என் மலர்tooltip icon

    சீனா

    • பல வருடங்களாக இந்த தேர்வை வருடாவருடம் எழுதிக்கொண்டே, தனது வேலைகளையும் செய்து வந்துள்ளார்.
    • மர வியாபாரத்தை தொடங்கிய லியாங், பணக்காரராகி, கட்டுமான பொருட்கள் துறையிலும் கால் பதித்து பெரும் கோடீஸ்வரர் ஆனார்.

    சீன நாட்டின் கோடீஸ்வரர்களில் ஒருவர் லியாங் ஷி (56). இவர் அந்நாட்டின் பல்கலைகழகங்களில் சேருவதற்கான கவ்கவ் என்ற பொது நுழைவுத் தேர்வை தொடர்ந்து பலமுறை எழுதியும் தோல்வியடைந்துள்ளார். எனினும் விடா முயற்சியுடன் மிகக்கடினமான இந்த பொது நுழைவுத் தேர்வை 27வது முறையாக எழுதினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இம்முறையும் லியாங் தோல்வி கண்டிருக்கிறார்.

    மொத்தம் 750 புள்ளிகள் கொண்ட இந்த தேர்வில், தேர்ச்சிக்கு தேவையான குறைந்தளவு புள்ளிகள் 424. இதற்கு 34 புள்ளிகள் குறைவாக எடுத்து லியாங் தோல்வியடைந்தார்.

    லியாங் ஷி, இந்த தேர்வில் வெற்றி பெற 1983ம் ஆண்டிலிருந்து பல முறை முயற்சி செய்து வருகிறார்.

    தனது 16வது வயதில் 1983ம் வருடம் இந்த தேர்வில் முதல் முறையாக தோல்வி கண்ட லியாங், பல வருடங்களாக இந்த தேர்வை வருடாவருடம் எழுதிக்கொண்டே, பல இடங்களில் பல வேலைகளையும் செய்து வந்துள்ளார்.

    90களின் மத்தியில் தனது சொந்த மர வியாபாரத்தை தொடங்கிய லியாங், பணக்காரராகி, கட்டுமான பொருட்கள் துறையிலும் கால் பதித்து பெரும் கோடீஸ்வரர் ஆனார்.

    இந்த தேர்வுக்கு தன்னை தயார் செய்து கொள்ளும் காலங்களில், குடிப்பழக்கத்திலிருந்தும், தமக்கு பிடித்தமான விளையாட்டுக்களை விளையாடுவதிலிருந்தும் லியாங் விலகி இருப்பாராம்.

    இந்த தோல்வி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை தன்னை பாதித்திருப்பதாகவும், அடுத்த வருடம் மீண்டும் முயற்சிப்பது சந்தேகம் எனவும் லியாங் கூறியுள்ளார்.

    சீனாவில் பள்ளி முடித்து கல்லூரிகளுக்கு செல்ல விரும்பும் மாணவர்களுக்கான, பிரபலமான இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினம். இந்த தேர்வை, இவ்வருடம் கிட்டத்தட்ட 1 கோடியே 30 லட்சம் மாணவர்கள் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • வாக்னர் படை மாஸ்கோவை நோக்கி திரும்பியதால் பதட்டமான நிலை ஏற்பட்டது
    • பெலாரஸ் அதிபர் மத்தியஸ்தராக செயல்பட்டு ஆயுத கிளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்

    ரஷிய- உக்ரைன் போரில் ஒரு திருப்பமாக ரஷியாவில் உள்ள தனியார் ராணுவ மற்றும் கூலிப்படை குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தலைமையில் நடைபெற்ற ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சி, அதன் தலைவருக்கும் ரஷிய அரசாங்கத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில் ரஷியாவிற்கு எதிரான வாகனர் படை எழுச்சி பற்றிய தனது முதல் அதிகாரப்பூர்வ கருத்துகளில் சீனா, தேசிய ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதில் ரஷியாவை ஆதரிப்பதாக கூறியிருக்கிறது.

    அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ள செய்திக்குறிப்பில், "தங்களது நட்பு அண்டை நாடாகவும், ஒரு புதிய சகாப்தத்தின் விரிவான மூலோபாய கூட்டுறவு பங்காளியாகவும், தனது நாட்டின் தேசிய ஸ்திரத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்பை காப்பதிலும் ரஷியாவை சீனா ஆதரிக்கிறது" என்று தெரிவித்துள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதி வரை ரஷியாவில் நடைபெற்ற கிளர்ச்சி குறித்து சீனா எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. இந்த விவகாரம் ரஷியாவின் "உள் விவகாரம்" என தெரிவித்து நிறுத்தி கொண்டது.

