என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டாக்காவில் நடைபெற இருந்த ஆசிய லெவன் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிகள் கொரோனா வைரஸ் பீதியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    வங்காளதேசம் நாட்டின் தந்தை என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் வங்காளதேசம் ஆசிய லெவன் - உலக லெவன் அணிகளுக்கு இடையில் டாக்கா மைதானத்தில் இரண்டு டி20 போட்டிகளை நடத்த திட்டமிட்டிருந்தது.

    இந்த போட்டிகள் மார்ச் 21 மற்றும் 22-ந்தேதிகளில் நடைபெற இருந்தது. இதற்கான ஆசிய லெவன் அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட் உள்பட ஆறு இந்திய வீரர்கள் இடம் பிடித்திருந்தனர்.

    தற்போது உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் போட்டிகள் தள்ளி வைக்கப்படுகிறது என்று வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைறெ இருக்கும் நிலையில், கொரோனா வைரசை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
    சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் அலெக்ஸ் பென்சிகர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 29-ந்தேதி முதல் மே 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெளி நாடுகளை சேர்ந்த வீரர்கள், பயிற்சியாளர்கள் கலந்துக் கொள்ள உள்ளனர். சுமார் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான ரசிகர்கள் இந்த போட்டியை பார்வையிட உள்ளனர்.

    இந்த போட்டியை காண கூடும் கூட்டத்தில் யாருக்காவது கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால், அது மற்றவர்களுக்கும் எளிதாக பரவி விடும். எனவே ஐபிஎல் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘ஐபிஎல் போட்டி நடக்கும்போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். விசாரணையை 3-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.
    வான்கடே மைதானத்தில் நடக்கக்கூடிய போட்டிக்கான டிக்கெட் விற்பனை இல்லை, இரண்டே வாய்ப்புகள்தான் என்று மராட்டிய அரசு அரசு தெரிவித்துள்ளது.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 7 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு பொதுவான இடத்தில் அதிக அளவில் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

    இதற்கிடையே ஐபிஎல் போட்டிகள் தள்ளிப்போகலாம் என்று மகாராஷ்டி மாநில மந்திரி ஒருவர் தெரிவித்திருந்தார். நேற்று அம்மாநில அரசு ஆலோசனை நடத்தியது. அந்தக்கூட்டத்தில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்யப்படமாட்டாது என முடிவு எடுக்கப்பட்டதாக மகாராஷ்டிரா மாநில சுகாதார மந்திரி ராஜேஷ் டோபே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘ஆலோசனைக்குப் பிறகு, நாங்கள் இரண்டு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். ஒன்று போட்டியை தள்ளி வைக்க வேண்டும். அல்லது போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அது.  ஆனால் டிக்கெட் விற்பனை செய்யப்பட மாட்டாது என்பது உறுதி’’ என்றார்.

    இதனால் வான்கடே மைதானத்தில் போட்டி நடைபெறுவது சந்தேகம்தான். அப்படி போட்டி நடைபெற்றால் டிவி ஒளிபரப்பாளர்கள் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது.
    கொரோனா வைரஸ் பாதிப்பால் மத்திய அரசு விசா வழங்க கட்டுப்பாடு விதித்துள்ளதால் ஐபிஎல் போட்டியில் ஏப்ரல் 15-ந்தேதி வரை வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாட்டு சுற்றுலா விசாவுக்கு மத்திய அரசு ஏப்ரல் 15-ந்தேதி வரை தடைவிதித்துள்ளது. இதனால் வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல்.  போட்டியில் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே பல மாநிலங்கள் போட்டியை நடத்த தயங்கும் நிலையில் இந்த முடிவு ஐபிஎல் போட்டியை நடத்த மேலும் தடையாக இருக்கும். இதனால் ஐபிஎல் தொடர் நடைபெறுவது சந்தேகம்தான்.

    இதற்கிடையே பிசிசிஐ அதிகாரி ஒருவர் இன்னும் இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள். அதன்பின் மத்திய அரசு தடை குறித்து விளக்கமாக தெரிந்துகொண்டு பதில் அளிக்கப்படும் என்றார்.
    ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு கூட்டம் வரும் சனிக்கிழமை நடக்கிறது. அப்போது தொடரை நடத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடப்பு ஆண்டு திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. வரும் 29-ம் தேதி தொடங்கி  மே 24-ம் தேதி வரை மொத்தம் 9 மாநிலங்களில் 60 ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன.

    கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஐபிஎல் போட்டிகளைக்காண மைதானங்களில் ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் கூடுவார்கள் என்பதால் மராட்டியம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.

