என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக குத்துச்சண்டை தரவரிசையில் ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பன்ஹால் 420 புள்ளிகளுடன் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டானில் உள்ள அம்மானில் அடுத்த மாதம் (மார்ச்) நடக்கிறது. இந்த நிலையில் நிதி நிர்வாக பிரச்சினை காரணமாக ஏற்கனவே உலக குத்துச்சண்டை சங்கம் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் தற்போது அதனை நிர்வகித்து வரும் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் குத்துச்சண்டை பணிக்குழு உலக குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பன்ஹால் 420 புள்ளிகளுடன் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். விஜேந்தர் சிங்குக்கு பிறகு (2009-ம் ஆண்டு) நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் இந்திய வீரர் அமித் பன்ஹால் ஆவார். அரியானா மாநிலத்தை சேர்ந்த 24 வயதான அமித் பன்ஹால் கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்‌ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கமும், ஆசிய சாம்பியன்‌ஷிப் போட்டியில் தங்கப்பதக்கமும் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நம்பர் ஒன் இடத்தை பிடித்து இருப்பது குறித்து அமித் பன்ஹால் கருத்து தெரிவிக்கையில், ‘முதலிடத்தை பிடித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் தர நிலையில் முன்னிலை கிடைக்கும். அத்துடன் நம்பிக்கையிலும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். முதல் தகுதி சுற்று போட்டியிலேயே ஒலிம்பிக் போட்டிக்கான தகுதியை எட்ட முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.

    உலக தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் மேரிகோம் 51 கிலோ எடைப்பிரிவில் 5-வது இடத்தையும், லவ்லினா போர்கோஹைன் 69 கிலோ எடைப்பிரிவில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்
    ஐதராபாத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் போட்டியில் ஐதராபாத், ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது.
    ஐதராபாத்:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    ஐதராபாத்தில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. ஜாம்ஷெட்புர் எப்.சி. அணிகள் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதியில் 39-வது நிமிடத்தில் ஐதராபாத் அணி முதல் கோலை அடித்தது. இதனால் முதல் பாதியில் 1-0 என ஐதராபாத் முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதியின் இறுதியில் 93-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி ஒரு கோல் அடித்தது.

    இறுதியில், ஐதராபாத், ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
    கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கிய தரகர் சஞ்சீவ் குமார் சாவ்லா, லண்டனில் இருந்து பலத்த பாதுகாப்புடன் இன்று இந்தியா கொண்டு வரப்பட்டார்.
    புதுடெல்லி:

    2000-ம் ஆண்டில் ஹன்சி குரோஞ்ச் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்தது. இதில் சூதாட்டத் தரகராக செயல்பட்டதாக டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் சஞ்சீவ் குமார் சாவ்லா மீது குற்றம் சாட்டப்பட்டது.

    இதையடுத்து, சஞ்சீவ் குமார் சாவ்லா லண்டன் தப்பிச்சென்று அந்நாட்டு குடிமகன் ஆனார். அவரை நாடு கடத்தும்படி இங்கிலாந்து  அரசுக்கு 2016-ம் ஆண்டில் இந்திய அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதுதொடர்பான வழக்கை கடந்த மாதம் 23-ம் தேதி விசாரித்த இங்கிலாந்து நீதிமன்றம், சாவ்லாவை 28 நாட்களுக்குள் இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், இங்கிலாந்தால் அவர் நாடு கடத்தப்பட்டார்.

    இந்நிலையில், நாடு கடத்தப்பட்ட சஞ்சீவ் குமார் சாவ்லாவை லண்டனில் இருந்து டெல்லிக்கு பலத்த பாதுகாப்புடன் போலீசார் இன்று காலை அழைத்து வந்து டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    அவர்  மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு இங்கிலாந்து நீதிமன்றங்களுக்கு இந்திய அரசு அளித்த உத்தரவாதப்படி திகார் சிறையில் காவலில் வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மகேந்திர சிங் டோனி தான் இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த கேப்டன் என்று தான் நம்புவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
    சென்னை:

     2019 கிரிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்ததில் இருந்து, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் எம்.எஸ். டோனி எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை. 

     டோனி  நடக்க உள்ள ஐபிஎல் 2020 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னாவும் இடம் பெற்று உள்ளார்.

    ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் வரும் "தி சூப்பர் கிங்ஸ் நிகழ்ச்சி"யில் கலந்து கொண்டு பேசிய சுரேஷ் ரெய்னா கூறியதாவது:-

    எதையும் செய்ய முடியும் என இந்திய அணியை மாற்றிய சிறந்த கேப்டன் எங்களிடம் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த கேப்டன் டோனி தான் .

    இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடும்போது அரங்கம் முழுவதும் நிரம்பி இருக்கும். இப்போது எங்களுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் களத்தில் அதிக ஆற்றல் இருக்கும்.

    இந்த ஆண்டு எங்கள் அணியில் நிறைய புதிய திறமைசாலிகள் உள்ளனர். பியூஷ் இருக்கிறார், பின்னர் எங்களிடம் ஹேசல்வுட், சாம் குர்ரான், தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் கிஷோர் ஆகியோர் உள்ளனர். சாய் கிஷோர்  அருமையாக பந்து வீசுகிறார். இது எங்கள் அணிக்கு மிகவும் நல்லது. நாங்கள் இளைஞர்கள் மற்றும் மூத்த வீரர்கள் அடங்கிய கலவை அணியை வைத்துள்ளோம். என கூறினார்.
    ராஜ்கோட்டில் தொடங்கிய ரஞ்சிக் கோப்பை ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணிக்கெதிராக தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 424 ரன்கள் குவித்துள்ளது.
    ராஜ்கோட்:

    ரஞ்சி கோப்பையின் கடைசி சுற்று போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று தொடங்கிய ஆட்டத்தில் தமிழ்நாடு, சவுராஷ்டிரா அணிகள் மோதின.

    டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் சிறப்பான தொடக்கம் தந்தார். ஆனால் அவருக்கு யாரும் ஒத்துழைப்பு தரவில்லை.

    அரை சதம் கடந்த அபினவ் முகுந்த் 86 ரன்னில் அவுட்டானார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதி கட்டத்தில் ஆடிய மொகமது 42 ரன்னில் வெளியேறினார்.

    விக்கெட் கீப்பர் ஜெகதீசன் தனி ஆளாக நின்று தமிழக அணிக்கு ரன்கள் சேர்த்தார். சதமடித்த அவர் அபாரமாக ஆடினார். இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 183 ரன்னில் ஆட்டமிழந்தார். அத்துடன் தமிழக அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

    இறுதியில், தமிழ்நாடு அணி தனது முதல் இன்னிங்சில் 424 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    சவுராஷ்டிரா அணி சார்பில் ஜெய்தேவ் உனத்கட் 6 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, சவுராஷ்டிரா அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.
    12-வது வரிசையில் களம் இறங்கினால் கூட அவரால் சதம் அடிக்க முடியும் என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மென்களில் ஒருவர் லோகேஷ் ராகுல். சமீப காலமாக அவர் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    27 வயதான ராகுல் நியூசிலாந்துக்கு எதிராக சமீபத்தில் நடந்த ஒருநாள் தொடரில் 1 சதம், 1 அரை சதத்துடன் 204 ரன்கள் குவித்தார். இதேபோல 20 ஓவர் தொடரில் 2 அரை சதத்துடன் 224 ரன்கள் எடுத்தார்.

    இதற்கு முந்தைய ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம் ஆகிய தொடர்களிலும் அவர் சாதித்து இருந்தார். குறைந்த பட்சம் 1 அரை சதத்தையாவது எடுத்து அவர் தனது திறமையை வெளிப்படுத்திருந்தார். தொடக்க வீரர் வரிசையில் ராகுல் அதிரடியாக விளையாடியதால் வழக்கமாக தொடக்கத்தில் களம் இறங்கும் ஷிகர்தவானுக்கு நெருக்கடி ஏற்பட்டது. காயத்தால் அவர் ஆடாதபோது அந்த இடத்தில் ராகுல் அபாரமாக விளையாடினார்.

    இந்த நெருக்கடி காரணமாக தவான் ஆஸ்திரேலிய தொடரில் தனது திறமையை வெளிப்படுத்தினார். இதனால் ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடினார். 5-வது வரிசையில் களம் இறங்கி அதிலும் அவர் சாதித்தார். நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 5-வது வீரராக களம் இறங்கி சதம் அடித்து முத்திரை பதித்தார்.

    இந்தநிலையில் லோகேஷ் ராகுலின் ஆட்டத்தை தவான் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது:-

    நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ராகுல் 5-வது வீரராக களம் இறங்கி ஆடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சதம் அடித்தது பிரமாதமானது. சிறப்பாக விளையாடி வரும் அவருக்கு எனது பாராட்டுக்கள்.