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஒரு பொது மன்னிப்பு ஒப்பந்தத்தை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்ததும், வேறு புகலிடம் தேடி செல்வதற்கு அக்கிளர்ச்சியின் தலைவர் எவ்ஜெனி பிர்கோசினும் ஒப்புக்கொண்டதையும் குறித்து சீனா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    நேற்று சீனாவின் வெளியுறவு மந்திரி கின் கேங்க், பீஜிங்கில் ரஷியாவின் துணை வெளியுறவு மந்திரி ஆண்ட்ரே ருடென்கோவை சந்தித்தார். இருவரும் சீன-ரஷிய உறவுகள் மற்றும் பொதுநலன் சார்ந்த சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர்.

    "தனது நாட்டின் நிலைமையை உறுதிப்படுத்த ரஷிய கூட்டமைப்பின் முயற்சிகளுக்கு சீனா ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறது" என்று ரஷியா கூறியது.

    உக்ரைன் படையெடுப்பிற்குப் பின்னர் ரஷிய-சீன மூலோபாய கூட்டாண்மை நெருக்கமாக வளர்ந்து வருவதால், இரு நாடுகளும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ராஜதந்திர தொடர்புகளை அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    ரஷிய-உக்ரைன் போரில் சீனா தன்னை ஒரு நடுநிலைக் கட்சி என்று கூறிக்கொள்கிறது. ஆனால், ரஷியாவை கண்டிக்க மறுத்ததற்காகவும், ரஷியாவுடனான அதன் உறவுகளுக்காகவும் மேற்கத்திய நாடுகளால் சீனா விமர்சிக்கப்பட்டது.

    • திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு கசிவினால் தீ விபத்து
    • 7 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்

    சீனாவின் வடமேற்கு யின்சுவான் நகரத்தில் இயங்கிவரும் ஃபுயாங் பார்பெக்யு உணவகத்தில் நேற்று எல்.பி.ஜி. (LPG) எனப்படும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு கசிவினால் நடைபெற்ற வெடிவிபத்தில் 31 பேர் பலியாகியுள்ளனர். இதில் 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

    10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் புகை மூட்டத்திற்கு இடையே தீயை அணைக்க போராடி வருவதை சம்பவ இடத்து வீடியோ காட்சிகளில் காண முடிந்தது. சீனாவில் 3-நாள் டிராகன் படகு திருவிழா விடுமுறை கொண்டாடப்பட இருக்கிற நிலையில் இந்த விபத்து அரங்கேறியுள்ளது.

    சீன அதிபர் ஜி ஜின்பிங், ''காயமடைந்தவர்களின் சிகிச்சை நடவடிக்கைகளை முடுக்கிவிடவும், முக்கியமான துறைகளின் பாதுகாப்பிற்கு வலிமையூட்டவும், மக்களின் உயிர் மற்றும் உடமைகளை காக்க தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும்'' உத்தரவிட்டுள்ளார்.

    சீனாவின் அவசரக்கால நிர்வாக மேலாண்மை அமைச்சரவை, 100-க்கும் மேற்பட்ட வீரர்களை 20 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தது. உள்ளூர் அதிகாரிகள், உடனடியாக மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடவும், காயம்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கவும், உயிர் பலிகளை குறைக்க தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க கோரியிருந்தது.

    நேற்று நடைபெற்ற தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவந்த வீரர்கள், இன்று காலை மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

    • ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டி சீனாவில் நடைபெறுகிறது.
    • இதில் தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி வெண்கலம் வென்றார்.

    பீஜிங்:

    ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டி சீனாவில் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. பின், 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை இத்தாலியில் நடைபெறுகிறது. இதில் இந்தியாவிற்காக தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி பங்கேற்றார். சிறப்பாக விளையாடி காலிறுதியில் உலக சாம்பியனான மிஸாகி யமுராவை வீழ்த்தினார்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற அரையிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையிடம் 14-15 என்ற புள்ளிக்கணக்கில் பவானி தோல்வியடைந்தார். இதன்மூலம் பவானி தேவி வெண்கலப் பதக்கம் வென்றார்.