    இந்த நிலையில் ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு கூட்டம் நாளைமறுநாள் (14-ம் தேதி- சனிக்கிழமை) கூடுகிறது.  முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் பிரிஜேஷ் படேல் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, அமித் ஷா மகன் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    ஐபிஎல் தொடர் குறித்து முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
    அமெரிக்காவில் கூடைப்பந்து வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, இந்த சீசன் என்பிஏ போட்டிகள் நிறுத்தப்பட்டன.
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி, தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கி வருகிறது. நேற்று ஒரே நாளில் 337 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதன்மூலம் கொரோனா வைரசுக்கு மொத்தம் 4 ஆயிரத்து 633 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 300 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கொரோனாவின் தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளில் மக்கள் கூடும் பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. அவ்வகையில், அமெரிக்காவின் பிரபல விளையாட்டான கூடைப்பந்து தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜாஸ் அணியின் வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டிருப்பதால், இந்த சீசன் போட்டி நிறுத்தப்பட்டிருப்பதாக தேசிய கூடைப்பந்து சங்கம் (என்பிஏ) தெரிவித்துள்ளது. எப்போது போட்டி தொடங்கும் என அறிவிக்கப்படவில்லை.

    என்பிஏ லீக் தொடரில் நேற்று ஜாஸ்-தண்டர் அணிகள் இடையிலான ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்பு, வீரர் ஒருவரின் ரத்தப் பரிசோதனை முடிவில், கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட வீரர் அப்போது அரங்கில் இல்லை. எனினும் பாதுகாப்பு கருதி போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. 
    ஒரு போட்டியில் சரியாக ஆடவில்லை என்பதற்காக ஷாட்பிட்ச் பந்துகளை எதிர்கொள்வதில் மோசமான வீரர் என்று அர்த்தம் கிடையாது என் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரகானே கூறினார்.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரகானே அளித்த ஒரு பேட்டியில், ‘ஷாட்பிட்ச் பந்துவீச்சு குறித்து மக்கள் அதிகமாக பேசுகிறார்கள். நியூசிலாந்து தொடரில் நாங்கள் ஷாட்பிட்ச் பந்து வீச்சில் தடுமாறினோம். ஒரு போட்டியில் சரியாக ஆடவில்லை என்பதற்காக ஷாட்பிட்ச் பந்தை எதிர்கொள்வதில் மோசமான வீரர் என்று அர்த்தம் கிடையாது.

    மெல்போர்னில் நடந்த இன்னிங்சை (2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) பாருங்கள். அதில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம். ஷாட்பிட்ச் பந்துகளில் நன்றாக ஆடினோம். குறிப்பாக நான் அதிரடியாக விளையாடினேன். எனவே ஷாட்பிட்ச் பந்துவீச்சு குறித்து ரொம்ப அதிகமாக சிந்திக்க வேண்டியதில்லை.

    நியூசிலாந்தில் ஆடும் போது காற்றின் தாக்கம் நிறைய இருந்தது. அத்தகைய சூழலை கச்சிதமாக பயன்படுத்தி நியூசிலாந்து பவுலர்கள் நெருக்கடி கொடுத்தனர். இந்த தொடரில் இருந்து ஒரு அணியாக நிறைய கற்றுக்கொண்டோம்.

    நாங்கள் தொடர்ந்து நம்பிக்கையுடன், நேர்மறை எண்ணத்துடன் இருக்க வேண்டியது முக்கியம். ஆண்டின் இறுதியில் நடக்கும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்’ என்றார்.

    ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டியில் பிளே-ஆப் சுற்றில் வெற்றி பெற்ற இந்திய வீரர் மனிஷ் கவுசிக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
    அம்மான்:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்தது. இதில் கடைசி நாளான நேற்று நடக்க இருந்த ஆண்களுக்கான 69 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன், ஜோர்டான் வீரர் ஜியாத் இஷாஷ்சை சந்திக்க இருந்தார். அரைஇறுதிசுற்றின் போது இடது கண் இமை பகுதியில் காயம் அடைந்த விகாஸ் கிருஷ்ணன் டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் இறுதிப்போட்டியில் இருந்து விலகினார். இதனால் ஜியாத் இஷாஷ் களம் இறங்காமலேயே தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். விகாஸ் கிருஷ்ணன் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதானது.