    தவான் - ராகுல்

    அவர் தனது பேட்டிங் வலிமையை தொடர்ந்து தக்க வைத்துள்ளார். 12-வது வீரராக களம் இறங்கினால் கூட ராகுலால் சதம் அடிக்க முடியும். இவ்வாறு தவான் கூறி உள்ளார்.

    ராகுல் 36 டெஸ்டில் விளையாடி 2006 ரன் எடுத்துள்ளார். இதில் 5 சதமும், 11 அரைசதமும் அடங்கும். ஒருநாள் போட்டியில் 31 இன்னிங்சில் 1229 ரன்னும் (4 சதம், 7 அரை சதம்), 20 ஓவர் ஆட்டத்தில் 38 இன்னிங்சில் 1461 ரன்னும் (2 சதம், 11 அரை சதம்) எடுத்துள்ளார்.
    இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 1 ரன்னில் வெற்றி பெற்று அசத்தியது.
    கிழக்கு லண்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் கொண்ட தொடரை இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டம் கிழக்கு லண்டனில் நேற்று நடந்தது.

    முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்தது.

    தொடக்க வீரர் பவுமா 27 பந்தில் 43 ரன்னும் (5 பவுண்டரி), கேப்டன் குயின்டன் டி காக் 15 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), வான்டர் டூசன் 26 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), எடுத்தனர். ஜோர்டன் 2 விக்கெட்டும், மொய்ன் அலி, சாம் கரண், மார்க்வுட், ஆதில் ரஷீத், பென்ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    178 ரன் இலக்குடன் இங்கிலாந்து அணி பின்னர் களம் இறங்கியது.

    அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 1 ரன்னில் வெற்றிபெற்றது.

    ஆட்டத்தின் கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. கைவசம் 4 விக்கெட் இருந்தது. நிகிடி வீசிய முதல் பந்தில் சாம் கரண் 2 ரன் எடுத்தார். 2-வது பந்தில் அவர் அவுட் ஆனார். 3-வது பந்தில் மொய்ன் அலி ரன் எடுக்கவில்லை.4-வது பந்தில் 2 ரன் எடுத்தார்.

    இதனால் கடைசி 2 பந்தில் 3 ரன் தேவைப்பட்டது. 5-வது பந்தில் மொய்ன் அலி ஆட்டம் இழந்தார். கடைசி பந்தில் ஆதில் ரஷீத் 1 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். இதனால் 1 ரன்னில் இங்கிலாந்து தோல்வியை தழுவியது.

    தொடக்க வீரர் ஜேசன்ராய் 38 பந்தில் 70 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரியும், 3 சிக்சரும் அடங்கும். கேப்டன் மார்கன் 34 பந்தில் 52 ரன் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார்.

    மார்கன் 19-வது ஓவரில் 2 பவுண்டரி 1 சிக்சர் அடித்தார். ஹென்ட்ரிக்ஸ் வீசிய அந்த ஓவரில் மொத்தம் 16 ரன் எடுக்கப்பட்டது. அப்படி இருந்தும் கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றியை கோட்டை விட்டது.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 3 விக்கெட்டும், ஹென்ட்ரிக்ஸ், பெகுலு வாயோ தலா 2 விக்கெட்டும், ஸ்டெய்ன் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது 20 ஓவர் போட்டி டர்பனில் நாளை நடக்கிறது.
    77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான தமிழக வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா மத்தியபிரதேச வீராங்கனை ராதிகா ரத்தோரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
    சென்னை:

    77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான தமிழக வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா 11-5, 11-3, 11-4 என்ற நேர்செட்டில் மத்தியபிரதேச வீராங்கனை ராதிகா ரத்தோரை எளிதில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் தமிழக வீராங்கனைகள் அபரஜிதா, சுனைனா குருவில்லா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான தமிழக வீரர் சவுரவ் கோஷல் 11-4, 11-3, 11-8 என்ற நேர்செட்டில் சர்வீசஸ் வீரர் சந்தீப் ஜங்ராவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் தமிழக வீரர்கள் அபய்சிங், ஹரிந்தர் பால்சிங் சந்து உள்ளிட்டோரும் வெற்றி கண்டனர்.
    கோவாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எப்சியை 5-2 என்ற கணக்கில் வீழ்த்திய கோவா அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.
    பனாஜி:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    கோவாவில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா, மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதியில் இருந்தே கோவா அணி வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். இதனால் முதல் பாதியில் 4-1 என கோவா முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் தலா ஒரு கோல் அடித்தனர். இறுதியில், கோவா அணி 5-2 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.
    உலகின் நம்பர் ஒன் அணியை எதிர்கொள்ள முழு அணியுடன் களம் இறங்குவோம் என கேன் வில்லியம்சன் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்தியா 5-0 எனக் கைப்பற்றியது. இதனால் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரிலும் மோசமாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களான டிரென்ட் போல்ட், பெர்குசன், மேட் ஹென்றி இல்லாமல் களம் இறங்கியது. இருந்தாலும் சிறப்பாக விளையாடி இந்தியாவை 3-0 என வீழ்த்தி அசத்தியது.

