என் மலர்
தென் கொரியா
- ஆலை நீரின் பாதுகாப்பை சர்வதேச அணுசக்தி அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி உறுதி செய்துள்ளார்.
- சீனாவின் சுங்கத்துறை 10 ஜப்பானிய மாகாணங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது.
ஜப்பானில் சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் கடுமையாக சேதமடைந்த புகுஷிமா அணுமின் நிலையம் மூடப்பட்டது. அதிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை கடலில் திறந்துவிடும் ஜப்பானின் திட்டம் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் என்று நம்புவதாக தென் கொரியா கூறியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய நாடுகளின் அணுசக்தி அமைப்பு (IAEA), பெரும் சர்ச்சைக்குரிய இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்ததில் போதுமான அளவு பாதுகாப்பு இருப்பதாக கூறியிருந்தது.
இந்நிலையில், தென் கொரியா, மே மாத இறுதியில் ஆலையில் தானாக செய்த ஆய்வின் அடிப்படையிலும், ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அளித்த மதிப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையிலும் புகுஷிமா அணுமின் ஆலையிலிருந்து பசிபிக் பெருங்கடலில் சுமார் 10 லட்சம் டன்களுக்கு மேல் சுத்திகரிக்கப்பட்ட நீரை வெளியிடுவதில் எந்த ஆபத்தும் இல்லை என்று தென் கொரியா அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
"இந்தத் திட்டம் ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு உட்பட அனைத்து சர்வதேச தரத்தையும் பூர்த்தி செய்கிறது" என்று அரசாங்க கொள்கை ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் அமைச்சர் பேங் மூன்-கியூ சென்ற வாரம் ஒரு மாநாட்டில் தெரிவித்திருந்தார்.
வெளியிடப்படும் நீரின் பாதுகாப்பை சர்வதேச அணுசக்தி அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, "இது குறித்த அச்சங்களை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். ஆனால், எங்கள் முடிவுகள் சரியான அடிப்படையிலேயே அமைந்துள்ளது. இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்த கொள்கையை நாங்கள் கவனித்து வருகிறோம். தற்போதுள்ள மிகக் கடுமையான தரநிலைகளோடு நாங்கள் இதை மதிப்பீடு செய்து வருகிறோம்," என்றார்.
இந்த திட்டத்தற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் சுங்கத்துறை 10 ஜப்பானிய மாகாணங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி, கதிரியக்கப் பொருட்களுக்கான சோதனையை சீனா அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.
கடலில் இந்த நீரை வெளியேற்ற ஜப்பானுக்கு உள்ள சட்டப்பூர்வமான அதிகாரம், அதன் சுத்திகரிப்பு உபகரணங்களின் நம்பகத்தன்மை மற்றும் அதன் கண்காணிப்பு திட்டங்களின் முழுமை ஆகியவற்றில் ஜப்பானிய தரப்பில் சிக்கல்கள் இருப்பதாக சீனா கருதுகிறது.
சர்வதேச அணுசக்தி அமைப்பு தயாரித்த அறிக்கையில், அனைத்து நிபுணர்களின் கருத்துக்களும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை எனவும் சீனா குற்றஞ்சாட்டி வருகிறது.
- வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் திட்டம் தோல்வியடைந்தது
- கடலில் கிடந்த பாகங்களை சேகரித்து தென்கொரியா சோதனை
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை செய்து வருகிறது. அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த போதிலும், அதைப்பற்றி கண்டு கொள்வதில்லை.
இறுதியாக கடந்த மே மாதம் செயற்கைக்கோள் ஒன்றை ஏவியது. இந்த செயற்கைக்கோள் அமெரிக்கா, தென்கொரியாவின் ராணுவப் பணிகளை உளவு பார்க்க உதவிகரமாக இருக்கும். இந்த செயற்கைக்கோளை நிலைநிறுத்தினால் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என தென்கொரியா கருதியது.
ஆனால், ராக்கெட் மூலம் ஏவப்பட்ட செயற்கைக்கோள், வடகொரிய தீபகற்ப கடலில் விழுந்து நொறுங்கியது. இதை மிகப்பெரிய தோல்வியாக வடகொரியா கருதுகிறது. இருந்தாலும் தவறுகளை கண்டறிந்து, சரிசெய்யப்பட்டு மீண்டும் செயற்கைக்கோளை செலுத்த முயற்சி மேற்கொள்வோம் எனத் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே செயற்கைக்கோளின் உடைந்த பாகங்களை தேடும் பணியில் தென்கொரியா ஈடுபட்டது. கப்பற்படை, விமானப்படை, நீரில் மூழ்கி தேடும் வல்லுனர்கள் ஆகியோரை கொண்டு 36 நாட்கள் தேடுதல் வேட்டை நடத்தி செயற்கைக்கொளில் துண்டுகளை சேகரித்தது. அவற்றை ஆராய்ந்த பார்த்தபோது ராணுவ பணிகளை உளவு பார்க்கும் திறனில்லை என தெரியவந்துள்ள என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.
