிட்டுள்ளது.
    • வருகிற ஜனவரி மாதம் முதல் ஓராண்டுக்கு இம்முடிவு அமலில் இருக்கும்.

    கொழும்பு:

    இந்தியாவின் எதிர்ப்பை மீறி, சீன உளவு கப்பல்கள் அவ்வப்போது இலங்கைக்கு வருகின்றன. அவை இலங்கை துறைமுகங்களில் நின்றுகொண்டு, ஆய்வுப்பணியில் ஈடுபடுகின்றன. அடுத்த மாதம், மற்றொரு சீன ஆய்வுக்கப்பல் இலங்கைக்கு வர திட்டமிட்டுள்ளது. அதற்காக இலங்கை அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், எந்த வெளிநாட்டு உளவு கப்பலையும் இலங்கை கடல் எல்லைக்குள் வர அனுமதிப்பது இல்லை என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. வருகிற ஜனவரி மாதம் முதல் ஓராண்டுக்கு இம்முடிவு அமலில் இருக்கும்.

    கடந்த 10 ஆண்டுகளில் இலங்கையில் தங்கள் உளவு கப்பல்களை நிறுத்திய அனைத்து வெளிநாடுகளுக்கும் இம்முடிவை தெரிவித்து விட்டதாக இலங்கை வெளியுறவு மந்திரி அலி சாப்ரி தெரிவித்தார்.

    • இலங்கை தலைநகர் கொழும்புவில் ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி தேசிய மாநாடு நடந்தது.
    • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலின் போது நாங்கள் மீண்டும் வலுவாக வருவோம்.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நெருக்கடிக்கு அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே தான் காரணம். அவர்கள் இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என போராட்டம் நடந்தது.

    இந்த போரட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து கோத்தபய ராஜபக்சேவும், மகிந்த ராஜபக்சேவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

    இதையடுத்து இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றார். பின்னர் இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவியுடன் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டது.

    இலங்கையில் மீண்டும் இயல்பு நிலை திரும்பியதால் வெளிநாட்டில் இருந்த கோத்தபய ராஜபக்சே சொந்த நாடு திரும்பினார்.

    ஆனாலும் சில காலம் அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார். இந்த சூழ்நிலையில் தற்போது மகிந்த ராஜபக்சே ஆளுங்கட்சி தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இலங்கை தலைநகர் கொழும்புவில் ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி தேசிய மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் 78 வயதான மகிந்த ராஜபக்சே கட்சியின் தலைவராக தேர்வு செய்யபப்பட்டார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    மாநாட்டில் மகிந்த ராஜபக்சே பேசியதாவது:-

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதாக நியாயமற்ற முறையில் நாங்கள் குற்றம் சாட்டப்பட்டு உள்ளோம். விடுதலை புலிகளுடனான போரில் ஈடுபட்ட போது தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் செல்வதை உறுதிபடுத்தினோம். நம்மை அவதூறு செய்து கேலி செய்பவர்கள் அதை தொடரட்டும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலின் போது நாங்கள் மீண்டும் வலுவாக வருவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • யாழ்பாண மாவட்டத்தில் டெல்ப்ட் தீவு, நயினாதீவு மற்றும் அனலத்தீவு ஆகிய இடங்களில் புதிதாக 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
    • மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்கள் இந்தியாவின் மானிய உதவியுடன் அமைக்கப்படுகின்றன.

    கொழும்பு:

    இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள யாழ்பாண மாவட்டத்தில் டெல்ப்ட் தீவு, நயினாதீவு மற்றும் அனலத்தீவு ஆகிய இடங்களில் புதிதாக 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்கள் இந்தியாவின் மானிய உதவியுடன் அமைக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் புதிய மின்உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

    நேற்று முன்தினம் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் இது குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக மந்திரிசபை செய்தி தொடர்பாளரும், ஊடகத்துறை மந்திரியுமான பந்துல குணவர்தனே தெரிவித்தார்.

    • மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தற்போது மின் தடையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    கொழும்பு:

    இலங்கை முழுவதும் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். மின் வினியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சார சப்ளையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

    நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. இதனால் மக்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார வினியோகத்தை சீர் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையில் மின்சார அமைப்பு தெரிவித்தது.

    பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கை, அதிலிருந்து மீண்டு வந்தது. இதற்கிடையே இலங்கையில் மின் வினியோக பாதையில் கோளாறு காரணமாக மின்தடை ஏற்படுகிறது.

    ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தற்போது மின் தடையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    • பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை தற்போது மீண்டு வருகிறது.
    • பெண்கள் தலைமையிலான சிறு, குறு, நிலையான நிதியை மேம்படுத்தவும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை தற்போது மீண்டு வருகிறது. அந்நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கியது. இதில் முதல் தவணை வழங்கப்பட்ட நிலையில் 2-வது தவணைக்காக இலங்கை காத்திருக்கிறது.

    இந்த நிலையில் இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்த உதவ அந்நாட்டுக்கு ரூ.1668 கோடி கடனுதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்தது.

    நாட்டின் வங்கி துறையில் ஸ்திரத்தன்மை, மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்தவும், பெண்கள் தலைமையிலான சிறு, குறு, நிலையான நிதியை மேம்படுத்தவும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    • சீன நிறுவனத்தின் இந்த பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை இலங்கையில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகும்.
    • ஹம்பன்தோடா துறைமுகம் 2017-ம் ஆண்டு முதல் சீன வர்த்தக துறைமுகங்களின் கூட்டு முயற்சியின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.

    சீனாவின் எரிசக்தி நிறுவனமான சினோபெக் நிறுவனத்திற்கு ரூ.37 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை ஹம்பன்தோடா துறைமுகத்தில் நிறுவ இலங்கை மந்திரி சபை அனுமதி அளித்துள்ளது. இதை இலங்கை மந்திரி காஞ்சனா விஜே சேகரா தெரிவித்தார்.

    சீன நிறுவனத்தின் இந்த பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை இலங்கையில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகும். இந்த சுத்திகரிப்பு நிலையத்துடன், அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகள் மற்றும் பயிற்சி மையமும் கூடுதலாக அமைக்கப்பட உள்ளது.

    ஹம்பன்தோடா துறைமுகம் இலங்கையின் 2-வது பெரிய துறைமுகம் ஆகும். இந்த துறைமுகம் 2010-ம் ஆண்டு திறக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு முதல் சீன வர்த்தக துறைமுகங்களின் கூட்டு முயற்சியின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.

    இந்த துறைமுக கட்டுமானத்துக்கு சீனாவின் எக்சிம் வங்கி கடன் அளித்துள்ளது. தற்போது இங்கு சீனா மிகப் பெரிய முதலீட்டை செய்து உள்ளது.

    ×