என் மலர்tooltip icon

    தென் கொரியா

    • கியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட EV9 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் லெவல் 3 ADAS அம்சங்களை கொண்டுள்ளது.
    • புதிய கியா EV9 மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 541 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.

    கொரிய கார் உற்பத்தியாளரான கியா தனது இரண்டாவது பிரத்யேக எலெக்ட்ரிக் வாகனம், கியா EV9 மாடலை அறிமுகம் செய்தது. இது மூன்று அடுக்கு இருக்கைகள் கொண்ட ஃபுல் சைஸ் எஸ்யுவி மாடல் ஆகும். இந்த எலெக்ட்ரிக் வாகனமும் E-GMP பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் இது கியா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கும்.

    கியா EV9 மாடலில் யுனைடெட் டிசைன் மற்றும் கியாவின் பாரம்பரியம் மிக்க டைகர் நோஸ் கிரில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பாடி நிறத்தின் பின் டிஜிட்டல் லைட் பேட்டன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த எஸ்யுவி நீண்ட வீல்பேஸ், குறைந்த ஓவர்ஹேங்குகளை கொண்டுள்ளது. இவை காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகின்றன. காரில் கூர்மையான லைன்கள் மற்றும் ஃபெண்டர் ஃபிளேர்கள் வெளிப்புற ஹைலைட்களில் ஒன்றாக உள்ளன.

     

    உள்புறம் கட்டாயம் இருக்க வேண்டிய சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பத்து பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அம்சம் பெறும் முதல் கியா கார் என்ற பெருமையை கியா EV9 பெற்றுள்ளது. இத்துடன் டேஷ்போர்டு மினிமலிஸ்ட் டிசைன், கிடைமட்டமாக பொருத்தப்பட்ட டிஸ்ப்ளேவில் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன் உள்ளது. இதன் இரண்டாவது அடுக்கில் சீரான தரை மற்றும் சுழலும் வகையான இருக்கைகள் உள்ளன.

    இதனால் பின்புற இருக்கையில் அமர்வோர் ஒவ்வொருத்தர் முகத்தை பார்த்த நிலையில் அமர்ந்து கொள்ள முடியும். இதுதவிர 14 ஸ்பீக்கர் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் இலுமினேட் செய்யப்பட்ட லோகோ, ஆம்பியண்ட் லைட்டிங், ஸ்டீரிங் வீல் டேபிள், ரிலாக்சேஷன் இருக்கைகள், டிராயர் போன்று திறக்கக்கூடிய கன்சோல் உள்ளன. இத்துடன் லெவல் 3 ADAS தொழில்நுட்பம் கொண்ட முதல் கியா கார் EV9 ஆகும்.

     

    இதில் உள்ள 99.8 கிலோவாட் ஹவர் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 541 கிலோமீட்டர் வரை செல்லும். இத்துடன் 800 வோல்ட் சார்ஜர் மூலம் இந்த காரை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 239 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். இதன் ஆல் வீல் டிரைவ் லாங் ரேஞ்ச் மாடல் அதிகபட்சம் 283 கிலோவாட் மற்றும் 600 நியூட்டர் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த எஸ்யுவியில் மேம்பட்ட டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோ டெரைன் மோட் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் கியா EV9 முன்பதிவு கொரியாவில் துவங்கவுள்ளது. பின் 2023 இறுதியில் ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் சில ஆசிய சந்தைகளில் கியா EV9 அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் கியா EV9 அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
    • தீ விபத்தில் பல வீடுகள் சேதம் அடைந்தன. வீட்டுக்குள் இருந்த பொருட்களும் தீயில் கருகியது.

    சியோல்:

    தென்கொரியா நாட்டில் அடிக்கடி ஏற்படும் இயற்கை சீற்றங்களில் இருந்து தப்பிக்க பலர் மரத்தினாலான வீடுகளில் வசித்து வருகின்றனர். உடலுக்கும் இது ஆரோக்கியம் என்பதால் பெரும்பாலானோர் இந்த வீடுகளை கட்டுகின்றனர்.