    இந்திய வீராங்கனை ஒருவர் ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்று சாதனை படைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை தணிக்க அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி சீனா சென்றுள்ளார்.
    • மந்திரி ஆன்டனி பிளிங்கன், சீன வெளியுறவுத்துறை மந்திரி குவின் காங்கை சந்தித்துப் பேசினார்.

    பீஜிங்:

    அமெரிக்கா, சீனா இடையே பல்வேறு விவகாரங்களில் நிலவி வரும் கருத்து வேறுபாடு காரணமாக இரு நாடுகளும் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன.

    இதற்கிடையே, இந்தோனேஷியாவின் பாலியில் கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியின் சீன பயணம் குறித்து பேசினர்.

    அமெரிக்க வான்வெளியில் சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்துக்கு பிறகு வெளியுறவு மந்திரியின் சீன பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் 2 நாள் பயணமாக பீஜிங் வந்துள்ளார். சீன வெளியுறவுத் துறை மந்திரி குவின் காங்கை சந்தித்துப் பேசினார்.

    • குழந்தை பிறப்பு எண்ணிக்கை கடந்த ஆண்டு 1,000 பேருக்கு 6.77 என்றளவில் குறைந்திருக்கிறது
    • கருவுறுதல் விகிதங்களை ஆதரிக்க சீன அரசு நவீன சிகிச்சைகளுக்கு உதவி

    சீனாவில் சமீப காலமாக குழந்தை பிறப்பு விகிதம் மிகக் கடுமையாக குறைந்துள்ளது. இதை தடுப்பதற்கும், தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கவும், பல முயற்சிகளை சீன அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக பீஜிங்கின் அரசு, நகரின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் கீழ் கருத்தரித்தலுக்கான 16 வகையான தொழில்நுட்ப சிகிச்சை கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    இந்த தொழில்நுட்பங்களில் முக்கியமானவையான இன்-விட்ரோ கருத்தரித்தல் (IVF), கரு மாற்று சிகிச்சை (Embryo Transplantation), விந்து உறைதல் (Freezing Semen) மற்றும் விந்துவை சேமித்தல் (Storing Semen) ஆகியவை அடிப்படை காப்பீட்டிலேயே சேர்க்கப்படும் என்று பெய்ஜிங்கின் நகராட்சி மருத்துவ காப்பீட்டு பணியகத்தின் துணை இயக்குனர் டு சின் தெரிவித்துள்ளார்.

    கடந்த அறுபது ஆண்டுகளில் முதல் முறையாக மக்கள் தொகை வீழ்ச்சியை பதிவு செய்த சீனா, குழந்தை பிறப்பு குறைவதைத் தடுக்க போராடி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    குழந்தை பிறப்பு எண்ணிக்கை கடந்த ஆண்டு 1,000 பேருக்கு 6.77 என்றளவில் குறைந்திருக்கிறது. மேலும், 2023-ல் இது இன்னமும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கருவுறுதல் விகிதங்களை ஆதரிக்கும் வகையிலும் அதிகப்படுத்தும் வகையிலும் சீர்திருத்த, சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய வழிகாட்டுதல்களை மாகாணங்களுக்கு வழங்கியுள்ளது.

    சீனாவின் வடகிழக்கில் உள்ள மாகாணமான லியோனிங், ஜூலை முதல் உதவி இனப்பெருக்க தொழில்நுட்பங்களை

    ஆதரிக்கும் என்று மே மாதம் கூறியது.

    திருமணமாகாத 35 வயதான சீனப் பெண்ணான தெரேசா சூ, திருமணமாகவில்லை என்ற காரணத்தால் தனது கரு முட்டைகளை உறைவிக்க பெய்ஜிங் பொது மருத்துவமனை மறுப்பதாகவும், இது தனது உரிமைகளை மீறும் செயல் எனக் கூறி, இதற்காக அந்த மருத்துவமனையின் மீது வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கிற்கான தீர்ப்பு விரைவில் வரவிருக்கும் நிலையில் பெய்ஜிங்கின் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.

    கடந்த மார்ச் மாதம், சீனாவில் மக்கள் தொகையில் அதிகரித்து வரும் முதியோர்களும், தம்பதிகளிடையே குறையும் குழந்தை பிறப்பு குறித்தும் கவலை கொண்ட அரசாங்க அரசியல் ஆலோசகர்கள், திருமணமாகாத பெண்களுக்கு, கருமுட்டை உறைதல் மற்றும் இன்-விட்ரோ கருத்தரித்தல் சிகிச்சை போன்ற சேவைகள் அவர்கள் எளிதாக அணுகக்கூடிய விதத்தில் இருக்க வேண்டும் என்று முன்மொழிந்தனர்.