எண்ணற்ற மற்றும் முக்கிய பகுதிகளை நாங்கள் மீட்டெடுத்துள்ளோம். தென்கொரியா மற்றும் அமெரிக்க வல்லுனர்கள் கொண்டு ஆய்வு செய்தபோது வடகொரியாவின் செயற்கைக்கோளுக்கு ராணுவ பணிகளை உளவு பார்க்கம் திறனில்லை என்பது தெரியவந்தது என தென்கொரியா தெரிவித்துள்ளது.
தென்கொரியாவின் தகவலுக்கு வடகொரிய இன்னும் பதில் அளிக்கவில்லை.
- இறுதிப் போட்டியில் இந்தியா ஈரானை வீழ்த்தியது.
- இதனால் இந்திய அணி 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
பூசன்:
தென் கொரியாவின் பூசன் நகரில் ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023 தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.
சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி நேற்று அரங்கேறியது. இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஈரான் மற்றும் முன்னாள் சாம்பியன் ஆன இந்திய அணிகள் மோதின.
பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி 42-32 என்ற புள்ளிக்கணக்கில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது.
முதல் பாதியில் இந்திய அணி 23-11 என்று முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியிலும் முன்னிலையை தக்கவைத்துக் கொண்டது. இந்திய அணியின் கேப்டன் அணியின் கேப்டன் பவன் ஷெராவத் அதிரடியாக விளையாடி புள்ளிகளை சேகரித்தார். அவரே இந்த ஆட்டத்தின் நாயகனாக ஜொலித்தார்.
இந்தத் தொடரில் இந்திய அணி ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இந்திய அணி ஆசிய கபடி சாம்பியன்ஷிப் கோப்பையை 8-வது முறையாக வென்று வரலாறு படைத்துள்ளது.
- ஒரு நபர் பிறந்தவுடனேயே ஒரு வயதுடையவராக கணக்கெடுக்கப்பட்டு ஜனவரி 1-ம் தேதி ஒரு வருடத்தைப் பெறுகிறார்
- எண்ணும் வயது முறையில் ஒரு நபரை பிறக்கும் போது பூஜ்ஜிய வயதாக கருதி பிறகு ஜனவரி 1 அன்று ஒரு வருடத்தைக் கூட்டுகிறது
தென் கொரியாவில் பிறக்கும் குழந்தைகளின் வயதை கணக்கெடுப்பதில் நீண்ட காலமாக இரண்டு முறைகள் பின்பற்றப்பட்டு வந்தன. தற்போது இவை இரண்டையும் தென்கொரிய அரசு நீக்கியுள்ளது. மற்ற நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறையை கொண்டு வருகிறது.
இதனால், தென் கொரியர்கள் வயதில் ஒன்று குறையப்போகிறது.
கொரியாவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட வயது கணக்கீட்டு முறைகளில் ஒன்று பல நூற்றாண்டுகள் பழமையான "கொரிய வயது" முறையாகும். இதன்படி, ஒரு நபர் பிறந்தவுடனேயே ஒரு வயதுடையவராக கணக்கெடுக்கப்பட்டு ஜனவரி 1-ம் தேதி ஒரு வருடத்தைப் பெறுகிறார். இந்த முறையில், டிசம்பர் 31-ம் தேதி பிறந்த ஒரு குழந்தைக்கு மறுநாள் 2 வயது ஆகும்.
நாட்டில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் மற்றொரு தனி "எண்ணும் வயது" முறையில், ஒரு நபரை பிறக்கும் போது பூஜ்ஜிய வயதாக கருதி, பிறகு ஜனவரி 1 அன்று, ஒரு வருடத்தைக் கூட்டுகிறது.
பொதுவாக, 28 ஜூன் 2023 நிலவரப்படி 29 ஜூன் 2003-ல் பிறந்தவர் சர்வதேச அமைப்பின் கீழ் 19 வயதுடையவராக கருதப்படுவார்.
ஆனால், எண்ணும் வயது முறையின் கீழ் 20 வயதுடையவராகவும் மற்றும் கொரிய வயது முறையின் கீழ் 21 வயதுடையவராகவும் கருதப்படுவார்.
