என் மலர்
பாகிஸ்தான்
- டோஷகானா வழக்கில் அவருக்கு தேர்தலில் நிற்க தடை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்
- உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் முன்பாக மேல்முறையீட்டு விசாரணை நடைபெற்றது
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (70). இவர் 2018-ல் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.
பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு பிறகு கடந்த 2022 ஏப்ரலில் பதவி இழந்த இவர் மீது, பதவியில் இருந்த போது அவருக்கு பரிசாக வந்த சுமார் ரூ.5 கோடியே 25 லட்சம் ($635000) மதிப்பிலான பரிசுப் பொருட்களை டோஷகானா எனப்படும் அரசாங்க கருவூலத்திற்கு கணக்கில் காட்டாமல் விற்று விட்டதாக 2022-ம் ஆண்டு அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
டோஷகானா வழக்கு என வழங்கப்படும் இந்த வழக்கில் அவரை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்து, அவர் மீது விசாரணை நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கும் தாக்கல் செய்தது.
விசாரணை நீதிமன்றம், நீண்ட விசாரணைக்கு பிறகு இம்மாத தொடக்கத்தில், இம்ரான் கான் குற்றவாளி என உறுதி செய்து தீர்ப்பளித்தது. மேலும் இம்ரான் கான் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு தேர்தலில் போட்டியிட தடையும் விதித்து, அவருக்கு அபராதத்துடன் கூடிய மூன்று ஆண்டுகால சிறை தண்டனையும் அளித்தது.
இதனையடுத்து அவர் அட்டாக் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பிற்கும், தண்டனைக்கும் எதிராக இம்ரான் கான், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதி ஆமிர் ஃபாருக் மற்றும் தாரிக் மெகமூத் ஜகான்கிரி ஆகியோர் தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணை நடைபெற்று வந்தது.
இன்று இந்த டிவிஷன் பெஞ்ச், இம்ரான் கானுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும், தண்டனையையும் நிறுத்தி வைத்துள்ளது. இத்தகவலை அவரது வழக்கறிஞர் நயீம் பஞ்சுதா சமூக வலைதளமான எக்ஸில் (டுவிட்டர்) தெரிவித்தார்.
இம்ரான் கான் மீது மேலும் பல வழக்குகள் உள்ளதாலும், அரசியல் காரணங்களுக்காகவும் அவர் உடனடியாக சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவாரா என்பது தெரியவில்லை. அதே போல் வரவிருக்கும் தேர்தல்களில் அவர் போட்டியிட முடியுமா இல்லை அவரது தகுதி நீக்கம் தொடருமா என்பதும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அவரது ஆதரவாளர்களும், குடும்பத்தினரும் இன்றைய தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.
- இம்ரான் கானுக்கு 3-வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது
- தனக்கு அளிக்கப்பட்ட வசதிகள் குறித்து இம்ரான் திருப்தியடைந்தார்
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (70). இவர் 2018ல் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.
அவருக்கு பரிசாக வந்த சுமார் ரூ.5.25 கோடி ($635000) மதிப்பிலான பரிசுப்பொருட்களை டோஷகானா எனப்படும் அரசாங்க அலுவலகத்திற்கு கணக்கில் காட்ட வேண்டிய விதிமுறையை மீறி, விற்று விட்டதாக 2022ல் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் இவரை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்து, அவர் மீது கீழமை நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்தது.
இதனை விசாரித்த இஸ்லாமாபாத் நீதிமன்றம், ஆகஸ்ட் 5-ம் தேதியன்று, இம்ரான் கானை குற்றவாளி என தீர்ப்பளித்தது. மேலும் அவருக்கு அபராதத்துடன் கூடிய 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கியது. இதன் காரணமாக தீர்ப்பு வெளியான தினமே அவர் பாகிஸ்தானின் பஞ்சாப் பிராந்தியத்தில் உள்ள அட்டாக் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் பாகிஸ்தானுக்கு அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்பட்டு வந்ததாக அவரது குடும்பத்தினரும், அவரது கட்சியை சேர்ந்த ஆதரவாளர்களும் தொடர்ந்து கூறி வந்தனர். இந்நிலையில், சிறைத்துறை தலைமை ஆய்வாளர் மியான் ஃபரூக் நசீர், நேற்று அங்கு ஆய்வு செய்து இம்ரான் கானுக்கு அளிக்கப்பட்டிருக்கும் வசதிகள் குறித்து அறிக்கை வெளியிட்டார்.