    அந்த நாட்டின் தலைநகர் சியோலில் உள்ள சாண்டி நகரில் குடிசை பகுதி உள்ளது. இங்கு 660 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இன்று அதிகாலை இந்த குடிசை பகுதிகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்தது. இது பற்றி அறிந்ததும் 290-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். இந்த மீட்பு பணியில் 10 ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. அவர்கள் தீ விபத்தில் சிக்கி தவித்த 500 பேரை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்.

    நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல வீடுகள் சேதம் அடைந்தன. வீட்டுக்குள் இருந்த பொருட்களும் தீயில் கருகியது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டாக எல்லை தொடர்பாக மோதல் பிரச்சினை நீடித்து வருகிறது.
    • தென்கொரியா, அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது.

    சியோல்:

    கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை தொடர்பாக மோதல் பிரச்சினை நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், வடகொரியாவின் 5 ஆளில்லா டிரோன் விமானங்கள் இன்று தென்கொரிய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளன. இந்த டிரோன்களில் ஒன்று தென்கொரியாவின் தலைநகரான சியோலின் தெற்கு பகுதி எல்லைக்குள் மிகவும் உள்ளே வந்துள்ளது.

    வடகொரிய டிரோன்கள் நுழைந்ததையடுத்து தென்கொரிய விமானப்படை உஷார்படுத்தப்பட்டது. போர் விமானங்கள், உளவு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உடனடியாக விரைந்தன. வடகொரிய டிரோன்களை எச்சரிக்கும் வகையில் துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் டிரோன்கள் வீழ்த்தப்பட்டனவா? என்ற தகவல் வெளியாகவில்லை.

    • கடந்த சில நாட்களாக தென்கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • நேற்று ஒரே நாளில் அங்கு 84 ஆயிரத்துக்கு 571 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது.

    சியோல்:

    சீனாவை போலவே தென்கொரியாவும் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீள முடியாமல் தவித்து வருகிறது. அங்கு திடீர் திடீரென கொரோனா தொற்று எழுச்சி பெறுகிறது.

    அந்த வகையில் கடந்த சில நாட்களாக தென்கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் அங்கு 84 ஆயிரத்துக்கு 571 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 46 பேர் தொற்றுக்கு பலியாகினர்.

    • பீரங்கிகள் மூலம் குண்டு வீச்சு தாக்குதல் நடத்துவதாக தென்கொரியா புகார்.
    • அமெரிக்காவுடன் இணைந்து பதிலடி கொடுக்க தயாராக உள்ளதாகவும் தகவல்.

    சியோல்:

    அமெரிக்கா-தென் கொரியா ராணுவத்தினர் கூட்டு பயிற்சிகளை மேற்கொள்வதற்கு எதிர்ப்பை காட்டும் வகையில் வடகொரியா, தென் கொரியா எல்லைகளை குறி வைத்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் மேற்கு மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிகளில் இருந்து இன்று வடகொரியா ராணுவம், பீரங்கிகள் மூலம் 130 முறை குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. இது கடந்த 2018 ஆம் ஆண்டு இரு நாடுகள் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து வடகொரியாவுக்கு வாய்மொழி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஒப்பந்தத்தை கடைபிடிக்குமாறு வலியுறுத்தியதாகவும் தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. வட கொரிய ராணுவத்தின் நடவடிக்கைகளை தென் கொரிய மற்றும் அமெரிக்க ராணுவங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், வடகொரியா தாக்குதல் நடத்தினால் பதில் கொடுக்க தயார் நிலையில் உள்ளதாகவும் தென் கொரியா ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • வடகொரியாவின் ஏவுகனை சோதனைகளுக்கு சீனா உறுதுணையாக இருக்கிறது.
    • வட கொரியாவுக்கு அதன் நட்பு நாடான சீனா, அறிவுரை வழங்கி ஏவுகனை சோதனையை தடுக்க வேண்டும்.