கடந்த டிசம்பரில், இரண்டு பாரம்பரிய எண்ணும் முறைகளையும் ரத்து செய்ய ஆதரவாக அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இது ஒரு புறமிருந்தாலும், "எண்ணும் வயது" முறையின் அடிப்படையில் ஒரு நபரின் வயதைக் கணக்கிடும் பல சட்டங்கள் அங்கு அப்படியே இருக்கும். எடுத்துக்காட்டாக, தென் கொரியர்கள், சிகரெட் மற்றும் மதுபானங்களை 19 வயதாக கணக்கெடுக்கப்படும் வருடத்திலிருந்து வாங்கலாம்.
உள்ளூர் நிறுவனமான ஹான்கூக் ரிசர்ச் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, 4 தென் கொரியர்களில் 3 பேர் தரநிலைப்படுத்தலுக்கு ஆதரவாக இருந்தனர்.
தற்போது தென் கொரியாவின் வயது கணக்கெடுக்கப்படும் முறையில் உலக நடைமுறையை பின்பற்ற தொடங்கி விட்டதால், வெளிநாடுகளுக்கு செல்லும்போது கொரிய வயதை விளக்க வேண்டியதில்லை என்பதால், இதனை தென் கொரியர்கள் ஆதரிக்கின்றனர்.
காப்பீட்டு தொகைகள் மற்றும் அரசாங்க உதவி திட்டங்களுக்கான தகுதியை நிர்ணயம் செய்தல் போன்ற விஷயங்களில் பல தேவையற்ற சர்ச்சைகள் எழுந்ததையடுத்து தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் இதற்கான் முயற்சிகளை தீவிரமாக கையிலெடுத்தார்.
பாரம்பரிய வயது கணக்கிடும் முறைகள், மற்ற கிழக்கு ஆசிய நாடுகளாலும் ஒரு காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டன. ஆனால், காலப்போக்கில் பெரும்பாலானவை அதை கைவிட்டன.
ஜப்பான் 1950-ல் சர்வதேச நடைமுறையை ஏற்றுக்கொண்டது என்பதும் வட கொரியா 1980-ல் சர்வதேச நடைமுறையை பின்பற்ற தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- கேங்வான் மாகாணத்தில் உள்ள ஹாங்சியோன் மாகாணத்தில் விபத்து நடந்துள்ளது.
- பள்ளி பேருந்து விபத்தில் இரண்டு மாணவர்கள் உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தென் கொரியாவில் இன்று சியோலின் கிழக்கே உள்ள நெடுஞ்சாலையில் மூன்று பள்ளி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவர்கள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பள்ளி பேருந்துகளில் 75 நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலர் சென்றுக் கொண்டிருந்தபோது ஹாங்சியோன் மாகாணத்தில் விபத்து நடந்ததாக கங்வான் மாநில தீயணைப்புத் தலைமையகத்தின் அதிகாரி தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், விபத்தில் சிக்கிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை காயங்களுடன் மீட்டனர்.
இந்த சம்பவத்தில் பலத்த காயங்களுடன் இரண்டு மாணவர்கள் உட்பட 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- கப்பல் மூலம் வட கொரிய அணு ஆயுத அச்சுறுத்தல்களை சமாளிக்கும் கூட்டு திறனை மேம்படுத்தும்.
- நீர்மூழ்கிக் கப்பல், சுமார் 150 டோமாஹாக் ஏவுகணைகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.
உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.
அவ்வகையில், வடகொரியா நேற்று தனது கிழக்கு கடற்கரையில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை கடலில் செலுத்தி சோதனை நடத்தியிருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா- தென் கொரியாவுக்கு நேரடி எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வட கொரியா ஏவுகணைச் சோதனை நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு, தென் கொரியாவுக்கு சுமார் 150 டோமாஹாக் ஏவுகணைகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பியுள்ளது.
யுஎஸ்எஸ் மிச்சிகன் எனப்படும் இந்த போர்கப்பல் உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றாகும். இது சுமார் 2,500 கிலோமீட்டர் வரம்பைக் கொண்டு ஏவுகனை ஏவலாம் என்று கூறப்படுகிறது.