அதில், "இம்ரான் கானின் தனிமைக்கு இடையூறு இல்லாத வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவருக்கு படுக்கை, தலையணை, நாற்காலி, ஏர் கூலர், ஃபேன், குரான் உட்பட பல புத்தகங்கள், செய்தித்தாள், ஃப்ளாஸ்க், பேரீச்சம்பழம், தேன், நறுமண பாட்டில்கள், மற்றும் சோப் உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன."
"மருத்துவர்களால் பரிசோதிக்கப்படும் தரமான உணவு அவருக்கு வழங்கப்படுகிறது. அவரது உடல் நலனை காக்கவும், அவசர உதவிக்காகவும் 5 மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்கின்றனர். தவிர பூஜையறை, மேற்கத்திய பாணியிலான கழிவறை, கை கழுவும் பேசின் ஆகியவையும் அவர் கேட்டதற்கு இணங்க கொடுக்கப்பட்டுள்ளது. தனக்கு அளிக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து இம்ரான் கானும் திருப்தி தெரிவித்தார்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இம்ரான் கான் சிறையிலேயே விஷம் வைத்து கொல்லப்படலாம் என குற்றம் சாட்டி அவர் மனைவி புஷ்ரா பீபி அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தான் ஊடகங்கள் சந்திரயான் 3 முயற்சிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றார் ஃபவத்
- நிலவின் தென் துருவத்தை எந்த நாடும் இதுவரை தொட்டதில்லை
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சந்திரயான்-3 எனும் பெயரில் ஒரு விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து கடந்த ஜூலை மாதம் வானில் வெற்றிகரமாக செலுத்தியது.
நேற்று மாலை 06:04 மணியளவில் சந்திரயான்-3 திட்டமிட்டபடி நிலவின் தென் துருவத்தை வெற்றிகரமாக தொட்டது. அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே நிலவிற்கு வெற்றிகரமாக விண்கலனை அனுப்பியிருந்தாலும், நிலவின் தென் துருவத்தை எந்த நாடும் இதுவரை தொட்டதில்லை.
எனவே விண்வெளி சரித்திரத்திலேயே மிகவும் அரிதான இந்த சாதனையை செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளை உலகமே பாராட்டி வருகிறது. உலகில் பலரும் இந்தியாவை பாராட்டி வருகின்றனர். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் பலர் இந்தியாவை பாராட்டி வருகின்றனர்.
கடந்த ஓரிரு வருடங்களாக பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, பிற நாடுகளிடமும், பொருளாதார அமைப்புகளிடமும் உதவிகள் கேட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரயான்-3 நிலவை தொடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் ஃபாவத் சவுத்ரி இந்தியாவின் சாதனை முயற்சிக்கு பாகிஸ்தான் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்தியாவை போன்று பாகிஸ்தானும் நிலவிற்கு செல்ல முயற்சிகள் எடுக்குமா என அந்நாட்டு மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஒரு பாகிஸ்தான் குடிமகன், "நாங்கள் நிலவிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நாங்கள் ஏற்கெனவே நிலவில்தான் வசிக்கிறோம். அதாவது நிலவில் குடிநீர், சாலை வசதி மற்றும் மின்சாரம் உட்பட எந்த வசதிகளும் கிடையாது. அதே போல்தான் பாகிஸ்தானிலும் இவை எதுவும் கிடையாது," என பதிலளித்தார்.
இவரது நகைச்சுவையான பதில் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
- சென்ற வாரம், ரஷியாவின் லூனா-25 முயற்சி தோல்வி அடைந்தது
- பாகிஸ்தான் ஊடகங்கள் சந்திரயான் குறித்து தகவல்களை வெளியிட வேண்டும்
2003 ஆகஸ்ட் 15 அன்று இந்திய சுதந்திர தின விழாவில் அப்போதைய இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தனது உரையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) மூலம் சந்திரயான் எனும் பெயரில் நிலவிற்கு விண்கலங்களை அனுப்பி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் திட்டம் குறித்து முதன்முதலாக அறிவித்தார்.
தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திரயான் திட்டத்தை ஊக்குவித்து வருவதை தொடர்ந்து, அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் இறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சந்திரயான்-3 எனும் விண்கலத்தை கடந்த ஜூலை 14 அன்று ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக அனுப்பியது.