    சீனாவில் உள்ள தேசிய சட்ட விதிகளின்படி தற்பொழுது நாட்டில் உள்ள திருமணமாகாத பெண்கள் இது போன்ற உயர் தொழில்நுட்ப சிகிச்சைகளை பெறுதல் கடினம்.

    தென்மேற்கு சிச்சுவான் மாகாணம் போன்ற மாகாணங்களில் உள்ள சில தனியார் கிளினிக்குகள் குழந்தை பிறப்பு குறைவதால், ஏற்கனவே இன்-விட்ரோ கருத்தறித்தல் போன்ற தொழில்நுட்பங்களை அனுமதிக்கத் தொடங்கியுள்ளன.

    அதே சமயம், நாடு முழுவதும் கருவுறுதலுக்கான சிகிச்சைகளை தாராளமாக்குவதால், ஏற்கனவே உலகின் மிகப்பெரிய சந்தையாக இருக்கும் நாட்டில் இது அதிக தேவையை கட்டவிழ்த்துவிடலாம் என்றும் இதனால் வரையறுக்கப்பட்ட கருவுறுதல் சேவைகள் பாதிக்கப்படலாம் என்று முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஜிலின்-1 செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 108ஆக உயர்ந்துள்ளது.
    • 2030ம் ஆண்டுக்குள் சந்திரனில் விண்வெளி வீரர்களை தரையிறக்க சீனா திட்டம்.

    சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று மதியம் 1.30 மணிக்கு ஒரே நேரத்தில் 41 செயற்கைக்கோள்களுடன் நீண்ட 2டி ராக்கெட்டை விண்ணில் செலுத்தி அந்நாடு புதிய சாதனையை படைத்துள்ளது.

    இந்த நீண்ட ராக்கெட் 476வது விமானப் பயணமாகும். ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் முக்கியமாக வணிக ரிமோட் சென்சிங் சேவைகள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்ப சரிபார்ப்பை வழங்கும் எனவும் செயற்கைக்கோள்களில் பெரும்பாலானவை 36 ஜிலின்-1 தொடரைச் சேர்ந்தவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம், ஜிலின்-1 செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 108ஆக உயர்ந்துள்ளது.

    சீனா, 420 கிலோகிராம் எடை கொண்ட ஜிலின்-1 செயற்கைக்கோளை 2015ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளில், அதன் எடையை வெறும் 22 கிலோவாகக் குறைத்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, 2030ம் ஆண்டில் நிலவு மற்றும் அதற்கு மேற்பட்ட பயணங்கள் மற்றும் பூமியில் தரை செயல்பாடுகளுக்கு இடையே ஒரு தகவல் தொடர்பு பாலமாக செயல்படும் ரிலே செயற்கைக்கோள்களை உருவாக்கவும் சீனா செயல்பட்டு வருகிறது.

    2030ம் ஆண்டுக்குள் சந்திரனில் விண்வெளி வீரர்களை தரையிறக்க சீனா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கொரோனா கட்டுப்பாடு தளர்ந்த நிலையில் 4 வருடத்திற்குப் பிறகு பில்கேட்ஸ் சீனா வருகை
    • அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்அதிபரை சீன அதிபர் சந்திக்க இருப்பது அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது

    அமெரிக்க மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன்  அறக்கட்டளை அமைப்பின் தலைவருமான பில் கேட்ஸ் இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார்.

    கோவிட் கட்டுப்பாடு நீக்கப்பட்ட பிறகு சீனாவிற்கு பல மேற்கத்திய தலைவர்கள் வருகை புரிகின்றனர். அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஜேபி மோர்கன் சேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டிமோன் சீனாவிற்கு கடந்த வாரம் வந்திருந்தார். கடந்த மார்ச் மாதம் சீனாவின் பீஜிங் நகருக்கு வந்திருந்த ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், சீனாவுடன் ஆப்பிள் நிறுவனத்திற்கும் ஒரு இணைதிறனுடைய உறவுமுறை நிலவுவதாக குறிப்பிட்டிருந்தார்.

    அதேபோல் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் சென்ற 3 வருடங்களில் முதல்முறையாக வருகை தந்தார். சீனாவில் விரிவான வணிக ஆர்வமுடைய மஸ்க், சீன ஷாங்காய் நகரில் உள்ள டெஸ்லாவின் மிகப்பெரிய தொழிற்சாலையில் தமது பணியாளர்களை சந்தித்தார்.