இந்த போர்க்கப்பல் அனுப்பியதன் மூலம், அமெரிக்கா மற்றும் தென் கொரிய கடற்படைகள் தங்களது சிறப்பு செயல்பட்டுத் திறனை மேம்படுத்தவும், வட கொரிய அணு ஆயுத அச்சுறுத்தல்களை சமாளிக்கும் கூட்டு திறனை மேம்படுத்துவதற்காகவும் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தென்கிழக்கு துறைமுக நகரமான பூசானை வந்தடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த கப்பல் தென்கொரிய கடற்பரப்பில் எவ்வளவு காலம் இருக்கும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.
- 73வது தளத்தை அடைந்தபோது அவரை கட்டிடத்திற்குள் வரச் செய்தனர்.
- கைது செய்யப்பட்ட வாலிபரின் பெயர் ஜார்ஜ் கிங் தாம்சன் என தகவல் வெளியாகி உள்ளது.
தென் கொரியாவின் சியோல் நகரில் உள்ளது லோட்டே வேர்ல்ட் டவர். 123 தளங்கள் கொண்ட இந்த வானுயர கட்டிடம் உலகின் 5வது மிக உயரமான கட்டிடம் ஆகும். இந்த கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர் வழியாக இன்று திடீரென ஒரு வாலிபர் விறுவிறுவென ஏறத் தொடங்கினார். கயிறு உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி அவர் ஏறியதைப் பார்த்த சிலர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த பகுதியில் கூட்டம் கூட ஆரம்பித்தது. போலீசாரும் தீயணைப்பு படையினரும் வந்து சேர்ந்தனர். அவரை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர்.
அந்த வாலிபர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கட்டிடத்தின் மீது ஏறிய நிலையில், 73வது தளத்தை அடைந்தபோது, அவரை கட்டிடத்திற்குள் வரச் செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையில் அந்த நபர் பிரிட்டனைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக விரிவான தகவல் எதுவும் காவல்துறை தரப்பில் வெளியிடப்படவில்லை.
கைது செய்யப்பட்ட வாலிபரின் பெயர் ஜார்ஜ் கிங் தாம்சன் என ஒரு நாளிதழில் தகவல் வெளியாகி உள்ளது. 2019-இல் லண்டனில் உள்ள ஷார்ட் என்ற கட்டிடத்தில் ஏறியதற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 2018 ஆம் ஆண்டில், லோட்டே வேர்ல்ட் டவரில் ஏறிய பிரான்ஸ் ஸ்பைடர்மேன் என அழைக்கப்படும் அலைன் ராபர்ட், பாதி தூரம் ஏறிய நிலையில், போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- விமானத்தின் கதவை திறந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.
- வாலிபருக்கு தண்டனை விதிக்கப்படுவது குறித்து தென் கொரிய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது.
தென் கொரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜெஜூ தீவில் இருந்து டேகு பகுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை விமானம் ஒன்று புறப்பட்டது. விளையாட்டு வீரர்கள் உள்பட சுமார் 194 பேர் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, விமானத்தில் இருந்த பயணி ஒருவர் திடீரென விமானத்தின் அவசர கதவை திறந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதனால், விமானத்தில் இருந்த பயணகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. எனவே விமானம் தரை இறங்கியவுடன் அவர்கள் அனைவரும் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே விமானத்தின் கதவை திறந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.
இதில் அந்த வாலிபர் தனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் உடனடியாக இறங்க வேண்டும் என்பதற்காக கதவை திறந்ததாக கூறினார்.
இந்நிலையில், விமான பாதுகாப்பு சட்டத்தை மீறியதற்காக வாலிபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்த நாட்டின் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா 2 நாள் பயணமாக தென்கொரியா சென்றுள்ளார்.
- கடந்த 12 ஆண்டுகளில் ஜப்பான் பிரதமர் ஒருவர் தென்கொரியாவுக்கு மேற்கொள்ளும் பயணம் இதுவாகும்.
சியோல்:
வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் சமீப காலமாக கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் ஜப்பான் கடற்பகுதியிலும் அணு ஆயுத சோதனை உள்ளிட்டவற்றை நடத்தி வடகொரியா பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து வடகொரியாவை சமாளிப்பதற்காக தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியை நடத்தின.
இந்த நிலையில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா 2 நாள் பயணமாக தென்கொரியா சென்றுள்ளார். அங்கு அதிபர் யூன் சுக் இயோலை சந்தித்து இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். கடந்த 12 ஆண்டுகளில் ஜப்பான் பிரதமர் ஒருவர் தென்கொரியாவுக்கு மேற்கொள்ளும் பயணம் இதுவாகும்.