இந்த விண்கலம் இன்று மாலை 06:04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. இதுவரை நிலவின் தென் துருவத்தில் எந்த நாடும் விண்கலத்தை இறக்கியதில்லை.
சமீபத்தில் உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷியா, லூனா-25 எனும் பெயரில் இதே போன்று நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை இறக்கும் ஒரு முயற்சியை மேற்கொண்டது. ஆனால், சென்ற வாரம் லூனா-25, நிலவில் நொறுங்கி விழுந்ததையடுத்து இந்த முயற்சி தோல்வியடைந்தது.
இதன் பின்னணியில் இந்தியாவின் முயற்சி வெற்றி அடைவதை உலகமே பெரும் எதிர்பார்ப்புடன் ஆர்வமாக எதிர்நோக்கியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் முந்தைய அதிபர் இம்ரான் கான் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராக இருந்த ஃபவத் அஹ்மத் ஹுசைன் சவுத்ரி, இந்தியாவின் முயற்சியை வரவேற்றுள்ளார்.
இது குறித்து எக்ஸ் (டுவிட்டர்) பதிவில் அவர், "பாகிஸ்தான் ஊடகங்கள் இந்தியாவின் சந்திரயான் நிலவில் இறங்கும் நிகழ்வை பிரபலப்படுத்தி இந்த செய்தியை மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும். இது மனித குலத்திற்கே ஒரு மகத்தான தருணம். குறிப்பாக, இந்திய மக்களும், விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் பெருமைப்பட வேண்டிய நிகழ்வு. அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்," என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அமைச்சர் இந்தியாவையும், இந்திய விஞ்ஞானிகளையும் பாராட்டுவதை இரு நாடுகளுக்கிடையே நல்லுறவை வளர்க்கும் ஒரு முயற்சியாக வரவேற்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
- தரையில் இருந்து சுமார் 1,200 அடிக்கு மேலே அது செல்லும்போது கயிறு திடீரென அறுந்தது.
- இதனால் அந்த கேபிள் கார் 8 பயணிகளுடன் அந்தரத்தில் ஊசலாட தொடங்கியது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ளது கைபர் பக்துன்வா பிராந்தியம். இது கரடுமுரடான மலைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும், நதிகளும், சமநிலைகளும் நிறைந்த ஒரு பிரதேசம் ஆகும்.
இங்குள்ள பள்ளத்தாக்குகளைக் கடக்க பாலங்கள் அமைக்க முடியாததால், மக்கள் ஒரு மலையிலிருந்து எதிரே உள்ள மலைக்கு அந்தரத்தில் கேபிள் கார் எனப்படும் ஒரு கயிறின் மூலமாக இயக்கப்படும் சிறு வாகனத்தில் அமர்ந்து பயணம் செய்கின்றனர்.
குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல கேபிள் கார் மூலமாக ஒரு மலைப்பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்வது வழக்கம்.
அந்த வகையில், நேற்று காலை 7 மணியளவில் 6 குழந்தைகள், 2 பெரியவர்கள் என மொத்தம் 8 பேர் ஒரு கேபிள் காரில் பயணம் செய்தனர். தரையில் இருந்து சுமார் 1,200 அடிக்கு மேலே அது செல்லும்போது கயிறு திடீரென அறுந்தது. இதனால் அந்த கேபிள் கார் பயணிகளுடன் அந்தரத்தில் ஊசலாட தொடங்கியது.
இந்நிலையில், 14 மணி நேரத்துக்குப் பிறகு குழந்தைகள் உள்பட 8 பேரும் மீட்புக் குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர் என தற்காலிக பிரதமர் அன்வர் உல் ஹக் ககர் தெரிவித்துள்ளார்.
- ஒரு மலைப்பகுதியிலிருந்து மற்றொரு மலைப்பகுதிக்கு செல்வதற்கு கேபிள் காரை பயன்படுத்துகிறார்கள்
- கயிறு அறுந்து கேபிள் கார் தரையிலிருந்து சுமார் 1200 அடி உயரத்தில் தொங்குகிறது
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ளது கைபர் பக்டுன்கா பிராந்தியம். இது கரடுமுரடான மலைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும், நதிகளும், சமநிலைகளும் நிறைந்த ஒரு பிரதேசம் ஆகும்.