    63 கிலோ எடைப்பிரிவின் ‘பிளே-ஆப்’ சுற்றில் இந்திய வீரர் மனிஷ் கவுசிக் 4-1 என்ற கணக்கில் கடந்த காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான ஆஸ்திரேலியாவின் ஹாரிசன் கார்சிட்டை சாய்த்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அத்துடன் முந்தைய காமன்வெல்த் இறுதிப்போட்டியில் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தார். 81 கிலோ எடைப்பிரிவின் ‘பிளே-ஆப்’ சுற்றில் இந்தியாவின் சச்சின் குமார் 0-5 என்ற கணக்கில் தஜிகிஸ்தான் வீரர் ஷப்போஸ் நெக்மதுல்லோவிடம் தோல்வி கண்டு ஒலிம்பிக் வாய்ப்பை கோட்டை விட்டார்.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு குத்துச்சண்டையில் இதுவரை இந்திய வீராங்கனைகள் மேரி கோம் (51 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), லவ்லினா போர்கோஹைன் (69 கிலோ), பூஜா ராணி (75 கிலோ), வீரர்கள் அமித் பன்ஹால் (52 கிலோ), மனிஷ் கவுசிக் (63 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69 கிலோ), ஆஷிஷ் குமார் (75 கிலோ), சதீஷ்குமார் (91 கிலோ) ஆகிய 9 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து குத்துச்சண்டையில் ஒரு ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் அதிகபட்ச வீரர், வீராங்கனைகள் எண்ணிக்கை இது தான். இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு 8 இந்தியர்கள் தகுதி பெற்றதே அதிகபட்சமாக இருந்தது
    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் இன்று நடக்கிறது.
    தர்மசாலா:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் இன்று (வியாழக்கிழமை) பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.

    சமீபத்தில் நியூசிலாந்து மண்ணில் நடந்த ஒரு நாள் தொடரிலும் (0-3), டெஸ்ட் தொடரிலும் (0-2) இந்திய அணி படுதோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தது. மறுபடியும் வெற்றிப்பாதையில் பயணிப்பதற்கு உள்ளூரில் நடக்கும் இந்த தொடரை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும்.

    இந்திய வீரர்கள் பிரித்வி ஷாவும், தவானும் பயிற்சிக்கு வந்த காட்சி

    முதுகுவலி காயத்தால் ஓய்வில் இருந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அணிக்கு திரும்பியுள்ளார். 6 மாதத்திற்கு பிறகு சர்வதேச போட்டியில் கால்பதிக்கும் அவரது பேட்டிங் மற்றும் பந்து வீச்சு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காயத்தில் சிக்கியுள்ள ரோகித் சர்மா இந்த தொடரில் ஆடவில்லை. அதே நேரத்தில் தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்டுள்ள ஷிகர் தவானின் வருகை அணிக்கு வலுசேர்க்கும். தவானுடன், இளம் வீரர் பிரித்வி ஷா தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என்று தெரிகிறது. நியூசிலாந்து தொடரில் சொதப்பிய இந்திய கேப்டன் விராட் கோலி பார்முக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளார். கோலி இன்னும் 133 ரன்கள் எடுத்தால் அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை சச்சின் தெண்டுல்கரிடம் இருந்து தட்டிப்பறித்து விடுவார்.

    குடலிறக்க பிரச்சினைக்கு ஆபரேஷன் செய்து குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாரின் மறுபிரவேசமும் உன்னிப்பாக கவனிக்கப்படும். தர்மசாலாவில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுவதால், இந்திய வீரர்கள் அதற்கு தகுந்தபடி தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

    குயின்டான் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை 3-0 என்ற கணக்கில் புரட்டியெடுத்த தெம்போடு இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிறது. கேப்டன் டி காக், பாப் டு பிளிஸ்சிஸ், வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர் ஆகியோரைத் தான் அந்த அணி பேட்டிங்கில் சார்ந்து இருக்கிறது. பந்து வீச்சில் நிகிடி, அன்ரிச் நார்ஜே மிரட்டுவார்கள்.

    டி காக் கூறுகையில், ‘பாப் டு பிளிஸ்சிஸ் அணிக்கு திரும்பி இருப்பது உற்சாகம் அளிக்கிறது. ஏற்கனவே அணியை வழிநடத்தி இருக்கும் அவர் அந்த வகையில் முக்கிய பங்கு வகிப்பார். இளம் வீரர்களுக்கு உதவிகரமாக இருப்பார். அவரது அனுபவம் இந்த தொடரில் எங்களுக்கு பக்கபலமாக இருக்கும். போதிய அனுபவம் இல்லாத இளம் வீரர்களுக்கு நான், பிளிஸ்சிஸ், மில்லர் போன்ற சீனியர் வீரர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டியது முக்கியம். இந்தியா நம்ப முடியாத ஒரு அணி. சரியான கலவையில் வீரர்களை கொண்டிருக்கிறது. ஆனால் நாங்களும் இங்கு நிறைய நம்பிக்கையுடன் வந்துள்ளோம்’ என்றார்.