இந்த சந்திப்பின்போது இரு தரப்பு வர்த்தகம், வடகொரியாவின் அணுசக்தி திட்டம் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கொரிய தீபகற்பத்தில் கடந்த 1910 முதல் 1945-ம் ஆண்டு வரை நடந்த ஜப்பானிய காலனிய ஆதிக்கத்துக்கு பிரதமர் புமியோ கிஷிடா மன்னிப்பு கேட்பாரா? என்ற எதிர்பார்ப்பையும் இது ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக பிரதமர் புமியோ கிஷிடாவும், அவரது மனைவி யூகோ கிஷிடாவும் போரின்போது உயிரிழந்த தென்கொரிய ராணுவ வீரர்களுக்கு தங்களது நாட்டின் வழக்கப்படி தூபம் காட்டி, மவுன அஞ்சலி செலுத்தினர்.
- ஸ்டாட்ச் பிரிவில் 83 கிலோ எடை, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 111 கிலோ எடை என ஒட்டுமொத்தமாக 194 கிலோ எடையை தூக்கினார்.
- சீனாவைச் சேர்ந்த சென் குவாங் லிங்(90 மற்றும் 114 கிலோ எடை) முதல் இடத்தை பிடித்தார்.
தென் கொரியா நாட்டில் ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனை பிந்தியாராணி தேவி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இதில் ஸ்டாட்ச் பிரிவில் 83 கிலோ எடை, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 111 கிலோ எடை என ஒட்டுமொத்தமாக 194 கிலோ எடையை தூக்கி பிந்தியாராணி தேவி அசத்தினார்.
மேலும் இந்த போட்டியில் சீனாவைச் சேர்ந்த சென் குவாங் லிங்(90 மற்றும் 114 கிலோ எடை) முதல் இடத்தையும், வியட்நாமைச் சேர்ந்த க்யூநுஹு (88 மற்றும் 104 கிலோ எடை) மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
- கூட்டுப் பயிற்சியில் மூன்று நாடுகளின் போர் கப்பல்கள் பங்கேற்று இருக்கின்றன.
- கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் இலக்கை கண்டறிந்து கண்காணிப்பதற்கான பயிற்சி நடந்தது.
சியோல்:
வடகொரியா-தென் கொரியா இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.
இதில் மிரட்டல் விடுக்கும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் தென்கொரியா-அமெரிக்கா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்துகிறது. இதனால் கொரியா தீப கற்பத்தில் பதற்றம் நீடிக்கிறது.
இந்நிலையில் சர்வதேச கிழக்கு கடல் பகுதியில் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடு கள் இணைந்து முத்தரப்பு கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளது.
வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களை தடுக்கவும், அதற்கு பதிலடி கொடுக்கவும் கூட்டுப் போர் பயிற்சி நடத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுப் பயிற்சியில் மூன்று நாடுகளின் போர் கப்பல்கள் பங்கேற்று இருக்கின்றன. இதில் ஏவுகணை பாதுகாப்பு ஒத்திகையை நடத்தி வருகின்றன. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவு கணையின் இலக்கை கண்டறிந்து கண்காணிப்பதற்கான பயிற்சி நடந்தது.
இது தொடர்பாக தென் கொரிய கடற்படை கூறும்போது, வடகொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு எதிராக தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த கூட்டு ராணுவ பயிற்சி ஒரு வாய்ப்பாகும்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு பதிலடி கொடுப்பதை எங்கள் கடற்படையின் திறன்கள் உறுதிப்படுத்துகிறது. இந்த முத்தரப்பு ஒத்துழைப்பானது எங்களின் மதிப்புகளை பிரதிபலிப்பதுடன் மண்டல நிலைத்தன்மைக்கு சவாலாக இருப்பவர்களுக்கு எதிரான தீர்மானத்துடன் செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
- தென்கொரியாவின் கங்வான் மாகாணம் கங்னியுங் நகரில் உள்ள காட்டுப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது.
- தீ அருகில் உள்ள கிராமங்களுக்கு பரவாமல் இருக்க குழிகளை தோண்டி தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சியோல்:
தென்கொரியாவின் கங்வான் மாகாணம் கங்னியுங் நகரில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இந்த தீ சிறிது நேரத்தில் மளமளவென காட்டின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதனையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் 300-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்தன. 6 ஹெலிகாப்டர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டன. எனினும் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தீ அருகில் உள்ள கிராமங்களுக்கு பரவாமல் இருக்க குழிகளை தோண்டி தடுப்பு நடவடிக்கை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மீட்பு படையினர் அங்கிருந்து சுமார் 300 பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். இந்த தீ விபத்தில் 44 வீடுகள் எரிந்து சாம்பலாகின.






