என் மலர்tooltip icon

    விளையாட்டு

    2-வது டெஸ்ட்டில் நியூசிலாந்துக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள வீரர்கள் தயாராக உள்ளதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி தொடர்பாக இந்திய அணி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    நாங்கள் முதல் டெஸ்ட்டில் சரியாக விளையாடவில்லை. ஆனால் நான் எப்போதும் இதுபோன்ற தோல்வி ஏற்படுவது நல்லது தானே என்று நம்புகிறேன். இதுபோன்ற தோல்விதான் உங்களது மனநிலையை திறக்கும்.

    நீங்கள் தோல்வியை சுவைக்கவில்லை என்றால் உங்கள் மனநிலை ஒரு முடிவை தீர்மானிக்கும் அல்லது அந்த முடிவை இறுதி செய்து விடும்.

    நியூசிலாந்தில் தோல்வியை சந்தித்தது நல்லது தான். இதன் மூலம் கற்றுக்கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. நியூசிலாந்து அணி என்ன செய்கிறது? என்ன எதிர்பார்க்கிறது? என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இது ஒரு நல்ல பாடம்.

    2-வது டெஸ்ட்டில் நியூசிலாந்துக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் தயாராக உள்ளனர். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 8 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறோம். இதில் 7 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருக்கிறோம். ஒரு தோல்வி ஏற்பட்டதால் பயப்பட தேவையில்லை. இந்த அணியின் பாதையை மாற்ற வேண்டும் என்று யாரும் நினைக்கவும் வேண்டாம்.

    டெஸ்ட் கிரிக்கெட்டும், ஒருநாள் போட்டியும் முற்றிலும் வேறுபாடு கொண்டவை. இங்கிலாந்து- நியூசிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது முற்றிலும் வித்தியாசமானது. ஆனாலும் முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு எந்த சாக்கு போக்குகளை சொல்ல நாங்கள் இங்கு வரவில்லை.

    அஸ்வின் உலகம் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவரது பேட்டிங்கில் முன்னேற்றம் அடைவது தேவையானதாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணிக்கு கிறைஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது. சரிவில் இருந்து எழுச்சி பெற்று இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
    கிறைஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையே 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.

    முதலாவது டெஸ்டில் இந்தியாவின் பேட்டிங் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இரண்டு இன்னிங்சிலும் இந்தியா 200 ரன்களை கூட (165 மற்றும் 191 ரன்) தொடவில்லை. மயங்க் அகர்வால், துணை கேப்டன் அஜிங்யா ரஹானே ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஆடினர். மற்றவர்கள் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மகுடிக்கு மயங்கும் பாம்பு போல் சரணாகதியானார்கள்.

    இந்த ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது தான். ஏற்கனவே டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி அச்சுறுத்திய நிலையில் ‘ஷாட்பிட்ச்’ மன்னன் நீல் வாக்னெரும் நியூசிலாந்து அணியுடன் இணைந்துள்ளார். இவர்களின் புயல்வேக தாக்குதலுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் ஈடுகொடுத்து ஆடுவதை பொறுத்தே ஸ்கோரின் போக்கு அமையும்.

    இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும். தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷாவுக்கு இடதுகால் பாதத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று அவர் பயிற்சிக்கு வரவில்லை. அவருக்கு பதிலாக சுப்மான் கில் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது. பேட்டிங்கை வலுப்படுத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை நீக்கிவிட்டு, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை சேர்ப்பது குறித்தும் அணி நிர்வாகம் யோசிக்கிறது. கேப்டன் விராட் கோலி கடைசியாக ஆடிய 20 சர்வதேச இன்னிங்சில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கோலியின் தடுமாற்றமும் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    இந்திய துணை கேப்டன் ரஹானே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாம் இன்னும் அதிக ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்று சொல்லமாட்டேன். ஆனால் மனஉறுதியும், தெளிவான மனநிலையும் இருந்தால் போதும். அதுவே உதவிகரமாக இருக்கும். வெலிங்டனில் நடந்ததை நாம் மறக்க வேண்டும். முந்தைய டெஸ்டில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு பாடம் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம். அந்த கோணத்தில் தான் பயிற்சியிலும் ஈடுபடுகிறோம். ஆடுகள சீதோஷ்ண நிலை குறித்தே தொடர்ந்து சிந்தித்து கொண்டிருக்கக்கூடாது. அவற்றை தாண்டி அத்தகைய சூழலில் ரன் எடுப்பது எப்படி என்பதை பார்க்க வேண்டும்.

    இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் ஒவ்வொரு டெஸ்டும் முக்கியமானது. இங்கு ஒரு டெஸ்டில் நாம் வெற்றி பெற்றாலும் 60 புள்ளிகளை பெற்று சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் வெகுதூரம் முன்னேறி விட முடியும். அதனால் தான் முதலாவது டெஸ்ட் தோல்வியை மறந்து விடுங்கள் என்று சொல்கிறேன்.

    இதே மைதானத்தில் இந்திய ‘ஏ’ அணி கடந்த மாதம் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் ஆடியது. அதில் விளையாடிய ஹனுமா விஹாரி (அந்த ஆட்டத்தில் 51 மற்றும் 100 ரன்கள் எடுத்தார்) இந்த ஆடுகளம் வெலிங்டனை விட நன்றாக இருக்கும் என்று எங்களிடம் சொல்லி இருக்கிறார். இந்த ஆடுகளத்தில் வேகமும், பவுன்சும் இருக்கும். முதல் நாளிலேயே ஆடுகளத் தன்மையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப விளையாட வேண்டும்.

    அஸ்வின், ஜடேஜா இருவரில் யார் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார்கள் என்று கேட்கிறீர்கள். அது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இருவருமே தரமான சுழற்பந்து வீச்சாளர்கள். யாரை நீக்கினாலும் அது கடினமான முடிவாகத் தான் இருக்கும்.

    இவ்வாறு ரஹானே கூறினார்.

    நியூசிலாந்து அணியை பொறுத்தவரை உள்ளூரில் தங்களது ஆதிக்கத்தை நீட்டிப்பதில் தீவிர முனைப்பு காட்டுகிறார்கள். இந்த மைதானத்தில் இதுவரை நடந்துள்ள 6 டெஸ்டுகளில் நியூசிலாந்து 4-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளது.

    இந்த மைதானத்தில் விக்கெட் வேட்டையில் டிரென்ட் பவுல்ட் (37 விக்கெட்), டிம் சவுதி (32 விக்கெட்), நீல் வாக்னெர் (23 விக்கெட்) ஆகியோர் உள்ளனர். இவர்களின் ஜாலம் நீடிக்குமா அல்லது இந்திய பேட்ஸ்மேன்கள் பதிலடி கொடுக்கும் வகையில் ஆடுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: மயங்க் அகர்வால், சுப்மான் கில் அல்லது பிரித்வி ஷா, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பண்ட், அஸ்வின் அல்லது ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, பும்ரா, முகமது ஷமி.

    நியூசிலாந்து: டாம் லாதம், டாம் பிளன்டெல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், வாட்லிங், காலின் டி கிரான்ட்ஹோம், நீல் வாக்னெர், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, கைல் ஜாமிசன் அல்லது அஜாஸ் பட்டேல்.

    இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    சென்னையில் நடைபெற உள்ள ஐ.எஸ்.எல். கால்பந்தின் அரையிறுதி போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் கோவா, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

    இந்த தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவா அணியை எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை வரை நேரு ஸ்டேடியத்தில் (வாசல் எண் 10) உள்ள புக் மை ஷோ பாக்ஸ் ஆபீசில் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என்றும் போட்டி நாளன்று டிக்கெட் விற்பனை நேரு உள்விளையாட்டு அரங்குக்கு (வாசல் எண் 1) மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புக் மை ஷோ செயலி மற்றும் இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    மூன்று வகை கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக விளையாடி வரும் பேட் கம்மின்ஸ் ஒயிட் பால் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ். டெஸ்ட் போட்டியில் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக இருக்கும் கம்மின்ஸ், தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

    இந்நிலையில் ஒயிட் பால் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன் என்று பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேட் கம்மின்ஸ் கூறுகையில் ‘‘அதிகமான கிரிக்கெட்டில் விளையாடியுள்ளேன். ஆனால், ஒரு நல்ல விஷயம் என்னவெனில் அதிகமானது ஒயிட்பால் கிரிக்கெட்டுதான். டெஸ்ட் போட்டியை விட அது கொஞ்சம் எளிதாக இருக்கும். கடந்த சில வருடங்களாக எல்லா வகை கிரிக்கெட்டிலும் விளையாடியுள்ளேன்.