    தர்மசாலாவில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இன்று காலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. எனவே இந்த ஆட்டம் மழையால் சீர்குலைய அதிக வாய்ப்புள்ளது.

    தர்மசாலாவில் இதற்கு முன்பு 4 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 2-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது. 2014-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா 6 விக்கெட்டுக்கு 330 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். 2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்தியா 112 ரன்களில் சுருண்டது குறைந்த ஸ்கோராகும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ஷிகர் தவான், பிரித்வி ஷா, விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர்குமார், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா.

    தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக் (கேப்டன்), ஜெனிமான் மலான், ஸ்முட்ஸ் அல்லது வான்டெர் துஸ்சென், பிளிஸ்சிஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், பெலக்வாயோ, கேஷவ் மகராஜ், பீரன் ஹென்ரிக்ஸ் அல்லது ஜார்ஜ் லின்டே, அன்ரிச் நார்ஜே, நிகிடி.

    பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 
    டாக்காவில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியிலும் ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை 2-0 எனக் கைப்பற்றியது வங்காளதேசம்.
    வங்காளதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டி20 போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய தொடக்க வீரர் டெய்லர் ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 59 ரன்கள் எடுத்தார்.

    பின்னர் 120 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களம் இறங்கியது. தொடக்க வீரராக களம் இறங்கிய லிட்டோன் தாஸ், முகமது நைம் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நைம் 34 பந்தில் 33 ரன்கள் சரெ்த்து ஆட்டமிழந்தார். லிட்டோன் தாஸ் ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 60 ரன்கள் அடிக்க வங்காளதேசம் 15.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    தென்ஆப்பிரிக்கா தொடரின்போது கொரோனா வைரஸ் தொற்றாமல் இருக்க வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நாளை நடக்கிறது. கொரோனா வைரஸ் பீதி இருப்பதால் போட்டி நடைபெறுமா? வீரர்கள் வைரஸ் தொற்றாமல் தப்பித்துக் கொள்வார்களா? ரசிகர்கள் அதிக அளவில் கூடுவதால் யாருக்காவது வைரஸ் தொற்று ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது? போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் பிசிசிஐ இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘‘அணியின் மெடிக்கல் குழு கொரோனா வைரஸின் தற்போதைய நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. உலக சுகாதார மையம் அறிவித்துள்ள வழிமுறைகள் குறித்து வீரர்கள், அணியின் சப்போர்ட் ஸ்டாஃப், மாநில சங்கங்களுடன் கலந்துரையாடி உள்ளோம்.

    மேலும், வீரர்கள் எதை செய்ய வேண்டும்?. எதை செய்ய கூடாது? என்பது குறித்த வழிமுறையை தெரிவித்துள்ளார்’’ என்று தெரிவித்துள்ளது.

    வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:-

    1. சோப்பு மற்றும் தண்ணீரால் கையை குறைந்தது 20 நொடிகள் கழுவ வேண்டும்.

    2. கையை சுத்தம் செய்யும் திரவத்தை பயன்படுத்த வேண்டும்.

    3. தும்மல் மற்றும் இருமலின்போது வாயை மறைத்துக் கொள்ள வேண்டும்.

    4. காய்ச்சல், இருமல் அல்லது ஏதாவது உடல்நலக்குறைவு இருந்தால் மெடிக்கல் குழுவுக்க உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

    5. கையை கழுவும் முன்பு முகம், வாய், மூக்கு ஆகியவற்றை தொடுவதை தவிர்க்க வேண்டும்.

    6. அணிக்கு வெளியே தனிப்பட்ட ஒருவருடன் நெருக்கமாக அமர்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும்.  கை குலுக்கல், தெரியாதவர்களின் போன்களை செல்பி எடுப்பதற்காக தொடுவதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் மாநில சங்கங்களை மிகவும் தயார் நிலையில் இருக்கும்படி வலியுறுத்தியுள்ளது.
    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் பிவி சிந்து முதல் சுற்றில் சீன வீராங்கனையை வீழ்த்தினார்.
    ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்ஸ் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சீனாவைச் சேர்ந்த பெய்வென் ஷாங்கை எதிர்கொண்டார்.

    இதில் பிவி சிந்து 21-14, 21-17 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற போட்டியில் பெய்வென்னிடம் பிவி சிந்து தோற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×