    இப்பொழுது உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான அமெரிக்காவின் பில் கேட்ஸ் வருகை தந்துள்ளார். அமெரிக்க நாட்டு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஞாயிறன்று சந்திக்க இருக்கும் பின்னணியில் இது மிகவும் முக்கிய சந்திப்பாக பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை:-

    மலேரியா மற்றும் காசநோய் ஒழிப்பிற்காக எடுக்கப்படும் முயற்சிகளுக்காக சீனாவிற்கு இந்த அறக்கட்டளை 50 மில்லியன் டாலர் வழங்கும். கேட்ஸ், பீஜிங் நகராட்சி மற்றும் ட்சிங்குவா பல்கலைகழகம் இணைந்து உருவாக்கிய உலகளாவிய ஆரோக்கியத்திற்கான மருந்து கண்டுபிடிப்பு நிறுவனம் (GHDDI) எனப்படும் அமைப்பிற்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கப்படும்.

    மலேரியா மற்றும் காசநோய் போன்ற பெரும்பாலான உலகின் ஏழை மக்களை தாக்கும் நோய்கள் ஒழிப்பிற்காக எடுக்கப்படும் உயிர்காக்கும் சிகிச்சை முறைகள் மற்றும் ஆரோக்கிய மேம்பாட்டுக்கான வழிமுறைகளுக்கு இந்த தொகை உறுதுணையாக இருக்கும். உலகளாவிய ஆரோக்கியத்திற்கான மருந்து கண்டுபிடிப்பு நிறுவனத்தில் பேசிய பொழுது கேட்ஸ், மலேரியா மற்றும் காசநோய் ஒழிப்பிற்காக சீனா எடுக்கும் முயற்சிகளை பாராட்டியுள்ளார்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

    சீனாவிற்குள் வறுமை ஒழிப்பிலும், ஆரோக்கிய மேம்பாட்டிலும் அந்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் சவால்களை சமாளிக்க சீனாவால் பெரிய பங்காற்ற முடியும் என்றும் கேட்ஸ் தெரிவித்திருக்கிறார்.

    பில் கேட்ஸ் கடைசியாக 2019-ம் வருடம் வந்திருந்தபோது சீன முதல் பெண்மணி பெங்க் லியுவானை சந்தித்து தமது அறக்கட்டளை மூலமாக ஹெச்.ஐ.வி./எய்ட்ஸ் தடுப்பிற்காக செய்யப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து அவரிடம் பேசினார்.

    சீன நாட்டு அதிபருடன் வெளிநாட்டு தலைவர் ஒருவர் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல்முறையாகும்.

    • பீஜிங்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ளது
    • அர்ஜென்டினா பாஸ்போர்ட் இல்லாததால் தடுத்து நிறுத்தம் எனத் தகவல்

    கால்பந்து உலகின் தலைசிறந்த வீரரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான மெஸ்சி மற்றும் அவரது அணி வீரர்கள் ஆஸ்திரேலியா அணிக்கெதிராக நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடுவதற்காக சீனா சென்றனர்.

    சீனாவின் பீஜிங் விமானத்தில் மெஸ்சி வந்து இறங்கியதும் போலீசார் அவரை சுற்றி வளைத்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    மெஸ்சி அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவர். ஆனால் அர்ஜென்டினா பாஸ்போர்ட் வைப்பதற்குப் பதிலாக ஸ்பெயின் பாஸ்போர்ட் வைத்திருந்தார். அதில் சரியான சீனா விசா இல்லை எனத் தெரிகிறது. இதனால் தடுத்து நிறுத்தப்பட்டதாக என அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்குள் அதிகாரிகள் தடங்களை சரி செய்து அவரை அனுப்பி வைத்தனர்.

    அர்ஜென்டினா வருகிற 15-ந்தேதி பீஜிங்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், 19-ந்தேதி ஜகார்த்தாவில் இந்தோனேசியாவுக்கு எதிராகவும் விளையாட இருக்கிறது.

    • திருமண பதிவில் முந்தைய ஆண்டை விட சுமார் 800,000 பதிவுகள் குறைந்துள்ளது.
    • சில மாகாணங்கள் இளம் புதுமணத் தம்பதிகளுக்கு ஊதியத்துடன் கூடிய திருமண விடுமுறையை அளித்து நீட்டித்து வருகின்றன.