    ஆனால், ஒயிட் பால் போட்டியை பொறுத்த வரைக்கும் அதிக அளவில் கவனம் செலுத்த முடியும் என உணர்கிறேன். உடல் நான்கு ஓவர்களை மட்டுமே விரும்புகிறது’’ என்றார்.
    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அறிமுகம் ஆன நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன், முறையான ஆல்-ரவுண்டாக மாற வேண்டும் என்பதே விரும்ப் என தெரிவித்துள்ளார்.
    வெலிங்டனில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் அறிமுகம் ஆனார். முதல் டெஸ்டிலேயே அபாரமான வகையில் பந்து வீசினார். முதல் விக்கெட்டாக புஜாராவையும், 2-வது விக்கெட்டாக விராட் கோலியையும் வீழ்த்தினார். அடுத்து விஹாரியை வீழ்த்தினார். இந்தியாவின் முக்கிய பேட்ஸ்மேன்களை வீழ்த்தியதால் இந்தியா 165 ரன்னில் சுருண்டது.

    நியூசிலாந்து பேட்டிங் செய்யும்போது 45 பந்தில் 44 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோர் 300-க்கு மேல் உயர முக்கிய காரணமாக இருந்தார். கிராண்ட்ஹோம் உடன் இணைந்து 8-வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தார். இதுதான் இந்தியா வீழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

    இந்நிலையில் முறையான ஆல்-ரவுண்டராக மாற வேண்டும் என்பதே விருப்பம் என கைல் ஜாமிசன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கைல் ஜாமிசன் கூறுகையில் ‘‘நான் உயர்நிலை பள்ளியில் படிக்கும்போதும், 19 வயதிற்கு உட்பட்டோருக்கான நியூசிலாந்து அணிக்கு தயாராகும்போது பேட்டிங்கில்தான் அதிக கவனம் செலுத்தினேன். டெய்ல் ஹேட்லி உடன் சேர்ந்த பின் பந்து வீச்சாளராக மாறியுள்ளேன்.

    நான் எப்போதுமே பேட்டிங்கைதான் விரும்புவேன். நான் பேட்டிங்கில் பெரிய வீரராக வளர வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். ஆனால் தற்போது நான் எதிர்பார்க்காத நிலையில் பந்து வீச்சாளராக  உள்ளேன். தற்போது நான் பந்து வீச்சாளராக இருந்தாலும், என்னால் பேட்டிங்கும் செய்ய முடியும். நான் முறையான ஆல்-ரவுண்டராக மாற முயற்சி செய்து வருகிறேன்’’ என்றார்.
    ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்துடன் இணக்கமான உறவு இல்லாததால் ஹோம் போட்டிகளில் இரண்டை அசாம் மாநிலம் ஹவுகாத்தியில் நடத்துகிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.
    ஐபிஎல் டி20 லீக்கில் 8 அணிகள் விளையாடுகின்றன. அதில் ஒன்று ராஜஸ்தான் ராயல்ஸ். லீக் சுற்றில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். அதன்படி அவர்களுடைய ஹோம் மைதானத்தில் ஏழு போட்டிகளிலும், வெளியில் சென்று ஏழு போட்டிகளிலும் விளையாடும்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அந்த மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான சவாய் மான்சிங் மைதானத்தை ஹோம் கிரவுண்டாக கொண்டுள்ளது. ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்திற்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இணக்கமான சூழ்நிலை இல்லை எனக் கூறப்படுகிறது.

    ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் சார்பில் இலவசமாக அதிக டிக்கெட்டுகள் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட நெருக்கடி கொடுப்பதாக தெரிகிறது. இதனால் ஏழு போட்டிகளில் மூன்று அசாம் மாநிலத்தில்  உள்ள கவுகாத்தி பார்சபாரா மைதானத்தில் நடத்த ராஜஸ்தான் ராயல்ஸ் திட்டமிட்டது. இதை எதிர்த்து கோர்ட்டில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டது.

    இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் இரண்டு ஹோம் போட்டிகள் கவுகாத்தியில் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

    அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை ஏப்ரல் 5-ந்தேதியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஏப்ரல் 9-ந்தேதியும் ராஜஸ்தான் ராயல்ஸ் கவுகாத்தியில் எதிர்கொள்கிறது.

    ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஏப்ரல் 2-ந்தேதி எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
    கான்பெர்ராவில் நடைபெற்ற ஆட்டத்தில் 189 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா, வங்காளதேசத்தை 103 ரன்னில் கட்டுப்படுத்தி அபார வெற்றி பெற்றது.
    பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கான்பெர்ராவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    தொடக்க வீராங்கனைகளாக அலிசா ஹீலி, பெத் மூனே ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் வங்காளதேச வீராங்கனைகளின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். அலிசா ஹீலி 53 பந்தில் 83 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். பெத் மூனே ஆட்டமிழக்காமல் 58 பந்தில் 81 ரன்களும், கார்ட்னர் 9 பந்தில் 22 ரன்களும் அடிக்க ஆஸ்திரேலியா 20 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது.

    பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் அணி களம் இறங்கியது. ஆஸ்திரேலியா வீராங்கனைகளின் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேசம் வீராங்கனைகள் ரன் குவிக்க திணறினர். அந்த அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆன ஜோஸ் பட்லர், டி20 உலக கோப்பைக்கு ஐபிஎல் சிறந்த பிளாட்ஃபார்ம் என்று ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் 18-ந்தேதியில் இருந்து நவம்பர் 15-ந்தேதி வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது.

    இதற்கிடையில் ஐபிஎல் 2020 சீசன் அடுத்த மாதம் 29-ந்தேதி தொடங்குகிறது. மே மாதம் கடைசி வாரம் வரை நடைபெறும் இந்தத் தொடரை வெளிநாட்டு வீரர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்த ஐபிஎல் லீக் டி20 உலக கோப்பை தொடருக்கு மிகச்சிறந்த பிளாட்பார்மாக இருக்கும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் இங்கிலாந்தை சேர்ந்த ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜோஸ் பட்லர் கூறுகையில் ‘‘ராஜஸ்தான் அணியில் நான், பென் ஸ்டோக்ஸ், டாம் கர்ரன் ஆகியோர் உள்ளோம். ஒரே நாட்டைச் சேர்ந்த நாங்கள் இணைந்து விளையாட இருப்பது உற்சாகம் அளிக்கிறது. நாங்கள் சேர்ந்து விளையாடுவது எங்களுக்கும், இங்கிலாந்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரசிகர்களுக்கும் சிறந்ததாக இருக்கும். தெரிந்த முகம் என்பதால் புதிய சூழ்நிலை, அதை சுற்றியுள்ள விஷயங்களை எதிர்கொள்ள எளிதாக இருக்கும்.

    ஐபிஎல் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கற்றுக் கொள்வதற்கு சிறந்த இடம். உலகின் சிறந்த டி20 தொடர். உலகின் தலைசிறந்த வீரர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து விளையாடுகிறார்கள். முன்னாள் மற்றும் தற்போதைய சிறந்த வீரர்களுடன் அறையில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

    டி20 உலக கோப்பை இன்னும் வெகுதூரத்தில் இல்லை என்பதால் அவர்களாகவே அதிகமான விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். மிகப்பெரிய தொடரான டி20 உலக கோப்பைக்கு தயாராக ஐபிஎல் சிறந்த பிளாட்ஃபார்ம் ஆகும்’’ என்றார்.
    ஷார்ஜாவில் 2018-ல் நடைபெற்ற டி10 லீக்கில் விளையாடியதால் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை 48 வயதான பிரவீன் தாம்பே இழந்து விட்டதாக ஐபிஎல் சேர்மன் தெரிவித்துள்ளார்.
    மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் பிரவீன் தாம்பே. இவர் கடைசியாக 2017-ல் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடினார். அதன்பின் இரண்டு சீசனில் விளையாடவில்லை.

    ஐபிஎல் 2020 சீசனுக்கான ஏலத்தில் இடம் பிடித்திருந்த இவரை அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா ஏலம் எடுத்தது.

    இவர் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக மும்பை கிரிக்கெட் சங்கத்தில் ஓய்வு பெறுகிறேன் என்று தெரிவித்தார். மும்பை டி20 லீக்கில் விளையாடிய பின்னர் ஓய்வு முடிவை திரும்ப பெற்றார்.

    இதற்கிடையில் ஷார்ஜாவில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற டி10 லீக்கில் விளையாடினார். பிசிசிஐ விதிப்படி ஒரு வீரர் ஓய்வு பெற்றால் மட்டுமே வெளிநாட்டில் நடைபெறும் கிரிக்கெட் லீக்கில் விளையாட முடியும்.

    ஷார்ஜா T10 லீக்கில் விளையாடியதால் ஐபிஎல்லில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ‘‘பிரவீன் தாம்பேவை ஐபிஎல் போட்டிகளில் விளையாட அனுமதிக்க முடியாது’’ என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஐபிஎல் சேர்மேன் பிரிஜேஷ் பட்டேல் தகவல் தெரிவித்துள்ளார்.