இங்குள்ள பள்ளத்தாக்குகளை கடக்க பாலங்கள் அமைக்க முடியாததால், மக்கள் ஒரு மலையிலிருந்து எதிரே உள்ள மலைக்கு அந்தரத்தில் கேபிள் கார் எனப்படும் ஒரு கயிறின் மூலமாக இயக்கப்படும் சிறு வாகனத்தில் அமர்ந்து பயணம் செய்கின்றனர். குழந்தைகள் பள்ளிக்கு செல்ல கேபிள் கார் மூலமாக ஒரு மலைப்பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு செல்வது வழக்கம்.
அந்த வகையில், இன்று காலை 07:00 மணியளவில் ஆறு குழந்தைகள், இரண்டு பெரியவர்கள் என மொத்தம் எட்டு பேர் ஒரு கேபிள் காரில் பயணித்தனர். தரையில் இருந்து சுமார் 1200 அடிக்கு மேலே அது செல்லும் போது கயிறு திடீரென அறுந்தது. இதனையடுத்து இந்த கார் அதில் உள்ள பயணிகளுடன் அந்தரத்தில் ஊசலாட தொடங்கியது.
"எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள். உள்ளே எட்டு பேர் இருக்கிறோம். நாங்கள் அந்தரத்தில் கடந்த ஐந்து மணி நேரமாக தொங்குகிறோம். ஒரு ஆண் மயக்கமடைந்து விட்டார். ஒரு ராணுவ ஹெலிகாப்டர் வந்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திரும்பி சென்று விட்டது," என்று உள்ளே சிக்கி கொண்டுள்ள பயணிகளில் ஒருவரான குல்ஃப்ராஸ் அங்குள்ள நிலவரம் குறித்து செல்போனில் தெரிவித்தார்.
"கேபிள் கார் தரையிலிருந்து சுமார் 1200 அடி உயரத்தில் தொங்குவதால், ஹெலிகாப்டர் உதவியால்தான் மீட்பு நடவடிக்கையை செயல்படுத்த முடியும்," என்று கைபர் பகுதியின் மூத்த அதிகாரி சையத் ஹம்மட் ஹைதர் தெரிவித்தார்.
தற்போது வரை பயணிகள் இன்னமும் காப்பாற்றப்படவில்லை. ஆறு குழந்தைகள் சிக்கி கொண்டுள்ளதால் இச்சம்பவம் குறித்த செய்தி வெளியானது முதல் எப்படியாவது, அரசு அவர்களை காப்பாற்ற வேண்டும் என சமூக வலைதளங்களில் அனைவரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
- தனது அரசை கவிழ்த்ததில் அமெரிக்காவின் சதி இருந்ததாக கடந்த ஆண்டு இம்ரான் கான் குற்றம் சாட்டினார்.
- கடந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதர் அனுப்பிய ரகசிய தகவலை இம்ரான் கான் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் மூன்று ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இம்ரான் கான் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது அரசை கவிழ்த்ததில் அமெரிக்காவின் சதி இருந்ததாக கடந்த ஆண்டு இம்ரான் கான் குற்றம் சாட்டினார். இதை அமெரிக்காவும், பாகிஸ்தான் ராணுவமும் மறுத்தன. இதற்கிடையே கடந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதர் அனுப்பிய ரகசிய தகவலை இம்ரான் கான் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக இம்ரான்கானுக்கு எதிராக குற்றவியல் விசாரணையை தொடங்கி உள்ளதாகவும், புதிய வழக்கில் அவர் மற்றும் மூன்று உதவியாளர்களின் பெயர்கள் பதிவு செய்துள்ளதாகவும் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரப்பூர்வ ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டின் பேரில் இம்ரான் கான் மீது குற்றம் சாட்டியதற்காக கோர்ட்டில் வழக்கு தொடர ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது என்றனர்.
- பாகிஸ்தானில் தொழிலாளர்கள் சென்ற வேனில் குண்டு வெடித்தது.
- இந்த குண்டு வெடிப்பில் 13 தொழிலாளர்கள் பலியாகினர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ராணுவச் சாவடியில் கட்டுமான பணிக்கு செல்லும்போது தொழிலாளர்கள் சென்ற வேனில் வெடிகுண்டு வைத்து இந்த கோர சம்பவத்தை நடத்தியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் 13 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
குண்டுவெடிப்பில் பலியானவர்கள் தெற்கு வஜிரிஸ்தானில் உள்ள மக்கின் மற்றும் வானா தெஹ்சில் பகுதியை சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் மேலும் விவரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் குண்டு வெடித்து பலியானது பாகிஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியது.
- படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- 4 பேரின் உடல்நிலை மோசமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் டீசல் ஏற்றி வந்த லாரியும், பயணிகள் பேருந்தும் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு இன்று அதிகாலை 4 மணியளவில் 40 பயணிகளுடன் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, பேருந்து எதிரில் வந்த டீசல் லாரி மீது பயங்கரமாக மோதியதில் தீ பிடித்தது. லாரியில் இருந்த டீசல் டிரம்கள் வெடித்து சிதறின. இதில், பேருந்துக்குள் இருந்த பயணிகள் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், பேருந்தில் சிக்கியிருந்தவர்கள் மீட்டனர். இதில், 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 15 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், இதில் 4 பேரின் உடல்நிலை மோசமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர்களின் அடையாளங்களை காணும் பணி நடைபெற்று வருகிறது.
- விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 16 பேர் பலியானார்கள்.
- 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
லாகூர்:
பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத்தை நோக்கி இன்று அதிகாலை பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அந்த பஸ், பஞ்சாப் மாகாணம் பிண்டி பட்டியன் அருகே பைசலாபாத் நெடுஞ்சாலையில் சென்ற போது டீசல் ஏற்றி சென்ற லாரி மீது மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 16 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
- தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.
- தனது சிறை தண்டனையை எதிர்த்து இம்ரான் கான் மேல்முறையீடு செய்துள்ளார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு தோஷகானா ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து கடந்த 5-ம் தேதி இம்ரான் கான் கைது செய்யப்பட்டு, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனது சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளரும், முன்னாள் வெளியுறவு மந்திரியுமான ஷா மக்மூத் குரேஷி அவரது வீட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் பிரதமரும், கட்சித் தலைவருமான இம்ரான்கான் கைது செய்யப்பட்ட இரு வாரங்கள் கழித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குரேஷி பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் துணை தலைவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சமூக மற்றும் அரசியல் அந்தஸ்துக்கு ஏற்ப சிறையில் பி-கிளாஸ் வசதிகளை வழங்க வேண்டும்.
- கடந்த காலங்களில் இம்ரான்கான் மீது இரண்டு கொலை முயற்சிகள் நடந்தன.
லாகூர்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு, ஊழல் வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனது சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த நிலையில் சிறையில் இம்ரான்கான் உணவில் விஷம் கலந்து கொல்லப்படலாம் என்று அவரது மனைவி புஷ்ரா பீபி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பஞ்சாப் மாகாண உள்துறை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:-
எனது கணவரின் பாதுகாப்பு குறித்து கவலை அடைந்துள்ளேன். அட்டாக் சிறையில் அவருக்கு விஷம் கொடுக்கப்படலாம். எனது கணவரை எந்த நியாயமும் இன்றி அட்டாக் சிறையில் அடைத்துள்ளனர். அவரை ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு மாற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சட்டப்படி அவரை அடியாலா சிறைக்கு மாற்ற வேண்டும். அவரது சமூக மற்றும் அரசியல் அந்தஸ்துக்கு ஏற்ப சிறையில் பி-கிளாஸ் வசதிகளை வழங்க வேண்டும்.
கடந்த காலங்களில் இம்ரான்கான் மீது இரண்டு கொலை முயற்சிகள் நடந்தன. ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அவரது உயிருக்கு இன்னும் ஆபத்து உள்ளது. அட்டாக் சிறையில் என் கணவர் விஷம் கொடுத்து கொல்லப்படலாம் என்ற அச்சம் உள்ளது. எனவே வீட்டில் சமைத்த உணவை சிறையில் அவர் சாப்பிட அனுமதிக்க வேண்டும். அவருக்கு 48 மணி நேரத்துக்குள் அனைத்து வசதிகளும் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் 12 நாட்கள் ஆகியும் இன்னும் வசதிகள் வழங்கப்படவில்லை. சிறை விதிகளின்படி அவருக்கு தனியார் டாக்டரிடம் பரிசோதனை செய்ய உரிமை உண்டு. அவருக்கு வசதிகள் செய்து கொடுக்காதது பற்றி விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.