    சீனா ஏற்கனவே மக்கள் தொகையில் வீழ்ச்சயிடைந்த நிலையில், தற்போது திருமண பதிவின் எண்ணிக்கையிலும் சரிவை கண்டுள்ளது.

    குறிப்பாக கடந்த 2022-ம் ஆண்டில் திருமண பதிவுகள் குறைந்துள்ளதாக சீனாவில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக திருமண பதிவு ஒரு நிலையான சரிவைக் கண்டு வருவதாகவும், கொரோனா காலத்தினால் திருமணத்தின் மொத்த எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு வெறும் 6.83 மில்லியன் தம்பதிகள் தங்கள் திருமணப் பதிவை செய்துள்ளனர். இதுவே, சிவில் விவகார அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தரவுப்படி, முந்தைய ஆண்டை விட சுமார் 800,000 பதிவுகள் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

    கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணத்தால் ஊரடங்கில் பல வாரங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலோ அல்லது வளாகத்திலோ அடைபட்டு கிடந்தனர். தொற்றுநோய் கட்டுப்பாடுகளைப் பின்பற்றியதால் திருமணங்கள், குழந்தை பிறப்பு விகிதம் மற்றும் மக்கள் தொகை வீழ்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.

    2022-ம் ஆண்டில், ஆறு சதாப்தங்களில் இல்லாத அளவில் கடந்த 2022ம் ஆண்டில் முதல் முறையாக சீனாவின் மக்கள்தொகை வீழ்ச்சியடைந்தது. சீனாவின் பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு 1,000 பேருக்கு 6.77 குழந்தைகளாகக் குறைந்துள்ளது, இது 2021ல் 7.52 ஆக இருந்தது.

    மக்கள் தொகையை அதிகரிக்க ஏற்கனவே, திருமணத்தை ஊக்குவிக்கவும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், கடந்த மாதம் 20க்கும் மேற்பட்ட புதிய திட்டங்களை தொடங்குவதாக சீனா கூறியது.

    சில மாகாணங்கள் இளம் புதுமணத் தம்பதிகளுக்கு ஊதியத்துடன் கூடிய திருமண விடுமுறைஅளித்து நீட்டித்து வருகின்றன.

    • அரசுக்கு சொந்தமான வனத்துறை அலுவலகம் உள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
    • காணாமல் போன 5 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஜின்கோஹியில் உள்ள மலைப்பகுதியில் இன்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அரசுக்கு சொந்தமான வனத்துறை அலுவலகம் உள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

    உடனடியாக மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 14 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 5 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியானது மாகாண தலைநகர் செங்டுவில் இருந்து 240 கிமீ தொலைவில் உள்ள மலைப்பிரதேசம் ஆகும். தொலைதூர மற்றும் அடர்ந்த காடுகள் நிறைந்த சிச்சுவானின் பெரும்பகுதி, நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடரால் பேரழிவுக்கு உள்ளாகிறது. 

    • அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து நேட்டோ ராணுவ அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகின்றன.
    • தென்சீன கடல் பகுதியில் சீன ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது.

    அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து நேட்டோ ராணுவ அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆசியா-பசிபிக் பகுதியில் நேட்டோ போன்ற அமைப்பை உருவாக்க முயற்சிக்கக் கூடாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற சீன பாதுகாப்பு மந்திரி லீ ஷங்பூ கூறும்போது, ஆசிய-பசிபிக்கில் நேட்டோ போன்ற முயற்சிகள் பிராந்திய நாடுகளில் மோதல்களை பெரிதுப்படுத்துவதற்கான ஒரு வழியாகும். இது ஆசிய-பசிபிக்கை சர்ச்சைகள் மற்றும் மோதல்களின் சுழலில் மட்டுமே மூழ்கடிக்கும்.

    இன்றைய ஆசிய-பசிபிக் பகுதிக்கு திறந்த மற்றும் உள்ளடக்கிய ஒத்துழைப்பு தேவை. அனைத்து நாடுகளின் மக்களும் இரண்டு உலக போர்கள் கொண்டு வந்த கடுமையான பேரழிவுகளை மறந்து விடக்கூடாது. இது போன்ற சோகமான வரலாறு மீண்டும் வருவதை நாம் அனுமதிக்கக் கூடாது என்றார்.

    தென்சீன கடல் பகுதியில் சீன ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது. தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா கூறி வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து தைவானுக்கு ஆதரவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×