    இந்நிலையில் இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உடற்தகுதி பெற்று விடுவார்கள் என்று நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்குள் அனைத்து வீரர்களும் உடற்தகுதி பெற்று விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். உலகின் சிறந்த அணிக்கெதிராக விளையாட இருப்பது அற்புதமான வாய்ப்பு.

    வீரர்கள் காயம் அடைவது விளையாட்டின் ஒரு பகுதிதான். சமீப காலமாக நாங்கள் வீரர்கள் காயத்தால் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளோம். ஆனால், அதை ஒரு காரணமாக சொல்லக்கூடாது’’ என்றார்.
    இலங்கை டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் 12 மாதங்களுக்குப் பிறகு பென் போக்ஸ் மற்றும் ஜென்னிங்ஸ் இடம் பிடித்துள்ளனர்.
    இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் மார்ச் 19-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது.

    விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன பென் போக்ஸ், பேட்ஸ்மேனான ஜென்னிங்ஸ் ஆகியோர் 12 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அணியில் இடம் கிடைத்துள்ளது. தென்ஆப்பிரிக்கா தொடரின்போது காயம் அடைந்த ஆண்டர்சன், ஆர்சர் குறித்து பரிசீலிக்கப்படவில்லை.

    இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஜோ ரூட், 2. டொமினிக் பெஸ், 3. ஸ்டூவர்ட் பிராட், 4. ஜோஸ் பட்லர், 5. கிராவ்லி, 6. சாம் கர்ரன், 7. ஜோ டென்லி, 8. பென் போக்ஸ், 9. ஜென்னிங்ஸ், 10, ஜேக் லீச், 11. மேத்யூ பார்கின்சன், 12. ஒல்லி போப், 13. சிப்லி, 14. பென் ஸ்டோக்ஸ், 15. கிறிஸ் வோக்ஸ், 16. மார்க் வுட்.
    டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கென பிரத்யேகமாக தனது மாயாஜால பந்து வீச்சில் கூடுதலாக ஒரு முறையை உருவாக்கியுள்ளேன் என ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
    ஆப்கானிஸ்தான் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். டி20 கிரிக்கெட்டில் முன்னணி பந்து வீச்சாளராக உள்ளார். இவர் கூக்ளி பந்து வீசுவதில் வல்லவர். 6 பந்துகளையும் 6 விதமாக வீசக்கூடியவர். இதனால் அவர் மர்மமான பந்து வீச்சு முறையை கொண்டவர் என அழைக்கப்படுகிறார்.

    இந்நிலையில் தனது பந்து வீச்சில் டெஸ்ட் போட்டிக்கென கூடுதலாக ஒரு பந்து வீச்சை முறையை மேம்படுத்தியுள்ளேன் என்று ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘வலைப்பயிற்சியில் என்னுடைய சிறந்த பந்து வீச்சை கொண்டு வர முயற்சி செய்து வருகிறேன். ஆனால் டி20 கிரிக்கெட்டில் அதை கொண்டு வர மாட்டேன். அந்த மாதிரி பந்து வீச்சை டெஸ்ட் போட்டிகளில் அதிக அளவில் பயன்படுத்துவேன்.

    டெஸ்ட் போட்டி எனக்கு கூடுதல் வாய்ப்பை கொடுக்கும். ஏனென்றால் டெஸ்டில் அதிகமான ஓவர்கள் வீச முடியும். மேலும் அதிகப்படியான நெருக்கடி கிடையாது. ஒரு மோசமான பந்தை வீசினால், அது பெரிய விஷயம் அல்ல. ஆனால் டி20 போட்டியில் அந்த பந்து  முடிவை மாற்றிவிடும்’’ என்றார்.
    ×