    பிசிசிஐ ஒருநாள், மூன்று நாள், நான்கு நாள் கிரிக்கெட் மற்றும் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாட மட்டுமே அனுமதிக்கும். இந்த வகையான கிரிக்கெட்டில் விளையாட பிசிசிஐ-யிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

    ஆனால் டி20 மற்றும் டி10 என்பது மாறுபட்டது என்றார்.
    காலில் வீக்கம் உள்ளதால் கிறிஸ்ட்சர்ச்சில் நாளைமறுநாள் தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் பிரித்வி ஷா விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
    நியூசிலாந்து - இந்தியா மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில்  29-ந்தேதி (நாளைமறுநாள்) தொடங்குகிறது. இதற்கான பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்திய அணியின் இளம் வீரரான பிரித்வி ஷா இடது காலில் ஏற்பட்டுள்ள வீக்கம் காரணமாக இன்று நடைபெற்ற பயிற்சியில்  பங்கேற்கவில்லை.

    இன்று ரத்த பரிசோதனை செய்ய இருக்கிறார்கள். இந்த பரிசோதனையில் எந்த பிரச்சினையும் இல்லை என்றால் நாளை காலை பயிற்சியின்போது அவர் எப்படி செயல்படுகிறார் என்று அணி நிர்வாகம் கவனிக்கும். ஒருவேளை அவரால் சரியாக விளையாட முடியவில்லை என்றால் கிறிஸ்ட்சர்ச் டெஸ்டில் ஷுப்மான் கில் களம் இறங்க வாய்ப்புள்ளது.

    இன்றைய பயிற்சியின்போது ஷுப்மான் கில் நீண்ட நேரம் பேட்டிங் செய்ததாகவும், தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவருக்கு ஆலோசனை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

    அதேவேளையில் பிரித்வி ஷா மீது விராட் கோலி அதிக நம்பிக்கை வைத்துள்ளார். அவர் விளையாட தகுதியுடன் இருந்தால் பிரித்வி ஷாதான் தொடக்க வீரராக களம் இறங்குவார்.
    ஐபிஎல் 2020 சீசனில் டேவிட் வார்னர் கேப்டனாக செயல்படுவார் என்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அறிவித்துள்ளது.
    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். ஐபிஎல் தொடரில் இவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது தலைமையில் அந்த அணி 2016-ல் சாம்பியன் பட்டம் வென்றது.

    தென்ஆப்பிரிக்கா தொடரின்போது வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி ஓராண்டு தடைபெற்றார். இதனால் ஐபிஎல் 2018 சீசன் முழுவதும் விளையாடவில்லை.

    கடந்த சீசனில் விளையாடினார். ஆனால் கேப்டனாக நியமிக்கப்படவில்லை. புவனேஷ்வர் குமார் கேப்டனாகவும், கேன் வில்லியம்சன் துணைக் கேப்டனாக செயல்பட்டனர்.

    இந்நிலையில் ஐபிஎல் 2020 சீசனில் வார்னர்தான் கேப்டனாக செயல்படுவார் என்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து டேவிட் வார்னர் கூறுகையில் ‘‘மீண்டும் அணியை வழிநடத்தும் வாய்ப்பை வழங்கியதற்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
    கேப் டவுன்

    கேப்டவுனில் நடந்த 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன் குவித்தது.

    வார்னர் 37 பந்தில் 57 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் ஆரோன் பிஞ்ச் 37 பந்தில் 55 ரன்னும் (6 பவுண்டரி,1 சிக்சர் ), ஸ்டீவ் சுமித் 15 பந்தில் 30 ரன்னும் (2 சிக்சர்) எடுத்தனர். ரபடா, நிகிடி, பிரிட்டோரியஸ், ‌ஷம்சி, நோட்ஜே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணி 15.3 ஓவர்களில் 96 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    வான்டார் துஸ்சன் அதிகபட்சமாக 24 ரன் எடுத்தார். ஸ்டார்க், ஆஷ்டோன் அகர் தலா 3 விக்கெட்டும் கம்மின்ஸ், மிட்சேல் மார்ஷ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த அணி முதல் போட்டியில் 107 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது. 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 12 ரன்னில் வெற்றி பெற்றது.

    அடுத்து இரு அணிகள் இடையே 3 ஒருநாள் போட்டித் தொடர் நடக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 29-ந்தேதி நடக்கிறது.
    ×