    தென் கொரியாவின் வான் பகுதிக்குள் சீன, ரஷிய போர் விமானங்கள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின் பாம்பர் ஜெட்கள், ரஷியாவின் ஏவுகனை தாங்கிய ஜெட்கள் தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தன. உடனே தென் கொரியாவின் விமானங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பறந்தன.

    அந்த விமானங்கள் வருவதற்குள் சீனா, ரஷிய விமானங்கள் அங்கிருந்து வெளியேறின. வடகொரியாவின் ஏவுகனை சோதனைகளுக்கு சீனா உறுதுணையாக இருக்கிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

    மேலும் வட கொரியாவுக்கு அதன் நட்பு நாடான சீனா, அறிவுரை வழங்கி ஏவுகனை சோதனையை தடுக்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில் தென் கொரியா எல்லைக்குள் போர் விமானங்கள் நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கலப்பு சீனியர் பிரிவில் இந்திய இணை, கஜகஸ்தான் ஜோடியை வீழ்த்தியது
    • ஒட்டு மொத்தமாக இந்தியா 25 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

    தென் கொரியாவின் டேகு நகரில் நடைபெற்ற 15வது ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணிக்கு இரண்டு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு சீனியர் பிரிவில் ரிதம் சங்வான் மற்றும் விஜய்வீர் சித்து ஜோடி கஜகஸ்தானின் இரினா யூனுஸ்மெடோவா மற்றும் வலேரி ரகிம்ஜான் ஜோடியை 17-3 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. 


    அதே போல் ஜூனியர் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் மற்றும் சாம்ராட் ராணா இணை, உஸ்பெகிஸ்தானின் நிகினா சைட்குலோவா மற்றும் முகமது கமலோவ் ஜோடியை 17-3 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இதையடுத்து இந்த தொடரில் ஒட்டுமொத்தமாக இந்தியா 28 தங்கப் பதக்கங்களில் 25 ஐ வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இன்றைய வெற்றியின்மூலம் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
    • பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

    தென்கொரியாவின் டேகு நகரில் 15வது ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில், இந்தியாவின் ஜூனியர் பெண்கள் பிஸ்டல் அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. மனு பாகெர், ஏஷா சிங், ஷிகா நர்வால் ஆகியோர் கொண்ட இந்திய அணி, தென்கொரியாவின் கிம் மின்சியோ, கிம் ஜூகி, யாங்ஜின் ஆகியோர் கொண்ட அணியை 16-12 என வீழ்த்தியது. இதன்மூலம் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஒருநாள் போட்டி மீதமுள்ளது.

    இதேபோல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் ரிதம் சங்வான், பாலக் மற்றும் யுவிகா தோமர் ஆகியோர் கொண்ட இந்திய அணி, தென்கொரியாவின் கிம் ஜங்மி, கிம் போமி மற்றும் யூ ஹின்யாங் ஆகியோர் கொண்ட அணியிடம் 12 -16 என தோல்வியடைந்தது. 

    • தென்கொரியாவுடனான கூட்டுப்போர் பயிற்சியை நிறுத்தவேண்டும் என அமெரிக்காவை வடகொரியா எச்சரித்தது.
    • வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

    சியோல்:

    வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கொரிய எல்லையில் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது.

    ஆனாலும், அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் மிகப்பெரிய கூட்டுப்பயிற்சியை நேற்று முன்தினம் தொடங்கின. இருநாட்டு விமானப்படைகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான விமானங்கள் 24 மணி நேரமும் பயிற்சியில் ஈடுபட்டன.

    இதற்கிடையே, தென்கொரியாவுடனான கூட்டுப்போர் பயிற்சியை நிறுத்தாவிட்டால் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என வடகொரியா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில், வடகொரியா இன்று மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை கடல் பகுதியை நோக்கி சீறிப் பாய்ந்ததாக தெரிவித்தது.

