search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இலங்கை துறைமுகத்துக்குள் சீன ஆராய்ச்சி கப்பல்கள் நுழைய ஒரு ஆண்டுக்கு தடை
    X

    இலங்கை துறைமுகத்துக்குள் சீன ஆராய்ச்சி கப்பல்கள் நுழைய ஒரு ஆண்டுக்கு தடை

    • உளவு கப்பல்கள் மூலம் 750 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள இடங்களை துல்லியமாக கண்காணிக்க முடியும்.
    • எதிர்ப்பையும் மீறி இலங்கை சீன கப்பல்களுக்கு அனுமதி கொடுத்தது.

    கொழும்பு:

    சீன ராணுவத்தில் பல்வேறு பெயர்களில் உளவுக்கப்பல்கள் இயங்கி வருகின்றன. அந்த கப்பல்களை ஆய்வு கப்பல் என சீன அரசு கூறி வந்தாலும் அவை அபாயகரமான உளவு கப்பல்கள் என அமெரிக்க, ஐரோப்பிய பாதுகாப்பு துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கு சீனாவில் இருந்து ஷின்யான் 1,2,3 மற்றும் ஷியாங் யாங் ஹங் 1,3,6,16 உள்ளிட்ட உளவு மற்றும் போர் கப்பல்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு அதி நவீன வசதிகள் கொண்ட சீனாவின் 2 உளவு கப்பல்களுக்கு இலங்கை துறைமுகத்தில் நிறுத்த அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியது. இந்த உளவு கப்பல்கள் மூலம் 750 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள இடங்களை துல்லியமாக கண்காணிக்க முடியும்.

    இலங்கைக்கு மிக அருகில் இருக்கும் இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணுமின்நிலையம், கூடங்குளம் அணு மின் நிலையம் உள்ளிட்ட 6 கடற்படை தளங்களை நவீனகருவிகள் மூலம் கண்காணிக்க வாய்ப்பு இருந்ததால் இந்தியா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    சீன உளவு கப்பல்களை தங்கள் கடற்பகுதிக்குள் அனுமதிக்கக் கூடாது என இலங்கைக்கு இந்தியா வலியுறுத்தியது. ஆனால் இந்த எதிர்ப்பையும் மீறி இலங்கை சீன கப்பல்களுக்கு அனுமதி கொடுத்தது.

    இந்த சூழ்நிலையில் இலங்கை கடற்பரப்பில் மற்றொரு அறிவியல் ஆராய்ச்சி கப்பலான சியாஸ் யாஸ் ஹாஸ்-3 என்ற கப்பலை இம்மாதம் நிறுத்துவதற்காக சீனா அனுமதி கோரியது. இம்மாதம் 5-ந்தேதி முதல் மே மாதம் வரை இலங்கை மற்றும் மாலத்தீவு கடற்பகுதியில் ஆய்வு நடத்தப்போவதாக சீனா கூறியது.

    ஆனால் இந்த கப்பல் இலங்கை வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது இலங்கை அதிபர் விக்கிரமசிங்கேவிடம் இந்திய பாதுகாப்பு கவலைகளுக்கு மதிப்பு அளிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

    இந்தியாவின் இந்த கோரிக்கையை ஏற்று சீன ஆராய்ச்சி கப்பல்கள் இலங்கை துறைமுகத்துக்குள் நுழைய ஒரு ஆண்டு தடை விதித்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

    எந்தவொரு ஆராய்ச்சி கப்பலையும் இலங்கை துறைமுகங்களில் நிறுத்தவோ அல்லது செயல்படவோ அனுமதிக்க மாட்டோம் என இலங்கை தெரிவித்துள்ளது.

    இலங்கை அரசின் இந்த முடிவு சீனாவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    Next Story
    ×