    • ஹாலோவீன் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி இரங்கல் தெரிவித்தார்.
    • ஹாலோவீன் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரில் 19 வெளிநாட்டவர்கள் அடங்குவர்.

    சியோல்:

    தென்கொரியாவின் இடோவான் மாவட்டத்தில் ஹாலோவீன் எனப்படும் பேய் திருவிழா ஆண்டுதோறும் அக்டோபர் மாத இறுதியில் நடைபெறும்.

    இந்த ஆண்டு திருவிழா நடந்த நிலையில் பேய் வேடமணிந்த மக்கள் இதில் பங்கேற்றனர். ஒரு குறுகிய தெருவில் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் மூச்சுத் திணறி பலர் உயிரிழந்தனர். இதுவரை பலி எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளது. இதில் 19 வெளிநாட்டவர்களும் அடங்குவர். மேலும், 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தததாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது.

    கொரோனா பாதிப்பால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹாலோவீன் திருவிழா நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஹாலோவீன் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஹாலோவீன் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அந்நாட்டு அதிபர் யுன் சுக் இயோல் நாடு முழுவதும் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

    • கொரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டது.
    • குறுகிய தெருவில் சிக்கித் தவித்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் மூச்சு திணறி உயிரிழந்தனர்.

    இடோவான்:

    தென்கொரியாவின் இடோவான் மாவட்டத்தில் பாரம்பரியமிக்க ஹாலோவீன் எனப்படும் பேய் திருவிழா ஆண்டு தோறும் அக்டோபர் மாத கடைசியில் நடைபெறும். இந்த திருவிழாவில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் இடோவான் மாவட்டத்திற்கு வருகை தருவார்கள். கொரோ தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடைபெற்ற நிலையில் பேய் வேடமணிந்த தென் கொரிய மக்கள் இதில் பங்கேற்றனர். ஒரு குறுகிய தெருவில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. இதையடுத்து முன்னோக்கி தள்ளப்பட்ட  பெரிய கும்பலால் திடீர் நெரிசல் ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் நசுக்கப்பட்டனர்.

    அப்போது மூச்சுத் திணறி உயிரிழந்தோர் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். 


    காயமடைந்தவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என சியோல் நகர மீட்புப்படைத் தலைவர் தெரிவித்துள்ளார். இறந்தவர்களில் 74 உடல்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும், தெருக்களில் வைக்கப்பட்டிருந்த  46 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படும் வகையில் அருகிலுள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

    திருவிழாவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் உயிரிழந்தது குறித்த அறிந்த தென் கொரிய அதிபர் யூன் சூக் யோல் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். உடனடியாக காயமடைந்தவர்களை காப்பாற்ற மருத்துவ குழுக்களுக்கு அவர் உத்தரவிட்டதாக அதிபர் மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளார்.

    • இவர் 2012-ம் ஆண்டு முதல் சாம்சங் நிறுவனத்தின் துணை தலைவராக இருந்து வருகிறார்.
    • சாம்சங் மின்சாதன பொருட்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது.

    சியோல் :

    தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல பன்னாட்டு நிறுவனமான சாம்சங், செல்போன், டிவி, ஏசி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது.

    இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் செயல் தலைவராக லீ ஜே யோங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சாம்சங் நிறுவனத்தை நிறுவிய லீ பியுங் பங் குடும்பத்தை சேர்ந்த 3-ம் தலைமுறை நபராவார். 54 வயதான லீ ஜே யோங் கடந்த 2012-ம் ஆண்டு முதல் சாம்சங் நிறுவனத்தின் துணை தலைவராக இருந்து வருகிறார். ஜே ஒய் லீ என்றும் அழைக்கப்படும் லீ ஜே யோங் ஊழல் வழக்கில் சிக்கி சிறை தண்டனை அனுபவித்த நிலையில் தென்கொரியா அரசு கடந்த ஆகஸ்டு மாதம் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை வழக்கில் இருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

    ×